பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பேராசிரியர் சிவத்தம்பியும் அ.மார்க்சும் இணைந்து எழுதிய முழு நூலின் pdf வடிவம் இது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பாரதி மகாகவி இல்லை என கல்கி முதலானோர் பேசிய காலத்தில் இங்கு நடந்த மிகப்பெரிய சர்ச்சையின் வரலாறு.

மகாகவியாக அவர் ஏற்கப்பட்ட பின்னணி மற்றும் விவாதங்கள் குறித்த ஆய்வு.

உடைபடும் மவுனங்கள்: ஒழுங்கமைத்தல் -மீறல் – கி.ரா-வின் பாலியல் கதைகள்

நுனிக்குறிப்புகள்

1) ‘தினமணி’க்காக தலித் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்துத் தருவது தொடர்பாக அந்த நாளிதழின் (அப்போதைய) ஆசிரியர் திரு. மாலனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது  அவர் ஒன்றைக் குறிப்பிட்டார் – எத்தகைய கதைகளை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஒன்று மட்டும் முக்கியம். எங்கள் கிராமத்தில் ”நரகல்” என்ற சொல்லைக்கூட வாயால் உச்சரிக்கமாட்டார்கள். நெருப்பாய்க் கிடக்கு அந்தப் பக்கம் போகாதீங்க என்று தான் சொல்லுவார்கள். சொற்கள் விசயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்தால் நல்லது – வெளிப்படையாகச் சொல்வதானால் ‘அடித்தள மக்க்ள் இலக்கியம்’ என்ற பெயரில் பீ, மூத்திரம், மசுறு… என எழுதத் தொடங்கி விடாதீர்கள் என்பது மாலனின் வேண்டுகோள். 

2) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கி.ரா. வின் பாலியல் கதைகள் தொடர்பாகக் குடந்தையில் நடத்த இருந்த கருத்தரங்கைப் பற்றிச் சொன்னேன். மாலனால் இதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்ச் சமூகம், தமிழ்ப்பண்பாடு ஆகியவை குறித்து ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் கி.ரா.வின் தொகுப்பு என்கிற கருத்துப்பட மொழிந்த மாலன் * ‘தமிழ்ச் சமூகம் ஒரு Polyandrous Society என்கிற எண்ணத்தை இத்தகைய தொகுப்பு ஏற்படுத்திவிடும்” என்றார். நன்கு கவனியுங்கள் Polygamous Society என அவர் சொல்லவில்லை. ”பல கணவர்களை மணந்து கொள்ளும் பெண்கள் உள்ள சமூகம்” என்கிற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்கிறார். ஆண்கள் அப்படிப் பல மணைவியரை ;வைத்துக் கொண்டால்’ பிரச்சினை இல்லையாம். சில நேரங்களீல் அது ஒரு பெருமையும் கூட. ஒவ்வொரு சமூகத்தைப் பற்றிய வரையறையிலும் அச்சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கற்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்வார்கள். தமிழின் முக்கியமான பத்திரிகையின் ஆசிரியரும், மிகப்பெரிய எழுத் தாளர்களில் ஒருவருமான மாலனின் தமிழ்ச் சமூகம் பற்றிய இந்தக் கருத்தாக்கம் கவனத்திற்குரியது. 

3) எனது மூன்று அனுபவங்கள் : (அ) எனது தந்தையின் சோடா கம்பெனியில் வேலை செய்து வந்த திரு. சின்னராசு வேலைக்கு வராத தினங்களில் அவரை அழைத்து வரச்சொல்வார் அப்பா. நொண்டி டைலர்  (அனைவராலும் அவர் அப்படித்தான் அழைக்கப்படுவார் என்பதால் அப்படியே குறிப்பிட்டுள்ளேன்.) வீட்டில் இருப்பார் சின்னராசு. இருவருக்கும் ஒரே மனைவி. இது கள்ள உறவு அல்ல. ஊரறிந்த உறவு. பழகுதற்கினிய அந்த அம்மையார் வீட்டில் டீ குடித்து விட்டு சின்னராசுவை அழைத்து வருவேன். (ஆ) கீழ்த் தஞ்சை கிராமம் ஒன்றில் வசிக்கும் என் தங்கை வீட்டில் ஒரு பெண் வேலை செய்கிறார். அவர் கணவர் மரமேறுபவர். அவர்களுக்கு ஒரு மகள். மாதந்தோறும் அவர் ஊதியத்தை வாங்கிக் கொள்வதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாக வாங்கிக்கொண்டு சுமார் 100 கி.மீ. தொலைவிலுள்ள தனது முதல் கணவர் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, குழந்தைகளையும் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அந்த அம்மை. இதுவும் ரகசிய உறவல்ல. (இ) நண்பர் வேல்சாமி கடையில் அமர்ந்திருந்தேன் நண்பருக்குத் தெரிந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் அவசரமாக வந்து ஐந்நூறு ரூபாய் கடன் கேட்டார். நண்பர் காரணம் வினவினார். என் பொண்டாட்டியின் புருஷன் செத்துப் போயிட்டான்னு சேதி வந்திருக்கு. திருக்காட்டுப்பள்ளிக்குப் போயி அடக்கம் பண்ணிட்டு வரணும் எனப் பதில் வந்த்து.

4) திரைப் படங்களின் இரட்டை அர்த்த வசனங்களை நாம் அறிவோம். தெரு முனையில் நடைபெறும் அரசியல் கூட்டங்கள் பல வற்றில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கேலி செய்யும் முறையில் வரையறுக்கப்பட்ட இலக்கணங்கள் மீறப்படுவதைக் கவனியுங்கள். கிராமப் புறங்களில் நடத்தப்படும் ஸ்பெஷல் நாடகங்களில் முதலில் தோன்றும் பபூன் சுமார் அரை மணி நேரம் ஒரு கதை சொல்வார். மிக வெளிப்படையான பாலியல் விசயங்கள்  மற்றும் தொந்தி பெருத்த கந்துவட்டிக்கார முதலாளி ஒருவர் மலங்கழித்தல் போன்றவை  அக்கதைகளில் தவறாமல் இடம் பெறுவதும் அதனை மக்கள் விழுந்து விழுந்து சிரித்து இரசிப்பதும் குறிப்பிடத்தக்கன. 

5) வீடுகளில், அலுவலகங்களில், வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில், மாணவரிடத்திலெல்லாம் பாலியல் கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் கி.ரா. இவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுக்கும்போது இத்தனை எதிர்ப்பு ஏன்?                                  

                         ஒழுங்கமைத்தல் – மீறல் – கி.ராவின் பாலியல் கதைகள்  

1. ஒழுங்கமைத்தல் 

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய நிறுவனங்களின் தோற்றத்தோடு, அதிகாரம் சில மையங்களில் குவிக்கப்பட்ட, ஏற்றத் தாழ்வான தந்தை வழிச் சமூக அமைப்பு இறுக்கமடைகின்றது. சகல மட்டங்களிலும் ஒழுங்குகள் கற்பிக்கப்பட்டு இறுக்கமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றன. சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவ விழையும் – பொருளாயத உற்பத்தியிலும் அரசதிகாரத்திலும் முன்னணியில் நிற்கக்கூடிய – ஆதிக்கக் குழுவானது ஏதோ ஒரு வகையில் நிலவும் சமூகம் ஒழுங்கற்று இருக்கிறது என்கிற கருத்தை முன் வைக்கிறது. அத்தகைய ஒழுங்கற்ற நிலைமையை உடனடியாகக் கட்டுக்குக் கொண்டு வருவதன் மூலமே நிலவும் சமூக அமைப்பின் இருப்பை உறுதி செய்ய முடியும் என்கிற கருத்தை அது சமூக உறுப்பினர்கள் மத்தியில் பதிய வைக்க முயல்கிறது. இந்த முயற்சியில் அது பெறுகிற வெற்றி என்பது சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதன் நியாயப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த நியாயப்பாடு என்பது சமூகத்தை ஒழுங்கமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அக்குழுவிற்கு வழங்கிவிடுகிறது. இத்தகைய ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் என்பன ஒரு சேர பொருளாயத உற்பத்தியிலும் (எ-டு : பாசன அடிப்படையிலான விவசாயமயமாக்கல்), அரசு அதிகாரச் செயற்பாடுகளிலும் எ.டு: சீறூர் மன்னர்களை வெல்லுதல், வரி செலுத்துதல் உட்பட்ட குடிமைக் கடமைகளை மீறாதவர்களாக மக்களை ஆக்குதல்), பண்பாட்டுத் தளத்திலும் (எ.டு : சாதி, சடங்கு, மத ரீதியான கட்டுப்பாடுகளை உருவாக்குதல்) மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்றையொன்று வற்புறுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. 

புதிய பொருளாயத ஒழுங்கமைவுக்குரிய தன்னிலைகளாக மொத்தச் சமூக உறுப்பினர்களையும் ஆக்குகிற பண்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில், மத நடவடிக்கைகள் மொழிச் செயற்பாடுகள்,  தத்துவ/சட்ட உருவாக்கங்கள், இலக்கிய உற்பத்தி போன்றவை அடங்கும். இதற்குரிய வகையில் ஒழுக்க மதிப்பீடுகள் உருவாக்கப்படும். ஒழுங்கமைக்கப்பட வேண்டிய சாதாரண மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்கள், உணவு, மொழி, வழிபாட்டு முறைகள், பாலியல் வழமைகள் முதலியன குற்றம் சார்ந்தவையாய் (எ.டு: கள் புலால் உண்ணல், கொடுந்தமிழ் பேசுதல், அறுத்துக் கட்டுதல், நடுகல் வணங்குதல்), அசுத்தமானவையாய், அருவருக்கத் தக்கதாய் வரையறுக்கப்படும். இத்தகைய குற்ற உணர்ச்சியினடிப்படையில் சமூகத்தின் சகல பிரிவினருக்கும் சகல மட்டங்களிலும் ஒதுக்கல்களை வரையறுத்து அவற்றை மீறுதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். உடல், மொழி, அரசியல் என்கிற தளங்களில் இந்த ஒடுக்குமுறைகள் வெளிப்படும். 

இவ்வாறு அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி கலாச்சார நடவடிக்கைகளும் அதிகாரபூர்வமாக்கப்  படுகின்றன. இன்னின்னவற்றை, இந்த மொழியில், இப்பபடித்தான் பேசவேண்டும்;  இன்னின்ன கடவுள்களை இன்னின்ன முறைகளில்தான் வணங்க வேண்டும் ; இன்னின்ன திருவிழாக்கனை, இன்னின்ன நாட்களில், இன்னின்ன முறைப்படிதான் கொண்டாட வேண்டும்;  இன்னின்ன மாதிரியே உடுக்க வேண்டும்; உண்ண வேண்டும்……… என்பதெல்லாம் அதிகாரபூர்வமாக்கப் (Official Culture) படுகின்றன. இந்த அடிப்படையில் இறுக்கமான இலக்கண வரையறைகள் உருவாக்கப் படுகின்றன(1). சங்கமருவிய கால நூற்களான தொல்காப்பியமும் அறநூற்களும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். செந்தமிழ், கொடுந்தமிழ் என மக்கள் பேசும் மொழியை அதிகாரப்பூர்வமானது X அதிகார பூர்வமற்றது எனப் பிரித்ததோடன்றி யாரைப் பாட வேண்டும், எதைப் பாட வேண்டும், எப்படிப்பாடவேண்டும், திருமண ஒழுங்குகள், விலக்குகள் (கைக்கிளை | பெருந்திணை), அவையில் சொல்லக் கூடியவை, சொல்லக் கூடாதவை என்பதெல்லாம் வரையறுக்கப் படுவதைக் காணலாம் (2).

அவையில் சொல்லக் கூடாதவை பற்றி தொல்காப்பியத்தின் கிளவியாக்கம் மற்றும் எச்சவியல் சூத்திரங்களும் அவற்றிற்கான உரையாசிரியர்களின் உரைகளும் இங்கே குறிப்பிடத் தக்கன. அவையில் கிளவி, மறைத்தனர் கிளத்தல், மங்கல மரபு, இடக்கரடக்கல் போன்ற கருத்தாக்கங்கள் மூலம் அவையில் எவ்வெவற்றைச் சொல்லலாம், எவ்வெவற்றைச் சொல்லக்கூடாது, தவிர்க்கப் பட்டவற்றைச் சொல்ல வேண்டுமாயின் எப்படிச் சொல்ல வேண்டும் என்பவை வரையறுக்கப்படுகின்றன. “நன் மக்களால் கூறப்படாத சொல்லை கிடந்தவாறே சொல்லற்க. பிறிது வாய்ப்பாட்டால் மறைத்துச் சொல்க” என்பார் இளம்பூரணர் (3). “செத்தார்’ என்று சொல்லாதே,  ‘துஞ்சினார்’ என்று சொல் ‘சுடுகாடு’ என்னாதே, ‘நன்காடு’ எனச் சொல். “சூத்து கழுவி வந்தேன், எனச் சொல்லாதே. ‘கால் மேல் நீர் பெய்தூம்’  ‘கண் கழீ வருவதூம்’ என்று சொல். சிவந்த சூத்துள்ள மாடு என்னாதே. செம்பின் ஏற்றை எனச் சொல், பெண்ணுருப்பைக் கருமுகம் என்று சொல், எச்சிலை ”வால் எயிறு ஊறிய நீர்” என்று சொல். யாட்டுப் புழுக்கையை ’ஆப்பீ’ எனச் சொல்லலாம் ஆனால் மனிதப் பீயைச் சொல்லாதே. இவை அவைக்களத்துப் பட்டாங்கு கூறின் குற்றம் பயக்கும் என்பார் தெய்வச்சிலையார் (4).

 ‘பண்ணத்தி’ எனத் தொல்காப்பியரால் வகைப் படுத்தப்படும் வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலிய நாட்டுப்புற வழக்குகளை மெய்வழக்கல்லாதவை, எழுதும் பயிற்சியல்லாத புற உறுப்புப் பொருட்கள் என உரையாசிரியர் ஒதுக்குவர் (5). அவற்றை மேலதேபோல் பாட்டென்னாராயினர் நோக்கு முதலாயின உறுப்பின்மையினென்பது எனக் கண்டிக்கும் பேராசிரியர்,  இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் எழுத்தில் தேடாதே,  அவை வல்லார்வாய் கேட்டுணர்க என்கிறார். எடுத்துக் காட்டாகக்கூட அவற்றை எழுத்தில் வடிப்பதை அதிகாரப் பூர்வ நிறுவனம் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது .

வினையுனீங்கி விளங்கியலறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்” (தொல்-649) என்கிற சூத்திரத்திற்கு உரை எழுத வந்த பேராசிரியர், பாட்டு தொகை என அதிகார பூர்வமாகத் தொகுக்கப்பட்ட இலக்கியப் பாரம்பரியத்தில் அடங்காத ஒரு சில பாடல்களை எடுத்துக்கொண்டு அவையும் சங்கப் பாடல்களே எனச் சொல்கிற சிலர் இக்காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய அழி வகுக்குகள் மற்றும்  அடித்தளச் சாதியினர் வழக்குகள் (இழிசனர் வழக்குகள்) ஆகியவற்றுக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இறந்தொழியும் என முற்றுப்புள்ளி வைப்பது குறிப்பிடத் தக்கது. 

எழுத்து என்பது அதிகாரபூர்வமயமாக்கலுடன் தொடர்புடைய ஒரு செயற்பாடு. அரசு, அதிகார மையங்கள், தனிச் சொத்து, வணிகம் முதலியவை நிலைப்படும் போதுதான் ஒவ்வொரு சமூகத்திலும் எழுத்துக்கள் உருவாகின்றன. அவற்றோடு எவ்வெவற்றை எழுத்தில் பயிலலாம் என்கிற கட்டுப்பாடுகளும் உருவாகின்றன. இதுதவிர சங்கப்பாடல்களில் வெளிப்படும் தூலமான அறவியல் மதிப்பீடுகளும் ஒழுங்கமைவுகள் இறுகிப்போன காலகட்டத்தின் இலக்கிய வெளிப்பாடான பதினெண் கீழ்க்கணக்கு அறவியல் நூற்களில் ஒழுக்க வாதமாய் இறுகி வெளிப்படும் எதிர் மறை மதிப்பீடுகளும் ஒப்பிட்டு நோக்கத் தக்கன. செல்வம்,  இளமை, யாக்கை முதலிய உடல் சார்ந்த வாழ்வியலம்சங்களின் நிலையாமையை வலியுறுத்தல்,  அவற்றிற்குப் பதிலாக அறன், தூய்மை, துறவு, பொறை, சினமின்மை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை, திருடாமை, வசவுச்சொற்களைப் பயன்படுத்தாமை,  இகழ்ந்து உரையாமை, பெரியாரைப் பிழையாமை, நல் இனம் சேர்தல், வேசையர் நட்பு மட்டுமல்ல பூங்குழையார் நட்பையே விலக்குதல், காமத்தைப் பெருங்குற்றமாக உணர்த்துதல்- மொத்தத்தில் மண் சார்ந்த, உடல் சார்ந்த மனித விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் குற்றமாக்கி சிற்றின்பமாக்கி விண் சார்ந்த, ஆன்மீகம் சார்ந்தவற்றைப் பேரின்பமாக்கி வரையறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. உடலை வருணிக்கும் அவசியம் நேரும்போது கூட இடுப்புக்குக் கீழ் உள்ள உறுப்புகள், அவற்றின் செயற்பாடுகள் ஆகியவை பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. நாடக அரங்கில் நடிகர்கள் அவையோருக்குப் பின்புறத்தைக் காட்டக் கூடாது என்கிற மரபு கவனிக்கதக்கது. 

II மீறல் 

மக்கள் இந்த ஒடுக்குமுறைகளை கேள்வி முறையின்றி அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதில்லை. தம் மீது விதிக்கப்பட்ட அத்துக்களை மீறுதல் என்பதை அரசியல், சமூகம், கலாச்சாரம், மொழி, என்கிற எல்லாத் தளங்களிலும் மக்கள் மேற்கொண்டனர். ஆனால் இந்த மீறல்கள் எதுவும் அதிகாரபூர்வ ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டதில்லை. மேலைச் சூழலில் கலாச்சார பூர்வமற்ற (Un-official) எதிர் கலாச்சார மொழிச் செயற்பாடுகளை மிக விரிவாக மிஷேல் பக்தின் ஆராய்கிறார். நாட்டார் (மக்கள்) என்போரை மேல் தட்டினரையும் அதிகார பூர்வமாக்கப் பட்டவற்றையும் அப்படியே வியந்து பணிந்து ஏற்றுக்கொள்ளும் ஏமாளிகளாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்கிறார் பக்தின். அவர்கள் பெரிய புத்திசாலிகள் இல்லாதபோதும் மேல் தட்டினருக்குத் தண்ணி காட்டும் அளவிற்குத் தந்திரசாலிகள். அவர்கள் நளினமும் நாகரிகமுமற்றவர்கள் மட்டுமல்ல, கச்சாவானவர்கள்; அழுக்கானவர்கள், உடல் சார்ந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள், மொண்டாக் குடியர்கள்; உணவு வேட்கை, புணர்ச்சி ஆர்வம் நிறைந்தவர்கள். மூக்கை நோண்டுவதையும், எல்லோர் மத்தியிலும் இடுப்பை உயர்த்திக் குசு விடுவதையும் பழக்கமாகக் கொள்பவர்கள் மட்டுமல்ல;  அவற்றை மகிழ்ச்சியாக அனுபவித்து அதன் மூலம் புத்துணர்ச்சியும் பெறுபவர்கள். இவற்றின் மூலம் நீங்கள் முன்வைக்கும் உயர்குடி நாகரீகம், புலனடக்கம், கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு முதலிய உன்னத ஒழுகலாறுகளை எள்ளி நகையாடுபவர்கள். வாய்ப்புக் கிடைத்தால் நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே எனப் புறந் தள்ளி காடனையும் மாடனையும் கள்ளையும் புலாலையும் வைத்து வணங்கி மகிழ்பவர்கள். 

கிளைக் கலாச்சாரங்களில் வெளிப்படும் கேளிக்கை மற்றும் நகைக்கூறுகளை கவனிக்கச் சொல்கிறார் பக்தின் மேலை நாகரிகத்தில் இதற்கொரு நீண்ட பாரம்பரிய முண்டு. ரோமானியக் களி விழாக்களி லிருந்து  (Saturnalion Functions)  தொடங்கி இதனைப் பார்க்கலாம். இந்த விழாக்களில் சனியின் பொற்காலத்தை நோக்கிய ஒரு தற்காலிகத் திரும்புதல் என்கிற வகையில் அரசன், மதகுரு, அதிகாரி என்கிற படிநிலை வேறுபாடுகள் தற்காலிகமாகவேனும் ஒழிக்கப்படுகின்றன. ஒரே மேசையில் அமர்ந்து எல்லோரும் விருந்துண்கின்றனர். மதகுருவும் அரசனும்  மட்டுமல்ல கடவுளும் கூட அன்று நகையாடப் படுகின்றனர்; கேலியில் மூழ்கடிக்கப் படுகின்றனர். இதன் மூலம் மக்களுக்கிடையேயான செயற்கையான இடை வெளிகளெல்லாம் மறைந்து உண்மையான தொடர்பு (Communication) நிலை நாட்டப்படுகிறது. 

மத்திய கால அய்ரோப்பாவில் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் இத்தகைய கேளிக்கைகளில் (Carnivals) கழிந்தன. முட்டாள்களின் விருந்து, கழுதை விருந்து. அறுவடை விருந்து எனப் பல விருந்துக்கள் கொண்டாடப் பட்டன. இதில் ”பரமண்டலத் திலிருக்கிற எங்கள் : பிதாவே, அருள் நிறைந்த மரியாயியே” என்பன போன்ற மிகப் புனிதமான இறைத் துதிகளெல்லாம் கேலி செய்யப்பட்டன. Paschal Laughter, Christian Laughter. Easter Laughter, Monkish Prank என்கிற வடிவங்களில் எல்லா மத நிறுவனங்களும், புனிதங்களும், போப்பாண்டவரும் கேலி செய்யப்பட்டார்கள். புனிதத் திருப்பலியைக் கேலி செய்து ’குடிகாரனின் திருப்பலி’,  ’சூதாடியின் திருப்பலி’ யெல்லாம் அரங்கேற்றப்பட்டன. மரபு வழிப்பட்ட புனிதங்கள் இவ்வாறு அவற்றிற்குரிய இடங்களிலிருந்து கவிழ்க்கப்படுவதன் மூலம் ‘புனிதங்கள்’ அவற்றிற்குரிய – உண்மையான இடங்களில் சேர்க்கப்படுகின்றன. இத்தகைய சடங்கு ரீதியான மீறல்கள் மூலம் மக்களின் தினசரி வாழ்க்கை குற்ற நீக்கம் பெற்று புனிதமாக்கப்படு கின்றது. ஆட்சியாளனுக்கும் கடவுளுக்கும் பதிலாக கோமாளியும் சாமியாடியும் வைக்கப்படுவதன் மூலமாக மக்களின் அன்றாட வாழ்க்கை நியாயப்படுத்தப்படுகிறது. புனிதமான அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்குப் பதிலாக புனிதமற்ற வசைமொழிகளைக் கலக்கும் நடைமுறைகளையும் பக்தின் ஆய்வு செய்கிறார். மொத்தத்தில் நாட்டார் கேளிக்கைகளை, அதாவது அதிகாரபூர்வமற்ற கலாச்சார வடிவங்களை மூன்று வகைகளாகப் பிரிப்பார் பக்தின். அவை 

(1) சடங்கு. நகைச்சுவைகள் (Ritual Spectacles): மேற் குறிப்பிட்ட முட்டாள் விருந்துகள் சந்தைக் கடைகளின் நகைச்சுவை விளையாட்டுகள். அடிமைகளும் தலைவர்களும் ஒன்றாய் விருந்துண்டு, குடித்து, பரிசுகள் வழங்கும் சகஜநிலை. 

(2) நகைச்சுவைச் சொல் விளையாட்டு (Comic Verbal compositions): மேற்குறிப்பிட்ட சிறு கிண்டல் நாடகங்கள்,  இலக்கிய வடிவங்கள் முதலியன. 

3. மீன் சந்தை அரட்டைகள் (Various genres of Billingstate): வசவுகள், விடுகதைகள், கேலிகள், பாலியல் – கதைகள் முதலியன. 

இவை எல்லாவற்றிலும் எல்லா இலக்கணப் புனிதங்களும் கேவலப்படுத்தப்பட்டு அத்துமீறப்படுகின்றன. இலக்கிய மொழியோடு, அதிலிருந்து விலக்கப்பட்ட நாட்டார் மொழியும் கலக்கப்பட்டு இவ்விரண்டிற்கு மிடையேயான புதிய உரையாடலினடியாய் அதிகார பூர்வமாக்கப்பட்ட இலக்கிய கலாச்சார வடிவங்கள் கேலிக்குரிய தாக்கப் படுகின்றன, சந்தைக்கடை என்பதை ஒழுங்கின்மைக்குக் குறியீடாய் அதிகாரபூர்வக் கருத்தியல் முன் வைக்கும். ஆனால் சந்தைக்கடைக் கலாச்சாரத்தில்தான் உறுப்பினர்களுக்கிடையேயான பாஸ்பர உரையாடல், சனநாயகம், சமத்துவம் ஆகியவை நிலவுவதை யோசித்தால் விளங்கிக் கொள்ளலாம். மரியாதையற்ற விளிப்புகள் (என்னடா மச்சான்), நட்புடன் பயன்படுத்தப்படும் வசைச் சொற்கள் (ஒக்காள ஒழி), பரஸ்பர கிண்டல், அசிங்கமான உடலசைவுகள் இவை அனைத்தும், நெருக்கத்தின்  அடையாளங்கள், சந்தைக்கடை அரட்டையில் மொழியின் ஒழுங்குகள், ஆசாரங்கள் எல்லாம் மீறப்பட்டு சபை ஒழுங்குக்கு ஒத்து வராத சொற்கள் முமுமையும் பேசப்படும். இவை மூலம் அதிகாரபூர்வ ஒதுக்கங்கள் கலாச்சார, மொழி தளங்களில் மீறப்படும். 

அதிகாரபூர்வம் தனது மொழிச் செயற்பாடுகளின் மூலம் மக்களுக்குத் தேவையான ‘உண்மைகளை’ எதார்த்தம் பற்றிய ‘சரியான’ படப்பிடிப்பை முன் வைப்பதாகச் சொல்கிறது. எனவே இதில் நகைச்சுவைக்கு இடமில்லை. நமது தொடர்புச் சாதனங்களில் பயன்படுத்தும் மொழி இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் இப்படி முன் வைக்கப்படும் ‘உண்மைகள்’ எந்த அளவிற்கு உண்மைகள் என்பது மக்களுக்குத் தெரியுந்தானே! எனவே இந்த கேளிக்கைகள் அரட்டைகள் (‘பஜனை பண்றது” என்பது போன்ற புனிதச் சொற்களைக் கேலியாகப் பயன்படுத்துவது, பாலியல் சார்ந்த கேலிக் கதைகள் முதலியன) மூலம் மேற்படி உண்மைகள் தோலுரிக்கப்படுகின்றன. 

இவை வெறும் பொழுது போக்காகவன்றி,  இவற்றின் மூலம் சாதாரண மனிதனுக்கும் எதார்த்தத்திற்குமிடையேயான காவிய இடைவெளி (Epic distance) தகர்க்கப்பட்டு சாதாரண மனிதனுக்கு ஒரு செயலூக்கமான நியாயப்பாடு வழங்கப்படுகிறது. (டானியலின் ‘பஞ்சமரில்* அய்யாண்ணர் பாத்திரப்படைப்பு ஓரளவிற்கு இத்தகைய கேளிக்கைத்தன்மை உடையதாய் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது). இவ்வாறு ஒரு புதிய இரண்டாவது உலகம் அவனுக்காகவும் அவளுக்காகவும் உருவாக்கி அளிக்கப்படுகிறது. தற்காலிகமாகவேனும் வாழ்வதன் மூலம் தனது சாத்தியங்களுக்கும், எதார்த்தத்திற்கும் இடையேயான இடைவெளிகளை அவன் உணர் கிறான். உண்மையான தூலமான எதார்த்தத்துடனான தொடர்புகளைக் கண்டு பிடித்த மகிழ்ச்சி பங்கேற்பாளனுக்குக் கிடைக்கிறது. அதிகாரபூர்வக் கலையில் வெளிப்படும் எல்லாப் பதிலியாக்கங்களும் அவற்றின் வேர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு புனித நீக்கம் செய்யப்படுகின்றன. எல்லாப் புனிதங்களும் கோமாளியின் அத்துமீறல்கள் சேட்டைகள், அரட்டைகளைக் காட்டிலும் உயர்ந்தவையல்ல என்கிற உண்மை உணர்த்தப்படுகிறது. சேக்ஸ்பியர், டிடெராட், செர்வான்டிஸ், ரெபலாய் ஆகியோரிடம் இத்தகைய நாட்டார் கேளிக்கைக் கூறுகள் படிந்து கிடப்பதைப் பக்தின் சுட்டிக் காட்டுகிறார். 

நாட்டாரின் அதிகாரபூர்வமற்ற கலாச்சாரச் செயற்பாடுகளினடியாக முதலாளிய எதார்த்தவாதம், சோசலிச எதார்த்தவாதம் ஆகியவற்றினிடத்தில் கோமாளி எதார்த் தம் அல்லது மிகை எதார்த்தம் (grotesque Realism) என்கிற கருத்தாக்கத்தையும் பக்தின் முன் வைக்கிறார். பௌதிக உடற் தத்துவத்திற்கு இங்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவு, குடி, கழிவு, பாலியல் செயல் பாடுகளுடன் கூடிய உடலின் பிம்பங்கள் இங்கே கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. சதை, அடிவயிறு, இடுப் புக்குக் கீழேயுள்ள உறுப்புகளின் கவிதையாக இவை வெளிப்படுகின்றன. அதிகாரபூர்வக் கலாச்சாரம் முன்னிலைப்படுத்தும் தவ வாழ்வு, புனித வாழ்வு, ஆன்மீக மேன்மை ஆகியவற்றிற்கெதிராக ”சதையின் மறு வாழ்வு” அரங்கேற்றப்படுகிறது. நாட்டார் கேளிக்கைகளிலிருந்து உருப்பெறும் இம் மிகைநகை எதார்த்தம் நிலப் பிரபுத்துவ அழகியல் கோட்பாடுகளுக்கு எதிராக அமைகிறது. 

இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படும் உடலியல் அம்சங்களென்பன வாழ்வின் இதர புலன்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, தனிநபர் சார்ந்த வெளிப்பாடாக அமையாமல் எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் பிரபஞ்ச விகாசமாய் முன் வைக்கப்படுகின்றன. தனி நபர் என்பவன் அழிந்து போகக் கூடியவன். மக்கள் அழிந்து போகிறவர்களல்ல. மக்கள் என்கிற பிரபஞ்ச நிலையில் மரணம் என்பது அழிவல்ல; அது புதுப்பித்தல் தொடர்ந்து வளர்ந்து கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிற மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலேயே மிகை நகை எதார்த்தம் எல்லாவற்றையும் மிகைப் படுத்திப் பார்க்கிறது; அளவிடற்கரிய தாக்குகிறது. இத்தகைய மிகைப் படுத்தல் என்பது நேர்மறையான, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது; கரு, உயிர்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றோடு இவை தொடர்புடையதாய் உள்ளன. ‘ ‘எல்லா உலகங்களுக்குமான விருந் தாக” அது அமைகிறது. கெர்ச் சுடுமண் சிற்பங்கள், தொந்தி பெருத்த உருவத்துடன் அமைந்த பூவாளிகள், கர்ப்பம் தரித்த சூனியக்காரக் கிழவிகள் சிரிப்பது போன்ற சிற்பங்கள் முதலியன உயிர்ப்புடன் கூடிய மரணத்தைக் குறியீடு செய்கின்றன. 

மிகை நகை எதார்த்தத்தின் அடிப்படைத் தத்துவம் கீழ்நிலைப்படுத்துதல் (degradation) ஆன்மீகமான, கருத்துருவான,  உயர்ந்த அனைத்தையும் கீழே பொருண்மை மட்டத்திற்கு, மண்ணின் மட்டத்திற்கு இறக்குவது. பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட கதையினடியாக உருவாக்கப்பட்ட மிகை நகை எதார்த்தப் படைப்பாகிய ”சைப்ரியன்களின் இரவுணவு” நாடகத்தில் சாலமனின் நீதிகள், கோமாளி மொரால்ஃப்பின் உளறல்களோடு இணைப் பொருத்தம் செய்யப்பட்டு கேலி செய்யப்படுகின்றன. சாலமனுடனான  உரையாடலை உணவு, குடி, கழிவு என உடலியல் மட்டத்திற்கு கொண்டு வருகிறான் மொரால்ஃப். மத்திய கால அய்ரோப்பாவில் இவ்வுரையாடல் மிகவும் புகழ்பெற்றதாய் இருந்தது. 

மேலுலகு, கீழுலகு என்கிற கருத்தாக்கங்கள் என்பவை யெல்பாம் நேரடியாக அச்சொற்கள் சுட்டும் பொருள் சார்ந்தவையாக முன் வைக்கப்படுகின்றன. கீழுலகு அல்லது கீழ்நோக்குதல் என்பதன் மூலம் விண் சார்ந்த விடயங்கள் மட்டுமல்ல முகம், தலை, நெற்றி போன்ற மேலுறுப்புகளிலிருந்து விலகி புணர் உறுப்புகள், வயிறு – பின்புறம் ஆகிய உறுப்புகளைக் குறிப்பிடுகின்றன. எனவே கீழ்நிலைப்  படுத்துதல் என்பது விண்ணிலிருந்து மண்ணிற்குத் திரும்புதல், உடலின் கீழ்ப்பகுதிகளை நோக்கி கவனத்தை ஈர்த்தல், மலம் கழித்தல், புணர்தல், கருவுறுதல், பிறத்தல், இறத்தல் என வயிறு மற்றும் புணர் உறுப்புகள் ஆகியவற்றின் செயற்பாடுகளை நோக்கிச் செல்லுதல். என்பது மிகை நகை எதார்த்தம் முன் வைக்கும் உடல் என்பதில் புற உலகை நோக்கித் திறந்துள்ள உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. அதாவது புற உலகு அந்த உடல் வாய்களின் வழியே உடலுக்குள் புகுகிறது வெளியேறுகிறது. எனவே வாய். பிறப்புறுப்புகள், முலைகள், லிங்கங்கள், ஆசனவாய் என்கிற துளைகள் முக்கியம் பெறுகின்றன. வளர்ச்சியே உடலின் அடிப்படையான பண்பு. எனவே அது புணர்ச்சி, கருத்தரிப்பு: குழந்தை பிறப்பு, சாவு, சாப்பாடு, குடி, மலங்கழித்தல் ஆகிய செயல்களின் மூலமாகத் தனது எல்லைகளைத் தாண்டிக் கொண்டே செல்கிறது. உடல் பற்றிய மிகை நகை எதார்த்த கோட்பாடு தான் நாட்டார் வசவுகள், சாபங்கள் ஆகியவற்றிற்கும் அடிப்படையாய் அமைகின்றன. மண்ணை நோக்கிக் கீழிறக்கும் செயல்பாடுகளின் ஓரங்கமாய் வசவுகள் அமைகின்றன. 

அதிகாரபூர்வ கலாச்சாரத்திலும் அங்கதங்கள், நகைச்சுவைகள் உண்டு. ஆனால் அதில் கேலி செய்பவன்,  தன்னைக் கேலி செய்யும் பொருளிலிருந்து விலக்கிக் கொண்டு ஒதுங்கி நின்று உயர்த்திக் கொண்டு சேலி செய்கிறான். எனவே அக் கேலி என்பது உயிர்ப்புத்தன்மை நீக்கப்பட்டது;  தனி நபர் சார்ந்தது; அழிவை நோக்கியது) அருவருப்பானது. நாட்டார் கேளிக்கைகளில் எல்லோரும் ஒன்றாய் நின்று தங்களைத் தாங்களே முட்டாளடித்துக் கொள்வதன் மூலம் நிறுவப்பட்ட உண்மைகளைத் தோலுரிக்கின்றனர். நடைமுறையிலுள்ள உலகப் பார்வைகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர். இருக்கும் எல்லாவற்றின் சார்பியல் தன்மைகளை, பன்முகப் பார்வைகளை அங்கீகரிக்கும் உளப்பாங்கு பெறுகின்றனர். நிறுவப்பட்ட உண்மைகள், மரபுகள், அச்சு வார்ப்புகள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் திராணி பெறுகின்றனர். 

இறுதியாய் : அய்ரோப்பிய சூழலை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட மேற்கண்ட முடிவுகளை அப்படியே இந்திய தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க இயலாது. மேலை நாடுகள் போலன்றி இங்கே பார்ப்பனியம் வரையறுத்த ஒதுக்கல்கள் கோட்பாட்டு ரீதியாகவும் நியாயப்படுத்தப்  பட்டவையாக உள்ளன. சமபந்தி போஜனம் மறுக்கப்பட்ட இந்தியச் சூழலில் முட்டாள் விருந்தைக் கற்பனை பண்ண முடியாது. சாதிக்கொரு நீதி விதித்த மனு நீதி கோலோச்சிய மண்ணில் பார்ப்பனியத்தைக் கேலி செய்யும் கேளிக்கைத் திருவிழாக்களை நிலப்பிரபுத்துவ இந்தியா அனுமதித்திருக்காது. இங்கே நகைச்சுவை இலக்கியம் என்கிற இலக்கிய வெளிப்பாடு வளராமற் போனதற்கான காரணங்கள் வெளிப்படை. எனினும் நாட்டார் கதைகள், கிராமியத் திருவிழா நாடகங்கள், நாட்டார் மத்தியில் பயிலப்படும் பாலியல் கதைகள் போன்றவற்றில் பக்தின்’ குறிப்பிடும்  அதிகாரபூர்வமற்ற கலாச்சாரக் கூறுகளைத் தேட முடியும். 

III. கி. ரா. தொகுத்த பாலியல் கதைகள் 

தமிழின் அதிகாரபூர்வ நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன். பல பரிசுகள்  விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவரது நாட்டுப்புறப் பாலியல் கதைத் தொகுப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உரிய ஏற்பு இல்லை. பாலியல் கதைகள் பல வட்டங்களில் சமூகத்தில் நிலவிய போதும் பத்திரிகைகளிலும், புத்தகமாகவும் அச்சு வடிவம் எடுக்கும் போது ஏற்படும் அதிகாரபூர்வமயமாக்கலுக்கு ஏற்படும் எதிர்ப்பாகவே இதனைக் கருதமுடியும். தமிழ்ச் சமூகம் பற்றிய அதிகாரபூர்வ உண்மைக்கு மாறான ஒரு உலகத்தை இத் தொகுப்பு முன்வைப்பதென்பதை நிறுவனங்களால் செரித்துக் கொள்ள இயலாமையை இது காட்டுகிறது. அங்கீகரிக்கப்பட்ட இலக்கிய மொழிக்கும் மக்களின் பாலியல் அரட்டை மொழிக்கும் இடையேயான உரையாடலின் விளைவாக ’கண்டார ஒளி’,  ‘ஒப்பன ஒளி’ , ’வல்லார ஒளி,’  ‘பேசிப்பளகுதல்’,  ‘பேண்டுகிட்டு’ இருத்தல் போன்ற சொற்கள் கி.ராவின் இத் தொகுப்பில் பதிவு செய்யப்படுதலும்,  இடுப்புக்குக் கீழ்ப்பட்ட உறுப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளைச் சொல்வதுமான பிரதியின் கலகச் செயற்பாடுகளும் நிறுவனங்களுக்கு உவப்பானதாக இல்லை. சர்க்கரையால் பாலம் போடுகிறவன்,  ஆட்டுமந்தையை இடுப்புக்குள் மறைத்துக் கொள்ளும் பெண் முதலான கி.ரா படைக்கும் சித்திரங்கள் மிகைநகை எதார்த்த வகைப்பட்டவை எனலாம். நூல் முழுமையும் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான மீறல்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட உடல் எப்படியும் ”தண்ணி காட்டி விடும்” என்கிறார் கி.ரா. அப்படிச் செய்தால் அதில் தவறென்ன? பாலியல் மீறல்களில் வலுவந்தந்தான்கூடாது என வெளிப்படையாகச் சொல்கிறது கி.ராவின் பிரதி. மேல் வயிற் றுப்பசி X கீழ் வயிற்றுப்பசி ; சாப்பாடு X கீப்பாடு: பசி X பாலியல் தேவை என்கிற எதிர்வுகளை உருவாக்கி நூல் முழுவதும் மீறல்கள் நியாயப் படுத்தப் படுகின்றன. குடும்பம், உறவு முறைகள், நீதித்துறை போன்ற அரசு நிறுவனங்கள் எல்லாம் கேலி செய்து புனித நீக்கம் செய்யப்படுகின்றன.  

இந்த வகையில் கி.ரா.வின் பதிவுகள் என்பன அதிகார எதிர்ப்புச் செயற்பாடுகள்தான், மொழியில் கலகந்தான் எனினும் இவை அனைத்து மக்களும் பங்கேற்கும் நடை முறை சார்ந்த கேளிக்கை வடிவமல்ல. தாத்தா-பேரன்கள் என்கிற ஒரு சில ஆண்களுக்கிடையேயான பரிமாற்றங்களாகவே கதைகள் அமைகின்றன. எனவே பல சந்தர்ப்பங்களில் இவை ஆணாதிக்கக் கருத்தியல் நிறைந்தவையாகவும், மிகை நகை எதார்த்தத்தின் புத்துயிர்ப்புப் பண்பு குறைந்தவையாகவும் வெளிப்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். பொது வெளிப்பாடாக இல்லாததால் தனி நபர் வக்கிரங்களாகவும்,  பாலியல் விருப்பு நிறைவேற்றப் பதிலியாகவும், பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கும் நுகர்பொருளாகவும் வீழ்ச்சி அடைவதையும் காணமுடிகின்றது. பொதுவாகவே நாட்டார் கேளிக்கைகளின் அரசியல் செயற்பாடென்பதே வரையறைக்குட்பட்டது தான் என்பார் டெர்ரி ஈகிள்டன். நாட்டார் கேளிக்கை களின்மூலமான கலகம் என்பது ஒரு வகையில் அதிகார பூர்வத்தால் அனுமதிக்கப்பட்ட கலகந்தானே,  அடுத்த நாள் காலை மீண்டும் பழைய உறவுகள் நிலைநாட்டப் பட்டு விடுகின்றனவல்லவா என்பது அவர் கேள்வி. இதர எதிர் அரசியல் செயல்பாடுகளுடன் இணையும்போதே இவற்றால் நாம் விரும்பிய பலன் விளையும். 

இடையில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல், பத்திரி கைக்கான சமரசங்கள் இல்லாமல் கச்சாவாகப் புழங்கும் நாட்டார் மத்தியில் இவை வழங்கப்படும் வடிவிலேயே இக்கதைகளைப் பதிவு செய்வது அவசியம். 

பாலியல் தவிர உடல் சார்ந்த இதர கீழ்நிலையாக்கச் செயற்பாடுகளுடன் கூடிய கதைகளும் தொகுக்கப்படல் வேண்டும். பெண்கள் மத்தியில் புழங்கும் பாலியல் கதைகள் பதிவு செய்யப்படுதல் அவசியம். அவற்றில் பாலாதிக்க எதிர்ப்புக் கூறுகள் கூடுதலாக இருக்கும் என நம்பலாம் (10). 

நமது எதிர்ச் கலாச்சார வடிவங்களில் கேளிக்கைக் கூறுகளுக்கான முக்கியத்துவம் பற்றிச் சிந்தித்தல் அவசியம். 

அடிக்குறிப்புகள்

1. பொ. வேல்சாமி,  அ. மார்க்ஸ், “தொல்காப்பிய உருவாக்கத்தின் பண்பாட்டு அரசியல்” மேலும்,  (பிப், மே-1992)  

2. ”வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சியவர்கட்டாகலான்” தொல் – பொருள் 647. “மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப்பட்ட சொல்லினான”-தொல்- பொருள் 145.

3. ”தகுதியும் வழக்கும் தழீ இயன ஒழுகும் பகுதிக்கிளவி வரைநிலை இலவே” – தொல் சொல்.

17. அதிகாரபூர்வ தமிழிலக்கியப் பாரம்பரியத்தில் நானறிந்தவரை மலம் பெய்தல் பற்றிய குறிப்பு நீலகேசியில் மட்டுமே வருகிறது. பூதிகன் என்னும் பார்ப்பனனுடன் வேதத்தை எதிர்த்து நீலகேசி வாதிடுகிறார். வேதம் தான்தோன்றி என்கிற கருத்தை மறுத்து,  “யாரது செய்தவர் அறியிலிங்குரை  எனிலங்கொருவன் ஊரது நடுவனோர் உறையுனில் மலம்பெய்திட்டு ஒளித்தொழியிற் பேரினும் உருவினும் பெறவிலன் ஆதலின்றாக் குறித்துத் தேரினு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே’*  ( நீலகேசி-829 ) என்கிறார். ஊர் நடுவே இரவில் பெய்து கிடக்கும் மலம் யாருடையது என தெரியாதலால் அதனைத் ’தான்தோன்றி’ எனச் சொல்ல முடியுமா என்பது நீலகேசியின் கேள்வி. மேலும், 

”தோற்றமு நாற்றமுஞ் சுவையுட னூரிவற்றாற் தொடங்கி யாற்றவு மாயிரு வேதம் வல்லார்கள். அறிந்துரைப்ப மேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மை பெறா நூற்றிறஞ் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவுடையவரே” (நீலகேசி 830) என்கிறார்.  மலத்தின் தோற்றம், நாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பெய்தவன் நோயாளி அல்லது ஆரோக்கியமானவன் எனச் சொல்ல முடியும். ஆனால் உயர் குலத்தான் அல்லது கீழ்க்குலத்தான் எனக் கண்டுபிடிக்க முடியுமா என்பது நீலகேசியின் கேள்வி. சமண பௌத்த மதங்கள் தமிழகத்திற்கு வரும்போது வருணாசிரமத்தை ஏற்றுக்கொண்டுதான் வருகின்றன. எனினும் பின்னாளில் இங்கே அரசமதமாக இருந்த சைவத்திற்கு எதிர் நிலையில் இருந்ததன் விளைவாக இதுபோன்ற அதிகாரபூர்வமற்ற கூற்றுகளை இந்த இலக்கியங்களில் தேட முடியும். பெண்களை- அதுவும் கணவனைத் தந்திரமாகக் கொன்ற பெண்களைக்கூட மையமாக வைத்துக் காவியம் படைத்தல் (குண்டலகேசி, நீலகேசி, வளையாபதி  முதலியன) இவற்றில் கவனிக்கத் தக்கன.

5. பாட்டிடைக் கலந்த பொருளவாகில் பாட்டினியல பண்ணத்திய்யே- தொல் பொருள் – 492,  

6. இப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ள பக்தின் கருத்துக்கள் அனைத்தும் அவரது Rebelars and His wor என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. 

7. பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்றெழுந்த கிளவியானும் பொருளொடு புணராப் பொய்மொழியானும் பொருளோடு புணர்ந்த நகை மொழியாயினும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப – தொல் பொருள் 485. என்கிற தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து நான்கு வகை உரை நடை வடிவங்களில் நகைமொழி என்றொரு உரைவகை இருந்தது தெரிகிறது. ”நகை மொழியாவது மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தாதென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்த்துமுறை பிறக்குமாதலின் பொருளோடு புணர்ந்த நகைமொழியானும் உரைவரும் என்றார். மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு அது மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவும் ஆகும். மகளிர்க்குரைக்குமுறை செவிலிக்குரித்து. மைந்தர்க்குரைக்கும் உரை எல்லார்க்குமுரித்து என்றவாறு.” – (இளம் பூரணர்). நகை மொழி உரை நூற்களுக்கு எடுத்துக்காட்டாய் சிறுகுறீஇ உரை, தந்திர வாக்கியம் என்கிற இரு நூற்களைப் பேராசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இருந்த சில நகைமொழி நூற்களும் கூட அதிகாரபூர்வப் பாரம்பரியத்தால் பேணிக் கையளிக்கப் படவில்லை என்பதையே இன்று அந்நூற்கள் அழிந்து பட்டமை காட்டுகிறது.

8. கி. ராஜநாராயணன், ’வயது வந்தவர்களுக்கு மட்டும்’, நீலக்குயில், 1992.

9. சின்ன வயதில் பாலகிருஷ்ணன் என்கிற பார்ப்பன ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட கதை ஒன்று: ஒரு கிராமத்தானுக்குத் தன் குறியைத் தானே வாயால் சுவத்துச் இன்பம் கொள்ளலாமா என்ற அய்யம் வந்து விடுகிறது. ஒரு ஆசிரிரைக் கேட்கிறான். தாசில்தார்தான் இதற்கு முடிவு சொல்ல வேண்டும் என்கிறார் அவர். தாசில்தார் அலுவலகத்தில் மனு எழுதித் தரச் சொல்கிறார்கள். மனுவில் ஸ்டாம்ப் ஒட்டவில்லை என்று திருப்பப்படுகிறது. இப்படிப் போய்க்கொண்டே இருக்கிறது கதை. கடைசியாக ‘எட்டினால் செய்து கொள்ளலாம்’  என தாசில்தார் குறிப்பு எழுத ‘ஃபைல்’ முடிக்கப்படுகிறது. அரசு நடைமுறைகளைக் கேலி செய்யும் ஒரு நாட்டர் நகைச்சுவை இது. 

10. சின்னவயதில் அத்தை என நான் அழைக்கும் மூத்த பெண்மணி ஒருவரிடம் கேட்ட கதை: ஒரு அழகிய பெண் சுள்ளி பொறுக்கக் காட்டிற்குச் சென்ற போது புலி ஒன்று மையல் கொண்டு அவளைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கிறது. ஒரு குகைக்குள் அவளை அடைத்து வைத்திருக்கிறது புலி வெளியே போகும் போது வேடன் ஒருவன் குகைக்கு வந்து விடுவான். புலி வரும் சமயம் அவன் வெளியே போய்விடுவான். ஒரு நாள் வேடன் இருக்கும் போது புலி வந்து விடுகிறது. வேடனைப் பரணியில் ஒளித்து வைக்கிறாள். புலிக்குச் சோறு போடுகிறாள். கொஞ்ச நேரத்தில் மேலே இருந்தவன் அடக்க முடியாமல் மூத்திரம் பெய்கிறான். புலி, ‘என்ன’ என்கிறது. ”ரசம், மறந்துவிட்டேன்” என்கிறாள். பிசைந்து குடித்து விட்டு ’ரசம் பிரமாதம்’ என்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அடக்க முடியாமல் மேலிருந்தவன் மலம் பெய்து விடுகிறான். பருப்பு கடைந்து வைத்திருந்தேன். சாப்பிடுங்கள் என்கிறாள் பெண். புலி ரசித்துச் சாப்பிடுகிறது- நாங்கள் விழுந்து சிரித்தவாறே கதையைக் கேட்போம்.

(1990 களின் தொடக்கத்தில் பாண்டிச்சேரி ‘இன்ன பிற’ அமைப்பு சார்பில் நடத் தப்பட்ட பாலியல் கதைகள் பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.)

மௌலானா வஹிதுதீன் கான் ஒரு குறிப்பு

(டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் மௌலானா குறித்த நூல் முன்னுரையாக எழுதப்பட்டது.)

ஒரு காந்தியச் சிந்தனையாளராகவும், சுற்றுச் சூழல். இயற்கை வேளாண்மை முதலான துறைகளில் ஆர்வம் மிக்கவராகவும், தமிழக அளவில் அறியப் பெற்றவர் டாக்டர் வெ. ஜீவானந்தம் அவர்கள். மருத்துவம் என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாத ஒன்றாக மாறிவரும் கார்பொரேட் மருந்துவச் சூழலில் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் முயற்சியில் ஈரோடில் உருவாக்கப்பட்டுள்ள “ஈரோட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல்’ சிறந்த மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் அளிக்கிறது. அந்த வகையில் அது தமிழகத்திற்கே ஒரு முன்னோடியாக அமைகிறது. 

இத்தனை சேவைகளுக்கும் மத்தியில் டாக்டர் அவர்கள் சிறந்த நூற்களை தமிழில் ஆக்கித் தரும் பணியையும் மேற்கொண்டுள்ளார். ஆலன் ஆக்சல்ராடின் ‘வெற்றிபெற காந்தியவழி’, பேர்ல் எஸ்.பக்கின் ‘தாய் மண்’, மாதவ் காட்கிலின் ‘அறிவியல், ஜனநாயகம், இயற்கைச் சூழல் பாதுகாப்பு’. காகா கலேல்கரின் ‘ருஷ்யாவில் குமரப்பா’ ஆகிய நூல்கள் அவரால் மொழியக்கப்பட்டுள்ளன.  காஞ்சா அய்லய்யாவின் ‘எருமைத் தேசியம்’ எனும் புகழ் பெற்ற  நூலை எழுத்தாளர் கவின்மலரும் அவரும் இணைந்து மொழிபெயர்த்துள்ளனர். இவை தவிர ‘ விடுதலைப்புலி  திப்பு சுல்தான்’  எனும் குறு நூல் அவரது ஆக்கமாக வந்துள்ளது. இப்போது உங்கள் கைகளில் உள்ள மவுலானா வஹிதுதின் கானின் ‘இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும்’ எனும் நூல் அவரது சமீபத்திய மொழியாக்கம். 

இந்தக் குறு நூலின் மூல ஆசிரியரான மவுலானா வஹிதுதீன் கான் அவர்கள் இந்திய அளவில் பெரிதும் அறியப்பட்ட ஒரு மூத்த (வயது 94) இஸ்லாமிய அறிஞர். 200 க்கும் மேற்பட்ட இது போன்ற நூல்களின் ஆசிரியர், இந்த நூற்களில் 60க்கும் மேற்பட்டவை அவரது மகள் டாக்டர் ஃபரிதா கனம் அவர்களால் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  

இந்திய அளவிலும், பன்னாட்டளவிலும் பல பல விருதுகளையும் வஹிதுதுன் கான் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. 2000 ஆண்டில் வாஜ்பேயீ தலைமையில் அமைந்த பா.ஜ.க அரசு வகிதுதீன் கானுக்கு இந்திய அரசு வழங்கும் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருதை வழங்கிக் கொண்டாடியது. 2009 ல் சமூக ஒற்றுமைக்கான ‘தேசிய சத்பவனா’ விருது வழங்கப்பட்டது. 2015ல் ‘சய்யிதினா இமாம் அல் ஹாசன் இப்ன் அலி’ விருது வஹிதுதீன் அவர்களுக்கு அபுதாபியில் வழங்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தார். அன்றே அவர் செய்த பிறிதொரு ட்விட்டர் பதிவில், “மவுலானா அவர்களின் அறிவு, அமைதியையும் சமாதானத்தையும் நோக்கிய அவரது செயல்பாடு ஆகியன அவரை உலக அளவிலான மதிக்கத்தக்க அறிஞராக ஆக்கியுள்ளன” என மனதாரப் பாராட்டியதும் குறிப்பிடத் தக்கது. இதுபோல இன்னும் பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் மவுலானா வஹிதுதின் கான் என்பது குறிப்பிடத் தக்கது. 

இன்று உலகெங்கிலும் இஸ்லாமிய வெறுப்பு (Islamophobia) பெரிய அளவில் எழுந்துள்ளது. இந்த முன்னுரையை நான் தட்டச்சு செய்து கொண்டுள்ளபோது நியூசிலாந்தில் தொழுகையில் இருந்த 49 முஸ்லிம்களை ஒரு மத வெறியன் சுட்டுக் கொன்றுள்ளான். மேலும் 20 பேர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பையே மூல முதலாகக் கொண்டு அரசியல் செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. பசுவின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இப்படியான சூழலில் முஸ்லிம்களுக்கு மவுலானா வஹிதுதீன் கான் அவர்கள் சொல்லும் அறிவுரை ஒன்றுதான். அதைத்தான் அவர் அவர் திரும்பத் திரும்பத் தன் பல்வேறு ஆக்கங்களின் ஊடாகவும் வலியுறுத்திக் கொண்டுள்ளார். அது வேறொன்றும் இல்லை. முரண்பாடுகளைத் தவிர்ப்பதிலும், சமாதானத்தை நோக்கிய முயற்சிகளிலும் முஸ்லிம்கள்தான் முன்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அது. 

எப்படி முன்கை எடுக்க வேண்டும்? ஆபத்துகள் வரும்போது எந்த எதிர்வினையும் காட்டாமல் எப்படி ஆமை தன் ஓட்டுக்குள் பதுங்குவது போலவும், பூச்சிகள் பந்துபோல் தம்மைச் சுருட்டிக் கொள்வதைப் போலவும் முஸ்லிம்களும் எந்த எதிர்வினையும் காட்டாமல் தம்மைச் சுருட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார் மவுலானா. அதுவே மோதல்கள் முடிய இயற்கை காட்டும் பாதை என்கிறார். ஆத்திர மூட்டினால் பொறுத்துக் கொண்டும், அத்துமீறினால் சகித்துக் கொண்டும் இருப்பதொன்றே சமாதானத்துக்கான வழி என்பதுதான் மவுலானா முஸ்லிம்களுகுக் காட்டும் ஒரே வழி. சிறிய கேட்டை ஏற்றுக் கொள்வதே பெரிய கேட்டைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்பதே மவுலானா மொழியும் தத்துவம். எது சிறிய கேடு? எது பெரிய கேடு? அவரைப் பொருத்த மட்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டத்து, அடுத்து மதுரா அது இது என அவர்கள் பட்டியல் போடுவதெலாம் சிறிய கேடுகள். அப்படியான தாக்குதல்களை எல்லாம் முஸ்லிம்கள் சகித்துக் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்துவிட வேண்டும். குஜராத்தில் நரேந்திர மோடியின் கண்முன் சுமார் ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாம் “எங்கோ ஒரு மூலையில்” நடக்கும் வன்முறைகள். இதற்கெல்லாம் பெரிதாக அலட்டக் கூடாது’. முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்..

நபிகள் நாயகமே அப்படித்தான் இருந்தார் எனக் கூறும் மௌலானா வஹிதுதீன் கான் அவர்கள், அப்படியான விட்டுக் கொடுத்தலுக்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய தருணங்களில் ஒன்றான ஹுதைபியா உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறார், இன்னொரு பக்கம் சகிப்புத்தன்மையின் எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தியைச் சுட்டிக் காட்டுகிறார். பாபர் மசூதி முதலான பிரச்சினைகளில் விட்டுக் கொடுப்பதுதான் முஸ்லிம்களுக்கு அவர் காட்டும் ஒரே வழி. ஒற்றை வழி. 

அவரது இந்த வழிமுறைகளும் பரிந்துரைகளும் சர்ச்சைக்குரியன. காந்தி அடிகள் சகிப்புத்தன்மைக்கும் அஹிம்சைக்கும் எடுத்துக்காட்டகத் திகழ்ந்த அதே நேரத்தில், அவர் எந்த நேரத்திலும் தன் கொள்கையையோ, இறுதி இலட்சியத்தையோ, தம் மக்களின் கவுரவத்தையோ விட்டுக் கொடுத்ததில்லை. அவரது அஹிம்சை அல்லது சத்தியாக்கிரகப் போராட்டம் என்பதெல்லாம் மிகவும் செயலூக்கமுள்ள போர் வடிவங்களாக இருந்தன, சென்ற நூற்றாண்டில் அதிக அளவில் பெண்களைக் களத்தில் இறக்கியவர் எனவும், வரலாறு காணாத அளவில் போராளிகளைக் கொண்டு சிறைகளை நிரப்பியவர் எனவும் வரலாற்றில் அறியப்பட்டவர்  மகாத்மா காந்தி என்பது நினைவிலிருத்தத் தக்கது. 

முஹமது நபிகள் விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுத்தார். மவுலானா அவர்கள் சொல்வது போல ஹுதைபியா உடன்படிக்கை அவரது விட்டுக் கொடுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் ஹுதைபியா மட்டுமே நபிகளின் வரலாறோ, இஸ்லாத்தின் வரலாறோ அல்ல. பத்ர் போரும் இஸ்லாத்தின் வரலாறுதான், நபிகளின் வழிகாட்டலில் நடந்த போர்தான். அதுவும் இஸ்லாத்தின் உன்னத இறை அனுபவங்களில் ஒன்றுதான். 

அது மட்டுமல்ல ஒரு கால கட்டத்தின் அனுபவங்களை இன்னொரு காலகட்டத்திற்கு அப்படியே பொறுத்திப் பார்க்கவும் இயலாது. எண்ணற்ற சூறைப் போர்கள் (கஸு) நபிகளின் ஆணையில் நடந்தேறின, அவற்றை வெறும் வழிப்பறிக் கொள்ளைகளாக இன்றைய மொழியில் சுருக்கி விட முடியாது. இடதுசாரி வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுவது போல செல்வக் குவியல்கள் ஒரே இடத்தில் அமையாமல் அதைப் பரவாலாக்கம் செய்யும் அக்கால வழிமுறைகளில் ஒன்று அது, 

போரா சமாதானமா என்பது மட்டுமே நம்முன் உள்ள கேள்வி அல்ல. போர், சமாதானம் என்பவற்றுக்கு அப்பால் நீதி என்கிற ஒன்றும் உண்டு. மௌலானா வஹிதுதீன் அவர்களின் எழுத்துக்களில் காணக் கிடைக்காதது இந்த ‘நீதி’தான். போர் அல்லது சமாதானம் என்பவற்றோடு நீதி என்பது எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம். நீதியற்ற சமாதானம் அடிமைத்தனத்தின் உச்சம். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதற்கு என்ன வழி.  காந்தி அஹிம்சை எனச் சொல்லி நீதியைக் கைவிடவில்லை என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும். 

பாபர் மசூதியை விட்டுக் கொடுத்துவிடுவோம் என்றே வைத்துக் கொள்வோம். அத்தோடு பிரச்சினை முடிந்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

பெருநாளன்று முஸ்லிம்களோடு அமர்ந்து, அவர்கள் அன்புடன் அளிக்கும் அந்தத் தொப்பியைச் சில நிமிடங்கள் அணிந்து அவர்களோடு கஞ்சி அருந்தும் ஒரு தேச வழமையைக் கூடத் தன் ஆட்சியில் ரத்து செய்த நரேந்திர மோடி மௌலானாவுக்கு எங்கோ அபுதாபியில் அளித்த விருதைக் கொண்டாடுகிறார் என்றால் அது என்ன என நாம் யோசிக்க வேண்டாமா? தமிழில் ஒரு பழமொழி உண்டே – சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

மவுலானா வஹிதுதீன் அவர்களின் இக் குறு நூலை வாசிக்கும்போது நம் மனதில் எழும் கேள்விகள் இவை. இப்படியான சிந்தனை உசுப்பலுக்கு வழி வகுத்துள்ள இம்மொழிபெயர்ப்பைச் செய்துள்ள மருத்துவர் ஜீவானந்தம் அவர்களுக்கும், இந்நூலை அழகுற வெளியிடும் பழம்பெரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புக் ஹவுசுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

அ.மார்க்ஸ், சென்னை, மார்ச் 16, 2019.

கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகின்றனரா?

கவிஞர் தாமரையின் பதிவொன்றை (Kavignar THamarai, 27.3.18) சற்று முன் ஒரு நண்பர் கவனப்படுத்தினார். படித்து அதிர்ச்சி அடைந்தேன்.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பதிவொன்றைப் பகிர்ந்து தாமரை கூறி இருப்பதாவது:

“இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல கிறித்தவ, இசுலாமிய அடிப்படைவாதங்கள்….. இதுவரை நடுநிலையாளர்களாக இருந்தவர்கள் இனி எதிர்த்து அடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர்” -. Charu Nivedita-

நண்பர் சாருவின் இக்கருத்தைச் சுட்டிக்காட்டி தாமரை தொடர்வது:

’சாரு நிவேதிதாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இந்த விடயத்தில் சாரு நிவேதிதாவின் கருத்துதான் எனதும். முழுமையாக ஆமோதிக்கிறேன். கிறித்துவ அடிப்படைவாத மதமாற்ற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன, இசுலாமிய அடிப்படைவாதம் வேறு பரிமாணம் எடுத்து அது ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, இந்துத்துவத்தை மட்டும்தான் துவைத்து எடுப்பேன் என்பது மகா மட்டமான, முட்டாள்தனமான நிலைப்பாடு. இன்னும் சொல்லப் போனால், இந்த மதங்களின் Agendaவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிகிறது. நடுநிலைப் பார்வையாளனாக இருந்த ஒரு சராசரி இந்து கூட மோடி பக்தனாக உருமாறும் நிலைக்குத் தள்ளப் பட்டிருகிறான். புரிந்து விழித்துக் கொண்டால் நலம். “

இதுதான் தாமரையின் பதிவு. அவர் பகிர்ந்துள்ள சாரு நிவேதிதாவின் பதிவில் இங்கே தாமரை சொல்லியுள்ளதைக் காட்டிலும் பெரிதாக ஒன்றுமில்லை. சாரு நிவேதிதா எதையும் பேசுவார். அடுத்த நாள் அதை மறுத்து விட்டுப் போகவும் செய்வார். அதில் வில்லங்கங்கள் இருக்காது. அப்படி வாழ்வதையே தன் அடையாளமாகவும் பெருமிதமாகவும் கொள்பவர் அவர். நித்தியானந்தாவைப் புகழ்ந்து வந்தவர், அவர் விஷயங்கள் வெளிப்பட்ட உடன் தன் கருத்தை மாற்றிக் கொண்டதையும் அறிவோம்.

சரி இதில் தாமரை சாருவை ஒட்டி என்ன சொல்கிறார்?

1. கிறித்துவ அடிப்படைவாத மதமாற்ற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன,

2. இசுலாமிய அடிப்படைவாதம் வேறு பரிமாணம் எடுத்து அது ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

3. இந்நிலையில் இந்துத்துவத்தை மட்டும்தான் துவைத்து எடுப்பேன் என்பது மகா மட்டமான, முட்டாள்தனமான நிலைப்பாடு

4. கிறுஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் இந்த Agendaவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிகிறது.

5. நடுநிலைப் பார்வையாளனாக இருந்த ஒரு சராசரி இந்து கூட மோடி பக்தனாக உருமாறும் நிலைக்குத் தள்ளப் பட்டிருகிறான். புரிந்து விழித்துக் கொண்டால் நலம்.

6. இதுவரை நடுநிலையாக இருந்தவர்கள் இனி இவற்றை (கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம்) எதிர்த்து அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

இவை அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவை எல்லாம் சரிதானா?

இந்தியாவின் பன்மைத்தனமையை அதன் சிறப்பு என நாம் சொல்லுகிறோம். இது இந்துக்களுக்கு மட்டுமான நாடு அல்ல. ஆதிவாசிகள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், பார்சிகள், முஸ்லிம்கள், தமிழர்கள். மலையாளிகள், இந்திக்காரர்கள், சிந்திகள், குஜராத்திகள், காஷ்மீரிகள், சைவ உணவு உண்போர், அசைவம் உண்போர். பசுவை வழிபடுவோர். பன்றியை வெறுப்போர், பன்றிக்கறியை உண்போர் என்றெல்லாம் பலரும் ஒன்றாக வாழ்ந்திருந்த, வாழ்கிற நாடு.

இதை ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றை உணவுப் பழக்கம் என்றெல்லாம் ஒற்றை அடையாளமாக உள்ள இந்து ராஷ்டிரமாக ஆக்குவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா, பா.ஜக மோடி ஆகியோரின் நோக்கம். இதை அவர்கள் மறைமுகமாக அல்ல வெளிப்படையாக அறிவித்துச் செயல்படுகின்றனர்.

இங்கு தாமரை, சாரு நிவேதிதாவை மேற்கோள் காட்டி இந்த நடைமுறை உண்மையை, அப்பட்டமாக நம் முன் இப்போது அரங்கேற்றப்படும் இக் கொடுமையை, முற்றிலும் தலை கீழாக்கி முன் வைக்கிறார். இன்றைய இந்தப் பன்மைத்துவம் கெடுவதற்கே கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவதும், இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளும்தான் காரணமாம்.

கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை இங்கு வெறும் 2.4 சதம். ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் இவர்களின் மக்கள் தொகை வீதம் குறைந்து கொண்டு போகிறதே ஒழிய அதிகரிக்கவில்லை என்கிற அடிப்படை உண்மையைத் தாமரை அறிந்திருக்கவில்லை என்பது நமக்குப் புரிகிறது. .

இரண்டு நாள் முன்னர் நான் ஜார்கண்டில் இருந்தேன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு 20 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். கொன்று மரத்தில் தொங்கவிடப் பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் மதமாற்றம் செய்தவர்களா? ஏதேனும் ஆதாரம் உண்டா?

இதோ இன்று மதுரை சந்தையூரில் அருந்ததிய மக்கள் முஸ்லிம்களாக மாறப் போகிறேன் என்கிறார்கள். எந்த மௌலவி அல்லது முஸ்லிம் இயக்கம் அதன் பின்னணியில் உள்ளது? விரல் நீட்டி அடையாளம் காட்ட முடியுமா ?

வன்முறைகளுக்கு யார் காரணமோ அவர்களையே வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டுவது சாமர்த்தியம் இல்லை . உண்மை யாராலும் எளிமையாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. அதைன் யாராலும் எளிதில் மறைத்துவிட இயலாது..

இப்படித்தான் புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவில் பெண்கள் பொது உடைமை ஆக்கப்படுகிறார்கள் என ஒரு காலத்தில் இங்கே வதந்திகள் அப்ப்போது நம் நாட்டில் வாழ்ந்த ஒரு கவிஞர் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அதை ஆய்வு செய்தார். உண்மையை அறிந்தார். உலகத்திற்கு வெளிப்படுத்தினார். அவரை நாம் மகாகவி என்கிறோம். ருஷ்யாவில் பெண்கள் நிலை குறித்த அவரது அற்புதமான கட்டுரையை அவசியம் படியுங்கள். மகாகவி பாரதி, தன் சமகால மதச் சிந்தனைகளை எல்லாம் ஆழப் பயின்று காப்பியம் இயற்றிய சீத்தலைச் சாத்தன், திருவள்ளுவன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழக்கிய கணியன் பூங்குன்றன் போன்ற அறிவுக் கூர்மை மிக்க கவிஞர்கள் வாழ்ந்த மண் இது.

இது போன்ற விடயங்களில் கருத்துச் சொல்வதற்கு பரந்த படிப்பு வேண்டும், உழைப்பு வெண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக விசாலமான மனம் வேண்டும்.

இரண்டு

கவிதை எழுதுவது என்பது வெறும் வார்த்தை விளையாட்டல்ல. ஆழ்ந்த அறிவு, விரிந்த அனுபவம் , அளவிடற்கரிய மனித நேயம் எல்லாம் வேண்டும். சம காலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த அவதானிப்பு வேண்டும். தவறுகள் என அறியும்போது பச்சைக் குழந்தைகள் போலத் திருத்திக் கொள்ளும் மனம் வேண்டும். எஸ்ரா பவுண்ட் போலச் சில பாசிசத் தொடர்புடையவர்களும் கூட நல்ல கவிஞர்களாக இருந்துள்ளனரே எனக் கேட்கலாம். அது விதி அல்ல. ஒரு வகையில் அது விதி விலக்குதான். வரலாறு முழுமையிலும் ஒடுக்கப்படுபவர்களின் பக்கமாகக் கவி மனங்கள் கசிந்துள்ளதே அதிகம்.

“மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ, உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்” – எனக் கூறி நாடு துறந்து அகன்றதாகத்தான் கவிமனங்கள் குறித்து செவி வழிச் செய்திகளும் பகரும்.

கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனக் கவிஞர் தாமரை சொல்வது ஏற்புடையதல்ல என நிறுவுவதற்கு நாம் ரொம்பச் சிரமப் பட வேண்டியதில்லை. கூகிளைத் தட்டினால் கடந்த நான்கைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் கிட்டும். நீங்கள் சொன்னபடி இங்கு கிறிஸ்தவர்கள் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர்கள் என்றால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் அவர்களின் மக்கள் தொகை வீதம் கூட வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? அவர்களின் வீதம் குறைந்து கொண்டே போகிறது. கூகிளைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லையானால் என் நூல்களைச் சற்றே புரட்டிப் பாருங்கள் மேடம்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை முன்னூறு ஆண்டுகாலம் ஆண்டான். ஆனால் அவன் போகும்போது இங்கிருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டரை சதம்தான். அவன் நோக்கம் மதம்மாற்றுவதல்ல. அவன் நோக்கம் இங்கிருந்து வளங்களைக் கொள்ளை கொண்டு செல்வதாகத்தான் இருந்தது. பல நேரங்களில் மிஷனரிகளுக்கும் வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையில் மோதல்கள் வந்துள்ளன. முதற்கட்ட வெள்ளைப் பாதிரிமார்கள் பலரின் சராசரி ஆயுள் 50 க்கும் குறைவு.

பெரிய அளவில் மதம் மாறியவர்களாக இருந்தவர்கள் தலித்களாகவும், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினராகவுமே இருந்தது ஏன்?

சுதந்திரம் வந்தது. சரி. என்ன நடந்தது? இந்த அடித்தளச் சாதியினர் கிறிஸ்தவ, முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றானது. நான் கிறிஸ்தவ சமூகத்தில் பிறந்தவன். ஆனால் அப்படி வளர்க்கப்பட்டவன் அல்லன். என் தந்தை ஒரு நாடு கடத்தப்பட்ட கம்யூனிஸ்ட். அனாதையான இரண்டு தலித்களை வளர்த்து ஆளாக்கியவர். சாகும்வரை சொத்து என எதுவும் இல்லாமலிருந்து செத்தவர் அவர். என்னைச் சேர்த்து ஐந்து பிள்ளைகளை என் பொறுப்பில் விட்டுச் சென்றவர் அவர். நான் படித்து முடித்து வேலைக்குப் போகும் வரை எனக்கு இட ஒதுக்கீட்டுப் பலன் ஏதுமில்லை. தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்புதான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இன்றளவும் கிறிஸ்தவ தலித்கள் பட்டியல் சாதி உரிமைகளைப் பெறவில்லை. பொறையாரில் விஜியின் தந்தை இறந்த போது அவரது உடலை எரித்தவரை ‘நாநாய்க்கம், நாநாய்க்கம்’ என ஆதிக்க சாதியினர் அழைத்ததைப் பார்த்து விட்டு அடுத்த நாள் அவரைத் தனியே அழைத்து விசாரித்தேன். அவர் பெயர் ஞான ஆதிக்கம். கிறிஸ்தவ தலித். செய்யும் தொழில் வெட்டியான். ஆனால் அவருக்கு இட ஒதுக்கீடு இல்லை. கவிஞரே இதெல்லாம் உங்கள் கவனத்தில் பட்டதுண்டா?

மேடம் , ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன். நான் பொன்னேரி அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். ஆசிரியர் சங்கச் செயலபாட்டாளன், சங்கச் செயல்பாடுகளுக்காக ஊதிய உயர்வு வெட்டு பல்வேறு இடமாற்றங்கள் எனப் பழி வாங்கப்பட்டவன் என்கிற வகையில் ஆசிரியர்கள் எப்போதும் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.

ஒரு நாள் மதியம் ஏதோ கல்லூரி விடுமுறை. சென்னை நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் அந்த கம்பார்ட்மென்டில் அன்று நானும் என்னுடன் பணியாற்றிய பேரா ராம்குமாரும் (பெயர் மாற்றியுள்ளேன்) மட்டும்தான்.

ராம்குமார் மெதுவாக என்னிடம் கேட்டார் : “நான் ஒரு கிறிஸ்தவன். தெரியுமா சார்?”

“தெரியாது ராம்குமார். நான் அதை எல்லாம் கவனிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே..”

“ஆனா நான் இப்ப கிறிஸ்தவன் இல்லை சார்” – அவர் குரல் கரகரத்திருந்தது.

“,,,,,,,,,,,,,,”

“எம். பில் முடிச்சுட்டு 5 வருஷம் எனக்கு வேலை கிடைக்கல. நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். இருந்தும் கிடைகல. எங்க சொந்தக்காரர்தான் இளங்கோவன் ஐ.ஏ.எஸ் (உண்மைப் பெயர். கல்வித்துறைச் செயலராக இருந்தவர்). அவரைப் போய் பார்த்தேன். அவர் திட்டினார். ‘நீ ஏன்யா இன்னும் கிறிஸ்தவ சர்டிஃபிகேட்டையே வச்சிட்டு இருக்கே. மதுரையிலதான் அந்த சைவ மடத்திலே மதம் மாற்றி சர்டிஃபிகேட் தர்றாங்க இல்ல. போய் இந்து அருந்ததியர்னு சர்டிஃபிகேட் வாங்கிட்டு வா..’ அப்டீன்னு சத்தம் போட்டாரு. எனக்கு மனசு வரல. ஆனா அடுத்த முறை டி.ஆர்.பி அப்லை பண்ணும்போது இந்துன்னு சர்டிஃபிகேட் வாங்கிட்டேன். SC ரிசர்வேஷன்ல வேலை கிடச்சுது..”

அவர் குரல் இப்போது முற்றிலும் உடைந்திருந்தது.

“அதனால என்ன இப்போ விடுங்க ராம் குமார்” என்றேன்.

“இல்ல சார். இப்ப நான் இரண்டு பிள்ளைங்களையும் இந்துவாத்தான் வளர்க்கிறேன். வீட்டீலே ஏசு, மாதா படங்கள் எதுவும் வச்சுக்கிறது இல்ல. பொய் சொல்லி சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன்னு யாராவது புகார் பண்ணிடுவாங்களோன்னு பயம் …..”

அவர் திடீரென அழ ஆரம்பித்தார். சின்ன வயதிலிருந்து மதப்பற்று, சடங்குகள் இல்லாமல் வளர்க்கப்பட்ட எனக்கு இது ஒரு புதிய அனுபவம். விரும்பி மதம் மாறுவது என்பது வேறு. இப்படி விருப்பத்திற்கு மாறாக மதம் மாற நேர்வது என்பது இத்தனை வலி மிகுந்த ஒன்றாக இருக்கும் என நான் நினைத்ததில்லை.

அப்புறம் நான் இது குறித்து ஆய்வு செய்தபோது அப்போது (15 ஆண்டுகளுக்கு முன் ) ஆண்டொன்றுக்கு மதுரை ஆதீனத்திலிருந்து மட்டும் இவ்வாறு கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறியதாக சான்றிதழ் வாங்குபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1000 என அறிந்தேன்.

(பேரா. முனைவர் ராம்குமார் இப்போது சென்னையிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் உள்ளார்)

மூன்று

கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வீதம்குறைந்து வருவதாக நாம் சொல்லி இருப்பது ஏதோ பொய் என்பது போல இந்துத்துவ நேசர்கள் இங்கே அலம்பல் பண்ணிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கடந்த மூன்று மக்கள் தொகைக் கணக்கீட்டு விவரங்கள் இதோ (அத்வானியின் முன்னுரையுடன் கூடிய Centre for policy Studies – Religious Demography in India எனும் தலைப்பில் உள்ள தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இவை.):

1971 ல் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வீதம் 2.595% இது 1981 ல் 2.4315 ஆகவும், 1991 ல் 2.322% சதமாகவும் குறைந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தரவு இது என்பது குறிப்பிடத் தக்கது. அதே நேரத்தில் இந்த மூன்று சென்சஸ்களிலும் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை முறையே 1,42,25,000 // 1,66,45,000 // 1,96,51,000 என அதிகரித்துள்ளது. ஆனாலும் அவர்களின் மக்கள் தொகை வீதம் மொத்தத்தில் குறைந்து கொண்டே வருகிறது என்பதன் பொருள் என்ன? மற்ற இரு முக்கிய மதங்களின் மக்கள் தொகை வீதம் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் அதிகமாக அதிகரித்து வருகிறது என்பதுதான்.

எடுத்துக்காட்டாக மேற்படி தகவல் பிற இந்திய மதங்களின் (அதாவது முக்கியமாக இந்து மதம்) மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் பற்றிக் குறிப்பிடும் தகவலைப் பார்ப்போம்.

இதே 1971, 1981, 1991 ஆகிய மக்கள் தொகைக் கணக்கீட்டில் முறையே இது 47,25,17,000 // 58,66,81,000// 72,01,00,000 என அதிகரித்துள்ளது. அதாவது 1971-91 கால கட்டத்தில் இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சுமார் 54 இலட்சம் என்றால், இந்துக்கள் 95 சதத்திற்கும் மேலாக உள்ள ‘இந்திய மதங்களின்’ மக்கள் தொகை சுமார் 25 கோடி அதிகரித்துள்ளது.

# # #

ஒப்பீட்டளவில் பிற மதங்களைக் காட்டிலும் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகைப் பெருக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் மத்தியில் கல்வி வளர்ச்சி வீதம் அதிகமாக உள்ளதே. கல்வி வளர்ச்சி அதிகமாக உள்ள சமூகங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

இந்தியக் கிறிஸ்தவத்தைப் பொருத்தமட்டில் அதன் இருப்பைத் தென்மாநிலங்களிலும் (தமிழகத்தில் அது சுமார் 6%), மேகாலயா, நாகாலந்து முதலான வட கிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே காண முடியும். மத்திய இந்தியாவில் அது 1% க்கும் குறைவு. அதனாலேயே சில ஆய்வாளர்கள் இந்திய கிறிஸ்தவத்தை “”திராவிட – பழங்குடி மக்களின் மதம்” எனக் குறிப்பிடுகின்றனர்.

சென்ற வாரம் நான் ஜார்கண்டில் இருந்தேன் என்றேன். அங்கே கிறிஸ்தவர்கள் 4 சதத்திற்கும் சற்றுக் கூட. முஸ்லிம்கள் 14 சதம். இந்துக்கள் சுமார் 66 சதம். மற்ற 16 சதத்தினரின் மதம் ‘சரணாயிசம்’ என அறிந்து சற்றுக் குழம்பிப் போனென். அது பழங்குடிகளின் மதம் என்பதைப் பின்னரே புரிந்து கொண்டேன். மரங்கள், ஆறுகள் முதலான இயற்கை வழிபாடு அவர்களுடையது.

இந்துத்துவ சக்திகள் இன்று பெரிய அளவில் இந்தியா முழுவதும் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்து மதமாற்றம் செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விடயம். தற்போது மலேகான் முதலான பாங்கரவாத வழக்குகளில் சிக்கிச் சிறையில் இருக்கும் சுவாமி அசீமானந்தா இவ்வாறு குஜராத்தில் டாங்ஸ் பகுதியில் பழங்குடி மக்கள் மத்தியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து கொண்டிருந்த போது பெரிய அளவில் அங்கு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

# # #

தண்டகாரண்யப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மத்தியில் இராவண வழிபாடு உண்டு. அப்படியான ஒரு ஆறு பகுதிகளில் நடைபெறும் இராவண வழிபாடுகள் பற்றிய அழகான படங்களுடன் கூடிய கட்டுரை ஒன்றை நீங்கள் இணையத் தளங்களில் படிக்கலாம். (Celebrating Ravan, The Hindu, Oct 24,2015 – ’ஹிண்டு’ நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையையும் நீங்கள் பார்க்கலாம்.)

இராமாயணம் என்பது உண்மையில் கங்கைச் சமவெளியில் உருவான அரசுருவாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கு நோக்கிப் பரவி தண்டகாரண்யப் பகுதியில் வாழ்ந்தப் பழங்குடிக் குடிஅரசுகளை உள்வாங்கிய வரலாறுதான் என மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கும் கருத்து இன்றும் எஞ்சியுள்ள இந்த இராவண வழிபாட்டுடன் ஒப்பு நோக்கத் தக்கது. பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட mile to inch colored topo sheets சர்வே வரை படங்கள், வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் தண்டகாரண்யப் பெயர்கள், கோள் நிலைகள் ஆகியவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு சென்ற நூற்றாண்டில் பரமசிவ அய்யர் அவர்கள் ஆய்வு செய்துள்ளார். விரிவான அவரது நூல் குறித்து என் விரிவான கட்டுரை ஒன்றை என் முகநூல் பக்கங்களில் காணலாம். வால்மீகி இராமாயணக் கதையின்படி இராமன் விந்திய சாத்பூரா மலையைத் தாண்டவில்லை என அவர் நிறுவியுள்ளார். பார்க்க amarx.in. பரமசிவ அய்யர். பால காண்டத்தை மனப்பாடம் செய்தவர். ஆனால் அவர் இந்துத்துவ ஃபாசிஸ்ட் அல்ல என்பதுதான் இங்கே கவனத்துக்குரியது.

சரி இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். முகநூல் பதிவில் இதைச் சொல்லவில்லை. தேடிப் படித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிடேன். அது வேறொன்றும் இல்லை. அங்கு இந்துத்துவவாதிகள் புகுந்து இராவண வழிபாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றனர். தங்கள் பண்பாடு நம்பிக்கைகள் எல்லாம் அழிகின்றனவே என அவர்கள் கலங்குகின்றனர். நேரடி ஆய்வில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான கட்டுரை அது.

குறிப்பு 1: கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிய என் விளக்கத்தை யாரும், அப்படி ஒருவேளை ஆவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்தால் அது தவறுதான் என நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். யாரொருவரும் எந்த மதத்திலும் விரும்பி இணைவது அல்லது அதை விட்டு விலகுவது என்பதும், யாரொருவரும் என் மதத்திற்கு வாருங்கள் என மற்றவர்களை அழைப்பதும் அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பது என் கருத்து. மதத்தில் கட்டாயமும் வன்முறையும் கூடாது என்பது மட்டுமே என் கருத்து.

குறிப்பு 2: இது தொடர்பாக முகநூலில் நடந்த விவாதத்தில் ஒருவர் கிறிஸ்தவர்களின் வீதம் குறைந்து வருவதாக நான் சொல்வது பொய் எனவும், ஆந்திரத்தில் அவர்களின் வீதம் 40 சதம் எனக் கூறுவதையும் பார்க்கலாம். ஆந்திரத்தில் கிறிஸ்தவர்கள் 40 சதம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் அல்லது தவறான புரிதல். ஆனால் அப்படிச் சொல்லியுள்ளவர் அதை உண்மை என நம்புகிறார். இதுதான் நமது கவலைக்கும் அச்சத்தும் உரிய விடயம். பாசிசம் இப்படியான பொய்களின் அடிப்படையிலேயே தன் வன்முறைகளை நியாயப்படுத்திக் கொள்கிறது. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆந்திர மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 15.1% மட்டுமே. 1971 மக்கள் தொகையுடன் இதை ஒப்பிட்டால் இப்போது இங்கு கிறிஸ்தவர்களின் வீதம் 1.2% குறைந்துள்ளது.

இவ்வளவு ஆதாரங்களை முன்வைத்த பின்னும் அவர்கள் என்ன சொல்வார்கள்?

“கிறிஸ்தவர்கள் பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் அவர்களை மதம் மாற்றும்போது அரசாங்க ஆவணங்களில் நீங்கள் மதம் மாறியதைச் சொல்ல வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனால்தான் அவர்களின் வீதம் குறைவது போலத் தோன்றுகிறது” – என்பார்கள்.

வேறென்ன சொல்வார்கள்