போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்., நான்கு நாட்களாக நாளிதழ்களில் இவைதான் தலைப்புச் செய்திகள்.

பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை.

போலீஸ் பக்ருதீன் கைதுடன் தொடர்புடைய மூன்று கூற்றுகள் இங்கே…

முதலாவது இரு மாதங்களுக்கு முன் இப்பக்கத்தில் நான், “மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டை அடித்தள முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் இட்ட பதிலிருந்து.. எவ்வாறு இப்பகுதிகளில் சிலர் குற்றமிழைக்காதபோதும் காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும், பொய் வழக்குப் போடப்படுவதும், உளவு சொல்லக் கட்டாயப்படுத்தப் படுவதும் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருந்தேன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் முதலில்..

அடுத்து நேற்றைய ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ், பக்ருதீனின் சகோதரரை நேர்கண்டு எழுதியதில் ஒரு பகுதி, மகேஷுக்கு நம் நன்றிகள்,

இறுதியில் பக்ருதீன் மீதான வழக்குகளை நடத்திய வழக்குரைஞர் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அறிந்து கொண்டது.

இவர்கள் யாரும் பக்ருதீனையோ மற்றவர்களியோ குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை, நீதிமன்றம் அதை முடிவு செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கட்டும், ஆனால் இத்தகையோரும் மனித்ர்கள்தான், எனினும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறித்த ஒரு சிறிய சிந்தனை உசுப்பல்தான் இது.

1. எனது கட்டுரையிலிருந்து…

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

2. நேற்றைய (அக் 7, 2013) ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ் எழுதியுள்ள, “ஆறுதல் சொல்ல எங்களுக்கு யாருமில்லை” என்கிற கட்டுரையின் முக்கிய சில பகுதிகள்:

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?

போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.

போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.

என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.

28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.

அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.

பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.

3. வழக்குரைஞர் ரஜினி, மதுரை :

(தொலைபேசியில் கூறியது)

“எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பருதீனைத் தெரியும். அவன் அம்மாவை ரொம்ப நன்றாகவே தெரியும். ஏதோ பிறக்கும்போதே தீவிரவாதியாகப் பிறந்தவன் என்பதுபோல இன்று அவனை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. போலீசும் அப்படித்தான் சொல்கிறது. பரமசிவம் கொலை வழக்கில் எல்லாக் குற்றவாளிகளுக்கும் நான்தான் வழக்காடினேன். ஜாமீனில் கூட பக்ருதீனை விடவில்லை. கடைசியில் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் அவ்வளவு பேரும் விடுதலை செய்யப்பட்டாங்க. அவன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ விரும்பினான். நெல்பேட்டையை சேர்ந்த விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் வசித்துக் கொண்டிருந்த ******* என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தான். அவளின் குழந்தையைத் தன் குழந்தை என்றே சொல்லிக் கொஞ்சுவான். அந்தப் பெண்ணின் தம்பியும் வழக்கில் இருந்தவன். அவள் இவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவனைப் பிடிக்காததல்ல காரணம். “என் தம்பி வழக்குக்காக கோர்ட் கோர்ட்டா அலைஞ்சுட்டிருக்கேன். இவரையும் கட்டிகிட்டு இவருக்காகவும் கோர்ட் கோர்டா அலையணுமா அக்கா?” என்பாள் அவள். அப்புறம் வேறொரு பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்த்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் வேறொரு வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தான். ஒரு நாள் அவன் அம்மா வீட்டுக்கு ஓடி வந்தாங்க.”எம் மவன ஜெயில்ல போட்டு வார்டருங்க அடிசுட்டாங்கம்மா. கோர்ட்டுக்குக் கொண்டு வாராங்களாம். ஏதாவது செய்யுங்கம்மா..” ன்னு அழுதாங்க. நான் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் பெடிஷன் போட்டேன். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்குச் சென்று விசாரணை செய்ய வேணும்னு ஆர்டர் வாங்கினேன்.

பரமசிவம் கொலை வழக்கில் விடுதலை ஆன பிறகு அவன் ரொம்ப அமைதியாதான் இருந்தான் எல்லோரையும்போல திருமணம் செஞ்சுட்டுக் குடும்பம் நடத்தத்தான் விரும்பினான். அத்வானி வந்தபோது குண்டு வைத்த வழக்கில் அவன் குடும்பத்தையே தொந்தரவு செய்தாங்க. அவன் அண்ணன் மீது பொய் வழக்கு போட்டாங்க. அவன் அம்மா ப்ரெஸ் மீட் வச்சு பக்ருதீனுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லன்னு அறிவிச்சாங்க.

பிலால், பக்ருதீன் மனைவி எல்லோரையும் போலீஸ் புத்தூரிலிருந்து இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்களாம். நாளைக்குப் போய்ப் பாக்கணும்”

பக்ருதீனை ‘அவன்’ ‘இவன்’ என ரஜினி அழைத்தது ஊடகங்கள் கூறும் பொருளில் அல்ல.. வயதுக் குறைவு, நீண்ட நாள் பழக்கம், அவ்வளவுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *