ஜூனியர் விகடன் தொலைபேசி உரைகள்

(2012ல் இரு வாரங்கள் தினந்தோறும் ஜூ.வி வாசகர்களுக்கென தொலைபேசியில் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதற்கென பதிவு செய்யபட்ட உரைகள்)

1. நகைச்சுவை

மனித வாழ்க்கையில நகைச்சுவைக்கு ஒரு பங்கு உண்டு. நமது இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படம், ஊடகங்கள் எல்லாவற்றிலும் நகைச்சுவைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ‘நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிட்டால் நான் எப்போதோ செத்துப் போயிருப்பேன்னு காந்தி சொல்லியிருக்கார். நகைச்சுவை என்பது வெறுமனே சிரிச்சுட்டுப் போகிற விஷயம் மட்டும் இல்லை, அதன்மூலம் சிந்திக்கவும் வைக்க முடியும், அரசியலை நுணுக்கமா விமர்சனம் செய்ய முடியும். முல்லா, தெனாலிராமன் போன்றோர் இப்படிச் சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்தோர்.

ஹிட்லருடைய கடுமையான பாசிச ஆட்சியில் நகைச்சுவை மூலம் கேலி செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மரண தண்டனை கூட வழங்கப்பட்டது. அப்படியும் இரகசியமாக பல நகைச்சுவைகள் புழங்கி வந்தன. அதில் ஒன்று:

ஹிட்லர் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரண்டு நாள் முன்னதாகவே அந்த ஆஸ்பத்திரியில் ஏகப்பட்ட டென்ஷன்; கெடுபிடிகள். அங்கிருந்த 300 பைத்தியங்களையும் வரிசையாக நிற்க வைத்து, சீருடை கொடுத்து ஹிட்லர் வந்தவுடன் ஃபாசிஸ்டுகளின் வழக்கப்படி கையை நீட்டி சல்யூட் செய்யக் கடும் பயிற்சி கொடுத்திருந்தனர்.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்ட்தில் ஹிட்லர் வந்தார். பைத்தியங்கள் சீருடையுடன் வரிசையாக நின்றிருந்தார்கள். “சல்யூட்” என்று சத்தம் வந்தவுடன் எல்லாப் பைத்தியங்களும் கையை நீட்டி சல்யூட் செய்தார்கள். இறுகிய முகத்துடன் ஹிட்லர் எல்லோரையும் பார்வையிட்டு வந்தார். அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ஒருவர் மட்டும் சல்யூட் பண்ணாமல் நின்றிருந்தார். அவர் அருகே நின்ற ஹிட்லர்’ “ஏன் நீ சல்யூட் பண்ணவில்லை?” எனக் கடுமையாகக் கேட்டார்.

நடுங்கிப்போன அவர் மெல்லிய குரலில் பதில் சொன்னார்: “ மேய்ன் ஃப்யூஹ்ரர், நான் பைத்தியமில்லை. நர்ஸ்…”

சமகால அரசியல் நகைச்சுவை ஒன்றைச் சொல்லட்டுமா? அமெரிக்கர்கள் வணிக இலாபத்திற்காகக் காசு கொடுத்து எதையும் வாங்கி விடுவார்கள் என்பதைக் கேலி செய்யும் நகைச்சுவை இது:

போப் ஆண்டவர் ஒரு நாள் தோட்டத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார், அருகே தோட்டக்காரர் புற்களை வெட்டி அழகு செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு அமெரிக்கன் நீண்ட கோட், உயரத் தொப்பி சக்தம் வந்து போப் ஆண்டவர் முன் பணிவாக வணக்கம் சொல்லி ஏதோ கிசு கிசுத்தான். போப் ஆண்டவர் கடுப்பாகி, “நோ, நோ” அதெல்லாம் முடியாது” என்றார். உடனே அந்த அமெரிக்கன் இன்னும் பணிவாக, “5 மில்லியன் டாலர்..” என்றான். “சாரி..அதெல்லாம் முடியாது” என இன்னும் கடுமையாகச் சொன்னார் போப். “ பத்து மில்லியன் டாலர் …” என இழுத்தான் அமெரிக்கன். “முடியாது..முடியாது” என இன்னும் கோபமாகச் சொன்னார் போப் ஆண்டவர். “ சரி ஃபாதர் 10 பில்லியன் டாலர்” என்று அழுத்தமாகச் சொல்லி போப் ஆண்டவரின் முகத்தைப் பார்த்தான் அமெரிக்கன். போப் ஆண்டவர் கடுங்கோபமாகி “ நோ, நோ கெட் அவுட்..” என்று கத்தியவுடன் அந்த அமெரிக்க்ன் ஓடிப்போனன்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் போப் அருகில் சென்று, “சாமி, நீங்க இப்பிடிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லியே, அந்த அமெரிக்கன் அப்படி என்ன சொன்னான்?” போப் ஆண்டவர் கோபம் தணியாமல் சொன்னார்: “ ஒண்ணுமில்ல, நாம ‘சர்ச்’ல ஜெபம் சொல்லி முடிச்சவுடன் ‘ஆமென்’னு சொல்றோம் இல்லியா, அதுக்குப் பதில் ‘கொகோ கோலா’ன்னு சொல்லணுமாம்..”

2. காந்தியை மறு வாசிப்பு செய்தல்

சமீபத்தில் என்னிடம் பலரும் கேட்கிற கேள்விகளில் ஒன்று என்ன சார் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார்னு பேசிட்டுருந்த நீங்க திடீர்னு காந்தி பற்றி பேச ஆரம்பிச்சுட்டிங்களே என்பது. காந்தி பற்றிப் பேசுவது என்பது மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை விட்டுவிடுவது என்பதல்ல. அதேபோல காந்தி பற்றி பேசுவதென்பது காந்தீயம்தான் இன்றைய பிரச்சினைகளுக்கெல்லம் ஒரே தீர்வென்று சொல்வதும் அல்ல. தலித்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி என்கிற கோரிக்கையை அவர் முறியடித்தது உட்பட அவரது எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஏற்பதும் அல்ல. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் காந்தி, ஏசு, புத்தர், நபிகள், பெரியார், மார்க்ஸ் இன்னும் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து நாம் வெகு தொலைவு வந்துவிட்டோம். இன்றைய பன்முகச் சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கு இவர்கள் யாரொருவருடைய சிந்தனை மட்டுமே போதாது. இன்றைய சூழல்களுக்கான வழிகாட்டல்களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அத்தகைய முயற்சியில் இவர்களது அனுபவங்கள் நமக்குத் துணை செய்யக்கூடும், அவ்வளவுதான்.

காந்தியை நான் எந்தக் காலத்திலுமே அவதூறு செய்தது கிடையாது. அவரது அணுகல் முறை குறித்து நான் சற்று ஆழமாகப் படிக்க நேர்ந்தது பாபர் மசூதி இடிப்பிற்குப் பிந்திய காலகட்டத்தில்தான். இந்தியா என்பது பல இன, மொழி, மதம், சாதிகளைப் பின்பற்றுகிறவர்கள் வாழ்கிற ஒரு நாடு. எல்லோரும் அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற அதே நேரத்தில் மற்றவர்களுக்குரிய நம்பிக்கைகளை அங்கீகரித்து வாழ வேண்டும். அந்த வகையில்தான் மதச்சார்பற்ற நாடு என்கிற கருத்தாக்கத்தைக் காந்தி முன்மொழிந்தார். அதற்காகவே அவர் தன் உயிரைப் பலிகொடுக்கவும் நேரிட்டது.

பலரும் காந்தியை இந்து மதவாதி, வருணாசிரமத்தை ஏற்றவர் எனச் சொல்வார்கள். காந்தி, தான் ஒரு இந்து எனச் சொல்லிக் கொண்டவர். சாகும்போதுகூட ‘ஹே ராம்’ எனச் சொல்லி மாண்டவர். ஆனால் அவர் எந்நாளுமே இந்து மதம் ஒன்றே சிறந்த மதம் என்றோ, இந்த நாடு இந்து மதத்திற்கு மட்டுமே உரியது என்றோ சொன்னதில்லை. இந்த தேசத்தை அவர் மொழி, மதம், இனம் என்கிற ஏதோ ஒரு பெரும்பான்மையின் அடிப்படையில் வரையறுக்காமல், பல்வேறு சிறுபான்மையினரின் தொகுதியாக வரையறுத்தார். அந்த வகையில் அவர் உலக அளவில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். அவரது தேசியம் territorial nationalism. .அது புவி இயலை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாட்டு எல்லைக்குள் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்நாட்டுக்குரியவர்கள் என்றார்.

அவர் இந்து மதவாதியாக இருந்திருந்தால் ஏன் இந்து ராஷ்டிரத்தை முன்மொழிந்தவர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்? அவர் வருணாசிரமத்தை முன்மொழிந்தவர் என்றால், ஏன் மடாதிபதிகள் ‘ஆரிய தர்மம்’ என்றொரு பத்திரிக்கை நடத்தி அதில் “கலி யுகத்தில் வருண சம்ஹாரம், அதாவது வருணாசிரமத்தை ஒழிக்க வந்தவர் காந்தி” என்று பிரச்சாரம் செய்தார்கள்?

அவரது தீண்டாமை ஒழிப்பு முயற்சிகளைக் கேலி செய்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. தீண்டாமைக்கு உட்பட்டவர்களை ஒருங்கு திரட்டிப் போராடவைப்பது என்பது ஒரு வழிமுறை. தீண்டாமைக்குக் காரணமானவர்களையே அதற்கு எதிராகப் பேச வைப்பது என்பது இன்னொரு முயற்சி. காந்தி இரண்டாவது வழி முறையைத் தெர்வு செய்தார். இருசாரரும் ஒரே காரணத்திற்காக இரு வேறு மக்கள் தொகுதிகளை நோக்கிப் பேசினார்கள். எனவே இருவர் மொழியும் ஒரே மாதிரியாக இருக்கும் என நாம் எதிர் பார்க்க இயலாது.

காந்தியை வெறுப்பதற்கோ, இல்லை கணக்கிலெடுப்பதற்கோ முன் அவரைப் படிப்போம். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் 99 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன, உலகப் பெரும் அறிஞர்கள் பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளனர், சுமார் 1000 வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவருக்கு உண்டு.

3. சமூக வலைத் தளங்கள்

நானெல்லாம் கல்லூரியில் படிக்கும்போது செய்தி ஊடகம்னா, அது அச்சு ஊடகந்தான். அப்புறம் தொலைக்காட்சி சேர்ந்து கொண்டது. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இப்போது ஒன்று அல்லது இரண்டு செய்தித் தொலைகாட்சிகளை நடத்துகின்றன. உடனுக்குடன் போட்டி போட்டுக் கொண்டு செய்திகள் ஊரெங்கும் பரவி விடுகின்றன. காட்சி ஊடகங்கள் இப்படி உடனுக்குடன் செய்திகளைச் சொல்லி விடுவதால், அடுத்த நாள் காலை வரும் நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை மட்டும் சொல்லாமல் அது தொடர்பான வேறு முக்கிய தகவல்களையும் சேகரித்துத் தர வேண்டியவையாக மாறியுள்ளன. ஊடகங்களுக்குள் உள்ள போட்டியால் செய்திகள் குறித்து விவாதங்கள் நடத்துதல், அது தொடர்பான வல்லுனர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்களை எல்லாம் கேட்டு முன்வைத்தல் என்பதெல்லாம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. செய்திப் பத்திரிக்கைகள் வண்ணப் படங்களோடு நம்ப இயலாத அளவிற்குக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவை எல்லாம் இன்று செய்திப் பரவலில் வரவேற்கத் தக்க ஒரு சனநாயக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இன்னொரு புதிய மாற்றம் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைத் தளங்கள். இது செய்திப் பரவலில் ஏற்பட்டுள்ள இன்னொரு பெரிய புரட்சி. பழைய ஊடகங்களில், அதாவது அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்தணிக்கை சாத்தியம். இவற்றை உரிமையாகக் கொண்டுள்ள பெரு முதலாளிகளின் அரசின் கருத்துக்களுடன் பெரிய அளவில் மாறுபடுவதில்லை. எனவே அரசுக்கும் கார்பொரேட் நலன்களுக்கும் உவப்பாக இல்லாத செய்திகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் புதிய ஊடகங்களும்கூட பெரும் பன்னாட்டுக் கார்பொரேட்களின் கையில்தான் உள்ளன என்ற போதிலும், இந்தப் புதிய தொழில் நுட்பத்தின் தன்மை முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்து விடுகிறது. எனவே இதில் பங்கு பெறுபவர்கள் மிகவும் சுதந்திரமாகத் தம் கருத்துக்களை எந்தத் தடையும் இன்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, அது அடுத்த கணமே உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்குக் காணக் கிடைக்கிறது. எழுதுபவர்கள் உடனடி எதிர்வினையையும் பெறமுடிகிறது.

மிகவும் பொறுப்புடனும், அரசியல் கூர்மையுடனும் பயன்படுத்தினால் வலிமை வாய்ந்த சர்வாதிகாரிகளையே இந்த ஊடகங்களின் துணையோடு வீழ்த்திவிட முடியும் என்பதற்கு சமீபத்திய அரபுலகப் புரட்சிகள் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. துனீசியாவிலும் எகிப்திலும் இருபது முப்பதாண்டுகாலம் கொடுங்கோல்ஆட்சி நடத்திய சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்பட்டு சனநாயகம் தழைத்ததில் முக நூலுக்கு ஒரு முக்கிய பங்குண்டு..

தமிழிலும் கூட கூடங்குளம், முல்லைப் பெரியாறு முதலான பிரச்சினைகளில் முகநூல் கருத்துப் பிரச்சாரத்திற்குப் பெரிய அளவில் படன்பட்டுள்ளது. குறிப்பாகக் கூடங்குளம் பிரச்சினையில் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் அணு உலைக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்திருந்த சூழலில் இடிந்தகரை மீனவ மக்களின் போராட்டத்தை வெளி உலகிற்குக் கொன்டு வருவதில் முகநூல் முக்கிய பங்காற்றியது.

எனினும் முன்தணிக்கை இல்லாத சூழலில் எழுதுபவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகிறது. குறிப்பாக அவதூறுகள் பேசுவது, வெட்டி அரட்டை அடிப்பது, மாறுபட்ட கருத்துக்களை எதிர்கொள்ள இயலாதபோது எந்த ஆதாரமும் இன்றி பொய்க் குற்றச் சாட்டுகளை முன்வைப்பது என்பதெல்லாம் தமிழ்ச் சூழலில் அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களாயின் பாலியல் ரீதியாகச் சீண்டுவது, அவதூறு செய்வது என்பதும் இங்கு அதிகம். பாடகி சின்மயி விவகாரத்தில் இது கூர்மையாக வெளிப்பட்டது. பொறுப்பற்ற முறையில் கருத்துச் சொல்வதற்குச் சின்மயி ஒரு எடுத்துக்காட்டு என்றால், அதை ஒட்டி அவதூறு செய்து துன்புறுத்தியதற்கு அவரை எதிர்த்தவர்கள் உதாரணமானார்கள்.

பொறுப்புடனும் அற உணர்வுடன் கூடிய சுய தணிக்கையுடனும் செயல்பட்டால் இந்தச் சமூக வலைத் தளங்கள் எதிர்காலத்தில் சமூகமாற்றத்தில் முக்கிய பங்காற்ற வாய்ப்புண்டு.

4. ஈழ அகதி முகாம்கள்

தமிழகத்தில் உள்ள நம் எல்லோருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு உணர்வு பூர்வமான அக்கறை உள்ளது. கண்முன் நடந்த மனித உரிமை மீறல்களையும், போர்க் கொடுமைகளையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்கிற ஏக்கமும் இருக்கிறது. போர்ச் சூழலில் வாழ இயலாத நம் ஈழத் தமிழர்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாகத் திரிகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் சுமார் ஒரு லட்சம் அகதிகள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 68,500 பேர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 111 அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். 26 மாவட்டங்களில் இந்த அகதி முகாம்கள் பரவிக் கிடக்கின்றன.

உங்கள் ஊருக்கு அருகிலும் கூட எங்காவது ஈழ அகதி முகாம் இருக்கும். எப்போதாவது அதற்குள் போய் பார்த்திருக்கிறீர்களா? ஒருமுறை போய்ப் பாருங்கள். எவ்வளவு மோசமான நிலையில் , வாழத் தகுதியற்ற சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பது தெரியும். 1983 யூலை கலவரம் தொடங்கி ஈழத் தமிழர்கள் இங்கே அகதிகளாக வந்து கொண்டே இந்தார்கள். .

வருகிறவர்களுக்கு முகாம்கள் அமைத்து 10க்குப் 10 என்கிற அளவில் இடம் ஒதுக்கிக் கொடுத்தது தமிழக அரசு. கூரைக்குத் தார்ப்பாய் அட்டை, அல்லது டின் ஷீட்டும், மிகச் சில இடங்களில் ஓடுகளும் தரப்பட்டன. இதச் சிறிய வீட்டில் ஒரு குடும்பம் வசிக்க முடியாது என்பதால் அவர்களாகவே சார்ப்பு இழுத்துக் கொஞ்சம் பெரிதாக்கி வாழ்கிறார்கள். சுனாமி, புயல் மழையால் பாதிக்கப்படும்போது மறுபடி இந்தப் பத்துக்குப் பத்து அளவில்தான் தகரக் கூறைகள் தருகிறார்கள். இழுத்துக் கட்டிய இடங்கள் கூரையின்றிக் காட்சி அளிக்கின்றன. வெயில் காலங்களில் தகரக் கூரைக்குள் உட்கார இயலாது. மழைகாலத்தில் சேரும் சகதியும் முகாம்களுக்குள் நடமாட இயலாது. கழிப்பிடம், போதிய குடி நீர். இடுகாடு முதலான வசதிகளும் படு மோசம்.

இன்னொரு பக்கம் இன்னும் ஈழ அகதிகள் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகின்றனர். ‘கியூ’ பிரிவு போலீசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இம்முகாம்களில் வசிப்போர் மாலை 6 மணிக்குள் முக்காம்களுக்குத் திரும்ப வேண்டும். வெளியூர் முகாம்களில் உள்ள உறவினர்களைப் பார்க்கப் போக வேண்டுமானால் அனுமதி பெற்றுப் போய், குறித்த நாளில் திரும்ப வேண்டும். அருகிலுள்ள ஊர்களுக்கு யாரேனும் அரசியல் தலைவர்கள் வந்தால் அன்று பூராவும் முகாம்களை விட்டு யாரும் வெளியேறக்கூடாது.

இவர்களுக்குக் குறைந்த பட்ச மாதாந்திர உதவித் தொகை, மாநிய விலையில் அரிசி சர்க்கரை முதலியன கொடுக்கப்பட்டபோதும் நமது நாட்டுச் சட்டத்தின்படி இவர்கள் “சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தவர்களாகவே” (Illegal Immigrants) கருதப் படுகிறார்கள். சர்வதேச அளவில் அகதிகளிக்கு அளிக்கப்படும் உரிமைகள் இவர்களுக்குக் கிடையாது. ஏனெனில் ஐ. நா அவையின் 1951ம் ஆண்டு அகதிகள் குறித்த உடன்பாடு, 1987ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. அதனால்தான் இந்திய அரசு ஒரு இலட்சம் ஈழ அகதிகளை ராஜீவ் கொலையை ஒட்டி வெளியேற்றியபோது ஐ.நா. அகதிகள் ஆணையத்தால் அதைத் தட்டிக் கேட்க இயலவில்லை.

இந்தியாவுக்கு தேசிய அளவிலான ஒரு அகதிகள் கொள்கையும் கிடையாது, அதனால்தான் திபேத்திய அகதிகள் ஒரு விதமாகவும், ஈழ அகதிகள் மோசமாகவும் நடத்தப்படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்ற ஈழ அகதிகளில் பெரும்பாலோருக்கு அந்தந்த நாடுகளில் இன்று குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பேசும் மக்களான அவர்களுக்கு இந்திய அரசு மட்டுந்தான், அவர்கள் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் குடியுரிமை வழங்க மறுக்கிறது.

அதனால்தான் முகாம்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஆள்கடத்துபவர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்துஉயிரைப் பணையம் வைத்து மீன்பிடிக் கப்பல்களில் ஆஸ்திரேலியா போக முயற்சித்து மாட்டிக் கொள்கிறார்கள். ஈழ மக்கள் பிரச்ச்சினையில் அக்கறை உள்ள நாம் ஈழ அகதிகள் முகாம்களின் நிலை சீர்திருத்தப் படுவது, முக்காம்களில் உள்ளவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிப்பது, அகதிகள் ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட வேண்டுவது ஆகியவற்றிற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

5. மனித உரிமை மீறல்கள்

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரையில் நம்முடைய நாட்டு அரசியல் சட்டம் ஓரளவு வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. 1948ம் ஆண்டு உலகளாவியமனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்ட பின்பு இயற்றப்பட்டதும், அம்பேத்கர் போன்றோர் அதை எழுதுமிடத்தில் இருந்ததும் இதற்குக் காரணங்களாக அமைகின்றன. ஆனால் நிறைவேற்றுச் சட்டங்களாக உள்ள இந்தியக் குற்றவியல் சட்டம், இந்திய போலீஸ் சட்டம் முதலியன காலனிய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை. நமது அரசியல் சட்டத்தின் தொனிக்குத் தக்கவாறு அவை இன்றுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. தவிரவும் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் முதலான கருப்புச் சட்டங்களை இயற்றிக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அரசுகள் கேலிக் கூத்தாக்குகின்றன..

நமது மனித உரிமை ஆணையங்களுக்கு வருகிற புகார்களில் 80 சதத்திற்கும் மேற்பட்டவை காவல் துறை அத்து மீறல்கள் பற்றியவைதான். கூட்டங்கூடுவது, அமைப்பாவது, தமது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது, அரசு நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பதெல்லாம் நமது சட்டபூர்வமான உரிமைகள் என்றபோதிலும், பல நேரங்களில் இந்தக் காரணங்களுக்காகவே மக்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள். சென்றமாதத்தில் கூட வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தினரும், கூடங்குளத்திற்கு உண்மை அறியச் சென்ற ஒரு குழுவினரும் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் இப்படிஆயிரக்கணக்கானோர் அரசியல் காரணங்களுக்காகத் தினந்தோறும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா உடன்பாடு முதலிய பல சர்வதேச மனித உரிமை உடன்பாடுகளில் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்ல. அதேபோல உலகத்தில் 130 நாடுகளுக்கும் மேலாக மரண தண்டனைஅயை ரத்து செய்துள்ள போதிலும் இந்திய அரசு இன்னும் அதைக் கைவிடவில்லை.

காவல்நிலையச் சித்திரவதைகள், சிறைச்சாலை அத்துமீறல்கள், கைது செய்து கொண்டுபோய் சுட்டுத்தள்ளி என்கவுண்டரில் கொன்றதாகப் பொய் சொல்லுதல் என்பதெல்லாம் இந்தியாவில் மட்டுமே உண்டு. 50 என்கவுன்டர் செய்தவன், 100 என்கவுன்டர் செய்தவன் என்றெல்லாம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகளின் ஆல்பம் ஒன்றை அவுட்லுக் இதழ் ஒருமுறை வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களில் பலர் இன்று காசு வாங்கிக் கொண்டு என்கவுண்டர் பண்ணியதற்காகவும்ம், போலி என்கவுண்டர்களுக்காகவும் சிறையில் உள்ளனர், ராஜ்குமார் பாண்டியன், வன்சாரா என்கிற இரு ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். என்கவுன்டர் கொலைகளுக்குப் பெயர்பெற்ற இன்னொரு மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.

அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய மீறல்கள் தவிர சாதி, மதம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலும் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இதனால் தலித்கள், சிறுபான்மையோர், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அப்புறம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய மனித உரிமை மீறல்களை வெளிக் கொணரும் பணி பெரிய அளவில் பாராட்டுக்குரியதாக அமைவதில்லை. சமூக விரோதிகளுக்காகவும், தீவீரவாதிகளுக்காகவும் வக்காலத்து வாங்குகிறோம் என்கிற அவப்பெயரையும் சில நேரங்களில் சுமக்க வேண்டி வரும். அரசு, காவல்துறை, அதிகார வர்க்கம், சமூக ஆதிக்க சக்திகள் ஆகியோரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் பணி என்பது மட்டுமல்ல, அதிகம் உழைப்பையும், அலைச்சலையும், செலவையும் கோரும் பணி இது. எங்களைப் போன்றோர் வெளி நிதி உதவிகளைச் சார்ந்திராமல் சொந்தச் செலவிலேயே இதைச் செய்கிறோம். சந்தேகத்திற்கிடமில்லாத உண்மைகளையே மக்கள் முன் வைக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகத்தான் போகிறோம் என்றாலும் அதற்காக எந்த உண்மையையும் மிகைப்படுத்துவதோ குறைத்துச் சொல்வதோ கிடையாது. ஒரு மனித உரிமைப் பணியாளரின் ஒரே சொத்து அவர் சம்பாதிக்கும் credibility,நம்பிக்கைத் தன்மைதான். இவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்கள் பணி அமைகிறது.

6. இராமர் சேது பாலம்

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தின் முன் தமிழக அரசு சேது சமுத்திரத் திட்டம் சாத்தியமில்லை எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளது. இது நாள் வரையிலான தமிழக அரசின் அணுகல்முறைக்கு இது நேர் எதிரானது, இதை எதிர்க் கட்சிகள் எதிர்த்துள்ளன.

‘ஆடம் பாலம்’ என இதுநாள்வரை சொல்லிவந்த ஜெயலலிதா, இந்த அறிக்கையில் அதை ‘இராமர் சேது’ பாலம் எனச் சொல்லியிருப்பதைக் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா இராமர் சேதுவை ஒரு தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பிரதமரைச் சந்த்தித்துக் கோரிக்கை வைத்ததும் நினைவுக்கு வருகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு நூல் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் பரமசிவ ஐயர். மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் சித்தப்பா இவர். மிகவும் ஆசாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்த பரமசிவர் வால்மீகி இராமயணத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். அவரது சகோதரர் நீதிபதி சர். சதாசிவ ஐயர் வால்மீகி இராமயணத்தைப் பாராயணம் செய்தவர்.

வால்மீகி இராமயணத்தின் பால காண்டமும் சுந்தர காண்டமும் காவியத் தன்மையில் எழுதப்பட்டுள்ளதாகக் கருதும் பரமசிவர், அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்கள் அக்கால வரலாற்றைச் சொல்பவை என்கிறார்.

1934ம் ஆண்டு இலங்கை சென்று வந்த இரவீந்திரநாத் தாகூர் சென்னையில் பேசும்போது, சீதையை இராவணன் ஏன்கிற இராட்சசன் கடத்திவந்து சிறை வைத்தது உங்கள் ஊரில்தான் எனத் தான் இலங்கையில் பேசியதாகக் குறிப்பிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பராம்சிவர். இதேபோல இராஜாஜியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசியதைக் கண்டு மனம் நொந்து போன பரமசிவர், இது போன்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை முன்வைப்பது சமகால அரசியல் பகைகளை உருவாக்கும் எனக் கருதி அடுத்த ஐந்தாண்டுகள், தன் வேலையை விட்டுவிட்டு வால்மீகி இராமயண ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.

சிவசமுத்திர நீர்மின் திட்டத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க பரமசிவருக்கு ஆங்கிலேய அரசு அன்று வெளியிட்டிருந்த புவியியல் நுண் விளக்க வரைபடம் ‘coloured mile to inch topograph’ பெரிதும் உதவியது. வால்மீகி குறிப்பிடும் தமஸா, கோமதி, சயந்திகா, ஸ்றின்ங்கவேரபுரம் முதலிய பகுதிகள் இன்றும் கங்கையின் வடகரைப் பகுதியில் டோன்ஸ், கும்தி, சாய், சிங்ரார் என்ற பெயர்களில் அழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். வாவ்மீகியில் காணப்படும் அத்தனை ஊர்களையும் இலங்கை உட்பட அவர் அடையாளம் காண்கிறார். சித்ரகூடமலை, அத்ரியின் ஆசிரமம், விராடன் புதையுண்ட குழி, தாண்டவ வனம் எல்லாவற்றையும் தற்போது அவை எங்குள்ளன எனச் சுட்டிக்காட்டுகிறார். இன்றும் மத்திய மாகாணங்களில் ‘இராவண வம்சிகள்’ என அழைக்க்கப்படும் கோண்டுப் பழங்குடியினர்தான் இராட்சதர்கள் எனவும் முண்டா மொழி பேசும் கோர்க்கர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பதையும் நிறுவுகிறார்.

ஆறுகளுக்க்கு இடைப்பட்ட மணற் திட்டுகளை ‘லங்கா’ என அழைக்கும் மரபைச் சுட்டிக்காட்டும் பரமசிவர் இராவணன் சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் கடத்திச் சென்றான் எனவும், அனுமன் நீந்திச் சென்றான் எனவும், இராமன் பாலம் அமைத்துப் படைகளுடன் கடந்தான் எனவும் வால்மீகி சொல்வதைச் சுட்டிகாட்டுவார், திரிகூடம் என்பது இந்திரான மலை, அதைச் சுற்றி ஓடும் கிரண் நதி பனகர், சிங்கள் தீபம் மற்றும் மசோலி சாலையில் ஒரு ஏரியைப்போலத் தோற்றமளிக்கும். அதுதான் லங்கா என அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார். வால்மீகியின் லங்காவை இன்றைய சிங்களத் தீவுடன் ஒப்பிடும் வழமை பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே வந்தது என்பதைச் சுட்டிகாட்டும் பரமசிவர் இராமன் எந்நாளும் விந்தியமலையக் கடந்ததில்லை என்கிறார். பண்டைய வரலாற்றைத் திரித்து இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்துவது குறித்த அறிஞர் பரமசிவரின் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தபோது என் கண்களில் நீர் கசிந்ததை என்னால் தடுக்க இயலவில்லை.

7. கூடங்குளப் போராட்டம்

கூடங்குளத்தில் தொடர்ந்து 144 தடை உத்தரவு விதித்திருப்பது, பெரிய அளவில் போலீசைக் குவித்து வீடுகளைச் சூறையாடியது, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றது ஆகியவை குறித்து நீதி விசாரணை வேண்டும் எனவும், போலீஸ் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் எனவும் நான் தொடுத்திருந்த வழக்கை இரண்டு நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

அரசு கொள்கைகள் பற்றிய பொது விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பண்பு எனக் கூறியுள்ள நீதிமன்றம், அதற்காக மக்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ளது. கூடங்குளம் மக்கள் போராட்டம் அந்த வகையில் கண்டிக்கத் தக்கது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கூடங்குளம் போராட்டம் கடந்த ஓராண்டுக்கும் மேலமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வாருகிறது. இதுவரை நான்கு முறை நாங்கள் அங்கு சென்று வந்துள்ளோம். தங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசும் வல்லுனர்களும் தங்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும், அது வரை உலையை இயக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நீதிமன்றம் சொல்லியுள்ளதைப் போல மக்கள் பங்கேற்கிற பொது விவாதம் ஒன்றை அரசு நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அரசு நியமித்த வல்லுனர் குழுக்களில் பொதுவானவர்கள் யாரும் இல்லை. அரசு கொள்கைகளை ஆதரிப்பவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தனர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட அவசரமாக வந்து அவசர “ஆய்வொன்றைச்” செய்து. கவனமாக மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, கூடங்குளம் பாதுகாப்பானது என அறிக்கை அளித்துச் சென்றார்.

சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான அறிக்கை, உலைப் பாதுகாப்பு அறிக்கை, உலை அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை முதலியவை இது நாள் வரை மக்களின் கண்களுக்குக் காட்டப்படவில்லை. போராட்டக் குழுவினர் தொகுத்து முன்வைத்த கேள்விகளில் பலவற்றிற்கும் இன்று வரை பதிலில்லை. போராட்டக் குழுவினர் அமைத்த வல்லுனர்குழு பல அச்சம் விளைவிக்கும் ஆபத்துச் சாத்தியங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கும் பதிலில்லை.

பேரிடர் ஆபத்துக் காலத்திய பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனை. அரசு அதையும் கண்டு கொள்ளவில்லை. அடுத்தடுத்துக் கூடங்குளத்தில் கட்டப்படுவதாக உள்ள உலைகளுக்கு இந்திய அமெரிக்க அணு ஒப்பந்ததில் கண்டுள்ளபடி விபத்து இழப்பீட்டுப் பொறுப்பை ரசிய அரசு ஏற்றுக் கொள்ளுமா இல்லையா, பழைய ஒப்பந்தத்தில் இதற்கு இடமுண்டா என்பாது குறித்துப் பிரதமருக்கே பதில் தெரியவில்லை.

இந்நிலையில் மக்கள் அச்சம் கொள்வதையும், போராடுவதையும் எப்படித் தவறெனச் சொல்ல இயலும்? ஜனநாயகத்தில் இரகசியங்களுக்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை முக்கியம். ஆனால் பாதுகாப்பு எனக் காரணக்காட்டி அணு ஆற்றல் தொடர்பான எல்லாச் செய்திகளையும் அரசு மக்களிடமிருந்து மறைத்தே வைத்தூள்ளது. அரசியல் சட்ட அவை விவாதத்தின்போது அணு ஆற்றல் தொடர்பான சட்டத்தில் இத்தனை இரகசியம் ஏன்? அமைதி வழியில் பயன்படுத்துவது எனச் சொல்கிறீர்கள் அப்படியானால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அளவிற்கு இங்கே வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன் என ஒரு உறுப்பினர் திரும்பத் திரும்பக் கேட்டபோது எரிச்சலுற்ற நேரு, “அணு விஷயத்தில் போர்க்காலப் பயன்பாட்டையும் அமைதிக்கான பயன்பாட்டையும் எப்படி வித்தியாசப் படுத்த இயலும்?” என் கேட்டதை நாம் மறந்துவிட இயலாது. ஆமாம் போர்க்காலம், அமைதிக் காலம் என்றெல்லாம் எந்த வேறுபாடும் இல்லை அணு ஆற்றல் விஷயத்தில் இரகசியங்கள் எப்போதுமே ஊழலுக்கு வித்திடும். மிகவும் ஆபத்தான தொழில்நுட்பமான அணு உலை விஷயத்தில் நேரும் ஊழல்கள் பேரழிவை ஏற்படுத்திவிடும்.

1980 களில் பொது நலவழக்குகள் என்பன நமது நீதிமன்றங்களால் ஊக்குவிக்கப்பட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு, வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுதல் முதலான நடவடிக்கைகளில் பல பொதுநல வழக்குகளில் மக்களுக்குச் சாதகமான பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இன்று..

8. எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு

எழுத்தாளர் அமிதவ் கோஷின் கட்டுரை ஒன்றை இன்று முகநூலில் படித்தேன். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர் அமிதவ் கோஷ். . ஆக்ஸ்ஃபோர்டில் பி.எச்டி முடித்துவிட்டு, டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணி செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அவரை எழுத்துத் துறைக்கு ஈர்த்துள்ளது.

அது 1984ம் ஆண்டு அக்டோபர் இறுதி, நவம்பர் தொடக்கம். பிரதமர் இந்திரா அவரது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொன்றவர்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் புகுந்து இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து அவர்கள் இந்திரா காந்தியைக் கொன்றனர். கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் மீது மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன். டெல்லியில் மட்டும் 2500 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பிற வட மாநில நகரங்களிலும் பலர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் திட்டமிட்டு இதை நடத்தி முடித்தனர். எனினும் கலவரத்தைத் தூண்டியவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இந்தக் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருந்த அமிதவ் கோஷ் தனக்கு நேர்ந்த மூன்று அநுபவங்களைச் சொல்கிறார். ஒன்றில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சில் இருந்த ஒரு சீக்கியரை, தாக்க வந்தவர்களிடமிருந்து பயணிகள் மறைத்துக் காப்பாற்றுகின்றனர். மற்றது ஒரு இந்துக் குடும்பம் ஆபத்து என்று தெரிந்தும் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு முதிய சீக்கியத் தம்பதியரைக் கொல்ல வந்தவர்களிடமிருந்து காப்பாற்றிய சம்பவம். மூன்றாவதில் கலவரக்காரர்களுக்கு எதிராக முழக்கமிட்டுச் சென்ற அமைதி ஊர்வலத்தில் அவரும் பங்கேற்ற அனுபவம். கலவரக் கும்பல் அவர்களைக் கடும் ஆயுதங்களுடன் கொல்ல வருகிறது. ஊர்வலத்திலிருந்த பெண்கள் ஆண்களைச் சுற்றி வளையமிட்டு நின்றதைக் கண்ட வன்முறையாளர்கள் தயங்கிப் பின் வாங்குகின்றனர்.

18 ஆண்டுகளுக்குப் பின் இதை நினைவுகூறும் அமிதவ் கோஷ்,. ஒரு எழுத்தாளனின் பணி என்ன? எழுதுவதா, இல்லை ஊர்வலத்தில் பங்கு பெறுவதா? அதாவது சமூக அரசியல் செயல்பாடுகளில் பங்கு பெறுவதா? என்கிற கேள்வியை எழுப்பிகிறார். பெரும்பாலானவர்களின் பதில் எழுத்து என்கிற வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்துவது மட்டுந்தான் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு செயலற்றுப் போகும்போதும், அதுவே உரிமைகளைப் பறிக்கும்போதும் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க இயலும் என்று கேட்கிறார் அமிதவ்.

பங்குபெறும்போது நமது அனுபவம் விரிவடைகிறது. இது போன்ற பேரழிவுக் கலவரங்கள் வெறும் வன்முறையால் மட்டும் நிரம்பி இருக்கவில்லை. மானுட நேயமும் இன, மத மொழி வேறுபாடுகளைத் தாண்டிய மனித நேயமும் இந்த வன்முறைகளுக்கிடையே ஊடாடி நிற்கின்றன. இந்தக் கலவரங்களளை எழுதுவது என்பது எத்தனை பேர் செத்தார்கள், எப்படியெல்லாம் அந்தப் பேரழிவு நிகழ்ந்தது என விவரிப்பது மட்டுமல்ல. அதை ஒரு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியே இன்னும் சிறப்பாகச் செய்துவிட முடியும். எழுத்தாளனின் பணி வேறு. இந்த வன்முறையை மட்டுமல்ல, இது போன்ற வன்முறகளின் அர்த்தத்தை, எல்லவற்றினூடாகவும் விகசிக்கும் மாநுடத்தை அது வெளிக் கொணர வேண்டும்.

அத்தகைய அழகியல் ஒன்று இன்று உருப்பெற்றுள்ளதா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருவகையான aesthetics of indifference, சமூகப் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிய அழகியல், அல்லது ஒரு வகையான வரட்டுக் கோட்பாட்டுடன் சமூகப் பிரச்சினைகளை அணுகி ஆரசியல் கறார்த்தன்மையை நிலை நாட்டுதல் என்பதுதான் இன்றைய பெரும்பான்மைப் போக்காக இருக்கிறது. இது அத்தனை உவப்பளிக்கக் கூடிய ஒன்றல்ல.

9. அர்விந்த் கெஜ்ரிவால்

கடந்த இரண்டாண்டு காலமாக இந்திய அரசியலை அன்னா ஹஸாரேயும் அர்விந்த் கெஜ்ரிவாலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் சகல அதிகாரங்களும் பொருந்திய ஜன்லோக்பால் அமைக்க வேண்டும் எனத் தொடங்கி இப்போது அரசியல் கட்சி என்கிற அளவிற்கு அதிலரொரு பிரிவு வளர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட நமது முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துமே இவர்களின் போராட்ட முறையை எதிர்க்கின்றன. பாராளுமன்ற அரசியல் இலக்கணத்திற்கு இத்தகைய நடைமுறை ஒத்துவராது என அறிவுரை பகர்கின்றன.

அன்னா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் முன்நிறுத்துவது “ஊழலை ஒழிப்பது” என்கிற ஒற்றை நிகழ்ச்சி நிரலைத்தான். அதற்கு இந்திய மத்தியதர வர்க்கத்திடம் அமோக ஆதரவு உள்ளது. இந்தக் கோரிக்கைக்கும் கெஜ்ரிவால் போன்றோரின் செயல்பாடுகளுக்கும் இத்தனை பெரிய ஆதரவு உருவானதற்குக் காரணம் என்ன? நமது பாராளுமன்ற அரசியல் கட்சிகள் இந்த அம்சத்தில் தோற்றுப்போனது ஒரு முக்கிய காரணம். எல்லா அரசியல் கட்சிகளும் ஊழலில் சிக்கியுள்ளன. எனவே இவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்பதில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. பாராளுமன்றத்திற்குள் தீவிரமாக எதிர்த்து நிற்கும் இவர்கள் வெளியே கைகோர்த்துத் திரிகிறார்கள். எல்லோருமே தங்கள் வாரிசுகளை அரசியலில் மேலே கொண்டு வருவது என்பதைத் திட்டமிட்டுச் செய்து கொண்டுள்ளனர். ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியின் வாரிசு அரசியலையும், வாரிசுகளின் ஊழலையும் பேசுவதில்லை. சமீபத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வட்ரா மீது கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டு ஓராண்டுக்கு முன்னரே தங்களுக்குத் தெரியும் எனவும், இருந்தாலும் தங்கள் கட்சி அதை மேலுக்குக் கொண்டு வரவேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாகவும் பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியுள்ளதைப் பார்த்திருப்பீர்கள்.

பெரிய அரசியல் கட்சிகள் கைவிடுகிற இது போன்ற பிரச்சினைகளை சிறிய அமைப்புகள் எடுத்து ஒரு ஆர்பாட்டமோ, உண்ணவிரதமோ நடத்தினால்ஆது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவதுமில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் நமது பாராளுமன்ற விவாதங்கள், வழக்கமான போராட்ட முறைகள்ஆகியவற்றில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டனர். அன்னா மற்றும் கெஜ்ரிவாலுக்கு உருவாகியுள்ள அமோக ஆதரவு இதைத்தான் காட்டுகிறது.

கெஜ்ரிவால், அன்னா ஆகியோரிடம் உள்ள பிரச்சினை அவர்கள் ஊழல் எதிர்ப்போடு நிறுத்திக் கொள்வது என்பதுதான். ஊழல் ஒரு பிரச்சினைதான். ஆனால் ஊழல் மட்டுமே பிரச்சினை அல்ல. இன்றைய மெகா ஊழல்களெல்லாம் இந்தியச் சந்தை உலக கார்பொரேட்களுக்குத் திறந்துவிடப்பட்ட பின்பு உருவானவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இத்தகைய பெரும் கார்பொரேட்களின் நிதி உதவியுடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள்தான் கெஜ்ரிவால் போன்றோர். இன்றைய ஊழல், விலைவாசி ஏற்றம் ஆகியவற்றுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை இவர்கள் விமர்சிப்பதில்லை.

அதேபோல இங்குள்ள தீண்டாமைக் கொடுமை, மதவாதம், தலித் மர்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள், காவல்துறை அத்துமீறல்கள் இவை குறித்தும் இவர்கள் பேசுவதில்லை. வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் மக்கள் வெளியேற்றப்படுதல், குடிசை மக்கள் ஊரை விட்டு விரட்டப்படுதல், நாளுக்கு நாள் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுதல், விவசாயிகள் தற்கொலை முதலியன குறித்தும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் இவர்களுக்கான ஆதரவு மத்திய தர வர்க்கத்தோடு நின்றுபோய் விடுகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசுவோருக்கு கெஜ்ரிவால் அரசியலை ஏற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது.

10. நபிகள் நாயகம்

அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை எதிர்த்து உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதை நாம் அறிவோம். இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பெரிய அளவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு திரைப்படத்திற்கு எதிராக இத்தனை எதிர்ப்பு தேவைதானா எனத் தோன்றலாம். ஆனால் மேலை நாடுகளின் வரலாற்றில் தொடர்ந்து இஸ்லாம் மதமும், அவர்கள் இறுதி இறைத்தூதராக ஏற்றுக்கொண்டுள்ள நபிகள் நாயகமும் இழிவு செய்யப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போதுதான் இன்று முஸ்லிம்கள் இவ்வாறு கொதித்தெழுந்ததைப் புரிந்து கொள்ள இயலும்..

மகாகவி தாந்தேயிலிருந்து வரலாற்றாசிரியர் எட்வர்ட் கிப்பன் வரை நபிகளை இழித்துரைத்துள்ளனர். உருவ வணக்கத்தை முஸ்லிம்கள் ஏற்பதில்லை என்றபோதிலும் வேண்டுமென்றே நபிகளைக் கேலிச் சித்திரம் வரைவது என்றெல்லாம் அவ்வப்போது அவர்களின் ஆத்திரத்தைத் தூண்டி வருகின்றனர், கிறிஸ்து தோன்றி ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான இஸ்லாம் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி கிறிஸ்தவ விரிவாக்கத்திற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. இன்றளவும் அதை ஒரு வெல்ல இயலாத மதமாகவே மேலை நாகரிகம் கருதுகிறது. அதன் விளைவுதான் அவ்வப்போது இப்படி அதைச் சீண்டிப் பார்ப்பது.

தவிரவும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா தனது ஆதரவு நாடுகளின் துணையோடு ஆப்கானிஸ்தான், ஈராக் முதலான நாடுகளின்மீது பொய்யான காரணங்களைச் சொல்லி மேற்கொண்ட படைஎடுப்புகளும், ஏற்படுத்திய அரசியல் குழப்பங்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் தீராத வருத்தத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணீயில்தான் இன்று நபிகள் நாயகத்தை இழிவு செய்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படதிற்கான எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பாகவும் வெளிப்பட்டதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியச் சூழலிலும் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய வெறுப்பு அரசியல் கட்டவிழ்க்கப்பட்டபோது இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் புரிந்து கொள்ளும் நோக்கில் நான் ஒரு நூலை எழுதினேன். ஒவ்வொரு மதத்திலும் இறைவன் என்கிற கருத்திற்கு அப்பால் மத முன்னோடிகள் புனிதர்களாகவும் பெரு மதிப்பிற்குரியவர்களாகவும் சில மதங்களில் இறைவனுக்குச் சமமாக வணக்கத்திற்கு உரியவர்களாகவும் கருதப்படுகின்றனர். இறைத்தூதர், இறைமகன், அவதாராம், தீர்த்தங்கரர், போதிசத்துவர் என்றெல்லாம் அந்தந்த மதங்களில் இவர்கள் போற்றப்படுகின்றனர்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த மட்டில் இறுதி இறைத்தூதராக அவர் கருதப்பட்டபோதும் ஒரு சாதாரண மனிதராக, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து நாகரிக வளர்ச்சியின்றி ஒரு இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுலகில் ஒரு எழுச்சியை உருவாக்கி அம்மக்களுக்கான ஒரு பேரரசை உருவக்கியவர் அவர்,

அவரது நாற்பதாவது வயது தொடங்கி அவருக்கு இறை வாக்குகள் அருளப்பெற்றன எனவும் அவற்றைச் செயல்படுத்தியதன் வழியாகவே அவர் இதைச் சாதித்தார் எனவும் ஏற்றுக் கொள்வது முஸ்லிம்களின் ஒரு முக்கியமான இறை நம்பிக்கை. இறை வாக்குகள் அருளப் பெற்றது என்பது தவிர வேறு எந்த அற்புதங்களையும் அவர் செய்து காட்டி மக்களை ஈர்த்ததாக அவரது வரலாற்றில் இல்லை. மாறாக ஒரு புரட்சிகரப் போராளியாக, பல்வேறு எதிர்ப்புகளையும், புலப்பெயர்வையும், ஏன் சமயங்களில் தோல்வியையும் கூடச் சந்தித்தவராகவே நாம் அவரைக் காண்கிறோம். ஆவரது திறமை, சாதுரியம், அற நெறிசார்ந்த அணுகல் முறை, போர்த் திறமை ஆகியவற்றினூடாக இறுதி வெற்றியை ஈட்டித் தந்து, எந்த அற்புதங்களுமின்றி மிகச் சாதாராண மனிதரகவே அவர் மரித்துப் போனார்.

இறை மறுப்பாளரான பேரியார் ஈ.வெ.ரா அவர்களையும், மதங்களை ஏற்காத இடதுசாரிகளையும் நபிகளின் வரலாறு ஈர்த்ததற்கான காரணம் அவர் உருவாக்கிய சமூகம் சாதி, இன வேறுபாடுகளற்ற ஒரு சமநிலைச் சமூகமாக இருந்ததுதான். அதனால்தான் இன்றளவும் இந்தியாவில் தோன்றிய மதங்களாயினும், வெளியிலிருந்து வந்த மதங்களாயினும் ஒப்பீட்டளவில் சாதி வேறுபாடுகளைக் கடந்த மதமாக அது உள்ளது.

11.சமண பவுத்த மதங்கள்

மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் நேற்றிரவு புரட்டிக் கொண்டிருந்தேன். தமிழின் இரட்டைக் கப்பியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். மாதவி, கண்ணகி, மணிமேகலை எனப் பல பாத்திரங்கள் இர்ண்டிலுமே உலவுவர். ஒருவகையில் சிலப்பதிகாராத்திற்குப் பிந்திய கதையைச் சொல்வதாகவும் மணிமேகலையைப் பார்க்கலாம். கோவலன் கொலையுண்டு, கண்ணகி பத்தினித் தெய்வமாகியதற்குப் பிந்திய என்கிற அடிப்படையில் மட்டுமல்ல காப்பியம் விவரிக்கும் நிலப்பரப்பு (landscape), காப்பியத்தின் வாசகப் பரப்பு எல்லாமே மாறுகிறது. அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுகிறது. புகார், மதுரை வஞ்சி என்கிற நகரக் காட்சிகள் மாறி காப்பியப் பரப்பில் திடீரென காஞ்சி தோன்றுகிறது. கடலை ஒட்டிய வணிகப் பட்டினமான புகார், அதனுடைய செழிப்பு, கோலாகலங்கள் என்பதற்கப்பாலான மிகப்பெரிய தத்துவ விசாரங்கள் நடக்கும் பூமி, intellectual centre ஒன்றும் அத்தகைய விவாதங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு வாசகத் தளம் ஒன்று உருவாகியுள்ளதையும் நாம் காண்கிறோம்

இரண்டும் சமண, பவுத்த அவைதீக மரபில் தோன்றியவை. கிட்டத்தட்ட தமிழ்க் காப்பியங்கள் எனச் சொல்லப்படும் அத்தனையுமே இம்மரபில் வந்தவைதான். இவ்ற்றில் பவுத்தக் காப்பியங்கள் பலவும் அழிந்து பட்டதுதான் மிகப் பெரிய இழப்பு. இந்த அவைதீக மரபின்றி தமிழில்லை எனச் சொல்லும் அளவிற்கு தமிழ் சமண பவுத்த மரபுகளுடன் இரண்டறக் கலந்துள்ளது.. தமிழுக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் ‘பிராமி’ எழுத்து வடிவத்தைக் கொடை அளித்தது சமணம் அல்லவா? பிராமி என்பவள் ஆதிநாதரின் இரு புதல்வியரில் ஒருத்தி. மற்றவள் ‘எண்களின்’ நாயகி. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றாரல்லவா சமண மரபில் வந்த திருவள்ளுவர்.

அகம், புறம், திணக் கோட்பாடு என்பன தமிழ் மரபுக்கே உரித்தான ஒரு சிறப்புக் கூறு. காப்பிய மரபின் ஊடாக இந்தத் தமிழ் மரபின் தொடர்ச்சி அறுபட்டு, வடமொழியின் அலங்கார சாத்திர மரபின் தாக்கம் இங்கு ஏற்படுகிறது என்பார்கள். ஆனால் பவுலா ரிச்மான், பார்த்தசாரதி, ஆன்னி மோனியஸ் ஆகிய நவீன ஆய்வாளர்கள் உண்மையில் இவ்விரு காப்பியங்களும் எப்படி அகம், புறம் எனும் திணை மரபின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன் என்பதை நிறுவுகின்றனர், சிலம்பில் எவ்வாறு ஊடல் அல்லது காதற் துரோகக் காட்சிகள் மருதத் திணைப் பின்புலத்திலும், பரத்தையர் பிரிவு என்பது முல்லைத் திணைப் பின்புலத்திலும், இப்படி ஒவ்வொரு கதை நிகழ்வும் அதற்குரிய திணைப் பின்னணியுடன் எவ்வாறு இளங்கோ அடிகளால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து வாசிப்போர் உணர முடியும்.

சமண, பவுத்த மரபுகள் அற வாழ்வை வற்புறுத்துபவை. பக்தி மரபு என்பதில் அறத்தை காட்டிலும் பக்தியே முதன்மையான வாழ்வு நெறியாக அமையும். சமண பவுத்தக் காப்பியங்கள் தமது காப்பிய இலக்கணத்தை மீறாமல் இந்த அற வாழ்வை வலியுறுத்தும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

சிலம்பில் ஒரு காட்சி, சிலம்பை விற்றுப் புது வாழ்வு தொடங்கும் நோக்குடன் கண்ணகியும் கோவலனும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். புகாருக்கருகிலுள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் புனிதக் குளங்களில் நீராடிச் சென்றால் முற்பிறவிச் சாபம் நீங்கும் என்று கண்ணகிக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. “பீடன்று”, அதாவது எமக்கு அது வழக்கமல்ல எனக் கண்ணகி மறுத்துத் தன் பயணத்தைத் தொடர்வாள். “தீர்த்த மூடம், தெய்வமூடம்” என இத்தகைய செயல்களை சமணம் மறுக்கும்.

தண்டியலங்காரத்தில் வட மரபு தழுவி எண்வகைச் சுவைகள் குறிப்பிடப்படும். ஆனால் வீர சோழியம் என்னும் பவுத்த நூல் ‘சாந்தம்” (அமைதி) என்னும் ஒன்பதாவது சுவையைக் கூடுதலாக இணைக்கும். தமிழ்த் தொல்காப்பிய மரபுடன் பவுத்த மரபு இணைந்து உருவாகியதுதான் பவுத்த இலக்கண நூலான வீரசோழியம். பவுத்த அறத்துடன் கூடிய ஒரு புதிய இலக்கணவியல் பார்வைக்குக் கட்டியங்கூறுகிறது வீர சோழியம்.

12. பெரியார் ஈ.வெ.ரா

தமிழகம் கண்ட ஒரு மாபெரும் சிந்தனையாளர் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள். நீண்ட காலம் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க இயலாத அரசியல் சக்தியாக இருந்த அவர், தனித்துவம் உடைய ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார், அதிகம் படித்திராத அவர் பல்வேறு பிரச்சினைகளிலும் உதிர்த்துள்ள சிந்தனைகள், இத்தகைய துறைகளில் மெத்தப் படித்த வல்லுனர்களின் சிந்தனைகட்கு ஈடானவை, சில நேரங்களில் அவற்றையும் விஞ்சியவை.

பெரியார் என்றவுடன் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை அகியவற்றைப் பற்றிப் பேசியவர், போராடியவர் என்று மட்டுந்தான் யாருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் பெரியார், “நான் நாத்திகனல்ல,” “ஆத்திகம் சரியா நாத்திகம் சர்ரியா என்பது ஒரு பயனற்ற பிரச்சினை” என்றெல்லாம்பெரியார் சொல்லியுள்ளார் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படிச் சொன்னதன் பொருள் அவர் கடவுளை ஏற்றுக் கொண்டவர் என்பதல்ல. “நான் கடவுள் இல்லை என்பவனும் அல்ல, இருக்கிறவன் என்று சொல்பவனும் அல்ல” என்கிறார் அடுத்த வரியிலேயே. “புராண வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர் நாத்திகன் என்று குறிப்பிடுகின்றனர்” என்று அதற்கு விளக்கமளிப்பார்.

ஆக, பெரியாரைப் பொருத்த மட்டில் கடவுளை மறுத்தது என்பது உண்மையிலேயே கடவுளை ஆதாரமாக்கி முன்வைக்கப்படுகிற நமது வேத, புராண, இதிகாசக் கருத்துக்களைளை மறுத்ததே. அப்படியென்ன இவற்றின்மீது ஆவருக்கு வெறுப்பு? மனிதர்களை நான்கு வருணங்களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் பிரித்து ஒதுக்கி வைத்தற்காகத்தான்.

ஆமாம், அடிப்படையில் அவர் ஒரு சாதி ஒழிப்புப் போராளி. நீ கீழ்சாதி, தீண்டத்தகாதவன் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத்தான் அவர் சுயமரியாதை இல்லாமை என்கிறார். மனிதர்கள் சுய மரியாதை பெறுவதற்கு எதிராக இருப்பதனாலேயே அவர் வேத புராணங்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்தார்.

கடவுள் நம்பிக்கையை மட்டுமல்லஒரு வகையில் கண்மூடித்தனமான எல்லா நம்பிக்கைகளையுமே அவர் எதிர்த்தார். முக்கியமாக தேசபக்தி, மொழிப்பற்று, மதப்பற்று இம் மூன்றும் மனிதர் சுயமரியாதை பெறுவதற்குத் தடையாக உள்ளன என அவர் கருதினார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது எப்படிச் சரியாகும் என நமக்குத் தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கும். தேசம், மொழி, மதம் ஆகியவற்றின் பெயரால் தீண்டாமை, சாதி ஆதிக்கம் ஆகியவற்றை நியாயப்படுத்திவிடும் போக்கைக் கூர்ந்து கவனிப்போர் விளங்கிக் கொள்ள இயலும். முதலில் நாட்டு விடுதலை, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் இந்த சாதிப் பிரச்சினையை எல்லாம் என இதற்காகப் போராடுபவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்வதை நாம் பார்த்துள்ளோம்.

இதற்காக அவர் மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்கள் ஒடுக்கப்படுகிறபோது பெரியார் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. மிகப் பெரிய இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் பவுத்தம், இஸ்லாம் போன்ற மதங்களின் ஆதரவாளராகவும் அவர் இருந்ததை நாம் அறிவோம்.

ஆனால் தனித் தமிழ்நாடு, திராவிட நாடு என்றெல்லாம் அவர் பேசினாரே என ஒருவருக்குத் தோன்றலாம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் இந்திராவை நோக்கிச் சொன்னார்: “இந்த நாட்டில் பிராமண சூத்திர வேறுபாடு இல்லை, சாதி இல்லை. எல்லோரும் சமம் எனச் சட்டம் போடுங்கள் பிரிவினை கோரும் என் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன்” என்றார்.

பெரியாரின் பெண் விடுதலை தொடர்பான கருத்துக்கள், தேசம், மொழி, இன்னும் பல நம்பிக்கைகள் எல்லாவற்றையும் வெறும் கற்பிதங்கள்தான் என அவர் சொன்னதெல்லாம் மிக மிக நவீனமான சிந்தனைகளுடன் ஒப்பிடத் தக்கவை.

பெரியாரைப் படிப்போம். பின்பற்றுவோம்.

13. சாதி அமைப்புகளும் காதல் திருமணங்களும்

இன்றைய நாளிதழ்களில் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய சாதிக கலவரம் பற்றிய செய்தி வந்துள்ளது. உண்மையில் இதைச் சாதிக் கலவரம் எனச் சொல்லக் கூடாது. அங்கே இரண்டு சாதிகள் சமமாக மோதிக் கொள்ளவில்லை. மூன்று கிராமங்களிலுள்ள சுமார் 268 தலித் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் எரிக்கப்பட்டு சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன. தலித்கள் மீதான தாக்குதல் என்றே இதைச் சொல்ல வேண்டும்.

தலித் மக்கள் மீது இப்படியான கொடுந்தாக்குதல் நடத்தப் படுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவம் என்ன? இளவரசன் என்கிற தலித் பையனும், திவ்யா என்கிற ஒரு மேல் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெண்ணின் சாதியினர் அவர்களைப் பிரிக்க முயன்று தோற்றுள்ளனர். தன் மகள் இப்படி ஒரு தாழ்ந்த சாதிப் பையனத் திருமணம் செய்து கொண்டதை அவமானமாகக் கருதிய பெண்ணின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். உடனே வெடித்தது வன்முறை.

இந்த வன்முறை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினைகளில் காதல் ஜோடிகள் பிரிக்கப்பட்டுக் கவுரவக் கொலைகள் நிகழ்வது, அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பதெல்லாம் தமிழகத்தில் இப்போது அதிகமாகியுள்ளன. சில நேரங்களில் அவை இப்படியான வன்முறைகளில் முடிந்து விடுகின்றன.

ஏன் இப்படி நிகழ்கின்றன?

ஒருபக்கம் இன்றைய வாழ்க்கை முறையில் திருமண வயது தள்ளிப் போதல், இருபாலரும் இணந்து கல்வி பயில்வதும் மற்றும் வேலை செய்வதும் அதிகமாகி இருப்பது, செல்போன் மூலம் என்னேரமும் தெரிந்தும் தெரியாமலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருப்பது முதலியன காதலித்துத் திருமணங்கள் செய்யும் நிலையை அதிகரித்துள்ளன. இந்தக் காதல் திருமணங்கள் பலவும் சாதிகளைத் தாண்டியதாகத்தான் அமைகின்றன.

ஆனால் அதே நேரத்தில் சாதி மத இறுக்கங்கள் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. சாதிக் கட்சிகளும் சாதி அமைப்புகளும் அதிகமாகியுள்ளன. சாதி அல்லது மதம் போன்ற ஒரு குறிப்பான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும்போது அவர்களின் அதிக பட்ச ஆதரவிற்கு ஒரு எல்லை, limit ஏற்பட்டுவிடுகிறது. எனவே தனது குறிப்பிட்ட ஆதரவுச் சாதியை அதிகபட்சமாகத் திரட்டி consolidate பண்ணுவது என்பது மட்டுமே இக்கட்சிகளின் ஒரே வேலை ஆகி விடுகிறது. எனவே மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதற்கு இவை தயங்குவதில்லை. இத்தனை வெறுப்புகளுக்கும் அப்பால் தாங்கள் பொதுவானவர்கள்தான் எனக் காட்டிக்கொள்ள இவர்கள் தமிழ்த் தேசியத்தைப் படு தீவிரமாகப் பேசுவார்கள். சாதி வன்முறையில் இவர்கள் தம் வேடத்தைக் கலைக்கும்போது அதைக் கண்டிக்காமல் பிற தமிழ்ட்த் தேசியர்கல் பம்முவார்கள்.

தன் சாதி ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது, தன் சாதிக்காரரை முதலமைச்சர் ஆக்குவது, தன் சாதிப் பெண்களை வேறு யாரும் குறிப்பாகக் குறைந்த சாதியினர் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பதெல்லாம் இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. எல்லாச் சாதி அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் காதல் திருமணங்களுக்கு எதிராக இருப்பதையும் காணலாம். காதலர் தினக் கொண்டாட்டங்கள் மீது வன்முறை மேற்கொள்வது, காதலர்களை அடித்துப் பிரிப்பது என்பதெல்லாம் அதிகமாகியுள்ளன.

தமிழகத்திலுள்ள சாதி அமைப்புகள் எல்லாம் சமீப காலத்தில் காதல் திருமணங்களை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதும் அதிகமாகியுள்ளது. இன்று தருமபுரியில் வன்முறையை மேற்கொண்ட சாதியினர் இந்த ஆண்டு சித்திரா பவுர்ணமி அன்று கூட்டிய மாநாட்டில் அச் சாதி அமைப்பின் தலைவர் இப்படி காதல் திருமணத்திற்கு எதிராகப் பேசியது குறிப்பிடத் தக்கது

காதல் திருமணங்களுக்கு எதிரான இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்பட வேண்டும். தலித்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்பட வேண்டும். காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகமாகக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்துப் பதற்றமடையத் தெவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப் படுதல் அவசியம். சாதி அடிப்படையில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் முன்கை எடுக்கவேண்டும்.

14. சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு இபோதைக்கு நிறைவேற்றப் படக் கூடிய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றின் மூலமே இது சாத்தியம் என்பதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இதற்குத் தேவையாகிறது. எனவே அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு இருந்தால்தான் இது சாத்தியம்.

ஆனால் அரசியல் கட்சிகளிடையே இதை நிறைவேற்றுவது என்பதைக் காட்டிலும் தவிர்ப்பது என்பதில்தான் ஒற்றுமை உள்ளது. ஏன்? நிறைவேற்றினால் 181 தொகுதிகளைப் பெண்களுக்காக ஒதுக்க நேரிடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 181 ஆண்களின் வாய்ப்புகள் பறிபோகும். தவிரவும் இரண்டு தேர்தல்களுக்கு ஒரு முறை தொகுதிச் சுழற்சி rotation செய்யவேண்டும் என்பதால் யாரும் இரு தடவைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் நிற்க இயலாது. எனவே தம் தொகுதியைப் பாராட்டிச் சீராட்டித் தக்க வைக்க முனைவோருக்கு இது ஒரு பிரச்சினை ஆகிவிடும். அதனால்தான் 16 ஆண்டுகளாக இச் சட்ட முன் வரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை நேரடியாகச் சொல்லாமல் வேறு காரணங்களைச் சொல்லி மறுக்கின்றனர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்தம் 33+22=55 சத இடங்கள் சுழற்சி செய்யப்பட வேண்டும். இங்கெல்லாம் செல்வாக்குள்ள ஆண்கள் தங்கள் மனைவி அல்லது மகளை நிறுத்தி இந்த இட ஒதுக்கீட்டையே அர்த்தமற்றதாக்கி விடுவார்கள் என்பது ஒரு வாதம். இப்படிப் பதிலியாக யாரும் உறவினர்களை நிறுத்தக்கூடாது என்றால் அது சட்டப்படி செல்லாது. ஏனெனில் அது அவர்களது உரிமையைப் பறிப்பதாகிவிடும்.

பெண்களுக்கு ஒதுக்கீடு அளித்தால் நகர்ப்புற உயர்ர்சாதிப் பெண்கள்தான் வெற்றி பெறுவார்கள். எனவே சாதி, மத வாரி ஒதுக்கீடு பெண்களுக்க்கு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் வற்புரறுத்துவதும் அதச் சிலர் மறுப்பதும் இம் மசோதா முடக்கி வைககப்பட்டுள்ளதன் இன்னொரு காரணமாகிறது. ஆண்களுக்கு இப்படி ஒதுக்கீடு இல்லாதபோது பெண்களுக்கு மட்டும் எப்படிச் செய்ய முடியும் என்பது இதற்கெதிராகக் கிளப்பப்படும் சட்டப் பிரச்சினை.

ஸ்வீடன், ஜெர்மனி, நேபாளம், நெதர்லான்ட், ஃபின்லான்ட் போன்ற நாடுகளில் இருப்பதுபோல ஒவ்வொரு கட்சியும் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களில் 33 சதம் பெண்களாக இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்தால் எப்படி? நமது கட்சிகள் இதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்காதா என்ன? வெற்றிபெற வாய்ப்பே இல்லாத தொகுதிகளாகப் பார்த்துப் பெண்களை நிறுத்துவார்கள். எடுத்துக்காட்டாக சமாஜ்வாதி கட்சி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்திக் கணக்குக் காட்டினல் அது எத்தன அபத்தமாக இருக்கும்?

இன்னொரு வழி இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பிர்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்படி 530 பாராளுமன்ரத் தொகுதிகளை 750 ஆக்க வேண்டும். 6000 சட்டமன்றத் தொகுதிகளை 9000 ஆக்க வேண்டும். இப்படி அதுகரித்து அவற்றைப் பெண்களுக்கு வழங்கலாம். அல்லது 33 சதத் தொகுதிகளை இரட்டை வாக்காளர் தொகுதிகளாக ஆக்கலாம். மனம் இருந்தால் வழியுண்டு.

பெண்களுக்கு இவ்வாறு ஒதுக்கீடு அளிப்பது என்பது ஏதோ அவர்களுக்கு வழங்கும் சலுகை அல்ல. அது அவர்களின் உரிமை. எனவே விவாதங்களுக்கு இடமேயின்றி பெண்களுக்கு உடனடியாக இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் கீழ்மட்டங்களில் 33 சதமும், தேசியச் சட்ட மன்றத்தில் 20 சதமும் செனட்டில் 18 சதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்கிற செய்தி யாருக்குத் தெரியும்?

15. ஒபாமா வெற்றி

சற்று முன், “ஒபாமா வெற்றி பற்றி என்ன நினைகிறீர்கள்? இந்தியாவுக்கு அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?” என்று என்னிடம் ஒரு வார இதழிலிருந்து கேட்டார்கள். ஒபாமாவாக இருந்தாலும் மிட் ரோம்னியாக இருந்தாலும் இந்திய அமெரிக்க உறவுகளில் எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்பட்டுவிடாது என்று சொன்னேன்.

சென்ற முறை ஒபாமா வென்றபோது உண்மையிலேயே ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. எல்லோராலும் வெறுக்கப்பட்ட புஷ்சின் எட்டாண்டு கால ஆட்சி ஒபாமாவின் கைக்கு வந்தது என்பது மட்டுமல்ல, குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சிக்கு ஆட்சி மாறியது என்பது மட்டுமல்ல அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம் வேர்களை உடைய ஒரு கருப்பரின் கைக்கு முதன்முதலாக அதிகாராம் பெயர்ந்தது என்கிற வகையில் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. எதிர்பார்ப்புகளும் இருந்தன.

ஆனால் புஷ்சின் அமெரிக்காவுடன் இழைந்து கொண்டிருந்த மன்மோகன்சிங் அரசைப் பொருத்த மட்டில் ஒரு தயக்கம் இருந்தது. காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் ‘தலையிடாக் கொள்கை’ மாறுமோ, அமெரிக்காவுடன் செய்து கொண்டிருந்த அணு ஒப்பந்தம் கைவிடப்படுமோ என்றெல்லாம் இந்திய அரசுக்குக் கவலைகள் இருந்தன. இந்திய அரசுக்குத்தான், மக்களுக்கல்ல. மக்களுக்கு இதைப்பற்றி என்ன கவலை?

ஆனால் ஒபாமா ஆட்சி இந்த இரு அம்சங்களில் மட்டுமல்ல இந்தியாவைப் பொருத்தமட்டில் எல்லா அம்சங்களிலுமே புஷ் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருந்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ரோம்னியும் சரி, ஒபாமாவும் சரி இந்தியக் கொள்கை குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை. ஏனெனில் குடீயரசுக் கட்சியாயினும், ஜனநாயகக் கட்சி ஆயினும் இந்தியக் கொள்கையில் பெரிய மாற்றமில்லை. வளர்ந்து வரும் ஒரு சந்தை, சீனாவுக்கு அருகிலுள்ள போர் நிலை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு என்கிற வகையில் இரண்டுமே இந்தியாவைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதையே விரும்புகின்றன.

மற்றபடி இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் தொழில் நுட்பர்களுக்கு விசா கெடுபிடிகள் மற்றும் விசா கட்டணத்தைக் குறைத்தல், அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து ‘மெடிகல் டூரிசம்’ அனுபவிக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு விதிகளைத் தளர்த்துதல், இந்தியர்களின் வேலை வாய்ப்பை பாதிக்காத வண்ணம் அமெரிக்கா இங்கு ‘அவுட் சோர்சிங்’ செய்வதைக் குறைக்காதிருத்தல் முதலானவற்றில் ஒபாமாவின் அணுகல்முறை எதிர்மறையாகவே தொடர்கிறது.

ஈராக்குடனான நமது உறவுகளையும், எண்ணைத் தேவையைப் பெரிய அளவில் நாம் அங்கிருந்து பூர்த்தி செய்து கொள்வதையும் கட்டுப்படுத்துவதிலும் நமது இன்சூரன்ஸ் செக்டாரைத் திறந்து விடுவதிலும் அமெரிக்க கெடுபிடிகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். வர்த்தகப் பெருக்கம், இராணுவக் கூட்டு, இராணுவ தளவாட விற்பனை இதெல்லாமும் அதிகரிக்கும். ஒபாமாவின் வெற்றியை இந்திய முதலாளிகள் வரவேற்றுள்ளனர். எதிர்பார்த்ததுதான். மக்களைப் பொருத்த மட்டில் வரவேற்க ஏதுமில்லை.

உலக வரலாற்றில் மிக அதிகமான செலவில் நடந்த தேர்தல் இது. இரு வேட்பாளர்களும் சேர்ந்து 40 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளனர். இதில் ஒபாமாவின் செலவு அதிகம், 2008 தேர்தலிலும் ஒபாமாவின் செலவுதான் அதிகம். ஏழை ஒபாமாவுக்கு ஏது இத்தனை பணம்? கார்பொரேட்கள் அள்ளிக் கொடுப்பதுதான். எந்த நம்பிக்கையில் கொடுக்கிறார்கள் தம் நலன் காப்பாற்றப்படும் என்றுதானே?

சென்ற முறை அவர் வாக்களித்தவாறு குவான்டனமோ பே மற்றும் அபுகாரிப் சித்திரவதை கூடங்களை ஒழித்துக் கட்டுவதையோ, முஸ்லிம் நாடுகளின் மீதான கெடுபிடிகளைக் குறைப்பதையோ அவரால் முழுமையாகச் செய்ய முடியவில்லையே? ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றுவது, ஆளில்லாத விமானங்கள் மூலமாகப் பாகிஸ்தான் எல்லையைத் தாக்குவதை நிறுத்துவது எதையும் செய்ய முடியவில்லையே?

சுந்தரராமசாமியின் கடிதங்கள்

இந்தப் புத்தகச்சந்தையின் போது (2011) நான் கலந்து கொண்ட இரு நூல் வெளியீட்டு விழாக்களில் ஒன்று, “அன்புள்ளஅய்யனார், சுந்தரராமசாமியின் 200 கடிதங்கள்” உள்ளிட்ட மீனாள் பதிப்பக நூல்களுக்கானது. யாரிடம் பணியாற்றினாலும் நட்பாக இருந்தாலும் அவரிடம் நூறு சதம் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பவர், பழகுபவர் அய்யனார் என்கிற பவுத்த அய்யனார். மேலூர் கிராமம்ஒன்றில் பிறந்து, அதிகம் படித்திராத, ஆனால் இலக்கிய ஆர்வமுள்ள ஒரு நபராகச் சுந்தரராமசாமியைக் கண்டடைந்த ஒரு கிராமத்து இளைஞனை இந்த நட்பு ஒரு நல்ல வாசகனாக, பொறுப்புள்ள குடும்பத்தவனாக,ஒரு எழுத்தாளனாக அவர் உருவாக்கிய வரலாற்றைச் சொல்கின்றன இந்த 200 கடிதங்களும் (மொத்த பக்கங்கள் 272).

சுந்தர ராமசாமியுடன்எனக்குத் தனிப்பட்ட ரீதியில் அதிக நெருக்கம் இல்லாதபோதும், இப்படிப் பலரை ஊக்குவித்து உருவாக்கியவர் என்பதைக் அறிந்துள்ளேன். ஒரு நண்பராய், தத்துவ ஆசானாய், வழிகாட்டியாய் சு.ரா பலருக்கும் அமைந்துள்ளார். அவர்களுள் அய்யனார் ஒருவர். சு.ரா வின் அத்தனை கடிதங்களிலும்இது வெளிப்படுகிறது. படிக்க வேண்டிய புத்தகங்கள், கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடங்கி அன்றாடம் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகள், சொந்த வாழ்வு குறித்த ஆலோசனைகள் எனஒரு தந்தையின் கரிசனத்தோடு அமைகின்றன இக்கடிதங்கள்.

எல்லாவற்றைக் காட்டிலும், எந்த ஒரு உறவும் இல்லாமல், ஒரு வாசகனாக மட்டுமே வந்த அய்யனாரை ஒரு எழுத்தாளனாகஉருவாக்கியதுதான் இக்கடிதங்களின் ஆகப் பெரும் சாதனை. எழுத வேண்டுமெனில் ஒருவன் புத்திசாலியாக, அசாதாரண கடும் உழைப்பாளியாக, உலக இலக்கியங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர்க்குக் கிடைத்த அனுபவங்களை உண்மையாக, ஆம் இது முக்கியம், உண்மையாக உணர்ந்து, நேர்மையாகப் பதிவு செய்வதுதான் முக்கியம். எவ்வளவு சாதாரணமானவராக இருந்தபோதிலும் அவரிடம் சொல்வதற்கும், மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கும் செய்திகள் உண்டு என்கிற தன்னம்பிக்கையை சுந்தரராமசாமியின் இந்தக் கடிதங்கள் ஊட்டுகின்றன.

அய்யனார் ராமசாமியைத் தந்தைக்கும் மேலாகக் கருதியதற்கும், கருதுவதற்கும் எல்லா நியாயங்களும் உண்டு. தனது திருமணத்தின்போது கூட அவர்தான் தாலி எடுத்துத் தர வேண்டும் என்கிறார் அய்யனார். அய்யனாருக்கு ராமசாமி ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறார்; எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போ என்கிறார்.

திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு கடிதத்திலும் அய்யனாரின் மனைவி முத்துப் பிள்ளையின் நலத்தையும், குழந்தைப் பேறுக்குப்பின் மகன் ஆனந்த புத்தனின் நலத்தையும் அவர் விசாரிக்காமல் விடுவதில்லை. தனது குடும்பத்தில்அந்த வாரம் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், தான் மிகவும் நேசித்த காலச்சுவடு இதழ்ப் பணி எம்மட்டில்இருக்கிறது என்பதையும் சு.ரா சொல்லத் தயங்குவதில்லை. சில்க் ஸ்மிதா வறுமையில் மரணமடைந்ததுகுறித்த தனது வருத்தம், உலகிலேயே ஆகச் சிறந்த உணவு தோசைதான் என்கிற அரிய கண்டுபிடிப்பு ஆகியவற்றையும் ராமசாமி அய்யனாரிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவருக்குள் ஒளிந்திருந்த வேறு சில மனிதாயப் பரிமாணங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

தமிழில் கடிதங்கள் தொகுப்பாக வந்துள்ளது குறைவு. புதுமைப்பித்தன், வண்ணதாசன், கி.ரா, டேனியல், முதலானோரின் கடித வரிசையில் கடைசியாகச் சேர்ந்துள்ளது இத் தொகுப்பு. இலக்கியத்தரம், இதழியம் குறித்தெல்லாம் கறாரான பார்வை உடைய சு.ரா, ஒருவரின் கடிதங்கள் நூலாகத் தொகுக்கப்படுவதற்கான இலக்கணத்தையும்இக் கடிதங்களில் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

“கடிதங்களைஅச்சேற்றுவது பற்றிப் பொதுத் தீர்மானம் என்று வைத்துக் கொள்ள முடியாது. கடிதங்களின்உள்ளடக்கம் முக்கியம். காலத்திற்கும் படைப்பாளிக்குமான இடைவெளியும் முக்கியம். புதுமைப்பித்தன்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அவர் உயிரோடு இருந்த காலத்தில் வெளிவந்திருந்தால் மிகவும்அசட்டுத்தனமாக இருந்திருக்கும். கம்பன் சடையப்ப வள்ளலுக்கு ஒரு கூரான எழுத்தாணி வேண்டும்என்று ஒரு விருத்தம் எழுதியிருந்து அது இன்று கிடைத்தால் அதை நீங்கள் அச்சேற்றி வரலாற்றில்இடம் பெறலாம்.” (பக். 164)

அழகான வரையறைதான். இந்த வரையறை இந்தத் தொகுப்பிற்கு எந்த அளவிற்குப் பொருந்தும் என்கிற கேள்வி ஒருவருக்கு எழுவது தவிர்க்க இயலாது. எனினும் புதிதாக எழுத வருபவர்களுக்கு சு.ரா கொடுக்கும் பல’டிப்ஸ்’ மிகவும் பயன்படும் என அய்யனார் உறுதியாக நம்புகிறார். அதில் ஓரளவு உண்மையுண்டு.

ஆனால் இந்த அடிப்படியில்பார்க்கும்போது சுந்தர ராமசாமி உயிருடன் இருந்து இந்தத் தொகுப்பை ‘எடிட்’ பண்ண நேர்ந்திருந்தால் இதில் பல கடிதங்களை அவர் நீக்கியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கடிதங்களில் சமகால அரசியல் குறித்து அதிகமில்லை. காங்கிரஸ் ஜெயலலிதா கூட்டிற்கு எதிராக மூப்பனார் கலைஞர் தேர்தல் கூட்டு உருவாவது பற்றி ஒரு கடிதத்தில் மகிழ்ச்சி, 1997 தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் குறித்த ஒரு வருத்தம், காமராசர் சிலை திறப்பு தொடர்பாக நாகர்கோவிலில் நடந்த கலவரம் பற்றிய ஒரு பதிவு ஆகியவற்றை மட்டுமே நாம் இந்த வகையில் காண முடிகிறது.

இக்கடிதங்கள் அனைத்தும் ஜூன் 1986 – செப் 2005 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இதே காலகட்டத்தில் நடைபெற்ற சோவியத் வீழ்ச்சி, இந்துத்துவ எழுச்சி, செப் 11, 2011க்குப் பின் உலகம் ‘மாறியது’ குறித்தெல்லாம் சு.ரா கவலைப்படவில்லையா, இல்லை அய்யனாருடன் பகிர்ந்து கொள்ளத் தக்கனவாக அவர் இவற்றையெல்லாம் கருதவில்லையா தெரியவில்லை.

அய்யனாரைத் தயார்செய்ததில் சு.ராவுக்கு ஒரு நோக்கும் போக்கும் இருந்ததும் கடிதங்களில் வெளிப்படுகிறது.’யாத்ரா’, ‘கொல்லிப்பாவை’, ‘இனி’, ‘இன்று’ .. இப்படியான ஒரு சிற்றிதழ்ப் பட்டியல்தான்அவருக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. அதே காலத்தில் வெளிவந்த ‘நிறப்பிரிகை’,”நிகழ்’, ‘மீட்சி’, ‘மார்க்சியம் இன்று’, ‘இலக்கிய வெளிவட்டம்’ முதலானவை கவனமாகத் தவிற்கப் படுகின்றன.

நகுலன், கந்தசாமி, ஞானக்கூத்தன், அ.மார்க்ஸ் ஆகியோர் குறித்த ஒரு ‘அலர்ஜி’ ராமசாமிக்கு இருந்துவந்தது யாவரும் அறிந்ததே, அது இக்கடிதங்களிலும் உறுதிப்படுகிறது. தான் ஏதோ எல்லோராலும் கடிந்து ஒதுக்கப்படுவதாக ஒரு சுய பச்சாதாப உணர்ச்சியும் சு.ராவிடம் வெளிப்படுகிறது. இது ஏனென்று தெரியவில்லை.வாழ்ந்த காலத்தில் அவருக்கு சாகித்ய அகாதமியும் ஞானபீடமும் கிடைக்காமற் போயிருக்கலாம். ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்த கவுரவம் எழுத்துலகில் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. வலிமையான ஒரு இதழும், வெளியீட்டு நிறுவனமும், அவற்றைத் தன்னை விமர்சிப்பவர்களுக்குஎதிராகப் பயன்படுத்தும் சாதுரியமும் அவரிடம் இருந்தது. எனினும் ஏன் இந்தச் சுய இரக்கம் ?

கறாரான இலக்கியப்பார்வையுடையவர் என்கிற சு.ரா பற்றிய பிம்பத்திலும் சில நேரங்களில் சிதைவு ஏற்படுவதற்கும் இக்கடிதங்கள் சாட்சி பகர்கின்றன. அய்யனாரின் மதிப்பிற்குரிய இன்னொரு ஆசான் தமிழின் முக்கிய கவிஞர்களில்ஒருவரான கவிஞர் அபிபுல்லா என்கிற ‘அபி’. அவரும் ஒரு அழகியல் உபாசகர். ல.ச.ராவை வியப்பவர். சுராவுக்கும் அபிக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்க அய்யனார் ரொம்பவும் சிரமப்படுகிறார். அபியின் கவிதைகள் குறித்து ராமசாமியை எழுத வைத்துவிட வேண்டுமென்று அய்யனார் ரொம்பவும் மெனக்கெடுகிறார். அபியின் கட்டுரைகளைத் தன் இதழில் பயன்படுத்திக் கொள்ள விழைந்தபோதும் அவரது கவிதைகள் பற்றிக் கருத்துரைப்பதை ராமசாமி தவிர்க்கிறார். அபியின் கவிதைகளோடு தன்னால் “ஒட்டமுடியவில்லை” என்கிறார் (பக். 231).

ஆனால் அதே நேரத்தில்காலச்சுவடு வட்டத்திற்கு நெருக்கமாக இருந்த சல்மாவின் கவிதைகள், “மிக நன்றாக இருக்கின்றன.அவருக்கென்று தனித்துவமான குரல் இருக்கிறது” என ஆரவாரிக்கிறார் சு.ரா. சல்மாவைத் தவிர வேறு யாரும் இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்றெனக்குத் தோன்றவில்லை.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அய்யனார் பணியாற்றியபோது அவருக்குப் போதிய ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதை சு.ரா ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டிக்கிறார் (பக்.173). அதை விட்டுவிலகும்போது போதிய பணப் பயன் கிடைத்ததா என அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால் அந்த அக்கறை தனது சொந்த நிறுவனத்தில் அய்யனார் பணியாற்றிய காலத்தில் ராமசாமியிடம் வெளிப்படவில்லை. தான், “காயடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டேன்” என தான் காலச்சுவடிலிருந்து வெளியேற நேர்ந்தது குறித்து அய்யனார் இந்நூல் வெளியீட்டின்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  அது குறித்து ராமசாமி கிஞ்சித்தும் ஆர்வம் காட்டாதது அவர் ஒரு வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, முதலாளியும்கூட என்பதையே காட்டுகிறது.

காலச்சுவடு பொறுப்பிலிருந்து ராமசாமி பெயரளவு வெளியேறியபோதும் மிக்க கரிசனத்தோடு அதன் பணிகளை வீட்டுக்குள்ளேயே எட்டநின்று கவனித்து வந்துள்ளதும் கடிதங்களில் வெளிப்படுகின்றது. எனினும் அதன் செயற்பாடுகள் குறித்து எந்த விமர்சனமும்அவருக்கு இல்லை. முழு திருப்தியுடன் இருந்தார் என்றே இந்தக் கடிதங்களின் வாயிலாக உணர்கிறோம்.

மனுஷ்யபுத்திரன், லல்லி, அய்யனார் மற்றுமுள்ள அன்றைய அவரது இலக்கியச் சுற்றம் ஆகியவற்றின் நட்பையும், அன்பையும், சந்திப்புகளையும் சு.ரா ரொம்பவும் ரசித்து மகிழ்ந்துள்ளதற்கும் இக்கடிதங்கள்சாட்சியம் பகிர்கின்றன.

அய்யனாருக்கு ராமசாமிஅளித்த அறிவுரைகளில் ஒன்று. “முதல் தரமானவற்றை மட்டுமே படி. இரண்டாம் தரமானவற்ரைப்
படிக்காதே” என்பது. இத்தகைய தர அளவுகோல்கள் குறித்த சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். பிறிதோரிடத்தில் அய்யனாரின் எழுத்து ஒன்றை “கணையாழித்தனமானது”, அதாவது இரண்டாம்தரமானது என்கிறார். (முதல்தரமானது அவர் பத்திரிகை). அப்படியாயின் ஒரு வாசகன் அதை படிக்க வேண்டியதில்லைஎன்றாகிறது. அப்படியாயின் இத்தகைய எழுத்துக்களின் கதி? சரி. இது ஒரு பிரச்சினை இல்லை.தன் வளர்ப்பு ஆகச் சிறந்ததை அறிந்து வளர வேண்டும் என்கிற ஒரு தந்தையின் விருப்பாக இதைஎடுத்துக் கொள்வோம். அப்படி எடுத்துக் கொள்வதற்கான ஒரு உறவு அவர்களுக்கிடையே உள்ளதைநாம் உணர முடிகிறது.

நூல் முழுவதும்மனிதர்களின் மீது ஒரு அவநம்பைக்கையை ராமசாமி வெளிப்படுத்திக் கொண்டே போவது வியப்பாகஇருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு இது எப்படிச் சாத்தியம்?

மொத்தத்தில் சுந்தரராமசாமியைப் புரிந்துகொள்ள இது இன்னொரு ஆவணம்.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் தொடர்பான ஆணையங்கள்

1. முஸ்லிம்களின் கோரிக்கை வரலாறு

1947க்குப் பிந்திய இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணையங்கள், அவற்றின் பரிந்துரைகட்கு நேர்ந்த கதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன், இந்த 60 ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்கள் தம் நிலை குறித்த புரிந்துணர்தல்களை அடைந்த விதம், அவர்களது கோரிக்கைகள் உருப்பெற்ற வரலாறு ஆகியவற்றை சுருக்கமாகப் பார்த்தல் அவசியம்.

இந்தியச் சுதந்திரமும், குடியரசு உருவாக்கமும் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் சில வேதனைக்குரிய அம்சங்களைத் தம் பிறப்பிலேயே கொண்டிருந்தன. பிரிவினைக் கலவரங்கள், வட இந்திய முஸ்லிம்களுக்கு இதன்மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்புகள், இடப் பெயர்வுகள், தேசத்தைப் பிரித்தவர்கள் என்கிற குற்றச்சாட்டு ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்தியச் சுதந்திரம் விடிந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் பெற்றிருந்த பல உரிமைகளை இழந்ததோடுதான் இந்திய அரசிற் சட்டமும் குடியரசுக் கட்சியும் அவர்களுக்குக் கை வந்தன. அவை:

  1. இட ஒதுக்கீடு, தனி வாக்காளர் தொகுதி, அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் ஆகியன அவர்களுக்கு மறுக்கப்பட்டன. மாநிலங்கள் ஒதுக்கீடு வழங்க விரும்பினாலுங்கூட “பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்கிற அடிப்படையிலேயே வழங்க முடியும் என்கிற நிலை அரசியல் சட்டத்திலேயே உருவாக்கப்பட்டது.
  2. உருது மொழிக்கு இரண்டாம் ஆட்சி மொழி என்கிற நிலையுங்கூட வட மாநிலங்களில் வழங்கப்படவில்லை. “ஹிந்துஸ்தானி’ கூடப் புறக்கணிக்கப்பட்டு தேவநாகரி வரி வடிவத்துடன் கூடிய இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
  3. விரும்பிய மதத்தைக் கடைபிடிக்க, பிரச்சாரம் செய்ய, பரப்ப உரிமை அளிக்கப்பட்டபோதும் பின்னாளில் மாநிலங்கள் விரும்பினால் மதமாற்றச் சட்டங்களை இயற்றத் தோதாக அரசியல் சட்டத்தில் இப்பிரிவு ங்25(1)சி நிபந்தனைக்குட்பட்டதாக ஆக்கப்பட்டது. அதாவது, பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படாத வரையே மத மாற்றம் செய்யலாம்.
  4. பொதுச் சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது குறித்து அடிப்படை உரிமைகளில் பதியப்படாவிட்டாலும் வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டது.

இதே நேரத்தில்தான் பாபர் மசூதியில் பால ராமர் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது.

minorities 1

அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்கள் தமது உரிமையைக் கோரி வற்புறுதியபோதெல்லாம், நாட்டையே பிரித்து விட்டீர்கள், இனி என்ன உங்களுக்கு இந்த உரிமைகளெல்லாம் என பட்டேலும் மற்றவர்களும் சீறினர். பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற முயற்சியுங்கள் என அறிவுரை கூறினர். தனி வாக்காளர் தொகுதி அளிக்க இயலாது. ஆனால், பட்டியல் சாதியினர்க்கு உள்ளது போல் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அளிக்கப்படும் என முதலில் ஒத்துக்கொண்டு, பின்னர் திருத்தம் ஒன்றை மொழிந்து அதையும் இல்லாமற் செய்தார் பட்டேல்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை தமிழ்நாட்டிலிருந்து சென்ற காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள்தான் வற்புறுத்தினாரேயொழிய வட மாநில முஸ்லிம்கள் அதை எதிர்த்தனர். எதிர்த்து வாக்களித்தனர். “மெட்ராஸ் குரூப்’பின் கோரிக்கை இது எனக் கேலி செய்தனர். இறுதியில் காயிதே மில்லத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக நான்கு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நாங்கள் ஒரு மாநாடு நடத்தினோம். அஸ்கர் அலி எஞ்ஜினியர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். காலை அமர்வில் நான் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது குறித்துப் பேசினேன். அவையிலிருந்த முஸ்லிம்கள் அதை வரவேற்றனர். அருகிலிருந்த வழக்குரைஞர் ரஜனியிடம் நான் என்ன பேசுகிறேன் என வினவினார் என்ஜினியர். மொழி பெயர்த்துச் சொன்னவுடன் அவர் பதட்டமடைந்தார். நான் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் எழுந்து “”அப்படியெல்லாம் பேசாதீர்கள். இது முஸ்லிம்களின் கோரிக்கை அல்ல” என்றார். முஸ்லிமல்லாத நான் இதற்கு என்ன பதில் சொல்ல இயலும்? “”இல்லை ஐயா, தமிழ்நாட்டில் அந்தக் கோரிக்கை எப்போதும் இருந்து வந்துள்ளது. தற்போதுகூட த.மு.மு.க. என்றொரு அமைப்பு இந்தக் கோரிக்கையை முதன்மையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டிற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. ஒருவேளை அதன் விளைவாக இருக்கலாம்” என்றேன். எனினும் அஸ்கர் அலி எஞ்ஜினியர் அதை ஏற்கவில்லை. முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்திய முதல் பத்தாண்டுகளில் இரண்டு அம்சங்கள் நமது கவனத்திற்குரியவையாகின்றன. முதலாவதாக, 1960 வரை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தப் பெரிய மதக்கலவரங்களும் இங்கு நடைபெறவில்லை. அடுத்து இந்தக் காலக்கட்டத்தில் முஸ்லிம் தலைவர்களின் பிரதான பணி தாங்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதை வெளிப்படுத்திக் கொள்வதாகவே இருந்தது. இதை நான் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. அன்றைய சூழலில் அவர்கள் அப்படிச் செய்ய நேர்ந்தது. ஒருவேளை மகாத்மா காந்தி உயிருடனிருந்திருந்தால் முஸ்லிம்களுக்குப் பக்க பலமாக இருந்திருப்பார். இன்னொரு மதச்சார்பற்ற பெருந்தலைவரான நேரு பிரதமராக இருந்த போதிலும் கட்சிக்குள் இந்து வலதுசாரி சக்திகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்தும் வலது சாரிச் சிந்தனையுடையவரே. நேரு தடுத்தும் கேளாமல் சோமனாதபுரம் ஆலய குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டவர் அவர். இந்து சட்டத் தொகுதியைப் பாராளுமன்றம் நிறைவேற்றினால் அதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் எனச் சொல்லி, அம்பேத்கர் பதவி விலகப் பின்னணியாக இருந்தவரும் அவரே.

கஷ்மீர்ப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்வதற்காக 1951 ஆகஸ்ட் 15 அன்று ஐ.நா. அவையின் பிரதிநிதி டாக்டர் ஃப்ராங் கிரஹாம் இந்தியா வந்தபோது அன்றைய அலிகார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தலைமையில் 14 முஸ்லிம் தலைவர்கள் அவரைச் சந்தித்து முஸ்லிம் சிறுபான்மையினர் திருப்தியாக இருப்பதாகவும் இந்திய அரசின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்ததோடு பாகிஸ்தானின் கருத்துக்களை மறுக்கவும் செய்தனர்.

இந்தப் பின்னணியில்தான் 1961ல் முதலில் ஜபல்பூரிலும் பின்னர் துர்காபூரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இரு பெரும் மதக் கலவரங்கள் நடைபெற்றன. முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகியது. இந்நிலையில்தான் முதன் முதலாக புது டெல்லியில் அகில இந்திய முஸ்லிம் மாநாடு நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்தும் சுமார் 600 முஸ்லிம் தலைவர்கள் அதில் பங்கு பெற்றனர். டாக்டர் சையத் மஹ்மூத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோர் இந்த மாநாட்டைக் கூட்டினர். இம்மாநாட்டில் எட்டு அம்சக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அவற்றை இப்படிச் சுருக்கலாம்:

அ) மத, பண்பாட்டு உரிமைகள் (உருது மொழி உட்பட) காக்கப்பட வேண்டும்.

ஆ) அரசுப் பணிகள், தல நிர்வாகங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம், கல்வி, உயர்கல்வி ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

இ) உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். கலவரங்கள் தடுக்கப்பட வேண்டும். மதவெறிப் பிரச்சாரங்களைத் தடைசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பின் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றாகத் திரண்டு பொதுக் கோரிக்கைகளை வைத்தது இப்போதுதான் என நினைக்கிறேன். தேசப் பிரிவினைக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக உருவாக்கப்பட்ட பொழுது சென்னையில் கூட்டப்பட்ட முதற் கூட்டத்தில் (1948, மார்ச் 10) கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்களே. மேற்கு வங்கம், ஒரிசா, பீஹார் மாநிலங்களிலிருந்து யாரும் வரவில்லை. உ.பி.யிலிருந்து ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். காயிதே மில்லத் அவர்கள் தலைவராகவும், சென்னையைச் சேர்நத் மஹ்பூப் அலி பெய்க் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மும்பையைச் சேர்ந்த ஹாஜி ஹுஸைனலி பி. இப்றாஹீம் சாஹிப் பொருளாளர். ஆக, முஸ்லிம் லீக் கட்சி ஒரு தென்னிந்திய இயக்கமாகவே குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தவர்கள் பெரிதும் பங்கேற்கும் அமைப்பாகவே இருந்தது. “அரசியல் சாராத அம்சங்களை வலியுறுத்தி’ இயங்கப் போவதாகவும் இந்த முதல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மதக் கலவரங்களைத் தடுத்து அகில இந்திய அளவில் திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாண்டுகட்குப் பின் மீண்டும் ரூர்கேலாவிலும், ஜாம்ஷெட்பூரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்பட்டபோது சையத் மஹபூப், மவுலானா தய்யிப், காயிதே மில்லத் ஆகியோர் முன்னின்று 1964, ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் “அகில இந்திய முஸ்லிம்களின் கலந்தாலோசனை மாநாடு’ ஒன்றை லக்னோவில் கூட்டினர். முந்தைய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தவிர, உளவுத்துறை, காவல்துறை, சேமப் படைகள் (கீஞுண்ஞுணூதிஞுஞீ ஊணிணூஞிஞுண்) ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் இப்போது தீர்மானங்கள் இயற்றப்பட்டன. முஸ்லிம் மஜ்லிஸ் முன்னின்று “அகில இந்திய முஸ்லிம் அரசியல் மாநாடு’ ஒன்றை 1970, டிசம்பர் 19ல் கூட்டியது. தலைமை ஏற்ற பத்ருத்தீன் தயாப்ஜி, முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கான பொது அரசியல் மேடை ஒன்றின் தேவையை வலியுறுத்தினார்.

இந்த முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமானவையாகவே முடிந்தன. இந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்படவில்லை. இந்நிலையில்தான் 1972, டிசம்பர் 27, 28 தேதிகளில் மும்பையில் “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட மாநாடு’ கூட்டப்பட்டது. பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற குரல் முஸ்லிம்களுக்கு எதிராக இங்கே எழுப்பப்பட்ட பின்னணியில் கூட்டப்பட்ட இம்மாநாட்டில், “”நாம் எல்லாவற்றையும் இழந்தோம். அரசு, மரியாதை, சொத்துக்கள் ஆகியவற்றோடு நம் உருது மொழியையும் இழந்தோம். அல்லாஹ் நமக்கருளிய ஷரீயத்தையும், தீனையும்கூட இன்று நம்மிடமிருந்து பறிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இனி நாம் என்ன செய்வது, எங்கே போவது?” என்று குழுமியவர்கள் பேசினர். இம்மாநாட்டில் உருவான “அகில இந்திய தனியார் சட்ட வாரியம்’ ஒன்றுதான் தொடர்ந்து அதே பெயரில் (நடுவில் சிறிது காலம் பிளவுண்டிருந்த போதிலும்) முஸ்லிம்களின் நலனை அகில இந்திய அளவில் முன்னெடுத்துச் செல்லும் அமைப்பாக விளங்கி வருகின்றது.

1973, ஆகஸ்ட் 18 அன்று ஷேக் அப்துல்லாஹ்வின் தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் இந்திராகாந்தியைச் சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர். 1975  77 காலகட்டத்தில் நெருக்கடி நிலையையும்கூட ஆதரித்தனர். ஆனால், நெருக்கடி நிலைக் கொடுமைகளிலிருந்து அவர்கள் தப்ப இயலவில்லை. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி 1978 ஜனவரி 12ல் “சிறுபான்மையோர் ஆணையத்தை’ உருவாக்கியது. காங்கிரஸ் அல்லாத முதல் அரசுதான் இதைச் செய்ய நேரிட்டது. இந்தியச் சிறுபான்மையினரின் நிலையைக் கண்காணிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்ட போதும் 1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு அதன் பங்கிற்கு கோபால்சிங் ஆணையத்தை நியமித்தது. 1983ல் அதன் அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டது. எனினும் அரசு அதை வெளியிடாமல் முடக்கியது.

1980கள் இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சோதனைக் காலமாக அமைந்தது. ஷாபானு பிரச்சினை, பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை ஆகியவற்றின் ஊடே சையத் சஹாப்தீன் 1989, ஜூலை 9 அன்று “முஸ்லிம் இந்தியர்களின் மாநாட்டை’ டெல்லியில் கூட்டினார். அனைத்துக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட அம் மாநாட்டிற்கு வி.பி.சிங் மட்டும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். பத்துத் தலைப்புகளில் 76 கோரிக்கைகள் அம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் ஒட்டுமொத்தமான பிரச்சினைகளையும் தேவைகளையும் வெளிக்கொணரும் இத்தீர்மானங்கள் ஒரு முக்கிய ஆவணமாக இன்றும் விளங்குகிறது. இந்நிலையில்தான் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

முஸ்லிம்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் (ஙடிஞிtடிட்ண்) இந்திய மண்ணில் பாத்தியமுடையவர்களாகவும் உணர்ந்து கோரிக்கைகளை வைக்கும் நிலை இதற்குப் பின் தொடங்கியது. பல்துறைகளில் ஆற்றல்படுத்துதல், அதிகாரத்தில் பங்கேற்பு, கல்வி, அரசுப் பணி, இடஒதுக்கீடு முதலான கோரிக்கைகள் ஒருங்கிணைந்த வகையில் முன்வைக்கும் நிலை 1993க்குப் பின் ஏற்பட்டது.

1994 அக்டோபர் 9ம் தேதி டெல்லியில் முஸ்லிம் “இடஒதுக்கீட்டிற்கான தேசிய மாநாடு’ கூட்டப்பட்டது. தொடர்ந்து 1999 மே 8 அன்று டெல்லியில் “இந்திய முஸ்லிம்களை ஆற்றல்படுத்தும் இயக்கத்திற்கான தேசிய மாநாடு’ கூட்டப்பட்டது. தாராளமயம், புதிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்கிற உணர்வும், கல்வியில் முக்கியத்துவம் குறித்த சிந்தனையும் பெரிய அளவில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியதை இந்நிகழ்வுகள் உணர்த்தி நின்றன.

இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தில் இடஒதுக்கீட்டைப் பிரதானப்படுத்தி “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்’ முதலான அமைப்புகள் உருவாகியதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் (2009) தாம்பரத்தில் உருவான “மனிதநேய மக்கள் கட்சி’யின் மாநாட்டிலும் இரண்டாம் வாரத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ மாநாட்டிலும் பேசப்பட்ட பேச்சுக்களை நுனித்து நோக்கும் போது இந்திய முஸ்லிம்களின் கோரிக்கையில் இன்னொரு புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது விளங்குகிறது. அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கோருதல் என்பதே இந்தப் பரிமாணம். தேர்தலுக்குத் தேர்தல் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்கூட பாராளுமன்றங்களில் குறைந்து வருவதும் முஸ்லிம் வாக்குகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதும் இம்மாநாடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கூட்டணிகளைத் திறமையுடன் கையாளுவது, உரிய முறையில் பேரம் பேசுவது ஆகியவற்றினூடாக முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஈடான அதிகாரப் பங்கேற்பைப் பெறுவது இங்கே வலியுறுத்தப்பட்டது. தேர்தல் அரசியல், கூட்டணி, பேரம் ஆகியவற்றிற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றில் நம்பிக்கை ஏற்படுத்துவதினூடாக இந்துத்துவ எதிர்ப்பு முனை மழுங்காதிருக்கும் வகையில் இது அமைய வேண்டியது அவசியம்.

அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் அணிதிரள நேர்ந்த சூழல்கள், அவர்களின் கோரிக்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில் இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, ஆகியன குறித்து ஆய்வு செய்யவும் பரிந்துரைகளை அளிக்கவும் உருவாக்கப்பட்ட ஆணையங்கள், அவற்றின் பரிந்துரைகள், அரசுகள் அவற்றை எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை இனி பார்ப்போம்.

2. பல்வேறு ஆணையங்களும் சச்சார் குழு அறிக்கையும்

கல்வி நிலையங்களிலும் அரசாங்க நிறுவனங்களிலும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்கிற குறை பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியே இருந்து வருகிறது. 1870 களில் லார்ட் மியோ இந்திய “வைஸ்ராயாக’ இருந்தபொழுது முஸ்லிம்கள் மத்தியில் அன்று நிலவிய அமைதியின்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வில்லியம் ஹன்டரைக் கேட்டுக் கொண்டார். “நமது இந்திய முஸ்லிம்கள்’ (Oதணூ ஐணஞீடிச்ண Mதண்ச்டூட்ச்ணண்) என்கிற தலைப்பில் அவர் அளித்த அறிக்கை 1871ல் வெளியிடப்பட்டது. அரசுப் பணிகளில் அன்று முஸ்லிம்கள் எந்த அளவு இடம் பெற்றிருந்தனர் என்பது குறித்த பல முக்கிய தரவுகள் அதில் தொகுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்திருந்த அன்றைய வங்க மாகாணம் குறித்த தகவல்கள் அதில் நிறைய அடங்கியிருந்தன. கல்கத்தா நகரமே அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் தலைநகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில் கண்டிருந்த தகவல்களின்படி “உதவிப் பொறியாளர்கள்’ பதவியில் அன்றிருந்த இந்துக்களின் எண்ணிக்கை 14; முஸ்லிம்கள் ஒருவரும் இல்லை. கீழ்நிலைப் பொறியாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் மட்டத்தில் இருந்தவர்களில் இந்துக்கள் 24; முஸ்லிம் 1. ஓவர்சீயர்களில் இந்துக்கள் 63; முஸ்லிம் 2. அக்கவுண்ட்ஸ் துறையில் இந்துக்கள் 50; முஸ்லிம் 0. பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களில் இந்துக்கள் 239; முஸ்லிம்

1. இந்தத் தகவல்கள் போதும் என நினைக்கிறேன். “”கல்கத்தாவிலுள்ள அரசு அலுவலகங்களில் அன்று ஒரு முஸ்லிமால் பியூன் அல்லது வாயிற்காப்போன் போன்ற வேலையாள் பதவி தவிர வேறு எந்தப் பதவியையும் பெறுவது இயலாத காரியம்” என்று அந்த அறிக்கை முடிந்திருந்தது.

சென்னை உள்ளிட்ட பிற மாகாணங்களிலும் நிலைமை அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனினும் இந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு வைஸ்ராய் லார்ட் மியோ இந்தக் குறைகளைக் களைய என்னவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார் எனத் தெரியவில்லை. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

ஆக, முஸ்லிம்களுக்கு இவ்வகையில் இழைக்கப்பட்ட அநீதிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே தொடங்குகிறது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தவரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒவ்வொரு மாநில அரசும் நியமித்த உயர் அதிகாரிகளில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் என்பது குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்கிற நியதியை நடைமுறைப்படுத்தி வந்தார். எனினும் முஸ்லிம்கள் ஒதுக்கப்படும் நிலை தொடரவே செய்தது.

ஜனதா கட்சியின் தலைமையில், முதல் காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் உருவாக்கப்பட்டபோதுதான் (1978) சிறுபான்மையோர் ஆணையம் (ஜனவரி 12) அமைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த இந்திரா, ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தை ஒதுக்கிவிட்டு இன்னொரு “உயர் அதிகாரக் குழு’வை (ஏடிஞ்ட கணிதீஞுணூஞுஞீ கச்ணஞுடூ) நியமித்தார்.

minorities 2 misra

சிறுபான்மையோர், பிற பிற்படுத்தப்பட்டோர் முதலானவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எந்த அளவுக்குச் சென்றடைகிறது. அவர்களது சமூக நிலை எவ்வாறு உள்ளது என ஆராய்வது இக்குழுவின் நோக்கம். டாக்டர் வி.ஏ. சய்யித் அஹமது தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பின் இந்தியத் தூதுவராக (ஏடிஞ்ட இணிட்ட்டிண்ண்டிணிணஞுணூ) அவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். குழுவிலிருந்த மூத்த உறுப்பினரான டாக்டர் கோபால் சிங் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அயலுறவுத் துறையில் பணிபுரிந்த அதிகாரியும்கூட. “கோபால் சிங் குழு’ என இது பின்னர் அறிவிக்கப்பட்டது. இதன் செயலராக இருந்த குர்ஷித் ஆலம்கான் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் டாக்டர் ரஃபீக் சகரியா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பத்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, 1983 ஜூன் 14 அன்று 118 பக்கமுள்ள தனது “சிறுபானமையோர் அறிக்கை’யை அரசுக்குச் சமர்ப்பித்தது. கல்வி, அரசுப் பணிகள் ஆகியவற்றில் சிறுபான்மையோரின் இடம், கிராம வளர்ச்சி மற்றும் தொழிற்துறை தொடர்பான அரசுத் திட்டங்களின் பலன்களில் அவர்களின் பங்கு, அவர்களது நலன்களை நிதி நிறுவனங்கள் எந்த அளவுக்குத் தமது செயல்பாடுகளில் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன என்பது தொடர்பான பல தரவுகள் அடங்கிய 205 பக்க பின்னிணைப்புகளும் அதில் இருந்தன இந்த எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின்தங்கியிருந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டிய கோபால் சிங் குழு அறிக்கை இந்நிலையை மாற்றுவதற்கான பல்வேறு உடனடி மற்றும் தொலைநோக்கான திட்டங்களையும் பரிந்துரைத்திருந்தது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் வரை, முஸ்லிம் அமைப்புகள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, காங்கிரஸ் அரசு அதைப் பாராளுமன்றத்தில் வைக்கவே இல்லை. பாராளுமன்றத்திலேயே வைக்காதபோது அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்பட்டன என்கிற கேள்விக்கே வேலையில்லாமல் போய்விடுகிறது.

மீண்டும் ஒரு காங்கிரஸ் அல்லாத அரசு வி.பி.சிங் தலைமையில் அமைக்கப்பட்டபோதுதான் கோபால் சிங் அறிக்கை வெளியிடப்பட்டது. “”மத்திய மாநில அரசுகளின் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களின் பலன்கள் சிறுபான்மையோர் + பட்டியல் சாதியினர் + இதர பலவீனமான பிரிவினர் ஆகியோருக்குச் சென்றடையவில்லை என்கிற உணர்வு தொடர்கிறது” என்பதை அறிக்கை அழுத்தமாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோபால்சிங் அறிக்கை முஸ்லிம்களின் நிலையை மட்டும் ஆய்வதற்காக அமைக்கப்பட்ட ஒன்றல்ல. சிறுபான்மை யோருடன் இதர பட்டியல் சாதியினர் மற்றும் பலவீனமான சமூகப் பிரிவினர் எல்லோரது நிலைகளையும் ஆராய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இந்திய அளவில் 83 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. பல அம்சங்களில் போதுமான தகவல்களை அது கொண்டிருக்கவில்லை என்பன இவ்வறிக்கையின் மீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்கள்.

எனினும் உறுதியான இடஒதுக்கீட்டுக்குப் பரிந்துரைகளைச் செய்திருந்த வகையிலும், வேலைத் தேர்வு மற்றும் கண் காணிப்புக் குழுக்களில் உரிய பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும், சிறுபான்மையோருக்கான பிரதமரின் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் குழுக்களில் சிறுபான்மையோருக்கு 20 சத ஒதுக்கீடு அளிக்க வேண்டும் முதலான பரிந்துரைகளை வழங்கியிருந்த வகையிலும் இவ்வறிக்கை குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. எனினும், ஒன்பதாண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் இப்பரிந்துரைகளை நிறைவேற்றும் சித்தம் அடுத்தடுத்து வந்த எந்த அரசுகளுக்கும் இல்லாமலேயே இருந்தது.

1995ம் ஆண்டின் தேசியச் சிறுபான்மையோர் ஆணையம், காவல்துறை மற்றும் துணை இராணுவப் பணிகளில் சிறுபான்மையோர் எந்த அளவிற்கு பங்கு வகிக்கின்றனர் என்கிற தரவுகளைச் சேகரித்தது. சிறுபான்மையோர் குறிப்பாக முஸ்லிம்களின் பங்களிப்பு பல்வேறு மாநிலங்களிலும் அவர்களின் மக்கள் தொகைக்கு எந்த வகையிலும் பொருத்தமின்றி இருப்பதை ஆணையம் வேதனையோடு சுட்டிக்காட்டியிருந்தது.

திட்டக்குழுவின் சிறுபான்மையோருக்கான துணைக்குழு 1996, மே 6 அன்று மத்திய அரசுப் பணியிலும், வங்கித் துறையிலும் சிறுபான்மையோரின் பங்கை ஆராய்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டது. 12 பேர் அடங்கிய இக்குழுவிற்கு தேசிய சிறுபான்மையோர் ஆணைய உறுப்பினர் எஸ். வரதராஜன் தலைமை தாங்கியிருந்தார். “”அரசு மற்றும் அகில இந்தியப் பணிகளில் சிறுபான்மையோர், குறிப்பாக முஸ்லிம்களின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களின் மக்கள் தொகை வீதத்திற்கும் இந்தப் பங்களிப்பிற்கும் எந்தப் பொருத்தமும் இல்லை. இந்த அநீதியைக் களைவதற்கு (அரசு தரப்பில்) எந்த உருப்படியான காரியமும் மேற்கொள்ளப்படவில்லை” என வழக்கம்போல் இந்தக் குழுவும் புலம்பியிருந்தது.

“சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் ஆகியும்கூட பொதுப்பணிகளில் சிறுபான்மையோருக்கு உரிய பங்கு அளிப்பதில் இந்த அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதால் இந்நிலைமையை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசு அதிக அளவு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்” எனவும் இது கோரியிருந்தது.

1998 / 99 ஆண்டுக்கான தேசிய சிறுபான்மையோர் ஆணைய அறிக்கை, “மத்திய அரசின் கீழுள்ள எல்லா பொதுப் பணிகளிலும் சிறுபான்மையோருக்கு 15 சத ஒதுக்கீடு அளிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குப் 10 சதம், பிற சிறுபான்மை யோருக்கு 5 சதம் என இது பிரித்தளிக்கப்பட வேண்டும். கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நெறிமுறைகளை எல்லா அரசு, மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் வேலைத் தேர்வு அதிகாரிகளுக்கும் அமைப்புகளுக்கும் அளிப்பது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெளிவான பரிந்துரையை வழங்கியது. எனினும், இந்த அறிக்கைகளுங்கூட போபால் சிங் குழு அறிக்கைக்கு நேர்ந்த கதியைத்தான் சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில்தான் சென்ற மார்ச் 9, 2005ல் புதிதாக அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, “முஸ்லிம்களின் சமூக, பொருளாதார பின் தங்கிய நிலைகளை ஆய்வு செய்ய’ பிரதமரின் உயர்மட்டக்குழு ஒன்றை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமையில் நியமித்தது. சச்சாரையும், சேர்த்து ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் மனித வளங்கள் குறித்த ஆய்வுகளில் வல்லுனரான டாக்டர் அபூ சலீம் ஷெரீஃப் உறுப்பினர் செயலராகப் பணியாற்றினார். அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் சகல தரவுகளையும் பெறும் அதிகாரம் இக்குழுவுக்கு வழங்கப்பட்டது.

“பாதுகாப்பு, அடையாளம், சமத்துவம்” ஆகியவற்றைத் தனது அணுகல் முறையாக அறிவித்துக் கொண்ட இக்குழு, 2006 நவம்பர் 17 அன்று பிரதமரிடம் தனது அறிக்கையை அளித்தது. அடுத்த இரு வாரங்களில், நவம்பர் 30 அன்று, அது பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது. 12 அத்தியாயங்கள், 427 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கை இணைய தளங்களில் முழுமையாகக் கிடைக்கிறது. கோபால் சிங் குழு அறிக்கையைப் போலன்றி இது முஸ்லிம் சிறுபான்மையோரின் நிலையைப் பற்றி மட்டுமே ஆய்வதற்காக அமைக்கப்பட்ட குழு என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மிக விரிவான தகவல்கள் உரிய முறையில் பகுத்தாய்வு செய்யப்பட்டு நிரல் படத் தொகுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, உண்மையிலேயே முஸ்லிம் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஓர் ஆவணமாக உள்ளது.

மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட, விரிவான கவனிப்பிற்கு உள்ளான ஒரு முக்கிய ஆவணம் என்கிற வகையில் ஏற்கெனவே இது பற்றி மிக விரிவாக எழுதப்பட்டு விட்டது. நானே விரிவான ஒரு நூலும் சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். எனவே சச்சார் குழு குறித்த விரிவான அலசலை இங்கு தவிர்ப்போம். எனினும், இந்த அறிக்கை குறித்த ஒரு சில முக்கிய அவதானிப்புகளை மட்டும் இங்கே பதிவு செய்யலாம்.

  1. பலரும் நம்புவதுபோல் இது வெறும் ஒரு இடஒதுக்கீட்டிற்கான அறிக்கை அல்ல. சொல்லப்போனால் இதன் மீது சிலரால் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, இது உறுதியான இடஒதுக்கீட்டுப் பரிந்துரை எதையும் செய்யவில்லை என்பதுதான். இடஒதுக்கீடு என்பதெல்லாம் அரசியல்வாதிகள் பேசுகிற பம்மாத்துகள். எங்கே இருக்கிறது, இடம் ஒதுக்கீடு செய்ய என்கிற ரீதியில் பேட்டி ஒன்றில் பதிலுரைத்த அபுசலீம் ஷெரிப், எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களைப் பிற சமூகங்களுக்கு இணையாகக் கொண்டு வருதலில் இடஒதுக்கீடு ஓரங்கம் மட்டுமே என்று கூறியது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் பன்மைத்தன்மை சகல நிறுவனங்களிலும் பிரதிபலிக்கப்படுவது; இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை ஏற்படுத்தித் தருவது பரிந்துரைகளைச் செய்வதே சச்சார் அறிக்கையின் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  2. இந்த நோக்கில் சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவ குறியெண்’ (ஈடிதிஞுணூண்டிtதூ ஐணஞீஞுது) ஒன்றை உருவாக்குவது, பன்மைத்துவம் மற்றும் முஸ்லிம்கள் ஒதுக்கப்படுதல் குறித்து அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உணர்வூட்டுவது, உயர் கல்வியில் பன்மைத்துவத்தை நிலைநாட்டும் வண்ணம் மாற்றுச் சேர்க்கை அளவுகோல்களை உருவாக்குவது, சிறுபான்மையோர் குறித்த தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவது, தனியார் துறைகள் உள்ளிட்டு உறுதியாக்க நடவடிக்கைகளை (அஞூஞூடிணூட்ச்tடிதிஞு ச்ஞிtடிணிண) மேற் கொள்வது, பிரிட்டனில் இருப்பதுபோல் “சமவாய்ப்பு ஆணையம்’ (உணுதச்டூ Oணீணீணிணூtதணடிtதூ இணிட்ட்டிண்ண்டிணிண) ஒன்றை உருவாக்குவது, மதரஸா கல்வி முறையை நவீனமயமாக்குவதோடு பொதுக்கல்வியுடன் இணைப்பது, பாட நூல்களின் உள்ளுறையை மதிப்பிடுவதற்கான சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது, முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார ரீதியில் சுருங்குவதைத் (எடஞுttணிடிண்ச்tடிணிண) தடுக்கும் வகையில் சிவில் சமூகத்தின் பொறுப்பைச் சுட்டிக் காட்டுவது என்கிற வகையில் பரிந்துரைகளைச் சச்சார் குழு மேற் கொண்டுள்ளது. குறிப்பாக, தலித் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரைப் பற்றி அது பேசுகிறது.
  3. முஸ்லிம்கள் குறித்த பொய்களைப் பரப்பியே அரசியல் நடத்தும் ஃபாசிஸ சக்திகளின் பல கட்டுக்கதைகளைத் தகர்க்கும் வண்ணம் ஏராளமான தரவுகளைச் சச்சார் குழு தொகுத்துள்ளது. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பிப் பார்ப்பதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டுகிறது.
  4. விரிவாகத் தரவுகள் தொகுக்கப்பட்டிருந்தபோதும் பகுப்பாய்வு இன்னும் கூர்மையாகச் செய்யப்பட்டிருக்கலாம். முஸ்லிம்களின் இன்றைய முக்கிய கவலையான பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளுக்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அரசுத் தலையீடு தொடர்பான பரிந்துரைகளை இன்னும் துல்லியமாகச் செய்திருக்கலாம். முஸ்லிம் பெண்கள் குறித்த போதுமான அக்கறை காட்டப்படவில்லை முதலியன இவ்வறிக்கை மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களில் சில.

மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை இது. இதன் கதி என்னவாகிக் கொண்டுள்ளது என்பதை நாம் நேரிலேயே அவதானித்துக் கொண்டிருக்கிறோம். இதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை அறிக்கை (அகூகீ) ஒன்றையும் அரசு சமர்ப்பித்துள்ளது. ஆனால், என்ன பலன்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்கிற கேள்வியை நாம் எழுப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

இதை ஒட்டி வெளியிடப்பட்ட “மத மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம், ரங்கனாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை முதலியவற்றை இனி பார்க்கலாம்.

3. ரங்கநாத்மிஸ்ரா ஆணைய அறிக்கை

கோபால் சிங் ஆணையம் தன் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்குச் சரியாக ஒரு மாதம் முன்னதாக (1983 மே) அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சிறுபான்மையோரின் வளர்ச்சி தொடர்பாக 15 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றைக் கொண்ட கடிதத்தை மாநில முதல்வர்களுக்கு அனுப்பினார். “சிறுபான்மையோர் நலனுக்காக பிரதமரின் 15 அம்சத் திட்டம்’ என அழைக்கப்படும் இந்தத் திட்ட அம்சங்களுக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்து 1985 ஆகஸ்ட் 25ல் பிரதமர் ராஜீவ் காந்தியும் முதல்வர்களுக்கு எழுதினார்.

முஸ்லிம்களின் ஆதரவோடு ஆட்சியமைத்த மன்மோகன் அரசு, பதவி ஏற்ற கையோடு சச்சார் குழுவை நியமித்ததை அறிவோம். சச்சார் தம் அறிக்கையை அளித்த அதே நேரத்தில் மீண்டும் ஒரு முறை பிரதமர் மன்மோகன் சிங் 15 அம்சத் திட்டத்தை அறிவித்தார்.

பழைய 15 அம்சத் திட்டத்தை “”மீளாய்வு செய்து சிறுபான்மையோரின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுடன் நெருக்கமான தொடர்புடைய நடவடிக்கைகளில் கவனம் குவிக்கும் வண்ணம்” அதற்குப் “புதிய வடிவு’ கொடுக்கப்பட்டுள்ளது என்கிற முன்னுரையோடு வெளியிடப்பட்ட அந்தத் திட்டத்தின் முழு வடிவையும் தமிழாக்கி எனது “சச்சார் குழு அறிக்கை’ நூலில் இணைத்துள்ளேன் (பக். 101108).

வகுப்புக் கலவரங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய துயர் நீக்கும் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்குத் திருத்தப்பட்ட இத்திட்டத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும், அதே நேரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுபான்மையினரை மேம்படுத்துவதுடன் தொடர்புடைய கூடுதலான சில அம்சங்கள் (வேலை, கல்வி வாய்ப்புகள் அளிப்பது, வாழ்க்கைச் சூழலை வளப் படுத்துவது முதலியன) இங்கு புதிதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன எனவும் அதன் முன்னுரை பகன்றது.

இந்த 15 அம்சத் திட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, எல்லாச் சிறுபான்மையினருக்குமானது என்பது குறிப்பிடத்தக்கது. 2001 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவிலுள் எல்லாச் சிறுபான்மையினரும் மொத்தத்தில் 19.5 சதம் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கள்தொகை 13.4 சதம் என்றால் மொத்தச் சிறுபான்மையினரில் முஸ்லிம்களின் பங்கு 68.7 சதமாகிறது.

பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் “பட்ஜெட்’ ஒதுக்கீட்டில் 15 சதத்தை இத்திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். எனவே, அந்த வகையில் இவ்வாறு இத்திட்டத்திற்கு செலவிடப்படும் தொகையில் சுமர் 68.7 சதம் முஸ்லிம்களைச் சென்றடைய வேண்டும்.

சச்சார் குழு அறிக்கை கவனத்தில் கொள்ளாத பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் இத்திட்டம் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. வேலை மற்றும் கல்விக்கான தேர்வுக் குழுக்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் உரிய அளவில் இடம்பெற வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது. காவல்துறை, இராணுவம், துணை இராணுவம் ஆகியவற்றிலும் உரிய அளவில் சிறுபான்மையோர் இடம்பெற வேண்டியதையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது. வங்கிக் கடன்களில் 15 சதம் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதும் இத்திட்டப் பரிந்துரைகளில் ஒன்று. இவ்வாறு அளிக்கப்படுவதில் பெரும்பான்மை (68.7 சதம்) முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

மன்மோகன் சிங் அரசு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் “மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்’ ஒன்றையும் சென்ற மார்ச் 15, 2005 அன்று நியமித்தது. தேசியச் சிறுபான்மையோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேரா. தாஹித் முஹம்மது, முனைவர் அனில் வில்சன் (டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர்), முனைவர் மொஹின்தர் சிங் (பஞ்சாபி ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர்), ஆஷாதாஸ் (உறுப்பினர், செயலர்) ஆகியோர் அடங்கிய இக்குழு, தனது அறிக்கையை மே 22, 2007 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே குஇ/குகூ அட்டவணைப் பட்டியலில் ஏற்க வேண்டும் என்கிற 1950ம் ஆண்டு குடியரசுத் தலைவரது ஆணையில் மூன்றாம் பத்தியை நீக்க வேண்டும் என்கிற ஜனநாயகக் கோரிக்கையை ஏற்றுத் தன் பரிந்துரையை வழங்கியுள்ளது இவ்வாணையம்.

இவ்வாணையத்தின் முக்கியப் பரிந்துரைகளின் சுருக்கத்தை மட்டும் இனி பார்க்கலாம்:

ஐ) மத மற்றும் மொழிச் சிறுபான்மையோரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை அடையாளம் காணுவதற்கான அளவுகோல்:

16.15: இந்தப் பிரச்சினையில் எங்களது பரிந்துரை என்னவெனில், பின்தங்கிய பிரிவினை அடையாளம் காண்பதில் பெரும்பான்மைச் சமூகத்திற்கும், சிறுபான்மைச் சமூகத்திற்கும் எந்த அம்சத்திலும் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. எனவே இந்த நோக்கத்திற்காக, பெரும்பான்மைச் சமூகத்தில் கடைபிடிக்கும் அதே அளவுகோலை, அது எந்த அளவுகோலாக இருந்த போதிலும், அதை எந்தத் தயக்கமும் இல்லாமல் சிறுபான்மைச் சமூகத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.

இதனுடைய இயல்பான துணைப் பரிந்துரையாக, கீழ்க்கண்ட பரிந்துரையை வழங்குகிறோம். இன்றைய நடைமுறைகளின்படி பெரும்பான்மைச் சமூகத்தில் யாரெல்லாம் பின்தங்கிய பிரிவினராகக் கருதப்படுகின்றனரோ அவர்களுக்கு இணையாகச் சிறுபான்மைச் சமூகங்களில் இருப்பவர்களும் பின்தங்கிய பிரிவினராகக் கருதப்பட வேண்டும்.

16.18: இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், தமது மத அடையாளத்தின் காரணமாகவே, பட்டியல் சாதியினராகக் (குஇ) கருதப்படாமலிருக்கிற சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த சமூக மற்றும் தொழிற் பிரிவுகள் அனைத்தும், அவர்களது மதங்கள் சாதி முறையை அங்கீகரித்தாலும் சரி, அங்கீகரிக்காவிட்டாலும் சரி, இன்றைய நடைமுறைகளில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட வேண்டும்.

16.19: அதேபோல பழங்குடியினரிலும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் பழங்குடியினராகக் கருதப்பட வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து பழங்குடிப் பகுதிகளில் வசித்துவரும் சிறுபான்மைச் சமூகத்தினர் அவர்களின் இன அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.

ஐஐ) இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறுபான்மையோருக்கான நலத்திட்டங்கள்:

பொது நல நடவடிக்கைகள்

அ. கல்வித்துறை நடவடிக்கைகள்

16.2.4: பல்வேறுபட்ட, சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணான நீதித்துறை விளக்கங்களின் ஊடாக சிறுபான்மையோரின் கல்வி உரிமையை வரையறுக்கும் அரசியல் சட்டத்தின் 30ம் பிரிவின் பொருளும் எல்லையும் தெளிவற்றுப் போய்விட்டதால், அரசியல் சட்ட உருவாக்கத்தின்போது கொண்டிருந்த பொருளை (Oணூடிஞ்டிணச்டூ ஞீடிஞிtச்tஞுண்) மறு உறுதி செய்யும் வகையில் சிறுபான்மையினரின் கல்வி சார்ந்த அனைத்து உரிமைகளையும் மீள அளிப்பதற்குரிய வகையில் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சட்டம் ஒன்றை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமெனப் பரிந்துரைக்கிறோம்.

16.2.5: அரசியல் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ஒழுங்காக வழங்கப்படுகிறதா எனக் கவனித்துச் செயற்படுத்தும் வகையில் தேசியச் சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆணையத்தின் உள்ளடக்கம், அதிகாரம், செயற்பாடுகள் ஆகியவற்றை விரிவுபடுத்தி அதன் விதிகளைத் (குtச்tதஞுண்) திருத்த வேண்டும்.

16.2.6: தேசிய ஒருமைப்பாட்டு நோக்கிலிந்து நீதிமன்றங்கள் வழங்கிய ஆணைகளின்படி, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தவர்களின் எண்ணிக்கை 50 சதத்தை மிகக் கூடாது என்றுள்ளது. அதாவது எஞ்சியுள்ள 50 சதமும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு அளிக்கப்படுகிறது. எனவே  இதே அணுகுமுறையின் அடிப்படையில், சிறுபான்மையோர் அல்லாத எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் 15 சத இடங்கள் சிறுபான்மையினருக்கென கீழ்க்கண்டவாறு ஒதுக்கப்பட வேண்டுமென நாங்கள் அழுத்தமாக வற்புறுத்துகிறோம்.

(ச்) இவ்வாறு ஒதுக்கப்படும் 15 சத இடங்களில் முஸ்லிம்களுக்கு 10 சத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் (மொத்த சிறுபான்மையோரில் 73 சதத்தினர் முஸ்லிம்கள் என்பதால்), எஞ்சியுள்ள 5 சதம் பிற சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட வேண்டும்.

(ஞ) இந்த 15 சத ஒதுக்கீட்டில் சிறிய மாறுதல்களை (ச்ஞீடீதண்tட்ஞுணt) செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் இல்லையெனில், மிஞ்சுகிற காலியிடங்களை, பிற சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தோர் இடம் கிடைக்காதிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒதுக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ஒதுக்கப்பட்ட 15 சத இடங்களைப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கக் கூடாது.

(ஞி) பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் கடைபிடிக்கப்படுவதுபோல, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தம் தகுதி அடிப்படையில் மற்றவர்களுடன் போட்டியிட்டு (பொது ஒதுக்கீட்டில்) இடம்பெற்றிருந்தார்கள் ஆயின், இந்த 15 சத ஒதுக்கீட்டில் அவர்களைக் கணக்கிலெடுக்கக் கூடாது.

16.2.7: பட்டியல் சாதியினர் பழங்குடியினருக்குத் தற்போது குறைந்த மதிப்பெண் தகுதி, குறைந்த கட்டணம் ஆகிய சலுகைகள் வழங்கியது சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பின்தங்கியவர்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.

16.2.8: தேசிய அளவில் சிறுபான்மையினருள் அதிகமாக இருப்பவர்களும், நாடளவில் பரந்து இருப்பவர்களுமான முஸ்லிம்களே எல்லா மதத்தினரிலும் கல்வியில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளதால், அவர்களுக்கு சில குறிப்பான பரிந்துரைகளைக் கீழ்க்கண்டவாறு செய்கிறோம்.

(ஐ) “அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்’, “ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சிறப்புப் பொறுப்புகள் சிலவற்றை சட்டப்பூர்வமாக அளித்து முஸ்லிம் மாணவர்களின் கல்வியை எல்லா மட்டங்களிலும் அதிகப்படுத்த சகலவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓரளவு முஸ்லிம்கள் நிறைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நிறுவனமேனும் இவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும்.

(தி) மவுலானா ஆஸாத் கல்வி நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு வினியோகிக்கப்படும் நிதியில், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை வீதத்திற்கு ஏற்ப பொருத்தமான அளவு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஏற்கெனவே உள்ள முஸ்லிம் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பது தவிர, நர்சரி வகுப்புகளிலிருந்து உயர்மட்ட கல்வி வரையிலான நிறுவனங்களையும், தொழிற்கல்வி நிறுவனங்களையும் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் இந்தியா முழுமையிலும் புதிதாக உருவாக்குவதற்கும் உதவி செய்ய வேண்டும்.

(திடி) அங்கன்வாடிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் இதுபோன்ற இதர நிறுவனங்களை அவ்வவ் திட்டங்களின் கீழ் திறக்க வேண்டும். சிறப்பாக முஸ்லிம்கள் செறிவாக உள்ள பகுதிகளில் இவற்றை உருவாக்க வேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்குத் தம் பிள்ளைகளை அனுப்புகிற முஸ்லிம் குடும்பங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

16.2.9: மொழிச் சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில் கீழ்க்கண்ட பரிந்துரைகளைச் செய்கிறோம்:

(ச்) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள மொழிச் சிறுபான்மையினருக்கு, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நலன்களை முழுமையாக நிறைவேற்றுவதற்குப் பொறுப்பேற்கும் வகையில் “மொழிச் சிறுபான்மையர் ஆணையம்’ தொடர்பான சட்டத்தைத் திருத்த வேண்டும்.

(ஞ) மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமுலாக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் தாய் மொழியையும், குறிப்பாக உருது, பஞ்சாபி மொழிகளைக் கட்டாயமாகப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதற்கேற்றவகையில் நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து தர வேண்டும்.

ஆ. பொருளாதார நடவடிக்கைகள்:

16.2.10: சிறுபான்மையோரில் பல குழுக்கள் சில குறிப்பிட்ட குடிசைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய தொழில்களை வளர்ப்பதற்கும் நவீனப்படுத்துவதற்கும் திறனுடன் செயல்படும் அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டுமென நாங்கள் பரிந்துரை செய்கிறோம். சிறுபான்மையினர் மத்தியிலுள்ள கைவினைஞர்கள் மற்றும் தொழிற்பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இத்தகைய தொழில்கள், கைவினைஞர்கள் மற்றும் பணியாளர்களின் வளர்ச்சிக்கான உதவிகளைச் செய்வது உடனடித் தேவையாக உள்ளது.

16.2.11: நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களும், வேறு சில சிறுபான்மையினரும் விவசாயத்துறையில் அதிகமாக இல்லை என்பதால் அவர்கள் மத்தியில் விவசாய வளர்ச்சி, விவசாய வணிகம், விவசாயப் பொருளாதாரம் முதலியவற்றை வளர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.2.12: எல்லா வகையான சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமான உருவாக்கத் திட்டங்களைச் சிறுபான்மையினர் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் அதன்மூலம் அவர்கள் பயனடைவதற்கும் ஏற்ற திறன் மிக்க வழிமுறைகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.2.13: தேசியச் சிறுபான்மை வளர்ச்சி நிதி மறு ஆய்வுக் குழுவின் சமீபத்திய அறிக்கையின் வெளிச்சத்திலும், தேசிய சிறுபான்மை ஆணையத்தைக் கலந்து கொண்டும், “தேசியச் சிறுபான்மை வளர்ச்சி நிதி நிறுவனத்தின்’ (NMஈஊஇ) விதிகள், நெறிமுறைகள், நடைமுறைகள் ஆகியவற்றை முன்னுரிமை அளித்துச் சீர்திருத்தி அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம். நிதி உதவிகள் மேலும் சிறப்பாகவும், திறமையாகவும், சிறுபான்மையினரை முழுமையாகச் சென்றடையும் நோக்கில் இது செய்யப்பட வேண்டும்.

16.2.14: கிராமப்புற வேலை உருவாக்கத் திட்டம், பிரதமரது “ரோஸ்கார் யோஜனா’ மற்றும் “கிராமின் ரோஸ்கார் யோஜனா’ முதலான அரசுத் திட்டங்கள் அனைத்திலும் 15 சதத்தைச் சிறுபான்மையினருக்காக ஒதுக்க வேண்டுமென நாங்கள் மேலும் பரிந்துரைக்கிறோம். தேசிய அளவிலுள்ள மொத்தச் சிறுபான்மையோரில் முஸ்லிம்கள் 73 வீதம் இருப்பதால் இந்த 15 சதத்தில் 10 சதத்தை முஸ்லிம்கள் பயனடையுமாறும் மீதியுள்ள 5 சதத்தை மற்ற சிறுபான்மையினர் பயனடையுமாறும் ஒதுக்க வேண்டும்.

4. ரங்கநாத்மிஸ்ராவின் இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகள்

misra

16.2.15: அரசுப் பணியில் சிறுபான்மையோர் குறிப்பாக, முஸ்லிம்கள் போதிய அளவும், சிலதுறைகளில் முற்றிலும் இடம்பெற்றாதுள்ளதால், அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவின் வரையறைக்குட்பட்ட வகையில் அவர்களை இவ்வகையில் பிற்பட்டவர்களாகக் கருதவேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம். “கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும்’ என்கிற ரீதியில் நிபந்தனைப்படுத்தாமல் பிற்பட்டவர்களாக இவர்கள் கருதப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய மாநில அரசுப் பணிகளின் எல்லா மட்டங்களிலும் கீழ்க்கண்டவாறு 15சத ஒதுக்கீடு அளிக்க வேண்டும்:

(அ) இந்தப் 15சத ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 10சதம் (மொத்தச் சிறுபான்மையினரில் அவர்கள் 73 சதமாக இருப்பதால்), எஞ்சியுள்ள சிறுபான்மையினருக்கு 5 சதம் என இது பிரித்தளிக்கப்பட வேண்டும்.

(ஆ) இந்தப் 15 சதத்திற்குள் சிறிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்ய முஸ்லிம்கள் தகுதியாக இல்லாத பட்சத்தில், இவ்வாறு எஞ்சுகிற பதவிகளைப் பிற சிறுபான்மையினரில் தகுதி உடையோர் இருந்தால் அவர்களுக்கு அளிக்கலாம். இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் 5 தசத்தை அது மிகுந்தால் பரவாயில்லை. ஆனால், எந்த நிலையிலும் இந்த 15சத ஒதுக்கீட்டிலுள்ள பதவிகள் பெரும்பான்மைச் சமூகத்திற்குச் செல்லக் கூடாது.

16.2.16: இந்தப் பரிந்துரையைச் சாத்தியப்படுத்துவதற்கு நீக்க இயலாத தடை ஏதும் இருந்தால், இதற்கு மாற்றாகக் கீழ்க்கண்ட பரிந்துரையைச் செய்கிறோம். மண்டல் குழு அறிக்கையின்படி மொத்தமுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரில் சிறுபான்மை யோரின் அளவு 8.4 சதம். எனவே, பிற்பட்டோருக்காக அளிக்கப்படும் 27 சத ஒதுக்கீட்டில் 8.4 சதம் உள்ஒதுக்கீட்டைச் சிறுபான்மையோருக்கு அளிக்கலாம். இதில் 6 சதத்தை முஸ்லிம்களுக்கும், 2.4 சதத்தை எஞ்சுகிற இதர சிறுபான்மையினருக்கும் அளிக்கலாம். வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையானால், இதில் சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

16.2.17: பழங்குடியினரைப் பொறுத்தமட்டில் (குகூ) அவர்கள் மத ரீதியில் ஒரு நிலையானவர்கள் (அதாவது எந்த மைய நீரோட்ட மதத்தையும் சாராதவர்கள்  அ.மா.) எனினும், அவர்களில் ஏதும் சிறுபான்மையோர் உள்ளார்களா என்பதைக் கவனமாக ஆராய்ந்து அதற்குத் தக இப்போது பழங்குடி யினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டில் சிறு மாற்றங்கள் செய்யத் தொடங்கலாம்.

16.2.18: இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பல்வேறு பிரிவினரில் உள்ள மேல்நிலைப் பிரிவினரை (இணூஞுச்ட்தூ ஃச்தூஞுணூ) ஒதுக்கீட்டிலிருந்து விலக்குவது குறித்து சமீபத்தில் வெளிவந்துள்ள நீதிமன்றத் தடைகள் (குஇ / குகூ பிரிவினரையும் உள்ளடக்கி) அரசு கொள்கையாக ஏற்கப்படுவது குறித்து தீவிரமாகச் சிந்திப்பது அவசியம் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.3.4: 1950ம் ஆண்டில் பட்டியல் சாதியினருக்கான அரசியல் ஆணையில் 3ம் பத்தி பட்டியல் சாதி எல்லையை முதலில் இந்துக்களுக்கு மட்டுமே சுருக்கியிருந்தது. பின்னர் அது சீக்கியர்களையும் பவுத்தர்களையும் உள்ளடக்கியது. இன்னுங்கூட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பார்சிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. இந்தப் பத்தி முழுவதையும் முற்றாக நீக்கி பழங்குடி இனத்தவருக்கு (கு.கூ.) உள்ளது போல பட்டியல் சாதி வரையறையும் எல்லா மதத்தினரையும் உள்ளடக்கியதாக ஆக்கப்பட வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.3.5: முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களிலுள்ள எல்லா உட்பிரிவினரும் அவர்களுக்கு இணையான இந்து, சீக்கிய, பவுத்தப் பிரிவினர் குஇ/குகூ பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இப்பிரிவினரும் குஇ/குகூ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இப்பிரிவுகள் தற்போது பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தால் அதிலிருந்து நீக்கி குஇ/குகூ பட்டியலில் சேர்க்க வேண்டும் (எடுத்துக்காட்டு: முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ தலித் ஒருவர் தற்போது Oஆஇ பட்டியலில் இருந்தால் அவர் குஇ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.  அ.மா.).

16.3.6: மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் முதலானவற்றை நமது அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகளாக ஏற்றிருப்பதால் ஒருவர் குஇ பட்டியலில் ஒருமுறை சேர்க்கப்பட்டால் பின்பு அவர் விருப்பப் பூர்வமாக இன்னொரு மதத்தைத் தேர்வு செய்தால் அது அவரது பட்டியல் சாதிநிலையை மாற்றாது. (எடுத்துக்காட்டு: தலித் ஒருவர் முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் அவர் தொடர்ந்து குஇ பட்டியலிலேயே இருந்து பயன்பெறலாம்.  அ.மா.)

16.4.2: இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு இருக்கிற மத்திய, மாநிலச் சட்டங்கள், விதிமுறைகள், நெறிமுறைகள் எதையேனும் திருத்தியமைக்க வேண்டும் என சட்ட அமைச்சகமோ, அல்லது தொடர்புடைய எந்தத் துறையோ கருத்து தெரிவித்தால் தகுந்த வடிவில் அத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம்.

16.4.3: எங்கள் பரிந்துரைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்குக் கீழ்கண்ட சட்ட நடவடிக்கைகள் தேவைப்படும் என நாங்கள் கருதுவதால் அவற்றைச் செய்ய வேண்டுமெனப் பரிந்துரைக்கிறோம்.

(அ) அரசியல் சட்டத்தின் 30ம் பிரிவை நடைமுறைப்படுத்துவதற்குரிய விரிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

(ஆ) 1993ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.

(இ) 1950ம் ஆண்டு பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ஆணையில் திருத்தம்; 1951ம் ஆண்டு பட்டியல் பழங்குடியினருக்கான அரசியல் சட்ட ஆணையில் திருத்தம்; மற்றும் மத்திய, மாநில குஇ/குகூ பட்டியல்களில் திருத்தம் முதலியன செய்யப்பட வேண்டும்.

(ஈ) மத்திய, மாநில அளவுகளில் Oஆஇ தேர்வு மற்றும் அறிவிப்பு குறித்த சட்டங்கள், விதிகள், நடைமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்குள்ளாக்க வேண்டும்.

(உ) 1983ல் உருவாக்கப்பட்டு 2006ல் திருத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டத்தை சட்டநிலைப்படுத்தி, நீதிமன்றங்களின் மூலம் பரிசீலிக்கப்படுவதற்குரிய வகையில் சட்டமாக்க வேண்டும்.

(ஊ) தேசிய மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுவதைப்போல, தேசியச் சிறுபான்மையோர் ஆணையத்திற்கும், கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்திற்கும் தலைவர்களை ஒரு தேடுதல் குழுவின் மூலம் தேர்வு செய்யும் வண்ணம் இந்த ஆணையங்களுக்கான சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும். அரசியல் சட்டம், கல்வி, பொருளாதாரம் முதலான துறைகளில் துறைபோன அறிஞர்கள் இடம் பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

(எ) 1993ம் ஆண்டு வக்ஃப் சட்டத்திலும் அதனடியாக நிறைவேற்றப்பட்ட விதிகளிலும் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்.

(ஐ) தேசிய சிறுபான்மையோர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனம் மற்றும் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு ஆகியவற்றின் விதிகள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்குள்ளாக்க உரிய திருத்தங்கள் செய்தல் வேண்டும்.

16.4.4: சிறுபான்மையோரின் நலன்களுக்காகச் செய்யப்பட்டுள்ள எமது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கீழ்க்கண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

(அ) சிறுபான்மையோர் தொடர்பான சட்டப் பிரச்சினைகளை அரசியல் சட்ட வெளிச்சத்தில் பரிசீலிக்க ஒரு பாராளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.

(ஆ) சிறுபான்மையோரின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கண்காணிக்க Nஏகீஇ, Nஇஙி, Nஇஆஇ, NஇM, Nஇகுஇ, NஇMஉஐ, NMஊஈஇ, இஃM, மத்திய வக்ஃப் கவுன்சில், மவுலானா ஆசாத் நிறுவனம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

(இ) மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவிலும் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதில் சிறுபான்மையோர் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் மாநில அதிகாரிகள், வல்லுனர்களையும் உள்ளடக்க வேண்டும்.

(ஈ) சிறுபான்மையினருக்கான கடன் வசதிகள் செயல்படுவது குறித்துக் கண்காணிக்க எல்லா தேசிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி அதை ரிசர்வ் வங்கியின் கீழிருந்து செயல்படச் செய்ய வேண்டும்.

(உ) எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அவற்றில் மாநில சிறுபான்மையோர் ஆணையம் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறைகள் இல்லாத பட்சத்தில் அவற்றைப் புதிதாக உருவாக்க வேண்டும்.

(ஊ) சிறுபான்மையோர் தொடர்பான நலத்திட்டங்கள் மாவட்ட அளவில் அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படுவதற்கேற்ப இவை தொடர்பான அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் (ஈஞுஞிஞுணtணூச்டூடிண்ச்tடிணிண).

(எ) 1990ல் தேசிய சிறுபான்மையோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி சிறுபான்மையோர் அதிகமாகச் செறிந்துள்ள மாவட்டங்கள் குறித்த பட்டியலை மறுபரிசீலனை செய்து இங்கெல்லாம் உள்ளூர் நிர்வாகங்களைக் கொண்டு கல்வி, பொருளாதாரம் மற்றும் பொதுநலம் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(ஏ) சிறுபான்மையோர் நலனுக்காகச் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், மத்திய  மாநில சிறுபான்மையோர் ஆணையங்கள் எல்லாம் சந்திக்கும் குவி மையங்களாக எல்லா மாவட்டங்களிலும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வல்லுனர்கள் அடங்கிய சிறுபான்மையோர் நலக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

சச்சார் குழு அறிக்கை மிக விரிந்த தளத்தில் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குகிறது என்றால் ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் உடனடியாகச் செய்ய வேண்டியவற்றையும் தடையாக உள்ள சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களையும் நிர்வாக நடவடிக்கைகளையும் தொகுப்பாகவும், சுருக்கமாகவும் (இணிட்ணீணூஞுடஞுணண்டிதிஞு) சொல்லிவிடுகிறது.

எனினும் இந்த அறிக்கையை முறையாக விவாதித்து நடவடிக்கை எடுக்கும் முயற்சி எதையும் அரசு செய்யவில்லை. “மதக்கலவரத் தடுப்பு மசோதா’வையும்கூட அறிமுகப்படுத்தியதோடு சரி. சிறுபான்மையினருக்கு இப்படியான ஆணைய நியமனங்களும், அறிக்கை வெளியீடுகளும், மசோதாக்கள் தாக்கல் செய்வதும் மட்டும்போதும் என அரசு நினைக்கிறது. நடைமுறைப்படுத்த முயற்சிப்பதில்லை. யாரேனும் முயற்சித்தாலும் அதற்குத் தடை போடப்படுவது வாடிக்கை யாகி விடுகிறது.

பிரதமரின் 15 அம்சத் திட்டப்படி மொத்த வங்கிக் கடன்களில் 15 சதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்குவது தொடர்பாக பலமுறை பிரதமர் அலுவலகத்திலிருந்து நிதியமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பியும் ப. சிதம்பரத்தின் அமைச்சகம் அதைக்கண்டு கொள்ளாததை பாராளுமன்றத்தில் பிருந்தா காரத் அம்பலப்படுத்தியது (2007, ஜனவரி 28 ஆங்கில இதழ்கள் அனைத்திலும் இச் செய்தி வந்துளளது) நினைவிருக்கலாம்.

நாம் விழிப்புடன் இருப்பதொன்றே நமது உரிமைகளைப் பெறுவதற்கான ஒரே வழி.

(பிப்ரவரி 2009ல் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி’ தொடக்க விழாக் கருத்தரங்கில் பேசிய உரை. ‘சமநிலைச் சமுதாயம்’ 2009 ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்டு இதழ்களில் வெளிவந்தது.)