9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா?

               அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை

                                                                                                                                                                  சென்னை,

26, மே, 2015.

இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதே போல 10ம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு வாங்கியோர் எண்ணிக்கை ஏராளம். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மாத்திரம் 773 பேர்கள். கணக்கில் 27,134 பேர்களும், அறிவியலில் 1,15,853 பேர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி எனவும் இப்படி ‘ரேங்க்’ வாங்கியவர்கள் இவ்வளவு பேர்கள் எனவும் தனியார் பள்ளி விளம்பரங்கள் நாளிதழ்களை நிரப்புகின்றன.

கடினமாக உழைத்து இப்படிச் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் கல்வியில் அக்கறையுள்ள அனைவர் முன்னும் சில கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது.

இப்படிக் கடினமாக உழைத்து ஏராளமான மதிப்பெண்களை அள்ளிச் செல்லும் மாணவர்களில் பலர் மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டில் தோல்வியுறுவது ஏன்?

IIT படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்கள் பின் தங்குவதேன்? 2014ம் ஆண்டு JEE தேர்வில் தமிழ்நாடு 14 வது இடத்தைத்தான் பெற முடிந்தது. முதல் 10 இடங்களை ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உ.பி, மஹாராஷ்டிரா, டெல்லி, ம.பி, பிஹார், ஹரியானா, ஜார்கன்ட், மே.வங்கம் ஆகிய மாநிலங்கள் தட்டிச் சென்றன. சென்ற ஆண்டு JEE தேர்வு  எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,58, 981. இதில் 21,818 (14.7%) இடங்களை ஒன்றாக இருந்த ஆந்திரப் பிரதேச மாணவர்கள்  வென்றெடுத்தனர். தமிழக மாணவர்களால் பெற முடிந்ததோ வெறும் 3974 (2.5%) இடங்களைத்தான்.

இதற்கான காரணங்களில் ஒன்றாக நாங்கள் கருதுவது நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அறிதல் சார்ந்த (Knowledge Based / Objective Type) கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் போதிய திறன் பெற்றிருக்கவில்லை என்பதுதான். அதற்குக் காரணம் நம் மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக உள்ளனர் என்பதுதான்.

90 சதத்திற்கும் மேல் மதிப்பெண்களை எளிதாகப் பெறும் நம் மாணவர்கள் எவ்வாறு அடிப்படைகளில் பலவீனமாக நேர்ந்தது?

நமது பள்ளிகளில், குறிப்பாக ஏராளமாக ‘ரிசல்ட்’ காட்டுகிற தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைக் கற்றுத் தருவதில்லை என்பது நமது மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. எட்டாம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பிற்குச் சென்ற உடன், அவர்களுக்கு 9ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித்தராமல் 10ம் வகுப்புப் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அதே போல 11ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 11ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித் தராமல்  இரண்டாண்டுகளும் 12ம் வகுப்புப் பாடங்களே சொல்லித் தரப்படுகின்றன. இரண்டாண்டுகளும் ஒரே பாடங்களைப் படித்து, மனப்பாடம் செய்து, பல முறை மாதிரித் தேர்வுகளை எழுதி, நமது மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவிக்கும் எந்திரங்களாக மாற்றப்படுகின்றனர்.

நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வெண்டும். Higher Secondary என்பது +1 மற்றும் +2 ஆகிய இரு வகுப்புகளும் சேர்ந்த ஒரு ஒருங்கிணைந்த படிப்பு (Integrated Course). +1, +2  என்பன தனித்தனி வகுப்புகள் அல்ல. இயற்பியல் (Physics) என்றொரு பாடத்தை எடுத்துக் கொண்டால் அதில் Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics, Electricity and Magnetism, Atomic Physics, Electronics எனப் பல உட்பிரிவுகளும் இணைந்ததுதான் இயற்பியல். இவற்றில்  Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics ஆகிய பாடங்கள் 11ம் வகுப்பிலும் Electricity and Magnetism, Atomic Physics, Nuclear Physics, Electronics முதலானவை 12ம் வகுப்பிலும் பிரிந்துள்ளன. 11ம் வகுப்புப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படாதபோது Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics முதலானவற்றில் அம்மாணவர் அடிப்படைகளை அறியாதவராகி விடுகிறார். இந்த அடிப்படைகள் இல்லாமல் ஒருவர் இயற்பியலின் மற்ற இயல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக 9ம் வகுப்புப் புவீயலில் தமிழகப் புவியியல் குறித்த பாடம் உள்ளது. 10ம் வகுப்பில் இந்தியப் புவி இயல் பாடம் உள்ளது. 10வது பாடங்களை மட்டும் படித்து, 9வது பாடங்களைப் படிக்காத ஒரு மாணவர் தமிழகப் புவி இயல் குறித்த அடிப்படைகளை அறியாதவராக ஆகிவிடுகிறார். இப்படி ஒவ்வொரு பாடம் குறித்தும் எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும்.

இவ்வாறு அடிப்படைகளில் வலுவில்லாமல் வெறும் மதிப்பெண்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும் மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற இயலாதது கூடப் பெரிதில்லை. அவர்கள் அந்தந்தத் துறைகளில் சாதனை படைக்கும் அறிவியலாளர்களாகவும் உருப்பெற இயலாது என்பதுதான் வேதனை. Classical Mechanics ல் வலுவில்லாமல் ஒருவர் எப்படி Quantum Mechanics ஐப் புரிந்து கொள்ள இயலும்? Thermodynamics ன் அடிப்படைகளை அறியாத ஒருவர் எப்படி ஒரு இயற்பியலாளராக இயலும்?

இந்த ஆண்டு +2 தேர்வில் இயற்பியலில் வெறும் 124 பேர்கள்தான் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 198 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தும் அவர்கள் இந்த இரண்டு மதிப்பெண்களைக் கோட்டை விட்டதற்குக் காரணம் இரண்டு objective type கேள்விகள் 11 ம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் அடிப்படைகளைப் புரிந்து கொள்பவர்களால் மட்டுமே பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததுதான்.

 

தனியார் பள்ளிகளின் வணிக நோக்கமே இதன் பின்னணி

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைக்கிறோம் என விளம்பரப் படுத்திக் கல்வி வணிகம் நடத்திக் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி ‘லாபி’ யே இதற்குக் காரணமாக உள்ளது.

இரண்டு வகைகளில் அவர்கள் இதைச் செய்தனர்.

  1. உலகெங்கிலும் இருப்பது போல தமிழகத்திலும் ‘ட்ரைமெஸ்டர்’ முறை கொண்டு வந்தபோது அதை 9ம் வகுப்புக்கு மேல் கொண்டு வரக் கூடாது என அவர்கள் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு உள்ளது என்பதுதான். கல்லூரிகளில் பொதுத் தேர்வுகளிலும் செமஸ்டர் முறை கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பள்ளிக் கல்வியிலும் 10,11,12 வகுப்புகளில் ட்ரைமெஸ்டர் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் செமஸ்டர் முறையாவது தொடர்ந்திருக்க வேண்டும். Higher Secondary படிப்பை +1, +2 இரண்டாண்டுகளையும் 4 செமெஸ்டர்களாக்கிப் பொதுத் தேர்வுகளை நடத்தி அந்த அடிப்படையில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிலை இருந்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. 11 ம் வகுப்புப் பாடங்களை ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பது தவிர்க்க இயலாததாக ஆகி இருக்கும்.
  2. +2 கேள்வித்தாள்கள் உருவாக்கம் பற்றிய வல்லுனர் குழு 20 சத மதிப்பெண்கள் Knowledge Based கேள்விகளுக்கு இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தும் அப்படிக் கேள்விகள் அமைந்தால் அது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும் எனச் சொல்லித் தடுத்ததும் இந்தத் தனியார் பள்ளி ‘லாபி’ தான். உண்மையில் அது மாணவர்களுக்குக் கடினம் என்பதல்ல. “100 மார்க்” ஆசையை ஊட்டி வணிகம் செய்பவர்களுக்குத்தான் அது கடினம். கேள்வித் தாள்கள் என்பன ஒரு சராசரி மாணவர் எளிதில் வெற்றி பெறக் கூடியதாகவும், அதே நேரத்தில் ஒரு திறமையான மாணவரை அடையாளம் காட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளையும் தொற்றும் இந்த ஆபத்து

ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளிகளில் ‘ரிசல்ட்’ குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அடித்தள மற்றும் கிராமப் புற மாணவர்கள் அதிகம் படிப்பவையாக அரசுப் பள்ளிகளே உள்ளன. தவிரவும் தனியார் பள்ளிகள் தம் ‘வெற்றி வீதத்தை உயர்த்திக் காட்டுவதற்காகப் பல தில்லு முல்லுகளைச் செய்கின்றன. தோல்வியடையக் கூடிய, அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றுவது, தனிப் பயிற்சி மூலம் படித்தவர்கள் என்பதாக அவர்களைத் தேர்வு எழுத வைப்பது, முறையான ஊதியம் அளிக்காமல் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவது எனப் பல மோசடிகளைச் செய்துதான் அவை நூறு  சத வெற்றியை எட்டுகின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வெற்றி வீதம் குறைவாக உள்ளது புரிந்து கொள்ளக் கூடியதே. அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது என்கிற நிலையை எடுக்காமல் அரசும் கல்வித்துறையும் இன்று “தனியார் பள்ளிகளைப் போலச் செய்து” அதிக வெற்றி வீதத்தைக் காட்ட வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் இன்று அரசுப் பள்ளிகளிலும் 9. 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

என்ன செய்ய வேண்டும்?

நமது பள்ளிக் கல்வியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தமிழ்வழிக் கல்விக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இப்போது ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படுகிறது, சமச்சீர்க் கல்வியில் உள்ள குறைபாடுகளைக் களைந்து அதை மேம்படுத்தவில்லை. Higher Secondary சேர்க்கையில் இட ஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் அகக்கட்டுமானங்கள் போதுமானதாக இல்லை. காலியான ஆசிரியப் பணி இடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை. ஆசிரியர் அமைப்புகள் அதை வற்புறுத்துவதுமில்லை. +1. +2 பாடத் திட்டம் சமச்சீர்க் கல்விக்குத் தக சீரமைக்கப்படவில்லை. கிராமப் புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகள் இன்னும் கிராமப் புற அடித்தள மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பது….

இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் முக்கியமானவை என்ற போதும் தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறையுள்ள நாங்கள் உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் கோருகிறோம்.

  1. 11ம் வகுப்பிலும் அரசுத் தேர்வை நடத்தி இரண்டு வகுப்புகளிலும் பெற்ற மதிப்பெண்களை வைத்தே Higher Secondary படிப்பிற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.
  2. 10, 11, 12 வகுப்புகளில் டிரைமெஸ்டர் அல்லது செமெஸ்டர் முறை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
  3. ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்புகளுக்குரிய பாடங்கள் சொல்லித் தரப்படுகிறதா என்பதைக் கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். மீறுகிற பள்ளிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
  4. அரசுத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் 20 சத மதிப்பெண்கள் அறிதல் சார்ந்ததாகவும் (knowledge based), மீதி 80 சத மதிப்பெண்கள் பாடம் சார்ந்ததாகவும் (Text based) கேள்விகள் குறிக்கப்பட வேண்டும்.

இவற்றோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இதர உடனடி நடவடிக்கைகள்:

  1. மாநில அளவில் மருத்துவ, பொறியியல் படிப்புகளிலும், இந்திய அளவில் IIT, NIT முதலான படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
  2. JEE தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

6.அரசுப் பள்ளிகளில் கட்டாய ஆங்கில வழிப் பாடம் கொண்டு வரும் நடவடிக்கை கைவிடப்படல் வேண்டும்.

7.தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்ற ஆசிரியரே சொலித் தருவது என்பதற்குப் பதிலாக அந்தந்தத் துறைகளில் பட்டம் பெற்றவர்களை அந்தந்தப் பாடங்களைச் சொல்லிதர நியமிக்க வேண்டும்

பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் அடிப்படைகளில் வலுவுடன் முழுமையாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை உணர்ந்து இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இங்ஙனம்,

அக்கறையுள்ள கவியாளர்கள் குழு,

பேரா. பிரபா. கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்), முனைவர் ப. சிவகுமார் (முன்னாள் கல்லூரி முதல்வர்), முனைவர் சற்குணம் ஸ்டீபன் (முன்னாள் கேள்வித்தாள் உருவாக்கக் குழு உறுப்பினர்), கோ. சுகுமாரன், பேரா. அ.மார்க்ஸ், பேரா. மு..திருமாவளவன் (முன்னாள் கல்லூரி முதல்வர்), வீ.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்), ஆசிரியர் மு.சிவகுருநாதன், ஆசிரியர் முனைவர் ஜெ. கங்காதரன், ஆசிரியர் த. மகேந்திரன், ஆசிரியர் அ.செந்தில்வேலன்.

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை

உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,

ஏப்ரல் 22, 2017

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் கடந்த பத்து நாட்களாகப் பரபரப்பான செய்தியாக உள்ளது. கோவிந்தனின் குடும்பத்தார் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில் அவரது உடல் தற்போது இராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பான பிரச்சினையாக உள்ளதோடு இது ஒரு சாதிப் பிரச்சினையாகவும் உருப்பெறக்கூடிய நிலை உள்ளதை ஊடகங்களின் மூலம் அறிந்த நாங்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து நேற்று முழுவதும் இப்பகுதியில் பலரையும் சந்தித்தோம்.

எம் குழு உறுப்பினர்கள்:

1.பேரா.அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

  1. வழக்குரைஞர் ரஜினி, மதுரை,
  2. வழக்குரைஞர் ஏ.செய்யது அப்துல் காதர் (NCHRO), மதுரை,
  3. வழக்குரைஞர் எம். காஜா நஜ்முதீன் (NCHRO) , மதுரை,

5, வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், (NCHRO), மதுரை,

  1. மு.சிவகுருநாதன், சமூக ஆர்வலர், திருவாரூர்,
  2. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை.

இக்குழுவினர் நேற்று முழுவதும் உசிலன்கோட்டை, தொண்டி, இராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இது தொடர்பாகப் பலரையும் சந்தித்துப் பேசியது. நாங்கள் சந்தித்தவர்கள்: கோவிந்தனின் மனைவி பவானி (34), அவரது மகள்கள் பாண்டியம்மாள் (19), மோனிஷா (17), தனலட்சுமி (14), சகோதரர்கள் குமார் மற்றும் கண்ணன், தந்தை பாலு, தாய் காளியம்மாள், சகோதரி ஜெயந்தி, என்கவுன்டரில் கொலை செய்தவர்களும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுமான எஸ்.ஐ .தங்கமுனியசாமி குழுவினர், இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிகண்டன். பரமக்குடி வழக்குரைஞர் சி.பசுமலை ஆகியோர் உட்படப் பலரையும் சந்தித்தனர். எமது வழக்குரைஞர்கள் அப்துல் காதர், காஜா நிஜாமுதீன் இருவரும் இராமநாதபுரம் சிறைக்குச் சென்று அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள துல்கருனை, சின்ராஜ் ஆகியோரை மனு போட்டு சந்தித்துப் பேசியபோது தங்களுக்குக் காவல்துறையினரே வக்கீலுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தாங்கள் அவர்களுடன் பேச முடியாது எனவும் கூறினர். கேணிக்கரைக் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது இப்போது பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரே அதற்கும் பொறுப்பாக உள்ளார் என்றனர். அங்கு சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இன்று காலை தொலைபேசியில் அவரிடம் பேசினோம்.

சம்பவம்:

கோவிந்தன் தேவேந்திரகுல வேளாளர் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் பாண்டித்துரை என்பவர் 1997 ல் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுகிறார். இப்பகுதியில் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் சாதிப் பகை இருப்பது அனைவரும் அறிந்ததே. கோவிந்தன் சாதிப் பிரச்சினையில் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவரும் கூட. பாண்டித்துரையின் கொலைக்குக் காரணமானவர் எனக் கருதப்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 1998ல் கொல்லப்பட்டதை ஒட்டி கோவிந்தன் உட்பட 56 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இறுதியில் கோவிந்தன் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கோவிந்தன் அப்பகுதியில் சாதி மோதல்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்பவரானார், இதை ஒட்டி அவர் மீது சில வழக்குகளும் உண்டு. சென்ர ஆண்டில் பழையனக்கோட்டையைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் சிலர் சென்ற ஆண்டு கோவிந்தன் வீட்டில் இருந்தபோது அவரைத் தாக்க வந்ததாகவும் கோவிந்தன் அவர்களை அடித்து விரட்டி இருவரைப் பிடித்து வைத்ததாகவும் இதை ஒட்டி அவர் மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவரது வீட்டார் கூறினர். காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தபோது கோவிந்தன் மீது இப்படி மூன்று வழக்குகள் உள்ளன என்றார். எனினும் அவர் மீது கொள்ளை மற்ரும் வழிப்பறி தொடர்பான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதை அவரது வீட்டாரும் பிறரும் உறுதிபடக் கூறினர்.

சென்ற 13 ம் தேதி மாலை 6.30 மணி அளவில் சாதாரண உடையில் வந்த சிலர் கோவிந்தனை ஏதோ விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும் நாண்ட நேரம் அவர் வராததை ஒட்டி சில மணி நேரம் கழித்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது அடுத்த நாள் வருடப் பிறப்பிற்கு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இரவு பத்தரை மணிக்குப் பின் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. செல்போனை யாரும் எடுக்கவில்லை என அவரது மனைவி கூறினார். காலை 5 மணி அளவில்தான் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.

இது ஒரு பச்சைப் படுகொலை எனக் கூறி அவரது உடலை வீட்டார்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமல் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் முன்னர் கோவிந்தனின் வீட்டுக்கு வந்த போலீசார் கோவிந்தனின் உடல் மார்ச்சுவரியில் அழுகிக் கிடப்பது சுகாதாரக் கேடு உட்படப் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது எனவும் உடனடியாக உடலை எடுத்துச் செல்லாவிடால் தாங்களே எரியூட்டி விடுவதாகவும் எச்சரித்து ஒரு அறிக்கையை ஏப்ரல் 19 அன்று வீட்டுச் சுவர்களில் ஒட்டிச் சென்றுள்ளனர். குடும்பத்தார் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவதும், அடிக்கடி போலீஸ் வாகனம் வந்து செல்வதாகவும், தாங்கள் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்படுவதாகவும் இது தங்களுக்கு அச்சத்தை ஊட்டி நிம்மதியைக் குலைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

சி.பி.ஐ விசாரணை, மறு பிரேத பரிசோதனை ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தை அணுகியபோது அவற்றை நீதிமன்றம் மறுத்துள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதையும், வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் காரணமாகச் சொல்லியுள்ளது.

தாங்களே கோவிந்தனின் உடலை எரித்துவிடுவதாகக் காவல்துறை அவரது வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது குறித்து கோவிந்தனின் மனைவி அடுத்த நாள் (ஏப்ரல் 21) உயர்நீதி மன்றத்தை அணுகினார். தற்போது அதற்குத் திங்கட்கிழமை வரை (ஏப் 24) தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகளிடம் அது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காவல்துறை சொல்வது:

தொண்டி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (எண் 111/17, தேதி ஏப்ரல் 14, 2017) இ.த.ச 279, 294(b), 332, 307, குற்ற நடவடிக்கைச் சட்டம் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சங்கு வகைகள், கடல் ஆமை  முதலான தடை செய்யப்பட்ட பொருள்களை விற்கும் ஒரு வணிகர் எனக் கூறப்படுகிரது. இவர் சென்ற 11ம் தேதி தனது காரில் 9 இலட்ச ரூபாய்  பணத்துடன் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கோவிந்தன் அவரைத் தாக்கி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார், இது குறித்து காசிநாதன் இரண்டு நாள் கழித்து 13-ம் தேதி இராமநாதபுரம் கேணிக்கரைக் காவல் நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார் (குற்ற எண் 291/17, பிரிவுகள் இ.த.ச 341, 395, 397,365). தனது ஓட்டுனர் தொண்டியைச் சேர்ந்த துல்கருணை என்பவர் மூலம் தான் பணம் கொண்டுவருவதை அறிந்து கோவிந்தன் இந்த வழிப்பறியைச் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உடனடியாக இராமநாதபுரம் உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவின்படி இராமநாதபுரம் B2 நகரக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி  கேணிக்கரை பொறுப்பு காவல் ஆய்வாளர் கணேசனுக்கு உதவியாக சௌந்தரபாண்டியன், மோகன், மாரிமுத்து மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் சுரேஷ்  பண்டியன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் ஆஜராகியதாக தங்க முனியசாமி மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் (தொண்டி 111/17) கூறுகிறார். துல்கர்னையை விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன்பங்காக கோவிந்தனால் கொடுக்கப்பட்ட ரூ 80,000 த்தை ஒப்படைத்ததாகவும். பின் ஒரு இன்டிகா காரை (TN 65 6361) வாடகைக்கு எடுத்துக் கொண்டு துல்கருனையை அழைத்துக் கொண்டு சென்றபோது கோவிந்தன் துல்கருனைக்குப் போன் செய்து சின்ராஜிடம் மேலும் 60,000 ரூ கொடுத்து அனுப்புவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு போய்விடு எனச் சொன்னாராம். சற்று நேரத்தில் சின்ராஜ் அந்தப் பணத்தைக் கொண்டு வந்தாராம். தங்கமுனியசாமி குழுவினர் சின்ராஜையும் பிடித்து அழைத்துக் கொண்டு கோவிந்தனைத் தேடிச் சென்றார்களாம்.

தொண்டியிலிருந்து திருவாடனை நோக்கி அம்பாசடர் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த கோவிந்தனை மடக்கியபோது அவர் தன் காரால் இவர்கள் காரை மோதிவிட்டுத் தப்பி ஓடியதாகவும்,  திருவெற்றியூர் சவேரியார் நகரில் காரை நிறுத்திவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த கோவிந்தன்  முதல்நிலைக் காவலர் சவுந்தரபாண்டியனையும் தன்னையும் அரிவாளால் வெட்டியதாகவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிந்தனைத் தான் காலில் சுட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டுத் தானும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தன் இறந்ததைத் தான் பின்னரே அறிந்ததாகவும்  தங்கமுனியசாமி கூறுகிறார். ஊடகங்களில் இதுவே செய்தியாகவும் வெளி வந்துள்ளது.

கேணிக்கரைக் காவல்நிலையத்திற்குத் தற்போது பொறுப்பில் உள்ள ஆய்வாளர் டி.ஏ.வெங்கடேசனைத் தொடர்பு கொண்டபோது, அவர் தான் இந்தப் பகுதிக்குப் புதியவர் எனவும் இங்குள்ள காவலர்களின் பின்னணி தனக்குத் தெரியாது எனவும் காசிநாதன் வழிப்பறி குறித்துப் புகார் அளித்தபோது தான் அந்தக் காவல் நிலையத்திற்குப் பொறுபாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் எங்களிடம் கூறியவை:

காவல்துறைக் கண்காணிப்பாளர் என். மணிகண்டன் அவர்கள் எம் குழுவிடம் விரிவாகப் பேசினார். எங்கள் ஐயங்களை முன்வைத்தபோது தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளதால் இப்போது தான் இந்த வழக்கைப் பொருத்த மட்டில் ஒரு “மூன்றாம் நபர்” (third party) எனவும், தான் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறினார். இப்படியான ‘மோதல்’ கொலைகளில் சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் தான் உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி தற்காப்பிற்காகவே சுட்டுக் கொன்றதாகவும் நிறுவும் வரை என்கவுன்டர் செய்த காவலர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம், உச்சநீதி மன்றம் முதலியன கூறியுள்ளதையும் அவருக்குக் கவனப்படுத்திய போது அப்படி இருந்தால் அதை இப்போது பொறுப்பேற்றுள்ள சி.பி.சி.ஐ.டி தான் செய்ய வேண்டும் என்றார்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடனேயே இதைச் செய்திருக்க வேண்டாமா எனக் கேட்டபோது தான் இது தொடர்பான விதிகளைப் பரிசீலிப்பதாகச் சொன்னார். சட்டவிரோதக் கடத்தல் தொழில் செய்யப்படுவதாகச் கூறப்படும் ஒரு நபர் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு புகாரைச் செய்துள்ள நிலையில் உடனடியாக மற்ற காவல் நிலையம் ஒன்றிலிருந்து காவல்துறையினரை வைத்து ஒரு சிறப்புப்படை அமைக்க வேண்டிய அவசரம் ஏன் எனக் கேட்டபோது, கடத்தல்காரர் என்பதற்காகவே அவர் கொடுத்த புகாரை விசாரிக்காமல் இருக்க முடியாது எனவும், இப்படியான சிறப்புப் படை அமைப்பது வழக்கம்தான் எனவும் அவர் கூறினார். இது ஒரு சாதி வெறுப்புகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு பகுதி என்கிறபோது இப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உளவுத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பலர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு பற்ரிக் கேட்டபோது இதில் எல்லாம் சாதியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே எற்றுக் கொண்டுள்ளபோது இப்படி நீங்கள் சொல்வது சரிதானா எனக் கேட்டபோது இது தொடர்பாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி எல்லாப் பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.

இராமநாதபுரம் மருத்துவமனையில் ‘சி’ வார்டில் ‘சிகிச்சை’ பெற்றுவரும் தங்கமுனியசாமியையும் சௌந்தரபாண்டியனையும் பார்த்தோம். தங்கமுனியசாமி எதையும் சொல்லமுடியாது என மறுத்துவிட்டார். நீங்கள் காலில்தான் சுன்டீர்கள், பின் எப்படி அவர் இறந்தார் என்பதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில் அங்கு பொறுப்பில் இருந்த செவிலியர் ஒருவரை விசாரித்தபோது அவர் சிரித்துக் கொண்டே தற்போது  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என ஒத்துக்கொண்டார்.

எமது பார்வைகள்:

  1. சாதிமுரண்கள் மிகவும் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் இது குறித்த சிந்தனை சற்றும் இன்றிக் காவல்துறை செயல்பட்டுள்ளது. அதன் செய்ல்பாடுகள் இப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக உள்ளன. திருவாடனைச் சரகத்தில் உள்ள ஐந்து காவல்நிலையங்களிலும் உளவுத்துறையினராக (SBCID) ஆதிக்க சாதியினரே இருப்பதாகவும் குறிப்பாக திருவாடனையில் உள்ள ராஜா என்பவர் மிகவும் சாதி உணர்வுடன் செயல்படுவதாகவும் நாங்கள் சந்தித்த பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டினர். அதுவும் இதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினராக உள்ளதால் சாதி வெறுப்பு காவல் நிலையங்களில்கூடுதலாக உள்ளது என்பதையும் அவர்கள் கூறினர். என்கவுன்டர் செய்வதற்கு அனுப்பப்பட்டவர்களில் தங்கமுனியசாமியும் கமுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினரே. அவர்தான் என்கவுன்டர் செய்தவரும் கூட. அந்த டீமில் இருந்த சௌந்தரபாண்டியன் என்பவர் பட்டியல் இனத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இது வழக்கமாகக் காவல்துறை செய்வதுதான். அப்படியான ஒருவரையும் அவர்கள் டீமில் இணைப்பது இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகத்தான்.
  2. பரமக்குடி வழக்குரைஞர் பசுமலை அவர்களைச் சந்தித்தபோது அவர் உரிய ஆதாரங்களுடன் ஒரு முக்கிய தவலைக் கூறினார். சில ஆண்டுகள் முன் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளில் (2011) ஆறு பட்டியல்சாதியினரைச் சுட்டுக் கொன்றதை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் கமிஷன் முன் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான முத்துக்குமார் என்பவரின் மனைவி பான்டீஸ்வரி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தன் கணவரைச் சுட்டுக் கொன்றது இந்த தங்கமுனியசாமி எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஒருவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைப்பொன்றில் இருந்து செயல்படுபவரும், பஞ்சாயத்துக்கள் செய்பவருமான கோவிந்தனைப் பிடிக்க அனுப்பியது என்பதைக் காவல்துறை எப்படி விளக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
  3. 2011 பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தற்போது நடந்துள்ல இந்த என்கவுன்டர் எல்லாவற்ரையும் பார்க்கும்போது காவல்துறை பட்டியல்சாதியினரைத் தொடர்ந்து காழ்ப்புடன் அணுகிவருவது உறுதியாகிறது.
  4. கோவிந்தன் மீது சாதிப் பஞ்சாயத்துகள் செய்பவர், சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற புகார்கள் இருந்தபோதும் அவர் மீது வழிப்பறி செய்ததாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
  5. இந்த என்கவுன்டருக்குத் துணை செய்த துல்கர்னை, சின்ராஜ் முதலானோருக்கு வழக்குரைஞர் முதலானோரை வைத்து எல்லா உதவிகளையும் செய்து காவல்துறை அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல ஐயங்களுக்குக் காரணமாகிறது.
  6. பணம் பறிகொடுத்ததாகச் சொல்லப்படும் காசினாதன் என்பவர் ஒரு கடத்தல்காரர். 11ம் தேதி பணத்தைப் பரிகொடுத்ததாகச் சொல்லும் இவர் ஏன் 13ம் தேதிவரை புகார் கொடுக்காமல் இருந்தார் என்பதும், புகார் கொடுத்தவுடன் உடனடியாக ஒரு சிறப்புப்படையை நியமித்து அதில் இன்னொரு காவல்நிலையத்தைச் சேர்ந்த தங்க முனியசாமியைக் குறிப்பாகச் சேர்த்ததும் தற்செயலானவை அல்ல.
  7. எந்தப் பெரிய காயங்களும் இல்லாத தங்கமுனியசாமியை மருத்துவமனையில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. காவல்துறையின் பிடிவாதத்தாலேயே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள செவிலியரும் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்றனர். காவல்துறை இந்தப் போலி என்கவுன்டருக்கு ஒரு ‘அலிபி’யை உருவாக்குவதற்காகவே இதைச் செய்கிறது. இதற்கு எந்த அறமும் இன்றி மருத்துவ நிர்வாகம் ஒத்துழைப்பது இழிவானது.
  8. என்கவுன்டர் செய்து கொன்ற தங்கமுனியசாமி முதல் தகவல் அறிக்கையில் தான் கோவிந்தனைக் கால்களிலேயே சுட்டதாகக் கூறுகிறார். காலில் சுடப்பட்டு உயிருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 42 வயதுள்ள ஆரோக்கியமான யாரும் அடுத்த சிலமணி நேரங்களில் இறப்பது என்பது சாத்தியமே இல்லை. கொவிந்தனின் உடலின் வீடியோ ஒன்றை எங்கள் குழு பரிசீலித்தபோது அவருக்கு விலா மற்றும் உடலின் மேற்பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் உற்றார் உறவினர்கள் யாரும் இன்றி காவல்துறையினர் தன்னிச்சையாக பிரேத பரிசோதனை செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இதைக் காவல்துறையும் மருத்துவத் துறையும் விளக்க வேண்டும்.

 

கோரிக்கைகள்:

  1. இது ஒரு போலி என்கவுன்டர் என்று எம் குழு உறுதியாகக் கருதுகிறது. இதைக் கொலைக் குற்றமாகக் கருதி தங்கமுனியசாமி உள்ளிட்ட என்கவுன்டர் கொலைக்குக் காரணமானவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
  2. கோவிந்தனின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் முன்னிலையில் மீண்டும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  3. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனடியாக அதிகாரிகளை நியமிப்பதோடு விச்சாரனையை முடிக்க காலகெடுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
  4. சாதிபார்த்தெல்லாம் காவல்துறையினரை நியமிக்கக் முடியாது எனக் கண்காணிப்பளர் சொல்வதை ஏற்க முடியாது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே ஏற்றுக்கொண்டதன் விளைவாகத்தான் இங்கே வன்கொடுமத் தடுப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் இயற்ற்றப்பட்டுள்ளன. சமூகத்தின் பன்மைத் தனமை ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை சச்சார் கமிஷன் அறிக்கை உட்படப் பல ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. சாதி முரண் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் பதவியில் உள்ள காவல்துறையினர், உளவுத்துறையினர் முதலானோரின் சமூகப் பின்னணி குறித்துக் காவல்துறை உரிய முறையில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதேபோல கோவிந்தனைப் பிடிக்க தங்கமுனியசாமி முதலானோர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்படும் சாதி உணர்வுள்ள உளவுத்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
  5. இந்தப் போலி மோதலில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் குடும்பத்துக்கு உடனடியாகப் பத்து இலட்சரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மகள்களில் ஒருவருக்கு தகுதியுள்ள அரசு வேலை ஒன்று அளிக்கப்பட வேண்டும்.
  6. பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும், மிரட்டப்படுவதையும், அடிக்கடி காவல்துறை வாகனங்களை அனுப்பி அந்தக் குடும்பத்தின் மீதே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுமாறு செய்வதையும் இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றை உடனடியாகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  7. இதுபற்றியான செய்தி வெளியீட்டில் ஊடகங்கள் சில காவல்துறையின் பொய்களை எந்த ஆய்வுகளும் இன்றி அப்படியே வெளியிடுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்தைக் கேட்டே ஒருவர் பற்றிய குற்றச்சாட்டை வெளியிட வேண்டும் என்பதே ஊடக தர்மம். இந்தியாவில் நடைபெறும் என்கவுன்டர் கொலைகளில் 90 சதம் போலியானவை என்பது ஊடகத்தினர் அறியாத ஒன்றல்ல.

 

 

 

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை

               உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,

ஏப்ரல் 22, 2017

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் கடந்த பத்து நாட்களாகப் பரபரப்பான செய்தியாக உள்ளது. கோவிந்தனின் குடும்பத்தார் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில் அவரது உடல் தற்போது இராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பான பிரச்சினையாக உள்ளதோடு இது ஒரு சாதிப் பிரச்சினையாகவும் உருப்பெறக்கூடிய நிலை உள்ளதை ஊடகங்களின் மூலம் அறிந்த நாங்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து நேற்று முழுவதும் இப்பகுதியில் பலரையும் சந்தித்தோம்.

எம் குழு உறுப்பினர்கள்:

1.பேரா.அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

  1. வழக்குரைஞர் ரஜினி, மதுரை,
  2. வழக்குரைஞர் ஏ.செய்யது அப்துல் காதர் (NCHRO), மதுரை,
  3. வழக்குரைஞர் எம். காஜா நஜ்முதீன் (NCHRO) , மதுரை,

5, வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், (NCHRO), மதுரை,

  1. மு.சிவகுருநாதன், சமூக ஆர்வலர், திருவாரூர்,
  2. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை.

இக்குழுவினர் நேற்று முழுவதும் உசிலன்கோட்டை, தொண்டி, இராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இது தொடர்பாகப் பலரையும் சந்தித்துப் பேசியது. நாங்கள் சந்தித்தவர்கள்: கோவிந்தனின் மனைவி பவானி (34), அவரது மகள்கள் பாண்டியம்மாள் (19), மோனிஷா (17), தனலட்சுமி (14), சகோதரர்கள் குமார் மற்றும் கண்ணன், தந்தை பாலு, தாய் காளியம்மாள், சகோதரி ஜெயந்தி, என்கவுன்டரில் கொலை செய்தவர்களும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுமான எஸ்.ஐ .தங்கமுனியசாமி குழுவினர், இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிகண்டன். பரமக்குடி வழக்குரைஞர் சி.பசுமலை ஆகியோர் உட்படப் பலரையும் சந்தித்தனர். எமது வழக்குரைஞர்கள் அப்துல் காதர், காஜா நிஜாமுதீன் இருவரும் இராமநாதபுரம் சிறைக்குச் சென்று அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள துல்கருனை, சின்ராஜ் ஆகியோரை மனு போட்டு சந்தித்துப் பேசியபோது தங்களுக்குக் காவல்துறையினரே வக்கீலுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தாங்கள் அவர்களுடன் பேச முடியாது எனவும் கூறினர். கேணிக்கரைக் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது இப்போது பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரே அதற்கும் பொறுப்பாக உள்ளார் என்றனர். அங்கு சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இன்று காலை தொலைபேசியில் அவரிடம் பேசினோம்.

சம்பவம்:

கோவிந்தன் தேவேந்திரகுல வேளாளர் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் பாண்டித்துரை என்பவர் 1997 ல் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுகிறார். இப்பகுதியில் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் சாதிப் பகை இருப்பது அனைவரும் அறிந்ததே. கோவிந்தன் சாதிப் பிரச்சினையில் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவரும் கூட. பாண்டித்துரையின் கொலைக்குக் காரணமானவர் எனக் கருதப்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 1998ல் கொல்லப்பட்டதை ஒட்டி கோவிந்தன் உட்பட 56 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இறுதியில் கோவிந்தன் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கோவிந்தன் அப்பகுதியில் சாதி மோதல்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்பவரானார், இதை ஒட்டி அவர் மீது சில வழக்குகளும் உண்டு. சென்ர ஆண்டில் பழையனக்கோட்டையைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் சிலர் சென்ற ஆண்டு கோவிந்தன் வீட்டில் இருந்தபோது அவரைத் தாக்க வந்ததாகவும் கோவிந்தன் அவர்களை அடித்து விரட்டி இருவரைப் பிடித்து வைத்ததாகவும் இதை ஒட்டி அவர் மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவரது வீட்டார் கூறினர். காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தபோது கோவிந்தன் மீது இப்படி மூன்று வழக்குகள் உள்ளன என்றார். எனினும் அவர் மீது கொள்ளை மற்ரும் வழிப்பறி தொடர்பான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதை அவரது வீட்டாரும் பிறரும் உறுதிபடக் கூறினர்.

சென்ற 13 ம் தேதி மாலை 6.30 மணி அளவில் சாதாரண உடையில் வந்த சிலர் கோவிந்தனை ஏதோ விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும் நாண்ட நேரம் அவர் வராததை ஒட்டி சில மணி நேரம் கழித்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது அடுத்த நாள் வருடப் பிறப்பிற்கு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இரவு பத்தரை மணிக்குப் பின் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. செல்போனை யாரும் எடுக்கவில்லை என அவரது மனைவி கூறினார். காலை 5 மணி அளவில்தான் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.

இது ஒரு பச்சைப் படுகொலை எனக் கூறி அவரது உடலை வீட்டார்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமல் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் முன்னர் கோவிந்தனின் வீட்டுக்கு வந்த போலீசார் கோவிந்தனின் உடல் மார்ச்சுவரியில் அழுகிக் கிடப்பது சுகாதாரக் கேடு உட்படப் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது எனவும் உடனடியாக உடலை எடுத்துச் செல்லாவிடால் தாங்களே எரியூட்டி விடுவதாகவும் எச்சரித்து ஒரு அறிக்கையை ஏப்ரல் 19 அன்று வீட்டுச் சுவர்களில் ஒட்டிச் சென்றுள்ளனர். குடும்பத்தார் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவதும், அடிக்கடி போலீஸ் வாகனம் வந்து செல்வதாகவும், தாங்கள் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்படுவதாகவும் இது தங்களுக்கு அச்சத்தை ஊட்டி நிம்மதியைக் குலைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

சி.பி.ஐ விசாரணை, மறு பிரேத பரிசோதனை ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தை அணுகியபோது அவற்றை நீதிமன்றம் மறுத்துள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதையும், வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் காரணமாகச் சொல்லியுள்ளது.

தாங்களே கோவிந்தனின் உடலை எரித்துவிடுவதாகக் காவல்துறை அவரது வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது குறித்து கோவிந்தனின் மனைவி அடுத்த நாள் (ஏப்ரல் 21) உயர்நீதி மன்றத்தை அணுகினார். தற்போது அதற்குத் திங்கட்கிழமை வரை (ஏப் 24) தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகளிடம் அது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காவல்துறை சொல்வது:

தொண்டி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (எண் 111/17, தேதி ஏப்ரல் 14, 2017) இ.த.ச 279, 294(b), 332, 307, குற்ற நடவடிக்கைச் சட்டம் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சங்கு வகைகள், கடல் ஆமை  முதலான தடை செய்யப்பட்ட பொருள்களை விற்கும் ஒரு வணிகர் எனக் கூறப்படுகிரது. இவர் சென்ற 11ம் தேதி தனது காரில் 9 இலட்ச ரூபாய்  பணத்துடன் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கோவிந்தன் அவரைத் தாக்கி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார், இது குறித்து காசிநாதன் இரண்டு நாள் கழித்து 13-ம் தேதி இராமநாதபுரம் கேணிக்கரைக் காவல் நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார் (குற்ற எண் 291/17, பிரிவுகள் இ.த.ச 341, 395, 397,365). தனது ஓட்டுனர் தொண்டியைச் சேர்ந்த துல்கருணை என்பவர் மூலம் தான் பணம் கொண்டுவருவதை அறிந்து கோவிந்தன் இந்த வழிப்பறியைச் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடனடியாக இராமநாதபுரம் உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவின்படி இராமநாதபுரம் B2 நகரக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி  கேணிக்கரை பொறுப்பு காவல் ஆய்வாளர் கணேசனுக்கு உதவியாக சௌந்தரபாண்டியன், மோகன், மாரிமுத்து மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் சுரேஷ்  பண்டியன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் ஆஜராகியதாக தங்க முனியசாமி மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் (தொண்டி 111/17) கூறுகிறார். துல்கர்னையை விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன்பங்காக கோவிந்தனால் கொடுக்கப்பட்ட ரூ 80,000 த்தை ஒப்படைத்ததாகவும். பின் ஒரு இன்டிகா காரை (TN 65 6361) வாடகைக்கு எடுத்துக் கொண்டு துல்கருனையை அழைத்துக் கொண்டு சென்றபோது கோவிந்தன் துல்கருனைக்குப் போன் செய்து சின்ராஜிடம் மேலும் 60,000 ரூ கொடுத்து அனுப்புவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு போய்விடு எனச் சொன்னாராம். சற்று நேரத்தில் சின்ராஜ் அந்தப் பணத்தைக் கொண்டு வந்தாராம். தங்கமுனியசாமி குழுவினர் சின்ராஜையும் பிடித்து அழைத்துக் கொண்டு கோவிந்தனைத் தேடிச் சென்றார்களாம். தொண்டியிலிருந்து திருவாடனை நோக்கி அம்பாசடர் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த கோவிந்தனை மடக்கியபோது அவர் தன் காரால் இவர்கள் காரை மோதிவிட்டுத் தப்பி ஓடியதாகவும்,  திருவெற்றியூர் சவேரியார் நகரில் காரை நிறுத்திவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த கோவிந்தன்  முதல்நிலைக் காவலர் சவுந்தரபாண்டியனையும் தன்னையும் அரிவாளால் வெட்டியதாகவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிந்தனைத் தான் காலில் சுட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டுத் தானும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தன் இறந்ததைத் தான் பின்னரே அறிந்ததாகவும்  தங்கமுனியசாமி கூறுகிறார். ஊடகங்களில் இதுவே செய்தியாகவும் வெளி வந்துள்ளது.

கேணிக்கரைக் காவல்நிலையத்திற்குத் தற்போது பொறுப்பில் உள்ள ஆய்வாளர் டி.ஏ.வெங்கடேசனைத் தொடர்பு கொண்டபோது, அவர் தான் இந்தப் பகுதிக்குப் புதியவர் எனவும் இங்குள்ள காவலர்களின் பின்னணி தனக்குத் தெரியாது எனவும் காசிநாதன் வழிப்பறி குறித்துப் புகார் அளித்தபோது தான் அந்தக் காவல் நிலையத்திற்குப் பொறுபாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் எங்களிடம் கூறியவை:

காவல்துறைக் கண்காணிப்பாளர் என். மணிகண்டன் அவர்கள் எம் குழுவிடம் விரிவாகப் பேசினார். எங்கள் ஐயங்களை முன்வைத்தபோது தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளதால் இப்போது தான் இந்த வழக்கைப் பொருத்த மட்டில் ஒரு “மூன்றாம் நபர்” (third party) எனவும், தான் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறினார். இப்படியான ‘மோதல்’ கொலைகளில் சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் தான் உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி தற்காப்பிற்காகவே சுட்டுக் கொன்றதாகவும் நிறுவும் வரை என்கவுன்டர் செய்த காவலர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம், உச்சநீதி மன்றம் முதலியன கூறியுள்ளதையும் அவருக்குக் கவனப்படுத்திய போது அப்படி இருந்தால் அதை இப்போது பொறுப்பேற்றுள்ள சி.பி.சி.ஐ.டி தான் செய்ய வேண்டும் என்றார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடனேயே இதைச் செய்திருக்க வேண்டாமா எனக் கேட்டபோது தான் இது தொடர்பான விதிகளைப் பரிசீலிப்பதாகச் சொன்னார். சட்டவிரோதக் கடத்தல் தொழில் செய்யப்படுவதாகச் கூறப்படும் ஒரு நபர் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு புகாரைச் செய்துள்ள நிலையில் உடனடியாக மற்ற காவல் நிலையம் ஒன்றிலிருந்து காவல்துறையினரை வைத்து ஒரு சிறப்புப்படை அமைக்க வேண்டிய அவசரம் ஏன் எனக் கேட்டபோது, கடத்தல்காரர் என்பதற்காகவே அவர் கொடுத்த புகாரை விசாரிக்காமல் இருக்க முடியாது எனவும், இப்படியான சிறப்புப் படை அமைப்பது வழக்கம்தான் எனவும் அவர் கூறினார். இது ஒரு சாதி வெறுப்புகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு பகுதி என்கிறபோது இப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உளவுத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பலர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு பற்ரிக் கேட்டபோது இதில் எல்லாம் சாதியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே எற்றுக் கொண்டுள்ளபோது இப்படி நீங்கள் சொல்வது சரிதானா எனக் கேட்டபோது இது தொடர்பாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி எல்லாப் பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.

இராமநாதபுரம் மருத்துவமனையில் ‘சி’ வார்டில் ‘சிகிச்சை’ பெற்றுவரும் தங்கமுனியசாமியையும் சௌந்தரபாண்டியனையும் பார்த்தோம். தங்கமுனியசாமி எதையும் சொல்லமுடியாது என மறுத்துவிட்டார். நீங்கள் காலில்தான் சுன்டீர்கள், பின் எப்படி அவர் இறந்தார் என்பதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில் அங்கு பொறுப்பில் இருந்த செவிலியர் ஒருவரை விசாரித்தபோது அவர் சிரித்துக் கொண்டே தற்போது  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என ஒத்துக்கொண்டார்.

எமது பார்வைகள்:

  1. சாதிமுரண்கள் மிகவும் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் இது குறித்த சிந்தனை சற்றும் இன்றிக் காவல்துறை செயல்பட்டுள்ளது. அதன் செய்ல்பாடுகள் இப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக உள்ளன. திருவாடனைச் சரகத்தில் உள்ள ஐந்து காவல்நிலையங்களிலும் உளவுத்துறையினராக (SBCID) ஆதிக்க சாதியினரே இருப்பதாகவும் குறிப்பாக திருவாடனையில் உள்ள ராஜா என்பவர் மிகவும் சாதி உணர்வுடன் செயல்படுவதாகவும் நாங்கள் சந்தித்த பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டினர். அதுவும் இதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினராக உள்ளதால் சாதி வெறுப்பு காவல் நிலையங்களில்கூடுதலாக உள்ளது என்பதையும் அவர்கள் கூறினர். என்கவுன்டர் செய்வதற்கு அனுப்பப்பட்டவர்களில் தங்கமுனியசாமியும் கமுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினரே. அவர்தான் என்கவுன்டர் செய்தவரும் கூட. அந்த டீமில் இருந்த சௌந்தரபாண்டியன் என்பவர் பட்டியல் இனத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இது வழக்கமாகக் காவல்துறை செய்வதுதான். அப்படியான ஒருவரையும் அவர்கள் டீமில் இணைப்பது இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகத்தான்.
  2. பரமக்குடி வழக்குரைஞர் பசுமலை அவர்களைச் சந்தித்தபோது அவர் உரிய ஆதாரங்களுடன் ஒரு முக்கிய தவலைக் கூறினார். சில ஆண்டுகள் முன் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளில் (2011) ஆறு பட்டியல்சாதியினரைச் சுட்டுக் கொன்றதை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் கமிஷன் முன் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான முத்துக்குமார் என்பவரின் மனைவி பான்டீஸ்வரி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தன் கணவரைச் சுட்டுக் கொன்றது இந்த தங்கமுனியசாமி எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஒருவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைப்பொன்றில் இருந்து செயல்படுபவரும், பஞ்சாயத்துக்கள் செய்பவருமான கோவிந்தனைப் பிடிக்க அனுப்பியது என்பதைக் காவல்துறை எப்படி விளக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
  3. 2011 பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தற்போது நடந்துள்ல இந்த என்கவுன்டர் எல்லாவற்ரையும் பார்க்கும்போது காவல்துறை பட்டியல்சாதியினரைத் தொடர்ந்து காழ்ப்புடன் அணுகிவருவது உறுதியாகிறது.
  4. கோவிந்தன் மீது சாதிப் பஞ்சாயத்துகள் செய்பவர், சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற புகார்கள் இருந்தபோதும் அவர் மீது வழிப்பறி செய்ததாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
  5. இந்த என்கவுன்டருக்குத் துணை செய்த துல்கர்னை, சின்ராஜ் முதலானோருக்கு வழக்குரைஞர் முதலானோரை வைத்து எல்லா உதவிகளையும் செய்து காவல்துறை அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல ஐயங்களுக்குக் காரணமாகிறது.
  6. பணம் பறிகொடுத்ததாகச் சொல்லப்படும் காசினாதன் என்பவர் ஒரு கடத்தல்காரர். 11ம் தேதி பணத்தைப் பரிகொடுத்ததாகச் சொல்லும் இவர் ஏன் 13ம் தேதிவரை புகார் கொடுக்காமல் இருந்தார் என்பதும், புகார் கொடுத்தவுடன் உடனடியாக ஒரு சிறப்புப்படையை நியமித்து அதில் இன்னொரு காவல்நிலையத்தைச் சேர்ந்த தங்க முனியசாமியைக் குறிப்பாகச் சேர்த்ததும் தற்செயலானவை அல்ல.
  7. எந்தப் பெரிய காயங்களும் இல்லாத தங்கமுனியசாமியை மருத்துவமனையில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. காவல்துறையின் பிடிவாதத்தாலேயே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள செவிலியரும் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்றனர். காவல்துறை இந்தப் போலி என்கவுன்டருக்கு ஒரு ‘அலிபி’யை உருவாக்குவதற்காகவே இதைச் செய்கிறது. இதற்கு எந்த அறமும் இன்றி மருத்துவ நிர்வாகம் ஒத்துழைப்பது இழிவானது.
  8. என்கவுன்டர் செய்து கொன்ற தங்கமுனியசாமி முதல் தகவல் அறிக்கையில் தான் கோவிந்தனைக் கால்களிலேயே சுட்டதாகக் கூறுகிறார். காலில் சுடப்பட்டு உயிருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 42 வயதுள்ள ஆரோக்கியமான யாரும் அடுத்த சிலமணி நேரங்களில் இறப்பது என்பது சாத்தியமே இல்லை. கொவிந்தனின் உடலின் வீடியோ ஒன்றை எங்கள் குழு பரிசீலித்தபோது அவருக்கு விலா மற்றும் உடலின் மேற்பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் உற்றார் உறவினர்கள் யாரும் இன்றி காவல்துறையினர் தன்னிச்சையாக பிரேத பரிசோதனை செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இதைக் காவல்துறையும் மருத்துவத் துறையும் விளக்க வேண்டும்.

 

கோரிக்கைகள்:

  1. இது ஒரு போலி என்கவுன்டர் என்று எம் குழு உறுதியாகக் கருதுகிறது. இதைக் கொலைக் குற்றமாகக் கருதி தங்கமுனியசாமி உள்ளிட்ட என்கவுன்டர் கொலைக்குக் காரணமானவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
  2. கோவிந்தனின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் முன்னிலையில் மீண்டும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  3. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனடியாக அதிகாரிகளை நியமிப்பதோடு விச்சாரனையை முடிக்க காலகெடுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
  4. சாதிபார்த்தெல்லாம் காவல்துறையினரை நியமிக்கக் முடியாது எனக் கண்காணிப்பளர் சொல்வதை ஏற்க முடியாது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே ஏற்றுக்கொண்டதன் விளைவாகத்தான் இங்கே வன்கொடுமத் தடுப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் இயற்ற்றப்பட்டுள்ளன. சமூகத்தின் பன்மைத் தனமை ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை சச்சார் கமிஷன் அறிக்கை உட்படப் பல ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. சாதி முரண் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் பதவியில் உள்ள காவல்துறையினர், உளவுத்துறையினர் முதலானோரின் சமூகப் பின்னணி குறித்துக் காவல்துறை உரிய முறையில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதேபோல கோவிந்தனைப் பிடிக்க தங்கமுனியசாமி முதலானோர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்படும் சாதி உணர்வுள்ள உளவுத்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
  5. இந்தப் போலி மோதலில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் குடும்பத்துக்கு உடனடியாகப் பத்து இலட்சரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மகள்களில் ஒருவருக்கு தகுதியுள்ள அரசு வேலை ஒன்று அளிக்கப்பட வேண்டும்.
  6. பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும், மிரட்டப்படுவதையும், அடிக்கடி காவல்துறை வாகனங்களை அனுப்பி அந்தக் குடும்பத்தின் மீதே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுமாறு செய்வதையும் இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றை உடனடியாகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  7. இதுபற்றியான செய்தி வெளியீட்டில் ஊடகங்கள் சில காவல்துறையின் பொய்களை எந்த ஆய்வுகளும் இன்றி அப்படியே வெளியிடுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்தைக் கேட்டே ஒருவர் பற்றிய குற்றச்சாட்டை வெளியிட வேண்டும் என்பதே ஊடக தர்மம். இந்தியாவில் நடைபெறும் என்கவுன்டர் கொலைகளில் 90 சதம் போலியானவை என்பது ஊடகத்தினர் அறியாத ஒன்றல்ல.

 

 

அசோகரின் மதம் பவுத்தம்தானா?

(நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 4 -ஏப்ரல் மாத ‘தீராநதி’ யில் வெளி வந்துள்ள கட்டுரை. அசோகர் ஏன் ‘தம்மம்’ என்பதோடு நிறுத்திக் கொண்டார்? ஏன் அவர் தெளிவாகவும் ஐயத்திற்கிடமின்றியும் பவுத்தத்தை முன்வைக்கவில்லை?- இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது அத்தனை எளிதல்ல)

அரசுருவாக்கம் (state formation) பற்றி அறிந்தோர்க்கு அசோகர் ஒரு வகையில் புதிர்தான். ஒரு அடக்குமுறைக் கருவியாக அரசைப் பார்ப்போருக்கு அசோகரின் சாசனங்களில் வெளிப்படும் மனித நேயமும், மக்கள் நலமும் விளக்க இயலாத சவால்களாக அமைகின்றன.  அசோகரது ஆளுகையையும் அவரது கால அரசுருவாக்கத்தையும் விளங்கிக் கொள்ள நாம் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அவரது அரசின் செயற்பாடுகளையும் அணுகல்முறைகளையும் பார்த்தாக வேண்டும்.. அவரது ஆளுகையைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு உள்ள மிக முக்கியமான ஆதாரம் அவரது சாசனங்கள்தான். அவற்றில் நாம் ஒரு அம்சத்தை மட்டும் சென்ற இதழில் பாத்தோம். பிறவற்றையும் தொகுத்துக் கொள்வோம்.

முதலில் அன்றைய இந்தியத் துணைக் கண்டத்தில் செல்வாக்குடன் விளங்கிய கருத்தியல்களில் அசோகரை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இங்கு யாருக்கும் ஒரு ஐயம் தோன்றலாம். அசோகர் புத்த தம்மத்தை ஏற்றுக் கொண்டவர் என்கிறபோது ஏன் இந்தக் கேள்வி?

இரண்டு பிரச்சினைகள் இதில் உள்ளன. அசோகர் ‘தம்மம்’ எனச் சொல்வது புத்த தம்மத்தைத் தானா என்கிற கேள்வியைச் சிலர் எழுப்புகின்றனர். அதற்கு முதலில் விடை காண வேண்டும். அதற்குப் பின்னரே அன்றைய  சமூகச் சூழலில் புதிதாக உருவான ஒரு பேரரசுக்கு அவர் தேர்வு செய்த கருத்தியல் எப்படிப் பொருத்தமாக இருந்தது என்பதை யோசிக்க முடியும்.

அசோகர் குறித்த பதிவுகள் பிராமண நூல்களில் மிகக் குறைவு. அவரை ஒரு பேரரசராக ஏற்றுக் கொள்ளும் தகைமை அவற்றில் இல்லை. அதே நேரத்தில் சிரமண மதங்களில் ஒன்றான பவுத்தப் பதிவுகளில் அசோகர் மிகப் பெரிய அளவில் போற்றப்படுகிறார். இங்கே அவர் சக்கரவர்த்தி அசோகர். புத்தரின் காலத்திற்கும் அசோகரின் காலத்தில் கூட்டப்பட்ட மூன்றாம் பவுத்தப் பேரவைக்கும் இடைப்பட்ட காலத்தில் பவுத்தம் அப்படி ஒன்றும் மிகப்பெரிய இயக்கமாக கங்கைச் சமவெளியிலோ துணைக்கண்டத்தின் பிற பகுதிகளிலோ வளர்ந்திருக்கவில்லை. எனினும் இக்கால கட்டத்தில் பவுத்தம், சமணம், ஆசீவகம் உள்ளிட்ட சிரமண மதங்கள் மூன்றும் ஒட்டு மொத்தமாக பிராமணக் கருத்தியலையும் சடங்குகளையும், தத்துவ விசாரங்களையும் எதிர்கொள்ளத் தக்கவையாக வளர்ந்திருந்தன. சிரமணத்திற்கும் பிராமணத்திற்கும் இடையிலான பகையை பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான பகையுடன் பதஞ்சலி ஒப்பிடுவது குறிப்பிடத் தக்கது.

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் உருவான முதற் பேரரசுகளில் ஒன்றான மகதப் பேரசைப் பொறுத்த மட்டில் அது தோன்றிய காலத்திலிருந்தே சிரமண மதங்களைச் சார்ந்தே இருந்து வந்தது. பகைகொண்ட இரு பெரும் மதக் கருத்தியல்களுக்கும் இடையில் சிரமண அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட பேரரசாக நாம் மௌரியப் பேரரசை அடையாளப்படுத்தும் அதே நேரத்தில் அப்படியான ஒரு தேர்வை ஒரு மிகப் பெரிய எதிர் கலாச்சார நடவடிக்கையாகப் பார்க்கவும் முடியாது. அன்று செல்வாக்குடன் விளங்கிய இரு போக்குகளில் சிரமண அணுகல்முறையைத் தேர்வு செய்த அரசாக மௌரியப் பேரரசை அடையாளங் காண்பது என்கிற அளவில் நிறுத்திக் கொள்வதே பொருத்தம்.

கங்கைச் சம வெளியில் பிராமண வைதீகப் போக்கு வருண தருமத்தையும், வேள்விச் சடங்குகளையும் முன்வைத்து இயங்கியதன் ஊடாக ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் அன்றைய சூழலில் எதிர்ப்பு இயக்கங்களாக உருவெடுத்திருந்த சிரமண இயக்கங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்தப் பின்னணியில் அன்று புதிதாக உருவாகிக் கொண்டிருந்த அரசுருவாக்கங்கள் சிரமணச் சாய்வைக் கொண்டவையாக அமைந்தன. புத்தரின் காலந்தொட்டே நாம் இந்தப் போக்கை அடையாளம் காண முடியும். அசோகரின் தாத்தாவும் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவனுமான சந்திரகுப்தன் சமணத்தை ஏற்றுக் கொண்டவனாக அறியப்படுகிறான். சமண நூற்களும் அவ்வாறே அவனை அடையாளப்படுத்துகின்றன. அசோகரின் தந்தை பிந்துசாரன் ஆஜீவகத்தை ஏற்றுக் கொண்டவனாகவும் அறிகிறோம். அசோகரைப் பொறுத்த மட்டில் அவரது சாசனங்களின் ஊடாக அவர் பவுத்தத்தை எற்றுக் கொண்டவராக அடையாளப்படுத்த இயலும். எனினும் அவர் தம் சாசனங்களில் பொதுவாக முன்னிலைப் படுத்துவது ‘தம்மம்’ எனும் அடையாளத்தையே. தம்மம் என்பது அக்கால கட்டத்தில் நற்பண்புகள், நல்லொழுக்க நடைமுறைகள், அறவாழ்க்கை, மத ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்குமான ஒரு பொதுக் கருத்தாக்கமாகவே இருந்தது. பிராமணீயமும் இதைத் ‘தர்மம்’ என ஏற்றுக் கொண்டது.

பவுத்தமரபினருக்கு அசோகர் வெறும் மன்னர் மட்டுமல்ல. அவர் புத்த தம்மத்தை ஏற்றவர், கடைபிடித்தவர்; உலகெங்கிலும் பவுத்தம் பரப்ப பரப்புரைக் குழுக்களை (missions) அனுப்பியவர். மகனையும் மகளையும் அத்தகைய அறப்பணிக்கு அர்ப்பணித்தவர். அவர் துறவை மேற்கொள்ளாத பொது நிலையினராக இருந்த போதும் சங்கத்திலுள்ள துறவிகளுக்கும் எந்தெந்தப் புனித நூற்கள் முக்கியமானவை என அறிவுறுத்தக் கூடியவராகவும், வழி தவறும் பிக்குகளை எச்சரிக்கை செய்பவராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அரசதிகாரமும் (temporal power), புனித அதிகாரமும் (sacral power) கலந்து இணைந்து நிகழ்ந்த அற்புதம் அவர். அந்த வகையில் அசோகரின் ஆளுகையை ஒரு இலட்சிய பவுத்த ஆளுகையாக பவுத்தம் முன்வைக்கிறது.

பவுத்த மரபினர் இப்படி ஒரு மன்னனை பிக்குகளுக்கும் வழிகாட்டத் தக்கவராக ஏற்றுப் போற்றுவதை எப்படிப் பார்ப்பது?   அவரது வரலாற்றையும் அரசியலையும் புரிந்து கொள்ளக் கிடைக்கிற மிக முக்கியமான ஆதாரங்களான அவரது சாசனங்களைப் பார்க்கும்போது இப்படி அவர்கள் சொல்வதில் நியாயங்கள் இருப்பதாகவே நமக்கும் தோன்று கின்றன.  வழக்கமாக உலகெங்கிலும் கிடைக்கிற அரச சாசனங்கள், கல்வெட்டுக்கள், பிரகடனங்கள், செப்பேடுகள் ஆகியவற்றிலிருந்து இவை பெரிதும் வேறுபட்டுள்ளதை அவற்ற வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ள இயலும்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது? இதுகாறுமான அரசுகளை ஒரு அடக்குமுமுறைக் கருவியாகவே புரிந்து கொண்டுள்ள நமக்கு இது ஒரு சவாலான கேள்விதான். மேலே தொடர்வோம்.

ஒரு வகையில் எல்லா மதங்களும் அரசுருவாக்கம் குறித்த ஒரு புனைவைத் தம் தம் புனித இலக்கியங்களில் முன்வைக்கின்றன. பார்ப்பன மதமும் பவுத்த மதமும் இதில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை எனது ‘புத்தம் சரணம் நூலில் விரிவாக விளக்கியுள்ளேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்தபோது அசுரர்களின் பக்கம் வெற்றி வாய்ப்பு ஏற்படாமல் தடுக்க தெய்வாம்சம் பொருந்திய தலைவன் ஒருவன் அனுப்படப்பட்ட உபநிடதக் கதையோடு (‘அய்த்ரேயப் பிராமணம்’) பிராமண அரசுருவாக்க வரலாறு இங்கு தொடங்குகிறது. பொதுச் சொத்துரிமை அழிந்து தனிச் சொத்துரிமை உருவான போது சொத்துக் குவிப்பு, திருட்டு ஆக்கியவற்றைத் தடுக்க மக்கள் தாமே கூடி அனைவர் சம்மதத்துடனும் தலைவன் ஒருவனைத் தேர்வு செய்து கொண்டதாக ஜாதகக் கதைகள் பவுத்த அரசுருவாக்கத்தை விளக்கும். அதாவது பவுத்த மரபில் அரசன் என்பவன் தெய்வாம்சம் பொருந்தியவன் அல்ல. அவன் அவர்களில் ஒருவன். அவன் “மகாசம்மதா”, “கணதாசன்”, “சக்கரவர்த்தின்” என்றெல்லாம் அழைக்கப்படுபவன். அதாவது அனவரின் விருப்பினூடாகத் தேர்வு செய்யப்பட்டவன்; மக்கள் கூட்டத்தின் சேவகன் (தாசன்); தரும சக்கரத்தை உருட்டுபவன்.

கோட்பாட்டளவில் பவுத்த அரசுருவாக்கம் இப்படி ஒரு அறம் சார்ந்த வடிவில் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் எப்படி இருந்தது? சமகால வரலாற்றைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட வரலாற்றில் அப்படியான ஒரு “தம்ம அரசு” சாத்தியமாகிய காலம் என எதையேனும் சுட்ட இயலுமா? அசோகரது ஆட்சியை பவுத்தம் அப்படித்தான் புனைகிறது. அப்படி romanticize பண்ணுவதற்கு நிச்சயமாக அவரது சாசனங்கள் சான்றுகளாக அமையத்தான் செய்கின்றன. சென்ற இதழில் நாம் பார்த்தவை அவரது நீதி வழங்கும் முறை மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் பற்றியவை மட்டும்தான். அவற்றுக்கிணையாக வரலாற்றில் சுட்டிக் காட்ட ஏதுமில்லை என்பது உண்மையே. பிற அம்சங்களில்?

பிறவற்றிலும் அசோகரது அணுகல்முறை வழமைகளிலிருந்து பல வகைகளில் வேறுப்பட்டுத்தான் உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம்.

புத்தனுக்கும் அசோகருக்கும் இடைப்பட்ட காலத்தில் கங்கைச் சம வெளியில் சிரமண மதங்களுக்கும் பிராமண மதங்களுக்கிடையேயும், சிரமண மதங்களுக்கு உள்ளேயும் பல்வேறு மட்டங்களில் மோதல்களும், வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்த வண்னம் இருந்ததை நாம் அறிவோம். இந்த மதங்களுக்கிடையே சமயப் பொறை / சகிப்புத் தன்மை ஆகியவற்றை அசோகச் சாசனங்கள் வற்புத்தியதோடு மட்டுமின்றி இத்தகைய சமயப் பொறை என்பது ‘சகிப்புத் தன்மை’ என்பதைத் தாண்டி ஆக்கபூர்வமாய் அமைய வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத் தக்கது. சிரமண மதங்களைச் சேர்ந்த எல்லா துறவோர்களுக்கும் அவரவர் தவ வாழ்க்கைக்கு உதவும் முகமாகக் குகைகளை தானமளிப்பது, சிரமணர் மட்டுமின்றி, பிராமண அறவோர்க்கும் உரிய மரியாதை அளிப்பது, பிற மதங்களை எக்காரணம் கொண்டும் குறைத்துப் பேசாததோடு மாற்ரு மதங்கள் குறித்தும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும் என உரைப்பது என்கிற வகைகளில் மதச் சமத்துவத்தை அசோகரது சாசனங்கள் திரும்பத்திரும்ப வற்புறுத்தின (பராபர் சாசனம்).

உயிரினங்கள் பலவற்றையும் பட்டியலிட்டு அவற்றைக் கொல்லக் கூடாது எனவும், அவை பாதுகாக்கப்பட்டவை எனவும் அசோகச் சாசனங்கள் அறிவுரைத்தன. (பாறைச் சாசனம் V). இந்த ஆணைகள் பிறருக்கு மட்டுமல்ல. அரசவையையும் இது கட்டுப்படுத்தும். அரண்மனைக் குசினியில் நாள்தோறும் ஏராளமான மிருகங்களும், பறவைகளும் கொல்லப்பட்டது நிறுத்தப்பட்டு இப்போது தினம் இரண்டு மயில்களும் ஒரே ஒரு மானும் மட்டுமே கொல்லப்படுவதாகவும் அதுவும் கூடத் தினந்தோறும் கொல்லப்படுவதில்லை எனவும், விரைவில் அதுவும் நிறுத்தப்படும் எனவும் இன்னொரு சாசனம் பகர்கிறது (பாறைச் சாசனம் I). யாத்ரிகர்களுக்கும், விலங்கினங்களுக்கும் உதவும் பொருட்டு நிழலையும் கனி வகைகளையும் வழங்கும் மரங்களை நடுதல், குடி நீர் வசதிகள் செய்து தருதல் முதலியனவற்றைத் தம் அரசு நிறைவேற்றி வருவதையும் அவை பறைசாற்றின.

மற்ற மன்னர்களின் ‘விஜயங்கள்’ என்பன போர்ப்பயணங்களைக் கு(றிப்பன. அவை அழிவையும், கொலை, கொள்ளைகளையும் வெற்றியின் அடையாளங்களாகக் கொள்பவை. மாறாக அசோகரின் இத்தகைய வெற்றிப் பயணங்கள் என்பன ‘தம்ம விஜயங்கள்’. அவை யார் மீதும் அழிவை வீசியதில்லை. மாறாக அவை பிராமணர்களுக்கும் இதர துறவோர்களுக்கும், மூத்தோர்களுக்கும் தானங்களையும் அன்பையும் காணிக்கையாக்கியாவை; சென்றவிடமெல்லாம் தம்மக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரப்பிச் சென்ற விஜயங்கள் அவை (பாறைச் சாசனம் VIII).

திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற சடங்குகளையும் அற்ப வழமைகளையும், மூட நம்பிக்கைகளையும் கண்டிக்கும் இன்னொரு சாசனம் அவற்றுக்குப் பதிலாக பணியாட்களையும் அடிமைகளையும் நல்ல முறையில் நடத்துதல், மூத்தோர்களை மதித்தல்,  எல்லா உயிர்களையும் நேசித்தல், பார்ப்பனர் மற்றும் சிரமணத் துறவோர்களுக்கு தானங்கள் வழங்குதல் முதலான தம்ம நடவடிக்கைகளே உண்மையான பலனைத் தரும் என்கிறது (பாறைச் சாசனம்XI). பாரம்பரியமாக வரும் அர்த்தமற்ற சடங்குகளைத் துறந்துவிட்டு அறம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு சிகாலருக்கு புத்த பகவன் அருளிய அறவுரையை நினைவூட்டுகிறது இந்தச் சாசனம் ( பார்க்க: Hammalawa Saddhatissa, Buddhist Ethics).

“மிகச்சில செலவுகள், மிகச் சில உடமைகள்” போதும் என வற்புறுத்தும் இன்னொரு சாசனம் (பாறைச் சாசனம் III) இப்படிப் பிறர் மீது கரிசனம் என்பதைச் சொன்னதோடு நிற்கவில்லை. தனது வாழ்வில் அவற்றைக் கடைபிடிப்பதாகவும் அசோகர் அறிவுறுத்தினார். ஏதேனும் பிரச்சினை அல்லது முறையீடு எனில் தன்னை எந்த நேரத்திலும், சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அதப்புரத்திலிருந்தாலும், உறங்கிக் கொண்டிருந்தாலும், ஏன் தோட்டத்தில் (கழிப்பறையில்?) இருந்தாலும் கூடத் தொந்தரவு செய்யத் தயங்க வேண்டாம் என்கிறது இன்னொரு சாசனம். “ஏனெனில் நான் எனது பணிகளில் என்றும் திருப்தி அடைந்ததில்லை.. உலகம் முழுமையும் நன்மை பெறும் பொருட்டு நான் இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறேன்” (பாறைச் சாசனம் III).

“தம்ம வழியில் மேற்செல்ல வேண்டும் எனில் அதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று தம்ம விதிகளைக் கடைப்பிடிப்பது. மற்றது தம்மத்திற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வது. விதிகளைக் கடைப்பிடிப்பது என்பதைக் காட்டிலும் முழுமையான அர்ப்பணிப்பே சிறந்த வழி” (பாறைச் சாசனம் VI).

இத்தனைக்கும் அப்பால் அசோகரின் தம்மக் கோட்பாடு புத்த பகவனின் அடிப்படைகளை முழுமையாக எட்டவில்லை என்போர் ஒன்றைக் குறிப்பிடுவர். பவுத்தத்தின் இறுதி இலக்கு பரி நிப்பானம் எய்துவதே. “இறுதி விடுதலை” எனும் இந்தக் கருத்தாக்கம் அசோகரால் தன் சாசனங்கள் எதிலும் முன்மொழியப்படாதபோது அவர் குறிப்பிடும் ‘தம்மம்’ என்பது பவுத்த தம்மம்தான் என எப்படிச் சொல்ல இயலும்? பவுத்தவியலில் மிக நவீனமாகப் பல ஆய்வுகளைச் செய்துள்ள அறிஞர் ரிச்சர்ட் கோம்ப்ரிட்ஜ் இந்தக் கேள்வி அர்த்தமற்றது எனப் புறந் தள்ளுவார். பவுத்தத் துறவோர்களுக்கும், துறவோர் அல்லாது பவுத்தத்தை ஏற்ற பிறருக்குமான அறவழிகள் மற்றும் இலக்குகள் குறித்த புரியாமையின் விளைவே இந்த ஐயம் என்பது அவர் கருத்து. அசோகர் குறிப்பிடும் தம்மம் என்பது பௌத்த தம்மத்தைத்தான் என்பதற்கு அவர் சில சான்றுகளைத் தருவார்.

புத்த பகவன் அன்னை மாயாதேவியின் திருவயிறு உதித்த தலமாகிய லும்பினிக்கு அசோகர் யாத்திரை சென்று வந்ததையும் அந்த ஊருக்கு விதிக்கப்பட்ட  நில வரித் தொகையில் பெரும்பகுதியை ரத்து செய்ததையும் இரு சாசனங்கள் குறிக்கின்றன (ரும்மின்டேய் சாசனம்). இன்னொரு சாசனத்தில் எண்ணில் புத்தர்களில் ஒருவரது பெயரில் விளங்கிய தூபி ஒன்றை விரித்தமைத்ததோடு அங்கு வந்து தான் வணங்கிச் சென்றதையும் அசோகர் பதிவு செய்கிறார். (நாகலிசாகர் சாசனம்). இவை இரண்டும் அவர் பவுத்தத்தை ஏற்றுக் கொண்டு ஒழுகியமைக்குச் சான்றுகளாகின்றன.

பிறிதொரு சாசனத்தில் அசோகர் பவுத்த சங்கத்தில் இருப்போர்க்கு என்னென்ன பவுத்த தம்ம நூல்களைக் கற்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார் (பாப்ரா சாசனம்). இன்னும் மூன்று சாசனங்களில் பவுத்த சங்கத்தில் இருக்கும் துறவிகள் சங்கத்தில் யாரேனும் பிளவுகள் ஏற்படுத்த முனைந்தால் அவர்கள் துவராடை களையப்பட்டு, வெள்ளாடை உடுத்தி வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை செய்கிறார் (கோசம், சாஞ்சி, சாரநாத்). இவை அனைத்தும் அசோகர் புத்த தம்மத்தைத்தான் மனங் கொண்டார் என்பதற்குச் சான்றுகள்.

#################

 

 

#

அசோகர் தனது எட்டாம் ஆட்சியாண்டில் மேற்கொண்ட கலிங்கத்துப்போரில் கிடத்தட்ட மூன்று லட்சம் பேர்கள் கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டு மனம் நொந்து, அறவழியை முதன்மைப் படுத்தும் பவுத்தத்தில் அடைக்கலம் கண்டார் என்பதுதான் அவர் குறித்து பவுத்த மரபு கட்டமைக்கும் வரலறு. அசோகரும் தனது 13 ம் பாறைச் சாசனத்தின் (Rock Edict XIII) ஊடாக அவ்வாறே தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார். இந்த மனமாற்றம் கலிங்கப் படையெடுப்பை ஒட்டித் திடீரென நிகழ்ந்ததாகவே பவுத்த மரபிலும் பொதுக்கருத்திலும் நம்பப்படுகிறது.

எனினும் அசோகரின் வரலாற்றையும், அவரது சாசனங்களையும் கூர்மையாக வாசித்தால் இந்த மனமாற்றம் அப்படி ஒன்றும் திடீர் நிகழ்வாக உருப் பெறவில்லை, அது படிப்படியாக நிகழ்ந்த ஒன்றுதான் என்பது விளங்கும்.   அசோகர் முடிசூட்டிக் கொள்ளுமுன் உஜ்ஜெயின் பகுதியின் ஆளுநராக அவரது தந்தையால் அனுப்பப்பட்டபோதே அவருக்கு பவுத்தத்தின் பரிச்சயம் ஏற்பட்ட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உஜ்ஜெயின் பவுத்தம் செழித்திருந்த ஒரு மையமாக விளங்கியது என்பது மத்தியப் பிரதேசத்தில் ரோஷங்காபாத்துக்கு அருகில் உள்ள பங்குராரியா வில் உள்ள சிறு பாறைச் சாசனத்திலிருந்து (Minor Rock Edict)  அறிய வருகிறது.

முடிசூட்டப்பட்ட 13ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறு பாறைச் சாசனத்தில் தான் கலிங்கப் படையெடுப்பிற்குப் பின் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ‘உபாசகனாக’ (பவுத்த நெறிப் பயிற்சியாளனாக) இருந்ததாகவும்சதற்கு முந்திய ஓராண்டு காலமாக அதில் முன்னேற்றமில்லை எனவும் இப்போது சங்கத்திற்கும் பவுத்த நெறிக்கும் மிக நெருக்கமாகியுள்ளதாகவும் அசோகர் குறிப்பிடுகிறார். எட்டாம் பாறைச் சாசனத்தில் தான்  முடிசூட்டப்பட்ட பத்தாம் ஆண்டில் புத்தகயாவிற்குச் சென்று புத்தர் நிர்வாணமடைந்த போதிமரத்தைத் தரிசித்து வந்ததைப் பதிவு செய்கிறார். இவை அனைத்தும் இந்த மாற்றம் அப்படி ஒன்றும் திடீரென நிகழ்ந்ததல்ல என்பதை நிறுவுகின்றன.

எனினும் பவுத்த மரபைப் பொருத்த மட்டில் கலிங்கப்போருக்குப் பின்னரே மதம் மாறி புத்தர் சங்கத்தில் ஐக்கியமாகி மூன்றாம் பவுத்தப் பேரவையைக் கூட்டுவதாகவும், அந்தப் பேரவையில் பவுத்தக் கருத்தியல் ஒழுங்கமைக்கப்பட்டு தேரவாதக் கருத்தியலுக்கு இறுதி வடிவம் கொடுப்பதாகவுமே முன்வைக்கப்படுகிறது. இந்த மூன்றாம் பேரவை பவுத்த வரலாற்றில் மட்டுமல்ல அசோகரின் வரலாற்றிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுவதன்பால் ரொமிலாதப்பார் கவனத்தை ஈர்க்கிறார். பவுத்ததிற்கு ஒரு பேரசின் ஏற்பும், ஒரு பேரரசனுக்கு ஒரு பெருமதத்தின் ஏற்பும் ஒருசேர அரங்கேறிய நிகழ்வு இது. ஆளுகைக்கு புனிதத்தின் அங்கீகாரமும், புனிதத்திற்கு ஆளுகையின் அங்கீகாரமும் ஒரு சேர தேவைப்படுவது என்பது வரலாற்றில் எப்போதும் நிகழ்வதுதான். கிறிஸ்தவ மதத்திற்கு ஒரு கான்ஸ்டான்டினைப் போலவும், கன்ஃப்யூசியஸ் மதத்திற்கு ஒரு சாங் அரசபரம்பரையைப் போலவும் பவுத்தத்திற்கு அசோகர் அமைந்தார் எனலாம்.

 

 

எர்டோகானின் துருக்கி: கெஸி பார்க் எழுச்சிஎழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்

(“துருக்கி எழுச்சி எழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்” என்கிற தலைப்பில் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய கடுரை. ஜனாதிபதி ஆட்சிமுறை நோக்கி துருக்கியை இன்று வெற்றிகரமாக நகர்த்தியுள்ளார்  எர்டோகான். ஜனநாயகம் அங்கு குழி தோன்டிப் புதைக்கப்படுகிறது)

erdogan

மே மாத இறுதியில் துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில் உள்ள தக்சீம் சதுக்கத்தை ஒட்டி அமைந்துள்ள கெஸி பூங்காவில் உருவாகி, அடுத்த சில நாட்களில் கிட்டத்தட்ட 60 நகரங்களுக்குப் பரவி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள துருக்கி மக்களின் எழுச்சி ஜனநாயகம் குறித்த சில கேள்விகளை உலகின் முன் எழுப்பியுள்ளது. சற்று யோசித்துப் பார்த்தால் 2010ல் ஏற்பட்ட அரபுலக வசந்தம், 2011ல் ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் ஏற்பட்ட எதிர்ப்புகள், தற்போது துருக்கியில் மட்டுமின்றி பிரேசிலிலும் நடைபெறும் அரசெதிர்ப்புப் போராட்டங்கள், அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் அமர்வு எல்லாமே சோவியத்துக்குப் பிந்திய உலகில், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 21ம் நூற்றாண்டு உலகில் ஜனநாயகம் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்பது குறித்த சில கேள்விகளை உலகின் முன் எழுப்பியுள்ளன என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் உலகம் இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா? எகிப்தின் முபாரக்கும் துனிசியாவின் பென் அலியும் இதைப் புரிந்து கொள்ளாததன் விளைவை உடனடியாக அநுபவிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் மட்டுமல்ல ஜனநாயக ஆளுகையில் அக்கறை உள்ள பலரும் தொடர்ந்து வரும் இந்த எதிர்ப்பலைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்துச் சிந்திக்கவில்லை என்பது இன்று துருக்கியில் உருவாகியுள்ள எழுச்சி குறித்த சில பதிவுகளைப் பார்க்கும்போது விளங்குகிறது. துருக்கிப் பிரதமர் எர்டோகான் இப்போராட்டத்தைத் தனது எதிர்ப்பாளர்களின் சதி எனவும், ‘நன்றிகெட்ட ஒரு சிறுபான்மை’ விளைவிக்கும் குழப்பம் எனவும் கூறிக் கொண்டே கடுமையான ஒடுக்குமுறை மூலம் மக்கள் எழுச்சியை ஒடுக்க முயல்வதை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை. இந்த எழுச்சியை மேற்குலகின் சதி எனவும், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் எர்டோகானைக் கவிழ்க்க மேற்கொள்ளும் முயற்சி எனவும் உலகெங்கிலுமுள்ள பல முஸ்லிம் அறிவுஜீவிகளும் கூட சமூக வலைத்தளங்களில் பதிவதைப் பார்க்கும்போதுதான் நமக்கு இந்த ஆயாசம் ஏற்படுகிறது. ஆகா, ஏதோ ஒரு மையச் சரடை இவர்கள் எல்லோரும் பற்றிக் கொண்டு சிந்திக்கத் தவறுகிறார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

இவர்கள் கெஸி பூங்கா எழுச்சிக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் இரண்டு. முதலாவது, இதை அரபு வசந்தத்துடன் (Arab Spring) ஒப்பிடாதீர்கள் என்பது. அரபு வசந்தம் என்பது நீண்ட காலமாக அதிகாரத்தை ஆக்ரமித்து வைத்திருந்த சர்வாதிகாரிகளுக்கு எதிரானது. அரபுலக மக்கள் இந்தச் சர்வாதிகாரிகளை மட்டுமல்ல, இத்தகைய எதேச்சிகார அமைப்பையே தூக்கி எறிய நடத்திய போராட்டம் அது. எர்டோகான் அப்படியான சர்வாதிகாரி அல்ல. துருக்கி ஒரு அரசியல் சட்ட அடிப்படையிலான ஜனநாயகம் (constitutional democracy). பல கட்சி ஆட்சிமுறை அங்கு பலகாலமாக வெற்றிகரமாகச் செயல்படுகிறது. எர்டோகான் மும்முறை (2002, 2007, 2011) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். ஒவ்வொரு முறையும் அவருக்கு 10.8 மில்லியன், 16.3 மில்லியன், 21.3 மில்லியன் என மக்கள் ஆதரவு கூடித்தான் உள்ளதே  தவிர குறையவில்லை. 2011 தேர்தலில் அவரது கட்சி மொத்த வாக்குகளில் 50 சதத்தைப் பெற்றது. எனவே துருக்கி எழுச்சி ஒரு சர்வாதிகாரியையோ இல்லை ஒரு சர்வாதிகார அமைப்பையோ தூக்கி எறிய நடக்கும் போராட்டமல்ல.

அடுத்ததாக அவர்கள் முன்வைக்கும் வாதம் அதிகாரத்திற்கு வந்த இந்தப் பத்தரை ஆண்டுகளில் எர்டோகான் தனது நாட்டைப் பெரிய அளவில் முன்னேற்றியுள்ளார். துருக்கி இந்தப் பத்தாண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அது மட்டுமல்ல தொடர்ந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்புகளை முடிவுக்குக் கொண்டுவந்து, காரணமான அதிகாரிகளை விசாரணை ஆணையங்களின் முன் நிறுத்தி நாட்டில் அமைதியை மட்டுமல்ல, ஜனநாயக அரசமைப்பையும் நிலைப்படுத்தியவர் அவர்.

அத்தனையும் உண்மை. இவற்றை யாரும் மறுத்துவிட இயலாது. நிச்சயமாக அரபு வசந்தத்திற்கும் கெஸி பூங்கா எழுச்சிக்கும் வித்தியாசம் உண்டு. நகர் மையங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த துருக்கியர்களும் கூட எர்டோகானைப் பதவி இறங்கச் சொல்லியோ, இல்லை இந்த அரசமைப்பை மாற்றச் சொல்லியோ கோரிக்கை எழுப்பவில்லை. அப்படியும் இந்த எதிர்ப்பு எப்படி ஏற்பட்டது? இந்தக் கேள்விக்குத்தான் நாம் எர்டோகான் ஆதரவாளர்களைப் போல மேற்குலகச் சதி, நன்றிகெட்ட ஒரு சிறுபான்மை விளைவிக்கும் குழப்பம், அல்லது எர்டோகானின் இஸ்லாமியச் சாய்வு முயற்சியைப் பொறாத மதச்சார்பற்ற ‘பாசிஸ்டுகள்’ மற்றும் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்கிற எளிமைப்படுத்தப்பட்ட பதில்களில் சரணடைய இயலவில்லை. இப்படித்தான் சென்ற நூர்றாண்டு இறுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் வீழ்ச்சியை வெறுமனே மேற்குலக ஏகாபத்தியச் சதி என எளிமைப்படுத்திப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனச் சென்ற பாதையிலேயே சென்று, செக்கு மாடுகளாய் உழன்று, இந்த நூற்றாண்டில் தேய்ந்து அழிந்து கொண்டுள்ளன.

சரி, கெஸி பூங்காவாசிகளின் கோரிக்கைதான் என்ன? அப்படி ஒன்றும் சராசரியாகக் கோரிக்கைகளைக் குறுக்கிவிட இயலாது என்பது இந்த எதிர்ப்பின் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு. துருக்கி நகர் மையங்களில் கூடி நின்றவர்களில் கம்யூனிஸ்டுகளும் உண்டு; துருக்கிக்கே உரித்தான மதச் சார்பற்ற பாரம்பரியத்தில் வந்த ‘செக்யூலரிஸ்டுகளும்’ உண்டு; மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகளும் உண்டு; தொழுகை நேரத்தில் தொழத் தவறாத முஸ்லிம் சோஷலிஸ்டுகளும் உண்டு; ‘முதலாளிய எதிர்ப்பு முஸ்லிம்கள்’ (Anti Capitalist Muslims) என்கிற பதாகைகளை ஏந்திக் கொண்டு நிற்கிறவர்களும் உண்டு; குர்திஷ்  இனப் பிரிவினைப் போராளிகளும் உண்டு.

தொழுகை நேரங்களின்போது தொழக்கூடியவர்களுக்கு மற்றவர்கள் கைகளைக் கோர்த்துச் சுற்றி நின்று பாதுகாப்பளித்த படங்கள் இதழ்களில் வந்தன. பாதுகாப்பு கருதிப் பிள்ளைகளை இரவில் வீட்டுக்கு வந்துவிடுமாறு பெற்றோர்கள் வந்து வற்புறுத்துவதற்குப் பதிலாக அவர்களும் தம் பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டனர். எல்லோருக்கும் இலவச உணவு, கழிப்பிட வசதி எல்லாம் முறையாகச் செய்யப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி (assemblies) பல்வேறு பிரச்சினைகளை விவாதித்தனர்,

மே 27 (2013) அன்று கெஸி பூங்காவில் சில நூறு பேர்கள் கூடியபோது அவர்களின் கோரிக்கை ஒன்றுதான், 200 ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் பூங்கா இருக்கவில்லை. துருக்கியின் பழம் பெருமிதங்களில் ஒன்றன ஆட்டோமான் பேரரசு காலத்திய இராணுவ வீரர் குடியிருப்பு (military barracks) ஒன்றுதான் அங்கு இருந்தது.  சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் துருக்கி மக்களின் தந்தை என அழைக்கப்படும் முஸ்தபா கெமால் அத்தாதுர்கின் சீர்திருத்தங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்டு இன்றைய பசுமை கொழிக்கும் அழகிய கெஸி பூங்கா உருவானது. இஸ்தான்புல்லில் கடைசியாக எஞ்சியுள்ள இந்தப் பசுமைத் திட்டை அழித்துவிட்டு அந்த இடத்தில் பழைய இராணுவக் குடியிருப்பின் வடிவில் ஒரு நவீனமான ஷாப்பிங் மாலையும் அருகே ஒரு மசூதியையும் உருவாக்குவது எர்டோகானின் சமீபத்திய திட்டங்களில் ஒன்று. அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றுதான் தொடங்கியது இந்தத் துருக்கி எழுச்சி.

எர்டோகானின் இந்தப் பத்தரையாண்டு ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்பவர்கள், அவரைத் ‘தொடக்ககால’ எர்டோகான் எனவும் ‘பிந்தைய’ எர்டோகான் எனவும் பிரித்து அணுகுகின்றனர். இப்போது அவர் தன்னை அத்தாதுர்க்கைப் போன்ற அல்லது அத்தாதுர்க்கையும் தாண்டிய செல்வாக்குமிக்க துருக்கியத் தலைவராக நிலை நிறுத்திக்கொள்வதில் தன் கவனத்தை அதிகம் செலவிடுகிறார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் அத்தாதுர்க்கும் எர்டோகானுமே மிகப் பெரிய துருக்கியத் தலைவர்களாக உருப் பெற்றவர்கள் என்பதில் அய்யமில்லை. ருஷியத் தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்கை உருவாக்கிய பீட்டர் மன்னனைப் போல, துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லை இன்று எர்டோகான் நிர்மாணிக்க விரும்புகிறார். எனினும் அவரது இந்த முடிவைப் பலரும் ரசிக்கவில்லை. அப்படி ரசிக்காதவர்களை வெறும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக மட்டும் சுருக்கிவிட இயலாது. இவர்களில் இயற்கை வளங்களைக் காக்க நினைக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் உண்டு. ‘பிந்தைய’ எர்டோகானின் இதர பல அரசியற் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற  வேறு பலரும் உண்டு,

சமீப காலமாக துருக்கி மக்களின் தந்தை முஸ்தபா கெமாலின் சீர்திருத்தங்கள் பலவற்றைப் பின்னோக்கி நகர்த்தும் முயற்சிகளை எர்டோகான், மக்களின் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக மேற்கொண்டு வருவதை, இது குறித்து ஆய்வு செய்வோர் பட்டியலிடுகின்றனர். அவற்றில் சில:

# இஸ்தான்புல்லை ஒட்டி அமைந்து ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் போஸ்போரஸ் குடா மீது கட்டப்படும் மூன்றாவது பாலத்திற்கு பழைய ஆட்டோமான் பேரரசன் ஒருவனின் பெயரைச் சூட்டினார் எர்டோகான். பல்லாயிரக் கணக்கான அல்லாவிகளைக் (Allaawites) கொடுங்கொலை புரிந்தவன் என்கிற ஒரு வரலாற்றுப் ‘புகழ்’ இம்மன்னனுக்கு உண்டு.  அல்லாவிகள் என்போர் துருக்கியில் பெரும்பான்மையாக உள்ள சன்னி இஸ்லாத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட கோட்பாடுகளையுடைய ஒரு மதப் பிரிவினர். இன்றைய துருக்கியில் சுமார் 15 மில்லியன் பேர் அல்லாவிகள். சுமார் 15 முதல் 20 மில்லியன் பேர் குர்திஷ் இனத்தவர். துருக்கியின் மொத்த மக்கள் தொகை 72 மில்லியன். பெரும்பாலானவர் சன்னி முஸ்லிம்களின் ஹனஃபி மரபில் வந்தோர் எனினும் துருக்கிக்கு ஒரு ‘மதச் சார்பற்ற’ பாரம்பரியமும் உண்டு. குறிப்பாக அத்தாதுர்க் நவீன துருக்கியை ஒரு மதச் சார்பற்ற குடியரசாகக் கட்டமைத்தவர் என்பதும் இவரது சீர்திருத்தங்களைத் தமிழகத்தில் தந்தை பெரியார் பெரிய அளவில் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கன. இப்படித் துருக்கி மக்கள் தொகையில் 20 சதமாக உள்ள அல்லாவிகளால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு மன்னனின் பெயரைத் தன்னிச்சையாக எர்டோகான் அரசு, ஒரு நவீன பொறியியற் சாதனைக்குப் பெயரிடுவது துருக்கியின் பன்மைக் கலாச்சார, மதப் பண்பாட்டிற்கு எதிராக இருந்தது. அது மட்டுமல்ல சுமார் 2.5 மில்லியன் மரங்களை அழித்து இப்பாலம் கட்டப்படுவதும் பலருக்குப் பிடிக்கவில்லை.

# ஓராண்டுக்கு முன் எர்டோகான் அரசு கருச் சிதைவு செய்து கொள்ளும் உரிமையைப் பெண்களிடமிருந்து பறிக்க முயற்சித்தது. ஒவ்வொரு துருக்கிப் பெண்ணும் குறைந்தது மூன்று குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எர்டோகானின் கொள்கைகளில் ஒன்று. இந்தக் கருத்தடைத் தடை முயற்சி என்பது ஏதோ துருக்கி மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல. அதைக் காட்டிலும் எர்டோகான் முன்னிறுத்தும் ‘ஒழுக்கமான இறை அச்சமுள்ள சமூகத்தைக்’ கட்டமைக்கும் திட்டங்களில் ஒன்று இது என்பதையும் கவனிக்க வெண்டும். காதலர்கள் தெருக்களில் கைகோர்த்து நெருக்கமாகச் செல்வது, பொது இடங்களில் தங்கள் அந்நியோன்னியத்தை வெளிப்படுத்திக் கொள்வது முதலானவற்றைக் கண்டிப்பது எர்டோகானுக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று. தனியாக வாழும் பெண்கள் கருத்தரித்து அதை அவர்கள் கலைக்க விரும்பினால், அவர்களைக் கண்காணித்துப் பின் தொடர்வது, அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து எச்சரிப்பது போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.

# எர்டோகான் அரசு தனது நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இணங்க, பொது மக்களால் இதுவரை பல்வேறு பொது வெளிகளாகப் பாவிக்கப்பட்ட இடங்களை அவர்களிடமிருந்து பறித்து ஷாப்பிங் மால்கள், ஆடம்பர ஒட்டல்கள் மற்றும் சொகுசான குடியிருப்புகளாக மாற்றி வருவதை பலரும் ஏற்கவில்லை. எளிமை, சிக்கனம், நேர்மை என்கிற நபிகள் நாயகத்தின் கொள்கைக்கு இது எதிரானது எனக் கருதும் சோஷலிச முஸ்லிம்கள் உட்பட அரசின் இந்த அணுகுமுறையை விரும்பவில்லை. எனினும் எர்டோகான் அரசு இவ்வாறு பொது வெளிகளைத் தனியார் மயமாக்கும் கொள்கையைத் தீவிரமாக அமுல்படுத்தலாயிற்று. இஸ்தான்புல்லில் சுலுக்குலே என்னுமிடத்தில் இருந்த ஏழை எளிய ரோமா மக்களின் 550 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த பாவிப்பு வெளி ஒன்று இவ்வாறு அடுக்குமாடிச் சொகுசுக் குடியிருப்பாக மாற்றப்பட்டது. தர்பலா என்னுமிடத்திலிருந்த குர்திஷ் மக்களின் பகுதி ஒன்றும் இவ்வாறு தனியார்களின் உல்லாசக் குடியிருப்பாக்கப்பட்டது. இன்னும் குறைந்த பட்சம் 50 சொகுசுக் குடியிருப்புக்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

# இரவு பத்து மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பதை எர்டோகான் அரசு தடை செய்ததையும் கூட தங்களின் கலாச்சாரப் பன்மைத்துவத்தின் மீது அரசின் தேவையற்ற குறுக்கீடு என்பதாகவே மக்கள் கருதினர்.

இந்தப் பட்டியலைப் பார்க்கும் நண்பர்கள் பலர், குறிப்பாக அத்தாதுர்கின் மதச் சார்பின்மையிலிருந்து விலகி இஸ்லாமியச் சாய்வு அரசியலை நோக்கி நகர்ந்த எர்டோகானை ஆதரிப்பவர்கள் இரு கேள்விகளை எழுப்புவர். ஒன்று: இதிலென்ன தவறு? மக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், தெருக்களில் ஆபாசமாக ஆண்களும் பெண்களும் நடந்து கொள்ளக் கூடாது, குடித்துச் சீரழியக் கூடாது எனச் சொல்வதெல்லாம் தவறா? கெஸி பார்க்கில் கூடியவர்களைப் பார்த்து எர்டோகான் பீர் குடித்துக் கும்மாளமடிக்கிறார்கள் எனச் சொன்னதைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதாக மட்டும் கருத இயலாது, மேலைக் கலாச்சாரச் சீரழிவுவாதிகளே துருக்கி எழுச்சிக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிகாட்டும் முகமாகவும் சொல்லப்பட்டதுதான் இது.

இரண்டு: பெரும்பான்மையாகச் சன்னி முஸ்லிம்களே உள்ள ஒரு நாட்டில் அம்மதக் கொள்கைகளை அரசு நடைமுறைப் படுத்துவதில் என்ன தவறு?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் சற்று ஆழமாக யோசிக்க வேண்டும். முதலில் ஒவ்வோரு நாட்டுக்கும் அதற்கே உரிய தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. துருக்கி பிற இஸ்லாமிய நாடுகளிலிருந்து சில முக்கிய அம்சங்களில் வேறுபட்டது.  புவியியல் ரீதியாக அது பிற மத்தியதரைக் கடல் இஸ்லாமிய நாடுகளுக்கு அருகாக மட்டுமல்ல, ஐரோப்பிய  நாடுகளுக்கும் அருகாமையில், இரு கண்டங்களியும் பிரிக்கும் எல்லையில் அமைந்த நாடு அது. அய்ரோப்பிய யூனியனில் சேர்வதைத் தன் லட்சியமாகக் கொண்ட, அதற்காகத் தீவிர முயற்சிகளைச் செய்கிற ஒரு நாடு. எட்டு வெவ்வேறு விதமான கலாச்சாரங்களைக் கொண்ட நாடுகளுடன் அது தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. முஸ்லிம் பண்பாடு மட்டுமின்றி ஐரோப்பியப் பண்பாடும் கலந்த ஒரு வகைக் கலப்புப் பண்பாட்டைக் கொண்ட நாடு அது என்பதால்தான் அத்தாதுர்கால் அத்தனை எளிதாக அங்கொரு மதச் சார்பர்ற குடியரசைக் கட்ட இயன்றது.

குடிப் பழக்கம், கருத்தடை உரிமை, ஆண்களும் பெண்களும் சகஜமாக பொது இடங்களில் பழகுவது என்பவற்றில் ஒவ்வோரு நாடும் அதற்கே உரிய கலாச்சாரத் தனித்தன்மையுடன் விளங்குகிறது. அவ்வளவு ஏன் குடிப் பழக்கத்தில் தமிழகக் கலாச்சாரத்திற்கும், தமிழக எல்லைக்குள் அமைந்த, முற்றிலும் தமிழர்களே நிறைந்த புதுச்சேரிக் கலாச்சாரத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டா இல்லையா? தி.மு.க ஆட்சியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டில் மது விலக்கு கொண்டு வரவேண்டும் எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோது, கருணாநிதி, உங்கள் கட்சி செல்வாக்காக உள்ள புதுச்சேரியில் நீங்கள் இதற்காகப் போராடுவீர்களா எனச் சவால் விட்டதையும், ராமதாஸ் அதற்குப் பதில் சொல்லாமல் பம்மியதையும் நினைவு கொள்ள வேண்டும்.

அபடியானால் இது போன்ற நல்ல கொள்கைகளைக் கலாச்சாரத்தின் பெயரால் நாம் கைவிடத்தான் வேண்டுமா? கைவிட வேண்டும் என்பதில்லை. நமது கொள்கைகளை நாம் பிரச்சாரம் செய்யலாம், ஆதரவு திரட்டலாம். அதைப் பெரும்பான்மைக் கருத்தாக மாற்றலாம். அதை எல்லாம் செய்யாமல் ஒரு ஜனநாயக நாட்டில், தாங்கள் பெற்ற வாக்குப் பெரும்பான்மை என்கிற பலத்தில் இப்படி மக்கட் தொகுதிகளின் கலாச்சார உரிமைகளச் சட்டம் கொண்டு வன்முறையாகத் தடுக்க இயலாது என்பதுதான்.

பெரும்பான்மையாக உள்ள மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒரு அரசு பொது விதியாக மாற்றுவது நியாயம் என ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் இந்துத்துவவாதிகளும், இலங்கையில் சிங்கள இனவாதிகள் சொல்வதையும் மற்றவர்கள் ஏற்க வேண்டியதாகிவிடும். இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும் என இந்துத்துவவாதிகளும், இலங்கையில் ஹலால் முத்திரையுடன் பொருட்கள் விற்கலாகாது என பவுத்த இனவாதிகளும் சொல்வதை நாம் எப்படி ஏற்பது?

பெண்கள் முகத்திரை அணிவதற்கு அத்தாதுர்க் காலத்திலிருந்து இருந்து வந்த தடையை எர்டோகான் அரசு நீக்கியது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதை முஸ்லிம்களின் கலாச்சார உரிமை ஒன்றை மீட்டெடுத்த ஒரு நடவடிக்கை என நாம் பாராட்டலாம். ஆனால் சவூதி போல அனைத்துப் பெண்களும் முகத்திரை அணிந்தே வெளியில் வரவேண்டும் என எர்டோகான் அரசு ஒரு வேளை ஒரு ஆணை பிறப்பித்தால், அதை எப்படி ஏற்க இயலும்?

எர்டோகான் அரசிடமிருந்து மக்கள் அந்நியப் பட்டதன் அடிப்படை இப்படித் துருக்கியின் பன்மைக் கலாச்சாரத்தில் கைவைத்ததால் மட்டும் ஏற்படவில்லை. அவரது இதர அரசியல் பொருளாதாரச் செயல்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகித்தன. எர்டோகானின் அரசியல் வாழ்வு கம்யூனிச எதிர்ப்பு இயக்கமொன்றில் (Anti Communist Work Force) பங்கேற்பதுடன் தொடங்குகிறது. பின்னர் அவர் நவ இஸ்லாமிய “நலக் கட்சி”யின் (Neo Islamic Welfare Party) தலைவராகிறார். 1994ல் இஸ்தான்புல் நகர மேயராகிறார். பின்னர் அவரது ,’வெல்ஃபேர்’ கட்சி தடை செய்யபட்டுச் சிறிது காலம் சிறைவாசமும் அநுபவிக்கிறார். வெளியில் வந்து அவரது இன்றைய ஏ.கே.பி (நீதிக்கும் வளர்ச்சிக்குமான கட்சி) கட்சியைத் தொடங்குகிறார். 2002ல் அக்கட்சி ஆட்சியையும் கைப்பற்றுகிறது. இவ்வெற்றியை ஒட்டி அரசில் பங்கேற்பதற்கிருந்த தடை அவருக்கு நீக்கப்படுகிறது. 2003 முதல் அவர் பிரதமராகத் தொடர்கிறார்.

இது மூன்றாவது முறைமட்டுமல்ல இறுதி முறையும் கூட. 2015 வரை அவர் பதவியில் இருக்கலாம். ஆனால் 2015 உடன் பதவியை முடித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. தற்போது குடியரசுத் தலைவராக உள்ள அவரது விசுவாசி அப்துல்லா குல்லைப் பிரதமராக்கி, தான் குடியரசுத் தலைவரானால் என்ன? ரசியாவில் புடினும் மெத்வதேவும் இப்படி மாறி மாறி அதிகாரத்தை அநுபவிக்கவில்லையா? ஆனால் புடினைப் போல, நிறைவேற்று அதிகாரமில்லாத வெறும் குடியரசுத் தலைவராகச் சிறிது காலம் கூட இருக்க எர்டோகான் தயாராக இல்லை. சகல அதிகாரங்களும் குடியரசுத் தலைவரிடம் குடிகொண்டுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறுவது என்கிற அவரது தற்போதைய திட்டம் அவரது முக்கிய ஆதரவுத் தொகுதிகள் பல அவரிடமிருந்து அந்நியமாவதற்கு ஒரு முக்கிய காரணமாகியுள்ளது,

எர்டோகான் பதவி ஏற்பதற்கு முந்தைய காலம் ஏகப்பட்ட இராணுவ ஆட்சி கவிழ்ப்புகள் நிறைந்த ஒன்று, ‘இருண்ட 90’ என அழைக்கப்படும் தொண்ணூறுகள் துருக்கி அரசுக்கும் குர்திஷ் போராளிகளுக்கும் இடையில் போர் நடந்த காலம். சுமார் 40,000 பேர் அதில் கொல்லப்பட்டனர். கடும் அடக்குமுறைகள். பொருளாதாரச் சரிவு ஆகியவற்றால் துன்புற்றிருந்த மக்களுக்கு எர்டோகானின் வருகை வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்தது, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்து, காரணமான நூற்றுக் கணக்கான இராணுவ அதிகாரிகளை விசாரணைக் கமிஷன்கள் முன் நிறுத்தித் தண்டித்தது, குர்திஷ் போராளிகளுடன் போரை நிறுத்தி பேச்சு வார்த்தை தொடங்கியது, இவற்றினூடாக ஜனநாயக ஆளுகையையும் சட்ட ஒழுங்கையும் நிலை நிறுத்தியது ஆகியன இடதுசாரிச் சாய்வுள்ள மத்தியதரத் தாராளவாதிகளின் (Centre Left Liberals) ஆதரவை எர்டோகானுக்கு ஈட்டித் தந்தது. அதே நேரத்தில் அவர் மேற்கொண்ட மேற்கத்தியச் சாய்வுடன் கூடிய நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை (Neo Liberal Economic Policy), மற்றும் அதனூடாகப் பெற்ற உடனடிப் பொருளாதாரப் பலன்கள் ஆகியன வலதுசாரிச் சாய்வுடன் கூடிய மத்தியதரத் தாராளவாதிகளின் (Centre Right Liberals) ஆதரவை ஈட்டித் தந்தன. முக்கிய எதிர்க்கட்சியான சி.எச்.பி (மக்கள் பிரதிநிதிக் கட்சி), குர்திஷ் தொழிலாளர் கட்சி முதலியன எதிரணியில் இருந்தன.

இன்று பெரிதும் பேசப்படும் துருக்கியின் ‘பொருளாதார முன்னேற்றம்’ என்பதன் இன்னொரு பக்கத்தை நாம் காணத் தவறக்கூடாது, பன்னாட்டு நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், கடன்கள் ஆகியவற்றுடன் பிணைந்ததுதான் இந்த முன்னேற்றம். இந்தப் பத்தாண்டுகளில் உற்பத்தியில் உள்நாட்டுப் பங்கு குறைந்து வெளி நாட்டு இறக்குமதி அதிகமானது, வேலை வாய்ப்பைப் பொறுத்தமட்டில் ‘அவுட் சோர்சிங்’ வகையிலான வேலை வாய்ப்புகள்தான் உருவாயின. இன்று சுமார் 1.5 மில்லியன் பேர் அவுட்சோர்சிங் வேலைகளில் உள்ளனர். உள்நாட்டு இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை வீதம் 22 சதம் வரை இருந்தது. இவ்வாறு வேலை இல்லாமையின் விளைவாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய நிறையப் பேர்கள் தயாராக இருந்ததும் அருகில் வளமான எண்ணை வள நாடுகளின் சந்தை இருந்ததும் பெரிய அளவு பொருளாதார வளர்ச்சி இருந்த தோற்றத்தைத் துருக்கிக்கு அளித்த போதும், இது ஒருவகை நோஞ்சான் முதலாளிய வளர்ச்சியாகவே அமைந்தது. பணியிடங்களில் தொழிளாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதிருந்ததன் விளைவாகச் சுமார் 1000 தொழிலாளிகள் தொழிற்சாலை விபத்துகளில் இறந்துள்ளனர் என்கிறார் இந்தத் துறையில் மருத்துவராக இருந்து, இந்தக் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்காக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் அகமட் டெலியாகுலு.

இத்தகைய “பொருளாதார வளர்ச்சி’யினூடாகக் கட்டமைக்கப்பட்ட நுகர்வுக் கலாச்சாரம் மத்திய தர வர்க்கத்தைக் கடனாளியாக்கியது. ஒரு தரவின்படி ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருபவர்களின் எண்ணிக்கை 70 சதம். அரசு தனது பன்னாட்டுக் கடன்களைத் திருப்பித் தந்துவிட்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் பெரிய அளவில் வெளிநாட்டு வங்கிகளின் கடனாளிகள் ஆயின. அரசு நிதியிலிருந்து இவர்களின் கடன்களைத் தீர்க்கும் நிலையும் உருவானது, 2009ல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு துருக்கியை வெகுவாகப் பாதித்தது. 2012ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து துருக்கி இன்னும் மீளவில்லை.

மக்களின் இந்த அதிருப்திகள் அவ்வப்போது போராட்டங்களாக வெளிப்பட்டன. மாணவர் போராட்டம், தொழிலாளர் போராட்டம், நகரப் பொதுவெளிகள் தனியார் மயப்படுத்தப் படுவதை எதிர்த்த நகர உரிமைப் போராட்டங்கள் என எதிர்ப்புகள் ஆங்காங்கு உருவாயின. இஸ்டிக்லால் என்னுமிடத்தில் இருந்த பழைமை வாய்ந்த திரை அரங்கு இடிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நடந்தன. மே தினக் கொண்டாட்டங்கள் கோரிக்கைப் போராட்டங்களாகவே மாறின.  1977ம் ஆண்டு மே தின நிகாழ்ச்சியின் போது நடை பெற்ற ஒரு தாக்குதலில் 36 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை ஒட்டி தக்சீம் சதுக்கத்தில் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் அமைப்புகள் அளித்த அழுத்தத்தின் விளைவாக மீண்டும் 2010 முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டத்திற்கு அணி திரண்டு வந்த தொழிலாளிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடித்தும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் விரட்டப்பட்டனர். இப்படி நிறையச் சொல்லலாம்.

இன்னொரு பக்கம் இராணுவ அதிகாரிகளின் மீதான விசாரணைகள் என்பன கொஞ்சம் கொஞ்சமாக அரசுடன் கருத்து வேறுபடுபவர்கள் அனைவர் மீதான கடும் கண்காணிப்புகளாகவும், கைது நடவடிக்கைகளாகவும் மாறின. கருத்து மாறுபடுபவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பெரிய அளவில் பிரயோகிக்கப்பட்டது. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் மாணவர்கள் மாத்திரம் 771 பேர் சிறைகளில் உள்ளனர். துருக்கி மனித உரிமைக் கழகத்தைச் (Turkish Human Rights Association) சேர்ந்த இஷான் காகர் தற்போது சிறைகளில் நூற்றுக் கணக்கானோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்கிறார். எதிர்க் கட்சியினர், குர்திஷ் போராளிகள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், குர்திஷ் போராளிகளுடன் தொடர்ந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இப்படியான அடக்குமுறைகள், தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகள் ஆகியவற்றின் விளைவாக இடதுசாரிச் சாய்வுடைய மத்திய தரத் தாராளவாதிகளின் ஆதரவு எர்டோகானுக்குக் குறைந்தது. இதனை ஈடுகட்ட எர்டோகன் இரு வழிகளைக் கையாண்டார், ஒரு பக்கம் இறையச்சமுடைய சமூகம் பற்றியச் சொல்லாடல்களும் இஸ்லாமியச் சாய்வுடன் கூடிய நடவடிக்கைகளும் அவருக்கு இதில் துணை புரிந்தன, ஃபெதுல்லான்குலன் என்கிற இஸ்லாமிய அமைப்பு, எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹூட், பலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆகியவற்றுடன் நெருக்கம் காட்டிக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் படை எடுப்பின்போது எர்டோகான் அமெரிக்காவுடன் நின்றவர் என்பதை நாம் மறந்துவிட இயலாது.

இப்படியான இஸ்லாமியச் சாய்வு ஒரளவு அவருக்குப் பயனளித்தது என்றே சொல்ல வேண்டும். பொருளாதாரத் தாராளவாதத்தால் பயன்பெற்ற  தொழிலதிபர்களான மேற்தட்டு முஸ்லிம்களின் ஆதரவை இது எர்டோகனுக்கு ஈட்டித் தந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த இஸ்லாமியச் சாய்வு வலதுசாரி மத்தியதர தாராளவாதிகளை அவரிடமிருந்து விலக்கியது.

தனது ஆதரவுத் தொகுதியை விரிவாக்கிக் கொள்வதற்காக எர்டோகன் மேற்கொண்ட இன்னொரு யுத்தி இன்னும் ஆபத்தானது. வழக்கமாக இனவாதிகள் அல்லது மதவாதிகள் தமது ஆதரவுத் தொகுதியை உச்சபட்சமாக ஆக்கிக் கொள்வதற்கு சமூகத்தை, இந்து / முஸ்லிம் அல்லது சிங்களர் / தமிழர் என இரு துருவங்களாகக் குவிப்பார்கள் (polarisation) அல்லவா அதே யுத்தியை எர்டோகான் தன் சொல்லாடல்களாக்கினார். மதச்சார்பற்றோர் / இறை அச்சமுடையோர் என்கிற முரணைக் கட்டமைத்து அரசியலாக்கினார். அதே போல அவரது பிரதான அரசியல் எதிரியான சி.எச்.பி கட்சியின் ஆதரவாளர்களை “வெள்ளைத் துருக்கியர்கள்” எனப் பெயரிட்டு, அவர்களே துருக்கிச் சமூகத்தின் மைய நிலையில் (core)  உள்ள ஆதிக்கச் சக்திகள் எனவும் விளிம்பிலுள்ள சாதாரண மக்களை அவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும், தான் அந்தச் சாதாரண மக்களுக்காக நிற்பவர் எனவும் சொல்லாடினார். இப்படி விளிம்பு / மையம்,  மதச்சார்பற்ற ‘பாசிஸ்டுகள்’ / இறையச்சமுடைய (pious) ‘ஒழுக்கமானோர்’ முதலான சொல்லாடல்கள் அவராலும் அவரது கட்சியினராலும் மிகத் தாராளாமாகப் பயன்படுத்தப்பட்டன

தனது ஒரு குரலைத் தவிர வேறெந்தக் குரலுக்கும் நாட்டில் இடமில்லை என்பதுதான் ‘பிந்தைய’ எர்டோகனின் அணுகல் முறையாக இருந்தது. கெஸி பூங்காவை அழித்துவிட்டு அங்கே ஷாப்பிங் மால் கட்டக்கூடாது என்கிற குரல் வந்தவுடன், “நாங்கள் அதைத் தீர்மானித்து விட்டோம். அதைக் கட்டியே தீருவோம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்பதுதான் எர்டோகானின் எதிர்வினையாக இருந்தது. கெஸி பூங்காவில் கூடியிருந்த எதிர்ப்பாளர்களைப் “பீர் குடித்துக் கும்மாளமடிக்கிறார்கள்” என அவர் கொச்சைப்படுத்தியதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஒரு குறிப்பான இயக்கம் அல்லது கட்சியின் தலைமையிலல்லாமல் இப்படியாகத் தன்னுணர்வின் அடிப்படையில் திரளும் மக்கள் திரள் ஓரிடத்தில் நாட்கணக்கில் அமர்ந்து போராடுகிறபோது யாரேனும் ஒருவர் எங்கேனும் ஒரு பீர் கேனைத் திறந்தால் அதை வைத்து அவர்கள் அனைவரையும் கொச்சைப் படுத்துவது என்கிற யுத்தி ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. அவர் தொடர்ந்து கையாண்டு வநந்துதான். யாரேனும் ஒரு மதச் சார்பற்ற அடையாளத்தினர் ஏதேனும் ஒரு சிறு தவறு இழைத்தால் அதை ஊதிப் பெரிதாக்குவது என்பது அவரது ஏ.கே.பி கட்சி எப்போதும் செய்து வருகிற ஒன்றுதான். கெஸி பூங்காவில் சிதறிக் கிடந்தவை கண்ணீர்ப் புகைக் கேன்கள் தானே தவிர பீர் கேன்கள் அல்ல. இது ஒரு அரசியல் போராட்டம் என்பதை இவ்வாறு துருக்கி முழுவதும் திரண்டிருந்த மக்கள் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தனர். பலதரப்பு மக்களும் பங்கு பெற்ற உரையாடற் களங்களாகவும் அவை மாறின.

கெஸி பார்க்கில் தொடங்கிய அமர்வுகள் அங்காரா, இஸ்மிர் என துருக்கியின் அத்தனை பெரு நகரங்களுக்கும் பரவின. திரண்டிருந்த மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர்.  மிளகுத்தூள் கலந்த காற்றும் தண்ணீரும் அவர்கள் மீது பீச்சியடிக்கப்பட்டன. பெரிய அளவில் கண்ணீர்ப்புகையும் எலாஸ்டிக் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் எந்தக் கணத்திலும் கூடியிருந்த மக்கள் வன்முறையில் இறங்கவில்லை.

ஜூன் 14 அன்று எர்டோகனின் வீட்டில் நடந்த பேச்சு வார்த்தைகளில் நீதிமன்ற ஆணைக்குத் தான் கட்டுப்படுவதாகவும், கெஸி பார்க்கை ஷாப்பிங் மாலாக்குவது குறித்துக் கருத்துக் கணிப்பு நடத்துவதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அப்போது கூட, தான் மேற்கொண்ட அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து ஒப்புக்குக் கூட வருத்தம் தெரிவிக்க அவர் தயாராக இல்லை.

துருக்கி முழுவதிலும் இந்தப் போராட்டத்தில் குறைந்த பட்சம் 5 பேர்கள் இறந்துள்ளனர். இதில் ஒருவர் ஒரு போலீஸ் அதிகாரி. பாலம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். சுமார் ஆறு பேர் கண்னீர்ப் புகைக் கேன்கள் தாக்கிக் கண்களை இழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் பட்டுள்ளனர். சிலர் காணாமற்போயுள்ளனர்.

ஜனநாயகம் என்பது ஒரு ஒற்றை குரலிசை அல்ல, அது ஒரு பல்குரல் இசை. எது குறித்தும் பல கருத்துக்கள் மோதும் களமாகவே அது அமையும். இந்தப் பல்குரல் தன்மையை ஒழித்து, ஒற்றைக் குரலாக்க முனைபவர்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை.

ஜனநாயகம் என்பது தேர்தல் நடத்தி ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதோடு முடிந்துவிடுகிற விஷயமல்ல. ஜனநாயகமுறையில் தேர்வு செய்யப்பட்டோர் எது வேண்டுமானாலும் செய்வதற்கு அது ஒன்றே தகுதியாகிவுடாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விருப்பிற்கு எதையும் செய்துவிட இயலாது என்பதற்குரிய தடைகளை (checks) உள்ளடக்கியதே ஜனநாயகம்.

வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் ஓய்ந்து விடுவதில்லை. தமது பண்பாட்டு உரிமைகளையும் கலாச்சாரத் தனித்துவத்தையும் அவர்கள் எதனுடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்.

தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் உலக நிதி நிறுவனங்களின் வழிகாட்டலை ஏற்று, திட்டமிடுகிற, தேர்வு செய்கிற தமது உரிமைகளைப் பறிப்பதை மக்கள் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் புவியின் மீதும், தம் நகரத்தின் மீதும், இயற்கை வளங்களின்மீதும் தமக்குள்ள உரிமை உலகளாவிய நிதி மூலதனத்தின் பெருகி வரும் அதிகாரத்தால் பறிக்கப்படுவதை மக்கள் எந்நாளும் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என ஆட்சியாளர்கள் கனவு காணக் கூடாது.

21ம் நூற்றாண்டின் தன்னிச்சையான இம் மக்கள் எழுச்சிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஜூலை 15, 2013