கலைஞர் கருணாநிதி : ஏற்றங்களும் இறக்கங்களும்

ஒன்று

தனது நீண்ட அரசியல் வாழ்வினூடாகக் கலைஞர் சாதித்தவைகளை முதலில் தொகுத்துக் கொள்வோம்.

சமூக நீதி, மாநில உரிமைகள் என்கிற இரு அடிப்படைகளை அரசியலாகக் கொண்டு உருவான தி.மு.க வின் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திசைகளிலும் பலவற்றைச் சாதித்தவர் கலைஞர். இன்று இந்தியாவிலேயே சமூக நீதிக்கு ஒரு மாதிரி அரசாக விளங்குவது தமிழ்நாடுதான் என்பதில் கலைஞரின் பங்கு முக்கியமானது. அண்ணா நீண்ட நாள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அவர் பதவியில் இருந்த இரண்டாண்டுகளுக்கும் குறைவான அந்தக் குறுகிய காலத்தில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடாக மாற்றியது, பிற்படுத்தப்பட்ட சாதியினரது மேம்பாட்டிற்காக ஆணையம் ஒன்றை அமைத்தது, இந்தி நீக்கப்பட்ட இரு மொழிக் கொள்கைக்கு அடித்தளமிட்டது ஆகிய அரசியல் மாற்றங்களைச் செய்யவே அண்ணாவுக்கு வாய்ப்பிருந்தது..

அரசதிகாரத்தை அண்ணாவுக்குப் பின் தொடர்ந்து கைப்பற்றிய கலைஞர் அவரது ஆட்சிக் காலங்களில் இட ஒதுக்கீட்டை விரிவாக்கினார். பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீட்டை 18+1 ஆகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீட்டை 31 ஆகவும் அவர் அதிகரித்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் இயற்றினார். பிற்படுத்தப்பட்ட்டோர் நலத்துக்கான அமைச்சகம் உருவாக்கினார். திராவிட இயக்கத்தின் இன்னொரு அடிப்படைக் கொள்கையாகிய மாநில சுயாட்சி எனும் திசையில் ஆகஸ்ட் 15 அன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றுவது, தமிழகத்துக்கென தனியாக ஒரு மொழி வாழ்த்துப் பாடலை அரசடையாளமாக்கியது என்பவற்றோடு நிற்காமல் மாநில அளவில் நிதி ஆணையம், காவல்துறை ஆணையம், திட்ட ஆணையம், தமிழகத்திற்கென நவீன மென்பொருள் உருவாக்கக் கொள்கை முதலானவற்றை உருவாக்கியது, குடிசை மாற்று வாரியம் ஒன்றை அமைத்தது எனப் பல திசைகளில் அவர் தமிழகத்தை முன்மாதிரி  மாநிலமாக நிறுத்திக் காட்டினார். மத்திய மாநில உரிமைகளை ஆராய ராஜமன்னார் குழு அமைத்து அறிக்கை ஒன்றைப் பெற்றதும் (1969), 1973ல் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானமும் இந்தத் திசையில் முக்கியமானவை

இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொது வினியோக அமைப்பு உருவானதும் தி.மு.க ஆட்சியில்தான். உணவு உரிமைச் சட்டம் ஒன்றை இந்திய அளவில் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியபோது அதைவிடச் சிறந்த உணவுப் பொருட்கள் வினியோக அமைப்பு இங்கு ஏற்கனவே செயல்படுகிறது, இந்தப் புதிய திட்டத்தால் எங்களுக்குப் பயனில்லை என அன்றைய முதல்வர் சொல்லும் அளவிற்கு இங்கு பொது வினியோக அமைப்பு செயல்பட்டது. அதேபோல “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்கிற முழக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘குடிசை மாற்று வாரியம்’ கலைஞரின் இன்னொரு சாதனை. இதன் மூலம் குடிசை வாழ் மக்களுக்குக் கிட்டத்தட்ட இலவசமாக அவரவர்கள் வாழ்ந்த குடிசைப் பகுதியிலேயே கான்க்ரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பெண்களுக்குச் சொத்துரிமை, 30 சத ஒதுக்கீடு ஆகியனவும் அவரது காலத்தில்தான் அளிக்கப்பட்டன. மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் சந்தை முதலியனவும் அவரது ஆட்சியில் விளைந்தவைதான். கண்ணொளித் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, திருமண உதவித் திட்டம், பிச்சைக்காரர் மறு வாழ்வுத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் முதலியனவும் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டவைதான்.

கலைஞரின் இன்னொரு சாதனை எல்லாச் சாதியினரும் ஒன்றாக வசிப்பதற்கான சமத்துவபுரங்களை நாடெங்கும் அமைத்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்தபோது அவர் இட ஒதுக்கீட்டை அதிகரித்து வருமான உச்சவரம்பை நிபந்தனையாக்கினார். இந்த வருமான உச்சவரம்பைக் கடுமையாக எதிர்த்து அதைத் திரும்பப் பெற வைத்ததிலும் கலைஞர் தலைமையில் இருந்த திமுகவிற்குப் பங்கிருந்தது.

இன்று வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரின் இறப்பைப் பற்றிச் சொல்லும்போது தேர்தல் கூட்டணிகள் அமைக்கும்போது தலித் கட்சிகளைத் தீண்டத் தகாதவையாக எல்லோரும் பார்த்தபோது கலைஞர்தான் வி.சி.க விற்குப் 10 தொகுதிகள், புதிய தமிழகத்திற்குப் 10 தொகுதிகள் தந்து கூட்டணியில் இணைத்துக் கொண்டார் என்கிறார். பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் தலித்கள் பஞ்சாயத்துத் தலைவர்களாகச் செயல்பட அனுமதிக்கப்படாத நிலையை கலைஞரின் கவனத்திற்கு இட்டுச் சென்ற போது அவர் சுழற்சி முறை இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டுகள் அந்த ஊர்களில் நீடிக்க ஆணையிட்டு தலித் தலைவர்கள் பதவி ஏற்க வழி வகுத்ததையும் இன்று தலித் அமைப்புகள் கலைஞரின் சாதனையாகக் குறிப்பிடுகின்றன.

காங்கிரஸ் ஆட்சியால் 30 ஏக்கர் என வரம்பு விதித்து இயற்றப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தைத் திருத்தி உச்சவரம்பை 15 ஏக்கர்களாகக் குறைத்ததும் கலைஞர் ஆட்சியில்தான் (1970). அதேபோல குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென ‘குத்தகை நிலப் பதிவேட்டுச் சட்டம்’ (Conferment of Ownership of Homestead Act, 1971) இயற்றப்பட்டதும் அவர் காலத்தில்தான். அத்துடன் குத்தகைச் சட்டங்கள் திருத்தப்பட்டு குத்தகைத் தொகை 25 சதமாகக் குறைக்கப்பட்டதும் (1979) அவரது ஆட்சிக் காலத்தில் நடந்ததுதான்.

இரண்டு

இத்தனை சாதனைகள் கலைஞர் ஆட்சியில் நடந்தபோதும் அவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் தோற்க நேர்ந்தது எப்படி? அவர்களின் வலிமையைக் கலைஞர் சரியாக மதிப்பிடவில்லை என்றொரு பதில் எளிதாக முன்வைக்கப்படுகிறது. ஒரு மூத்த பத்திரிகையாளர் கூட சமீபத்தில் அவ்வாறு கூறி இருந்தார். என்னைப் பொருத்த மட்டில் இந்தக் கேள்விக்கான பதிலை நாம் அப்படிச் சொல்லி எளிதாகக் கடந்துவிட முடியாது எனத் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட கலைஞரின் இந்தச் சாதனைகளில் பல காலப் போக்கில் மக்களுக்குப் பெரிய பலன்களை அளித்துவிடவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். அடித்தள மக்களை அதிகாரப்படுத்துவதற்கு அவை போதுமானவைகளாக இல்லை. பல திட்டங்கள் உலகமய நடவடிக்கைகளின் ஊடாக நீர்த்துப் போயின.

எடுத்துக்காட்டாக அடித்தள மக்களது நலன் நோக்கில் கலைஞரது ஆட்சி நிறைவேற்றிய ஆக முக்கியமான திட்டங்களில் ஒன்றான குடிசைமாற்று வாரியத்தை எடுத்துக் கொள்வோம். இத்திட்டத்திற்கு கலைஞர் அரசு உலக வங்கியிடம் கடன் வாங்கியபோது அது சுமத்திய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நிபந்தனைகளில் ஒன்று இனி கட்டப்படும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே கட்டப்படாமல் (சுமார் 30 கிமீ தாண்டி) நகரத்துக்கு வெளியே கட்டவேண்டும் என்பது; மற்றது ஏழெட்டு மாடிகள் உள்ள அடுக்கு வீடுகளாக இருக்க வேண்டும் என்பது; மூன்றாவது நிபந்தனை அந்த வீடுகளைக் கட்டுவதற்கான செலவை குடியேறும் ஏழை எளிய மக்களிடமிருந்து வசூல் செய்துவிட வேண்டும் என்பது. இவ் வாரியம் எவ்வாறு நிர்வக்கிக்கப்பட வேண்டும் என்பதிலும் உலகவங்கி தலையிட்டது. இனி குடிசைமாற்று வாரியத்திற்கு மக்கள் பிரதிநிதிகள், கட்சிக்காரர்கள் தலைவர்களாக ஆக்கப்படாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தலைவர்களாக்கப்பட வேண்டும் (bureaucratization) என்றது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு துரைப்பாக்கம், கண்ணகிநகர் முதலான தொலைதூரங்களில் கட்டப்படும் அடுக்கு மாடிகளில் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு நாசமாகியுள்ளது என்பதை நாங்கள் குழு ஒன்றை அமைத்து நேரடி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளோம் (பார்க்க: ‘சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்’).

ஏழைகளின் வாழ்வில் இறைவனைக் காப்போம் எனத் தந்தை சொன்னார். மகனோ ‘சிங்காரச் சென்னை’ எனக் கூறி  நகரை அழகு படுத்தும் வகையில் அதிவேகப் பறக்கும் சாலைகள் உட்படப் பெரிய அளவில் குடிசை மக்கள் வெளியேற்றப்படுதலுக்குக் காரணமானார். வீடில்லாமல் நகர் வெளிகளில் தூங்கியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மருத்துவமனையில்  அடைக்கப்பட்ட கொடுமையும் சென்னையில் நடந்தது.

நில உச்சவரம்புச் சட்டங்களின் விளைவாக 1,36,236 பேர்களுக்கு 1,78,880 ஏக்கர் விவசாய நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆறு கோடி மக்கள் தொகை உள்ள ஒரு மாநிலத்தில் இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. பெரு நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களை பினாமிகள் பெயர்களில் எழுதி வைப்பது முதலான நடவடிக்கைகளின் ஊடாக இச்சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டனர். இதன் விளைவாகப் பெரிய அளவில் நில உறவுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் தலித்கள், அவர்களுள்ளும் ஆதி திராவிட சமூகத்தினர் இன்னும் நிலமற்றவர்களாகவும் தீண்டாமைக்கு ஆட்பட்டவர்களாகவும் தொடர்கின்றனர்.

கலைஞரின் இன்னொரு முக்கியமான திட்டமாகிய பொது வினியோக முறையும் இப்போதைய மோடி அரசு இதில் புகுத்தும் மாற்றங்களின் ஊடாக விரைவில் பயனற்றுப் போகும் நிலை உள்ளது. ரேஷன் கடைகளே மூடப்படும் வாய்ப்பும் உள்ளது.

மிகப் பெரிய அளவில் உயர் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் தமிழகத்தில் இன்று உருவாகியுள்ளன. எனினும் உயர் கல்வி என்பது மேலும் மேலும் அடித்தள மக்களுக்கு எட்டாக் கனியாக ஆகும் நிலை அதிகரிக்கிறது.

அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதும், வேலைவாய்ப்பு, கல்வி முதலிய எல்லாமும் தனியார் மயமாவதும் இட ஒதுக்கீட்டை பொருளற்றதாக ஆக்குகின்றன.

இட ஒதுக்கீட்டை அதிகரித்தது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் எனச் சட்டம் இயற்றியது முதலான கலைஞரின் புரட்சிகரமான திட்டங்களின் ஊடாக பார்ப்பன மேற்சாதியினரும், ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளும் அவரைத் தீராப் பகையாக நினைப்பதை அறிவோம். அவரது உடலை மெரினாவில் அண்னா சமாதிக்கு அருகில் புதைக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு அவர்கள் வன்மத்தைக் கக்கியதையும் கண்டோம். ஆனால் இன்னொரு பக்கம் கலைஞர் உருவாக்கிய மாற்றங்களின் ஊடாகப் பொருளியல் ரீதியாகப் பெரும் பயன் ஏதும் ஆக அடித்தள மக்களுக்கு எட்டவில்லை என்பதையும் பார்க்கிறோம்.

கிடைத்த பயன்களும் ஆகக் கீழே சென்றடையாமல்  நடுத்தர மக்களின் கைகளைத்தான் சென்றடைந்தன. அவர்களைத்தான் அதிகாரப் படுத்தின.

தி.மு.கவின் மாவட்ட அளவிலான கட்சிப் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் நடுத்தர சாதியினராகவே உள்ளதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கீழத் தஞ்சை போன்ற தலித்கள் மிக அதிகமாக உள்ள பகுதிகளிலும் கூட மாவட்டப் பொறுப்பாளர்களாக ஆதிக்க சாதியினரே உள்ளனர். இதன் விளைவாக தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிப்படையாகக் கண்டிக்க இயலாதவர்களாக அக்கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளதை இவ்வாறான பல வன்முறைகள் குறித்த ஆய்வுகளைச் செய்துள்ள வகையில் நான் நேரில் கண்டுள்ளேன்.

மூன்று

கலைஞரின் அணுகல்முறைகளைப் பொருத்தமட்டில் அவரது இத்தனை சிறப்புகளுக்கும் அப்பால் சில முக்கியமான விமர்சனங்களையும் நாம் வைக்க வேண்டி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராகப் போராடிப் பல உரிமைகளப் பெற்றவர் அவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை எதிர்த்து நின்று தன் ஆட்சியை இழந்தவர் அவர். ஆட்சியை மட்டுமல்ல அவரது கட்சியையே அழித்து ஒன்றுவிடாமல் செய்துவிட வேண்டும் எனும் நோக்குடன் அவரது மகன் ஸ்டாலின் உட்பட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோதும் இம்மியும் பணியாமல் நிமிர்ந்து நின்றவர் அவர். நெருக்கடி நிலைக் காலம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட  ஷா கமிஷன், இஸ்மாயில் கமிஷன் அறிக்கைகளைப் படித்தால் யாரும் கண்ணீர் சிந்தாமல் அதைக் கடக்க முடியாது. என்னைப் பொருத்த மட்டில் கலைஞரின் ஆகப் பெரிய பெருமை அவர் நெருக்கடிநிலையை எதிர் கொண்ட தீரம்தான்.

ஒரு மாநில அரசின் உரிமைகளுக்காக நின்ற அவர் உலகமயச் செயல்பாடுகளின் ஊடாக மத்திய அரசின் உரிமைகள் மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளும் பறி போகும் என்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. உலகமயச் செயற்பாடுகளை அவர் விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டார். நாங்குனேரி, கோயம்புத்தூர், சென்னை, ஹோசூர்… என இங்கே எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திறக்கப்பட்டன. சுற்றுச் சூழலைப் பாதிக்கும் எனப் பிற தென் மாநிலங்களால் அனுமதி மறுக்கப்பட்ட சில தொழிற்சாலைகளுக்கு அவை விதித்த நிபந்தனைகளை ஏற்று கலைஞர் ஆட்சி அனுமதி அளித்தது குறித்து நான் எனது நூலில் பதிவு செய்துள்ளேன் (பார்க்க: உலகமயத்துக்குப் பின் இந்தியா). தொழில்துறைச் செயலாளராக அவரால் தேர்வு செய்யப்பட்ட எம்.எச்.ஃபரூக்கியை முதலீட்டாளர்களின் நியாயங்களை உணர்ந்தவர் (investment friendly) எனப் பத்திரிகைகள் எழுதின.

கலைஞரின் ஆட்சியில் தொழிலாளர் இயக்கங்கள் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. டி.வி.எஸ், எம்.ஆர்.எஃப், லெய்லன்ட் மற்றும் சிம்சன் போராட்டங்கள் (1969 -73) ஒடுக்கப்பட்ட விதங்கள் கலைஞரின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கங்களாக நிலை பெறுகின்றன. சிம்சன் போராட்டத்தின் போது கூட்டம் ஒன்றிற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தனை தி.மு.க தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் தாக்கினர். பேருந்தை நிறுத்திப் பயணிகளை இறக்கி விட்டு இந்தத் தாக்குதல் நடந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார் (The Potics of Repression, EPW, Aug 1973). முன்னதாக இப்படியான ஆபத்து இருப்பது காவல்துறைக்குச் சொல்லப்பட்டும் நடவடிக்கை ஏதுமில்லை.

“இரும்புக் கரங்கள் கொண்டு தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவேன்” எனக் கலைஞர் உதிர்த்த வாசகங்கள் தொழிற்சங்க வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று.

நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர் போராட்டத்தில் (1970, மே 3) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 1999 ஜூலை 25 அன்று திருநெல்வேலியில்நடந்த மாஞ்சோலைத் தொழிலாளர்கள் ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 17 பேர்கள் கொல்லப்பட்டபோதும் முதலமைச்சராக இருந்தது கருணாநிதிதான். ஜூலை 2010 ல் ஸ்ரீ பெரும்புதூர் மென்பொருள் தொழிற்பூங்காவில்’ உள்ள ஃபாக்ஸ்கான் தொழிர்சாலையில் விஷவாயு கசிந்து 250 பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதுகாப்பு வேண்டி தொழிலாளர் போராட்டம் நடந்தபோது அதுவும் ஒடுக்கப்பட்டது.

இன்றைய எடப்பாடி ஆட்சியில் எந்த ஒரு கூட்டம், போராட்டம் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லாமல் இருப்பதை அறிவோம். கடைசி முறையாகக் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதும் (2006 -2011) அவ்வாறே கூட்டங்கள், போராட்டங்கள் எதற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. போலி என்கவுன்டர் கொலைகளும் நிறைய நடந்தன. பதவி ஏற்ற உடனேயே நான்கு பேர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்காது என்கிற பிரச்சாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என அப்போது ‘குமுதம்’ இதழ் எழுதியது. கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதைக் கண்டித்து நாங்கள் ஒரு போராட்டத்தை நடத்தினோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மறுப்பை மீறி அதை நடத்தியபோது நான், தோழர் தியாகு உட்பட சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டோம்.

போலீஸ் அத்துமீறல்கள், இதுபோன்ற அடக்குமுறைகள், தொழிலாளர் போராட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று ஒடுக்குவது முதலான அம்சங்களில் எல்லா ஆட்சிகளையும் போலத்தான் கலைஞர் ஆட்சியும் இருந்தது.

நான்கு

கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்ற அதே ஆண்டுதான் இந்திய அளவில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. ‘இந்திரா காங்கிரஸ்’ எனவும் ‘பழைய காங்கிரஸ்’ எனவும் அவை அழைக்கப்பட்டன. இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா முதலானோர் பழைய காங்கிரசில் இருந்தனர். காமராஜரை முன்னிட்டு தமிழகத்தில் இந்திரா காங்கிரசைக் காட்டிலும் பழைய காங்கிரஸ்தான் வலுவாக இருந்தது.

அப்போது தி.மு.க பிளவுறவில்லை. கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.கவைப் பொருத்த மட்டில் அது ஒரு மாநிலக் கட்சி. அதற்கு அப்போதைய எதிரி காமராஜரின் பழைய காங்கிரஸ்தான். அதை வீழ்த்துவதே அப்போது அவருக்குத் தேவையாக இருந்தது. தமிழக அளவில் எந்த வகையிலும் தமக்குப் போட்டியாக இருக்க முடியாத இந்திரா காங்கிரசுடன் உறவு வைத்துக் கொண்டு 1971 பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார். இந்திரா காங்கிரஸ் மாநில அளவில் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டு எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரசைப் பொருத்த மட்டில் அதற்கு தமிழக மாநில அரசு முக்கியமில்லை. திமுக வைப் பொருத்தமட்டில் மத்திய ஆட்சி அதற்கு இரண்டாம் பட்சமே. மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் கூட்டணி அமைச்சரவையில் பங்கு பெறலாம் என்பதே அவரது அணுகல்முறையாக இருந்தது..

இன்றுவரை திமுகவினுடைய கூட்டணிக் கொள்கை இப்படித்தான் உள்ளது. ஆனால் இந்த அணுகல்முறை தி.முகவைப் பொருத்த மட்டில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகக்  குறைந்த பட்சம் வரலாற்றில் இருமுறை அமைந்தது.

1971ல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்த இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தபோது (1977) கருணாநிதி அதை ஆதரிக்காத நிலையை எடுத்ததையும், நெருக்கடி நிலையை எதிர்த்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்றோருக்கு புகலிடம் அளித்து வந்ததையும் கண்ட இந்திரா கலைஞர் ஆட்சியைக் கலைத்து (1976) அவரையும் அவரது கட்சியினரையும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்படுத்தியதையும் அறிவோம்.

நெருக்கடி நிலைக்குப் பின் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதல்வரானார். மத்தியில் ஜனதா ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகளில் அது கவிழ்ந்தது. மீண்டும் 1980 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்தபோது விளைவித்த குழப்பங்களின் விளைவாக மீண்டும் அப்படியான கூட்டணி வெற்றி பெறாது என்றும் மீண்டும் இந்திரா வெற்றி பெறத்தான் வாய்ப்புள்ளது என்றும் உணர்ந்த கலைஞர் இம்முறை இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை முறியடிக்க அதுவே வழி என்பது அவர் கணக்கு. “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” என அவர் முழக்கம் வைத்து நெருக்கடி நிலையில் தம் ஆட்சியை அழித்து, கட்சியையும் குறி வைத்துத் தாக்கி, தொண்டர்களைக் கடும் துன்பங்களுக்கு ஆளாக்கிய இந்திரா காந்தியுடன் அவர் கைகோர்த்தது இன்றுவரை விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. கொள்கைக்காக நெருக்கடிநிலையை எதிர்த்து நின்ற கலைஞர் அதன் பின் கொள்கை பற்றிக் கவலைப் படாமல் தனக்கு அப்போது வலிமையான போட்டியாக அமைந்த அ.தி.மு.கவை வீழ்த்துவதையே ஒரே குறிக்கோளாக வைத்துத் தன் அரசியலைத் தொடர்ந்தார்.

அதன் விளைவு அவரை 1999 – 2004 காலகட்டத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வைத்தது. அக்கால கட்டத்தில் பா.ஜ.க அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் கலைஞர் ஏற்றுக் கொள்ள நேரிட்டது. பாட நூல் திருத்தங்கள், கல்வி அமைப்புச் சீரழிவுகள், குஜராத் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ஆகிய அனைத்துக்கும் மௌன சாட்சியாய் கலைஞர் நிற்க வேண்டி வந்தது.

கோவைக் கலவரங்கள் நடந்தபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் முதற்கட்ட வன்முறைகளுக்குக் காரணமான இந்துத்துவ சக்திகளின்மீது நடவடிக்கை எடுக்க இயலாதவராகk கலைஞர் இருந்தார். அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வெடிகுண்டுத் தக்குதல்கள் நடத்தப்பட்டபோது (1998) எடுத்த நடவடிக்கைகளிலும், முஸ்லிம் கைதிகளை நடத்திய வகைகளிலும் கலைஞர் ஆட்சி முஸ்லிம்களின் சட்ட ரீதியான உரிமைகள் எதையும் மதிக்கவில்லை.

இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இதழ்களும் இந்துத்துவச் சார்பாளர்களும் தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் தம்மை வலுப்படுத்தி நிலை நிறுத்திக் கொண்ட பொற்காலமாக பா.ஜ.க வுடன் கலைஞர் கூட்டணி அமைத்திருந்த இக் காலகட்டத்தையே குறிப்பிடுகின்றனர் (Aravindan Neelakandan, Muthuvel Karunanithi- The Lasr Dravidian?, Swarajya, Aug 7, 2018). இஸ்லாமிய சக்திகளுடன் கூட்டணி அமைத்து இந்துக்களுக்கு ஆதரவான அரசியலுடன் செயல்பட்ட காலமாகவும் இதையே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எந்தக் கொள்கைகளுக்காக அவர் தன் ஆட்சியை இழந்து, கட்சித் தொண்டர்களையும் பல்வேறு துன்பங்களுக்கும் ஆட்படுத்தினாரோ அந்தக் கொள்கைகளை ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றுக்காக அவர் கைவிட்ட கதைகள் இவைதான். இன்றளவும் தி.மு.க பா.ஜ.க உடன் தேர்தல்கூட்டணி அமைக்குகுமா அமைக்காதா என்கிற ஐயத்துடனேயே மக்கள் அதை நோக்க நேர்ந்ததன் பின்னணி இதுவே.

எனினும் கலைஞர் இயல்பில் ஒரு மதச்சார்பற்ற பார்வையைக் கொண்டவர்தான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இந்துத்துவ வெறியர் ஒருவர் எழுதியுள்ள மேற்கண்ட கட்டுரையிலும் கூட சாராம்சத்தில் அவர் இந்துத்துவ எதிர்ப்பாளர் என்றே “குற்றம்”சாட்டப்படுகிறார்.

இந்த இடைக்கால அரசியல் தடுமாற்றங்களுக்கும் அப்பால் அவர் சமூகநீதி நோக்குடன் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வரலாற்றில் என்றென்றும் நினைவு கொள்ளப்படுவது உறுதி.

எதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை

விகடன் தடம், செப் 2018

கலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது. நீண்ட காலம் அரசியல் உலகில் தடம் பதித்து, எண்ணற்ற மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர். அப்படியான ஒருவரின் மறைவு என்கிற அளவில் குறைந்த பட்ச அனுதாபமும் கூட இல்லாமல் வெளிப்படையாக அவர் மீது வெறுப்பைக் கக்குபவர்கள் அடைகிற ஒரு சங்கடம்தான் அந்த சுவாரஸ்யத்துக்குரிய அம்சம். அவர்களால் வெறுப்பைத்தான் கக்க முடிகிறதே ஒழிய ஏன் தாங்கள் இந்த வெறுப்பைக் கக்க நேர்கிறது என்பதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.

கலைஞரின் சமாதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வெறுப்பைக் கக்கும் அவர்கள்,

“கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வரலாம் எனச் சட்டம் கொண்டு வந்தார், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதமாகவும், பிற்படுத்தப் பட்டோருக்குமான இட ஒதுக்கீட்டை  25 சதத்திலிருந்து 31 சதமாகவும் உயர்த்தினார், சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பரிசுகள் அளித்து ஊக்குவித்தார், தமிழ்நாட்டை இந்தி இல்லாத மாநிலமாக ஆக்கினார், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிச் சட்டம் இயற்றினார், எல்லாச் சாதியினரும் ஒன்றாக வாழும் சமத்துவபுரங்களை அமைத்தார், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தார், பாலம் கட்டுவதற்கு இராமன் என்ன எஞ்சினீயரா எனக் கேட்டார், இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் திரும்பி வந்தபோது அதை வரவேற்காமல் அவமதித்தார் – இதை எல்லாம் நாங்கள் எப்படிச் சகித்துக்க் கொள்வோம், இவற்றுக்காகத்தான் நாங்கள் அவரை ஜென்ம வைரியாகப் பார்க்கிறோம்”

என எப்படிச் சொல்வார்கள்?

இப்படித் தன் அரசியல் எதிரிகளை ஏன் தாங்கள் அவரை எதிர்க்கிறோம் எனச் சொல்ல இயலாதவர்களாக ஆக்கியதுதான் கலைஞர் அரசியல் களத்தில் அடைந்த முக்கிய வெற்றி எனத் தோன்றுகிறது. அவர் மீது வீமர்சனங்களே இல்லை என்பதோ அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதோ அல்ல. ஆனால் எந்த விமர்சனங்களும் மேலே குறிப்பிட்ட தமிழ்ச் சனாதனிகள் ஏன் அவரை வெறுத்தார்கள் என்பதைக் கணக்கில் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

மிகவும் இளம் வயதில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் அவர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது (1942) அவருக்குப் பதினெட்டு வயது. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டபோது (1947) இருபத்தி மூன்று வயது. முதல் பொதுத் தேர்தல் நடந்த அதே ஆண்டில்தான் (1952) அவரது ‘பராச்சக்தி’ திரைப்படம் வெளிவந்து பெரும் புகழை அவர் எட்டியிருந்தார். 1953 ல் கல்லக்குடி போராட்டத்தின் ஊடாக அவரது புகழ் மேலும் கூடியது. அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலப் பின்னணி இதுதான்.

பிரிட்டிஷ் ஆட்சியினூடாக இங்கு தேர்தல் அரசியல் அறிமுகப்பட்டுத்தப்பட்ட அதே காலத்தில் தென்னக அரசியலைப் பொருத்தமட்டில்  அது வட இந்திய அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருந்தது. இங்கே இந்து – முஸ்லிம் பிரச்சினை அரசியலில் முதன்மைப்படவில்லை. மாறாக திராவிடர் X ஆரியர் என்கிற சமூக நீதிப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை இங்கே மேலுக்கு வந்தது. காங்கிரசைக் காட்டிலும் இங்கே நீதிக் கட்சி வலுவாக இருந்தது. இட ஒதுக்கீடு எனும் கருத்தாக்கம் இங்கே முக்கிய அரசியலாக வடிவெடுத்திருந்தது. 1940 களில் இங்கு காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த நீதிக்கட்சி அண்ணா, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாற்று அரசியல் களத்தை அமைத்துத் தந்தது. சுய மரியாதை, மொழிப்பற்று, திராவிடத் தனித்துவம் ஆகியன அன்று இளைஞர்களின் ஈப்புக்குரிய கொள்கைகளாக அமைந்தன. இந்திய தேசிய உருவாக்கம், பொதுவுடைமைச் சமூக உருவாக்கம் என்கிற அரசியல் லட்சியங்களுக்கு அப்பால் இங்கு இப்படி மூன்றாவதாக ஒரு மாற்று அடித்தள அரசியல் உருவாகியிருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து உலகெங்கும் ஒரு சுதந்திர வேட்கை, ஜனநாயக உணர்வு, மனித உரிமைப் பிரகடனம்,, அரசியல்சட்ட ஆளுகை, அடிப்படை உரிமைகள் என்கிற எண்ணங்கள் மேலெழுந்து கொண்டிருந்த காலம் அது. உலகெங்கிலுமிருந்த ஒரு பொதுப்போக்கு இது. ருஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கூட ஒரு வகையில் புரட்சி நிறைவேறி சமதர்மம் உருவாகி விட்டதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. ஆக அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டம், பள்ளிக் கூடங்களை விட்டு வெளியேறி சிறைச்சாலைகளை நிரப்புதல், ஏதோ ஒரு லட்சியத்தின் பெயரால் தூக்குக் கயிற்றை முத்தமிடல் என்கிற அரசியல் மதிப்பீடுகள் தகர்ந்திருந்த அல்லது தணிந்திருந்த காலத்தில் உருவானதுதான் தி.மு.க.

அண்ணா தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களை முழுமையாகப் படிப்பவர்களுக்குத் தெரியும். “பெரிய போராட்டங்கள், தியாகங்கள், சிறைச்சாலைகளை நிரப்புதல் இதெல்லாம் இன்றைய அரசியல் இல்லை; தம்பி! மனையில் மகிழ்ந்திரு, பிளைகளை நன்றாகப் படிக்க வை, கூடவே தமிழ் உணர்வையும் கொண்டிரு, இந்திய நாட்டுத் தூதுவர்கள் உலகெங்கும் உள்ளார்கள், நமது தேசியக் கொடி ஐ.நா அவையில் பறப்பதைப் பார்” – என்பவைதான் அண்ணாவின் கடிதங்களின் சாராம்சமாக இருந்தன.

இப்படியான மதிப்பீடுகளின் ஊடாகவே தி.மு.கவினர், தேசியக் கொடியை எரிப்பதையும்,  சிறைகளை நிரப்புவதையும் தன் அரசியலாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்த பெரியாரின் இயக்கத்திலிருந்தும் பிரிந்தனர். இன்னொரு பக்கம் அன்று இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளாமல் ஆயுதப் போராட்டம் என்கிற வடிவை எடுத்த கம்யூனிஸ்டுகள் நேரு அரசால் கொடுமையாக ஒடுக்கப்பட்டனர். சூழலும் மதிப்பீடுகளும் மாறி இருந்ததைக் கம்யூனிஸ்டுகள் அண்ணாவைப்போலப் ‘புத்திசாலித்தனமாக’ப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தி.மு.க வீழ்த்தியது என்பதைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள் இங்கே தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொண்டனர் என்பதே பொருத்தம்.

1967ல் மத்திய அரசு பிரிவினை கேட்பதைத் தேசத்துரோகமாகத் தடை செய்த அடுத்த கணமே தி.மு.க திராவிடநாட்டு கோரிக்கையைக் கைவிட்டுக் கண் சிமிட்டியதை நாம் இந்தப் பின்னணியில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நான் இழிவாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். ரொம்பவும் நடைமுறை சார்ந்த pragmatic அரசியல் இது. அண்ணாவுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு இந்தப் ”ப்ராக்மாடிசத்தை” (pragmatism) தமிழ் மக்களின் தனித்துவமான அரசியலாகக் கொண்டு சென்றவர் கலைஞர்.

மைய நீரோட்டத்தில் கலந்து கொண்டதனால் அவர் தென்னகத்தின் தனித்துவங்களைக் கைவிட்டு விடவில்லை. மாநிலசுயாட்சி என்கிற அடிப்படையில் மாநில உரிமைக் கோரிக்கைகளை அவர் உரத்து ஒலித்துக் கொண்டே இருந்தார். தனது அரசியல் சமரசத்துக்கு ஈடாக இன்னொரு பக்கம் அவர் குறியீட்டு (Symbolic) ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளியல் ரீதியாகவும் பல உரிமைகளை அவர் தக்க வைத்துக் கொண்டார். தமிழகத்துக்கென ஒரு மொழி வாழ்த்துப் பாடல், சுதந்திரநாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை ஆகியன இப்படிக் குறியீட்டு ரீதியாகப் பெற்ற உரிமைகள்; ஏக இந்தியா என்பதன் அடையாளமாக உள்ள தேசியக் கொடியை ஏற்றுவது, சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தை ‘எடிட்’ பண்ணி வடமொழியைக் காட்டிலும் தமிழை உயர்த்திச் சொல்லும் வரிகளை நீக்கியது ஆகியன கலைஞர் தமிழ் மக்கள் மீது சுமத்திய சமரசங்கள். இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது, முஸ்லிம் வெறுப்பைத் தமிழகத்துக்குள் அனுமதிக்காதது, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி தமிழ்ச் சமூக அமைப்புக்குத் தக அருந்ததியர், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என ஒதுக்கீட்டை விரிவாக்கியது முதலியன அரசியல் மற்றும் பொருளியல் ரீதியாக நமக்குக் கிடைத்த பயன்கள். கலைஞரை அரசியல் ரீதியாகத் தோற்கடித்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட அவரது வழியிலேயேதான் தொடர்ந்து செல்ல முடிந்தது. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது மதிய உணவை விரிவாக்குவது என்பதாகத்தான் அவர்கள் தம் சாதனைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

பொது விநியோகமுறையை இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக விரிவாக்கியது, பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கி இந்தியாவிலேயே மலிவான சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது, பல்கலைக் கழகங்களை அதிகப்படுத்தியது, நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுத்தது, எல்லாவற்றிற்கும் மேலாகக் குடிசைமாற்று வாரியம் அமைத்தது முதலியன கலைஞர் அரசின் சாதனைகளாகச் சொல்லத் தக்கவை.

தேசிய அரசியலில் அவர் நெருக்கடி நிலயை எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தது வரலாற்றில் மறக்க இயலாத ஒன்று. மத்திய அரசில் நான்குமுறை அவரது கட்சியினர் பங்குபெற்றனர். எனினும் வாஜ்பேயீ அமைச்சரவையில் பங்குபெற்ற ஐந்தாண்டுகாளில் அதன் மூலம் தமிழகத்துக்குப் பெரிய பலன்கள் ஏதும் இல்லை. அமைச்சரவைக் குழுக்கள் (GoM) என்கிற அமைப்பைப் புகுத்தி எல்லா அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டபோது அந்த அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க உட்பட மாநிலக் கட்சிகளுக்கு உரிய பங்களிக்கப்படவில்லை. அதை எல்லாம் தி.மு.க மௌனமாக ஏற்றுக் கொண்டது.

கலைஞரின் அரசியல் வாழ்வில் கடும் விமர்சனத்துக்குரிய காலமும் (1999 – 2004) அதுதான். எந்த வகையிலும் திராவிடக் கொள்கைகளுக்குப் பொருத்தம் இல்லாத இந்துத்துவ அரசியலுடன் தி.மு.க கைகோர்த்து நின்றது மட்டுமல்ல, பாடநூல் திருத்தங்கள் உட்பட பா.ஜ.க அரசின் அத்தனை இந்துத்துவச் செயற்பாடுகளையும் அது மௌனமாக ஏற்றுக் கொண்டது. மோடி ஆட்சியில் குஜராத்தில் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற வன்முறைகளின் போது (2002) அவற்றை உரிய முறையில் கண்டிக்கும் திராணியற்றவராகக் கலைஞர் நின்றதை மறக்க இயலாது. அதே காலகட்டத்தில்தான் கோவையிலும் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டத்தில் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பின்னர் நடந்த வெடிகுண்டு பயங்கரவாதங்கள் தடுக்கப்பட்டிருக்கும். குண்டு வெடிப்பை ஒட்டி முஸ்லிம்கள் மீது  கடும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் ஆட்சியில் இருந்தவர் கலைஞர்தான். இன்றுவரை உரிய தண்டனைக் காலம் முடிந்த பின்னும் முஸ்லிம் கைதிகள் விடுதலை அடைய இயலாமல் இருப்பதற்குக் கால்கோள் இட்டவரும் அவர்தான்.  மதவாத அரசியலை முன்வைத்து இயங்கும் “ஸ்வராஜ்யாமேக்” எனும் ஆக்கில ஊடகம் கலைஞரை அவரது இறப்புக்குப் பின் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில் அவரது சிறந்த அரசியல் காலகட்டமாக இதைக் (1999- 2004) குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

பெரியார் மண் என நாம் சொல்லிக் கொள்ளும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாத இயக்கங்கள் கால் பதித்ததை ஜெயா ஆட்சியைப் போலவே கலைஞர் ஆட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

மாநிலக் கட்சி என்றால் அது மாநில உரிமைகளைப் பேசுவதோடு முடங்க வேண்டும் என்பதில்லை. உலகளாவிய அரசியலிலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அவை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டும், அவற்றைச் செயல்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் கலைஞரின் அரசியல் அப்படித்தான் இருந்தது. உலகமயம் என்கிற பெயரில் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கக் கூடிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மத்திய அரசுகள் மேற்கொண்டபோது கலைஞர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு செயலூக்கமற்ற பார்வையாளராகவும், அவற்றைச் செயல் படுத்துபவராகவுமே அவர் இருந்தார்.

வாரிசு அரசியல் என்பது இந்தியா ஒட்டுமொத்தத்தின்  சாபக் கேடு என்ற போதிலும் வாரிசு அரசியலின் உச்சத்தைத் தொட்டது கலைஞர்தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. ஆபாசம் எனச் சொல்லும் அளவிற்கு அவரது குடும்ப அரசியல் அமைந்தது. எல்லா மட்டங்களிலும் ஊழல்கள் மலிந்த ஆட்சியாகவும் கலைஞர் ஆட்சிகள் அமைந்தன.

ஒரு பெரிய அரசியல் கட்சி என்கிற வகையில் இடதுசாரிக் கட்சிகளைக் காட்டிலும் வலுவான தொழிற்சங்கங்களும், விவசாயச் சங்கங்களும் தி.முக வசம் இருந்த போதிலும் அதனூடாக தொழிலாளர்களும், விவசாயிகளும் பெரிய பலன்களை அடைந்துவிடவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஐந்து தடவைகளில் பத்தொன்பதாண்டு காலம் மாநில் முதல்வராக இருந்த யாருக்கும் ஒரு நீண்ட சாதனைப் பட்டியல் இருக்கும்தான். காமராஜர், எம்.ஜி.ஆர் உட்பட எல்லோருக்கும் சாதனைப் பட்டியல்கள் உண்டுதான். ஆனால் அந்தச் சாதனைகள் எந்தத் திசையை நோக்கி  அமைந்தன, எந்தப் பிரிவு மக்களுக்கு அவை வலுசேர்த்தன, யாரால் அவை வெறுக்கும்படியாக அமைந்தன என்கிற வகையில்தான் ஒரு ஆட்சியாளரின் சாதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சமூகநீதியை நேசிக்கும் யாரும் கலைஞரை மறந்து விடவோ வெறுத்துவிடவோ முடியாது.

 

 

 

 

கலைஞர்: எதிரிகளால் வெறுக்கத்தான் முடிகிறதே ஒழிய ஏன் எனச் சொல்ல முடிவதில்லை

விகடன் தடம், செப் 2018

கலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது. நீண்ட காலம் அரசியல் உலகில் தடம் பதித்து, எண்ணற்ற மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர். அப்படியான ஒருவரின் மறைவு என்கிற அளவில் குறைந்த பட்ச அனுதாபமும் கூட இல்லாமல் வெளிப்படையாக அவர் மீது வெறுப்பைக் கக்குபவர்கள் அடைகிற ஒரு சங்கடம்தான் அந்த சுவாரஸ்யத்துக்குரிய அம்சம். அவர்களால் வெறுப்பைத்தான் கக்க முடிகிறதே ஒழிய ஏன் தாங்கள் இந்த வெறுப்பைக் கக்க நேர்கிறது என்பதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.

கலைஞரின் சமாதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வெறுப்பைக் கக்கும் அவர்கள்,

“கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வரலாம் எனச் சட்டம் கொண்டு வந்தார், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதமாகவும், பிற்படுத்தப் பட்டோருக்குமான இட ஒதுக்கீட்டை  25 சதத்திலிருந்து 31 சதமாகவும் உயர்த்தினார், சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பரிசுகள் அளித்து ஊக்குவித்தார், தமிழ்நாட்டை இந்தி இல்லாத மாநிலமாக ஆக்கினார், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிச் சட்டம் இயற்றினார், எல்லாச் சாதியினரும் ஒன்றாக வாழும் சமத்துவபுரங்களை அமைத்தார், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தார், பாலம் கட்டுவதற்கு இராமன் என்ன எஞ்சினீயரா எனக் கேட்டார், இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் திரும்பி வந்தபோது அதை வரவேற்காமல் அவமதித்தார் – இதை எல்லாம் நாங்கள் எப்படிச் சகித்துக்க் கொள்வோம், இவற்றுக்காகத்தான் நாங்கள் அவரை ஜென்ம வைரியாகப் பார்க்கிறோம்”

என எப்படிச் சொல்வார்கள்?

இப்படித் தன் அரசியல் எதிரிகளை ஏன் தாங்கள் அவரை எதிர்க்கிறோம் எனச் சொல்ல இயலாதவர்களாக ஆக்கியதுதான் கலைஞர் அரசியல் களத்தில் அடைந்த முக்கிய வெற்றி எனத் தோன்றுகிறது. அவர் மீது வீமர்சனங்களே இல்லை என்பதோ அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதோ அல்ல. ஆனால் எந்த விமர்சனங்களும் மேலே குறிப்பிட்ட தமிழ்ச் சனாதனிகள் ஏன் அவரை வெறுத்தார்கள் என்பதைக் கணக்கில் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

மிகவும் இளம் வயதில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் அவர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது (1942) அவருக்குப் பதினெட்டு வயது. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டபோது (1947) இருபத்தி மூன்று வயது. முதல் பொதுத் தேர்தல் நடந்த அதே ஆண்டில்தான் (1952) அவரது ‘பராச்சக்தி’ திரைப்படம் வெளிவந்து பெரும் புகழை அவர் எட்டியிருந்தார். 1953 ல் கல்லக்குடி போராட்டத்தின் ஊடாக அவரது புகழ் மேலும் கூடியது. அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலப் பின்னணி இதுதான்.

பிரிட்டிஷ் ஆட்சியினூடாக இங்கு தேர்தல் அரசியல் அறிமுகப்பட்டுத்தப்பட்ட அதே காலத்தில் தென்னக அரசியலைப் பொருத்தமட்டில்  அது வட இந்திய அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருந்தது. இங்கே இந்து – முஸ்லிம் பிரச்சினை அரசியலில் முதன்மைப்படவில்லை. மாறாக திராவிடர் X ஆரியர் என்கிற சமூக நீதிப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை இங்கே மேலுக்கு வந்தது. காங்கிரசைக் காட்டிலும் இங்கே நீதிக் கட்சி வலுவாக இருந்தது. இட ஒதுக்கீடு எனும் கருத்தாக்கம் இங்கே முக்கிய அரசியலாக வடிவெடுத்திருந்தது. 1940 களில் இங்கு காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த நீதிக்கட்சி அண்ணா, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாற்று அரசியல் களத்தை அமைத்துத் தந்தது. சுய மரியாதை, மொழிப்பற்று, திராவிடத் தனித்துவம் ஆகியன அன்று இளைஞர்களின் ஈப்புக்குரிய கொள்கைகளாக அமைந்தன. இந்திய தேசிய உருவாக்கம், பொதுவுடைமைச் சமூக உருவாக்கம் என்கிற அரசியல் லட்சியங்களுக்கு அப்பால் இங்கு இப்படி மூன்றாவதாக ஒரு மாற்று அடித்தள அரசியல் உருவாகியிருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து உலகெங்கும் ஒரு சுதந்திர வேட்கை, ஜனநாயக உணர்வு, மனித உரிமைப் பிரகடனம்,, அரசியல்சட்ட ஆளுகை, அடிப்படை உரிமைகள் என்கிற எண்ணங்கள் மேலெழுந்து கொண்டிருந்த காலம் அது. உலகெங்கிலுமிருந்த ஒரு பொதுப்போக்கு இது. ருஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கூட ஒரு வகையில் புரட்சி நிறைவேறி சமதர்மம் உருவாகி விட்டதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. ஆக அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டம், பள்ளிக் கூடங்களை விட்டு வெளியேறி சிறைச்சாலைகளை நிரப்புதல், ஏதோ ஒரு லட்சியத்தின் பெயரால் தூக்குக் கயிற்றை முத்தமிடல் என்கிற அரசியல் மதிப்பீடுகள் தகர்ந்திருந்த அல்லது தணிந்திருந்த காலத்தில் உருவானதுதான் தி.மு.க.

அண்ணா தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களை முழுமையாகப் படிப்பவர்களுக்குத் தெரியும். “பெரிய போராட்டங்கள், தியாகங்கள், சிறைச்சாலைகளை நிரப்புதல் இதெல்லாம் இன்றைய அரசியல் இல்லை; தம்பி! மனையில் மகிழ்ந்திரு, பிளைகளை நன்றாகப் படிக்க வை, கூடவே தமிழ் உணர்வையும் கொண்டிரு, இந்திய நாட்டுத் தூதுவர்கள் உலகெங்கும் உள்ளார்கள், நமது தேசியக் கொடி ஐ.நா அவையில் பறப்பதைப் பார்” – என்பவைதான் அண்ணாவின் கடிதங்களின் சாராம்சமாக இருந்தன.

இப்படியான மதிப்பீடுகளின் ஊடாகவே தி.மு.கவினர், தேசியக் கொடியை எரிப்பதையும்,  சிறைகளை நிரப்புவதையும் தன் அரசியலாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்த பெரியாரின் இயக்கத்திலிருந்தும் பிரிந்தனர். இன்னொரு பக்கம் அன்று இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளாமல் ஆயுதப் போராட்டம் என்கிற வடிவை எடுத்த கம்யூனிஸ்டுகள் நேரு அரசால் கொடுமையாக ஒடுக்கப்பட்டனர். சூழலும் மதிப்பீடுகளும் மாறி இருந்ததைக் கம்யூனிஸ்டுகள் அண்ணாவைப்போலப் ‘புத்திசாலித்தனமாக’ப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தி.மு.க வீழ்த்தியது என்பதைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள் இங்கே தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொண்டனர் என்பதே பொருத்தம்.

1967ல் மத்திய அரசு பிரிவினை கேட்பதைத் தேசத்துரோகமாகத் தடை செய்த அடுத்த கணமே தி.மு.க திராவிடநாட்டு கோரிக்கையைக் கைவிட்டுக் கண் சிமிட்டியதை நாம் இந்தப் பின்னணியில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நான் இழிவாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். ரொம்பவும் நடைமுறை சார்ந்த pragmatic அரசியல் இது. அண்ணாவுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு இந்தப் ”ப்ராக்மாடிசத்தை” (pragmatism) தமிழ் மக்களின் தனித்துவமான அரசியலாகக் கொண்டு சென்றவர் கலைஞர்.

மைய நீரோட்டத்தில் கலந்து கொண்டதனால் அவர் தென்னகத்தின் தனித்துவங்களைக் கைவிட்டு விடவில்லை. மாநிலசுயாட்சி என்கிற அடிப்படையில் மாநில உரிமைக் கோரிக்கைகளை அவர் உரத்து ஒலித்துக் கொண்டே இருந்தார். தனது அரசியல் சமரசத்துக்கு ஈடாக இன்னொரு பக்கம் அவர் குறியீட்டு (Symbolic) ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளியல் ரீதியாகவும் பல உரிமைகளை அவர் தக்க வைத்துக் கொண்டார். தமிழகத்துக்கென ஒரு மொழி வாழ்த்துப் பாடல், சுதந்திரநாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை ஆகியன இப்படிக் குறியீட்டு ரீதியாகப் பெற்ற உரிமைகள்; ஏக இந்தியா என்பதன் அடையாளமாக உள்ள தேசியக் கொடியை ஏற்றுவது, சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தை ‘எடிட்’ பண்ணி வடமொழியைக் காட்டிலும் தமிழை உயர்த்திச் சொல்லும் வரிகளை நீக்கியது ஆகியன கலைஞர் தமிழ் மக்கள் மீது சுமத்திய சமரசங்கள். இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது, முஸ்லிம் வெறுப்பைத் தமிழகத்துக்குள் அனுமதிக்காதது, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி தமிழ்ச் சமூக அமைப்புக்குத் தக அருந்ததியர், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என ஒதுக்கீட்டை விரிவாக்கியது முதலியன அரசியல் மற்றும் பொருளியல் ரீதியாக நமக்குக் கிடைத்த பயன்கள். கலைஞரை அரசியல் ரீதியாகத் தோற்கடித்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட அவரது வழியிலேயேதான் தொடர்ந்து செல்ல முடிந்தது. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது மதிய உணவை விரிவாக்குவது என்பதாகத்தான் அவர்கள் தம் சாதனைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

பொது விநியோகமுறையை இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக விரிவாக்கியது, பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கி இந்தியாவிலேயே மலிவான சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது, பல்கலைக் கழகங்களை அதிகப்படுத்தியது, நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுத்தது, எல்லாவற்றிற்கும் மேலாகக் குடிசைமாற்று வாரியம் அமைத்தது முதலியன கலைஞர் அரசின் சாதனைகளாகச் சொல்லத் தக்கவை.

தேசிய அரசியலில் அவர் நெருக்கடி நிலயை எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தது வரலாற்றில் மறக்க இயலாத ஒன்று. மத்திய அரசில் நான்குமுறை அவரது கட்சியினர் பங்குபெற்றனர். எனினும் வாஜ்பேயீ அமைச்சரவையில் பங்குபெற்ற ஐந்தாண்டுகாளில் அதன் மூலம் தமிழகத்துக்குப் பெரிய பலன்கள் ஏதும் இல்லை. அமைச்சரவைக் குழுக்கள் (GoM) என்கிற அமைப்பைப் புகுத்தி எல்லா அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டபோது அந்த அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க உட்பட மாநிலக் கட்சிகளுக்கு உரிய பங்களிக்கப்படவில்லை. அதை எல்லாம் தி.மு.க மௌனமாக ஏற்றுக் கொண்டது.

கலைஞரின் அரசியல் வாழ்வில் கடும் விமர்சனத்துக்குரிய காலமும் (1999 – 2004) அதுதான். எந்த வகையிலும் திராவிடக் கொள்கைகளுக்குப் பொருத்தம் இல்லாத இந்துத்துவ அரசியலுடன் தி.மு.க கைகோர்த்து நின்றது மட்டுமல்ல, பாடநூல் திருத்தங்கள் உட்பட பா.ஜ.க அரசின் அத்தனை இந்துத்துவச் செயற்பாடுகளையும் அது மௌனமாக ஏற்றுக் கொண்டது. மோடி ஆட்சியில் குஜராத்தில் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற வன்முறைகளின் போது (2002) அவற்றை உரிய முறையில் கண்டிக்கும் திராணியற்றவராகக் கலைஞர் நின்றதை மறக்க இயலாது. அதே காலகட்டத்தில்தான் கோவையிலும் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டத்தில் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பின்னர் நடந்த வெடிகுண்டு பயங்கரவாதங்கள் தடுக்கப்பட்டிருக்கும். குண்டு வெடிப்பை ஒட்டி முஸ்லிம்கள் மீது  கடும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் ஆட்சியில் இருந்தவர் கலைஞர்தான். இன்றுவரை உரிய தண்டனைக் காலம் முடிந்த பின்னும் முஸ்லிம் கைதிகள் விடுதலை அடைய இயலாமல் இருப்பதற்குக் கால்கோள் இட்டவரும் அவர்தான்.  மதவாத அரசியலை முன்வைத்து இயங்கும் “ஸ்வராஜ்யாமேக்” எனும் ஆக்கில ஊடகம் கலைஞரை அவரது இறப்புக்குப் பின் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில் அவரது சிறந்த அரசியல் காலகட்டமாக இதைக் (1999- 2004) குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

பெரியார் மண் என நாம் சொல்லிக் கொள்ளும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாத இயக்கங்கள் கால் பதித்ததை ஜெயா ஆட்சியைப் போலவே கலைஞர் ஆட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

மாநிலக் கட்சி என்றால் அது மாநில உரிமைகளைப் பேசுவதோடு முடங்க வேண்டும் என்பதில்லை. உலகளாவிய அரசியலிலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அவை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டும், அவற்றைச் செயல்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் கலைஞரின் அரசியல் அப்படித்தான் இருந்தது. உலகமயம் என்கிற பெயரில் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கக் கூடிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மத்திய அரசுகள் மேற்கொண்டபோது கலைஞர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு செயலூக்கமற்ற பார்வையாளராகவும், அவற்றைச் செயல் படுத்துபவராகவுமே அவர் இருந்தார்.

வாரிசு அரசியல் என்பது இந்தியா ஒட்டுமொத்தத்தின்  சாபக் கேடு என்ற போதிலும் வாரிசு அரசியலின் உச்சத்தைத் தொட்டது கலைஞர்தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. ஆபாசம் எனச் சொல்லும் அளவிற்கு அவரது குடும்ப அரசியல் அமைந்தது. எல்லா மட்டங்களிலும் ஊழல்கள் மலிந்த ஆட்சியாகவும் கலைஞர் ஆட்சிகள் அமைந்தன.

ஒரு பெரிய அரசியல் கட்சி என்கிற வகையில் இடதுசாரிக் கட்சிகளைக் காட்டிலும் வலுவான தொழிற்சங்கங்களும், விவசாயச் சங்கங்களும் தி.முக வசம் இருந்த போதிலும் அதனூடாக தொழிலாளர்களும், விவசாயிகளும் பெரிய பலன்களை அடைந்துவிடவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஐந்து தடவைகளில் பத்தொன்பதாண்டு காலம் மாநில் முதல்வராக இருந்த யாருக்கும் ஒரு நீண்ட சாதனைப் பட்டியல் இருக்கும்தான். காமராஜர், எம்.ஜி.ஆர் உட்பட எல்லோருக்கும் சாதனைப் பட்டியல்கள் உண்டுதான். ஆனால் அந்தச் சாதனைகள் எந்தத் திசையை நோக்கி  அமைந்தன, எந்தப் பிரிவு மக்களுக்கு அவை வலுசேர்த்தன, யாரால் அவை வெறுக்கும்படியாக அமைந்தன என்கிற வகையில்தான் ஒரு ஆட்சியாளரின் சாதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சமூகநீதியை நேசிக்கும் யாரும் கலைஞரை மறந்து விடவோ வெறுத்துவிடவோ முடியாது.

 

 

 

 

எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்

நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20                     

கிறிஸ்துவிற்கும், அசோகருக்கும் முந்திய நூற்றாண்டுகளில் பிராமணத்திற்கும் சிரமணத்திற்கும் இடையே கங்கைச் சமவெளியில் நடந்த கருத்து மோதல்களின் பல்வேறு அம்சங்களில் இல்லறத்தையும் துறவறத்தையும் முன்வைத்து நிகழ்ந்த மோதலும் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை பொருள் ஈட்டினும், அவை அனைத்தையும் அவன் அறச்செயல்களிலேயே செலவழித்த போதிலும் தனியனாக இருந்து அவன் அதைச் செய்தால் அவன் புண்ணிய உலகை அடைவது சாத்தியமில்லை என்பது பிராமணச் சிந்தனை. வணிகத்தின் ஊடாகப் பெருஞ்செல்வம் ஈட்டி, மதுரை மாநகரில் அரச விருதுகளுடன் வாழ்ந்து வந்த தருமதத்தனிடம் இல்லறத்தில் ஈடுபட்டு, பத்தினியோடு இணைந்து செய்யாத எந்த அறமும் பயனற்றது என்று அறிவுரைப்பவனாக ‘அந்தணாளன்’ ஒருவனை முன்னிறுத்துவதன் ஊடாக அதுதான் வைதீகம் முன்வைக்கும் அறம் என்பதைச் சாத்தனார் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் பெரும் புலவர் சாத்தனார் அத்தோடு நிறுத்தவில்லை. வழக்கம்போல அன்று வைதீகத்திற்கு எதிர் நிலையாய் நின்ற அவதீகம் (சிரமணம்) இது தொடர்பாக உரைக்கும் மாற்று அறத்தை உடனடியாக அங்கே முவைக்கிறார். பிராமண X சிரமண அறங்களை இவ்வாறு எதிர் எதிராக (juxtapose) வைத்து சிரமணத்தை விளக்குவதும் முன்னிறுத்துவதும் சாத்தனார் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று என்பதைக் கவனித்து வருகிறோம். மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்டுள்ள கிளைக் கதைகள் பௌத்த அறங்களை விளக்கப் பயன்படும் களங்களாக அவரால் அமைக்கப் பட்டிருப்பதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தருமதத்தன் – விசாகை கிளைக்கதையும் இங்கு அவ்வாறே அமைக்கப்படுகிறது.

பத்தினி ஒருவளின்றிச் சேர்க்கும் செல்வமும், செய்யும் அறமும் பயனற்றது என்கிற அந்தணாளனின் கருத்தை ஏற்ற தருமதத்தன் தன் அறுபதாம் அகவையில், கன்னி மாடத்தில் வாழ்வைக் கழித்து வரும் விசாகையைப் பத்தினியாக ஏற்றுத் தான் சேர்த்த செல்வங்களை அறச் செயல்களுக்குப் பயன்படுத்தும் நோக்குடன் அவளிருக்கும் காகந்தி நகருக்குத் திரும்பிய செய்தியை விசாகை அறிகிறாள். கன்னிமாடத்தை விட்டு நீங்கி அவனைச் சந்திக்க நாணமோ, தயக்கமோ இன்றி பலரும் காண வீதிவழி சென்றாள். ஒரு காலத்தில் ஊர் வம்பால் பிரிய நேர்ந்தவர்கள் அவர்கள். இன்று அவ் ஊரறிய அவனைப் பார்க்கச் செல்கிறாள் அவள். அவன் அவள் இருக்கும் இடம் நோக்கிச் செல்லும் முன்பாகவே, அவளே அவனிடம் நோக்கிச் செல்கிறாள். இருவரின் வயதும், வாழ்நெறிகளும் ஊரலர்களுக்கு இன்று வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அவர்கள் மீது எழுந்த வீண் பழிச்சொல்லுக்கு இப்போது இடமில்லாமற் போயிற்று.8dac4-buddha2bdouble

அவனை நேர்கண்ட அவள், “நாம் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லர். முன்பு நம்மைக் குறித்து எழுந்த வம்புகளுக்குக் காரணமான நம் அழகுகள் எங்கு சென்று ஒளிந்தன? நம் இளமையும், காம இச்சையும் இன்று எங்கே போயின? மன உறுதியற்றவனே சொல்! இப்பிறவியில் நான் உன்னடி சேரேன். அடுத்த பிறவியில் நான் உன் மனையாளாகி உன் ஏவல்களை நிறைவேற்றுவேன். இவ் உடல், இளமை, வளந்தரு செல்வம் எவையும் நிலையானவை அல்ல. புண்ணிய உலகை புதல்வர்களாலும் தந்துவிட இயலாது. என்றென்றும் உயிருக்கு உற்ற துணையாய் இருப்பது அறம் ஒன்றே. தானம் செய்!” – என்றனள் விசாகை.

தருமதத்தன் அதை ஏற்றான். மாமன் மகளிடன் தன் மிக்க பெருஞ் செலவத்தைக் காட்டி இருவரும் வானத்து விண்மீன்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமான நல்லறங்களைச் செய்து வாழ்ந்தனர். கன்னியாகவே வாழ்ந்து மூத்தவள் அவள். குற்றமற்றவள் என கந்திற்பாவையால் ஊர் முன் சான்று கூறப்பட்டு வாழ்ந்து வருபவள். ஊர்ப்பழிச் சொற்கள் ஏதுமின்றி தருமதத்தனுடன் அறச் செயல்களைச் செய்து வந்தவள் ஒருநாள் வீதி வழியே வந்துகொண்டிருந்தபோது மன்னன் ககந்தனின் மூத்த மகனும், ஏற்கனவே மருதியிடம் வம்புசெய்து தகப்பனால் கொல்லப்பட்டவனின் அண்ணனுமான ஒருவன் காம வெறியுடன், விசாகையின் கழுத்தில் தன் சுருள் மயிர்த்தலையில் சூடி இருந்த மாலையை எடுத்துச் சூட்டும் நோக்குடன், “முன்னோர் உரைத்த மணம் இதுதான்” எனக் கூறிய வண்ணம், மாலையை எடுக்கத் தன் தலை முடிக்குள் கைவைத்தபோது, அந்தக் கையை அவன் மறுபடி அங்கிருந்து அகற்ற இயலாமற் போயிற்று.

தன் மகனின் உயர்ந்த கை மீண்டும் தாழ இயலாமற் போன அவலத்திற்கு அவன் விசாகையிடம் நடந்து கொண்ட முறை மீறிய செயலே காரணம் என்பதை அறிந்த மன்னன் ககந்தன் கடுஞ்சினம் கொண்டு, மகனை இழக்கும் துயரைப் பற்றிக் கருதாது அவனை வெட்டி வீழ்த்தினான்.

ககந்தனின் இரு மகன்களும் தந்தையின் கரங்களாலேயே வெட்டி வீழ்த்தப்பட்டதற்கான காரணம் அவர்கள் இருவரும் பெண்களின் விருப்பறியாமல் நடந்து கொண்டதே. விசாகையின் வரலாற்றினூடாக சாத்தனர் “யாழோர் மணமுறை” முதலான  “தொல்லோர் கூறிய” மணமுறைகளும் காப்பிய காலத்திற்கு முந்திய சங்க மதிப்பீடுகளும் அவருடைய காலத்தில் மாறிவிட்டன என இரு முறை சுட்டுகிறார். பெண்களின் விருப்பறியாமல் மேற்கொள்ளப்படும் கட்டாய மணங்களை மரண தணடனைக்குரிய குற்றங்களாகக் காட்டுவதன் ஊடாக பௌத்தத்தில் அவற்றுக்கு இடமில்லை என உணர்த்துகிறார். அதே போல “பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும் / புத்தேள் உலகம் புகார்” முதலான வைதீகக் கருத்தாக்கங்களும் பொருந்தாது எனச் சொல்வதன் ஊடாக துறவறத்தை மேன்மைப்படுத்தும் சிரமண மதிப்பீடுகள் போற்றப்படுவதும் இங்கு கவனத்துக்குரியது. ‘பத்தினியோடு இணைந்து செய்யும் தருமம் ஒன்றே பலனளிக்கும்’ – என ஒரு மூத்த அந்தணன் முன்வைக்கும் கருத்தையும், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அறச் செயலுக்கு எந்த நிபந்தனையும் இல்லை’ எனத் துறவு மேற்கொண்டு கன்னிமாடம் ஒன்றில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கருத்தையும் எதிர் எதிராக நிறுத்தி அப்பெண்ணின் கருத்தே சரி எனக் காட்டுகிறார் சாத்தனார்.

இந்தக் கிளைக் கதைகள் எல்லாம் அரசனின் மகன் உதயகுமாரன் காஞ்சனனின் வாளால் மாண்ட செய்தியை அவனிடம் பக்குவமாக உணர்த்த வந்த முனிவர்கள் சொன்னவை என்பது கவனத்துக்குரியது. மையக் கதையின் ஊடாக, அதன் ஓட்டம் சிதையாமல், பௌத்த அறங்களை விளக்கும் முகமாகக் கிளைக் கதைகள் மணிமேகலையில் பதிக்கப்பட்டுள்ளன.

இப்படியாக அரசன் மகனாயினும் பெண்களிடம் அத்து மீறும்போது அவர்கள் தண்டிக்கப்படுவது இன்று புதிதல்ல எனும் பொருள்பட “இன்றேயல்ல” (22:19) என அரசனைச் சந்திக்க வந்திருந்த முனிவர்கள் கூறியதைக் கூர்மையாக அவதானித்த மன்னன், “இன்று மட்டுமல்ல எனச் சொன்னீர்களே, இன்று இப்படி ஏதும் நடந்துள்ளதா?” என வினவ, இளவரசன் கொல்லப்பட்ட செய்தியை முனிவர்கள் சொல்கின்றனர்.

அரசன் அதற்கு அமைதியாகப் பதிலளிக்கிறான்:

“நான் அளிக்க வேண்டிய தண்டனையை அதற்குத் தகுதியற்ற விஞ்சையன் அளித்துள்ளான். மன்னனின் காவல் முறையாக இல்லாதபோது முனிவர்களின் தவத்திற்கும், மாதர்களின் கற்பிற்கும் பாதுகாப்பில்லாம்மல் போகும். மகனாயினும் குற்றம் இழைத்ததற்காகத் தண்டித்த மன்னவன் வழி வந்த ஒருவன் மரபில் இப்படி ஒரு தீவினையாளன் தோன்றினான் எனும் செய்தி பிற மன்னவர்கள் காதில் விழுமுன் அவனது உடலை எரியூட்டுவதோடு அந்தக் கணிகையின் மகளையும் காவலில் வை”

-எனச் சோழிய ஏனாதிக்கு (படைத் தளபதி) ஆணையிட்டு அகன்றான் மன்னன்.

மன்னன் அவ்வாறு நீதிக்குத் தக நடந்துகொண்ட போதிலும் அரசி அவ்வளவு எளிதாகத் தன் மகனது மரணத்தை அறம் தவறியமைக்குக் கிடைந்த நியாயமான தணடனை என எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. மகனின் மரணத்திற்குக் காரணமானவளாகத் தன்னால் கருதப்படும் மணிமேகலையை அவள் பழி வாங்கத் திட்டமிட்டாள்.

மன்னவனாயினும், இளவரசனாயினும், அரசியாயினும் அவர்களுக்கு மனக்குழப்பமும் துயரமும் ஏற்படும் காலத்தே தான் கற்றவற்றைத் தன் பேச்சாற்றலின் ஊடாக அவர்களுக்கு எடுத்துரைத்து ஆறுதல் அளிக்கும் அறிவும் தகுதியும் பெற்றவளான வாசந்தவை எனும் மூதாட்டி அரசியை அடைந்து அவள் துயர் நீக்க ஆறுதல் மொழி பகர்கிறாள்.

அரசியைக் குறிப்பிடும் இடத்தே “திருநிலக் கிழமைத் தேவியர்” என்பார் சாத்தனார். “நில உரிமை உடைய தேவியர்” என்பது பொருள். அரசிக்கு நிலக் கிழமை இருந்தது இதன் மூலம் சுட்டப்படுகிறது.

“தன் மண்ணைக் காக்கவோ, இல்லை பிறர் மண்னை வெற்றி கொள்ளவோ மேற்கொள்ளும் போரில் வீரச்சாவு அடைவதைத் தவிர மன்னர்க்கு மூப்படைந்து சாவது உட்பட வேறுவகை இறப்புகள் புகழுக்குரியன அல்ல. நின் மகனின் சாவு குறித்து எந்த ஆறுதல் சொல்லவும் என் நா எழவில்லை.  எனினும் அரசைக் காக்கும் மன்னனின் முன் உன் துயரை வெளிப்படுத்தாதே” என ஆறுதல் சொல்லி அகன்றாள் அந்த மூதாட்டி. ஆனால் அரசி அத்தனை எளிதாக ஆறுதல் அடையத் தயாராக இல்லை.

இதற்கிடையில் மணிமேகலை கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டாள். உரு மாற்றிக் கொள்ளவும், பறந்து செல்லவும் வரம் பெற்றவளான மணிமேகலை அப்படியெல்லாம் செய்யவில்லை.  மணிமேகலையை வஞ்சித்துத் தண்டிக்க மனம் கொண்ட அரசி, அரசனிடம் சென்று, “பிக்குணிக் கோலம் கொண்ட மணிமேகலையின் பின் சென்ற நம் மகன் அரசாளும் தகுதியற்றவன். காமனும் கண்டு மயங்கும் தன் இளமையைப் பிக்குணிக் கோலத்திற்குள் ஒடுக்கிக்கொண்டவளும், நல்லறிவு பெற்றவளுமான மணிமேகலை இருப்பதற்குச் சிறை தகுந்த இடமில்லை. சிறந்த நெறியுடையார்களையே மன்னர்கள் தன் பிள்ளைகளாகக் கருத வேண்டும். அப்படி இல்லாதோர் மறக்கப்பட வெண்டியவர்கள். அவளை இந்தச் சிறை நோயிலிருந்து விடுவி” எனக் கூறி அவளை வஞ்சகமாகத் தன் கைக்குள் கொண்டு வந்து அகன்றாள் அரசி. சிறையை “நோய்” எனச் சாத்தனார் குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

என்னோடு அவள் இருந்தாலும் இருக்கலாம் அல்லது தன்னோடு ஓட்டை எடுத்துக் கொண்டுத் தன் பிச்சை வாழ்வைத் தொடர்ந்தாலும் சரி எனச் சொல்லி அழைத்துச் சென்ற அரசி, மணிமேகலைக்கு பித்தேற்றும் மருந்தைப் புகட்டினாள். ஆனாலும் மறுபிறப்புணர்ந்தவளான மணிமேகலை தன் அறிவு நிலையை இழந்தாள் இல்லை. அடுத்து கல்லா இளைஞன் ஒருவனை அழைத்து மணிமேகலையை வல்லாங்கு செய்து அவளது இள முலைகளில் புணர்ச்சிக் குறிகளைப் பதித்துப் பின் அவளுடன் கூடியிருந்ததாகக் கதை பரப்புமாறு கூறி அவன் கைநிறையக் காசும் கொடுத்து அனுப்பினாள் அரசி. அவனைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்ட மணிமேகலை மந்திரம் ஓதி ஆண் உருவம் அடைந்தாள். அதைக் கண்டு அஞ்சிய அவன் ஊரை விட்டே ஓடினான். அடுத்து அரசி, மணிமேகலைக்குத் தீரா நோய் எனவும், அவள் உணவு உண்ண இயலாதவள் ஆயினாள் எனவும் சொல்லி பட்டினி போட்டுச் சாகடிக்க முனைந்தாள். ஊணின்றி உயிர் வாழும் மந்திர  சக்தி உடையவள்  மணிமேகலை எனும் உண்மை அறியாத அரசி அந்த முயற்சியிலும் தோற்றாள்..

விம்மி நடுங்கிக் கலங்கிய அரசி, “என் மனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்க மாட்டாது தவநெறி மிக்க உனக்குச் சிறுமை செய்தேன். பொன்னை ஒத்தவளே பொருத்துக் கொள்வாய்” என மணிமேகலையைத் தொழுது நின்றாள்.

மணிமேகலை பேசத் தொடங்கினாள்:

“உன் மகன் உதயகுமாரன் முன்னொரு பிறவியில் ராகுலனாகப் பிறந்து என் கணவனாக வாழ்ந்த போது திட்டிவிடம் தீண்டி இறந்தான், அதைப் பொறாது நான் என்னுயிரையும் நெருப்பிலிட்டு அழித்துக் கொண்டேன். அன்று உன் இந்த இளவரசனுக்காக நீ எங்கே நின்று அழுதாய்? இப்போது அவன் எரிக்கப்பட்ட போது நீ அவன் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்கழுதாயானால் அந்த உடலைப் புறங்காட்டிலே எரித்தார்களே அவர்கள் யார்? உயிருக்காக அழுதாயானால் வினைப்பயனுக்குத் தக அவ்வுயிர் மீளவும் புகும் இடத்தை அறிந்து உணர்தல் உன்னால் இயலாதது. அன்பிற்குரிய உன் மகனின் அந்த உயிர் இன்று எந்த உடலில் உள்ளது என அறியாத நீ எல்லா உயிர்களிடமுமே அன்பும் இரக்கமும் கொண்டவளாக அல்லவா இருக்க வேண்டும்?

“பெருந்தேவியே! நின் மகனை வெட்டிக் கொன்ற கள்வன் காஞ்சனன் செய்ததைக் கேள். விருந்தினர்க்குச் சோறு படைக்க வந்த சமையற்காரன் தடுக்கி வீழ்ந்து சமைத்த உணவைக் கீழே கொட்டியதைப் பொறுக்காமல் அவனை வெட்டி  வீழ்த்தினான் முற்பிறவியில் உன் மகன். அந்தத் தீவினையின் பயன்தான் இப்பிறவியில் காஞ்சனனின் வாளால் இன்று வெட்டி வீழ்த்தப்பட்டது.

“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என நீ கேட்பாயானால் பூங்கொடியை ஒத்தவளே! அதையும் சொல்வேன்”

– எனக் கூறி உவவனத்தில் தான் மலர் கொய்யப் போனது தொடங்கி, கந்திற் பாவையின் உரையைக் கேட்டுத் தன் முற்பிறவிகளை அறிந்து தான் தெளிவடைந்தது ஈறாக உற்றது அனைத்தையும் ஒன்றும் ஒழியாமல் சொன்னாள் மணிமேகலை.

அவரவர் வினைப்பயனை அவரவர் அனுபவித்தே ஆக வெண்டும். இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். இதை உணர்ந்து உயிர்கள் அனைத்திடமும் சமமான அன்பு செலுத்த வேண்டும். எல்லாம் வினைப்பயன் என்கிறபோது தண்டித்தல், பழிவாங்கல், எந்தக் காரணங்களுக்காகவும் உயிர்களைத் துன்புறுத்துதல் ஆகியன ஆகாது என்பது பௌத்த அறம்.

(அடுத்து அரசிக்கு மணிமேகலை உரைக்கும் அறமும் சாவகம் சென்று ஆபுத்திரன் நாடடைதலும்)

 

 

 

 

 

 

வாஜ்பேயீ மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல

வாஜ்பேயீ பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார், ஒருபக்கம்  அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான ஊழியராகவே வாழ்வைத் தொடங்கி முடித்தவராயினும், இன்னொரு பக்கம் அவர் ஒரு மென்மையான இந்துத்துவவாதி, பாபர் மசூதி இடிப்பில் கலந்து கொள்ளாதவர், குஜராத் 2002 வன்முறையைக் கண்டித்தவர், அவரது ஆளுகை ஊழலற்ற ஒன்று என்பதாகவெல்லாம் அவர் குறித்த பிம்பம் இன்று கட்டமைக்கப் படுகிறது. அவரது கட்சி மட்டுமின்றி, ஊடகங்களும். இந்தப் பிம்ப உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பின்னணியில் இந்துத்துத்துவ அரசியல் குறித்த மாற்றுக் கருத்து உடையவர்களாலும் கூட, “ஒரு தவறான கட்சியிலிருந்த சரியான மனிதர்” என்றெல்லாம் அவ்வப்போது அவர் குறித்து கருத்துக்கள் உதிர்க்கப்படுகின்றன.

நான் அவரது ஆட்சிக் காலங்களை மிகக் கூர்மையாகக் கவனித்துக் குறைந்த பட்சம் நான்கு நூல்களுக்கு மேல் எழுதியவன் என்கிற வகையில் இந்தக் கருத்துக்கள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை. இந்துத்துவ அரசியலுக்கு எதிரானவன் என்கிற வகையில் என் கருத்துக்கள் ஒரு பக்கச் சார்பானவை என யாரும் குற்றஞ்சாட்டினால் அதில் நியாயம் உண்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மட்டுமே நான் வாஜ்பேயீ குறித்துச் சொல்பவை தவறு எனச் சொல்வதற்கு ஆதாரமாகவும், நிரூபனமாகவும் ஆகிவிட இயலாது.

மோடி ஆட்சியில் குஜராத்தில் (2002) நடந்த மிகப் பெரிய மத வன்முறையில் பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது வாஜ்பேயீ அதைக் கண்டித்தார் என்கிற கருத்தை எடுத்துக் கொள்வோம். அது தவறு. அப்படிப் பெரிதாக மோடியை அவர் எதுவும் கண்டிக்கவில்லை. “ஆள்பவர்களுக்கு ராஜதர்மம் வேண்டும்” என மோடியை வாஜ்பேயீ கண்டித்தார் என்பார்கள். குஜராத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது வாஜ்பேயீ அப்படிச் சொன்னது உண்மை. மேடையில் அவருடன் அமர்ந்திருந்த மோடி அவசரமாக, “நான் அப்படித்தான் ஆட்சி நடத்துகிறேன்” என்றார். வாஜ்பேயீ உடனடியாக அதை ஏற்று “உண்மை” என்றார். அதுதான் அன்று உண்மையில் நடந்தது. சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மதக் கலவரம் அது. ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டில் அகதிகளாயினர். கண்முன் நடந்த கொலைகளை மோடியின் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. ஒரு கேபினட் அமைச்சர் வன்முறைகள் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு இடங்களாகச் சென்று வன்முறையாளர்களை ஊக்குவித்துக் கொண்டு வந்தார். இப்படியான வன்முறையில் வாஜ்பேயீ ஒரு பிரதமராக இருந்து தெரிவித்த கண்டனம் இவ்வளவுதான். அதற்கு மேல் எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் நரேந்திரமோடி பதவி விகவேண்டும் என்று கூட அவர் சொல்லவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அவர் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். அத்வானியுடன் ரத யாத்திரையில் பங்கு பெறாமலும்  இருந்திருக்கலாம். ஆனால் மசூதி இடிப்பை வாஜ்பேயீ எந்நாளும் எதிர்க்கவில்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கக் கூட இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் அவர், “அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டுவது என்பது இன்னும் பூத்தி செய்யப்படாத தேசிய உணர்வின் வெளிப்பாடு” எனக் கூறி (The Hindu, Dec 07, 1992) அதை ஆதரித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்ததன் விளைவாக 1999 வரை வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை. லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது மத்தியில் வாஜ்பேயின் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான். இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது மசூதி இடிப்பு தொடர்பான இரண்டு குற்றப் பத்திரிகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதில் ஒரு சட்டப் பிரச்சினை உள்ளது என நீதிபதி ஜகதீஷ் பல்லா குறிப்பிட்டார். அதைத் திருத்துவதற்கு அன்றைய பா.ஜ.க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. இன்றுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

வாஜ்பேயீ ஆட்சியின் போது அணுகுண்டு வெடிக்கப்பட்டதிலும் கூட அவருடைய பங்கு ஒன்றுமில்லை என அவரை மென்மையானவராக முன்வைப்போர் சொல்வது வழக்கம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தவிர இராணுவத்திற்குக் கூடத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த அணு குண்டு சோதனையில் பிரதமருக்குத் தொடர்பே இல்லை எனச் சொல்வது அபத்தம்.  1998 மே 11, 13 தேதிகளில் அந்த அணுகுண்டு சோதனை செய்யப்பட்ட போது அவருடைய அமைச்சர்களான அத்வானி, மதன்லால் குரானா முதலானோரெல்லாம், “இனி பாகிஸ்தானுடன் சூடான அணுகல்முறைதான் (hot pursuit) மேற்கொள்ளப்படும்” என்றும், “இனி அவர்களின் தாக்குதலுக்கு எதிர்வினை (reactive) புரிவது என்றில்லாமல், முதல் தாக்குதலே (proactive) எங்களுடையதுதான் “ எனவும்,  “சண்டை வேண்டும் என்றால் பாகிஸ்தான் எங்கே எப்போது என்று சொன்னால் போட்டுப் பார்க்கலாம்” (மே 17, 1998) எனவும் முண்டா தட்டினார்கள்.

இந்தப் பின்னணியில் அந்தக் குண்டு வெடிப்பை விளக்கி அமெரிக்க அதிபர் கிளின்டனுக்கு வாஜ்பேயீ ஒரு கடிதம் எழுதினார். அதில் (மே 11, 1974) “சீன ஆபத்தை ஒட்டித்தான்” தாங்கள் அணு குண்டு சோதனை செய்ய வேண்டியதாயிற்று என விளக்கம் அளித்தார். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் (மே 27), அவரது அமைச்சரவையில் அயலுறவு இணை அமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, “சீனாவுடன் எல்லா முனைகளிலும் உறவுகள் சீர்பட்டு வருகின்றன” எனவும், “முரண்பாடுகள் தீர்ந்து கொண்டுள்ளன” எனவும் கூறினார். இது குறித்து  நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழும்பியபோது (ஜூன் 14),  ”சீனா நம் முதல் எதிரி அல்ல” என வாஜ்பேயீ பதிலளித்தார்.

வாஜ்பேயீ காலத்தில் மெற்கொள்ளப்பட்ட இந்த அணுகுண்டு வெடிப்பு எந்த வகையிலும் புத்திசாலித்தனமானது அல்ல. ஏற்கனவே 1974 லேயே இந்திரா பிரதமராக இருந்த போது அணுகுண்டு வெடித்து இந்தியா அணு வல்லமையுள்ள நாடு என்பது நிறுவப்பட்டு விட்டது. மீண்டும் ஒரு முறை சிறிய அளவிலான குண்டுகளை வெடித்து அன்று வாஜ்பேயீ அரசு பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இந்தியா ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இன்றுவரை ஆக முடியாமல் இருப்பது ஒன்றுதான் இதனால் விளைந்த ஒரே பயன்.

“மக்களை ஆயுததாரிகளாக்குவது, இராணுவத்தைக் காவி மயமாக்குவது” என்பது இந்துத்துவத்தின் அடிப்படை அணுகல்முறைகளில் ஒன்று. வாஜ்பேயீ ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இராணுவத்தில் இந்துத்துவக் கருத்தியல் உடையவர்கள் புகுத்தப்பட்டனர். வாஜ்பேயீ அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட கப்பற்படைத் தளபதி விஷ்ணு பக்வத், “இக்காலகட்டத்தில் இராணுவத்தில் அதிக அளவில் காவிக் கருத்தியலுடையவர்கள் பல்வேறு மட்டங்களில் புகுத்தப்பட்டனர்” என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார். பின்னாளில் மலேகான் (2008), மெக்கா மசூதி, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் (2007) ஆகியவற்றில் குண்டுகள் வெடித்துப் பலரும் கொல்லப்பட்ட போது அதற்குக் காரணமாக  இந்துத்துவ அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா முதலான முன்னாள், அன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இராணுவ வெடிமருந்துக் கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதும் உறுதியாயிற்று.

‘சிந்து தர்ஷன்’ (ஜூன் 27, 1999), ‘பிரம்மபுத்ரா தர்ஷன்’ முதலான பெயர்களில் வேதாகமப்படி நடத்தப்பட்ட இந்து மதச் சடங்குகளுக்கு “நடைமுறை உதவிகள்” (logistic support) என்கிற பெயரில் இந்திய இராணுவம் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டும் இந்த மென்மையான பிரதமரின் ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப் பட்டவைதான்.

இரண்டு

1995 மே 7 ம் நாள் அன்று ஆர்.எஸ்.எஸ்சின் ‘ஆர்கனைசர்’ இதழில் வாஜ்பேயீ கட்டுரை ஒன்று எழுதினார். “சங்கம் எனது ஆன்மா” என்பது தலைப்பு. சங்கம் என்பது ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம்’ (RSS) என்பதைக் குறிக்கிறது. இக்கட்டுரை இன்றும் சங்கத்தின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் அவர் பிரதமர் நாற்காலியில் முதல் முறையாக அமரப் போகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ் முன்னுள்ள இரண்டு கடமைகளாக அவர் அதில் குறிப்பிடுவன 1. இந்துக்களை அமைப்பாக்க (organize) வேண்டும் 2. முஸ்லிம்களைத் தன்வயப்படுத்த (assimilate) வேண்டும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் மிக முக்கியமானவை. இந்துக்களை ஆங்காங்கு இந்து அடையாளங்களுடன் கூடிய பல்வேறு அமைப்புகளாக்க வேண்டும். அதே நேரத்தில்முஸ்லிம்களை இந்துச் சமூகத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பது பொருள்.

தொடர்ந்து அவர் இந்த நோக்கில் முஸ்லிம்கள் குறித்த அணுகல்முறைகள் எப்படியெல்லாம் இருக்க முடியும் என்பதற்கு மூன்று வடிவங்களைச் சொல்கிறார். அவை:

அ. திரஸ்காரம்: ஒதுக்குதல் அல்லது விலக்குதல். அதாவது முஸ்லிம்களின் இருப்பையும் அடையாளங்களையும் மறுத்தல்;

ஆ. புரஸ்காரம்: முஸ்லிம்களுக்குச் சலுகைகள் கொடுத்து அவர்களை வசப்படுத்தல்.

இ. பரிஸ்காரம்: அவர்களை மாற்றிச் செரித்துக் கொள்ளுதல்.

இதில் இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது காங்கிரசின் அணுகல்முறையாம். மற்ற இரண்டும்தான் அவர்களின் அணுகல்முறைகளாம். அதாவது முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக விலக்குவது. அல்லது அவர்களை அடையாளம் இழக்கச் செய்து உள்ளே கொண்டுவருவது. அவைதான் இன்று பசுக் கொலைகள், ‘கர்வாபசி’, ‘சுத்தி’ எனப் பல்வேறு நடவடிக்கைளாகச் சங்கப் பரிவாரங்களால் மேற்கொள்ளப்படுபவை.

வாஜ்பேயியின் மென்மை இந்துத்துவம் என்பது இதுதான்.

மூன்று

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கு இடையே எப்போதும் ஒரு மெல்லிய ‘இழுபறி’ (tension) நிலவும். அதனுடைய சுதேசியக் கொள்கைக்கும், கார்பொரேட் ஆதரவுக்கும் இடையிலான முரண்தான் அது. ஆனால் இறுதியில் வலிமையான இந்தியா, நவீனமான இந்தியா என்கிற முழக்கத்தின் ஊடாக சுதேசியம் என்பது ஊத்தி மூடப்படும். காங்கிரஸ் முதலான கட்சிகளைக் காட்டிலும் பலமடங்கு தீவிரமான கார்பொரேட் மயமாதல், அந்நிய மூலதன ஊடுருவல் ஆகியவற்றிற்கு வழி திறக்கப்படும்.

வாஜ்பேயீ தலைமையிலான அரசுக்கும், மோடி அரசுக்கும் இந்த வகையில் எந்த வேறுபாடும் இல்லை. வாஜ்பேயீ அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மட்டும் இங்கே:

1.இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன நுழைவைக் கடுமையாக எதிர்த்து வந்தது பா.ஜ.க.  ஆனால் 1998 ல் வாஜ்பேயீ அரசு அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முன்வைத்த ‘இன்சூரன்ஸ் சட்ட வரைவு’ (IRDA Bill -1998)  அத்துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதோடு 40 சத அந்நிய ‘ஈக்விடி’க்கும் வழிவகுத்தது.

  1. தயாரிப்பு முறைக்கு (process) வேண்டுமானால் ‘பேடன்ட்’ உரிமம் வழங்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு (product) ‘பேடன்ட்’ உரிமம் வழங்கக் கூடாது என்பது பா.ஜ.கவின் கொள்கை. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் தயாரிக்கப்பட்ட பொருளுக்கும் ‘பேடன்ட்’ உரிமம் வழங்கும் வரைவைச் சட்டமாக்கியது (1998) வாஜ்பேயீ அரசு.
  2. உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கான (WTO) டங்கல் வரைவை (GATT) எதிர்த்துக் கொண்டிருந்ததை மறந்து ஆட்சியில் அமர்ந்தவுடன் WTO வில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தது வாஜ்பேயீ அரசு. சுங்க வரி ஒழிப்பிலும் அது தீவிரம் காட்டியது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டன.
  3. முன்னுரிமை இல்லாத துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு (FDI) கட்டுப்பாடு வேண்டும்; உயர் தொழில்நுட்பம், அகக் கட்டுமானம் முதலான முன்னுரிமைத் துறைகளில் மட்டும் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வாஜ்பேயீ ஆட்சிக்கு வந்த பின் முன்னுரிமை இல்லாத துறைகள் எவை என வரையறுக்க மறுத்தார். புகையிலை, சாராய வகைகள் உட்பட எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதன நுழைவிற்கு வழி வகுக்கப்பட்டது.

பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோலச் சுருக்கம் கருதி ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியப் பொருளாதாரம் கார்பொரேட் மயமாவதற்கான செயல்பாடுகள் வாஜ்பேயீ அரசில் தீவிராமாயின. டாக்டர் இராதாகிருஷ்ணன், பேரா.கோத்தாரி முதலான புகழ்மிக்க கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை அறிக்கைகள் உருவாக்கிக் கொண்டிருந்த மரபு வாஜ்பேயீ ஆட்சியில் மாற்றப்பட்டது. குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி என்கிற இரு கார்பொரேட் பெருமுதலாளிகளின் தலைமையில் உயர்கல்விச் சீர் திருத்தம் தொடர்பான குழு அமைக்கப்பட்டது. ‘நீட்’ உட்பட இன்றைய உயர்கல்விப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் தோற்றுவாயாக அமைந்தது அந்த அறிக்கையின் பரிந்துரைகள்.

“மாவட்டம்தோறும் ஒரு நவோதயாப் பள்ளி, மதிப்பீட்டுக் கல்வி எனும் பெயரில் புராண இதிகாசங்களைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, தேசிய அளவில் ஒரு பொதுவான பாடத் திட்டத்தை நோக்கி நகர்வது, ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்விகளில் உள்ளூர்ச் சமூகத்திடமிருந்து  நிதி திரட்டுவது. ‘நீட்’ முதலான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், சந்தைத் தேவையை ஒட்டிக் கல்வி அமைப்பை மாற்றுதல், பல்கலைக் கழகங்களுக்கு நிதியைக் குறைத்து மாணவர் கட்டணங்களை அதிகப் படுத்துதல், புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கச் சட்டம் இயற்றுதல், கல்லூரிகள் தரச் சான்றிதழ் (accreditation) பெறுவதைக் கட்டாயமாக்குதல், கல்லூரிகளைத் தன்னாட்சிக் கல்லூரிகளாக்குதல், உயர் கல்வியில் அந்நிய நேரடி முதலீடு, பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளைத் தடைசெய்தல் என்கிற பெயரில் மாணவர் சங்கச் செயல்பாடுகளைக் கட்டுக்குக் கொணர்தல், வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்விச் சந்தையைத் திறந்துவிடல், இதற்கெல்லாம் தோதாகப் பொருளாதாரத்தை எல்லாவிதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்தல்”- முதலான பரிந்துரைகளை அந்த அறிக்கை முன்வைத்தது.

இவை அனைத்தும், ஆம் அனைத்தும், இன்று நாடைமுறைகளாகி விட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாஜ்பேயீ ஆட்சிக்காலத்தில் பாடநூல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், உயர்கல்வி நிறுவனங்களை இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பியது, ஜோதிடம், வேதம் முதலானவற்றையெல்லாம் பாடத் திட்டத்தில் புகுத்தியது முதலான செயல்பாடுகளுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் உருவாயின.

வாஜ்பேயீயின் இறப்பை ஒட்டி அவரது சாதனைகளாக இன்று தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி (Telecom Revolution), நால்வழிச் சாலைகள் மூலம் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது, அணுவல்லமை பெற்ற நாடாக இந்தியா ஆகியது, பொதுத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டது ஆகியன முன்வைக்கப்படுகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட “புரட்சி” என்பது இன்று உலக அளவில் ஏற்பட்டுள்ள ஒன்று. அரசு நிறுவனங்களான BSNL, VSNL ஆகியன வீழ்த்தப்பட்டு இன்று ரிலையன்ஸ் முதலான கார்பொரேட்கள் நுழைவதற்கும், பெரும் ஊழல்களுக்கும் அவை வழி வகுத்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பெருமை மிக்க நிறுவனங்களாக இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டது என்பதை எந்த வகையிலும் பெருமைக்குரிய செயலாக நாம் கருத இயலாது. வாஜ்பேயீ ஆட்சியில்தான் ‘நவரத்தினங்கள்’ என்றெல்லாம் போற்றப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைச் சிதைத்து விற்பதற்கென்றே disinvestment ministry என ஒரு துறை அமைக்கப்பட்டு அதற்கென ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது.

நான்கு

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

‘இந்தியா தவங் கிடந்த மனிதர்’, ‘எல்லோராலும் ஏற்றுக் கொள்ளாப்பட்டவர்’, ‘பழுத்த அரசியல்வாதி’ என்றெல்லாம் வாஜ்பேயீ இன்று முன்னிறுத்தப் பட்டாலும், ஜனதா ஆட்சிக் காலத்தில் (1977-79) இரண்டாண்டு காலம் அவர் அயலுறவு அமைச்சராக இருந்ததைத்தவிர வேறு எந்த நிர்வாக அனுபவமும் அவருக்கு இருந்ததில்லை. பெரும் மக்கள் போராட்டங்கள் எதற்கும் தலைமை ஏற்ற அனுபவங்களும் அவருக்குக் கிடையாது. பதவி ஏற்றபோது அவர் மிகவும் தளர்ந்த உடலையுடைய ஒரு வயசாளி. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் அரசுப் பொறுப்பை நிர்வகிக்க அவருக்கு நம்பிக்கையான துணைகள் தேவையாக இருந்தன. கூட்டணிக் கட்சிகளை அதிகமாக முண்ட விடாமல் ஒடுக்கி வைக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருந்தது. இந்தப் பின்னணியில்தான் அவர் பிரஜேஷ் மிஸ்ரா, என்.கே.சிங் என்கிற தனக்கு மிகவும் நம்பிக்கையான இருவரைப் பெரும் அதிகாரங்கள் உள்ள பதவிகளைக் கொடுத்து அருகில் அவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவர்களோடு எந்தப் பதவியும் இல்லாமல் ஒட்டிக் கொண்ட வாஜ்பேயீயின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவையும் சேர்த்து ஒரு சூப்பர் அரசாக அவர்கள் செயல்படத் தொடங்கினர். வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு அதிகாரம் குவிந்த உச்சி அமைப்பாகப் பிரதமர் அலுவலகம் (PMO) இந்திய வரலாற்றில் முதல் முறையாக உருவாகியது.

இதில் மிகவும் கவனத்துக்குரிய விடயம் என்னவெனில் இந்த பிரஜேஷ் மிஸ்ராவும், என்.கே சிங்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ‘ஏஜன்டுகள்’ எனச் சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள். பிரதமரின் முதன்மைச் செயலர், தேசப் பாதுகாப்ப்பு ஆலோசகர் என இரட்டைப் பதவிகள் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்டன. தேசப்பாதுகாப்பு அலோசகர் என்பது அதுவரையில் இல்லாத ஒரு பதவி. ‘பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சிறப்பு அதிகாரி’ என்கிற பதவி உருவாக்கப்பட்டு சிங்கிற்கு அளிக்கப்பட்டது. அமெரிக்க அரசைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்ட பதவிகள் இவை. சிங் இடையில் ஓய்வுபெற்றுவிட்ட போதும் ‘பிரதமர் அலுவலகச் சிறப்பு அலுவலர்’ என்கிற பெயரில் அவர் தக்க வைக்கப் பட்டார்.

இதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை. அரசியல் சட்டப்படி அமைச்சரவைதான் உயர் அமைப்பு. அமைச்சரவைச் செயலர் (Cabinet Secretary) தான் உயர் அதிகாரப் பதவி. கூட்டு முடிவுகளுக்கு அமைச்சரவைதான் பொறுப்பு. துறை சார்ந்த முடிவுகளுக்கு அந்தந்த அமைச்சர்களும், செயலர்களும் பொறுப்பு. ஒரு அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால் மொத்த அமைச்சரவையையும் கூட்டித்தான் அதைச் செய்ய வேண்டும். இதுதான் ஒரு ஜனநாயக அமைப்பின் நடைமுறை.

ஆனால் இந்த ஜனநாயக நெறிகளை எல்லாம் தாண்டிய ஒரு சூப்பர் அரசாக வாஜ்பேயீயின் அலுவலகம் அதிகாரத்திலும், அளவிலும் பெரியதாகியது. அதன் ஒரு உச்சகட்ட அதிகாரக் குவியலை இன்றைய மோடி ஆட்சியில் நாம் காண முடியும். எனினும் இதைத் தொடங்கி வைத்த பெருமை வாஜ்பேயீக்கே உண்டு.

பிரதமர் அலுவகம் என்கிற பெயரில் அமைச்சரவை முடிவுகளில் தலையிட்டுத் தமக்கு வேண்டிய கார்பொரேட்களுக்குத் சலுகைகளைச் செய்ய இந்தச் சிறப்பு அதிகாரிகள் இதன் மூலம் வாய்ப்புகள் பெற்றனர். காஷ்மீர்ப் பிரச்சினை உட்படப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் சிறப்பு அதிகாரம் மிஸ்ராவுக்கும், அந்நிய மூலதனம் உட்பட முக்கிய தொழில்துறை அதிகாரங்கள் சிங்கிற்கும் அளிக்கப்பட்டன. அதோடு துறை சார்ந்த சிறப்பு முடிவுகளை எடுக்க ‘அமைச்சரவைக் குழுக்களை’ (GoM) அமைக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் துறை சார்ந்த அமைச்சர்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு, அமைச்சரவைக்குழு என்கிற பெயரில் பிரதமர் அலுவலகமே முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது. அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, திருணாமுல் முதலான 21 கட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பதும் கேலிக்கூத்தாக்கப் பட்டது.

இப்படியான அமைச்சரவைக் குழுவை அமைத்து பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்பட்ட ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கே காணலாம்.

2001 ஜன 29 அன்று தொலைத் தொடர்புச் செயலர் சியாமல் கோஷ் தொழில்துறைச் செயலர் பியூஷ் மன்காடுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதை ‘அவுட்லுக்’ இதழ் (மார்ச் 5, 2000) வெளியிட்டு அம்பலப்படுத்தியது. பிரச்சினை இதுதான்: வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தொழில்துறையிடம் உள்ளது. தொலைத் தொடர்புத் துறை திறந்துவிடப்பட்ட காலம் அது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் 70 சதத்திற்கும் மேலாக முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தன. ஆனால் 49 சதத்திற்கும் மேலாக வெளிநாட்டு மூலதனத்திற்கு அனுமதி இல்லை என்கிற விதியின்படி தொழில்துறை அவற்றை மறுத்துவிட்டது. ஆனால் வாஜ்பேயியின் பிரதமர் அலுவலகம் நியமித்த அமைச்சரவைக்குழு ஒன்று தொழில்துறை அமைச்சகத்தின் ஆணையைப் புறந்தள்ளி, தொழில்துறை அமைச்சர் உட்பட யாருக்கும் தெரியாமல் இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன. இவற்றின் ஊடாக எவ்வளவு தொகைகள் யாருக்குக் கைமாறி இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்லலாம். தமக்குத் தெரியாமலேயே இவ்வாறு தம் ஆணை புறக்கணிக்கப்பட்டு இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டதைக் கண்டித்து தொழில்துறைச் செயலர் பியூஷ் எழுதிய கடிதத்தைத்தான் அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியது.

இவை தவிர பிரதமரின் பொருளதார ஆலோசனைக்குழு (EAC), செயற்திட்ட நிர்வாகக் குழு (SMG) ஆகியவற்றின் ஊடாக பிரதமர் அலுவாலகம் நேரிடையாகத் தலையிட்டு எடுத்த வேறு சில முடிவுகள்:

  1. ஹிர்மா மின்சாரத் திட்டத்திற்கு (ஒரிசா) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூ லாப உத்தரவாதத்துடன் அனுமதி அளிக்கப்பட்டது. நிதி, பொருளாதாரம், மின்சாரம் ஆகிய மூன்று துறை அமைச்சகங்களும் இதற்கு ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையில் பிரஜேஷ் மிஸ்ராவின் தலைமையிலான SMG நவ 17, 2000 அன்று இந்த அனுமதியை ரிலையன்சுக்கு அளித்தது.
  2. நிதி அமைச்சகமும், பொது முதலீட்டு வாரியமும் மறுத்த யூரியா இறக்குமதித் திட்டம் ஒன்றை ஜன 24, 2001 அன்று பிரதமர் வாஜ்பேயியின் அலுவலகம் அனுமதித்தது. சுமார் இரண்டு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி நமக்குச் செலவாகும் ஒரு தேவையற்ற திட்டம் இது.
  3. நிலையான தொலைத்தொடர்புச் சேவை (FSPS) அளிக்கும் மொபைல் தொலைபேசிச் சேவைக்கு (LMS) அனுமதி வழங்கும் முடிவொன்றை பிரதமர் வாஜ்பேயீ அலுவலகம் ஜன 5, 2001 அன்று எடுத்தது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் ரூ 830 கோடி விலைஉள்ள 30 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களை ‘ரிலையன்ஸ்’ மற்றும ‘இமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்’ எனும் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் திட்டத்தை உள்ளடக்கியது இம்முடிவு. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 25,000 கோடி. மொபைல் உரிமையாளர் சங்கம் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது (அவுட்லுக், பிப் 26, 2001). குஜராத் பூக்ம்பத்தால் பேரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட வருமான வரி 2% உயர்த்தப்பட்ட பின்னணியில் ரிலையன்சுக்கும் இமாச்சல் லிமிடெடுக்கும் இந்தச் சலுகைகளை அளித்தார் வாஜ்பேயீ.

அவுட்லுக் இதழ் வெளியிட்ட மேலும் சில இப்படியான திட்ட இழப்புகளை சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன். பிரதமர் வாஜ்பேயீ அலுவலகத்தின் இத்தகைய செயல்களைக் கண்டித்து பொருளதார விவகாரச் செயலர் EAS ஷர்மா நவ 2000 த்தில் பதவி விலகியது குறிப்பிடத் தக்கது. பிரதமர் அலுவலகம் மூலம் ரிலையன்ஸ், இந்துஜா முதலான நிறுவனங்கள் அரசை ஆட்டிப் படைப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். “தேவையானால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் அளவிற்கு இந்துஜாக்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர்” என ஷர்மா குற்றம்சாட்டியது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல ரிலையன்ஸ்களும் இந்துஜாக்களும் ஒரு வகையில் மாநில அரசுகளையும் காட்டிலும் அதிகாரம் மிக்கவர்களாக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். தமது மின்சாரத் தேவைகளுக்கு மாநில அரசுகளே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரம் உண்டு. ஆனால் வாஜ்பேயீ அலுவலகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக ஒரிசாவும் பிற மாநில அரசுகளும் நேரடியாக ஹிர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையை இழந்தன.

இதற்குமுன் வரலாற்றில் இப்படியான நிலை இருக்கவில்லை. இந்திரா ஆட்சியில் இப்படி பிரதமர் அலுவலகம் நடைமுறையில் (defacto) அதிகாரம் பெற்றிருந்தது எனக் கூறினாலும் இத்தகைய முறை மீறல்கள் இந்த அளவிற்கு அப்போது சட்டபூர்வம் (dejure) ஆக்கப்படவில்லை.

வாஜ்பேயீயின் கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒருமுறை பிரஜேஷ் மிஸ்ரா பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரைச் சந்திக்கப் போகிறார். போபார்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்துஜாவையும் அவர் கூட அழைத்துச் சென்றதையும் அவுட்லுக் இதழ் (மார்ச் 5, 2001) அம்பலப்படுத்தியது. அரசுப் பணி நிமித்தம் இன்னொரு நாட்டுப் பிரதமரைச் சந்திக்கும் ஒரு உயரதிகாரி ஒரு தொழிலதிபரைக் கூட அழைத்துச் செல்வது ஜனநாயக மரபல்ல. இப்படி அவுட்லுக், டெஹல்கா, ரெடிஃப் முதலான ஊடகங்கள் வாஜ்பேயீ அலுவலகத்தின் ஏராளமான அத்துமீறல்களை வெளிப்படுத்தின. பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டின்’ (BALCO) பங்குகள் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு அள்ளித் தரப்பட்டதும் வாஜ்பேயியின் காலத்தில்தான். பங்குச் சந்தை ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஸ்டெர்லைட், பி.பி.எல், வீடியோகான் ஆகியவை இரண்டாண்டுகாலம் மூலதனச் சந்தையில் பங்குபெறக் கூடாது என ‘செபி’ அமைப்பால் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. அந்தத் தடையை மீறியும், பால்கோ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைக் கண்டு கொள்ளாமலும் பால்கோவின் 51% பங்கை வெறும் 550 கோடி ரூபாய்க்கு வேதாந்தாவிடம் விற்றது வாஜ்பேயீ அரசு.

ரிலையன்ஸ் மற்றும் இந்துஜாக்கள் மோடி அரசை மட்டுமல்ல வாஜ்பாயி அரசையும் ஆட்டிப் படைத்தனர் என்பதையும், மோடி போலவே வாஜ்பாயீயும் அப்படி ஒன்றும் இத்தகைய ஊழல் கார்பொரேட்டுகளால் அணுக முடியாத உயரத்தில் இருந்தவர் அல்ல என்பதையும் நாம் மறக்கலாகாது.

பிரதமர் அலுவலகத்தின் ஊடாக சர்ச்சைக்குரிய வகையில் தலையிட்டுச் செயல்பட்ட இன்னொருவர் அன்றைய மத்திய அமைச்சர் புரமோத் மகாஜன். Pramod Mahajan என்கிற அவரது பெயரின் தலைப்பு எழுத்துக்களை வைத்து சிலேடையாக PM என அன்றைய நாளிதழ்கள் எழுதின. ரிலையன்ஸ் குழுமத்துக்கு மிக நெருக்கமாக இருந்து பல சலுகைகள் செய்தவர் என அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. புரொமோத் மகாஜனின் மருமகனுக்கும், அவரது நெருக்கமான நண்பரான சுதான்ஷு மித்ராவின் உறவினர் ஒருவருக்கும் ரிலையன்சின் பினாமி பங்குகள் வழங்கப்பட்டன என அப்போது சர்ச்சைகள் உருவாயின. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஷிவானி பட்நகர் கொலை வழக்கிலும் மகாஜனின் பெயர் அடிபட்டுப் பின் டெல்லி போலீசால் அவர் பெயர் கைவிடப்பட்டது. மகாஜன் இறுதியில் அவரது சகோதரராலேயே கொல்லப்பட்டார்.

ஐந்து

வாஜ்பேயீ ஒரு திறமையான பிரதமராக இல்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்டுவது அவசியம். கார்கில் போர் பிரச்சினையை மட்டும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவிற்கு மிகப்பெரிய படை இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுத்திய போர் அது. இந்திய அரசின் கணக்குப்படி 1300 இந்தியப் படை வீரர்கள் கார்கில் போரில் கொல்லப்பட்டனர். 1750 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவிற்கு ஏற்பட்ட பொருள் இழப்பு 2.5 பில்லியன் டாலர் (ஃப்ரன்ட்லைன், செப் 29, 2000). அப்போதைய இந்திய அரசு, உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் கவனக் குறைவுகளே இந்த இழப்புகளுக்குக் காரணம் என இது குறித்த ஆய்வுகள் சொல்கின்றன. ஜனவரி 1999 லிருந்து கார்கில் பகுதியில் நடந்துவந்த ஊடுருவலை மே 99 வரை இந்தியாவால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு பக்கம் ஊடுருவல் நடந்துகொண்டிருந்த போது இன்னொரு பக்கம் வாஜ்பேயீ பெரிய விளம்பரங்களுடன் டெல்லி – லாஹூர் பஸ் பயணம் நடத்திக் கொண்டிருந்தார்.

தனது உளவுத்துறை தவறிழைக்கவில்லை என வாஜ்பேயீ அடித்துச் சொன்னார் (ஜூலை 23, 2000). ஆனால் இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுப்பிரமணியம் குழு உளவுத்துறையின் தவறையும் தோல்வியையும் சுட்டிக் காட்டியது. இக்குழு அமைக்கப்படும் போதே, “தேசியப் பாதுகாப்புக்கான பரிந்துரைகளைச் செய்யவது பாக்கின் ஆக்ரமிப்புக்குக் காரணமான நிகழ்வுகளைப் பரிசீலிப்பது” என அதன் பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன. அதாவது கார்கில் ஊடுருவலைக் கண்டு பிடிப்பதில் அரசும், இராணுவமும் விட்ட பிழைகளை ஆராய்வதிலிருந்து சுப்பிரமணியம் குழு தடுக்கப்பட்டது. ஆனால் யோம் கிப்பூர் போர் (1973), ஃபால்க்லந்த் போர் (1983) ஆகியவை குறித்து இஸ்ரேலும், பிரிட்டிஷ் அரசும் அமைத்த ஆய்வுக்குழுக்களுக்கு இப்படியான நிபந்தனைகள் விதிக்கப்படாததை ஏ.ஜி.நூரானி சுட்டிக் காட்டினார்.

எனினும் அதே நேரத்தில் கார்கில் போரைத் தேசிய வெறி ஊட்டுவதற்குப் பயன்படுத்துவதை மட்டும் வாஜ்பேயி அரசு கவனமாகச் செய்தது. வேறெந்தப் போரிலும் இல்லாத அளவிற்கு இறந்த வீரர்களின் உடல்கள் காட்சிப் பொருள்களாக்கப்பட்டன, அந்த உடல்கள் அவரவர்களின் ஊர்களுக்கும் கொண்டுவரப்பட்டு அங்கும் அவை காட்சிப் பொருளாக்கப்பட்டன. இப்படியான காட்சிப்படுத்துதல்கள் என்பன தேசியப் பாதுகாப்பு எனும் பெயரில் அடக்குமுறைகளை மக்கள் மீது ஏவுவதற்கு அவர்களுக்குத் தேவையாக இருந்தது.

வாஜ்பேயீ திறமையான பிரதமரும் அல்ல; அவரது ஆட்சி ஊழலுக்கு அப்பாற்பட்டதும் அல்ல. இந்தக் கட்டுரையில் நான் அவரது ஆட்சி கல்வி மற்றும் இதர துறைகளில் புகுத்திய மிக ஆபத்தான் காவியாக்க முயற்சிகளை அதிகம் பேசவில்லை.

வாஜ்பேயீ அரசு அறுதிப் பெரும்பான்மையற்ற ஒரு கூட்டணி அரசு. அவர் பிரதமராக அமெரிக்கா சென்றபோது அங்குள்ள உயர்சாதி இந்தியர்கள் ஸ்லேட்டன் தீவில் அவருக்கு ஒரு விருந்தளித்தனர். அப்போது அவர்,

“இப்போது நமக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உருவாகும்போது நாம் நமது கனவு இந்தியாவை உருவாக்குவோம்”

இப்போதும் அவர்கள் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை பெறவில்லை. எனினும் இன்றைய மோடி அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு. மோடியைக் காட்டிலும் வாஜ்பேயீ சற்றே மென்மையாகத் தோன்றுவதன் அடிப்படை இதுதானே ஒழிய சாரத்தில் இருவரும் ஒன்றுதான்.