பூம்புகார் கடற்கோளில் அழிந்த வரலாற்றின் இலக்கியச் சான்று

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 21,  தீராநதி, அக்டோபர் 2018                     

மாற்றுருக் கொள்ளும் திறனும் வான்வழி பறக்கும் வித்தையும் அருளப் பெற்றவளான மணிமேகலை நினைத்திருந்தால் எப்போதோ அரசியின் கொடுமைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம். எனினும் அவற்றை எல்லாம் அவள் சகித்துக் கொண்டிருந்தது என்பது இந்தத் துன்பங்களை ஏல்லாம் தனக்கு இழைத்த அரசி முற்பிறவியில் தன் காதலனாக இருந்தவனை இப்பிறவியில் வயிற்றில் சுமந்திருந்தவள் என்பதனாலும், மகனை இழந்த துயரின் விளைவாய்த்தான் அவள் இத்தனையையும் செய்கிறாள் என்பதை எண்ணியும்தான் என விளக்கிய மணிமேகலை அரசியை அமைதி அடையுமாறும் தான் உரைக்கும் அறவுரைகளைக் கேட்குமாறும் சொல்லிச் சில எடுத்துக்காட்டுகளுடன் தொடங்கினாள்.

“அறந் தவறிய ஆள்வோரின் கொடுமையால் நிலைதவறிய ஒரு நாட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தான் பெற்ற குழந்தையையும் பிரிந்து எங்கோ சென்று வரையறைகளை மீறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது குழந்தையை ஒரு பார்ப்பனன் யாரும் அறியாது வளர்த்து வந்தான். அப்படி வளர்க்கப்பட்டவன் யாரென அறியாமல் தான் தாயையே புணர்ந்து, உண்மை அறிந்ததும் உயிரை ஈந்தான்.

“நிறை கர்ப்பமான ஒரு இளம் மானின்மீது அம்பெறிந்த ஒரு வேடன், வீழ்ந்த அந்த மானின் விழியிலிருந்து வடிந்த நீரைக் கண்டு அந்த இடத்திலேயே தானும் வீழ்ந்து மடிந்தான்.

“கள்ளுண்ட மயக்கத்தில் எதிர் நிற்பது ஒரு மதங்கொண்ட யானை என்பதை அறியாது அதன் முன் சென்று அதன் வெண்மையான தந்தத்தால் குத்துப்பட்டு வீழ்ந்தான் இன்னொருவன்.

“நெறி தவறி வாழ்வோர் அதன் துயர விளைவுகளிலிருந்து தப்ப இயலாது. களவாகிய ஏரைக் கொண்டு உழுபவன் கடுந்துயரைத்தான் விளைவித்துக் கொள்ள இயலும். கற்ற கல்வி மட்டுமே ஒருவர்க்கு மெய்யுணர்வைத் தந்துவிடாது; ஆத்திரத்தை அடக்காதோர் அறிவுணர இயலாது. அல்லலுற்ற மக்களுக்கு இல்லாததைத் தருவோர், பட்டினி கிடப்போரின் பசி நீக்குபவர், மண்ணுலக உயிர்கள் மீதெல்லாம் அன்பைப் பொழிபவர் எவரோ அவரே தாங்கள் செல்ல விரும்பும் நல்லுலகத்திற்கான வழியை அறிந்தோர்”

-என்றெல்லாம் சொல்லி மகனிறந்த துயரால் நெஞ்சம் எரிந்து கொண்டிருந்த அரசிக்கு ஆறுதல் கூறினாள் மணிமேகலை.

அறம் தவறாத வாழ்வும் மக்களின் பசித்துயர் நீக்கலும் மட்டுமே உய்வதர்கான ஒரே வழி என்பதை வாய்க்கும் இடங்களில் எல்லாம் சாத்தனார் வற்புறுத்தத் தயங்குவதில்லை என்பதைத் தொடர்ந்து கண்டு வருகிறோம்.

மனந் தெளிந்த அரசி மணிமேகலையைத் தொழுது நின்றபோது மணிமேகலை ஒருகணம் துடித்துப் போனாள். தன் முற்பிறவிக் கணவனுக்கு இப்பிறவியில் தாயாக அமைந்தவள் அவள்; அதோடு அவள் இந்த நாட்டின் அரசியும் கூட. “நீ எனைத் தொழுவது தகுதியல்ல” எனக் கூறி மணிமேகலை அரசியை வணங்கி நின்றாள்.

இதற்கிடையில் நடந்த துயரச் சம்பவங்களை எல்லாம் அறிந்த மணிமேகலையின் பாட்டியும் முதுகணிகையுமான சித்திராபதி பேத்தியைச் சிறை மீட்க ஓடி வந்து அரசியின் காலடி வீழ்ந்தாள்.

“இந்திரனுக்குப் முன் நடனமாடும்போது குற்றமிழைத்தவர் ஐவர், சாபமிடப்பட்டவர் நூற்றி ஐந்து பேர், இந்திரனுக்கு அழகியர் பெற்றுத்தந்தவர் பதினொருவர் என நூற்றி இருபத்தோறு பெண்கள் தொன்மைச் சிறப்புமிக்க இம்மாநகருக்கு வந்து  ஆடல் மங்கையராகச் சிறப்புற்று வாழத் தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை எம்குலமகளிர் எவரும் இன்று யான் பெற்ற துயரைப் பெற்றிருக்கமாட்டார்கள். கோவலன் மறைந்தபின் என் மகள் மாதவி துறவு மேற்கொண்டு பவுத்தப் பள்ளி ஒன்றைச் சென்றடைந்ததை ஒட்டியும், அவள் மகள் மணிமேகலை பிச்சைப் பாத்திரத்துடன் வீடு வீடாகத் திரிவதைக் கண்டும் எம் குலத்தவர் எள்ளி நகையாடுகின்றனர். நாடகக் கணிகையரின் இலக்கணங்களை மீறிய வாழ்வொன்றை இவர்கள் தேர்வு செய்ததின் விளைவாக மன்னவன் மகன் கேடுற்றது மட்டுமின்றி இந்நகருக்கும் இடுக்கண் நேரப் போகிறது….”

என்று பலவாறும் பிதற்றிய சித்திராபதியின் புலம்பலின் ஊடாகச் சாத்தனார் இன்னொரு கிளைக் கதையைக் காவியத்தில் ஏற்றுகிறார்.

கடலோரமாய் உள்ள ஒரு புன்னைமரச் சோலையில் நின்றிருந்த சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளியின் முன் தன்னந்தனியாய்த் தோன்றினாள் ஒருத்தி. அவளைக் கண்ட கண்ணிலும், கேட்ட செவியினும், உயிர்த்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் காமவேளின் மலர்களாலான பஞ்சபாணக்களும் தாக்க நிலைகுலைந்த மன்னன், போர்க்களங்களிலே பலரைப் புறங்கண்டவனாயினும் இப்போது அவளைப் பணிந்து அவள் ஏவலை நிறைவேற்றுபவனாய் அவளோடு கூடி இருந்தான். சுமார் ஒருமாத காலம் அவள் அவனுடன் கழித்தனள். ஆயினும் இறுதிவரை அவள் யாரென அவனிடம் உரைக்கவில்லை என்பது மட்டுமல்ல திடீரென அவள் ஒரு நாள் காணாமற் போனாள்.

வேந்தர் பலரை வென்றவனான கிள்ளி வளவன் அந்த இளங்கொடி நங்கை எங்கு ஒளிந்து கொண்டாளோ எனத் தேடி அலைந்தான். அப்போது நீர், நிலம், வான்வழி என எங்கும் அலைந்து திரியும் சாரணர் ஒருவரைச் சந்தித்து அவரையும் வணங்கி அவளைக் கண்டீரோ என வினவினான். “நான் அவளைக் கண்டதில்லை ஆயினும் அவளை அறிவேன். நாக நாட்டை ஆளும் வளைவணன் என்பவனின் தேவி வாசமயிலை என்பவளின் வயிற்றில் உதித்த பீலிவளை என்பவள் அவள். அவள் பிறந்தபோது, ‘இரவி குலத்தில் (சோழ குலம்) பிறந்த ஒருவனது தழுவலில் கரு உயிர்த்து வருவாள்’ என ஒரு கணியன் உரைத்தான். அவனுக்குப் பிறக்கும் நின் மகன் உன்னிடம் வரலாமேயன்றி அவள் இனி வாராள். நீ புலம்புதல் வேண்டாம்” என உரைத்துச் செல்லும் முன் அவன் இன்னொன்றையும் சொன்னான்.

“நீ ஆண்டுதோறும் எடுக்கும் தீவகச் சாந்தி விழாவை தொடர்ந்து செய்ய வேண்டும். கைவிட்டாயானால் உன் காவல் மாநகர் (பூம்புகார்) கடல்கோளால் அழியும். இது கடல் தெய்வமான மணிமேகலா தெய்வம் வாய்மொழியால் உரைத்தது என்பதை மறவாதே. அது மட்டுமல்ல. அப்படி நீ விழாவைக் கைவிடுவாயானால் இந்திர சாபமும் சேர்ந்து கொள்ளும். எனவே இந்த ஆபத்து தணிவதற்கு வாப்பில்லை. எனவே உன் மாநகர் கடல் வயிறு புகாமல் காக்க வேண்டுமானால் இந்திர விழாவை எக் காரணம் கொண்டும் கைவிடாதே” என எச்சரித்துத் தன் வழிப்போக்கைத் தொடர்ந்தார் அந்தச் சாரணர்.

சித்திராபதியின் புலம்பலின் ஊடாக வெளிப்படும் இச் செய்தியுடன் இக்கிளைக் கதை பாதியில் முற்றுப் பெற்று அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் தொடர்கிறது.

மணிமேகலையை அரசியிடமிருந்து விடுவித்து அழைத்துச் செல்வதிலேயே கருத்தாய் இருந்த சித்திராபதி கிள்ளியின் கதையை அத்துடன் நிறுத்திக் கொண்டு தன் வேண்டுதலைத் தொடர்ந்தாள். கொலைக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைப்பட்டது உட்பட எதிர்கொண்ட துன்பங்களின் விளைவாகத் தன் பேத்தி ‘மனந்திருந்தி’ தன் அறிவுரையை ஏற்று குலத் தொழிலைத் தொடர்வாள் என்கிற நம்பிக்கை வேறு அந்த மூதாட்டிக்கு. “நல்மனம் பிறந்துள்ள நாடகக் கணிகையை என் மனைக்கு அழைத்துச் செல்லுகிறேன்” என அரசியிடம் வேண்டிய போது உண்மையில் “நல்மனம்” பிறந்துள்ளது அரசிக்குத்தான் என அவள் அறிந்திருக்கவில்லை. “கள், பொய், காமம், கொலை, களவு செய்யும் உள்ளம் ஆகிய குற்றங்கள் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.  அவற்றையே தலைமையாய்க் கொண்ட உன்னுடன் வாழ்வதை அஞ்சித்தான் அவள் வெளிப்போந்தாள். இனி அவள் உன்னுடன் உன் அகம் புகாள். அவள் என்னோடிருப்பாள்” என அரசி சீறிய தருணத்தில் மாதவ முனிவரான அறவணர் மாதவியுடனும், சுதமதியுடனும் அங்கே வந்தார்.

மணிமேகலைக்கு நேர்ந்ததை எல்லாம் அறிந்த மாதவி கவலை கொண்டு சுதமதி துணையுடன் அறவணரைச் சென்று சந்தித்தாள். பின் மூவரும் அரசியைச் சந்திக்க வருகின்றனர். நடந்தவற்றை அறிகின்றனர். பணிந்த அரசிக்கு அறமுரைக்கிறார் அடிகள். அதன் பின் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை விளக்கி அங்கிருந்து அகல்கிறாள் மணிமேகலை.

இந்தப் பின்னணியில்தான் பூம்புகார் கடற்கோளால் அழிந்தது. ஆம் சாரணரின் எச்சரிக்கையை மன்னன் கிள்ளிவளவன் மறந்தான். கடற் தெய்வமான மணிமேகலா தெய்வம் சீற்றம் கொண்டு பூம்புகாரை அழித்தது. கி.மு நூற்றாண்டுகளில் ஏதன்ஸ், ரோம் முதலான நகரங்களுடன் வணிகத் தொடர்பில் இருந்த வரலாறு பூம்புகாருக்கு உண்டு என்பதை அறிவோம். ஒரு பெரும் கடற்கோளால் பூம்புகார்ப் பெருநகர் அழிந்ததை இன்று அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. பூம்புகாரை ஒட்டிய கடற்பகுதியில் இப்போது செய்யப்பட்ட ஆய்வுகளில் இதற்குச் சான்றுகள் உள்ளன என்கின்றனர். கடல்கோள் ஏற்பட்டு பூம்புகார் அழிந்ததற்கான முக்கிய இலக்கியச் சான்றாக மணிமேகலை அமைகிறது.

அந்த வரலாற்று நிகழ்வை மணிமேகலைத் தன் காப்பியப் போக்கில் இணைத்துக் கொள்வதைத் தொடர்வோம். இக் காதையின் முடிவில் மணிமேகலை அவர்களிடமிருந்து விடை பெற்று சாவகத் தீவை (நாகபுரம்) அடைகிறாள். அத்தீவை அப்போது ஆண்டு கொண்டிருந்த புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறவி கண்டிருந்தவன். அவனிடம் மணிமேகலை தன்னிடமுள்ள அமுதசுரபியைக் காட்டி அவனது பழம் பிறப்பை அவன் அறிய வேண்டுமானால் மணிபல்லவத் தீவிற்குச் சென்று பீடிகையை வணங்க வேண்டும் என்கிறாள். இருவரும் கப்பலில் தீவை வந்தடைகின்றனர்.

அங்கே அத் தீவின் காவற் தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம் பூம்புகார் கடற் கோளால் அழிந்த கதையைச் சொல்கிறது. அதனூடாகக் கிள்ளி – பீலிவளை வரலாறும் தொடர்கிறது.

“பலர் தொழும் பாத்திரத்தைக் கையிலேந்திய நங்கையே கேள்! நாக நன்நாட்டை ஆள்பவனின் மகள்தான் பெண்களிற் சிறந்த பீலிவளை என்பாள் பனிக்குப் பகைவனான கதிரவனின் வழியில் தோன்றிய தனது இளம் குழந்தையுடன் இத் தீவிற்கு வந்த அவள் புத்த பீடிகையை  வலம் வந்து வணங்கினாள். அப்போது கம்பளச்செட்டி என்பானின் கப்பல் வந்து அங்கே நின்றது. அவனிடம் சென்று உசாவிய பின் உம் மன்னனின் மகன் இவன். இவனைக் கொண்டு செல்” என அவனிடம் குழந்தையைச் சேர்ப்பித்தாள். பழுதற்ற தோற்றத்துடன் எதிர் நின்ற அந்தப் பைங்கொடி தந்த குழந்தையைப் பணிவுடன் ஏற்ற அந்த வணிகன் அக்குழந்தையுடன் அந்தத் துறைமுகத்தை விட்டகன்றான். ஆனால் அப்படிக் குழந்தையுடன் அவன்  சென்ற அன்றிரவே காரிருளில் கரையருகில் அவன் கலம் உடைந்து சிதறியது. உடைந்த கலத்திலிருந்து தப்பிய மாக்கள் உடன் அரசனிடம் சென்று அவனது குழந்தை கடல் விபத்தில் காணாமற் போன அத் துயரச் செய்தியை உரைத்தனர்.

“மகனுக்கு நேர்ந்த கதியை மன்னனால் பொறுக்க இயலவில்லை. தனது நாக மணியை இழந்த அரவம் அதை எப்படி எல்லாம் தேடி அலையுமோ அப்படித் தன் குழந்தையைத் தேடி கானல், கடல், கரை என எல்லா இடங்களுக்கும் சென்று அலைந்தான். அதனால் இந்திரவிழாக் கொண்டாட்டத்தை மாநகர் இழந்தது. மணிமேகலா தெய்வம் அதைப் பொறுக்க இயலாது, ‘அணிநகர் தன்னை அலைகடல் கொள்க !’ எனச் சாபம் இட்டது. புகார் நகர் கடலில் பட்ட கதை இதுதான்.

“கடவுள் அனைய மாநகர் கடலால் கொள்ளப் பட்டதும் வடிவேல் ஏந்திய அகன்ற கையை உடைய வானவன் போன்ற அரசன் தன் நகர் நீங்கினான். விரிந்த அலைகள் வந்து தன் அழகிய நகரை விழுங்கத் தன்னந்தனியனாய் அவ்விடம் விட்டகன்றான் மன்னவன்.

“அருந்தவ முனிவரான அரவணருடன் நின் தாயர் இருவரும் (மாதவி, சுதமதி) துன்பம் ஏதுமின்றி வஞ்சி நகர் சென்றடைந்தனர். மணிமேகலா தெய்வம் உரைத்தனவற்றைக் கேட்க விரும்பினால் கேள் !” எனக் கூறிய தீவதிலகை தொடர்ந்து சொன்னது:

“மறுபிறப்பை உணர்ந்தவளே ! உன் தந்தையாகிய கோவலனின் மரபில் வந்த முன்னோன் ஒருவனை மணிமேகலா தெய்வம் முன்னொருநாள் கடல் விபத்திலிருந்து எடுத்துக் காத்ததையும், அப்படிக் காப்பாற்றப்பட்ட அவ்வணிகன் ஊர் திரும்பியதும் அறங்கள் பல செய்து ஆண்டதையும் அறிய நினைத்தால் கடற் கோளுக்குப் பின் வஞ்சி மாநகரில் உறையும் அறவணன்பாற் சென்று கேள்!”

எனக் கூறி அத்தீவகத் தெய்வம் வானகத்தே எழுந்து பறந்து சென்றது.

(அடுத்து அறவணர் அரசிக்கு உரைத்த அறமும்  வஞ்சிமாநகரில்  கண்ணகியைச் சந்தித்து மணிமேகலை அறவுரை பெறுதலும்)

 

 

 

மணிமேகலை 20 : எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்

நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20                     

எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பதே

கிறிஸ்துவிற்கும், அசோகருக்கும் முந்திய நூற்றாண்டுகளில் பிராமணத்திற்கும் சிரமணத்திற்கும் இடையே கங்கைச் சமவெளியில் நடந்த கருத்து மோதல்களின் பல்வேறு அம்சங்களில் இல்லறத்தையும் துறவறத்தையும் முன்வைத்து நிகழ்ந்த மோதலும் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை பொருள் ஈட்டினும், அவை அனைத்தையும் அவன் அறச்செயல்களிலேயே செலவழித்த போதிலும் தனியனாக இருந்து அவன் அதைச் செய்தால் அவன் புண்ணிய உலகை அடைவது சாத்தியமில்லை என்பது பிராமணச் சிந்தனை. வணிகத்தின் ஊடாகப் பெருஞ்செல்வம் ஈட்டி, மதுரை மாநகரில் அரச விருதுகளுடன் வாழ்ந்து வந்த தருமதத்தனிடம் இல்லறத்தில் ஈடுபட்டு, பத்தினியோடு இணைந்து செய்யாத எந்த அறமும் பயனற்றது என்று அறிவுரைப்பவனாக ‘அந்தணாளன்’ ஒருவனை முன்னிறுத்துவதன் ஊடாக அதுதான் வைதீகம் முன்வைக்கும் அறம் என்பதைச் சாத்தனார் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் பெரும் புலவர் சாத்தனார் அத்தோடு நிறுத்தவில்லை. வழக்கம்போல அன்று வைதீகத்திற்கு எதிர் நிலையாய் நின்ற அவதீகம் (சிரமணம்) இது தொடர்பாக உரைக்கும் மாற்று அறத்தை உடனடியாக அங்கே முவைக்கிறார். பிராமண X சிரமண அறங்களை இவ்வாறு எதிர் எதிராக (juxtapose) வைத்து சிரமணத்தை விளக்குவதும் முன்னிறுத்துவதும் சாத்தனார் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று என்பதைக் கவனித்து வருகிறோம். மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்டுள்ள கிளைக் கதைகள் பௌத்த அறங்களை விளக்கப் பயன்படும் களங்களாக அவரால் அமைக்கப் பட்டிருப்பதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தருமதத்தன் – விசாகை கிளைக்கதையும் இங்கு அவ்வாறே அமைக்கப்படுகிறது.

பத்தினி ஒருவளின்றிச் சேர்க்கும் செல்வமும், செய்யும் அறமும் பயனற்றது என்கிற அந்தணாளனின் கருத்தை ஏற்ற தருமதத்தன் தன் அறுபதாம் அகவையில், கன்னி மாடத்தில் வாழ்வைக் கழித்து வரும் விசாகையைப் பத்தினியாக ஏற்றுத் தான் சேர்த்த செல்வங்களை அறச் செயல்களுக்குப் பயன்படுத்தும் நோக்குடன் அவளிருக்கும் காகந்தி நகருக்குத் திரும்பிய செய்தியை விசாகை அறிகிறாள். கன்னிமாடத்தை விட்டு நீங்கி அவனைச் சந்திக்க நாணமோ, தயக்கமோ இன்றி பலரும் காண வீதிவழி சென்றாள். ஒரு காலத்தில் ஊர் வம்பால் பிரிய நேர்ந்தவர்கள் அவர்கள். இன்று அவ் ஊரறிய அவனைப் பார்க்கச் செல்கிறாள் அவள். அவன் அவள் இருக்கும் இடம் நோக்கிச் செல்லும் முன்பாகவே, அவளே அவனிடம் நோக்கிச் செல்கிறாள். இருவரின் வயதும், வாழ்நெறிகளும் ஊரலர்களுக்கு இன்று வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அவர்கள் மீது எழுந்த வீண் பழிச்சொல்லுக்கு இப்போது இடமில்லாமற் போயிற்று.

அவனை நேர்கண்ட அவள், “நாம் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லர். முன்பு நம்மைக் குறித்து எழுந்த வம்புகளுக்குக் காரணமான நம் அழகுகள் எங்கு சென்று ஒளிந்தன? நம் இளமையும், காம இச்சையும் இன்று எங்கே போயின? மன உறுதியற்றவனே சொல்! இப்பிறவியில் நான் உன்னடி சேரேன். அடுத்த பிறவியில் நான் உன் மனையாளாகி உன் ஏவல்களை நிறைவேற்றுவேன். இவ் உடல், இளமை, வளந்தரு செல்வம் எவையும் நிலையானவை அல்ல. புண்ணிய உலகை புதல்வர்களாலும் தந்துவிட இயலாது. என்றென்றும் உயிருக்கு உற்ற துணையாய் இருப்பது அறம் ஒன்றே. தானம் செய்!” – என்றனள் விசாகை.

தருமதத்தன் அதை ஏற்றான். மாமன் மகளிடன் தன் மிக்க பெருஞ் செலவத்தைக் காட்டி இருவரும் வானத்து விண்மீன்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமான நல்லறங்களைச் செய்து வாழ்ந்தனர். கன்னியாகவே வாழ்ந்து மூத்தவள் அவள். குற்றமற்றவள் என கந்திற்பாவையால் ஊர் முன் சான்று கூறப்பட்டு வாழ்ந்து வருபவள். ஊர்ப்பழிச் சொற்கள் ஏதுமின்றி தருமதத்தனுடன் அறச் செயல்களைச் செய்து வந்தவள் ஒருநாள் வீதி வழியே வந்துகொண்டிருந்தபோது மன்னன் ககந்தனின் மூத்த மகனும், ஏற்கனவே மருதியிடம் வம்புசெய்து தகப்பனால் கொல்லப்பட்டவனின் அண்ணனுமான ஒருவன் காம வெறியுடன், விசாகையின் கழுத்தில் தன் சுருள் மயிர்த்தலையில் சூடி இருந்த மாலையை எடுத்துச் சூட்டும் நோக்குடன், “முன்னோர் உரைத்த மணம் இதுதான்” எனக் கூறிய வண்ணம், மாலையை எடுக்கத் தன் தலை முடிக்குள் கைவைத்தபோது, அந்தக் கையை அவன் மறுபடி அங்கிருந்து அகற்ற இயலாமற் போயிற்று.

தன் மகனின் உயர்ந்த கை மீண்டும் தாழ இயலாமற் போன அவலத்திற்கு அவன் விசாகையிடம் நடந்து கொண்ட முறை மீறிய செயலே காரணம் என்பதை அறிந்த மன்னன் ககந்தன் கடுஞ்சினம் கொண்டு, மகனை இழக்கும் துயரைப் பற்றிக் கருதாது அவனை வெட்டி வீழ்த்தினான்.

ககந்தனின் இரு மகன்களும் தந்தையின் கரங்களாலேயே வெட்டி வீழ்த்தப்பட்டதற்கான காரணம் அவர்கள் இருவரும் பெண்களின் விருப்பறியாமல் நடந்து கொண்டதே. விசாகையின் வரலாற்றினூடாக சாத்தனர் “யாழோர் மணமுறை” முதலான  “தொல்லோர் கூறிய” மணமுறைகளும் காப்பிய காலத்திற்கு முந்திய சங்க மதிப்பீடுகளும் அவருடைய காலத்தில் மாறிவிட்டன என இரு முறை சுட்டுகிறார். பெண்களின் விருப்பறியாமல் மேற்கொள்ளப்படும் கட்டாய மணங்களை மரண தணடனைக்குரிய குற்றங்களாகக் காட்டுவதன் ஊடாக பௌத்தத்தில் அவற்றுக்கு இடமில்லை என உணர்த்துகிறார். அதே போல “பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும் / புத்தேள் உலகம் புகார்” முதலான வைதீகக் கருத்தாக்கங்களும் பொருந்தாது எனச் சொல்வதன் ஊடாக துறவறத்தை மேன்மைப்படுத்தும் சிரமண மதிப்பீடுகள் போற்றப்படுவதும் இங்கு கவனத்துக்குரியது. ‘பத்தினியோடு இணைந்து செய்யும் தருமம் ஒன்றே பலனளிக்கும்’ – என ஒரு மூத்த அந்தணன் முன்வைக்கும் கருத்தையும், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அறச் செயலுக்கு எந்த நிபந்தனையும் இல்லை’ எனத் துறவு மேற்கொண்டு கன்னிமாடம் ஒன்றில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கருத்தையும் எதிர் எதிராக நிறுத்தி அப்பெண்ணின் கருத்தே சரி எனக் காட்டுகிறார் சாத்தனார்.

இந்தக் கிளைக் கதைகள் எல்லாம் அரசனின் மகன் உதயகுமாரன் காஞ்சனனின் வாளால் மாண்ட செய்தியை அவனிடம் பக்குவமாக உணர்த்த வந்த முனிவர்கள் சொன்னவை என்பது கவனத்துக்குரியது. மையக் கதையின் ஊடாக, அதன் ஓட்டம் சிதையாமல், பௌத்த அறங்களை விளக்கும் முகமாகக் கிளைக் கதைகள் மணிமேகலையில் பதிக்கப்பட்டுள்ளன.

இப்படியாக அரசன் மகனாயினும் பெண்களிடம் அத்து மீறும்போது அவர்கள் தண்டிக்கப்படுவது இன்று புதிதல்ல எனும் பொருள்பட “இன்றேயல்ல” (22:19) என அரசனைச் சந்திக்க வந்திருந்த முனிவர்கள் கூறியதைக் கூர்மையாக அவதானித்த மன்னன், “இன்று மட்டுமல்ல எனச் சொன்னீர்களே, இன்று இப்படி ஏதும் நடந்துள்ளதா?” என வினவ, இளவரசன் கொல்லப்பட்ட செய்தியை முனிவர்கள் சொல்கின்றனர்.

அரசன் அதற்கு அமைதியாகப் பதிலளிக்கிறான்:

“நான் அளிக்க வேண்டிய தண்டனையை அதற்குத் தகுதியற்ற விஞ்சையன் அளித்துள்ளான். மன்னனின் காவல் முறையாக இல்லாதபோது முனிவர்களின் தவத்திற்கும், மாதர்களின் கற்பிற்கும் பாதுகாப்பில்லாம்மல் போகும். மகனாயினும் குற்றம் இழைத்ததற்காகத் தண்டித்த மன்னவன் வழி வந்த ஒருவன் மரபில் இப்படி ஒரு தீவினையாளன் தோன்றினான் எனும் செய்தி பிற மன்னவர்கள் காதில் விழுமுன் அவனது உடலை எரியூட்டுவதோடு அந்தக் கணிகையின் மகளையும் காவலில் வை”

-எனச் சோழிய ஏனாதிக்கு (படைத் தளபதி) ஆணையிட்டு அகன்றான் மன்னன்.

மன்னன் அவ்வாறு நீதிக்குத் தக நடந்துகொண்ட போதிலும் அரசி அவ்வளவு எளிதாகத் தன் மகனது மரணத்தை அறம் தவறியமைக்குக் கிடைந்த நியாயமான தணடனை என எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. மகனின் மரணத்திற்குக் காரணமானவளாகத் தன்னால் கருதப்படும் மணிமேகலையை அவள் பழி வாங்கத் திட்டமிட்டாள்.

மன்னவனாயினும், இளவரசனாயினும், அரசியாயினும் அவர்களுக்கு மனக்குழப்பமும் துயரமும் ஏற்படும் காலத்தே தான் கற்றவற்றைத் தன் பேச்சாற்றலின் ஊடாக அவர்களுக்கு எடுத்துரைத்து ஆறுதல் அளிக்கும் அறிவும் தகுதியும் பெற்றவளான வாசந்தவை எனும் மூதாட்டி அரசியை அடைந்து அவள் துயர் நீக்க ஆறுதல் மொழி பகர்கிறாள்.

அரசியைக் குறிப்பிடும் இடத்தே “திருநிலக் கிழமைத் தேவியர்” என்பார் சாத்தனார். “நில உரிமை உடைய தேவியர்” என்பது பொருள். அரசிக்கு நிலக் கிழமை இருந்தது இதன் மூலம் சுட்டப்படுகிறது.

“தன் மண்ணைக் காக்கவோ, இல்லை பிறர் மண்னை வெற்றி கொள்ளவோ மேற்கொள்ளும் போரில் வீரச்சாவு அடைவதைத் தவிர மன்னர்க்கு மூப்படைந்து சாவது உட்பட வேறுவகை இறப்புகள் புகழுக்குரியன அல்ல. நின் மகனின் சாவு குறித்து எந்த ஆறுதல் சொல்லவும் என் நா எழவில்லை.  எனினும் அரசைக் காக்கும் மன்னனின் முன் உன் துயரை வெளிப்படுத்தாதே” என ஆறுதல் சொல்லி அகன்றாள் அந்த மூதாட்டி. ஆனால் அரசி அத்தனை எளிதாக ஆறுதல் அடையத் தயாராக இல்லை.

இதற்கிடையில் மணிமேகலை கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டாள். உரு மாற்றிக் கொள்ளவும், பறந்து செல்லவும் வரம் பெற்றவளான மணிமேகலை அப்படியெல்லாம் செய்யவில்லை.  மணிமேகலையை வஞ்சித்துத் தண்டிக்க மனம் கொண்ட அரசி, அரசனிடம் சென்று, “பிக்குணிக் கோலம் கொண்ட மணிமேகலையின் பின் சென்ற நம் மகன் அரசாளும் தகுதியற்றவன். காமனும் கண்டு மயங்கும் தன் இளமையைப் பிக்குணிக் கோலத்திற்குள் ஒடுக்கிக்கொண்டவளும், நல்லறிவு பெற்றவளுமான மணிமேகலை இருப்பதற்குச் சிறை தகுந்த இடமில்லை. சிறந்த நெறியுடையார்களையே மன்னர்கள் தன் பிள்ளைகளாகக் கருத வேண்டும். அப்படி இல்லாதோர் மறக்கப்பட வெண்டியவர்கள். அவளை இந்தச் சிறை நோயிலிருந்து விடுவி” எனக் கூறி அவளை வஞ்சகமாகத் தன் கைக்குள் கொண்டு வந்து அகன்றாள் அரசி. சிறையை “நோய்” எனச் சாத்தனார் குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

என்னோடு அவள் இருந்தாலும் இருக்கலாம் அல்லது தன்னோடு ஓட்டை எடுத்துக் கொண்டுத் தன் பிச்சை வாழ்வைத் தொடர்ந்தாலும் சரி எனச் சொல்லி அழைத்துச் சென்ற அரசி, மணிமேகலைக்கு பித்தேற்றும் மருந்தைப் புகட்டினாள். ஆனாலும் மறுபிறப்புணர்ந்தவளான மணிமேகலை தன் அறிவு நிலையை இழந்தாள் இல்லை. அடுத்து கல்லா இளைஞன் ஒருவனை அழைத்து மணிமேகலையை வல்லாங்கு செய்து அவளது இள முலைகளில் புணர்ச்சிக் குறிகளைப் பதித்துப் பின் அவளுடன் கூடியிருந்ததாகக் கதை பரப்புமாறு கூறி அவன் கைநிறையக் காசும் கொடுத்து அனுப்பினாள் அரசி. அவனைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்ட மணிமேகலை மந்திரம் ஓதி ஆண் உருவம் அடைந்தாள். அதைக் கண்டு அஞ்சிய அவன் ஊரை விட்டே ஓடினான். அடுத்து அரசி, மணிமேகலைக்குத் தீரா நோய் எனவும், அவள் உணவு உண்ண இயலாதவள் ஆயினாள் எனவும் சொல்லி பட்டினி போட்டுச் சாகடிக்க முனைந்தாள். ஊணின்றி உயிர் வாழும் மந்திர  சக்தி உடையவள்  மணிமேகலை எனும் உண்மை அறியாத அரசி அந்த முயற்சியிலும் தோற்றாள்..

விம்மி நடுங்கிக் கலங்கிய அரசி, “என் மனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்க மாட்டாது தவநெறி மிக்க உனக்குச் சிறுமை செய்தேன். பொன்னை ஒத்தவளே பொருத்துக் கொள்வாய்” என மணிமேகலையைத் தொழுது நின்றாள்.

மணிமேகலை பேசத் தொடங்கினாள்:

“உன் மகன் உதயகுமாரன் முன்னொரு பிறவியில் ராகுலனாகப் பிறந்து என் கணவனாக வாழ்ந்த போது திட்டிவிடம் தீண்டி இறந்தான், அதைப் பொறாது நான் என்னுயிரையும் நெருப்பிலிட்டு அழித்துக் கொண்டேன். அன்று உன் இந்த இளவரசனுக்காக நீ எங்கே நின்று அழுதாய்? இப்போது அவன் எரிக்கப்பட்ட போது நீ அவன் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்கழுதாயானால் அந்த உடலைப் புறங்காட்டிலே எரித்தார்களே அவர்கள் யார்? உயிருக்காக அழுதாயானால் வினைப்பயனுக்குத் தக அவ்வுயிர் மீளவும் புகும் இடத்தை அறிந்து உணர்தல் உன்னால் இயலாதது. அன்பிற்குரிய உன் மகனின் அந்த உயிர் இன்று எந்த உடலில் உள்ளது என அறியாத நீ எல்லா உயிர்களிடமுமே அன்பும் இரக்கமும் கொண்டவளாக அல்லவா இருக்க வேண்டும்?

“பெருந்தேவியே! நின் மகனை வெட்டிக் கொன்ற கள்வன் காஞ்சனன் செய்ததைக் கேள். விருந்தினர்க்குச் சோறு படைக்க வந்த சமையற்காரன் தடுக்கி வீழ்ந்து சமைத்த உணவைக் கீழே கொட்டியதைப் பொறுக்காமல் அவனை வெட்டி  வீழ்த்தினான் முற்பிறவியில் உன் மகன். அந்தத் தீவினையின் பயன்தான் இப்பிறவியில் காஞ்சனனின் வாளால் இன்று வெட்டி வீழ்த்தப்பட்டது.

“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என நீ கேட்பாயானால் பூங்கொடியை ஒத்தவளே! அதையும் சொல்வேன்”

– எனக் கூறி உவவனத்தில் தான் மலர் கொய்யப் போனது தொடங்கி, கந்திற் பாவையின் உரையைக் கேட்டுத் தன் முற்பிறவிகளை அறிந்து தான் தெளிவடைந்தது ஈறாக உற்றது அனைத்தையும் ஒன்றும் ஒழியாமல் சொன்னாள் மணிமேகலை.

அவரவர் வினைப்பயனை அவரவர் அனுபவித்தே ஆக வெண்டும். இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். இதை உணர்ந்து உயிர்கள் அனைத்திடமும் சமமான அன்பு செலுத்த வேண்டும். எல்லாம் வினைப்பயன் என்கிறபோது தண்டித்தல், பழிவாங்கல், எந்தக் காரணங்களுக்காகவும் உயிர்களைத் துன்புறுத்துதல் ஆகியன ஆகாது என்பது பௌத்த அறம்.

(அடுத்து அரசிக்கு மணிமேகலை உரைக்கும் அறமும் சாவகம் சென்று ஆபுத்திரன் நாடடைதலும்)

 

 

 

 

 

 

காந்தி ஒரு புதிரும் அல்ல  பழமைவாதியும் அல்ல

காந்தி ஒரு புதிர் 2   (முன் பதிவுத் தொடர்ச்சி; தன்னளவில் முழுமையானதாக இதைத் தனியேயும் படிக்கலாம்)                                         

பன்முக ஆளுமை என்பதற்கு ஒரு உச்சபட்ச எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் காந்தி. ஏதோ தம் வீட்டிலுள்ள ஒரு பெரியவரிடம் கலந்து ஆலோசிப்பதைப் போல மக்கள் அவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர். அத்தனை பணிகளுக்கும் மத்தியில் ஒவ்வொன்றையும் ‘சீரியசாக’ எடுத்துக்கொண்டு அவர் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதை வியப்பாகச் சுட்டிக் காட்டுவார் லூயி ஃபிஷர். பிரிட்டிஷ் அரசுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவர் தீவிரமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் யாரோ ஒருவர், “மக்கள் கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நீங்கள் ஏன் கண்டிப்பதில்லை?” எனக் கேட்பார். ‘யங் இந்தியா’ வில் ‘கேபினட் மிஷன்’ பற்றிய காந்தியின் அணுகல் முறை பற்றி ஒரு கட்டுரை இடம் பெறும். அடுத்த பக்கத்தில் மாம் பருப்பின் பயன்பாடுகள் பற்றி அவரே ஒரு குறிப்பு எழுதியிருப்பார். பசியாற்றுவதற்கும் உடல் நலத்திற்கும் அது மிகவும் நல்லது என்பார். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ராம நாமம் பற்றியும் ஒரு குறிப்பு இருக்கும். ஏன் எருமைப்பாலைக் காட்டிலும் பசும்பால் நல்லது என்பது குறித்தும் இன்னொரு பக்கத்தில் ஒரு விளக்கம் இருக்கும்.

மக்களுக்கான அர்சியலைப்பற்றி மட்டுமல்ல அவர்களின் நல்வாழ்வு, அறம், பண்பாடு எல்லாவற்றையும் பற்றிய கரிசனம் கொண்டவராக காந்தி காட்சி தந்தார். கடலைக் கொட்டையின் பயன்பாடுகள் குறித்து அடிக்கடி ஏதாவது எழுதுவார். அவரது ‘ஹரிஜன்’ இதழில் அவர் எழுதும் கடிதங்களில் ஒன்று அரசியல் சுதந்திரம் பற்றியதாக இருக்கும். அடுத்த கடிதத்தில் இனிப்புகள் செய்வதர்கான சர்க்கரை ‘ரேஷனை’ குறைக்க வேண்டும் என எழுதி இருப்பார். மூன்றாவது கடிதம் குற்றச் செயல்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய மாற்றுச் சிந்தனை ஒன்றை முன்வைக்கும். அடுத்த கடிதம் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியா இராணுவம் வைத்துக் கொள்ளக் கூடாது என (!) அறிவுறுத்தும். ஐந்தாவது கடிதம் எக்காரணத்திற்காகப் பொய் சொல்வதையும் ஏற்க முடியாது என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறியாக முன்வைக்கும்.

“அவர் மகாத்மா. துறவி. அரசியலும் பட்டாணிக் கடலையும் அவருக்கு ஒன்றுதான்” – என்பார் ஃபிஷர்.

உருளி எனும் ஊரில் அவர் தங்கியிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இன்னொருவர் இப்படி நினைவுகூர்கிறார்: காலையில் அந்தக் கிராம மக்கள் அவரைக் காண வருகின்றனர். இரவு அங்கு ஒரு வீட்டில் நடந்த திருட்டைப் பற்றி அவரிடம் முறையிட்டு என்ன செய்யலாம் எனக் கேட்கின்றனர் காந்தி மூன்று சாத்தியங்களை அவர்கள் முன் வைக்கிறார். “1. போலீசில் புகார் கொடுக்கலாம். ஆனால் அது போலீஸ்காரர்கள் உங்களிடம் லஞ்சம் பெறுவதில்தான் முடியும். 2. பயந்து கொண்டு சும்மா இருக்கலாம். ஆனால் அது கோழைத்தனம். 3. அந்தத் திருடன் எந்த அளவிற்கு ஒரு ‘கிரிமினலோ’ அதேபோல நாமும் ‘கிரிமினல்கள்’ தான். நீங்கள் உங்கள் மேலேயே ‘டார்ச்’ விளக்கை அடித்துப் பார்த்தீர்களானால் திருடனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஒரு டிகிரிதான் வித்தியாசம். அளவுக்கு மீறி சொத்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் திருடர்கள்தான்..”.

“லூசா நீ..?”- எனக் கேட்டு மக்கள் அகலவில்லை. கையெடுத்துக் கும்பிட்டு அவர் சொன்னதை ஏற்றுத் திரும்புகின்றனர்.

காந்தி ஒரு புதிர்.

எந்த அரசு அதிகாரமும் இல்லாத அவர் தன்னைப் பின்பற்றிய மக்களுக்கு ஒரு சுய கண்ணியத்தையும் சுய மரியாதையையும் அளித்தார். அதனூடாக அவர்கள் ஒரு கூட்டு அதிகாரம் (collective power) பெறவும், உணரவும் வழி வகுத்தார். அவரது அரசியலில் ‘முன்னணிப்படை’ (vanguard), மக்கள்திரள் என்கிற பிரிவினை இல்லை. பெரிய அளவில் மக்களை, அடித்தட்டு மக்களையும் பெண்களையும் அரசியல் களத்தில் இறக்கியவர் அவர். அதில் எல்லாத் தரப்பினரும் இருந்தனர். மாயவரத்தில் (மயிலாடுதுறை) அவர் தங்கியிருந்தபோது தேவதாசிகள் அவரை வந்து சந்திக்கின்றனர். அவர் அந்தத் தொழிலை விடுமாறு அவர்களுக்கு அறிவுரை சொல்லுகிறார்லவர்கள் தங்களின் கழுத்தில், காதில் கிடந்த தங்க நகைகளைக் கழற்றி அவரது அப்போதைய போராட்ட நிதிக்குப் பணிந்தளித்து அகல்கின்றனர்.

காந்தி முன்வைத்த எந்தக் கருத்தாக்கத்தையும் அதைக் குறித்த சொல்லிற்கு அகராதிகள் அளிக்கும் பொருளை வைத்துப் புரிந்து கொள்ள இயலாது. அவர் அந்தச் சொற்களின்மீது புதிய பொருள்களை ஏற்றி அவற்றை முற்றிலும் புதிய அர்த்தமுள்ள புதிய சொற்களாக முன்வைத்தார். அவை புதுப் பொலிவுடன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களாக ஒளிர்ந்தன.

அவரது ‘அஹிம்சை’ வன்முறையைக் கைவிடுதல் மட்டுமல்ல. எதிரியை நேசித்தல் என்பதை அது நிபந்தனையாக்கியது. அது அன்பால் அவனை வெல்லுதலைப் பொருள் கொண்டது. நாம் நியாயத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும்போதும் யாரை எதிர்த்துப் போராடுகிறோமோ அவர் மீது பகையுணர்ச்சி (hostility) கூடாது; அவர்களை உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் காயப்படுத்த (hurt) கூடாது.

அவரது ‘புலனடக்கம்’ எனும் கருத்தாக்கம் விந்தைக் கட்டுவது மற்றும் புணர்ச்சியைத் தவிர்ப்பது மட்டுமல்ல. காம எண்ணங்களையே இதயத்திலிருந்து அகற்றுவது. காம உணர்வைத் தூண்டும் உணவுப் பொருள்களையே நீக்குவது. உணவு என்பது உடலில் உயிரைத் தக்கவைக்கத் தேவையான ஆகக் குறைந்த அளவாகவே இருக்க வேண்டும்.mahatma-gandhi-auction

‘திருடாமை’ என்பது பிறர் பொருள்களைக் களவு செய்யாமல் இருப்பது மட்டுமல்ல. அவசியத் தேவைக்கு மிகுதியாக நாம் வைத்துள்ள எல்லாமே திருடப்பட்டவைதான். “நாற்காலி இல்லாமல் உன் வேலையைச் செய்ய முடியுமானால் நாற்காலியை வைத்திருக்கவே கூடாது” – என்றவர் அவர்..

‘சுதேசி’ என்பது அந்நிய இறக்குமதித் துணிகளைப் புறக்கணிப்பது எனத் தொடங்கினாலும் பின்னர் எந்திரத்தால் உற்பத்தி செய்த துணிவகைகளையே தவிர்ப்பது என்பதாக மாறியது. பொதுவாக மனித உழைப்பைத் தேவையற்றதாக ஆக்கும்  எந்திரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதே சுதேசி என்பதன் பொருளாகப் பின் மாறியது. “சுதேசி என்கிற கருத்தாக்கத்தைப் பின்பற்றுபவர்கள் சத்தியத்திற்குப் புறம்பான எதையும் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்” –என்கிற நிலையை இறுதியில் எட்டியது (Kathrin Tridrick, Gandhi, A political and Spiritual Life).

என்ன இருந்தாலும் காந்தி தீண்டாமை உட்பட வருணாசிரமத்தை அங்கீகரிக்கும் இந்துமதத்தை ஏற்றுக் கொண்டவர்தானே என்று கேட்பது காதில் விழுகிறது. அவர் இந்துமதத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட எல்லோரும் அவரை ஏற்பதில்லையே. இந்த நாட்டை இந்து நாடாகக் கண்டவர்கள் அவரைக் கொன்று தீர்த்தார்களே அது ஏன் என்கிற கேள்வியையும் நாம் கூர்ந்து ஆராய வேண்டும்.

எல்லாவற்றிலும் தன் கருத்தை ஏற்றி அவற்றை அவற்றின் ‘ஒரிஜினல்’ அடையாளம் தெரியாமல் புதிதாக்கினார் காந்தி. அவரது இந்து மதம் எல்லோரும் புரிந்து கொண்ட இந்து மதமல்ல. அது காந்தியின் இந்துமதம் என்பார் டெர்செக் (Donald J Terchek, Struggling for Autonomy, p.57). காந்தியின் அஹிம்சை, காந்தியின் சுதேசியம் என்பதுபோலவே அவர் முன்வைத்த அந்த மதம் காந்தியின் இந்துமதமாக இருந்ததும் அது மற்ற யாருடைய இந்து மதத்தைக் காட்டிலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரவியதும்தான் அன்றைய கோட்சேக்கள் முதல் இன்றைய மோகன் பகவத்கள் வரை அவரை ஏற்க இயலாதவர்களாக ஆகிவிட்டது.

அப்படி என்ன அவர் இந்து மதத்திற்குப் புதிய விளக்கம் அளித்தார்? இங்கு நாம் காந்தியச் சிந்தனையின் integrity பற்றிச் சற்றே சிந்திப்பது அவசியம். அப்போதுதான் எல்லோரும் நினைப்பதுபோல அவர் முரண்பாடுகளின் மூட்டை அல்ல என்பது விளங்கும். அவரது சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒருங்கிணைந்தவை. அரசியல், அறவியல், மதவியல்… என காந்தியச் சிந்தனையின் அனைத்து அம்சங்களும் முரணற்றவை. ஒன்றை ஒன்று பலப்படுத்துபவை.

ஆலய வழிபாடு தொடங்கி அவர் காலத்திய இந்து மதம் முன்வைத்த பல மரபுகளை காந்தி ஏற்றுக் கொண்டதில்லை. அவரது இந்து மதம் மூடுண்டது அல்ல; அது திறந்த ஒன்று. வளைந்து கொடுக்கக் கூடிய (resilient) ஒன்று. அதனாலேயே இந்து மதம் என்னை ஈர்க்கிறது என்றார்.

“நான் இந்து எனச் சொல்லிக் கொள்வதில் ஏன் பெருமை அடைகிறேன் என்றால் இந்து என்ற அந்தச் சொல்லாக்கம் (that term) சகிப்புத் தன்மை மிக்கது மட்டுமல்ல, இந்தப் பூமியின் நாலா திசைகளிலும் தோன்றிய இறைத்தூதர்களின் (prophets) போதனைகள் எல்லாவற்றையும் அதற்குள் நாம் இணைத்துக் கொள்ள (assimilate) முடிவதாகவும் உள்ளது” (Statement to Press, Nov 04, 1932, Collected Works 51:145) எனப் பத்திரிகையாளர்கள் முன் பிரகடனப் படுத்தியவர் அவர். ஆம், இந்து மதத்திற்கென இறுக்கமான, கை வைக்க இயலாத ஒற்றைப் புனித நூல் அல்லது ஒரே இறைத் தூதர் அல்லது அவதாரம் இல்லை என்பதை காந்தி இந்து மதத்தின் குறைபாடாக அன்றி  மிகவும் சாதகமான ஒன்றாகப் பார்த்தார்.

அப்புறம் சுட்டுக் கொல்லமாட்டார்களா? ஆம், தனது கொலைகாரர்களுக்கும் ஒரு நியாயத்தைத் தந்துவிட்டுப் போனவர்தான் காந்தி.

“இந்துமதத்தில் எவை எல்லாம் தவறானவை எனத் தான் கருதுவதை எல்லாம் அவர் தாக்கினார். பெண்களின் நிலை, தீண்டாமை, பிராமணர்கள் வகித்த பங்கு, சடங்குகள் முதலியன அவரால் மறுக்கப்பட்டவைக்குச் சில எடுத்துக்காட்டுகள். இந்து மத வரையறையின் அடிப்படைக் கூறுகள் எனக் கருதப்படாத அஹிம்சை முதலான சில கொள்கைகளை, அவையே அதன் மையைக் கோட்பாடுகள் என உயர்த்திப் பிடித்தவர் அவர். அற உணர்வு (conscience), அன்பு (love) முதலான சில கருத்தாக்கங்களை பிற மரபுகளிலிருந்து இறக்குமதி (import) செய்து அவற்றை இந்து மதத்தின் பிரிக்க இயலாத கூறுகளாக அவர் முன்வைத்தார். இத்தகைய புத்துருவாக்கங்களின் ஊடாக களச் செயல்பாட்டை நோக்கிய ஆன்மீகம் என்கிற ஒரு புதிய பார்வையைத் (vision) தந்தார்; இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் புதிய ‘இந்துயிசத்தை’ (Hinduism) இந்தியாவின் சமூகச் சீர்திருத்தம் மற்றும் அரசியல் அணிதிரட்டல்கள் ஆகியவற்றிற்கான ஒரு கருவியாக ஆக்கினார்” என்கிறார் டெர்செக் (Donald J Terchek. op.cit).

டெர்செக்கின் இந்த மேற்கோளின் கடைசி வாக்கியம் முக்கியமானது. காந்தி இப்படியாகச் செய்த மாற்றங்களின் ஊடாக அவர் ஏதொரு ஆன்மீகப் பிரச்சாரத்தையும் என்றும் மேற்கொண்டதில்லை. முழுக்க முழுக்க அவர் அரசியல் அணிதிரட்டலுக்கும் இந்து சமூகச் சீர்திருத்தத்துக்கும் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினார். அவர் அரிஜன ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியபோதும், “பசு எனக்கு தெய்வம்தான். ஆனால் அது எப்படி இன்னொருவருக்கும் தெய்வமாக இருக்க முடியும்” எனக் கேட்டு பசுவதைத் தடைச்சட்டம் ஒன்றை அவரது வாழ்நாளில் இயற்றவிடாமற் செய்தபோதும்தான் இந்து மத பீடங்கள் ஆடின; சுதந்திர இந்தியாவை இந்து நாடாக ஆக்க முயன்றவர்கள் ஆத்திரம் கொண்டனர். சுட்டும் தீர்த்தனர்.

நன்கு யோசித்துப் பார்த்தால் காந்தியிடம் எந்தப் புதிரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ல முடியும். அவர் ஒரு திறந்த புத்தகம். அவரைவிட வெளிப்படையாக இருந்தவர் யாருமில்லை.

சமாதானத் தேவதையாகவும் பிரிட்டிஷ் அரசைக் கலங்க அடித்தவராகவும் கொண்டாடப்படும் அவர்தான் தென் ஆப்ரிகாவில் இருந்தபோது அங்கு நடந்த போயர் மற்ரும் (1899-1902), ஸூலு (1906) யுத்தங்களின் போது இந்திய ஆம்புலன்ஸ் படையை (Indian Ambulance Corps) அமைத்து பிரிட்டிஷ் இராணுவத்தில் ஒரு சார்ஜன்ட் மேஜராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சம்பரான் சத்தியாக்கிரகம் (1917), கெடா சத்தியாக்கிரகம் (1918) முதலானவற்றில் ஏராளமான அடித்தள மக்களையும் விவசாயிகளையும் மத வேறுபாடுகளைத் தாண்டி ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் ஆட்சியைக் கதிகலங்கடித்த அவர்தான் கெடா சத்தியாக்கிரகப் போராட்டம் முடிந்த கையோடு முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுப் படைக்கு ஆள் திரட்டினார். குஜராத்தின் கோத்ரா இன்று வேறொரு காரணத்திற்காக எல்லோருக்கும் தெரிந்த ஒரு நகரம். அங்கு பெருந்திரளாக உள்ள தாக்கூர்கள் மத்தியில் 1918, ஏப்ரல் 16 அன்று தனது இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை விளக்கிப் பேசி, நாடகம் ஒன்றையும் நடத்தி போருக்கு ஆதரவாக நிதி திரட்டிய வரலாற்றை முதல் உலகப் போர் குறித்து விரிவாக எழுதியுள்ள வேதிகா கான்ட் பதிவு செய்கிறார் (Vedica Kant, India and the First World War – “if I Die Who Will Remember Me”). இன்றும் புனேயில் உள்ள இந்திய இராணுவ மருத்துவமனையில் இராணுவ உடையுடன் கூடிய காந்தியின் புகைப்படத்தை நாம் காண முடியும். காந்தியை வியந்த ஏராளமான ஐரோப்பிய அறிஞர்களுள் ஒருவரான பாதிரியார் சி.எஃப் ஆன்ட்ரூஸ் இதற்காக காந்தியைக் கடுமையாக விமர்சித்தது பிரசித்தம்.

முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் நிலைபாட்டை அன்றைய இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆதரிக்கத்தான் செய்தனர். ஆனால் பதிலாக எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல் பிரிட்டிஷ் அரசின் போருக்கு ஆதரவாக நின்றது காந்தி மட்டுமே என வேதிகா கூறுவது குறிப்பிடத் தக்கது. அன்றைய உலக அரசியல் சூழலில் பிரிட்டனின் பக்கமே நியாயம் இருப்பதாக உணர்ந்தது, எதிரியை வெறுக்காமல் நேசிப்பது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தது ஆகியவற்றின் விளைவுதான் காந்தியின் அந்த அன்றைய நிலைபாடு.

காந்தியைச் சரியாக விளங்கி கொண்டால் அவரிடம் எந்தப் புதிரும் இல்லை.

அவர் பழமைவாதியும் இல்லை. அவர் மிகவும் நவீனமான சிந்தனைகளைத் தாங்கி இருந்தவர். அவரை ஆக நவீனமான பின்நவீனத்துவ அரசியலைச் செய்தவர் என்றும் ஒரு ஆய்வு நூலுண்டு (Lloyd I Rudolph, Susanne Hoeber Rudolph, Post Modern Gandhi, OUP, 2006). நவீனத்துவத்தின் (modernism) மீது விமர்சனம் வைத்து அது எத்தனை வன்முறையானது என்பதை உலகிற்குச் சுட்டிக் காட்டியது பின்நவீனத்துவம் (Post Modernism). காந்தியும் தன் வாழ்நாள் செய்தியாக அதைத்தான் உலகிற்குத் தந்து சென்றார் என்கின்றனர் இந்த இந்தியவியல் ஆய்வாளர்கள். நவீன உலகு, இன்றைய உற்பத்திமுறை, அவற்றின் மீதான மக்களின் மோகம் ஆகியன பற்றிய கடுமையான விமர்சனமாக அமைந்த காந்தியின் Hind Swaraj நூல்தான் (1909) உலகளவில் நவீனத்துவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதல் என்கின்றனர் இத்தம்பதியர். இடுப்பில் கட்டிய ஒரு துண்டுத் துணியும் கையில் ஒரு குச்சியுமாய்க் காட்சியளித்த அந்த மனிதனை ஒரு மரபுவாதி அல்லது பழமைவாதி என நினைப்பதுபோல அபத்தம் ஏதுமில்லை என்கிற முன்னுரைப்புடன் அவர்கள் தமது நூலைத் தொடங்குகின்றனர்.

இன்னொரு பக்கம் காந்தியை ஒரு “அராஜகவாதி” (anarchist) என வகைப்படுத்துபவர்களும் உண்டு. அரசதிகரத்தின் ஊடாகக் கட்டமைக்கப்படும் ஒழுங்கின் உள்ளார்ந்த வன்முறையைச் சுட்டிக் காட்டும் அணுகல்முறையைத்தான் ‘அராஜகம்’ என்பர். காந்தி குறைந்தபட்ச அரசு என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தவர். அரசை அவர் “ஒரு தவிர்க்க முடியாத தீமை” எனவும், “எவ்வளவுக்கெவ்வளவு அரசு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது” எனவும் கூறியவர். காந்தியின் குரு எனக் கருதப்படுகிற டால்ஸ்டாயும் ஒரு அராஜக மரபில் வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

காந்தி எதிர்ப்பு என்பது காந்தியைப் புரியாமை, மற்றும் புரிந்துகொள்ள முயற்சிக்காமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களால் சமகாலத்தில் பெரிதும் நேசிக்கப்பட்டவர்களை ஒட்டு மொத்தமாக நாம் பார்க்க வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் ஊடாக மட்டும் அவர்களை மதிப்பிட்டுவிட முடியாது என்பதற்கு காந்தி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காந்தியைப் பயின்றால் அவர் புதிரும் இல்லை, அவரிடம் முரண்களும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

 

ஆர்.எஸ்.எஸ் மாறுகிறதா? மோகன் பகவத்தின் விஞ்ஞான் பவன் உரையும் விஜயதசமி உரையும்

             

ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’ என்பது கே.பி ஹெட்கேவரால் ஒரு விஜயதசமி நாளில் (1925) நாசிக்கில் (மகாராஷ்டிரம்) உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை அறிவோம். ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அப்போதைய சர்சங் சலக், அதாவது அவ்வமைப்பின் பெருந்தலைவர் நாசிக்கில் இருந்து ஆற்றும் உரை முக்கியமாக எல்லோராலும் கவனிக்கப்படும். இந்தியா எதிர்கொண்டுள்ள அப்போதைய பிரச்சினைகள் குறித்த அதனுடைய பார்வை மற்றும் அணுகல்முறைகளை விளக்குவதாக அமையும் என்கிற வகையில் அந்த உரை அத்தகைய கவனத்திற்குள்ளாகும்.

காந்தி கொலை உட்பட்ட பல்வேறு வன்முறைகளுக்கும் கலவரங்களுக்கும் காரணமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்பதும் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று. எனவே அன்றைய பிரச்சினைகள் குறித்த அதனுடைய கருத்துக்கள் அதன் ஆதரவாளர்களால் மட்டுமின்றி, அதனால் பாதிக்கப்படுபவர்களாலும், அவ்வமைப்பை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவர்களாலும் கூட கவனிக்கப்படும்.

இன்று நாம் சந்தித்துக் கொண்டுள்ள வன்முறைகளுடன் கூடிய மதவாத அரசியல் மற்றும் எதிர்வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய பின்னணியில் இந்த எல்லாத் தரப்பினராலும் இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்சின் பெருந்தலைவர் மோகன் பகவத் ஆற்றிய விஜயதசமி உரை அதிக கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நாசிக்கில் உள்ள ரெஷிம்பாகில் அவர் ஆற்றிய அந்த உரையைச் சற்று விரிவாகப் பார்க்குமுன் இதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன் சென்ற செப் 17, 18, 19 (2018) ஆகிய தேதிகளில் டெல்லி விஞ்ஞான் பவனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன் நடத்திய மூன்று நாள் மாநாட்டில் (conclave) மோகன் பகவத் பேசிய பேச்சையும் அது எவ்வாறு இங்கு எதிர்கொள்ளப்பட்டது என்பதையும் பார்ப்பது அவசியம்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கியது ஹெட்கேவராக இருந்தபோதும் அதன் நீண்ட நாள் பெருந்தலைவராக இருந்த கோல்வால்கர் காலத்தில்தான் அதன் கோட்பாடுகளும் அமைப்பு வடிவமும் உறுதிபெற்றன என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர் ஆன்டர்சன் அதற்குப் பின் வந்த தலைவர்களில் ஒருவரான பாலாசாகேப் தியோரசின் காலத்தில்தான் அது ஒரு இறுக்கமான உயர்சாதி ஆணாதிக்க அமைப்பு என்கிற நிலையிலிருந்து ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட (liberal) அமைப்பாக மாறியது என்று குறிப்பிடுவதைச் சென்ற சிலவாரங்களுக்கு முன் நான் இங்கு இட்ட ஒரு முக்கியமான தொடர்பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஆன்டர்சன் இவ்வமைப்பை நெருக்கமாக இருந்து ஆய்வு செய்துள்ளவர் மட்டுமல்ல, அதைச் சற்று அனுதாபத்துடன் அணுகுபவரும் கூட.

‘பவிஷ்யா கா பாரத்’ – என்கிற பெயரில் நடைபெற்ற இந்த மூன்றுநாள் உரை குறித்து ஆர்.எஸ்.எஸ்சைச் சற்றே ஆதரவாக அணுகுபவர்கள் மட்டுமின்றி ஊடகங்கள் பலவும் கூட ஆர்.எஸ்.எஸ் மிகவும் மாறிவிட்டது எனவும், இறுக்கமான அதன் பல கொள்கைகளை அது கைவிட்டுவிட்டது எனவும், கோல்வால்கரின் பார்வையிலிருந்து அது முற்றிலும் விலகி விட்டது எனவும் கொண்டாடினர்.

ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய் 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் அப்போதைய தலைவர் அதன் இரும்புத்திரைய்யை வில்லக்கி அதை ஒரு திறந்த அமைப்பாக மாற்றிய சீர்திருத்த நடவடிக்கையுடன் (glasnost) பகவத்தின் உரையை ஒப்பிட்டார்.

அப்படி என்ன பகவத் விஞ்ஞான் பவன் சந்திப்பில் பேசினார்? சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம்.

 

1.நீங்கள் ஆர்.எஸ்.எஸ்சைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஹெட்கேவரிலிருந்து தொடங்க வேண்டும். அவர்              ஓராண்டுகாலம் காங்கிரசில் இருந்தார். சுதந்திரப் போராத்தில் சிறைக்கும் சென்றார். சுதந்திரப் போராட்டத்தில்காங்கிரஸ்      முக்கிய பங்களிப்புகளைச் செய்தது. பல முக்கிய தலைவர்களை அது நாட்டுக்குத் தந்துள்ளது.

  1. நாங்கள் ஏன் காவிக் கொடியை (பக்வத் த்வஜா) வணங்குகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதற்கு குருதட்சிணை செலுத்துகிறார்கள். அதனால் வரும் தொகையை வைத்துத்தான் ஆர்.எஸ்.எஸ் இயங்குகிறது, தேசியக் கொடியை நாங்கள் அவமதிப்பதில்லை. ஒரு முறை நேரு தேசியக் கொடியை ஏற்றும்போது அது சிக்கிக் கொண்டது. அப்போது ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்தான் பாய்ந்து ஓடிக் கொடி மரத்தில் ஏறி அந்த சிக்கை எடுத்துவிட்டார்.

3.ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு ஜனநாயகம் உள்ளது. ஒருமுறை ஒரு இளம் சங்க ஊழியன் என்னப் பார்த்து நீங்கள்                ஏன்நாக்பூர் ஷாகாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்டான். நான் அப்போது தவிர்க்க முடியாத ஒரு பயணத்தில்             இருந்தேன் என அவனிடம் விளக்க வேண்டியதாயிற்று.

  1. நமது அமைப்புக்கு பெண்வெறுப்பு கிடையாது.நமது அன்னையரும், சகோதரிகளும் எங்கிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்சிற்குப் பங்களிப்பு செய்கின்றனர்.
  2. நாங்கள் பா.ஜ.கவையும் அரசையும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ செய்கிறோம் என்பது அப்பட்டமான பொய். நாங்கள் அரசில் யார் இருந்தாலும் அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை. நாங்கள் சமூக நன் நடத்தைகள் குறித்தே கவலைப்படுகிறோம்.
  3. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். ஏன் எல்லோரும் பா.ஜ.கவிலேயே சேர்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை.
  4. இந்தியா பலதரப்பட்ட மக்களும் வாழும் நாடு. அதன் பன்மைத்தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும். பன்மைத்தன்மையை அங்கீகரிக்காத வகையில் எந்த சச்சசரவும் இங்கு வந்துவிடக் கூடாது.

 

பகவத்தின் பேச்சில் உங்களுக்கே கூடப் பல விடயங்கள் வியப்பாக உள்ளனவா? சரி. தொடர்ந்து பகவத்தின் விஜயதசமி உரையைக் காணலாம்.

கேட்கிறவன் கேனையனாக இருந்தால்…

பகவத்தின் ஆதரவாளர்களால் கொண்டாடப்படும் இந்த விஞ்ஞான் பவன் உரையை வாசிக்கும்போது, “கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும்” என்கிற நம்மூர்ப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் குறித்து பொதுவாக நிலவும் கருத்துக்களை இவர் ‘தவிடு பொடியாக்க’ முன்வைக்கும் ஆதாரங்கள் எத்தனை அபத்தமாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் உள்ளன என்பதைக் கவனியுங்கள்.

ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை ஏற்றும் வழக்கம் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்சுக்குக் கிடையாது. அது மட்டுமல்ல. அவர்களுக்கு பச்சை என்பது சிறுபான்மை மக்களைக் குறிக்கும் வண்ணம். வெள்ளை சமாதானத்தைக் குறிப்பது. இரண்டுமே அவர்களுக்கு ஒவ்வாத ஒன்று. இராட்டையும் கூட மகாத்மா காந்தியையும் அஹிம்சையயும் நினைவு படுத்தும் ஒரு அடையாளம், காந்தி அவர்களின் ஜென்ம வரி. திரிசூலத்தைக் கொண்டாடும் அவர்களுக்கு இராட்டை மீதும் வெறுப்பு. எனவேதான் அவர்கள் இந்திய தேசியக் கொடியைக் கண்டு கொள்வதில்லை. அவர்களது காவிக் கொடியை மட்டுமே அவர்கள் வணங்குவார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் தேசியக் கொடியையும் மதிக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக ஒரு அட்டகாசமான கதையை முன்வைக்கிறார் பகவத். ஒருநாள் நேரு கொடி ஏற்றும்போது கொடி சிக்கிக் கொண்டதாம், அதை ஒரு ஆர்.எஸ்.எஸ் தம்பி பாய்ந்தோடிச் சென்று சிக்கெடுத்துப் பறக்க விட்டாராம். எனவே அவர்கள் தேசியக் கொடியை மதிப்பதில்லை என்பது பொய்யாம். இதைச் சொல்லிவிட்டு நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார் பகவத்.

“தேசம்”, “வலிமையான தேசம்” என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவர்கள் ஏன் தேசியக் கோடியைக் காட்டிலும் அவர்களின் காவிக் கொடியை வணங்குகிறார்கள் என்பதற்கும் அவர் ஒரு சூப்பர் காரணம் சொல்கிறார். அப்படித் தங்களின் ‘பக்வத் த்வஜத்தை’ வணங்கும்போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அளிக்கும் நன்கொடையை வைத்துத்தான் அவர்கள் அமைப்பு செயல்படுகிறதாம்.

முப்பதுக்கும் மேற்பட்ட வெளிப்படையான துணை அமைப்புக்கள், இன்னும் பல வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாத கிளை அமைப்புகள், ஆயிரக் கணக்கான கல்வி நிறுவனங்கள் எனச் செயல்படும் இவர்களுக்கு எப்படியெல்லாம் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பொய் சொல்லி நிதி திரட்டி அனுப்பப் படுகிறது என்பது அக்கறையுள்ள அமைப்புகளால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளதை நானே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். பூகம்பம் என்றும் புயல் நிவாரணம் என்றும் திரட்டப்பட்ட நிதிகள் பல்வேறு ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொன்னதே இல்லை. கொடி வணக்கத்தின் மூலம் கிடைக்கும் நன்கொடையின் மூலமாகத்தான் இவர்களின் அமைப்பு செயல்படுகிறது எனச் சொல்வதெல்லாம் மக்களை எத்தனை மூடர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர் என்பதற்குச் சான்று.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஜனநாயகம் உள்ளதாம். பகவத் சூப்பர் நகைச்சுவைப் பேர்வழி என ஒத்துக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வாக்கெடுப்புகளின் மூலம் அவர்களின் சர்சங்சலக்குகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. கடைசியாக இருந்த தலைவர் அடுத்தவரை நியமிப்பார். இதுவரை ஒருவரைத் தவிர அத்தனை சர்சங்சலக்குகளும் பார்ப்பனர்கள்தான். ஆண்கள் மட்டுமே இதுவரை தலைவர்களாகி உள்ளனர். எந்த மட்டத்திலும் தேர்தல் கிடையாது. இதன் பெயர் ஜனநாயகமாம். தங்கள் அமைப்பு ஜனநாயகமானதுதான் என்பதற்கும் அவர் ஒரு ஆதாரத்தை முன்வைக்கிறார் பாருங்கள், நாம் வியப்பால் வாயடைத்துப் போகிறோம். ஒரு நாள் ஒரு சின்ன ஆர்.எஸ்.எஸ் ஊழியன் அவரைப் பார்த்து ஏன் நீங்கள் நாசிக்கில் நடந்த சாகாவில் கலந்துகொள்ளவில்லை எனக் கேட்டுவிட்டானாம். அவனை இவர்கள் தண்டிக்கவில்லையாம். “அன்றைக்கு நான் ரயிலில் வந்துகொண்டு இருந்தேனப்பா..” என இவர் பதில் சொன்னாராம். இதைவிட என்ன ஜனநாயகம் வேண்டும் என நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறார் பகவத்.

ஏன் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் தேர்ந்தெடுப்படுவதில்லை என்கிற கேள்விக்குப் பதிலளிக்காமல், எங்கள் அன்னையர்களும் சகோதரிகளும் அவர்கள் எங்கிருந்தபோதிலும் அமைப்பிற்குப் பங்களிக்கிறார்கள் எனச் சொல்லி, எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை மதிக்கும் அமைப்பு என்கிறார்.

பா.ஜ.க வின் அடுத்த தலைவர் யார் என நிர்ணயிப்பதும். பா.ஜ.க ஆட்சிக்கு வர நேர்ந்தால் யார் பிரதமர் என முடிவு செய்வதும் ஆர்.எஸ்.எஸ்தான் என்பது ஊரறிந்த இரகசியம். ஆனால் ஆட்சியையும் கட்சியையும் தாங்கள் ரிமோட் கன்ட்ரோல் பண்ணுவதில்லையாம்.

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலும் சேரலாமாம். ஏன் எல்லோரும் பா.ஜ.கவிலேயே சேர்கிறார்கள் என்பது எத்தனைமுறை தலையைச் சொரிந்து சொரிந்து வழுக்கையாக்கிக் கொண்டாலும் பகவத்துக்குப் புரிவதே இல்லையாம். ஆனால் இப்படிச் சொல்லி அடுத்த ஒரு மாதத்தில் ஆற்றிய விஜயதசமிச் சிறப்புரையில் அதற்கு அவரே பதில் சொல்லி விடுகிறார்.

இது எச்சரிக்கையா? பிரகடனமா?

இனி மோகன் பகவத்தின் விஜயதசமி உரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

1.வலிமையான தேசம், அண்டை நாடுகளை அச்சுறுத்தத் தக்க பலம் வாய்ந்த இராணுவம் என்கிற அடிப்படியிலான தேசியம் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் அடிப்படை அணுகல்முறைகளில் ஒன்று. இந்த உரையிலும், ”எல்லைப் பாதுகாப்பு என்பது மிகவும் கவனத்துக்குரிய பிரச்சினை” என வற்புறுத்தும் பகவத், அந்த அடிப்படையில் மோடி அரசு இராணுவத்தை வலிமையான ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஊடாக அதன் உற்சாகம் குன்றாமல் காத்துள்ளதாக அரசை வெகுவாகப் புகழ்வதோடு, “உலகில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருவதன் காரணங்களில் ஒன்றாக” இப்படி இந்திய இராணுவத்திற்கு நவீன ஆயுதங்களைச் சேர்ப்பதைக் குறிப்பிடுகிறார். நவீன தொழில்நுட்பம் கூடிய போர்விமானங்கள் என்கிற பெயரில் ரபேல் விமான ஊழலில் மோடி அரசு சிக்கி விழி பிதுங்கும் பின்னணியில் மோடி அரசை “வலிமையான தேசியம்” எனும் சொல்லாடலின் ஊடாக பகவத் முட்டுக் கொடுக்க முனைவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ்தலைமையிலிருந்த UPA அரசின் மீதான ஊழல் புகார்கள் அடிப்படையில் அன்னா ஹசாரேயைக் களத்தில் இறக்கியதே நாங்கள்தான் என்றெல்லாம் சொல்லி தன்னை ஊழலுக்கெதிரான அமைப்பாகக் காட்டிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் உண்மை முகம் வெளிப்படும் தருணங்களில் ஒன்று இது.

 

  1. அடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பு: “கடுமையான முறையில் ஏழ்மை, அநீதி, புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பலவீனமான மக்கள் மத்தியில் வெறுப்பையும், கலக உணர்வையும், ஐயத்தையும், வன்முறையையும்” விதைக்கும் சக்திகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உலை வைக்கின்றனர் எனச் சொல்லி மோடி அரசை விமர்சிக்கும் அறிவுஜீவிகளின்பால் பாய்கிறார் பகவத். “நவ இடதுசாரிகள்” எனவும், “நகர்ப்புற நக்சல்கள்” எனவும் மோடி அரசின் மொழியை மிகத் தாராளமாக வழிமொழியும் பகவத், மக்கள் பிரச்சினைகளுக்காக் கருத்தியல் களத்தில் போர் செய்யும் இவர்களைக் குறி வைக்கிறார். தேசத்தைப் பலவீனப் படுத்துகிறவர்களாகவும் அப்பாவி மக்களைத் தம் ‘தேசத் துரோக’ நடவடிக்கைகளுக்குக் கேடயமாகப் பயன்படுத்துவதாகவும், அதனூடாகச் சட்ட ஒழுங்கைக் குலைப்பதாகவும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறார். “சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி அறிவுஜீவித் துறைகளில் தேசத் துரோக நடவடிக்கைகளிலும் ஈடுபடுபடும் ‘சிந்தனைத் தலைவர்கள்’ (thought leaders)” என இவர்களைக் குறிப்பிடுவதன் ஊடாக மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து இயங்கியதற்காக சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா முதலான ஐந்து சிந்தனையாளர்களை மோடி அரசு சமீபத்தில் கைது செய்ததைக் கொண்டாடுகிறார் பகவத்.

 

  1. அடுத்து சபரிமலைத் தீர்ப்புக்குள் நுழைகிறார். சபரிமலை ஆலயத்திற்குள் பெண்களை அனுமதித்தது தவறான தீர்ப்பு என்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அந்தத் தீர்ப்பு அரசியல் சட்ட உரிமைகளின் அடிப்படையில் துல்லியமாக வழங்கப்பட்ட ஒன்று. கேரள அரசின் 1965ம் ஆண்டு ‘இந்து வழிபடுதலங்கள் (நுழைவதற்கான அனுமதி்) சட்டம், இந்திய அரசியல் சட்டத்தின் வழிபாட்டுச் சுதந்திரம் தொடர்பான பிரிவு 25 (1) மற்றும் பிரிவு 26 (தமது மத வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான மதப் பிரிவுகளின் உரிமை) ஆகிவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட சரியான தீர்ப்பு அது. ஆனால் பகவத்தின் பார்வையில் இந்தச் சட்ட நெறிமுறைகள் மற்றும் அரசியல்சட்ட உரிமைகள் ஆகியவற்றைக் காட்டிலும் “சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் காலங் காலமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரியங்களும், மதத் தலைவர்களின் கருத்துக்களும் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகளும்” மட்டுமே தீர்ப்புக்கான அடிப்படைகளாக இருந்திருக்க வேண்டுமாம். “உண்மையான பெண் பக்தர்கள் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பமாட்டார்கள்” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று பிரச்சாரம் செய்துகொண்டுள்ளதை அறிவோம். அதன் மூலம் வழக்குத் தொடர்ந்த பெண்களை உள்நோக்கம் உடையவர்களாகச் சித்திரிப்பது கவனிக்கத் தக்கது. அதையே வேறு சொற்களில் இந்த உரையில் பகவத்தும் இங்கு முன்வைக்கிறார். “பாரம்பரியங்களை மதித்து நடக்கும் பெரும்பான்மையான பெண்களின் கருத்துக்கள் இங்கு கேட்கப்படவில்லை” என்கிறார். முத்தாய்ப்பாக, “(சபரிமலையின் இன்று உருவாகியுள்ள)இன்றைய அமைதியின்மை, குழப்பம், பிரிவினைகள்” எல்லாம் இந்தத் தீர்ப்பின் விளைவுகள்தான் எனச் சொல்லும் பகவத், “இந்துச் சமூகம்தான் இப்படி புனித நம்பிக்கைகளின் மீது வெட்கக்கேடான தாக்குதல்களை தொடர்ந்து அனுபவித்து வருகிறது” என முடிக்கிறார். அவர் முன்வைக்கும் இந்த தர்க்கத்தின் அடிப்படையில் எல்லா மதப் பிரிவுகளின் நீண்ட நாள் மரபுகளும் காக்கப்பட வேண்டும் எனவும், பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் முத்தலாக் சட்டம் பற்றி என்ன சொல்கிறார்கள் எனக் கேட்காமல் முத்தலாக் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடாது எனவும் பகவத் சொல்வாரா?

 

  1. அடுத்து பாபர் மசூதிப் பிரச்சினை : ‘கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என வழக்கமாகச் சொல்லிவரும் நிலையிலிருந்து அகன்று ராமர் கோவிலைக் கட்டியே தீரவேண்டும் என்கிற தீவிரக் கருத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது பகவத்தின் விஜயதசமி உரை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ராமர் கோவிலைக் கட்டும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்கிற தொனியில் பகவத்தின் பேச்சு இங்கு அமைகிறது. 2019 தேர்தல் முடியும்வரை தீர்ப்பு ஏதும் வழங்கக் கூடாது என்கிற சிறுபான்மை மக்களின் கோரிக்கையை பகவத் தீவிரமாக மறுக்கிறார். “எந்தக் காரணமும் இன்றி சமூகத்தின் பொறுமையைச் சோதிப்பது யாருடைய நலத்திற்கும் உகந்ததல்ல” எனச் சீறுகிறார். “சுய மரியாதையின் அடிப்படையிலும், நல்லெண்ணம் மற்றும் நாட்டின் ஒருமைத் தன்மைக்கான (oneness in the country) நிபந்தனை என்கிற வகையிலும்” ராமர் கோவில் கட்டப்படுவது அவசியமாகிறது என்கிறார். அதற்குரிய வகையில் சட்டம் ஒன்றை இயற்றுவதை அரசின் கடமையாக்குகிறார்.

 

  1. வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து: தமக்கும் தேர்தல் மற்றும் கட்சி அரசியலுக்கும் தொடர்பில்லை என்கிறவாறு காட்டிக் கொள்ளும் நிலை மிகவும் தந்திரமாக இங்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் வழக்கம்போல தேர்தலில் சுயம்சேவக்குகள் என்ன செய்ய வேண்டும் என்கிற உறுதியான வழிகாட்டல் இந்த உரையிலும் தொடர்கிறது. “யாரும் NOTA ஓட் அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேச நலன் என்கிற அடிப்படையிலேயே அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறுகிய உணர்வுகள், சாதி, மொழி மற்றும் பிராந்திய அடிப்படைகளிலிருந்து யாரும் வாக்களிக்கக் கூடாது. ஒட்டுமொத்தமான தேச நலனுக்குத் தம் வலிமையை அர்ப்பணிக்க வேண்டும்” பா.ஜ.கவின் வெற்றிக்கு முழுமையாக நிற்கவேண்டும் என்பதைத்தான் பகவத் வேறு சொற்களில் உமிழ்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. தேச நலன் எனவும், பிராந்திய, மொழி அடிப்படைகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்றெல்லாமும் நசுக்கி நசுக்கிச் சொல்வதன் பொருள் வேறென்ன. தேர்தல் புறக்கணிப்பு, நோட்டா வாக்களிப்பு முதலான எதிர்ப்பு வடிவங்களை தேசத் துரோகமாகவே ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கிறது.

 

  1. இந்து ராஷ்டிரம்: “பாரதம் என்பது இந்து ராஷ்டிரம்” எனும் முழக்கத்தோடு பகவத்தின் உரை முடிகிறது. “தமது மதம், வழமை (tradition), வாழ்க்கை முறை அல்லது ‘இந்து’ எனும் சொல் மீதான தயக்கம் (apprehension) ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தின் எந்தப் பிரிவேனும் தன்னைப் பிரித்து (separate) உணர்ந்தால் (அதை ஏற்க இயலாது). அவர்கள் இந்துத்துவம் என்பது இந்த நாட்டின் என்றென்றைக்குமான பண்பாட்டு அடையாளம் (eternal ethos) என்பதை உணர வேண்டும்… இந்தப் பண்பாட்டு அடையாளத்தில் பதிந்திருக்கும் பாரதப் பண்பாடு எனும் வண்ணத்தில் (hue of Bharat’s culture) எல்லோரும் கரைய வேண்டும்”

 

-என்பதாக முடிகிறது பகவத்தின் உரை. இது எச்சரிக்கையா பிரகடனமா?

ஒரு மாதத்திற்கு முன்புதான் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருத்தல், ஒற்றுமை, பன்மைத்தன்மையை அங்கீகரித்தல், வேற்றுமைகளுக்கிடையே ஒத்திசைவு என்றெல்லாம் இதே வாய் பேசியது. இன்று அதன் குரல் உயர்வது, இப்படி உறுமுவது என்பதற்கெல்லாம் பொருளென்ன?

இந்திய மதிப்பீடுகள் / ethos என்பதை நிபந்தனையாக்குவதன் பொருள்

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் எனும்போது ஏன் அவர்கள் பாஜகவில் மட்டுமே சேருகின்றனர் எனத் தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என மோகன் பகவத் தனது விக்ஞான் பவன் உரையின்போது படு அப்பாவித்தனமாகக் கேட்டாரல்லவா அந்த அப்பாவித்தனம் அப்பட்டமான நடிப்பு என்பதை அவரது விஜயதசமி உரை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இந்த இரண்டாவது உரையில் அவர் முன்வைக்கும் பலவற்றுள் ‘நகர்ப்புற மாஓயிஸ்டுகள்’, ‘சபரிமலை தீர்ப்பு’, ‘ராமர் கோவில்’ ஆகிய மூன்று பிரச்சினைகளை எடுத்துக்கொள்வோம். இவை குறித்து பகவத்தின் நிலைபாடு என்ன? மாஓயிஸ்டு ஆதரவாளர்களாகக் கருதப்படும் அறிவுஜீவிகள் மீதான மோடி அரசின் நடவடிக்கையை அவர் முழுமையாக ஆதரிக்கிறார். சபரிமலைத் தீர்ப்பைப் பற்றிப் பேசும்போது இந்துச் சமூகம் தொடர்ந்து அவமானத்துக்கும் தாக்குதலுக்கும் ஆளாக்கப்படுகிறது என்கிறார். இராமர் கோவில் பிரச்சினையைப் பொருத்த மட்டில் ‘ஜன்மபூமியில்’ ஒரு இராமர் கோவிலைக் கட்டுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்கிறார். ஆக இந்த மூன்று பிரச்சினைகளிலும் இவைதான் ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகள் என்பதை விளங்கிக் கொள்கிறோம்.. இந்த மூன்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சி இந்தியாவில் எது? பா.ஜ.க மட்டுந்தான் அப்படிச் சொல்லுகிறது. அப்படி இருக்கையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினன் பா.ஜ.கவைத் தவிர வேறு எந்தக் கட்சியில் சேர முடியும்? ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினன் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் எனச் சொல்வதன் பொருள் என்ன? அவன் காங்கிரசிலோ கம்யூனிஸ்ட் கட்சியிலோ இருந்து கொண்டு பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டச் சட்டம் இயற்றக் கூடாது, சபரிமலை தீர்ப்பின்படி அய்யப்பன் கோவிலில் பெண்கள் சென்று வழிபடலாம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யவும் போராடவும் அவர் அனுமதிப்பாரா?

இப்படியெல்லாம் பேசுவது புத்திசாலித்தனம் இல்லை, படு முட்டாள்தனம் அல்லது பச்சை ஏமாற்று என்பதை யார் அவருக்குச் சொல்லுவது?

விஜயதசமிப் பேச்சில் ‘இந்து’ என்பதையும் ‘இந்தியா’ என்பதையும் ஒன்றாக்குகிறார். விக்ஞான் பவன் பேச்சிலும் இந்தியாவில் பிறந்த எல்லோரும் இந்தியர்கள்தான் எனக் கூறினார். இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையைத் தான் அங்கீகரிப்பதாகவும் சொன்னார். ஆகா ஆர்.எஸ்.எஸ் மாறிவிட்டது. கோல்வால்கர் தூக்கி எறியப்பட்டுவிட்டார். தியோரஸ் காலத் தாராளவாதம்தான் இனி ஆர்.எஸ்.எஸ்சின் அணுகல்முறையாக இருக்கும். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கூட இந்துக்கள் என, அதாவது இந்தியர்கள் என ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொண்டு விட்டது என்றெல்லாம் அதன் ஆதரவாளர்கள் கும்மி அடித்தார்கள். விஜயதசமிப் பேச்சை உற்றுக் கவனியுங்கள். இங்கு இந்தியா என்பதையும் இந்து என்பதையும் அவர் இணை வைக்கிறார். ஆனால் அத்தோடு அவர் நிறுத்தவில்லை. அந்த இணை வைப்பை அவர் விளக்க முற்படும்போது அவர்களின் வேடம் வெளிப்பட்டுவிடுகிறது.

அந்த விளக்கம் என்ன? தாம் கடைபிடிக்கும் மதம், ஹிஜாப் அணிவது முதலான மரபுகள் (tradition), மாட்டுக்கறி உண்பது முதலான வாழ்க்கை முறைகள் மற்றும் தம்மை இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளக் காட்டும் தயக்கம் (apprehension) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியச் சமூகத்தின் எந்தப் பிரிவேனும் தன்னைத் தனித்துவத்துடன் உணர்ந்தால் அவர்களை இந்தியர்கள் என ஏற்க முடியாது என்பதுதானே விஜயதசமி உரையில் பகவத் அளிக்கும் அந்த விளக்கம். இங்குள்ள சிறுபான்மையினர் இந்துத்துவம் என்பதுதான் இந்த நாட்டின் என்றென்றைக்குமான பண்பாட்டு அடையாளம் (eternal ethos) என்பதைச் சிறுபான்மை மக்கள் உணர வேண்டும் என்பதுதானே அதற்கு ஆர்.எஸ்.எஸ் விதிக்கும் நிபந்தனை. பாரதப் பண்பாடு எனும் வண்ணத்தில் எல்லோரும் கரைய வேண்டும் என்பதன் பொருள் என்ன? பாரதப் பண்பாடு அல்லது Hindu Ethos என்பதன் பொருள் என்ன? பசுவைத் தெய்வமாக ஏற்பது, அல்லது குறைந்தபட்சம் அதைப் புனிதமாக ஏற்பது, பாபர் மசூதி இருந்த இடத்தை இரமர் ஜன்ம பூமியாக ஏற்பது முதலானவைதானே? ஆர்.எஸ்.எஸ் குறித்து ஐம்பது ஆண்டு காலமாக ஆய்வு செய்துவருபவரும், அவ்வமைப்பை விமர்சனமின்றிப் பார்ப்பவருமான ஆன்டர்சன் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முஸ்லிம்கள் சேர்வதற்கான நிபந்தனை என “வரலாற்று ரீதியான இந்தியப் பண்பாட்டை அவர்கள் ஏற்க வேண்டும்” என்பதைத்தானே குறிப்பிடுகிறார்.

இதில் என்ன glasnost ஐக் கண்டு விட்டீர்கள்? என்ன ப்கவத் கால ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கோல்வால்கரின் பாதையிலிருந்து விலகிவிட்டது?

ஒன்றும் இல்லை. மொழி மாறியிருக்கிறது, அல்லது சரியாகச் சொல்வதானால் மோழி இன்னும் சாதுரியமாகி இருக்கிறது அவ்வளவுதான். காலம் மாறி வருகிறது. கோல்வால்கரின் காலத்தைக் காட்டிலும் இப்போது பொதுவில் அவர்களுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். கோல்வால்கர் காலத்திய கெடுபிடியோ ஒதுக்கமோ இப்போது இல்லை. எனவே பழைய மொழியிலேயே இப்போது நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர்கள் முடிவு செய்துவிட்டனர். அது பேசிய காலம் இது சாதிக்கும் காலம். சிலவற்றை அவர்கள் ஒரு உத்தி எனும் அடிப்படையில் தற்காலிககமாக ஒத்தி வைக்கலாம். அவ்வளவுதான். இட ஒதுக்கீடு முதலானவற்றில் அவர்கள் தங்களின் கொள்கைகளை நிறைவேற்ற இன்னும் காலம்வரவில்லை என்பதை பிஹார் தேர்தலில் முயற்சித்துப் பார்த்து அடி வாங்கியபின் உணர்ந்து கொண்டனர். அது போன்றவற்றில் அவர்கள் சற்றே தற்காலிகமாகப் பின் வாங்கலாம். ஆனால் அவையும் தற்காலிகமான பின்வாங்கல்கள்தான்.

ஆனால் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது முதலான பிரச்சினைகளை இப்போது சாத்தியப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே அவற்றிற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள்.

மற்றபடி அவர்கள் தம் அடிப்படைகளை விடமாட்டார்கள். இந்தியாவின் ethos என அவர்கள் சொல்கிறார்களே அதன் மிக முக்கியமான அம்சம் வருணாசிரமம் தானே. அதை விட்டுவிடுவார்களா? பெண்களைத் தீட்டு என ஒதுக்கி வைப்பதும் இந்திய ethos தானே, சபரிமலைக்குப் போகக் கூடாது எனச் சொல்பவர்கள் இதை மட்டும் விட்டுவிடுவார்களா? சமஸ்கிருத்தத்தின் புனித்தையும் வேத பாடங்களைத் திணிப்பதையும் அவர்கள் நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கி விடுவார்களா?

அவர்கள் முன்வைக்கும் பன்மைத்தன்மை இந்திய ethos என்கிற வரையறைக்குட்பட்டது என்பதுதான் பகவத் தன் விஜயதசமி உரைமூலம் அழுத்தம் திருத்தமாக முன்வைப்பது.