தலைஞாயிறு பகுதியில் நிவாரணம் கோரிய போராட்டங்களும்  காவல்துறை தாக்குதல்களும்                      

 உண்மை அறியும் குழு அறிக்கை

  நாகப்பட்டிணம், டிச 15, 2018

சமீப காலங்களில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு கஜா புயல். நான்கு மாவட்டங்களில் அது அழிவை ஏற்படுத்தினாலும் புயல் கரை கடந்த தொடக்கப் புள்ளியான வேதாரண்யம், தலைஞாயிறு முதலியன மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. இதுவரை அரசுத் தரப்பிலிருந்து சாலைப் போக்குவரத்தைச் சரி செய்தது, நகர்ப்புறங்களில் மின் சேவையை ஓரளவு ஒழுங்கு படுத்தியது முதலியன தவிர முறையான நிவாரணங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பாக பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது.

கடைமடைப் பகுதியாக உள்ள தலைஞாயிறை ஒட்டிய சந்தானம் தெரு, சிந்தாமணி, கேசவனோடை, திருமாலம் காமராஜ் வீதி, லிங்கத்தடி ஆகிய குடியிருப்புகளில் வாழும் அடித்தள மக்கள் இன்று இந்தப் புயல் இழப்புகளோடு இன்னொரு அதைவிடப் பெரிய தாக்குதலையும் சந்திக்க வேண்டியவர்களாகி உள்ளனர். வழக்குகள், கைது, தலைமறைவு வாழ்க்கை எனப் பலவாறும் அவர்கள் அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர். சுமார் 40 க்கும் மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர், இதில் காமராஜ் வீதியைச் சேர்ந்த நால்வரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பட்டியல் இனத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் மீது காவல்துறையினரைத் தாக்கினர், வாகனங்களைத் தாக்கிச் சேதப்படுத்தினர் முதலான குற்றங்கள் இன்று சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

  1. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) (9444120582),
  2. கவின்மலர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாகை (9841155371),
  3. பூ. தனசேகரன், வழக்குரைஞர், திருத்துரைப்பூண்டி (9442333332),
  4. கே.நடராசன், ஓவியர், சமூகச் செயல்பாட்டாளர், நாகை (9444234074),
  5. தய். கந்தசாமி, வழக்குரைஞர், திருத்துறைப்பூண்டி (9655972740),
  6. என்.செந்தில், விடுதலைச் சிறுத்தைகள், மருதூர் (99789557308),
  7. கே.எஸ்.தமிழ்நேசன், வழக்குரைஞர் (9894953919).

இக்குழுவினர் டிச 11, 2018 ஒரு நாள் முழுவதும் மேற்குறித்த கிராமங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய சேரான்குளம் முதலான பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்துப் பேசினோம். காவல்துறைத் தாக்குதல் மற்றும் தேடுதல் வேட்டைக்குப் பயந்து கொண்டு இன்னும் வீடுகளில் இரவில் தங்கத் துணிவில்லாமல் தெருவில் உள்ள கோவிலில் தங்க நேர்ந்துள்ள பெண்கள், எல்லோருக்காகவும் அப்பகுதி ஆரம்பப் பள்ளியில் மூன்று வேளையும் சமைத்து உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அம் மக்களின் ஒருசாரர் என எல்லோரையும் சந்தித்தோம். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் சிலரை மீண்டும் இன்னொரு வழக்கில் ரிமான்ட் செய்ய வேதாரண்யம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள் என அறிந்து அங்கு சென்று அவர்களுக்காகக் காத்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மூத்த வழக்குரைஞர் சபாரத்தினம் ஆகியோரிடமும் பேசினோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு பேரூராட்சி நகரச் செயலாளர் திரு சோமு இளங்கோ மிக விரிவாக அங்கு நடந்தவற்றைத் தொகுத்துரைத்தார்.

வேட்டைக்காரன் இருப்பு, விழுந்தமாவடி, ஆசியவங்கி உதவியுடன் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி, காவல்துறையினரின் வாகனங்கள் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மறியல் நடந்த பகுதிகள் முதலானவற்றையும் நேரில் சென்று பார்த்தோம்.

காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டபோது பணியிலிருந்த காவல்துறை ஆய்வாளர் அறிவழகன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பணியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள மக்கள் தொடர்பான வழக்குகளை நடத்திக் கொண்டுள்ள தலைஞயிறு / வேட்டைக்காரனிருப்பு காவல்நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போசுடன் இம்மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விரிவாகப் பேசினோம்.

இனி அங்கு இதுவரை நடந்தவற்றைப் பார்க்கலாம்.

நவம்பர் 18

கஜா புயலைப் பொருத்த மட்டில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளில் முனைப்புக்காட்டிய அளவிற்கு நிவாரண நடவடிக்கைகளில் அரசு அக்கறை காட்டவில்லை, விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மை. அதேபோல விவசாயக் கூலிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு அற்றுப் போனது தவிர அவர்களது குடிசைகள் முற்றாக அழிந்துள்ளன. குடிசைகள் இருந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிவாரணப் பணிகள், இழப்பீடு வழங்குதல் ஆகியன சரியாகச் செயல்படாத நிலையில் மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்திலும் ஆங்காங்கு அரசை எதிர்த்து சாலை மறியல்கள் முதலான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அப்படியான நிலையில்தான் கடைமடைப் பகுதியான இப்பகுதி மக்களும் ஆங்காங்கு சாலை மறியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த கிராமங்களின் வழியாகத்தான் அரிச்சந்திரா நதி ஓடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டியுள்ள சாலையில் சென்றால் வேதாரணியம் – நாகை இணைப்புச் சாலை வருகிறது.  அங்குதான் ஆசியாவிலேயே பெரிய குடோன் எனச் சொல்லப்படும் கட்டிடங்களும் சரிந்து கிடக்கின்றன.

இந்தச் சாலையில் உள்ள கன்னித்தோப்பு என்ற இடத்தில்தான் புயலடித்த இரண்டாம் நாள் (நவ 18) அமைச்சரும் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் தாக்கப்பட்டு அவரது வாகனமும் உடைக்கப்பட்டது. அமைச்சர் தப்பித்து வருவாதே அன்று பெரும் பிரச்சினையாகிவிட்டது என ஊடகங்கள் எழுதியதை அறிவோம்.

இந்தத் தாக்குதலுக்கும் நாம் இப்போது பேசிக் கொண்டுள்ள தலைஞாயிறு அருகிலுள்ள தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமைச்சர் காரைத் தாக்கியவர்கள் தலைஞாயிறை ஒட்டியுள்ள மக்கள் கிடையாது.

கன்னித்தோப்பில் அமைச்சர் தாக்கப்பட்ட அதே நேரத்தில் அவர் அப்பகுதியில் ஏதோ துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளதாகக் கேள்விப்பட்ட தலைஞாயிறு பகுதி மக்கள் அவர் வந்தால் நிறுத்தி தம் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக சந்தானம் தெருவிலும் தலைஞாயிறு சாலையிலும் நின்றிருந்தனர். தலைஞாயிறு சாலையில் நின்றிருந்தவர்கள் சாலை மறியல் செய்யும் நோக்குடன் திரண்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் அவரது இல்லத்திற்கு அவ்வழியேதான் செல்லவேண்டும். அவ்வழியில்தான் சிந்தாமணி காலனியும் உள்ளது.

சிந்தாமணியிலிருந்த குடிசைகள் முற்றிலும் அழிந்து நீர் தேங்கிச் சேரும் சகதியுமாக கிடந்த நிலையில் கட்டிக் கொள்ள மாற்றுத் துணிகளும் இல்லாத அம்மக்கள் சாலை ஓரத்தில் நின்று கஞ்சி காய்ச்சி அதைப் பகிர்ந்து குடித்துக் கொண்டு நின்றிருந்தனர். அம்மக்களுக்கு அமைச்சரைத் தடுத்து நிறுத்திக் குறைகளைச் சொல்லும் நோக்கம் எதுவும் கிடையாது. தாக்குதலுக்குத் தப்பி வந்த அமைச்சர் அவர்களைத் தாண்டிச் சென்று சாலை மறியல் நடந்து கொண்டிருந்த கடைத்தெருப் பக்கம் செல்லாமல் அதற்கு முன் இருந்த ஒரு குறுக்குப் பாதை வழியாக பத்திரமாக அவரது வீட்டை அடைந்து விடுகிறார்.

எனினும் அதற்குப் பின்வந்த காவல்துறையினரும் மற்றும் தாக்குதல் படையினரும் சிந்தாமணி நகரில் அமைதியாகக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த மக்களைச் சகட்டு மேனிக்குத் தாக்கியுள்ளனர். அம்மக்கள் பயந்து தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் சந்தானம் தெருவிற்கு ஓடி வந்துள்ளனர்.

மக்கள் அடிபட்டுப் பதட்டத்துடன் ஓடிவந்ததைக் கண்ட சந்தானம் தெருவில் திரண்டிருந்த மக்கள் செய்தி கேட்டவுடன் அவர்களுடன் சேர்ந்து சாலைமறியல் நடந்து கொண்டிருந்த கடைத்தெருவை நோக்கி ஓடியுள்ளனர்.

அங்கே இப்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுவிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்தும் ஒரு ஜே.சி.பி வாகனமும் அடித்து நொறுக்கப்படுகிறது. காவல்துறை வாகனம் ஒன்றும் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் அங்கிருந்த மக்கள் பேருந்து மற்றும் ஜே.சி.பி இயந்திரம் தாக்கப்பட்டதை மட்டுமே கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதலை ஒட்டி இனியன், தேவா, மணிகண்டன், கார்த்தி, முருகேசன் எனும் ஐவர் மீதும், மற்றும் பெண்கள் உடபடப் பலர் எனவும் குறிப்பிட்டு தலைஞாயிறு காவல் நிலையத்தில் அன்றே (நவ 18) இ.த.ச 294பி, 323, 324, 341,307 மற்றும் பொதுச் சொத்துக்கள் மீது சேதம் விளைவிப்பது (PPD 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று (எண் 135/18) பதியப்பட்டது. இவர்களில் கார்த்திக்கும் தேவாவும் முன் பிணை பெற்று தலைஞாயிறு காவல் நிலையத்தில் தினம் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தனர். நான்காவது நாளாக (டிச 12) அவர்கள் கையெழுத்துப் போடச் சென்ற போது அவர்கள் மீது வேறொரு வழக்கைப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

டிசம்பர் 7:

இரவு 2 மணி. தலைஞாயிறைச் சேர்ந்த திருமாலம் காமராஜர் வீதி, காந்தி வீதி, சந்தானம் தெரு ஆகியவற்றில் திடீரென போலீஸ் படை நுழைந்து கதவை இடித்துத் திறக்கச் சொல்லி பெண்களை அவதூறாகப் பேசி, ஆண்களை இழுத்துச் சென்றுள்ளனர். காலை நாலரை மணிக்குள் மொத்தம் 33 பேர்கள் அன்று அவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தானம் தெருவில் 21 பேர். சிந்தாமணியில் 3, கேசவனோடையில் 2, காமராஜர் வீதியில் 4, லிங்கத்தடியில் 3 பேர் அன்று கைது செய்யப்பட்டனர். இதில் காமராஜர் வீதியில் கைது செய்யப்பட்ட 4 பேர்கள் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள். மற்ற அவ்வளவு பேரும் பட்டியல் சாதியினர்.

நவம்பர் 18 சம்பவத்தின்போது கீழ்க்கண்ட வாகனங்கள் உடைக்கப்பட்டதாக இந்த வழக்குகளில் கூறப்படுகின்றன: VIP வாகனம் எண் TN51 / G 0700; அரசுப் பேருந்து எண் TN68 / N 0816; கண்காணிப்பாளர் (SP) வாகனம் எண் TN51 / G 493; பார்த்தசாரதி என்பவருக்குச் சொந்தமான JCP எண் TN 51 / AH 5562.

9 காவலர்கள் தாக்கப்பட்டதாகவும் இளவரசன், அருண்குமார் என்கிற இரண்டு காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆறு குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டன. அவை:

குற்ற எண்: 104/2018: இதச143,147, 148, 332,341, 353 மற்றும் 3(1) of PPDL Act Dt 22-11-2018,

குற்ற எண்: 135/18 இனியவன், தேவராஜன், கார்திக் மணிகண்டன், முருகேசன் மற்றும் பல ஆண்கள் பெண்கள் உட்பட இ.த.ச 147, 148, 294(b) 323,324,341,307 மற்றும் 3(1) of PPDL Act Dt 18-11-2018.

குற்ற எண் 138/2018 இதச 143,341,353, Dt 18-11-2018

குற்ற எண்: 144/18 இதச 143,341,353 Dt 18-11-2018.

குற்ற எண்: 101/18 வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் இதச 143, 341,353 Dt 18-11-2018.

குற்ற எண்: 108/18 வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் இதச 143, 341,353.

இந்த அறிக்கை எழுதப்பட்டபின் இன்று காலை 4 மணி அளவில் பிரிஞ்சிமூலை கீழத்தெருவில் உள்ள 36 தேவேந்திர குல வேளாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ், காளிதாஸ், நாகராஜ், முத்து, வினோத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தி சற்று முன் கிடைத்தது. இதில் முதலிருவரும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் M.Phil பயிலும் மாணவர்கள். அடுத்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சொல்லியவை:

அப்பகுதிகளில் நிரந்தரமாகக் காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். எந்த நேரத்திலும் வீடு புகுந்து தாம் கைது செய்யப்படலாம் என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆங்காங்கு காவல்துறையினர் உட்கார்ந்திருப்பதால் பெண்கள் கொல்லைக்குப் போகக் கூட முடியவில்லை என்றார் சேரான்குளம் பக்கிரிசாமி.

தமது அரசுப்பணியைத் துறந்து மக்கள் பணி செய்துவரும் சோம இளங்கோ சொல்லும்போது, “நவம்பர் 18 அன்று சிந்தாமணியில் சாலை ஓரமாக நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை திடீரென போலீஸ் வண்டிகளிருந்து இறங்கிய காவலர்கள் கண்மண் தெரியாமல் அடித்தனர். பெண்கள், குழந்தைகள் எல்லாம் சிதறி ஓடினாங்க. அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அறிவழகன் வந்து வல்லபதாஸ் மகன் கார்த்தி, முருகதாஸ் மகன் தேவா இரண்டு பேர் மேலேயும் கேஸ் இருக்கு. அவங்களைக் கொடுங்க கைது பண்ணனும் என்றார். நீங்க அவங்களை அடிச்சு சித்திரவதை பண்ணுவீங்க என்றோம். அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டோம் என்றார். நாளைக்கு ஒப்படைக்கிறோம்னு சொன்னோம். அவர் போயிட்டார். ஆனா நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டு அந்தப் பையங்க அடுத்த நாள் தலைமறைவாயிட்டாங்க. நவம்பர் 18 தொடர்பா போடப்பட்ட எல்லா FIR லும் மற்றும் பெண்கள் உட்படப் பலர்னு போட்டு மறுபடி மறுபடி அதே குற்றத்துல வேறு சிலரையும் சேக்குறாங்க, அதனால கிட்டத் தட்ட இன்னைக்கு 50 பேருக்கும் மேல பயந்துகிட்டு எங்கெங்கோ தலைமறைவா இருக்காங்க..” என்றார்.

சந்தானம் தெரு பள்ளிக்கூடத்தில் ரேஷன் அரிசி வாங்கி அங்கே தினம் அங்குள்ல 654 பேருக்கு சோறு சமைக்கப்படுகிறது. அங்கிருந்த பெண்கள் சொன்னது: “ஆறாந்தேதி (டிச 6) நடு ராத்திரியில வந்து கதவை உடைச்சுத் திறந்தாங்க. அசிங்கம் அசிங்கமா பேசுனாங்க. எங்க லைன்ல இருக்கிற எல்லா வீட்டுக் கதவுகளும் உடைச்சுட்டாங்க. ஆம்பிளைங்களைப் புடிச்சு போலீஸ் வண்டியில ஏத்தினாங்க. வீட்டுல வச்சிருந்த பொருள்களை எல்லாம் சேதப் படுத்துனாங்க. வாங்கி வச்சிருந்த ரேஷன் அரிசியில தண்ணியை ஊத்துனாங்க. மூணு மோட்டார் சைக்கிளை உடைச்சுப் போட்டுட்டாங்க. இப்ப எங்களுக்கு ராத்திரியில தூக்கமே இல்லை. அதோ அந்தக் கோயில்லதான் ராத்திரில படுத்துக்குறோம். ஆம்புளைப் புள்ளைங்க எல்லாம் புயல் அடிச்சப்போ எவ்வளவு உதவி பண்ணாங்க. இன்னிக்கு அவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னே தெரியல” என்றார்கள்.

பேரூராட்சித் தலைவராக இருந்தவர் ராஜேந்திரன். அவரது குடிசையைப் பார்த்தாலே அவர் எத்தனை நேர்மையானவர் என்பது விளங்குகிறது. இன்று அவர் மட்டுமல்ல அவரது மூத்த மகன் மணிகண்டனும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு இளைய மகன் இனியவன் Accused No 1 ஆக இன்று தேடப் படுபவர். நாங்கள் பேசிய பலரும் இனியன் கைது செய்யப்பட்டால் என்கவுன்டர் பண்ணிக் கொன்று விடலாம் எனத் தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டனர். ராஜேந்திரன் மனைவி முத்துலட்சுமியை நாங்கள் அவரது குடிசை வீட்டில் சந்தித்தோம். ராஜேந்திரன் தீவிர சர்க்கரை நோய் உடையவராம். காலில் புண்ணுடன் இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேதாரண்யம் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்ற போது இன்னொரு வழக்கில் ரிமான்ட் செய்யப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட வர்களில் அவரும் இருந்தார். நீதிபதி எங்கோ வெளியில் சென்றிருந்ததால் காலை முதல் அவர்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்திலேயே உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தனர். “என் புருஷனும் மூத்த மகனும் ஜெயில்ல இருக்கிறாங்க இன்னோரு மகனைத் தேடுறாங்க. அவன் என்ன தப்பு பண்ணிட்டான். அவன் பேசுனது வீடியோவில் இருக்கு பாருங்க. அவன் நியாயத்தைத் தானே பேசி இருக்கான். இப்பிடி ரெண்டு ஆம்பிளைங்க ஜெயில்ல. இன்னொரு மகன் எங்கேன்னு தெரியல. நானும் எம் மகளும் என்ன செய்யிறது?” என்று கண்கலங்கினார்.

ஆண்கள் கைது செய்து கொண்டு செல்லப்படும்போது, “இன்னிக்கு தடிப் பயல்களைக் கொண்டு போறோம். நாளக்கி சிறுக்கிகளை தூக்குவோம்” எனச் சொல்லி அச்சுறுத்திச் சென்றதையும் பலரும் குறிப்பிட்டனர்.

இரண்டு நாட்கள் முன்னர் (டிச 12) அமைச்சர் ஓ.எஸ். மணியனைச் சந்தித்தபோது அவர் கூறியதாக சந்தானம் தெருவைச் சேர்ந்த வீரசேகர் சொன்னது: “நேற்று ஒரு நூறு பேர் போயி அமைச்சரைச் சந்தித்தோம். மக்கள் படுற கஷ்டத்தை எல்லாம் சொன்னோம். அப்படியா இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது என்றார் அமைச்சர். கோவிலில்தான் பெண்கள் தங்கி இருக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னது அவருக்கு ஆச்சரியமா இருந்தது. இனிமே உங்க வீடுங்களுக்கு போலீஸ் வரமாட்டாங்கன்னு சொல்லி எங்க முன்னாடியே எஸ்.பிக்கு போன் பண்னி சொன்னாரு. இனிமே யாரையும் கைது பண்ன மாட்டாங்கன்னாரு. கூடுதலா யார் மேலயும் குற்றப்பிரிவுகளையும் இனி சேக்கமாட்டாங்கன்னும் சொன்னாரு” என்றார்.

இது குறித்து நான் சமூகச் செயல்பாட்டாளர் சோமு இளங்கோ அவர்களிடம் கேட்டபோது அவரும், “அமைச்சர் அன்று அப்படிச் சொன்னது உண்மைஜான். நானும் அன்று அங்கிருந்தேன்” என்றார்.

ஊர்மக்கள் சார்பாக எஸ்.பியைச் சென்று பார்ர்த்தபோது இனி இரவில் வந்து பெண்களை எல்லாம் கைது செய்ய மாட்டோம் எனவும் வழக்கில் உள்ள 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் 3 அரசு ஊழியர்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாகவும் அவர் கூறியதாக அவர்கள் கூறினர்.

காவல்துறையின் கருத்து:

தலைஞாயிறு காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள சுபாஷ் சந்திர போசை வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தித்தோம். கை நிறைய இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களுடன் அவர் காட்சியளித்தார். இப்படிப் பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது அப்படி எதுவும் தாங்கள் செய்யவில்லை என்றார். கோப்பிலிருந்து கொஞ்சம் புகைப்படங்களை எடுத்து எங்களிடம் தந்தார். “இதெல்லாம் மக்கள் செய்த வன்முறைகளுக்கான ஆதாரங்கள். கிடைக்கக் கூடிய படங்கள் எல்லாவற்றையும் நாங்கள் ஒன்றுக்குப் பத்து முறை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே கைது செய்கிறோம் என்று சொன்னார். எஸ்.பியே நேரடியாக இவ்வழக்கைக் கையாள்வதாகவும், எல்லாவற்றையும் உறுதி செய்து கொண்ட பின்பே கைதுகள் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறி அகன்றார்.

எமது பார்வைகள்

  1. வீடு வாசல் இழந்த மக்கள் ஈரத் துணிகளுடன் உட்கார இடமில்லாமல் சாலையில் நின்று கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது எந்தக் காரணமும் இல்லாமல் காவல்துறையினர் அவர்களைத் தாக்கியதிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்குகிறது. அப்போது நிவாரணங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று புயல் தாக்கிய அத்தனை ஊர்களிலும் சாலை மறியல்கள் நடந்து கொண்டிருந்தன. எங்கும் அப்படி மறியல் செய்தவர்கள் போலீசால் தாக்கப்படவோ கைது செய்யப்படவோ இல்லை. அமைச்சர் தாக்கப்பட்ட இடத்தில் கூட பொலீஸ் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சிந்தாமணியில் உட்கார இடமில்லாமல் சாலையில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டதற்கு அவர்கள் ஏழை எளிய தலித் மக்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அப்படியான தாக்குதல் சம்பவம் அன்று நடக்கவில்லை என்றால் இவ்வளவும் ஏற்பட்டிருக்காது.
  2. நவம்பர் 18 அன்று தலைஞாயிறு கடைத் தெருவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்துள்ளனர். சிலர் 5000 பேர்கள் இருக்கும் எனவும் கூறினர். அன்று சில காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டது உண்மை. ஆனால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளவர்கள்தான் அந்தத் தாக்குதலைச் செய்தனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் காமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இந்தப் புயலில் அவை செயல்பட்டிருக்கப் போவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமூக ஊடகங்களில் கிடைத்த ஆதாரங்கள் போதாது. தவிரவும் மிகவும் உள் நோக்கத்துடன் சிலர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதியானது. இனியவன் என்கிற இன்று தேடப்படும் இளைஞரின் குடும்பத்தில் உள்ள மூன்று ஆடவர்களும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவரும் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ராஜேந்திரன் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் இன்று வன்முறைகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ராஜேந்திரந்தி.மு.க சார்பில் நின்று பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர். அவருக்கும் அமைச்சர் ஓ.எஸ் மணியனுக்கும் இடையில் அரசியல் பகை இருந்தது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினர். கஜா புயலால் இப்பகுதியில் பெரிய சேதம் ஏதும் இல்லை என அமைச்சர் மணியன் கூறியதாகப் பரவிய செய்தியைக் கேள்விப்பட்டு அதைக் கண்டித்து இனியவன் பேசிய வீடியோ நாக்கீரன் தளத்தில் வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில் ‘வைரல்’ ஆகப் பரவியுள்ளது. இன்று அவர் என்கவுன்டர் செய்யபடலாம் என்கிற அள்விற்கு மக்கள் மத்தியில் அச்சம் உள்ளாகியுள்ள நிலை மிகவும் வருந்தத் தக்கது.
  3. அமைச்சருக்கும் இன்று தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடும் அதன் காரணமான புகைச்சலும் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இப்பகுதி தலித் மக்கள் அதிக அளவில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் பூதான இயக்கத்தால் பயன் பெற்றவர்கள். நல்ல விளைச்சலுள்ள இப்பகுதியின் ஒரே பிரச்சினை கடல் நீர் (back waters) விவசாய நிலங்களில் உட் புகுவதுதான். காலம் காலமாக அவர்களே மண்ணை வெட்டிப் போட்டு தடுப்புகளைச் செய்துதான் வாழ்ந்து வந்துள்ளனர். விவசாயத்தைப் பாதிக்காத வண்ணம் நிரந்தரமான தடுப்பணைகளை இப் பகுதியில் கட்டுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி Climate Adaptation in Vennar Subdivision in Cauvery Delta Project எனும் திட்டத்தின் கீழ் ரூ1560 கோடி நிதி உதவி வாக்களித்து அதில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு வேலை தொடங்கும் போதுதான் ஊர் மக்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் பிரச்சினை தொடங்கியது. அரிச்சந்திரா நதியை ஒட்டி வேதாரண்யம் – நாகை சாலையை நோக்கி தலைஞாயிறிலிருந்து செல்லும் சாலையில் வேதாரண்யம் கால்வாய் சந்திக்கும் இடத்தைத் தாண்டி கிழக்கில் சற்றுத் தூரம் தள்ளி இந்த இயக்கு அணையைக் கட்ட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும்போது தானாகவே நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தும் அமைப்பைத்தான் இயக்கு அணை என்கின்றனர். உப்பின் அளவு குறையும்போது அது தானாகவே நீரோட்டத்தை அனுமதிக்கும். அப்படி மக்கள் விருப்பத்தை ஏற்று அமைத்து இருந்தால் கடல் நீர் ஏறும் காலத்தில் அது இப்பகுதி விவசாய நிலங்களைப் பாதிக்காமல் இயக்கு அணையால் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் விருப்பத்திற்கு நேர் எதிராக அப்பகுதியிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள முதலியப்பன் கண்டியில் இயக்கு அணை இன்று கட்டப்பட்டுள்ளது இதனால் இப்போது கடல் நீர் ஏறும் காலத்தில் அது தடுப்பு அணைக்கு முன்னதாகவே உட்புகுந்து விடுகிறது. அதனால் வேதாரண்யம் கால்வாய்க்கு மேற்கே உள்ள விவசாய நிலங்கள் பாழாகிறது. முன்னைப்போல எளிதாக அதைத் தடுக்கவும் முடியவதில்லை. இது பெரிய அளவில் இப்பகுதி விவசாயத்தைப் பாதித்துள்ளது. இதற்குக் காரணம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்தான் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய நிலங்கள் அழிந்து இப்போது இப்பகுதி இறால் பண்ணைகளாக மாறியுள்ளன. இறால் பண்ணைகளுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும் என்பதால் அமைச்சர் இப்படி இயக்கு அணையை மேற்கு நோக்கித் தள்ளி அமைத்துவிடார் என நாங்கள் சந்தித்த இப் பகுதி மக்கள் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்படும் பகுதி மக்களிடம் உரிய முறையில் விதிப்படி கருத்துக் கணிப்பு நடத்தவில்லை எனவும் கூறுகின்றனர். இத் திட்டத்திற்கான பயனீட்டாளர் குழுவின் துணைத் தலைவராக உள்ள சோமு இளங்கோ அவர்களும் இக்கருத்தை ஆமோதித்தார். இப்படியான பிரச்சினை அப்பகுதி மக்களுக்கும் அமைசருக்கும் இடையில் உள்ளதும் இன்றைய காவல்துறை அடக்குமுறைகளுக்கு ஒரு காரணம் என நாங்கள் சந்தித்த மக்கள் கூறினர்.
  4. புஷ்பவனம் என்னும் இடத்தில் மீன்வளக் கல்லூரி உருவாக்கும் திட்டத்தையும் அமைச்சர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது ஊருக்கு அருகில் உள்ள ஓரடியம்பலம் எனுமிடத்திற்கு அதை மாற்றியுள்ளதையும் நாங்கள் சந்தித்த மக்கள் கண்டித்தனர். புஷ்பவனத்தில் மீன் வளர்ப்பு மையம் அமைப்பது என்பதாக அத்திட்டம் இப்போது மாற்றப்பட்டுள்ளது.
  5. தாங்கள் சந்தித்தபோது அமைச்சர் மணியன் இனி யாரையும் கைது செய்ய மாட்டார்கள் எனவும், காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களை வழக்கிலிருந்து விலக்கிவிடுவதாகவும் வாக்களித்ததாக நேற்றுத்தான் சந்தானம் தெரு மக்கள் எங்களிடம் நம்பிக்கையோடு கூறினர். ஆனால் இன்று காலை நாலரை மணி அளவில் பிரிஞ்சி மூலை கீஅத் தெருவில் மகேஷ், காளிதாஸ், நாகராஜ் மற்றும் அவர் மகன் முத்ட்கு, வினோத்குமார் என்கிற ஐந்து பேர்கள் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் இருவரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் M.Phil பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கைகள்

  1. சென்ற நவம்பர் 18 அன்று தலைஞாயிறு கடைத்தெருவில் நடந்த சம்பவங்களுக்கு வித்திட்டது சிந்தாமணியில் அமைதியாகச் சாப்பிட்டுக் மொண்டிருந்த தலித் மக்களை எந்தக் காரணமும் இன்றி காவல்துறையினர் தாக்கிய நிகழ்ச்சிதான் என இக்குழு உறுதியாகக் கருதுகிறது. இது குறித்து விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
  2. காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று கைது செய்யப்பட்டுள்ள பலரும் அந்த வன்முறைகளுக்குக் காரணம் எனக் கூறுவதற்கில்லை. பல கைதுகள் உள்நோக்கம் கொண்டவையாகவே உள்ளன. அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் கடுஞ் சட்டப் பிரிவுகளும் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தில் மூவர் மீது இன்று வழக்குகள் போடப்பட்டுள்ளதும் இங்கே கவனத்துக்குரியதாக அமைகிறது. அமைச்சருக்கும் இம்மக்களுக்கும் இடையேயான கருத்து மாறுபாடுகள் இந்தக் கைதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் உண்மை உள்ளது என நாங்கள் கருதுகிறோம். இரவு நேரங்களில் வீடு புகுந்து மக்கள் தாக்கப்பட்டது என்பதெல்லாம் தமக்கு ஒன்றுமே தெரியாது என அமைச்சர் சொல்வதை ஏற்க இயலாது.
  3. வழக்கில் உள்ளவர்கள் முன் ஜாமீன் பெற்று வரும்போது அவர்கள் மீது இன்னொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்வது என்பதெல்லாம் காவல்துறையின் பழிவாங்கும் நோக்கத்தையே காட்டுகிறது. 18ந் தேதி போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் எனத் தேடப்பட்டவர்கள் ஐவரும் வந்து 22 அன்று இன்னொரு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் எனச் சொல்லி இன்னொரு FIR பதிவு செய்வது என்பதெல்லாம் ஏற்கக் கூடிய ஒன்றல்ல. அப்படித் தேடப்படுபவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் அங்கேயே அவர்களைக் கைது செய்ய வேண்டியதுதானே என நீதிமன்றமும் காவல்துறையை கேட்காதது வருந்தத் தக்கது. கடும் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணங்களூம் ஏதுமின்றி துயரத்திற்காளான மக்கள் எக்காரணமும் இன்றி தாக்கப்பட்ட பின்னணியில் நடந்த சம்பவங்களை அரசு இத்தனை கடுமையாக எதிர்கொள்வதில் அடிப்படை நியாயங்கள் ஏதுமில்லை. புயலில் அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த எளிய மக்கள் மீது பழிவாங்கும் நோக்கில் மிகைப்படுத்தித் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
  4. ஊருக்குள் நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும்.
  5. விவசாயத்தைப் பாதிக்கக் கூடாது என ஆசிய வங்கி உதவியுடன் இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மூன்று இயக்கு அணைகளையும் மறு பரிசீலனை செய்ய வல்லுனர் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மக்கள் மத்தியிலும் மறு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அந்த மூன்றில் பொருத்தம் இல்லாதவற்றை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். அதேபோல மீன்வளக் கல்லூரி இடம் மாற்றப்பட்டதையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
  6. புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் உடனடியாக நிவாரணங்கள், இழப்பீடுகள் வழங்கும் பணிகள் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட வேண்டும்.

 

தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20. செல்: +91 94441 20582

கஜா புயல் அழிவுகள் : ஒரு நேரடி கள ஆய்வு 

சென்ற நவ 14, 2018 அன்று நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் அழிவுகள் குறித்து டிச06,07 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் ‘மக்கள் களம்’ இதழுக்கு எழுதப்பட்ட கட்ட்

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இம்மாவட்டங்களில் பயிர்கள், மரங்கள் முதலியன பெரிய அளவில் அழிந்துள்ளன. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குடிசைகளும் ஓட்டு வீடுகளும் கிட்டத்தட்ட எல்லாமே அழிந்துள்ளன. கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே தப்பித்துள்ளன. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் பெரும் இழப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

1952 க்குப் பின் மிகப் பெரிய அழிவுகளைத் தமிழகத்தில் ஏற்படுத்திய புயல் இது எனக் கூறுகின்றனர். குறைந்த பட்சம் 45 பேர்கள் பலியாகி உள்ளனர் எனக் கூறப்படுகிறது. 65 பேர்கள் வரை இறந்துள்ளனர் என ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் புயல் அழிவு குறித்து மூன்று அம்சங்கள் இங்கே கவனத்துக்குரியன. 1.இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வது குறித்த நம் தயாரிப்பு நிலை. 2.இந்தப் புயலின் ஊடாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு. 3.விவசாயத் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு.

நேரடி கள ஆய்வு மற்றும் ஊடகச் செய்திகள் ஆகியவற்றின் ஊடாக இவை குறித்துச் சிலவற்றைக் காணலாம்.

பேரழிவு நிர்வாகம் மேம்படுத்தப்படல் ஒரு உடனடித் தேவை

இந்தியத் துணைக் கண்டம், குறிப்பாகத் தென்னகம் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். சுமார் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ள ஒரு நாடு இது. தமிழகத்தில் மட்டும் கடந்த அறுபதாண்டுகளில் 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய புயல்கள் தாக்கி உள்ளன. 2015 ல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மழை வெள்ளம், இந்த ஆண்டு கேரளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கு ஆகியன ஏற்படுத்திய வெள்ள அழிவுகள் கடந்த சில ஆண்டுகளில் நாம் எதிர்கொண்டவை.

ஆந்திரம், மே.வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகப் புயல் வெள்ள ஆபத்துகள் உள்ளவை எனவும், இதர பல மேற்குக் கடற்கரை மாநிலங்கள் அடுத்தகட்ட ஆபத்துகள் உள்ளவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றை எதிர் கொள்வதற்கான நீண்ட காலத் திட்டங்கள் ஏதும் இங்கு இல்லை. ஒன்றை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இயற்கையுடன் நாம் கொண்டுள்ள முறையும் நீதியும் அற்ற உறவின் ஊடாக இனி புயல் வெள்ள ஆபத்துகள் என்பன ஏதோ நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக் கூடிய பேரழிவுகள் அல்ல. அவை எந்த நிமிடமும் நிகழலாம். ஒரே ஆண்டில் இருமுறை கூடவும் ஏற்படலாம். எனவே இது குறித்த விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் நமக்குத் தேவை. இப்படியான இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்ளத்தக்க அகக் கட்டுமானங்கள், பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளில் குடியிருப்புகளைத் தவிர்த்தல், புயல் வெள்ளங்களைத் தாங்கக் கூடிய வீடமைப்புகளை உருவாக்குதல், புயல் எப்போது கரையைக் கடக்கும், அது எந்தத் திசையில் நகரும் என்பவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும் Tropical Cyclone Ensemble Forecast முதலான சாதனங்களையும் அமைப்புகளையும் கடலோரப் பகுதிகளில் அமைத்தல் முதலான தொலை நோக்கிலான திட்டங்கள் நமக்குத் தேவை.

182 பேரை, உரிய எச்சரிக்கை செய்யாததால் பலி கொடுத்த ஓகிப் புயல் அழிவின்போதே இந்த மூன்னூகிப்புக் கருவிகளின் தேவைகளை நாம் வற்புறுத்தினோம். ஆனால் அந்தத் திசையில் எந்த நகர்வும் அரசிடம் இல்லை. கஜா புயல் கிட்டத்தட்ட ஒருவாரம் போக்கு காட்டியது. நவ 14 அன்று தமிழகத்துக்கு பெரிய ஆபத்தில்லாமல் அது U திருப்பம் மேற்கொண்டு எங்கோ கரையைக் கடக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எப்படி நகரும் என ஊகிக்க வானிலை ஆய்வு மையங்களால் முடியவில்லை. உரிய கருவிகளும், பயிற்சியும் இன்மையுமே அடுத்த இரண்டு நாட்களில் (நவ 16) இந்த நான்கு கடலோர மாவட்டங்களில் இத்தகைய பேரழிவுக்குக் காரணமாயின.1G

பேரழிவு நிர்வாகம் என்பது இன்னும் துல்லியப்படுத்தப்படுதல் (professionalizing disaster management), தாக்குதல் சாத்தியம் மிக்க பகுதிகளில் குடிருப்புகளைத் தவிர்த்தல், குடிசைகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றுதல் முதலியன உடனடித் தேவை என்பன நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

அரசின் தோல்வி

அரசு இப்போது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக ஒரு பேச்சு இங்குள்ளது. வை.கோ, ப.சிதம்பரம், கி.வீரமணி முதலான தலைவர்களும் பெரிதாக இதைப் பாராட்டி வேறு உள்ளானர். புயல் வரப் போகிறது என்கிற எச்சரிக்கையைச் செய்தது, சில தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றியது, முதலுதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தால்தான் அரசு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எத்தனை அதிருப்தியுடன் உள்ளனர் என்பது விளங்கும். நான் சந்தித்த மக்கள் கிட்டத்தட்ட எல்லோரும் இதுவரை மக்களின் இழப்புகளை ஈடுக்கட்ட எதுவும் நடக்கவில்லை என்றனர். இரண்டு நாட்களாக நான் பலரையும் சந்தித்தேன். டிச 5 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 250 இடங்களில் மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. அதே நாளில் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை அறிக்கை இயக்கம் ஒன்றை நடத்தியது. நான் பேருந்தில் திருவாரூர் மாவட்டத்தில் பயணித்தபோது பல இடங்களில் சாலை மறியல்களும் நடந்து கொண்டிருந்தன.  முதலமைச்சர் அடையாளமாக வந்து தந்த அந்த 27 பொருள்கள் உள்ள மூட்டை என்பது அதற்குப் பின் யாருக்கும் தரப்படவில்லை. அமைச்சர்களுக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் ஏற்பட்டபின் அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவதில்லை. என்னருகில் பேருந்தில் அமர்ந்திருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெரியவர், “இந்த ஊர்காரர்தான் அமைச்சர் காமராஜ், பக்கத்து ஊர்லதான் திருமணம் செய்துள்ளார். அவர் இந்தப் பக்கத்திலேயே காணாம். முதலமைச்சர் பழனிச்சாமியுடன் வந்த கார்களின் பெட்ரோல் செலவை மட்டும் மக்களுக்குக் கொடுத்திருந்தால் இரண்டு நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம்” என்றார்.

CPI கட்சியைச் சேர்ந்த தோழர் டி.வி.சந்திரராமன், CPM கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் தோழர் ரகுராமன், எனது மாணவரும் தற்போது வழ்க்குரைஞராகவும் பணி செய்யும் கவிஞர் தை.க, நகரில் புத்தகக் கடை வைத்துள்ள ஆனந்தன், என்னுடன் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேரா. அருளானந்தசாமி மற்றும் அப்பகுதிகளில் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியவர்கள் சொன்னவையிலிருந்து நான் அறிந்து கொண்டது இதுதான். நகர்ப்புறங்களில் ஓரளவு மின்சார வசதிகள் சரி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் நகரை ஒட்டிய பகுதிகளிலும் அறுந்து தொங்கும் மின் கம்பிகள்  கூட இன்னும் நீக்கப்படவில்லை. ஓரிடத்தில் மின் கம்பிகளில் துணி காயப்போட்டிருந்தனர். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகியும் மின் வசதி உட்புறப் பகுதிகளில் சரிசெய்யப்படவில்லை. முக்கிய சாலைகளில் இருந்த மரங்கள் நீக்கப்பட்டு பேருந்துப் போக்குவரத்துகள் சரி செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்களின் குடியிருப்புகள் சரி செய்யப்படாமலேயே திருப்பி அனுப்பப் பட்டுப் பள்ளிகள் டிசம்பர் 5 முதல் செயல்படத் தொடங்கியுள்ளன..

நான் சென்ற போது மடப்புரத்திற்கு அருகில் உள்ளே தள்ளியுள்ள ஒரு குடிசைப் பகுதியில் தனியாக வசிக்கக் கூடிய ஒரு பெரியவரின் குடிசையைச் சுற்றி தண்ணீர் தேங்கி, அவர் உள்ளே போக முடியாமல் வெளியே நின்று கொண்டிருந்தார். திருத்துறைப்பூண்டி பெண்கள் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட ஒரு 50 குடும்பங்கள் மட்டும் அவர்களின் குடிசைப் பகுதி முற்றிலும் சீரழிந்துள்ளதால் பள்ளியை விட்டு அகல மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர்.

உதவித் தொகை எனவும் எதுவும் கொடுக்கப்படவில்லை. நூறுநாள் வேலைத் திட்டம் ஓரளவு செயல்படுகிறது. தோட்டங்களில் விழுந்த மரங்கள், மட்டைகள் முதலியவற்றை வெட்டி நீக்கும் பணிகளில் சிலருக்கு வருமானம் கிடைக்கிறது.

அரசு ஊழியர்கள் இழப்பீடுகளைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர். அவ்வளவுதான்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

நாகை, தஞ்சை, திருவாரூர் முதலியன பெரிய அளவில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலையே நம்பியவை. அதிலும் இந்த டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக் காவிரி நீர் இல்லாமலும், பருவ மழை பொய்த்தும் போனதால் நெற் சாகுபடி குறைந்து தென்னை, பலா, வாழை, நெல்லி. மா, புளி முதலான பழச் சாகுபடிகளுக்கு அப்பகுதி மாறியுள்ளது.

தற்போதைய அழிவில் நெற்பயிர்களின் சேதம் ஒப்பீட்டளவில் குறைவு. முற்றியிருந்த நெற்பயிர்கள்தான் அழிந்துள்ளன. இளம்பயிர்கள் ஓரளவு தப்பி விட்டன. சுமார் 30 சத நெற்பயிர்கள் அழிந்துள்ளன எனலாம். அவர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழு இழப்பிற்கும் உள்ள தொகையைக் கணக்கிட்டு இழப்பீடு அளிக்க வேண்டும்.

தென்னை மரங்கள்தான் அதிக அளவில் அழிந்துள்ளன. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள உயரமான கட்டிடங்கள் ஓரளவு வீசும் காற்றுக்குத் தடையாக இருந்து அதன் வேகத்தைக் குறைக்கும். இங்கு அப்படியான தடைகள் இல்லாததால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வேரோடு சாய்தும் கிடக்கின்றன. விழாத மரங்களிலும் பலவற்றில் கொண்டை எனச் சொல்லப்படும் மேற் பகுதி திருகிச் சுருண்டுள்ளன. மதுக்கூருக்கு அருகில் உள்ள வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்ச்சி நிலையமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெர்சாகுபடியைப் பொருத்த மட்டில் இப்போது அழிவு ஏற்பட்டாலும் அடுத்த சில மாதங்களில் அடுத்த சாகுபடியைத் தொடங்கிவிட முடியும். ஆனால் வீழ்ந்த இந்தப் பழ மரங்களை மீண்டும் உருவாக்கி அது பயன்தரக் குறைந்தது ஏழெட்டு வருடங்கள் ஆகும். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள் மரம் ஒன்றிற்கு ரூ 15,000 வரை இழப்பீடு கேட்கின்றனர். நால்வழிச்சாலை முதலானவற்றிற்காக மரங்கள் வெட்டப்பட்டபோது எந்த அளவு இழப்பீடு கொடுக்கப்பட்டதோ அந்த அளவு இப்போதும் கொடுக்கப்பட வேண்டும் என்றார் இன்னொரு விவசாயி. வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதும் விவசாயிகளுக்குப் பெரிய செலவு. அதற்கான இழப்பீடுகளும் உரிய அளவில் கணக்கிட்டுத் தரப்பட வேண்டும்.

வீழ்ந்த மரங்களைக் கணக்கெடுப்பதிலும் அரசு இப்போது எளிய மக்களுக்கு ஒரு துரோகம் செய்கிறது. 10 மரங்களுக்கு மேல் சேதமடைந்துள்ள “தோப்பு”களுக்கு மட்டுமே இழப்பீடு தரப்படும் என அறிவித்துள்ளது. இது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார் CPM கட்சியைச் சேர்ந்த ரகுராமன். பத்து மரங்களுக்குக் கிழே இருந்தால் பதியவே வேண்டாம் எனவும், மக்கள் ரொம்பவும் வலியுறுத்தினால் சும்மா ஒரு பேப்பரில் எழுதிக் கிழித்தெறிந்துவிடுங்கள் எனவும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கணக்கெடுக்க வந்த அதிகாரி சொன்னதாகப் பேரா. அருளானந்தசாமி குறிப்பிட்டார்.

இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. வீட்டைச் சுற்றியுள்ள கொஞ்ச நிலத்தில் உள்ள இப்படியான மரங்களை வைத்தே பிழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலை இது. சொல்லப் போனால் இவர்களுக்கான இழப்பீடு சற்றி அதிகமாகத் தர வேண்டும் என்பதே நியாயம்.

தவிரவும் புயல் வாய்ப்புகள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் எளிதில் கீழே விழாத உயரக் குறைவான தென்னைகளை அரசு பிற பகுதிகளிலிருந்து வரவழைத்து இவ்விவசாயிகளுக்கு இலவசமாகத் தர வேண்டும்.

புளிய மரத்திற்கு இழப்பீடு கிடையாது என அரசு கூறியுள்ளதும் கண்டிக்கத் தக்கது. அவற்றுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். தற்போது இடதுசாரிக் கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளில் இதுவும் அடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளிகள் மற்றும் குடிசை வாழ் மக்கள்

கஜா புயல் அழிவுகள் குறித்து ஆங்கில, தமிழ் இதழ்கள் மற்றும் ஊடகங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளைச் செய்துள்ளன. தென்னை மற்றும் பழ விவசாயிகளின் இழப்புகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதியுள்ளன. இவற்றை வரவேற்கும் அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளிகளுக்கும் குடிசை வாழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு இவற்றில் உரிய முக்கியத்துவம் அளிக்கப் படாததையும் இங்கே சுட்டிக் காட்டுவது அவசியம்.

பாதிக்கப்பட்டுள்ள இந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளிகள் என்போர் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. குடிசைவாழ் மக்களிலும் இவர்களே அதிகம். இவர்களில் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் தம் குடிசைகளைச் சிறு ஓட்டு வீடுகளாக மாற்றியுள்ளனர். அவையும் இன்று அழிந்துள்ளன.

கஜா புயலில்  குடிசை வீடுகள் புரட்டி எறியப்பட்டுள்ளன. ஓட்டுவீடுகளும், தகர மற்றும் பிளாஸ்டிக் ஷீட்கள் பொருத்தப்பட்ட கூரைகளும் பிய்த்து எறியப் பட்டுள்ளன. இவ்வாறு எறியப்பட்டவையும் அருகில் உள்ள கூரை வேய்ந்த குடிசைகள் மீது விழுந்து அவற்றையும் அழித்துள்ளன. இன்று இப்பகுதிகளுக்குச் சென்றீர்களானால் இந்தக் கூரை வீடுகளில் எஞ்சியவை தற்போது பல்வேறு அமைப்புகளாலும் கொடையாக அளிக்கப்பட்ட தார்பாலின்களைப் போத்திக் கொண்டு நீல, மஞ்சள் வடிவங்களில் காட்சியளிப்பதைக் காண முடியும். தாழ்வான பகுதிகளில்தான் இந்தக் குடிசைகள் பெரும்பாலும் உள்ளன. அங்கெல்லாம் தண்ணீர் புகுந்து சேராகக் குழப்பிக் கிடப்பதையும் காண முடிகிறது.

தற்போது அரசு கணக்கெடுக்கும்போது இப்படியான குடிசைகளில் இரண்டு சுவர்களும் வீழ்ந்திருந்தால்தான் இழப்பீடு தர முடியும் எனச் சொல்லியுள்ளதையும் சி.பி.எம் கட்சியின் ரகுராமன் குறிப்பிட்டார். இதையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

குடிசை மக்கள் உள்ளடங்கி இருந்ததனாலும், சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருந்ததாலும் சாத்தங்குடி, ஆழங்கால், வினோபாஜி காலனி முதலான பல ஊர்களை மூன்று நாட்கள் வரை யாரும் அணுக முடியவில்லை, அவர்களுக்கு எந்த உதவியும் போகவில்லை என்றார் கவிஞர் தை.க. அவர் தன் சொந்த முயற்சியில் கோவையில் உள்ள நண்பர்களைத் தொடர்பு கொண்டு கொன்சம் ரெடிமேட் ஆடைகள் முதலியவற்றைப் பெற்று சில குடிசைப் பகுதிகளுக்குச் சென்று உதவியுள்ளார். உதவிப் பொருட்களைக் கொண்டு வருபவர்களைச் சாலை ஓரங்களில் உள்ளவர்கள் வழி மறித்துப் பெற்றுக் கொண்டு உள்ளே தள்ளியுள்ளவர்களுக்கு உதவிகள் சென்றடையா வண்ணம் தடுப்பது என்பது இம்மாதிரி இயற்கைப் பேரழிவுகளில் எப்போதும் நடப்பதுதான். இதனால் பாதிக்கப்படுவதும் குடிசை வாழ் பழங்குடி மற்றும் தலித் மக்கள்தான். இப்போதும் பல இடங்களில் அப்படித்தான் நடந்துள்ளது.

அந்தந்த சாதி அமைப்புகள் அவரவர் சாதிக்கு மட்டும் அதிக விளம்பரம் இல்லாமல் உதவி செய்ததையும் ஒருவர் குறிப்பிட்டார்.

“தென்னை, பழ மரங்கள் ஆகியவற்றின் அழிவால் அந்த விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அந்தப் பண்ணைகளில் வேலை செய்த மரமேறித் தேங்காய் பறிப்பவர்கள், கீற்று முடைபவர்கள் முதலான தொழிலாளிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடு மாடுகள் தீவனங்கள் இல்லாமல் அலைகின்றன. முகாம்களில் இருந்தவர்கள் ஒரு வாரம் கழித்துக் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் போவதற்கு வீடுகள் இல்லை. குறைந்த பட்சம் பிளாஸ்டிக் படுதா முதலியவற்றையாவது கொடுத்தனுப்பி இருக்க வேண்டும். முகாமில் இருந்த வரைக்கும் அரிசி முதலியவற்றைக் கொடுத்தார்கள். கூட்டாஞ்சோறுபோல ஆக்கித் தின்றோம். இனி வேலையும் இல்லாமல், வீடும் இல்லாமல் இம்மக்கள் என்ன செய்வது?” என்றார் CPI கட்சியின் சந்திரராமன்.

“இன்று இப்பகுதிகளில் கீற்று கிடைக்கவில்லை. நூறு கீற்றின் விலை ஆயிரத்துப் பத்து ரூபாய். நாங்கள் கரூரிலிருந்து கீற்று வரவழைத்து இந்தக் குடிசைகளைக் கட்டிக் கொடுக்கிறோம்” என்றார் மொரார்ஜி தேசாய். இவர் ஒரு வக்கீல் குமாஸ்தா. சாதி மீறிய காதலர்கள் இவரைத்தான் நாடி வருவார்கள். இவர் உரிய சட்ட உதவிகளைச் செய்வார். இப்படியான உதவிகளைப் பெற்று திருமணம் செய்து கொண்டவர்களை அணுகி அவர்களது நன்கொடையில் பத்து குடிசைகளை இவர் புனரமைத்துக் கொடுத்துள்ளார். வேதனை என்னவெனில் அவரது எளிய சிறிய வீடும் முற்றாக அழிந்துள்ளது.

புயலடித்து இப்போது மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. கட்டாயமாக மக்கள் முகாம்களிலிருந்து அனுப்பப் பட்டுள்ளனர். பெரியநாயகிபுரம் எனும் இடத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு தலித் குடியிருப்பு பற்றி எரிந்து சுமார் 50 வீடுகள் நாசமாயின. அங்குள்ளவர்கள் உதவியில் அவர்கள் தம் குடிசைகளைப் புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இன்று அவர்களின் அந்தக் குடிசைகளும் அழிந்துள்ளன. அவர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள்.

குடிசைகளுக்குத் திருப்பி அனுப்பபட்டவர்கள் ஏதோ சொந்த முயற்சியில் கொஞ்சம் தம் குடிசைகளைப் புனரமைத்துக் கொண்டு வாழ்வைத் தொடங்கியுள்ளனர். இப்போது இழப்பீடு கணக்கிடும் அரசு புயலுக்குப் பின் அந்த வீடு அழிந்திருந்த புகைப்படம் வேண்டும் எனக் கேட்கிறது. அவர்கள் என்ன செய்வார்கள்?

பேரிடர் அழிவுகள் எல்லோரையும் பாதிக்கிறது. மேலே உள்ளவர்களின் இழப்பே வெளியில் தெரிகிறது. கீழே இருப்பவர்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களை யாரும் கவனிப்பதில்லை.