முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

(இந்தக் குறிப்புகள் முத்தலாக் குறித்து திருக்குர்ஆன் என்ன சொல்கிறது, இதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா, எப்போது இது நடைமுறைக்கு வந்தது முதலான விடயங்களைப் பேசப் போவதில்லை. முத்தலாக்கைக் கடுமையாகக் கண்டிக்கும் சீர்திருத்தவாதிகளும், பெண்ணியர்களும், ஊடகங்களும் இந்த அவசரத்தில் முத்தலாக் வழங்கப்பட்டுவிட்டால் அத்தோடு அந்த மனைவியின் அனைத்து உரிமைகளும் பறிபோய் அவள் அனைத்தும் இழந்தவளாக்கப்படுகிறாள் என்றே முன் வைக்கின்றனர். அவர்களின் புரிதலுங் கூட அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்திய நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை, இருக்கிற முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படிப் பல தீர்ப்புகளில் முத்தலாக் சொல்லப்பட்ட மனைவியரின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளன என்கிறார் இத்துறையில் வல்லுனரான ஃப்ளேவியா ஆக்னஸ். அவருடைய கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்கள்)
1. Shamim Ara v State of UP வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு (2002): தன்னிச்சையான (arbitrary) முத்தலாக்கை சட்டபூர்வமானதாக ஏற்க இயலாது என்பது இவ்வழக்கில் தெளிவாக்கப்பட்டது. விவாகம் ரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மனைவி ஜீவனாம்சம் வேண்டி நீதிமன்றத்தை அணுகும்போது, ரத்து செய்த கணவன் தான் முத்தலாக் சொல்லி விட்டதால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை எனச் சொல்வதை ஏற்க இயலாது என்றது உச்சநீதிமன்றம். தான் முத்தலாக் சொல்லிவிட்டதாக இப்படிச் சொல்லிவிடுவது ஒன்றே பொறுப்பிலிருந்து தட்டிக் கழிக்கப் போதுமானதல்ல. திருக்குர் ஆனில் உள்ள நிபந்தனைக்கு (injunction) இணங்க முத்தலாக் ‘அறிவித்து ஒலிக்கப்பட’ (pronounce) வேண்டும்’.என நீதிமன்றம் வரையறுத்தது. ‘அறிவித்து ஒலித்தல்’ என்பது ‘உரத்து அறிவித்தல்’, ‘பிரகடனப்படுத்துதல்’, ‘உறுதிடக் கூறுதல்’, ‘தெளிவாக உரைத்தல், (“to proclaim, to utter firmly, to declare, to articulate”).

முன்னதாக கீழ் நீதிமன்றங்கள் கணவரின் கூற்றை ஏற்று அவர் முத்தலாக் சொல்லிவிட்டதகச் சொன்னதை அங்கீகரித்து ஜீவனாசப் பொறுப்பிலிருந்து அவரை விடுவித்திருந்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக,
“எந்த (இஸ்லாமிய) புராதனப் புனித நூற்களும், வேதங்களும் இத்தகைய விவாகரத்து வடிவத்தை ஏற்கவில்லை. கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக ஏதேனும் ஒரு ஆவணத்தில் ஒலிக்கப்பட்டுள்ளதாலேயே, அம் மனைவி அதை அறியும் நாளிலிருந்து முறைப்படி விவாகரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும் என எந்தப் (புனித)ப் பிரதியிலிருந்தும் எங்களுக்குக் காட்டப்படவில்லை”
என உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனினும் இந்த முக்கிய தீர்ப்பு போதுமான அளவு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆனாலும் இந்த அடிப்படையில் பிறகு பல தீர்ப்புகளில் முத்தலாக் சொல்லப்பட்டதாகக் கணவர்கள் சொன்னதை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. முத்தலாக் செல்லுபடியாகும் என்பதற்கு திருக்குர்ஆன் முன்வைக்கும் தடை ஆணை (நிபந்தனை- injunction) என்ன? தொடர்ந்து பார்ப்போம்.

2. Dagdu Pathan v Rohimbi pathaan (டக்டு பதான் எதிர் ரோஹின்பீவி பதான், 2002) வழக்கு: மும்பை உயர்நீதிமன்ற முழு அமர்வு கணவன் தன்னிச்சையாக விவாகரத்து செய்வதற்கு சட்ட ஏற்பு அளிக்க இயலாது என்றது. கீழ்க்கண்ட திருக்குர் ஆன் நிபந்தனையை அது ஆதாரமாகக் காட்டியது: “காரணமின்றி மனைவியை ரத்து செய்தல் என்பதும், கணவனின் சட்ட விரோதமான கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாலேயே பழிவாங்கும் நோக்கில் அல்லது துன்புறுத்தும் நோக்கில், ஷரியத்தின் விதிமுறைகளை மீறி விவாகரத்து செய்தல் என்பதும் ஹராம்.”

தன்னிச்சையான அறிவிப்பு என்பதற்கு அப்பால் கடைபிடிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நீதிமன்றம் சொன்னவை:

1. விவாகரத்துக்கான காரணங்களைத் தெரிவித்தல் 2. இடைநிலையாளர்களை நியமித்தல் 3. இரு தரப்பிற்கும் இடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல். விவாகரத்து செய்யப்பட்ட மனைவி நிவாரணம் வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் கணவன் தரப்பு தனது ரத்து நடவடிக்கை சட்டபூர்வமானதுதான் என நிறுவ மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை நிறுவ வேண்டும். “நான் முத்தலாக் சொல்லிவிட்டேன்” என ஒரு கூற்றை முன்வைப்பதை நீதிமன்றம் ஏற்க இயலாது என்றது.

3. Najmunbee v Sk Sikandar Sk Rehman (நஜ்முன் பீவி எதிர் ஏச்கே சிகந்தர் எஸ்கே ரஹ்மான், 2004) :
ஒரு முஸ்லிம் கணவன் விருப்பம்போல விவாகரத்து செய்ய இயலாது என்றது முபை உயர்நீதிமன்றம். தனது முடிவுக்கு ஆதாரமான காரணங்களை முன்வைக்க வேண்டும். நடுநிலையாளர்களைக் கொண்டு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம் சட்டம் நிபந்தனை ஆக்குகிறது.

4. Dilshad Begaum Ahmadkhan Pthan v Ahmadkhan Hanifkhan Pathan ((டில்ஷட் பேகம் அஹமட்கான் பதான் எதிர் அஹமட்கான் ஹனீஃப்கான் பதான், 2007):
கீழ் நீதிமன்றம் மாதம் 400 ரூ ஜீவனாம்சம் அளிக்க கணவனுக்கு உத்தரவிடுகிறது. மேல்முறையீட்டில் செஷன்ஸ் நீதிமன்றம், “ஒரு மசூதியில் வைத்து, சாட்சிகள் முன்னிலையில் முத்தலாக் சொன்னேன்” எனக் கணவன் கூறியதிக் கேட்டு முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டதாகச் சொல்லி ஜீவனாம்சத்தை ரத்து செய்தது. வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது. மசூதியில் சாட்சிகள் முன் முத்தலாக் சொல்லப்பட்டிருந்தாலும், 1.ரத்திற்கான காரணங்களை முன்வைத்தல் 2.நடுநிலையாளர்களை நியமித்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் திருமண உறவு தொடர்வதற்கு சாத்தியமில்லை என்பது நிரூபிக்கப்படாமை முதலான பிற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் இந்த விவாகரத்தைச் சட்டபூர்வமாக ஏற்க இயலாது என உயர்நீதிமன்றம் கூறியது. கணவன் தரப்பு ஒரு சமாதான உடன்படிக்கையை முன்வைத்தது. அதன்படி கணவன் மனைவியுடன் இசைந்து வாழவோ இல்லை ஜீவனாம்சம் அளிக்கவோ தவறினால் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மனைவிக்கு எழுதிவைப்பதாக ஏற்றுக் கொண்டிருந்தான். எனினும் உயர்நீதி மன்றம் இதை ஏற்க மறுத்தது. இந்த உடன்படிக்கையின்படி கணவன் நடந்து கொள்ளவில்லை என்பதால் மசூதியில் சாட்சிகள் முன் சொல்லப்பட்ட அந்த முத்தலாக்கைச் சட்டபூர்வம் அற்றது எனத் தீர்ப்பளித்தது.

5.  Riyaz Fatima v Mohd Sharif ((ரியாஸ் ஃபாதிமா எதிர் முகமது ஷரிஃப், 2007) : தான் முத்தலாக் சொல்லிவிட்டதால் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க இயலாது என்றான் கணவன். முத்தலாக் செல்லுபடியாகும் எனத் தான் பெற்றிருந்த ஃபத்வா நகல் ஒன்றையும் முன்வைத்தான். குழந்தையின் தந்தை குறித்த ஐயத்தையும் முன் வைத்தான். இதை ஏற்க மறுத்த நடுவர் நீதிமன்றம் மனைவி குழந்தை இருவருக்கும் ஜீவனாம்சம் வழங்க ஆணையிட்டது. ஆனால் செஷன்ஸ் நீதிமன்றம் கணவனின் மேல் முறையீட்டை ஏற்று கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தபோது முத்தலாக்கிற்கான தெளிவான வரையறைகளை அது வகுத்தது . அவை:

1. திருக்குர்ஆன் விதித்துள்ளவாறு முறையான காரணங்களைச் சொல்ல வேண்டும் 2. சாட்சிகள் முன் அல்லது எழுத்து மூலம் கடிதம் வாயிலாக முத்தலாக் சொல்லியிருக்க வேண்டும் 3. சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை கணவன் தரப்பு நிறுவ வேண்டும். 4. ‘மெஹர்’ பணம் திருப்பித் தரப்பட்டது, ‘இத்தாத்’ காலம் (விவாகரத்து அல்லது கணவனின் மரணத்துக்குப் பின் மனைவி கடைபிடிக்க வேண்டிய காத்திருப்புக் காலம்) கடைபிடிக்கப்பட்டது ஆகியன நிறுவப்பட வேண்டும்.

இந்த வழக்கில் முத்தலாக் சொல்லியதற்கான ஆதாரம் முறையாக நிறுவப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட தினத்தில் தான் முத்தலாக் சொல்லிவிட்டதாகக் கணவனின் கூற்றை மட்டும் வைத்து அதை ஏற்க இயலாது.
நான் தொடக்கத்தில் சொன்னது போல முத்தலாக் முறை சரியா தவறா என்கிற விவாதத்திற்குள் இக்கட்டுரை செல்லவில்லை. மறாக முஸ்லிம் தனிநபர் சட்டப்படி நமது நீதிமன்றங்கள் சில பாதுகாப்புகளை பெண்களுக்கு வழங்கியுள்ளதையும் நாம் கணக்கில் கொண்டே இது குறித்த விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டும். ஆனால் முஸ்லிம் வெறுப்பை ஏந்தி நிற்கும் நம் ஊடகங்கள் இவற்றைக் கணக்கில் கொள்வதே இல்லை என்பதைத்தான் ஃப்ளேவியா ஆக்னஸ் வலியுறுத்துகிறார்.

இதுபோல இன்னும் சில வழக்குகளையும் சொல்ல இயலும். சுருக்கம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். “நான் முத்தலாக் சொல்லிவிட்டேன். இதோ தலாக்நாமா. எனவே என் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது” என ஒரு முஸ்லிம் ஆண் எளிதில் சொல்லி விட்டுப் போய்விட முடியும் என சமூகத்தில் நிலவும் கருத்து தவறானது. மிகவும் படித்தவர்களும், தனக்கு நிறையத் தெரியும் என நினைப்பவர்களும் கூட இப்படிக் கருத்துக் கொண்டிருப்பதுதான் கொடுமை. எனினும் புகழ் பெற்ற ஷாபானு வழக்கில் (Mohd Ahmad Khan v Sha Bano Begum, 1985) வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பின் ராஜீவ் காந்தி அரசால் இயற்றப்பட்ட (1986) முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் விளைவாக இப்போது முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமை இல்லையே என ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் அச்சட்டம் இயற்றப்பட்ட பின் டானியல் லதீஃப் எதிர் இந்திய அரசு (Danial Latif v Union of India, 2001) எனும் வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு,1986ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினாலும், விவாகரத்து செய்யப்படும் முஸ்லிம் பெண் இச்சட்டத்தின் விளைவாகத் தன் ஜீவனாம்ச உரிமையை இழந்துவிட மாட்டாள் என்பதைத் தெளிவாக்கியது. ‘இத்தாத்’ காலம் மட்டுமின்றி உயிருடன் உள்ளவரை அவளுக்கு அந்த உரிமை உண்டு.

###

இறுதியாக இப்போது மீண்டும் இந்தப் பிரச்சினை மேலுக்கு வந்துள்ள பின்னணியைக் காண்போம்.

சென்ற அக்டோபர் 2015ல், “அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ள வண்ணம் மத வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்” என உச்ச நீதிமன்றம் கூறியது. இந்து வாரிசுரிமைச் சட்டம் பற்றிப் பேசுகையில் நீதிபதிகள் அனில் ஆர் தவே, ஆதர்ஷ் கே கோயல் ஆகியோர் இதைக் கூறினர். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தல், ஆண்களுக்குப் பலதார மண உரிமை வழங்குதல் ஆகியவற்றின் விளைவாக முஸ்லிம் பெண்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் பறிபோவதை அவர்கள் சுட்டிக் காட்டி, இது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் விளக்கம் கோரினர். தவிரவும் தேசிய சட்ட ஆணையத்தின் (National Legal Services Authority of India) கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்தப் பின்னணியில் பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஒரு பொதுநல வழக்கைத் (PIL) தொடர்ந்தார். கணவர் தன்மீது தொடுத்துள்ள ஒரு வழக்கை குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வந்த ஷயாரா பானு என்பவரது பிரச்சினையைத் தான் மீடியா கவனம் பெறும் நோக்கில் அவர் இப்படிப் பயன்படுத்திக் கொண்டார்.. இந்த 35 வயதுப் பெண் தனது 15 ஆண்டு காலத் திருமண வாழ்வில் ஏராளமான வன்முறையை அனுபவித்தவர். வரதட்சிணை கேட்டும் கொடுமைப் படுத்தப்பட்டவர்; தன் வீட்டாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டவர். கட்டாயக் கருச் சிதைவுகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு அவற்றால் உடல், மன நோய்களுக்கும் ஆளானவர். இறுதியில் அவரைத் தாய் வீட்டுக்கு அனுப்பி தபால் மூலம் தலாக்நாமா வையும் அனுப்பி வைத்தான் அவள் கணவன்.

ஷயாரா பானுவுக்கு நீதி பெற்றுத் தருவதுதான் அந்த வழக்குரைஞரின் நோக்கமாக இருந்திருந்தால், 1. இப்படித் தன்னிச்சையாக முத்தலாக் சொன்னதாக தலாக்நாமா அனுப்பியிருப்பது செல்லாது என வழக்காடி இருக்கலாம். 2. அல்லது தலாக்நாமாவை ஏற்றுக் கொண்டு, சற்று முன் கூறிய, 1986ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட ஜீவனாம்சத் தொகை அந்தப் பெண்ணுக்குத் தர வேண்டும் எனக் கோரி இருக்கலாம். 3. அதோடு 2005 ம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி அந்தக் கணவனுக்குத் தண்டனையும் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் பாலாஜி சீனிவாசன் இது எதையும் செய்யாமல் முத்தலாக் மூலம் முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். முன்னர் இதே கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட பொது நல வழக்குகளை, அவை மூன்றாம் நபர்களால் தொடுக்கப்பட்டவை என்பதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இம்முறை இந்த வழக்கை பாலாஜி சீனிவாசன் பாதிக்கப்பட்ட ஷயரா பானுவின் பெயரிலேயே தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல “ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை சொல்லும் முத்தலாக்கை (instantaneous triple talaq)” செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான் இப்போது வேண்டுதலாக வைக்கப்பட்டுள்ளது. முன்னர் தொடுக்கப்பட்ட வழக்குகளில் ஒட்டுமொத்தமாக முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வதையே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. ஆனால் திருக்குர் ஆனில் முத்தலாக் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்படி ஒட்டு மொத்தமாகச் செல்லாது என அறிவிக்க இயலாது என உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்திருந்தது. ஆனால் திருக்குர் ஆனில் இந்த மூன்று தலாக்குகளும் இப்படி உடனடியாகவன்றி 90 நாட்களில் சொல்லப்பட வேண்டும் என உள்ளது என்பதால் உடனடியாக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என இந்தப் பொதுநல வழக்கு கோருகிறது. முன்னதாக நீதிபதிகள் தவே மற்றும் கோயல் கேட்டுள்ள விளக்கங்களோடு இந்த வழக்கையும் இணைத்து அனைத்து மதத்தினருக்கும் ஒரே சிவில் சட்டம் (UCC) இயற்றுவது தொடர்பாக விசாரிக்க ஒரு சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

முத்தலாக் விவகாரம் இன்று மேலுக்கு வந்துள்ள பின்னணி இதுதான். முத்தலாக் விவகாரம் மேலுக்கு வந்துள்ளது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சிறுபான்மையினரின் ஒரு முக்கிய பிரச்சினையான முஸ்லிம் தனிநபர்ச் சட்டமே இப்போது கேள்விக்குரியது ஆக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்குப் பின்னும் முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமைகள் உண்டு, குடும்ப வன்முறைச் சட்டம் முதலான இதர சட்டங்களின் பாதுகாப்பும் முஸ்லிம் பெண்களுக்கு உண்டு என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகளும் முஸ்லிம் தனி நபர் சட்டத்தையே முற்றாக ஒழிக்க முனைகின்றன. இவர்களின் இந்த முயற்சி முஸ்லிம் பெண்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஆனதல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை சீனத் சவுகத் அலி முதலான முஸ்லிம் அறிஞர்களும் கூட ஏற்பதில்லை. இன்னொரு அறிஞரும், திட்ட ஆணைய உறுப்பினராக இருந்தவரும், முஸ்லிம் திருமணம் ஒன்றை காஸி யாக இருந்து நடத்தி வைத்தவருமான சைதா எஸ் ஹமீது அவர்கள் சமீபத்திய கட்டுரை ஒன்றில் (This Reform Must Begin Within, The Hindu, 27 April 2016) அச்சம் தெரிவித்திருப்பது போல உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையை எடுப்பது என்பது, முஸ்லிம் தனி நபர் சட்டத்தை ஒழிப்பது என்போரும், அது தொடர வேண்டும் என்போரும் முற்றிலும் எதிர் எதிராக அணி திரளுவதற்குத்தான் இட்டுச் செல்லப் போகிறது.
ஊடகங்கள் நடுவில் புகுந்து பிரச்சினையைப் பற்றி எரிய வைக்கப் போகின்றன. முத்தலாக் சட்டம் இருக்கும்போதே கூட முஸ்லிம் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்புகள் பற்றியெல்லாம் சிறிதும் பேசாமல் தீரெனத் தீவிரப் “பெண்ணிய” நிலை எடுத்து அவை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றப் போகின்றன.

சமீபத்தில் ஊடகம் ஒன்று ஷயாரா பானுவிடம், “முன்னைக் காட்டிலும் இப்போது மதப் பிரச்சினையில் சகிப்புத் தன்மை குறைந்துள்ளதா?” எனக் கேட்க அவரும், “அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் வகுப்பு வெறுப்பு ஒன்றும் இல்லை” எனக் கூறியுள்ளதாகச் செய்தி ஒன்று வந்தது. ‘பாரத் மாதா கி ஜே’ பிரச்சினை குறித்து கேட்டபோது, “எல்லா முஸ்லிம்களும் பாரத் மாதா கி ஜே”சொல்ல வேண்டும். அதில் எந்தத் தப்பும் இல்லை” எனக் கூறியதாகவும் செய்தி வந்தது.. இப்படியான கருத்துக்களைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லை என்பதல்ல. ஆனால் இந்த நேரத்தில் இந்தக் கேள்விகளை அவரிடம் முன்வைத்துப் பரபரப்பை ஏற்படுத்த முனையும் ஊடகங்களின் நோக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தில் தலையியிட உச்சநீதிமன்ற அமர்வுக்கு அதிகாரமில்லை என முன்வைத்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் (AIMPLB) வழக்கில் தலையிடப் போவது உறுதி. திருக்குர் ஆனின் அடிப்படையிலான சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என அது கூறலாம். இதெல்லாம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே வழி வகுக்கும். முன்னதாக. 1986ல் நாடாளுமன்றம் முஸ்லிம் பெண்கள் சட்டத்தை இயற்றியபோது அதை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்போது நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமை இல்லை எனக் கோருவதில் அர்த்தமும் இல்லை. இந்நிலையில், “முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வதை ஏற்கக் கூடாது என விவாதங்கள் நடக்கின்றன. கருத்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜனநாயக அடிப்படையில் ஏற்படும் இந்த மனமாற்றத்தை நீதிமன்றத் தல்கியீட்டின் மூலம் சிக்கலாக்க வேண்டாம்” என்கிற ரீதியில் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தை அணுகுவதே சரியாக இருக்க முடியும்.

(சட்ட வல்லுனர் ஃப்ளேவியா ஆக்னஸ் அவர்களின், “Muslim Women’s Rights and Media Coverage, EPW, May 28, 2016” எனும் கட்டுரையிலிருந்து வழக்கு விவரங்கல் எடுக்கப்பட்டுள்ளன.)