அசோகரின் தம்ம ஆட்சி : இந்தியத் துணைக்கண்டம் உற்பவித்த ஒரு வியப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -3

(தீராநதி, மார்ச் 2017)

asokaஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டபோதும் ‘மணிமேகலை’ குறித்து ஆங்கிலத்தில் வந்துள்ள அளவிற்கு ஆழமான ஆய்வுகள் தமிழில் இல்லை. பல வகைகளில் அது தனித்துவமான ஒரு காவியம். பவுத்தக் கோட்பாடுகளை விளக்கும் முகமான உட்கதைகள், தத்துவ விவாதங்கள், ஒரு இளம் பெண்ணை முக்கிய பாத்திரமாகக் கொண்டு இயங்கும் காப்பியக் கதையாடல் எனப் பல அம்சங்களில் அது தனிச் சிறப்புடையது. மகாபாரதத்தில் பொதுவான காப்பியப் போக்கிலிருந்து விலகி நிற்கும் தத்துவ விசாரப் பகுதியான ‘பகவத் கீதை’ ஒரு பிற் சேர்க்கை என்பது அறிஞர்கள் கருத்து. பவுத்தம் முன்வைத்த தத்துவச் சிந்தனைகளுக்கு ஒரு எதிர்வினையாக பாரதம் தோன்றிப் பலகாலத்திற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட இடைச் செருகல்தான் கீதை என்பர். ஆனால் மணிமேகலையின் ‘சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை’ எனும் முற்றிலும் தத்துவம் விவாதப் பகுதி கதைப் போக்குடன் பிரிக்க இயலாமல் பிணைந்து கிடக்கும் ஒன்று.

இயற்கையில் காணக் கிடைக்காத அதீத கற்பனைகள் என்பன பழங் காப்பியங்களில் நிறைந்து கிடப்பதென்பது வழமைதான். கூடுவிட்டுக் கூடு பாயும் விந்தையிலிருந்து பறக்கும் கம்பளம் வரை எத்தனையோ கற்பிதங்களை நாம் காப்பியங்களில் பார்த்துள்ளோம். ஆனால் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்கிற கற்பிதம் தனித்துவமானது. ஏசுநாதரும் கூட இப்படியான ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதை திரு விவிலியத்தில் காண்கிறோம். ஆனால் மணிமேகலை அமுதசுரபி கொண்டு பசியாற்றுவது என்பது இப்படியாக ‘நிகழ்த்தப்படும்’ ஒரு அற்புதமல்ல. பவுத்தத்தின் அடிப்படைகளில் ஒன்று பசிப்பிணி அகற்றல். இந்த அறக் கடப்பாட்டின் ஓரங்கமாகவே மணிமேகலை இந்த பசியகற்றும் அறப்பணியைச் செய்து திரிகிறாள்.

அரசன் முன் ஒரு கோரிக்கை வைக்கும் வாய்ப்புக் கிடைத்தபோதும் கூட அவள் அறவோர் தங்க ஒரு மடாலயம் வேண்டும் என்பதை அறவோருக்கு அளிக்கப்படும் ஒரு அடிப்படை வசதி எனும் நோக்கிலிருந்து அவள் கோரவில்லை. அவளது நோக்கம் ஒரு மடாலயம் அமைத்தல் என்பதைக் காட்டிலும் சிறைச்சாலைகளை ஒழிப்பது என்பதுதான். அது கைதிகளை அடைத்து வைக்கும் கோட்டமாக அன்றி அறவோர் வந்து இளைப்பாறிச் செல்லும் இல்லமாக ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் அவள் வேண்டுதல். அது உடனடியாக நிறைவேற்றவும் படுகிறது.

பவுத்த வரலாற்றில் இந்தக் காட்சி காப்பியத்தில் இடம்பெறும் ஒரு கற்பனை என்பதோடு நின்றுவிடவில்லை. மணிமேகலைக்குச் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இப்படிச் சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்குதை ஒரு வரலாற்று எதார்த்தம் ஆக்கிய அனுபவமும் பவுத்தத்திற்கு உண்டு. அதைச் சாத்தியமாக்கியவர்தான் மாமன்னர் அசோகர் (கி.மு 268 -339).  இன்றைய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி உள்ளிட்டு, இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஒரு குடையின் கீழ் ஆண்ட மாமன்னர் அவர். ‘சக்கரவர்த்தி’ எனும் பெயர் அடைவு பல நாடுகளை வென்றவர் எனும் பொருளில் அவர் பெயருடன் இணைக்கப்படவில்லை. மாறாக ‘தருமச் சக்கரத்தை உருட்டியவர்’ எனும் பொருளிலேயே அது அவரால் பாவிக்கப்பட்டது. ‘தேவனாம்பிரியர் பிரியதஸ்ஸி’ என அவர் தன்னைத் தன் சாசனங்களின் ஊடாக விளித்துக் கொண்டார். இறைவனுக்குப் பிரியமானவன், கருணை ததும்பும் பார்வைக்குரியோன் என்பது இதன் பொருள்.

கிறிஸ்துவுக்குச் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் ஆயினும் பாறைகளிலும், குகைச் சுவர்களிலும், நிறுவப்பட்ட கற்றூண்களிலும் செதுக்கப்பட்ட அவரது சாசனங்களின் (edicts) ஊடாக அவரது வரலாறு ஓரளவு துல்லியமான நமக்குக் கிடைக்கிறது. மத்தியதரைக்கடற் பகுதியில் உருவாகியிருந்த ஹெல்லெனிய அரசின் இரண்டாம் ஆன்டியோகஸ் (கி.மு 261 – 246) மற்றும் எபிரசை ஆண்ட அலெக்சான்டர் (272–255)  தமிழகத்தில் ஆட்சி புரிந்த முற்கால மூவேந்தர்கள் ஆகியோரது சமகாலத்தவர் அவர் என்பதற்கு இச்சாசனங்கள் சான்றாக உள்ளன. இன்றைய காபூல் தொடங்கி இன்றைய பாகிஸ்தான், நேபாளம், தெற்கே கர்நாடகம் வரை பரந்திருந்த அவரது பேரரசில் சுமார் 60 சாசனங்களை அவர் செதுக்கினார் என்பர். இன்னும் அவை அனைத்தும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியத் தொலலறிவுச் சேகரங்கள் எல்லாம் ஐரோப்பிய அறிஞர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் (19ம்நூ) கீழைத்தேயவியல் அறிஞர்களில் ஒருவரான ஜேம்ஸ் ப்ரின்செப் தான் முதன் முதலில் (1837) டெல்லியில் இருந்த ஒரு கற்றூணில் அசோகச் சாசனம் ஒன்றைக் கண்டு அதை வாசிக்கவும் செய்தார். இப்போது ஒரு 28 சாசனங்களின் தொகுதியை நீங்கள் இணையப் பக்கங்களில் காணலாம்.

அசோகன் என்கிற மனிதனின் இயற்பண்பையும், அசோகன் என்கிற மாமன்னனின் ஆளுகை நெறியையும் அறிய உதவும் ஒரு அற்புதமான ஆவணத் தொகுதியாக இன்று நமக்கு அவை கிடைக்கின்றன. அக்கேமெனிட் பேரரசு (இன்றைய ஈரான்) காலத்திய சாசனங்களைப் பின்பற்றித்தான் அசோகரும் இப்படியான சாசனங்களைத் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுமையும் செதுக்கினார் என்பர். ஆனால் அக்கேமெனிட் மன்னன் டேரியசின் சாசனங்கள், அவனது படைஎடுப்புகள், வெற்றிகள், அவன் கொன்று குவித்த பிரதாபங்கள் ஆகியவற்றைப் பறைசாற்றுவன என்றால் அசோகச் சாசனங்கள் போரின் அநீதிகளை வெளிப்படுத்துபவை, அதற்கென வருந்துபவை, மன்னிப்புக் கோருபவை. முதியோர், பெற்றோர், தொழிலாளிகள் ஆகியோரை மதிக்கச் சொல்வது மட்டுமின்றி மிருகங்களையும் பறவைகளையும் அன்பு செய்யச் சொல்பவை. அந்த வகையில் அசோகச் சாசனங்களுக்கு இணையாக வரலாற்றில் வேறெதையும் சுட்டிக் காட்ட இயலுமா எனத் தெரியவில்லை.

“வரலாற்று நூல்களில் இறைந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான பேரரசர்களின் பெயர்கள் மத்தியில் அசோகரின் பெயர் மட்டும் தனித்து ஒளி வீசுகிறது…ஒரு நட்சத்திரமாக ஒளி தெறித்து மின்னுகிறது..” – என எச்.ஜி.வெல்ஸ் போன்ற அறிஞர்கள் ஒரு கணம் மயங்கி உழற்றுவது இந்தப் பின்னணியில்தான்.

இந்தச் சாசனங்கள் அனைத்தும் அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுமையும் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக மக்கள் கண்ணில் படும் இடங்களாகப் பார்த்து அவ்வப் பகுதி மக்களின் மொழிகளில் அவை செதுக்கப்பட்டுள்ளன, அல்லது தூண்களாக நிறுவப்பட்டுள்ளன. குகைச் சுவர்களில் செதுக்கப்பட்டவை மிகவும் அடித்தள மக்கள் பேசுகிற ‘கரோஷ்தி’ மொழியிலும், ஆப்கானிஸ்தானில் உள்ள சாசனங்கள் அராமிக் மற்றும் கிரேக்கத்திலும், கங்கச் சமவெளியின் கிழக்குப் பகுதியில் ‘மாகதி’ (பாலி) மொழியிலும், மேற்குப் பகுதியில் கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தை ஒத்த மொழியிலும் அவை செதுக்கப்பட்டுள்ளன. எழுத்துருவைப் பொருத்த மட்டில் பெரும்பாலும் ‘பிராமி’ எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இத்தனை விளக்கமாக இங்கு சொல்வதற்குக் காரணம் தான் சொல்பவை அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அசோகர் குறியாக இருந்துள்ளார் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே. இந்தச் சாசனங்களை மூன்று வகைப் படுத்தலாம். 1. மக்களை நோக்கிச் சொல்பவை 2. அரசதிகாரிகளை நோக்கிச் சொல்பவை 3.சங்கத்திலுள்ள பிக்குகளை நோக்கிச் சொல்பவை. அதிகாரிகளை நோக்கிய தன் ஆணைகளையும் கூட அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும் என நினையாமல் என்ன ஆணைகள் இடப்பட்டுள்ளன என்பதை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் அசோகருக்கு இருந்த கரிசனம் வியப்பளிக்கிறது.

எளிய மக்களுடன் உரையாடும் வடிவத்தில் மிகச் சாதாரண மொழியில் மட்டுமின்றி சற்றே சோர்வூட்டினும் பாதகமில்லை என மிக விரிவாகவும், திரும்பத் திரும்பச் சொல்வதாகவும் அவை அமைந்துள்ளன.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்கும் பவுத்தத் திட்டம் பற்றிப் பேசத் தொடங்கினோம். இந்தச் சாசனங்களின் வாயிலாக அசோகரின் ஆட்சியில் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம்.. பெரியோர், முதியோர், அறவோர், விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது கரிசனம் கொண்டதோடு அசோகர் நிற்கவில்லை. குற்றவாளிகள் மற்றும் தண்டிக்கப்பட்டவர்கள் குறித்தும் அவர் நிரம்பக் கரிசனம் கொண்டிருந்தார்..

அசோகரது ஆட்சியில் இருவகை அதிகாரிகள் இருந்ததை இந்தச் சாசனங்களிலிருந்து அறிகிறோம். ‘ராஜ்ஜுக்கள்’ எனும் அதிகாரிகளின் பணி. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வது, நீதிபரிபாலனம் செய்வது முதலியன இவர்களின் பணி. ‘தர்ம மகாமாத்திரர்கள்’ என்போர் இன்னொரு வகையினர். இவர்கள் மதம், மற்றும் நீதிபரிபாலனத் துறைகளுக்கான மேற்பார்வை அதிகாரிகள் (Department of Religious and Judicial Affairs) எனலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறைச்சாலைகளைப் பார்வையிடல், கைதிகளைச் சந்தித்து அவர்களின் நிலை அறிந்து உதவுதல், விடுதலை செய்தல் முதலியன இவர்களின் பணியாக இருந்துள்ளன.

இனி  சாசனங்களில் காணப்படும் நீதி வழங்கல் மற்றும் கைதிகள் நலன் குறித்த சில வாசகங்கள்:

  1. நீதிவழங்குவோர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடந்து கொள்ளல் பற்றி:

“தேவனாம்பிரிய மன்னர் நீதிபரிபாலிக்கும் பணியில் உள்ள மகாமாத்திரர்களுக்கு இவ்வாறு ஆணையிடுகிறார்: ‘நீங்கள் இதைக் கவனத்தில் இருத்த வேண்டும். சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் சிலரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கொடுமையாக நடத்தப் படுகின்றனர். காரணமில்லாமல் கொல்லவும் படுகின்றனர். இதனால் மக்கள் துயருறுகின்றனர். ஆகையால் நீங்கள் சார்பின்றி நேர்மையாக நடக்க வேண்டும்’..”

“….இந்தச் சாசனம் கீழ்க்கண்ட நோக்கத்திற்காக இயற்றப்படுகிறது: நகரங்களில் நீதிபரிபாலனம் செய்யும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். அவர்களது அதிகாரத்தின் கீழுள்ள மக்கள் நேர்மையற்ற முறையில் சிறையில் அடைக்கப்படுவது, அல்லது கொடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுத்தப்படுவது முதலியவற்றால் துன்புறாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் முழு வலிமையையும் பயன்படுத்தி இதைச் செயல்படுத்த வேண்டும்..” (கலிங்கத்துப் பாறைச் சாசனம் எண் 1)

2.சிறைக் கதிகள் நலன் அறிதல் மற்றும் முன்கூட்டி விடுதலை செய்தல், பொது மன்னிப்பு அளித்தல் ஆகியன பற்றி”

“அவர்கள் (தர்ம மகாமாத்திரர்கள்) சிறைக் கைதிகள் சரியான முறைகளில் நடத்தப்படுகின்றனரா என்று கண்காணிக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ‘இந்தக் கைதிக்கு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு உள்ளது’, ‘இந்தக் கைதி மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்’, ‘இவருக்கு வயதாகிவிட்டது’ என்றெல்லாம் இவர்கள் கருதினால் அந்தக் கைதிகளின் விடுதலைக்காகவும் அவர்கள் செயல்படுவார்கள். (பாறைச் சாசனங்கள் எண் 5.)

“எனது முடிசூட்டுக்குப் பிந்திய இந்த 26 ஆண்டுகளில் இருபத்தைந்து முறைகள் சிறைவாசிகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” (கற்தூண் சாசனங்கள் எண் 5)

  1. மரணதண்டனைக் கைதிகளுக்குத் தண்டனை குறைப்பு பற்றி

“மக்களின் வேண்டுதல்களைக் கேட்டு நீதியை நிலைநாட்டும் பொறுப்பு ராஜ்ஜுகர்களுடையது. அவர்கள் அச்சமின்றியும் அக்கறையோடும் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்துவதிலும், தண்டனை வழங்குவதிலும் (ஏழை / பணக்காரர் , உயர்ந்தோர்/ தாழ்ந்தோர் என்கிற வேறுபாடுகள் இன்றி) அனைவர்க்கும் பொதுவாக நீதி பரிபாலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் ஒன்றைச் சொல்வேன். முறையாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை உடனே தண்டனையை நிறைவேற்றாமல் அவர்களை மூன்று நாட்கள் வரை சிறையில் அடைத்திருக்கலாம். இந்த நாட்களில் அவர்களின் உறவினர்கள் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்க யாரும் இல்லையெனில் அடுத்த உலகில் புண்ணியம் தேடிக் கொள்வதற்கு அவர்கள் தானங்கள் செய்யலாம். அல்லது உபவாசம் இருக்கலாம். எஞ்சியுள்ளது கொஞ்ச காலமே ஆனாலும் அதை அடுத்த உலக வாழ்க்கைக்கு நன்மை தேடப் பயன்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் தம்மப் பயிற்சி, தானம் செய்யும் பண்பு, சுய கட்டுப்பாடு ஆகியவை வளர வேண்டும் என்பதே என் விருப்பம்.” (கற் தூண் சாசனம் 4)

தேவர்களுக்கு உகந்த மாமன்னராகிய  அசோகரது நீதிபரிபாலனம் மற்றும் சிறைக் கைதிகளின் நலன் குறித்த அணுகல்முறைகளை மேற்கண்ட சாசனங்களிலிருந்துக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மிகவும் நேர்மையாக நீதிபரிபாலனம் செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது, சிறைவாசிகளை தொடர்ந்து அதிகாரிகள் சந்தித்துக் குறைகளை அறிந்து, தேவையானோருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பொது மன்னிப்பு அளித்து சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மரணதண்டனைக் கைதிகளுக்கு தண்டனை உடனே நிறைவேற்றப்படாமல் அவர்களின் தண்டனை குறைப்பிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

ஒன்றை நினைவூட்டுதல் நன்று. அசோகர் புத்தருக்குச் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தவர். ஏசுவுக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தியவர். நபிகளுக்குச் சுமார் 900 ஆண்டுகள் மூத்தவர்; கார்ல் மார்க்சுக்குச் சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன்னும் காந்திக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னும் வாழ்ந்தவர். 2300 ஆண்டுகளுக்கு முன் இப்படி அறம் சார்ந்த ஒரு சிறைக் கொள்கை நடைமுறையிலிருந்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றளவும் நம் சிறைச்சாலைகள் எப்படி உள்ளன என்பதுடனும், இன்றைய நவீன உலகின் குவான்டனமோ பே மற்றும் அபு காரிப் சிறைச்சாலைகளுடனும் அசோகரின் அணுகல்முறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் நாகரிக வளர்ச்சியில் முன்னோக்கி நகர்கிறோமா இல்லை பின் நோக்கிச் செல்கிறோமா என்கிற கேள்வி உருவாவது தவிர்க்க இயலாது.

அதே நேரத்தில் அரசுருவாக்கம் குறித்து அறிந்தோருக்கு முதன் முதலில் இப்படியான ஒரு மாபெரும் அகண்ட அரசை உருவாக்கிய அசோகருக்கு சிரமண தம்மக் கோட்பாடுகள் எந்த வகையில் உதவின என்கிற கேள்வி உருவாவதும் இயல்பு.

(அடுத்த இதழில் பார்ப்போம்)