இந்த ஆண்டு (2018) முதலீட்டாளர் மாநாட்டை எடப்பாடி அரசு கோலாகலமாக நடத்தி முடித்துள்ளது.
எண்ணூர் துறைமுகத் திட்டத்திலும் எரிவாயு வினியோகத்திலும் 12,000 கோடி ரூ முதலீடு செய்வததாக அதானி நிறுவனத்தின் சார்பாகக் கலந்து கொண்ட கரன் அத்வானி அறிவித்ததை எடப்பாடி அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டின் பெரிய வெற்றியாக சொல்லிக் கொள்கிறது.. இந்த இரு திட்டங்களையும் கூர்ந்து கவனித்தால்தான் அதானி செய்யும் இம்முதலீடுகள் பெருமைக்குரியவை அல்ல என்பதும், அவை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவை என்பதும் விளங்கும்..
இந்த இரண்டையுமே அப்பகுதி மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர். எதிர்க்கின்றனர். ஏற்கனவே காவேரி டெல்டா பகுதியில் ONGC யின் எரிவாயு மற்றும் எண்ணை தோண்டி எடுக்கும் செயல்பாடுகளை அப்பகுதி மக்கள் எதிர்த்துக் கொண்டுள்ளனர். சென்ற ஆண்டு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கதிராமங்கலம் கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை அறிவோம். அதை எல்லாம் விட மிக மிகப் பெரிய மெகா திட்டம் ஒன்றை இப்போது அதானி குழுமம் தமிழகத்தில் செயல்படுத்த உள்ளது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவர்களின் எண்ணூர் துறைமுகத் திட்டம் இன்னும் பெரிய சுற்றுச் சூழல் அழிவை உள்ளடக்கிய ஒன்று..
இரண்டு வாரங்களுக்கு முன் ஆஸ்திரேலிய நாளிதழ்களில் வெளியாகியுள்ள ஒரு செய்தி இங்கே குறிப்பிடத் தக்கது. “மண்ணின் மைந்தர்களுக்கு எதிரான இன ஒதுக்கலை ஒழிப்பதற்கான ஐ.நா அவைக் குழு” (UN Committee on the Elimination of Racial Discrimination against Indigenous People) எனும் உலக அவையின் அமைப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு பரிந்துரை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் செயல்பட்டுக் கொண்டுள்ள அதானி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் அது. அப்பகுதி மண்ணின் மைந்தர்களின் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் அதை நிரந்தரமாக மூடுமாறும் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில்தான் அவ்வாறு இன்று ஆஸ்திரேலியாவில் தடுக்கப்பஉள்ள அதே அதானி நிறுவனம் தமிழ்நாட்டுக்குள் தன் செயல்பாடுகளை விரிவாக்குகிறது.,
ஐ.நா அமைப்பு ஒன்று இவ்வாறு கண்டித்துள்ள ஒரு நிறுவனம் இங்கே தன் வேலைகளை விரிவாக்குவது அப்படி ஒன்றும் கொண்டாடத் தக்கதல்ல என்பதை நாம் எடப்பாடி பழனிச்சாமிக்குச் சொல்லியாக வேண்டும்.
முதலீட்டாளர் மாநாட்டில் அதானி நிறுவனம் சார்பாகக் கலந்து கொண்ட கரன் அதானி பேசும்போது தாங்கள் செய்யப்போகிற 12,000 கோடி ரூ முதலீட்டில் 10.000 கோடி ரூ எண்ணூர் – காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், தொழில் பூங்காக்கள் அமைத்தல், பாதுகாப்புத்துறை முதலீடுகள் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும் எனவும் மீதி 2000 கோடி நகரத்தில் எரிவாயு வினியோகம் செய்வதற்குச் செலவிடப்படும் எனவும் எனவும் அறிவித்துள்ளார்.
“இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரிய ஒளியிலிருந்து 640 மெகாவாட் உற்பத்தி செய்யக் கூடிய மின் நிலையம் ஒன்றை 4550 கோடி ரூ செலவில் ஆறே மாதத்தில் கட்டினோம். இந்தியாவிலேயே சமச்சீரான பொருளாதாரம் நிலவும் மாநிலமாக தமிழ்நாடுதான் உள்ளது. அதன் மொத்த GDP வருமானத்தில் 45 சதம் பணித்துறை (service sector) மூலம் கிடைக்கிறது என்பது ஒன்றே போதும் தமிழகப் பொருளாதாரத்தின் சிறப்பை உணர. உற்பத்தித்துறையின் (manufacture) பங்கு வெறும் 34 சதம்தான். விவசாய உற்பத்தியின் மூலம் கிடைப்பது 21 சதம்தான். இந்த வகையில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் வலுவாகக் காலூன்ற நினைக்கும் எந்தத் தொழில் துறையும் தமிழ்நாட்டில் தங்களை நிறுவியே ஆக வேண்டும். நாங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?..”
எனச் சொல்லி கரன் அதானி முதலமைச்சரைத் திரும்பிப் பார்த்தபோது அவர் அப்படியே பூரித்துப் போனதைக் கண்டோம்.
தமிழ்நாட்டில் அதானி குழுமம் கால் பத்தித்து ஏழாண்டுகள் ஆகிவிட்டன. 2018ல் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அது L & T நிறுவனத்திடமிருந்து வெறும் 1950 கோடிக்கு வாங்கியது. தற்போது அதன் திறன் 26.5 மில்லியன் டன் சரக்கைக் (cargo) கையாள்வதாகத்தான் இருந்தது. அதை 320 மில்லியன் டன் அளவு சரக்கைக் கையாளக்கூடியதாக உயர்த்துவதுதான் அவர்களின் நோக்கமாம், மொத்தமாக இதற்கெனச் செலவிடப்போகும் முதலீடு 52,400 கோடி அளவு இருக்குமாம். 6000 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்குமாம்.
இந்த வேலை வாய்ப்பு பற்றிய கதையாடல் மிகப் பெரிய ஏமாற்று. உற்பத்தித் துறையும், விவசாயமும், மீன்பிடித் தொழிலும் அழிந்து கொண்டிருப்பதன் ஊடாக ஏற்படும் வேலை இழப்புகளோடு ஒப்பிடும் போது இந்த ஆறாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிற கதையெல்லாம் அபத்தம்.
இன்னொரு பக்கம் ஏற்கனவே டெல்டா பகுதி மக்களிடம் ரொம்பவும் “நல்ல” பெயர் சம்பாதித்துள்ள பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பொரேஷனும் மேலும் 16,641 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்யப் போகிறார்களாம்.. பெட்ரோல் பங்குகளை அமைத்து சில்லறைப் பெட்ரோல் வினியோகத்திலும் அவர்கள் இறங்கப் போகிறார்களாம். ஏற்கனவே உள்ள தங்களின் எண்ணை உறிஞ்சும் திறனை மேம்படுத்துவதோடு இரண்டு எரிவாயு நிரப்பும் நிலையங்களையும் அமைக்கப் போகிறார்களாம். ஒரு 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும் எனவும் சொல்லி வைக்கிறார்கள்,
இந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் என்னமாதிரி இருக்கும்? தங்கள் நிலத்தையும், நிலத்தின் வளத்தையும் இழந்த மக்களுக்கும், பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வந்த கடல் தொழிலாளிகளுக்கும் இவர்களின் பெட்ரோல் பங்குகளுக்கு வரும் வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பும் வேலை தரப் போகிறார்களா? தெரியவில்லை.
இந்த அதானி நிறுவனம் இவ்வாறு இந்தியாவிலேயே பெரிய துறைமுகங்களில் ஒன்றாக எண்ணூரில் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் ஒரு வகையில்மிக நெருக்கமாக இணைந்த ஒன்றுதான் இப்போது எடப்பாடி அரசு மிகத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்துள்ள சேலம் – சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டமும் கூட. இதில் நடக்கும் தில்லுமுல்லுகளும் மிகவும் ஆபத்தானவை.
ஆறே நாட்களில் எல்லா விதிகளையும் மீறி இந்த சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மோடி அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட வரலாறு ஒரு துப்பறியும் கதையைக் காட்டிலும் சுவாரசியமான ஒன்று. அந்த பாரத்மாலா 2016 முதல் மோடி அரசால் முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும் அந்த அறிவிப்பில் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை இருக்க வில்லை. இந்தியா முழுவதையும் பிரும்மாண்டமான நவீன வடிவிலான சாலைகளை அமைத்துச் சுற்றி வளைக்கும் பாரத்மாலா திட்டத்தில் உள்ள வேறு சில மெகா சாலைகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய எந்தக் கடிதத்திலும் அவர் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப் பற்றிப் பேசவில்லை. எடுத்துக்காட்டாக நவ 23, 2017ல் எழுதப்பட்ட கடிதத்தைச் சொல்லலாம்.பெங்களூர் – மதுரை சாலை பற்றித்தான் அதில் இருந்தது, அக்டோபர் 2017ல் வெளியிடப்பட்ட திட்டப் பட்டியலிலும் அது இடம்பெறவில்லை. நவ 23, 2017ல் எடப்பாடி அரசு திட்டத்தில் சில திருத்தங்கள் வேண்டி மத்திய அரசுக்கு எழுதிக கடிதத்திலும் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை இடம்பெறவில்லை
பிப் 08,2018 அன்று ஆறே நாட்களில் எல்லா விதிகளையும் மீறி எவ்வாறு இந்த சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மோடி அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம். பிரமிக்கத் தக்கவகையில் ஆறே நாட்களில் நடந்து முடிந்த அந்த மின்னல்வேக நடவடிக்கைகள் வருமாறு..
பிப் 19, 2018 அன்று திடீரென Feed Back Infra Pvt Ltd (FBIL) எனும் அமைப்பு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு (NHAI) சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பாக சாலைப் போக்குவரத்தை சர்வே செய்ய அனுமதி கோரி ஒரு கடிதம் அளிக்கிறது. அதன் அதிகாரிகள் தமிழக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். உடன் அதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் உடன் இசைவளிக்கிறது.
பிப் 22, 2018ல் FBIL உம் NHAI உம் ‘விரிவான திட்ட அறிக்கை’யை ( Detailed Project Report- (DPR) ஒன்றை உருவாக்கி ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.
பிப் 25,2018 அன்று இந்த சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை பற்றிய அறிவிப்பை மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியும் தமிழக முதல்வர் எடப்பாடியும் கூட்டாக பிரஸ் மீட் ஒன்று வைத்து அறிவிக்கின்றனர்.
ஒரு 10,000 கோடி ரூபாய்த்திட்டம் இப்படி எல்லா விதிகளையும் மீறி ஆறே நாட்களில் முடிவு செய்யப்பட்டது எப்படி? திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து ஆய்வுகளும் (Standard Procedures for Appraisal and Approvals of Projects) செய்யப்படாமல் இது எவ்வாறு வெளியிடப்பட்டது?
இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் உண்டு. FBIL நிறுவனம் நிதிக் கையாளுகையில் தவறாக நடந்து கொண்டதை ஒட்டி முன்னதாக உலகவங்கியால் ஓராண்டுகாலம் தடை செய்யப்பட்ட (black listed) ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.
இதையெல்லாம் கேட்டால் யாரிடமும் பதிலில்லை. யாராவது கேட்க முயன்றால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். இந்த எட்டு வழிச்சாலையால் நிலத்தை இழக்கும் விவசாயிகளின் குரல்வளை நெறிக்கப்படுவதை நாம் எல்லோரும் அறிவோம்.
இந்தச் சாலை விடயத்தில் ஏன் இந்த அவசரம்?
இதற்கும் அதானியின் எண்ணூர் துறைமுகத் திட்டத்திற்கும் ஏதும் தொடர்புண்டா? நிச்சயமாக உண்டு. சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் முதலான பகுதிகளில் இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. ஹூண்டாய், டயோட்டா, நிசான், ஃபோர்டு, ரெனால்ட், மகிந்த்ரா என முக்கியமான பெரும் கார் தொழிற்சாலைகள் எல்லாம் இங்கு உள்ளன. ஆண்டொன்றுக்கு 1,50,000 கார்கள் இங்கிருருந்து இந்தியாவெங்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை உள்ளது. அதிக வேகத் திறன் சாத்தியமுள்ள சாலைகளும், அவற்றோடு இணைக்கப்பட்ட பெரும் சரக்குக் கப்பல்கள் நிற்கக் கூடிய துறைமுகமும் இன்று அதற்குத் தேவை.
ஏன் இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் குவிகின்றன?
இங்கு குறைந்த கூலிக்குத் தொழிலாளிகள் தம் உழைப்பை விற்கத் தயாராக உள்ளனர். முதலாளிகளுக்குச் சாதகமான தொழிற் சட்டங்கள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பான உற்பத்திகளில் 100 சத வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு இன்று மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான இராணுவ ஆயுத உற்பத்திசாலைகளும் (Defence Industrial Corridor) இங்கு வர உள்ளதாக சென்ற பிப்ரவரி 2018ல் அறிவிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது தவிர திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுதி மலை, வேடியப்பன் மலை மற்றும் சேலத்திலுள்ள கஞ்சமலை ஆகியவற்றில் மிகவும் தரமான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. இவ்ற்றைக் குறிவைத்துள்ள ஜின்டால் போன்ற எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்ல வேகப் பாதைகளும், பெருந்துறைமுகங்களும் இன்று தேவைப்படுகின்றன.
இந்தப் பின்னணியில்தான் இன்று தமிழ்நாட்டைத் தங்களின் சொர்க்க பூமி என கரன் அதானி நாக்கில் நீர் வடியச் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணூரில் கட்டப்படும் இந்தப் பெருந் துறைமுகத்தால் ஏற்பட உள்ள சுற்றுச் சூழல் பாதிப்புகள் மற்று மீன்பிடித் தொழிலின் அழிவு ஆகியவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்பு
எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டத்திலும் உள்ள போராடும் மக்களைச் சந்திக்கும் திட்டத்துடன் சென்ற ஜனவரி 30,31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் எங்கள் குழு முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றோம். கிருஷ்ணகிரி மாவட்டச் சந்திப்பை நண்பர்கள் ஊத்தங்கரையில் ஏற்பாடு செய்திருந்தனர். பேருந்தை விட்டு இறங்கியபோதே அதிர்ச்சி காத்திருந்தது. சந்திப்புக்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுப் பயணிகள் விடுதியில். எங்களுக்குத் தங்க அறையோ, மக்களைச் சந்திக்க வசதியோ அளிக்கக் கூடாது எனக் காவல்துறை தடுத்திருந்தது. அங்குள்ள ஒரு எளிய லாட்ஜில் தங்கினோம். உளவுத் துறையினர் அங்கும் வட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காவல்துறையின் எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளையும் மீறி தனது வீட்டு மாடியில் எங்களை அங்கு வந்த மக்களைச் சந்திக்க அனுமதித்தார். அவரது வீட்டைச் சுற்றிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
அடுத்தநாள் சேலத்திலும் அவ்வாறே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் கூட்டணி அரங்கு காவல்துறை கெடுபிடியால் ரத்து செய்யப்பட்டது. நெடுநாள் தோழரும் போராளியுமான வழக்குரைஞர் அரிபாபு அவர்களின் இல்லத்தில் அன்றைய சந்திப்பு நடந்தது. அவருடைய வீட்டைச் சுற்றியும் உளவுத் துறையினர் நின்றிருந்தனர்.
மூன்றாம் நாள் தருமபுரி மாவட்டச் சந்திப்பை அரூரில் ஏற்பாடு செய்திருந்தோம்.அன்றும் அப்படித்தான் நடக்கும் என்பதை எதிர்பார்த்து நாங்களே தோழர் வேடியப்பன் வீட்டில் சந்திப்பை மாற்றிக் கொண்டோம். அரசியல் கட்சியினர் தவிர முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளூம் வந்திருந்தனர்.
எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராடும் மக்கள் எத்தகைய போலீஸ் கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பாக இந்த அனுபவங்கள் எங்களுக்கு அமைந்தன..
Top of Form