ஏழு பேர் விடுதலைக்கு இடைக்காலத் தடையும் அரசியல் கட்சிகளும்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக அரசு ஆணைக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை வாங்கியுள்ளது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி, இன்று வெளிப்படையாகக் களத்தில் இறங்கி பிரதமரைக் கொன்றவர்களுக்கு இத்தகைய மன்னிப்பு வழங்குவது பயங்கரவாத நடவடிக்கைகள் பெருக வழி வகுக்கும் எனப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைத் தூண்டி பத்திரிகையாளர் சந்திப்பு, வழக்கில் தாங்களும் இணைவோம் என அறிவிப்பு ஆகியவற்றையும் செய்ய வைத்துள்ளனர். பிரச்சினைகளில் வாய் திறவாமல் அமைதி காப்பவர் எனக் கருதப்படும் பிரதமரே, தமிழக அரசின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றுள்ளார். கருணாநிதியின் பார்வையில் இது தமிழக அரசின் திறமைக் குறைவு. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவின் அருண் ஜேட்லியும் தன் மௌனத்தைக் கலைத்து, “இத்தகைய கொடுங் குற்றங்களைச் செய்தவர்களை அடையாள அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்றுள்ளார் ( வைகோ இது குறித்து என்ன சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை). ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலும் இதைத் தவறு என்று சொல்லியுள்ளார்.

இது குறித்துச் சிந்திக்கச் சில விடயங்கள்.

1. உச்ச நீதிமன்றம் தமிழக அரசு ஆணைக்கு இடைக்காலத் தடைதான் விதித்துள்ளதே ஒழிய, தமிழக அரசுக்கு இப்படியான ஒரு ஆணையிட அதிகாரம் இல்லை என இதன் மூலம் தான் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் சில நடைமுறைக் குறைபாடுகள் (procedural lapses) உள்ளதாக அது கருதுவதும், அவை குறித்து விசாரிக்கப்படுவதற்கு ஏதுவாகத் தொடர்புடையவர்கள் இரு வாரங்களுக்குள் மனுக்களை அளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.

2. தமிழக அரசு முடிவில் அப்படி என்ன “நடைமுறைக் குறைபாடுகள் (procedural lapses)” உள்ளன? நமது சட்டத்தில் உள்ள ஒரு மோசமான கூறு ஆயுள் தண்டனை என்பதற்கு முறையான வரையறை இல்லை. பிரிட்டிஷ் கால ‘தீவாந்தர தண்டனை’ என்பது சுதந்திர இந்தியாவில் ஆயுள் தண்டனை ஆக்கப்பட்டது. “ஆயுள் என்றால் அது ஆயுள் (முழுக்க) என்றுதான் பொருள்” என கிருஷ்ண அய்யரே கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. எனினும் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள ஆயுள் கைதிகளையும், சில நேரங்களில் சிறப்புச் சலுகையாக அதை விடக் குறைந்த காலம் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளையும் மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு. அப்படி விடுதலை அளிக்கு முன் ஆலோசனைக் குழு (advisory committee) ஒன்றை அமைத்து அதன் கருத்தைக் கேட்பது வழக்கம். (2010ல் இவ்வாறு கடைசியாக அமைக்கப்பட்ட குழு நளினியின் விடுதலை குறித்து எதிரான ஆலோசனை வழங்கியது. அவர் விடுதலை செய்யப்படவில்லை.) இன்று, தமிழக அரசு அவசரம் காட்டாமல் இந்தக் குறைபாட்டுக்கு வழி இல்லாமல் தனது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். இப்போதும் கூட அதைச் செய்ய இயலும் என்றே கருதுகிறேன்.

3. மத்திய அரசுச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு சுதந்திரமாகத் தீர்மானிக்க இயலாது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் எனச் சில மூத்த வழக்குரைஞர்கள் நேற்று கருத்துத் தெரிவித்திருந்தனர். மாநில அரசின் முடிவை மத்திய அரசு ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது? நான் புரிந்துகொண்டுள்ள வரை மாநில அரசுக்கு தன்னிச்சையாக விடுதலை செய்ய உரிமையுண்டு.

3. பிரதமரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதா? – என்கிற கேள்வியில் சத்து இல்லை. ஏனெனில் அரசனுக்கு ஒரு சட்டம், குடிமக்களுக்கு ஒரு சட்டம், உயர் சாதியினருக்கு ஒருசட்டம், தாழ்ந்த சாதியினருக்கு ஒரு சட்டம் என்கிற காலம் மலை ஏறிவிட்டது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் அத்தகைய வேறுபாடுகள் கிடையாது. தவிரவும் ‘மன்னிப்பு’ என்பதில் எத்தகைய குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்பட்டார், அதில் யார் பாதிக்கப்பட்டர்கள், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. மாறாகத் தண்டிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை, அவர்கள் அனுபவித்த தண்டனை, தண்டனைக் காலத்தில் அவர்களின் நடத்தை, தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பச் சூழல் ஆகியனவே அங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வெறும் சட்ட விதிகளுக்குள் மட்டும் நின்று மன்னிப்பைத் தீர்மானிக்கக் கூடாது என்பதற்காகவும், மன்னிப்பில் பழிவாங்கும் மனநிலை செயல்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும்தான் இந்தியச் சட்டங்களில் காருணையைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திடமிருந்தும், குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் நீக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. (அரசு இந்த உன்னத அதிகாரத்தை அரசியலாக்காமல் இருக்க வேண்டும் என்பது வேறு பிரச்சினை).

4. தவிரவும் ராஜீவ் கொலையில்குற்றச் செயலில் நேரடியாகப் பங்குபெற்றவர்கள், சதி செய்தவர்கள் எல்லோரும் இன்று உயிருடன் இல்லை. ஒரு வேளை அவர்க்ள் யாரும் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று தூக்கையும் ஆயுளையும் எதிர் கொண்டு நிற்பவர்கள் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கலாம். எனவே நேரடிக் குற்றவாளிகள் அகப்படவில்லை என்பதற்காக இத்தகைய கொடுந் தண்டனைக்குரிய குர்றங்களைச் செய்யாதவர்களை அத்தகைய ஆக்கினைக்குள்ளாக்குவது வெறும் பழிவாங்குவதாகவே அமையும் (இது அப்சல் குருவுக்கும் பொருந்தும்). நீதி வழங்கலிலும், அதை நிரைவேற்றலிலும் பழி வாங்கலுக்கு இடமில்லை.

4.இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை, இன்றைய புவி அரசியற் சூழலில், இத்தகைய குற்றங்களில் மன்னிப்புக்கு இடமில்லை என்பது காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படும் இன்னொரு வாதம். மன்னிப்பு வழங்குவதில் இதற்கெல்லாம் இடமில்லை என்பது மேலே விளக்கப்பட்டுள்ளது. தவிரவும் ராஜீவ் கொலையைப் பொருத்தமட்டில், அது ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல எனவும், அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு பழி வாங்கும் செயல்தான் எனவும் நீதி மன்றமே ஒத்துக் கொண்டுள்ளது.

5. இத்தகைய பெருங் குற்றங்கள் மரண தண்டனை. ஆயுள்முழுக்கச் சிறை என்பவற்றால் தண்டிக்கப்ப்படாவிட்டல் இத்தகைய குற்றச் செயல்கள் பெருகும் என்கிற குற்றச்சாட்டுக்கு உலக அளவில் நடைமுறை ஆதாரங்கள் இல்லை என்பது பலமுறை விவாதித்து நிறுவப்பட்டுள்ளது. சில வழக்குகளில் ஆயுள் தண்டனை எனக் கூறி 50 ஆண்டுகள் அல்லது ஏதோ ஒரு கால கெடு குறித்து அதுவரை விடுதலையோ, தண்டனைக் குறைப்போ கூடாது எனத் தீர்ப்பிலேயே குறிப்பிடுவது சில நாடுகளில் வழக்கம். அப்படியான நிபந்தனைகள் ஏதும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடபடவில்லை. தவிரவும் இந்த மூவரைப் பொருத்த மட்டில் மாநில அரசே முடிவெடுத்து விடுதலை செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

இறுதியாக ஒன்று:

இன்று நீதிமன்றத்தின் இடைகாலத் தடைக்குச் சாத்தியமளித்திருக்கும் இந்த procedural lapses ஏன் ஏற்பட்டன? கருணாநிதி கூறியுள்ளது போல ஜெயலலிதா அரசின் திறமைக் குறைவு மட்டும் இதற்குக் காரணமல்ல. கருணை அல்லது மன்னிப்பு அல்லது மரண தண்டனை மற்றும் நீண்டகாலச் சிறைவாசம் அல்லது இவர்கள் எழுவரும் நேரடியாகக் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் அல்ல என்கிற அடிப்படைகளில் ஜெயலலிதா இம்முடிவை எடுக்கவில்லை. அப்படியான உயரிய நோக்கங்கள் அவருக்குக் கிஞ்சித்தும் கிடையாது என்பதற்கு இது தொடர்பாக அவர் கடந்த காலங்களில் பேசி வந்தவை ஒன்றே சான்று.

தடலடியாகச் செய்வோம். மூன்று நாள் அவகாசம் என்றெல்லாம் கூறி மத்திய அரசைச் சீண்டுவோம். இதனால் காரியம் கெட்டாலும் பரவாயில்லை. எப்படியானாலும் நமக்குத்தான் லாபம் என்கிற நோக்கில் அவர் செய்துள்ள அப்பட்டமான அரசியல்தான் இந்த lapses க்குக் காரணம்.

கருணையின்பால் இதை அவர் செய்திருந்தாராயின், உச்ச நீதிமன்றம் இந்த மூவருக்கும் விடுவிக்க அவருக்கு அளிக்க்கப்பட்ட வாய்ப்பச் சற்றே விரித்து ராஜீவ் கொலைக்காகத் தண்டிக்கப்பட்ட மேலும் நால்வரை விடுவிக்க அறிவிப்பு செய்த அவர், இதுபோல தமிழகச் சிறைகளில் நீண்ட ஆண்டுகளாகச் சிறைலிருப்போர் அனைவரும் அடுத்தடுத்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்க மாட்டாரா?

நேற்றைய எனது பதிவொன்றில் நண்பர் சுகுணா திவாகர், தமிழகத்தில் தோன்றிய இந்த மரணதண்டனை எதிர்ப்பு இயக்கமும், அதனால் உருவான மரண தண்டனை எதிர்ப்புணர்வும் இந்த மூவரது மரண தண்டனை எதிர்ப்பு என்பதோடு நின்று போனதே ஒழிய அது ஒட்டு மொத்தமான மரண தண்டனை எதிர்ப்பாக மாறவில்லையே என வருந்தியிருந்தார். ஏன் அப்படி ஆனது? ஜெயலலிதா மட்டுமல்ல, இங்கு 22 ஆண்டுகளாக மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர்கள் எல்லோருமே இதைத் தங்கள் அரசியல் லாபத்திற்காகத்தான் செய்தார்களே ஒழிய யாரும் மரண தண்டனையை அறம் சார்ந்த காரணங்களுக்காக எதிர்க்கவில்லை என்பதுதான்.

எப்படியோ காங்கிரசின் அரக்கத்தனமான பிடிவாதம், அ.தி.மு.க அரசின் கேவலமான அரசியல் ஆகியவற்றுக்கிடையே ஊஞ்சலாடுகிறது இந்த எழுவரின் வாழ்வு.