மகாவித்வான் ரா.இராகவையங்காரின் ஆத்திசூடி உரை – ஒரு சிறு குறிப்பு

மீனா தன்னுடைய புதிய கட்டுரைத் தொகுப்பை அனுப்பியிருந்தார். ‘சித்திரம் பேசேல்’ என்கிற தலைப்பு குறித்து முன்பே கூறியிருந்தார். வித்தியாசமான தலைப்பாக உள்ளதே எனக் கேட்டபோது ‘ஆத்திசூடி’யில் உள்ள ஒரு நீதிமொழி என்று பதில் வந்தது. ஆத்திச்சூடியை நாம் எங்கே முழுவதாய்ப் படித்துள்ளோம், முதல் பத்து அல்லது இருபது நீதி மொழிகளைத்தான் பாடநூற்களில் படித்துள்ளோம். இன்று மீனாவின் நூலில் அத்தலைப்பைப் பார்த்தவுடன், சரி என்ன பின்னணியில் ஔவையார் ‘சித்திரம் பேசேல்’ எனச் சொல்லியிருப்பார் எனப் பார்த்துவிடலாமென ஆத்திசூடியைத் தேடினேன். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்த மகாவித்வான் இராகவையங்காரின் உரை கையில் அகப்பட்டது.

சென்ற நூற்றாண்டின் முக்கிய தமிழறிஞர்களில் ஒருவரான இராகவையங்கார் (1870 – 1946) சேது சமஸ்தான வித்வானாகப் பெயர் பெற்றவர். சமஸ்தானத்திலிருந்து ஆயுட்கால பரியந்தம் ரூபாய் 635 சன்மானமாகப் பெற்று வந்தவர். பாண்டித்துரைத் தேவர் முதலானோரின் முன் முயற்சியால் நான்காம் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டபோது (1901), அதன் பதிப்பு மற்றும் ஆய்வுத் துறைகளின் தலைவராக விளங்கியவர். சங்க நூல்கள் உட்படப் பல அரிய நூற்களைப் பதிப்பித்தவர். ‘தமிழ் வரலாறு’, ‘வஞ்சிமாநகர்’ உள்ளிட்ட பல முக்கிய உரைநடை நூல்களையும் செய்யுள் நூல்களையும் எழுதியவர். அபிஞான சாகுந்தலத்தைத் தமிழில் பெயர்த்தவர். தனது 65வது வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறைக்குப் பொறுப்பேற்று ஆறாண்டுகள் பணிசெய்து ஓய்வு பெற்றவர். சேதுபதி மன்னரின் உதவியோடு விவேகானந்தர் மேனாடுகளுக்குச் சென்றபோது அவருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

இன்னும் அவரது குறைந்தபட்சம் ஆறு நூல்கள் அச்சேறவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. ஆத்திச் சூடி உரைகூட அவரது மறைவுக்குப் பலகாலத்திற்குப் பின் 1985ல் தான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆத்திச்சூடி உரையில் அவரது பரந்துபட்ட நூலறிவு வெளிப்படுகிறது. பரிமேலழகரின் திருக்குறள் உரைப் பாணியில் இதை அவர் ஆக்கியுள்ளார். ஒவ்வொரு நீதிமொழிக்கும் அதனளவில் பொருளுரைப்பதோடு நில்லாமல் ஒட்டுமொத்தமாய் ஔவை முன்வைக்கும் அறங்குறித்த ஒரு வாதத்தின் (argument) ஒரு இடைக்கண்ணி என்கிற வகையிலும் முன் பின் மொழிகளுடன் தொடர்புபடுத்திப் பொருளுரைக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. ஆத்திச்சூடியில் 108 நீதிமொழிகள்தான் உண்டு என நாம் அறிந்துள்ளோம். வழக்கிலுங்கூட ‘நூற்றெட்டு அறங்கள்’ என்றே சொல்வதுண்டு. தனது உரைப்பாயிரத்தில் இராகவையங்காரும் அதையே கூறியபோதும் அவரது உரை 109 மொழிகளைக் கொண்டுள்ளது நமக்கு வியப்பளிக்கிறது. ககர வர்க்க வரிசையில் 43ம் மொழியாக ‘கௌவை அகற்று’ எனும் மொழியைத் தன்னிச்சையாக இணைத்துக் கொண்டதற்கு இராகவையங்கார் ஏதும் விளக்கம் அளிக்கவில்லை. பதிப்பித்த சண்முகம் பிள்ளையவர்களுக்கும் காரணங் கூற இயலவில்லை. ‘பழி ஏற்படுத்தும் சொற்களைத் தவிர்க்க’ என்பது இதன் பொருள்.

சுமார் இரண்டு மணி நேரங்கள்தான் அந்நூலைப் புரட்டினேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக மனதூன்றிப் படிக்க வேண்டும்.

‘தையற்சொற் கேளேல்’ என்கிற 63ம் மொழிக்கு இராகவர் அளித்துள்ள விளக்கம் கண்டு ஒருகணம் அதிர்ந்து போனேன். ‘பெண்டாட்டி சொல்லைக் கேளாதே’ என்பதுதான் இதற்கான பாரம்பரிய உரை. மற்ற இரு முக்கிய ஆத்திச்சூடி உரைகாரர்களான ஆறுமுக நாவலரும், ந.மு.வேங்கடசாமி நாட்டாருங்கூட இந்தப் பொருளையே வலியுறுத்தியுள்ளனர். தந்தைவழிச் சமூக ஆணாதிக்கக் கருத்துநிலையை உயர்த்திப் பிடித்து எழுதப்பட்ட இவ்வுரைக்கு ஒரு மாற்றாக எவ்வாறு அயோத்திதாச பண்டிதர் ஒரு மாற்று உரையை எழுதியுள்ளார் என்பதை வியந்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன் (‘உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங்களும்’ என்கிற எனது பெருந்தொகுப்பில் உள்ள ‘தமிழ் நவீனமான கதை’ கட்டுரையைக் காண்க). ‘தையற்சொல் கேளேல்’ என்பதற்கு ‘பிறர் மனத்தைக் குத்தித் தைக்கும் (அதாவது துன்புறுத்தும்) சொற்களுக்குச் செவிகொடேல் என்பது பண்டிதரின் உரை.

மகாவித்வான் இராகவையங்கார் பாரம்பரிய உரைக்கு ஒரு இடமளித்தபோதும் தனக்கே உரித்தான பார்வையுடன் முற்றிலும் வேறுபட்ட ஒரு மாற்று உரையை முன்வைத்துள்ளது என்னை ஒரு கணம் அசத்தியது.

“பெண்டாட்டி சொல்லைக் கேட்டு ஒழுகற்க என்றவாறு” என முதலில் மரபுவழி உரையைத் தந்துவிடுகிறார். பிறகு அதற்கோர் ஆறுதலாக “தையல்பால் (பெண்டாட்டியின் மீது) வைத்த அன்பின் மேலீட்டால் அவளுடைய சொல்லில் குற்றம் தோன்றாது ஒழுகுவான் என்பது கருதி அதனை விலக்கினார்” என்றொரு விளக்கம் சொல்வார். அதாவது பெண்கள் என்றாலே சரியாகக் கருத்துரைக்க மாட்டார்கள் என்பதல்ல, யாரும் தவறு செய்யக் கூடும், அது மனைவியாய் இருக்கும் பட்சத்தில் அன்பின் மிகுதியால் அந்தத் தவறு கண்ணில் படாது போய்விடும் ஆபத்திலிருந்து தப்பிக்கவே ஔவை அவ்வாறு கூறலாயிற்று என்கிற இராகவையங்காரின் விளக்கம் நிச்சயம் மரபுரைகளிலிருந்து ஒரு படி முன்னேற்றமான விளக்கந்தான். தவிரவும் பிந்தைய மொழிவொன்று “மேன்மக்கள் சொற்கேள்” (95) என்பதாக உள்ளதைச் சுட்டிகாட்டி, ‘மேன்மக்கள்’ என்பதில் பால் வேற்றுமை காட்டாமையால் ஒட்டுமொத்தமாய்ப் பெண்கள் சொல்லைக் கேளாதே எனத் தையல் சொல் கேளேலுக்குப் பொருள் கோடக் கூடாது என்று இன்னொரு ஆறுதல் விளக்கமும் அளிப்பார்.

இராகவையங்கார் அத்தோடும் நிறுத்தவில்லை. இதனை அவ்வையின் தொடர் வாதில் ஓர் இடைக்கண்ணியாகப் பாவித்து முற்றிலும் ஒரு மாற்று உரையைத் தந்துவிடுகிறார், ஆத்திச்சூடியில் இதற்கு முந்தைய நீதி மொழி “தேயத்தோடு ஒத்து வாழ்” (62) என்பது. “பல்வேறு வகைப்பட்ட தேயத்தார் பலரோடும் மனமொத்து வாழ்க என்றவாறு” என்பது இதற்கான அவர் உரை. இதையும் கூட, “உன் நாட்டில் வாழும் பலதிறப்பட்ட மக்களுடன் பகையின்றி வாழ்” என்பதுபோல முடித்து விடாமல்,

“ஒத்துவாழ் என்றதனால் தேயத்தார் பல்வேறு வகைப்பட்டு ஒவ்வாதிருத்தல் புலனாயது. ஊழாற் பல்வேறு வகைப்படுதலாவது உயர்சாதி தாழ்சாதி, அறிவு அறிவின்மை, செல்வம் வறுமை, உயர்மதம் தாழ்மதம் இவற்றானும் பிறவாற்றானும் பலதிறப்படுதல்.” என விரித்துரைக்கிறார், சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் ஊழ்வினைப் பயன் என்கிற அளவிலேயே அவர் நின்றுபோனபோதும், இப்படிப் பலதிறப்பட்ட மற்றமைகளோடும் (other) “ஒத்தொழுகாமைக்கண் வாழ்வில்லை” என்கிற அளவிற்கு அவரது பொருள் விளக்கம் விரிவது குறிப்பிடத்தக்கது.

இனி, இதற்கடுத்து அமைந்துள்ள மொழியான “தையற்சொற் கேளேலு”க்குத் திரும்புவோம். இதற்கு மரபுரைகளை மீறி இராகவர் அளிக்கும் விளக்கம் இப்படிச் செல்கிறது:

“மேல் (முந்தைய மொழிவில்) ‘ஒத்துவாழ்’ என்றார். அங்ஙனம் ஒத்துவாழ்தற்குரிய சொல்லையல்லது சேர்த்தலல்லாத சொல்லை யார் வாயினுங் கேளற்க என்றாரெனினும் அமையும். தைத்தல் – சேர்த்தல்; ‘தைஇ’ என்பதனானுணர்க. தையல் சொல் – சேர்த்தல் அல்லாத சொல்”

அதாவது ஒத்துவாழ்தல் குறித்து முன்மொழிவில் சொல்லும் ஔவை அடுத்த மொழிவில் அதற்கான வழியை மொழிகிறார் என்பது இராகவர் கருத்து. அதென்ன? “ஒத்துவாழ்தலுக்கு எதிரான சொல்லைக் கேளாதே” என்பதுதான் அவ்வழி. ‘தையல்’ என்கிற சொல்லுக்குப் பெண் என்கிற பொருள் தவிர (சேர்த்துத்) தைத்தல் என்றொரு பொருளுமுண்டு. எனவே (பலதிறத்தாரும்) சேர்ந்து வாழ்தற்கு எதிரான சொல்லைச் சொல்லாதே என்பதாக இராகவரின் பொருள் அகல்கிறது. இன்றைய அரசியல் மொழியில் இதனை “வெறுப்புப் பேச்சுக்களைத் தவிர்” (Avoid Hate Speeches) எனலாம்.

இப்படியான ஒரு மாற்று விளக்கத்தை ஆறுமுக நாவலர், வேங்கடசாமி நாட்டார் முதலானோர் முயலவில்லை என்பது கவனத்திகுரியது.

ஆத்திசூடியைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது இப்படிப் பல அம்சங்கள் கவனத்திற்பட்டன. 94ம் மொழி, “மெல்லினல்லாள் தோள்சேர்” என்பது. “மென்மையுடைய இற்கிழத்தியாகிய நல்லவள் தோள்களைப் புணர்க என்றவாறு” என இதற்கு இராகவர் உட்பட அனைவரும் பொருளுரைப்பர். 96ம் மொழி, “மைவிழியார் மனையகல்” என்பது. “மை தீட்டிய கண்ணினையடையார்குரிய மனைகளை நெருங்காமற் செல்க என்றவாறு” என்பது பொருள். அதாவது கணிகையர் மனைக்குச் செல்லாதே என இராகவரும் ஏனையோரும் இதற்கு விளக்கம் அளிப்பர்.

இவ்விரு கருத்துக்களையும் சுருங்கச் சொல்வதாயின் ‘மனைவியுடன் இன்பம் அநுபவி, கணிகையரிடமிருந்து விலகு’ என அமையும். ஆனால் இவ்விரு மொழிகளிலுமே ‘மனைவி’ என்றோ ‘கணிகை’ என்றோ வேறுபடுத்தி ஏதும் சொல்லவில்லை. வெறுமே ‘மெல்லினல்லாள்’, ‘மைவிழியார்’ என்றே சொல்லப்படுகிறது. எனில் எப்படி மனைவி என்றும் கணிகை என்றும் வேறுபடுத்திப் பொருள் கோடற்படுகிறது. “மென்மையான நல்லவள்” என மென்மையும் நன்மையும் மனைவிக்குரித்தாக்கப் படுகிறது. ‘மை தீட்டிய விழிகள்’ என்பது அலங்கரித்து நிற்றலைக் குறிக்கிறது. கணிகைக்குரிய பிற ஆடவரை ஈர்க்கும் பண்பு இதன்மீது ஏற்றப்படுகிறது. (“மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை – பரிபாடல்). தவிரவும் இற் கிழத்திகள் (குடும்பப் பெண்கள்) இப்படி அலங்கரித்து நிற்றல் ஆகாது என்றும் பொருளாகிறது.

மைவிழி என்பது கணிகையையே குறிக்கிறது என்பதற்கு இராகவர் வேறு இரு விளக்கங்களையும் சுட்டுகிறார். “கணிகையர்க்கு வைதவ்வியமே இல்லாமை பற்றி ‘மைவிழியார்’ என்றார்” என்பது ஒரு விளக்கம். மற்றது இங்கு மனை என்பது ‘கணிகைக் கிருகமாயிற்று; அல்லது மகளிர்க்குரியதாகாமையின்” என்பது. வேறொன்றுமில்லை. ஒரு மனையை அவ்வீட்டுக்குரிய ஆணை முன்வைத்தே அடையாளப்படுத்த இயலும். மனை மகளிர்க்குரியதன்று. ஒரு மனை, மகளிரால் அடையாளப்படுத்தப் படுகிறதெனில் அது கணிகையர் மனையாகத்தான் இருக்க இயலும்.

ஆகா, மொழி எப்படிக் கலச்சாரத்தால் கட்டமைக்கப் படுகிறது பாருங்கள். “’மெல்லினல்லாள் தோள்சேர்’ மற்றும் ‘மைவிழியார் மனையகல்’ ஆகிய இரு ஔவை மொழிகளையும் நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்து விளக்கங்களின்றிப் பதிப்பித்தால் அதை வாசிக்க நேரும் ஒரு மேற்குலக வாசகி இதை எப்படிப் பொருள்கொள்வாள். அவளால் இரண்டையும் இவ்வாறு வேறுபடுத்திப் பொருள் கொள்ள இயலுமா? மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை, மொழி அப்பாவித்தனமானதல்ல என்பவற்றிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

‘சக்கர நெறிநில்’ (44) என்பது இன்னொரு ஆத்திசூடி மொழி. ‘ஆக்ஞா சக்கரம்’, அதாவது அரசாணையின்படி ஒழுகு என்பது இராகவர் உள்ளிட்டு அனைவரும் அளிக்கும் பொருள். ‘தெய்வ மிகழேல்’ (61) என்பது இன்னொரு மொழி. நாவலரும் நாட்டாரும் ‘தெய்வம்’ என்பதற்கு தெய்வம் என்றே பொருள் கொள்கின்றனர். இராகவர் இதற்கு ‘ஊழுண்மை’ எனப் பொருள் கொள்கிறார். இங்கும் முந்தைய மொழியுடன் தொடர்புபடுத்தி அவர், ‘நன்மை தீமைகளைச் சீர்தூக்கி நீ செய்கிற ஒரு வினை உனக்குத் துன்பந் தருவதாக அமையின் அதற்காக தெய்வத்தை இகழாதே, இது ஊழ்வினைப் பயன் என உணர்’ என்கிற ரீதியில் பொருள் சொல்கிறார். ‘சாஸ்திராப்ரவ்ருத்தி’ என்கிற வைதிக நெறி நின்றே இராகவையங்கார் இதைக் கூறினும், ஊழை வலியுறுத்தும் வகையில் சமண/ ஆசீவகச் சிந்தனை மரபில் வைத்தும் இதைக் காண இயலும். சக்கர நெறிநில், தெய்வம் இகழேல் முதலானவற்றை அடிகொண்டு ஆத்திசூடிக்கு ஒரு அவைதீக உரை எழுத இயலுமா?

‘சித்திரம் பேசேல்’ இல் தொடங்கி எங்கெங்கோ போயாயிற்று. ‘சித்திரம்’ என்பதற்கு ‘மெய்போலத் தோன்றும் பொய்மொழிகள்’ என்றே நாட்டாரும் நாவலரும் உரை பகர்கின்றனர். மீனாவும் தன் நூலுக்கு இந்தப் பொருளிலேயே தலைப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். மகாவித்வான் இராகவையங்கார் வழக்கம்போல முந்தைய மொழிகளுடன் தொடர்புபடுத்தி, சித்திரம் என்பதற்குக் ‘கைவன்மையால் எழுதிக்காட்ட வேண்டிய ஒன்று’ எனச் சற்றே வேறுபட்ட பொருள் கொள்கிறார். ‘சித்திரம் பேசேல்’ என்பதற்கு அவரளிக்கும் பொருள் வருமாறு:

“அச் சான்றோர் முன்னே கைவன்மையால் எழுதிக்காட்ட வேண்டிய சித்திரம் போன்ற தொன்றை வாய்வன்மையாற் பேசற்க என்றவாறு”

இதற்கு முந்தைய மொழி சான்றோரைத் துணைக்கொள்வது குறித்தது. அதற்கான ஒழுக்கங்களில் ஒன்றாகவே சித்திரம் பேசேல் என்கிற அடுத்த மொழி கூறப்படுகிறது என்கிறார் இராகவர். ‘சித்திரம்’. என்பதற்கு இங்கவர் மிகவும் மேன்மையான ஒரு பொருளைக் கொள்கிறார். “சித்திரம் போலச் செயற்கரியதைச் செய்க என்பது நோக்கு. இதனால் இவ்வாசிரியர் (அதாவது ஔவை) சித்திர வினையைப் பெரிதும் மதித்தனர் என்பது உய்த்துணரலாகும்” என்பது இராகவர் கூற்று. செய்து காட்ட வேண்டிய ஒன்றைச் செய்து காட்டுவதே அருமை. செய்து காட்டாமல் வெறுமே சான்றோர் முன்னே வாய்ச் சவடால் காட்டற்க என்பதாகச் சித்திரம் பேசேலுக்கு இராகவையங்கார் பொருள் கொள்கிறார்.

இந்தப் பொருளும் மீனாவின் நூலுக்கு இன்னும் பொருத்தமானதே.

(கவிஞர் இன்குலாப் எழுதி மங்கை குழுவினரால் அரங்கேற்றப்பட்ட ‘ஔவை’ நாடகத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தில் (பாட்டும் கூத்துமாய் மேடை ஏறிய பாட்டினி ஔவை) ஆத்திசூடி குறித்து வேறு சில பார்வைகளை முன்வைத்துள்ளேன். ‘பின் நவீனத்துவம் இலக்கியம் விமர்சனம்” நூற்தொகுப்பில் அதைக் காணலாம்.