எர்டோகானின் துருக்கி: கெஸி பார்க் எழுச்சிஎழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்

(“துருக்கி எழுச்சி எழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்” என்கிற தலைப்பில் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய கடுரை. ஜனாதிபதி ஆட்சிமுறை நோக்கி துருக்கியை இன்று வெற்றிகரமாக நகர்த்தியுள்ளார்  எர்டோகான். ஜனநாயகம் அங்கு குழி தோன்டிப் புதைக்கப்படுகிறது)

erdogan

மே மாத இறுதியில் துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில் உள்ள தக்சீம் சதுக்கத்தை ஒட்டி அமைந்துள்ள கெஸி பூங்காவில் உருவாகி, அடுத்த சில நாட்களில் கிட்டத்தட்ட 60 நகரங்களுக்குப் பரவி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள துருக்கி மக்களின் எழுச்சி ஜனநாயகம் குறித்த சில கேள்விகளை உலகின் முன் எழுப்பியுள்ளது. சற்று யோசித்துப் பார்த்தால் 2010ல் ஏற்பட்ட அரபுலக வசந்தம், 2011ல் ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் ஏற்பட்ட எதிர்ப்புகள், தற்போது துருக்கியில் மட்டுமின்றி பிரேசிலிலும் நடைபெறும் அரசெதிர்ப்புப் போராட்டங்கள், அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் அமர்வு எல்லாமே சோவியத்துக்குப் பிந்திய உலகில், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 21ம் நூற்றாண்டு உலகில் ஜனநாயகம் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்பது குறித்த சில கேள்விகளை உலகின் முன் எழுப்பியுள்ளன என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் உலகம் இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா? எகிப்தின் முபாரக்கும் துனிசியாவின் பென் அலியும் இதைப் புரிந்து கொள்ளாததன் விளைவை உடனடியாக அநுபவிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் மட்டுமல்ல ஜனநாயக ஆளுகையில் அக்கறை உள்ள பலரும் தொடர்ந்து வரும் இந்த எதிர்ப்பலைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்துச் சிந்திக்கவில்லை என்பது இன்று துருக்கியில் உருவாகியுள்ள எழுச்சி குறித்த சில பதிவுகளைப் பார்க்கும்போது விளங்குகிறது. துருக்கிப் பிரதமர் எர்டோகான் இப்போராட்டத்தைத் தனது எதிர்ப்பாளர்களின் சதி எனவும், ‘நன்றிகெட்ட ஒரு சிறுபான்மை’ விளைவிக்கும் குழப்பம் எனவும் கூறிக் கொண்டே கடுமையான ஒடுக்குமுறை மூலம் மக்கள் எழுச்சியை ஒடுக்க முயல்வதை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை. இந்த எழுச்சியை மேற்குலகின் சதி எனவும், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் எர்டோகானைக் கவிழ்க்க மேற்கொள்ளும் முயற்சி எனவும் உலகெங்கிலுமுள்ள பல முஸ்லிம் அறிவுஜீவிகளும் கூட சமூக வலைத்தளங்களில் பதிவதைப் பார்க்கும்போதுதான் நமக்கு இந்த ஆயாசம் ஏற்படுகிறது. ஆகா, ஏதோ ஒரு மையச் சரடை இவர்கள் எல்லோரும் பற்றிக் கொண்டு சிந்திக்கத் தவறுகிறார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

இவர்கள் கெஸி பூங்கா எழுச்சிக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் இரண்டு. முதலாவது, இதை அரபு வசந்தத்துடன் (Arab Spring) ஒப்பிடாதீர்கள் என்பது. அரபு வசந்தம் என்பது நீண்ட காலமாக அதிகாரத்தை ஆக்ரமித்து வைத்திருந்த சர்வாதிகாரிகளுக்கு எதிரானது. அரபுலக மக்கள் இந்தச் சர்வாதிகாரிகளை மட்டுமல்ல, இத்தகைய எதேச்சிகார அமைப்பையே தூக்கி எறிய நடத்திய போராட்டம் அது. எர்டோகான் அப்படியான சர்வாதிகாரி அல்ல. துருக்கி ஒரு அரசியல் சட்ட அடிப்படையிலான ஜனநாயகம் (constitutional democracy). பல கட்சி ஆட்சிமுறை அங்கு பலகாலமாக வெற்றிகரமாகச் செயல்படுகிறது. எர்டோகான் மும்முறை (2002, 2007, 2011) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். ஒவ்வொரு முறையும் அவருக்கு 10.8 மில்லியன், 16.3 மில்லியன், 21.3 மில்லியன் என மக்கள் ஆதரவு கூடித்தான் உள்ளதே  தவிர குறையவில்லை. 2011 தேர்தலில் அவரது கட்சி மொத்த வாக்குகளில் 50 சதத்தைப் பெற்றது. எனவே துருக்கி எழுச்சி ஒரு சர்வாதிகாரியையோ இல்லை ஒரு சர்வாதிகார அமைப்பையோ தூக்கி எறிய நடக்கும் போராட்டமல்ல.

அடுத்ததாக அவர்கள் முன்வைக்கும் வாதம் அதிகாரத்திற்கு வந்த இந்தப் பத்தரை ஆண்டுகளில் எர்டோகான் தனது நாட்டைப் பெரிய அளவில் முன்னேற்றியுள்ளார். துருக்கி இந்தப் பத்தாண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அது மட்டுமல்ல தொடர்ந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்புகளை முடிவுக்குக் கொண்டுவந்து, காரணமான அதிகாரிகளை விசாரணை ஆணையங்களின் முன் நிறுத்தி நாட்டில் அமைதியை மட்டுமல்ல, ஜனநாயக அரசமைப்பையும் நிலைப்படுத்தியவர் அவர்.

அத்தனையும் உண்மை. இவற்றை யாரும் மறுத்துவிட இயலாது. நிச்சயமாக அரபு வசந்தத்திற்கும் கெஸி பூங்கா எழுச்சிக்கும் வித்தியாசம் உண்டு. நகர் மையங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த துருக்கியர்களும் கூட எர்டோகானைப் பதவி இறங்கச் சொல்லியோ, இல்லை இந்த அரசமைப்பை மாற்றச் சொல்லியோ கோரிக்கை எழுப்பவில்லை. அப்படியும் இந்த எதிர்ப்பு எப்படி ஏற்பட்டது? இந்தக் கேள்விக்குத்தான் நாம் எர்டோகான் ஆதரவாளர்களைப் போல மேற்குலகச் சதி, நன்றிகெட்ட ஒரு சிறுபான்மை விளைவிக்கும் குழப்பம், அல்லது எர்டோகானின் இஸ்லாமியச் சாய்வு முயற்சியைப் பொறாத மதச்சார்பற்ற ‘பாசிஸ்டுகள்’ மற்றும் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்கிற எளிமைப்படுத்தப்பட்ட பதில்களில் சரணடைய இயலவில்லை. இப்படித்தான் சென்ற நூர்றாண்டு இறுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் வீழ்ச்சியை வெறுமனே மேற்குலக ஏகாபத்தியச் சதி என எளிமைப்படுத்திப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனச் சென்ற பாதையிலேயே சென்று, செக்கு மாடுகளாய் உழன்று, இந்த நூற்றாண்டில் தேய்ந்து அழிந்து கொண்டுள்ளன.

சரி, கெஸி பூங்காவாசிகளின் கோரிக்கைதான் என்ன? அப்படி ஒன்றும் சராசரியாகக் கோரிக்கைகளைக் குறுக்கிவிட இயலாது என்பது இந்த எதிர்ப்பின் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு. துருக்கி நகர் மையங்களில் கூடி நின்றவர்களில் கம்யூனிஸ்டுகளும் உண்டு; துருக்கிக்கே உரித்தான மதச் சார்பற்ற பாரம்பரியத்தில் வந்த ‘செக்யூலரிஸ்டுகளும்’ உண்டு; மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகளும் உண்டு; தொழுகை நேரத்தில் தொழத் தவறாத முஸ்லிம் சோஷலிஸ்டுகளும் உண்டு; ‘முதலாளிய எதிர்ப்பு முஸ்லிம்கள்’ (Anti Capitalist Muslims) என்கிற பதாகைகளை ஏந்திக் கொண்டு நிற்கிறவர்களும் உண்டு; குர்திஷ்  இனப் பிரிவினைப் போராளிகளும் உண்டு.

தொழுகை நேரங்களின்போது தொழக்கூடியவர்களுக்கு மற்றவர்கள் கைகளைக் கோர்த்துச் சுற்றி நின்று பாதுகாப்பளித்த படங்கள் இதழ்களில் வந்தன. பாதுகாப்பு கருதிப் பிள்ளைகளை இரவில் வீட்டுக்கு வந்துவிடுமாறு பெற்றோர்கள் வந்து வற்புறுத்துவதற்குப் பதிலாக அவர்களும் தம் பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டனர். எல்லோருக்கும் இலவச உணவு, கழிப்பிட வசதி எல்லாம் முறையாகச் செய்யப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி (assemblies) பல்வேறு பிரச்சினைகளை விவாதித்தனர்,

மே 27 (2013) அன்று கெஸி பூங்காவில் சில நூறு பேர்கள் கூடியபோது அவர்களின் கோரிக்கை ஒன்றுதான், 200 ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் பூங்கா இருக்கவில்லை. துருக்கியின் பழம் பெருமிதங்களில் ஒன்றன ஆட்டோமான் பேரரசு காலத்திய இராணுவ வீரர் குடியிருப்பு (military barracks) ஒன்றுதான் அங்கு இருந்தது.  சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் துருக்கி மக்களின் தந்தை என அழைக்கப்படும் முஸ்தபா கெமால் அத்தாதுர்கின் சீர்திருத்தங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்டு இன்றைய பசுமை கொழிக்கும் அழகிய கெஸி பூங்கா உருவானது. இஸ்தான்புல்லில் கடைசியாக எஞ்சியுள்ள இந்தப் பசுமைத் திட்டை அழித்துவிட்டு அந்த இடத்தில் பழைய இராணுவக் குடியிருப்பின் வடிவில் ஒரு நவீனமான ஷாப்பிங் மாலையும் அருகே ஒரு மசூதியையும் உருவாக்குவது எர்டோகானின் சமீபத்திய திட்டங்களில் ஒன்று. அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றுதான் தொடங்கியது இந்தத் துருக்கி எழுச்சி.

எர்டோகானின் இந்தப் பத்தரையாண்டு ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்பவர்கள், அவரைத் ‘தொடக்ககால’ எர்டோகான் எனவும் ‘பிந்தைய’ எர்டோகான் எனவும் பிரித்து அணுகுகின்றனர். இப்போது அவர் தன்னை அத்தாதுர்க்கைப் போன்ற அல்லது அத்தாதுர்க்கையும் தாண்டிய செல்வாக்குமிக்க துருக்கியத் தலைவராக நிலை நிறுத்திக்கொள்வதில் தன் கவனத்தை அதிகம் செலவிடுகிறார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் அத்தாதுர்க்கும் எர்டோகானுமே மிகப் பெரிய துருக்கியத் தலைவர்களாக உருப் பெற்றவர்கள் என்பதில் அய்யமில்லை. ருஷியத் தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்கை உருவாக்கிய பீட்டர் மன்னனைப் போல, துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லை இன்று எர்டோகான் நிர்மாணிக்க விரும்புகிறார். எனினும் அவரது இந்த முடிவைப் பலரும் ரசிக்கவில்லை. அப்படி ரசிக்காதவர்களை வெறும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக மட்டும் சுருக்கிவிட இயலாது. இவர்களில் இயற்கை வளங்களைக் காக்க நினைக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் உண்டு. ‘பிந்தைய’ எர்டோகானின் இதர பல அரசியற் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற  வேறு பலரும் உண்டு,

சமீப காலமாக துருக்கி மக்களின் தந்தை முஸ்தபா கெமாலின் சீர்திருத்தங்கள் பலவற்றைப் பின்னோக்கி நகர்த்தும் முயற்சிகளை எர்டோகான், மக்களின் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக மேற்கொண்டு வருவதை, இது குறித்து ஆய்வு செய்வோர் பட்டியலிடுகின்றனர். அவற்றில் சில:

# இஸ்தான்புல்லை ஒட்டி அமைந்து ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் போஸ்போரஸ் குடா மீது கட்டப்படும் மூன்றாவது பாலத்திற்கு பழைய ஆட்டோமான் பேரரசன் ஒருவனின் பெயரைச் சூட்டினார் எர்டோகான். பல்லாயிரக் கணக்கான அல்லாவிகளைக் (Allaawites) கொடுங்கொலை புரிந்தவன் என்கிற ஒரு வரலாற்றுப் ‘புகழ்’ இம்மன்னனுக்கு உண்டு.  அல்லாவிகள் என்போர் துருக்கியில் பெரும்பான்மையாக உள்ள சன்னி இஸ்லாத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட கோட்பாடுகளையுடைய ஒரு மதப் பிரிவினர். இன்றைய துருக்கியில் சுமார் 15 மில்லியன் பேர் அல்லாவிகள். சுமார் 15 முதல் 20 மில்லியன் பேர் குர்திஷ் இனத்தவர். துருக்கியின் மொத்த மக்கள் தொகை 72 மில்லியன். பெரும்பாலானவர் சன்னி முஸ்லிம்களின் ஹனஃபி மரபில் வந்தோர் எனினும் துருக்கிக்கு ஒரு ‘மதச் சார்பற்ற’ பாரம்பரியமும் உண்டு. குறிப்பாக அத்தாதுர்க் நவீன துருக்கியை ஒரு மதச் சார்பற்ற குடியரசாகக் கட்டமைத்தவர் என்பதும் இவரது சீர்திருத்தங்களைத் தமிழகத்தில் தந்தை பெரியார் பெரிய அளவில் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கன. இப்படித் துருக்கி மக்கள் தொகையில் 20 சதமாக உள்ள அல்லாவிகளால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு மன்னனின் பெயரைத் தன்னிச்சையாக எர்டோகான் அரசு, ஒரு நவீன பொறியியற் சாதனைக்குப் பெயரிடுவது துருக்கியின் பன்மைக் கலாச்சார, மதப் பண்பாட்டிற்கு எதிராக இருந்தது. அது மட்டுமல்ல சுமார் 2.5 மில்லியன் மரங்களை அழித்து இப்பாலம் கட்டப்படுவதும் பலருக்குப் பிடிக்கவில்லை.

# ஓராண்டுக்கு முன் எர்டோகான் அரசு கருச் சிதைவு செய்து கொள்ளும் உரிமையைப் பெண்களிடமிருந்து பறிக்க முயற்சித்தது. ஒவ்வொரு துருக்கிப் பெண்ணும் குறைந்தது மூன்று குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எர்டோகானின் கொள்கைகளில் ஒன்று. இந்தக் கருத்தடைத் தடை முயற்சி என்பது ஏதோ துருக்கி மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல. அதைக் காட்டிலும் எர்டோகான் முன்னிறுத்தும் ‘ஒழுக்கமான இறை அச்சமுள்ள சமூகத்தைக்’ கட்டமைக்கும் திட்டங்களில் ஒன்று இது என்பதையும் கவனிக்க வெண்டும். காதலர்கள் தெருக்களில் கைகோர்த்து நெருக்கமாகச் செல்வது, பொது இடங்களில் தங்கள் அந்நியோன்னியத்தை வெளிப்படுத்திக் கொள்வது முதலானவற்றைக் கண்டிப்பது எர்டோகானுக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று. தனியாக வாழும் பெண்கள் கருத்தரித்து அதை அவர்கள் கலைக்க விரும்பினால், அவர்களைக் கண்காணித்துப் பின் தொடர்வது, அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து எச்சரிப்பது போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.

# எர்டோகான் அரசு தனது நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இணங்க, பொது மக்களால் இதுவரை பல்வேறு பொது வெளிகளாகப் பாவிக்கப்பட்ட இடங்களை அவர்களிடமிருந்து பறித்து ஷாப்பிங் மால்கள், ஆடம்பர ஒட்டல்கள் மற்றும் சொகுசான குடியிருப்புகளாக மாற்றி வருவதை பலரும் ஏற்கவில்லை. எளிமை, சிக்கனம், நேர்மை என்கிற நபிகள் நாயகத்தின் கொள்கைக்கு இது எதிரானது எனக் கருதும் சோஷலிச முஸ்லிம்கள் உட்பட அரசின் இந்த அணுகுமுறையை விரும்பவில்லை. எனினும் எர்டோகான் அரசு இவ்வாறு பொது வெளிகளைத் தனியார் மயமாக்கும் கொள்கையைத் தீவிரமாக அமுல்படுத்தலாயிற்று. இஸ்தான்புல்லில் சுலுக்குலே என்னுமிடத்தில் இருந்த ஏழை எளிய ரோமா மக்களின் 550 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த பாவிப்பு வெளி ஒன்று இவ்வாறு அடுக்குமாடிச் சொகுசுக் குடியிருப்பாக மாற்றப்பட்டது. தர்பலா என்னுமிடத்திலிருந்த குர்திஷ் மக்களின் பகுதி ஒன்றும் இவ்வாறு தனியார்களின் உல்லாசக் குடியிருப்பாக்கப்பட்டது. இன்னும் குறைந்த பட்சம் 50 சொகுசுக் குடியிருப்புக்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

# இரவு பத்து மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பதை எர்டோகான் அரசு தடை செய்ததையும் கூட தங்களின் கலாச்சாரப் பன்மைத்துவத்தின் மீது அரசின் தேவையற்ற குறுக்கீடு என்பதாகவே மக்கள் கருதினர்.

இந்தப் பட்டியலைப் பார்க்கும் நண்பர்கள் பலர், குறிப்பாக அத்தாதுர்கின் மதச் சார்பின்மையிலிருந்து விலகி இஸ்லாமியச் சாய்வு அரசியலை நோக்கி நகர்ந்த எர்டோகானை ஆதரிப்பவர்கள் இரு கேள்விகளை எழுப்புவர். ஒன்று: இதிலென்ன தவறு? மக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், தெருக்களில் ஆபாசமாக ஆண்களும் பெண்களும் நடந்து கொள்ளக் கூடாது, குடித்துச் சீரழியக் கூடாது எனச் சொல்வதெல்லாம் தவறா? கெஸி பார்க்கில் கூடியவர்களைப் பார்த்து எர்டோகான் பீர் குடித்துக் கும்மாளமடிக்கிறார்கள் எனச் சொன்னதைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதாக மட்டும் கருத இயலாது, மேலைக் கலாச்சாரச் சீரழிவுவாதிகளே துருக்கி எழுச்சிக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிகாட்டும் முகமாகவும் சொல்லப்பட்டதுதான் இது.

இரண்டு: பெரும்பான்மையாகச் சன்னி முஸ்லிம்களே உள்ள ஒரு நாட்டில் அம்மதக் கொள்கைகளை அரசு நடைமுறைப் படுத்துவதில் என்ன தவறு?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் சற்று ஆழமாக யோசிக்க வேண்டும். முதலில் ஒவ்வோரு நாட்டுக்கும் அதற்கே உரிய தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. துருக்கி பிற இஸ்லாமிய நாடுகளிலிருந்து சில முக்கிய அம்சங்களில் வேறுபட்டது.  புவியியல் ரீதியாக அது பிற மத்தியதரைக் கடல் இஸ்லாமிய நாடுகளுக்கு அருகாக மட்டுமல்ல, ஐரோப்பிய  நாடுகளுக்கும் அருகாமையில், இரு கண்டங்களியும் பிரிக்கும் எல்லையில் அமைந்த நாடு அது. அய்ரோப்பிய யூனியனில் சேர்வதைத் தன் லட்சியமாகக் கொண்ட, அதற்காகத் தீவிர முயற்சிகளைச் செய்கிற ஒரு நாடு. எட்டு வெவ்வேறு விதமான கலாச்சாரங்களைக் கொண்ட நாடுகளுடன் அது தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. முஸ்லிம் பண்பாடு மட்டுமின்றி ஐரோப்பியப் பண்பாடும் கலந்த ஒரு வகைக் கலப்புப் பண்பாட்டைக் கொண்ட நாடு அது என்பதால்தான் அத்தாதுர்கால் அத்தனை எளிதாக அங்கொரு மதச் சார்பர்ற குடியரசைக் கட்ட இயன்றது.

குடிப் பழக்கம், கருத்தடை உரிமை, ஆண்களும் பெண்களும் சகஜமாக பொது இடங்களில் பழகுவது என்பவற்றில் ஒவ்வோரு நாடும் அதற்கே உரிய கலாச்சாரத் தனித்தன்மையுடன் விளங்குகிறது. அவ்வளவு ஏன் குடிப் பழக்கத்தில் தமிழகக் கலாச்சாரத்திற்கும், தமிழக எல்லைக்குள் அமைந்த, முற்றிலும் தமிழர்களே நிறைந்த புதுச்சேரிக் கலாச்சாரத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டா இல்லையா? தி.மு.க ஆட்சியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டில் மது விலக்கு கொண்டு வரவேண்டும் எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோது, கருணாநிதி, உங்கள் கட்சி செல்வாக்காக உள்ள புதுச்சேரியில் நீங்கள் இதற்காகப் போராடுவீர்களா எனச் சவால் விட்டதையும், ராமதாஸ் அதற்குப் பதில் சொல்லாமல் பம்மியதையும் நினைவு கொள்ள வேண்டும்.

அபடியானால் இது போன்ற நல்ல கொள்கைகளைக் கலாச்சாரத்தின் பெயரால் நாம் கைவிடத்தான் வேண்டுமா? கைவிட வேண்டும் என்பதில்லை. நமது கொள்கைகளை நாம் பிரச்சாரம் செய்யலாம், ஆதரவு திரட்டலாம். அதைப் பெரும்பான்மைக் கருத்தாக மாற்றலாம். அதை எல்லாம் செய்யாமல் ஒரு ஜனநாயக நாட்டில், தாங்கள் பெற்ற வாக்குப் பெரும்பான்மை என்கிற பலத்தில் இப்படி மக்கட் தொகுதிகளின் கலாச்சார உரிமைகளச் சட்டம் கொண்டு வன்முறையாகத் தடுக்க இயலாது என்பதுதான்.

பெரும்பான்மையாக உள்ள மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒரு அரசு பொது விதியாக மாற்றுவது நியாயம் என ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் இந்துத்துவவாதிகளும், இலங்கையில் சிங்கள இனவாதிகள் சொல்வதையும் மற்றவர்கள் ஏற்க வேண்டியதாகிவிடும். இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும் என இந்துத்துவவாதிகளும், இலங்கையில் ஹலால் முத்திரையுடன் பொருட்கள் விற்கலாகாது என பவுத்த இனவாதிகளும் சொல்வதை நாம் எப்படி ஏற்பது?

பெண்கள் முகத்திரை அணிவதற்கு அத்தாதுர்க் காலத்திலிருந்து இருந்து வந்த தடையை எர்டோகான் அரசு நீக்கியது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதை முஸ்லிம்களின் கலாச்சார உரிமை ஒன்றை மீட்டெடுத்த ஒரு நடவடிக்கை என நாம் பாராட்டலாம். ஆனால் சவூதி போல அனைத்துப் பெண்களும் முகத்திரை அணிந்தே வெளியில் வரவேண்டும் என எர்டோகான் அரசு ஒரு வேளை ஒரு ஆணை பிறப்பித்தால், அதை எப்படி ஏற்க இயலும்?

எர்டோகான் அரசிடமிருந்து மக்கள் அந்நியப் பட்டதன் அடிப்படை இப்படித் துருக்கியின் பன்மைக் கலாச்சாரத்தில் கைவைத்ததால் மட்டும் ஏற்படவில்லை. அவரது இதர அரசியல் பொருளாதாரச் செயல்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகித்தன. எர்டோகானின் அரசியல் வாழ்வு கம்யூனிச எதிர்ப்பு இயக்கமொன்றில் (Anti Communist Work Force) பங்கேற்பதுடன் தொடங்குகிறது. பின்னர் அவர் நவ இஸ்லாமிய “நலக் கட்சி”யின் (Neo Islamic Welfare Party) தலைவராகிறார். 1994ல் இஸ்தான்புல் நகர மேயராகிறார். பின்னர் அவரது ,’வெல்ஃபேர்’ கட்சி தடை செய்யபட்டுச் சிறிது காலம் சிறைவாசமும் அநுபவிக்கிறார். வெளியில் வந்து அவரது இன்றைய ஏ.கே.பி (நீதிக்கும் வளர்ச்சிக்குமான கட்சி) கட்சியைத் தொடங்குகிறார். 2002ல் அக்கட்சி ஆட்சியையும் கைப்பற்றுகிறது. இவ்வெற்றியை ஒட்டி அரசில் பங்கேற்பதற்கிருந்த தடை அவருக்கு நீக்கப்படுகிறது. 2003 முதல் அவர் பிரதமராகத் தொடர்கிறார்.

இது மூன்றாவது முறைமட்டுமல்ல இறுதி முறையும் கூட. 2015 வரை அவர் பதவியில் இருக்கலாம். ஆனால் 2015 உடன் பதவியை முடித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. தற்போது குடியரசுத் தலைவராக உள்ள அவரது விசுவாசி அப்துல்லா குல்லைப் பிரதமராக்கி, தான் குடியரசுத் தலைவரானால் என்ன? ரசியாவில் புடினும் மெத்வதேவும் இப்படி மாறி மாறி அதிகாரத்தை அநுபவிக்கவில்லையா? ஆனால் புடினைப் போல, நிறைவேற்று அதிகாரமில்லாத வெறும் குடியரசுத் தலைவராகச் சிறிது காலம் கூட இருக்க எர்டோகான் தயாராக இல்லை. சகல அதிகாரங்களும் குடியரசுத் தலைவரிடம் குடிகொண்டுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறுவது என்கிற அவரது தற்போதைய திட்டம் அவரது முக்கிய ஆதரவுத் தொகுதிகள் பல அவரிடமிருந்து அந்நியமாவதற்கு ஒரு முக்கிய காரணமாகியுள்ளது,

எர்டோகான் பதவி ஏற்பதற்கு முந்தைய காலம் ஏகப்பட்ட இராணுவ ஆட்சி கவிழ்ப்புகள் நிறைந்த ஒன்று, ‘இருண்ட 90’ என அழைக்கப்படும் தொண்ணூறுகள் துருக்கி அரசுக்கும் குர்திஷ் போராளிகளுக்கும் இடையில் போர் நடந்த காலம். சுமார் 40,000 பேர் அதில் கொல்லப்பட்டனர். கடும் அடக்குமுறைகள். பொருளாதாரச் சரிவு ஆகியவற்றால் துன்புற்றிருந்த மக்களுக்கு எர்டோகானின் வருகை வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்தது, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்து, காரணமான நூற்றுக் கணக்கான இராணுவ அதிகாரிகளை விசாரணைக் கமிஷன்கள் முன் நிறுத்தித் தண்டித்தது, குர்திஷ் போராளிகளுடன் போரை நிறுத்தி பேச்சு வார்த்தை தொடங்கியது, இவற்றினூடாக ஜனநாயக ஆளுகையையும் சட்ட ஒழுங்கையும் நிலை நிறுத்தியது ஆகியன இடதுசாரிச் சாய்வுள்ள மத்தியதரத் தாராளவாதிகளின் (Centre Left Liberals) ஆதரவை எர்டோகானுக்கு ஈட்டித் தந்தது. அதே நேரத்தில் அவர் மேற்கொண்ட மேற்கத்தியச் சாய்வுடன் கூடிய நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை (Neo Liberal Economic Policy), மற்றும் அதனூடாகப் பெற்ற உடனடிப் பொருளாதாரப் பலன்கள் ஆகியன வலதுசாரிச் சாய்வுடன் கூடிய மத்தியதரத் தாராளவாதிகளின் (Centre Right Liberals) ஆதரவை ஈட்டித் தந்தன. முக்கிய எதிர்க்கட்சியான சி.எச்.பி (மக்கள் பிரதிநிதிக் கட்சி), குர்திஷ் தொழிலாளர் கட்சி முதலியன எதிரணியில் இருந்தன.

இன்று பெரிதும் பேசப்படும் துருக்கியின் ‘பொருளாதார முன்னேற்றம்’ என்பதன் இன்னொரு பக்கத்தை நாம் காணத் தவறக்கூடாது, பன்னாட்டு நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், கடன்கள் ஆகியவற்றுடன் பிணைந்ததுதான் இந்த முன்னேற்றம். இந்தப் பத்தாண்டுகளில் உற்பத்தியில் உள்நாட்டுப் பங்கு குறைந்து வெளி நாட்டு இறக்குமதி அதிகமானது, வேலை வாய்ப்பைப் பொறுத்தமட்டில் ‘அவுட் சோர்சிங்’ வகையிலான வேலை வாய்ப்புகள்தான் உருவாயின. இன்று சுமார் 1.5 மில்லியன் பேர் அவுட்சோர்சிங் வேலைகளில் உள்ளனர். உள்நாட்டு இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை வீதம் 22 சதம் வரை இருந்தது. இவ்வாறு வேலை இல்லாமையின் விளைவாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய நிறையப் பேர்கள் தயாராக இருந்ததும் அருகில் வளமான எண்ணை வள நாடுகளின் சந்தை இருந்ததும் பெரிய அளவு பொருளாதார வளர்ச்சி இருந்த தோற்றத்தைத் துருக்கிக்கு அளித்த போதும், இது ஒருவகை நோஞ்சான் முதலாளிய வளர்ச்சியாகவே அமைந்தது. பணியிடங்களில் தொழிளாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதிருந்ததன் விளைவாகச் சுமார் 1000 தொழிலாளிகள் தொழிற்சாலை விபத்துகளில் இறந்துள்ளனர் என்கிறார் இந்தத் துறையில் மருத்துவராக இருந்து, இந்தக் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்காக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் அகமட் டெலியாகுலு.

இத்தகைய “பொருளாதார வளர்ச்சி’யினூடாகக் கட்டமைக்கப்பட்ட நுகர்வுக் கலாச்சாரம் மத்திய தர வர்க்கத்தைக் கடனாளியாக்கியது. ஒரு தரவின்படி ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருபவர்களின் எண்ணிக்கை 70 சதம். அரசு தனது பன்னாட்டுக் கடன்களைத் திருப்பித் தந்துவிட்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் பெரிய அளவில் வெளிநாட்டு வங்கிகளின் கடனாளிகள் ஆயின. அரசு நிதியிலிருந்து இவர்களின் கடன்களைத் தீர்க்கும் நிலையும் உருவானது, 2009ல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு துருக்கியை வெகுவாகப் பாதித்தது. 2012ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து துருக்கி இன்னும் மீளவில்லை.

மக்களின் இந்த அதிருப்திகள் அவ்வப்போது போராட்டங்களாக வெளிப்பட்டன. மாணவர் போராட்டம், தொழிலாளர் போராட்டம், நகரப் பொதுவெளிகள் தனியார் மயப்படுத்தப் படுவதை எதிர்த்த நகர உரிமைப் போராட்டங்கள் என எதிர்ப்புகள் ஆங்காங்கு உருவாயின. இஸ்டிக்லால் என்னுமிடத்தில் இருந்த பழைமை வாய்ந்த திரை அரங்கு இடிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நடந்தன. மே தினக் கொண்டாட்டங்கள் கோரிக்கைப் போராட்டங்களாகவே மாறின.  1977ம் ஆண்டு மே தின நிகாழ்ச்சியின் போது நடை பெற்ற ஒரு தாக்குதலில் 36 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை ஒட்டி தக்சீம் சதுக்கத்தில் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் அமைப்புகள் அளித்த அழுத்தத்தின் விளைவாக மீண்டும் 2010 முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டத்திற்கு அணி திரண்டு வந்த தொழிலாளிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடித்தும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் விரட்டப்பட்டனர். இப்படி நிறையச் சொல்லலாம்.

இன்னொரு பக்கம் இராணுவ அதிகாரிகளின் மீதான விசாரணைகள் என்பன கொஞ்சம் கொஞ்சமாக அரசுடன் கருத்து வேறுபடுபவர்கள் அனைவர் மீதான கடும் கண்காணிப்புகளாகவும், கைது நடவடிக்கைகளாகவும் மாறின. கருத்து மாறுபடுபவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பெரிய அளவில் பிரயோகிக்கப்பட்டது. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் மாணவர்கள் மாத்திரம் 771 பேர் சிறைகளில் உள்ளனர். துருக்கி மனித உரிமைக் கழகத்தைச் (Turkish Human Rights Association) சேர்ந்த இஷான் காகர் தற்போது சிறைகளில் நூற்றுக் கணக்கானோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்கிறார். எதிர்க் கட்சியினர், குர்திஷ் போராளிகள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், குர்திஷ் போராளிகளுடன் தொடர்ந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இப்படியான அடக்குமுறைகள், தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகள் ஆகியவற்றின் விளைவாக இடதுசாரிச் சாய்வுடைய மத்திய தரத் தாராளவாதிகளின் ஆதரவு எர்டோகானுக்குக் குறைந்தது. இதனை ஈடுகட்ட எர்டோகன் இரு வழிகளைக் கையாண்டார், ஒரு பக்கம் இறையச்சமுடைய சமூகம் பற்றியச் சொல்லாடல்களும் இஸ்லாமியச் சாய்வுடன் கூடிய நடவடிக்கைகளும் அவருக்கு இதில் துணை புரிந்தன, ஃபெதுல்லான்குலன் என்கிற இஸ்லாமிய அமைப்பு, எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹூட், பலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆகியவற்றுடன் நெருக்கம் காட்டிக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் படை எடுப்பின்போது எர்டோகான் அமெரிக்காவுடன் நின்றவர் என்பதை நாம் மறந்துவிட இயலாது.

இப்படியான இஸ்லாமியச் சாய்வு ஒரளவு அவருக்குப் பயனளித்தது என்றே சொல்ல வேண்டும். பொருளாதாரத் தாராளவாதத்தால் பயன்பெற்ற  தொழிலதிபர்களான மேற்தட்டு முஸ்லிம்களின் ஆதரவை இது எர்டோகனுக்கு ஈட்டித் தந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த இஸ்லாமியச் சாய்வு வலதுசாரி மத்தியதர தாராளவாதிகளை அவரிடமிருந்து விலக்கியது.

தனது ஆதரவுத் தொகுதியை விரிவாக்கிக் கொள்வதற்காக எர்டோகன் மேற்கொண்ட இன்னொரு யுத்தி இன்னும் ஆபத்தானது. வழக்கமாக இனவாதிகள் அல்லது மதவாதிகள் தமது ஆதரவுத் தொகுதியை உச்சபட்சமாக ஆக்கிக் கொள்வதற்கு சமூகத்தை, இந்து / முஸ்லிம் அல்லது சிங்களர் / தமிழர் என இரு துருவங்களாகக் குவிப்பார்கள் (polarisation) அல்லவா அதே யுத்தியை எர்டோகான் தன் சொல்லாடல்களாக்கினார். மதச்சார்பற்றோர் / இறை அச்சமுடையோர் என்கிற முரணைக் கட்டமைத்து அரசியலாக்கினார். அதே போல அவரது பிரதான அரசியல் எதிரியான சி.எச்.பி கட்சியின் ஆதரவாளர்களை “வெள்ளைத் துருக்கியர்கள்” எனப் பெயரிட்டு, அவர்களே துருக்கிச் சமூகத்தின் மைய நிலையில் (core)  உள்ள ஆதிக்கச் சக்திகள் எனவும் விளிம்பிலுள்ள சாதாரண மக்களை அவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும், தான் அந்தச் சாதாரண மக்களுக்காக நிற்பவர் எனவும் சொல்லாடினார். இப்படி விளிம்பு / மையம்,  மதச்சார்பற்ற ‘பாசிஸ்டுகள்’ / இறையச்சமுடைய (pious) ‘ஒழுக்கமானோர்’ முதலான சொல்லாடல்கள் அவராலும் அவரது கட்சியினராலும் மிகத் தாராளாமாகப் பயன்படுத்தப்பட்டன

தனது ஒரு குரலைத் தவிர வேறெந்தக் குரலுக்கும் நாட்டில் இடமில்லை என்பதுதான் ‘பிந்தைய’ எர்டோகனின் அணுகல் முறையாக இருந்தது. கெஸி பூங்காவை அழித்துவிட்டு அங்கே ஷாப்பிங் மால் கட்டக்கூடாது என்கிற குரல் வந்தவுடன், “நாங்கள் அதைத் தீர்மானித்து விட்டோம். அதைக் கட்டியே தீருவோம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்பதுதான் எர்டோகானின் எதிர்வினையாக இருந்தது. கெஸி பூங்காவில் கூடியிருந்த எதிர்ப்பாளர்களைப் “பீர் குடித்துக் கும்மாளமடிக்கிறார்கள்” என அவர் கொச்சைப்படுத்தியதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஒரு குறிப்பான இயக்கம் அல்லது கட்சியின் தலைமையிலல்லாமல் இப்படியாகத் தன்னுணர்வின் அடிப்படையில் திரளும் மக்கள் திரள் ஓரிடத்தில் நாட்கணக்கில் அமர்ந்து போராடுகிறபோது யாரேனும் ஒருவர் எங்கேனும் ஒரு பீர் கேனைத் திறந்தால் அதை வைத்து அவர்கள் அனைவரையும் கொச்சைப் படுத்துவது என்கிற யுத்தி ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. அவர் தொடர்ந்து கையாண்டு வநந்துதான். யாரேனும் ஒரு மதச் சார்பற்ற அடையாளத்தினர் ஏதேனும் ஒரு சிறு தவறு இழைத்தால் அதை ஊதிப் பெரிதாக்குவது என்பது அவரது ஏ.கே.பி கட்சி எப்போதும் செய்து வருகிற ஒன்றுதான். கெஸி பூங்காவில் சிதறிக் கிடந்தவை கண்ணீர்ப் புகைக் கேன்கள் தானே தவிர பீர் கேன்கள் அல்ல. இது ஒரு அரசியல் போராட்டம் என்பதை இவ்வாறு துருக்கி முழுவதும் திரண்டிருந்த மக்கள் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தனர். பலதரப்பு மக்களும் பங்கு பெற்ற உரையாடற் களங்களாகவும் அவை மாறின.

கெஸி பார்க்கில் தொடங்கிய அமர்வுகள் அங்காரா, இஸ்மிர் என துருக்கியின் அத்தனை பெரு நகரங்களுக்கும் பரவின. திரண்டிருந்த மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர்.  மிளகுத்தூள் கலந்த காற்றும் தண்ணீரும் அவர்கள் மீது பீச்சியடிக்கப்பட்டன. பெரிய அளவில் கண்ணீர்ப்புகையும் எலாஸ்டிக் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் எந்தக் கணத்திலும் கூடியிருந்த மக்கள் வன்முறையில் இறங்கவில்லை.

ஜூன் 14 அன்று எர்டோகனின் வீட்டில் நடந்த பேச்சு வார்த்தைகளில் நீதிமன்ற ஆணைக்குத் தான் கட்டுப்படுவதாகவும், கெஸி பார்க்கை ஷாப்பிங் மாலாக்குவது குறித்துக் கருத்துக் கணிப்பு நடத்துவதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அப்போது கூட, தான் மேற்கொண்ட அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து ஒப்புக்குக் கூட வருத்தம் தெரிவிக்க அவர் தயாராக இல்லை.

துருக்கி முழுவதிலும் இந்தப் போராட்டத்தில் குறைந்த பட்சம் 5 பேர்கள் இறந்துள்ளனர். இதில் ஒருவர் ஒரு போலீஸ் அதிகாரி. பாலம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். சுமார் ஆறு பேர் கண்னீர்ப் புகைக் கேன்கள் தாக்கிக் கண்களை இழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் பட்டுள்ளனர். சிலர் காணாமற்போயுள்ளனர்.

ஜனநாயகம் என்பது ஒரு ஒற்றை குரலிசை அல்ல, அது ஒரு பல்குரல் இசை. எது குறித்தும் பல கருத்துக்கள் மோதும் களமாகவே அது அமையும். இந்தப் பல்குரல் தன்மையை ஒழித்து, ஒற்றைக் குரலாக்க முனைபவர்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை.

ஜனநாயகம் என்பது தேர்தல் நடத்தி ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதோடு முடிந்துவிடுகிற விஷயமல்ல. ஜனநாயகமுறையில் தேர்வு செய்யப்பட்டோர் எது வேண்டுமானாலும் செய்வதற்கு அது ஒன்றே தகுதியாகிவுடாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விருப்பிற்கு எதையும் செய்துவிட இயலாது என்பதற்குரிய தடைகளை (checks) உள்ளடக்கியதே ஜனநாயகம்.

வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் ஓய்ந்து விடுவதில்லை. தமது பண்பாட்டு உரிமைகளையும் கலாச்சாரத் தனித்துவத்தையும் அவர்கள் எதனுடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்.

தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் உலக நிதி நிறுவனங்களின் வழிகாட்டலை ஏற்று, திட்டமிடுகிற, தேர்வு செய்கிற தமது உரிமைகளைப் பறிப்பதை மக்கள் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் புவியின் மீதும், தம் நகரத்தின் மீதும், இயற்கை வளங்களின்மீதும் தமக்குள்ள உரிமை உலகளாவிய நிதி மூலதனத்தின் பெருகி வரும் அதிகாரத்தால் பறிக்கப்படுவதை மக்கள் எந்நாளும் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என ஆட்சியாளர்கள் கனவு காணக் கூடாது.

21ம் நூற்றாண்டின் தன்னிச்சையான இம் மக்கள் எழுச்சிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஜூலை 15, 2013