கார்ல் மார்க்ஸ் 7 (மக்கள் களம், நவ 2017)
முதலாளித்துவ நெருக்கடி குறித்து மார்க்ஸ் ஏதும் தொகுப்பாக எழுதவில்லை ‘நியூயார்க் ட்ரிப்யூன்’ இதழில் எழுதிய கட்டுரைகள் மற்றும் ‘மூலதனம்’ நூலுக்கான குறிப்புகள் முதலானவற்றிலிருந்துதான் அவரது கருத்தோட்டத்தை நாம் கட்டமைக்க முடிகிறது. 1860 களின் தொடக்கத்தில் அவர் ‘மூலதனம்’ நூல் எழுதத் தொடங்குகிறார். அதன் மூன்றாம் தொகுதியை எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட வேண்டி வந்தது. முதலாளியம் அது தோன்றிய காலத்திலிருந்தே நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளது. நெருக்கடி என்பது முதலாளியத்திலிருந்து பிரிக்க இயலாத ஒன்று. மார்க்சின் காலத்திலேயே 1825, 1836 ஆகிய ஆண்டுகளில் முதலாளியம் பெரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அது குறித்து மார்க்ஸ் விரிவாக எழுதினார்.
முதலாளிய நெருக்கடி குறித்து லியொனார்ட் டி சிஸ்மோன்டி, ஜான் ஸ்டூவர்ட் மில், டேவிட் ரிகார்டோ ஆகியோரும் மார்க்சுக்கு முன்னதாகவே எழுதியுள்ளனர். இவர்கள் எல்லோருமே இந்த நெருக்கடிக்கான மூல காரணமாக “லாபம் குறைந்தபட்சமாகக் குறுகும் முதலாளியப் பண்பை” (Tendency of Profits to a Minimum) குறிப்பிட்ட போதிலும் அதைத் தெளிவான கோட்பாட்டு உருவாக்கமாக மார்க்சியம்தான் முன்வைக்க முடிந்தது. இப்படி லாபம் குறுகி வீழ்வதை முதலாளியத்தின் ஒரு வெறும் “பண்பாக” (tendency) பார்க்காமல் அதுவே முதலாளியத்தின் தவிர்க்க இயலாத “விதி” என்பதை மார்க்சியம்தான் சுட்டிக் காட்டியது. எனினும் மார்க்ஸ் – எங்கல்ஸ்சுக்குப் பின் வந்த மார்க்சியர்கள் எல்லோரும் இதை சரியாகப் புரிந்து உள்வாங்கி விளக்கமளித்தனர் எனச் சொல்ல இயலாது. மார்க்ஸ் இது குறித்துத் தொகுப்பாக எதையும் சொல்லிச் செல்லாததால் இப்படி லாபம் என்பது குறைந்தபட்சமாகச் சிறுத்து ஒரு நெருக்கடியை உருவாக்குவதற்கான நிலையை ஏதேனும் ஒரு ஒற்றைக் காரணத்தோடு (monocausal) இணைக்கும் தவறைப் பலரும் செய்தனர். எடுவர்ட் பெர்ன்ஸ்டெய்ன், ருடால்ஃப் ஹில்பெர்டிங் ஆகியோர் இந்த மார்க்சியக் கோட்பாடு எல்லாக் காலகட்டத்துக்கும் பொருந்தாது எனக் கூடக் கூறினர்.
லாபம் இப்படிக் குறைந்தபட்சமாக வீழ்வதற்கு, 1.தொழிலாளிகள் மீதான சுரண்டலை அதிகபட்சமாக ஆக்குவது 2.கூலியின் மதிப்பு வீழ்ச்சி அடைவது 3.எந்திர உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் ஊடாக மாறாத முலதனத்தை (எந்திரங்கள் மற்றும் அதன் தேய்மானச் செலவுகள்) குறைத்தல் 4. அளவுக்கதிக உற்பத்தியின் (over production) விளைவாகத் தொழிலாளிகள், சொகுசுப் பொருட்களின் உற்பத்தி என்பது போன்ற பின் தங்கிய தொழிற்துறைகளுக்குத் தள்ளப்படுதல் 5.அயல்நாட்டு வணிகத்தின் ஊடாக அதிக லாபம் தரும் தொழில்களை நோக்கி உற்பத்தி நகர்தல் 6. வட்டி மூலம் லாபம் தரும் மூலதனம் (stock capital) மிகுதியாதலின் ஊடாக விற்றுவரவின் (returns) வீதம் குறைதல் எனப் பல காரணங்கள் உண்டு.
இந்தப் பல காரணங்களில் ஆட்டோ பாயர், ஹில்ஃபெர்டிங், புகாரின் போன்றோர் தேவைக்கதிக உற்பத்தி என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டும் முதன்மைப் படுத்தினர். ரோசா லக்சம்பர்க், பால் ஸ்வீசி முதலானோர் வேலை இழப்பு, குறைந்த ஊதியம் ஆகியவற்றால் நுகர்வோர்களுக்கு வாங்கும் திறன் குறைந்து போவது என்கிற அம்சத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். ஹென்ரிக் க்ராஸ்மன், எர்னெஸ்ட் மான்டல் ஆகியோரே இப்படி ஒற்றை அம்சங்களில் கவனம் குவிப்பதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியை விளக்கிவிட இயலாது. முதலாளியத்தின் அடிப்படை முரண்பாடுகள் அனைத்தும் முதலாளிய நெருக்கடியில் பங்குவகிக்கின்றன என்பதை வலியுறுத்தினர். இந்தக் காரணங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவையாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக அளவுக்கு மீறிய உற்பத்தி என்பது இன்னொரு பக்கம் அளவுக்கு மீறிய மூலதனக் குவிப்பின் விளைவாகவும் உள்ளது. இப்படி ஒன்றோடொன்று இந்தக் காரணிகள் பின்னிக் கிடப்பதால்தான் நெருக்கடிகள் என்பன முதலாளியத்தின் “விதி” ஆகிவிடுகின்றன. முதலாளித்துவம் வளர வளர நெருக்கடிகள் மிகுமே ஒழியக் குறையாது என்றார் மார்க்ஸ். போகப் போக கைத்தொழில்களையும் முதலாளியம் கையகப்படுத்தும். உற்பத்தி மையப்படுத்தப்படுதல் அதிகரிக்கும் தொழிலாளிகள் மேலும் மேலும் அந்நியப்படுவர். தொழில்நுட்ப வளர்ச்சிகளின் ஊடாக மேலும் மேலும் தொழிலாளிகள் வேலை இழப்பர். இது மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிகளை அதிகப்படுத்தவே செய்யும். அதேபோல தொழிலாளிகளின் கூலி முதலான மாறும் மூலதனத்தைக் காட்டிலும்எந்திரங்களின் விலை உள்ளிட்ட மாறாத மூலதனம் கூடுதலாக இருக்கும்போதுதான் லாப வீதம் அதிகமாக இருக்கும் என முன் அத்தியாயத்தில் பார்த்தோம். நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக மாறாத மூலதனத்தின் மதிப்பு (அதாவது எந்தி ரங்களுக்கான செலவு) குறையும்போது லாப விழ்ச்சி ஏற்படுவது முதலாளியத்தின் விதியாகிறது. எனவேதான் முதலாளியம் நெருக்கடிகளிலிருந்து தப்பவே முடியாத நிலை ஏற்படுகிறது.
ஏகாதிபத்தியமும் உலகமயமும்
கார்ல் மார்க்ஸ் முதலாளியத்தின் விதிகளைக் கண்டறிந்தார் எனவும், விளாடிமிர் லெனின் முதலாளியத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்பதை நமக்குச் சொன்னார் எனவும் மார்க்சீயத்தின் அடிப்படைகளை விளக்குவோர் கூறுவர். மார்க்சின் காலத்தில் ஏகாதிபத்தியம் எனச் சொல்லத்தக்க அளவுக்கு முதலாளியம் வளரவில்லை என்பது இதில் தொக்கி நிற்கும் பொருள்.
முதலாளியத்தின் கோரப் பசிக்குச் சொந்த நாட்டுச் சந்தையின் மூலம் அள்ளும் லாபம் மட்டும் போதாது, அதற்கு வெளிநாட்டுச் சந்தைகளும் வேண்டும் என்றார் லெனின். அதற்கென அது மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் அவர் விளக்கினார். வங்கிகளின் ஒருங்கிணைவு, தொழில்களின் ஏகபோகம் (monopoly) முதலியவற்றின் மூலம் “நிதிமூலதனம்” உருவாகிறது. இதன் அடுத்த கட்டமாக பொருள்கள் மட்டுமல்ல, மூலதனமே நாடு விட்டு நாடு ஏற்றுமதி செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் குறை வளர்ச்சி நாடுகளுக்கு இப்படி மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன.. இதன் விளைவாக இனி உலகமே ஏகபோக வணிக நிறுவனங்களாலும் சக்தி வாய்ந்த முதலாளிய நாடுகளாலும் பங்கு பிரித்துக் கொள்ளப்படும் நிலை உருவாகும் என்றார் லெனின். அவரது காலத்திய முதல் உலகப் போரை (1914 -18) அவர் இப்படித்தான் விளக்கினார். கொள்ளை அடிப்பதற்காகவும், நாடுகளைப் பங்கு போட்டுக் கொள்வதற்காகவும் உலக ஆதிக்க சக்திகளுக்கிடையே (great powers) நடக்கும் போர் இது என்றார். இப்படி உலக முதலாளிய மையங்களாக உருவாகும் நாடுகள் தம் இராணுவ பலத்தை மிகுதிப்படுத்திக் கொண்டு பேரரசுகளாக (empires) வெளிப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறு ஏகபோக முதலாளியம் (monopolist capitalism), உலக அளவிலான வணிகப் போட்டி, காலனியம், உழைப்புச் சுரண்டல், இயற்கை வளங்களின் கொள்ளை, புவி அரசியல் மோதல்கள் (geopolitical conflicts) என்பதாக ஒரு புதிய உலகம் உருவாகி வருவதை லெனின் சுட்டிக்காட்டினார். இப்படியான உச்ச கட்டத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டுள்ளோம்.
லெனின் (1870 – 1924) மறைந்து கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகப் போகின்றன. இந்த இடைவெளியில் லெனினே கற்பனை செய்ய இயலாத பல ,மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. லெனினிய அணுகல்முறையைச் சற்றே முன் நகர்த்தி இம்மானுவேல் வாலர்ஸ்டெய்ன், அன்டோனியோ நெக்ரி, மிஷேல் ஹார்ட் ஆகியோர் இன்றைய உலகை விளக்குவதைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.
உலகம் ஒரு கிராமமாமகச் சுருங்கிவிட்டது என இப்போது நாம் சொல்கிறோம். ஆனால் இது ஏதோ கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள் நடந்த ஒரு மாற்றமல்ல. ஒரு நீண்ட வரலாற்றின் இன்றைய பரிமாணமாகவே நாம் இதைக் காண வேண்டும். 1884 ல் கிரீன்விச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் நேரம் ஒழுங்கமைக்கப்பட்டது. 1896-உலக அளவிலான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்; 1901- நோபல் பரிசு நிறுவப்படல்; 1930 – உலக அளவில் வானொலி பரப்பு; 1914-1918- முதல் உலகப் போர்; 1939-45- இரண்டாம் உலகப் போர்; 1945- ஐக்கிய நாடுகள் அவை…. என்பதாகப் பல்வேறு வகைகளில் உலக ஒருங்கிணைப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.
அன்றே இது குறித்து மார்க்சும் எங்கல்சும் குறிப்பிட்டனர்:
“தான் உற்பத்தி செய்கிற பொருள்களுக்கு சந்தை இடைவிடாது வளர வேண்டும் என்பது முதலாளிக்குத் தேவையாக இருக்கிறது. அது அவனை இந்த உலகப் பரப்பு முழுவதும் துரத்தி அடிக்கிறது. முதலாளிகள் உலகச் சந்தையைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த முயற்சி, ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியிலும், நுகர்விலும் ஓர் உலகத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது…. பழைய மாதிரியான வட்டார- தேசிய அளவிலான ஒதுங்குதல், சுய தேவைப் பூர்த்தி என்பவற்றிற்குப் பதிலாக எல்லா அம்சங்களிலும் உலக அளவில் தேசங்களுக்கு இடையே ஒரு பரஸ்பரச் சார்பு ஏற்படுகிறது- பொருள் உற்பத்தியில் மட்டுமல்ல அறிவு உற்பத்தியிலும் கூட..” (மார்க்ஸ் – எங்கல்ஸ், பொதுவுடைமை அறிக்கை, 1848).
லெனினியம் முன்வைத்த “ஏகாதிபத்தியம்” என்கிற கோட்பாட்டிற்கும், வாலர்ஸ்டைன் போன்றோர் முன்வைக்கும் “உலக முதலாளிய அமைப்பு” என்கிற கருத்தாக்கத்திற்கும் இடையில் சில நுண்மையான வேறுபாடுகள் உள்ளன. முதலாளியப் பரிணாம வளர்ச்சியின் தனி ஒரு கட்டத்தின் குணாம்சமாக ஏகாதிபத்தியம் என்பது முந்தைய மார்க்சிய அறிஞர்களால் வரையறுக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளியம் ஏகாதிபத்தியமாக வடிவெடுத்தது என்பது இதன் பொருள். முதலாளியத்தின் உலகளாவிய தன்மையை அதற்குப் பின்பே காண வேண்டும் என்பது இதன் உட்கிடை.
மாறாக முதலாளியம் தோன்றும்போதே உலகளாவிய தன்மையுடையதாக உள்ளது என்பது உலக முதலாளியக் கருத்தாக்கத்தின் பங்களிப்பு. முதலாளியம் முந்தைய உற்பத்தி முறைகளிலிருந்து வேறுபடுகின்ற மையமான புள்ளிகளில் ஒன்று இது. முதலாளியத்தின் இந்த உலகளாவிய செயல்பாடு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் மூலதனத் திரட்டலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடலாதிக்கத்தின் மூலமான கொள்ளைகள் மற்றும் வணிகம் என்பதான வடிவங்களில் முதற்கட்ட மூலதனத் திரட்டலின் உலகளாவிய தன்மை அமைந்தது. இந்தியா போன்ற விளிம்புகளிலிருந்து (periphery) ஐரோப்பா போன்ற மையங்களை (centers) நோக்கி மூலதனத் திரட்சி அமைந்தது. ஆதி மூலதனத் திரட்டல் (primitive capitalist accumulation) குறித்து எழுதும்போது மார்க்ஸ் இதனைக் கீழ்க்கண்டவாறு விளக்குவார்.
“அமெரிக்காவின் கண்டுபிடிப்பும், நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கப்பட்டதும் வளரும் முதலாளிகளுக்குப் புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டன. கிழக்கிந்திய மற்றும் சீனச் சந்தைகள், அமெரிக்கக் குடியேற்றம், குடியேற்ற நாடுகளுடன் வணிகம், பண்டப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு முதலியன கடல் வணிகம், தொழில் ஆகியவற்றில் முன்பு சாத்தியமற்ற பெரு வளர்ச்சிகளுக்கு வித்திட்டன” (கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், பொதுவுடைமை அறிக்கை,1848).
“உற்பத்திப் பொருளுக்கான ஒரு நிரந்தரச் சந்தையைக் குடியேற்றங்கள் ஏற்படுத்தின. இவ்வாறு உருவான சந்தை ஏகபோக மூலதனத் திரட்சிக்குக் காரணமாகியது. வெளிப்படையான கொலை, கொள்ளை, அடிமைகளைக் கைப்பற்றுதல் முதலான கொடூரச் செயல்பாடுகளின் மூலமாக அள்ளிய செல்வங்கள் ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்று மூலதனமாக மாற்றப்பட்டன. இப்படி ஐரோப்பியக் கூலித் தொழிலாளிகளின் மறைமுகமான அடிமைத்தனத்திற்கு அடித்தளமாக குடியேற்ற உலகின் அடிமைத்தனம் பயன்படுத்தப்பட்டது. .. மூலதனம் இவ்வாறு தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு துளையிலிருந்தும் ரத்தமும் அழுக்கும் சொட்டச் சொட்டத்தான் அரங்கில் நுழைந்தது.” (கார்ல் மார்க்ஸ், மூலதனம், 1867)
மார்க்சின் இந்தக் கூற்றை சுமார் எண்பது ஆண்டுகளுக்குப் பின் ஜே.எம்.கீன்ஸ் இப்படி வழிமொழிந்தார்:
“ஸ்பெயினில் சர் ஃப்ரான்சிஸ் ட்ரேக் அடித்து வந்த கொள்ளையே பிரிட்டனின் வெளிநாட்டு முதலீட்டின் அடித்தளமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கொள்ளையின் ஒரு பகுதியைத் தன் வெளிநாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கும், இன்னொரு பகுதியை லெவென்ட் கம்பெனியில் முதலீடு செய்வதற்கும் அரசி எலிசபெத் பயன்படுத்திக் கொண்டாள். இந்த லெவன்ட் கம்பெனி மூலம் கிடைத்த லாபமே கிழக்கிந்தியக் கம்பெனி உருவாவதற்குக் காரணமாகியது. 17, 18ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் கிடைத்த லாபமே இங்கிலாந்தின் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கான முக்கிய அடித்தளமாகியது” (‘பணம் குறித்த ஆய்வு’, 1930).
ஆக முதலாளியத்தின் இந்த இரு பண்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று அதன் உலகளாவிய தன்மை; மற்றது அது தொடர்ந்து சந்திக்கும் நெருக்கடிகள். இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அது அவ்வப்போது “கட்டுமானச் சீர்திருத்தனகளை” (structural adjustments) மேற்கொண்டு தன் வடிவத்தில் உரிய மாற்றங்களை மேற்கொண்டு தன்னைப் புதிய சூழல்களுக்குத் தகவமைத்துக் கொள்கிறது.
உலக முதலாளியத்தின்.அப்படியான சில தகவமைப்பு மாற்றங்களை நாம் இப்படி அடையாளம் காணலாம்:
1.தொடக்க முதலாளியம் (1500 -1640), 2.வணிக முதலாளியம் (1640 – 1750), 3.தொழில் முதலாளியம் (1750- 1870), 4.ஏகபோக முதலாளியம் (1870 -1950), 5.பன்னாட்டு நிறுவன முதலாளியம் (1950 – ).
முதலாளிய மையங்கள் இவ்வாறு தம்மைத் தகவமைத்துக் கொள்வது என்பதன் இன்னொரு பக்கம் அவற்றின் விளிம்புகளாக உள்ள இந்தியா போன்ற நாடுகளிலும் உரிய கட்டுமானச் சீரமைப்புகள் திணிக்கப்படுகின்றன. ‘காட்’ முதலான ஒப்பந்தங்கள், நரசிம்மாராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானச் சீர்திருத்தங்கள் முதலியன இப்படித் திணிக்கப்பட்டவைதான்.
(அடுத்த இதழில் நெக்ரி -ஹார்ட் ஆகியோரின் empire எனும் கருத்தாக்கம் பற்றி)