நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9
(தீராநதி, அக் 2017)
ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய படைக்கப்பட்டுள்ள மணிமேகலை இன்னொரு பக்கம் அது எவ்வாறு முழுமையாக ஒரு பவுத்த மரபில் ஆக்கப்பட்ட படைப்பாக அமைகிறது என்பதைப் பார்த்துக் கொண்டுள்ளோம். மணிமேகலையின் கதை அமைப்பு மிகவும் சிக்கலானது. கோவலன் – மாதவி ஆகியோரின் ஒரே மகளான மணிமேகலை எவ்வாறு ஒரு பவுத்தத் துறவியாக மலர்கிறாள் என்பதை மையக் கருவாகக் கொண்ட கதை அமைப்பு, அத்தோடு ஒரு பதினாறு உட் கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கதைகளின் ஊடாக வாழ்வின் உண்மைகளையும், தத்துவங்களையும் விளக்கும் ஒரு மரபு இங்கு உண்டு. புத்தஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன சில எடுத்துக்காட்டுகள். மகாபாரதத்திலும் நாம் இதைக் காண இயலும். மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் இந்தப் பதினாறு உட்கதைகளும் காப்பியத்தின் மையக் கதை ஓட்டத்திற்குக் குறைவு ஏற்படுத்தாமல் பவுத்த அறங்களை விளக்கும் பாங்கு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
பவுத்தம் அது தோன்றிய காலத்திலிருந்து வைதீகத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எதிர் கொண்டு இயங்க வேண்டியதாக இருந்தது. புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ் மண்ணில் மணிமேகலை உருவானபோது இந்திய அளவில் இந்த விவாதங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. வைதீகத்திற்கு ஒரு வலுவான மாற்றாக எல்லா அம்சங்களிலும் பவுத்தம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த காலம் அது. காஞ்சிபுரம் அந்த வகையில் ஒரு முக்கியமான மையமாக அமைந்தது. பவுத்தம் வைதீகத்தை எதிர்கொண்டு மட்டுமல்ல தனக்குள்ளும் பல விவாதங்களை நிகழ்த்திக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருந்த காலம் அது. இந்தப் பின்னணியில் அமைந்த மணிமேகலை சிக்கலான பவுத்த தத்துவக் கோட்பாடுகளையும் தன் கதை ஓட்டத்தின் ஊடாகவே, காப்பிய நெறிக்கும் அழகுக்கும் சிறிதும் பங்கம் ஏற்படாமல் சொல்லிச் செல்லும் திறன் வியக்கத் தக்க ஒன்று.
மையக் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் பதினாறு உட்கதைகள், பவுத்தத்தின் சில தத்துவக் கோட்பாடுகள் என இந்த முன்றும் இணைந்து பொருந்தி அமையப்பட்ட ஒரு அழகிய ஆபரணமாக மணிமேகலை தமிழ் இலக்கிய மரபில் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த மூன்று கூறுகளும் காப்பிய அழகைச் சிதைக்காமல் முரணின்றிப் பின்னப்பட்டுள்ளதுதான் மணிமேகலைக் காப்பியத்தின் தனிச் சிறப்பு.
இந்தியத் தத்துவ மரபில் ஏதேனும் ஒரு பொதுவான கூறு உண்டெனில் அது ‘கர்ம’க் கோட்பாடுதான். பல்வேறு நுணுக்கமான வேறுபாடுகளுடன் இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் கர்ம வினைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறந்து இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை வலியுறுத்துகின்றன. பிராமண மரபிற்கு எதிராக அமைந்த பவுத்தம், சமணம், ஆஜீவகம் முதலான சிரமண மரபுகளைப் பொருத்த மட்டில் துறவு என்பது இந்தப் போக்கில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தின் இன்னொரு பெயர் ‘மணிமேகலை துறவு’ என்பது நினைவிற்குரியது. கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு இளம் பெண், பிறவியால் தொழிலும், வாழ்வும் நிர்ணயிக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் எவ்வாறு அந்தச் சமூக நியதியை வெல்வதோடு, எதிர்கொள்ளும் எல்லாத் தடைகளையும் கடந்து இறுதி உய்வின் ஒரு முக்கிய படியாகிய துறவு நிலையைச் சென்றடைகிறாள் என்பதைச் சொல்வதுதான் மனிமேகலைக் காப்பியத்தின் அடிப்[படை அமைப்பு.
பிறவிப் பெருங்கடலை அறுக்கும் இறுதி உய்விற்குரிய துறவு நிலை எய்துவதற்கு உரிய பொருத்தமான “காரணி”கள் அத் தகுதிக்குரியோரின் வாழ்வில் அவரவரின் வாழ்வுக்கேற்றவாறு தோன்றி, மலர்ந்து, முதிர்ச்சி அடையும் என்கிறது பவுத்தம். இந்த துறவுக்குரிய ‘காரணி’ என்பதற்கான பவுத்த தத்துவக் கருத்தாக்கம் சமஸ்கிருதம் மற்றும் பாலியில் ‘ஹேது’ எனப்படும். சாத்தனார் இதைத் தமிழ் மரபிற்கேற்ப ‘ஏது’ எனக் குறிப்பார். மணிமேகலைத் துறவுக்குரிய இந்த ஏதுக்கள் தோன்றி மலர்வது குறித்து ஒன்பது குறிப்புக்கள் மணிமேகலைக் காப்பியத்துள் அமைந்துள்ளன. காப்பியக் கதைப் போக்கின் ஊடாக இந்த ஏதுக்கள் எதிர்கொண்டு (எதிர்தல்), மணிமேகலையின் வாழ்வின் ஊடாக அவை நிகழ்ந்து (நிகழ்தல்), படிப்படியாக அவை முற்றிக் (முற்றுதல்) கனிவதைச் சொல்வதுதான் மணிமேகலைக் காப்பியம். துறவுக்குரிய இந்த நற்காரணிகள் மணிமேகலையின் வாழ்வில் எதிர்கொண்டு, மலர்ந்து முற்றுவது எனும் வளர்ச்சிப் போக்கு காப்பியத்தின் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் உட்கதைகள், பவுத்த அடிப்படைத் தத்துவக் கோட்பாடு ஆகிய மூன்றையும் பிசிறின்றி இணைக்கிறது.
வைதீகம் கருமங்களை (அதாவது செயல்களை) “பாவம் X புண்ணியம்” எனப் பகுக்கும். பவுத்தம் கருமங்களை நல்ல நோக்கமுடையவை, கெட்ட நோக்கம் உடையவை என அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டும். நல்ல நோக்கங்களுடன் அமைவன ‘குசல கம்மங்கள்’; ‘கம்மம்’ என்பது ‘கர்மம்’ எனும் வடமொழிச் சொல்லின் பாலி மொழி வடிவம். தீய நோக்கங்களுடன் அமைவன ‘அகுசல கம்மங்கள்’. குசல கம்மங்கள் என்பன கர்ம விளைவுகளிலிருந்து உங்களை விடுவித்து பிறவியற்ற இறுதி விடுதலையை நோக்கி நகர்த்தும். அப்படியான நல் நோக்கத்துடன் கூடிய செயல்களுக்குக் காரணியாக அமையும் நிகழ்வுகள் “குசலமூலம்” எனப்படும். இத்தகைய மூலம் அல்லது காரணி அல்லது நிகழ்வு என்பதே இங்கு ‘ஏது’ எனப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளும் செயல்களும் பேரானந்தத்தை விளைவிப்பவை என்கிறது பவுத்தம்.
மீண்டும் மீண்டும் பிறத்தலுக்குக் காரணமான கர்மிய விளைவுகளை ஏற்படுத்தும் கம்மங்கள் அகுசல கம்மங்கள் எனப்படும். 1.ஆசை (லோபம்), 2.வெறுப்பு அல்லது பகை (தோஷம்), 3.மருள் அல்லது ஐயம் அல்லது தெளிவற்ற நிலை (மோகம்)’ ஆகியவற்றுக்குக் காரணமானவையே அகுசல கம்மங்கள். (பார்க்க: அ.மார்க்ஸ், புத்தம் சரணம், கருப்புப் பிரதிகள், பக். 74, 84). ஆசையின்மை (அலோபம்), வெறுப்பின்மை (அதோஷம்), ஐயமின்மை (அமோகம்) ஆகியவற்றுடன் செயலூக்கமுள்ள ஒரு வாழ்வை எதிர்கொள்வதே இறுதி விடுதலைக்கான வழி. அப்படியான விருப்பபூர்வமான செயலுக்கு (செய்கை அல்லது பாலி மொழியில் ‘சேதனா’) இட்டுச் செல்லும் ஏதுக்களை (காரணமாகும் நிகழ்வுகளை) நோக்கி இட்டுச் செல்பவர்களாக பவுத்த பிக்குவான அறவண அடிகள், மணிமேகலா தெய்வம் முதலானவர்கள் சாத்தனாரின் படைப்பில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.
என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் என்ன நோக்கத்துடன் நமது செய்கைகள் உந்தப்படுகின்றன என்பதற்கும் ஐயமின்மை என்பதனூடாக ஆழ்ந்த புரிதல், அதற்குக் காரணமாகும் கல்வி ஆகியவற்றிற்கும் பவுத்தம் அளிக்கும் கூடுதல் முக்கியம் இங்கே கவனத்துக்குரியது.
புகார் நகரில் பிரும்மாண்டமான ஏற்பாடுகளுடன் கூடிய இந்திரவிழா அறிவிப்போடு காப்பியம் மொட்டவிழ்வதைக் கண்டோம். தீவகச் சாந்தியுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழா எனில் ஆடலும் பாடலும் அதனின்றும் பிரிக்க இயலாதவை. இது உலகெங்கிலும் ஒரு பொது இயல்பு. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்த மட்டில் அனைத்தும் குலமரபாகப் பிரித்து ஒதுக்கப்பட்ட பின்னணியில் கணிகையர் குலத்தில் தோன்றிய அன்றைய புகழ்பெற்ற ஆடல் நாயகியான மாதவியின் நடனத்தை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மாதவி மட்டுமல்ல அவளது அழகிய இளமகள் மணிமேகலையின் ஆட்டமும் இம்முறை விருந்தாக அமையும் என்கிற மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கின்றன. மணிமேகலையோடு மாதவியும் வாராததைக் கண்டு மக்களைக் காட்டிலும் மாதவியின் தாய் சித்திராபதி தணியாத் துன்பம் அடைந்தாள் என்கிறார் சாத்தனார். செவ்வரியோடிய நீண்ட கண்களை உடைய தன் மகளின் உற்ற தோழியாகிய வயந்தமாலையை (வசந்தமாலை) அழைத்து மாதவியின் ஆட்டம் இல்லாமற் போனமைக்காக ஊர்தூற்றும் செய்தியை அவளிடம் சொல்லிவரப் பணிக்கிறாள்.
ஆடிய சாயல் அழகு மிக்க மாதவி வாடிய உடலுடனும் மகளுடனும் இருந்த மலர் மண்டபத்துக்குச் சென்று வயந்தமாலை இந்த ஊரலரை எடுத்துரைக்கிறாள். வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்தையும் சார்ந்த கூத்தும் பாட்டும், தூக்கும் துணிவும் என்கிற ஆடற் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி எனப் பதினைந்து அழகான வரிகளில் மாதவியின் கல்விச் சிறப்பை இங்கு விதந்து முன்வைப்பார் சாத்தனார். குலத்தொழிலில் இத்தகைய வல்லுனளான நீ இப்படி தவக்கோலம் பூண்டு அமர்ந்துள்ளது வெட்கக் கேடு என முடிப்பாள் வயந்தமாலை. ஆம். நமது மரபில் கணிகையாய்ப் பிறந்தோர் அதற்குரிய வாழ்க்கை வாழ்வது வெட்கக்கேடான செயல்லல்ல. யாராயினும் அவர்கள் பிறவித் தொழிலைச் செய்யாதிருத்தலே நாணுடைத்து.
பவுத்தம் மேலோங்கி வளர்ந்து வந்த அந்தக் காலகட்டத்தில், துறவு நிலையும், துறவியரும் பெரிதும் மதிக்கப்பட்ட அக்காலத்தில் கணிகையர் இருவரைத் துறவுக்குரியோராய்ப் படைத்தது மட்டுமின்றி அதிலொருவளை பிறவிப் பெருங்கடகைக் கடக்கும் ஒளிபெற்றவளாய்ப் படைத்திருப்பதுதான் இந்தப் பவுத்தக் காப்பியத்தின் தனித்துவம். இரட்டைக் காப்பியங்களாகத் தமிழ் போற்றும் சிலம்பும் மணியும் இப்படியான எளிய மக்களையும், குற்றம் குறைகளுடையோரையும் காப்பியநாயகர்களாகக் கொள்வதை நாம் கவனத்தில் கொள்ளல் தகும். பவுத்தம் அங்குலிமாலன் போன்ற கொலைக்கஞ்சாத கள்வனுக்கும் புனித நிலை சாத்தியம் எனக் கொண்டாடும் ஒரு மதம்..
“காதற் கணவன் மறைந்தால் அவனது உடலோடு தீப்பாய வேண்டும் அல்லது கைம்மை நோன்பு பூண்டு காலம் கழிக்க வேண்டும். நான் கணவனை இழந்தவள்; கணவனுக்கு நேர்ந்த அநீதியைப் பொறாது தன் முலை திருகி எறிந்து மதுரையை அழலுக்கு இரையாக்கிய மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை. அவள் இந்தத் திருந்தாச் ‘செய்கை’ தீத்தொழிற் படாள் எனப் போய்ச் சொல்” என வயந்தமாலையைத் திருப்பி அனுப்பும் மாதவி, தான் மாதவராம் அறவண அடிகளின் உறைவிடம் சென்று அவரது வழிகாட்டலில் பவுத்த சீலங்கள் ஐந்தையும் ஏற்றுக் கொண்டுள்ளதையும் கூறுவாள்.
தான் ஒருவேளை பத்தினி என்கிற பிறப்பிற்குரியவளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் தந்தையின் பத்தினி என்கிற வகையில் கண்ணகி மணிமேகலையின் தாயாகிறாள். எனில் அவளும் எப்படி இத் தீத்தொழிற்குரியவள் ஆவாள் என்றொரு நியாயத்தையும் மாதவி முன்வைக்கிறாள்.
ஆனால் மறச்செயல்கள் அனைத்தையும் நீத்தவரும் மாசறு கேள்வி ஞானத்திற் சிறந்தவருமான அறவண அடிகளார் இந்தப் பிறவி நியாயங்களை எல்லாம் யோசித்தார் இல்லை. மாசறு மாதவன் தாள் பணிந்து ஐவகைச் சீலங்களையும் ஏற்போர் யார்க்கும் உய்வுண்டு என அவர்களை ஏற்றுக் கொண்டார். ஆடற்கலைக்கு அது பேரிழப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தேர்ந்த பாதை சிறைக்கோட்டங்களை அறக்கோட்டங்கள் ஆக்கப் போகிறது. எத்தனையோ பேர்களின் பசித்துயர் களையப் போகிறது. பிறவியின் பெயரால் அவர்கள் அந்த வாய்ப்புகளை இழந்திருப்பின் அது அவர்களுக்கு மட்டுமா இழப்பு?
மாதவி சொன்னதைக் கேட்டு வயந்தமாலை வந்த வழியே திருப்பிச் சென்றபோது அந்த வனத்தில் மாதவி, மணிமேகலை அவள் தோழி சுதமதி ஆகிய மூவரும் அம் மண்டபத்தில் அமர்ந்து பூசைக்குரிய மாலையைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்தக் கணத்தில்தான் மணிமேகலையின் துறவுக்குரிய அந்த முதல் ஏது நிகழ்ந்தது.
தன் தாய்க்கும் வயந்தமாலைக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைச் செவிமடுத்திருந்த மணிமேகலையின் கண்களிலிருந்து கசிந்த நீர்த் துளிகள் அந்தப் பூக்களில் சிந்தி பூசைக்குரிய அவற்றின் புனிதம் அழிந்தது. அதுவே அந்த முதல் ஏது நிகழக் காரணமாகவும் அமைந்தது. தனது முற்பிறவிகள் சார்ந்த கர்மிய வினைப்பயன்களை அந்தச் சிறுபெண் எதிர்கொள்ளத் தொடங்கினால். அவற்றை அவள் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதைப் பொறுத்து அவளின் எதிர்காலம் அமையப் போகிறது.
“வயந்த மாலைக்கு மாதவி உரைத்த
உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மாமலர் நாற்றம்போன் மணி மேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்…”
என்பார் சாத்தனார். தந்தை மற்றும் இன்னொரு தாயான கண்ணகி ஆகியோரின் சோக முடிவுகள், பெற்ற அன்னை தவக்கோலம் பூண்டது, தன்னையும் அவள் அவ்வழியே திருப்பத் துணிவுகொண்டது முதலான செய்திகள் மணிமேகலை துறவு மேற்கொள்வதற்கான ஏதுவாக அமைந்தது.
மகளின் கண்ணீரைத் துடைத்த மாதவி, பூசைக்குரிய புது மாலை தொடுக்க மீண்டும் உவவனம் சென்று பூக்கொய்துவரக் கோரினாள். தனியே செல்ல வேண்டாம் நானும் போகிறேன் என சுதமதியும் உடன்சென்றாள். ஊர்வழியே நடைபயின்று சென்றுகொண்டிருந்த அவர்களைப் பலரும் கண்ணுறுகின்றனர்.
அப்போது மதம் கொண்ட யானை ஒன்றை யாவரும் வியக்க அடக்கித் தேரில் வருகிறான இளவரசன் உதயகுமாரன். மணிமேகலை மலர்கொய்ய உவவனம் பக்கல் சென்றிருப்பதை அறிந்து அவளைத் தேரில் ஏற்றிக் கொணர்வேன் எனக் கூறி அவளிருக்கும் இடம் நோக்கி தேரைப் பாய்ச்சுகிறான். தேரொலி கேட்டு மருண்ட மணிமேகலை, அவன் தன் மீது மோகம் கொண்டிருப்பதை முன்னரே அறிந்தவள். அஞ்சி பளிக்கறையினுள் புகுந்த அவளை மணிமேகலா தெய்வம் தோன்றிக் காப்பாற்றி, மணிபல்லவத் தீவில் கொண்டு வைக்கிறது. அங்கே அவள் முற்பிறப்பு உணர்த்தப்படுகிறாள். புத்தபீடிகையை வணங்கும் பேறு பெறுகிறாள். கோமுகிப் பொய்கை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை அவளுக்கு அளிக்கிறது. ஆகா, எத்தனை வேகமாக நிகழ்ச்சிகள் நகர்கின்றன. அந்தச் சிறுபெண்தான் அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான அனுபவங்களை எல்லாம் எதிர் கொள்ள நேர்கிறது.
(அடுத்த இதழில் ஏதுக்கள் மலர்ந்து, முதிர்ந்து மணிமேகலை துறவேற்றல்)