இந்தியாவில் தோன்றிய மதமாக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்த மதமானாலும் சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பித்ததில்லை. எதிர்த்து நின்ற பவுத்தம் இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது. இறையியல் அடிப்படையில் சாதி, தீண்டாமை முதலான பிரிவினைகளை ஏற்காத கிறிஸ்தவ மதம் இந்தியாவைப் பொருத்தமட்டுல் இந்த அம்சத்தில் முழுமையாக இந்து மதத்தைப் போலவே செயல்படுகிறது. இதில் ஓரளவு விதிவிலக்கு என்றால் அது இஸ்லாம்தான்.
வரலாறு முழுவதும் இந்தியக் கிறிஸ்தவத்தில் தீண்டாமை இருந்து வந்துள்ளதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் உள்ள சம்பா கோவில்’ எனப்படும் செய்ன்ட் பால்ஸ் ஆலயத்தில் பூசையின்போது தலித் மக்கள் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்துள்ளனர். காரைக்காலிலிருந்து மாற்றலாகி வந்த ஒரு வெள்ளைப் பாதிரியார் இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடியுள்ளார். அக்டோபர் 16, 1745 அன்று தலித் மக்கள் அங்கிருந்த தலைமைக் குருவைச் சந்தித்து முறையிட்டபின் தலித் மக்களை ஒதுக்கிய குறுக்குச் சுவர் இடிக்கப்பட்ட சம்பவத்தை அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் பார்க்கிறோம். ஆதிக்க சாதியினர் சும்மா இருக்கவில்லை. அந்தக் காரைக்கால் சாமியாரிடம் வம்பு செய்துள்ளனர். தாங்கள் இனி பூசைக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் மீண்டும் தலித்கள் தனியே உட்கார வைக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் சாமியார் பிரச்சினையை ஆளுநர் டூப்ளேயிடம் கொண்டு செல்ல அவர் இப்படி ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் கூடி நின்று எதிர்த்தால் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஓரளவு ஜனநாயகம் கடை பிடிக்கப்படும் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் அளவிற்கு நிலைமை மோசமில்லையாயினும் அங்கும் தீண்டாமைப் பிரச்சினைகள் உண்டு. புகழ் பெற்ற தமிழறிஞர் ஜி.யு. போப் தஞ்சையில் பாதிரியாராகப் பணியாற்றியபோது (1851 -58) தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கிறிஸ்தவர்கள் ஆயினர். தங்களைக் ‘காராள மரபினர்’ என அழைத்துக் கொண்ட வெள்ளாளக் கிறிஸ்தவர்களுக்கு ஜி.யு.போப் அவர்கள் இரு தரப்பையும் சமமாக நடத்துவது பிடிக்கவில்லை. ஆதிக்க சாதியினருக்குத் தலைமை தாங்கியவர் “எல்லாம் ஏசுவே, எனக்கு எல்லாம் ஏசுவே..” முதலான இனிய கிறிஸ்தவப் பாடல்களை இசையோடு அமைத்துத்தந்த வேதநாயக சாத்திரியார்தான். இரு தரப்புக்கும் திருவையாறு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. போப்புக்கு எதிராக வேதநாயகர் “போப் அய்யர் உபத்திரா உபத்திரவம்” என்றொரு நூலே எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியில் ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு தாங்காத போப் அவர்கள் இரவோடு இரவாக தன் குடும்பத்தோடு வண்டி ஒன்றில் ஊரை விட்டு அகன்றார். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் வல்லம் வரை அவரது வண்டியின் பின்னே சென்றார்களாம். இறுதிக் காலத்தில் அவர் நீலகிரியில் வாழ்ந்து மறைந்தார்.
இது போன்ற எத்தனையோ நிலழ்ச்சிகள் வரலாற்றில் உண்டு. இந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழியக் குறைந்த பாடில்லை. சுமார் நான்காண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் இறையூரில் இப்படி ஒரு பிரச்சினை. தங்கள் தெருவுக்கும் திருவிழாவின்போது மாதா ஊர்வலம் வர வேண்டும் என தலித் கிறிஸ்தவர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். அந்த ஆண்டில் தலித் மக்களின் வீடுகளை வன்னிய கிறிஸ்தவர்கள் தாக்கி உடைத்தார்கள். போலீஸ் துப்பாகிச் சூட்டில் இரண்டு வன்னியக் கிறிஸ்தவர்கள் இறந்தார்கள். நாங்கள் குழு அமைத்து உண்மை அறியச் சென்ற அன்று இறந்த வன்னியர் வீட்டுக் குடும்பங்களைச் சந்தித்துத் துக்கம் விசாரிக்க சுமார் 10 பாதிரிமார்கள் புதுச்சேரியிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் இறந்து போன வன்னியர் வீடுகளுக்கு மட்டும் சென்றனர். வீடுகள் அழிக்கப்பட்டிருந்த தலித் கிறிஸ்தவர்களை அவர்கள் ஒப்புக்காகக் கூடச் சந்திக்காதைக் கவனித்தோம். அன்றைய நாளிதழில் இந்து முன்னணித் தலைவர் அர்ஜுன் சம்பத், “தீண்டாமைக் கொடுமை ஒழிய கிறிஸ்தவ தலித்களே இந்து மத்திற்கு வாருங்கள்” எனப் பேசி இருந்தது வெளி வந்திருந்தது (இது எப்டி இருக்கு!). நாங்கள் அந்தப் பாதிரியார்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்கள் முழுக்க முழுக்க சாதி உணர்வுடன் கோபமாகப் பதிலளித்தனர். அர்ஜுன் சம்பத்தின் அறிக்கையைக் காட்டி, “ஃபாதர், உங்கள் மதம் அழிந்து விடும் போல இருக்கிறதே கவலை இல்லையா?” எனக் கேட்டபோது அவர்களில் ஒருவர் சொன்னார்: “அது அழிந்தால் அழிஞ்சிட்டுப் போகுது…”. ஆம் அவர்களுக்கு மதமோ இறை நம்பிக்கையோ பெரிதல்ல. சாதிதான் முக்கியம்.
இந்திய தலித் கிறிஸ்தவர்கள் இரண்டு வகைகளில் பாதிக்கப்பட்டவர்கள். இந்து தலித்களுக்கு உள்ள அத்தனை தீண்டாமைகளையும் அவர்கள் அனுபவித்தாக வேண்டும். அதே நேரத்தில் இந்து தலித்களுக்கு உள்ள பட்டியல் சாதி உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. திருச்சபைக்கோ இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. இரட்டைக் கோவில்கள், இரட்டைக் கல்லறைகள் என தலித்கள் இழிவு செய்யப்படுவதை அது எந்நாளும் கண்டுகொண்டதில்லை.
தீண்டாமையின் உறைவிடமாகச் சிவகங்கை மறை மாவட்டம்:
சென்ற மாதம் கிறிஸ்தவத்தின் இந்தச் சாதிக் கொடுமை சிவகங்கை மறைமாவட்டத்தில் ஒரு தலித் உயிரைப் பலிவாங்கிய கதையை இப்போது பார்ப்போம். இராமநாதபுரம் மாவட்டத்துலுள்ள ஓரியூர் எனும் கிராமம் திருவாடனையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் மிகுந்த பக்தியுடன் வணங்கப்படும் அருளானந்தர் திருத்தலம் உள்ளது. கத்தோலிக்க மதத்தால் புனிதராக ஏற்கப்பட்ட அருளானந்தர் (St.John de Brito 1647- 1693) அவரது மதமாற்றப் பணிக்காக மறவர் நாட்டு மன்னன் கிழவன் சேதுபதியால் வெட்டிக் கொல்லப்பட்ட இடம் இது. போர்த்துகீசியரான இவர் பிரேசில் நாட்டு ஆளுநரின் மகன். இளவரசுப் பதவியைத் துறந்து இங்கு வந்து தியாகியான புனிதர் இவர். வேளாங்கன்னி, பூண்டி முதலான கத்தோலிக்கத் தலங்களுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை வந்து போகும் ஆலயங்களில் ஒன்று இது. தான் இரத்தம் சிந்திய இந்த ஓரியூரில் இந்தியக் கிறிஸ்தவத்துடன் இரண்டறக் கலந்து போன சாதீயமும் தீண்டாமையும் தலித் கிறிஸ்தவர்களை ஆண்டாண்டு காலமும் அடிமைப் படுத்தி வைத்திருக்கும் எனப் புனிதர் டி பிரிட்டோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
ஓரியூர் பங்கைச் சேர்ந்த 11 கிராமங்களிலும் தலித் கிறிஸ்தவர்களே நிறைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருத்தலம் அமைந்துள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள சுமார் 180 குடும்பங்களில் சுமார் 150 குடும்பங்கள் தலித் கிறிஸ்தவர்கள். எனினும் ஓரியூரை ஓரங்கமாகக் கொண்ட சிவகங்கை மறைமாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமானோர் உடையார் கிறிஸ்தவர்கள். அடுத்த நிலையில் இருப்போர் தலித் கிறிஸ்தவர்களில் ஒருவரான தேவேந்திர குல வேளாளப் பிரிவினர். பிற தலித் கிறிஸ்தவர்களையும் சேர்த்தால் ஆக மொத்தத்தில் அதிகமாக உள்ளவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்தான். பிற நாடார், வெள்ளாளர். கோனார் முதலான அனைத்துசாதிகளைச் சேர்ந்தோர்களும் அங்கிருந்தபோதும் அவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.
ஒன்றாக இருந்த மதுரை மறைமாவட்டத்திலவெள்ளாளக் கிறிஸ்தவர்களின் சாதி ஆதிக்கம் இருந்தது என எழுந்த எதிர்ப்பின் விளைவாகப் புதிதாக உருவாக்கப்பட்ட சிவகங்கை மறைமாவட்டம் உடையார் கிறிஸ்தவர்களின் ஆதிக்க பூமியாகியது. திருச்சபையிலும் அவர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. வெளிப்படையாகத் தீண்டாமையும் பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டது. இங்குள்ள சுமார் 125 மறை மாவட்டப் பள்ளிகளில் சுமார் 960 பேர்கள் பணி செய்கின்றனர். இதில் 80 சதம் பேர் உடையார் கிறிஸ்தவர்கள். கிட்டத்தட்ட சம அளவில் உள்ள தலித் கிறிஸ்தவர்களின் பங்கு வெறும் 10 முதல் 15 சதம் கூட இல்லை.
ஆர்.எஸ்.மங்கலம் எட்டியத்திடல், ஆண்டாவூரணி, வளியன்வயல், சுக்குராபுரம், முதலான ஊர்களில் உயர்சாதியினருக்கும் தலித்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. உயர் சாதியினர் வசிக்கும் பகுதிகளில்தான் மறைமாவட்டப் பள்ளிகள், அழகான விசாலமான ஆலயம், மருத்துவ மனை, கன்னியர் மடம் முதலிய வசதிகள் செய்யப்படுவதும் (எ.கா சவேரியார் பட்டினம்), தலித் பகுதிகளில் இந்த வசதிகள் எதுவும் இல்லாததோடு ஆலயமும் கூட சிறுத்துக் குறுகலாக இருப்பதும் கண்கூடு. காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள சூசையப்பர் பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சமுதாயக் கூடத்திற்கு சாதிப் பெயர் இடப்பட்டுள்ளது.
சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள மொத்த குருக்களின் எண்ணிக்கை 157. இதில் 89 பேர் உடையார்கள், 32 வெள்ளாளர்கள், 12 நாடார்கள், 4 கள்ளர், 9 பறையர், 2 கடையர். இதில் இப்பகுதியில்இரண்டாவது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் ஒருவர் கூட இல்லை.
இப்படி நிறையச் சொல்லலாம். இப்பகுதியில் உள்ள தலித் மாணவர்கள் குருத்துவக் கல்லூரிகளில் சென்று படிக்கும்போது, அவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி குரு பட்டம் மறுக்கப்படுகிற குற்றச்சாட்டுகளும் இங்குண்டு. மைக்கேல்ராஜ் என்பவர் முறையாகப் படிப்பை முடித்த பின்னும் கூட மற்றொருவர் செய்த ஒரு குற்றத்தை இவர் மீது சுமத்தி, இவருக்கு இன்று வரை குருபட்டம் அளிக்கவில்லை. இத்தனைக்கும் ரெக்ஸ்டன் என்பவர் தானே அதைச் செய்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் இது நடந்துள்ளது. 18 தலித்களுக்கு இவ்வாறு குரு பட்டம் மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிரது.
இதுதவிர இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் புகார் அளிப்பது,, மறைமாவட்டக் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை உயர் சாதியினருக்கே கொடுப்பது, ஆலயத் திருவிழாக்களில் கொடி சுமந்து செல்வது போன்ற மரியாதைக்குரிய பணிகளை அடித்தளப் பிரிவினருக்கு அளிப்பதில் பிரச்சினை செய்வது, அடித்தள மக்கள் வசிக்கும் ஓரியூர் போன்ற திருத்தலங்களின் முக்கிய மத நிகழ்வுகளான மறை மாவட்ட திருயாத்திரை முதலானவற்றை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்றுவது முதலான பல வடிவங்களில் இந்தத் தீண்டாமைகளை திருச்சபையும் அதில் தலைமை ஏற்றுள்ள உயர்சாதிப் பாதிரிமார்களும் செய்து வருகின்றனர்.
சென்ற ஆண்டில் அப்படித்தான் தியாகி இம்மானுவல் பேரவைத் தலைவர் சந்திரபோஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை என்னைச் சந்திக்க அனுப்பியிருந்தார். இப்படியான கொடுமைகளை எதிர்த்துப் சிவகங்கை மறை மாவட்டம் மேல அரும்பூர் கிராமத்தலைவர் பெர்னர் தூஸ்பால் என்பவர் பங்கு சாமியார் அருட் பணி. ஆரோக்கியசாமியிடம் முறையிடச் சென்றபோது ஒரு வாக்குவாதம் நடந்துள்ளது. பாதிரியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தூஸ்பாலைக் கைது செய்ததோடு அவர் மீது குண்டர் சட்டத்தையும் பிரயோகித்தது (ஆணை எண் 7 / குண்டர் / 2104). இந்தக் கொடுமைகளை விளக்கி நான் அவ்ர்களுக்காக ஒரு மனு தயாரித்துக் கொடுத்தேன். குண்டர் சட்ட மேல் முறையீட்டு ஆயம் பின்னர் அவரை விடுதலை செய்தது.
ஓரியூர் சார்லஸ் மரணம்:
தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த ஓரியூர் தலித் கிறிஸ்தவர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2012 ஜூலையில் சிவகங்கை மறைமாவட்ட வெள்ளி விழாவின்போது முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர், விழாநிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் உட்பட 7 ஆயர்களும் இதைக் கண்டுகொள்ளாமல் திருப்பலி நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் முழக்கப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தலித் கிறிஸ்தவரான ஓரியூர் திட்டையைச் சேர்ந்த அருள்வேதமாணிக்கம் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயர் சூசைமாணிக்கம் உட்பட ஆறு பேர்கள் மீது வேதமாணிக்கம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை.
பின்னர் பங்குப் பேரவை ஒன்றை உருவாக்கி அதன் ஒப்புதலுடனேயே ஆலயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எனினும் வழக்கமாமக்டோபர் மாதத்தில் ஓரியூரில் தொடங்கும் மறை மாவட்ட திருயாத்திரை 2013ம் ஆண்டு காரை ரஸ்தாவிலிருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. பங்குப் பேரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆயர் சூசைமணிக்கம் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவைப் பங்குப் பேரவை எதிர்த்தது. இப்படிப் பிரச்சினைகள் தொடர்ந்தன. 2014 ஆகஸ்ட் 27 அன்று தொண்டி காவல் ஆய்வாளர் முன்னிலையில் பங்குப் பேரவை உறுப்பினர்களும் ஓரியூர் ஏசுசபை நிர்வாகமும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினர். ஓரியூர் திருத்தல நடவடிக்கைகள், திருவிழாக்கள் முதலியவற்றை இனி பங்குப் பேரவையுடன் ஆலய நிர்வாகம் கலந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஓரியூர் திருவிழா நடத்துவது பர்றி ஜூன் 14 ஆகஸ்ட் 9 தேதிகளில் பங்குத் தந்தையும் பேரவை உறுப்பினர்களும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன்படி ஆலயத் திருவிழாக் கொடியேற்ற நிகழ்வின் போது பங்குப் பேரவைச் செயலாளர் ஆரோக்கிய சாமியும், மூத்த தலைவர் சோழகன்பேட்டை அருளானந்தமும் கொடியைத் தூக்கி வநது அளிப்பது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. .
எனினும் இவ்வாறு பேரவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முறியடிப்பதென மத நிர்வாகம் முடிவெடுத்துச் தலித் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையைச் சிதைக்க முனைந்தது.. செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக கொடியேற்றத்திற்கு முந்திய நாளன்று ஒரு அறிவிப்பை ஆலய நிர்வாகம் வெளியிட்டது.ஆரோக்கியசாமி மற்றும் அருளானந்தம் இருவர் தவிர மூன்றாவதாக ஓரியூர் கிராமத் தலைவர் அருள்பத்திநாதன் என்பவரும் கொடியைச் சுமந்து வருவார் என்று அதில் சொல்லப்படிருந்தது. அருள்பத்திநாதனும் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றபோதிலும் அவர் பங்குப் பேரவையுடன் இணைந்து செயல்பட்டவர் இல்லை. மாறாக அவர் மறைமாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கமானவர். அவரை இப்படி பங்குப் பேரவைக்கு எதிராக நிறுத்தித் தலித் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்பட்டது.. கொடியேற்றத்தில் அருள்பத்திநாதன் கொடி தூக்கி வந்தால் நாங்கள் கொடி தூக்க மாட்டோம் என சார்லஸ் தலைமையில் இருந்த பங்குப் பேரவை மறுத்தது. ஆக 29, கொடி ஏற்றும் நாளன்று கொடி ஏற்றும் நேரத்திலும் சார்லஸ் தலைமையில் பங்குப் பேரவையினர் ஒப்பந்தப்படிச் செயல்படுமாறு வற்புறுத்தினர். பாதிரிமார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இடையில் காவல்துறை தலையிட்டு யாரும் கொடிதூக்கி வரவேண்டாம் பாதிரிமார்களே கொடியேற்றட்டும் என அறிவுறுத்த அவ்வாறே நடைபெற்றது.
ஒப்பந்தம் மீறப்பட்டது கண்டு மனம் வெதும்பிய சார்லசும் பங்குப் பேரவையினரும் தாங்கள் திருப்பலியில் கலந்து கொள்ளாமல், ஜெப வழிபாடு செய்து தொடர்ந்து மண்டகப்படிகளையும் சப்பர ஊர்வலத்தையும் நடத்துவதாகக் கூறியபோது ஆலய நிர்வாகம் அவ்வாறு செய்தால் சாமித் திரு உரு மற்றும் சப்பரங்களைத் தர இயலாது என அறிவித்தது. காவல்துறையும் ஆலய நிர்வாகத்திற்கு முழு ஆதரவளித்தது. சார்லசும் பங்குப் பேரவையினரும் திகைத்து நின்றனர். அப்படியெல்லாம் திருவிழாவை நடத்தத் தாங்கள் அனுமதிக்க முடியாது என சார்லஸ் கூறியபோது போலீசை வைத்து நடத்திக் கொள்வோம் என ஓரியூர் ஆலய சுப்பீரியர் யாகு கூறியுள்ளார்.
அவ்வாறே ஆக 30 அன்று மண்டலக்கோட்டை முதல் மண்டகப் படியை காவல்துறை உதவியுடன் ஆலய நிர்வாகம் டிராக்டர் ஒன்றில் சப்பரத்தை ஏற்றி மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாமலே நடத்தி முடித்தது.
ஆக 31 அன்று சார்லசின் சொந்த ஊரான புல்லூர் மண்டகப்படியையும். ஆலய நிர்வாகம் புல்லூர் மக்களின் ஒத்துழிப்பின்றி காவல்துறைத் துணையுடன் “வெற்றிகரமாக” தம் டிராக்டர் சப்பர ஊர்வலத்துடன் நிகழ்த்த இருந்த தருணத்தில்தான் இரவு எட்டுமணிவாக்கில் ஆலயத்தின் பின்புறம் சுமார் 100 மீ தொலைவில் முட்புதர்களுக்கு மத்தியில் சார்லஸ் தீயில் எரிந்து மரணமடைந்தார்’
சந்தேகத்திற்குரிய சார்லசின் மரணம்:
ஒரு உண்மை அறியும் குழு அஇத்துச் சென்ற மாதத்தில் நாங்கள் இது குறித்து ஆய்வு செய்தோம். சார்லசின் மரணம் குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் பேசியபோது சார்லஸ் செய்து கொண்டது தற்கொலைதான் எனவும் இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மறைமாவட்ட நிர்வாகமோ பாதிரியார்கள் யாருமோ காரணமில்லை எனவும் கூறினர். தற்கொலைக்குத் தூண்டுதல் எனவும் யாரையும் குற்றம் சொல்ல இயலாது என்றனர்.
ஆனால் சார்லசின் குடும்பத்தாரும், பேரவை உறுப்பினர்களும், பிற இயக்கத்தவர்களும், நண்பர்களும் இதை மறுக்கின்றனர். சார்லஸ் தற்கொலை மனநிலையுடன் இருக்கவில்லை, அன்று முழுவதும் மிகவும் இயல்பாக நடந்து கொண்டிருந்தார் எனக் கூறுகின்றனர்.. அன்று மாலை அவரைச் சந்தித்த பிற அவரது நண்பர்களும் அவர் வழக்கம்போல உற்சாகமாக இருந்ததாகவே கூறினர். இயல்பாகப் பேசிச் சென்ற சற்று நேரத்தில் சார்லஸ் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் ஓடி வந்தது புதரில் வீழ்ந்ததாகவும் காவல்துறையினர் ஓடி வந்து அந்த இடத்தில் யாரையும் அனுமதிக்காமல் விரட்டியதாகவும் அனைவரும் கூறினர்.
அடுத்த நாள் சாலை மறியல் நடந்துள்ளது. வயதான பாதிரியார் காப்ரியல் தாமஸ் அவர்களின் தலையில் காயமும் பட்டுள்ளது. பின் ஆக 7 அன்றுதான் சார்லசின் உடலைப் பெற்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவர் இறுதி வரை உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்த சார்லஸ் இப்படித் திடீரென தற்கொலை முடிவுக்கு வந்ததும் எந்தக் குறிப்பும் எழுதி வைக்காமல் இறந்ததும் இது தற்கொலைதானா என்கிற நியாயமான அய்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரு எதிர்ப்பாகத் தீக்குளிக்க ஒருவர் முடிவு செய்தால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப்புறமாக வந்து எந்தத் தற்கொலைக் குறிப்பும் எழுதி வைக்காமல் இப்படிச் செய்து கொள்வாரா என்கிற கேள்வியும் எழுகிறது.
முடிவாக…
சிவகங்கை மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களே அதிகம் இருந்த போதும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் சாதி உணர்வுடன் செயல்பட்டவருமான பணி.சூசைமாணிக்கம் போன்றோரை ஆயர்களாக நியமித்து வந்த திருச்சபை கண்டனத்துக்குரியது.
சென்ற ஆண்டில் ஓரியூருக்கு அருகில் உள்ள எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு முஸ்லிம் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஒரு முஸ்லிம் காவலர்கள் கூடப் பணியமர்த்தப்படாததோடு, முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவான ஒருவர் உதவி ஆய்வாளரும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது நடந்தது. இது சுட்டிக்காட்டப்பட்ட பின் அவசர அவசரமாக அங்கு ஒரு முஸ்லிம் அதிகாரியை காவல்துறை நியமித்தது. அதேபோலத்தான் இன்று சிவகங்கை மறைமாவட்டமும் செயல்பட்டுள்ளது. எல்லாம் முடிந்த பின் இன்று மறைமாவட்டம் ஓரியூர் பங்குத் தந்தையாக அங்குள்ள பெரும்பான்மை தலித் சமூகத்தைச் சேர்ந்த அருட் திரு எஸ். மரியநாதன் அவர்களை நியமித்துள்ளது. இது ஒரு வகையான damage control முயற்சியாக இருந்தபோதும் தந்தை மரியநாதன் அவர்கள் மிகவும் பொறுப்பானவர். தன்னால் இயன்றவரை நாங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைக் களைய முயல்வதாக அவர் கூறினார். மறைமாவட்டம் தலித் கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்திருந்தால் அது மிகவும் தவறு எனவும் தான் அவற்றைச் சரிசெய்ய முயல்வதாகவும் கூறினார்.
இன்றைய பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் கிறிஸ்தவத்தில் ஊறிப்போன சாதிமுறையும் தீண்டாமைக் கொடுமையுந்தான். இது வேறோடு களையப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, உடனடியாக மறைமாவட்டத்தில் உள்ள குறைபாடுகளை அறிய திருச்சபையினர் அருட் திரு எக்ஸ்.டி.செல்வராசு போன்ற ஒரு மூத்த நடுநிலையாளர் ஒருவரை நியமித்து இந்தக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். சாதி உணர்வுடன் செயல்பட்ட பாதிரிமார்கள் தண்டிக்கப்பட வேண்டும். முறையாக எல்லாத் திருத்தலங்களிலும் பங்குப் பேரவைகளை உருவாக்கி ஆலய நிர்வாகமும் பங்குப் பேரவையும் இணைந்தே ஜனநாயக முறையில் முடிவு செய்து செயல்பட வேண்டும், காவல்துறையினர் மறைமாவட்ட அதிகாரத்திற்கு ஆதரவாகவே எப்போடும் செயல்படுகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல்துறை தலையிட நேர்ந்தால் அதை அவர்களே முடிவு செய்யாமல் ஒரு விரிந்த சமாதானக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின்படி செயல்பட வேண்டும். சார்லசின் மரணத்தைப் பொறுத்தமட்டில் அதை ஒரு தற்கொலை என்கிற கோணத்தில் மட்டுமே அணுகாமல் குடும்பத்தார் முன் வைக்கும் நியாயமான சந்தேகங்களைக் கண்க்கில் கொண்டு இது ஒருகொலையாகவும் இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
சார்லசின் மரணம் தற்கொலையாகவே இருந்தாலும் கூட பங்குப் பேரவையின் முடிவைத் தன்னிச்சையாக மாற்றியது, அடித்தளச் சமூகத்தைப் பிளவு படுத்தியது. ஊருக்கு முக்கியமானவர்களே இல்லாமல் டிராக்டர் வைத்து சப்பர ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றின் மூலம் சார்லசுக்குத் தீராத மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சார்லஸ் செய்து கொண்டது தற்கொலை ஆயின் அவர் இந்த வகையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என்றே ஆகிறது. எனவே வழக்கை சந்தேகத்திற்குரிய மரணம் என்பதிலிருந்து மாற்றி தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்காக (இ.த.ச 306) விசாரிக்கப்பட வேண்டும். தவிரவும்சார்லஸின் மரணம் அது எப்படி ஆயினும் அதற்கு திருச்சபையே பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு திருச்சபை 10 இலட்ச ரூபாய் இழப்பீட்டை திருச்சபை அளிக்க வேண்டும்.
(‘மக்கள் களம்’ இதழில் வெளிவந்த கட்டுரை)