நான் அங்கு போகவில்லை. நாளிதழ்களில் வாசித்ததுதான். நண்பர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதியிருந்த முகநூல் பதிவையும் பார்த்தேன். வாக்கு சேகரிப்பிற்காக வந்திருந்த பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தைத் தம் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்ததாகவும், அதை மீறி கருப்பு குழுவினர் நுழைந்த போது கலவரம் மூண்டதாகவும் அறிகிறோம்.
தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க யாரும் வரத்தான் செய்வார்கள். எங்கள் பகுதிக்கு வரவேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்திருக்கத் தேவை இல்லை என ஃபிர்தௌஸ் கூறி இருந்தார். உண்மைதான். நமக்குப் பிடிக்காதவர் ஆனபோதிலும் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து அனுப்புவதே பண்பாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது.
எனினும் முழுமையாக அன்று என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள ஒரு ஊர். கிழக்குக் கடற்கரையில் பரவலாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளும் இப்பகுதியில்தான் அதிகம்.
தற்போது கலவரம் நடந்த இப்பகுதியில் தீவிரமாகச் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளில் முக்கியமானவர் இந்தக் கருப்பு.
முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் முதலான பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளாக மதக் கலவரங்கள் நடை பெற்று வருகின்றன. மதக் கலவரங்கள் எனச் சொல்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள், அவர்களது கடைகள், இதர சொத்துக்கள் தாக்கப்படுவது அவ்வப்போது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலில் முத்துப்பேட்டை கடைவீதியில் இருந்த ஒரு மரவாடி, சைக்கிள் ஸ்பேர் பார்ட் ஷாப் உள்ளிட்ட பல கடைகள் எரிக்கப்பட்டு, தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னை மற்றும் வாழைத் தோப்புகளில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அந்தக் கலவரத்தின்போது ஏற்பட்ட சொத்திழப்பு அபோதே ஒரு கோடி ரூபாய் என எங்கள் உண்மை அறியும் குழு மதிப்பிட்டது.
அப்போது நான் தஞ்சையில் இருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் காலையில் நாகை சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். எதிரே வந்த ஒருவர் வணக்கம் சொன்னார். அடையாளம் தெரியவில்லை. பின் அவரே சொன்னார். சற்று முன் குறிப்பிட்டேனே அந்தக் கலவரத்தில் முழுமையாக எரிக்கப்பட்ட சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்காரர். அந்த ஊரை விட்டே தான் இடம் பெயர்ந்து விட்டதாகவும். தற்போது தஞ்சையில் ஒரு கடையைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
முத்துப்பேட்டை முஸ்லிம்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதம் வந்தாலே அச்சம் தோன்றி விடும். அபோதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் அங்கு வினாயகர் ஊர்வலம் நடத்துவார்கள். வினாயகர் சிலையைத் தூக்கிக் கொண்டு சந்தைப்பேட்டை முஸ்லிம் தெரு வழியாக ஊர்வலம் வருவார்கள். அந்த முஸ்லிம் தெரு மிகக் குறுகலானது. வினாயகர் ஊர்வலத்தினர் என்னென்ன முழக்கங்களை இடுவார்கள், எதையெல்லாம் செய்வார்கள் என்பதை நான் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைவார்கள். குறிப்பாகப் பெண்கள் தொடர்பான இழிவுப் பேச்சுக்கள் வரும்போது இவர்கள் தரப்பிலிருந்து ஏதாவது எதிர்வினைகள் வரும். பிறகு கலவரம்தான்,
ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு பெருங்கலவரத்திற்குப் பின் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். எங்களுடைய முக்கிய பரிந்துரை ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என்பது. முத்துப்பேட்டையைச் சுற்றி இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. நாகூருக்குப் பிறகு மத வேறுபாடுகள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் புனிதப் பயணம் வருகிற தர்ஹா ஒன்றும் அங்குள்ளது. விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்தக் குறுகிய முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் போக அவசியமே இல்லை. வம்புக்காக்கத்தான் அத்தனையும்.
இந்த வம்புகள் அனைத்தின் நாயகரும் கருப்பு என்கிற முருகானந்தம் தான்.
தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கடும் ‘டென்ஷன்’தான். இடையில் ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை முஸ்லிம்கள் அணுகினர். இந்திய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த நண்பர் முகமது சிப்லி அந்த வழக்கைத் தொடுத்திருந்தார். எங்கள் அறிக்கையும் அதில் ஒரு முக்கிய ஆவணமாக முன்வைக்கப்பட்டது. நீதிமன்றமும் மாற்றுப் பாதை ஒன்றைச் சுட்டிக்காட்டி ஆணையிட்டது.
அந்த ஆண்டில் நாங்கள் மீண்டும் ஊர்வலத்தன்று அங்கு சென்றோம். முத்துப்பேட்டைக்கு நாங்கள் செல்வது இது மூன்றாம் முறை. கடைவீதியில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள சி.பி.அய் கட்சியின் அலுவலக மாடியில் நின்றவாறு வெறி கலந்த முழக்கங்களுடன் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு ஆத்திரம்கொண்ட நிலையில்தான் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. நீதிமன்ற ஆணை முழுமையாகக் கடைபிடிக்கப்படாமல்தான் ஊர்வலம் நடந்தது. சில கல்வீச்சுக்கள் அப்போதும் நடக்கத்தான் செய்தன. ஊர்வலம் முடிந்தவுடன் கல்வீச்சுகளால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளைச் சென்று பார்த்தோம்.
கடந்த சில ஆண்டுகளாக அங்கு பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லை. கருப்புவிற்கு பா.ஜ.க வில் ஏதோ முக்கிய பதவியெல்லாம் கொடுத்துள்ளனர். அவர் இப்போது அதிகம் சென்னையில்தான் இருப்பதாகவும், ஊர்ப்பக்கம் பெரிதாக வருவதில்லை எனவும், அதனால் கலவரங்களும் கொஞ்சம் குறைந்துள்ளதாகவும் முத்துப்பேட்டையைச் சேந்த ஒருவர் குறிப்பிட்டார். நான்கூட ஒருமுறை அவரை சென்னையில் ஒரு தொலைக்காட்ட்சி விவாதத்தில் சந்தித்தேன்.
இந்தியாவில் நடைபெறும் மதக் கலவரங்களில் ஓரம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மோதல் எனப் பொத்தாம் பொதுவாக அவரற்றைச் சொல்லிவிட இயலாது. இந்துக்களிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பங்கேற்கும் வன்முறையாகவும் அவை உள்ளன. இந்தக் ‘குறிப்பிட்ட சாதி’ என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றாக இருக்கலாம். முசாபர்நகரில் சமீபத்தில் நடந்த கலவரம் வெறுமனே ஒரு இந்து முஸ்லிம் கலவரம் மட்டுமல்ல; அது ஒரு ஜாட் – முஸ்லிம் கலவரமும் கூட.
இப்படி கலவரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி முக்கிய பங்கு வகிக்கும் போது அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிலும் தலைமையில் இருப்பவர்களும் கூட அந்தப் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர். எனவே அவர்கள் வேவ்வேறு எதிர் எதிர் கட்சிகளில் இருந்தபோதும், முஸ்லிம்களைத் தாக்கிய தீவிரக் கும்பலில் அவர்கள் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும், அவர்களுக்கு ஆதரவாகவே செயல் படுகின்றனர்.
முத்துப் பேட்டையிலும் அதைக் கண்டோம்.
கருப்பு என்கிற முருகானந்தத்தின் மீது அப்பகுதி முஸ்லிம்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. அவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுவிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். மல்லிப்பட்டினம் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனஅவருக்கு நிச்சயம் தெரியும். அவருடைய நோக்கம் வாக்கு சேகரிப்பதும் அல்ல. எப்படியோ இன்று நடைபெற்றுள்ள சம்பவம் இரு சமூகங்களையும் எதிர் எதிராக நிறுத்த உதவி செய்துள்ளது. இந்துத்துவ சக்திகள் விரும்புவது அதுதான். அப்படி இம்முரண் கூர்மைப் படும்போதுதான் பா.ஜ.க அதிக இடங்களைத் தேர்தல்களில் கைப்பற்ற முடிந்திருக்கிறது. இதுவரை பா.ஜ.க அதிக இடங்களை வென்ற, ஆட்சி அமைத்த தேர்தல்கள் (92 / 96 / 98) எல்லாவற்றிலும் அது உ.பியில் 50 இடங்களுக்கு மேல் பெற்றிருந்தது. அந்த நேரத்தில்தான் இந்து /முஸ்லிம் polarisation னும் அங்கு உச்சமாக இருந்தது. 2000க்குப் பின் அந்த அளவிற்கு இந்துக்களையும் முலிம்களையும் எதிர் எதிராக நிற்க வைக்க இந்துத்துவ சக்திகளால் முடியவில்லை. சிறையிலிருந்து விடுதலை ஆன அமித் ஷாவை மோடி உ.பி மாநிலத் ‘தேர்தல் பணிக்கு’ என அனுப்பி வைத்ததே இந்த நோக்கத்திற்காகத்தான் எனவும், முசாபர் நகர் கல்வரம் இந்த நோக்கிலேயே கட்டமைக்கப்பட்டது எனவும் ஒரு ‘தியரி’ உண்டு.
கருப்பின் நோக்கம் எதுவானாலும் வாக்கு சேகரிக்க வந்தவர் என்கிற வகையில் அவரை அனுமத்தித்திருக்கலாம், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை அவர்கள் இப்படி வெளிப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. காவல்துறையை அணுகி, பெருங் கூட்டம், முழக்கங்கள் இல்லாமல் வாக்கு கேட்க வேண்டும் எனவும், அதிக அளவில் காவல்துறையினர் கூட வரவேண்டும் எனவும் கோரி இருக்கலாம்.
அப்பாவிகள் பலரும் கைது செய்யபட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது காவல்துறை வழக்கமாகச் செய்வதுதான். உண்மையில் இப்படியான ஒரு பிரச்சினையைக் காவல்துறை எதிர்நோக்கி இன்னும் அதிகப் பாதுக்காப்பை அங்கு உறுதி செய்திருந்தால் இந்தச் சம்பவமே அன்று தடுக்கப் பட்டிருக்கலாம்.