பாஜக இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்

இந்தத் தேர்தலில் நமது நிலைபாடு என்னவாக இருக்க முடியும்?

யோசித்துப் பார்த்தால் ஒரு எதிர்மறையான பதிலைத்தான் நாம் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆம். யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்பதைத்தான் நாம் அழுத்திச் சொல்ல முடியும். அதிலிருந்துதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை நாம் தருவித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

உறுதியாக பா.ஜ.கவையோ, அதை ஓர் அங்கமாக்கிக் கூட்டணி அமைத்திருக்கும் எந்த ஒரு கட்சியையுமோ நாம் ஆதரிக்கவே முடியாது. அந்த வகையில் இந்த முறை நாம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியைத்தான் ஆதரிக்க முடியும். இப்படியான ஒரு எதிர்மறை அணுகல் முறையின் ஊடாகத்தான் நாம் நம் ஆதரவு குறித்து முடிவெடுக்க வேண்டியதாக நம் சூழல் உள்ளது. இப்படியான ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது  ஏதோ இந்த மாநிலத் தேர்தல் குறித்த ஒன்று மட்டுமல்ல. அகில இந்திய அளவிலான தேர்தல்களிலும் இப்படித்தானே நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணியை நாம் ஆதரிக்க நேர்வதும் இப்படித்தானே. ஒருவேளை பா.ஜ.க எனும் கட்சியே இல்லை என வைத்துக் கொள்வோம். அப்போது  நாம் காங்கிரசை ஆதரிப்போமா என்பது ஒரு கேள்விக் குறிதான். அப்படியான சூழலில் காங்கிரசை நிராகரிப்பதற்கு நமக்குக் காரணங்கள் உண்டு.  குறிப்பாகப் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.கவுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒன்றை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்த மட்டில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்பன அளவு ரீதியானவைதான். பண்பு ரீதியானவை அல்ல. தனியார் மயம், கார்பொரேட் மயம், அமெரிக்க ஆதரவு என்பவற்றிலெல்லாம் கொள்கை அளவில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன வேறுபாடு? பெரிய அளவில் ஏதும் இல்லை. ஒபாமாவுடன் மன்மோகன் சிங் அணுக் கொள்கை தொடர்பாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்தியா எதைஎல்லாம் விட்டுக் கொடுத்தது என்பதை ஒபாமா தன் நாட்டிற்குச் சென்று அவர்களின் செனட் முதலான அவைகளில் சொன்ன பிறகுதானே நம்மூர் மக்களுக்குத் தெரிய வந்தது. அப்படி நம் மக்களுக்கே சொல்லாமல், நமது உயிர் காக்கும் உரிமைகளை விட்டுக் கொடுத்து நடந்த ஒரு ஒப்பந்தம்தானே அது.

இதேபோல கார்பொரேட் மயம் ஆவது என்பதை எடுத்துக் கொண்டாலும்  காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒரு அளவு மாற்றம்தான். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கொஞ்சம் கூடுதல் குறைச்சல் என்பதுதான். மற்றபடி தொழில்களைக் கார்பொரேட் மயப்படுத்துவது என்பதில் பெரிய வேறுபாடுகள் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கிடையாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். மன்மோகன்சிங் தலைமையில் இந்தியா இருந்தபோது இப்படி ஒரு கொரோனா தாக்குதல் ஏற்பட்டிருந்தால் மோடி ஆட்சியில் புலம் பெயர் தொழிலாளிகள் இவ்வாறு வீதிகளில் செத்துத் தொலைந்தது போல அப்போது நடந்திருக்காது. கொஞ்சம் ‘cash transfer’ (பண விநியோகம்) நடந்து இப்படியான நிலை தவிர்க்கப் பட்டிருக்கலாம். பிள்ளைகள் புல்லைப் பிடுங்கி அவித்தும் தின்றிருக்கும் அவல நிலையைப் பத்திரிகைகள் படங்களுடன் பிரசுரிக்கும் நிலை ஏற்படாமல் போயிருக்கலாம். அந்த அளவுக்குத்தான் பொருளாதாரத் துறை, உலக மயம் முதலானவற்றில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடுகள். மற்றபடி நவதாறாளவாதப் பொருளாதாரம் என்பதை நடைமுறைப் படுத்துவதில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

பண்பு மாற்றம் என இங்கு சொல்வது அரசியலைப் பொருத்தமட்டில் முழுமையான கொள்கை மாற்றத்தைத்தான். காங்கிரசுக்கு இந்த நாட்டை ஒரு இந்து நாடாக ஆக்கும் வெளிப்படையான திட்டமோ இல்லை இரகசியத் திட்டமோ உறுதியாகக் கிடையாது எனலாம். எனினும் அவர்களும் கூட இன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மகாத்மா காந்தியைப்போல உறுதியாக நின்று மத அடையாள அரசியலை எதிர்காமல் அனுசரித்துப் போகிற அளவிற்கு இந்துத்துவம் வலுவாகி உள்ளது. ராகுல் காந்தி சட்டையைக் கழற்றி விட்டு ஆலயம் ஒன்றுக்குள் சென்று நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ”நானும் இந்துதான்”.. ”நானும் இந்துதான்” என்று முரசறைய நேர்ந்ததைப் பார்த்தோமே.

தி.மு.க பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தாங்கள் ஒன்றும் பெரியார் வழியில் வந்தவர்கள் இல்லை. நாத்திகம் எங்கள் கொள்கை அல்ல. பெரும்பான்மை மதவாதம் பற்றிப் பேசுவது எங்கள் வேலையில்லை என்பதாகத்தான் அவர்கள் தம் நிலைபாட்டை இப்போது முன்வைக்கின்றனர். இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்துகொண்டுள்ள அதே நேரத்தில் இன்றைய தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து தீவிர சங்கியான ரங்கராஜ் பாண்டேயின் கருத்தொன்று வெளி வந்துள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் அட்டையைக் கிழித்துவிட்டுப் பார்த்தால் அது பா.ஜ.க தேர்தல் அறிக்கை என்பது போலத்தான் உள்ளது” – என அவர் கூறி அதைப் பாராட்டியுள்ள செய்திதான் அது.

இடது, வலது கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேல் மே.வங்கத்தில் ஆளும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இன்று அவர்கள் எதிர்க் கட்சியாகக் கூட வரும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அங்கே அவர்களும், அவர்களின் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசும் இன்று கூட்டணி அமைத்தும் கூட வரும் தேர்தலில் மூன்றாவது அணியாக வரும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் அங்கு ஆண்ட அந்த இருபதாண்டுகள் அத்தனை அத்து மீறல்களுடன் இருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் இன்று சுட்டிக் காட்டுகின்றனர்.

எனினும் இன்று இந்திய அளவில் இப்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆகியோரைத்தான் நாம் ஆதரிக்க வேண்டி உள்ளதற்கு முக்கிய காரணமாக இந்துத்துவ ஆபத்து ஒரு பொது மக்கள் எதிரியாக நம் முன் உள்ளது. அது ஒன்றிற்காகவே நாம் இப்படியான ஆகக் கொடூரமான வாரிசு அரசியல், ஊழல்கள், காடையர்தனம் இன்ன பிற எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நாம் இந்த “மதச் சார்பற்ற கூட்டணிகளுக்கு” வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனெனில் இந்துத்துவம் அரசாள நேர்வது எல்லாவற்றையும் விடப் பெரும் கொடுமை என்பதுதான் முக்கிய காரணம். அது மட்டுமல்ல இன்றைய இந்துத்துவ வெற்றியின் ஊடாக அவர்கள் கற்றுக் கொண்டுள்ள பாடம் அவர்களை ஒரு சுய பரிசோதனை செய்யும் வாய்ப்பிற்குத் தள்ளியுள்ளது என நாம் நம்பலாம்.

எதற்கு நான் இத்தனையையும் சொல்கிறேன் என்றால் இந்துத்துவத்தின் வளர்ச்சி வேகம் ஆக அச்சத்தை ஊட்டக் கூடிய நிலையில் உள்ளது. மதவாத சக்திகளை எதிர்ப்பதே இன்று நம் முக்கிய கடமையாக உள்ளது. எனவே வாக்குகளைப் பிரித்து நாமும் தோற்று, மதச் சார்பற்ற கட்சிகளையும் தோற்கடிக்கக் கூடாது என்கிற நிலையை நாம் ஏற்கிறோம். ஆனால் இந்த இக்கட்டான நிலையை மதச் சார்பற்ற பெரிய கட்சிகள் முற்றிலும் அறமின்றித் தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை வேதனையாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் இந்தத் தேர்தல் கூட்டணி உருவாக்கத்தின் போது எத்தனை கேவலமாக நடத்தப்பட்டனர்? முஸ்லிம்கள் மத்தியில் இந்திய அளவில் வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ மற்றும் உவைசின் மஜ்லிஸ் கட்சி ஆகியன இந்தத் தேர்தல் கூட்டணியில் எப்படி விரட்டி அடிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் சேர்த்து பன்னிரண்டே தொகுதிகள் என்பதெலாம் எந்த ஊர் நியாயம்? இரண்டுக்கும் சேர்த்து ஒரு 30 தொகுதிகள் ஒதுக்கக் கூட அவர்களுக்குத் தகுதி இல்லையா? தனியாக நின்றால் வெல்ல முடியாது எனும் நிலையைப் பெரிய கட்சிகள் எத்தனை மோசமாகப் பயன்படுத்திக் கொண்டன! பல்வேறு வகைகளில் தனித்துவமாகவும் கொள்கை வேறுபாடுகளுடனும் விளங்கும் கட்சிகளை எல்லாம் தங்கள் சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்தால்தான் கூட்டணியில் இடம் என மிரட்டும் கூட்டணிச் சர்வாதிகாரம் எத்தனை கொடிது?

முஸ்லிம் கட்சிகளின் நிலை இப்படி என்றால் தமிழ்க் கிறிஸ்தவ மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம்களைக் காட்டிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அரசியல் பிரக்ஞையையும் ஒற்றுமையையும் கிறிஸ்தவர்களிடம் காண முடியாது. கிறிஸ்தவத்திற்குள் ஊடுருவியுள்ள சாதி வேறுபாடுகள், தீண்டாமை முதலியன இப்படியான ஒரு அரசியல் ஒற்றுமை அவர்கள் மத்தியில் உருவாகாததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் செல்வாக்காக உள்ள தம் மத நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் என்கிற நம்பிக்கையும் அவர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது.  அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நான் ஒரு நிகழ்வை நினைவூட்டுவது வழக்கம். சுமார் எழுபதாண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் ஒருமுறை திரளாக வந்து அண்ணல் அம்பேத்கரைச் சந்தித்து அறிவுரை கேட்டார்கள். சற்றும் தயங்காமல் அம்பேத்கர் சொன்னதின் சாராம்சம் இதுதான்: “நீங்கள் முதலில் அரசியல்படுங்கள்… தலித்கள் உங்கLளைவிடக் கல்வி முதலியவற்றில் முன்னேற்றம் அடையாமல் இருந்தபோதும் இன்று ஓரளவு அவர்கள் படித்து மேலுக்கு வருவதற்கெல்லாம் காரணம் அவர்கள் அரசியல் பட்டிருப்பதுதான். நீங்களும் அரசியல் படுங்கள்..” – என்றார். மீண்டும் இந்தத் தேர்தல் நேரத்திலும் அதைத்தான் சொல்ல வேண்டி உள்ளது. கிறிஸ்தவர்களும் ஒரு அரசியல் உணர்வுமிக்க சமூகமாகப் பரிணமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பா.ஜ.க ஆட்சி என்பதன் ஆபத்தை உணர வேண்டும். அதற்கு யாருடன் இணைந்து நிற்பது எனும் தெளிவு வேண்டும்.

இந்தியா ஏராளமான மக்கள் தொகை உள்ள ஒரு நாடு. பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள் என உள்ள ஒரு நாடு. இங்கே அமெரிக்கா போலவெல்லாம் இரு கட்சி ஆட்சி முறை அமைய முடியாது. அமையவும் கூடாது. ஆனால் இன்றைய கூட்டணிச் சூழல் அப்படி ஒரு இரு கட்சி ஆட்சி முறையை உருவாக்கியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படிச் சாதி, மதம், பொருளாதார வேறுபாடுகள், இனம், மொழி என இத்தனை வேறுபாடுகள் மிக்க ஒரு மக்கள் திரளுக்கு இப்படிக் கூட்டணி வடிவத்தில் இரு கட்சி ஆட்சி பொருத்தமில்லை. ஆனால் இன்றைய கூட்டணிக்குள் நடந்த தொகுதிப் பகிர்வுகளில் சிறு கட்சிகள் அவற்றுக்குரிய மதிப்புகளுடன் நடத்தப்பட்டனவா எனும் கேள்வியை நாம் சற்றே எழுப்பிப் பார்க்க வேண்டி உள்ளது. கூட்டணிக் கட்சிகள் தம் தனித்துவத்தைக் காட்டும் வண்ணம் தனிச் சின்னங்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு அடிப்படை ஜனநாயகம் இல்லையா? அது மறுக்கப்படும்போது அது ஒருவகையில் அக்கட்சிகளின் அடையாளத்தை மறுப்பதுதானே.

எப்படியோ பா.ஜ.க இல்லாத வலுவான கூட்டணி ஒன்றாவது நமக்குக் கிடைத்துள்ளதே என்பதுதான் நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இங்கே ”வலுவான” என நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கு எதிராகக் கிளம்பியுள்ள கமல ஹாசன், சீமான் முதலானோரின் கட்சிகள் மதச் சார்பற்ற வாக்குகளைப் பிரித்து மதவாத சக்திகளுக்குத் துணை புரியும் நிலையை எண்ணித்தான். தலித்கள், சிறுபான்மை மக்கள் ஆகியோர் இதில் ஏமாறக் கூடாது. கவனமாக இருத்தல் அவசியம்.

இத்தனையையும் கணக்கில் கொண்டுதான் நாம் வரும் தேர்தல் குறித்த முடிவை எடுத்தாக வேண்டும். ஒரு காலத்தில் காமராசர் “எல்லாம் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்’ என்றார். நாம் அப்படிச் சொல்லாவிட்டாலும் நாம் ஆதரிக்க நேர்பவர்கள் குறித்து அதிக நம்பிக்கை நமக்குத் தேவை இல்லை. கட்சிக்காரர்கள் வேண்டுமானால் அப்படி நம்பிக்கை ஊட்டலாம். மக்கள் அப்படி நம்ப வேண்டியதில்லை. ஆனாலும் இன்று நாட்டை எதிர்நோக்கியுள்ள ஆபத்தை மனதிற்கொண்டு நாம் பா.ஜ.கவையும் அதன் கொடியை ஏந்தி வலம் வரும் எடப்பாடி கும்பலையும் இந்தத் தேதலில் நிலைகுலைய வைப்பது அவசியம்.

முன்னாள் நக்சல்பாரி இயக்கங்களிலிருந்து பிரிந்து இன்று பல்வேறு குழுக்களாகச் செயல்படும் சுமார் 50 சிறு அமைப்புகள் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒட்டிச் சமீபத்தில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் ஒற்றை வரியில் தங்கள் முடிவை அறிவித்தனர். அது, “பா.ஜ.க வை வீழ்த்துவோம்” என்பது. அடுத்த சில தினங்களில் அந்த அந்த ஒருமிப்பை ஏற்பாடு செய்ததில் முன்னணியாக நின்ற தோழர்கள் நால்வர் கொடும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இன்றும் அவர்கள் கோவைச் சிறையில் வாடுகின்றனர். ”பா.ஜ.கவை வீழ்த்துவோம்” எனும் குரலை பாசிஸ்டுகள் எத்தனை கொடூரமாய் எதிர்கொள்கின்றனர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது.

பா.ஜ.கவை வீழ்த்துவோம்! பா.ஜ.க இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்!!.

பா.ஜ.க.வின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள்

[தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை]

பா.ஜ.க வின் இந்த அமோக வெற்றிக்குப் பின் கார்பொரேட்களும் ஊடகங்களும் இருந்தன என்பது ஊரறிந்த உண்மை. நேரடியான நிதி உதவிகள் தவிர அவையே களத்தில் இறங்கிக் கட்சிகளிடம் பேரம் பேசிக் கூட்டணி அமைத்தது, மாநில மொழிப் பத்திரிகைகளை விலைக்கு வாங்கியதுவரை அவை செய்யாதது ஏதுமில்லை. பா.ஜ.கவின் தேர்தல் செலவு மொத்தம் 5000 கோடி என்கின்றனர். மோடி தலைமையில் பா.ஜ.கதான் வெல்லப்போகிறது, அதைத் தவிர வேறு தேர்வே மக்களுக்கு இல்லை என ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் வந்து தட்டி எழுப்பி ஊடகங்கள் நிமிடந்தோறும் காதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. உலகப் பொருளாதார வீழ்ச்சி தொடங்கி தாணே புயல்வரை காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

இப்படி எல்லாம் நடந்தது உண்மைதான் என்றாலும் பா.ஜ.கவின் வெற்றிக்கு இவை மட்டுமே காரணம் என எதிர்க் கட்சிகள் நம்பினால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

முதலில் எதிர்க்கட்சிகள் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் மிகவும் ஆர்வமாக இந்தத் தேர்தலில் பங்கேற்றுள்ளனர். 66.4 சத வாக்குப் பதிவு வரலாறு காணாதது. பா.ஜ.க என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் மட்டுமே உள்ள ஒரு கட்சி , பார்ப்பன, சத்திரிய மேட்டுக்குடி மக்களே அதன் பின்புலம் என்பன போன்ற விமர்சனங்களுக்கும் இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் அவர்கள் இன்று வேர் பாய்ச்சி விட்டனர். இமாசலப் பிரதேசம் முதல் கர்நாடகம் வரை அவர்களின் அலை வீசியுள்ளது. மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவலை மூடி மறைக்காமல் அதையே முன்னிறுத்தி இந்த வெற்றியை அவர்கள் ஈட்டியுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோரை இணைத்து பகுஜன் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்த கான்ஷிராமுடைய அணுகல்முறை இன்று தகர்க்கப்பட்டு விட்டது. இதைத் தலை கீழாக மாற்றிய குருவை மிஞ்சிய சிஷ்யை மாயாவதியின் பார்ப்பனர் + சத்திரியர் + பிற்படுத்தப்பட்டோர் + பட்டியல் சாதியினர் என்கிற “வெற்றிக் கூட்டணியை” இன்று உண்மையிலேயே காரிய சாத்தியமாக்கியவர்களாக பா.ஜ.கவினரே உள்ளனர். ஆக புவியியல் ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி பரந்துபட்ட ஒரு கட்சியாக அது விசாலித்து நிற்கும் உண்மையை நாம் முதலில் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

இந்த வெற்றிக்குப் பின்னணியாக யார் இருந்துள்ளனர்? 1. முதலில் வாக்களித்த மக்கள். 55 கோடி வாக்காளர்களில் சுமார் 10 கோடிப் பேர் புதியவர்கள். உலகமயம், திறந்த பொருளாதாரம், கார்பொரேட் கலாச்சாரம் ஆகியன வேர்விட்ட பின் பிறந்த குழந்தைகள். வாக்காளர்களின் இன்னொரு பெருந் தொகுதி வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கம். இவர்களுக்கு வளர்ச்சி, வளர்ச்சியின் பலன்கள் ஆகிய ஒன்று மட்டுமே இலக்கு. வரலாறு, இலக்கியம், சமூகவியல் என்பதெல்லாம் இன்று கல்வி நிலையங்களிலும் கூடப் புறக்கணிக்கக் கூடிய பாடங்கள் ஆகிவிட்டன. சமத்துவம், ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகிய அரசியல் அறங்களின் இடத்தில் இன்று ‘வல்லவன் வெல்வான்” என்கிற கார்பொரேட் அறம் கொடி கட்டிப் பறக்கிறது இந்தக் கார்பொரேட் அறத்தையே வாழ்க்கை அறமாக உள்வாங்கியுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்

இவர்களிடம் போய், “குஜராத்தில் 2002ல் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 2 லட்சம் பேர் உள் நாட்டிலேயே அகதிகளாயினர். இதற்கெல்லாம் காரணம்…” எனத் தொடங்கினீர்களானால், “அட, இந்தக் கதையெல்லாம் யாருக்கு சார் வேணும். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது…” என்று பதிலளிப்பார்கள்.

மதிப்பீடுகள் இன்று பெரிய அளவில் மாறிவிட்டன. முந்தைய தலைமுறையினரின் அரசியல் மொழி இன்றைய தலைமுறையினரிடம் எடுபடவில்லை. பகுத்தறிவு, மதச்சார்பின்மை, மார்க்சீயம், சாதி ஒழிப்பு முதலிய அரசியல் மதிப்பீடுகளினிடத்தில் இப்போது மதம் சார்ந்த அறங்கள், நம்பிக்கைகள், சுய முன்னேற்றத்தை நோக்கிய விழைவு முதலியன இடம்பிடித்துக் கொண்டுள்ளன. இதை நாம் முதலில் மனங்கொள்வோம்.

இவர்களுக்கு அதிக அளவில் ஊழலற்ற, சாதித்துக் காட்டுகிற ஆட்சி வேண்டும், செயல்படும் அரசு எந்திரம் வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாதியமில்லாத அளவிற்கு இந்நாடு அண்டை நாடுகள் மத்தியில் தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும். “போலீஸ் ஸ்டேஷகளில் உங்களுக்கெல்லாம் என்னுடைய ஆட்சிக் காலத்தில் எத்தனை மரியாதை இருந்தது, மீண்டும் லாலு ஆட்சியை நிறுவுங்கள்” என லாலு பிரசாத் யாதவ் முழங்கிய முழக்கத்தை பீஹாரிகள் நிராகரித்து விட்டனர். அவரது மனைவி, மகள் இருவருமே படு தோல்வி அடைந்துள்ளனர். குடும்பப் பெருமை வாரிசு அரசியல், ஊழல் பின்புலம் இவற்றின் மூலம் இனி மோடி, பா.ஜ.க வகை அரசியல்வாதிகளை எதிர் கொள்ள இயலாது.

திரிபுராவில் தம் பிடியைத் தக்கவைத்துக் கொண்ட மார்க்சிஸ்டுகளால் மே.வங்கத்தைத் தக்க வைக்க இயலவில்லை. அவர்களது முப்பதாண்டு கால ஆட்சி அங்குள்ள 25 சத முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற இயலவில்லை என்பதை அந்தக் “குள்ள நீதிபதி” (சச்சார்) அம்பலப் படுத்தினார். அரசாங்கத்தைக் காட்டிலும் அங்கு மார்க்சிஸ்ட் கட்சி ரேஷன் கடை, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஆட்சி செலுத்தி வந்த நிலையை இன்றைய தலைமுறை ஏற்கவில்லை. மக்களையும் விடக் கட்சியே சரியானது, உயர்ந்தது என்கிற அவர்களின் நூறாண்டு வரலாற்றுச் சுமையை உதறாதவரை அவர்களுக்கு விடிவில்லை.

2. பா.ஜ.கவின் இந்த வெற்றியைச் சாதகமாக்கிய இரண்டாவது தரப்பு அவர்களுக்குப் பின்புலமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். மாறியுள்ள இந்த உலகச் சூழலையும் கருத்தியல் நிலையையும் அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனுடன் நீதி மன்றத்தால் ஒப்பிடப்பட்ட மோடியையே அவர்கள் சர்வ வல்லமையாளனாக முன்னிறுத்தி வெற்றியையும் ஈட்டினர். தொடர்ச்சியாகவும் இறுக்கமாகவும் அமைதியாகவும் அவர்களின் பணி இந்தியத் தீபகற்பம் முழுவதும் மட்டுமல்ல அந்தமான் தீவுகள் வரைக்கும் பரவி இருந்தது. கடல் கடந்த நாடுகளிலும் அவர்கள் அமைப்புகளை உருவாக்கிப் பல்வேறு மட்டங்களிலும் செயல்பட்டனர். கல்விப் பணி தொடங்கி வெடி குண்டுத் தொழிற்சாலைகளை ஆங்காங்கு அமைப்ப்து வரைக்கும் அவர்கள் தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்பட்டனர். இராணுவம் தொடங்கி சகல துறைகளிலும் அவர்கள் ஊடுருவினர். பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோரை சிறுபான்மை மக்களிடமிருந்து பிரித்து எதிர் எதிராக நிறுத்துவதை இலக்காக்கிச் செயல்பட்டனர். இவற்றை எதிர்கொள்வதை முன்னுரிமையாக்கிச்ச் செயல்பட மதச் சார்பர்ற கட்சிகள் எதுவும் தயாராக இல்லை. மாறாக அவர்களைக் கண்டு அஞ்சவே செய்தனர்.

3. பா.ஜ.க வெற்றியின் பின்னணியாக இருந்த மூன்றாவது தரப்பினர் கார்பொரேட்கள். எப்படி மோடி என்கிற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியரை முன்னிறுத்தினாலும் பா.ஜ.க தம் நலனை விட்டுக் கொடுக்காது என உயர் சாதியினர் முழுமையாக அதற்குப் பின் நின்றனரோ, அதேபோல மன்மோகன் சிங் சோனியா ஆட்சியைக் காட்டிலும் மோடி பா.ஜ.க ஆட்சி இன்னும் வலுவாகத் தாராள மயக் கொள்கையை நிறைவேற்றும் என கார்பொரேட்கள் உறுதியாக நம்பினர். எச்ச சொச்சமாகவேனும் நேரு காலத்திய சோசலிசத் தொங்கல்கள் ஒட்டிக் கொண்டுள்ள காங்கிரசால் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற அம்சங்களிலும், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், விவசாய நிலங்களை அபகரித்தல் முதலான அம்சங்களிலும் உறுதியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனக் கருதினர்.

ஜனநாயக சக்திகளைக் காட்டிலும் கார்பொரேட்கள் வலதுசாரி பாசிச சக்திகளிடமே நெருக்கமாக இருப்பர். சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்திய செவ்வியல் பாசிசத்தின் போது ஹிட்லர் மற்றும் முசோலினியின் கட்சிகளும் பெரு முதலாளிகளும் ஒன்றாக இருந்தனர். இந்தியாவில் பெரு முதலாளிகள் இது நாள் வரை காங்கிரசுடன்தான் இருந்தனர். இன்று கார்பொரேட்களும் இந்துத்துவ சக்திகளும் இணைந்துல்ளனர். ஆக பாசிசம் இன்று முழுமை அடைந்துள்ளது.

இந்த எதார்த்தங்களைக் கணக்கில் எடுக்காதவரை பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை விடுவிக்க இயலாது.

இன்றும் கூட 31 சத வாக்குகளைத்தான் பா.ஜ.க பெற முடிந்துள்ளது. நமது தேர்தல்முறை அவர்களுக்கு இந்த அமோக வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது. 15 சதச் சிறுபான்மையினர் அவர்களிடமிருந்து முற்றாக விலகி நிற்பது மட்டுமின்றி இந்த வெற்றியைக் கண்டு சற்றே பதற்றத்திலும் உள்ளனர். பா.ஜ.கவினருக்கு வாக்களித்தவர்கள் எல்லோருமே இந்துத்துவவாதிகள் அல்ல என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

குஜராத் 2002 ஐ அவர்கள் திருப்பிச் செய்வார்கள் என நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் எந்தப் புதிய சக்திகள் இன்று ஆதரித்து நிற்கின்றனரோ அவர்களே வளர்ச்சி எனும் நோக்கத்திற்கு இது பொருத்தமில்லாதது என அவர்களிடமிருந்து விலக நேர்வர். மாறாக இந்துத்துவ சக்திகள் தொலை நோக்குடன் செயல்பட்டு இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறை, இராணுவம், அரசு எந்திரம் ஆகியவற்றைக் காவி மயமாக்குவதை நுணுக்கமாகவும் வேகமாகவும் செய்வர். இவர்களை ஆதரிக்கும் புதிய சக்திகள் இவற்றைக் கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

இதைப் புரிந்து கொண்டு மதச் சார்பற்ற சக்திகள் அடுத்து வரும் நாட்களில் செயல்படவேண்டும் இந்த நாட்டின் முதன்மை எதிரி மதவாத சக்திகள்தான் எனப் புரிந்து கொண்டு மதச் சார்பர்ற சக்திகள் ஓரணியில் திரள்வதும், மதச்சார்பு நடவடிக்கைகளையும் ஊடுருவல்களையும் கவனமாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதும் இன்றைய உடனடித் தேவை. இன்னொரு பக்கம் பழைய மொழி, பழைய அணுகல் முறை, பழைய வடிவம் ஆகியவற்றையும் இவர்கள் உதறத் தயாராக வேண்டும்.

இல்லையேல் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல அவர்களுக்கும் எதிர்காலமில்லை.

நெருக்கடி நிலை அறிவிப்பின் 40ம் ஆண்டு – நிலைக்குமா இந்திய ஜனநாயகம்?

சுதந்திர இந்திய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் நெருக்கடி நிலை அறிவிப்பின் 25ம் நினைவு தினத்தைப் போலவே இந்த 40ம் நினைவு தினமும் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடக்கும்போது அமைகிறது. நெருக்கடி நிலையின்போது ஒடுக்குமுறைக்கு ஆளான கட்சிகளுள் இன்றைய பா.ஜ.கவின் முந்தைய வடிவமான பாரதீய ஜனசங் கட்சியும் அதன் வழிகாட்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் முக்கியமானவை. அப்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட 1,40,000 பேர்களில் வாஜ்பேயி, அத்வானி முதலான பா.ஜ.க தலைவர்களும் அடக்கம். ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலர் அன்று தலைமறைவாயினர்.
பா.ஜ.கவின் முக்கிய எதிரியான காங்கிரசைத் தோலுரிப்பதற்கு இது அவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம். தவிரவும் நெருக்கடி நிலை அறிவிப்பிற்கு ஒரு காரணத்தை அளித்த ஜெயப்பிரகாசரின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி. இதுபோன்ற சந்தர்ப்பங்களை வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் பா.ஜ.க 25ம் ஆண்டு நினைவைப் போலவே இப்போதும் பெரிய அளவில் இதைக் கையில் எடுக்கவில்லை.

இரண்டு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களுக்கு அப்பால் இந்த அறிவிப்பின் மூலம் இந்திரா இந்த நாட்டிற்குச் சொன்ன சேதி ‘அரசியல் சட்டம் அப்படி ஒன்றும் புனிதமானதல்ல; அரசியல் சட்டத்தைக் காட்டிலும் அரசு புனிதமானது’ என்பதுதான். இந்த அம்சத்தில் பா.ஜ.க பெரிய அளவில் காங்கிரசுடன் கருத்து மாறுபடுவதற்கில்லை. இரண்டாவது அவர்களுக்கு இந்திராவைக் காட்டிலும் காந்தி, நேரு அப்புறம் சோனியா ஆகியோர்தான் முக்கிய எதிரிகள்.
இந்த நாட்டையும், இந்த அரசையும் எல்லாவிதமான குழப்பங்களிலிருந்தும் காக்கவல்ல ஒரே சாத்தியமாகத் தன்னை எப்படி இந்திரா முன்நிறுத்திக் கொண்டாரோ, அவ்வாறே இப்போது மோடியும் தன்னை நிறுத்திக்கொள்கிறார்.

25ம் நினைவு ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் அத்துமீறல்களில் இந்திராவுக்கு நெருக்கமாக இருந்து துணை புரிந்த பி.டி.பாண்டே, பி.கே.நேரு என்னும் இரு உயர் அதிகாரிகளை அன்றைய பா.ஜ.க அரசு இந்தியாவின் இரண்டாவது உயர் விருதான பத்ம விபூஷன் அளித்துக் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

தவிரவும் இன்று குடியரசுத் தலைவராக உள்ளவர் அப்போது அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறல்களை நேரடியாகக் கையாண்ட சஞ்சை காந்தியின் கையாள் என விமர்சிக்கப்பட்டவர். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏழை எளிய மக்களுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயமாகச் செய்தது, டெல்லியை அழகு படுத்துவது என்கிற பெயரில் குடிசைப் பகுதிகளை அழிதொழித்து மக்களை விரட்டியது,. குடிமக்களுக்கு உயிர் வாழ்தல் உட்பட அடிப்படை உரிமைகளை மறுத்தது, கடுமையான செய்தித் தணிக்கை முதலான வடிவங்களில் மட்டும் அன்றைய அத்துமீறல்கள் வெளிப்படவில்லை
பெரிய அளவில் அமைச்சரவைக்கிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அமைச்சரவையைக் கூட்டாமலேயே அமைச்சரவைக்கு அப்பாலிருந்த ஒரு சிறு குழுதான் 1975 ஜூன் 25 இரவு நெருக்கடி நிலையை அறிவிப்பதென முடிவு செய்தது. முடிவெடுக்கப்பட்ட பின்னர்தான் உள்துறை அமைச்சர் பிரும்மானந்த ரெட்டி அழைக்கபட்டு உரிய பரிந்துரையில் கையொப்பம் பெறப்பட்டது. அரசின் நிதி ஆதாரங்கள் சஞ்சையை சுற்றியிருந்த கும்பலின் விருப்பத்திற்குச் செலவிடப்பட்டன. சற்றே இடையூறாக இருந்த ஓரளவு நேர்மையான நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியத்திடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு எந்தப் பெரிய அனுபவமும் இல்லாத ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி மேலுயர்ந்தவர்தான் இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இவர்களின் ஆளுகையில்தான் இன்று நாம் நெருக்கடி நிலை காலத்தை மதிப்பிடுகிறோம். எத்தனை குறைபாடுகள் இருந்த போதிலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்குண்டு. மேலை நாடுகள் பலவும் எதிர்பார்த்தது போலவும், அண்டை நாடுகளில் நிகழ்ந்தது போலவும் ஒரு தேச அரசுக்கு இருக்க வேண்டிய இனம், மதம், மொழி என்கிற பொதுப் பண்புகள் இல்லாதபோதும் அறுபதாண்டுகளுக்கும் மேலாக அது சிதையாமல் உள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த 21 மாதங்களைத் தவிர பிற காலங்களில் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இராணுவம் அதற்குரிய இடத்தில் எல்லை மீற வழியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்தான் இந்திரா காந்தி அரசியல் சட்டத்தை முடக்கினார். மக்களுக்கு அது வழங்கியுள்ள உரிமைகள் தேச நலனுக்கு இடையூறாக இருப்பதைச் சகிக்க முடியாது என்றார். நாட்டு நலனுக்காக இந்தக் கசப்பு மருந்தை நான் புகட்ட வேண்டி உள்ளது என்றார். 42வது திருத்தத்தை இயற்றி (1976) நீதிமன்றத்தின் பரிசீலனையிலிருந்து பாராளுமன்றத்தை நீக்கினார். அரசியல் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று ஆக்கினார். பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்தன.. மத்திய மாநிலத் தேர்தல்களைச் சட்டத் திருத்தங்களின் ஊடாகத் தள்ளி வைத்து ஆட்சிக் காலத்தை 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டார். அந்த 21 மாதங்களிலும் பெரிய அளவில் இதற்கெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்ப்புக்கள் இல்லை. பின் ஏன் அவர் 1977 ஜனவரி 18 அன்று நாடாளுமன்றத் தேர்தல்களை அறிவித்தார்? கடும் ஒடுக்குமுறைகளின் போதெல்லாம் அமைதி காத்த இந்திய மக்கள் அடுத்த இரண்டு மாதத்தில் எப்படி இந்திராவின் அதிகாரத்தை முடிவுக்குக் கொணர்ந்தனர்?
21 மாதங்களுக்கு முன் ஒரு நீதிமன்ற ஆணையால் பதவி பறிக்கப்பட்ட போது மகன் சஞ்சையிடம் அதிகாரத்தைத் தற்காலிகமாகக் கொடுத்துவிட்டு, இன்றைய ஜெயாவைப்போல பதவி விலகி வழக்கை எதிர் கொள்ளாமல் அதிரடியாக நெருக்கடி நிலையை அறிவித்த இந்திரா, 1977 மார்ச் 25 அன்று எப்படி அத்தனை அமைதியாக அதிகாரத்தைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொரார்ஜி தேசாயிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

நெருக்கடி நிலை அறிவிப்பு, அத்து மீறல்கள், ஜனதா ஆட்சியின் வீழ்ச்சி முதலியன குறித்தெல்லாம் இன்று விரிவான ஆய்வுகளும் சுவையான தகவல்களும் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஜூன் 25, 1975 அன்று காலை முதல் இந்திரா தரப்பிலும், ஜெயப்பிரகாசர் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பேசிய பேச்சுக்கள் இரவு 10 மணிக்கு மேல் துரித கதியில் இந்திரா தரப்பு மேற்கொண்ட நகர்வுகள் எல்லாம் ஒரு திரைப் படத்தின் சுவையுடன் கூமி க்பூர் போன்ற பத்திரிகையாளர்களாலும், ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்களாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மேலே உள்ள கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தில் அக்கறையுள்ளோரின் இன்றைய பணியாக இருக்க முடியும்.

சுதந்திரத்திற்குப் பின் அடிப்படை உரிமைகள் விரிவாக வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல் சட்டம் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட முடியாட்சிப் பகுதிகள் குடியரசுடன் இணைக்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக ஆளுமைகளில் ஒருவரான ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இங்கே மொழி வாரி மாநிலங்கள் வடிவமைக்கப்பட்டன. தடைகளை உடைத்து இந்து திருமணச் சட்டம். 5 கூறுகளாக நிறைவேற்றப்பட்டது. எத்தனையோ குறைபாடுகள், பின்னடைவுகள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்திய ஜனநாயகம் இப்படித்தான் கிளை பரப்பியது.
இன்னொரு பக்கம் மாநில அளவில் கட்சிகள் உருவாயின. தலைவர்கள் உருவாயினர். கூட்டணி ஆட்சி என்கிற கருத்தாக்கம் மலர்ந்தது. இதுகாறும் அதிகாரம் மறுக்கப்பட்டவர்கள் தம்மை அரசியல் களத்தில் நிறுவிக் கொண்டனர். இது ஜனநாயகப்பாட்டின் அடுத்த கட்டமாக விரிந்தது. இந்த நிலையில்தான் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. பி.என் தர் போன்ற இந்திராவின் நெருக்கத்துக்குரிய அன்றைய அதிகாரிகள் இன்று அதை நியாயப் படுத்தி நூல் எழுதியுள்ளனர், “இந்த அரசியல் சட்டம் இந்திய மண்ணின் மீது வேயப்பட்ட கூரைதான். ஆனால் அதன் ஜனநாயகமற்ற சாரம் அப்படியேதான் உள்ளது” என அரசியல் சட்ட அவையில் அம்பேத்கர் கூறியதைச் சுட்டிக் காட்டி அவர்கள் தமது நடவைக்கைகளை நியாயப்படுத்துகின்றனர். அதாவது இந்தியா ஜனநாயகத்திற்குத் தகுதியற்ற நாடு. எனவே நாங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறித்தோம் என்கின்றனர்.

அது உண்மையாயின் ஜனநாயகத்துக்குத் தகுதியற்ற இந்த மக்கள் அடுத்த 21 மாதங்களில் இந்திராவின் ஜனநாயக மறுப்பை எப்படித் தகர்த்தனர்! ஜனநாயகத்துக்கு இந்திய மக்கள் தகுதியானவர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது என ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்களும், ப்ரான் சோப்ரா போன்ற இதழாளர்களும் முன் சொன்னதற்கு நேர் எதிரான இன்னொரு பதிலைச் சொல்கின்றனர். சோதனைகளை மீறி இந்திய ஜனநாயகம் தழைத்து நிற்கிறது. அதற்கு அடித்தளமிட்டவர்கள் அத்தனை ஆழமாக அதைச் செய்துள்ளனர். இந்த மண்ணில் சர்வாதிகாரமோ பாசிசமோ சாத்தியமில்லை. என்பதுதான் அவர்கள் சொல்வது.
அப்படியாயின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு இராணுவத்தின் கரங்களில் சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இதற்கு ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும், மாநிலக் கட்சிகளும், ஏன் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத வகையில் இடதுசாரிக் கட்சிகளும் ஒத்துழைப்பதை என்னென்பது? பாசிசம் என முழுமையாகச் சொல்ல இயலாவிட்டாலும் அதன் கூறுகள் எனச் சொல்லத்தக்க நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் தலைகாட்டுவதை எப்படிப் பார்ப்பது. எனக்கென்னவோ இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த பதில் மேலே சொன்ன இந்த இரு எதிர் எதிர் நிலைபாடுகளுக்கும் இடையில்தான் உள்ளது எனத் தோன்றுகிறது.

இதைப் புரிந்துகொள்ள நெருக்கடிநிலைக்கால அரசியலை மட்டுமல்லாது அதற்கு முந்திய அரசியல் சூழலையும், மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தபின் அவர் சென்ற திசையையும் உற்று நோக்குவது அவசியம்.

2. ஜெயப்பிரகாசரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

நெருக்கடி நிலையை அன்று ஆதரித்ததன் விளைவாகத் தீராப் பழி சுமக்க நேர்ந்துள்ள சித்தார்த்த சங்கர் ரே, குஷ்வந்த் சிங் முதலானோர் இப்போது தம்மை நியாயப்படுத்திக் கொள்ளச் சொல்வது இதுதான்: “நெருக்க்கடி நிலை அறிவித்தது சரிதான். அன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாதிருந்தது. ஆனால் நடந்த அத்துமீறல்கள் ஏற்கமுடியாதவை.. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டியவை. ஒரு சில தனி நபர்கள்தான் இந்த அத்துமீறல்களுக்குக் காரணம்”.

அத்து மீறல்கள் அவர்கள் சொல்வது போல தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியவை அல்ல. அவை. அவசர நிலை அதிகாரத்தின் தர்க்கபூர்வமான வெளிப்பாடு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நெருக்கடி நிலை அறிவிப்பிற்கான நியாயங்களாக அவர்கள் எதைச் சொல்கின்றனர்?  “ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடந்த தேர்தல்கள், நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆகியன இதுகாறும் அடங்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள், ஆதிவாசிகள் ஆகியோரை அரசியல் படுத்தின. ஒற்றைக் கட்சி ஆதிக்கம் சிதைந்து, இதுகாறும் காங்கிரசுக்குள் இருந்த பல்வேறு குறுகிய பிராந்திய நலன்கள் மேலெழுந்தன. இதனால் அரசியலின் செயற்படு களன் அகன்றது” என்கிறார் பி.என்.தர். அவர் நிறையப் படித்தவர் . அரசியல் அனுபவம் மிக்கவர். அவர் சொல்வது சரிதான். ஆனால் எவையெல்லாம் ஜனநாயக விகசிப்பின் அடையாளங்களாகக் காணப்பட வேண்டியவையோ, அவற்றையே, அவர்கள் ஜனநாயகத்தை முடக்கியதற்கான நியாயமாகச் சொல்வதுதான் கொடுமை.

இந்திராவும் சரி, இந்திராவைச் சுற்றியிருந்தவர்களும் சரி, அடிப்படையில் ஜனநாயக நெறிமுறைகளை வெறுத்தவர்கள். இந்திராவுக்கு அவரது 13ம் வயதிலிருந்து ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவரது புகழ்பெற்ற தந்தை எழுதிய கடிதங்களின் தொகுப்பு இன்று உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. அந்தக் கடிதங்களை எழுதிய காலத்தில் ஐரோப்பவில் உருவான பாசிசத்தைக் கண்டு நேரு மனம் பதறியிருப்பதை அதை வாசிக்கும் நாம் உணர்கிறோம். ஆனால் அவை எந்தத் தாக்கத்தையும் அவரது மகளுக்கு ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது உரையாடல்கள், கடிதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நெருக்கடி நிலை அறிவிப்பும் ஆளுகையும் நிரூபணங்களாக உள்ளன. அவற்றை விரிக்கப் புகின் கட்டுரை நீளும். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இ.எம்.எஸ் தலைமையில் அமைந்திருந்த கேரள அரசைக் கலைத்தது (1959) ஒன்று போதும் இந்திராவிடம் ஊறியிருந்த ஜனநாயக வெறுப்பிற்குச் சான்று சொல்ல.

ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். லைரண்டாம் உலகப் போரின் முடிவை ஒட்டி, பாசிசம் வீழ்த்தப்பட்டது மட்டும் அலாமல், 1950க்குள் இந்தியா உட்படப் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. சீனம் மற்றும் கிழக்கு ஐரோபிய நாடுகள் சிவப்பாயின. இது உலகெங்கிலும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பிக்கைகளை விதைத்தன. தங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அடுத்து இருபதாண்டுகள் காத்திருந்தும் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் இந்த மாற்றங்களின் விளைவாக விகசித்த ஜனநாயக நிறுவனங்களின் ஊடாக அடித்தள மக்கள் அரசியல் களத்திற்கு வந்தனர். 1960களின் இறுதியில் உலகெங்கிலும் இந்த எதிர்ப்புகள் வெடித்ததை நாம் காணலாம். அதன் ஓர் அங்கமாகத்தான் இங்கும் மாநிலக் கட்சிகள் தோன்றின. போராட்டங்கள் வெடித்தன. 1972ல் மக்களுக்குப் பொறுப்பான அரசு, தேர்தல் சீர்திருத்தம் முதலான கோரிக்கைகளோடு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் ஒரு பெரும் எழுச்சி உருவானது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் “மொத்தப் புரட்சி” எனும் முழக்கத்தோடு அது விசுவரூபம் எடுத்தது.

1966ல் பிரதமராக்கப்பட்ட இந்திர, அவரைப் பிரதமராக்கிய பெரியதலைகளின் நம்பிக்கைக்கு மாறாக மிக விரைவில் அவர்களை ஓரங்கட்டத் தொடங்கினார். மாநில அளவிலான ஆளுமைகள் உருவாவதையும் அவர்கள் செல்வாக்கு வகிப்பதையும் அவர் விரும்பவில்லை. 1969ல் காங்கிரஸ் பிளந்தது. காமராசர், நிஜலிங்கப்பா முதலான மாநில அளவிலான பழைய தலைவர்கள் ‘பழைய காங்கிரஸ்’ ஆகவும், இந்திராவைப் பின்பற்றிய பெரும்பான்மையோர் ‘புதிய காங்கிரஸ்’ ஆகவும் பிரிந்தனர். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்திரா வங்கிகளை தேச உடமையாக்குவது, மன்னர் மாநியங்களை ஒழிப்பது முதலான கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். “‘வறுமையை ஒழிப்போம்” என்கிற முழக்கததை மிதக்கவிட்டார். எந்த வகையிலும் சோஷலிசச் சிந்தனை இல்லாதவரான இந்திரா மூத்த தலைவர்களை வீழ்த்தி தன்னிடம் மட்டுமே அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளவே இவற்றைச் செய்தார். ஏழை மக்களுக்கு உரிய வருமானம் கிடைக்கும் வகையில் திட்டங்களை உருவாக்குவது, வரிச் சீர்திருத்தங்களை அமுலாக்குவது முதலான இதர சோஷலிச நடவடிக்கைகள் ஏதுமில்லாமல் இவர் மேற்கொண்ட “வறுமை ஒழிப்பு” முயற்சிகள் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கும், பணவீக்கத்திற்குமே காரணமாயின.
1971ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி கண்டது அவரது செல்வாக்கை உயர்த்தினாலும் போர் ஏற்படுத்திய நிதிச் சுமை நிலைமையை மேலும் மோசமாக்கியது.1969 -70ல் 0.12 சதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை 1972 -73ல் 1.83 சதமாகியது. 1972ல் பருவ மழை பொய்த்ததும், 1973ல் ஏற்பட்ட உலகளாவிய எண்ணை விலை ஏற்றமும் நிலைமைய மோசமாக்கின. வறுமை ஒழிப்புத் திட்டச் செலவுகள் குறைக்கப்பட்டது, விலைவாசி ஏற்றம், உணவுப் பொருள் பற்றாக்குறை முதலியன நிலைமையை மோசமாக்கின.

இந்தப் பின்புலத்தில் குஜராத்திலிருந்த ஒரு ஊழல் மிகு முதல்வரான சிமன்பாய் படேலுக்கு எதிராக உருவான இயக்கம் ஜெயப்பிரகாசர் தலைமையில் பிஹார் முதலான வட மாநிலங்கள் .பலவற்றிலும் பரவியது.
30 ஆண்டு காலம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் திடீரென மீண்டும் இப்படித் தீவிர அரசியலில் இறங்கியதும் ஒரு வியப்புக்குரிய நிகழ்வுதான். நேரு குடும்பத்தின் மீது அவருக்குப் பெரிய மரியாதை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஜெயப்பிரகசர், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் முதலான சோஷலிஸ்டுகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். காங்கிரஸ் மேலிருந்த வெறுப்பில் அவர்கள் மதவாத சக்திகள் உள்ளிட்ட யாருடனும் கைகோர்த்துக் கொள்வர், ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனசங் மட்டுமின்றி சுப்பிரமணிய சாமி உட்பட ஜெயப்பிரகாசருக்கு நெருக்கமாக இருந்ததை நாம் மறந்துவிட இயலாது. ஆர்.எஸ்.எஸ்சைப் ‘பாசிஸ்ட்” எனச் சொன்னவர்களைப் பார்த்து “அப்படியானால் நானும் பாசிஸ்ட்தான்” எனச் சீறும் அளவிற்கு ஜெயப்பிரகாசர் அதனுடன் நெருக்கம் காட்டினார். பதவி ஆசை இல்லாதவர், அப்பழுக்கற்ற நேர்மையாளர், காந்தியவாதி என்கிற அளவில் எல்லோராலும் மதிக்கப்பட்டவராயினும் ஜெயப்பிரகாசரைப் பொருத்த மட்டில் காந்தியைப் போல அரசியல் கூர்மை உடையவரோ, பெருந்திரளான மக்களை அரசை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபடுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசியல் நிதானமுடையவரோ அல்ல.

அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் இந்திராகாந்திமீது தேர்தலில் ஊழல் செய்ததாக ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் நீதியரசர் ஜக்மோகன் லால் சின்ஹா, இந்திராவின் வெற்றியைச் செல்லாததாக்கியது (ஜூன் 12, 1975) ஜெயப்பிரகாசரின் போராட்டத்திற்குப் புத்தெழுச்சியை அளித்தது. தேர்தல் பிரச்சாரர மேடை அமைக்கக் காவல்துறையைப் பயன்படுத்தியது, அரசதிகாரி ஒருவர் பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே இந்திராவுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டது ஆகிய ஒப்பீடளவில் சாதாரணக் குற்றங்களுக்குத் தேர்தலையே செல்லாததாக்குவது என்பதான சட்டம் இருப்பதும், அதை நீதிமன்றங்கள் அப்படியே பயன்படுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்கிற விமர்சனம் இன்றளவும் உண்டு. இந்திராவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர் கீழ் நீதி மன்றத் தீர்ப்பை உறுதிப் படுத்தினார். இந்திரா மேலும் ஆறு மாத காலம் பதவியைத் தொடரலாம் ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க இயலாது என்றார்.

இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் ஜூன் 24. அடுத்த நாள் மாலை டெல்லி ராம் லீலா மைதானத்தில் “இந்திரா பதவி விலக வேண்டும்” என்கிற கோரிக்கையின் அடிப்படையில் நாடெங்கிலுமான போராட்டத்தை அறிவிக்க மிகப் பெரிய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. ஜெயப்பிரகாசரைக் கூட்டதிற்கு அழைத்துவரச் சென்றவர் அப்போதுதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து ஜானசங் கட்சியில் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கப்பட்டிருந்த சுப்பிரமண்ய சாமி. வரும் வழியில், “இந்திரா இராணுவ ஆட்சியைப் பிரகடனப் படுத்தினால் என்ன செய்வது?” என சாமி கேட்டபோது சிரித்துவிட்டு ஜெயப்பிரகாசர் சொன்னார்: “நீ ரொம்ப அமெரிக்கமயமாகிவிட்டாய். இந்தியாவில் அப்படி நடக்காது. மக்கள் புரட்சி செய்வார்கள்”.

அன்று ஜெயப்பிரகாசரின் பேச்சு கடுமையாக இருந்தது. “காவல்துறை, இராணுவம் எல்லாவற்றையும் உத்தரவுகளுக்குப் பணிய வேண்டாம்” எனச் சொல்லி அரசைக் கவிழ்த்துப் பெருங் குழப்பம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையில் நாங்கள் வேறென்ன செய்ய இயலும் என இந்திரா திரும்பத் திருமபச் சொல்லித் தனது நெருக்கடி நிலை அறிவிப்பை நியாயப்படுத்துவதற்கு ஜெயப்பிரகாசரின் பேச்சு அன்று வழிகோலியது.
அடுத்த சில மணி நேரத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடங்கியது. கடும் பத்திரிக்கைத் தணிக்கை அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயப்பிரகாசர் எதிர்பார்த்ததுபோல இந்தியாவில் புரட்சி ஏதும் ஏற்படவில்லை.

3. இந்திராவின் மூன்றாவது முகம்

உண்மையில் அவசர நிலை அறிவிப்புச் செய்யும் அளவிற்கு அன்று நிலைமை இல்லை. ஜெயப்பிரகாசரின் ஆணையை ஏற்று மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் நிலை ஏதும் அன்று இல்லை. உளவுத் துறை அப்படியெல்லாம் கலவரச் சூழல் உள்ளது என அரசுக்குதகவல் ஏதும் தராத நிலையிலேயே இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் வாக்களிக்க இயலாமல் சிறகுகள் முறிக்கப்பட்ட ஒரு பிரதமராகத் தொடர அவர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

தொடர்ந்த அத்துமீறல்கள் உள்நாட்டில் பெரிய அளவில் கண்டிக்கபடாவிட்டாலும் ரோசென்தால், ஈ.பி.தாம்சன், பெர்னார்ட் லெவின், ஜான் க்ரிக் முதலான மத்திக்கத்தக்க வெளிநாட்டு இதழாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ‘டைம்ஸ்’, ‘கார்டியன்’ முதலான பத்திரிக்கைகளின் விமர்சனங்களுக்கும் உள்ளாயின. வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் நேருவுடன் அவரது மகளை ஒப்பிட்டுக் கண்டித்தது குறிப்பிடத் தக்கது. இந்த விமர்சனங்களும், மக்களிடமிருந்து பெரிய எதிர்ப்புகள் ஏதும் வராமையும், சுற்றி இருந்த ஒத்தூதிகள் அளித்த தைரியமும் 18 மாதங்களுக்குப் பின் (ஜனவரி 1977) இந்திரா நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பைச் செய்யக் காரணமாயின.
தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெறும் 153 இடங்களை மட்டுமே பெற்றது. ஜனதா கட்சி 298 இடங்களையும் அதன் ஆதரவுக் கட்சிகள் 47 இடங்களையும் பெற்றன. ஜெயப்பிரகாசர் எதிர்பார்த்ததுபோலப் பெரிய அளவில் புரட்சியில் இறங்காத இந்திய மக்கள் ஜனநாயக நெறிமுறைகளின் ஊடாகச் சரியான தீர்ப்பை வழங்கினர்.

21 மாத காலம் எல்லா அநீதிகளையும் மக்கள் பொறுத்திருந்ததை இந்திரா தவறாகப் புரிந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட காலத்திலும் கூட இதை விட மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காந்தி, நேரு போன்றோர் பல்லாயிரம் சத்தியாக்கிரகிகளோடு சிறையிடப்பட்டபோதும் கூட மக்கள் அப்படித்தான் இருந்தனர். ஆனால் அன்றைய தலைமை போராட்டங்களின்போது மக்கள் காட்டிய உற்சாகத்தையும், பின்னர் கடைபிடித்த அமைதியையும் ஜெயப்பிரகாசரையோ, இல்லை இந்திராவையோ போலத் தவறாக மதிப்பிட்டுவிடவில்லை.

ஜனதா கட்சி ஒரு கலப்படமான கோமாளிகளின் கூடாரம் என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் உறுதியாகியது. இரண்டு நிகழ்வுகள் இதனூடாக நடந்தன. ஒன்று, நெருக்கடி காலத்தில் இந்திரா 42வது அரசியல் சட்டத் திருத்தம் (1976) ஒன்றை உருவாக்கி நெருக்கடி நிலை அறிவிப்பு செய்வதையும், அதைத் தொடர்வதையும் எளிதாக்கி இருந்தார். ஜனதா ஆட்சி நிறைவேற்றிய 44வது திருத்தத்தின் (1978) ஊடாக முன்னதாக இந்திரா செய்திருந்த ஜனநாயக விரோதத் திருத்தங்கள் சரி செய்யப்பட்டன. நெருக்கடி நிலை அறிவிப்பு மேலும் கடுமையாக்கப்பட்டது. நாடாளுமன்ற ஒப்புதல், நீதிமன்றத் தலையீடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கப்பட்டன.
மற்றது காந்தி கொலைக்குப் பின் சற்றே ஓரங் கட்டப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங் கட்சிகள் மேலுக்கு வந்து மையநீரோட்டத்தில் இடம் பெற்றன, ஜனதாகட்சியை உடைத்து வெளியே வந்த பழைய பாரதீய ஜனசங் இப்போது பாரதீய ஜனதா கட்சியாக வடிவெடுத்தது. இந்த இரண்டாண்டு கோமாளித் தனங்களின் விளிவாக விரைவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் இருந்த ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா பிரதமர் ஆனார்.

இந்திராவின் ஆட்சிக் காலத்தில் அவரது அணுகு முறைகள் முன்று விதமாக இருந்தன. 1966- 75 காலகட்டத்தில் சோஷலிச முழக்கங்களின் ஊடாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 1975 -77 காலகட்டத்தில் நெருக்கடி நிலை அதிகாரம் அவருக்குக் கைகொடுத்தது. நெருக்கடிநிலை மற்றும் ஜனதா ஆட்சிக்குப் பிந்திய மூன்றாவது கட்டத்தில் (1980 – 84) அவரது ‘பாப்புலிச’ அரசியல் இன்னொரு ஆபத்தான திசையை நோக்கி நகர்ந்தது. இனி அரசியல் களத்தில் முக்கிய எதிரியாக அமையப்போகிற பா.ஜ.கவின் அரசியலைத் தான் வரித்துகொண்டு ஒருவகைப் பெரும்பான்மை வாத அரசியலை முன்வைத்து மதம் மற்றும் இதர ஆதிக்க சக்திகளின் துணையோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் மேற்கொண்ட அரசியல் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி காலமாக இர்ந்தது என சுகுமார் முரளீதரன் போன்ற அரசியல் கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருபக்கம் முளைவிடத் தொடங்கியிருந்த உலகமயச் சூழலுடன் இயைந்து (1981) உலக நிதி நிறுவனங்களின் உதவியைப் பெற்றுப் பற்றாக்குறைகளை ஈடுகட்டுவது இன்னொரு பக்கம் வெளிப்படையாக பெரும்பான்மை மதவாதத்துடன் அடையாளம் காண்பது என்பதாக அவரது இந்த மூன்றாவது அணுகுமுறை அமைந்தது. இக்காலகட்டத்தில் மதக் கலவரங்கள் பெருகின. மொரதாபாத் (1980), மும்பை (1984), மீருட் (1982), நெல்லி (1983) முதலான இடங்களில் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. மொத்தத்தில் 1980ல் 427, 81ல் 319, 82ல் 474, 83ல் 500 மதக் கலவரங்கள் நடந்தன. 1981ல் 196 பேர்களும், 92ல் 238 பேர்களும், 83ல் 1143 பேர்களும் இக்கலவரங்களில் கொல்லப்பட்டனர். ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

கலவரங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லாததால் அதிருப்தியுற்ற முஸ்லிம் தலைவர்கள் தாங்கள் ஒத்துழையாமையைத் தொடங்குவோம் என அறிவித்தபோது, “அருகிலுள்ள பெரும்பான்மையை விரோதித்துக் கொண்டு எந்த ஒரு சிறுபான்மையும் பிழைத்துவிட முடியாது” என இந்திரா பதிலளித்ததை ஆர்.எஸ்.எஸ்சின் அதிகார பூர்வ இதழான ஆர்கனைசர் பாராட்டியது. 1983ல் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்தபோது எந்த ஆதாரமும் இன்றி, “மதமாற்றம் செய்வதற்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறது” என்றார். அரிதுவாரில் விஸ்வ இந்து பரிஷத் கட்டிய பாரத மாதா கோவிலைத் திரந்து வைத்தார். இப்படி நிறையச் சொல்லலாம்.

இந்த அணுகல்முறை வாழ்ந்த காலத்தில் அவருக்கு அரசியல் ஆதாயத்தைத் தந்தபோதும் அடுத்த சில ஆண்டுகளில் அது காங்கிரசின் பிரதான எதிரியாக பா.ஜ.க உருவாவதற்கே இட்டுச் சென்றது. ராம ஜென்ம பூமிக் கோரிக்கையோடு அது மேலுக்கு வர இந்திராவின் இந்திராவின் இக்கால அணுகல் முறை பாதை வகுத்துத் தந்தது. காங்கிரஸ் இன்று வரை நெருக்கடி நிலை அறிவிப்பிற்காகத் தன்னைச் சுய விமர்சனம் செய்து கொள்ளவில்லை. நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே இங்கே இந்த இரு கட்சிகள் மட்டுமின்றி, பல முக்கிய மாநிலக் கட்சிகளின் விருப்பாகவும் உள்ளது. நெருக்கடி நிலை அறிவிப்பில்லாமலேயே ‘கலவரப் பகுதி’ என்றெல்லாம் அறிவித்து அப்பகுதி மக்களின் உயிர் வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் ரத்து செய்து இராணுவம் மற்றும் துணை இராணுவங்களுக்கு வானளாவிய அதிகாரங்களைத் தரக்கூடிய ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFPSA), ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (UAPA) முதலிய ஜனநாயக விரோதச் சட்டங்கள் இங்கு தொடர்கின்றன. இதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கபடாத ஒரு நெருக்கடி நிலை தொடரத்தான் செய்கிறது.

சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில் எல்லாக் காலத்திலுமே இப்படியான ஏதோ ஒரு சட்டம் நடைமுறையில் இருந்து வந்துள்:ளது என்பதும், இவற்றிற்கு எதிராக நீதிமன்றங்களை அணுகும் போதெல்லாம், அவை இத்தகைய சட்டங்களை இயற்றிச் செயல்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்து வருவதும் ஜனநாயக நெறிமுறைகளில் அக்கறை உள்ள அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று.
இந்திராவின் நெருக்கடி நிலை அறிவிப்பை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்திய ஜனநாயகம், வளர்ந்து வரும் இந்த மதவாதத்தையும், அதனால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு எதிர் எதிராக நிறுத்தப்படுவதையும் அதேபோல வெர்றிகரமாக எதிர் கொள்ளுமா என்பதுதான் இன்றைய கேள்வி.

இந்தியா ஜனநாயகத்திற்குத் தகுதியானது அல்ல, அரசியல் சட்ட உரிமைகள் ரத்து செய்யப்பட்ட சர்வாதிகாரமே இங்கு நிலைக்கும் என்பதை நெருக்கடி கால அனுபவம் பொய்யாக்கியது. அதே நேரத்தில் இங்கே ஜனநாயகம் ஆழ வேர் கொண்டுள்ளது, எதுவும் இதை அசைக்க முடியாது என்கிற மமதையும் ஆபத்தானது என்பதை நெருக்கடி நிலைக்குப் பிந்திய காலம் நமக்கு உணர்த்துகிறது.

இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?

பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ சேனா, தெலுகு தேசம், பிஜு ஜனதா தளம் முதலியனவும் தத்தம் பங்கிற்கு அதிக பட்ச இடங்களைக் குவித்துள்ளன. இது இவர்களுக்கு வரலாறு காணாத வெற்றி. இதற்கு முன் அவர்கள் பெற முடிந்த அதிக பட்ச இடங்கள் 198 தான் (1998 / 99). அது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களால் இம்முறை கால் பதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஒரு ‘தேசிய’க் கட்சியாகவும் இம்முறை அவர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்கள் என்கிற எல்லையையும் தாண்டி அஸ்ஸாம் முதலான வட கிழக்கு மாநிலத்திலும் முதன் முதலில் வலுவாகக் கால் பதித்துள்ளனர். இமாசல பிரதேசம் தொடங்கி கர்நாடகம் வரையிலும் பரவலாகப் பா.ஜ.கவின் வெற்றி அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி சகல தரப்பு மக்களையும் உள்ளடக்குவதாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் ஆகியோரைக் குறி வைத்து அவர்கள் இம்முறை வேலை செய்தனர். மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்கிற அடையாளத்தை அழுத்தம் கொடுத்து முன்னிறுத்தினர். அவரும் தான் பிற்படுத்தப்பட்டவன் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்வதால் முற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகள் தமக்கு வராமற் போய்விடுமோ என்கிற அச்சம் அவருக்கும் இல்லை, அவருடைய கட்சிக்கும் இல்லை. ஏனெனில் தங்களின் கட்சி அது எனவும் தங்களின் நலனை அது விட்டுக்கொடுக்காது எனவும் உறுதியான நம்பிக்கை இங்குள்ள உயர் சாதியினருக்கு பா.ஜ.க மீது எப்போதும் உண்டு.

ஆக புவியியல் அடிப்படையிலும் சாதி, மொழி, இன அடிப்படையிலும் பரவலான ஆதரவுடன் பா.ஜ.கவின் வெற்றி இன்று அமைந்துள்ளது.

காங்கிரஸ் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் படு தோல்வி அடைந்துள்ளன. தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் அவர்களின் இருப்பே இல்லாமற் போய்விட்டது. கங்கிரஸ் மட்டுமல்ல இடதுசாரிகளும் அடித்த புயலில் அடையாளம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த நாடாளுமன்றத்தில் ஒரே ஒருஉறுப்பினர்தான். அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை அது ஏற்கனவே இழந்தாயிற்று, வாக்கு எந்திரத்தில் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை (நோடா) என்கிற பொத்தானை எழுத்தியவர்களின் எண்னிக்கையைக் காட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதைச் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தன் அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை இழக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. வெறும் 9 இடங்களை மட்டுமே அவர்களால் பெற முடிந்துள்ளது. மே.வங்கத்தில் அவர்களுக்கும் இரண்டு உறுப்பினர்கள்தான், பா.ஜ.கவிற்கும் இரண்டு உறுப்பினர்கள்தான். முக்கிய மூன்று மாநிலக் கட்சிகள் அதிக வெற்றிகளைக் குவித்துள்ளன. அ.தி.மு.க, திருனாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் முதலியன இதில் அடக்கம். ஆந்திரம் உடைந்து உருவான இரு மாநிலங்களிலும் கூட மாநிலக் கட்சிகளே முதன்மை பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு உயரும்; டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருப்பர் என ஆருடம் சொல்லியவர்களும் ஏமார்ந்து போயுள்ளனர். இதில் மிகவும் ஏமார்ந்து போனவர் ஜெயலலிதாதான். வரலாறு காணாத வெற்றியை அவர் குவித்துள்ள போதும் அந்த மகிழ்ச்சியை அவரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. டெல்லியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டு, 40 சீட்களுடன் தான் பிரதமர் ஆவது என்கிற கனவை அவர் வெளிப்படையாக முன்வைத்து வந்தவர்தான். தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் “பாரதப் பிரதமர்” என்றே அவரது கட்சிக்காரர்கள அவரை விளம்பரப் படுத்தினர். அவர் அதைக் கண்டித்ததில்லை. இன்று அந்தக் கனவு பொய்த்துப் போய்விட்ட ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிகிறது.

ஆனாலும் வாக்கு வீதத்தைப் பொறுத்த மட்டில் பா.ஜ.க காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து (31 + 19.3) மொத்தம் 50 சத வாக்குகளைத்தான் பெற்றுள்ளன. இடதுசாரிகள் ஒரு நாலு சதம் எனக் கொண்டால் மீதம் 46 சத வாக்குகளை மாநிலக் கட்சிகள்தான் பெற்றுள்ளன, ஆனால் இந்தியத் தேர்தல் முறையில் (First Past the Post System) வாக்கு வீதமும் வெற்றி வீதமும் ஒன்றாக இருப்பதில்லை. 3.3 சத வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க 37 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் அதே அளவு வாக்கு வீதம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ளது வெறும் 9 உறுப்பினர்கள்தான். 31 சத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க 278 இடங்களையும் 19.3 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்றிருப்பதும் கூட இந்தத் தேர்தல் முறையின் அபத்தந்தான். அதனால்தான் தேர்தல் சீர்திருத்தத்தை வேண்டுவோர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற கோரிக்கையைத் முன்வைக்கின்றனர்.

பா.ஜ.கவின் இந்த வெற்றிக்குப் பின்னால் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் இருந்தது ஊரறிந்த இரகசியம். ஒரு கணிப்பின் படி மோடியை முன்நிறுத்தி பா.ஜ.க இம்முறை செய்த செலவு 500 கோடி ரூபாய். ஒபாமா சென்ற தேர்தலில் செலவிட்ட மொத்த தொகையே 600 கோடிதான்.

ஆனாலும் இப்படித்தான் பா.ஜ.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என நான் சொல்ல மாட்டேன். மக்கள் விரும்பித்தான் பா.ஜ.கவையும் மோடியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் மீது கடுமையான ஒரு வெறுப்பை ஊடகங்கள் வெற்றிகரமாகக் கட்டமைத்திருந்தன. ஊழல், செயலின்மை, உறுதியற்ற தன்மை, பொருளாதாரச் சரிவு எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் ஆட்சியே காரணம் என மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சில முக்கிய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சில புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது என்பதெல்லாம் மக்களின் கவனத்தில் ஏறவில்லை.

காங்கிரசை வெறுக்க உண்மையில் வேறு பல நியாயமான அடிப்படைகள் இருந்தன. அயலுறவில் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவை மேற்கொண்டது, பொருளாதாரத்தைத் திறந்து விட்டது…இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் இதற்காக வெறுக்கப்படவோ தோற்கடிக்கப்படவோ இல்லை. இந்த அம்சங்களில் காங்கிரசை விடத் தீவிரமான அணுகல்முறைகளை உடைய பா.ஜ.கவைத்தான் இன்று மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் மக்கள் உற்சாகமாகப் பங்கு பெற்றனர், 63.8 சத வாக்குப் பதிவு என்பது வரலாறு காணாத ஒன்று. இந்த முறை வாக்களித்த 550 மில்லியன் பேர்களில் 100 மில்லியன் பேர் புதிய தலைமுறையினர். உலகமயச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். “வளர்ச்சி” என்கிற முழக்கத்தை அவர்கள் மனப்பூர்வமாகக் கொண்டாடினர். அவர்களுக்குப் பாசிசம் அல்லது கம்யூனிசம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. குஜராத் 2002 என்பதெல்லாம், அதில் மோடியின் பங்கு என்பதெல்லாம் அவர்களது கவனத்தில் படியாத ஒன்று.

அப்புறம் உலக மயச் சூழலில் ஊதிப் பெருத்துள்ள மத்திய தர வர்க்கம். இதனுடைய ஆதரவும் பா.ஜ.க அரசியலுக்குத்தான், இந்து நாளிதழின் வித்யா சுப்பிரமணியம் இந்தி பேசும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பலரையும் சந்தித்து அவர்களின் மனநிலையை எழுதியிருந்தார், வித்யா சந்தித்தவர்களில் ஒருவர் ராம் அஷ்ரேய். மோடியை அவர் ஆதரிப்பதற்குச் சொல்லும் காரணம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.

“எல்லையில் நமது படை வீரர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன. நாட்டைப் பாதுகாக்கத் தக்க வலிமையான பிரதமர் நமக்கு வேண்டும்…”

அவர் எதைச் சொல்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில் எல்லையில் பாக் மற்றும் சீன இராணுவங்களின் அத்துமீறல்கள் குறித்த பிரச்சினையைச் சொல்கிறார்.

இந்தப் பிரச்சினைகளை நான் அதே காலகட்டத்தில் மிக விரிவாக ஆராய்ந்து இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இந்தப் பிரச்சினையில் பொறுமையாகவும், அயலுறவு நெறிமுறைகளின்படியும், அற அடிப்படையிலும், இரு நாட்டு மக்களின் நலன்களின் நோக்கிலும் மிகச் சரியாக நடந்து கொண்டது காங்கிரஸ் அரசு. குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ஆன்டனியின் பண்பான அணுகல்முறையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால் அது நமது பலவீனத்தின் அடையாளம்; இந்திய அரசு “உறுதியான” ஒரு நிலையை எடுத்திருக்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் அன்றைய நிலைபாடு. அந்த நிலைப்பாடும் மத்திய தர வர்க்கத்தின் மனநிலையும் ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது.

ஆக உறுதியான, வளர்ச்சியை முன்நிறுத்தக்கூடிய ஒரு அரசை பா.ஜ.கவும் மோடியும் சாதிப்பர் என்கிற நம்பிக்கையோடு மக்கள் விருப்பபூர்வமாக இந்தத் தேர்வைச் செய்துள்ளனர் என்பதுதான் உண்மை. தேர்தலில் மக்களின் உற்சாகமான பங்கேற்பும் இதை உறுதி செய்கிறது.

இந்தத் தேர்வைச் செய்த எல்லோரும் பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலையோ, திட்டங்களையோ, தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்படும் இந்த அம்சங்களையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தொடக்கத்தில் ஒரளவு எல்லோரையும் அனுசரித்துப் போகிறவர் போலப் பேசிய மோடியும், பா.ஜ.கவும் போகப் போக வெளிப்படையான இந்துத்துவ அரசியலைப் பேசினர். ராமனின் பெயரால் சூளுறைத்தனர்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பொறுத்த மட்டில், இந்துத்துவக் கருத்துக்களுக்காக மோடியை ஆதரிக்காதவர்களும் கூட, அவரது பிந்தைய தீவிரமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்காகக் கவலைப்படாதவர்களாகவும் அவர்கள் உள்ளதுதான் பிரச்சினை.

மோடியையும் காங்கிரசையும் இன்று ஆதரித்து வாக்களித்துள்ளவர்கள் 30 சதம்பேர். ஆதரவு சக்திகளையும் சேர்த்துக் கொண்டால் 40 சதம் பேர். ஆனால் இதே அளவும் இதை விட அதிகமாகவும் மோடியையும் பாஜக அரசியலையும் ஏற்காதவர்களும் உளர். குறிப்பாக 180 மில்லியன் முஸ்லிம்களில் 99 சதம் பேர் மோடியை எக்காரணம் கொண்டும் ஏற்காதவர்கள். இந்த மக்கள் தொகை பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். இவர்கள் மனத்தில் இன்றொரு அச்சமும் பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதே உண்மை. இத்தகைய அச்சம் ஒரு ஜனநாயக ஆளுகைக்குப் பொருந்தாத ஒன்று.

இதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பா.ஜ.கவை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இது குறித்துக் கவலைப் படுவதாக இல்லை. இப்போதே அவர்கள் தங்களின் ‘அஜெண்டா”வை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

இறுதியாகத் தமிழகச் சூழல் குறித்து ஒரு சொல்.மோடி அலை வீசாத இரு மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மற்றது கேரளம். இங்கே அந்தக் கூட்டணியின் சார்பாக வென்றவர்கள் இருவரும் மோடி அலை இல்லவிட்டாலும் இங்கு வெல்லக் கூடியவர்களே. கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியில் பிளவு பட்ட ஒரு மாநிலம், இங்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவினர். தற்போது வெற்றி பெர்ற பா.ஜ.க வேட்பாளர் ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றவர். தருமபுரியில் வென்ற அன்புமணியைப் பொருத்த மட்டில் அப்பட்டமான சாதி அரசியலின் வெற்றி அது.

மோடி மற்றும் பா.ஜ.க ஆட்சியில் தமிழ் ஈழம் மலரும் என்றெல்லாம வாக்களித்த வைகோ இன்று படு தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் 12ல் தம் தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினை குறித்து வாய்திறக்காதவை இரண்டே இரண்டு கட்சிகள்தான். அவை பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும். ஈழப் பிரச்சினைக்காகத்தான் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தேன் எனச் சொல்லிய வைகோவிற்கு இது கடை வரையில் தரும சங்கடந்தான். ஆம் ஆத்மி கட்சி இங்கு படு தோல்வி அடந்துள்ளது. இந்திய அளவிலும் அது 4 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

ஈழப் போராட்டத்தை முழுமையாகத் தொடக்கம் முதல் ஆதரித்து வந்த நெடுமாறன் அவர்கள் இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக்கும் பா.ஜ,கவிற்கும் அணுகல் முறைகளில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருக்கப்போவதில்லை.

காந்தியும் இந்து மதமும்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து மாறுபடுவர்கள் மட்டுமின்றி, பொதுவில் என்னுடன் உடன்படுபவர்களும் கூட, “அதெப்படிங்க, காந்தி வருணாசிரமத்தையும் சாதிமுறையையும் ஏற்றுக்கொண்டவர் தானே. அவரைச் சனாதன எதிர்ப்பாளர் என்பதுபோல நீங்கள் முன்வைப்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று குடைந்தெடுத்தனர்.

இதற்குப் பதில் சொல்லி தமிழ்ச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது அத்தனை எளிதன்று. எதார்த்தங்களை அவற்றின் சிக்கலோடு புரிந்து கொள்ள முயலாமல் எதையும் மிகை எளிமைப்படுத்தி, “இப்படி அல்லது அப்படி” எனத் தட்டையாகப் புரிந்து கொள்ளும் பண்பு வலுப் பெற்றுள்ள இன்றைய சூழலில் காந்தியைப் பற்றி அப்படித்தான் ஒரு எதிர்மறையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. புத்த பகவன் சொன்ன ‘யானையைப் பார்த்த குருடர்களின் கதை’ அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருத்தமானதுதான்.

அவர்களுக்கு நான் பதில் சொல்வதற்குப் பதிலாக வேறு சில கேள்விகளை எழுப்புவது வழக்கம். அப்படியானால் ஏன் கோட்சே குழுவினர், சாவர்க்கர் உட்பட காந்தியைக் கொல்வதில் முனைப்புக்காட்டிக் கடைசியில் தம் முயற்சியில் வெல்லவும் செய்தனர்? வாக்களித்தபடி பாகிஸ்தானுக்கு 50 கோடிகளைக் கொடுப்பதற்கு காந்தி அழுத்தம் கொடுத்ததற்காகத்தான் தான் அவரைக் கொன்றதாக கோட்சே நீதிமன்றத்தில் சொன்னது உண்மையானால், நாட்டுப் பிரிவினை என்கிற பேச்சு எழும்பும் முன்னரே இதே குழுவினரும் இவர்களை ஒத்தவர்களும் அவரைக் குறைந்த பட்சம் ஐந்து முறை கொல்ல முயற்சித்தது ஏன்? காந்திக்கு எதிராக அவரை “வர்ண சம்ஹாரம்” செய்ய வந்தவர் என வரையறுத்து சென்னையிலிருந்து “ஆர்ய தர்மம்” என்றொரு இதழ் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டதன் பொருள் என்ன?

காந்தியைப் புரிந்துகொள்ள இந்தக் கேள்விகள் முக்கியமானவை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் இரு பதில்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று சுதந்திர இந்தியா இந்து ராஷ்டிரமாக உருப் பெறுவதற்கு ஒரு வலுவான தடையாக அவர் இருந்தார் என்பது. காந்தி பல்வேறு சாதி, மதம், மொழி பேசும் மக்களின் தேசமாக இந்தியாவைக் கற்பிதம் செய்தார், சாவர்க்கரும் மற்றவர்களும் இந்தியாவை இந்துக்களின் தேசமாகக் கற்பிதம் செய்ய முயன்று காந்தியின் மக்கள் செல்வாக்கின் முன் படு தோல்வி அடந்தனர், காந்தியின் தேசியம் பன்மைத்துவம் சார்ந்தது. அது ஒரு உள்ளடக்கும் தேசியம் (inclusive nationalism). அவரை எதிர்த்தவர்களின் தேசியம் இந்துக்கள் தவிர மற்றவர்களை விலக்கும் தேசியம் (exclusive nationalism).

மற்றது அவர் இந்து மதம் குறித்து முன்வைத்த வாசிப்புகள் முற்றிலும் சனாதனத்திற்கு எதிராக இருந்தன. குறிப்பாக இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது என அவர் முன்வைத்த வலுவான கருத்துக்களைச் சனாதனிகளால் ஏற்கவே இயலவில்லை. காந்தி ஆலயப்பிரவேச இயக்கத்தை முன்னெடுத்தபோது, அவரது தமிழக வருகையை எதிர்த்து “காந்தீ, திரும்பிப் போ” எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. சிதம்பரம் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டன. காந்தியை இழிவுபடுத்தி, “ தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்” என்றொரு நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. என்னுடைய முன்னுரையுடன் அந்நூல் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி தீண்டத்தகாதவர்கள் பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்களில் நமக்கும் சில மாறுபாடுகள் உண்டு. ஆனாலும் பெரியார் உள்ளிட்ட சாதி ஒழிப்புப் போராளிகள் இந்தத் திசையில் பேசியவற்றையும், செய்தவற்றையும்கூடச் சகித்துக் கொண்டவர்கள் காந்தி அதைச் செய்த்தபோது கொதித்தெழுந்தனர். ஏன்? சாதி ஒழிப்புப் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களை எழுச்சி கொள்ளச் செய்தனர். காந்தியோ பாதிக்கப்பட்டவர்களோடு நில்லாமல் யார் பாதிப்பிற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்களிடமும் பேசினார். அவர்களையும் களத்தில் இறக்கினார். சென்ற நூற்றாண்டில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மக்கள் இயக்கங்களிலொன்றாக காந்தியின் தலைமையிலான ஆலயப் பிரவேச இயக்கம் அமைந்தது என இன்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

காந்தி தீண்டாமைக்குக் காரணமானவர்களை நோக்கிப் பேசியதாலேயே அவரின் மொழி இதர சாதி ஒழிப்புப் போராளிகளின் மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மொழி தோற்றத்தில் மென்மையாக இருந்த போதிலும் இந்து மதத்தின் அடிப்படைகளை அசைப்பதாகவும் இருந்ததைப் புரிந்து கொண்டதால்தான் அவரைச் சனாதனிகள் ‘வர்ண சம்ஹாரம்’ செய்ய வந்தவராகப் பகைத்தனர்.

காந்தியின் இந்து மத வாசிப்பு மரபு வழி வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று மட்டும் அவர் சொல்லவில்லை, ஆலய வழிபாடுகள், மதச் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றையும் விலக்கி வாழ்ந்தவர் அவர். ஆலயங்களை விபச்சார விடுதிகள் என்கிற அளவிற்கு அவர் ஒப்பிட்டுப் பேசியபோதும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகள் தீண்டாமையை இந்துச் சமூகம் கடை பிடிப்பதன் விளைவுதான் என்று சொன்னபோதும் இங்கு ஏற்பட்ட சர்ச்சைகளும் கண்டனங்களும் நினைவுகூரத் தக்கன. வருணாசிரமம் குறித்த அவரது தொடக்க காலக் கருத்துக்களும் கூட இறுதியில் பெரிய அளவில் மாறின.

இராமனை அவர் ஒரு இலட்சிய மானுடனாகவும், இராம ராஜ்யம் என்பதை ஒரு இலட்சிய அரசாகவும் மட்டுமே அவர் முன்வைத்தார். இராமாயணத்தை ஒரு வரலாற்றுக் காவியமாகவோ, இராமனை ஒரு வரலாற்று நாயகனாகவோ முன்வைப்பதை அவர் மற்றுத்தார். வேறு சொற்களில் சொல்வதானால் காந்தியின் தர்க்கத்தில் இராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதற்கும் சேதுப் பாலத்தை அவன் அமைத்தான் என்பதற்கும் இடமில்லை.

காந்தி தன் அரசியலுக்கு வரலாற்றை என்றும் துணை கொண்டதில்லை. அதேபோல டால்ஸ்டாய், தோரோ ஆகியவர்களின் சிந்தனை வழி வந்த அவரிடம் “தேசபக்தி” என்கிற சொல்லாடலும் இருந்ததில்லை. காந்தி உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக சர் சங்கரன் நாயர் எழுதிய நூலின் தலைப்பு “காந்தியும் அராஜகமும்” (Gandhi and Anarchy).

திலகர், அரவிந்தர் முதலான காந்திக்கு முந்திய தேசியப் போராட்ட வீரர்கள் எல்லோரும் பகவத் கீதையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான தனி நபர்க் கொலை உள்ளிட்ட போர்த் தொழிலை முன்வைக்கும் புனித நூலாக வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்தி அதை ஒரு சமாதானத்தின் சாத்தியங்களையும், அஹிம்சைப் பாதையையும் வற்புறுத்தும் நூலாக வாசித்து உரை எழுதினார். இது குறித்து ஒரு நவீன காந்தியியல் ஆய்வாளர், “வாசிப்புச் சுதந்திரம் என்கிற நவீன கோட்பாட்டை அதன் உச்சபட்ச வடிவத்தில் கையாண்டவர் காந்திதான்” எனக் கூறுகிறார்.

காந்தியின் இந்து மதம் குறித்த வாசிப்பில் நாம் காணும் சிக்கல்கள் கூட அவை எந்தப் புனித நம்பிக்கைகளின் (believes) அடிப்படையிலிருந்தும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாறாக அவை உடல் மற்றும் உளத் தூய்மை குறித்த அவரது கட்டுப்பெட்டித் தனமான கருத்துக்களிலிருந்தே முகிழ்த்துள்ளன. எடுத்துக்காட்டாக சேரன்மாதேவிக் குருகுலப் பிரச்சினையில் கூட பார்ப்பனர்களையும் பார்ப்பனர் அல்லாதவர்களையும் தனித்தனியே அமரவைத்துப் பந்தி பரிமாறியதைத் தவறு எனக் கூறியவராயினும் காந்தி ‘சம பந்தி போஜனம்’ என்பதை ஒரு உயரிய கொள்கையாக ஏற்கவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பாட்டு எல்லாவற்றிலும் சமத்துவம் கடைபிடிக்கப்பட்ட அவரது தென் ஆப்ரிக்க டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் பண்ணைகளின் விதிமுறைகளில் சமபந்தி போஜனம் ஒரு உயரிய கொள்கையாக ஏற்கப்படவில்லை,

ஆனால் இந்த அணுகல்முறை சாதி, வருண அல்லது தீண்டாமை அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. ஒன்றாக அமர்ந்து உண்ணுவது என்பதே அசிங்கம் என அவர் காருதினார். தனது மனைவி பிள்ளைகளுடன் கூட ஒன்றாக உண்ணுவதை அவர் வெறுத்தார். “சாப்பிடுவது என்பது கழிப்பதைப் போலவே ஒரு மோசமான விஷயம். கழிப்பதிலாவது ஒரு வெளியேற்றும் சுகம் நமக்கு உள்ளது” என்பது அவரது கூற்று. அதே நேரத்தில் அவரது தென் ஆப்ரிக்க வீட்டில் ஒரு தலித் கிறிஸ்தவ ஊழியரின் அறையிலிருந்த கழிவு நீர்ப் பானையை கஸ்தூரிபாய் ஏணி வழியாகச் சுமந்து வந்து சுத்தம் செய்யத் தானும் தயங்கி, காந்தியையும் செய்யக் கூடாதென எதிர்த்தபோது அவர் மனைவியை எவ்வளவு மூர்க்கமாக எதிர்த்தார் என்பதைச் ‘சத்திய சோதனை’யில் காணலாம். அவரது சமபந்தி போஜன வெறுப்பு சாதி அடிப்படையில் உருவானது அல்ல.

இந்து மதம் பிறவி அடிப்படையிலானது, ஒருவர் இந்துவாகப் பிறக்க மட்டுமே முடியும் என்பதை அதன் குறைபாடுகளில் ஒன்றாக முற்போக்காளர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால் காந்தியோ அதுவே இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றார். அதாவது மதம் மாற்றுவது என்பது பிற மதங்களின் இருப்பைச் சகிக்காததின் விளைவு என்பது அவர் கருத்து. கடைசிவரை மதமாற்றம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ஆனால் சட்டம் இயற்றி மதமாற்றத்தைத் தடுப்பது என்கிற நிலை வந்தபோது அம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். அதென்ன?

அதுதான் காந்தி.