ஹெகலையும் ஃபாயர்பாக்கையும் மார்க்ஸ் தலைகீழாக்கினார் என்பதன் பொருள் என்ன?

கார்ல் மார்க்ஸ்- 2 

மதம் குறித்து கார்ல் மார்க்ஸ்- 1

மதம் குறித்த மார்க்சின் கருத்து உலகப் புகழ்பெற்ற ஒன்று மட்டுமல்ல, மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒன்று; இரு தரப்பாலும், அதாவது மதங்களைக் கடுமையாக விமர்சிப்பவர்கள், அப்படி அணுகாதவர்கள் என்கிற இரு தரப்பாலும் மிகை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று. இந்த இரு தரப்பினரும் அவரவர் நோக்கிலிருந்து வரவேற்க அல்லது மறுக்க வாய்ப்பளிப்பது போல அது தோன்றியபோதிலும் அது மிகவும் சிக்கலான கருத்து; மிகவும் ஆழமான பொருள்களை உள்ளடக்கிய கருத்து.

“மதம் மக்களின் அபின்” என்கிற மார்க்சின் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிற அந்த வாசகங்களுக்குள் புகுமுன் நாம் சிலவற்றை மனம் கொள்ளுதல் உசிதம். மார்க்சுக்குக் குறைந்தபட்சம் மூன்று பரிமாணங்கள் உண்டு. அவர் ஹெகல், ஃபாயர்பாக் என்கிற பாரம்பரியத்தில் வந்த ஒரு தத்துவவியலாளர் என்பது முதல் பரிமாணம். அவரது முனைவர் பட்ட ஆய்வு தத்துவம் சார்ந்ததே. இன்னொரு பக்கம் அவர் முதலாளியப் பொருளாதாரம் குறித்த ஆழமான ஆய்வுகளைச் செய்தவர். ‘உபரி மதிப்பு’ எனும் கோட்பாட்டை முன்வைத்தவர். மார்க்சின் மூன்றாவது பரிமாணம் அவர் ஒரு அரசியல்வாதி என்பது. அதுவும் தன்னை ஒரு பாட்டாளி வர்க்க அரசியல்வாதி என முன்வைத்துக் கொண்டவர் அவர். அரசியலில் நடுநிலைமை என ஒன்றில்லை என்பதை முதல் முதலில் வெளிப்படையாக அறிவித்தவர்.

இந்த மூன்று பரிமாணங்களும் ஒன்றோடொன்று பிரிக்க இயலாது பின்னிப் பிணைந்து இருப்பதன் விளைவுதான் அவரது எழுத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள இயலாமற் போவது. இந்த மூன்று அம்சங்கள் குறித்த அடிப்படை அறிதல்கள் இல்லாத யாரும் அவரை மிகை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்வது தவிர்க்க இயலாது.

மதம் குறித்த மார்க்சின் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ‘மதம் என்பது மக்களின் அபின்’ எனும் கருத்தாக்கம் அவரது Critique of Hegel’s Philosophy of Rights எனும் கட்டுரையின் ஓரங்கமாக வெளிப்படுவது. மார்க்சின் தத்துவார்த்தப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள அன்றைய மேற்குலகில் நடைபெற்றுக் கொண்டிருந்த மிகத் தீவிரமான தத்துவ விவாதங்கள் குறித்தக் குறைந்தபட்சப் புரிதலேனும் அவசியம். அக்காலகட்டத்தில் தத்துவப் புலத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த இரு பெரும் ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் மார்க்ஸ். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெட்ரிக் ஹெகல் (1770 – 1831) மற்றும் லுத்விக் ஆன்ட்ரீஸ் வான் ஃபாயர்பாக் எனும் அவர்கள். இருவரும். கார்ல் மார்க்சுக்கு (1818 – 1883) ஒரு வகையில் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் எனலாம்.

hegel-phenomenology

மார்க்ஸ் இவர்களால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றால் இவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டார் எனப் பொருளல்ல. அது சாத்தியமும் இல்லை. ஏனெனில் இவர்கள் இருவரும் ஒருவகையில் ஒருவருக்கொருவர் முற்றிலும் எதிரெதிரான நிலைபாடுகளை உடையவர்கள். ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதி. அதாவது கருத்துக்களின் இருப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் ஊடாக வரலாற்று இயக்கத்தை அணுகியவர். பிரெஞ்சுப் புரட்சியை ஒட்டிய காலகட்ட சிந்தனையாளரான ஹெகல் சமூகம், பிரபஞ்சம், வரலாறு ஆகியன தேங்கிக் கிடப்பன அல்ல, அவை இடையறாது மாறிக் கொண்டே, இயங்கிக் கொண்டே இருப்பவை என்பதை அழுத்தமாக முன்வைத்த வகையில் ஒரு முழுமையான இயங்கியல்வாதியாக இருந்தார்.

புரட்சிகள் எவ்வாறு உருவாகின்றன? அவ்வாறு உருவான புரட்சிகளுக்குப் பின் என்ன நேர்கின்றன? ஏன் எவையும் நிலையாக இல்லாமல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன? ‘உலக ஆன்மா’ அல்லது ‘உலக இயக்குவிசை’ எனப் பொருள்கொள்ளத்தக்க Weltgeist எனும் கருத்தாக்கத்தை முன்வைத்த ஹெகல், இந்த இயக்குவிசை உலகம் எவ்வாறு மாறவேண்டும் என்பது குறித்த பார்வையுடன் தொடர்ந்து தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறது எனவும், காலமாற்றத்துக்கு உரிய வகையில் புதிய காலத்துக்குரிய புதிய இயக்குவிசையை (Zeitgeist) அது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது எனவும் கூறினார். கான்ட், ஸ்பினோசா போன்ற தத்துவவியலாளர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட ஹெகல் இந்த மாற்றம் எவ்வாறு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து விளக்கினார். மானுட விடுதலை என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்து விகசிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுமைபெறாததாயினும் அதைநோக்கி அது அப்படி இயங்குவது தவிர்க்க இயலாதது; ஏனெனில் அதுவே அதன் இயற்கை. அதுவே அதன் பண்பு. இதுவே ஹெகலின் கருத்துமுதல் இயங்கியலின் அடிப்படை. இதை இன்னும் சற்று எளிமைப்படுத்திச் சொல்வதானால் இப்படிக் கூறலாம். மானுட விடுதலை என்கிற இன்னும் முழுமையடையாத இறுதி இலக்கை நோக்கிய கருத்து மாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதே ஹெகலின் இயங்கியல்.

அப்படியானால் இந்த வளர்ச்சிப் போக்கில் வரலாற்றின் பங்கு என்ன? வரலாற்றுக்குப் பெரிய பங்கேதுமில்லை என்பதுதான் ஹெகலியம். வரலாறு என்பது இந்த மாற்றங்களைத் தாங்கி நிற்கும் ஒரு கொள்கலன் மட்டுமே. ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெறும் இந்தப் புத்துருவாக்கம் அதன் கூடவே அதன் மறுப்பை (முரணை / அழிவை) யும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதன் ஊடாகவே பழையது அழிந்து புதியது உருப்பெறுகிறது. எனவே பழைய நிலைகள் அழிந்து புதியன உருப்பெறுவதும், அந்த அழிவிற்கான வித்தும் புதியதோடேயே பிறப்பெடுக்கிறது என்பதும் ஹெகலின் கருத்துமுதல் இயங்கியலின் அடிப்படயாக உள்ளன. ஆக இந்தப் பழமையின் அழிவு என்பது வருந்தத்தக்க ஒன்றல்ல. அது ஆக்கபூர்வமான அழிவு. அது முன்னோக்கிய நகர்வு. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்கிற நமது அவைதீக மரபுச் சிந்தனை இதற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஒவ்வொரு சூழலுக்கும் அதனுள் உள்ளார்ந்து இருக்கும் அதன் முரணுக்கும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் மோதலே வரலாறு. இதனூடாக புதியன மலர்ந்துகொண்டே உள்ளன.

மார்க்ஸ் ஹெகலால் மட்டுமல்ல தனது சமகாலத்தவரான ஃபாயர்பாக்காலும் ஈர்க்கப்படிருந்தார் என்றேன். ஃபாயர்பாக்கைப் பற்றிச் சொல்லுமுன் ஒன்றைக் குறிப்பிடல் அவசியம். தத்துவவளர்ச்சிப் போக்கில் மத்திய காலத்தை (Middle Age) மதங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலம்  (philosophy is the servant maid of religion) என்பர். தொடர்ந்து வந்த நவீன காலம் (Modern Age) என்பது மதத்தின் பிடியிலிருந்து அனைத்தையும் விடுதலை செய்தது. நியூட்டன் முதலானோரின் விஞ்ஞான வளர்ச்சிகளால் ஊக்கப்பட்ட காலம் அது. மதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த பெரும் சிந்தனைக் கிளர்ச்சி ஒன்று மேற்குலகில் அப்போது ஏற்பட்டது. மிகக் கடுமையான விமர்சனங்கள் மதத்தின் மீது, குறிப்பாக மேலைச்சூழலில் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்டன. அப்படியானவர்களில் ஒருவர்தான் மார்க்சின் ஆளுமை உருவாக்கத்தில் இடம் பெற்ற இந்த இன்னோரு முக்கிய தத்துவவியலாளரான ஃபாயர்பாக்.

Ludwig_Andreas_Feuerbach

“மனிதனின் ஆக உன்னதமான உணர்வான ‘உண்மை’ குறித்த உணர்நிலையை மதம் விஷம் ஊட்டி அழிக்கிறது”;

“மதம் என்பது மனித மனத்தின் (வெற்றுக்) கனவு; இன்றைய யுகத்தில் மாயைகளே புனிதமாகப் போற்றப்படுகின்றன, உண்மைகள் அற்பமாக அலட்சியம் செய்யப்படுகின்றன..”

– என்றெல்லாம் மதத்தைக் கடுமையாகச் சாடியவர் அவர். அவரைப் பொருத்தமட்டில் எல்லாவிதமான மத வெளிப்பாடுகளும் நிறைவேற்றபடாத மனித ஏக்கங்களின் கருத்துருவாக்கப்பட்ட பிம்பங்கள்தான்; கடவுள் என்னும் மாயைதான். ஹெகலைப்போல் அல்லாமல் ஃபாயர்பாக் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது..

ஹெகல், ஃபாயர்பாக் என்கிற சமகால இரு முக்கிய தத்துவ ஆளுமைகளால் உந்தப்பட்டவர்தான் மார்க்ஸ் எனில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு என்பது என்ன?

மார்க்ஸ் இந்த இரு மகத்தான சிந்தனையாளர்களாலும் ஊக்கப்பட்டவர்தானே ஒழிய அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல. இருவரையும் ஏற்றுக்கொண்டார், ஆனால் அப்படியே அல்ல. இருவரையும் “தலைகீழாக்கி” ஏற்றுக்கொண்டார் என்பர். அவர்களின் கருத்துக்களைக் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களுடன் பொருத்தினார். ஹெகலின் கருத்துமுதல்வாதமும், ஃபாயர்பாக் முன்வைத்த கருத்துக்களை முதன்மைப்படுத்தாத அணுகல்முறையும்- இரண்டுமே ஓரம்சத்தில் இணைந்துபோவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். தூலமான சமூக நிலைகளை அதாவது வரலாற்றை அவை இரண்டுமே புறக்கணிப்பதுதான் அது. சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள ஹெகலின் சிந்தனை ஒரு சிறந்த கருவிதான். ஆனால் இந்த மாற்றங்கள் என்பன சமகாலப் பொருளியல் சூழல்களிலிருந்து உருவாவதை அவர் பார்க்கத் தவறினார். அதை வெறும் ஒரு ‘உலக ஆன்மா’ அல்லது ‘உலக இயக்கு சிந்தனை’ என்பதன் வெளிப்பாடு என நிறுத்திக் கொண்டதே ஹெகலின் பிரச்சினை.

அதேபோல ஃபாயர்பாக்கின் மதம் குறித்த விமர்சனமும் தூலமான எதார்த்தங்களின் அடிப்படையில் அமையவில்லை. மனிதன் தன் ஏக்கங்களையும், எதார்த்தத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத தன் தேவைகளையும் ஆசைகளையும் அவன் மதத்தில் ஏற்றி ஆறுதல் தேடினான் என்றார் ஃபாயர்பாக். அந்த வகையில் கடவுளும் மனிதனும் வேறு வேறல்ல. “கடவுள்தான் மனிதன்; மனிதன்தான் கடவுள்” எனவும் “இறையியல் என்பது வேறொன்றுமில்லை; மானுடவியல்தான் (anthropology) இறையியல்” எனவும் ஃபாயர்பாக் கூறியதன் பொருள் இதுதான். தான் வாழ்வில் சாதிக்க இயலாத அனைத்தையும் மனிதன் கடவுளிடம் ஏற்றி ஆறுதல் கண்டான். “மனிதன் தன் வடிவில் கடவுளைப் படைத்துக் கொண்டான்” என இறையியல் (Theology) சொல்வதன் பொருள் இதுவே. “பாவங்களிலிருந்து” (sins) விடுபட இயலாத தன் இயலாமையை அவன் கடவுளின் புனிதத்தன்மையில் ஏற்றி வைத்து ஆறுதல் கண்டான். தனது படைப்பாற்றல் தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை (அந்நியமானதை) அவன் அளவிடற்கரிய படைப்பாற்றல் மிக்கவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டான். சமூகத் தீமைகளை அழிக்க இயலாதத் தன் கையாலாகாத்தனத்தை எல்லாத் தீமைகளையும் அழிக்க வல்லவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் மறைத்துக் கொண்டான் அல்லது தன் நினைவிலிருந்து ஒளித்துக் கொண்டான்.

1841 ல் The Essence of Christianity எனும் ஃபாயர்பாக்கின் நூல் வெளிவந்தது. ‘மனிதனின் கையாலாகாத்தனமையே கடவுளின் பிறப்பிடம்’ என அவர் அதில் குறிப்பிட்டார்… தான் என்னவாக விரும்பினானோ அவ்வாறே மனிதன் கடவுளைப் படைத்தான். மனிதப் பண்புகளை தெய்வீகமாகக் கட்டமைக்கும்போதே மதம் என்பது உண்மையாகிறது…. ‘இறையியல்’ எனும் பெயரில் மனிதரிடமிருந்து கடவுளை மனிதரிடமிருந்து வேறுபடுத்திப் பிரிக்கும்போது அது பொய்யாகிறது என்று கூறிய ஃபாயர்பாக் கிறிஸ்தவம் மானுடரின் அரசியல் ஆற்றலை அழிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலைச் சூழலில் அவர் கிறிஸ்தவம் எனக் கூறியது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்..

இவ்வாறு மனிதனின் உண்மையான இருப்பு குறித்த உணர்நிலையை மதம் அழிக்கிறது, அவனது அரசியல் உணர்வை மழுங்கடிக்கிறது என்பதை எல்லாம் ஃபாயர்பாக் மிகச் சரியாக அடையாளம் கண்டாரே ஒழிய அது எவ்வாறு அழிக்கப்பட்டுகிறது, அதன் நோக்கம், பின்னணி, செயல்முறை, அவற்றில் வர்க்கங்களின் பாத்திரம் ஆகியவற்றை அவர் பேசவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பின்னணியில்தான் 1848 ல் மார்க்ஸ் – எங்கல்சின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளிவந்தது. “இதுவரை வரலாற்றில் கண்ட சமூகங்களின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” எனும் புகழ்பெற்ற வாசகத்தை அது கொண்டிருந்தது. ஆக, வரலாற்றின் உண்மையான இயக்குவிசை என்பது உண்மையான வர்க்கங்களுக்கிடையே நிகழ்ந்த உண்மையான வர்க்கப் போராட்டங்களின் விளை பொருளே. இந்த உண்மையான வர்க்கப் போராட்டங்கள் உண்மையான வரலாற்று மாற்றங்களுக்குக் காரணமாயின. இந்த வரலாற்றின் ஊடாகப் புதிய வர்க்கங்கள் உருவாயின. இவற்றுக்கிடையே புதிய வர்க்கப் போராட்டங்கள் உருவாயின. எதை அழித்து எது முகிழ்த்ததோ அதை அழித்து அடுத்தது முகிழ்க்கும் என ஹெகல் கூறியதன் பொருள் இதுவே. இப்படிப் புதிதாக உருவான மாற்றங்களின் ஊடாகப் புதிய பார்வைகளும் புதிய சிந்தனைகளும் உருவாகும்.

அதுமாத்திரமல்ல.  மனிதன் தன்னிடமிருந்து அந்நியமான உலகை மீண்டும் கைவசப்படுத்துவதும் வர்க்கப் போராட்டங்களின் மூலமே சாத்தியமாகும் என்பதையும் மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்.

ஹெகல், ஃபாயர்பாக் என்கிற சமகாலத்தின் இரு மிகப் பெரிய தத்துவ ஆளுமைகளிடமிருந்து மார்க்ஸ் கற்றுக் கொண்டதையும், அவர்களைத் தலைகீழாக்கிப் புதிய பார்வையை உலகிற்கு அளித்ததையும் நாம் இந்த வகையிலேயே புரிந்துகொள்கிறோம்.

(அடுத்த இதழில் ‘மதம் மக்களின் அபின்’ என்பதன் பொருள் என்ன?)