குறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்

2011 ல் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளின் வழிகாட்டல்களும் இல்லாமல் கிளர்ந்தெழுந்த அராபிய வசந்தத்தை நாம் அத்தனை எளிதாக மறந்துவிடக் கூடாது. இவற்றின் ஊடாக 30, 40 ஆண்டுகள் எவ்விதப் பெரிய எதிர்ப்புகளுமின்றி நடந்து வந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டன. துனிசியா, எகிப்து முதலான நாடுகளில் பென் அலி, ஹோஸ்னி முபாரக் போன்ற சர்வாதிகாரிகள் “இடிபட்ட சுவர்கள்” போல வீழ்ந்து மண்ணாயினர். அமெரிக்கா போன்ற முதலாளிய ஜனநாயக நாடுகளும்கூட வால்ஸ்ட்ரீட் அமர்வின் வெற்றியில் அதிர்ச்சி அடைந்து தனது உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளில் சில மாற்றங்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதாயிற்று.

புதிதாய்ப் பிறப்பெடுத்திருந்த சமூக ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்ததை உலகமே வியந்து நோக்கியது. எஞ்சியிருந்த சர்வாதிகாரிகளும், புதிதாய் உருவானவர்களும் அப்போதிருந்தே சமூக ஊடகங்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். அவற்றின் மீதான கண்காணிப்புகளும் மிகுந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய சட்டங்களும் ஆங்காங்கு முயற்சிக்கப்பட்டன. இன்னொருபக்கம் அவற்றை அவற்றின் வழியிலேயே எதிர்கொள்ளும் முயற்சிகளும் தொடங்கின. எங்கேனும் கிளர்ச்சிகள் என்றால் அப்பகுதியில் சமூக ஊடகங்களை முடக்குவது என்பதை அரசுகள் வழமையாக்கிக் கொண்டன.

defendfreedom-696x447

2015 ல் அயான் ப்ரெம்மர் எழுதிய இது தொடர்பான கட்டுரை ஒன்றில் (Time, Nov 5, 2015) சமூக ஊடகங்களை எதிர்கொள்வது தொடர்பான இப்படியான நடவடிக்கைகளைப் பெரிய அளவுகளில் மேற்கொண்ட நாடுகள் என ஐந்தைக் குறிப்பிடுகிறார். அதில் முதலாக இடம்பெறுவது சர்வாதிகாரி எர்டோகானின் துருக்கி. 2015 ல் மட்டும் நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டி முடக்கப்பட்ட ட்விட்டர் பதிவுகளில் 92 சதம் துருக்கி மக்களின் சமூக ஊடகப் பதிவுகள் என்பது குறிப்பிடத் தக்கது. சமூக ஊடகங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கென எர்டோகான் 6000 பேர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அவர்களின் பணி சமூக ஊடகங்களின் மூலம் பொதுக் கருத்தைத் தனக்கு ஆதரவாக உருவாக்குவது. சமூக ஊடகங்களை ஒருபக்கம் இவ்வாறும், மறுபக்கம் சட்ட நடவடிக்கைகளின் ஊடாக ஒடுக்கியும் கையாண்டதன் மூலமே 2018 தேர்தலில் எர்டோகான் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்திலேனும் வெற்றி பெற முடிந்தது என இது குறித்து எழுதுவோர் சொல்கின்றனர்.

இரண்டாவதாகச் சீனாவும், மூன்றாவதாக சர்வாதிகாரி புடினுடைய ருஷ்யாவும் இவ்வாறு சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன.

நான்காவதாக இடம்பெறுவது பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் (ISIS). 90,000 ட்விட்டர் அக்கவுன்ட்களை அது கட்டுப்படுத்துகிறது சமூக ஊடகங்களின் ஊடாகவே சுமார் 20,000 வெளிநாட்டவர்களை அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை நோக்கி உறுப்பினர்களாக ஈர்த்துள்ளது எனச் சொல்லப்படுகிறது..

ஐந்தாவதாக இடம்பெறுவது நரேந்திரமோடியின் இந்தியா. சமூக ஊடகங்களுக்கு எதிராகப் பெரிய அளவில் சட்ட நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாவிட்டாலும் மக்களின் கருத்துருவாக்கத்தில் தலையிட்டு அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்பதில் இந்துத்துவ சக்திகள் கவனமாகச் செயல்படுகின்றன. தமிழகத்தில் இது பெரிய அளவில் உணரப்படாவிட்டாலும் வடமாநிலங்களில் இதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. 2015 டிசம்பர் கணக்குப்படி நரேந்திர மோடியின் ட்விட்டர் அக்கவுன்டை ‘ஃபாலோ’ பண்ணுகிறவர்களின் எண்ணிக்கை 16 மில்லியன். அவரது பதிவுகள் 30 மில்லியன், அதாவது மூன்று கோடி ‘லைக்’கள் வரை பெற்றுள்ளன. இதெல்லாம் மூன்றாண்டுகளுக்கு முந்திய கணக்கு. இப்போது இது இன்னும் அதிகரித்திருக்கலாம். அன்று ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அதிக ‘லைக்’குகள் வாங்குபவராக மோடிதான் இருந்தார். வெளிநாடு வாழ் உயர்சாதி இந்தியர்கள் இந்த மாதிரிப் பணிகளில் இந்துத்துவ சக்திகளுக்குப் பெரிய அளவில் கை கொடுக்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் இன்று வந்துள்ள ஒரு செய்தி நம் கவனத்தை ஈர்க்கிறது. எகிப்திய சர்வாதிகாரி அப்தல் படா அல் சிசி யின் அரசு இரண்டு நாள் முன்னர் (ஜூலை 16, 2018) ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியுள்ளது. இதன் மூலம் சமூக ஊடக ‘அக்கவுன்ட்’களை முடக்கும் அதிகாரத்தை எகிப்திய அரசு பெறுகிறது. “பொய்ச் செய்திகளை” வெளியிடுவதற்குக் காரணமான ஊடகவியலாளர்களைத் தண்டிக்கவும் இச்சட்டம் அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
அது மட்டுமல்ல 5000 க்கும் மேற்பட்டவர்களால் பின்பற்றப்படும் (அதாவது ‘ஃபாலோயர்ஸ்’ உள்ள) முகநூல், ட்விட்டர், ப்ளாக் முதலான சமூக ஊடகங்கள் யாவும் இனி செய்தி வெளியீட்டு ஊடகங்களாகவே (Media Outlet) கருதப்பட்டு, ‘தவறான செய்திகள்’ மற்றும் ‘சட்ட மீறல்களைத் தூண்டிவிடக் கூடிய செய்திகள்’ ஆகியனவற்றைப் பதிவது கடுமையான குற்றங்களாக அணுகப்படும்.

i5இந்தக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, “ஊடக நிர்வாகத்திற்கான உச்சநிலைக் குழு” (Supreme Council for the Administration of the Media) என ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கிறது. இதன் தலைவரை சர்வாதிகாரி அல்சிசி நியமிப்பார்.barison

இனி எந்த ஒரு இணையத் தளங்களும் (websites) தொடங்கப்பட வேண்டுமானால் இந்த நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் செயல்படுபவற்றை முடக்கவும், அவற்றைச் செயல்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்கள் யாரும் இனி, “தடைசெய்யப்பட்ட பகுதிகளில்” எந்த வீடியோ பதிவும் செய்யக் கூடாது.

மிக விரைவில் இங்கும் இப்படியான சட்டங்களும் அமைப்புகளும் உருவாக்கப்படும் வாய்ப்புகளுண்டு என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியம்.