கொடைக்கானலில் ஒரு கல்லறை…….

 

(இரண்டாண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் ஒரு அரசியல் பயிற்சி முகாமில் பங்குபெற்றுத் திரும்பிய அன்று இரவு எழுதியது)

27 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். இந்திய ‘அமைதிப் படை’  ஈழத்தில் அடூழியங்கள் செய்து கொண்டிருந்த நேரம். இந்திய அரசு ஊடகங்கள் உண்மைகளை மறைத்து அப்பட்டமாகப் பொய்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. தமிழகம் முழுவதிலும் பரவலாக இதற்குக் எதிர்ப்பு இருந்தது. கலைஞர் கருணாநிதி பொது மேடை ஒன்றில் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை சுத்தியலால் உடைத்துத் தன் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. ஏப்ரல் 11, 1988. இரண்டு இளைஞர்கள். ஒருவர் மாறன் என்கிற தமிழரசு, மற்றவர் இளங்கோ. இருவரும் அரசு ஊடகங்களின் இந்த வன்முறையைக் கண்டித்து கொடக்கானலில் உள்ள தொலைக்காட்சி ஒளி பரப்பு நிலையத்தைத் தகர்த்துத் தம் கண்டனத்தை வெளிப்படுத்த கையில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளுடன் சென்றபோதுதான் அது நிகழ்ந்தது. நிலையத்திற்குள் ஏறிக் குதிக்கையில் குண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே மாறன் உடல் சிதறிச் செத்தார். இளங்கோ படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தமிழகக் காவல்துறை படு சுறுசுறுப்பாக இயங்கி அடுத்த சிலமாதங்களில் தோழர்கள் பொழிலன், இளங்கோ, புதுவை சுகுமாரன், பவணந்தி, முகிலன், அறிவழகன் உட்படப் 16 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 15 பேர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. கைதுசெய்யப்பட்ட அத்தனை பேரும் இளைஞர்கள். சி.பி.சி.அய்.டி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் இயங்கிய காவல்படையால் இவர்கள் கடும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

வெடிமருந்துப் பொருள் சட்டம், பொதுச் சொத்துக்கள் அழிப்புத் தடைச்சட்டம், இந்திய ஆயுதங்கள் சட்டம் முதலானவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் (Cr.No.70/88 of Kodaikanal Police Station for the offences under Section 120-B IPC r/w.Sections 3,4,5 and 6 of the Explosive Substances Act, 1908, Section 427 IPC, Section 4 of the Tamil Nadu Prevention of Damage to Public Property Act, 1984 and Section 3 r/w.24(1-B)(a) and 27 of the Indian Arms Act.)   தொடரப்பட்டன.

1997ல் திண்டுக்கல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொழிலன், இளங்கோ, முகிலன், அறிவழகன் உட்பட நால்வருக்கு ஆயுள் தணடனை. தோழர் ஈகவரசனுக்கு இரண்டாண்டுகள். தெய்வமணி, குணத்தொகையன், குண்டலகேசி ஆகியோருக்கு ஓராண்டு. சுகுமாரன் உட்பட எட்டு தோழர்கள் விடுதலை.

மேல்முறையீட்டில் பொழிலன் இளங்கோ ஆகியோரது தண்டனைகள் ஆயுளிலிருந்து பத்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டன. முகிலன், அறிவழகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

பொழிலன், மதிப்பிற்குரிய தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் தலைமகன்.  இப்போது பத்தாண்டுகள் தண்டனை முடித்து விடுதலை ஆகியுள்ளார். தோழர் இளங்கோ மிக விரைவில் விடுதலை ஆக உள்ளார்.

###################

நேற்று மதியம் இரண்டு மணியோடு கொடைகானலில் நாங்கள் பங்கு பெற்ற அரசியல் பயிற்சி முகாம் பணி முடிந்தது.

முந்தின நாளே சுகுமாரன் சொல்லியிருந்தார் பயிற்சி முகாம் முடிந்தவுடன் மாறனின் கல்லறைக்குச் சென்று வரவேண்டுமென்று.

உடல் சிதறிச் செத்த தோழர் மாறனின் உடலை கொடைக்கானலில் இந்துக்களின் கல்லறைப் பகுதியில் காவல்துறையினர் ஒரு குழி தோண்டிப் புதைத்து அகன்றனர்.

######################

கைதுகள், சித்திரவதைகள், வழக்குகள் மத்தியில் தோழர்கள் தங்களின் கொள்கை உறுதியையும் கைவிடவில்லை. மாறனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில்  கல்லறை ஒன்றை எழுப்பி நினைவுச் சின்னம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு அந்தப் பொறுப்பு  சுகுமாரனுக்கு அளிக்கப்பட்டது.

வழக்குகளுக்காக அலைவதற்கு மத்தியில் மாறனின் சிதைந்த உடல் புதைக்கப்பட்ட, இல்லை, புரட்சியாளர்களின் மொழியில் சொல்வதனால் ‘விதைக்கப்பட்ட’ இடத்தில் தோழர் சுகுமாரன் அடுத்த இரண்டாம் ஆண்டு, சரியாக அதே ஏப்ரல் 11ல்,  கல்லறை ஒன்றை எழுப்பி, கல்வெட்டொன்றையும் பதித்து, அன்று மாலை மதுரையில் கடும் காவல்துறை நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தபோது அந்த மேடையில் நானும் இருந்தேன்.

######################

அரசியல் வகுப்பு முடிந்த கையோடு சுகுமாரன், நான், என் மகன் சத்தியன் மூவரும் ஒரு வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு அந்தக் கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றோம்.

சுகுமாரன் அந்தக் கல்லறையை எழூப்பிய அடுத்த சில மாதங்களில் தமிழகக் காவல்துறை அந்தக் கல்லறை மீது பதிக்கபட்ட நினைவு வாசகங்கள் அடங்கிய கல்வெட்டை நோண்டி எடுத்து எறிந்தது.  தோழர்கள்  பவணந்தியும் முகிலனும்  மீண்டும் அந்தக் கல்லறையைப் புதுப்பித்து, வேறொரு சிறிய கல்வெட்டையும் பதித்தனர்.

அந்த வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட அந்த 16 இளைஞர்களின் வாழ்வும், ஏதோ ஒரு வகையில், வழமையான சமூக மதிப்பீடுகளின் வழியிலிருந்து விலகி அமைந்தன. கல்லூரிப் படிப்பு பாதியில் தடைபெற்ற சுமாரன் இன்று திருமணம், குழந்தைகள், நிரந்தர வருமானம் உள்ள வேலை என்கிற வழமையான பாதையை விட்டு அகன்றவர்.

மாறனின் கல்லறையைப் பராமரித்து வந்த ‘கல்லறை’ மாரியப்பன் இப்போதில்லை.  சுகுமாரன் நீண்ட கால இடைவெளிக்குப் பின் இங்கு வருகிறார். அந்தக் கல்லறைத் தோட்டம் இன்று பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தது.

பனி மூட்டம் கவ்வத் தொடங்கியிருந்த அந்த மாலைப் போதில் சுகுமாரனுடனும் என்னுடனும் சத்தியனும்.

ஓங்கி உயர்ந்த மலைகளின் பின்னணியில் அந்தக் கல்லறையைத் தேடி சுகுமாரன் அலைந்தபோது சத்தியன் எல்லாவற்றையும் வினோதமாகப் பார்த்தான். என்ன தேடுறீங்க, என்ன பிரச்சினை, இந்தக் கல்லறைக்கு அருகில் ஏன் யாருடைய சிகையோ கழித்துக் கிடக்கின்றது என்கிற கேள்விகளுக்கு நான் முடிந்தவரை சத்தியனுக்குப் புரியுமாறு பதில் சொன்னேன்.

இறுதியில் மாறனின் கல்லறையை சுகுமாரன் கண்டு பிடித்துவிட்டார். இன்றைய கல்லறைப் பாதுகாவலர்கள் ஓடி வந்து மாறனின் நினைவிடத்தில் மண்டியிருந்த புல் பூண்டுகளைப் பிய்த்தெறிந்து சுத்தம் செய்தனர்.

நாங்கள் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தை மூன்றாகக் கொய்து ஒன்றை அந்தக் கல்லறையில் சாத்தி நிமிர்ந்தபோது சுகுமாரனின் கண்கள் கலங்கி இருந்தன. சத்தியனிடமும் ஒரு துண்டு மல்லிகைச் சரம் வழங்கப்பட்டபோது அவன் திகைத்துத் தயங்கிப் பின் எங்கள் இருவரையும் போல அவனும் அதை மாறனின் கல்லறை மீது வைத்தான்.

திரும்பி மலை ஏறும்போது அந்தக் கல்லறைக் காவலாளிகளிடம் கொஞ்சம் பணத்தைத் தந்து மாறனின் சிதைந்த உடல் புதையுண்ட அந்த இடத்தில் சில பூச்செடிகளை நட்டுப் பராமரிக்க வேண்டிக் கொண்டார் சுகுமாரன். நான் சத்தியனிடம் அந்தக் கல்லறையின் வரலாற்றை அவனுக்குப் புரியும் வகையில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

################

மாறனில் கல்லறையை சுகுமாரன் அமைத்த அன்று மாலை மதுரையில் மாறனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றையும் பொழிலனும் தோழர்களும் ஏற்பாடு செய்திருந்ததையும் கடும் அடக்குமுறைகளுக்கும், போலீஸ் கெடுபிடிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற  அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களில் நானும் ஒருவன் என்பதையும் சொன்னேன்.

அப்போது நான் மன்னார்குடி அரசுக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுகுமாரன் தலைமையில் நடை பெற்ற அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் பொழிலன், பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன், பெ.மணியரசன் ஆகியோர் உரையாற்றினோம்.

பெருஞ்சித்திரனார் அவர்கள் எனது உரையைச் சிறு வெளியீடாகக் கொண்டுவரச் சொல்ல நண்பர்கள் சுகுமாரன், பொழிலன் முயற்சியில் பின் அது ஒரு சிறு வெளியீடாகவும் வந்தது. அரசுப் பணியிலிருந்த எனது அந்த உரை ‘மா.வளவன்’ என்கிற அப்போதைய எனது புனை பெயரில் வெளியானது.

அப்படியும் அப்போது என் மீது வழக்கொன்றும் பதியப்பட்டது. இதைப் பேசியதற்கே வழக்கென்றால் அந்தத் தோழர்கள் என்னென்ன பாடுபட்டிருப்பர் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்..

#####################

நேற்று மாலை ஆறு மணிவாக்கில் நான், சுகுமாரன், சத்தியன்  மூவரும் பேருந்தில் மலை இறங்கிக் கொண்டிருந்தோம்.

என்ன நினைத்தானோ சத்தியன் திடீரென சுகுமாரன் பக்கம் திரும்பிக் கேட்டான், “அங்கிள், அந்த டவர்ல ‘பாமை’ வைக்கப் போனபோது, கால் தடுக்கி விழுந்து வெடிச்சுத்தான் அந்த அங்கிள் செத்துப் போனாரா?”

ஒரு கணம் திகைத்துப் போன சுகுமாரன், “தம்பீ.. நாளைக்கு திங்கக்கிழமை ஸ்கூல் போகணும் ஞாபகம் வச்சுக்கோ…” என்றார்.

சத்யன் இதை ரசிக்கவில்லை. எந்தக் குழந்தைக்குத்தான் பள்ளி செல்லப் பிடிக்கும்…