(2011ல் பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பட்டையல் இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான கமிஷன் 2013ல் அறிக்கை அளித்தது. காவல்துறை அத்துமீறல்களை முழுமையாக நியாயப்படுத்திய அந்த அறிக்கை மக்கள் மீதே குற்றத்தைத் திருப்பியது. அபோது எழுதப்பட்ட கட்டுரை)
பரமக்குடியில், சில ஆண்டுகளுக்கு முன், பட்டியல் சாதிகளுள் ஒன்றான தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை (செப் 11, 2011) விசாரிப்பதற்காக ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட சம்பத் ஆணையம் நாம் எதிர்பார்த்ததிலிருந்து இம்மியும் மாறாத வகையில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. செப் 13, 2011 அன்று நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் 20 மாதங்களுக்குப் பின் சென்ற மே 7, 2013 அன்று தன் அறிக்கையை சமர்ப்பித்தது. சுமார் நான்கு மாதங்கள் கழித்து, சரியாக முத்துராமலிங்கரின் நினைவு நாளுக்கு (அக் 30) முதல் நாள் அதை அரசு சட்டமன்றத்தில் வைத்தது. அ.தி.மு.கவின் ஆதரவுத் தொகுதிகளில் ஒன்றான முக்குலத்தோருக்கு அவர்களின் பூஜைக்குரிய குருவான முத்துராமலிங்கரது நினைவு நாள் பரிசாக சம்பத் ஆணைய அறிக்கை அளிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள யாருக்கும் பெரிய புத்திசாலித்தனம் வேண்டியிருக்கவில்லை.
சம்பத் ஆணையம் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பார்க்குமுன் பரமக்குடி கொலைகள் தொடர்பாக அரசு தரப்பில் அதற்கு முன் என்ன சொல்லப்பட்டன எனப் பார்க்கலாம். துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள் (செப் 12) முதலமைசர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அது குறித்து இரண்டு விஷயங்களைச் சொன்னார். 1) மண்டலமாணிக்கம் கிராமத்தில் முத்துராமலிங்கர் குறித்து அவதூறாகச் சுவரில் எழுதியதை ஒட்டி பழனிக்குமார் என்னும் மாணவன் செப் 9ம் தேதியன்று கொல்லப்படுகிறான். அதை ஒட்டிய சம்பவங்களின் தொடர்ச்சியாகவே துப்பாக்கிசூடு நடந்தது. 2) தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஒரு பெரும்படையுடன் பழனிகுமாரின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லும்போது கலவரம் ஏதும் வராமல் தடுப்பதற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது சுமார் 500 ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கலையச் சொல்லி அறிவுரை பகன்ற போதும் அவர்கள் கலையவில்லை. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசிக் கலைக்க முயன்றபோது அவர்கள் காவலர்களைத் தாக்கினார்கள். கற்களை வீசினார்கள். பெட்ரோல் குண்டுகளை எறிந்தார்கள். ‘வஜ்ரா’ போலீஸ் வாகனத்தை எரித்தார்கள். தற்காப்பிற்காக காவலர்கள் சுட வேண்டியதாயிற்று. துரதிர்ஷ்டவசமாக ஆறு பேர் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. டி.ஜி.பி சந்தீப் மிட்டால் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
இவை அன்று பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அன்று ஜெயலலிதா சொன்னவை.
டிசம்பர் 22, 2011 அன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமர்வு ஒன்றில் நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் எம்.வேணுகோபால் இருவரும் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.அய் விசாரணைக்கு ஆணையிட்டனர். அப்போது அரசு தரப்பில் எதிர் மனுவைத் தாக்கல் செய்த டி.ஐ.ஜி ராஜேஷ் தாஸ் அதில் இது குறித்து ஜெயா அன்று சட்டமன்றத்தில் என்ன கூறினாரோ அதையே திருப்பிச் சொன்னர். கும்பல் வன்முறையை எதிர்கொள்ளவே, உரிய எச்சரிக்கைகளுக்குப் பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றார்.
இப்போதுசம்பத் அறிக்கைக்கு வருவோம். அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சில: 1) “ஜான் பாண்டியன் பச்சேரி கிராமத்திற்குத் துக்கம் விசாரிக்கப் போனால் கலவரம் வரலாம் என உளவுத்துறைக்குத் தகவல் வந்ததால் அவரைத் தடுத்து நிறுத்த நேர்ந்ததே கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது, உரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட பின்னரே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது” முதலான ஏற்கனவே ஜெயாவாலும் தாசாலும் சொல்லப்பட்ட கதைகளை மீண்டும் ஒப்பித்திருந்தார் சம்பத். 2) “காவல்துறை தலித்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகச் சொல்லப்படுவது பொய். பழனிக்குமார் கொலையை ஒட்டி ஏற்கனவே பொங்கிக் கொண்டிருந்த தலித்கள்தான் வன்முறைக்குக் காரணம். காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. தற்காப்புக்காகத்தான் அவர்கள் சுட நேர்ந்தது காவல்துறை மட்டும் அன்று துப்பாக்கிச்சூடு நடத்தியிராவிட்டால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை (savage mass) அடக்குவதற்கு அன்று துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அவர்களின் வன்முறை அந்தப் பகுதியில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் பூராவிலுமே சாதிக் கலவரத் தீயைப் பற்றவைத்திருக்கும்.” 3) “கலவரங்களைக் கட்டுப்படுத்த மற்ற எல்லா முறைகளையும் கையாண்டபின், இறுதியில் நிர்வாக மாஜிஸ்ட்ரேட் ஆன தாசில்தார் உத்தரவிட்டபின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது”. 4) “சுருங்கச் சொல்வதானால் கலவரக்காரர்களின் நடத்தை எல்லாவிதமான அடிப்படை நாகரீகங்களையும் கடந்து மிருகத்தனத்தின் எல்லையையயே தொட்டது. அது எக்காரணங்கொண்டும் மன்னிக்கக்கூடியதாக இல்லை”
ஆக, 2011 செப்டம்பர் 12 அன்று ஜெயா சட்ட மன்றத்தில் என்ன சொன்னாரோ, டிசம்பர் 21 அன்று டி.ஐ.ஜி தாஸ் நீதிமன்றத்தில் என்ன சொன்னாரோ அதையேதான் சம்பத் தன் அறிக்கையில் கொட்டியுள்ளார். நீதிபதியின் பங்கு இங்கே குற்றச்சாட்டின் உண்மை பொய்களை ஆய்வு செய்து உண்மையைக் கண்டு நீதி வழங்குவதாக இல்லை; மாறாக இங்கு நீதிபதியே அரசு வழக்குரைஞராக மாறிவிடுகிறார்.
சொல்லப்போனால் அரசின் வழக்குரைஞர் என்கிற நிலையையும் தாண்டி விடுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் அவரும் அந்த அப்பாவி மக்களின் மேல் தாக்குதலையும் மேற்கொள்கிறார். முதலமைச்சரும் டி.ஐ.ஜியும் கூடச் சொல்லத் தயங்கிய சொற்களை என்ன அனாயசமாக உதிர்க்கிறார் பாருங்கள். “கட்டுமிராண்டிக் கும்பல்”, “எல்லாவிதமான அடிப்படை நாகரீகங்களையும் கடந்தவர்கள்”, “மிருகத்தனத்தின் எல்லையயே தொட்டவர்கள்” “எக்காரணங்கொண்டும் மன்னிக்கக் கூடாதவர்கள்” – இவை அனைத்தும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் நம் மக்கள் மீது அள்ளித் தெளித்துள்ள சேறு. நல்ல வேளை நீதிபதி அவர்களின் கையில் துப்பாக்கி இல்லை.
அன்று ஐந்து முக்கில் கூடியிருந்த மக்கள் சுமார் 200 பேர். நின்றிருந்த போலீஸ்காரர்கள் 2000பேர். கூடியிருந்தவர்களால் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. ஜான் பாண்டியனோ அன்று தடையை மீறி பச்சேரிக்குச் செல்ல முயலவில்லை. அவரை விடுதலை செய்திருந்தால் அன்று அத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது ஆனால் நம் நீதியரசர் என்ன சொல்கிறார் பாருங்கள், அன்று அவர்களை அப்படிச் சுட்டுத் தீர்த்திருக்காவிட்டால் சாதித் தீ தென் மாவட்டம் பூராவிலும் பரவியிருக்குமாம். கொல்லப்பட்டவர்கள் யாரும் ஜான் பாண்டியன் அல்லது டாக்டர் கிருஷ்ணசாமி அல்லது பூ.சந்திரபோசு ஆகியோரது அமைப்புகளில் தீவிர உறுப்பினர்கள் இல்லை. திருமண அழைபிதழ் கொடுக்க வந்தவரும். கடைக்கு வந்தவரும் அன்று அங்கு இருக்க நேர்ந்த அப்பாவி மக்களும் அல்லவா கொல்லப்பட்டனர்.
நீதிபதி இன்னும் ஒருபடி மேலே போய் ஜான் பாண்டியனுக்கும் டாக்டர் கிருஷ்ண சாமிக்கும் இடையே இருந்த பகையே எல்லாவற்றிற்கும் காரணம் என்கிறார். என்னத்தைச் சொல்லுவது. மனித உரிமைப் போராளியும் சிறந்த சிந்தனையாளருமான டாக்டர் பாலகோபால் ஒருமுறை சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நீதியரசர்கள் இப்படிப் பல சந்தர்ப்பங்களில் கொடிய தீர்ப்புகளை வழங்குவது என்பதன் அடிப்படையாக அந்தக் குற்றங்களின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பு உள்ளது என்பதைக் காட்டிலும் அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் கொண்ட வெறுப்பே அடிப்படையாக உள்ளது.
என்ன இருந்தாலும் இது ஒரு “நடுநிலையான விசாரணை ஆணையம்” என்கிற பெயரைக் காப்பாற்றியாக வேண்டுமல்லவா. போனால் போகிறது என்று காவல்துறையினர் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். கலவரக் காட்சிகளின் வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்தபோது (தங்களை) தாக்கியவர்களில் சிலரைக் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்குடன் திருப்பித் தாக்கியதைக் கண்டாராம். இது அவர்களுக்குப் புகழை அளிக்கக் கூடிய செயல் இல்லையாம்.
வேதனை என்ன தெரியுமா? இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வெளியிடும்போது இம்முறை அரசு ஒன்றைச் சொல்லியிருந்தது. மேலே சொன்ன “காவல்துறையின் புகழைக் குறைக்கும்” அந்த இரு வரிகளை அரசு நிராகரிக்கிறது என்பதுதான் அது. கலவரத்தை அடக்குவதில் காவல்துறை மிகச் சிறந்த பாராட்டத்தக்க முறையில் நடந்து கொண்டபோதும், கலவரம் அடங்கியபின் சில காவலர்கள் நடந்து கொண்டது சரியில்லை என சம்பத் ஆணையம் தயங்கித் தயங்கி, நசுக்கி நசுக்கிச் சொல்லியிருந்தபோதும் அதைக்கூட ஜெயலலிதா அரசல் சகித்துக் கொள்ள இயலவில்லை. சாலை மறியல் செய்த தேவேந்திரர்களைக் காட்டுமிராண்டிகள், மிருகத்தனத்தின் எல்லையைத் தொட்டவர்கள் என்றெல்லாம் அறிக்கை இழிவு செய்ததைக் கண்டுகொள்ளாத அரசுக்கு, ஒரு சில போலீஸ்காரர்களின் நடத்தை புகழுக்குரியதாக இல்லை என்கிற சொற்களை மட்டும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த மூன்றாம் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில் தன்னுடைய ஆட்சியில் காவல்துறைக்கு எல்லாச் சுதந்திரங்களும் உண்டு எனவும், “இராணுவ வீரர்கள் எல்லையைக் காக்கிறார்கள், காவல்துறையினரோ உள் நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காக்கிறார்கள்” எனவும் புகழ்ந்ததோடு காவல்துறையினர் சலுகை விலையில் பொருள்களைப் பெற “போலீஸ் கான்டீன்” திறக்கப்படும் என அறிவிப்பும் செய்தவரல்லவா ஜெயலலிதா..
ஆணையத்தின் பரிந்துரைகளில் மதுவிலக்கை அமுல் செய்தல் மற்றும் இலவசங்கள் வழங்குவதை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை, அவை ஆணையத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என அரசு நிராகரித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அளித்திருந்த அறிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீர்ப்புக்கனி தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் உயிருடனேயே பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டதாக நிலவும் ஐயத்தையும், சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைச்சாமியின் மரணம் தொடர்பான ஐயத்தையும் பதிவு செய்திருந்தோம். சம்பத் ஆணையமும் இந்த இரு மரணங்கள் குறித்து “இன்னும் தீவிரப் புலனாய்வு” மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது, இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண் காவலர்களைக் களத்தில் இறக்கக்கூடாது முதலியன வேறு சில பரிந்துரைகள். சாதித் தலைவர்களின் சிலைகளை அமைக்கக்கூடாது என ஆணையத்தின் முன் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது
சம்பத் ஆணையம் மட்டுமல்ல ஆகஸ்ட் 1995 ல் நடைபெற்ற தென்மாவட்டக் கலவரங்கள் எனப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக் கலவரங்கள் குறித்த கோமதிநாயகம் ஆணையமும் இப்படித்தான் காவல்துறை அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் புனிதப்படுத்திச் சான்றிதழ் வழங்கியது. மார்ச் 1996 ல் அன்றைய அ.தி.மு.க அரசிடம் கோமதிநாயகம் தன் அறிக்கையை அளித்தார். எனினும் 1999 நவம்பர் 23 அன்றுதான் அடுத்து வந்த தி.மு.க அரசு அந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைத்தது. முற்றிலும் தேவேந்திரர்களே வசிக்கும் கொடியங்குளம் கிராமத்தில் ஆக 31, 1995 அன்று சுமார் 600 காவல்துறையினர் நடத்திய தாக்குதலையும் துப்பாக்கிச்சூட்டையும் கோமதி நாயகம் ஆணையம் “முற்றிலும் நியாயமானது” எனவும், எந்த “அத்துமீறல்களும்” அதில் நிகழவில்லை எனவும் சான்று வழங்கியது.
ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அமைக்கப்படும் இத்தகைய விசரணை ஆணையங்கள் இப்படி நியமித்தவர்களுக்கு விசுவாசமாக அறிக்கை அளிப்பது என்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. பதவியிலுள்ள நீதிபதிகளானாலும் கூட பல நேரங்களில் இப்படித்தான் நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்கிறபோது சும்மா சாய்வு நாற்காலிகளில் படுத்துக் கொண்டு ‘இந்து’ பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கை நிறையச் சம்பளம், ஆள், தேள் அதிகாரங்கள் என வரும்போது நன்றி விசுவாசம் அவர்களின் நீதியுணர்வை மழுங்கடித்துவிடுகிறது, மொத்தத்தில் தம் மீதான குற்றச் சாட்டுகளைக் கறை நீக்கம் செய்துகொள்ளும் ஒரு கருவியாக இத்தகைய விசாரணை ஆணையங்கள் ஆட்சியாளர்களுக்குப் பயன்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நியமிக்கப்பட்ட லிபரான் ஆணையம் சுமார் 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 18 கோடி ரூபாய் செலவிற்குப் பின் அன்றைய பிரதமர் நரசிம்மாராவுக்குக் “க்ளீன் சிட்” அளித்தது. இப்படி நிறையச் சொல்லலாம். தப்பித் தவறி ஶ்ரீகிருஷ்ணா போன்ற சில நேர்மையான நீதியரசர்கள் நல்ல நேர்மையான அறிக்கை ஒன்றை அளித்தால் அவற்றின் பரிந்துரைகள் குப்பைக் கூடைக்குப் போவதுதான் வழக்கமாக உள்ளது. மும்பைக் கலவரத்தில் (1992) குற்றமிழைத்த காவல்துறை அதிகாரிகளை நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தன் அறிக்கையில் கச்சிதமாக அடையாளம் காட்டியிருந்தபோதும் அவர்கள் எல்லோரும் பதவி உயர்வுகள் பெற்று முழுப் பணிக் காலத்தையும் சுகமாக முடித்துப் பணி ஓய்வு பெற்றனர். ஜெயலலிதா மட்டுமல்ல பெரும்பாலும் எந்த அரசியல்வாதியும் காவல்துறையினரை விட்டுக் கொடுப்பதில்லை.அ.தி.மு.க அரசுகள், குறிப்பாக ஜெயா இதில் படுமோசம் என்பதுதான்.
இந்த அடிப்படையில்தான் நாம் விசாரணை ஆணையங்கள் குறித்த நமது பார்வைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எக்காரணம் கொண்டும் விசாரணை ஆணையங்களே தேவையில்லை எனச் சொல்ல முடியாது. இதுபோன்ற காவல்துறை அத்துமீறல்கள், சாதி, மதக் கலவரங்கள், இயற்கைப் பேரழிவுகள் முதலியவற்றில் விசாரணை ஆணையங்கள் அமைப்பதைத் தவிர்த்துவிட இயலாது. பல்வேறு வித்தியாசங்கள் மிக்க சமூகங்களின் தொகுப்பாக ஒரு நாடு அமையும்போது அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பன்முகப் பரிமாணம் கொண்டவையாக அமைகின்றன. அவற்றை வெறும் சட்ட ஒழுங்கு அளவுகோலை வைத்து மட்டுமே அளந்துவிட இயலாது. காவல்துறை விசாரணைகள், அது உள்ளூர் மட்டத்திலோ இல்லை சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ மட்டங்களிலோ மேற்கொள்ளப்பட்டாலும் கூட அவையும் இவற்றை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்க்கும்.
எனவேதான் வெறும் காவல்துறை விசாரணைக்கு அப்பாற்பட்ட, பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் கணக்கில் கொள்ளத் தக்க விசாரணை ஆணையங்கள் தவிர்க்க இயலாதவை என்கிறோம். தவிரவும் இது போன்ற கலவரங்கள், அத்துமீறல்கள், பேரழிவுகள் முதலானவை குறித்த முழுமையான உண்மைகளை அறிந்துகொள்ளும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்கிற வகையிலும் இத்தகைய ஆணையங்கள் அவசியமானவை. அதே நேரத்தில் அவை இப்போதுள்ளதைப்போல அல்லாமல் இன்னும் அதிகாரமிக்கதாய், வெளிப்படைத்தன்மை உடையவையாய், அரசியல் தலையீடில்லாமல் சுதந்திரமாய் இயங்கக்கூடியதாய், மக்களுக்குப் பொறுப்பானதாய் அமைதல் வேண்டும்.
இந்த அடிப்படையில் “1955 ம் ஆண்டு விசாரணை ஆணையங்கள் சட்டம்” மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதில் என்னென்ன அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் எனப் பார்க்கலாம்.
காவல்துறை விசாரணை என்பது பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் பார்க்காமல் அதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையகாவே அணுகுகிறது என்றோம். விசாரணை செய்யும் இடத்தில் நீதிபதிகளை அமர வைத்தாலும் இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அவர்களும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் பார்க்கும் பயிற்சி பெற்றிருப்பதில்லை, எல்லாவற்ரையும் சட்ட மற்றும் நீதிவழங்கு நெறிமுறைகளுக்குள்ளேயே சுருக்கிப் பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டவர்கள் அவர்கள். பி.என்.பகவதி, கிருஷ்ண அய்யர் அல்லது ஜே.எஸ்.வர்மா போன்ற விசாலமான சிந்தனையையும், அகன்ற பார்வையையும் கொண்ட நீதிபதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
எனவே இதுபோன்ற ஆணையங்கள் நீதிபதிகளைக் கொண்டே அமைக்கப்படவேண்டும் என்பது முதலில் மாற்றப்பட வேண்டும். நீதிபதிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் பிற துறை வல்லுனர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் முதலியவர்கள் பங்குபெறுவதாக அவை அமைய வேண்டும். “தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சி நடவடிக்கைகள்” (Developmental activities in Extremist Affected Areas) என்பது குறித்து ஆராய 2006ம் ஆண்டு இந்திய அரசின் திட்ட ஆணையத்தால் (Planning Commission) நியமிக்கப்பட்ட ஆணையத்தை இதற்கொரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். டாக்டர் ஈ.ஏ.எஸ்.சர்மா, டாக்டர் என்.ஜே.குரியன், கே.பி.சக்சேனா, டாக்டர் கே. பாலகோபால், எஸ்.ஆர்.சங்கரன், டாக்டர் சுக் தியோ தோரட், டாக்டர் பேலா பாடியா முதலான துறை சார் நிபுணர்கள், முன்னாள் உயர் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், மே.வங்கத்தில் நிலச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்திய அனுபவமிக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனப் 16 பேர்கள் இடம்பெற்ற அந்தக் குழுவின் அறிக்கை இணையத்தளங்களில் உள்ளது. (ஒவ்வொரு விசாரணை ஆணையத்திலும் இத்தனை எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதில்லை)
அடுத்து, இத்தகைய விசாரணை ஆணையத்தை அமைப்பது, உறுபினர்களைத் தேர்வு செய்வது, ஆணையத்தின் எல்லைகளையும் நோக்கங்களையும் வரையறுப்பது முதலான அதிகாரங்கள் இப்போதுள்ளதுபோல முழுமையாக அரசின் கைகளில் இருக்கக்கூடாது. இந்த அதிகாரம் ஒரு சுதந்திரமான குழுவிடம் இருக்க வேண்டும். அதில் அரசுப் பிரதிநிதிகள் தவிர, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்துறை நிபுணர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் முதலானோர் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் எந்தவிதமான நிர்வாகத் தலையீடும் இல்லாமல் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள், அத்துமீறல்கள் ஆகியவற்றை முழுமையாக, ஆழமாகச் சென்று ஆராயும் அதிகாரமும் வசதிகளும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆணையம் தன் அறிக்கையை அரசிடம் தராமல் முன் குறிப்பிட்டவாறு அமைக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பு, அல்லது நாடாளுமன்ற/ சட்டமன்றக் குழு அல்லது நீதிமன்றத்திடம் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அளிக்க வேண்டும். இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படுவதோடு, பரிந்துரைகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு ஆணையிடவும் இந்த அமைப்பு அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் ஒரு நீதிமன்றத் தீர்ப்பைப் போல சட்டபூர்வமான ஏற்பு (legal status) பெற வேண்டும்.
எனினும் ஆணையத்தின் பரிந்துரைகள் நீதிமன்றப் பரிச்சிலனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் (subjected to judicial review) என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
இது ஒரு பூர்வாங்க முன்வைப்பு. இது விவாதிக்கப்பட்டு செழுமைப்படுத்தப்படலாம். இப்படியான ஒரு மாற்று நடைமுறை சாத்தியமா என்கிற அய்யம் தேவையில்லை. தகவல் அறியும் உரிமை, லோக் ஆயுதா முதலானவற்றின் ஊடாக மக்கள் அதிகாரம் பெறுகிற வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளபோது ஏன் இதையும் சாத்தியமாக்க இயலாது?