சாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு

ஒன்று

இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்துவமிக்க ஒரு நிகழ்வாய் கடந்த இரண்டாயிரமாண்டு கால வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பு ஆகியவற்றைக் குறித்த சிந்தனைகளை ஒரு சிறு கட்டுரைக்குள் அடக்கும் முயற்சி ஒரு மிக எளிய செயல்பாடாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையோடு கீழ்க் கண்ட செய்திகளைத் தொகுத்துச் சிந்திப்போம்.

பிறப்பின் அடிப்படையிலான குழுக்களாய்ச் சமூகம் முழுமை யையும் பிளவு படுத்துதல், ஏற்றத் தாழ்வான படி நிலை அமைப்பில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்தல், சமூக உற்பத்தியில் ஒவ்வொரு குழுவிற்கும் ஓர் இடம் (அதாவது பிறப்பின் அடிப்படையில் தொழில்) சமூகச் சடங்ககுகளில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பாத்திரம் (எ‡டு : கிராம திருவிழாக்களில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட கடமை), குழுவிற்குள் மட்டும் சமபந்தி உணவு மற்றும் திருமண உறவு, ஒதுக்கமான குடியிறுப்புகள் ஒவ்வொரு குழுவிற்கு உள்ளும் விவகாரங்களைத் தீர்ப்பதற்கான பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் குழுவின் விதிகளை மீறியவர்களைக் குழுவிலிருந்து விலக்கி வைக்கும் அதிகாரம், ஒவ்வொரு குழுவிற்குமெனச் சில மரபுகள், மற்றும் வழமைகள் ஆகியவற்றைச் சாதியத்தின் முதன்மையான அம்சங்கள் எனலாம். சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மேற்குறித்த கூறுகளின் அடிப்படையிலான செயற்பாடுகளின் விளை வாகச் சமூக உணர்வைப் பெறுகிறான்; தனது சுயத்தைக் கட்டமைத்துக் கொள்கிறான். இத்தகைய சமூக நடைமுறையின் விளைவாகக் கட்டமைக்கப்படும் சமூக முழுமைக்குமான பொதுக் கருத்தியலின் விளிப்பில் ஒவ்வொருவனும் தன்னை ஒரு சாதியனாக அடையாளம் காண்கிறான். தனக்கு ‘கீழான’ சாதியானைக் காட்டிலும் மேலான வனாகவும் ‘மேலான’ சாதியைக் காட்டிலும் கீழானவனாகவும் உணர்கிறான். சமூக உற்பத்தியிலும் சடங்கு நடவடிக்கைகளிலும் சாதி உரிமைகளைக் கற்பிதம் செய்து கொள்கிறான். இத்தகைய உணர்தல் களும், கற்பிதங்களும் அவனை ஒரு சமூகமாய், இனமாய், வர்க்கமாய் அடையாளம் காண்பதில் பெருந் தடைகள் ஏற்படுத்தி விடுகின்றன.

பொதுக் கருத்தியலிலிருந்து விடுதலை பெற்று, செயலுக்கு உந்தப் பெறுவதும், இருக்கும் இழிநிலைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவ தும் தடைக்குள்ளாகின்றது. சாதி உரிமைகள் என்கிற கருத்தோட்டம் ரத்தத்தில் ஊறிக் கிடக்கும்போது சமூக முழுமைக்குமான சம உரிமை கள் குறித்த உணர்வு கிளர்வதற்கு வழி இல்லாமல் போவதால் மனித உரிமைகள், ஜனநாயகப்பாடு ஆகியவை குறித்த ஓர்மையற்றதாகச் சமூகம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இருக்கும் கொடுமை நிகழ்ந்து விடுகிறது (1).

சாதி இயக்கத்தின் மையமான கூறுகள் இவை என்ற போதிலும் மூவாயிரமாண்டு காலச் சமூக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் போது சாதியத்தின் செயற்பாடுகள் எல்லா அம்சங்களிலும் மேற்குறித்தவாறே எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது எனச் சொல்லமுடியாது. சிந்துவெளி காலத்திய சமூகத்தில் சாதியின் தொன்மை வடிவத்திற் கான கூறுகள் இருந்த போதிலும் அதன் இயக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை.

ரிக் வேத சமூகத்தில் நான்கு வருண பாகுபாடு என்பதுகூட முழுமை யாகச் செயல்படவில்லை. பிறபபின் அடிப்படையில் தொழில் என்பது ரிக் வேத கால நடைமுறையாக இல்லை. பின் வேதகாலத்தில் கூட வருணங்களிடையிலான இயக்கம் முற்றிலுமாய் தடைசெய்யப்பட வில்லை.

தமிழகத்திலோ சங்க இலக்கியங்களுக்கு முந்திய காலகட்டத்தில் (கி.மு. 2 நூற்றாண்டுக்கு முன்) சமூக உருவாக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை. இன்றைய வடிவிலான சாதிய உருவாக்கத்தின் தோற்றத்திற்கு ஆதாரமில்லை.

அதே போல சம காலச் சூழலைக் கருத்திற் கொண்டு பார்த்தோ மானாலும் கூட சாதிப் பஞ்சாயத்து, சாதி விலக்கம், சமபந்தி உணவு முதலியவை இன்று பெருமளவில் நடைமுறையில் இல்லை. கிராம அடிப்படையிலான சிறுவீத உற்பத்தியில் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது உறுதியாகச் செயற் படுகிறது. பரந்த அளவிலும் (macro level)), பெருவீத உற்பத்தியிலும் கோட்பாட்டளவிலேனும் இந்நிலைமை இல்லை. (2)

 

ஆக, சாதியத்தின் மையமான கூறுகளென நாம் வரையறுத்தலை முழுமையாகச் செயற்பட்ட காலமென்பது இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவக் காலக்கட்டத்தில் மட்டுமே எனலாம். தமிழகத்தில் பல்லவர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரை இந்தக் கூறுகளை இறுக்க மாகக் காணலாம்.

எனினும் எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆதிக்க சக்திகள் சமூகத்தை வகைப்படுத்தி, பெயரிட்டு அதிகாரம் செலுத்தும் நடைமுறைக்கு, சாதி பயன்பட்டு வந்துள்ளது.

முதலாளியக் காலக்கட்டத்தில் மட்டுமே உபரியை உறிஞ்சுதல் என்பது முற்றிலும் பொருளாதார அடிப்படையில் செயல்படும் எனவும் முதலாளியத்திற்கு முற்பட்ட சமூக உருவாக்கங்களில், மதம் முதலிய ‘பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட’ வற்புறுத்தல்கள் உபரி உறிஞ்சலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் மார்க்சியம் பகரும்.

இந்திய நிலப்பிரபுத்துவத்தில் சாதியமும் அதற்கு தத்துவார்த்த சடங்குப் பாத்திரப் பின்புலத்தை வகுத்தளித்த (இந்தோ ‡ ஆரியப் பார்ப்பனிய) இந்து மதமும் (தமிழகத்தில் இதனை சைவ‡ பார்ப்பனிய இந்துமதம் எனலாம்) உபரி உறிஞ்சுதலைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய சமூகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் உள்ள வேறு சில முக்கிய ஒற்றுமை, வேற்றுமைகளும் இங்கு சிந்திக்கத் தக்கன. ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சமூகத்திலுங்கூட நிலப்பிரபுகள் தங்களுக் குள்ளேயும், பண்ணையடிமைகள் தங்களுக்குள்ளளேயுந்தான் சமூக உறவுகளைக் கொண்டிருந்தனர். (எ‡டு : திருமணம், விருந்து முதலியன). ஓரளவு தொழில்களுங்கூட

பிறப்பின் அடிப்படையில் இருந்தன எனலாம். ஆனால் இந்த வேறுபாடுகள் நிலப்பிரபுக்கள் (சுரண்டுபவர்கள்), பண்ணையடிமைகள் (சுரண்டப்படுபவர்கள்) என்கிற மட்டத்திலேயே பெரும்பாலும் செயல்பட்டது.

இந்தியச் சமூகம் போல, சுரண்டப்பட்ட மக்களுக்குள்ளேயே ஏராள மான உட்பிரிவுகளும் அவர்களுக்குள் இறுக்கமான அகமண உறவும், சடங்கு ரீதியான பாத்திர வேறுபாடுகளும் அங்கெல்லாம் கிடையாது. அய்ரோப்பிய சமூகத்தில், வர்க்க ரீதியாய் ஒரு வகை அகமண முறை கடைபிடிக்கப்பட்ட போதுங் கூட அவை கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படவில்லை. மத, சடங்கு ரீதியான ஏற்பு வட்டத்திற்குள் அது கொண்டுவரப்படவில்லை. பிறப்பு ரீதியான சமூகத் தகுதியும் இவ்வாறு மத, சடங்கு வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படவில்லை. இங்கிருந்த இந்தோ ‡ ஆரிய, சைவப் ‡ பார்ப்பனிய இந்து மதம் அத்தகைய கோட்டுபாட்டுருவாக்கத்தின் செயல் வடிவமாக இருந்தது.

இதன் அடிப்படையில் சமூக உற்பத்தியும் உபரி உறிஞ்சலும் நடை முறைப்படுத்தப்பட்டன. இத்தகைய நடைமுறையின் விளைவான ‘பொதுக் கருத்தியலின் அடியாக’ அதன் விளிப்பில் சமூக மனிதனின் சுயம் கட்டமைக்கப்பட்டது.

இந்த வகையில் சாதி உணர்வு ஒப்பீட்டளவில் சுயேச்சையான செயல்பாடு கொண்டிருந்தது.

முதலாளியச் சமூகத்தில், ‘வர்க்கம்’ என்பது பிற பொருளாதாரதிற்கு அப்பாற்பட்ட வற்புறுத்தலின் அடியான உறவுகளிலிருந்து விலகி முற்றிலும் ‘ஒரு பொருளாதார வகையினமாக’ மாறும் என்பர். அய்ரோப்பியச் சமூகத்தில் அப்படித்தான் நடந்தது.

இந்தியாவில், ஏகாதிபத்திய நெறியின் கீழ் சனநாயகப்பாடு இல்லாம லேயே முதலாளிய வளர்ச்சி ஏற்பட்ட கதை நமக்குத் தெரியும்.

எனவே இங்கு முற்றிலுமாய் வர்க்கம் ஒரு பொருளாதார வகையின மாக உருப்பெற்றுள்ள பெருவீத உற்பத்தியிலும்கூட சாதி உணர்வு என்பது அதனுடைய அக மணக்கூறுடன் சுயேச்சையான இருப்பைக் கட்டமைத்துக் கொண்டு விடுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தச் சமூக அமைப்பைக் காப்பாற்றி அதன் மூலம் இன்றைய உபரி உறிஞ்சலை யும் அதிகாரச் செயல்பாட்டையும் காப்பாற்ற நினைக்கும் ஆதிக்கச் சக்திகள் தங்கள் நோக்கை நிறைவேற்றிக் கொள்ளும் பல்வேறு செயல்பாடுகளில் தலையாயயதாக இச்சாதி உணர்வை நிலை நிறுத்தும் பணியை முதன்மையாக மேற்கொள்கின்றன.

அதற்குரிய வகையில் தேர்தல் அரசியல் உட்பட்ட அரசின் செயல் பாடுகளும் அமைகின்றன. இதனை விரிவாய்ப் பார்க்குமுன்பாக, சாதி யத்திற்குச் சில பொதுப்படையான பண்புகளும் செயல்பாடும் இருந்த போதிலும் வரலாறு முழுவதிலும் இவை ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்கிற புரிதலோடு சாதியின் தோற்றம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வோம்.

இரண்டு

முன்பு நான் எழுதிய குறிப்பொன்றில் ‘சாதியின் தோற்றம்’ குறித்து,

“இந்தியாவில் ஆசிய உற்பத்தி முறை நிலவியதா இல்லையா என்பது விவாதத்திற்குரியதாயினும் அய்ரோப்பாவில் தோன்றிய முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகட்கும் இங்கு தோன்றிய வைகட்கும் முக்கிய வேறுபாடுகள் உண்டு. ‘ஆதிச் சமூகங்களை ஆசிய அடிப்படை வடிவம், ரோமானிய – கிரேக்க வகைச் சமூகம், செர்மானிய வடிவம் என மார்க்ஸ் பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமுதாயமாக இருப்பதே ஆசிய வடிவத்தின் சாரம். தனி மனிதன் என்பது ஒரு விபத்துதான். இந்நிலையில் சுரண்டல் வடிவெடுக்கும் போது, ‘அடிமை முறை’ -என்பது கிரேக்க – லத்தின் மாதிரியாக (அதாவது ‘இன்னாரின் அடிமை இன்னார் என  அமையாமல்) ‘பொது அடிமை முறை’ இங்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, அடிமைகள் அனைவரும் சமம் என்கிற நிலை போய், அடிமைப்பட்ட சமூகத்திற்குள்ளிருந்த ஏற்றத்தாழ்வுகள் அடிமை களுக்குள்ளேயான ஏற்றத்தாழ்வுகளாக வடிவெடுத்தன. எனவே அய்ரோப்பாவைப் போலன்றி, இங்கு உழைக்கும் வர்க்கத் திற்குள்ளேயே ஏற்றத் தாழ்வுகள் உருவாகின.

பின்னாளில் இந்திய நிலப் பிரபுத்துவ வடிவத்தில் இவை சாதி முறையாக இறுகின. இப்படி நிகழ்ந்ததற்கான பிரத்தியேக காரணிகளை இங்கேயுள்ள புவியியற் தன்மைகள், தட்ப வெப்பச் சூழல்கள், இனக் கலப்பு, இரும்பைப் பயன்படுத்துவதில் தேக்கம், இந்திய அரசுருவாக்கத் தின் தனிப் பண்புகள் ஆகியவற்றில் தேட வேண்டும்” (3 )  என்கிறபடி குறிப்பிட்டிருந்தேன்.

இங்கே இந்தப் பிரத்தியேகக் காரணிகளைச் சற்று விளக்க முற்படுவோம்.

அடிமை முறை வளர்ச்சியுற்ற கிரேக்க சமுதாயத்திற்கும் வருண – சாதி முறை வளர்ச்சியுற்ற இந்தியச் சமூகத்திற்குமிடையேயான வேறுபாடுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:

(அ). கிரேக்க சமுதாயத்தில் கற்காலம், உலோக காலம், இரும்புக் காலம். விவசாயமயமாக்கல், அரசுருவாக்கம், நகர நாகரிகச் சமுதாய அமைப்பு என்பன அடுத்தடுத்து ஒரே சமுதாயத்தில் ஒரே புவிப்பரப்பில் ஒரே இன மக்கள் நடுவில் தோற்றம் கொண்டன. இந்தியச் சூழலில் இந்நிலைமை இல்லை.

காலத்தால் முற்பட்ட சிந்து வெளிப் பண்பாட்டிற்கும் வருண சாதியமைப்பின் தொட்டிலாகிய கங்கைச் சமவெளிப் பண்பாட்டிற்கும் தொடர்ச்சி கிடையாது. சிந்துவெளிப் பண்பாட்டைத் திராவிட இனத்துடன் பேசப்படுகிற கருத்து வலுவாக வேரூன்றியுள்ள போதும் சிந்து வெளி மக்கள் யார் என இதுவரை அய்யத்திற்கிடமின்றி நிறுவப்படவில்லை. சிந்துவெளி எழுத்துக்கள் இன்னும் படிக்கப்படவுமில்லை. சிந்துவெளிப் பண்பாடு குறித்து வரலாற்றாசிரியர்கள் பொதுவில் கருத்து மாறுபாடினின்றி ஏற்றுக் கொள்ளும் உண்மைகளை இப்படிப் சொல்லலாம்:

சிந்துவெளிச் சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறிந்திராத உலோக காலச் சமூகம். ஏற்றத்தாழ்வும் வர்க்க வேறுபாடும் மிகுந்திருந்த ஒரு வகை நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் இது. விவசாயத்தை இம் மக்கள் அறிந்திருந்தனரெனினும் பிந்திய கங்கை வெளிச் சமூகத்திற்கும் இவர்களுக்குமிடையே வேறுபாடுகள் நிறைய. விரிவான அரசுருவாக்கம் நடைபெறாத இச்சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை நிலைநாட்டுவதில் மதக் கருத்தியலாதிக்கத்தின் பங்கு முக்கியமானது. இவ்வகையில் பின்னாளைய சாதியமைப்பின் தொன்ம மாதிரியை இங்கு அடையாளங் காணமுடியும். சிந்துவெளிப் பண்பாடு எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது குறித்தும் ஐயத்துக்கிடமற்ற முறையில் நிறுவப்பட்ட கருத்துகள் ஏதுமில்லை.

ஆரியப்படையயடுப்பு என்கிற கருத்தைக்கூட இன்று ரொமிலா தப்பார் போன்ற வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை (4).

எப்படியோ, சிந்துவெளிக்குப் பிந்திய வேத காலப் பண்பாடு என்றழைக்கப்படும் கங்கைவெளிப் பண்பாடு முற்றிலும் இதிலிருந்து வேறுபட்ட இரும்பைப் பயன்படுத்திய, உழவு மயமாக்கலின அடிப்படை யிலான பண்பாடாக அமைந்தது.செழிப்பான உழவு கிராமங்களும் அவற்றினடியான நகர மற்றும் பல்வேறு வடிவிலான அரசுருவாக்கங் களும் நிகழ்ந்தன.

மகதத்தைக் கருவாகக் கொண்ட கங்கைவெளியே இன்றைய வருண – சாதி அமைப்பின் தொட்டிலாக அமைந்தது. கங்கை வெளியிலிருந்த ஆதிக்குடிகளும் குடியேறிய ஆரிய மொழி மக்களும் இணைந்து உருவாக்கம் பெற்ற இந்தோ – ஆரியப் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாகக் கிழக்கு நோக்கியும் மேற்குக் கடற்கரை வழியாகத் தெற்கு நோக்கியும் பரவியது. உள்நாட்டுக் குடிகளுக்கும் இந்தோ -ஆரிய மயப் பண்பாட்டிற்குமிடையே முரண்பாடுகள் இருந்திருக்கலாமெனினும் முரண்பாட்டைக் காட்டிலும் ஒருமையே பிரதானமாக இருந்தது.

(ஆ). இந்தோ – ஆரியப் பண்பாடு விரவிய கங்கைவெளியில் அக் காலக்கட்டத்திற்கு முன் அங்கிருந்த ஆதிக்குடிகளின் நடுவில் கிரேக்கத்தைப் போல இயல்பான வகையில் இரும்பு நாகரிகம் பரிணமிக்காமற் போனதற்கான காரணத்தை எங்கல்சின் ஒரு கூற்றிலிருந்து தொடங்கி ஆராயலாம்.(5)

புதிய கற்காலத்தின் இறுதியில் மனித சமூகம் கால்நடைகளை வளர்க்கவும் புராதன முறையில் தோட்டச் சாகுபடி செய்யவும் தொடங் கியது. இந்நிலையில் கீழை நாடுகளுக்கும் இதர பண்பாடுகளுக்கு மிடையேயான ஒரு முக்கிய வேறுபாட்டை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

கீழை நாடுகளைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு, ஒட்டகம், பன்றி, கழுதை, மான் போன்ற பல்வேறுபட்ட வளர்க்கத்தக்க விலங்குகள் கிடைத்தன. பாலும் கறியும் இவ்வளர்ப்பின் மூலம் ஏராளமாகக் கிடைத்ததனால் வேட்டையாடுதல் குறையத் தொடங்கியது. உழவிலும் ஆர்வமிருக்கவில்லை. கால்நடைகளை வளர்க்க வாய்ப்பற்ற மேலைச் சமூகங்களில் தோட்டக்கலையும் பிறகு முன்னேற்றமடைந்த விவசாய மும் வளரத் தொடங்கியது. செம்பு, வெண்கலம் போன்ற உலோகக் கருவிகளிலும், இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதனை உழவுக் குப் பயன்படுத்துவதிலும் ஆர்வங்காட்டினர்.

கங்கை வெளியிலோ இந்தோ ஆரிய விரவலுக்குப் பின்பே, ஈரானிலும் பிற மத்திய கிழக்குப் பகுதிகளிலும் இரும்பு பயன்படுத்தப் பட்டு ஏறத்தாழ 200 முதல் 100 ஆண்டுகளுக்குப் பின்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது.

(இ). கிரேக்கத்திற்கும் கங்கை வெளிக்குமிடையேயான இன்னொரு வேறுபாடு விவசாயத்றகுரிய பரப்பளவு. கிரேக்க நாகரிகம் மிகச் சிறிய ஒரு பரப்பளவில் தோன்றியது. விளை நிலங்கள் மிகவும் குறைவு. கங்கை வெளியோ ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமும் சுமார் இரண்டு கோடி ஏக்கர் பரப்பளவுமுள்ள டெல்டா பகுதி.  (6)

(ஈ). அடுத்த முக்கிய வேறுபாடு இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தினருக்கும் ஆதிக்குடிகளுக்கும் இடையிலான இனம், மொழி மற்றும் தோற்றத்தின் அடிப்படையிலானது.

இனி இந்த வேறுபாடுகளைத் தொகுத்துப் பார்ப்போம்.

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதியில் கிட்டதட்ட சிந்துவெளி நாகரிகத் தைப் போல ஒரு நகர நாகரிகம் கிரேக்க – ரோமானியப் பகுதியில் உருவானது. கால்நடை வளர்ப்பு வாய்ப்பில்லாமல் உபரி வளர்ச்சிக்கு உழவையே அச்சமூகம் நம்பியிருந்தது. இரும்பின் பயன்பாடு கண்டு பிடிக்கப்பட்டவுடன் அதனுடைய சாத்தியக் கூறுகள் உழவிற்கும் உபரி உறிஞ்சலுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. உலோக-நகரப் பண்பாட்டு உருவாக்கம் நடைபெற்ற அதே சமூகத்திலேயே தொடர்ச்சி யாக இரும்பு -உழவு நாகரிகம் வளர்ச்சியுற்ற போது இறுக்கமாக அங்கு உருவாகியிருந்த அரசமைப்பு உபரியை விரிவாக்க முயன்றபோது அடிமைகளைப் பயன்படுத்தியது. விளை நிலங்கள் குறைவாக இருந்தன என்பதும் இறுக்கமான தொடர்பு வலைப் பின்னல் மூலம் வாழ்தளம் முழுவதும் அரசமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டதும் அடிமைகள் தப்பித்து ஓடுவதற்கு வழிஇல்லாமல் ஆக்கின.

உலோக-நகர நாகரீக வளர்ச்சியின் தொடர்ச்சி அறுந்துபோய் உலோகப் பண்பாடே இல்லாத மேய்ச்சலைப் பெருமளவில் நம்பி யிருந்த உழவு, கைத்தொழில் என்றெல்லாம் வேலைப் பிரிவினை களின் அடிப்படையில் இனக்குழு ஒற்றுமை சிதையாத -குழுவிலிருந்து விலகிய தனி மனிதனே உருவாகும் வாய்ப்பில்லாத – ஒரு சமுதாயத்தில் இரும்பு விவசாய நாகரிகம் என்பது இந்தோ – ஆரிய மயமாக்கலின் விளைவாகத் தோன்றிய போது அது இன்னாருக்கு இன்னார் அடிமை என்றில்லாத பொது அடிமை முறையாகத் தோற்றமெடுத்தது (7).

அரசுருவாக்கமும் உபரி உறிஞ்சலும் இறுக்கமான போது வருண – சாதி அடிப்படையிலேயே வர்க்கமும் வடிவம் கொண்டது. அடிமை கொள்ளப்பட்ட உள்நாட்டுச் சமூகங்களின் சடங்கு ரீதியான பிரிவினை கள் ஏற்றத்தாழ்வுமிக்க சமூக உறவுகளாக உருப்பெற்றன.

மகதம் போன்ற இடங்களில் உறுதியான அரசுருவாக்கமும் அதிகார வலைப்பின்னலும் உருவாவதற்கு முந்தியச் சூழலில் கிரேக்கம் போன்று அடிமைகள் மீது தனிப்பட்ட முறையில் கொடூரமான அதிகாரம் செலுத்த முற்படும் போது ஒடுக்கப்பட்டவர்கள் தப்பித்து ஓடுவதற்கும் புதிய விளை நிலங்களில் புதிய குடியிருப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இங்கு வாய்ப்பிருந்ததையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் இங்கு கிரேக்கம் போன்ற வடிவில் அடிமை முறை தோன்றாததை நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனினும் உபரியை விரிவாக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்ட போது அதிகாரத்தைச் செலுத்தவும் சுரண்டலை மேற்கொள்ளவும் கிரேக்கத்தைக் காட்டிலும் நுணுக்கமான கருத்தியல் வகைப்பட்ட வடிவங்களை கங்கை வெளிப் பண்பாடு மேற்கொள்ள வேண்டியதாயிற்று. வருணாசிரம தருமமாகவும், பார்ப்பனீய இந்து மதமாகவும் இத்தகைய கருத்தியல் வடிவங்கள் வெளிப்பட்டன.

கிரேக்கத்தைப் போன்ற அடிமை முறையை இறுக்கமாகச் செயற் படுத்த இயலாத சூழலில் கங்கை வெளிப் பண்பாட்டின் ஆதிக்கப் பிரிவினரான பூசாரி வர்க்கமும், அரசதிகார வர்க்கமும் தமது சுரண்டலைத் தொடரவும், தக்க வைக்கவும், அதன் பயன்களைத் தமது சந்ததிக்குக் கையளிக்கவும் செய்த உத்திகளில் ஒன்று அம்பேத்கர் சொன்னது போல பிற வர்க்கங்களிடமிருந்து அகமண முறை மூலம் தங்களைக் கதவடைத்துக் கொண்டு ஒதுக்கம் பாராட்டுவதென்பது கூடவே கீழிருக்கும் வர்க்கங்களையும் ஒதுக்குவதுதான். தீட்டு, சடங்கு, தூய்மை போன்ற வடிவங்களில் இந்த ஒதுக்கமும், கதவடைப்பும், அகமணமும் கோட்பாட்டுருவாக்கம் செய்யப்பட்டன. மேலும் மேலும் புதிய இனக்குழுக்கள் உழவுச் சமூகத்திற்குள் உள்வாங்கப்பட்ட போது சில சமயங்களில் அத்தகைய குழுக்களின் ஆதிக்க சக்திகள் இங்குள்ள ஆதிக்க சக்திகளுடன் கதவடைப்பு இல்லாமல் இணைத்துக்கொள்ளப் பட்டதுமுண்டு; முற்று முழுதாக அந்த இனக்குழுவையே கதவடைத்து விலக்கி ஒரு புதிய சாதியாக உருவாக்கியதுமுண்டு.

இந்தக் காரணிகளில் பலவற்றைத் தமிழ்ச் சூழலுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். வரலாற்றுக்கு முந்திய தமிழகத்தின் தொல்குடிகளின் இனம் குறித்து அய்யத்திற்கிடமின்றி திட்டவட்டமாக இன்று எதையும் சொல்ல முடியவில்லை. பழங்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், பெருங்கற்புதைவுக் காலம் ஆகியவற்றிற்குமிடையே இங்கு தொடர்ச்சி இல்லை. கிரேக்கத்திலும் வடஇந்தியாவிலும், தக்காண பீடபூமியிலும் உள்ளதைப் போலன்றி இங்கு உலோக காலமே தோன்ற வில்லை. இரும்பின் பயன்பாடு என்பது வட இந்தியாவைக் காட்டிலும் இங்கு மேலும் இருநூறு ஆண்டுகள் தாமதமாகவே நிகழ்கின்றது. அதிலும்கூட தொடக்க காலத்தில் வேட்டையாடுதலுக்கும், போருக்குமே இரும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டது (8).

உழவிற்கு இரும்பு பயன்படுத்தப்பட்டது பின்னர்தான். வளர்க்கத் தக்க விலங்குகள் வட இந்தியாவைப் போல எப்போதும் நீராடுகிற நீண்ட ஆறுகளும் அகன்ற பெரிய சம வெளிகளுமில்லாத தமிழகத்தில் இரும்புக்குப் பிந்திய உழவு மயமாக்கலும் மருத நிலப் பண்பாடும் எல்லா இடங்களிலும் ஒரே சீராகவும் நடைபெறவில்லை. அருகருகே வெவ்வேறு உற்பத்தி வடிவங்களும் சமூக அமைப்புகளும், பண்பாடு களும் உருவாகின.

கி.மு. 4 ம் நூற்றாண்டுக்குப் பிந்திய வடமொழி நூற்களில்தான் தென்னிந்தியா பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

மேற்குக் கடற்கரை வழியாகத் தமிழகம் வந்த இந்தோ – ஆரியர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பே கணிசமான அளவில் இங்கே வந்திருக்க முடியும். கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சமண, பெளத்த வணிகக் குழுக்களும் இங்கே வந்திருக்கலாம். கங்கைச் சமவெளியில் ஏற்படுத்தியதைப் போல பெரிய அளவில் பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடிய அளவிற்கு இக்கால கட்டங்களில் இடப்பெயர்வும், குடியேற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஆரிய தாக்கம் இல்லாத மொழி, பண்பாடு முதலியவை இங்கே தன்னிச்சையாக வளர்ந்து வந்தன. இங்கும் கிரேக்க மாதிரியான அடிமை முறை தோன்ற வாய்ப்பில்லை என்பது தெளிவு.

தமிழகத்தில் மருத நிலப் பண்பாடும், உபரி உறிஞ்சலும், அரசு உருவாக்கமும் வளரத் தொடங்கிய போது உள்நாட்டில் எழுந்த தேவையின் காரணமாக இந்தோ ஆரியத்தின் சுரண்டற் கூறுகளை கொஞ்சம் கொஞ்சமாய் இங்கு வந்து கொண்டிருந்த இந்தோ -ஆரியரிடமிருந்து உள்நாட்டு ஆதிக்க சக்திகள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கிரேக்க மாதிரியான அடிமை உருவாக்கத்தைக்

காட்டிலும் கங்கை வெளி மாதிரியான வருண-சாதி உருவாக்கம், உபரி அதிகரிப் பதற்கு எளிதாக வழி வகுத்தது. சைவ – பார்ப்பனிய மயமாதலாக இங்கே அது வெளிப்பட்டது.

ஒன்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. வருண சாதி உருவாக்கத்தின் தோற்றக் கட்டத்தில் நிலத்தில் தனியுடைமை கிடை யாது. இடைத்தொடர்புகளில்லாமலேயே அரசு நேரடியாக உழவுச் சமூகத்திடமிருந்து உபரியை உறிஞ்சியது. இந்நிலைமை பின்னாளில் படிப்படியாகக் குறைந்து இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறை உருவாகியது. அரசுக்கும் உழவுச் சமூகத்திற்குமிடையே இடை நிலை ஆதிக்க சக்திகள் உற்பத்தி முறையில் பங்கு பெற்றன. மெளரிய – புத்த காலத்துப் பேரரசுகளின் நகரங்கள் இப்போது முக்கியத்துவ மிழந்தன. வணிகம் வீழ்ந்தது. ஆளும் வர்க்கமும், வினைஞர்களும் கிராமமயமாகினர். இடைநிலை ஆதிக்க சக்திகள் மெளரிய காலத்தில் அரசு உறிஞ்சிய உபரியில் பங்கு பெற்றது போலன்றி இப்போது நேரடி யாக உழவுச் சமூகத்திடமிருந்து உபரியை உறிஞ்சினர். இங்கிருந்தே அரசுக்கும் பங்கு போனது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டல் பரந்த மட்டத்திலிருந்து தல மட்டத்திற்கு (micro level)) வந்தது. (9)

எனவே கிராம அளவில் பல்வேறு உற்பத்தி சக்திகளடையே உற்பத்தி உறவுகளை வரையறுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டது. எனவே கிராம அளவில் படிநிலையாக்கம் இறுகியது. பல்வேறு குழுக்களிடையே கடமைகளும் உரிமைகளும், வரையறுக்கப்பட்டன. இதற்கான சடங்கு அடிப்படையிலான கோட்பாட்டு நியாயங்களை இந்து மதம் உருவாக்கித் தந்தது. இவ்வாறு பல்வேறு குழுக்கள் சாதிகளாய் இறுகின. உற்பத்தி வரிவடைந்து நுணுக்கம் பெற்ற போது சாதிகளின் எண்ணக்கையும் பெருகின. தேவைக்கேற்ப வேலைப் பிரிவினைகளும் உருவாகின. அவை புதிய புதிய சாதிகளைப் படைத்தன. காயஸ்தர், கருணீகர் போன்ற கணக்குப் பிள்ளைச் சாதிகள் மிக அண்மையில் ஒரு சில நூற்றாண்டுகளுக்குள் உருவாகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று

இந்திய நிலப்பிரபுத்துவக காலந்தொட்டு இன்று வரையிலான சாதியத்தின் செயல்பாட்டை விரிவாக இங்கே பேச முடியாவிட்டாலும் சில முக்கியமான கூறுகளை மட்டும் தொகுத்துக் கொள்வோம்.

பகுதிக்குப் பகுதி எண்ணிக்கையிலும், பெயரிலும் வேறுபட்ட எண்ணற்ற சாதிகள் செயல்பட்ட போதிலும் அவற்றை ஒட்டுமொத்த மாய்க் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். தமிழகத்தைக் கருத்திற் கொண்டு சொல்லப்படுகிற இவை இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளுக்கும் பொருந்தக் கூடியதே அவை :

. ஆதிக்க சாதிகள்

(i). பார்ப்பனர்

(ii). வேளாளர் (10)

. ஒடுக்கப்பட்ட/சுரண்டப்பட்ட சாதிகள்

(i). விவசாயச் சாதிகள் (எ-டு : கள்ளர், மறவர், வன்னியர்…

(ii). கை வினைச் சாதிகள் (எ-டு : தச்சர், கொல்லர், குயவர், மருத்துவர்…

(iii). தாழ்த்தப்பட்டோர் {எ-டு : தேவேந்திரர் (பள்ளர்), ஆதிதிராவிடர் (பறையர்),  அருந்ததியர் (சக்கிலியர்) முதலானோர்} (11)

ஆதிக்கச் சாதிகளான பார்ப்பனரும் வேளாளரும் கிராம அளவில் மட்டுமல்ல ; பரந்த அளவிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். அரசதிகாரம், சடங்குத் தலைமை, கல்வி போன்றவற்றின் மூலமாக இதனை அவர்கள் செயற்படுத்தினர். இவற்றிலிருந்து முற்றாக விலக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மூன்று பிரிவினரும் பரந்த அளவிலும் நுண்ணிய அளவிலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, அதிகாரத்திற்கு ஆட்படுத்தப்பட்ட பிரிவினராகக் கிடந்தனர். இவர் களுள்ளும் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும் தீண்டாமைக்கும் ஆளாயினர்.

சோழப் பேரரசு சிதைவுண்ட பொருளாதாரத் தேக்க இடைக் காலத்திலும் ‘சுயதருமம்’ பேணவந்த விசயநகரத் தெலுங்கர் ஆட்சிக் காலத்திலும் சாதி இறுக்கம் மிகுந்தது. கங்கைவெளி போன்று வருணா சிரமமும், சாதியத்திற்கான கோட்பாட்ருவாக்கமும் மேற்கொள்ளப்படாத தமிழ்ச் சூழலில் இக்காலக்கட்டத்தில் இம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இலக்கிய வகை, எழுத்து வகை ஆகியவற்றிலெல்லாம் சாதிப் பாகுபாடுகள் செய்யப்பட்டன.(12)

சங்க இலக்கியங்கள், பள்ளு இலக்கியங்கள், குறவஞ்சி எனச் சாதிப் பெயர்களில் இலக்கியங்கள் வடிவெடுத்தன. சைவ மடங்கள் உருவாகி சைவ சித்தாந்தங்கள் ஓங்கின. வருணாசிரம தருமங்களை பாவித்தலை யும், மனுவழி புரத்தலையும் அன்றைய கல்வெட்டுகளும் இலக்கியங் களும் புகழ்ந்தன. அவ்வப்போது சில நாட்டுப்புற இலக்கியங்களிலும் சித்தர் பாடல்களிலும் மிகவும் வலுக்குறைவாகச் சாதி எதிர்ப்புக் குரல்களும் ஒலித்தன.

இந்தச் சூழலில் இங்கே வெள்ளையரின் வருகை நிகழ்ந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்களின் விளை வாகக் கிராம சமுதாய அமைப்பு ஆட்டங்கண்டது. உழைப்புச் சக்தி விற்பனைப் பொருளாகியது. சந்தைக்கான உற்பத்தி, பரிமாற்ற மதிப்பு ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. நிலவுடைமை முற்றாக ஒழிக்கப் பட்டு தடையற்ற முதலாளிய வளர்ச்சி ஏற்படாத போதிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வணிகமும் தொழிலும் தோன்றின. வெள்ளையர் ஏற்படுத்திய பிற முக்கிய மாற்றங்கள் ; வரி வசூல் மற்றும் அரசு நிருவாகம் என்பது அய்ரோப்பியப் பாணியில் கட்டமைக்கப்பட்டது. இதன் விளைவாக அரசதிகார வர்க்கமும் அரசுப் பணிகளும் விரி வடைந்தன. சாதி, மத அடிப்படையிலானதாக அமைந்திருந்தாலும் ஓரளவு சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருந்த கல்வி மற்றும் நீதி வழங்கு அமைப்புகள் முறைப் படுத்தப்பட்டு அரசதிகார வலைக்குள் கொண்டுவரப்பட்டன (13).

கல்வி நிறுவனங்களுக்கு மான்யங்களை வழங்கி பதிலுக்கு அரசு நிர்ணயிக் கும் பாடத் திட்டம், தேர்வுமுறை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள கட்டாயப் படுத்தப்பட்டன.

1771 முதற்கொண்டே கிழக்கிந்தியக் கம்பெனியால் சிவில் மற்றும் கிரிமினல் தீர்ப்பு வழங்கு அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். வழமை யிலுள்ள சாதி மத சாத்திர நெறிகளுக்குச் சட்ட வடிவம் அளிக்கப்படும் என வாரன்ஹேஸ்டிங்ஸ் அறிவித்தான். 1802 முதல் மாவட்ட நீதி மன்றங்களில் நீதிபதிகளுக்குத் துணையாக சாத்திர விளக்கமளிக்க பார்ப்பனப் பண்டிதர்களும் பார்ப்பன உதவி யாளர்களும் இசுலாமியச் சட்ட விளக்கமளிக்க மெளல்விகளும் அமர்த்தப்பட்டனர்.

1860 க்குள் இந்துச் சட்டப் பணி முழுமையடைந்தது. சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்சு தொகுத்துள்ள ‘பண்டிதரின் அபிப்பிராயங்கள்’ என்கிற நூலிலிருந்து எந்த அளவிற்கு மனுதருமும், வருணாசிரமச் சட்ட நெறிகளும் இந்நீதிமன்றங்களில் கோலோச்சின என்பது விளங்கும் (14).

‘மிதாட்சரம், ஸ்மிருதி சந்திரிகை, தாய வியாகம், சரஸ்வதி விலாசம், விபவகார நிர்ணயம், பராசர மாதவ்யம், வைத்னாத தீட்சதியம், சுபோதினி, வீர மித்ரோதயம்’ போன்ற பார்ப்பனர்களால் எழுதப்பட்டட வருணாசிரம நூற்களே தீர்ப்பு வழங்கவும் பின்னர் இந்து சட்டம் உருவாக்கவும் ஆதாரங்களாயிருந்தன.

தேவண்ணபட்டின் ஸ்மிருதி சந்திரிகை, மனு ஸ்மிருதி ஆகியவை ஆங்கிலத்திலும் பிற தேசிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. சி.தா.குருசாமி முதலியார் மனு தரும சாத்திரத்தை 1866 லேயே சென்னையில் அச்சிட்டார். 1827 இல் மதுரை கந்தசாமி புலவர் ஸ்மிருதி சந்திரிகையை ‘விவகார சங்கிரகம்’ என தமிழில் வெளியிட்டார். மயிலாடுதுறை முன்சிப் வேதநாயம் பிள்ளை 1805- 1861 காலகட்ட நீதிமன்ற முடிவுகளைத் தொகுத்துத் தமிழில் ‘சித்தாந்த சங்கிரகம்’ என வெளியிட்டார்.

சாதி, வருண வழமைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற முடிவிற் கிணங்க அவை எட்கார் தர்ஸ்டன் (தென்னிந்திய சாதிகளும், பழங்குடி களும்) மார்­ல் (தோடர்களிடையே பயணங்கள்) ராமச்சந்திர அய்யர் (மலபார் சட்டங்களும் வழக்கங்களும்) போன்றோரால் தொகுக்கப் பட்டன. விரிவான மக்கள் தொகை அறிக்கைகளும் உருவாக்கப்பட்டன.

வருண சாதிமுறை இவ்வாறு புத்துயிர்ப்புப் பெற்றதெனினும் கூடவே நிகழ்ந்த வேறு சில மாற்றங்களையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். குடியேற்ற ஆட்சியின் இன்னொரு இணையான நடவடிக்கை கிறித்துவ மதப் பரப்பல். தாழ்த்தப்பட்டோர், நாடார், மீனவர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகள் நடுவில் கிறித்துவம் எளிதில் பரவியது. இத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளின் விளைவாக ஒடுக்கப் பட்ட சாதிகளிலிருந்து ஒரு சிலர் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. கிறித்துவர்களாக மாறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பிற கிறித்துவர்களைப் போலவே தோள் சீலை அணிதல் போன்ற உரிமைகளைக் கோரினர். (15)

ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளேயே மதம் மாறாதிருந்தோரும்கூட தங்களை ஒத்த ஒடுக்கப்பட்ட சாதியினர் கிறித்துவக் கோயிலுக்குள் நுழைவதையும், தோள்சீலை அணிவதையும் பார்த்து இந்து மதத்திற் குள்ளேயே தமக்கும் அவ்வுரிமைகள் வேண்டுமென்று கேட்டனர்.(16)

இத்தகைய உரிமை எழுச்சிகளின் விளைவாகவும், வெள்ளையர் புகுத்திய பிற அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக வும் வெள்ளை ஆட்சியாளரின் சனநாயகப் பாரம்பரியத்தின் விளை வாகவும் அடிமைமுறை (1811), உடன்கட்டை (1829) பார்ப்பனருக்கு மட்டும் மரண தண்டனையில் விலக்கு (1817), மதம்/நிறம்/பிறப்பிடம் காரணமான சிறப்புரிமைகள் (1833), தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி பயிலுதலில் இருந்த தடை முதலியவை சட்ட வழியாக நீக்கப்பட்டன.

கூடவே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, இரட்டையாட்சி முதலியனவும் பின்னர் உருவாயின. சமூக அமைப்பில் ஏற்பட்ட மேற்குறித்த மாற்றங்களின் விளைவுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

அ. கிராமப் பிணைப்புகளிலிருந்து சட்டபூர்வமாய் பிரிக்கப்பட்ட நிலமும் கருவியும் சொந்தமில்லாத அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மக்கள், இதன் மூலம் நிலப் பிரபுத்துவம் வழங்கிய உயிர் வாழ்க்கையின் குறைந்தபட்ச உத்தரவாதத்தை இழந்தனர்.

தொழில் வளர்ச்சியில்லாததால் இவர்கள் தொழிலாளி வர்க்கமாய் உருப்பெறவும் முடியவில்லை. இடம் பெயர்ந்தவர்கள் உதிரி வர்க்கமயப் பட்டனர். உழவு உறவுகளில் தங்கிப் போனவர்கள் கொஞ்சம் கொஞ்ச மாய் உழவுக் கூலிகளாக மாறத் தொடங்கினர். உழவு உற்பத்தியில் முதலாளிய முறை வளராமலேயே இது நிகழ்ந்தது.

இதன் விளைவாக ஒரு புறம் தொண்டூழிய முறை தொடர்ந்தது. இன்னொரு பக்கம்வளர்ந்துவந்த சனநாயக உணர்வுகளின் விளைவாகவும் உயிர் வாழ்க்கையின் குறைந்தபட்ச நிபந்தனைகளை நிறைவு செய்யும் கடமையில்லாமலேயே தொண்டூழியத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்ட தாலும் வரலாற்றில் இதுவரை காணாத புதிய முரண்கள் உருவாகின. ஆலய நுழைவு, தொண்டூழிய எதிர்ப்பு, தேநீர்க் கடைகளில் சம உரிமை கோருதல் என்கிற சனநாயக உரிமைப் போராட்டங்களாக இவை வடிவெடுத்தன. மேற்கட்டுமானத் தளத்தில் நடைபெற்ற போராட்டங்கள் எனினும் சாராம்சமாய் இவை நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தவையாக அமைந்தன.

ஆ. குடியேற்ற அரை நிலவுடைமையிலும் அதற்குப் பிந்தியும் உருவான அரசில் அதிகாரவர்க்கத்தின் பங்கு முக்கியமானது. நிலத்தின் அடிப்படையிலான சமூக அதிகாரம் என்பதைக் காட்டிலும் அரசதிகாரத் தின் மூலமான சமூக அதிகாரம் கவர்ச்சிமிக்கதாகவும் பரந்த மட்டத்திலா னதாகவும் இருந்தது. நிலம் விற்பனைப் பொருளானதைத் தொடர்ந்து பார்ப்பனர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்சாதி வேளாளர்களும்  புதிதாய் அறிமுகப் படுத்தப்பட்ட அரசுப் பணிகளை நாடி நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர் (17). தரகு வணிகத்தையும் வட்டித் தொழிலையும் சேட்டுகள், பனியாக்கள், செட்டியார்கள் போன்றோர் தமதாக்கிக் கொண்டனர். குடியேற்ற முகவர்களாக விளங்கிய இவர்களுக்கு நேரடியான அரசு ஆதரவு இருந்தது. அதிகாரத்தின் புதிய வடிவங்களான தொடர்புச் சாதனம் முதலியவற்றைப் பார்ப்பனர்கள் கையகப்படுத்தினர்.

இ. பார்ப்பனர்களின் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல், ரயத்துவாரி முறையின் விரிவாக்கம் பேன்றவற்றாலும் 1947 க்குப் பிந்திய சமீன்தாரி ஒழிப்பு, பசுமைப்புரட்சி போன்ற நடவடிக்கைகளாலும் இதுநாள் வரை பார்ப்பன – வேளாளரின் கீழ், உழவு உற்பத்தியை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த இடைநிலைச் சாதிகளிலுள்ள மேல்தட்டினர் கிராம அளவில் ஆதிக்க சக்திகளாயினர். குடியேற்ற மற்றும் அதற்குப் பிந்திய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் அரசியல் என்பது வழி வகுத்தது. தேர்தல் அரசியல் என்பது இந்தியச் சூழலில் ஆதி முதலாகவே சாதி அரசியலாகவே இருந்து வந்தது. தேசீய இயக்கத்தைப் பார்ப்பன/பனியா சக்திகளும் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தை பிற உயர்சாதியினரும் இடைநிலைச் சாதிகளில் மேல் நிலை பெற்றோரும் நிறுவன ரீதியான அதிகாரங்களைக் கைப்பற்றும் களமாகவே பயன்படுத்தினர் என்றும் இவ்விரு இயக்கங்களுமே தல அளவிலான குழுக்களை அதிகார மையங் களுடன் இணைக்கும் புறக்காரணிகளாகவே பயன்பட்டன என்றும் வாஷ்புருக் போன்றோர் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. (18).

(ஈ). வெள்ளையருக்குப் பிந்திய காலங்களில் அதிகாரச் செயல்பாட்டில் சாதியத்தின்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுருக்கமாகக் காண் போம்;

நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தைப் போல பார்ப்பன – வேளாள ஆதிக்க சாதிகள் என்பன இக்கட்டத்தில் ஒரே சமயத்தில் பரந்த அளவிலும், கிராம அளவிலும் ஆதிக்க சாதிகளாக இருந்தன எனச் சொல்ல முடியாது. ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள் என்கின்ற நிலையில் எந்த மாற்றங்களும் இல்லாத போதிலும் கிராம அளவில் இன்று இடைநிலைச்சாதிகள் ஆதிக்கத்திற்கு வந்துள்ளன. (19)

தேவர், கள்ளர், வன்னியர், கவுண்டர், நாயுடு, நாடார் போன்ற சாதிகள் இவற்றில் அடக்கம். இவற்றில் எது ஒன்று குறிப்பிட்ட தலத்தில் ஆதிக்கச் சாதியாய் இருக்கிறது என்பது அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். தெற்குத் தஞ்சையில் கள்ளர் என்றால் தென் ஆற்காட்டில் இது வன்னியராகவும், சேலத்தில் கவுண்டராகவும் நாகர் கோவிலில் நாடாராகவும் இருக்கும்.

தேர்தல் அரசியலின் தோற்றத்தோடு சாதி ரீதியாய் ஓரிடத்தில் குவிந்து கிடந்து ஓட்டு வங்கிகளாய் செயல்படும் வகையில் இவை இந்த ஆதிக்க இடத்தைப் பெறுகின்றன. இச்சாதிகளைச் சேர்ந்த அனைவரும் ஆதிக்க சாதிகளாக விளங்கு கின்றனர் எனப் பொருளல்ல. இவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பிற்பட்டோரே. எனினும் இவர்களில் மேல் நிலை பெற்றவர்கள் தேர்தல் அரசிய லைப் பயன்படுத்தி நிறுவனங்களில் ஆதிக்கம் பெறுகின்றனர். இந் நிறுவனங்களில் சட்டமன்றம், கட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங் கள் வரை அடக்கம். (20)

இவர்கள் தம் கீழுள்ள சாதி மக்களை ரத்த உறவு, சாதிய உணர்வு ஆகியவற்றினடிப்படையில் திரட்டி வைத்துள்ளனர். இந்த வகையில் சாதி உணர்வைத் தக்க வைக்கும் தேவை இவர்களுக்கிருக்கிறது. சாதி ரீதியான இவர்களது ஆதிக்கம் என்பது கிராம மட்டத்தில், மிகவும் பருண்மையான வடிவங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் மீது விழுகிறது. இத்தகைய கொடுமைகளில் தல அளவில் ஆதிக்க சாதிகளாக உள்ள வர்களுடன் பிற இடைநிலைச் சாதிகள் -குறிப்பிட்ட இடத்தில் அவை சிறுபான்மையாக இருந்த போதும் – இணைந்து கொள்கின்றன. இந்த இணைப்புச் சக்தியாய் பார்ப்பனியக் கருத்தியல் விளங்குகிறது.

சாதியக் கருத்தியலின் விளிப்பில் ஒவ்வொரு சாதியானும் தனக்குக் கீழ் நிலையிலுள்ளவரைக் காட்டிலும் சில உரிமைகளை உணர்வதைக் குறித்து நாம் முன்பு குறிப்பிட்டது இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது.

கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் சாதிகளுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படுவது போன்ற நிகழ்ச்சிகளும் சவம் காவுதல், மலம் அள்ளுதல் போன்ற தூய்மைக் குறைவான தொழில்களோடு தாழ்த்தப் பட்டோர் அடையாளம் காணப்படுதலும் இந்நிலை தொடர வழி வகுக்கின்றன. நிலவுடைமை, உழவு, வணிகம் என்கிற மட்டத்தில் இடை நிலைச் சாதிகள் அனைத்தும் ஒன்றுபடுகின்றன. இந்துப் பெருமதவெறி அமைப்புகள் இவர்களை ஒன்றிணைக்கின்றன ; சாதிக் கொடுமை களுக்குப் பின்புலமாகின்றன.

இவ்வாறு இடைநிலைச் சாதிகளிலிருந்து மேல் நிலை பெற்ற ஆதிக்க சக்திகள் அமைச்சர் பதவி, அதிகார வர்க்கப் பதவி போன்றவற்றின் மூலம் பரந்த அளவிலான ஆதிக்கத்திலும் பிற ஆதிக்க சாதிகளுடன் மிகச் சிறிய அளவில் பங்கு பெறுகின்றனர்.

பரந்த அளவிலான அதிகாரம் என்பது பருண்மையான வடிவங் களில் (எ-டு : அரசதிகாரம், அயல் உறவுகள், உயர் தொழில் நுட்பம்

போன்றவற்றைக் கையகப்படுத்துதல் தொடர்புச் சாதனங்களையும் மத நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்) மட்டுமல்ல கருத்தி யல் மட்டத்தில் (எ-டு : இந்து மதக் கருத்தியல், பாரதப் பண்பாடு, ஒருமைப்பாடு போன்றன) பருண்மையற்ற வடிவங்களிலும் (ழிணுவிமிrழிஉமி யிeஸeயி) செயல்படுகின்றன.

இந்த அடிப்படையில் பார்ப்பனர், வேளாளர், ரஜபுத்திரர், ரெட்டியார் போன்றோரே இன்னும் பரந்த மட்டத்தில் ஆதிக்க சாதிகளாக விளங்குகின்றனர். தொழில் மற்றும் நிதி நிறுவனங்களைக் கையில் வைத்திருப்பதன் மூலம் சேட்டுகள், பனியாக்கள், செட்டியார்கள் போன்றோரும் இவர்களோடு பரந்த அளவு ஆதிக்கத்தில் பங்கு பெறுகின்றனர்.

நிலவுகிற சமூக அமைப்பால் பயனடையும் ஏகாதிபத்திய சக்திகள் இருக்கிற நிலையைக் கட்டியமைப்பதில் பரந்த அளவிலான ஆதிக்க சக்திகளும் அவை முன் வைக்கம் பார்ப்பனியக் கருத்தியலுக்கும் ஒருமைப்பாட்டு முழக்கத்திற்கும் துணை போகின்றன.  பொருளாதார மற்றும் தொழில் ‘வளர்ச்சி’த் திட்டங்கள் முழுமையை யும் தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துள்ள இவ்வாதிக்க சக்திகள் அவற்றை ஏகாதிபத்திய நலன் நோக்கிலேயே கையாளு கின்றன. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சுற்றுச் சூழல் தீங்குகள் போன்ற இத்தகைய வளர்ச்சித் திட்டங்களின் விளைவுகளால் முற்று முழுதாய் பாதிக்கப்படுபவர்கள் அடித்தட்டு மக்களே. இவர்களில் பெரும்பாலோர் இடைநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரே. (22).

எனினும் இம்மக்களை அரசுடன் இணைக்கும் பாலங்களாக இடைநிலைச் சாதிகளின் மேனிலை பெற்ற ஆதிக்க சக்திகளும், கருத்தியல் நடவடிக்கைகளும் செயல்படுகின்றன23. (23. தாழ்த்தப் பட்டோரிலும் இவ்வாறு மேல்நிலை பெற்றோரும் (தேர்தல் மற்றும் அரசு பதவி மூலம்) கூட பரந்த அளவு ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகிற நிலை இருந்தாலும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவே தவிரவும் கிராம அளவில் இவர்கள் இன்னமும் கொடுமைக்குள்ளாகும் நிலையி லேயே உள்ளதால் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள் அளவிற்கு இவர்கள் தீங்கானவர்கள் இல்லை.)

பசுமைப்புரட்சி, இடஒதுக்கீடு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக இந்திய அரசு சாதியத்தைக் கட்டிக்காக்கிறது.

நான்கு

சாதியை நாம் ஒழிக்க வேண்டுமென்பது ஏதோ இந்தியப் புரட்சி அல்லது தேசிய இன உருவாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது என்பதற்காக மட்டுமல்ல. உலகில் வேறெங்குமில்லாத வகையில் பிறப்பின் அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு ஏற்றத் தாழ்வுகளை யும் உரிமை மறுப்புகளையும், தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை யும் மக்களை நேசிக்கும் நம்மால் சகித்துக் கொள்ள இயலாமையே முதற் காரணம்.

சாதி ஒழிப்பைப் பற்றிச் சிந்திக்கும் போது ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். சாதி என்பது -டூமாண்ட் போன்றவர்கள் கூறியுள்ளதைப் போல – தன்னளவில் நிறைவுள்ள ஒரு முழுமையல்ல. மாறாக மொத்த அமைப்பில் சாதி ஒரு கூறே.  கூறாக்கமான (றீeஆதுeஐமிழிrதீ) ஓர் அமைப்பில் சாதி என்பது தனக்குரிய நிலையில் அமைந்துள்ள ஒரு கூறு மட்டுமே கூறாக்கமான இந்த அமைப்பையே தகர்க்காமல் ஒரு கூறை மட்டும் தனித்து ஒழித்துவிட முடியாது. சாதிய ஆதிக்கம் தனியாக இல்லை என்று சொன்னோம்.

ஏகாதிபத்தியமும், இந்திய அரசும், ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகவர்களும் அரசதிகார வர்க்கமும், கிராமப்புற இடைநிலைச் சாதி களைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும் சாதியத்தால் பயனடைவதையும், சாதியத்தைக் கட்டிக் காக்க முனைவதையும் கண்டோம். எனவே இந்த அமைப்பு தகர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதிகாரம் வந்து ஓர் அதிகாரமற்ற சமூகம் உருவாக்கப்படும் வரை சாதி ஒழிப்பிற்கான முன் நிபந்தனைகளே நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இநத அமைப்பு தகர்க்கப்பட்டாலுங்கூட சாதியக் கருத்தியலும், சாதிய உறவுகளைத் தக்க வைக்கும் அகமண முறையும், ரத்த உறவுகளும், குடும்ப உறவுகளும், குடும்ப உறவுகளும் தகர்க்கப்படாதவரை சாதி ஒழியாது.

சாதி ஒழிப்பின் எதிரிகளிடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த அமைப்பிற்கெதிராக இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொள்ளாத மனநிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் நடுவில் உடைத்தெறிவது எல்லாவற்றிலும் முதன்மையானது. அரசு மற்றும் ஒடுக்கும் சக்திகட்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையேயான இடை வெளி இன்றைய

பொதுக்கருத்தியலால், சாதி உணர்வால் நிரப்பப் பட்டிருப்பதே இத்தகைய எதிர்ப்பற்ற மன நிலைக்குக் காரணம்.

இந்தப் பணி என்பது கருத்தியல் மட்டத்தில் மிகக் கடுமையான முயற்சிகளைக் கோருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சாதிகளுக்குமிடையே பாலமாக விளங்கும் இடைநிலைச் சாதிகளி லிருந்து மேல்நிலை பெற்ற சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும். இடஒதுக்கீடு போன்ற சாதி அடிப்படையிலான சனநாயகக் கோரிக்கை கள் இதில் பெருமளவில் உதவும். இந்த ஆதிக்க சக்திகளின் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பரந்த அளவிலான ஆதிக்க சாதிகளுடன் ஒன்றி ணைந்து நிற்கும் நிலையை தோலுரித்துக் காட்ட வேண்டும்.

அரசின் திட்டங்கள் அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரானதே என்கிற அடிப்படையில் சுற்றுச் சூழல் தீங்கு, தொழில் நுட்ப இறக்குமதி மதவாத எதிர்ப்பு, தொடர்ப்புச் சாதனங்களில் சாதி ஆதிக்க எதிர்ப்பு, ஏகாதிபத்தியச் சுரண்டல் போன்றவற்றில் தல அளவிலும், பரந்த அளவிலும் போராட்டங்களைக் கூர்மைப் படுத்துவதன் மூலமும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும். நிலவுடைமைக்கெதிராக ஒடுக்கப்பட்ட சாதிகளை இணைத்து நிறுத்துவதும் நிலத்திற்காகப் போராடுவதும் அவசியம்.

ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான இடைநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கிடையேயான ஒருங்கிணைவு சாதி ஆதிக்க ஒழிப்பிற்கு மிக முக்கியம். தல அளவிலான சாதி ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் இதில் முதன்மைப் பங்கு வகிக்கும். தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள், பொதுச் சுடுகாடு, சவம் காவுதல்/மலம் அகற்றுதல் போன்ற இழிவு களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவற்றில் இழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவற்றில் போராட்டங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். தூய்மைக்குறைவான பணிகளை இயந்திரமயப்படுத்து வதற்கு அரசு முக்கியத்துவமளிக்கப் போராடுதலும் அதுவரை அப்பணி களை அவரவரே செய்து கொள்ளும் நிலைமையை ஏற்படுத்துவதும் அவசியம். (23)

கிராமப்புற அளவில் சிறு தொழில்களிலும் வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கலவரப் பகுதிகளில் ஆயுதச் சமநிலை ஏற்பட தாழ்த்தப்பட்டவர்கள் தற்காப்புக் கருவிகள் ஏந்த வேண்டும். கிராமத் திருவிழாக்கள், ஈமச் சடங்கு போன்றவற்றில் சாதிக் கடமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நிலமற்ற ஒடுக்கப்பட்டோருக்கு நிலம் வழங்க வன்மையான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

தொலைக்காட்சி, திரைப்படம், இதழ் போன்ற தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் இன்று ஆதிக்க சாதிகளின் பிடியிலேயே இறுகியுள்ளன. சாதி ஆதிக்கக் கருத்தியலைப் பரப்புவதில் இவற்றின் பங்கு முதன்மை யானது. இவை மூலம் பரப்பப்படும் சாதி ஆதிக்கக் கருத்துக்களுக் கெதிராக இவற்றின் இயக்கத்தையே உறைய வைக்கும் அளவிலான வன்மையான போராட்டங்கள் மிக அவசியம். மாற்றுத் தொடர்பு வடிவங்களையும் நாம் சிந்திக்க வேண்டும்.

சாதி ஒழிப்பில் ஆர்வமுள்ள இயக்கத் தோழர்கள் ரத்த உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளை ஒழிப்பதும், குடும்ப உறவுகளில் இறுக்கங்களைத் தகர்ப்பதும், ரத்த உறவு மற்றும் சாதி ரீதியிலான சடங்குகளை முற்றாகத் தவிர்ப்பதும் இயக்கங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் கருத்துருவாக்கும் நிலையை உருவாக்குவதும் முக்கியம். அதிகாரத்துவமில்லாத மாற்று இயக்க வடிவங்களைச் சிந்திப்பதும், குடும்பத்தில் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையை ஒழிப்பதும் இதனுடன் இணைந்த நடவடிக்கைகள்தாம்.

திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களைத் தனியே ஒழித்து விடுவது சாத்தியமில்லாத போதிலும் இறுதியில் இந்நிறுவனங்கள் ஒழிக்கப்படவேண்டியவை என்கிற புரிதலோடு செயல்படுவதும் அகமண முறையை மீறிய சாதி ஒழிப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதும் அவசியம். (24). மொத்தத்தில் இன விடுதலை, பெண் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு இவை எதுவும் தனித்தனி யானவை அல்ல என்கிற புரிதலோடு கூடிய செயற்பாடுகள் இன்றைய உடனடித் தேவையாகின்றன.

குறிப்புகள்

  1. சமூகக் கொடுமைகட்கு எதிராக அடித்தட்டு மக்களின் எழுச்சி குறித்து நாம் மிகைப்படுத்திக் கூறி வந்துள்ள போதிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தேறியுள்ளன. அடித்தட்டு மக்களின் முக்கிய இலக்கிய வெளிப்பாடாக நாம் முன் வைக்கும் நாட்டுப்புற இலக்கியங்களில் கூட மோதற் கூறுகளைக் காட்டிலும் சமரசக் கூறுகள் மிகுந்துள்ளன சிந்திக்கத் தக்கது. ( பார்க்க : அ. மார்க்ஸ், மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், பொன்னி, 1991, பக் 113‡127). மற்றவர்களுக்கு உரிமை கொடுப்பது என்பதில் மட்டுமல்ல ; தனக்கு உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் ஆத்திரம் கொள்ளாத அவலம் ஏற்பட்டுவிடுகிறது.
  2. கோட்பாட்டலவில் இந்நிலைமை இல்லை எனினும் நடைமுறையில் பரந்த அளவிலுங்கூட மேற்தட்டு சாதிகள் மேனிலை வேலைகளிலும், தாழ்ந்த சாதியினர் தூய்மைக் குறைவான பணிகளிலும், இடைத்தட்டு சாதியினர் இடைநிலை வேலைகளிலும் மிகுந்துள்ளது கண்கூடு.
  3. அ.மார்க்ஸ் முன்னுரை, சாதியும் வர்க்கமும், பு.ப.இ. வெளியீடு, 1988, பக்.15,16
  4. இப்பகுதி விரிவாக அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி எழுதியுள்ள தமிழக வரலாறு சில குறிப்புகள் (நிறப்பிரிகை – 4) கட்டுரையில் ஆராயப் பட்டுள்ளது. ‘யூலிதுஷ்யிழி வீஜுலிஸ்ரீழிழிr, புஐஉஷ்eஐமி ணூஐdஷ்ழிஐ க்ஷிஷ்விமிலிrதீ, நுrஷ்eஐமி ஸிலிஐஆதுழிஐ, 1978, ஸ்ரீ.226
  5. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.

6.

7.

  1. பார்க்க : அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி முன்குறிப்பிட்ட கட்டுரை.
  2. சங்க கால மூவேந்தர் வீழ்ச்சி, வணிகத்தில் தேக்கம், களப்பிரர் காலத்திற்குப் பிந்திய உழவு மயமாதல், கிராம அளவிலான பார்ப்பன -வேளாள ஆதிக்கம் முதலியவை ஒப்பிடற்குரியன.
  3. சோழிய, தொண்டை மண்டலச் சைவ வேளாளர்கள், முதலியார் கள் ஆகியோரை உள்ளடக்கியே வெள்ளாளர் என்கிற சொல் பயன் படுத்தப்படுகிறது. தெலுங்கராட்சிக்குப் பின்னர் ரெட்டியார் சாதியையும் இதனுள் அடக்கலாம்.
  4. கிராம மயமான உற்பத்தி முறையில் மலையின மக்களைச் சேர்க்கத் தேவையில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாய் இந்த விவசாயச் சமூக அமைப்பால் சுரண்டப்பட்டனர்.
  5. பார்க்க : அ. மார்க்ஸ், சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள், சிலிக் குயில், 1984.
  6. முறைப்படுத்தப்படுதல், ஒழுங்குப் படுத்தப்படுதல், இலக்கணப்படுத்தப்படுதல் என்றாலே அதிகார அமைப்புக்குள் கொண்டுவருவதுதான் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டு
  7. பார்க்க : வே. ஆனைமுத்து, தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, பெரியார் நூல் வெளியீட்டகம், 1980, பக்.190-262.
  8. மார்பில் துணி அணியும் உரிமை நாடார் பெண்களுக்கு இல்லாமலிருந்தது. “மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் கீழடியார்க்கில்லை” – என பாரதி பாடியதை அறிவோம் (பாஞ்சாலி சபதம்). பிரிட்டிஷ் ஆட்சியின்போது இதற்கு எதிராக நடந்த போராட்டம் ‘தோள்சீலைப் போராட்டம்’ எனப்படும்.
  9. தென்மாவட்ட நாடார்கள் நடுவில் இவ்வாறு ஏற்பட்ட விழிப்புணர்வு, போராட்டங்கள் உயர்சாதியினரின் எதிர்வினைகள் முதலியவற்றை ஆர்.எல்.ஹார்டு கிரேல், தமிழக நாடார் வரலாறு, முருகன் பப்ளி கே­ன்ஸ், 1982 நூலில் விவரமாகக் காணலாம்.
  10. இந்தியாவின் பிற பகுதிகளில் ரஜபுத்திரர்கள், ரெட்டியார்கள் போன்றோரை இவ்வகையில் சொல்லலாம்.)
  11. வாஷ்புரூக்
  12. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தஞ்சை மாவட்டத்தில் மிகச்சில இடங்களில் இன்னும் கூட பார்ப்பனர்/வேளாளரே நிலவுடை மையாளராகவும் ஆதிக்க சக்திகளாகவும் உள்ளனர்.
  13. அரசியல் கட்சிகள் பலவற்றிலும் இவர்களே தல அளவுத் தலைமைகளில் உள்ளனர்.
  14. நாட்டுப் பிரிவினைச் சக்திகளுக்கு எங்கேனும் ஏகாதிபத்தியம் துணை போகிறது என்றால் அது மத்திய அரசைப் பலவீனப்படுத்தப் பேரம் பேச வைக்கும் உள் நோக்கத்தில் மட்டுமே. மற்றபடி சுயநிர்ணய உரிமையில் அவற்றுக்கு நிலையான ஈடுபாடு ஏதும் கிடையாது.)
  15. இத்தகைய இடங்களில் தாழ்த்தப்பட்டோர் என்பதில் மலையின மக்களும் உள்ளடக்கம்.
  16. இதனால் ஏற்படும் வேலை இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும்).
  17. . நிறப்பிரிகை, 3 இல் வெளிவந்துள்ள சாதி ஒழிப்பு கூட்டுக் கட்டுரையில் சாதி ஒழிப்பில் அக்கறையும் அனுபவமுள்ள பல்வேறு தோழர்களின் பன்முகமான கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. தோழர்கள் இவற்றைச் சிந்தித்தல் வேண்டும். நிறப்பிரிகை 2 இல் வெளிவந்துள்ள சாதி ஒழிப்பு குறித்த வேறுபட்ட பார்வைகளும் பயிலத் தக்கன.