இந்திய அரசு சரியான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! ஐ.நா அவையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்பாட்டிற்குச் சட்ட ஏற்பு அளிக்க வேண்டும் !!
கொடூரமான வலியை மனித உடல்கள் மீது காயங்கள் அல்லது நிரந்தர ஊனங்கள் ஏற்படாமலோ அல்லது அத்தகைய நிலைகளுக்குக் காரணமாகுமாறோ ஏற்படுத்துவதைச் சித்திரவதை என்கிறோம். பல நேரங்களில் இது உடல் ரீதியான வன்முறையாக அமையாமலோ இல்லை உடல் ரீதியான வன்முறையுடன் கூடியோ மனம் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளாகவும் நிகழும். அரசு, குழுக்கள், சில நேரங்களில் தனி நபர்கள் ஆகியோரால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் மீது தம் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு அவர்களின் உடல்களே இவ்வாறு ஒரு கருவியாகவும் களமாகவும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன.
குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரும் இத்தகு கொடுமைகட்குக் காரணமானாலும் கூட அரசும் அரசு நிறுவனங்களான காவல்துறை, உளவுத் துறை முதலானவையுமே இதில் முன் நிற்கின்றன. தண்டித்தல், பழிவாங்கல், அரசியல் காரணங்கள், அச்சுறுத்தல், புலன் விசாரணை, வற்புறுத்தல், மூன்றாம் நபர் ஒருவரை அச்சுறுத்திப் பணிய வைத்தல் ஆகியன சித்திரவதைகளின் காரணங்களாக அமைகின்றன. சில நேரங்களில் சிலரது குரூர மகிழ்ச்சிக்காகவும் (sadistic pleasure) சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலகெங்கிலும், வரலாறு முழுமையும் சித்திரவதைகள் என்பன அரசுகளின் பிரிக்க இயலாத ஓரங்கமாக அமைந்தபோதும் இவ்வாறு கொடுஞ் சித்திரவதைகள், அதனூடான காவல் நிலைய மரணங்கள் ஆகியவற்றில் இந்திய அரசு முன் நிற்கிறது. 1993 – 2009 காலகட்டத்தில் மாத்திரம் 2,318 காவல் நிலையச் சாவுகளும், 716 போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன என தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இது ஆணையத்தின் முன் வந்துள்ள புகார்களின் அடிப்பட்டியிலான தரவு. காவல் நிலையச் சாவுகளில் 90 சதம் “தற்கொலைகள்” என்பதாக அறிவிக்கப்படுவதையும், பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டு மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கபடுவதையும் கணக்கில் கொண்டால், ஆணையம் அறிவித்துள்ள புள்ளி விவரங்களைக் காட்டிலும் எத்தனை ஆயிரம் மடங்கு காவல் நிலையச் சாவுகளும் போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன என்பதை ஒருவர் ஊகிக்க முடியும். தவிரவும் ஆணையம் தந்துள்ள தரவு சித்திரவதைகளின் மூலமாக ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே. இப்படி மரணங்கள் ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் பல இலட்சம் மடங்கு அதிகம். நான்கு நாட்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய நீதியரசர் ஹேமந்த் குமார் நாள்தோறும் 3 முதல் 4 காவல் நிலையச் சாவுகள் நடப்பதாகவும், இதில் வருந்தத்தக்க நிலை என்னவெனில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இது குறித்துப் புகாரளிக்க அஞ்சுவதுதான் என்றும் கூறியுள்ளார், காவல்துறையினர் காலனிய கால மனநிலையுடனேயே செயல்படுவதாகவும், தாங்கள் மக்கள் ஊழியர்கள் என்பதை மறந்து மக்களின் எஜமானர்கள் என்கிற உணர்வுடனேயே செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாகத் தினந்தோறும் நடக்கிற இக்காவல் நிலையச் சித்திரவதைகள், உள்நாட்டுப் பிரச்சினைகள், ஏதிர்ப்புகள் நடைபெறுமிடங்களில் பல மடங்கு அதிகமாக நடை பெறுகின்றன. புலனாய்வு முறைகளில் அநுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் விசாரணை செய்யப்படுபவர்களிடமிருந்து விரும்பிய உண்மைகளை வரவழைக்கும் வழிமுறைகளில் ஒன்றாகவும் நமது புனாய்வு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகச் சித்திரவதைகள் உள்ளன என்கிற வருந்தத்தக்க உண்மையை நாம் மனங்கொள்ள வேண்டும்
“சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற,, குரூரமான, கண்ணியக் குறைவான நடைமுறைகள் மற்றும் தண்டனை வடிவங்களுக்கு எதிரான ஐ..நா உடன்பாடு” {UN Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (UNCAT)} 1984ம் ஆண்டு இயற்றப்பட்டது. எனினும் பதிமூன்றாண்டுகளுக்குப் பின்பே (1997ல்) ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா இதில் கையெழுத்திட்டது.
எனினும் இன்றுவரை இந்திய அரசு இதற்குச் சட்ட ஒப்பேற்பு (ratification) வழங்கவில்லை. அதன் முதற்படியாகிய உள்நாட்டுச் சட்டத்தையும் (enabling legislation) இயற்றவில்லை. ஆனால் 153 நாடுகள் இதற்கு ஒப்பேற்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நாடுகளில் சித்திரவதைக்க்குள்ளானவர்கள், ஆதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுக்கலாம். இழப்பீடு பெறலாம்.
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களின் விளைவாகச் சென்ற 2008ல் இவ்வாறு ஒப்பேற்பு அளிப்பதற்கு முதற்படியாக சித்திரவதைத் தடுப்புச் சட்ட வரைவு ஒன்றை உருவாக்குவ்து என முடிவு செய்யப்ப்பட்டு அது 2010ல் முன்வைக்கப்பட்டது.
இந்தியத் தண்டனை சட்டத்தின் 333ம் பிரிவு “கொடுங் காயம்” (grevious injury) ஏற்பட்டுத்துவதைக் குற்றமாக்குகிறது. இது சித்திரவதை வழக்குகளுக்கும் பொருந்தும் என்ற போதிலும், இது குறிப்பிட்ட வடிவிலான உடற் காயங்களை ஏற்படுத்தும் சூழல்களுக்கு மட்டுமே பொருந்தும். பொதுவான சித்திரவதை முறைகள் இதன் கீழ் வரா. தவிரவும் சித்திரவதைக்குக் காரணமானவர் அரசுப் பணியாளரா இல்லையா என்பதும் இச் சட்டப் பிரிவில் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
எனினும் ஐ.நா உடன்பாடு இதைத் தெளிவாக வரையறுக்கிறது. “அரசு ஊழியர்கள் (public servants) அல்லது அவர்களால் பணியமர்த்தப்படுவோர், (சித்திரவதைக்குள்ளாக்கப் படும்) ஒரு நபர் அல்லது ஒரு மூன்றாவது நபரை, ஏதேனும் ஒரு தகவலைப் பெறுவதற்காகவோ இல்லை ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காகவோ, இல்லை தண்டிக்கும் நோக்கத்துடனோ உள மற்றும் உடல் ரீதியான கடும் வலியை ஏற்படுத்தும் செயல்களைச்” சித்திரவதை என ஐ.நா உடன்பாடு வரையறுக்கிறது. சித்திரவதைக்குள்ளாக்கப்படும் நபர்கள் ஏதேனும் குற்றம் இழைத்தவராகச் சந்தேகிக்கப்படுவோர், (சாதி,மதம், இனம் என ஏதோ ஒரு வகையில்) வேறுபடுத்தப்படுவோர்) என்கிறவாறும் ஐ.நா உடன்பாட்டில் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.
ஆனால் இந்திய அரசு முன் வைத்த சித்திரவதைகள் தடுப்புச் சட்ட வரைவோ இந்த அடிப்படை அம்சங்கள் பலவற்றை நீர்க்கச் செய்து இச்சட்டத்தின் நோக்கத்தையே கேலிக் கூத்தாக்கியது. இச்சட்ட வரைவின் 3ம் பிரிவு, சித்திரவதை என்பதை உள்நோக்கத்துடன் “கொடும் உடல் காயம்”, அல்லது, “உயிராபத்து மற்றும் உடல் உறுப்பு, உடல் நலத்திற்கு ஆபத்து” விளவிக்கும் செயல் என வரையறுக்கிறது. இதன் மூலம் உள ரீதியான சித்திரவதைகள், கடும் அச்சுறுத்தல்கள், உறக்கமில்லாமல் துன்புற்றுத்துவது, உடற்காயமின்றி லாடம் கட்டி அடித்து உள் காயங்களை ஏற்படுத்துவது, பாலியல் சீண்டல்கள், மிளகாய்ப்பொடி முதலானவற்றை உடலின் மென்மையான பாகங்களில் தேய்ப்பது, பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது முதலான இந்தியக் காவல்துறையினருக்கு மிகவும் பிடித்தமான சித்திரவதைகள் பலவும் “சித்திரவதை” என்கிற வரையறைக்குள் வராமல் போகிற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “உடல் நலத்திற்கு ஆபத்து விளைவித்தல்” என்கிற வாசகம் கூடப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது எனச் சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “ஆபத்து” என்பது பெரிய அளவிலான நிரந்தர ஊனத்தைக் குறிக்கும் வாய்ப்புடையதாகிவிடுகிறது. சித்திரவதை என்பதில் வலி, துயரம், அவமானம், அச்சம் முதலியனவே முதன்மைப்படுத்தப் படுதல் வேண்டும்.
சட்ட வரைவின் 4ம் பிரிவு, சித்திரவதை என்பது “ஏதேனும் ஒரு குற்றத்தை நிறுவுவதற்கான வாக்குமூலம் ஒன்றைப் பெறும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதோடு கூடுதலாக ஏதேனும் ஒரு வகையில் (சாதி, மதம், இனம் போன்று) அவர் வேறுபடுத்தப்பட்டவராகவும் இருக்க வேண்டும்” என்கிறது. எனவே ஒரு விசாரணை அதிகாரி பணம் பறிப்பதற்காகவோ இல்லை பழி வாங்குவதற்காகவோ இல்லை அச்சுறுத்துவதற்காகவோ, இல்லை பாலியல் சகாயங்களைப் பெறுவதற்காகவோ சித்திரவதை செய்தால் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. ஏதேனும் குற்ற வாக்குமூலங்களைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்படும். தவிரவும் ஐ.நா பிரகடன வாசகங்களில் உள்ளது போல சாதி மத இன வேறுபாடுகளின் அடிப்படையில் சித்திரவதை மேற்கொள்ளக்கூடாது என்பதுதான் சரியாக இருக்குமே ஒழிய சித்திரவதைக்கான நிரூபணங்களில் ஒன்றாகச் சாதி மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது.
இந்தியச் சட்ட வரைவின் 5ம் பிரிவு, சித்திரவதைக்கான புகார்கள் ஆறு மாதங்களுக்குள் செய்யப்பட்டால்தான் நீதி மன்றங்கள் அவற்றை விசாரிக்க வேண்டும் என்கிறது. சித்திரவதைக்குள்ளாகிறவர்களில் கிட்டத்தட்ட 80 சதத்திர்கும் மேற்பட்டோர் ஏழை எளியோர்: ஒடுக்கப்பட்டவர்கள். இந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் மீண்டு, ஆதரவு தேடி, வழக்குக்குத் தேவையான பணம் சேர்த்து, அச்சம் நீங்கி நீதிமன்றத்தை அணுக ஆறு மாதங்களுக்கு மேலான காலமும் ஆகலாம். அவர்களுக்கெல்லாம் நீதி மறுக்கப்பட இந்தியச் சட்ட வரைவு துணை புரிகிறது.
இந்தியச் சட்ட வரைவின் 6ம் பிரிவு இன்னும் கொடூரமானது. அரசின் முன் அனுமதியின்றி சித்திரவதை புரிந்த அதிகாரிகளை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாதாம்.
ஆக இந்தியச் சட்ட வரைவை ‘சித்திரவதைக்கு எதிரான சட்டம்” என்பதைக் காட்டிலும் “சித்திரவதைகளுக்கான பாதுகாப்புச் சட்டம்” அல்லது, “சித்திரவதைகளுக்கான தண்டனை விலக்குச் சட்டம்” என்பதே பொருத்தமாக இருக்கும்.
கடும் எதிர்ப்புகள் வந்ததை ஒட்டி அரசு இச் சட்ட வரைவை மாநிலங்கள் அவைக்குக் கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க என வேறுபாடுகள் ஏதும் இல்லை. இடதுசாரிக் கட்சிகளும் இவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களும் தங்களை அரசின் ஓரங்கமாகத் தானே கருதிக் கொள்கின்றனர்.
சித்திரவதைகளால் பெரிதும் பாதிக்கப்படுவோர் தலித்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக அடி நிலையில் இருப்போர், இவர்கள் சார்ந்த பெண்கள் ஆகியோரே. இவர்களுக்காக நிற்போரே இப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
முதற்கட்டமாக மேலே குறிப்பிட்ட ஓட்டைகள் இல்லாத வலிமையான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை இந்திய அரசு இயற்ற வேண்டும்.. அதனடிப்படையில் ஐ.நா உடன்பாட்டிற்கு சட்ட ஒப்பேற்பு அளிக்க வேண்டும்.
சித்திரவதை செய்வது, போலி மோதல்களைச் செய்து கொன்று குவிப்பது, காவல் நிலையக் கொலைகள், காவல் நிலையப் பாலியல் வன்முறைகள் அகியவற்றில் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. இது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் நம்மிடம் உண்டு. இவற்றைத் தொகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். உண்மைகளைக் கண்டுபிடிக்க சித்திரவதை தவிர்க்க இயலாத ஒரு கருவி என்கிற பொதுப் புத்தியில் பதிந்துள்ள கருத்தை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். புலனாய்வு அறிவியல், தடைய அறிவியல் என்பன பெரிதும் வளர்ந்துள்ள நிலையில் அடிப்படை மனித நாகரீகத்திற்குப் பொருத்தமற்ற இந்தக் கொடிய சித்திரவதைகளுக்கு எந்த நியாயமும் கிடையாது என்பதை நாம் மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் இவ்வாறான சித்திரவதைகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம்பெறும்போது அவற்றைத் தன்னிச்சையாகக் கவனத்தில் எடுத்து (suo moto) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன்
சென்னை, ஜூன் 29,2013