2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் ஓர் அலசல்

[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பீட்டு ரீதியில் அலசி எழுதப்பட்ட அறிக்கை. இதன் முதற் பகுதியில் முக்கிய பிரச்சினைகள் மீது தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது குறித்த அட்டவணை முன்வைக்கப்படுகிறது. இரண்டாம் பகுதி. அறிக்கைகள் குறித்த ஒப்பீட்டு ஆய்வு]

அ. 2014 நாடாளுமன்றத் தேர்தல் : குறிப்பான சில பிரச்சினைகளில் கட்சி அறிக்கைகள் சொல்வதென்ன?

(சி.பி.ஐ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; சி.பி.எம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்; ம.தி.மு.க: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்; தி.மு.க: திராவிட முன்னேற்றக் கழகம்; அ.இ.அ.தி.மு.க: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்; இ.தே.கா: இந்திய தேசிய காங்கிரஸ்; பா.ஜ.க: பாரதிய ஜனதா கட்சி; வி.சி.க: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி; பா.ம.க: பாட்டாளி மக்கள் கட்சி; ஆம் ஆத்மி: ஆம் ஆத்மி கட்சி; எஸ்.டி.பி.ஐ: சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இன்டியா)

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை : சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, ஆம் ஆத்மி, பா.ம.க, எஸ்.டி.பி.ஐ,

பெண்கள் 33 சத இட ஒதுக்கீடு: சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி, வி.சி.க, எஸ்.டி.பி.ஐ (பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் இனப் பெண்கள் பயனடையும் வகையில் ஒதுக்கீடு),

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றல்: சி.பி.ஐ, தி.மு.க, வி.சி.க,

ஈழம் பொது வாக்கெடுப்பு/பன்னாட்டு விசாரணை : தி.மு.க, ம.தி.மு.க, எஸ்.டி.பி.ஐ,

தனி ஈழம்தான் தீர்வு: ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க,

ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வு/சுயேச்சையான விசாரணை: சி.பி.எம், இ.தே.கா,

கச்சத் தீவு மீட்பு : தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, எஸ்.டி.பி.ஐ

ஈழப் பிரச்சினையில் மவுனம் : பா.ஜ.க, ஆம் ஆத்மி,

தனியார் துறையில் இட ஒதுக்கீடு : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, பா.ம.க,

உள் ஒதுக்கீடு வழங்கல்: சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா (ஆராய ஆணையங்கள் அமைத்தல்),

தலித் கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க (கிறிஸ்தவர்களுக்கு),

ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரை நிறைவேற்றம் : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

பொது சிவில் சட்டம் நிறைவேற்றல் : பா.ஜ.க,

பொது சிவில் சட்டம் தேவையில்லை : ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க,

அண்டை நாடுகளுடன் அமைதி / பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம்: சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா, வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

அண்டை நாடுகளிடம் நம் வலிமையை நிலைநிறுத்தல்: அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

அணு கொள்கை மவுனம் : சி.பி.ஐ, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க,

அணு வல்லமையை அதிகரித்தல்: பா.ஜ.க,

வெளிநாட்டு இறக்குமதி இல்லாத அணு உலை ஆதரவு : சி.பி.எம்; பா.ஜ.க;

அணு உலைகளை மூடல் : ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய்,

தனியார் துறை ஊக்குவிப்பு /அந்நிய முதலீடு : இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

தமிழ் மொழி ஆட்சி மற்றும் உயர்நீதி மன்ற மொழி : சி.பி.ஐ, தி.மு.க. அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய் (உயர் நீதிமன்ற மொழி),

மீனவர் பிரச்சினையில் மவுனம் : ஆம் ஆத்மி, பா.ம.க, இ.தே.கா,

ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு: சி.பி.ஐ, சி.பி.எம், ஆம் ஆத்மி,

இலக்குகளுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி : இ.தே.கா,

வெளிநாட்டு மூலதனம் மற்றும் பெரு முதலாளியம் சாராத பொருளாதார வளர்ச்சி : சி.பி.ஐ, சி.பி.எம்,

புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு : சி.பி.எம்,

புதிய ஓய்வூதியத் திட்ட நிறைவேற்றம்: ம.தி.மு.க,

மதவாத எதிர்ப்புக்கு அழுத்தம்: சி.பி.அய், சி.பி.எம், வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

மதவாத எதிர்ப்பிற்கு அதிக முக்கியத்துவமின்மை: ம.தி.மு.க, பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க,

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு : சி.பி.ஐ, தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க,

தமிழகம் சார்ந்த குறிப்பான திட்டங்களின்மை : சி.பி.ஐ, சி.பி.எம், இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

விவசாய விளை பொருட்களுக்கு 50 சத லாபத்துடன் விலை நிர்ணயம்: சி.பி.எம், பா.ஜ.க, ஆம் ஆத்மி, பா.ம.க,

விவசாய விளை பொருட்களுக்கு விலை அதிகரிப்பு : இ.தே.கா, தி.மு.க, எஸ்.டி,பி,அய் (குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்),

விவசாயம் அரசே நேரடி கொள்முதல்: சி.பி.ஐ, தி.மு.க,

நதி நீர் இணைப்பு : சி.பி.ஐ, தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க (சாத்தியமான இடங்களில்),

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு : தி.மு.க, பா.ம.க,

லோக் ஆயுக்தா /லோக் பால் / ஊழல் ஒழிப்புச் சட்டம் : சி.பி.ஐ, இ.தே.கா, ஆம் ஆத்மி, எஸ்.டி,பி,அய்,

கருப்புப்பண மீட்பு : சி.பி.அய், சி.பி.எம், அ..இ.அ.தி.மு.க, இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

ஏழாவது ஊதியக் குழு நிறைவேற்றம் : அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க,

மரண தண்டனை ரத்து : தி.மு.க, ம.தி.மு.க, சி.பி.எம்,

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்தல் : எஸ்.டி.பி.ஐ,

பூரண மது விலக்கு: ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய்,

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றல்/வலிமைப்படுத்தல் : சி.பி.எம், இ.தே.கா,

வன்கொடுமைச் சட்டத்தை நீர்க்கச் செய்தல்: பா.ம.க,

புதுச்சேரியைத் தனி மாநிலமாக்கல் : ம.தி.மு.க, தி.மு.க, பா,ம.க,

சிறுபான்மையினர் மீது பொய்வழக்குகளுக்கு இழப்பீடு/ அதிகாரிகளுக்கு தண்டனை : சி.பி.அய், சி.பி.எம், ஆம் ஆத்மி, எஸ்.டி,பி,அய்,

மதக்கலவர தடுப்பு மசோதா நிறைவேற்றம்: சி.பி.ஐ, சி.பி.எம், இ.தே.கா, வி.சி.க,

புலம் பெயர் மக்கள் பாதுகாப்பிற்காக இனவெறி எதிர்ப்புச் சட்டம்: சி.பி.எம், எஸ்.டி,பி,அய்,

கறுப்புச் சட்டங்கள் மறு பரிசீலனை : ஆம் ஆத்மி (AFPSA வில் மாற்றங்கள்), தி.மு.க (UAPA வில் 2012 ல் கொண்டு வந்த மாற்றங்களை நீக்குதல்; பா.ம.க (அனைத்துத் தடுப்புக் காவல் சட்டங்களையும் எதிர்த்தல்); சி.பி.எம் (UAPA வில் உள்ள சில கொடூரமான பிரிவுகளை நீக்குதல், மற்றும் AFPSA சட்டம் முழுமையாக நீக்கம்), எஸ்.டி,பி,அய் (AFPSA, UAPA முழுமையாக நீக்கம்), சி.பி.ஐ (UAPA சட்டம் உட்பட அனைத்துச் சட்டங்களும் நீக்கம்),

மாநிலப் பட்டியலில் கல்வி: வி.சி.க, தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க,

குறிப்பு 1: தேர்தல் அறிக்கைகளில் கண்டபடி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு அம்சத்தில் ஒரு கட்சியின் கொள்கை எதுவாக இருந்தபோதும் 2014 தேர்தல் அறிக்கையில் அந்த அம்சம் இல்லாவிய்ட்டல் அது இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை.

குறிப்பு 2: தமிழகத்தில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மட்டும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. தே.தி.மு.க, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியன தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

ஆ. கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் : ஓர் ஒப்பீட்டு அலசல்

2014 நாடாளுமன்றத் தேர்தல் : கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒரு அலசல்

தேர்தல் அறிக்கையை வெளியிடுகிற கட்சிகள் எல்லாம் அந்த அறிக்கைகளுக்கு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கின்றன, எந்த அளவிற்கு இவற்றை நிறைவேற்ற சித்தம் கொண்டுள்ளன என்கிற நியாயமான கேள்விகள் மற்றும் ஐயங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கட்சிகளின் நோக்கங்கள், குறிக்கோள்கள் என்கிற அளவிற்கு இவற்றை மதிக்க வேண்டாம் என்ற போதிலும் கட்சிகளின் விருப்பங்கள் (intensions) என்கிற அளவிலேனும் இவற்றுக்குரிய இடத்தை நாம் அளிக்க வேண்டும் அந்த வகையில் கட்சிகளின் அணுகல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், கூட்டணி அரசியல் போன்றவற்றிற்காகக் கட்சிகள் என்னென்ன அம்சங்களில் சமரசமாகிறார்கள் என்பதற்கும், எந்த அளவிற்கு இவர்கள் ஆளுகை குறித்து சீரியசாக இருக்கிறார்கள், எந்த அளவிற்கு வெறும் உணர்ச்சி அரசியலையே இறுதிக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் புரிந்துகொள்வதற்கும் இந்தத் தேர்தல் அறிக்கைகள் நமக்கு முக்கிய தடயங்களாக அமைகின்றன.

அந்த வகையில் இங்கே தமிழகத்தில் போட்டியிடுகிற பதினோரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மூன்று நிலைகளில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1) இந்த அறிக்கைகள் விவசாயம், தொழில், மருத்துவம், கல்வி, அயல் உறவு, ஈழப்பிரச்சினை முதலான முக்கிய பிரச்சினைகளில் முதன்மையாக என்ன கருத்துக்களை முன்வைக்கின்றன என்பதும், இவை தவிர அவை சிறப்பாக வேறெதையெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பதையும் முதலில் தொகுத்துள்ளோம். 2) என்ன மாதிரியான பிரச்சினைகளை முன்வைத்து கட்சிகள் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன என்கிற அடிப்படையில் முக்கிய சில பிரச்சினைகளில் கட்சிகளின் நிலைபாட்டை ஒரு அட்டவணை ஆக்கியுள்ளோம். 3) மூன்றாவதாக இந்த இரண்டின் தொடர்ச்சியாக கட்சிகளின் சில கவனிக்க வேண்டிய போக்குகளை இந்தக் கட்டுரையின் மூலம் தொகுத்துள்ளோம்.

ஒன்றை மனதில் கொள்வது அவசியம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு திட்டம் (programme) உண்டு. இந்தத் திட்டத்திற்கும், தேர்தல் அறிக்கைக்கும் என்ன வேறுபாடு?

கட்சித் திட்டம் என்பது அக்கட்சியின் அடிப்படை நோக்கங்களையும், இறுதிக் குறிக்கோளையும் வரையறுப்பது. தேர்தல் அறிக்கை என்பது இந்த அடிப்படைத் திட்டத்திற்கு முரணாகாமல் அடுத்த ஐந்தாண்டுகளில் தாங்கள் என்னென்னவற்றை சாத்தியமாக்கவோ அல்லது சாத்தியமாவதற்காகப் போராடப் போவதாகவோ வாக்குறுதி அளித்து, அந்த அடிப்படையில் வாக்காளர்களைத் தமக்கு வாக்களிக்குமாறு வேண்டுவது. இந்த வகையில் தேர்தல் அறிக்கைகள் என்பன திட்டங்களைக் காட்டிலும் தூலத் (concrete) தன்மை உடையனவாக இருக்க வேண்டும். தேவையற்ற வாயளப்புகளைக் (rhetoric) குறைத்து குறிப்பாகவும் தூலமாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் தாம் செய்யப்போகிறவற்றைக் குறிப்பாகச் சொல்பவை நல்ல அறிக்கைகளாக அமையும். நமது நாட்டு அரசியல், குறிப்பாகத் தமிழக அரசியல் வாயளப்புகளுக்குப் பெயர் போனது. இந்த அறிக்கைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

பெரும்பாலான அறிக்கைகளில் வாயளப்புகள் அதிகமாகவும், தூலமான திட்டங்கள் குறைவாகவும் உள்ளன. சில நேரங்களில் கட்சிகள் எந்தப் பிரச்சினையை மையமாக எடுத்துக் கொண்டுள்ளனவோ அந்த அம்சத்தில் தூலமாகவும் பிறவற்றில் சிரத்தை இல்லாமல், எதையேனும் சொல்ல வேண்டும் என்கிற அளவிலும் இருப்பதை வாசிப்போர் புரிந்துகொள்ள இயலும். தவிரவும் சில கட்சிகள் தாங்கள் ஏதோ முற்போக்காகவும், இங்கு மேலெழும் அனைத்துக் கோரிக்கைகளுடனும் தாங்கள் உடன்படுவதாகவும் காட்டிக் கொள்வதற்காக எந்தக் குறிப்பான திட்டமும் தூலமான நடைமுறையும் இல்லாமல் அந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுகிற இயக்கங்களைக் காட்டிலும் தீவிரமான முழக்கங்களை அறிக்கையில் வைப்பதையும் காண முடிகிறது.

கூடுமானவரை கட்சிகளின் இந்த வாயளப்புகளிலிருந்து தூலமான திட்டங்களைப் பொறுக்கி எடுத்து இந்தத் தொகுப்புகள் மூன்றும் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்சிகளின் அடிப்படைத் திட்டங்கள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையாக்க இயலாது என்பதைச் சொன்னோம். இந்த ஆய்வுகளும் கட்சிகளின் இந்த அடிப்படைத் திட்டங்களுக்குள் செல்லாமல் இந்த அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சென்ற தேர்தல்களில் என்னென்ன வாக்குறுதிகள் வைக்கப்பட்டன, அவற்றிலிருந்து இந்த அறிக்கை எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளது அல்லது பழைய அறிக்கைகளையே மேலோட்டமாகச் சில மாற்றங்களைச் செய்து தயாரிக்கப்பட்டுள்ளனவா என்கிற கேள்வி மிக முக்கியமானதாயினும் இந்த ஆய்வுகளில் அதை எங்களால் செய்ய இயலவில்லை.

இனி ஒரு அகன்ற பார்வையில் இந்த அறிக்கைகளில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக எங்களுக்குப் படுபவை:

1. மாநிலக் கட்சிகளுக்கும் இந்திய அளவிலான கட்சிகளுக்கும் வேறுபாடுகள் பெரிய அளவில் உள்ளன; தி.மு.க. அ.தி.முக. ம.தி.மு.க, பா.ம.க, வி.சி.க ஆகிய மாநிலக் கட்சிகள், அமையப்போகும் மத்திய அரசின் ஊடாக தமிழகத்தில் நிறைவேற்றப்படக்கூடிய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன என்றால் இ.தே.கா, பா.ஜ.க, இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி முதலான இந்திய அளவுக் கட்சிகள் தமிழக அளவிலான வளர்ச்சித்திட்டங்கள் குறித்து எதையும் பேசுவதில்லை. வறுமை ஒழிப்பு அல்லது உணவுப் பாதுகாப்புச் சட்டம் முதலியவற்றை நாங்கள் சொல்வதன் மூலம் எல்லா மாநில மக்களின் நலனையும் பேசிவிடுகிறோமே, பிறகு தனியாக மாநிலங்கள் பற்றிப் பேச வேண்டுமா என இந்திய அளவுக் கட்சிகள் கேட்பதில் பொருளில்லை. விண்கல ஏவுதளம், தமிழகத்தில் புதிய துறைமுகங்கள், வெளிநாடுகளுக்கு அதிகம் சென்று பணி செய்யக்கூடிய நிலை உள்ளபோது அங்குள்ள தூதரகங்களில் தமிழர்கள் நியமிக்கப்படுதல், மின்சாரம் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளதால் மின்திட்டங்களை உருவாக்குதல், வெளி மாநிலங்களிலிருந்து இங்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான் வழி முறைகளை மேம்படுத்தல், விவசாய நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருப்பதால் அதற்குரிய திட்டங்களை மொழிதல், காவிரி நதி நீர் ஆணையம் முதலியன உருவாக்கப் பெறுதலில் ஏற்படும் தாமதங்கள் முதலிய பிரச்சினைகள் மாநில அளவில் முக்கியமானவை. இவற்றை முன் குறிப்பிட்ட மாநில அளவுக் கட்சிகள்தான் கவனம் கொடுத்துப் பேசியுள்ளன.

இந்தியா ஒரு “தேச அரசு’ (Nation State) அல்ல, மாறாக இது ஒரு ‘மாநிலங்களின் அரசு’ (State Nation) எனக் கூறுவது உண்டு. முற்றிலும் வேறுபட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏந்தியுள்ள எண்ணற்ற பல மாநிலங்கள், மொழிகள் உள்ள இந்தத் துணைக்கண்டத்தில் மாநில அளவிலான வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேச இயலாதபோதும் முக்கியமான மாநிலத்தேவை குறித்தும் (எ.கா ; தமிழகத்தில் பாசன நீர் மற்றும் மின் தேவைப் பிரச்சினைகள்), மேலெழுந்துள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தூலமாக அகில இந்தியக் கட்சிகள் பேச வேண்டும். அப்படி இல்லாதிருப்பது பெருங் குறை.

இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட இந்திய அளவுக் கட்சிகள் மாநில அளவுத் திட்டங்கள், நதி நீர்ப் பிரச்சினைகள் ஆகியவற்றில் காட்டும் மௌனத்திற்கான காரணங்களில் ஒன்று அவற்றிற்கு சில முக்கிய மாநில அளவிலான பிரச்சினைகளில் கட்சிக்குள் பொதுக் கருத்து இல்லாதது. காவிரி அல்லது முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அகில இந்தியக் கட்சிகள் ஒவ்வொன்றும் மாநில அளவில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இந்நிலை தொடர்வது அகில இந்தியக் கட்சிகள் மாநில மக்களிடமிருந்து அந்நியப்படவே வழிவகுக்கும். இது தொலை நோக்கில் நல்லதல்ல.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து மேலோட்டமாக பாஜ.க சில கருத்துக்களைக் கூறியுள்ளது. பிற மாநிலங்கள் குறித்து இத்தகைய அக்கறையை அது வெளிப்படுத்தாமல் இவ்விரு பகுதிகளை மட்டும் அது பேசுவது, இங்கு நடைபெறும் போராட்டங்கள், தங்களுக்கு அங்கு பிடிப்பில்லாமல் இருப்பது ஆகிய அடிப்படைகளிலிருந்தே எழுந்துள்ளது.

மாநில அளவு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மட்டுமின்றி மாநில அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மீதேன் வாயு எடுக்கும் திட்டம் முதலியவை குறித்தும் மாநில அளவுக் கட்சிகளே வாய் திறந்துள்ளன. காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகள் மத்தியில் செல்வாக்குடன் உள்ள இடதுசாரிக் கட்சிகள் தம் அறிக்கையில் மீதேன் திட்டம் குறித்துக் கருத்துரைக்காதது குறிப்பிடத் தக்கது. கிழக்குக் கடற்கரையோரம் குறிப்பாக நாகைப் பகுதியில் ஏராளமான தனியார் அனல் மின் திட்டங்கள் வருவதை பா.ம.க மட்டுமே கண்டித்துள்ளது. சென்ற ஆண்டுகளில் இங்கு நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய போராட்டம் கூடங்குளம். அணு உலைகளை மூடுவது குறித்து பா.ம.க, ம.தி.மு.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே பேசியுள்ளன. கூடங்குளம் போராட்டத் தலைவர்கள் மூவரை இந்தத் தேர்தலில் தன் வேட்பாளர்களாகக் களம் இறக்கியுள்ள அகில இந்தியக் கட்சியான ஆம் ஆத்மி இது குறித்துக் காட்டும் மௌனம் குறிப்பிடத் தக்கது.

2. மாநிலக் கட்சிகள் மாநில அளவிலான பிரச்சினைகளைப் பேசுவது வரவேற்கத்தக்கதுதான் எனினும் ம.தி.மு.க போன்ற கட்சிகள், தமிழக மக்களின் பிரதான பிரச்சினைகள் இவை மட்டுமே எனக் கருதத்தக்க அளவிற்கு இவற்றை முன்நிலைப்படுத்துவதோடு அண்டை மாநிலங்களுடனான முரண்பாடே பிரதானமானது என்கிற அளவிற்குக் கொண்டு செல்கின்றன. அ.தி.மு.கவைப் பொருத்த மாட்டில் மத்திய காங்கிரஸ் அரசின் மீது அனைத்துக் குற்றங்களையும் சுமத்துவதற்கு மாநிலப் பிரச்சினைகளை அது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. ஒருவேளை அ.தி.மு.கவுடன் ஒத்துச் செல்லும் ஒரு மத்திய அரசு உருவானால் அது இதையெல்லாம் பேசுமா என்கிற அய்யம் நமக்கு ஏற்படுகிறது.

மாநிலக் கட்சிகளின் இன்னொரு சிக்கல்அவை இந்திய அளவிலான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமை. மாநில அளவில் அதிகாரப் பரவல் முறையாக நிறைவேற்றப்படாத, அதிக அளவில் அதிகாரங்கள் மைய அரசில் குவிந்து கிடக்கக் கூடியஒரு நாட்டில் அயலுறவு, பொருளாதாரம், அந்நிய முதலீடு, ஆளுகைச் சீர்திருத்தங்கள், வகுப்புவாதம். உள் நாட்டுப் போராட்டங்கள், வறுமை ஒழிப்பு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட புதிய சட்டங்கள் இயற்றல் முதலானவை மிக முக்கியமாக உள்ளன. மக்களின் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கும் இவை குறித்து மிகவும் மேலோட்டமான பார்வைகளையே மாநிலக் கட்சிகள் முன்வைக்கின்றன. ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காகச் சொல்வதாகவும் சிலவற்றில் கருத்தே இல்லாதவையாகவும் இருப்பது வருந்தத்தக்கது. எடுத்துக்காட்டாகப் பா.ம.க அயலுறவு குறித்து எந்தக் கருத்தையும் கூறவில்லை. அ.தி.மு.கவைப் பொருத்தமட்டில்மிக முக்கியமான இரு அடிப்படைத் துறைகளான கல்வி மற்றும் மருத்துவம் குறித்து ஏதும் குறிப்பாகச் சொல்லவில்லை. பல அம்சங்களில் அ.தி.மு.க அறிக்கை ஜெயா ஆட்சியில் மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களை மத்திய அளவிலும் நிறைவேற்றில் போதுமானது என்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மேற்குறிப்பிட்ட இந்திய அளவிலான பிரச்சினைகளில் அகில இந்தியக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை விரிவாக முன்வைக்கின்றன. அந்நிய முதலீடு, பெருந்தொழில் வளர்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ், பா,ஜ,க, முதலியான வரவேற்கின்றன, ஆம் ஆத்மியைப் பொருத்தமட்டில் ஊழலற்ற முதலாளியம் தனியார்துறை முதலியவற்றை வரவேற்கிறது. இடதுசாரிக் கட்சிகள் ஒரு மாற்றுப் பொருளாதார, தொழிற் கொள்கையை முன்வைக்கின்றன. ஆளுகை, நிதி ஒழுங்கு, மாநில உரிமைகள், இயற்ற வேண்டிய புதிய சட்டங்கள் ஆகியவை குறித்து ஒரு சுருக்கமான மாற்றுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கிறது. அதேபோல விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் எனத் தனித்தனியாக அவர்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வாக அது கருதுவதையும் முன்வைக்கிறது.

காங்கிரஸைப் பொருத்தவரை தனது “உரிமை அடிப்படையிலான வளர்ச்சி” என்கிற அணுகல்முறையை ஏற்கனவே அது நிறைவேற்றியுள்ள துறைகளைத் தவிர பிற முக்கிய துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்துப் பேசுகிறது. சமூக நீதி, கல்வி, மருத்துவம் ஆகியன குறித்தும் தூலமான திட்டங்களை வைக்கிறது. எனினும் அதனுடைய பல ஊழல்களுக்கும் காரணமான தாராளமயமாக்கலையும், “தனியார் பொதுத்துறை ஒத்துழைப்பு” போன்ற எல்லாவற்றிலும் தனியார்களைப் புகுத்துவதையும் எந்த விமர்சனமும் இன்றி இந்த அறிக்கையிலும் தொடர்கிறது.

பா,ஜ.கவும் இதையெல்லாம் பேசியபோதிலும் அதுவும் பெருந்தொழில் வளர்ச்சி, அந்நிய மூலதனம் ஆகியவற்றில் காங்கிரசிடமிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. தவிரவும் அதனிடம் துலமான திட்டங்களைக் காட்டிலும், “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்”, “சமாஜிக் நியாய்” மற்றும் “சமாஜிக் சம்ராசட்டா”, திறன் வரைபடம் உருவாக்குதல் என்பதுபோன்ற வாயளப்புகள் அதிகமாக உள்ளன. வரிச் சீர்திருத்தம், தொழில் தொடங்கலில் உள்ள சிவப்பு நாடா முறையை ஒழித்தல் ஆகியவற்றை அது முதன்மைப்படுத்துகிறது. திட்டப்பெயர்களிலும் முழக்கங்களிலும் அதிக அளவில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுகிறது.

பா.ஜகவிடம் காணக்கூடிய இன்னொரு அம்சம் அது தன்னை மிக நவீனமான தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தத் துடிப்பதாகவும், அதே நேரத்தில் பாரம்பரியத்தை இம்மியும் விட்டுக்கொடுக்காததாகவும் காட்டிக் கொள்வது. “செல் போன்களின் உதவியோடு e மருத்துவ சேவை, பாரம்பரிய மருத்துவ முறை யோகா முதலிவற்றை ஊக்குவித்தல்” என்பது போன்ற வாசகங்களை அறிக்கை முழுவதும் ஆங்காங்கு காணலாம்.

3. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுக்குமான ஒரு மாற்றாக இன்று உருப்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்த மட்டில் ஊழல் ஒழிப்பு, அதிகாரப் பரவலை கிராம அளவிற்குக் கொண்டு வருதல் முதலியன அதன் பிரதான அணுகல் முறைகளாக உள்ளன. அந்த வகையில் அதிகாரங்களைக் கீழிறக்குவது தொடர்பான அவர்களின் வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக உள்ளன. “சுயராஜ்யச் சட்டம்” ஒன்றை இயற்றி எல்லாவிதமான பிறப்பு, இறப்பு சாதிச் சான்றுகள் முதலியவற்றை வழங்கும் அதிகாரத்தை மட்டுமின்றி கிராம அளவில் செயல்படும் பள்ளி, மருத்துவமனை, காவல் நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது முதல் கிராம வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் ஒப்பந்தக் காரர்களுக்கு நிதி அளிப்பதற்கான ஒப்புதலை அளிக்கும் அதிகாரம் வரை கிராம சபைகளுக்கு அளிப்பதை அது தனது அடிப்படை அணுகல் முறையாக முன்வைக்கிறது. தல அளவில் பாடத்திட்டம் உருவாக்கும் அதிகாரம் கூட அதற்கு இருக்குமாம். பல முக்கிய துறைகளில் சட்டம் இயற்றுவதற்குக் கூட கிராம சபைகளின் ஒப்புதல் தேவை என்கிற நிலை போகப் போக உருவாக்கப்படுமாம். காவல் நிலையங்களில் காமரா பொருத்தி நடவடிக்கைகளைக் கண்காணித்தல், போலீஸ் காவல் என்பதையே நீக்கிவிட்டு நீதிமன்றக் காவலை மட்டுமே அனுமதிப்பது என்கிற காவல்துறை சீர்திருத்தங்கள் இதுவரை எந்தக் கட்சியும் முன்வைக்காத திட்டங்கள். போலீஸ் காவல் என்பதை 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் என்கிற அளவிற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அரசுகள் கொண்டு சென்றுள்ள நிலையில் ஆம் ஆத்மி அதிரடியாக போலீஸ் காவலே தேவையில்லை எனக் கூறுகிறது.

எனினும் இங்கொன்றைக் கவலையுடன் கருத வேண்டி உள்ளது நமது அரசியல் நிர்ணய அவையில் பஞ்சாயத்து ராஜ் முறையைச் சட்டமாக்க காந்தியவாதிகள் முயன்றபோது அதற்கு டாக்டர் அம்பேத்கர் ஒப்புதல் அளிக்க வில்லை. இறுதியில் அது அடிப்படை உரிமையாக இல்லாமல் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக மட்டும் வைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் மூலமாக கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதை அம்பேத்கர் அவ்வளவு பிடிவாதமாக எதிர்த்ததற்குக் காரணம் நமது கிராமங்கள் சாதி ஆதிக்க அலகுகளாக இருப்பதுதான், இன்று வரை அந்நிலையில் மாற்றமில்லை, கிராமங்களுக்கு இப்படி அதிகாரங்களை வழங்குவதென்பது அங்குள்ள ஆதிக்க சக்திகளின் கைகளிடம் அதிகாரம் குவிவதற்கே வழிவகுக்கும். இது அப்பகுதிகளில் உள்ள தலித்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் யார் சிறுபான்மையராக உள்ளனரோ அவர்களுக்கு எதிராக முடியும். இதற்கொரு காப்பாக கிராம சபைகளில் முடிவுகள் எடுக்கும்போது ஒவ்வொரு பிரிவினரிலும் 50 சதக் ‘கோரம்’ இருக்க வேண்டும் என்கிறது ஆம் ஆத்மி அறிக்கை. இது ஒரு முழுமையான பாதுகாப்பாக அமையாது. இப்படியான ‘கோரம்’ குறித்த கணக்குக் காட்டுவது ஆதிக்க சாதியினருக்குக் கடினமான விஷயமல்ல. தலித் பிரிவினருக்கென ஒடுக்கப்பட்ட கிராமங்களில் தேர்தலை நடத்தவிடாமல் பார்ப்பதிலும், நடந்தாலும் அதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொள்வதிலும் வல்லவர்கள் நம் கிராமத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆம் ஆத்மி இத்தகைய சுயராஜ்யச் சட்டம் தவிர பிற அம்சங்களில் அதிக சிரத்தை காட்டவில்லை. அயலுறவு என்றால் “அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள உரையாடலைத் தொடரும் அதே நேரத்தில் சிறிய நாடுகளின் கூட்டமைப்புகளிலும் இந்தியா செயல்படும்” இந்திய சீன உறவு என்றால் “எல்லைப் பிரச்சினையில் கறாராக நடந்து கொள்ளும் அதே நேரத்தில் அதனுடன் வணிக உறவைத் தொடர்தல்” என்பதுபோல ஒருவகை வாயளப்புகளாகவே அறிக்கை முடிந்து விடுகிறது.

கைகளால் மலம் நீக்கித் தூய்மை செய்யும் தொழிலை (manual scavenging) ஒழிப்பதை கட்சிகள் பலவும் தங்கள் வாகுறுதிகளில் ஒன்றாக்கியுள்ளன. ஆம் ஆத்மியோ தீயணைப்புப் படையினருக்கு உள்ளதுபோன்ற பாதுகாப்புக் கவசங்கள், முகமூடி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும் என்கிறது.

4. எஸ்.டி.பி.அய் ஒரு அகில இந்தியக் கட்சி. குறிப்பாக கேரளம், கர்நாடகம் முதலான அண்டை மாநிலங்களில் ஓரளவு ஆதரவு உள்ள கட்சி. அது தன் அறிக்கையில் தமிழகப் பிரச்சினைகளைத் தீவிரமாகப் பேசியுள்ள ம.தி.முக முதலான கட்சிகளின் அளவுக்குத் தீவிரமாகத் தமிழகப் பிரச்சினைகளைப் பேசியுள்ளது. ஒரு இந்திய அளவிலான கட்சி இப்படி மாநிலப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அப்படியான அக்கறை பிற மாநிலப் பிரச்சினைகளில் இல்லாதது நமக்கு வியப்பளிக்கிறது. அப்படியானால் இது தமிழகத்திற்கெனத் தனியே உருவாக்கப்பட்ட அறிக்கை என்பதுபோல் ஆகிறது. காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் கோரிக்கை சரியானது என்றால் இக்கட்சியின் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலக் குழுக்களின் கருத்தும் அதுதானா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி இல்லாதபோது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட அறிக்கைகளை வைப்பது என்பது அரசியல் அறமல்ல. ஒரு இந்திய அளவிலான கட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் இப்படி மாநிலத்திற்கொரு தேர்தல் அறிக்கையை வைக்க இயலாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதன் ஆங்கில அறிக்கையில் இல்லாத சில அம்சங்களை, குறிப்பாகத் தமிழகம் சார்ந்த சில திட்டங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது. இது மாநில அளவில் எடுக்கப்பட்ட முடிவா இல்லை அகில இந்திய ஒப்புதலுடன் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.

5. பாக், சீனா முதலான அண்டை நாடுகளுடனான உறவைப் பொருத்தமட்டில் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியம் அளித்து போரைத் தவிர்த்தலே இரு நாட்டு மக்களுக்கும் நல்லது என்பதே இடதுசாரிகள், காங்கிரஸ், தி.மு.க முதலான கட்சிகளின் அணுகல் முறையாக இருந்து வந்துள்ளது. இன்றைய அறிக்கைகளிலும் அதுவே தொடர்கிறது. இதற்கு மாற்றாக அண்டை நாடுகளிடம், குறிப்பாக பாக் மற்றும் சீனாவுடன் கறாராக நடந்து கொள்வது, பேச்சு வார்த்தைகளைக் காட்டிலும் நம் இராணுவ வல்லமையைப் பெருக்கி அதன் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்வது என்பன பா.ஜ.கவின் அணுகல் முறையாக இருந்து வந்துள்ளது. இந்த அறிக்கைகளிலும் சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா, வி.சி.க முதலான கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, ஆம் ஆத்மி, ஆகிய கட்சிகள் பேச்சு வார்த்தைகளைக் காட்டிலும் இராணுவ வல்லமைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. பா.ஜ.கவுடன் நெருக்கமாகும் புள்ளிகளை இவ்வாறு அ.தி.முக, ம.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

6. தமிழக அரசியலில் கடந்த ஆண்டுகளில் மேலுக்கு வந்த பிரச்சினைகளில் ஈழம் முக்கியமானது. இரண்டு கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் இது குறித்துத் தம் கருத்தைத் தெரிவித்துள்ளன. ஈழப் பிரச்சினையில் மௌனம் காக்கும் கட்சிகள் பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும் மட்டுமே. ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு, பன்னாட்டு விசாரணை ஆகியவற்றை தி.மு.க, ம.தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் முன்வைக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ்ப்பகுதிகளுக்கு அதிகாரப் பரவல், சுயேச்சையான மனித உரிமை மீறல் விசாரணை ஆகியவற்றை காங்கிரசும் சி.பி.எம்மும் முன்வைக்கின்றன. ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இணையாகப் பங்கேற்ற சி.பி.அய் கட்சி ‘ஈழம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” முழு மனித, அரசியல் உரிமைகளை அவர்களின் கருத்தறிந்து வழங்குதல் என்பதாகத் தன் அணுகல் முறையை வைக்கிறது. இந்தக் ‘கருத்தறிந்து’ என்கிற சொல்லும் கூட அதன் ஆங்கில வடிவத்தில் இல்லை.

கச்சத் தீவை மீட்பது எனபதை ஐந்து மாநிலக்கட்சிகள் மட்டுமே முன்வைக்கின்றன இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க ஆகிய இந்திய அளவிலான கட்சிகள் தம் அறிக்கைகளில் கச்சத் தீவு குறித்து ஒன்றும் பேசவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சி.பி.ஐ, தி.மு.க, வி.சி.க ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தெளிவாகக் கூறியுள்ளன. ஆம் ஆத்மி வழக்கம்போல இதிலும் மௌனம்தான். ம.தி.மு.க மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்பதாகக் கூறி நழுவுகிறது. பா.ஜ.க பாதுகாப்பு, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இது குறித்து முடிவெடுக்குமாம். காங்கிரஸ், அ.தி.மு.க, எஸ்.டி பி.அய் ஆகியனவும் சேது சமுத்திரம் குறித்து ஒன்றும் பேசவில்லை.

7. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது என்கிற இந்துத்துவக் கொள்கையை பா.ஜ.க தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க இரண்டும் அது தேவையில்லை எனக் கூறுகின்றன. தி.மு.க எப்போதும்போல இதை எதிர்த்துள்ளது.

8. சிறுபான்மையினரைப் பொறுத்தமட்டில் சச்சார் குழு அறிக்கையைக் காட்டிலும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமே இட ஒதுக்கீடு முதலான திட்டங்களை மிகத் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையை பா.ஜ.க தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. சி.பி.அய், சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகின்றன. சிறுபான்மையினர் மீது போடப்படும் பொய் வழக்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், பொய்வழக்கு போட்ட அதிகாரிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை சி.பி.அய், சி.பி.எம், ஆம் ஆத்மி, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே வலியுறுத்துகின்றன. மதக் கலவரத் தடுப்பு மசோதாவை நிறைவேற்றுதல் என்கிற இன்னொரு முக்கியமான சிறுபான்மையினரின் கோரிக்கைக்கு சி.பி.அய், சி.பி.எம், காங்கிரஸ், வி.சி..க, எஸ்.டி.பி.அய் இவை மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளன.

9. தலித்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது, திருத்தங்கள் மேற்கொண்டு வலிமையாக்குவது ஆகியவற்றை சி.பி.எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கருப்புச் சட்டங்களை மறு பரிசீலனை செய்வது என்பதையும் ஆம் ஆத்மி (AFPSA), தி.மு.க (UAPA), பா.ம.க (அனைத்து தடுப்புக் காவல் சட்டங்கள்), சி.பி.எம் (UAPA) எஸ்.டி.பி.அய், சி.பி.அய் ஆகியவை முன்வைத்துள்ளன.

10. பூரண மதுவிலக்கை ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் முன்வைத்துள்ளன.

11. பா.ஜ.க தன் இந்துத்துவக் கொள்கைகளான அணு வல்லமையைப் பெருக்குவது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது. கங்கை நீரைத் தூய்மை செய்வது, பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவது பசுப் பாதுகாப்பு, காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது ஆகியவற்றை தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

12. பா.ம.க அதன் சிறப்புக் கோரிக்கைகளான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி நீர்க்கச் செய்வது, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது, காதலித்துப் பின் ஏமாற்றப்படாமல் பெண்களைப் பாதுகாப்பது முதலியவற்றை வெளிப்படையாகத் தன் அறிக்கையில் முன்வைத்துள்ளது. சிறிய மாநிலங்கள் அமைப்பதை ஆதரித்தல் என்பதும் அதன் திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்து வன்னியர்கள் அதிகமாக உள்ள வட தமிழகத்தைத் தனி மாநிலமாக மாற்றுவது என்கிற அதன் நீண்ட காலக் கோரிக்கையை மனதில் கொண்டு இந்த அறிவிப்பு முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கோரிக்கை பா.ஜ.கவின் சிறிய அளவிலான மாநிலங்கள் என்கிற இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப் போவது குறிப்பிடத் தக்கது. குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையும் கூட ஜெயா ஆட்சியில் ஜெ.குரு போன்ற தம் கட்சியினர் பெரிய அளவில் இச் சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை மனதிற் கொண்டு இருக்கலாம்.

13. வி.சி.க, பா.ம.க முதலான அடித்தள மக்களின் கட்சிகள் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகப் பேசுகின்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தி.முகபோன்ற திராவிட மரபில் வந்தக் கட்சிகளும் இட ஒதுக்கீடு குறித்துத் தூலமாகப் பலவற்றைச் சொல்கின்றன. பழங்குடி மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பா.ஜ.க விரிவாகப் பேசுகிறது. அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஏற்பதாக ஆம் ஆத்மியும் கூறுகிறது.

14. முஸ்லிம்களை முக்கிய ஆதரவு சக்தியாகக் கொண்டு இன்று உருவாகியுள்ள எஸ்.டி.பி.அய் கட்சி இந்திய அளவில் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை மிகத் துல்லியமாகத் தொகுத்துள்ளதோடு, அதற்கான மாற்றுத் திட்டங்களையும் தூலமாக முன்வைக்கிறது, ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகள் நிறைவேற்றம், மதக் கலவரத் தடுப்புச் சட்டம் இயற்றுதல், பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, அரசு வேலை முதலியன, பொய் வழக்கு தொடர்ந்த அதிகாரிகளுக்குத் தண்டனை, இந்திய அளவில் வழிபாட்டுத் தலங்களின் நிலை 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த நிலையில் தொடர்வது, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, உருது மொழி வளர்ச்சி என அனைத்து அம்சங்களையும் எஸ்.டி.பி.அய் தொகுத்துள்ளது,

15. கட்சிகளுக்கிடையே சில முக்கிய அம்சங்களில் கருத்தொருமிப்பு உள்ளது. சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், மலம் சுமந்து அகற்றும் பணியை ஒழித்தல் முதலியன இவற்றில் சில. இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டகட்சி அறிக்கைகளில் பெண்கள் ஒதுக்கீடு குறித்து எதுவும் பேசாதது பா.ம.க அறிக்கை மட்டுமே. வடக்கே சமாஜ்வாதி கட்சி முதலியன இதிலும் சாதி வாரி ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை எழுப்பி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. இந்ந்நிலையில் தேர்தல் அறிக்கைகள் மூலமாக இப்போது உருவாகியுள்ள கருத்தொருமிப்பைப் பயன்படுத்தி 16வது நாடாளுமன்றம் பெண்களுக்கான் ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், Manual Scavenging ஐ ஒழிப்பது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டுமென்பதிலும் காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க. அ,தி.மு.க தவிர பிற கட்சிகள் மத்தியில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு உள்ளது. இது குறித்து தேசிய அளவில் விவாதம் ஒன்றை உருவாக்கி அனைத்துக் கட்சிகளுக்கும் பெற்ற வாக்கு வீதங்களுக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் பெற வழி செய்ய வேண்டும்;

மதவேறுபாடில்லாமல் இடஒதுக்கீடு, குறிப்பாக தலித் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களுக்கு பிற தலித்களுக்கு வழங்குவதைப்போல ஒதுக்கீடு வழங்குவது என்பதிலும் இடதுசாரிக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் மற்றும் தலித் கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு உள்ளது. பா.ஜ.க ஒன்றே இதனைக் கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒன்று. ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் இதை அழுத்தமாகப் பரிந்துரைத்துள்ளது. 16வது நாடாளுமன்றம் இதை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதைப் பார்ப்போம். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதையும் இடதுசாரிக் கட்சிகள், அடித்தள சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தி.மு.க முதலியன வலியுறுத்துகின்றன. கார்பொரேட் மற்றும் தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் கட்சிகள் இது குறித்துப் பேசவில்லை. சி.பி.எம் கூட தனியார் துறை இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளை உள்ளடக்கவில்லை.

விவசாய விளைபொருட்களுக்கு குடும்ப உழைப்பையும் ஒரு முதலீடாகச் சேர்த்துக் கணக்கிட்டு 50 சத லாபம் வருமாறு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது என்பதிலும் பெரும்பாலான கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு உள்ளது. 16 வது நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டிய ஒரு உடனடியான முக்கிய சட்ட நடவடிக்கை இது.

ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு, ஒப்பந்த முறையை ஒழிப்பது உட்பட உரிய சட்டப் பாதுகாப்புகளை உருவாக்குவது, ஓய்வூதியத் திட்டம் முதலியன குறித்தும் முக்கிய கட்சிகள் பலவும் பேசியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி ஆண்டு முழுவதும் வேலை தர இயலாத துறைகளில் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளிகள் முறையை அனுமதிக்கலாம் என்கிறது. மீனவர்கள் நலன் குறித்து ஆம் ஆத்மி தவிர பிற கட்சிகள் தூலமான பரிந்துரைகள் சிலவற்றை முன் வைக்கின்றன.

ஊழல் ஒழிப்பு குறித்து திராவிடக் கட்சிகள், வி.சி.க தவிர பிற அனைத்தும் தூலமான சில சட்ட உருவாக்கங்களை முன்வைத்துள்ளன. 16ம் நாடாளுமன்றத்தின் முன்னுள்ள முக்கிய பணிகளில் ஒன்று இது, கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு முதலிய திட்டங்களும் பெரும்பாலான கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. தொழில், பொருளாதாரம் தொடர்பான திட்டங்கள் கட்சிகளின் கொள்கைகளுக்குத் தக வேறுபடுகின்றன. இது குறித்துப் பொதுக் கருத்து உருவாக வாய்ப்பில்லை. எனினும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்தொற்றுமை உள்ளது.

உள்நாட்டுப் போராட்டங்கள், குறிப்பாக மாஓயிஸ்ட்களையும், வடகிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலப் போராட்டங்கங்களையும் ஒடுக்குவது குறித்து எல்லாக் கட்சிகளும் பேசியபோதும், இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்றெல்லாம் கூறியபோதும் ‘சல்வாஜூடும்’ போன்ற சட்டவிரோதப் படைகளை அரசாங்கமே செயல்படுத்துவதை எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை போராடும் .இந்த மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் கருப்புச் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என சி.பி.எம், ஆம் ஆத்மி, தி.மு.க ஆகிய கட்சிகள் மட்டுமே கூறியுள்ளன.

மத அடிப்படையில் திட்டங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியை பா.ஜ.க மட்டுமே செய்துள்ளது.

பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டுப் பிழைக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்தம் குறித்து சி.பி.அய், சி.பி.எம் கட்சிகள் மட்டுமே பேசுகின்றன.

ஜனநாயகம் என்பது விரும்பிய கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியைத் தேர்வு செய்வதோடு முடிந்து விடுவது அல்ல. ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராகத் திரும்பும்போது அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதும், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதும் சேர்த்துத்தான் ஜனநாயகம், அதற்கான உரிமைகளையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால் மக்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் வழிமாறும்போதும் வாக்குறுதிகளைத் தவறும்போதும் அதைத் தட்டிக் கேட்கும், தேவையானால் வீதியில் இறங்கிப் போராடும் தகுதியுடையவர்களாக இருப்போம்.