பேரா. முனைவர் அப்துல்லாஹ் அவர்களுக்கு இறுதி அஞ்சலிகள்

பெரியார்தாசன் என்கிற பெயரில் தமிழகமெங்கும் அறியப்பட்டிருந்த டாக்டர் அப்துல்லாஹ் மரணமுற்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது.

நெருங்கிய நண்பர் எனச் சொல்ல இயலாவிட்டாலும் மிக்க அன்புடன் என்னிடம் பழகியவர்.

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளி, உளவியல் வல்லுனர், திரைப்பட நடிகர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், பவுத்தம், இஸ்லாம், பெரியாரியம் மூன்றிலும் ஆழமான புலமையாளி எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் டாக்டர் அப்துல்லாஹ்.

சேஷாசலம் என்கிற இயற்பெயருடைய அவர் பெரியார்தாசனாக திராவிட இயக்கக் கொள்கைகளை நாடெங்கும் பிரச்சாரம் செய்தவர். பகுத்தறிவுவாதியான அவர் சித்தார்த்தன் எனும் பெயருடன் பவுத்தம் தழுவினார். அண்ணல் அம்பேத்கரின் ஆகச் சிறந்த நூலான ‘புத்தமும் தம்மமும்’ நூலை அற்புதமான நடையில் தமிழாக்கினார். அதைவிடச் சிறந்த முறையில் அந்நூலை யாராலும் தமிழாக்க இயலாது.

2010ல் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வை சேலம் சிக்கந்தர் என்னிடம் விவரித்தபோது அவரை அறிந்த எனக்கு அது எந்த வியப்பையும் அளிக்கவில்லை. கூட்டங்களில் பேசுவதற்காக ரியாத் (சவூதி அரேபியா) வந்திருந்த அவரை அருகிருந்து கவனித்துக் கொண்டவர் சிக்கந்தர், சின்ன வயது முதல் பெரியார்தாசனின் பேச்சுக்கு அவர் ரசிகர். “சிக்கந்தர், மெக்காவுக்குப் போகணுமே.” என்றாராம் ஒரு நாள். “அதற்குக் கலிமா ஓதணுமே” எனச் சிக்கந்தர் பதிலிறுத்துள்ளார்.”ஓதிட்டாப் போச்சு” எனப் பதில் வந்தபோது நண்பர்கள் ஒரு கணம் அசந்து போயினர்.

அன்றே அவரை மெக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கலிமா ஓதி, உம்ரா நிறைவேற்றி பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆனார். முஸ்லிமாகத் தன் இறுதி நாட்களைக் கழித்த அவர், இரண்டாண்டுகட்கு முன் ம.தி.முகவில் இணைந்தார். நாடெங்கிலும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு இஸ்லாமியப் பிரச்சாரங்களைச் செய்தார்

அவரோடு மேடையில் பேசுவது எனக்குக் கொஞ்சம் அச்சம். வயிறு குலுங்கச் சிரிக்கச் சிரிக்க அவர் பேசியபின் என்னைப் போன்று எழுதுவதுபோலவே பேசுகிறவர்களின் பேச்சு சுத்தமாக எடுபடாது. அப்படித்தான் ஒருமுறை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீடு பற்றி ஒரு கருத்தரங்கம். ஏகப்பட்ட தரவுகளுடன் நான் பேசி முடித்த பின்பு மேடை ஏறிய அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசி அரங்கை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். நிச்சயமாக என்னுடைய பேச்சு அன்று மாணவர் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் அன்று அவரது உரையே மாணவர் மத்தியில் ஆழப் பதிந்தது.

அவர் சித்தார்த்தனாக இருந்த காலத்தில் எனது ‘புத்தம் சரணம்’ நூல் வெளியீட்டுக்காக அவரை அழைத்திருந்தேன். ஒத்துக் கொண்டபோதும் ஏனோ இடையில் நான் அவரை அழைத்தபோது சரியாகப் பேசவில்லை. “என்ன வெளியிட வேறொருத்தரைப் போட்டுட்டு, என்னை வெறுமனே ஆய்வுரைன்னு போட்டுருக்கீங்க?” என்றார். இல்லை நீங்கள் விமர்சன ரீதியா விரிவாப் பேசனும்னுதான் அப்படிப் போட்டேன் எனத் தயங்கிப் பதில் சொன்னேன். வரமாட்டாரோ என நினைத்திருந்தேன். வந்தது மட்டுமின்றி மிகச் சிறப்பான ஒரு ஆய்வுரையை அன்று அந்த நூலின் மீது அவர் நிகழ்த்தினார்.

“அண்ணல் அம்பேத்கரின் நூலைப் படித்தவர்கள் அதன் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டிய நூலிது” என அவர் அன்று முத்தாய்ப்பாய்ச் சொன்னதை இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

சென்ற ஆண்டு அவர் இஸ்லாம் குற்றித்துப் பேசிய ஒரு உரையை அப்படியே நூலாக்கும் முயற்சியை ஆளூர் ஷா நவாஸ் முதலானோர் மேற்கொண்டிருந்தனர். அதற்கு நான் முன்னுரை எழுத வேண்டுமென அப்துல்லாஹ் அவர்கள் கேட்டுக் கொண்டபோது மிகவும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக் கொண்டேன். உடனடியாக எழுதியும் தந்தேன். (முகநூலில் அதைப் பதிவிட்டிருந்தேன். எனது இணையப் பக்கத்திலும் அது உண்டு). எனினும், “பேச்சை அப்படியே உரை ஆக்கியுள்ளதால் சில இடங்களில் repetition வந்துள்ளது. ஒரு முறை ‘எடிட்’ பண்ணி வெளியிடுங்கள்” என நவாசிடம் சொன்னேன். கேள்விப்பட்ட அவர் அதை முழுமையாக மீண்டும் எழுதிவிடலாம் என வாங்கி வைத்துக் கொண்டதாகப் பின்னர் அறிந்தேன்.

அந்த வேலையைச் செய்ய அவருக்கு பின் நேரம் இருந்ததோ தெரியவில்லை. செய்தாரோ, செய்ய இயலவில்லையோ நண்பர்கள் அதை உடனடியாக வெளியிட வேண்டும்.

நாளை காலை அண்ணாசாலை மக்கா மசூதியில் அப்துல்லாஹ் அவர்களுக்கு இறுதித் தொழுகை நடப்பதாக அறிந்தேன். பெருந்திரளில் முஸ்லிம் சகோதரர்கள் அதில் பங்கேற்பர் என்பது உறுதி. வெளியூரில் உள்ளேன். கலந்து கொள்ள இயலாதது வருத்தமாக உள்ளது

அன்னாருக்கு என் அஞ்சலிகள்…