நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. அரசுகளுக்குத் திடீரென இங்குள்ள சூஃபி மற்றும் ஷியா இஸ்லாமியப் பிரிவுகளின் மீது பரிவும் பாசமும் வந்துள்ளது. டெல்லியில் நான்கு நாள் சூஃபி உலக மாநாடு ஒன்று, மோடி அரசின் ஆதரவோடு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்தது  (மார்ச் 17-20, 2016). பிரதமர் நரேந்திரமோடி அதைத் தொடங்கி வைத்தார். அல்லாஹ்விற்கு உள்ள 99 பெயர்களும் கருணை, அன்பு ஆகியவற்றை வற்புறுத்துவதாகத்தான் உள்ளன,  ஒன்று கூட வன்முறையைப் போற்றும் பொருளில் இல்லை எனப் பலத்த கைதட்டல்களுக்கு இடையே உணர்ச்சி பொங்கப் பேசினார். இன்றைய அரசுகளுக்கு இப்படியான முஸ்லிம் உட்பிரிவுகள் மீது பாசம் வருவதும் அவற்றை அவை ஆதரவுக் கரம் நீட்டி அணைத்துக் கொள்வதும் சமீப கால உலக வரலாற்றில் புதிதல்ல.

இது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்குமுன் சூஃபியிசம் போன்ற இயற்கை அதீத இஸ்லாமியப் பிரிவுகள் (Mysticism) பற்றிச் சிலவற்றை நாம் மனதில் அசை போடுவது அவசியம். சூஃபியிசத்தை எதிர்ப்பது இங்கு நம் நோக்கமில்லை. இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து மனித உரிமைகள் நோக்கிலிருந்து எழுதிக் கொண்டுள்ள என்னைப் போன்றவர்கள் சூஃபி இஸ்லாம், தர்ஹா  வழிபாடு முதலானவற்றை எல்லாம் எதிர்ப்பதில்லை. பொதுவான மதவெறி, மதவாத அரசியல் ஆகியவைதான் நமது இலக்குகள். சூஃபி இசையை இங்கு விரும்பாதவர் எவரும் இல்லை. அந்தப் பாகிஸ்தானி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானின் “அல்லாஹூ… அல்லாஹூ…” பாடலையும், ‘ஜோதா அக்பர்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் ‘க்வாஜா மேரே க்வாஜா’ பாடலையும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை விரும்பிக் கேட்டு ரசித்தவன் நான். மொய்னுதீன் சிஸ்தி அவர்களின் அடக்கத்தலத்திற்குச் சென்று பார்த்து வரவேண்டும் என்கிற விருப்பமும் எனக்குண்டு.

இதை ஏன் இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டி உள்ளது என்றால் இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே நமது நோக்கம்.

செப்டம்பர் 11 (2001) இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவும் இதர உலக அரசுகளும் சில கடுமையான சட்டங்களை இயற்றின. ‘தேசப் பாதுகாப்பு’, ‘தேசபக்தி’ (National Security Act / Patriotic Act) முதலானவற்றின் பெயரால் இச்சட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் இஸ்லாம், அதன் வரலாறு, திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமியப் புனித நூல்கள், கருத்துகள், சிந்தனைகள் ஆகியவை குறித்த தீவிரமான ஆய்வுகளுக்கும் இந்த அரசுகள் முக்கியத்துவம் அளித்தன. மொத்தத்தில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் முதலான பயங்கரவாத நடவடிக்கைள், அல்காயிதா, ஐ.எஸ். முதலான அமைப்புகள் ஆகியவற்றில் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதன் பின்னணியில் உள்ள வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் முதலானவற்றை ஆய்வது முற்றிலும் கைவிடப்பட்டது, அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டது. முஸ்லிம் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை இஸ்லாமிய மதத்திற்குள் மட்டும் தேடுவதென அரசுகள் தமது ஆய்வுகளைச் சுருக்கிக் கொண்டன.

இதன் விளைவாக இன்றைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதையும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத ரீதியான தலையீடுகள் என்கிற அளவில் சுருக்கிக் கொண்டனர். வரலாற்று அடிப்படையில் பிரச்சினைகளை அணுகி அரசியல் மற்றும் பொருளாதார அணுகல் முறைகளில் உரிய மாற்றங்களைச் செய்வது என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது, மினாராக்கள் வைத்து மசூதிகள் கட்டக் கூடாது என்பன போன்ற சட்டங்களை இயற்றுதல், நீ முஸ்லிமாக இருந்தாலும் லண்டனில் வாழும்போது நீ லண்டன்காரனாக இருப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் (muscle liberalism), இந்தியாவில் பிறந்து விட்டால் நீ “பாரதப் பண்பாட்டை” ஏற்க வேண்டும் என்பது போன்ற வற்புறுத்தல்கள் மட்டுமே தீர்வுகளாகச் சட்டரீதியாகவும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ளப்பட்டன.

இப்படியாக இன்றைய பிரச்சினைகளை மதத்திற்குள், குறிப்பாக இஸ்லாத்திற்குள் தேடுவது என்பதாகச் சுருக்கிக் கொண்டதன் இன்னொரு பக்கம் முஸ்லிம்களை “நல்ல முஸ்லிம்கள்” X “கெட்ட முஸ்லிம்கள்” எனப் பிரித்து அணுகுவதாக அமைந்தது. அதாவது முஸ்லிம் அடையாளங்களைத் தரிப்பதில் உறுதி காட்டுபவர்களை எல்லாம் ‘கெட்ட முஸ்லிம்களாக’ வரையறுத்து அவர்களைப் பல்வேறு வகைகளில் ஒடுக்குவது, பிற ‘நல்ல முஸ்லிம்களை’ வெளிப்படையாகப் பாராட்டுவது என்பது அவர்களுக்கு  இரண்டு வகைகளில் பயன்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான தமது கடும் நடவடிக்கைகளை அவர்கள் நியாயப்படுத்துவது ஒரு பக்கம். நல்ல முஸ்லிம்களோடு உரசிக் கொண்டு பாருங்கள் நாங்கள் ஒன்றும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என உலகின் முன் காட்டிக் கொள்வது இன்னொரு பக்கம். இப்படி நல்ல முஸ்லிம்கள் எனச் சிலரை அடையாளப்படுத்துவதன் ஊடாகவே அவர்கள் மற்ற முஸ்லிம்களைக் கெட்ட முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தினர்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களின் நோக்கம் ஒட்டுமொத்தமான மக்கள் மத்தியில் உள்ள நல்லவர்களையும் கெட்டவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதோ, சாதாரண மக்களை ‘கிரிமினல்’ குற்றவாளிகளிடமிருந்தும், அமைதியை நேசிப்பவர்களை வன்முறையாளர்களிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதோ அல்ல. மாறாக முஸ்லிம்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களில் பெரும்பான்மையரைக் கெட்ட முஸ்லிம்களாக வேறுபடுத்திக் காட்டுவது மட்டும்தான் அவர்களின் நோக்கம்.

சரி, இதை அவர்கள் எப்படிச் செய்தனர்?

நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம் என்பதன் தூல வடிவமாக சூஃபியிசம் X வஹாபியிசம் அல்லது சன்னி முஸ்லிம் X ஷியா முஸ்லிம் என்பன போன்ற இருமை எதிர்வுகளை அவர்கள் கட்டமைத்தனர். இதை நாம் சொல்வதென்பது சூஃபியிசத்துக்கும் வஹாபியிசத்திற்கும் அல்லது ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் வித்தியாசங்களே இல்லை, இவர்கள் பொய்யாக இந்த வித்தியாசங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பதல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த அடிப்படையான வேறுபாடுகளைச் சொல்வது அவர்களின் நோக்கமல்ல. உண்மையில் இல்லாத வேறு சில வேறுபாடுகளை இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் மீது சுமத்துகிறார்கள். வஹாபியிசம் என்பது அரசியல் இஸ்லாம், சூஃபியிசம் அப்படியல்ல; அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதில் ஆன்மீகமே முக்கியம் என்பதுபோல இவர்கள் புதிதாக வேறுபாடுகளைக் கற்பிக்கின்றனர். சூஃபியிசம், வஹாபியிசம் இரண்டும் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதைக் காட்டிலும் இவற்றின் மீது இப்படியாக இவர்களால் ஏற்றப்படும் பொருளே (meaning) பொதுப் புத்தியில் ஆட்சி செலுத்தும் ஒன்றாக மாற்றப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் அரசுடன் முஸ்லிம் எதிர்ப்பு மதவாத சக்திகள், கார்பொரேட் ஊடகங்கள் முதலியனவும் அமைப்புகளும் துணைபுரிகின்றன. சுய லாபங்கள் கருதிச் செயல்படும் சில தனிநபர்களும் இதற்குத் துணைபோகின்றனர். யார் ஒருவரையும் ‘வஹாபி’ என முத்திரை குத்தினாலே போதும். அவர் ஒரு பிற்போக்குவாதி, மத அடிப்படைவாதி, எல்லாவற்றிற்கும் மத ரீதியான தீர்வுகளை மட்டுமே முன்வைப்பவர், வன்முறைச் செயல்பாடுகளை நியாயப்படுத்துபவர் அல்லது அவரே வன்முறை நடவடிக்கைகளில் பங்கு பெறுபவர் என்கிற பொருள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது. அதேபோல ஒருவரை ‘சூஃபியிசத்தை’ ஏற்பவர் என்றாலே அவர் மதச்சார்பற்றவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி, வன்முறைகளுக்கு எதிரானவர், நல்லவர் என்கிற பொருளும் இதன்மூலம் பதிக்கப்படும்.

ஆனால் அவர்கள் சொல்வதுபோல சூஃபியிசம் என்பது அப்படி ஒன்றும் மத அடையாளங்களை மறுப்பதோ அரசியலை வெறுப்பதோ அல்ல. எல்லாவற்றிற்கும் அரசியல் உள்ளது போலவே சூஃபியிசத்திற்கும் அரசியல் உண்டு. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய உமர் முக்தார் முதலானோர் சூஃபி வழியில் வந்தவர்கள்தான். மொராக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் சூஃபியிசம் முக்கிய பங்கு வகித்துள்ளது குறித்து மிக விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.

தவிரவும் அரசுகள் இன்று சூஃபிகள் X வஹாபிகள் அல்லது சன்னி முஸ்லிம்கள் X சன்னி அல்லாத முஸ்லிம்கள் எனச் சொல்லி எதிர்வுகளை உருவாக்குவதன் மூலம், இப்படி ‘நல்ல முஸ்லிம்களை’ ஆதரித்து முன்நிறுத்துவது என்பது உண்மையில் அந்த ‘நல்லவர்களின்’ சகிப்புத் தன்மைக்காகவோ, இல்லை அவர்கள் நல்ல கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களின் வாயிலாக மற்ற முஸ்லிம்களைக் கெட்ட முஸ்லிம்களாக அடையாளம் காட்டுவது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.

இது எப்படியெல்லாம் இன்று இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது என இனிக் காண்போம். முதலில் மோடி அரசு ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் முன்னர் நடத்தப்பட்ட அந்த “உலக” சூஃபி மாநாடு பற்றிப் பார்க்கலாம்.

2014ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்திய முஸ்லிம்கள் மீது பல மட்டங்களில் தாக்குதல்கள் தொடங்கின. புனேயில் ஒரு மதக் கலவரம் ஏற்படுத்தப்பட்டு நிறைய முஸ்லிம் சொத்துகள் அழிக்கப்பட்டன. தொழுகைத் தலங்கள் தாக்கப்பட்டன. முஹ்சின் சாதிக் ஷேக் என்கிற ஒரு ஐ.டி. ஊழியர் தொழுதுவிட்டு வெளியே வரும்போது தாக்கிக் கொல்லப்பட்டார். டெல்லி JNU பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டது மட்டுமின்றி மாணவர்கள் பிரிட்டிஷ் காலக் கொடும் சட்டங்களைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டனர். மாணவர் உமர் காலித், பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி முதலானோர் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். வெறுப்புப் பேச்சுகள் ஆங்காங்கு மேலெழும்பின. குடியரசுத் தலைவர் அளித்த ரமழான் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மறுத்தார். வெறுப்புப் பேச்சுகள் எல்லாப் பக்கங்களிலும் தலை எடுத்தன. அப்போது ஃபலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய கொடுந் தாக்குதலை உலகமே கண்டித்தபோதும் முதன் முதலில் ஒரு இந்திய அரசு எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தது. உ.பியில் தாத்ரி எனும் ஊரில் முஹம்மது அஃக்லாக் என்பவர் தன் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டார். அவர் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இந்தத் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம் காத்ததைப் பலரும் கண்டித்தனர். நாடெங்கும் இந்திய எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அரசு விருதுகளைத் துறந்து எதிர்ப்பைக் காட்டியதை உலகமே வியந்து நோக்கியது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லியில் அந்த “உலக சூஃபி மாநாடு” கோலாகலமாக நடத்தப்பட்டது.

முஸ்லிம்களை நாங்கள் ஒன்றும் ஆதரிக்காதவர்கள் இல்லை. முஸ்லிம்கள் நல்லவர்களாக இருந்தால் நாங்கள் எப்போதும் ஆதரிக்கத் தயங்க மாட்டோம். பாருங்கள் இப்படி ஒரு உலக அளவிலான முஸ்லிம்களின் மாநாட்டை நாங்கள் ஆதரித்து நடத்தவில்லையா? முஸ்லிம்களில் நாங்கள் யாரை எதிர்க்கிறோம், எப்படியானவர்களை எதிர்க்கிறோம் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற சேதியை மோடி அரசு இதன் மூலம் உலகத்தின் முன் வைத்தது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே இந்த முயற்சியை மோடி அரசு தொடங்கியது. ஆகஸ்ட் 30, 2015 அன்று 40 சூஃபி அறிஞர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் நரேந்திர மோடி, “சூஃபியிசம்தான் இந்தியத் தன்மை, இந்திய மனப்பாங்கு ஆகியவற்றுக்குப் பொருத்தமானது… இதுதான் இன்று இஸ்லாத்தை அடையாளப்படுத்துவதற்குத் தேவையானது” என்றார். அதாவது இப்படியான முஸ்லிம்கள்தான் இந்தியச் சூழலுக்குத் தேவை என்றார்.

‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்” எனும் நூலுக்கு நான் எழுதியுள்ள ஒரு விரிவான பின்னுரையில் அமெரிக்கத் தலைநகர் நியூயார்கில் 2009 ல் ‘பார்க் 51’ மசூதி கட்டுவதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு பற்றிக் குறித்துள்ளேன். அப்போது நடந்த விவாதம் ஒன்றில் நியூயார்க் மேயர் டேவிட் பீட்டர்சன் சூஃபி இஸ்லாம் பற்றி, “இந்த சூஃபி முஸ்லிம்கள் ஷியாக்கள் மாதிரியானவர்கள் அல்லர். இவர்கள் ஒரு மாதிரி கலவையானவர்கள். கிட்டத்தட்ட மேற்கத்திய மயமானவர்கள். நாம் மைய நீரோட்ட முஸ்லிம் என்று வரையறுக்கிறோமே, அவர்கள் இவர்கள் இல்லை” என்றார்.

உலகெங்கும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் வெறுப்பாளர்கள் எவ்வாறு மைய நீரோட்ட முஸ்லிம்களையும், சூஃபிகளையும் ஒரே மாதிரி வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நியூயார்க்கில் பீட்டர்சனும் டெல்லியில் நரேந்திர மோடியும் ஒரே குரலில் பேசுவதைக் கவனியுங்கள்.

டெல்லி சூஃபி மாநாட்டை மோடி தொடங்கி வைத்துப் பேசும்போது உலக வரலாற்றில் இஸ்லாத்தின் சாதனைகளை எல்லாம் வெகுவாகப் புகழ்ந்ததோடு அப்படியான ஒரு நல்ல சாதனைதான் சூஃபியிசம் என்றார். தொடர்ந்து பேசுகையில் ‘இதுதான் பயங்கரவாத மற்றும் தீவிரவாதச் சக்திகளை ஒதுக்கி வைத்த இஸ்லாம்’ என்றார். பேசுவதற்கு மோடிக்குச் சொல்லித் தரவா வேண்டும். அவரது அன்றைய உரையைத் தொடர்ந்து கவனிக்கலாம்.

அதாவது இஸ்லாத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஏற்காத இஸ்லாம்; மற்றொன்று வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஏற்கிற இஸ்லாம்.

தொடர்ந்து இதை இன்னும் விளக்கமாக முன்வைக்கிறார். தாங்கள் ஏன் இந்த வகை இஸ்லாத்தை ஏற்கிறோம் என நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறார். இந்தியப் பன்மைத்துவம், இந்திய உணர்வு, பாரம்பரியம், ஆன்மீக மரபு, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், கவிதை என சூஃபியிசத்தின் பங்களிப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறார். “சூஃபி இஸ்லாமின் இந்தப் பண்பு, தங்களது தேசத்தின் மீது அது கொண்டுள்ள காதல், தனது நாடு குறித்த அதன் பெருமிதம், அது.. அதுதான் இந்திய முஸ்லிம்களை வரையறுக்கும் அளவுகோல். சூஃபி மரபுதான் இஸ்லாத்தின் இந்த ஆக உயர்ந்த இலட்சியங்களைத் தூக்கிப் பிடிக்கிறது. பயங்கரவாத, தீவிரவாதச் சக்திகளை மறுக்கிறது….”

நல்ல முஸ்லிம்களையும் கெட்ட முஸ்லிம்களையும் வேறுபடுத்திக்காட்டும் இரண்டாவது பண்பு இது. ஒரு நல்ல முஸ்லிம் இந்தத் தேசத்தின் மீது பக்தி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும். இந்தியத் தன்மை கொண்டவராக இருக்கவும் வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், உலகளாவிய இஸ்லாமியப் பொதுமை எனக் கருதி அவர் தாடி வைத்துக் கொண்டாலோ இல்லை ஹிஜாப் அணிந்தாலோ, அல்லது அது என் உரிமை என வாதிட்டாலோ அவர் நல்ல முஸ்லிம் இல்லை. ஏனெனில் அவை இந்தியத் தன்மை அல்ல. அப்படியான அவர்களுக்குப் பெயர் இஸ்லாமியவாதிகள் (Islamists). அவர்களின் இஸ்லாம் ‘அரசியல் இஸ்லாம்’ (Political Islam).

மோடி தன் உண்மையான நோக்கத்தை -இஸ்லாத்திற்குள் ஒரு இருமை எதிர்வை உருவாக்குவதுதான் தன் உண்மையான நோக்கம் என்பதை- வெளிப்படுத்திவிட்டார். நல்ல முஸ்லிம்கள் X கெட்ட முஸ்லிம்கள் என்றால் யார் என அடையாளம் காட்டிவிட்டார். தேச பக்த முஸ்லிம்கள் X பயங்கரவாத முஸ்லிம்கள் என்கிற எதிர்வை உருவாக்கி இந்தியாவிற்குப் பொருத்தமான தேசபக்த முஸ்லிம்கள் யார் எனப் பட்டியலிட்டு அடையாளங்களைச் சொல்லிவிட்டார்.

நல்ல முஸ்லிம்களின் அடையாளங்களைச் சொன்னவர் கெட்ட / பயங்கரவாத முஸ்லிம்களுக்கு ஏன் அடையாளங்களைப் பட்டியலிடவில்லை? அது தேவையில்லை. இந்த நல்ல முஸ்லிம்கள் தவிர மற்ற எல்லோரும் கெட்ட முஸ்லிம்கள், அரசியல் முஸ்லிம்கள், அவ்வளவுதான்.

மோடி ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த மாநாடு மீடியாக்களால் கண்டு கொள்ளப்படாத வழக்கமானதொரு சூஃபி மாநாடு அல்ல. ஊடக வெளிச்சங்கள் கண்ணைக் கூசக் கூசக் கொண்டாடப்பட்ட ஒன்று. இதன் ஊடாக அரசியல் பேசும் பிற அத்தனை முஸ்லிம்களும் கெட்ட முஸ்லிம்கள் என்கிற சேதி எல்லோருக்கும் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி அரசின் அடக்குமுறைகளை, மதவாதப் போக்கினை, குண்டர்களின் கொலைவெறித் தாக்குதல்களைக் கண் மூடி ரசிக்கும் அதன் தன்மையைக் கண்டு கொள்ளாமல் இப்படி அவருடன் ஒத்துழைக்கும் சூஃபி முஸ்லிம்கள் மாதிரி அரசு மற்றும் பெரும்பான்மை ஆதிக்கச் சக்திகளின் கைக்கு அடக்கமாய், நல்ல பிள்ளைகளாக “இந்து–முஸ்லிம் ஒற்றுமை”, “வரலாற்றில் இந்தியக் கலைகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு”, “ஸ்ரீரங்கநாதர் சிலையைக் காதலித்த முஸ்லிம் இளவரசி” எனக் காட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிக் கொண்டிருந்தால் ஓகே, நீங்க நல்ல முஸ்லிம், உங்களை நாங்கள் பாராட்டுவோம், மாநாடு நடத்துவோம், நீங்கள் விருதைத் திருப்பிக் கொடுத்து அவமானப்படுத்த மாட்டீர்கள் என்று உறுதியாகும் பட்சத்தில் உங்களுக்கு விருதும் கொடுப்போம். இல்லாவிட்டால் நீங்கள் பயங்கரவாத முஸ்லிம்கள்தான். இடையில் வேறேதும் இல்லை. முஹமது அஃக்லாக்குக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும், ஆமாம்.

இனி இங்கு நடந்து கொண்டுள்ள இதைவிடச் சுவையான இன்னொரு நாடகத்தைப் பார்ப்போம்.

இதுவும் அதே கதைதான். பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் வேறுபடுகின்றன. கெட்ட முஸ்லிம்களின் இடத்தில் அதே பெரும்பான்மை மைய நீரோட்ட முஸ்லிம்கள்தான். நல்ல முஸ்லிம்களின் இடத்தில் இங்கு சூஃபி முஸ்லிம்களுக்குப் பதில் ஷியா முஸ்லிம்கள், அவ்வளவுதான். உலக அளவில் சன்னி / ஷியா முஸ்லிம்களின் இடையேயான பகை குறித்து நாம் அறிவோம். சவூதிக்கும் ஈரானுக்கும் உள்ள ஜென்மப் பகைக்கும் இதுவே அடிப்படை. இந்தியாவிலும் அதன் பிரதிபலிப்பு உண்டு. எனினும் பல வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்திய மைய நீரோட்டத்தில் தென்னிந்திய மாநிலங்கள் -குறிப்பாக தமிழகம்- பல விடயங்களில் வேறுபட்டிருப்பதை அறிவோம், இங்கு ஷியா X சன்னி பகை இதுவரை கிடையாது. ஆனால் வடநாட்டில் இது உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்கின்றன ஆர்.எஸ்.எஸ், பா.ஜக அமைப்புகளும் ஆட்சிகளும். இது குறித்து மிக நுணுக்கமாகக் கவனித்து எழுதியுள்ள இந்தியவியல் அறிஞரும் பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலாவின் கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்களைப் பார்க்கலாம். உத்திரப் பிரதேசத்தை மையமாக வைத்து அவர் சொல்லும் சில செய்திகள் வியப்பூட்டுபவை.

முஹ்சின் ரஸா நக்வி ஒரு காங்கிரஸ்காரர் மட்டுமல்ல, அவர் ஷியா முஸ்லிமும் கூட. 2014ல் காற்று திசை மாறுவதைக் கண்டுகொண்ட அவர் பா.ஜ.கவுக்குத் தாவினார். முதலமைச்சர் ஆன கையோடு யோகி ஆதித்யநாத் அவரை உ.பி. மாநிலத்தின் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஆக்கினார். அதன் பின் மாநில மேலவைத் தேர்தல் வந்தபோது இரண்டு ஷியா முஸ்லிம்களை மாநில மேலவை உறுப்பினர்கள் (M.L.C) ஆக்கினார். ஒருவர் ஏற்கனவே அமைச்சராக்கப்பட்ட நக்வி. மற்றவர் புக்கல் நவாப் என்பவர். இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தாவியவர். அது மட்டுமல்ல தான் ஏற்கனவே வகித்து வந்த MLC பதவியை ராஜினாமா செய்து ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒருவர் துணை முதல்வராகத் தொடர வாய்ப்பளித்தவர். இப்போது அவருக்கு மீண்டும் MLC பதவி திருப்பிக் கொடுக்கப்பட்டது. இப்படி MLC பதவி ஏற்குமுன் நக்வி, நவாப் இருவரும் இந்துக் கோவில்களுக்குச் சென்று வணங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முஸ்லிம்கள்!

சென்ற மார்ச் மாதத்தில் மவ்லானா கல்பே ஜவாத் என்பவர் ஷியா-சூஃபி ஒற்றுமை மாநாடு ஒன்றை உ.பியில் நடத்தினார். இதற்கெனச் சில நல்ல சூஃபி முஸ்லிம்களும் இப்போது அவர்களிடம் சிக்கினர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் உ.பி. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா. இதற்கென நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷியா மற்றும் சூஃபி முஸ்லிம்கள், தாங்கள்தான் பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்துக் கொண்டனர். “சில சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமே” தம்மை எதிர்ப்பதாகக் கூறினர். அந்தச் சில “சிறுபான்மை” முஸ்லிம்கள் யார்? இப்படித் தங்களின் மாநாட்டிற்கு பா.ஜ.க. அமைச்சர்களை அழைக்காத சன்னி முஸ்லிம்கள்தான் அவர்கள். ஆனால் அப்படியான சன்னிகள்தான் ஏதோ எல்லா முஸ்லிம்களின் பிரதிநிதிகளைப் போலப் பேசுகின்றனர் எனவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கைப்பிள்ளைகள் குறைபட்டுக் கொண்டனர். ஷியாக்களும் சூஃபிகளும்தான் முதன் முதலில் பயங்கரவாதத்தை எதிர்த்தவர்கள் என்றனர். ஆக இவர்கள் பா.ஜ.க. உதவியுடன் நடத்திய இந்த “ஒற்றுமை” மாநாட்டில் கலந்து கொள்ளாத இதர சன்னி முஸ்லிம்கள்தான் பயங்கரவாதத்தை எதிர்க்காத கெட்ட முஸ்லிம்கள்.

அங்கு வந்திருந்த முன் குறிப்பிட்ட கல்வே ஜவாதும் சையத் ஹஸ்னைன் பகாய் என்கிற இன்னொரு சூஃபி மதத் தலைவரும் தங்களுக்கு மர்மமான மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர். மிரட்டியவர்கள் என்ன சொன்னார்களாம்? “வஹாபியிசத்தையும் பயங்கரவாதத்தையும் கண்டிக்கக் கூடாது” என மிரட்டினார்களாம்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, “நாம் இனி ‘கங்கா ஜமுனா பண்பாட்டை’ மறு உயிர்ப்புச் செய்ய வேண்டும்” என்றார். அதென்ன? வேறொன்றுமில்லை. நவாப் ஆசஃப் உத்தவ்லா தன் ஆட்சிக் காலத்தில் ராம்லீலாவுக்கும் ஈத்காவுக்கும் சம அளவு நிலம் கொடுத்தானாம். அப்படி ராம் லீலாவுக்கு நிலத்தை உவந்தளிக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நல்ல முஸ்லிம்களாகத் திருந்துவதுதான் கங்கா- ஜமுனா பண்பாடாம்.

பாஜகவின் இந்த நல்லாதரவுக்குப் பிரதியாக ஷியாக்கள் இன்னும் தீவிரமாகத் தம்மை நல்ல முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டனர். 2017 ஏப்ரலில் கூடிய “அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் (AISPLB)” செயற்குழுக் கூட்டத்தில் பசுவதைத் தடைக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றினர்.  இப்படித் தீர்மானம் இயற்ற அவர்கள் ஈராக்கில் உள்ள ஐந்து ஷியா ஆயத்துல்லாக்களில் ஒருவரான ஷேக் பஷீர் ஹுசைன் நஜாஃபியிடம் அனுமதி பெற்றதாகவும் சொல்லப்பட்டது. ஷியா சட்ட வாரியச் செயற்குழுவில் இயற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் முத்தலாக்கைத் தடை செய்து சட்டமொன்றை இயற்ற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இன்னொரு பக்கம் கல்பே ஜவாதின் உறவினரும், ‘ஹுசைனி டைகர்ஸ்’ என்கிற அமைப்பின் தலைவருமான ஷமீல் ஷம்சி என்பவர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘ஷியா கோரக்‌ஷா தள்’ (ஷியா பசுப் பாதுகாப்பு தளம்) எனும் அமைப்பொன்றை உருவாக்கி, “பசுக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. எங்காவது யாரேனும் பசுவைக் கொன்றதாகத் தெரிந்தால் உடனே அதைக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்” எனச் சூளுறைத்துத் தன்னை ஒரு ரொம்ப நல்ல முஸ்லிமாக அறிவித்துக் கொண்டார்.

ஷியா சட்ட வாரியம் மட்டுமின்றி அடுத்த சில மாதங்களில் (ஆகஸ்டு 2017) ‘ஷியா வக்ஃப் வாரியமும்’ களத்தில் குதித்தது. “மரியாதைக்குரிய புருஷோத்தமரான ஸ்ரீராமரின் மகாப் புனிதம் மிக்க அவதாரத் தலத்திலிருந்து போதுமான தொலைவில், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிற ஒரு பகுதியில் மசூதியைக் கட்டிக்கொள்ள” தாங்கள் சம்மதிப்பதாக ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்களின் அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொண்டது. பாபர் மசூதிப் பிரச்சினையில் ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக அதைச் செய்வதாகவும் கூறிக் கொண்டது.

அது மட்டுமல்ல, “உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியம் சமாதான சகவாழ்வில் நம்பிக்கையற்ற தீவிர சன்னி மத வெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” எனவும் அம்மனுவில் கூறப்பட்டது.  “1992ல் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதியைக் கட்டிய பாபரின் தளபதி மீர்பாகி ஒரு ஷியா” என ஒரு போடு போட்டு, “எனவே ஷியா வக்ஃப் வாரியம்தான் இராமர் கோவில் கட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அதிக உரிமை உடையது” எனவும் அம்மனுவில் வேண்டிக் கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்புகளில் ஒன்றான ‘முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்’சை இயக்கும் இந்திரேஷ் குமார், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட பல முஸ்லிம்கள் தயாராக” இருப்பதாக அறிவித்தார். இந்த முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் 2016ல் உருவாக்கப்பட்டது. முஹம்மது அஃப்சல் என்பவர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பாபர் மசூதிப் பிரச்சினையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தத் தங்கள் அமைப்பு மேடை அமைத்துத் தரத் தயார் என அவர் அறிவித்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. “ஆனால் தீர்வைப் பொறுத்த  மட்டில் என் முடிவு மசூதி இருந்த இடத்தில் மீண்டும் அந்த மசூதியைக் கட்டக் கூடாது என்பதுதான்” என அறிவித்துத் தன்னை ஒரு ‘சூப்பர்’ நல்ல முஸ்லிமாகக் காட்டிக் கொண்டார்.

எதிர்பார்த்தது போல மத்தியில் உள்ள மோடி அரசும் இந்த நல்ல முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டது. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட ஷியாக்கள் ஏற்கனவே சம்மதித்து விட்டனர். சன்னிகளும் தங்களின் ஆதவரவை அளிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறிப் புன்னகைத்தார்.

அயோத்திப் பிரச்சினை ஒரு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படியான நல்ல முஸ்லிம்களின் துணையோடு (இவர்களுள் சில போரா முஸ்லிம்களும் உண்டு) விரைவில் அதைச் “சுபமாக” முடிக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது. ஒரு வகையில் பாபர் மசூதிப் பிரச்சினையையும் தங்களுக்குச் சாதகமாக முடித்தாற்போல் இருக்கும். இன்னொரு பக்கம் இந்த நல்ல முஸ்லிம்களின் துணையோடு முஸ்லிம் உட்பிரிவுகளுக்கிடையே நிரந்தரப் பிளவை ஏற்படுத்தியதாகவும் அமையும் எனத் திட்டமிடுகின்றன பரிவாரங்கள்.

அனைத்திந்திய ஷியா வக்ஃப் வாரியம் என்பது 2005ல் மிர்சா அதார் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அவரது மகன் யாசூப் அப்பாஸ் என்பவர் இப்போது சச்சார் குழு போல் ஷியா முஸ்லிம்களுக்கு மட்டும் ஒரு குழுவை அமைத்து அவர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கான முயற்சியில் உள்ளார். 2010 ல் சர்ச்சைக்குரிய பாபர் மசூதித் தீர்ப்பு வந்தபோது மேலே குறிப்பிடப்பட்ட ஷமீல் ஷம்சி ஒரு வேலை செய்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட 15 இலட்ச ரூபாய் நன்கொடை அளித்துத் தன்னை ஒரு ஈடு இணையற்ற நல்ல முஸ்லிமாகக் காட்டிக் கொண்டார்.

இவர்களை முஸ்லிம் சமூகம் மதிப்பதில்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இவர்கள் மீது வக்ஃப் சொத்துக்களைச் சுருட்டிக் கொண்டவர்கள் எனப் புகார்களும் உண்டு. ஆனால் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

இவர்களைப் பகடைக் காய்களாக வைத்து ஒரு பெரிய அரசியல் சூதாட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகளுக்கும் இவர்களின் யோக்கியதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களைப் பொருத்த மட்டில் பாபர் மசூதி, பசுவதை, முத்தலாக் முதலான முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் சமூக ஒற்றுமையை விரும்பும் முஸ்லிம்கள் எல்லோரும் தமக்கே ஆதரவாக உள்ளார்கள் என நிறுவவும், மற்ற எல்லா முஸ்லிம்களும் கெட்ட முஸ்லிம்கள், மதத் தீவிரவாதிகள், வஹாபிகள் என அடையாளம் காட்டவும் இந்த நல்ல முஸ்லிம்கள் அவர்களுக்குத் தேவைப் படுகின்றனர்.

இதனூடாக இன்னொரு பலனும் பா.ஜ.க. அரசுக்கு உண்டு. இப்படியான தீவிரப் போக்குடையவர்களை ஒடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கும், நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒரு ஒப்புதலை ஒட்டு மொத்தச் சமூகத்திடமிருந்து பெறுவதற்கும் சூஃபியிசம் X வஹாபியிசம் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைப்பதற்கும் இந்த நல்ல முஸ்லிம்கள் பயன்படுகின்றனர்.

முடிப்பதற்கு முன் ஒன்றைச் சொல்வது அவசியம். எல்லா ஷியாக்களும், எல்லா சூஃபிகளும் இப்படி மோடி அரசுக்கும், இந்துத்துவச் சக்திகளுக்கும் துணை போவதில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள சூஃபிகள், ஷியாக்கள் அப்படி பா.ஜ.கவினரின் கைப்பிள்ளைகளாக நடந்துகொள்வதில்லை. சில உதிரிகள் வேண்டுமானால் அப்படி இந்துத்துவச் சக்திகளுக்குத் துணை போகலாம். ஆனால் நாகூர் போன்ற பகுதிகளில் வாழ்கிற சூஃபியிசத்தை ஏற்றுக் கொண்ட சாதாரண மக்களும், சென்னை போன்ற இடங்களில் வாழ்கிற ஷியா முஸ்லிம்களும் பொதுவான முஸ்லிம் பிரச்சினைகளில் பெரும்பான்மை முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படுபவர்களாகவே உள்ளனர். எனினும் கிடைக்கிற கொஞ்ச நஞ்ச இப்படியான நல்ல முஸ்லிம்களைத் தம் நோக்கத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்துத்துவச் சக்திகள்.

பயன்பட்ட ஆக்கங்கள்

  1. Christophe Jaffrelot, Haider Abbas Risvi, “The Curious Friendship”, Indian Express, May 9, 2018
  2. Ashraf Kunnummal, Government Sponsored Sufism, Good and Bad Muslims, Rait, July 8, 2016
  3. Mahmood Mamdani, Good Muslim, Bad Muslim, America, The Cold War and the Roots of Terror, Pantheon, 2004,
  4. Fait Muediny, The Promotion of Sufiism in the Politics of Algeria, 2012, pdf
  5. நாதன் லீன், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், அடையாளம், 2018 (இந்நூலில் உள்ள அ.மார்க்சின் பின்னுரை).