கடந்த இரு மாதங்களாக எந்த இதழைத் திறந்தாலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகளும் கட்டுரைகளுந்தான் நிறைந்துள்ளன. தோன்றிய ஓராண்டுக்குள் இரு பெரும் கட்சிகளை வீழ்த்தி ஒரு மாநில ஆட்சியைப் பிடித்தது, ஏராளமான முக்கிய தலைகள் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி ஓடி வருவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக நம்பிக்கையுடன் அறிவித்திருப்பது என்பதெல்லாம் எல்லோரது புருவங்களையும் உயர்த்தியுள்ளன. இது எப்படி நிகழ்ந்ததென அரசியல் விமர்சகர்கள் வரிந்து வரிந்து எழுதித் தள்ளுகின்றனர்.
கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களில் ஆட்சியைப் பிடிப்பது என்பதெல்லாம் அப்படி ஒன்றும் இந்திய வரலாற்றில் புதிதல்ல, என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம், எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க, அஸ்ஸாம் கண பரிஷத் முதலியவை இந்தச் சாதனைகளைச் செய்துள்ளன. ஆனால் இவை யாவும் மாநில அளவுகளில் நடந்தவை. ஆம் ஆத்மி டெல்லி முதல் தமிழகத்தில் நமது சுப. உதயகுமார் வரை தன் வலையை விரிக்க முடிந்துள்ளதுதான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒட்டு மொத்தமாக இந்திய அரசியலில் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; ஊழல், வாரிசு அரசியல், சாதாரண மக்களை மதிக்காமை ஆகியவற்றால் ஆத்திரமுற்றுள்ள மக்கள் ஒரு மாற்று அரசியலை விரும்புகின்றனர்; அரசியல் விளையாட்டின் விதி முறைகளை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது, சாதாரண மக்களது பிரச்சினைகளை முன்நிலைப்படுத்தும் கட்சிகளுக்குத்தான் இனி எதிர்காலம் என்கிற ரீதியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து அரசியல் விற்பன்னர்களும் பத்தி எழுத்தாளர்களும் எழுதித் தள்ளுகின்றனர். “குறுகிய அடையாள அரசியலுக்கு” இனி காலமில்லை என்றும் பேசப்படுகிரது.
மக்கள் இன்றைய அரசியலில் சலிப்படைந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் ஒரு மாற்று அரசியல் சக்தியாக ஆம் ஆத்மி அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்பப் போகிறது?
அரசியல் கட்சிகள் இப்படிச் சாதாரண மக்களை முன்னிறுத்துவது புதிதல்ல. இந்தியா, சாதி ரீதியாக, மொழி நீதியாக, மத ரீதியாக, பொருளாதார ரீதியாக இப்படிப் பல மட்டங்களில் சாதாரண மக்கள் நிரம்பிய ஒரு நாடு. மாற்று அரசியல் கட்சிகளாக உருவெடுத்த எல்லாமே இப்படிச் சாதாரண மக்களை முன்னிறுத்திப் பேசித்தான் மேலுக்கு வந்தன. தேர்தலைச் சார்ந்து நிற்கும் கட்சிகள் எதுவும் சாதாரண மக்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க இயலும்? திராவிட இயக்கம் தமிழகத்தில் உருவானபோது அது பார்ப்பனரல்லாத மற்ற சாதாரண மக்களை முன் நிறுத்தியது. வட நாட்டில் லோகியா வழிக் கட்சிகள் இப்பபடி அமைந்தன. ஆனால் கூடிய விரைவில் இவர்களைக் காட்டிலும் சாதாண மக்கள் பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. தலித் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உருவாயின. பொதுவுடமைக் கட்சிகள் எப்போதுமே தொழிலாளர், விவசாயிகள், பழங்குடிகள் என அவை சாதாரண மக்களை மட்டுமே பேசின. அது மட்டுமல்ல இவைதான் முதன் முதலாகத் தாங்கள் சாதாரண மக்களுக்காக மட்டுமே நிற்பதாக வெளிப்படையாகச் சொல்லி களமிறங்கின.
எனில் ஆம் ஆத்மி கட்சி எந்த வகையில் சாதாரண மக்களை முன்வைப்பதால் தனித்துவம் பெறுகிறது? அக்கட்சி அப்படி என்ன ஆம் ஆத்மிகளின் பிரச்சினைகளை முன்வைக்கிறது? “ஊழல் என்பது எல்லா சாதாரண மக்களையும் பாதிக்கிறது, அந்த வகையில் சாதி, மத, இன, மொழி அடையாளங்களை எல்லாம் மீறி இம்மக்களை எங்களால் ஒன்றிணைக்க முடியும்” என்கிறார் கெஜ்ரிவால் (ஃப்ரன்ட்லைன், ஜன 24, 2014). ஆனால், சாதாரண மக்கள் கட்சி எனப் பெயரிருந்தாலும் இதில் உள்ள முன்னணித் தலைவர்கள் யாரும் கக்கனையோ, காமராஜரையோ இல்லை கருணாநிதியைப் போலவோ அப்படி ஒன்றும் சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்களல்ல; பெரும்பாலும் ஐ.ஏ.எஸ், அய்.பி.எஸ், முன்னாள் உயர் அதிகாரவர்க்கத்தினர், பேராசிரியர்கள் இப்படியான பின்புலமுள்ளவர்கள்தான்; நிதி அளிப்பவர்கள், தேர்தல் பிரச்சரத்திற்கு வந்தவர்கள் பட்டியலில் வெளிநாட்டு இந்தியர்கள் அதிகம்; ஊழல் நல் ஆளுகை முதலியவற்றைக் கோரி இவர்களுக்காகத் தெருவில் இறங்குபவர்கள் பெரும்பாலோர் 27 தள அடுக்குமாடிக் கட்டிடவாசிகள்தான் என்றெல்லாம் எழுகிற விமர்சனங்களை வெறும் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் சொல்லப்படுபவை என எளிதாக ஒதுக்கிவிட இயலாது.
இன்னொன்றையும் நாம் யோசிக்க வேண்டும். “சாதாரண மக்கள்” என்றாலே புரட்சிகரமானவர்கள் என்கிற ரீதியில் புனித பிம்பம் ஒன்றைக் கட்டுவது அபத்தம். கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது போல இட்லருக்கு வாக்களித்தவர்களும் அவரது ஏவலில் யூதர்களைக் கொன்று குவித்தவர்களும் சாதாரண மக்கள்தான், குஜராத்தில் மோடியின் கடைக்கண் வீச்சில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர்களும் சாதாரண மக்கள்தான், சாதாரண மக்களாயினும் சரியான அரசியல் மயமாகும்போதே மாற்றத்துக்குரிய சக்திகள் ஆகிறார்கள்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பேச்சுக்களைப் பார்த்தால் அவர்கள் “இன்றைய இந்திய அரசியலை” மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அரசியலையே வெறுக்கக்கூடியவர்களாகத்தான் தோன்றுகிறது. இக்கட்சியின் முக்கிய கருத்தியலாளரான பேராசிரியர் யோகேந்திர யாதவ். சி.என்.என் தொலைகாட்சிப் பேட்டியொன்றில், “20ம் நூற்றாண்டு அரசியல் சொல்லாடலான இடது / வலது என்கிற எதிர் முரணுக்கு இந்த நூர்றாண்டில் இடமில்லை” என்றார். கெஜ்ரிவாலும் இடது / வலது என்பதற்கெல்லாம் என்ன முக்கியத்துவம் என எனக்குத் தெரியவில்லை.: பிரச்சினைகளைக் கண்டு தீர்வு காண்பது மட்டுமே என் பார்வையில் உள்ளது” என்கிறார்.
பிரச்சினைகளின் பின்னாலுள்ள அரசியலைப் பார்க்காமல் எப்படிப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும்? டெல்லியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது, இலவசமாகத் தண்ணீர் வழங்குவது என்கிற இரு பிரச்சினைகளை ஆம் ஆத்மி எடுத்தது. டெல்லியில் இப்படி மின்சாரக் கட்டணம் அதிக அளவில் இருப்பதற்கு மின்சார வினியோகம் தனியார் மயப் படுத்தப்பட்டதுதான் முக்கிய காரணம். பில்லியன் கணக்கில் மெகா ஊழல்கள் நடப்பதெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாமல் சந்தையை பன்னாட்டு மூலதனத்திற்குத் திறந்து விட்ட பின்புதான், இது குறித்தெல்லாம் அரசியல் ரீதியான அணுகல்முறைகளை உருவாக்காமல் அப்போதைக்கப்போது முடிவெடுப்பது (adhochism) எப்படிச் சரியாக இருக்க முடியும்?
கருத்தியலின் காலம் முடிந்துவிட்டது; தலித், பிற்படுத்தப்பட்டவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்கிற அடையாள அரசியலுக்கு இனி இடமில்லை: காரியம் நடக்க வேண்டும், இதுதான் எங்கள் கொள்கை என ஆம் ஆத்மி கட்சியினர் மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே சொல்கிறார்கள். மேலே குறிப்பிட்ட ஃப்ரன்ட்லைன் நேர்காணலை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். தலித், ஆதிக்க சாதி, இந்து, முஸ்லிம், ஏழை, பணக்காரர் எல்லோரையும் ஊழல் எதிர்ப்பு என்கிற அம்சத்தில் ஒன்றாக்கி விடுவோம் என்கிறார் கெஜ்ரிவால், தமிழன், ஈழம் என்றெல்லாம் சவடால் அடிப்பவர்களே பரமக்குடி, தருமபுரி என வருகிறபோது உடைந்து சிதறி விடுகிறார்கள். ஊழலைப் பிரச்சினையாக்கி எவ்வாறு எல்லோரையும் ஒன்றாக்கப் போகிறார் கெஜ்ரிவால்?
கருத்தியல் அல்ல, ஊழல் மர்றும் காங்கிரஸ் எதிர்ப்புதான் முக்கியம் என்று “மாற்று அரசியலை” முன் வைத்த ஆனானப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், வி.பி.சிங் எல்லோரது கதியும் என்னாயிற்று? கருத்தியலைக் கண்டுகொள்ள வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ்சை அணைத்துக் கொண்டார்கள். அது அவர்களுக்குத்தான் இழப்பாக முடிந்தது. இந்துத்துவ அரசியலுக்கே அது வலு சேர்த்தது, ஜெயப்பிரகாசரின் நவநிர்மாண் இயக்கத்தின் மூலமாக மேலுக்கு வந்தவர்தானே நரேந்திர மோடி.
சரி, ஆம் ஆத்மி கட்சி மாற்று அரசியல் என்கிற முழக்கத்துடன் இன்று மேடை ஏறியுள்ளது. நிச்சயமாக இன்றைய அரசியலை மாற்றித்தான் ஆக வேண்டும் என்கிற நாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனக் காது கொடுத்துக் கேட்பதுதான் முறை. அதோடு இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளவர்களுக்குக் கொஞ்சம் கால கெடு கொடுத்து விமர்சிப்பதுதான் பண்பாடும் கூட, அவர்களின் வருகையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள இயலும், நம்முடைய அநுபவங்களிலிருந்து நாம் அவர்களுக்கு என்ன சொல்ல இயலும் என்பதை மட்டும் பார்ப்போம்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தல் (2009) முடிவுகளை ஆய்வு செய்து நான் ‘மக்கள் களத்தில்’ எழுதிய கட்டுரையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்வியையும் நிதிஷ் குமாரின் வெற்றியையும் ஒப்பிட்டு “நல் ஆளுகை” என்கிற முழக்கத்தை நோக்கி இந்திய அரசியல் நகர்வது குறித்துக் கவனத்தை ஈர்த்திருந்தது நினைவிருக்கலாம். ஆம் ஆத்மி அதையே முழக்கமாக்கித் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியுள்ளது என்றால் இன்னொரு பக்கம் நரேந்திர மோடி வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம், வலிமையான இந்தியா என்கிற சொல்லாடல்களை விரிக்கிறார். நிதிஷ் குமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நல் ஆளுகை என்பதை முன்வைத்துக் காய்களை நகர்த்தி அடையாள அரசியல் பேசிய லாலு பிரசாத் யாதவை இல்லாமல் ஆக்கினார். காங்கிரசும் இப்போது உணவு உரிமைச் சட்டம், கல்வி, தகவல் உரிமைச் சட்டங்கள், பொருளாதாரச் சீர்திருத்தம். மகாத்மா காந்தி வேலைத் திட்டம் என்பவற்றை முன் நிறுத்திப் பார்க்கிறது.
இந்த இடத்தில் நாம் அடையாள அரசியலுக்கு ஏற்பட்ட சரிவைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தலித், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை அடையாளங்களுடன் வெளிப்போந்த கட்சிகள் இயக்கங்கள் எல்லாம் இன்று பொலிவிழந்து நிற்கின்றன. பிற வெகு மக்கள் கட்சிகளில் உள்ள ஊழல்கள் அத்தனையும் இன்று அவற்றுக்குள்ளும் உள்ளன. இது நாள் வரை மற்றவர்கள் செய்து வந்தார்கள், நாங்கள் செய்ய வரும்போது குற்றம் சொல்கிறீர்களே என இதற்கொரு தத்துவ நியாயங்கள் வேறும் முன்வைக்கப்பட்டன. மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகமான தலைவர் வழிபாடு, குடும்ப அரசியல், கட்டப் பஞ்சாயத்து. குறுகிய அரசியல் பலன்களுக்காக முறையற்ற கூட்டணிகள் அமைப்பது (எ.காட்டாக மாயாவதி பகுஜன்னைச் சர்வஜன் ஆக்கிப் பார்ப்பனர்களை உள் இழுத்துக் கொண்டது, பா.ம.க இந்துத்துவத்தின் பக்கம் சாய்வது) இறுக்கமான அடையாளக் கட்டமைப்புகளின் விளைவாக உட்பிரிவு மோதல்களை ஏற்படுவது, எளிதில் ஊழல் வயப் படுவது…… என நிறையச் சொல்லலாம். இந்த இயக்கங்கள் அடையாளங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளுக்குக் கொடுக்காதது கவனத்திற்குரியது. தாங்கள் தவறாகச் சித்திரிக்கப் படுவதாகக் கருதப்படும் ஒரு சினிமா அல்லது புத்தகத்திற்குக் காட்டப்படும் எதிர்ப்பு தமது மக்கள் தாக்கப்படும்போதும், பாதிக்கப்படும்போதும் காட்டப்படுவதில்லை என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல இயலும். தமிழக அரசு ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்காததையோ, தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையையோ முன் வைத்து தமிழக அளவிலும் இந்திய அளவிலும் போராட்டங்கள் எதையும் இவர்கள் எடுக்க முயலவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு.
எனினும் நாம் இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தியா பல இனங்கள், சாதிகள், மதங்கள் உள்ள ஒரு பன்மைப் பூமி. இங்கு இந்த அடிப்படையில் எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. இந்தச் சூழலில் ஆளுகை என்பது வெறும் வளர்ச்சி மற்றும் உற்பத்திப் பெருக்கம் சார்ந்து மட்டும் இருக்க இயலாது. வளர்ச்சி ஏற்பட்டால் தானாகவே மற்ற எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிய காலம் மலையேறி விட்டது. எத்தனைதான் அடையாள அரசியலில் மேலே குறிப்பிட்ட தவறுகள் மலிந்திருந்தாலும், அவற்றின் ஊடாக இதுகாறும் ஒடுக்கப்பட்ட, அடையாளம் மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் உரிய முக்கியத்துவம் பெறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தது போல அவர்கள் மீதான தாக்குதல்களை இன்று அப்படி ஒன்றும் மறைத்துவிடவோ, காரணமானவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துவிடவோ இயலாது ஏற்கனவே இது தொடர்பான பல சட்டங்களிருந்தும், அவற்றால் சாதிக்க இயலாதவற்றை இன்று உருவாகியுள்ள இந்த அடையாளப் பிரக்ஞைதான் சாத்தியமாக்கியுள்ளது.
தவிரவும் இன்று “வளர்ச்சி”, “ஊழலின்மை” “நல் ஆளுகை” பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் இந்த அடையாளங்களுக்கு முற்றிலும் அப்பார்பட்டவர்களல்ல. மோடி சொல்லும் வளர்ச்சி முஸ்லிம்களை விலக்கிய வளர்ச்சிதான். கெஜ்ரிவாலின் அரசியல் ஒரு வகை மத்தியதர வர்க்க மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறது. இரு வாரங்களுக்கு முன் டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பாரதி டெல்லியிலுள்ள கிர்கி பகுதியில் ஆப்ரிக்கக் கருப்பினப் பெண்களை இனவெறி நோக்கில் பேசி அவமானப்படுத்திய பிரச்சினையில் டெல்லியின் மத்தியதர வர்க்க மக்கள் மத்தியில் நிறைந்துள்ள இன வெறுப்பு அப்படியே வெளிப்பட்டதைப் பார்த்தோம்.
எப்படி இருந்தபோதும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பின் அடிப்படையில் கீழ்க்கண்ட பாடங்களை காங்கிரசும் பா.ஜ.கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் எழுதுகின்றனர். அவை: 1) அரசியலில் எளிமை, 2) சாதாரண மக்களை மதித்தல் 3) அரசியல் முடிவுகளிலும் நிதி வரத்துகளிலும் வெளிப்படைத் தன்மை, 4) வாரிசு அரசியலுக்கு முழுக்கு, 5) ஊழலற்ற அரசியல் மற்றும் ஆளுகை ஆகியன. இவை ஒரு ஜனநாயக அரசியலுக்கான அடிப்படைகள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இவை இன்றைய அரசியலில் வெளிப்படவில்லை என்பதும் உண்மைதான். இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியது காங்கிரசும் பா.ஜ.கவும் மட்டுமல்ல, இங்குள்ள அடையாள அரசியல் இயக்கங்களுந்தான்.
காங். பாஜக, மற்றும் அடையாள இயக்கங்கள் இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், வளர்ச்சி மற்றும் நல் ஆளுகை பற்றிப் பேசினால் போதும் என்கிற ஆம் ஆத்மி கட்சியும் வரலாற்றிலிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது பல் இன, மொழி, சாதி, மத மக்கள் வசிக்கும் நாடு; தலித்கள், சிறுபான்மையோர் முதலான ஒடுக்கப்பட்ட பிரிவினரும் உள்ள நாடு. கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட அடிப்படை வர்க்கத்தினர் மலிந்த நாடு. எந்த ஊழலற்ற ஆட்சியும் வளர்ச்சியை முன் நிறுத்தும் ஆளுகையும் இந்த எதார்த்தங்களைக் கணக்கில் கொண்டதாக, இவர்களை உள்ளடக்கியதாக இருந்தாக வேண்டும் என்பதுதான் அந்தப் பாடம்.