அண்ணாவின் அரசியல் 

அண்ணா பெரியாரிடமிருந்து விலகிய புள்ளி..

இறை மறுப்புக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய புள்ளிகளில்தான் அண்ணா பெரியாரிடமிருந்து விலகினார் என்று கூறுவது வழக்கம்.

உண்மைதான். ஆனால் மேலோட்டமாக இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட இயலாது.

ஒரு கால மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக அண்ணா உணர்ந்தார். இந்த மாற்றத்தை நுணுக்கமாகக் கையாண்டு பெரு வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் விளைவுகள் மக்களைப் பொருத்தவரை எப்படியாக இருந்தன என்பது வேறு விடயம். அண்ணாவைப் பொருத்த மட்டில் மிகத் துல்லியமான வெற்றியை அவரது அணுகல்முறை ஈட்டித் தந்தது.

1955 மே 22 முதல் 1969 ஜனவரி 12 வரை- அதாவது இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு வரை அவர் “தம்பிகளுக்கு” எழுதிய 289 கடிதங்கள் அண்ணா எவ்வாறு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார் என்பதற்குச் சான்றுகளாக நம்முன் இன்று கிடக்கின்றன.

உலக அளவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில்தான் அண்ணாவின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவு, இந்தியா போன்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் முடிந்து நாடுகள் சுதந்திரம் அடைச்த சூழல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீனமும் ஏகாதிபத்தியச் சார்பு அரசுகளை வீழ்த்தி சோஷலிச மாற்று ஒன்றை முயற்சிக்கத் தொடங்கிய நிலை என்பதாக உலகமே போராட்டங்கள் எல்லாம் முடிந்ததாகக் கருதிச் சற்றே இளைப்பாரத் தொடங்கிய தருணம் அது.

இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்தி அதிகாரத்தை எட்டுவதற்கு உரிய அரசியலை அண்ணா தேர்ந்தெடுத்தது இருக்கிறதே.. அற்புதம்.

அண்ணா கண்ட “எதார்த்தம்..”

1955 ல் ஒரே நேரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளை தம்பிகளுக்கு முன் juxtapose பண்ணி தம்பிகளை அசத்துவார் அண்ணா (22ம் கடிதம்). அவை:

நிகழ்வு 1: “ஆரியரை நடுத்தெருவில் போட்டு அடி அடி என்று அடித்தாலும் கேட்க நாதியில்லை” என்றொரு வாசகம் பெரியாரின் ‘விடுதலை’ இதழில் வருகிறது.

நிகழ்வு 2: தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக ஒரு சுவரொட்டி வெளியிடுகிறது. சிண்டும் பூணூலும் அணிந்த ஒரு நபர் தீண்டாமையைக் கடைபிடிப்பதாக அதில் ஒரு படம். இதைக் கடுமையாகப் பார்ப்பனர்கள் எதிர்க்கின்றனர். ‘இந்து’ இதழ் கண்டிக்கிறது. தமிழக அரசு பின்வாங்குகிறது. அந்தச் சுவரொட்டி வாபஸ் பெறப்படுகிறது.

‘இன்றைய எதார்த்தம்’ என இரண்டாவது நிகழ்வை முன்வைக்கும் அண்ணா, பெரியார் இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவிலை எனச் சொல்லி, எடுத்துக் காட்டாக முதல் நிகழ்வைத் தம்பிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

“ஆரியம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் ஆரியம் ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினருடனும் இன்னும் பெருமளவுக்கு இருப்பதாலும், ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதாலும் தான்….தம்பி ! கழகம் ஆரியரை ஒழித்திடும் வேலையில் இல்லை. ஆரியத்தை ஒழித்திடும் வேலைகளில் ஈடுபடுகிறது. நாம் ஆரியத்தை அறிவுச் சுடரால் அழித்தொழிக்க வேண்டும்” – என்பார் அண்ணா.

அதாவது பெரியார் ஆரியர்களை, அதாவது பார்ப்பனர்களை நேரடியாக எதிர்க்கிறாராம். இவர்கள் ஆரியரை எதிர்க்காமல் ஆரியத்தை எதிர்க்கின்றனராம்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழக மக்களை ஆரியர், சூத்திரர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், தேவதாசிகள் என்பதாக அடையாளம் கண்டதை அண்ணாவின் அரசியல் சற்றே ஒதுக்கி “வரம்புகளற்ற ஒரே தொகுதியாக” ‘தமிழர்’ எனும் அடையாளத்தைக் கட்டமைக்கிறது. முகத்திற்கு முகம் என்கிற அடையாளத்தைத் தாண்டிய ஒரு இணைவை (solidarity) முன்வைக்கும் நுணுக்கமான ethnic politics ஒன்றை அண்ணா முன்வைத்தார். ‘திராவிடம்’ என்பது கட்சிப் பெயரில் இருந்த போதும் தி.மு.கவின் அரசியல் என்பது “தமிழர்” என்கிற அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒருபடித்தான ஒரு கற்பனைச் சமூகத்தையே முன்வைத்தது. தனது தேர்தல் அரசியலுக்கு அதுவே உகந்தது என்பதை அண்ணா சரியாக அடையாளம் கண்டார். தம்பிகளும் அவரை அறிஞராக, பேரறிஞராக ஏற்றுப் பின் தொடர்ந்தனர்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

பெரியார் நடத்திய போராட்டங்களை அண்ணா எதிர்கொண்ட விதம் அவரை மட்டுமல்ல இன்றைய தமிழகத்தின் நிலையையும் புரிந்து கொள்ள உதவும்.

1947 சதந்திர நாளையும், 1950 குடியரசு நாளையும் பெரியார் துக்க தினங்களாக அறிவித்தார். இந்தி எதிர்ப்பிற்காகவும் வகுப்புரிமைக்காகவும் தேசியக் கொடியையும் (1955), தேசப் படத்தையும் (1960) எரித்தார். உச்சநீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றமாக அடையாளம் காட்டி (1964) தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்களை நிகழ்த்தினார். தமிழர்களைக் கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னார் (1966)….

இந்தப் போராட்டங்கள் எதிலும் அண்ணா கலந்து கொள்ளவில்லை என்பதை அறிவோம். இவற்றிற்கு அண்ணா காட்டிய எதிர்வினைகள் நினைவிருக்கிறதா?

பதிலாகத்தான் அண்ணா குடிமக்களுக்குரிய “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றை வற்புறுத்தினார். சுதந்திரதினத்தை “இருநூற்றாண்டுப் பழி தீர்த்த நாள்” என்றார். “மகத்தான சம்பவம்” என்றார். “உலகம் முழுதும் கூர்ந்து கவனிக்கும்” ஒரு நிகழ்வை “நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ உதாசீனம் செய்வதோ கூடாது” என்றார். அண்ணாவைப் பொருத்த மட்டில் கொள்கை அல்ல பொது மனநிலையே முக்கியம். அதற்கிசைய நோகாமல் அரசியலைச் செய்வதே குறிக்கோள்.

பெரியார் மூவண்ண தேசியக் கொடியை எரித்தார். அண்ணாவோ “யூனியன் ஜாக்” பறந்த இடத்தில் “நமது கொடி” பறக்கிறது என்றார். “நமது நாட்டுத் தூதுவர்கள் உலகின் பல பாகங்களில் உலவுகின்றனர்” எனத் தம்பிகளுக்கு ச் சுட்டிக் காட்டினார்.

“நமது” நாடு, “நமது” கொடி முதலிய சொற்களைக் கவனியுங்கள். இவை எல்லாம் அண்ணா ‘திராவிடநாடு’ கோரிக்கையைக் கைவிடுமுன் சொன்னவை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியாரின் திட்டம் திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதல்ல“- அண்ணா

இது போராட்டங்களின் காலம் அல்ல. அறுவடை செய்யும் காலம் என்பதை அண்ணா தம்பிகளின் மனத்தில் ஆளப் பதித்தார்.

இந்தி எதிர்ப்பு முதலான பிரச்சினைகளில் இரட்டைக் குழல் துப்பாக்கியாகப் பெரியாருடன் இணைந்து செயல்படுவதாக அண்ணா அறிவித்திருந்த போதும், பெரியாரின் பொது அழைப்பையும் மீறி அண்ணா பெரியாரது கொடி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனது 11 ம் கடிதத்தைக் கேள்வி பதில் வடிவத்தில் அமைத்த அண்ணா இது குறித்துத் தம்பிகளுக்கு எழும் அய்யங்களை தனக்கே உரித்தான தளுக்குடன் மறுத்தார். அண்ணா சொன்னது இதுதான்:

“பெரியார் நம்மை நேரடியாக அழைக்கவில்லை. அழைக்காதபோதும் நோக்கம் சரி என்பதற்காக அதில் கலந்து கொள்ள இயலாது. நாம் இப்போது ஒரு அமைப்பாகி விட்டோம். நமக்கென்று ஒரு பொதுச் செயலாளர், பொதுக்குழு.. இப்படியெல்லாம் இருக்கிறது” என்றெல்லாம் அண்ணா வித்தாரமாகச் சொல்லிக் கொண்டு வரும்போதே பூனைக்குட்டி வெளியே குதித்து விடுகிறது.

“கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ்காரர்களையும் நம் பக்கம் சேர்க்கும்படியாக இருக்க வேண்டும். கொடி கொளுத்துவது போன்ற போராட்ட முறை மூலம் காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டு விடும்”

ஆக போராட்டம் தேவை இல்லை என்பது மட்டுமல்ல. இந்த வடிவங்கள் அறவே கூடாது என்பதும்தான் அண்ணாவின் கருத்து.

‘வீரம்’, ‘காதல்’ என்பவற்றுக்கெல்லாம்
எல்லாச் சூழலுக்குமான பொது அளவுகோல்கள் கிடையாது; ஒரு சூழலில் வெற்றி ஈட்டித் தரும் ஒரு வீரச் செயல் இன்னொரு சூழலிலும் வெற்றி ஈட்டித் தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை எனச் சொல்லும் அண்ணா (கடிதம் 13),
இப்படிச் சொல்வதால் தனக்குக் கோழை பட்டம் வந்தால் பரவாயில்லை என்கிறார்.

“நான் கோழை என்றால், என்னைப்போலவே கோழைகள் நிறைந்த திராவிட சமுதாயத்திற்கு ஏற்ற திட்டத்தை அல்லவா பெரியார் வகுத்திருக்க வேண்டும்” – எனப் பெரியாரை அண்ணா மடக்கும்போது அவரது சாமர்த்தியத்தைக் கண்டு நம்மால் புன்முறுவலிக்காமல் இருக்க இயலாது.

தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் எரிப்பு என்பதெல்லாம் வெள்ளையருக்கு எதிராக காங்கிரஸ்கார ர்கள் நடத்திய போராட்டம் எனச் சொல்லும் அண்ணா, இன்று அவை பொருந்தாது; “ராஜதந்திரம்” போதும் என்பார். அதாவது தேர்தல் அரசியலுக்குரிய ராஜதந்திரம்.

பார்ப்பனீயத்தின் ‘ஸ்லீப்பர் செல்’ லாக விளங்கிய ம.பொ.சியுடன் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு (பிப் 20,1956) அண்ணா இசைவார். வேறு சில இயக்கங்களும் அந்தக் கூட்டில் இருந்தன. ‘ரயில் மறியல்’ என்பது கூட்டு முடிவு என்பதால் அண்ணா அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்கு அண்ணா கொடுக்கும் அழுத்தம் இருக்கிறதே தா..ங்க முடியாது.

“அமைதி அமைதி என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம். பலாத்காரம் கூடவே கூடாது எனப் பன்னிப் பன்னிக் கூறுகிறோம்….. ரயில்களைத் தடுத்து நிறுத்துவதா என்று கேட்கிறார்கள் நம் கழகத் தோழர்கள். தம்பி! இது சர்வ கட்சிக் கூட்டணி. தி.மு.க மட்டும் நடத்துவதல்ல. எனவே பணியாற்றச் செல்லாதீர்கள் எனப் பாட்டாளிகளை வேண்டிக் கேட்டுக் கொள்வது. அன்று மட்டும் பயணப் படாதீர்கள் எனப் பொது மக்களை வேண்டிக் கொள்வதும் மட்டுந்தான் நான் கையாள வேண்டிய முறையே தவிர தண்டவாளத்தில் படுப்பதோ, சங்கிலியைப் பிடித்து இழுப்பதோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறோம்..”

தென்னாட்டு பெர்னாட்ஷா எனக் கல்கி அண்ணாவுக்குப் பட்டம் அளித்துப் பாராட்டியது நினைவிருக்கலாம். அண்ணாவின் இந்த உரை கல்கிக்கு நினைவிருந்திருந்தால் ஒரு வேளை “தமிழ்நாட்டுக் காந்தி” என்றே அவருக்குப் பட்டம் அளித்திருப்பார்.

தம்பி ! மனையில் மகிழ்ந்திரு

நாட்டுப் பிரிவினை உட்பட எல்லாக் கோரிக்கைகளையும் சட்டசபை நுழைவு மூலமே சாதித்துவிட இயலும் என்கிற எண்ணத்தைத் தம்பிகள் மத்தியில் படிப்படியாகப் பதிய வைக்கத் தனது கடிதங்களை வெற்றிகரமாகக் கையாண்டார் அண்ணா.

“நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக் கொண்டு , நமது நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளப் பெற்று அரசியல் கழைக் கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்து காட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணிகளின் மூலம் பெற்று, ஒரு பொதுத்தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக் கொண்டு , ஒரு பதினைந்து பேர் கோட்டைக்குள் நிறைந்திடத் தக்க நிலையும் பெற்றுள்ளோம்” (கடிதம் 90)

-இது அவர் 1957 தேர்தல் சாதித்த வெற்றி பற்றிக் கூறியது.

93ம் கடிதத்தில் அவர் இதை இன்னும் வித்தாரமாக மொழிவார். அவரளவுக்கு மொழியை விரயம் செய்ய இங்கு இடமில்லை என்பதால் சற்றே சுருக்கி அவர் சொன்னதை இங்கு வைக்கிறேன்.:

“சட்டசபைக்கு வெளியே எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேலை கொடு என சோஷலிஸ்டுகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிடுக்கிறார்கள். ஊதியம் உயர்த்து என தபால் தந்தி ஊழியர்கள் போராடுகின்றனர். ஆகஸ்டுக்கு ஆகஸ்டு வர்ணாசிரமத்தையும் மற்றவற்றை யும் எதிர்த்து பெரியார் அறப்போர்களை நடத்திக் கொண்டுள்ளார். ஆனால் நம்முடைய கருணாநிதி அன்று அமைச்சர் பக்தவச்சலனாரைக் கல்லணையில் சந்தித்து நங்கவரம் பண்னைப் பிரச்சினையைத் தீர்த்தார். சத்தியவாணிமுத்து அமைச்சர் லூர்து அம்மையாரை தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்தும், நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண ஏற்பாடு செய்தும் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம். இவைகள் யாவும் நமது, கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்சிகள்”

-இது அவர் ஒரு முழுப் பக்கத்தில் சொல்லியுள்ளதை அவரது வார்த்தைகளிலேயே, ஒன்றும் விடுபடாமல் சுருக்கித் தந்துள்ளது.

கூலி உயர்வு, வேலை கொடு என எதற்கும் வீதிக்குக் கூட வராதீர்கள். ஓட்டுப் போட்டு எங்களை சட்டசபைக்கு அனுப்புங்கள். வாக்குப் பெட்டி ஒன்றே போதும் வேறு எதுவும் வேண்டாம்…..

இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் திமுகவினர்.

புதிய ஜனநாயகம் பற்றி அண்னா சொன்ன விளக்கத்தை யாராவது மாஓ வைப் படித்தவர்கள் படிக்க நேர்ந்தால் அதிர்ச்சியில் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

1957ல் ஈழத் தமிழர்கள் ஏதோ ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்றதைச் சுட்டிக் காட்டிக் கடிதத்தை முடிக்கும் அண்ணா, “ஆகஸ்டு இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் தம்பி” என்பார். “ஆகஸ்டு” (போராட்டம்) என்பது பெரியார் முதல் காந்தி வரை ஒரு கிளர்ச்சியின் குறியீடு. அண்ணாவைப் பொருத்த மட்டில் காந்தியின் கதை பழைய கதை. பெரியாரின் கதை காலத்திற்கு ஒவ்வாத கதை.

ஆகஸ்டுகள் இல்லாமலே வெல்வதுதான் அண்ணாவின் வெற்றிக் கதை.

சரி. போராட்டம் மற்றும் இதர பணிகள் ஏதும் இல்லையென்றால் தம்பிகள் என்னதான் செய்ய வேண்டுமாம்.

95ம் கடிதத்தில் அண்ணா சொல்வார்:

“தம்பி ! மனையில் மகிழ்ந்திரு. பெற்றோருக்குப் பெருமை தேடிடு. உற்றார் உறவினரை உவகை கொள்ளச் செய்! ஊருக்கு உழைத்தலில் இன்பம் பெறு. விழி புகுந்து உன் நெஞ்சில் உறையும் உன் இனியாளைக் கண்ணெனப் போற்றிடு ! கன்னல் மொழிக் குழந்தைகளைக் கற்றோராக்கு! தமிழ் மணம் கமழ வழிகாண்பாய், தம்பி! தமிழன் என்றோர் இனம் உண்டு ! தனியே அவர்க்கோர் குணம் உண்டு!”

தம்பிகள் பாக்கியசாலிகள். யாருக்குக் கிடைப்பர் இத்தகைய பொன்னான தலைவர்….

# # #

(முடியவில்லை. சிறிது இடைவெளி விட்டுப் பின் தொடர்கிறேன். சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன் (செப் 2017) புதுச்சேரி PILK நிறுவனத்தில் நான் “அண்ணாவின் கடிதங்கள்” எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் (க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு) ஒரு பகுதி இது . சுருக்கியும். ஆய்வுக் கட்டுரைக்குரிய நடையைச் சற்றே தளர்த்தியும் இங்கு தந்துள்ளேன். சொற்பொழிவின் ஒரு பாதியில் சொன்னவற்றின் சில துளிகள் இவை. )