பல்கலைக் கழகம் என்பது…..     

(சென்ற ஆண்டு டெல்லி  JNU பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது எழுதப்பட்டு ‘விகடன் தடம்’  இதழில் வெளிவந்தது)

இந்தியாவிலேயே சிறந்த ஐந்து பல்கலைக் கழகங்களில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளன என்று மனித வளத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த இரண்டு பல்கலைக் கழகங்களையும் மூட வேண்டும் என இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார் இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்குபெற்ற ஷெஹ்லா ரஷீத். இவர் இன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர்.

இது மிகப் பெரிய முரண்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணங்களால் இப்பல்கலைக் கழகங்கள் முதன்மையாக விளங்குகின்றனவோ அதற்கு அடிப்படையாக இருப்பவைதான் இவற்றை மூட வேண்டும் எனச் சொல்கிறவர்களின் கண்ணை உறுத்துபவையாகவும் உள்ளன.

ஏராளமான ஆய்வுகள் வெளி வருவது, இப்பல்கலைக் கழகங்களிலிருந்து படிப்பை முடித்துச் சென்றவர்கள் உலகெங்கிலும் முக்கிய பொறுப்புகளில் விளங்குவது ஆகியவற்றின் அடிப்படையில்தான் இவை முதன்மையான பல்கலைக் கழகங்கள் என மதிப்பிடப்படுகின்றன.

எப்போதும் அரசியலும், மோதல்களும், கருத்து மாறுபாடுகளும் உரத்த குரலில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பல்கலைக் கழகங்கள் எப்படி கல்வியிலும் ஆளுமை உருவாக்கங்களிலும் முன்னிலை வகிக்கின்றன?

கருத்து மாறுபாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும், முன்னோர்கள் எத்தனை மேதைகள் ஆயினும் அவர்களின் முடிவுகளைக் கேள்வி கேட்கும் மனநிலையும்தான் அறிவு வளர்ச்சியின் ஆதாரம்; கண்டுபிடிப்புகளின் தாய். மரத்திலிருந்து விழுந்த ஆப்பிளைப் பார்த்துவிட்டு அது அப்படித்தான் விழும் என நினைத்துக் கொண்டு போயிருந்தால் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்திருக்க இயலாது. ஏனெனில் அவருக்கு முந்திய “சுதந்திர வீழ்ச்சிக் கொள்கை” (Free Fall Theory) அப்படித்தான் சொல்லி யிருந்தது. ஆனால் நியூட்டன் அதை ஏற்கவில்லை. “எல்லாப் புதிய கோட்பாடுகளும் ஏற்கனவே உள்ள கோட்பாடுகளுடன் பொருந்திவர வேண்டும்” (consistency condition) என்கிற விதியை அவர் மீறினார். புதிய தத்துவம் நமக்குக் கிடைத்தது.

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்பியல் கண்டுபிடிப்புகளான ஈன்ஸ்டினின் சார்பியல் கொள்கை, டீ ப்ராக்லியின் பொருட்களின் இருமைப் பண்புக் கொள்கை, ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கொள்கை என அனைத்தும் இப்படியான ஒரு ‘அராஜகச் சிந்தனை முறை’யின் (anarchist method) விளை பொருட்கள்தான் என்பார் Against the Method எனும் முக்கிய நூலாசிரியர்  பால் ஃபெய்ராபென்ட்.

ஆம், கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரச் சிந்தனைகளும், கருத்து மோதல்களும் மிக மிக அடிப்படையாக உள்ளன. நமக்கு மேலை நாடுகளின் அரசியலில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்குள்ள பலகலைக் கழகங்களின் செயல்பாடுகள் நிச்சயமாக நாம் பின்பற்றத் தக்கவையாக உள்ளன என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடுகள் இருக்க இயலாது. அவற்றிடமிருந்து நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பண்பு என்னவெனில் அங்கு பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முழுமையான சுதந்திரம்தான். பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மட்டுமல்ல, அவற்றுக்குள் நிலவும் சுதந்திரமும்தான்.

அதனால்தான் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அங்கிருந்துதான் வருகின்றன. நவீன சிந்தனையாளர்களாக அறியப்படும் மிஷேல் பூக்கோ, ரோலான் பார்த்ஸ், ஹேபர்மாஸ் என யாரை எடுத்துக் கொண்டீர்களானாலும் இந்தப் பல்களைக் கழகங்களிலிருந்து வெளிப் போந்தவர்கள்தான். நோபல் பரிசுகளை அள்ளிக் குவிப்பவர்களும் இங்கிருந்து முளைத்தவர்கள்தான்.

எத்தனையோ செல்வ வளம் இருந்தும் சவூதி அரேபியாவிலிருந்தோ இல்லை ஒற்றைச் சிந்தனையை வலியுறுத்தும் ஏனைய நாடுகளிலிருந்தோ இப்படியான சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், கண்டுபிடிப்புகள் உருவாகாதது ஏன்? ஏனெனில் இங்கெல்லாம் பல்கலைக் கழகங்களுக்கும், பல்கலைக் கழகங்களுக்குள்ளும் சுதந்திரம் இல்லை என்பதுதான்.

பல்கலைக் கழகங்கள் என்பன மடங்களோ, மதரசாக்களோ, ‘செமினரி’களோ அல்ல. அவை ஒற்றைச் சிந்தனைகளைப் பயிற்றுவிக்கும் மையங்கள் அல்ல. அவை பல்வேறு கருத்துக்களும் மோதும் களம். அங்கே மாணவர்கள் சரியாக மட்டுமல்ல தவறாகச் சிந்திக்கவும் உரிமை உடையவர்கள்.

1807 -10 காலகாட்டத்தில் உருவாக்கப்பட்ட பெர்லின் பல்கலைக் கழகம்தான் உலகின் நவீன பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் முன்மாதிரி. இதற்கான முன்வரைவை உருவாக்கும் பணி கல்வி அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பை ஃபிச்டே, ஷ்லெர்மேயர் என்கிற இரண்டு தத்துவவியலாளர்களிடம்தான் அன்றைய பிரஷ்ய அரசு அளித்தது. அவர்கள் தனித் தனியே இரு வரைவுகளைத் தந்தனர். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இன்னொரு தத்துவ ஞானியான வில்லியம் வான் ஹம்போல்டிடம் அளிக்கப்பட்டது. அதிகத் தாராளவாதப் போக்குடன் அமைந்த ஷ்லெர்மேயரின் வரைவை அவர் தேர்வு செய்தார்.

அவை வழங்கிய பட்டங்கள் ‘இளங்கலை அறிவர்’ (Bachelor of Arts). முதுகலை அறிவர் (Master of Arts), தத்துவ முனைவர் (Doctor of Philosophy – Ph.D) என்கிற பெயர்களில்தான் அளிக்கப்பட்டன. இன்றளவும் இயற்பியல் அல்லது வேதியலில் முனைவர் பட்டம் பெறுபவர்களும் கூட ‘தத்துவ முனைவர்’ (Ph.D) என்றுதான் பட்டம் வழங்கப்படுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? பல்கலைக்கழகங்கள் என்பன தொழில் திறன்களை உருவாக்கும் பட்டறைகள் (skill factories) அல்ல. அவை முழுமையான மனிதனை உருவாக்குபவை. அதனால்தான் அறிவியல் படிக்கும் ஒருத்தி தொல்காப்பியத்தையும், ஷேக்ஸ்பியரையும், நவீன இலக்கியங்களையும் படிக்க வேண்டி இருக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் கூட 1960கள் வரை விஞ்ஞானம் படிப்பவர்களும் கூடபொருளாதாரம் அல்லது அரசியல் என்பதுபோல ஏதேனும் ஒரு கலைப்பாடத்தையும் (humanities) கட்டாயமாகப் படிக்க வேண்டி இருந்தது.

ஆனால் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தையும். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தையும் மூடச் சொல்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவற்றை வெறுமனே திறன் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு சென்னை ஐஐடி யில் செயல்பட்ட ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்’ தடை செய்யப்பட்டபோது இவர்கள் என்ன சொன்னார்கள்? “இப்படியாகச் சிந்திக்கிற எல்லோரும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட  கலைத்துறைப்  பாடங்களுக்கான ஐந்தாண்டு பட்டப் படிப்பை’ப்  படிப்பவர்கள்தான். அங்கே சமூகவியல், சமூக மானுடவியல் மற்றும் ‘பன்மை ஒழுங்கு அணுகல் முறை’ (inter-disciplinary approaches) சார்ந்த பாடங்கள் பயிற்றுவிக்கப் படுவதுதான் எல்லா ஒழுங்கீனங்களுக்கும் காரணம். ஏனெனில் இது போன்ற பாடங்கள்தான் இங்கே சாதிமுறையின் தோற்றம் பற்றியும் சமஸ்கிருத மொழிக் குடும்பத்திற்கும் திராவிட மொழிக் குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றியும், திராவிட மொழிகளின் தனித்துவம் பற்றியும் பாடத் திட்டத்தில் புகுத்தி மாணவர்கள் மத்தியில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்திவிட்டன” என்று கூறியதை மறந்துவிட இயலுமா? (பார்க்க: India Facts எனும் இணையத் தளம்).

ஆம், இவர்களின் நோக்கம் முழுமையான மனிதர்களை உருவாக்குவதல்ல. மாறாக இன்றைய Make in India வுக்குத் தேவையான சுய சிந்தனையற்ற வெறும் ‘ரோபோ’ க்களை உருவாக்குவதுதான்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் கூடாது என்றும் வரிகட்டுவோரின் பணம் இத்தகைய பல்கலைக்கழகங்களில் வீணடிக்கப்படுகிறது என்றும் இன்று இவற்றை ஒழித்துக்கட்ட முனைவோர் கூறுகின்றனர். இந்த உயராய்வுப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களை அரசியல் பேசாதே எனச் சொல்வதமெப்படிச் சரியாக இருக்கும்?.

எல்லா அரசு நலத் திட்டங்களுக்கும் வரி கட்டுவோரின் பணத்திலிருந்துதான்  செலவிடப்படுகிறது. அதற்காக அதிக வரி கட்டுவோர் என்கிற அடிப்படையில் கார்பொரேட்களிடமா கல்விக் கொள்கை உருவாக்கும் பொறுப்பை விட்டுவிட முடியும்? அப்படியும் செய்தவர்கள்தான் இன்று இந்தப் பல்கலைக் கழகங்களை மூடச் சொல்கிறவர்கள். 2000த்தில் வாஜ்பேயி அமைச்சரவை உயர்கல்விச் சீர்திருத்தங்களுக்காக முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இருவர் குழுவிடம் அந்தப் பொறுப்பை அளிக்கவில்லையா?

ஒருபக்கம் இப்படியான பிரச்சாரங்கள் இன்னொரு பக்கம் இந்த மாணவர்களின் மீது தேசத் துரோக வழக்குகள், இன்னொரு பக்கம் வெளியார்கள் மூலம் மாணவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள்… இவற்றை ‘பாசிசம்’ எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள யாரும் இந்தச் சூழலைக் கண்டு கவலை கொள்ளாமல் இருக்க இயலாது.