போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை

[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட கதை]

இரண்டு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நண்பர் மனோகரன் அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை பெரும்பாக்கத்தில் வசித்து வருபவருமான இத்ரிஸ் என்பவரை பா.ஜ.க தலைவர் முருகனின் கொலை சம்பந்தமாக விசாரிக்க அழைத்துச் சென்றதாகவும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து சரியான தகவல் இல்லை எனவும் அவரது உறவினர்கள் தன்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து நாம் ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் கூறினா ர். இத்ரிசின் ஊரைச் சேர்ந்தவரும், திருச்சியில் சிறைக் காவலராக உள்ளவருமான மதார் சிக்கந்தர் என்பவர் பெயரைச் சொல்லி இத்ரிஸ் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் இருவர் குறித்தும் சரியான தகவல் இல்லையென்றும் மனோகரன் குறிப்பிட்டார்.

“சரி, நீங்கள் இது பற்றி ஹேபியாஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு மனு) ஏதாவது போட முடியுமான்னு பாருங்க. மேலப்பாளயத்திலேயும் கடுமையா பிரச்சினைகள் இருக்குன்னு ஏதாவது செய்திகள் வந்துட்டே இருக்கு. அடுத்த வாரத்தில எல்லாத்தையும் சேர்த்து ஏதாவது ஃபேக்ட் ஃபைன்டிங் பண்ணலாமான்னு பார்ப்போம். முடிந்தால் நம்ம அறிக்கையை டி.ஜி.பிய நேர்ல பார்த்து குடுக்க முயற்சிப்போம்” என்று சொன்னேன்.

இது தொடர்பாக மேலதிக விவரங்களைத் திரட்ட நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுள்ளபோதே சற்று முன் திருச்சி வழக்குரைஞர்கள் கென்னடி மற்றும் கமருதீன் அனுப்பியிருந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இந்த நாட்டில் முஸ்லிம்களாகப் பிறந்தால் எத்தனை வேதனைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது என்பது இது போன்ற போலீசின் அத்து மீறல்களளையும், விசாரணை என்னும் பெயரில் நடத்துகிற சட்ட மீறல் மற்றும் அப்பட்டமான பொய் வழக்குகளையும் தொடர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. நடந்தது இதுதான்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இத்ரீசும் மதார் சிக்கந்தரும். இத்ரீஸ் பெரும்பாக்கத்திற்கு (சென்னை) இடம் பெயர்ந்ந்து ஏதோ தொழில் செய்துகொண்டுள்ளார். மதாருக்கு சிறைக்காவலர் வேலை கிடைத்து திருச்சி சிறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் பணியில் அமர்ந்த நாள் தொடங்கியே காவல்துறையினராலும் உளவுத் துறையினராலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறாயா எனப் பலமுறை மிரட்டப்பட்டும் விசாரிக்கப்பட்டும் இருந்துள்ளார். முஸ்லிம்கள் யாரேனும் இத்தகைய பணிகளில் நியமிக்கப்படும்போது இப்படி ’விசாரிக்கப்படுவதும்’ கண்காணிக்கப்படுவதும் வழக்கமாம். இது தொடர்பாக வழக்குரைஞர்களின் ஆலோசனையின் பேரில் மதார் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தது இவரை இவ்வாறு ‘விசாரித்து’ வந்தவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. சென்ற மாதத்தில் பலநாட்கள் அவரிடம் ஏதோ விசாரணை என தொலை பேசியில் மிரட்டியுள்ளனர். இறுதியில் ஜூலை 30 அன்று அவரைக் கட்டாயமாக ஒரு போலீஸ் வேனில் ஏற்றி மிரட்டி செல்போனில் யார் யாருடனோ பேசச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். இது நடந்துகொண்டுள்ள போதே மதார் அழைப்பதாகச் சொல்லி இத்ரீசைக் கொண்டு சென்ற விசாரணைப் படையினர் அவரைக் கடுமையாகச் சித்திரவதைகள் செய்து முருகனைக் கொன்றது தான்தான் என ஒத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். முருகன் கொலையை விசாரித்து வரும் ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் படையைச் சேர்ந்த இன்ஸ்பெச்டர் மாடசாமி மற்றும் 15 காவலர்கள் கொண்ட படைதான் இந்தக் கொடுமைகளைச் செய்துள்ளது. முழு விவரங்களியும் நீங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார்க் கடிதங்களின் நகல் மற்றும் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகளை வாசித்தால் விளங்கும்.

இப்போது இந்தக் கொடூர நாடகத்தின் மூன்றாம் காட்சி தொடங்குகிறது. இதே ஊரைச் சேர்ந்த எஸ்.பாண்டி, என்.சுந்தரவேல் இருவரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தவர்கள். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் திருச்சி நடுவர் நீதிமன்றம் 2ல் கடந்த 15ம் தேதி முதல் தினம் கையொப்பமிட்டு வருகின்றனர். இவர்கள் சென்ற 30 அன்று கையொப்பமிட்டு வெளியே வரும்போது மேற்படி காவல் படையினர் இவர்களைக் கட்டாயமாக இரண்டு டெம்போ வான்களில் தனித்தனியாக ஏற்றி (எண் TN 59 G 0930; TN 59 G 0915), கண்களைக் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். அடையாளந் தெரியாத ஓரிடத்தில் இறக்கி, தாங்கள் என்கவுன்டர் வெள்ளத்துரை ‘டீம்’ எனவும், அவர்களை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். எனினும் முருகன் கொலை வழக்கில் தாங்கள் சொல்வதுபோலச் சாட்சி சொன்னால் விட்டு விடுவதாகக் கூறியுள்ளனர். அதாவது, திருச்சியில் தங்கள் ஊரைச் சேர்ந்த மதார் சிக்கந்தரின் அறையில் தங்கி தினந்தோறும் நீதிமன்றத்திற்குச் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு இத்ரிஸ் முதலானோர் முருகனைக் கொலை செய்வது குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்குத் தாங்கள் நேரடி சாட்சி எனச் சொல்ல வேண்டும் என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். உயிருக்குப் பயந்து அவர்கள் அப்படியே செய்வதாகக் கூறியுள்ளனர்.

பிறகு அவர்களைக் கொண்டு சென்று திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் அடுத்த நாள் அவர்கள் அவ்வாறே அழைத்துச் சென்று மிரட்டப்பட்டபோது சங்கிலியால் கட்டப்பட்ட இத்ரிசை இவர்களின் கண்முன்னால் சித்திரவதை செய்துள்ளனர். இரும்புத் தடியால் அடிப்பது, கொரடால் நகங்களைப் பிடுங்குவது. கால்களை எதிரெதிர்த் திசையில் இழுப்பது உட்படச் சித்திரவதைகள் நடந்தேறியுள்ளன. இந்த நேரத்தில் அங்கே அவர்கள் ஊரைச் சேர்ந்தவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள சரவணபவன் என்பவரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இருந்துள்ளார். ஒரு சிவப்பு நிற அப்பாச்சி டூ வீலரில் வந்து இத்ரிஸ் முருகனைக் கொலை செய்ததைத் தான் பார்த்ததாக அவர் சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளார். அவர் அதை மறுத்துள்ளார். அடுத்த நாள் பூட்டி வைக்கப்பட்ட ஓட்டல் அறையிலிருந்து இவர்களைக் கொண்டுவந்த மாடசாமி குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அமர்ந்துகொண்டு உள்ளே சென்று கையொப்பமிட்டு வருமாறு கூறியுள்ளனர். உள்ளே வந்த பாண்டியும் சுந்தரவேலனும் அங்கிருந்த வழக்குரைஞர் கென்னடி மற்றும் அவருடன் செயல்படும் இளம் வழக்குரைஞர் கமருதீன் ஆகியோரிடம் தங்களின் பரிதாபக் கதையை முறையிட்டுள்ளனர். எனது பக்கங்களைப் பின்பற்றி வருவோர்க்கு இவ் வழக்குரைஞர்களை நினைவிருக்கலாம்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி வழக்கில் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஆஜராகி என்.எஸ்.ஏ முதலிய சட்டப் பிரயோகங்களை உடைத்து அவரைப் பிணையில் வெளிக் கொணர்ந்தவர்கள்தான் கென்னடியும் கமருதீனும். அவர்கள் உடனடியாக பாண்டியையும் சுந்தரவேலனையும் நீதித் துறை நடுவர் திரு எம்.ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். அவர்களின் முறையீட்டைக் கேட்ட நீதியரசர் ராஜேந்திரன்,

1) உயிராபத்து உள்ளிட்ட கிரிமினல் மிரட்டல்கள்

2) பொய் சாட்சியங்களை உருவாக்க மோசடி செய்தல்

3) அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மாடசாமி என்கிற பெயரில் வந்த போலீஸ் கிரிமினல் கும்பலை விசாரிக்க திருச்சி சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

(“இந்த் நாட்டிலேயே அமைப்பாக்கப்பட்ட மிகப் பெரிய கிரிமினல் கும்பல் காவல்துறைதான்” என்கிற கருத்தைக் கூறியது அலகாபாத் நீதிமன்றம்.) திருச்சி நீதித்துறை நடுவர் ராஜேந்திரனின் இந்த வரவேற்கத்தக்க ஆணை ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் தலைமையில் இயங்கும் புலனாய்வுப் படையினது மட்டுமல்ல, தமிழகக் காவல்துறையின் கொடூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது (பார்க்க இணைப்பு). பொய் சாட்சியம் சொல்வதெற்கென அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறை வாகன எண்கள், இவர்கள் அடைத்து வைக்கப்பட்ட விடுதிகளின் பெயர்கள், அறை எண்கள் எல்லாமும் இணைப்புகளில் உள்ளன. நான் மிகச் சுருக்கமாக இங்கே இவற்றைப் பதிவு செய்துள்ளேன். தயவுசெய்து நண்பர்கள் முழுமையாக இந்தப் புகார்க் கடிதங்களை வாசிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் நமது காவல்துறையின் லட்சணம் புரியும்.

இதுபோன்ற கொடூரங்களை வெளிக் கொணர்வதற்காக எங்களைத் தேசத் துரோகிகள் எனச் சொல்லும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்களான ஜெயமோகன் போன்றோரின் லட்சணங்களும் புரியும். கொலை செய்யப்பட்ட முருகனது கடை ஒன்றிலிருந்த சிசி டிவியில் (கண்காணிப்புக் காமரா) இத்ரிஸ் முதலானோர் எதிரே இருந்த சாலையில் நடந்து சென்ற பதிவு ஒன்று உள்ளதாம். அந்த அடிப்படையில்தான் இந்த விசாரணையாம். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊர் வீதிகளின் வழியே செல்லாமல் வேறெப்படிச் செல்வார்கள். அப்படியே காவல் துறைக்குச் சந்தேகமிருந்தால் முறைப்படி விசாரித்து, உண்மையான சாட்சியங்கள் ஏதேனும் கிடைத்தால் அதன் பின்பே குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பொய் சாட்சியங்களை உருவாக்கி விரைவாக வழக்கை ‘முடித்து’ மயில்வாகனன்களும் மாடசாமிகளும் அவார்டுகளும் பதவி உயர்வுகளும் பெற இத்ரீஸ்களும் மதார் சிக்கந்தர்களும் தங்கள் வாழ்வை இழக்க வேண்டியுள்ளது. இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கும் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் இப்படியாக ‘விசாரிக்கப்பட்டு’க் குற்றம் “உறுதி செய்யப்பட்டவர்கள்”தான். கென்னடி, கமருதீன், நீதியரசர் ராஜேந்திரன் முதலானோரின் தலையீடுகள் மூலம் நீதி கிடைத்தவர்களின் எண்ணிக்கை வெகு வெகு சொற்பம். இப்படி ஒரு சமூகம் இந்த நாட்டின் காவல்துறை மற்றும் புலனாய்வுகளில் நம்பிக்கை இழப்பது எங்கு கொண்டுபோய்விடும்?

இணைப்பு 1:

பதிவு அஞ்சல் மற்றும் இமெயில் வழியாக

திருச்சி, 31.07.2013.

அனுப்புதல்:

கா.மதார் சிக்கந்தர்,

இரண்டாம் நிலை சிறைக் காவலர்,

மத்தியச் சிறை,

திருச்சி-20.

பெறுதல்,

1. உயர்திரு. சிறைத்துறை துணைத்தலைவர் அவர்கள்,

திருச்சி சரகம்,(digprisontry@dataone.in)

திருச்சி.

2. உயர் திரு. சிறைக் கண்காணிப்பாளர் அவர்கள்,

மத்தியச் சிறை,(supdtcjl@bsnl.in)

திருச்சிராப்பள்ளி 620 020.

ஐயா,

நான் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக கடந்த 23.02.2011 முதல் பணிபுரிந்து வருகிறேன். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், இடைக்காட்டூர் ஆகும். எனது குடும்பத்தினர் தற்சமயம் பரமக்குடியில் வசித்து வருகின்றனர். நான் மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து பட்டம் பெற்றேன். எனக்கு சிறு வயது முதலே காவல் துறையில் பணிபுரிய வேண்டுன்றே ஆசை அதிகம். அதனால் 2011ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று சிறைக்காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பணியை நான் நல்ல முறையில் செய்துவந்ததினால் என் மீது இன்று வரையில் எந்த குறையும் கிடையாது.

நான் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரையில் எந்தவிதமான அரசியல் இயக்கங்களிலும் பங்கு கொண்டதும் கிடையாது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் பணியில் இருந்தபோது சிறை கேண்டீன் கேட் பாரா பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவரிடம் தற்செயலாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமுருகன் (Central I.G. Zone Team ஐ சேர்ந்தவர்) என்பவர் என்னிடம் வந்து “என்னடா துலக்கப் பயலுங்களா, என்ன திட்டம் போடுறீங்க? நாட்டை கெடுக்க திட்டம் போடுறீங்களா? குண்டு வைக்க திட்டம் போடுறீங்களா?” என்றும் இன்னும் பலவிதமான தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அவர் என்னை திட்டிய பிறகுதான் நான் பேசிகொண்டிருந்த சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் முஸ்லீம் என்றே எனக்கு தெரியும். பலபேர் முன்னிலையில் என்னை திட்டியதால் எனக்கு அவமானமாகி விட்டது. அதனால் அமைதியாக வந்துவிட்டேன். உடனே நான் இது குறித்து எனது மேலதிகாரி சிறை அதிகாரி திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களிடம் வாய் மூலமாக தகவல் தெரிவித்தேன். சிறை அதிகாரி அவர்கள் மேற்படி திருமுருகன் என்பவரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்.

மேலும் என்னிடம் “பலபேர் இதுபோலதான் தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பார்கள். உன் வேலையை மட்டும் பார்” எனக் கூறி என்னையும் அனுப்பிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஐ.ஜி டீம் போலீசாரும், உளவுத்துறையை சேர்ந்தவர்களும் என்னிடம் மிகுந்த காழ்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பரமக்குடி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் என்பவர் என்னை விசாரணை என்ற பெயரில் பல முறை பரமக்குடி காவல் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். நான் முறையாக என்னை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவ்வாறு அழைக்காமல் தொலைப்பேசியில் மட்டும் பேசி டார்ச்சர் செய்து வந்தார். இது குறித்து எனது அண்ணன் பைசல் ரஷீத் என்பவருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் முதுகுளத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் என்பவரை நேரில் சந்தித்து வாய்மொழியாக புகார் அளித்தார். மேலும் பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்தினக்குமார் அவர்களையும் சந்தித்து விபரம் கேட்ட போது பரமகுடியில் நடந்த கொலை சம்பவத்தில் இறந்து போனவரின் உறவினர் கடையை கடந்து நான் நடந்து சென்றதாகவும், அந்தக் கடையின் வாசலில் உள்ள CCTV யில் எனது உருவம் பதிவாகி உள்ளதாகவும், அதனால் என்னை விசாரிக்க வேண்டுமெனவும் கூறி உள்ளார். ஆனால் அது குறித்து மேலும் சரிவர விபரங்கள் ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அதன் பின் அது குறித்து என்னை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை.

இதற்கிடையில் கடந்த 19.07.2013 அன்று எனது செல்போனுக்கு (8973774922) மாலை 5.30 மணியளவில் 8760182068 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் என்னிடம் “மானாமதுரை புரபஷ்னல் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், எனக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வருமாறு தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. உடணே அந்த பார்சலை வாங்க சொல்லி எனது அண்ணன் பைசல் ரஷீத் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சரிவர பதிலளிக்கவில்லை. அதற்கு பிறகு என்னுடன் பணிபுரியும் என்னுடன் குடியிருப்பில் இருக்கும் எனது ஊரை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் பேசியபோதுதான் எனக்கு பேசிய அதே எண்ணிலிருந்து அவருக்கு பேசிய ஒருவர் தான் SBCID யை சேர்ந்த S.I. என்றும் ஒரு ரகசிய விசாரணை என்றும் கூறி பேசியுள்ளார். இதை தெரிந்துகொண்டு பிறகு நான் மேற்படி எண்ணிற்கு மீண்டும் பேசிய போது அதில் பேசியவர் தான் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர் என்று கூறினார்.

ஆனால் எனக்கு எந்த பதிலையும் சரிவர தெரிவிக்கவிலை. இந்நிலையில் நேற்று (30.07.2013) மாலை 6.20 மணியளவில் நான் பணி முடிந்து வந்து எனது குடியிருப்பில் இருந்தபோது, சாதாரண உடையில் வந்த இருவர் தாங்கள் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் என்னை விசாரணைக்காக அவர்களோடு வருமாறு அழைத்தனர். நான் அவர்களோடு செல்ல மறுத்தபோது நீ ஒரு அரசு ஊழியர், நீ எங்களோடு வரவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, எனது செல்போனையும் பறித்துகொண்டு, என்னை வலுக்கட்டாயமாக அவர்களோடு அழைத்துச் சென்றனர். கொட்டப்பட்டு ஆனந்தா பேக்கரி அருகே நிறுத்தி வைத்திருந்த TN 59 G 0930 என்ற காவல்துறை வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்டு, மதுரை புறவழிச்சாலை மணிகண்டம் அருகே கொண்டுசென்று TN 59 G 0915 என்ற வாகனத்துக்கு என்னை மாற்றினார்கள். அந்த இரு வாகனத்திலும் இருந்த சுமார் 15 நபர்கள் தங்களை மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அனைவரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாடசாமி என்றும், இன்னும் இருவர் S.I மோகன், மற்றும் சரவணன் என்றும் எனக்கு தெரியவந்தது.

இதற்கிடையில் எனது அறையில் தங்கி திருச்சி சட்டக்கல்லூரியில் படித்துவரும் எனது ஊரை சேர்ந்த சரவணபவ என்பவர் மூலம் தகவல் தெரிந்துகொண்ட எனது அண்ணன் பைசல் ரஷீத் என்னை தொடர்புகொண்டு எங்கே இருகிறாய் என்று கேட்கவும் உடணே என்னை மீண்டும் எங்கள் குடியிருப்பருகே அழைத்து வந்து எனது அண்ணனிடம் நான் வீட்டில்தான் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்று மிரட்டி பேச வைத்தனர். அதேபோல எங்க ஊரை சேர்ந்த மணிமாறன் மற்றும் சரவணபவ இருவரையும் எனது செல்போன் மூலம் அழைத்து என்னை மிரட்டி பேசவைத்தது போலவே அவர்களையும் எனது அண்ணனிடம் எந்த பிரச்சனையும் இல்லை என பேச வைத்தனர். அதற்கு பிறகு என்னையும் சரவணபவையும் மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களது டெம்போ டிராவலர் வாகனத்தில் சுமார் 10மணியளவில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி எனது செல்போன் மூலம் பலருக்கும் பேசவைத்தனர். பதட்டத்தில் எனக்கு யாரிடம் பேசினேன் என்னபேசினேன் என்று நினைவில்லை.

இடையிடையே எனது அண்ணன் தொடர்பு கொண்டாலும் என்னையும், மேற்படி சரவணபவயும் மிரட்டி திருச்சியிலேயே இருப்பது போல அவரிடம் பேசவைத்தனர். அதற்குப்பிறகு சென்னை பெரும்பாக்கத்தில் செல்போன் கடை நடத்திவரும் எங்கள் ஊரை சேர்ந்த இத்ரீஸ் என்பவரை விசாரிக்க வேண்டுமெனக் கூறி என்னை பேசச் சொல்லி அவரை பெரும்பாக்கம் பஸ்டாப் அருகே வரவழைத்து, அவரையும் எங்களோடு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். இத்ரீசை வண்டியில் ஏற்றியவுடன் அவனது கண்ணை கட்டிவிட்டனர். அப்போது 31.07.2013 அதிகாலை மணி சுமார் 4.30 இருக்கும். அதன் பின்னர் எங்கள் மூவரையும் துப்பாக்கி முனையில் விசாரணை என்ற பெயரில் ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் கேட்டனர். அதன் பிறகு காலை 10.30 மணியளவில் திருச்சிக்கு எங்களை கொண்டு வந்தனர். என்னை மட்டும் தனியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குரு ஹோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரையும் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவிலை. என்னை சுமார் 12.40 மணிக்கு மீண்டும் வண்டியில் ஏற்றிச்சென்று திருச்சி மத்திய சிறை அருகே இறக்கிவிட்டு விட்டு பணிக்கு செல்லுமாறும், மீண்டும் மாலை 7.00 மணிக்கு வரவேண்டும் என்றும், அவ்வாறு வந்தால்தான் மற்ற இருவரையும் விடுவோம் என்றும் இதை யாரிடமாவது கூறினால் இருவரின் உயிருக்குத்தான் ஆபத்து என்றும் என்னை மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர். நானும் சரியாக 1.00 மணிக்கு பணியில் சேர்ந்து மாலை 6.00 மணி வரையில் லையன் கேட் பணியில் இருந்தேன். கடுமையான மிரட்டலாலும், பயத்தாலும் என்னால் உடணடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதற்குள் எனது அண்ணனும் என்னைத் தேடி திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

பணி முடிந்து நான் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு தங்களிடம் வாய்மொழியாக புகார் அளித்தேன். என்னை விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தபோது எனது செல்போனில் முஸ்லீம் பெயரில் உள்ள பலருக்கும் என்னை மிரட்டி போன் செய்யவைத்து ஏதேதோ பேச வைத்தனர். என்னை சம்பந்தமில்லாமல் ஏதேதோ விசாரணை செய்தனர். இடையில் பல முறை பலரும் துலுக்கப்பயலே நீயெல்லாம் ஏன் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்தே? உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் பலவாராக மிரட்டினார்கள். சில வெற்று பேப்பர்களிலும் மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். துப்பாக்கி முனையில் என்னை பலமுறை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், நான் சார்ந்த மதத்தையும் பலவாறாக இழிவாக பேசினார்கள். தற்சமயம் வரையில் இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரும் என்னவானார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு அரசு ஊழியர்.அப்பாவி. என் மீது பணியில் சேர்வதற்கு முன்பும், பணியில் சேர்ந்த பின்பும் எந்த குற்ற வழக்கும் கிடையாது. நான் எந்த காலத்திலும் எந்த விதமான அரசியல் இயக்கங்களிலும் தொடர்பில் இருந்ததில்லை. நான் முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டும் காவல்துறையால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன்.

நான் முஸ்லீம் என்பதால் மட்டும் போலீசாரால் பலவிதமான பாகுபாடுகளுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாகி வருகிறேன். என்னை தேவையில்லாமல் கடத்திச் சென்று, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அழைகழித்து, அடைத்து வைத்து மிரட்டியதோடு இல்லாமல், எனது நண்பர்கள் இருவரையும் பணயமாகப் பிடித்துவைத்துக் கொண்டு என்னை தற்போதுவரையில் மிரட்டி வருகின்றனர். ஆகவே ஐயா அவர்கள் என்னை கடத்திச்சென்று, அடைத்து வைத்து, துன்புறுத்தி எனது நண்பர்களையும் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது நண்பர்களை மீட்டுத்தரும்படியும், நான் அமைதியாக வாழவும், பணி செய்யவும் உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, கா.மதார் சிக்கந்தர்.