பொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

(‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள பொது சிவில் சட்டம் பற்றிய நூலின் முகப்புக் கட்டுரை. மேலே உள்ள படம்: ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் சஃபியா நியாஸ்)

1.விருப்ப அடிப்படையில் எந்த மதத்தினர் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளக் கூடிய ‘பொது சிவில் சட்டம்’ ஒன்று இப்போதும் நடைமுறையில் உள்ளதுதான். 1954ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriages Act, 1954) இத்தகையதுதான். குறிப்பான மதச் சட்டங்கள் வேண்டாம் எனக் கருதும் யார் வேண்டுமானாலும் இதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இச்சட்டத்தை 1925 ம் ஆண்டு ‘இந்திய வாரிசுரிமை சட்டம்’ (Indian Succession Act) முதலானவற்றுடன் இணைத்து வாசித்தால், திருமணம், விவாக ரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை முதலான அம்சங்களில் மதம் சாராத சட்டங்களுக்கு யாரொருவரும் தம்மை உட்படுத்திக் கொள்ள முடியும். எனவே இப்போது பொது சிவில் சட்டமே இல்லை எனச் சொல்வது தவறு.

2.தலாக்” என ஒரே நேரத்தில் மும்முறை சொல்லி ஒரு ஆண் தன் மனைவியை விவாக ரத்து செய்வதற்கு திருக்குர் ஆனிலோ, ஹதீஸ்களிலோ இடமில்லை. ஆண்கள் இருவர் அவ்வாறு தாம் உடனே ரத்து செய்துவிட்டதாக வந்தபோது நபிகள் அதை ஏற்காததோடு அவர்களை, “நான் உயிரோடு இருக்கும்போதே திருக்குர் ஆன் சட்டத்தை நகைப்புக்கு இடமாக்குகிறீர்களா?” எனக் கடிந்து அவர்களின் உடனடி முத்தலாக்கை ரத்து செய்தார் என்பதற்கு ஆறு ஹதீஸ்கள் உள்ளன.

3.ஒரு முறை தலாக் சொல்லி மூன்று மாதத்திற்குள் அப்படிச் சொன்னதை கணவன் ரத்து செய்யலாம். இரண்டாம் முறை சொன்ன பிறகும் கூட அப்படி ரத்து செய்யலாம். அப்படி மூன்று மாதத்திற்குள் சொன்ன தலாக்கை ரத்து செய்யாமலும், மூன்று தலாக்குகளைப் போதுமான இடைவெளியில் சொல்லாமலும் இருந்தால் எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழத் தடையில்லை. அதாவது அந்த மனைவி இடையில் வேறொருவருடன் இன்னொரு திருமணம் செய்யாமல் (ஹலாலா) அவரையே திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து அவருடன் வாழ்க்கை நடத்தலாம். சொன்ன தலாக்கை மூன்று மாதத்திற்குள் ரத்து செய்ய வாய்மொழியாக ரத்து செய்து அறிவிக்கக் கூடத் தேவையில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலே போதுமானது.

4.கலீபா உமரின் காலத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது என ‘முத்தலாக்கை’ ஆதரிப்பவர்கள் சொல்வது சரியல்ல. வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று பேர் அப்படிச் சொல்லிக் கொண்டு உமரிடம் வந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததை அவர் ஏற்கவில்லை. அவர்களைக் கடுமையாகக் கண்டித்ததோடு சாட்டை அடி கொடுத்து தண்டிக்கவும் செய்தார். பின் அந்த மனைவியரிடம் தம் கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனரா என விசாரித்தபோது அவர்கள் ‘இல்லை’ எனச் சொன்னார்கள். அதன் பின்னரே அந்தத் திருமணங்களை ரத்தானவையாக உமர் அறிவித்தார். ஒரு வேளை அந்த மனைவியர் விவாகரத்தை ஏற்கவில்லை எனக் கூறி இருந்தால் அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதே பொருள். கோபத்தில் கணவர்கள் முத்தலாக் சொல்லிவிட்டுப் பின் வருத்தம் தெரிவித்தால் கூட மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அந்தப் பெண் ‘ஹலாலா’ செய்ய வேண்டும் எனச் சில முல்லாக்கள் சொல்வதை அது முஸ்லிம் சட்டத்திற்கு எதிரானது என தாகிர் முகம்மது போன்ற சட்டவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

5.ஒரே நேரத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது என்பதை இந்திய நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஷமீம் ஆரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இப்படியான தீர்ப்பு குறித்து நான் வேறு கட்டுரை ஒன்றில் விரிவாகச் சொல்லியுள்ளேன். மசூத் அகமத் வழக்கில் (டெல்லி உயர்நீதி மன்றம், 2008) நீதிபதி பாதர் துரேஸ் அகமத் அவர்களும் இதை உறுதி செய்துள்ளார். இவர் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அகமத் அவர்களின் மகன். எனவே இதையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே சொல்லப்படுவதாக நாம் நினைக்கத் தேவை இல்லை.

6.ஈராக், ஜோர்டான், எகிப்து, சிரியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட அரபு முஸ்லிம் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஒரே தடவையில் முத்தலாக் சொல்வது செல்லாது என சட்டம் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் முதலான நமது துணைக் கண்ட முஸ்லிம் நாடுகளிலும் கூட விவாகரத்து நடமுறைக்கு வர மூன்றுமாத கால அவகாசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் ஒரே நேர முத்தலாக்கிற்கு அங்கும் இடமில்லை எனக் கருதலாம்.

7.இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவர் முஸ்லிமாக மதம் மாறுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (Sushmita Ghosh Writ Petition No. 509 of 1992). அப்படிச் செய்பவர் மீது இ.த.ச 494 மற்றும் 495 வது பிரிவுகளின்படி சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம். இதே போல வேறு சில தீர்ப்புகளும் உண்டு. முஸ்லிமாக மாறி இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர் தான் முஸ்லிமாக மாறுவதை உண்மையிலேயே அம்மதத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே செய்ததாகவும், மாற்றத்துக்குப் பின் தான் முஸ்லிமாகவே வாழ்வதாகவும் நிறுவ வேண்டும். இப்படி ஏமாற்று மதமாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் இத்தகைய தீர்ப்புகளைக் காட்டி ஏமாற்றுபவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வசதி உள்ளது. இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் இப்படியான ஏமாற்று மதமாற்றங்களைத் தடை செய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென ‘இந்தியச் சட்ட ஆணையம்’ அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளது (எண்:227, ஆண்டு 2009). பலதாரத் திருமணம் தொடர்பான இஸ்லாமியச் சட்டத்திற்கும் இது எதிரானது என்கிறது சட்ட வாரியம். ஷரியத் சட்டத்தின்படி எல்லா மனைவியருக்கும் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பலதார மணத்திற்கான நிபந்தனை. முதல் மனைவி ஒரு மதத்திலும் அடுத்த மனைவி இன்னொரு மதத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளபோது கணவன் இருவருக்கும் சம நீதியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை என்கிறது சட்ட வாரியம்.

8.முஸ்லிம் ஆணைப் போலவே முஸ்லிம் பெண்ணும் சுய விருப்பின் அடிப்படையில் தன் கணவரை விவாக ரத்து செய்யலாம். இதை ‘குலா’ என்பர். பெண் தன் கணவரை ‘குலா’ செய்வதற்கு கணவரின் சம்மதம் வேண்டும் எனச் சில மவுலவிகள் சொல்வது தவறு. நம்பிக்கை உள்ளவர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுலானா மவுதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் கூட ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தம் திருமணத்தை ரத்து செய்யும் உரிமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதைத் தீர்மானிப்பது அந்த மனைவி மட்டுமே. அவள் கணவனோ இல்லை காஸியோ இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த மனைவியின் விருப்பை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது மட்டுமே காஸியின் பணி. விவாகரத்து செய்யப்படும் கணவன் மனைவிக்கு அளித்திருந்த ‘மெஹ்ர்’ தொகையைத் திரும்பக் கோரினால் அவர் அதைத் திருப்பித் தர வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. திருமணத்தின்போது மெஹ்ர் தொகை கொடுக்கப்படாதிருந்தால் ரத்தின் போது மனைவி எதையும் தர வேண்டியதில்லை. தவிரவும் ‘குலா’ வைப் பொருத்தமட்டில் அது சொல்லப்படும் கணத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. ‘தலாக்’ போல காத்திருப்புக் காலம் கிடையாது. இது குறித்து தாரிக் மெஹ்மூத் அளிக்கும் விளக்கம்: ஆண் வலிமையானவன்; பெண் பலவீனமானவள். அவன் அளை வற்புறுத்தில் பணிய வைக்க முடியும். அந்த வாய்ப்பை அவனுக்கு அளிக்கலாகாது என்பதே இதன் பொருள். ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்வதாகக் கூறுகிறார். நபிகள் அவளது கருத்தை மறு பரிசீலனை செய்யச் சொல்கிறார். அந்தப் பெண் அவரிடம், “இது கட்டளையா, ஆலோசனையா?” என்கிறாள். “ஆலோசனை மட்டுமே” என நபிகள் பதிலுறுக்கிறார். அப்படியானால் அதை நான் ஏற்கவில்லை என அப்பெண் பதிலளிக்க நபிகள் அவ்வாறே அதை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் சொல்லிய குலாவை அங்கீகரித்ததாக வரலாறு.

9.வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை என்கிற கருத்தை நம் அரசியல் சட்டம் வற்புறுத்துவதாகக் கொள்ள முடியாது. பொது சிவில் சட்டம் என்பது நம் அரசியல் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் (List III) வைக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய -மாநிலப் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்லது. அதாவது மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் இதன் மீது சட்டம் இயற்றலாம். இதன் பொருள் தனிநபர் சட்டங்களைப் பொருத்த மட்டில் அந்தந்த தேச வழமைகளுக்கு மதிக்களிக்க வேண்டும் என்பதே. அந்த வகையில் இன்று கேரள அரசு இயற்றியுள்ள ‘கூட்டுக் குடும்ப ஒழிப்புச் சட்டம் (1975) ன் ஊடாக மத்திய அரசின் ‘இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) ன் பல பிரிவுகள் பெரிய மாற்றத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. அதேபோல நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்து திருமணச் சட்டத்தில் (1955) தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் முதலான மாநிலங்கள் பல மாற்றங்களைச் செய்துள்ளன. காஷ்மீரில் உள்ள முஸ்லிம் குடும்பச் சட்டப் பிரிவுகளுக்கும் உ.பி யிலுள்ள முஸ்லிம் சட்டப் பிரிவுகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. புதுச்சேரி மற்றும் கோவா போன்று 1947 க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்களில் வாழும் இந்துக்களுக்கு இந்திய நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்துச் சட்டங்களிலிருந்து விலக்குகள் உண்டு. புதுச்சேரியிலுள்ள ஒரு இந்து விருப்பப்பட்டால் ஃப்ரெஞ்ச் காலச் சிவில் சட்டத்தைத் தொடரலாம்; தன் மனைவி குழந்தை பெறவில்லை அல்லது ஆண் குழந்தை பெறவில்லை எனக் காரணம் காட்டி கோவாவில் உள்ள ஒரு இந்து ஆண் இரண்டாம்  திருமணம் செய்து கொள்ளலாம். நாகாலந்த், மிசோராம் மக்களுக்குப் பழங்குடி வழமைகளைச் சட்டமாகக் கொள்வதற்கு இந்துச் விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 13ம் திருத்தம் (1962) நாகாலந்துக்கு இந்த உரிமையை அளிக்கிறது. நாகாலந்து உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றமோ இல்லை நாடாளுமன்றமோ மாற்ற முடியாது. மிசோராம், நாகாலந்து, மணிபூர், கேரளா, கோவா முதலான மாநிலங்களில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களிடையே உள்ள வேறுபட்ட வழமைகள் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு இயற்றியுள்ள சட்டங்களோடு இவையும் நடைமுறையில் உள்ளன என்கிறார் Uniform Civil Code: Fictions and Facts எனும் நூலாசிரியர் பேரா. தாஹிர் முகம்மது. பார்சி திருமணம் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க சிறப்பு பார்சி திருமண நீதிமன்றங்களை உருவாக்க சட்டத்தில் இடம் உள்ளது. திருமணங்கள், விவாக ரத்து, மகளுக்குச் சொத்து வழங்கல் முதலியவற்றில் பார்சி சட்டங்கள் முஸ்லிம் சட்டங்களுக்கு நெருக்கமாக உள்ளன. இப்படியான வேறுபாடுகள் இன்று அனைத்து மதத்தினருக்கும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும் இன்று முஸ்லிம்கள் மட்டுமே எதோ சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுபோல இலக்காக்கப்படுகின்றனர்.

10.”முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ளன. ஒரு மதச் சார்பற்ற நாட்டில் இதை ஏற்க முடியாது’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மதசார்பற்ற நாடு என்பதன் பொருள் எந்த ஒரு மதநம்பிக்கையும் அதன் சடங்குகளும் பிற நம்பிக்கையாளர்கள் மீது திணிகப்படக் கூடாது என்பதே. மற்றபடி அவரவர் நம்பிக்கைகளை அவரவர் கடைபிடிப்பதை மதச்சார்பின்மை என்கிற பெயரில் தடை செய்வதோ இல்லை அவற்றில் தலையிடுவதோ முடியாது. அதோடு முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மட்டுமே அவர்களின் மத நம்பிக்கைகளோடு தொடர்புடையதாக உள்ளன என்பதும் தவறு. இந்து திருமணச் சட்டம் ‘சப்தபதி’, ‘கன்யாதன்’ முதலான மதச் சடங்குகளை நிபந்தனைகளாக ஏற்றுக் கொள்வது பலராலும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

11.’பொதுசிவில் சட்டம் என்னும் கருத்தை முஸ்லிம்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். முற்போக்கான மாற்றங்களுக்கு அவர்கள் எதிராக உள்ளனர்’ என்கிற கூற்றிலும் பொருள் இல்லை. தனிநபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற கருத்து 1950 களில் அம்பேத்கர் போன்றோரால் முன்மொழியப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்துமகா சபையினர்தான். மற்ற மதங்களை விட்டு விட்டு ஏன் இந்து மதத்தில் கைவைக்கிறீர்கள் எனக் கடுமையாக எதிர்த்தனர். இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதை பாரதீய ஜனசங் கட்சியைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். இந்துச் சட்டத்தின்படி பெண்கள் தம் குழந்தைகட்கு 5 வயதுவரை மட்டுமே காப்பாளராக இருக்க முடியும்; அதற்குப் பின் தந்தையே காப்பாளராக இருக்க முடியும். மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கில்லை. ஆண்களுக்குப் பலதார உரிமை உண்டு. பெண்கள் விவாகரத்து செய்ய இயலாது. இன்றளவும் மனைவி பிரிய நேர்ந்தால் குடும்பச் சொத்தில் (marital property)  மனைவிக்கு உரிய பங்கு கிடையாது என்பன போன்ற பல பிற்போக்கான கூறுகளைக் கொண்டிருந்த இந்துச் சட்டத்தில் எந்த மாற்றங்களும் கூடாது என அவர்கள் எதிர்ப்புக் காட்டினர். இன்றும் கோவா வில் இந்து ஆண்கள் இரண்டாம் தாரம் திருமணம் செய்ய உள்ள உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அங்குள்ள இந்துத்துவ சக்திகள் எதிர்க்கின்றன.

12.”பொது சிவில் சட்டம் என்கிற கோரிக்கையை முஸ்லிம் பெண்கள் ஆதரிக்கின்றனர். முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற பிற்போக்கான மத அமைப்புகளும் மட்டுமே எதிர்க்கின்றனர்” எனச் சொல்வதும் தவறு. “பாரதீய முஸ்லிம் மகிள அந்தோலன்’ (BMMA) எனும் அமைப்பு இவ்வாறு குறிப்பாகக் குற்றம் சாட்டப் படுகிறது. ஒரு முஸ்லிம் தமிழ் வார இதழ் இந்த அமைப்பை பா.ஜ.க அமைப்பு என்று கூட எழுதியிருந்தது. இது தவறு. இது ஒரு சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் அமைப்பு. இது பா.ஜ.க அரசின் ‘பொது சிவில் சட்டம்’ எனும் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. முத்தலாக் சொல்லி பெண்களை உரிய பொருளாதாரப் பாதுகாப்புகள் அளிக்காது ஆண்கள் தன்னிச்சையாக விவாக ரத்து செய்வதைத்தான் அது எதிர்க்கிறது. 13 மாநிலங்களில் கிளைகளையும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நூர்ஜஹான் சஃபியா நியாஸ் ‘ஃப்ரன்ட்லைன்’ இதழுக்கு (அக்டோபர் 11, 2016) அளித்துள்ள நேர்காணலில் மிகத் தெளிவாகத் தாங்கள் பொதுச் சிவில் சட்டம் என்கிற பா.ஜ.கவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும், ஷரியத் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்டு பெண்கள் சம உரிமை பெறும் வண்ணம்  முஸ்லிம் தனிநபர் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கோருவதாகவும் சொல்லியுள்ளார். முத்தலாக் மற்றும் ஹலாலா நிபந்தனை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் கோரிக்கை எனவும், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகியோருடனும் பேசி வேண்டுமானால் அவர்களின் தனிநபர் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்து கொள்ளட்டும் எனவும் கூறும் நூர்ஜெஹான், பொது சிவில் சட்டம் என்பது ஒரு அகன்ற விரிவான பிரச்சினை, அதில் அரசு ஆர்வமாக இருந்தால், வேண்டுமானால் அதை சிறப்புத் திருமணச் சட்டம் போலக் கட்டாயமாக்காமல், தனிநபர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாம் என்கிறார். எனினும் இவ்வமைப்பினர் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் நிலைபாட்டையும் அதன் “மத்திய கால மனநிலை” யையும் ஏற்பதில்லை. முத்தலாக் சொல்லி தன்னிச்சையாக விவாகரத்து செய்வதை ஏற்க இயலாதென முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என சற்று கட்டுப்பெட்டித் தனமான அமைப்பாகிய ஜமாத் ஏ இஸ்லாமியின் தலைவர் சலீம் எஞ்சினீயர் கூட ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ அமைப்பு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஷரியத் நீதி அமைப்புகளை அமைக்க உள்ளதற்கு அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) ஆதரவு அளித்துள்ளது. இடதுசாரிப் பெண்கள் அமைப்பும் இன்று இதே நிலையைத்தான் முன்வைக்கின்றன. “நாங்கள் பொது சிவில் சட்டத்தைக் கோரவில்லை. ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் சமத்துவம், சமநீதி என்கிற அடிப்படையில் சீர்திருத்தங்களையே வேண்டுகிறோம்” என்கிறார் ‘அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க’த்தின் சட்டத்துறை ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான கீர்த்தி சிங். ‘இந்தியப் பெண்களின் தேசியக் கூட்டமைப்பின்’ (NFIW)  பொதுச் செயலர் ஆனி ராஜா, “நாங்களும்  பொது சிவில் சட்டம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். எனினும் இவர்கள் பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்துச் சட்டத்தை எல்லோர் மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர் என்கிறபோது எங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளோம்” என்கிறார். இவர்களும் இப்போது தனிநபர்ச் சட்டங்கலீல் உரிய திருத்தங்கள் என்கிற கோரிக்கையோடு இப்போது நிறுத்திக் கொள்கின்றனர் (‘ஃப்ரன்ட்லைன்’ நவ 11, 2016).

13.வேறு சில சிறிய முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் இன்னும் ஒரு படி மேலே சென்று முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் செய்வதையும் உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் கோருகின்றன.

14.’அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்’ (AIMPLB) என்பது 1973 ல் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் அடையாளம் நீக்கப்படுதல் முதலான முயற்சிகள் மேலெழுந்த ஒரு காலகட்டதில், பிரிவினைக்குப் பின் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு வலுவான அமைப்பு இல்லாத சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஷா பானு, பாபர் மசூதி முதலான பிரச்சினைகளில் ஒரு முக்கிய பங்க்காற்றிய இந்த அமைப்பு கடந்த 43 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கிவருவது என்கிற வகையில் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பு. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் நிரம்பிய அந்த அமைப்பில் தேவ்பந்தினரின் ஆதிக்கம் இருந்தது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பரேல்வி பிரிவினர் இதிலிருந்து விலக நேரிட்டது. ஷியா பிரிவினர் இப்போது தனியாக ஒரு சட்ட வாரியத்தை அமைத்துள்ளனர். அதே போல முஸ்லிம் பெண்களுக்கான சட்ட வாரியம் ஒன்றும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் இப்போது நான்கு முஸ்லிம் சட்ட வாரியங்கள் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது. AIMPLB என அறியப்படும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்குடையது என்று முஸ்லிம் அறிஞர்களான தாரிக் முகம்மது, ஏ.ஜி.நூரானி முதலானோராலும் ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ போன்ற பெண்கள் அமைப்பாலும் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றனர். தற்போது நடைபெறும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் சட்ட வாரியம் “பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்” எனக் கூறியுள்ளதும் இன்று கடும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2009 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லோருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது இது மதரசா கல்விமுறையைப் பாதிக்கும் என இச்சட்ட வாரியம் எதிர்த்ததும் அப்போது விமர்சனத்துக்குள்ளாகியது.. எனினும் இன்று பொது சிவில் சட்டம் தொடர்பான வழக்கில் இவர்கள் தலையிட்டு அளித்துள்ள மனுவில் முத்தலாக்கை ஏற்க இயலாது எனவும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது எஞ்சிய வாழ்நாளுக்குப் போதுமான ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத் தலையீட்டால் உருவாகியுள்ள நீதி வழங்குக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

15.முத்தலாக், ஜீவனாம்சம் முதலான அம்சங்களில் நீதிமன்றத் தலையீட்டால் இன்று முஸ்லிம் பெண்களுக்கு உருவாகியுள்ள பாதுகாப்பு, மற்றும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியான பின்னணியில் உருவாகியுள்ள கருத்து வளர்ச்சி முதலியன தனியே ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்

போபாலில் எட்டு முஸ்லிம் இளைஞர்கள் மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக  இருக்கட்டும், முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கொடுமையால அவதியுறுவதாக நரேந்திரமோடி நீலிக் கண்ணீர் வடிப்பதாக இருக்கட்டும் இதை யாரும் நம்புவதில்லை. ஆனாலும் இன்று அவர்கள் உருவாக்கியுள்ள பிளவு அரசியலின் துணையோடு இவற்றைப் பெரிய எதிர்ப்புகளின்றி வெற்றிகரமாகச் செய்துகொண்டு உள்ளனர்.

மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் மனைவி, தன் கணவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈசான் ஜாஃப்ரி கண்ணெதிரே கண்டதுண்டமாக வெட்டி எரிக்கப்பட்டதற்கு நீதி வேண்டி 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஸாகிய ஜாஃப்ரி, என்கவுன்டர்கள் என்று சொல்லப்பட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இர்ஷத் ஜெஹான் மற்றும் ஷொராபுதீனின் மனைவி கவுசர் பீவி என்கிற இந்த முஸ்லிம் பெண்கள் மீதெல்லாம் இரக்கம் தோன்றாத மோடி முத்தலாக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறாராம். இதற்கான ஒரே தீர்வு பொதுசிவில் சட்டமாம்.

முதலில் ‘பொது சிவில் சட்டம்’ எனச் சொல்வதே தவறு. இங்கே கிரிமினல் சட்டங்களும், சிவில்சட்டத்தில் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை முதலான தனிநபர் சட்டங்கள் தவிர பிற அனைத்து சிவில்சட்டங்களும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் உள்ளன. பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.

இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது  ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான். இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.

தவிரவும் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்மைத் தன்மையின் அடிப்படையில் இங்கே நூற்றுக்கனகான தனிநபர்ச் சட்டங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலப் பழங்குடிகள் மத்தியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை இருப்பதால் அங்கு மட்டும் அது தனிநபர் உரிமைகளில் ஒன்றாக்கப் பட்டுள்ளது. .

ஏதோ இன்று முஸ்லிம் சட்டத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, இந்துச் சட்டத்தில் எல்லாம் சரியாக்கப்பட்டுவிட்டன  என்பதில்லை. இன்றும் கூட ஒரு இந்துக் கணவன் தன் மனைவி அவனது பெற்றோருடன் இருக்க மறுக்கிறாள் எனச் சொல்லி அவளை விவாகரத்து செய்ய முடியும். கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து போன பின்னும் கூட இந்துக் குடும்பம் என்றாலே கூட்டுக் குடும்பம் என நம் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்வதன் விளைவு இது. கூட்டுக் குடும்பம் என்கிற பெயரில் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதம் உள்ள இந்துக்கள் வரிச் சலுகை பெறுவதால் ஆண்டுக்குப் பல லட்சம் கோடி இழப்பு நாட்டுக்கு ஏற்படுகிறது.

சொல்லப்போனால் பொதுத் தனிநபர் சட்டத்தை வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்ததே தவறு. பொது தனிநபர் சட்டம் மத்திய அரசுக்கு உட்பட்டது மட்டுமல்ல. மாநில அரசாங்கச் சட்டங்களும் உண்டு. அம்பேத்கரைப் பொறுத்த மட்டில் அவர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தில் பெண்கள் மற்றும் அடித்தள மக்கள் மீதான வன்முறைகளும் ஒதுக்கல்களும் அதிகம் என்பதால் அதை முதலில் சரி செய்தாக வேண்டும் என்பதையே முக்கிய கரிசனமாகக் கொண்டிருந்தார்.  ஆனால் அன்றைய சூழலில் அதற்கு ஆதரவில்லை. அதனால்தான் பொது சிவில் சட்டம் என்பதை வழிகாட்டு நெறிமுறையில் பொதிந்து அப்போதைக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பேத்கர் இந்துச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது அவருக்கு ஆதரவில்லை. மனம் நொந்து அவர் பதவி விலகினார். பின்னாளில் நேரு இந்துச் சட்டத் தொகுதியைத் தனித்தனியாகப் பிரித்துச் சட்டமாக்கினாலும் அவற்றில் பல சமரசங்களும் இடம் பெற்றன.

இரண்டு அம்சங்களை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.இப்படிச் செய்ததன் மூலம் ‘பொது சிவில் சட்டம்’ இயற்றுதல் என்கிற அரசியல் சட்ட நோக்கத்திலிருந்து விலகி ‘இந்துத் தனிநபர் சட்டம்’ மட்டும் திருத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு வகையில், பொது சிவில் சட்டம் அல்லது பொது தனிநபர் சட்டத்தைச் சாத்தியப் படுத்துவது சிக்கல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  1. இந்துத் தனிநபர்சட்டம் திருத்தப்பட்டதால் பெண்களுக்கோ, அடித்தள மக்களுக்கோ எந்தப் பெரிய பலனும் ஏற்பட்டுவிடவில்லை. எடுத்துக்காட்டாக இன்று இந்துக்கள் மத்தியில் பலதாரமணம் சட்டபூர்வமாக் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அளவில் உள்ள புள்ளி விவரங்களின்படி பலதார மணத்தைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்துக்களாயின் முதல் தாரம் தவிர மற்ற தாரங்கள் concubine, keep, mistress, வைப்பாட்டி என்றே அழைக்கப்படுகின்றனர். நீதிமன்றமும் அதே சொற்களையே பயன்படுத்துகிறது. அவர்களுக்கு சொத்து, ஜீவனாம்சம் என மனைவிக்குச் சமமான பாதுகாப்புகளும் கிடையாது. முஸ்லிம் ஆண்கள் நான்குதாரங்கள் வரை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தாலும் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை என்பது ஒரு பக்கம். அப்படியே ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும் அவரது மனைவியர் எல்லோரும் சட்டபூர்வமாக அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆகின்றனர். அதோடு முஸ்லிம் பெண்களுக்குக் கணவன் வீட்டார் வழங்கும் ‘மகர்’ எனும் பாதுகாப்பும் உண்டு.

இந்துச் சமூகத்திற்குள் விதவைகள் முதலானோரின் நிலையில் இன்று வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றால் அவை சட்டத் திருத்தங்களின் மூலமாக ஏற்பட்டவையல்ல. மாறாக சமூகத்திற்குள்ளிருந்தும், புற உலகில் ஏற்பட்டுள்ள பௌதீக மாற்றங்களின் ஊடாகவும்தான் இது நிகழ்ந்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் இப்போது முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்று முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து  மோடியும் மற்றவர்களும் சொல்வதென்ன? 1. முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவர்கள் மும்முறை ‘தலாக்’ எனச் சொல்லி எளிதில் விவாகரத்து செய்துவிடுகின்றனர். 2. விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கான ஜீவனாம்சம் ‘இத்தா’ எனப்படும் அடுத்த மூன்று மாதவிடாய்க் காலத்திற்கு (menstrual cycles) மட்டுமே அளிக்கப்படுகிறது. 3, மணவிலக்கு பெற்றுப் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேந்து வாழ வேண்டுமானால் அந்தப் பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற வேண்டும்.

இவை பெண்களுக்கு எதிரானவை என்பதில் ஐயனில்லை.  முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டவைதான். ஆனால் நடைமுறையில் இவை இன்று நீதிமன்றத் தலையீட்டின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷா பானு வழக்குத் தீர்ப்பு (1895 SCR (3) 844) , ராஜிவ் காந்தி இயற்றிய முஸ்லிம் பெண்கள் சட்டம் (The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986) ஆகியவற்றுக்குப் பின்னும் கூட இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் முத்தலாக், இத்தா காலத்திற்கு மட்டுமே ஜீவனாம்சம் முதலியவற்றை ஏற்பதில்லை. டானியல் லத்திஃபி வழக்கில் (Writ Petition (civil) 868 of 1986 ) வழங்கப்பட்ட தீர்ப்பில் (2011) இத்தா காலத்திற்கு மட்டுமின்றி விவாகரத்து செய்யப்பட்ட மனைவி உயிருடன் இருக்கும் வரை அல்லது வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவருக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  Shamim Ara v State of UP வழக்கு (2002) மற்றும் Dagdu Pathan v Rohimbi Pathaan (2002) ஆகிய வழக்குகளில் தொடர்ந்து மும்முறை தலாக் சொல்வது, சாட்சிகளின்றி தலாக் சொல்வது, போதிய இடைநிலையாளர்களை வைத்து சமரச முயற்சிகள் செய்வது ஆகிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத விவாகரத்துகள் செல்லாது எனத் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன (விவரங்களுக்குப் பார்க்க: amarx.in/ முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

 

இந்தத் தீர்ப்புகளுக்குப் பின் இன்று எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் இந்த உரிமைகளைக் கோரி நீதிமன்றங்களை அணுகினால் அவர்களுக்கு நீதிவழங்கப்படுகிறது. மேற்குறித்த நிபந்தனைகள் மீறப்பட்ட தலாக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. புதிய சட்டத் திருத்தங்கள் செய்யாவிட்டாலும் இவை இன்று நீதிமன்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சட்டக் கொள்கைகளாக (judicially evolved principles) ஏற்புப் பெற்றுவிட்டன. எப்படி ‘அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை’ என்பது இன்று சட்ட ஏற்பு பெற்றுள்ளதோ அப்படி.

சரி, இதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுவது இயல்பு. இந்தப் பிரச்சினை இப்போது உருவான பின்னணியைப் பார்ப்போம். சில மாதங்கள் முன் ஷயாரா பானு எனும் முஸ்லிம் பெண் தனக்குச் சொல்லப்பட்ட தலாக் செல்லாது எனவும், தான் கணவர் வீட்டில் இருந்தபோது வன்முறைக்குள்ளாக்கப் பட்டதாகவும் வழக்குத் தொடர்ந்தார். இவரது வழக்குரைஞரான பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு பா.ஜ.க அனுதாபி ஊடக கவனம் பெறும் பொருட்டு இந்த வழக்கைத் திசை திருப்பினார். தலாக்கை ரத்து செய்தல், ஜீவனாம்சம், குடும்ப வன்முறைக்குத் தண்டனை என்கிற வேண்டுதல்களை நீதிமன்றம் முன் வைக்காமல் ‘பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும்’ என்கிற வேண்டுதலை வைத்தார். உடனடியாக ‘அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB)’ இதில் தலையிட வேண்டியதாயிற்று. தேன் கூட்டைக் கலைத்தது போல இன்று இதை முஸ்லிம்களைத் தாக்கும் ஆயுதமாக இந்துத்துவம் கையில் எடுத்துள்ளது. நரேந்திர மோடிவரைக்கும் தங்களின் ‘முஸ்லிம் அன்பை’க் காட்ட ஒரு வாய்ப்பாகி விட்டது.

இந்தப் பிரச்சினையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சத்திற்கு வருவோம். எதிர்பார்த்தது போலவே ஆணாதிக்க மதிப்பீடுகள் நிறைந்த முஸ்லிம் சட்ட வாரியம் இதை எதிர்த்தது. அதன் மனுவில் காணப்பட்ட சில வாசகங்கள் பெண்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டன. எனினும் முஸ்லிம் சட்ட வாரியம் முன்வைத்த வேண்டுதலில் இரண்டு அம்சங்கள் வரவேற்கத்தன. 1. சற்று முன் குறிப்பிட்ட டானியல் லத்தீஃபி வழக்கைச் சுட்டிக்காட்டி  உயிருள்ளவரை ஜீவனாம்சம் வழங்குதல் முதலியவற்றை சட்டவாரியமும் ஏற்றுக் கொண்டது. 2.அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறையைப் பொருத்த மட்டில் சில ஆண்டுகள் முன் இயற்றப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொதுவான ‘குடும்ப வன்முறைச் சட்ட’த்தைப் பயன்படுத்தி உரிய நிவாரணம் பெறலாம் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது.

ஆக, நீதிமன்றங்கள் முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்களில் இப்போது ஏற்படுத்தியுள்ள திருத்தங்களை ஓரளவுக்குச் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையே இந்திய மக்களின் பொதுவான கருத்தாக நாம் கருத இடமுண்டு.

தனிநபர் சட்டங்கள் என்பன ஒரு வகையில் சிறுபான்மைச் சமூகங்களின் அடையாளங்களில் ஒன்றாகிவிடுகின்றன. மேலும் மேலும் பாதகமான அரசியல் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுத் தாங்கள் இந்தியச் சமூகத்திற்குள் இரண்டாம் நிலையினராக முத்திரை குத்தப்படும் நிலையை மனதில் கொண்டு இன்று முஸ்லிம்கள் கொண்டுள்ள கவலையையும், எதிர்வினையையும் நாம் மதிப்பிட வேண்டும்.

ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சினையை ஆராயும்போது நாம் வரக்கூடிய முடிவுகளை இப்படிச் சுருக்கலாம்.

  1. பல்வேறுபட்ட சமூகங்கள் அருகருகே வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் ‘பொது சிவில் சட்டம்’, அல்லது ‘பொது தனிநபர் சட்டம்’ என்பன சாத்தியமில்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு மதத்திற்குமான தனி நபர்ச் சட்டப் பிரிவுகள் திருத்தங்களே செய்யப்படக் கூடாதவை என்பதல்ல. அவை திருத்தங்களுக்கு உட்பட்டவையே.
  2. தனிநபர்ச் சட்டங்களுக்கும் அரசியல் சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உள்ள முரண்களும், இடைவெளிகளும் காலப் போக்கில் களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. முஸ்லிம்களுக்குள்ளேயும் முற்போக்கு சக்திகளால் இவை முன்னெடுக்கபடுகின்றன. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன் (BMMA)’ எனும் அமைப்பு இது தொடர்பாக 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களிடம் கையொப்பங்கள் பெற்றுள்ளது. பல முஸ்லிம் ஆண்களும் அதில் கையொப்[பமிட்டுள்ளனர். இர்ஃபான் ஹபீப், ஜாவேத் ஆனந்த், ஃபைஸான் முஸ்தபா முதலான முஸ்லிம் அறிவுஜீவிகளும் இதை முன்னெடுக்கின்றனர். இது வரவேற்கப்பட வேண்டும்.
  3. இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சினை. உள்ளுக்குள் எழும் சீர்திருத்தக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ச்சி பெறும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். உரிய ஜனநாயகபூர்வமான விவாதங்கள், கருத்தொருமிப்பு ஆகியவற்றிற்கு இடமில்லாமல் அவசரமாகத் தலையிட்டு சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது. இதை அரசியலாக்கி மக்களைப் பிளவு படுத்தும் இந்துத்துவ அரசியல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..

 

முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

(இந்தக் குறிப்புகள் முத்தலாக் குறித்து திருக்குர்ஆன் என்ன சொல்கிறது, இதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா, எப்போது இது நடைமுறைக்கு வந்தது முதலான விடயங்களைப் பேசப் போவதில்லை. முத்தலாக்கைக் கடுமையாகக் கண்டிக்கும் சீர்திருத்தவாதிகளும், பெண்ணியர்களும், ஊடகங்களும் இந்த அவசரத்தில் முத்தலாக் வழங்கப்பட்டுவிட்டால் அத்தோடு அந்த மனைவியின் அனைத்து உரிமைகளும் பறிபோய் அவள் அனைத்தும் இழந்தவளாக்கப்படுகிறாள் என்றே முன் வைக்கின்றனர். அவர்களின் புரிதலுங் கூட அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்திய நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை, இருக்கிற முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படிப் பல தீர்ப்புகளில் முத்தலாக் சொல்லப்பட்ட மனைவியரின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளன என்கிறார் இத்துறையில் வல்லுனரான ஃப்ளேவியா ஆக்னஸ். அவருடைய கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்கள்)
1. Shamim Ara v State of UP வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு (2002): தன்னிச்சையான (arbitrary) முத்தலாக்கை சட்டபூர்வமானதாக ஏற்க இயலாது என்பது இவ்வழக்கில் தெளிவாக்கப்பட்டது. விவாகம் ரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மனைவி ஜீவனாம்சம் வேண்டி நீதிமன்றத்தை அணுகும்போது, ரத்து செய்த கணவன் தான் முத்தலாக் சொல்லி விட்டதால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை எனச் சொல்வதை ஏற்க இயலாது என்றது உச்சநீதிமன்றம். தான் முத்தலாக் சொல்லிவிட்டதாக இப்படிச் சொல்லிவிடுவது ஒன்றே பொறுப்பிலிருந்து தட்டிக் கழிக்கப் போதுமானதல்ல. திருக்குர் ஆனில் உள்ள நிபந்தனைக்கு (injunction) இணங்க முத்தலாக் ‘அறிவித்து ஒலிக்கப்பட’ (pronounce) வேண்டும்’.என நீதிமன்றம் வரையறுத்தது. ‘அறிவித்து ஒலித்தல்’ என்பது ‘உரத்து அறிவித்தல்’, ‘பிரகடனப்படுத்துதல்’, ‘உறுதிடக் கூறுதல்’, ‘தெளிவாக உரைத்தல், (“to proclaim, to utter firmly, to declare, to articulate”).

முன்னதாக கீழ் நீதிமன்றங்கள் கணவரின் கூற்றை ஏற்று அவர் முத்தலாக் சொல்லிவிட்டதகச் சொன்னதை அங்கீகரித்து ஜீவனாசப் பொறுப்பிலிருந்து அவரை விடுவித்திருந்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக,
“எந்த (இஸ்லாமிய) புராதனப் புனித நூற்களும், வேதங்களும் இத்தகைய விவாகரத்து வடிவத்தை ஏற்கவில்லை. கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக ஏதேனும் ஒரு ஆவணத்தில் ஒலிக்கப்பட்டுள்ளதாலேயே, அம் மனைவி அதை அறியும் நாளிலிருந்து முறைப்படி விவாகரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும் என எந்தப் (புனித)ப் பிரதியிலிருந்தும் எங்களுக்குக் காட்டப்படவில்லை”
என உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனினும் இந்த முக்கிய தீர்ப்பு போதுமான அளவு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆனாலும் இந்த அடிப்படையில் பிறகு பல தீர்ப்புகளில் முத்தலாக் சொல்லப்பட்டதாகக் கணவர்கள் சொன்னதை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. முத்தலாக் செல்லுபடியாகும் என்பதற்கு திருக்குர்ஆன் முன்வைக்கும் தடை ஆணை (நிபந்தனை- injunction) என்ன? தொடர்ந்து பார்ப்போம்.

2. Dagdu Pathan v Rohimbi pathaan (டக்டு பதான் எதிர் ரோஹின்பீவி பதான், 2002) வழக்கு: மும்பை உயர்நீதிமன்ற முழு அமர்வு கணவன் தன்னிச்சையாக விவாகரத்து செய்வதற்கு சட்ட ஏற்பு அளிக்க இயலாது என்றது. கீழ்க்கண்ட திருக்குர் ஆன் நிபந்தனையை அது ஆதாரமாகக் காட்டியது: “காரணமின்றி மனைவியை ரத்து செய்தல் என்பதும், கணவனின் சட்ட விரோதமான கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாலேயே பழிவாங்கும் நோக்கில் அல்லது துன்புறுத்தும் நோக்கில், ஷரியத்தின் விதிமுறைகளை மீறி விவாகரத்து செய்தல் என்பதும் ஹராம்.”

தன்னிச்சையான அறிவிப்பு என்பதற்கு அப்பால் கடைபிடிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நீதிமன்றம் சொன்னவை:

1. விவாகரத்துக்கான காரணங்களைத் தெரிவித்தல் 2. இடைநிலையாளர்களை நியமித்தல் 3. இரு தரப்பிற்கும் இடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல். விவாகரத்து செய்யப்பட்ட மனைவி நிவாரணம் வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் கணவன் தரப்பு தனது ரத்து நடவடிக்கை சட்டபூர்வமானதுதான் என நிறுவ மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை நிறுவ வேண்டும். “நான் முத்தலாக் சொல்லிவிட்டேன்” என ஒரு கூற்றை முன்வைப்பதை நீதிமன்றம் ஏற்க இயலாது என்றது.

3. Najmunbee v Sk Sikandar Sk Rehman (நஜ்முன் பீவி எதிர் ஏச்கே சிகந்தர் எஸ்கே ரஹ்மான், 2004) :
ஒரு முஸ்லிம் கணவன் விருப்பம்போல விவாகரத்து செய்ய இயலாது என்றது முபை உயர்நீதிமன்றம். தனது முடிவுக்கு ஆதாரமான காரணங்களை முன்வைக்க வேண்டும். நடுநிலையாளர்களைக் கொண்டு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம் சட்டம் நிபந்தனை ஆக்குகிறது.

4. Dilshad Begaum Ahmadkhan Pthan v Ahmadkhan Hanifkhan Pathan ((டில்ஷட் பேகம் அஹமட்கான் பதான் எதிர் அஹமட்கான் ஹனீஃப்கான் பதான், 2007):
கீழ் நீதிமன்றம் மாதம் 400 ரூ ஜீவனாம்சம் அளிக்க கணவனுக்கு உத்தரவிடுகிறது. மேல்முறையீட்டில் செஷன்ஸ் நீதிமன்றம், “ஒரு மசூதியில் வைத்து, சாட்சிகள் முன்னிலையில் முத்தலாக் சொன்னேன்” எனக் கணவன் கூறியதிக் கேட்டு முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டதாகச் சொல்லி ஜீவனாம்சத்தை ரத்து செய்தது. வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது. மசூதியில் சாட்சிகள் முன் முத்தலாக் சொல்லப்பட்டிருந்தாலும், 1.ரத்திற்கான காரணங்களை முன்வைத்தல் 2.நடுநிலையாளர்களை நியமித்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் திருமண உறவு தொடர்வதற்கு சாத்தியமில்லை என்பது நிரூபிக்கப்படாமை முதலான பிற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் இந்த விவாகரத்தைச் சட்டபூர்வமாக ஏற்க இயலாது என உயர்நீதிமன்றம் கூறியது. கணவன் தரப்பு ஒரு சமாதான உடன்படிக்கையை முன்வைத்தது. அதன்படி கணவன் மனைவியுடன் இசைந்து வாழவோ இல்லை ஜீவனாம்சம் அளிக்கவோ தவறினால் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மனைவிக்கு எழுதிவைப்பதாக ஏற்றுக் கொண்டிருந்தான். எனினும் உயர்நீதி மன்றம் இதை ஏற்க மறுத்தது. இந்த உடன்படிக்கையின்படி கணவன் நடந்து கொள்ளவில்லை என்பதால் மசூதியில் சாட்சிகள் முன் சொல்லப்பட்ட அந்த முத்தலாக்கைச் சட்டபூர்வம் அற்றது எனத் தீர்ப்பளித்தது.

5.  Riyaz Fatima v Mohd Sharif ((ரியாஸ் ஃபாதிமா எதிர் முகமது ஷரிஃப், 2007) : தான் முத்தலாக் சொல்லிவிட்டதால் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க இயலாது என்றான் கணவன். முத்தலாக் செல்லுபடியாகும் எனத் தான் பெற்றிருந்த ஃபத்வா நகல் ஒன்றையும் முன்வைத்தான். குழந்தையின் தந்தை குறித்த ஐயத்தையும் முன் வைத்தான். இதை ஏற்க மறுத்த நடுவர் நீதிமன்றம் மனைவி குழந்தை இருவருக்கும் ஜீவனாம்சம் வழங்க ஆணையிட்டது. ஆனால் செஷன்ஸ் நீதிமன்றம் கணவனின் மேல் முறையீட்டை ஏற்று கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தபோது முத்தலாக்கிற்கான தெளிவான வரையறைகளை அது வகுத்தது . அவை:

1. திருக்குர்ஆன் விதித்துள்ளவாறு முறையான காரணங்களைச் சொல்ல வேண்டும் 2. சாட்சிகள் முன் அல்லது எழுத்து மூலம் கடிதம் வாயிலாக முத்தலாக் சொல்லியிருக்க வேண்டும் 3. சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை கணவன் தரப்பு நிறுவ வேண்டும். 4. ‘மெஹர்’ பணம் திருப்பித் தரப்பட்டது, ‘இத்தாத்’ காலம் (விவாகரத்து அல்லது கணவனின் மரணத்துக்குப் பின் மனைவி கடைபிடிக்க வேண்டிய காத்திருப்புக் காலம்) கடைபிடிக்கப்பட்டது ஆகியன நிறுவப்பட வேண்டும்.

இந்த வழக்கில் முத்தலாக் சொல்லியதற்கான ஆதாரம் முறையாக நிறுவப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட தினத்தில் தான் முத்தலாக் சொல்லிவிட்டதாகக் கணவனின் கூற்றை மட்டும் வைத்து அதை ஏற்க இயலாது.
நான் தொடக்கத்தில் சொன்னது போல முத்தலாக் முறை சரியா தவறா என்கிற விவாதத்திற்குள் இக்கட்டுரை செல்லவில்லை. மறாக முஸ்லிம் தனிநபர் சட்டப்படி நமது நீதிமன்றங்கள் சில பாதுகாப்புகளை பெண்களுக்கு வழங்கியுள்ளதையும் நாம் கணக்கில் கொண்டே இது குறித்த விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டும். ஆனால் முஸ்லிம் வெறுப்பை ஏந்தி நிற்கும் நம் ஊடகங்கள் இவற்றைக் கணக்கில் கொள்வதே இல்லை என்பதைத்தான் ஃப்ளேவியா ஆக்னஸ் வலியுறுத்துகிறார்.

இதுபோல இன்னும் சில வழக்குகளையும் சொல்ல இயலும். சுருக்கம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். “நான் முத்தலாக் சொல்லிவிட்டேன். இதோ தலாக்நாமா. எனவே என் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது” என ஒரு முஸ்லிம் ஆண் எளிதில் சொல்லி விட்டுப் போய்விட முடியும் என சமூகத்தில் நிலவும் கருத்து தவறானது. மிகவும் படித்தவர்களும், தனக்கு நிறையத் தெரியும் என நினைப்பவர்களும் கூட இப்படிக் கருத்துக் கொண்டிருப்பதுதான் கொடுமை. எனினும் புகழ் பெற்ற ஷாபானு வழக்கில் (Mohd Ahmad Khan v Sha Bano Begum, 1985) வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பின் ராஜீவ் காந்தி அரசால் இயற்றப்பட்ட (1986) முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் விளைவாக இப்போது முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமை இல்லையே என ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் அச்சட்டம் இயற்றப்பட்ட பின் டானியல் லதீஃப் எதிர் இந்திய அரசு (Danial Latif v Union of India, 2001) எனும் வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு,1986ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினாலும், விவாகரத்து செய்யப்படும் முஸ்லிம் பெண் இச்சட்டத்தின் விளைவாகத் தன் ஜீவனாம்ச உரிமையை இழந்துவிட மாட்டாள் என்பதைத் தெளிவாக்கியது. ‘இத்தாத்’ காலம் மட்டுமின்றி உயிருடன் உள்ளவரை அவளுக்கு அந்த உரிமை உண்டு.

###

இறுதியாக இப்போது மீண்டும் இந்தப் பிரச்சினை மேலுக்கு வந்துள்ள பின்னணியைக் காண்போம்.

சென்ற அக்டோபர் 2015ல், “அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ள வண்ணம் மத வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்” என உச்ச நீதிமன்றம் கூறியது. இந்து வாரிசுரிமைச் சட்டம் பற்றிப் பேசுகையில் நீதிபதிகள் அனில் ஆர் தவே, ஆதர்ஷ் கே கோயல் ஆகியோர் இதைக் கூறினர். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தல், ஆண்களுக்குப் பலதார மண உரிமை வழங்குதல் ஆகியவற்றின் விளைவாக முஸ்லிம் பெண்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் பறிபோவதை அவர்கள் சுட்டிக் காட்டி, இது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் விளக்கம் கோரினர். தவிரவும் தேசிய சட்ட ஆணையத்தின் (National Legal Services Authority of India) கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்தப் பின்னணியில் பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஒரு பொதுநல வழக்கைத் (PIL) தொடர்ந்தார். கணவர் தன்மீது தொடுத்துள்ள ஒரு வழக்கை குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வந்த ஷயாரா பானு என்பவரது பிரச்சினையைத் தான் மீடியா கவனம் பெறும் நோக்கில் அவர் இப்படிப் பயன்படுத்திக் கொண்டார்.. இந்த 35 வயதுப் பெண் தனது 15 ஆண்டு காலத் திருமண வாழ்வில் ஏராளமான வன்முறையை அனுபவித்தவர். வரதட்சிணை கேட்டும் கொடுமைப் படுத்தப்பட்டவர்; தன் வீட்டாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டவர். கட்டாயக் கருச் சிதைவுகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு அவற்றால் உடல், மன நோய்களுக்கும் ஆளானவர். இறுதியில் அவரைத் தாய் வீட்டுக்கு அனுப்பி தபால் மூலம் தலாக்நாமா வையும் அனுப்பி வைத்தான் அவள் கணவன்.

ஷயாரா பானுவுக்கு நீதி பெற்றுத் தருவதுதான் அந்த வழக்குரைஞரின் நோக்கமாக இருந்திருந்தால், 1. இப்படித் தன்னிச்சையாக முத்தலாக் சொன்னதாக தலாக்நாமா அனுப்பியிருப்பது செல்லாது என வழக்காடி இருக்கலாம். 2. அல்லது தலாக்நாமாவை ஏற்றுக் கொண்டு, சற்று முன் கூறிய, 1986ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட ஜீவனாம்சத் தொகை அந்தப் பெண்ணுக்குத் தர வேண்டும் எனக் கோரி இருக்கலாம். 3. அதோடு 2005 ம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி அந்தக் கணவனுக்குத் தண்டனையும் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் பாலாஜி சீனிவாசன் இது எதையும் செய்யாமல் முத்தலாக் மூலம் முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். முன்னர் இதே கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட பொது நல வழக்குகளை, அவை மூன்றாம் நபர்களால் தொடுக்கப்பட்டவை என்பதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இம்முறை இந்த வழக்கை பாலாஜி சீனிவாசன் பாதிக்கப்பட்ட ஷயரா பானுவின் பெயரிலேயே தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல “ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை சொல்லும் முத்தலாக்கை (instantaneous triple talaq)” செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான் இப்போது வேண்டுதலாக வைக்கப்பட்டுள்ளது. முன்னர் தொடுக்கப்பட்ட வழக்குகளில் ஒட்டுமொத்தமாக முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வதையே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. ஆனால் திருக்குர் ஆனில் முத்தலாக் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்படி ஒட்டு மொத்தமாகச் செல்லாது என அறிவிக்க இயலாது என உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்திருந்தது. ஆனால் திருக்குர் ஆனில் இந்த மூன்று தலாக்குகளும் இப்படி உடனடியாகவன்றி 90 நாட்களில் சொல்லப்பட வேண்டும் என உள்ளது என்பதால் உடனடியாக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என இந்தப் பொதுநல வழக்கு கோருகிறது. முன்னதாக நீதிபதிகள் தவே மற்றும் கோயல் கேட்டுள்ள விளக்கங்களோடு இந்த வழக்கையும் இணைத்து அனைத்து மதத்தினருக்கும் ஒரே சிவில் சட்டம் (UCC) இயற்றுவது தொடர்பாக விசாரிக்க ஒரு சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

முத்தலாக் விவகாரம் இன்று மேலுக்கு வந்துள்ள பின்னணி இதுதான். முத்தலாக் விவகாரம் மேலுக்கு வந்துள்ளது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சிறுபான்மையினரின் ஒரு முக்கிய பிரச்சினையான முஸ்லிம் தனிநபர்ச் சட்டமே இப்போது கேள்விக்குரியது ஆக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்குப் பின்னும் முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமைகள் உண்டு, குடும்ப வன்முறைச் சட்டம் முதலான இதர சட்டங்களின் பாதுகாப்பும் முஸ்லிம் பெண்களுக்கு உண்டு என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகளும் முஸ்லிம் தனி நபர் சட்டத்தையே முற்றாக ஒழிக்க முனைகின்றன. இவர்களின் இந்த முயற்சி முஸ்லிம் பெண்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஆனதல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை சீனத் சவுகத் அலி முதலான முஸ்லிம் அறிஞர்களும் கூட ஏற்பதில்லை. இன்னொரு அறிஞரும், திட்ட ஆணைய உறுப்பினராக இருந்தவரும், முஸ்லிம் திருமணம் ஒன்றை காஸி யாக இருந்து நடத்தி வைத்தவருமான சைதா எஸ் ஹமீது அவர்கள் சமீபத்திய கட்டுரை ஒன்றில் (This Reform Must Begin Within, The Hindu, 27 April 2016) அச்சம் தெரிவித்திருப்பது போல உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையை எடுப்பது என்பது, முஸ்லிம் தனி நபர் சட்டத்தை ஒழிப்பது என்போரும், அது தொடர வேண்டும் என்போரும் முற்றிலும் எதிர் எதிராக அணி திரளுவதற்குத்தான் இட்டுச் செல்லப் போகிறது.
ஊடகங்கள் நடுவில் புகுந்து பிரச்சினையைப் பற்றி எரிய வைக்கப் போகின்றன. முத்தலாக் சட்டம் இருக்கும்போதே கூட முஸ்லிம் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்புகள் பற்றியெல்லாம் சிறிதும் பேசாமல் தீரெனத் தீவிரப் “பெண்ணிய” நிலை எடுத்து அவை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றப் போகின்றன.

சமீபத்தில் ஊடகம் ஒன்று ஷயாரா பானுவிடம், “முன்னைக் காட்டிலும் இப்போது மதப் பிரச்சினையில் சகிப்புத் தன்மை குறைந்துள்ளதா?” எனக் கேட்க அவரும், “அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் வகுப்பு வெறுப்பு ஒன்றும் இல்லை” எனக் கூறியுள்ளதாகச் செய்தி ஒன்று வந்தது. ‘பாரத் மாதா கி ஜே’ பிரச்சினை குறித்து கேட்டபோது, “எல்லா முஸ்லிம்களும் பாரத் மாதா கி ஜே”சொல்ல வேண்டும். அதில் எந்தத் தப்பும் இல்லை” எனக் கூறியதாகவும் செய்தி வந்தது.. இப்படியான கருத்துக்களைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லை என்பதல்ல. ஆனால் இந்த நேரத்தில் இந்தக் கேள்விகளை அவரிடம் முன்வைத்துப் பரபரப்பை ஏற்படுத்த முனையும் ஊடகங்களின் நோக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தில் தலையியிட உச்சநீதிமன்ற அமர்வுக்கு அதிகாரமில்லை என முன்வைத்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் (AIMPLB) வழக்கில் தலையிடப் போவது உறுதி. திருக்குர் ஆனின் அடிப்படையிலான சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என அது கூறலாம். இதெல்லாம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே வழி வகுக்கும். முன்னதாக. 1986ல் நாடாளுமன்றம் முஸ்லிம் பெண்கள் சட்டத்தை இயற்றியபோது அதை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்போது நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமை இல்லை எனக் கோருவதில் அர்த்தமும் இல்லை. இந்நிலையில், “முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வதை ஏற்கக் கூடாது என விவாதங்கள் நடக்கின்றன. கருத்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜனநாயக அடிப்படையில் ஏற்படும் இந்த மனமாற்றத்தை நீதிமன்றத் தல்கியீட்டின் மூலம் சிக்கலாக்க வேண்டாம்” என்கிற ரீதியில் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தை அணுகுவதே சரியாக இருக்க முடியும்.

(சட்ட வல்லுனர் ஃப்ளேவியா ஆக்னஸ் அவர்களின், “Muslim Women’s Rights and Media Coverage, EPW, May 28, 2016” எனும் கட்டுரையிலிருந்து வழக்கு விவரங்கல் எடுக்கப்பட்டுள்ளன.)