போருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்

நண்பர் யோகராஜா அவர்களை சுமார் முப்பதாண்டுகளாக அறிவேன். சுவிஸ்சில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த “மனிதம்” இதழின் சார்பாக அவர்களின் மாநாடொன்றிற்கு நான் அழைக்கப்பட்டு இருந்தபோது சுமார் ஒருவார காலம் லங்கென்தால் என்னுமிடத்தில் இருந்த அவரது வீட்டில்தான் தங்கி இருந்தேன். அதற்குச் சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு முறை ஸ்விஸ் செல்லும் வாய்ப்பு வந்தபோது அவரை ஒரு அரங்க இயக்குநராகச் சந்திக்க முடிந்தது. “சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி” சார்பாக இளைஞர்கள் சிலர்ருக்கு அவர் நாடகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களுக்கு மேல் அங்கு அவருடன் உரையாட அப்போது வாய்க்கவில்லை. சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் அவர் சென்னை வந்தபோது நான் குடந்தையில் இருந்தேன். அவரது குறும்படம் ஒன்றை சென்னையில் வெளியிட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அவரது மனைவிக்கு உடல் நிலை மோசமாகவே அவர் அந்தக் குறும்படத்தை இங்கு வெளியிடாமலேயே சுவிஸ் திரும்ப வேண்டியதாயிற்று.

அதற்குப் பின் இந்தக் குறுநூலின் ஊடாகத்தான் இன்று அவரைச் சந்திக்கிறேன். முப்பதாண்டுகால யுத்தத்தின் ஊடாக அவர் சுவிஸ்சுக்கு இடம்பெயருமுன் இலங்கை இடதுசாரி இயக்கங்களுடன்தான் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்துள்ளார். தமிழக இடதுசாரி இயக்கங்களுக்கும் இலங்கை இடதுசாரி இயக்கங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தமிழர்கள் மத்தியிலான சாதீயக் கொடுமைகள் பற்றிய அரசியல் பிரக்ஞையை ஈழ இடதுசாரி இயக்கங்கள் ஒப்பீட்டளவில் முன்னதாகவே பெற்றிருந்தன என்பதுதான் அது.  குறிப்பாக தோழர் சண்முகதாசனின் தலைமையிலான இயக்கம், “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணி” மூலமாக வீரஞ் செறிந்த பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. தமிழகத்திலும் பெரிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் இடதுசாரி இயக்கங்களால் திரட்டப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இங்கே “விவசாயக் கூலித் தொழிலாளிகள்” என்பதாகவே வர்க்க ரீதியில் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். சாதி, தீண்டாமை ஆகியவற்றை வெறும் வர்க்கப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் தனித்துவத்துடன் அவற்றை அணுக வேண்டிய அவசியம் 1980களின் பிற்பகுதியில் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில்தான் இங்கு உருவாகியது..

ஈழ மக்கள் எதிர்கொள்ள நேர்ந்த முப்பதாண்டு யுத்தத்தின் ஊடாக அவர்கள் வாழ்விலும் அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இடதுசாரி இயக்கங்களுக்கு அங்கு ஏற்பட்ட பின்னடைவு. போர் முடிந்த பின்னும்கூட இடதுசாரி இயக்கங்கள் இன்று அங்கு தலை எடுக்க இயலாத நிலையே உள்ளது. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் இது உலகளாவிய போக்காக இருந்த போதும் ஈழச் சமூகத்தின் பிரத்தியேக வரலாற்றினூடாக இந்தப் பின்னடைவு மிக அதிகமாகவே உள்ளது.

jafna fort

இந்தப் பின்னணியில்தான் முன்னாள் ஈழ இடதுசாரி இயக்கங்களில் செயல்பட்ட அனுபவங்களுடைய தோழர் யோகராஜாவின் இக்குறுநூல் வெளிவருகிறது. ஈழத்திலுள்ள சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்த அறிதல் எங்களைப் போன்றோருக்கு  எழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் மூலமாகவே கிட்டியது. அவரது இறுதிக்காலத்தில் அவருடன் மிக நெருக்கமாகப் பழகியவன் என்கிற வகையிலும் அவரது நூல்கள் பலவற்றையும் வெளியிடும் வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைத்தது என்கிற வகையிலும் அவரூடாகவே நாங்கள் ஈழ சாதிக்கொடுமைகளை அறிய நேரிட்டது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் முதல்முறையாக நான் இலங்கை சென்றிருந்தபோது பேரா. ந.ரவீந்திரன் அவர்களுடன் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த சங்கானை முதலான பகுதிகளுக்குச் சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.

போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று மீண்டும் அங்கு தீண்டாமை ஒழிப்பு குறித்துப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதை இந்நூல் அடையாளம் காட்டுகிறது. போரின் ஊடாக ஈழத் தமிழ்ச்சூழல் பேரளவில் மாறியுள்ளது. ஒரு தலைமுறை இன்று ஈழத்திலேயே இல்லை. அவர்கள் மேலை நாடுகளில் பரவிக் கிடக்கின்றனர். ஈழத்தின் இன்றைய தலைமுறை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீண்டாமைப் போராட்டங்களை எல்லாம் அறிந்தில.

போருக்குப் பிந்தி ஈழச் சமூகம் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் பழம் பெருமைகளை அசை போடுகையில் அதில் மீண்டும் சாதி, தீண்டாமை ஓர்மைகளுக்கும் ஒரு இடம் இருப்பதை யோகராஜா இந்நூல் மூலமாக அடையாளப்படுத்துகிறார். இதை எதிர்கொள்ள இப்போதும் தீண்டாமை ஒழிப்பு குறித்த பிரக்ஞை மற்றும் செயல்பாடுகளின் தேவை உள்ளதையும், ஆனால் அது உறுதியாகப் பழைய வடிவில் இருக்க இயலாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

நாம் பயன்படுத்தும் மொழி குறித்த பிரக்ஞை இன்று பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் கடந்த சில பத்தாண்டுகளில் அறிமுகமான அமைப்பியல் பின்நவீனத்துவம் முதலான சிந்தனைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. யோகராஜாவும் தீண்டாமை ஒழிப்பை நாம் பயன்படுத்தும் சொற்களிலிருந்து தொடங்க வேண்டும் என்கிறார். ‘பஞ்சமர்’, ‘தாழ்த்தப்பட்டவர்கள்’. ‘ஆதிக்கசாதி’, ‘நிலப்பிரபு’ முதலான சொற்களை விட்டொழிக்க வேண்டும் என்கிறார். அந்த இடங்களில் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தாத மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார். சாதி ஆதிக்கத்திற்கு ஆட்பட்ட சமூகங்களை “விளிம்புநிலைச் சமூகம்” எனவும், சாதி, சமூகக் கொடுமைகளை அரசியல் பிரக்ஞையுடன் முன்னெடுத்த முன்னோடிகளை “முன்னிலைச் சமூகம்” எனவும், சாதி ஆதிக்க சக்திகள் சமூக நகர்வுகளைப் பின்னோக்கித் தள்ளுவதால் அவற்றை “பின்னிலைச் சமூகம்” எனவும் அடையாளப்படுத்த வேண்டும் என்கிறார். நூல் முழுக்கவும் அவர் இவ்வாறே இந்தச் சொல்லாக்கங்களைப் பயன்படுத்தவும் செய்கிறார்.

சொற்களுக்கு இயற்கையான பொருள்கள் (அர்த்தங்கள்) கிடையாது என்பது அமைப்பியல் முன்வைக்கும் கருத்துக்களில் ஒன்று. எல்லாச் சொல்லும் பொருள் “குறித்தனவே” என்பதே தொல்காப்பியம் சொல்வதும். அந்த வகையில் சொற்கள் குறித்த எச்சரிக்கை வேண்டும் என்பது உண்மையே. எனினும் வெறும் சொல்லளவு மாற்றங்களின் ஊடாகவே எல்லாவற்றையும் நேர்ப்படுத்திவிடவும் முடியாது. தமிழகத்திலும் “உயர்சாதி”, “தாழ்ந்த சாதி” முதலான சொற்களை யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை. மாற்றாக “ஆதிக்க சாதி” “தலித்” முதலான சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். சொல்லுக்கு இயற்கையான பொருள் இல்லை எனும்போது அதன் மீது ஏற்றப்படும் அந்தப் புதிய பொருள் அதன் ‘இயல்பாக’ ஆகிவிடுகிறது. எந்த இழிவிலிருந்து விடுபடுவதற்காக நாம் அந்தச் சொற்களை அறிமுகப் படுத்துகிறோமோ அந்தச் சொற்களின் மீதும் அந்த இழிவு ஏறிக் கொள்கிறது. எனவே வெறுமனே சொல் மாற்றங்களால் மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிட இயலாது. யோகராஜாவும் அப்படிச் சொல்லவில்லை. அவர் தன் அனுபவங்கள் மற்றும் பார்வைகளின் ஊடாகப் பல விடயங்களை முன்வைக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்குள்ள இந்த சாதீய ஏற்றத்தாழ்வுகளைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் இவற்றைக் கடுமையான நடவடிக்கைகளின் ஊடாக ஒழிக்கவும்முயலவில்லை. அவர்களின் நோக்கம் தங்களது காலனியச் சுரண்டலைத் தக்கவைப்பதாகவே இருந்தது. இலங்கையில் அவர்கள் உருவாக்கிய “அடிமை விடுதலைச் சட்டம் (1844)”, பின்னர் சுதந்திர அரசால் உருவாக்கப்பட்ட “சமூகக் குறைபாடுகள் சட்டம் (1957)” எதுவும் தீண்டாமை ஒழிப்பில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

யாழ் கடல்

கிறிஸ்தவ மதமாற்றங்கள், சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஆச்சார்ய காத்தான் சூரன் முயற்சித்த மேல் நிலையாக்கச் செயற்பாடுகள், 1950 களில் கந்த முருகேசனார் முன்வைத்த பௌத்த மதமாற்றம் முதலியவற்றாலும் சாதி ஆதிக்கத்தை அசைக்க இயலவில்லை. மேல் நிலையாக்க முயற்சிகளின் ஊடாக ஒடுக்கப்பட்ட தம் சிறு தெய்வ வழிபாடுகளையும், அதனூடாகப் பெற்றிருந்த சுயேச்சையான சில பண்பாட்டு உரிமைகளையும் அவர்கள் இழந்ததுதான் மிச்சம்.

தீண்டாமை ஒழிப்பில் ஏதேனும் சில மாற்றங்கள் ஏற்பட்டதெனில் அது எம்.சி.சுப்பிரமணியம், சண்முகதாசன் முதலான இடதுசாரிகளின் தலையீடுகள் ஊடாகத்தான் தொடங்கியது. குறிப்பாக சண்முகதாசனது ‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி’யின் பின்புலத்தில் உருவான ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ முன்னெடுத்த பல வீரஞ்செறிந்த போராட்டங்கள் தீண்டாமை ஒழிப்பில் ஏற்படுத்திய தாக்கங்களே நினைவுகூரத் தக்கவையாக உள்ளன. டானியலின் எழுத்துக்கள் அனைத்தும் இன்று அந்த வரலாற்றின் சாட்சியங்களாக நமக்குக் கிடைக்கின்றன.

எனினும் முப்பதாண்டுப்போர் அதையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. போரினூடாக சாதீய ஆதிக்கம் ஓரளவிற்குக் கட்டுப்பட்டிருந்தாலும் வெளிப்படையான தீண்டாமையாக அமையாமல் புதிய வடிவங்களில் இப்போது தலைகாட்டுகிறது.

இதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு யோகராஜா பல முன்வைப்புகளை இந்நூலின் ஊடாக விவாதத்திற்குக் கொணர்கிறார். சாதி இழிவுகளுக்குக் காரணமான சலவைத் தொழில், சிகை அலங்காரம் முதலானவற்றை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆட்படுத்துதல், பனை முதலான யாழ்ப்பாணத்தின் இயற்கைச் செல்வங்களில் உரிய பங்கை இதுகாறும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சமூகங்களுக்கு அளித்தல், கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் முதலியவற்றை நோக்கி நகர்தல் என்பவற்றைச் சுட்டிக்காட்டும் யோகராஜா, “இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தும் வகையில் உயர்மட்ட ஆணைக் குழு ஒன்று அரச மட்டத்தில் நிறுவப்பட வேண்டும்” என்கிறார்.

பண்பாட்டுத் தளத்தைப் பொருத்தமட்டில் தம் சிறுதெய்வ வழிபாடுகள் முதலியவற்றை உதறி எறிந்துவிட்டுப் பெருந்தெய்வ வழிபாட்டில் சரணடைவதில் பயனில்லை என்பதையும் “கரையோர” சமூகம்போல அவரவர்களின் சமூக வழமைகளைச் சுயேச்சையாகக் கடைபிடித்தலே சரியாக இருக்கும் என்பதையும் தன் கருத்தாக முன்வைக்கிறார். எப்படி இன்று மேலை நாடுகள் தம் காலனியச் சுரண்டலின் குற்ற உணர்ச்சியோடு ஏதிலியர்களாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்கள் போன்றோருக்கும் குடியுரிமை குதலியவற்றை அளித்துள்ளனவோ அதுபோல இங்கு ஆண்டாண்டுகாலமாகத் தீண்டாமையை நடைமுறைப் படுத்தியவர்கள் மனம் திருந்துதலையும் ஒரு தீர்வாக முன்வைக்கிறார். ஆனால் அது உறுதியாகச் சாத்தியமில்லை என்பதே என் கருத்து. ஒடுக்கப்பட்டிருந்த இம்மக்கள் தம் கல்வித் தகுதியால் நிறுவனங்களில் நுழையும் வாய்ப்புகளைப் பெற்ற போதும் உயர் பதவிகள் அவர்களுக்கு இன்றளவும் மறுக்கப்படுவதை அவர் பிறிதோர் இடத்தில் சுட்டிக்காட்டுவதை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். “மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடாது” என்றொரு பழமொழி இங்கு உண்டு. இந்தியா போல இடஒதுக்கீடுக்கான சட்டங்கள் இருந்தால்தான் அது சாத்தியம் ஆகும். ஆனால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் அது எந்த அளவுச் சாத்தியம் என்பது எனக்குத் தெரியவில்லை.

அதேபோல புதிய வடிவங்களில் வெளிப்படும் நவீன தீண்டாமைகளை எதிர்கொள்ள மீண்டும் தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகள் இயக்கமாவதும் தவிர்க்க இயலாது.

இந்நூலில் சுட்டிக்காட்டப்படாத இன்னொரு ஆபத்தும் இங்கே கருதத் தக்கது. போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் இந்திய பாணியில் “சிவசேனை” போன்ற இயக்கங்கள் தலை எடுக்கின்றன. “பசுவதை ஒழிப்பு”, “மாட்டுக்கறி எதிர்ப்பு” முதலான இந்தியாவில் உருப்பெற்றுள்ள பாசிசக் கருத்தியல் இயக்கச் செயற்பாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு இவை உருப்பெறுகின்றன. கிறிஸ்தவ, முஸ்லிம் வெறுப்புகள் இதனூடாக மேலுக்கு வருவது உறுதி. ஏற்கனவே தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவுகள் அதிகமாகும் சூழலில் இந்த ஆபத்து இன்னும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனையும் இன்றைய ஈழச் சமூகம் கவனம் கொள்ள வேண்டும். சாதி மற்றும் தீண்டாமை என்பன தமிழ்ச் சமூகத்தின் பெருங் கேடு அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இது குறித்த ஒரு மீள் சிந்தனையைத் தொடங்கி வைக்கும் வகையில் யோகராஜாவின் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  அக்கறையுள்ள தோழர்கள் நவீன சிந்தனைகளையும், இயக்கப் போக்குகளையும் கவனத்தில் ஏந்தி, இன்றைய சூழலுக்கேற்ப இத்துறையில் கோட்பாட்டு ரீதியான அணுமுறைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

அ.மார்க்ஸ், சென்னை, டிச 31, 2019