மணிமேகலை தமிழ்க் காப்பியம் மட்டுமல்ல அது பவுத்த காப்பியமும் கூட 

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 6

(தீராநதி, ஜூன் 2017)

Mani 1

ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமல்ல, தமிழின் முக்கிய இலக்கண நூல்கள், நிகண்டுகள் எல்லாமும் கூட சமண பவுத்த மதங்களின் கொடை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவற்றில் பவுத்த நூல்கள் பலவும் அழிந்து பட்டன. முழு வடிவில் எஞ்சியிருப்பவை தமிழின் மணி முடிகளில் ஒன்றான மணிமேகலைக் காப்பியமும் இலக்கண நூலான வீரசோழியமும் மட்டுந்தான். எனினும் சில நூறு ஆண்டுகள் பின் தோன்றிய வீரசோழியத்தில் எங்கும் மணிமேகலை பற்றிய குறிப்பே இல்லை. மணிமேகலையில் எங்கும் நாம் இதுகாறும் பேசி வந்த அசோகச் சக்கரவர்த்தி பற்றி ஏதுமில்லை. இவை குறித்து ஏன் எனச் சிந்திக்கும்போது தமிழ்ப் பவுத்தம் குறித்த சில கூடுதல் தெளிவுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு விரிந்து கிடக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றை நாம் பல்வேறு வகைகளில் வகைப்படுத்திப் புரிந்து கொள்ள இயலும். சங்க காலத்தை ‘வீர யுகம்’ என வகைப்படுத்தும் அறிதல் முறை ஒன்றுள்ளது. அதேபோல ஆறாம் நூற்றாண்டுக்குப் பிந்திய சைவ, வைணவ பாசுரங்களின் காலத்தைப் ‘பக்தி யுகம்’ எனச் சொல்வதுண்டு. இதற்கு இடைப்பட்ட ஐம்பெருங் காப்பிய காலத்தை ஒரு வகையில் ‘அற யுகம்’ எனச் சொல்லல் தகும். இந்த ஐம்பெருங் காப்பியங்கள் மட்டுமின்றி திருக்குறள் உட்பட்ட பிற்சங்க நூல்கள் பலவும் அறநெறிகளை உயர்த்திப் பிடித்தவை. அற வாழ்வின் மூலம் மட்டுமே நீங்கள் இறுதி நிலையை ‘நிர்வாணத்தை’ எட்ட முடியும் எனக் கூறியவை. அடுத்த கட்டமாக வெளிப்படும் பாசுரங்கள் அறத்தின் இடத்தில் பக்தியை வைத்தன. இறை பக்தியையும், இறையடியார்களுக்குச் செய்யும் சேவையையும் இறுதி உய்விற்கு அவை நிபந்தனையாக்கின. ஆனால் அற நூல்களோ அற வாழ்வை மட்டுமே முதன்மைப் படுத்தின.

சமண மரபில் வந்துள்ளதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. கனாத்திறம் உரைத்த காதையில் 55 – 64 ம் வரிகளில் தேவந்தி கண்ணகிக்கு அறிவுரைப்பாள். முற்பிறவியில் கண்னகி தன் கணவனுக்காக நோன்பிருக்கத் தவறியதால் விளைந்த சாபத்தின் விளைவே இப்பிறவியில் அவள் அனுபவிக்கும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் எனக் கூறி, இத்துன்பம் நீங்க புகாருக்கு அருகில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் இரு பொய்கைகளில் புண்ணிய தீர்த்தமாடிக் காமவேளை வணங்கிச் செல்லுமாறு தேவந்தி கூறுவாள். “பீடன்று”, அதாவது அது எங்கள் இயல்பன்று எனக் கூறி அகல்வாள் கண்ணகி. ‘தீர்த்த மூடம்’, ‘தெய்வ மூடம்’ என இவற்றைச் சமணம் விலக்கும். சிரமண மதங்களைப் பொருத்தமட்டில் இவை மூட நம்பிக்கைகள். துயர் நீங்க அறவாழ்வு மட்டுமே ஒரே வழி.

அதே நேரத்தில் சிரமண மரபிற்குள் சிலம்பும், மணியும் மட்டும்தான் முற்றிலும் தமிழ் மரபில் உருவான கதைகள் என்பதையும் நாம் காணத் தவறக் கூடாது. கண்ணகியின் கதை சங்கம் தொட்டுப் பழகி வந்த ஒன்று (புறம் 144, நற்றிணை 216). மணிமேகலை சிலம்பின் தொடர்ச்சியாக  அமைந்த ஒன்று. கண்ணகி, மணிமேகலை, மாதவி, சித்திராபதி, மாசாத்துவன், அறவணர், இளங்கோ, சாத்தனார் ஆகிய கதைமாந்தர்கள் இரண்டு காப்பியங்களிலுமே பொதுவானவர்களாக உள்ளனர். என்றபோதிலும் பல்வேறு நிலைகளில் இரண்டுக்கும் பாரிய வேறுபாடுகளும் உண்டு. மணிமேகலை உறுதியாகவும் வெளிப்படையாகவும் பவுத்த அறங்களை உயர்த்திப் பிடிப்பது மட்டுமின்றி பிற மதங்களின் தர்க்கங்களை வெல்வதாகவும், சில நேரங்கள் அவற்றை இழிவு செய்வதாகவும் அமையும். சிலம்பை அப்படிச் சொல்ல இயலாது. ஓரளவு சமயப் பொறையுடையது எனக் கூறத் தக்கதாக அது அமைகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியன சமணக் கருத்தாக்கங்கள் தமிழ்ச் சூழலில் பிரிக்க இயலாமல் விரவிக்கிடந்த ஒரு காலகட்டப் படைப்புகள் மட்டுமன்று, அவற்றை ஏற்றுக் கொண்டவையும் கூட.

Capture

இறுதியில் வெளிப்படுத்தும் அற்ச்சீற்றம் தவிர பிற அம்சங்களில் சிலப்பதிகாரக் கண்ணகி வெறும் காவிய நாயகி மட்டுமே. ஆனால் மணிமேகலையோ ஒரு காவிய நாயகி மட்டுமல்ல. அறக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்தவள்; நடைமுறைப்படுத்திவள்; வாதிட்டு வென்றவள். intellectual எனும் சொல்லுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவள்.

பவுத்த தர்க்கம் அதன் உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டப் படைப்பு மணிமேகலை. முந்தைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் புகார், மதுரை, வஞ்சி முதலான நகரங்களுக்கு அப்பால் காஞ்சி எனும் ஒரு புதிய நகரம் முதன் முதலில் இதில்தான் தலை காட்டுகிறது. துறைமுக வசதியற்ற அந்நகர் ஒரு மிக முக்கியமான அறிவு மையமாக உருப்பெறுகிறது. மிகப் பெரிய அளவில் பவுத்த தத்துவ விவாதங்கள்  அங்கு அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தன. முக்கிய பவுத்த தர்க்க நூல்கள் பலவும் கூட அப்போது எழுதப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் .சமகால பவுத்த தர்க்கங்களத் தான் விளங்கிக் கொண்ட அளவிற்குத் தன் காவியத்தில் பதிவு செய்கிறார் வளங்கெழு கூலவணிகன் சாத்தனார். வசதி மிக்க ஒரு தானிய வணிகக் குலத்தில் பிரந்தவர் என்பது தவிர கூடுதலான தகவலேதும் அவர் குறித்து நமக்கில்லை.  சங்கப் பாடல்களில் காணப்படும் சீத்தலைச் சாத்தனார் இவரில்லை என்பது மட்டும் உறுதி.

அகவற்பவில் எழுதப்பட்ட இலக்கியம் மணிமேகலை. சாத்தனார் மற்றும் மணிமேகலையின் காலக் கணிப்பில் கவனம் கொள்ள வேண்டிய புள்ளிகளில் ஒன்று இது எனினும் அதன் மொழி, உள்ளூறை ஆகியவற்றைப் பார்க்கும்போது அதைச் சங்க காலத்தை நோக்கி ரொம்பவும் பின்னுக்குத் தள்ளிவிடவும் இயலாது. திருக்குறளுக்குப் பிந்தியது. விருத்தத்திற்கு முந்தியது என மணிமேகலையின் காலத்தைக் கணிக்கலாம். அந்த வகையில் கி.பி 5ம் நூற்றாண்டு என்கிற காலக் கணிப்புதான் ஓரளவு பொருத்தமாகத் தெரிகிறது. அப்படியாயின் அது களப்பிரர் அல்லது பல்லவ மன்னர்கள் எழுச்சி பெற்ற காலம் என்றாகிறது. எனில் மணிமேகலையில் மூவேந்தர்கள் புகழப்படுவது ஏன் என்கிற கேள்விக்கு நம்மிடம் விடை இல்லை.

நன்னூலுக்கு மயிலைநாதர் எழுதிய உரையில்தான் (கி.பி 14ம் நூ) முதன்முதலில் ஐம்பெருங் காப்பியங்கள் எனும் சொற்றொடர் காணப்படுகிறது என்பர். காப்பியங்களுக்குள்ள அழகுகளும் அலங்காரங்களும் குறைவுபடாமல் நிறைந்திருந்த போதிலும் சிலம்பையும் மணியையும் முழுக்கவும் வடமொழிக் காவிய மரபில் பொருத்திப் பார்த்துவிட முடியாது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தண்டியின் ‘காவ்யதர்சம்’ தமிழில் தண்டியலங்காரமாக உருப்பெற்றது 12ம் நூற்றாண்டில்தான். சிலம்பும் மணியும் இவை கூறும் வடமொழிக் காவ்ய மரபுகளைக் காட்டிலும், தனித்துவமான தமிழ் இலக்கியக் கொள்கைககளாக அறியப்படும் அகம், புறம் மற்றும் திணை, துறைக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவை என்பதை மிக விரிவாக பார்த்தசாரதி, பவ்லா ரிச்மான் முதலானோர் நிறுவியுள்ளனர்.

சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையின் 171-176 வது வரிகள்; அந்திமாலை சிறப்புசெய் காதையின் 33-43 வரிகள்: கடலாடு காதையின் 125-127 வரிகள் என்பன பரத்தையர் சேர்க்கையின் ஊடாக சொத்துக்களை அழித்தல் முதலிய முல்லைத் திணைக்குரிய கூறுகளுடனும், கானல் வரியின் 11-24, 28-46, 48-52 முதலான வரிகள் காதற் துரோகம் மற்றும் ஊடல் என்கிற மருதத் திணைக் கூறுகளுடனும், வேனிற் காதையின் 66-77 வரிகள் பிரிவாற்றாமை என்னும் நெய்தற் திணைக் கூறுகளுடனும், கனாத்திறம் உரைத்த காதையின் 72-79 வரிகள் உடன்போக்கு என்னும் பாலைத் திணைக்குரிய கூறுகளுடனும் எவ்வாறு அமைந்துள்ளன என்று பார்த்தசாரதி மிக விரிவாகத் தன் நூலில் (R.Parthasarathi, The Cilappatikaram:The Tale of an Anklet) விளக்குவார்.

மணிமேகலை எவ்வாறு தமிழ் இலக்கியக் கொள்கைகளோடு தனக்கே உரிய தனித்துவத்துடன் பொருந்திப் போகிறது என்பதை இக்கட்டுரைத் தொடரின் போக்கில் விரிவாகப் பார்ப்போம். இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியது இதுதான். வடமொழிக் காப்பியக் கொள்கைகளான குறைகளற்ற நாயகன், அறம், பொருள், இன்பம் முதலான நான்கு புருஷார்த்தங்கள், விரிவான போக்களக் காட்சிகள், முசூடல் அல்லது திருமண வைபவம் போன்ற மங்கலக் காட்சிகள் அமைதலலென்பன போன்ற வடமொழி இலக்கணங்களிலிருந்து பெரிய அளவில் நம் தமிழ்க் காப்பியங்கள் வேறுப்பட்டுள்ளன. அதனால்தான் இவற்றைக் குறிக்க அடியார்க்குநல்லார் ‘தொடர்நிலைச் செய்யுள்’ எனும் ஒரு கருத்தக்கத்தைத் தேர்வு செய்தார்.

சமஸ்கிருத இலக்கியக் கோட்பாடுகளும் இறுக்கமாகப் பின்பற்றப்படவில்லை, வைதீக மதிப்பீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிற காரணங்களுக்காகவே இடைக்காலத்தில் பக்தி இலக்கியத்திற்கு முந்திய இலக்கியங்கள் தமிழ்ச் சூழலில் புறக்கணிக்கப்பட்டன. அவற்றைப் பயில்வது மத விரோதம், ஒழுக்கக் கேடு என்கிற கருத்து இங்கு வலுவாக முன்வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில்  அது ஒட்டுமொத்தமாக தமிழையே பழிக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றது. ‘இலக்கணக் கொத்து’ ஆசிரியரான சுவாமிநாத தேசிகர் (17ம் நூ)  சிவஞான சுவாமிகள் ஆகியோர் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். தமிழ் சமஸ்கிருதத்தைச் சார்ந்துள்ளது எனவும். சமஸ்கிருதத்தைவிடக் கீழானது எனவும் தேசிகர் குறிப்பிட்டார். ஒரு வகையான தணிக்கை முறைக்கு தமிழ் ஆட்படுத்தப்பட்டது. தேசிகர் படிக்கக் கூடாதவை எனத் தணிக்கை செய்தவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு ஆகியன அடக்கம். தீவிர சைவரான அவர் இராமன் கதையையும் தவிர்க்கச் சொன்னார். இவை மட்டுமல்ல நன்னூல் போன்ற “குப்பைகளை”க் கற்பவர்களையும் அவர் “வாணாளை வீணே கழிப்பர்” என்றார்.

Mani 4

18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான சுவாமிகளும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி ஆகிவற்றை வாசிக்கலாகாது என்றார். நல்ல சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இது தகுதியானதல்ல என்பது அவர் கருத்து. அவரது மாணவரான கச்சியப்ப முனிவர் தமது மாணவர்கள் சமண நூல்களில் ஆர்வம் கொண்டிருப்பதைக் கவனம் கொண்டு அவர்களை ஈர்ப்பதற்காக கடும் சைவைக் கருத்துக்கள் திணிக்கப்பெற்ற ‘தணிகைப் புராணத்தை’ எழுதினார். இப்படியான தணிக்கை ஒரு நூற்றாண்டு காலம்  தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டதன் விளைவாக நான்கைந்து தலைமுறை மாணவர்கள் இவற்றை அறியாமற் போயினர். இதனூடாக இந்நூற் சுவடிகளைப் பாதுகாப்போரும் குறையலாயினர். பழம் நூல்கள் பல அழிவுற்றதற்கு இதுவும் ஒரு காரணம். 19ம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த ஆசிரியரான மினாட்சிசுந்தரம் பிள்ளையும் இத்தகையோரே. அவரது புகழ்மிக்க மாணவரும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட பல நூல்களைப் பதிப்பித்தவருமான உ.வே.சாமினாத அய்யர் இந்நுல்களில் பல உள்ளதை அவரிடமிருந்து வெளியேறின பின்பே அறிய நேர்ந்தது.

இக்கால கட்டத்தில்தான் தமிழ் முது நூல்கள் பலவும் அச்சேறின. அந்தப் பதிப்பு முயற்சிகளிலும் இது வெளிப்பட்டது. பல திருத்தங்கள், இணைப்புகள், செருகல்கள், நீக்கல்கள் ஆகியவற்றுடன் இந்த அச்சுப் பதிப்புகள் வெளியாயின. கம்ப இராமயணத்தைப் பதிப்பித்த ஒரு வைணவர் இராமன் இலங்கைக்குச் செல்லுமுன் இராமேசுவரத்தில் சிவனை வணங்கிய வரலாற்றைச் சொல்லும் இராமேஸ்வரப் படலத்தையே நீக்கிப் பதிப்பித்ததாக தொழுவூர் வேலாயுத முதலியார் தனது ‘ஏரெழுபது’ மற்றும் ‘திருக்கை வழக்கம்’ நூற்பதிப்பில் (1886) பதிவு செய்துள்ளார். இப்படி நிறையச் சொல்லாம்.

மணிமேகலைக்குச் சற்றுப் பிந்திய சமண நூலலான நீலகேசி அதனை ‘மணிமேகலை துறவு’ எனக் குறிப்பிடுவதிலிருந்து அப்படி ஒரு பெயரும் அதற்கு விளங்கியது தெரிகிறது.  பெண்கள் அறிவில் யாருக்கும் இளைத்தோர் அல்ல எனச் சொல்வதோடு நிற்காமல் வீடு பேறடைவதற்கான வழிகளில் ஒன்றான துறவு நிலைக்குரியவர்களாகவும் பவுத்தம் கட்டமைத்தது. சிரமண மரபில் வந்த காவியங்களான மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி மூன்றிலுமே பெண்கள் துறவு நிலை அடைவது முக்கிய பாடுபொடுளாகின்றது. இம்மூவருமே மாற்றுத் தத்துவங்களில் வல்லவர்களாக உள்ள ஆடவர்களை வெல்வதாகப் படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. பாலியலுக்கும் நிர்வாணத்திற்கும் உள்ள தொடர்பும் சமண, பவுத்த நூல்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக்கப்பட்டன. பெண்களின் ஞானத் தேடலுக்கும் ஆன்மீக நாட்டத்திற்கும் அவை தம் கதவுகளை எப்போதுமே திறந்து வைத்திருந்தன. குடும்பத்தின் குறுகிய சுவர்களிலிருந்து அவர்கள் விடுபட்டு ஞானவெளியில் சஞ்சரிக்க அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளித்தன. அந்த மதங்கள் மட்டுமல்ல அவற்றின் மடாலயக் கதவுகளும் அவர்களுக்குத் திறந்திருந்தன.

சமண நெறி ரிஷபதேவர் தொடங்கி மகாவீரர் ஈறாக 24 தீர்த்தங்கரர்களை ஜீன நிலை அடைந்த வணக்கத்துக்குரியவர்களாகப் போற்றுகிறது. இந்த வரிசையில் 19 வது தீர்த்தங்கரராக அவர்கள் வணங்கும் மல்லிநாதரை ஸ்வேதாம்பரர்களும் யாப்பானியர்களும் ஒரு பெண் தீர்த்தங்கரர் ஆக ஏற்றுக் கொண்டனர். எனினும் இன்னொரு சமணப்பிரிவினரான  திகம்பரர்கள் அவரைப் பெண்ணாக ஏற்பதில்லை.

Mani 5

ஸ்வேதாம்பரர்கள் மல்லிபாயை ஜீன நிலை அடைந்தவராக ஏற்பதற்கு பெண்ணாக இருந்த போதும் அவரிடம் இருந்த ஆண் தன்மையே (‘பும்வாத’) காரணம் என விளக்கம் அளிப்பர். எனினும்  மேற்கு கர்நாடகப் பகுதியில் செழித்திருந்த சமணப் பிரிவினரான யாப்பானியர்கள் அப்படிக் கருதுவதில்லை. ஜீன நிலை அடைய பாலியல் ஒரு பொருட்டல்ல என்பது அவர்களின் கருத்து. எப்படி காமம், கர்வம் முதலான உணர்வுகள் எல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக உள்ளனவோ அதேபோல எல்லாவற்றையும் கடந்த உயர்நிலையை அடைய பாலியல் அடையாளம் ஒரு தடையல்ல என்பது அவர்களின் கருத்து. நிர்வாணம் அடைய ‘சம்யக் ஞானம்’, ‘சம்யக் தர்சனம்’, ‘சம்யக் சரித்ரா’ (சரியான அறிவு, சரியான பார்வை, சரியான நடத்தை) ஆகியன இருந்தாலே போதும்.

 

(அடுத்த இதழில் ஒரு பவுத்தப் பிரதியாக வாசிப்பது குறித்து இன்னும் சில)