காந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு

(கோபால கிருஷ்ண பாரதி, காந்தி, சங்கராச்சாரி: நமக்கு அளிக்கும் அதிர்ச்சிகள் எனும் தலைப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது)

“காந்தி  தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி காந்தியியல் ஆய்வில் ஆர்வம் உள்ள என் நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். காந்தி இப்படி தினத்திற்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிப்பதற்கு காரணங்கள் உண்டு. இங்கு, குறிப்பாகத் தமிழகத்தில் காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் ஏராளமான தவறான கருத்துக்கள்தான் அவை. காந்தியின் எழுத்துக்கள் சுமார் 99 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருந்தும் அதில் சில வரிகளைக் கூடப் படிக்காமலேயே காந்தியை அவதூறு செய்பவர்கள்தான் ஏராளம்.

நண்பர் எனக்கு அனுப்பி வைத்த அந்தத் தகவல் இதுதான். டிசம்பர் 3, 1932 அன்று புனே நகர காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு காந்தி எழுதிய கடிதம்தான் அது. காந்தியும் அப்போது சிறைப்பட்டிருந்தார். அவர் இருந்தது எரவாடா சிறையில் ரத்னகிரி சிறையில் இருந்த சத்தியாக்கிரகி ஒரு வருக்கு நேர்ந்த ஒரு பிரச்சினை குறித்து அந்தச் சிறை அதிகாரிக்கு காந்தி எழுதிய கடிதம்தான் அது.

பிரச்சினை இதுதான்: ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்த அப்பா சாகேப் பட்டவர்தன் என்பவர் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியிருந்தார். இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற சிறை அதிகாரியை வற்புறுத்திக் காந்தி எழுதிய கடிதம்தான் இது..

அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.

வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஏதோ ஒரு ‘மேல்’ சாதிக்காரர்.  துப்புரவுத் தொழில் செய்யும் ‘பங்கி’ சாதி அல்லாதவர் என அவரைப் பற்றி காந்தி அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். அந்தக் காலத்திலேயே எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது.

அதென்ன அவர் விரும்பிய பணி?

சக கைதிகளின் மலத்தை அள்ளும் துப்புரவுப் பணிதான் அது.

நமக்கு இது பைத்தியக்காரத் தனம் எனத் தோன்றலாம்; நம்மில் சிலருக்கு ஆத்திரம் கூட வரலாம்.

துப்புரவாளர்கள் மட்டுமல்ல யாருமே மலம் அள்ளக் கூடாது என்றல்லவோ ஒரு தலைவர் போராடியிருக்க வேண்டும்? இதையெல்லாம் நவீன கழிப்பறைகள் மூலம் அன்றோ ஒழித்திருக்க வேண்டும்? – என நமக்குத் தோன்றலாம்.

காந்தி ஒன்றும் இந்த மாதிரிப்பிரசினைகளில் நவீனமாதலையோ எந்திரமயமாதலையோ எதிர்த்தவரல்ல. இராட்டை சுற்றிய அவர்தான், “உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெசின்” எனச் சொன்னவரும் கூட. ரயில், ஒலிபெருக்கி (மைக்) ஆகியவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்திய தலைவர் அவர். அவரைப் பொருத்த மட்டில் எந்திரங்கள் என்பன மனிதனைக் கடும் உழைப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அது ஒரு சொகுசாக (luxury) ஆவதைத்தான் அவர் வெறுத்தார், எதிர்த்தார்.

அது 1930 கள். இன்று 2030 ஐ நெருங்கிக் கொண்டிருந்தும் கூட நம்மால் இன்னும் கையால் மலம் அள்ளும் கொடுமையை  ஒழிக்க இயலவில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை யோசிக்க வேண்டும்.

எல்லோரும் மலம் அள்ள வேண்டும் என அவர் சொன்னதை எல்லோரும் பின்பற்றினார்கள் என்பதல்ல.. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை அவர் ஒழித்துவிட்டார் எனவும் நான் சொல்ல வரவில்லை.

இன்றுவரை நம்மாலும் கூட ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற அவலத்தை ஒழித்துவிட முடியவில்லையே?

இது குறித்த ஒரு குற்ற உணர்வை மேல்தட்டினர் மத்தியில் ஏற்படுத்த காந்தி முனைந்தார். குறைந்தபட்சம் அவரவர் மலத்தை அவரவரே அள்ளித் தூய்மை செய்யும் மனநிலையையாவது உருவாக்க  முனைந்தார்.

தவிரவும் தொழிலில் உயர்வில்லை தாழ்வில்லை என்கிற நிலையை அடையும் ஆன்மீகப் பயிற்சியாகவும் அவர் இதை மேற்கொண்டார். ஆம், இராட்டை சுழற்றுவதாயினும், மலம் அள்ளுவதாயினும் இவை அவரது அரசியல் மட்டுமல்ல. அவரது அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்த ஆன்மீகப் பயிற்சியும் கூட.

இந்தச் சம்பவம் பூனா ஒப்பந்த காலத்தில் நடந்தது. இரட்டை வாக்குரிமையை முறியடிக்கும் காந்தி இன்னொருபக்கம் தன்னை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் தந்திரமாக இதைச் செய்தார் என யாரும் நினைத்துவிடக் கூடாது,

இந்தச் சம்பவத்திற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தென் ஆப்ரிகாவிலேயே காந்தி இதைத் தொடங்கிவிட்டார். அவரது கொம்யூனில் அனைவரும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தாக வேண்டும். கொம்யூனில் இருந்த ஒரு கிறிஸ்தவ தலித் தோழரின் மலத்தை அள்ளித் தலையில் சுமந்தவாறு மரப்படிகளில் அன்னை கஸ்தூரி பா இறங்கி வந்தபோது அது தளும்பி அவர் மீது வழிய, அன்னை கஸ்தூரி பா அவர்கள் காந்தியிடம் “இதெல்லாம் நியாயமா” என்கிற ரீதியில் கேட்க, காந்தி அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன  வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது.

இங்கு இன்னொரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’குமரியும் காசியும்’ எனும் நூலில் ஒன்றைச் சொல்வார். அவர் சந்தித்தவர்களுள் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை வினோபா வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவு செய்வார்.  இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலும் என அவர்கள் இதைச் செய்யவில்லை. இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட.

#    #    #

இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னும் இரு வியப்புக்குரிய செய்திகளை நான் அறிய நேர்ந்தது. புகழ்பெற்ற நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் கம்பெனியச் சேர்ந்த ராஜாராம் பாகதவர் அவர்களின் நந்தனார் நாடகம் ஒன்றை காந்தி தொடங்கி வைத்திருக்கிறார் என்பது ஒரு செய்தி. கோயம்புத்தூரில் 1934 பிப்ரவரி 6 அன்று அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. மாலை 9.30 மணி அளவில் அங்கு வருகை தந்து நிகழ்ழ்ச்சியையும் தொடங்கி வைத்திருக்கிறார் காந்தி. அன்றைய நாடக வசூல் ஹரிஜன சேவா நிதிக்கு வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் தலித் மக்கள் மத்தியில் சேவை செய்து வந்த சுவாமி சகஜனந்தர் அவர்கள் நிறுவிய நந்தனார் ஆலயத்திற்கு காந்தி அடிக்கல் நாட்டியது குறித்த செய்தி இன்னொன்று. இது 1927 செப்டம்பர் 11 அன்று நடைபெற்றது.  இந்தியச் சத்தியாக்கிரகிகளில்  ஒளிமிக்க நட்சந்திரங்களில் ஒருவர் நந்தனார் எனவும், சிதம்பரத்திற்குள் நுழைந்ததும் முதற் பணியாக நந்தனார் கோவில் வாயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை மிகப் பெருமையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டதோடு, “கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்படும் நந்தனார் எப்படி கடவுளை நேருக்கு நேராகக் கண்டாரோ அப்படியே நாமும் கடவுளை நேருக்கு நேராகக் காணும் ஆலயமாக இது அமையும் என நான் நம்புகிறேன். இந்த ஆலயதிற்கு வரும் ஒவ்வொருவரும் இது ஒரு விடுதலையின் ஆலயமாக அமையவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். நந்தனார் தன் உயிர்க் குருதியை அளித்து இந்த ஆலயத்தில் நுழைய முயன்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்; ஆனால் அவர் நுழைய முயன்ற ஆலயம் வெறும் கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதல்ல. அவர் நுழைய முயன்ற அந்த ஆலயத்தில் அவரது சொந்த ஆன்மாவிற்குள் விடுதலையைக் கண்டார். ஆகையால் இந்த ஆலயத்தில் வழிபடவரும் நீங்கள் உங்கள் சொந்த வாழ்வின் ஊடாகவும் உங்களின் அகத்தூய்மையைப் பேண வேண்டும். இந்த ஆலயம் என்பது அந்த அகத் தூய்மையின் வெறும் குறியீடுதான். பிராமணர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் வணங்கப்படும் சைவ, வைணவ ஆலயங்கள் பலவும் உண்மையில் கடவுள் குடியிருப்பவை அல்ல என்பதை நான் அறிவேன்” என்கிற பொருள்பட அன்று அங்கு அவர் உரையாற்றினார்.

நந்தனாரின் ஆலய நுழைவுப் போராட்டத்தை அஹிம்சை வழியிலான ஒரு சத்தியாக்கிரகப் போராட்டமாகக் கண்ட காந்தி அகத்தூய்மைதான் உண்மையான ஆலய வழிபாடு எனவும், இங்கே பார்ப்பனர்களால் கொண்டாடப்படும் சைவ, வைணவ ஆலயங்கள் பலவும் கடவுள் குடியிருப்பவை அல்ல எனவும் சொல்வதன் மூலம் அங்கே வருபவர்கள் அத்தகைய அகத் தூய்மையைப் பேணுவதும் இல்லை, அதனால் அவர்களுக்கு விடுதலையும் வாய்க்கப்பெறுவதில்லை என்பது கவனத்துக்குரியது.

இங்கொன்று ஒப்பு நோக்கற்குரியது. சேக்கிழாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியுள்ள நந்தனார் கதையில் பண்ணையடிமைகளாக உள்ள தலித்களைக் கொடுமை செய்யும் நிலப்பிரபுவான வேதியரின் பாத்திரம் கிடையாது. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரக்கதையில்தான் அப்படியான கதைச் சித்திரிப்பு முதன் முதலில் தொடங்குகிறது. மகா பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் இவ்வாறு கதை திருத்தப்பட்டதைக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. அவரது புகழ் பெற்ற “தெய்வத்தின் குரல்” நூலில், “நந்தனார் : உண்மையை வென்ற கற்பனை” என்கிற தலைப்பில் அதைக் காணலாம் (http://www.kamakoti.org/tamil/dk6-19.htm).

தவிரவும் இப்படித் திருத்தப்பட்ட கதையையே இன்று கதாகால்ட்சேபக்காரகளாலும் காந்தியவாதிகளாலும் பிரபலப்படுத்தப்படுவதாகச் சொல்லி நொந்து போகிறார் சந்திரசேகரேந்திரர்.

“உங்களில் நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத ப்ராம்மண பண்ணையாரிடம் படாத பாடு பட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது. பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தம் தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாஸனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் துடவை என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய ஸொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது.”

என்று கூறும் சந்திரசேகரேந்திரர் இப்படியாகக் கதையைத் திருத்திய கோபாலகிருஷ்ண பாரதியாரைக் கரித்துக் கொட்டவும் தயங்கவில்லை.

“கொடுங்கோல் ப்ராம்மணர்களை ஸ்ருஷ்டி பண்ணியதும் ஒரு ப்ராம்மணர்தான்” எனவும், “பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளக ஆக்கி அவரிடம் கொடுமைப் படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே ஸீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திரக் கீர்த்தனையாகப்” பாடிவிட்டார் எனவும் பாரதியாரைக் காய்வார்.

கோபாலகிருஷ்ண பாரதியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம்  தனது நந்தனார் சரித்திரத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கக் கேட்டபோது அவர் இப்படிக் கதையை மாற்றியதற்காகச் சிறப்புப் பாயிரம் தர முதலில் மறுத்தார் என்பதை முந்திய கட்டுரையில் சொல்லியிருந்தேன். சுவாமிநாத அய்யர் இதை மூடி மறைத்துப் பூசி மெழுகியிருப்பார். இலக்கணப் பிழைகள் காரணமாகவே நந்தன் சரித்திரக் கீர்த்தனைக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாயிரம் எழுத மறுத்துவிட்டதாக அவர் பொய்கூறியிருப்பார்.

ஆனால் இங்கே. சந்திரசேகரேந்திரர் உண்மையைப் பட்டென்று போட்டு உடைத்துள்ளார்.

“அந்தக் காலத்தில் மஹா வித்வான் மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வஹித்தவர். அவர் ப்ராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை என்று முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபாலக்ருஷ்ண பாரதி போனார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, நீங்கள் இதை முக்யமாக ஸங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ ஸங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்த (உ.வே) ஸ்வாமிநாதையர் போன்றவர்களிடம் மனஸில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது”

என்பது சங்கராச்சாரியாரின் கூற்று. சந்திரசேகரேந்திரரின் கூற்றுகளை தெய்வ வாக்காகவே அவரைப் பின்பற்றுவோர் இன்று வணங்குகின்றனர். ஆனால் அறிஞர் கைலாசபதியும் நாமும் எந்தக் காரணத்திற்காக கோபாலகிருஷ்ண பாரதியைப் போற்றுகிறோமோ அந்தக் காரணத்திற்காகவே அவரை, ”பிராமணராக இருந்தபோதும் குறுகிய ஜாதி” நோக்கில் பார்த்தவர் எனக் கடிகிறார் சந்திரசேகரர். எளிய மக்களிடம் அநுதாபம் இருந்தாலும் அதற்காக இப்படிசெய்யக் கூடாது எனப் புலம்புகிறார். “பொயடிக் லைஸென்ஸுக்கு (கவி சுதந்திரத்துக்கு) ஏதாவது வரம்பு இருந்தால் தேவலை என்று தோன்றுகிறது…..” எனக் கவிச்சுதந்திரத்திற்கு ஒரு எல்லையுண்டு என எச்சரிக்கிறார்.

இப்படிச் சொல்லி வருகையில்தான் இறுதியாக இந்தத் திருத்தப்பட்ட. நந்தன் கதையை, ”கதாகாலட்சேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லோரும் விசேஷமாகப் பிரபல்யப்படுத்தி” விட்டார்களே எனப் புலம்புகிறார்.

“காந்திய தேசாபிமானிகளுக்கு” நந்தன் வரலாற்றில் இருந்த இந்த ஆர்வமும், அந்த ஆர்வத்தின் மீது சங்கராச்சாரிகள் கொண்ட காழ்ப்பும் நாம் இதுவரை கவனத்தில் கொள்ளாத ஒன்று.

தீண்டாமை ஒழிப்பில் காந்தியர்களின் செயல்பாட்டிற்கும் அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் செயல்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நான் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். அம்பேத்கரும் பெரியாரும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியவர்கள். அவர்களை இந்த இழிவுக்கு எதிராக எழுச்சியுறச் செய்தவர்கள். காந்தியோ யார் இந்த பாதிப்பிற்குக் காரணமானார்களோ அவர்களை நோக்கிப் பேசினார். அவர்களை இந்தக் கொடுமைக்கு எதிராக மனந் திருப்ப முயன்றார். தீண்டாதார் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக நந்தன் கதையையும் கூட இந்த நோக்கில் பயன்படுத்த காந்தியர்கள் முயற்சி செய்துள்ளதைத்தான் காந்தி நந்தன் நாடகத்தைத் தொடங்கி வைத்ததும், சகஜானந்தர் கட்டிய நந்தன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதும் காட்டுகின்றன. காந்தியின் இந்தத் தலையீடு சனாதனத்திற்கு ஆபத்து என்பதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ சங்கராச்சாரி போன்றோர் இதைத் தெளிவாக உணர்ந்திருந்தனர் என்பதைத்தான் இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது..

காந்தி குறித்து நாம் தெரிந்துகொண்டுள்ளது கையளவு. தெரியாதது உலகளவு.