கார்ல் மார்க்ஸ் தொடர் 6
மக்கள் களம், அக் 2017
மார்க்சியம் பொருளாதாரத்தை வெறுமனே ‘பொருளாதாரம்’ எனச் சொல்லி முடித்துக் கொள்வதில்லை. ‘அரசியல் பொருளாதாரம்’ என்றே அது சொல்கிறது. பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றையும் அது தனித்தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தே வரலாற்றில் வளர்ந்துள்ளன. முதலாளிய உற்பத்தி முறையில் உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் விளைவான வர்க்கப் போராட்டம் குறித்த பகுப்பாய்வு இதனூடாகத் தவிர்க்க இயலாததாகிறது. மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம் நூலுக்கு முன்பாக மார்க்ஸ் தொகுத்த குறிப்புகளால் ஆன Grundrisse, மார்க்சின் மூலதனம், எங்கல்சின் ‘அரசியல் பொருளாதார விமர்சன வரைவு’ (An outline of the critique of Political Economy) முதலியன மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளாக உள்ளன. இவற்றின் அடிப்படையில் பின் வந்த சந்ததியினர் விளக்கம் அளிக்கும்போது அந்த விளக்கங்களுக்கிடையே சில நுணுக்கமான வேறுபாடுகள் அமைந்தபோதும் மார்க்சீயப் பாரம்பரியத்தில் வருகிற யாரும், சமூகம், அரசியல் மற்றும் இவற்றின் அடிப்படையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றைப் பொருளாதாரத்திலிருந்து பிரித்து அணுகுவதில்லை.
இந்த அணுகல்முறையின்படி ‘மூலதனம்’, ‘உழைப்பு’ ஆகிய இரண்டும் இரு எதிரெதிரான வர்க்கங்களை அடையாளப்படுத்துகின்றன. மூலதனம் என்பது உற்பத்திக்குத் தேவையான அடிப்படைகளை, “அதாவது உற்பத்திச் சாதனங்களை” (means of production) சொந்தமாக அதாவது உடமைகளாகக் கொள்வதைக் குறிக்கிறது; உழைப்பு என்பது “சுதந்திரமான கூலித் தொழிலாளிகளை” (free wage laborers)) குறிக்கிறது. ஆம், முதலாளியச் சமூகத்தில் தொழிலாளி ஒருவகையில் சுதந்திரமானவரே. உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை அவருக்குக் கிடையாது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் நிலவுடைமை அல்லது அடிமை முறைகளில் உள்ளது போல உழைப்பைச் செலுத்துபவர் முதலாளிக்கு அடிமை இல்லை. அவர் தனது உழைப்புச் சக்தியை யாரிடமும் விற்றுக்கொள்ளும் சுதந்திரம் படைத்தவர். இந்தச் சுதந்திரம் முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகளில் கிடையாது. முதலாளிய உற்பத்திமுறையில் மூலதனம் (முதல்) (capital) என்பதே எல்லாவற்றையும் இயக்குவதாக இருந்து செய்யப்பட்ட முதலீட்டிற்கு லாபத்தை உறுதி செய்கிறது. இந்த வகையில் மூலதனமாக (C) முலீடு செய்யப்படும் பணம் (M) மேலும் பணத்தை (M) ஈட்டித் தருகிறது. இதை M -> C -> M எனக் குறிப்பர்.
மார்க்சீயம் பொருளாதாரத்தைச் சமூகத்துடனும் அரசியலுடனும் இணைப்பதன் வழியாகப் பொருளாதாரச் செயல்பாட்டை பொருளாதாரத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் விரிவாக்குகிறது. இதனால் மார்க்சுக்கு முந்தியும் பிந்தியும் வந்த பொருளியல் வல்லுனர்கள் தொட இயலாத இடங்களை மார்க்சியத்தால் தொட முடிந்தது. எடுத்துக்காட்டாக நாம் இந்தத் தொடரில் முன்னர் விளக்கமாகப் பார்த்த ‘அந்நியமாதல்’ எனும் விளைவைக் குறிப்பிடலாம். தொழிலாளி மூலதனத்தால் சுரண்டப்படுவது மட்டுமல்ல. அவன் தனது உற்பத்திச் செயல்பாடுகளிலிருந்தே அந்நியமாகிறான். இதையெல்லாம் மார்க்சியப் பொருளாதாரத்தால் மட்டுமே விளக்க முடியும்.
தவிரவும் முதலாளிய உற்பத்தி முறை என்பது பல்வேறு வகைகளில் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம். முந்தைய உற்பத்தி முறைகள் அத்தனை எளிதாக சந்தையின் தர்க்கங்களுக்கு வசப்படுவதில்லை. மாறாக முதலாளியம் அனைத்தையுமே விற்பனைக்கும் லாபம் சம்பாதிப்பதற்கும் உரிய “பண்டம்” (commodification) ஆக்குவதன் மூலம் சமூக உறவுகளையே சந்தையின் தர்க்கத்துக்குக்குள் கொண்டுவந்து விடுகிறது. எல்லா மானுட உறவுகளும் வாங்குதல், விற்றல், லாபம் தேடுதல் என்கிற சுழலுக்குள் உள்வாங்கப்பட்டதாய் மாறிவிடுகின்றன. எல்லாமே பரிவர்த்தனைக்குரிய வணிக உறவுகளாகி விடுகின்றன.
மார்க்சீயப் பொருளியல் இவற்றை எல்லாம் அடையாளம் கண்டு விளக்குவதோடு அமையாமல், இவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் சிந்திக்கிறது. முதலாளியத்தின் இந்தக் கூறுகளைத் தாண்டி ஒரு நீதியான சமூகத்தைக் கட்டமைப்பது குறித்தும் அது பேசுகிறது. முதலாளியத்தைத் தாண்டிய சோஷலிசச் சமூகங்களைக் கட்டமைக்கும் முயற்சிகள் பலவும் சமீப காலங்களில் தோல்வியுற்றதை அடுத்து மார்க்சீயமே தோற்றுவிட்டதாக உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சொல்லாடல்கள் 2007-2008 ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியை (global credit crunch) விளக்க முடியாமல் திணறியதைப் பார்த்தோம். அதை ஒட்டி மீண்டும் மார்க்சியப் பொருளாதாரம் குறித்துக் கவனம் திரும்பியதையும் கண்டோம். அதேபோல 1990 களின் இறுதியில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் (Asian Contagion) முதலாளியப் பொருளாதாரத்தால் விளக்க இயலவில்லை. 2007-08 கடன் நெருக்கடியை ஒட்டி உலகெங்கிலும் வெளிப்பட்ட போராட்ட வடிவங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் (வால்ஸ்ட்ரீட் அமர்வு, அராபிய வசந்தம் முதலியன) ஆகியவற்றில் மேலெழுந்த முழக்கங்கள் மார்க்சீயக் கோட்பாடுகளைச் சார்ந்து அமைந்ததும் கவனத்துக்குரியது.
அரசியல் பொருளாதாரம் என்பது பண்டங்கள், தேவை, விநியோகம், விலை (commodities, demand, supply, price) ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளை ஆராய்வதோடு முடிந்துவிடுவதல்ல என்கிற வகையில்தான் மார்க்சியம் முன்வவைக்கும் அரசியல் பொருளாதாரம் பிற முதலாளியப் பொருளாதாரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. முதலாளியச் சமூக உறவுகளை அது துல்லியமாக முந்தைய கால உறவுகளிலிருந்து வேறுபடுத்தி அணுகுகிறது. அந்த வகையில் அது பொருளாதாரத்தைச் சமூக உறவுகளுடன் மட்டுமின்றி வரலாற்றுடனும் பொருத்தி அணுகுகிறது.
இதன் பொருள் மார்க்ஸ் திடீரென முளைத்து எல்லாவற்றையும் புதிதாகச் சொன்னார் என்பதல்ல. முதலாளியம் மேலெழுந்த காலகட்டத்தில் அதை எதிர்த்து நிலவுடைமை உற்பத்தி முறைக்கு ஆதரவாகப் பழைய தலைமுறையினர் முதலாளிய மாற்றங்களை எதிர்த்தனர். நிலவுடமையுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டு ரீதியில் முற்போக்கான முதலாளிய முறைக்கு ஆதரவாக அந்தப் புதிய பொருளாதார மாற்றங்களை ஆதரித்து எழுதிய செவ்வியல் பொருளியல் அறிஞர்களான ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ ஆகியோரின் பங்களிப்புகளிலிருந்தே முதலாளியப் பொருளாதாரத்தின் மீதான தன் விமர்சனத்தை மார்க்ஸ் தொடங்கினார்.
இந்தச் செவ்வியல் பொருளாதார அறிஞர்கள் உருவாக்கிய உழைப்புக் கோட்பாடு (labour theory), முதலாளிய அமைப்பின் மையமாக விளங்கும் லாபத் தேட்டம் என்பதன் ஆதாரம் தொழிலாளிகளின் உழைப்புதான் என்பதைச் சுட்டிக் காட்டியது. உற்பத்திப் பொருள்களின் மதிப்பின் (value) பின்புலமாக தொழிலாளியின் உழைப்பு அமைந்ததை அது ஏற்றுக் கொண்டது. சந்தையில் விற்க உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பு என்பது அதற்கான உழைப்பு மேற்கொள்ளப்படும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது என்கிற அளவிற்கு ஸ்மித்தும் ரிக்கார்டோவும் கருத்துக்களை முன்வைத்தனர்.. பொருட்களை உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பு நேரத்தின் அடிப்படையிலேயே பண்டப் பரிவர்த்தனைகள் (commodity exchange) மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர்கள் கூறினர்.
எனினும் உழைப்புக்கான கூலி என்கிற அம்சத்திற்கு உரிய முக்கியத்துவத்தை ஆடம் ஸ்மித் அளிக்கவில்லை. பொருள்களுக்கிடையேயான பரிவர்த்தனையில் சமத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான பரிவர்த்தனையின் சமத்துவம் குறித்துச் சிந்திக்கவில்லை. எனவே ‘லாபம்’ எவ்வாறு உருவாகிறது என்பதை அவரால் விளக்க முடியவில்லை இந்நிலையில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான பரிவர்த்தனை சமமாக இருந்தால் முதலாளிக்கு லாபம் எப்படிக் கிடைக்கும் என்கிற கேள்வியை ரிகார்டோ எழுப்பினார்.
19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட அதிவிரைவான தொழில்மயம், அதன் மூலம் உற்பத்தித் திறன் பெருகுதல் ஆகியவற்றின் மீது கவனம் கொண்ட ரிக்கார்டோ பொருள் உற்பத்திக்கான நேரம் குறையக் குறைய அதற்குத் தேவையான உழைப்பின் கூலியும் குறைகிறது. அதுவே முதலாளிக்கு லாபமாகச் சேர்கிறது என்றார்.
அக்கால மாற்றுச் சிந்தனையாளர்கள அதை ஏற்கவில்லை.தொழிலாளர்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுகிறது என அவர்கள் முழக்கம் எழுப்பினர். தொழிலாளர்களுக்கு அவர்களது உழைப்பிற்கான முழுப்பயனும் போய்ச் சேர வேண்டும் என்றனர். 1830 தொடங்கி ஐரோப்பாவில் இந்த அடிப்படையில் வர்க்கப் போராட்டங்கள் முகிழ்த்தன. இந்தப் பின்னணியிலேயே பொருளின் மதிப்பு குறித்த உழைப்புக் கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மேலுக்கு வந்தது. இந்தக் கோட்பாடு முதலாளியச் சுரண்டலை அப்பட்டமாக வெளிக் கொணர்ந்து விடும் என உணர்ந்த முதலாளியப் பொருளியலாளர்கள் லாபம் உருவாகுதல் குறித்த பல்வேறு அபத்தமான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். முதலாளியச் சொத்து குவிப்பு குறித்து அவர்கள் மிகவும் தவறான கருத்துக்களைச் சற்றும் வெட்கமின்றி முன்வைத்தனர். பிற்காலத்தில் தாட்சர், ரீகன் ஆகியோரின் பொருளாதார அணுகல்முறைகள் இத்தகைய தவறான கருத்துக்களின் அடிப்படைகளிலேயே அமைந்தன. அவர்களின் வாய்கள் ஆடம் ஸ்மித், ரிகார்டோ போன்ற பெயர்களை உச்சரித்தபோதும் அந்த அறிஞர்களின் நேர்மையான அணுகல் முறைக்கும் தாட்சர் – ரீகன் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.
இந்தக் கட்டத்தில்தான் (1840) மார்க்சும் ஏங்கல்சும் களத்தில் தோன்றி ஸ்மித்தும் ரிகார்டோவும் எந்த இடத்தில் விட்டார்களோ அந்த இடத்திலிருந்து மதிப்பு குறித்த உழைப்புக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர்.
லாபம் உருவாதல் குறித்த சரியான புரிதலை அடைய “உழைப்பு” என்பதை மிகவும் தூலமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது மார்க்சீய அணுகல்முறையாக இருந்தது. உழைப்பின் மதிப்பு என்பது இரு தன்மைகளைக் கொண்டதாக அமைகிறது. ஒரு பக்கம் எல்லாப் பண்டங்களையும் போலவே உழைப்புக்கு ஒரு “பயன் மதிப்பு” (use value) உண்டு.
பயன் மதிப்பு என்றால் என்ன?
எந்த ஒரு பண்டத்தின் மதிப்பும் எவ்வாறு உருவாகிறது? மனிதர்களுக்குப் பயன்படுபவற்றையே ‘பண்டம்’ என்கிறோம். ஒவ்வொரு பண்டத்திற்கும் ஒவ்வொரு விதமான பயன்பாடு உண்டு. அரிசி ஒரு வகையில் பயன்படுகிறது. பஞ்சு அல்லது காகிதம் வேறு வைகளில் பயன்படுகின்றன. இந்தப் பயன்பாடுகளைப் பொருத்து அவற்றுக்கும் மதிப்புகள் உருவாகின்றன. இந்தப் பண்டங்களைப் போன்றதுதான் உழைப்பும். கணினியில் ‘புரோக்ராம்’ செய்வதும் உழைப்புதான். மரத்தை இழைத்து நாற்காலி செய்வதும் உழைப்புதான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பயிற்சியும் உழைப்பும் தேவைப்படுகிறது. இந்தப் பயன்பாட்டில் அடிப்படையில் ஒரு பண்டம் அடையும் மதிப்புத்தான் ‘பயன் மதிப்பு’ . தொழிலாளிகளின் உழைப்புத் திறன் அவற்றின் மீது செயல்படுவதன் ஊடாகப் பொருள்களின் இந்தப் பயன் மதிப்பு கூடும்.
இப்படிப் பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கும் தேவையான பல்வேறு தூலமான (concrete) உழைப்புகளும் ஒரு “கருத்துருவான மட்டத்தில்” (abstract level) ஒன்றிணைகின்றன. இரண்டு பொருள்களின் (அதாவது பண்டங்களின்) உருவாக்கங்களுக்கும் தேவையான இப்படியான கருத்துருவான உழைப்பின் அடிப்படையில் சமனப் படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட அளவிலான சராசரிச் சமூக உழைப்பாக (social labour) அவற்றைச் சுருக்கலாம். ஒரு புரிதலுக்காகச் சொல்வதானால் ஒரு பேனா செய்வதற்கான சமூக உழைப்பும் 10 பென்சில்கள் செய்வதற்கான சமூக உழைப்பும் ஒரு சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருக்கலாம். இப்படி இந்தச் சராசரிச் சமூக உழைப்பின் அடிப்படையில்தான் அந்தப் பொருளின் பரிமாற்ற மதிப்பு (exchange value) உருவாகிறது.
பொருள்கள் சந்தையில் விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த ‘விலை’ எனும் கருத்தாக்கம் ஒருவகையில் மிகவும் நவீனமான ஒன்று. சில மொழிகளில் அச் சொல் 13 ம் நூற்றாண்டுக்குப் பின்பே உருவாகியுள்ளது. வரலாறுத் தொடக்கத்தில் பொருட்கள் பண்டப் பரிவர்த்தனையாகவே பல காலம்வரை பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தப் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக இருந்தது அவற்றை உருவாக்குவதற்கான மேலே குறிப்பிட்ட இந்தச் சமூக (சராசரி) உழைப்புதான்.
ஆனால் சந்தை என வரும்போது பொருள்கள் ‘பண்டமாக’ (commodity) எதிர்கொள்ளப்படுகின்றன. அங்கு இந்தச் சராசரிச் சமூக உழைப்பின் அடிப்படையில் பொருட்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை. மாறாக அவை விற்கப்படுகின்றன. அப்படி விற்கப்படும்போது அவை இந்தச் சராசரிச் சமூக உழைப்பின் மதிப்பைக் காட்டிலும் கூடுதலான ‘விலை’ க்கு விற்கப்படுகின்றன. அதுவே முதலாளியிடம் லாபமாகக் குவிகிறது. இதைச் சற்று விளக்குவோம்.
ஆடம் ஸ்மித் அல்லது ரிக்கார்டோவைப் போலன்றி மார்க்ஸ் இந்த பயன் மதிப்பு , பரிமாற்றமதிப்பு என்கிற கருத்தாக்கங்களை மனித உழைப்பிற்கும் பொருத்திப் பார்த்தார். அதன்படி உழைப்புத் திறனின் விலையும் சமூக ரீதியில் தீர்மானிக்கப் படுகிறது. அதுதான் பொருளின் பரிமாற்ற மதிப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பொருள் கூடுதலான விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது மனித உழைப்பின் அடிப்படையிலான உற்பத்தியின் ஊடாக அதன் மதிப்பு கூடுகிறது. இந்த மதிப்புக் கூடலைத்தான் நாம் “உபரி மதிப்பு” (surplus value) என்கிறோம். எப்படி இந்த உபரி மதிப்பு உருவாகிறது? சந்தையில் ஒரு பண்டத்திற்கு எவ்வாறு மதிப்பு கூடுகிறது?
மூலப் பொருட்களின் மதிப்பு+ உற்பத்திச் சாதனங்களின் தேய்மானம் (அதாவது எந்திரங்களின் தேய்மானம், அவற்றை இயக்குவதற்கான மின்சாரம் முதலியவற்றின் மதிப்பு முதலியன) + தொழிலாளியின் உழைப்புத் திறனின் (labor power) மதிப்பு + உபரி மதிப்பு = பண்டத்தின் மதிப்பு.
மேலே உள்ள சமன்பாட்டில் மூலப் பொருட்களின் மதிப்பு ‘நிரந்தர மூலதனம்’ (constant capital) எனப்படும். . எனவே உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு கூட்டலில் இதற்குப் பங்கில்லை. தொழிலாளியின் உழைப்புத்திறன் நுகரப்படுவதன் (consumption) ஊடாகத்தான் (அதாவது தொழிலாளியின் உழைப்பின் ஊடாகத்தான்) உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பு கூடுகிறது. இந்த உபரி மதிப்பே முதலாளியிடம் லாபமாகக் குவிகிறது.
ஆனால் தொழிலாளியின் இந்த உழைப்புத் திறனுக்கான கூலி கணக்கிடும்போது அவனது உழைப்புத் திறனால் உருவாக்கப்படும் இந்த உபரி மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அந்தத் தொழிலாளியின் உழைப்புத் திறனை மறு உற்பத்தி செய்வதற்குத் தேவையான குறைந்த பட்சக் கூலி மட்டுமே அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அதாவது அவனது உயிரையும் உழைப்புத் திறனையும் தக்க வைப்பதற்குத் தேவையான கூலி மட்டுமே அவனுக்குத் தரப்படுகிறது. முன் குறிப்பிட்டவாறு சமூக உழைப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட சராசரி விலைக்கும் தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கும் இடையிலான வேறுபாடு முதலாளியின் கையில் லாபமாகச் குவிகிறது. இதையே மார்க்சியம் உபரி மதிப்பு (surplus value) என்கிறது. தொழிலாளியின் உழைப்புத் திறனும் கூடவிற்பனைக்கும் வாங்குவதற்குமான ஒரு பண்டாமாக்கப்படுவது இப்படித்தான். .
(தொடர்ச்சி அடுத்த இதழில்)