“இந்தியச் சாதி அமைப்பு சூப்பர்….”

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய் கூறினாரே அவர்தான்) ஸ்மிருதி ராணி ஒருவரை நியமித்துள்ளார். அவர் பெயர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் (இப்படி ஒரு பெயரை நீங்கள் எங்காவது வரலாறு தொடர்பாகக் கேள்விப்பட்டது உண்டா?). தகுதியற்ற நபர் என வலாற்றறிஞர் ரொமிலா தப்பார் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.பா.ஜ.க ஆட்சியில் இதெல்லாம் வியப்புக்குரிய ஒன்றல்ல.

சென்றமுறை பி.ஆர். குரோவர் என்று ஒரு ஆளை முரளி மனோகர் ஜோஷி இந்தப் பதவியில் நியமிக்கவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது எனவும், 1992ல். பாபர் மசூதி (தானாக) விழுந்தது எனவும் புத்தகம் எழுதியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப் பட்டது. ICSSR அமைப்பின் தலைவராக பி.எல் சோந்தி என்கிற நபர் அப்போது நியமிக்கப்பட்டார். அவருடைய தகுதி பாரதீய ஜனசங் கட்சி சார்பில் ஒருமுறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இந்த நியமனங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே ICHR ல் பணியில் இருந்த தகுதி பெற்ற வரலாற்றறிஞர்கள் 18 பேர்களைப் பணி நீக்கமும் செய்தார் ஜோஷி.

சரி அந்தக் கதை கிடக்கட்டும். இப்ப இன்றைய கதைக்கு வருவோம். நம்ம இன்றைய தலைவர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு – ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார்.அதன் முத்தாய்ப்பான வரிகள்:

“The (caste) system was working well in ancient times and we do not find any complaint from any quarters against it. It is often misinterpreted as an exploitative social system for retaining economic and social status of certain vested interests of the ruling class”

இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாம். எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லையாம். இது எப்டி இருக்கு?

வரலாற்றறிஞர் டி.என்.ஜா இது குறித்து அடித்துள்ள கமென்ட்:

“அவருக்குத் தெரியாது போல இருக்கு .அந்த ‘சிஸ்டம்’ இப்ப இருந்தா மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென”

(சரி. யாராவது ஒருத்தர் பா.ம.க நிறுவனருக்கு இந்தத் தகவலைச் சொல்லுங்கப்பா, இந்த அற்புதமான கருத்தைச் சொன்னதற்காக எல்லப்பிரகத சுதெர்ஷன் ராவைப் பாராட்டி அறிக்கை விடச் சொல்லுங்க.)

முரளி மனோகர் ஜோஷியின் இன்னொரு சூப்பர் நியமனம்
“You are appointed…….”

இப்ப சொல்லப் போறது இன்னும் சூப்பரான தகவல்.

சென்ற ஆட்சியில் ஜோஷி NCERT அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் கே.ஜி. ரஸ்தோகி என்பவரை நியமித்தார். இவரது சுய சரிதை 1998ல் வெளிவந்திருந்தது. இதை அவர் ஆர்.எஸ்,எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. சி. சுதர்சன். ஆர்.எஸ்.எஸ் .பிரச்சாரக்’ ஆக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார்.
அந்தச் சுய சரிதையில் ஒரு சம்பவம்:

புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி.

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)

(பார்க்க: அ.மார்க்ஸ், ‘ஆட்சியில் இந்துத்துவம்’, பக்.48)