அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகள் இங்கு நடக்காது
மோடி அரசு தனது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை நிறைவேற்ற ஓராண்டு காலகெடு நிர்ணயித்துள்ளது. . இதன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் நமது ரேஷன் அட்டையைக் காட்டிப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியுமாம். மாநிலங்களின் கருத்துக்கள் எதையும் கேட்காமல் கட்டாயமாக நிறைவேற்ற ஆணையிடப் பட்டுள்ளது.. அது மட்டுமல்ல ‘பி.ஓ.எஸ்’ கருவியின் மூலம் ரேஷன் வாங்க வருபவரின் விரல் ரேகையை ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் தண்ணீர் இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, வேலை வாய்ப்பு அருகிக் கொண்டே போகிறது. அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாத அரசு இப்படி நாட்டை “ஹை-டெக்” ஆக்குவதில் மும்முரம் காட்டுகிறது. இவற்றால் ஏழை எளிய எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் படும் அவதிகள் ஏராளம். உழைப்பாளிகளாக உள்ள இம்மக்களின் விரல் ரேகைகள் தேய்ந்ததின் விளைவாக 2018ல் மட்டும் டெல்லியில் 31,199 பேர்கள் இச்சோதனையில் வெற்றிபெற முடியவில்லை. இவர்களுக்கு ரேஷன் மறுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் சேர்த்தால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 1,20,000 பேர்கள். அது மட்டுமல்ல. குடும்ப அட்டையில் பெயருள்ளவர்கள் நேரடியாகச் சென்றுதான் இம்முறையில் பொருட்களைப்[ பெறமுடியும். தனியாக வாழும் வயதானவர்களுக்கு இது பெரும் பிரச்சினை.
“ஒரேநாடு, ஒரே ரேஷன் அட்டை” திட்டத்திற்கு மோடி அரசு சொல்லும் ஒரே நியாயம் இதன்மூலம் மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து பணியில் இருப்பவர்கள் பயனடைவார்கள் என்பதுதான். நாடு முழுவதும் மாநில வேறுபாடுகள் இல்லாமல் ஒரே கார்டுதான் என்பதால் எங்கும் யாரும் தங்கள் பங்கைப் பெற்றுவிட முடியும்.
“வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏன் ரேஷன் கொடுக்க வேண்டும்? எனவே இதை ஏற்க முடியாது” என்கிறார்கள் நம்மில் சிலர். நான் இதை ஏற்கவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே பிற மாநிலத்தவர்களும் தங்களின் மாநில அட்டைகளைக் காட்டி இங்கேயே மத்திய அரசு மாநியத்தில் கொடுக்கும் பொருட்களை மட்டும் பெறலாம் என்பது என் கருத்து. மாநில அரசு அளிப்பதை வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்காமல் நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இங்கு வந்து வேலை செய்யும் வெளிமாநிலத்தவர் எல்லோருமே பெரிய அதிகாரிகள் இல்லை. மிகக் குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுகிற வெளிமாநிலத் தொழிலாளிகள்தான் ஏராளம். அவர்கள் வயிற்றில் நாம் அடிக்க வேண்டியதில்லை.
இந்தத் திட்டம் மோசமான ஒன்று, இதை ஏற்கக் கூடாது எனச் சொல்வதற்கு என்னிடம் வேறு பல நியாயங்கள் உண்டு. இந்தத் திட்டத்தை நாம் தனித்துப் பார்க்கக் கூடாது இத்துடன் மோடி அரசு திணிக்கும் “ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு”, “ஒரே நாடு ஒரே பயண அட்டை”, “ஒரே நாடு ஒரே ஆதார் அட்டை” என்கிற வரிசையில் இன்று இதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டும் மோடி அரசின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக மாநில அரசு அதிகாரங்களுள் அத்து மீறல் நடைபெறுகின்றது. பொது வினியோக முறை அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து வன்முறையாகப் பறிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள்தான் எல்லா மாநிலங்களிலும் அளிக்கப்படும் என்கிற நிலையை இதன்மூலம் எளிதாக ஏற்படுத்தலாம். நமது தனிப்பட்ட உணவு முதலான வழமைகளுக்குள்ளும் இப்படி மத்திய அரசு மூக்கை நுழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்..
மோடி அரசு இத்துடன் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இனிமேல் மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே அகில இந்தியத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யுமாம். நீதித்துறையைக் கையகப்படுத்துவதற்கு பா.ஜ.க அரசு வெறியோடு நிற்பதை நாம் அறிவோம். ‘கலேஜியம்’ முறையை ஒழித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தாமே தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர முயற்சிப்பவர்கள் இவர்கள். அது இப்போதைக்கு முடியவில்லை என்பதால் மாநில நீதித் துறையைக் கைவசமாக்கிக் கொள்ள நிற்கின்றனர்.
ஏற்கனவே ஆளுநர்கள் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் இப்படி அதிகாரங்களை எல்லாம் தன் கையில் சுருட்டிக் கொண்டு மாநில அரசை டம்மி பீசாக மாற்றும் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.
மோடி அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த கையோடு இந்த வேலைகள். படு தீவிரமாக நடக்கின்றன. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முழக்கத்தைப் பதவி ஏற்ற அடுத்த நாள்முதல் தொடங்கிவிட்டார் நரேந்திர மோடி. எந்நாளும் தாங்கள் கால் ஊன்ற முடியாத தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் வேர் பதிக்க ஒரே வழியாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள் ஒரே நாளில் தேர்தல் நடத்தும்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதில் தீவிரனாக உள்ளனர்.
மோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். “ஒரு தேசத்திற்கு அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட ஒரே அரசு” (Nation State) என்பது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம். வரலாறு முழுவதிலும் இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் இப்படி அதிகாரங்கள் மையத்தில் குவிக்கப்பட்ட ‘தேச அரசுகளாக’ இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பல கூறுகளுக்கிடையில் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட அமைப்புகளாகவே (segmentary state) அவை இருந்துள்ளன. அந்த வகையில் இன்றைய இந்திய அரசமைப்பை “அரசுகளின் தேசம்” (State Nations) என்பார்கள் லாயிட் ருடால்ஃபும், சூசேன் ருடால்ஃபும்.
இந்தியத் துணைக்கண்ட மக்கள் “பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மை” (shared sovereignty) என்பதற்கே பழக்கப்பட்டவர்கள். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் முயற்சிகள் பாம்புப் புற்றுக்குள் கையை விடும் முட்டாள்தனமாகவே அமையும்.