இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

1. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? “ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாடநூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான்.

யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

2. இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரங்கள் இருக்கிறதே?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் இடிக்கப் பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்குச் சென்று முப்பதாண்டுகள் சமயப் பொழிவுகள் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே. இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்னு தன்னுடைய பெரையச் சூட்டவில்லையா? சுபதாவர்மன் (கி.பி. 1193-1120) என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? காசுமீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்மூலம் செய்கிற அதிகாரி’ (தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணில் குறிப்பிடப்பட்டுள்ளதே! பவுத்த சமணக் கோவில்களை இடித்துத்தான் தஞ்சைப் பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவையெல்லாம் கட்டப்பட்டன என சுரேஷ்பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி முதலியோர் நிறுவியுள்ளனர். திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சான்றுகள் உள்ளன. எனவே கோயில் இடிப்பு என்பதை எந்தஒரு குறிப்பிட்டமதத்தைப் பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.

3. ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?

மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார்.

ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை. இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர். இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.

4. அல்லாவுதீன் கீல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே?

அவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார். மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும். இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.

5. இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே?

நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள். இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம். எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை. அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர். மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன.

6. பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கிறார்களே!

உண்மைதான். நான் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். முஸ்லிம் மன்னர்களின் காலத்திலும் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டதால் இன்றளவும் பழமையான இந்துக் கோயில்கள் நாடெங்கும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். ரஜபுத்திரர், பார்ப்பனர் போன்ற இந்துமத ஆதிக்கச் சக்திகள் முஸ்லிம் மன்னர்களிடம் உயரதிகாரிகளாக இருந்துள்ளனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜா மான்சிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முகம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது என்கிற இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப்பிரபு முறையிட, அந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்துக் கலகம் செய்தனர். அயோத்தியிலுள்ள அனுமான் கர்த்திக் கோயில் தொடர்பாகச் ‘சுன்னி’ முஸ்லிம்களுக்கும் இந்துச் சாதுக்களுக்குமிடையே பிரச்சினை வந்தபோது டில்லி மன்னர் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் உள்ளன.

7. பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?

நாடு என்றால் என்ன, நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியல் உருவாக்கப்படுகிறது, இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவதுதானே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவகாசமில்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வருவோம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகத் தொடக்க காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அகில இந்தியத் தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்துத் தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கில ஆட்சியின் ‘புதிய இழிவு’களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்துப் பழமையாகவே முன் வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வருணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய ‘இந்துத்துவம்’, ‘இந்து ராஷ்டிரம்’ ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன வைக்கப்பட்டது இந்துமகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சாவர்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

1933ல் இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முறபட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன் முதலில் சொன்னவர்களில் ஒருவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்£கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து “ஒரு மாபெரும் முஸல்மான் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அங்கே போய்விடவேண்டும்” என்றார். 1905ம் ஆண்டு வாக்கிலேயே தனக்கு இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” என்றார்.

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்து மகாசபை இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டது என்பதுதான் உண்மை. நாட்டுப்பிரிவினை பற்றிப் பேச சர்வ கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் ஜின்னா மூன்று கோரிக்கைகளை வைத்தார்.

1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று பிரதிநிதித்துவம், 2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், 3. சிந்து, பலூசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் எனப் புதிய மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களை உருவாக்குதல். இவை அனைத்தும் முற்றிலும் நியாயமான கோரிக்கைகள். அன்றைய முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கோரினார் ஜின்னா. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் இதை ஏற்றுக் கொண்டனர். தேஜ் பகதூர் சப்ரு போன்றவர்கள் இதை அம்மாநாட்டிலேயே ஆதரித்துப் பேசினர்.

மாநாட்டில் பங்கு பெற்ற இந்து மகாசபைத் தலைவர்கள் இதற்கு எதிராகப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் மநாட்டைக் கலைத்தனர். அதன் பிறகு ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். “ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.

8. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. எனவே முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.

இன்னொன்றையும் நீங்கள் வரலாற்று ரீதியாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகைக் கணக்கீடும் (1891) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் எனத் தனித் தனியே விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருந்தால் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய், தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்திருந்ததை இந்துத் தலைவர்கள் உணர்ந்தனர். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.

ஒன்று : தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவது. 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்ற கருத்தை ஆர்ய சமாஜிகளும் இதர சனாதனிகளும் எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதித் தலைவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். இறுதியாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து மகாசபை, “இருந்தாலும் அவர்கள் ‘யஞ்ஞோபவீதம்’ (பூணூல்) அணியக்கூடாது” என அறிவித்தது.

இரண்டு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனி நாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் ‘இந்து ராஜ்யம்’ அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.

உண்மைஇப்படி இருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனச் சொல்வது அபத்தம்.

9. அப்படியானால் நாட்டுப் பிரிவினையில் முஸ்லிம்கள்ளுக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா?

இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு என்றால் அதில் தாங்கள் தலைமை ஏற்க முடியும் என இந்து ஆதிக்கச் சக்திகள் நினைத்தது போலவே முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்றால் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடீயும் என முஸ்லிம் மேல்தட்டினரும், முஸ்லிம் லீக் தலைவர்களும் நினைத்தனர். ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரிவினைவாதி என்றோ, முஸ்லிம் மதத் தலைவர்கள் (உலமாக்கள்) பிரிவினை வாதத்தை முன் வைத்து முஸ்லிம்களைத் தங்களின் கீழ்த் திரட்டினர் என்றோ கருத வேண்டியதில்லை. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் வெள்ளையராட்சியை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை முன்பே குறிப்பிட்டேன். 1857 சுதந்திரப் போர் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் மவுல்விகளான அகமதுல்லாஷா, இனாயத் அலி போன்றோர் நானாசாகேப், ஜான்சிராணி ஆகியோரோடு இணையாகப் போற்றப்படுகின்றனர். 1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சர் சையத் போன்ற இஸ்லாமிய மேல்தட்டினர் காங்கிரசில் சேர வேண்டாம், ஆங்கிலேய ஆட்சிக்குச் சார்பாக இருந்து முஸ்லிம்களுக்குச் சலுகைகள் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியபோது முஸ்லிம் மதத்தலைவர்களான மவுலானா ரஷீத் அலி காங்கோய் போன்றோர், “காங்கிரசில் சேர்ந்து இந்துச் சகோதரர்களுடன் போராடுங்கள்” என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தத் தன்மை கடைசிவரை தொடர்ந்தது. ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாகக் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை எதிர்ப்பது என்பதும் தொடர்ந்தது.

மத அடிப்படையிலும் உலமாக்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஆதாரவு காட்டினர். கூட்டுத் தேசியத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. முகம்மது நபி அவர்களே மதினாவிற்குச் சென்றவுடன் பிற மதத்தினருடன் கூட்டுத் தேசியத்தை வலியுறுத்தினார். ஜமாத் லைவராக இருந்த மவுலானா உசேன் அகமத் மதானி, “தேசம் (குவாம்) என்பது நில எல்லைத் தொடர்பான கருத்தாக்கம். ‘உம்மாஹ்’ அல்லது ‘மிலாத்’ என்பது மதம் தொடர்பான கருத்தாக்கம். இரண்டையும் குழப்ப வேண்டியதில்லை. ஒருநில எல்லைக்குள் இரு மதத்தினர் இணைந்து வாழ்வதென்பது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானதல்ல” என்றார்.

10. சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா?

சர் சையத் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக வெவ்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி, காங்கிரசை எதிர்த்தனர் என்பது சர் சையத் போன்றோர் மட்டும் செய்த காரியமல்ல. பல பிரிவினரும் இதைச் செய்துள்ளனர். நமது நீதிக்கட்சி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் கூட இந்நிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது நான் சொல்ல வருவது இதுதான்.

ஒன்று: ஆதிக்கச் சக்திகள் அவர்கள் – முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி – தங்களின் நலன் நோக்கில்தான் செயல்படுகின்றன. முஸ்லிம்களை மட்டும் சுட்டிக்காட்டி எதிர்ப்பது அபத்தம்.

இரண்டு: முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி செயல்படுபவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம்கூட அவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய கட்டுக் கதைகளில் ஒன்றுதான். முஸ்லிம்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. அரசியல் சக்திகளது கருத்தும் மதத் தலைவர்களது கருத்தும் எல்லாக் காலங்களிலும் ஒத்துப்போனதில்லை. பலரும் நினைப்பது போல முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் பிரிவினைவாதிகள் இல்லை. தவிரவும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத்தை நவீனப்படுத்துவது, புதிய ஆங்கிலக் கல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்வது, புதிய பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்குவது என்றெல்லாம் சையத் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெறும் ஆங்கில ஆதரவு நடவடிக்கையாகப் பார்த்துவிட முடியாது.

11. இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?

வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான். ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம். வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன. தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை. எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்¤தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும்இதன் மூலம் பொருளாகிறது. ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர். பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர்.

வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன. பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன. இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர். பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன. இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.

12. கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாமானதுதானே?

காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும். 1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத் தொகையில் 77 சதம் பேர் முஸ்லிம்கள். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக் கெதிராக 1931ல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது. இந்தப் பின்னணியில் 1939ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப்பட்டது. இக் கட்சியின் சார்பாகப் பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’Õ கோரிக்கை 1944ல் முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1945ல் “டோக்ரா மன்னர்களே வெளியேறுங்கள்” போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947ஆக.15ல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் “மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப் படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என இந்திய அரசு (அக். 5, 1947) அறிவித்தது.

ராஜ அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாக்கிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளை அனுப்பிக் காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை. இந்த அடிப்படையில் இந்திய-பாக். போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது. இந்தப் பின்னணியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன. 1, 1948 அன்று அய்.நா. அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்றது. ஜன. 20, 1948 அன்று பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்சினையை ஆராயக் குழு ஒன்றை நியமித்து. அந்த அடிப்படையில் ஆக.13, 1948 அன்று காஷ்மீர் தீர்மானத்தை அய்.நா. நிறைவேற்றியது. போர் ஓய்வு, இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் கணிப்புத் தேர்தல் நடத்துவது என்கிற மூன்று அம்சங்களை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

அய்.நா. இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் போதே காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய அவை ஒன்றை இந்தியா அமைத்தது. “அரசியல் சட்ட உருவாக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி அந்த மக்கள் பிரிந்து போக விரும்பினால் அந்த விருப்பம் நிச்சயமாய் நிறைவேற்றப்படும். இந்த அரசியல் நிர்ணய சபை அதற்குத் தடையாக இராது” என இந்திய அரசு (நவ. 21, 1949) வாக்களித்தது. 370வது பிரிவு ஒன்றை உருவாக்கிக் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர பிற அம்சங்களில் சுயாட்சி உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டன.

370வது பிரிவு பற்றி என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் நிர்ணய அவையில் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார்: ‘காஷ்மீரில் இன்னும் போர் நீடிக்கிறது. சில பகுதிகள் எதிரிகள் வசம் உள்ளன. அய்.நா.அவையும் இதில் தலையிட்டுள்ளது. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசு சில உறுதிகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 370வது பிரிவின் மூலம் சில சிறப்புரிமைகளை காஷ்மீர மக்களுக்குத் தருவது தவிர்க்க இயலாது”.

இதுதான் 370வது பிரிவு உருவான கதை. கணிப்புத் தேர்தலை இந்திய அரசு வஞ்சகமாக முறியடித்ததுதான் தவறேயொழிய 370வது பிரிவைச் சேர்த்ததை எப்படித் தவறாகச் சொல்ல முடியும்? சொல்லப் போனால் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட உரிமைகள் இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாமும் கோருவதுதான் நமது சனநாயக உயர்வுக்கு அடையாளமாக இருக்க முடியும்.

13. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?

இல்லவே இல்லை. முழுமையாகக் காஷ்மீர மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

நவ.5, 1951: அரசியல் நிர்ணய அவைகூட்டப்பட்டது.

நவ. 15, 1952: அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக.9,1953: காஷ்மீர இணைப்பைச் சட்டப் பேரவையைக் கூட்டி நிறைவேற்றாமல் பிரிவினை முயற்சியில் இறங்கினார் எனக் குற்றம்சாட்டப்பட்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 22 ஆண்டுக்காலம் அவர் சிறையிடப்பட்டார்.

பிப்ரவரி 1954: பலரும்கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 27, 1957: கணிப்புத் தேர்தல் நடத்த முடியாது என நேரு அறிவித்தார்.

14. இருந்தாலும் 370ஆவது பிரிவு இன்னும் நீடிக்கிறதே?

பெயருக்குத்தான் நீடிக்கிறது. அந்தப் பிரிவின் கீழான அத்தனை உரிமையும் இன்று பறிக்கப்பட்டுள்ளன அல்லது குறுக்கப்பட்டுள்ளன. 1954ல் தொடங்கி இது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தனது கூட்டாட்சி அதிகாரத்தை மைய அரசு காஷ்மீர் மீது பரப்பத் தொடங்கியது. 1965ல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு காஷ்மீர் முதல்வராவதற்கு ஒருவர் 25 ஆண்டுக் காலம் காஷ்மீரில் வசித்திருக்கவேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்பட்டது. 1984ல் 248வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி காஷ்மீர் தொடர்பான போராட்ட எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையை இந்தியப் பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது. ‘ஜம்மு-காஷ்மீர் கலவரப் பகுதிச் சட்டம்’ (ஜூலை 1990), 1991ம் ஆண்டுப் ‘போராட்டத் தூண்டல் சட்டத் திருத்தம்’ ஆகியவற்றின் மூலம் கொடும் அடக்குமுறைக்கான உரிமைகளைக் காஷ்மீர மக்கள் மீது இந்திய அரசு எடுத்துக் கொண்டது. ‘பயங்கரவாதிகளை’ அடக்குதல் என்கிற பெயரில் காஷ்மீர மக்கள் ஊரடங்கு வாழ்வுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

15. காஷ்மீர முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால் இந்தியர் யாரும் காஷ்மீருக்குள் நிலம் வாங்க முடியாதது என்ன நியாயம் என ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் வாதிடுகிறார்களே?

இது காஷ்மீர முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும், இந்துக்களுக்கும் பொருந்தும் சட்டம்தான். இந்தச் சட்டத்தை உருவாக்கியது இந்து டோக்ரா மன்னர்கள்தான். தமிழ்ச் சூழலைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இதனை யோசித்துப பாருங்கள். தமிழக மக்களைச் சுரண்டிச் சேகரித்த நிதியைக் கொண்டு வடநாட்டுப் பார்சி-பனியா சேட்டுகள் தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். இது எப்படி நியாயமாக இருக்க முடியும்? எனவே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்கலாம் என்கிற உரிமை வெளிநாட்டு, வடநாட்டு இந்து ஆதிக்கச் சக்திகளுக்குச் சாதகமான கோரிக்கைதான். மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மக்கள் மட்டுமே சொத்துக்கள் வாங்க முடியும் என்கிற நிலையைப் பரவலாக்குவதுதான் சரியான கோரிக்கையாக இருக்க முடியும்.

இரண்டு : இசுலாமியப் பண்பாடு இழிவானதா?

1. யாராவது ஒன்றுவிட்ட சகோதர உறவுமுறை உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்வார்களா? முஸ்லிம்கள் செய்து கொள்கிறார்களே?

நெருங்கிய இரத்த உறவுடையோர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்பது அறிவியல் முடிவு. இதன் பொருள் ஒன்றுவிட்ட சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல. அக்காபிள்ளைகள், மாமன் பிள்ளைகள், அத்தைப் பிள்ளைகள் ஆகியோரைக் கூடத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதுதான். இந்துக்கள் இந்தத் திருமணத் தடைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். முஸ்லிம்கள் பெற்றோருடன் கூடப் பிறந்தவர்களின் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அவ்வளவுதான் வேறுபாடு. எனவே முஸ்லிம்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. முஸ்லிம்களும் கூட வேறு சில திருமணத் தடைகளைக் கடைபிடிக்கவே செய்கின்றனர். சீனாவில் இரண்டுவிதமான திருமண உறவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

2. இஸ்லாமியர் பசுவதை செய்பவர்களல்லவா? மாட்டிறைச்சி தின்பது இழிவல்லவா?

ஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறானது என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. சொல்லப் போனால் ஆடடிறைச்சியைக் காட்டிலும் மாட்டிறைச்சியில் புரோட்டீன் முதலிய சத்துக்கள் அதிகம். பசு மாமிசத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்து மதத்திலேயே பல பிரிவினர், ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டவர் எனப் பலரும் சாப்பிடுகின்றனர். வெளிநாட்டவர் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது மாட்டிறைச்சியைத்தான். வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் முழுவதிலும் ‘பீஃப் பிரியாணி கிடைக்கும்’ என்கிற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்க முடியும்.

வரலாற்றில் மேய்ச்சல் மற்றும் வேட்டை வாழ்க்கையை மேற்கொள்ளும் சமூகங்கள் கால்நடை இறைச்சி உண்பது வழக்கம். வேதகாலத்தில் குதிரை, மாடு முதலியவற்றைப் பலியிட்டுத் தின்றுள்ளனர். “உங்கள் பிள்ளைகள் அறிவுடையோராகவும், வேதமறிந்தவர்களாகவும், நீண்ட ஆயுளைப் பெற்றவராகவும் இருக்க வேண்டுமானால் நெய் சேர்த்த மாட்டுக் கறி சாப்பிடுங்கள்” என்று பிருகதாரண்ய உபநிடதம் (6418) குறிப்பிடுகிறது. இதற்கு ஆதி சங்கராச்சாரி உரையும் எழுதியுள்ளார். விவசாயச் சமூகங்களில் கால்நடைகளின் தேவை இருந்ததால் மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவானது என்கிற மதிப்பீடுகள் தோன்றின. இந்தியாவில் வேத மதத்திற்கு எதிராகத் தோன்றிய புத்த-சமண சமயங்கள் இதனை வலியுறுத்தின. எனவே பின்னாளைய பார்ப்பன மதமும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இழிவாக்கியது. இன்று விவசாயத் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு குறைந்துவிட்டது. எனவே உலகெங்கிலும் பல முன்னேறிய சமூகங்களில் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது.

3. நாம் செய்வது எல்லாவற்றிற்கும் எதிராகச் செய்கிறார்களே இஸ்லாமியர். நாம் இறந்தவர்களை எரித்தால் அவர்கள் புதைக்கிறார்களே?

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள் உள்ளன. முஸ்லிம்கள் மட்டுமல்ல; அய்ரோப்பியர், அமெரிக்கர், ரசியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து ‘அதிஷ்டானம்’ கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

4. பலதார மணம் புரிந்து கொள்வது குரானிலேலே அனுமதிக்கப்பட்டுள்ளதே?

எந்தச் சூழலில் பலதார மணம் குர் ஆனில் அனுமதிக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். இஸ்லாம் தோன்றிய காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், மதப் பிரிவுகள் ஆகியவற்றின் எதிர்ப்புக் குள்ளானது. நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கிருந்தது. போர்களில் ஆண்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டதையடுத்துச் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியது. எடுத்துக்காட்டாக உகுத் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் எழுபது ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்போது மொத்த சனத்தொகையே 700 பேர்கள்தான். இந்தச் சூழலில் சமூகச் சமநிலையைக் காப்பாற்றவும் விதவைகளுக்கு வாழ்க்கை தரவும் பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது. அனாதைப் பெண்கள், விதவைகள் ஆகியோரைப் பற்றிப் பேசும்போதுதான் புனித குர் ஆன் (4:3) ஒரு ஆண் நான்கு மனைவியரை திருமணம் செய்து கொள்ளலாம் எனச் சொல்கிறது. அந்த நால்வரும் சமமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

குர்-ஆன் இப்படி அனுமதித்துள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனப் பொருளில்லை. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களைக் காட்டிலும் இந்துக்கள்தான் அதிக அளவில் பலதார மணம் புரிபவர்களாக உள்ளனர் என்பது விளங்கும். இந்தியப் பெண்களின் நிலை பற்றி ஆராய அரசால் நியமிக்கப்பட்ட (1975) குழு ஒன்றின் முடிவு கீழே தரப்பட்டுள்ளது.

பலதார மணம்

(எண்ணிக்கைகள் சதவீதங்களைக் குறிக்கின்றன)

ஆண்டுகள்-இந்துக்கள்-இஸ்லாமியர்

1931-41 – 6.79 – 7.29

1941-51 – 7.15 – 7.06

1951-61 – 5.06 – 4.31

1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் கூடப் பலதார மணம் இந்துக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதை நிறுவியுள்ளது. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை 25 லட்சம் குறைவு. எனவே முஸ்லிம்கள் அனைவரும் நான்கு மனைவியரைக் கட்டிக் கொள்வது என்பதெல் லாம் நடைமுறைச் சாத்தியமில்லாத விசயங்கள்.

5. இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களே?

இந்து மத வெறியர்கள் இந்தக் கருத்துக்கு ஆதரவாக 1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காட்டுவார்கள். அதாவது முஸ்லிம்களின் எண்ணிக்கை 61 மில்லியனிலிருந்து 75 மில்லியனாகியிருக்கிறது (30.69 சத அதிகரிப்பு). ஆனால் அதே சமயத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 453 மில்லியனிலிருந்து 549 மில்லியனாக உயர்ந்துள்ளது. (24.14 சத அதிகரிப்பு). இந்தப் புள்ளி விவரத்தை மட்டும் பார்க்கும்போது அவர்கள் சொல்வது உண்மை போலத் தோன்றும். முழுமையாக இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள கீழேயுள்ள தகவலைப் பாருங்கள்.

மக்கள் தொகை வளர்ச்சி

(எண்கள் சதவீதங்களைக் குறிக்கின்றன.)

ஆண்டுகள் – இந்துக்கள் – இஸ்லாமியர்

1961-71 – 23.69 – 30.84

1971-81 – 24.14 – 30.69

இதன்படி பார்த்தால் முதல் பத்தாண்டுகளைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதமோ குறைந்துள்ளது.

ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. மக்கள் தொகை வளர்ச்சி வீதம் என்பது மத உணர்வைப் பொறுத்ததல்ல. கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சி போன்ற இதர காரணிகளையே அது பொருத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர் நிறுவியுள்ளனர். முஸ்லிம்கள் மத்தியில் கல்வி, பொருளாதார நிலைகள் என்பன இந்துக்களைக் காட்டிலும் குறைவு. முஸ்லிம்கள் மத்தியில் வறுமை இந்துக்களைக் காட்டிலும் 17 சதம் கூடுதல். பொதுவில் கல்வி வளர்ச்சி அதிகமாகும்போது குழந்தை பெறும் வீதம் குறைந்துவிடுகிறது. காஷ்மீரில் 75 சத முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்த சனந்தொகையில் முஸ்லிம்களின் வீதம் 5.21. மொத்தம் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களில் முஸ்லிம்களின் பங்கும் கிட்டத்தட்ட இதே அளவுதான் இருக்கிறது. எனவே முஸ்லிம் சனத் தொகை பெருகி வருகிறது என்பதும், இப்படியே போனால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவர் என்பதும்அப்பட்டமான பொய்கள்.

6. இஸ்லாமியர்க்கு மத உணர்வு அதிகமில்லையா? தேர்தல்களில் தங்கள் மத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தானே அவர்கள் வாக்களிக்கின்றனர்?

இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்களில்லை. இடத்திற்கு இடமும், காலத்திற்குக் காலமும் முஸ்லிம்கள் வாக்களிக்கும் முறையும் வேறுபடுகிறது. பால் ஆர்.பிராஸ் என்பவர் கான்பூரை மையமாமக வைத்தும் பீட்டர் பி. மேயர் என்பவர் திருச்சி, ஜபல்பூர் ஆகிய நகரங்களை மையமாக வைத்தும் 1957, 1962 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செய்த ஆய்வுகளின்படி முஸ்லிம்கள் மதவாத அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. (எகனாமிக் அண்ட பொலிடிகர் வீக்லி ஆண்டுமலர், 1988). தேசியக் கட்சிகளுக்குத்தான் அவர்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர். வகுப்புவாத இயக்கங்களாகத் தோற்றமளிப்பவைகட்கு அவர்கள் வாக்களிப்பதில்லை. 1952 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளில் 65.41 சதம் தேசியக் கட்சிகளுக்குத்தான் விழுந்தன. 1962ல் இது 75.2 சதமாக அதிகரித்தது. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12 சதம் பேர் முஸ்லிம்கள் இருந்தும்கூட முஸ்லிம் லீக் கட்சியால் 1957 தேர்தலில் பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு உறுப்பினரையும், 1962ல் இரண்டே இரண்டு உறுப்பினர்களையும் மட்டுமே அனுப்ப முடிந்தது. இதுவும் கூடக் கேரளத்திலிருநதுதான் சாத்தியமாயிற்று. கூட்டணி இல்லாமல் எங்குமே முஸ்லிம் லீக்கோனில்லை வேறெந்த முஸ்லிம் கட்சிகளோ வெற்றி பெற இயலாது என்பதுதான் உண்மைநிலை.

7. அமெரிக்காவிற்கும் அரபுநாடுகளுக்கும் அல்லது இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடொன்றுக்கும் சண்டை வந்தால் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுதான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திகிறார்களே?

முஸ்லிம்கள் அப்படிப் பிரார்த்தித்தால்கூட அதில் எந்தத் தவறுமில்லை யாரும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முஸ்லிம் நாடுகளுக்கெதிராகச் செய்துவரும் அயாக்கியத்தனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாறு பூராவும் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளும், கிறிஸ்தவ மதமும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம். எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடுகள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கிய போதும் இன்றளவும் அமெரிக்க அய்ரோப்பியப் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்த எண்ணெய் வளத்தையும் கொள்ளையடிக்கின்றன. ஷாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான், அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத்தளமாகவுமே மாற்றப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க அய்ரோப்பிய வல்லரசுகளுக்கெதிராகவும், கிறிஸ்தவக் கலாச்சார மேலாண்மைக்கு எதிராகவும் எழுகிற இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாம் பார்க்க வேண்டும்.

கோமேனியின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை ‘இஸ்லாமியப் புரட்சி’ என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதை அடிப்படைவாதம் எனச் சொன்னால்கூட அது அமெரிக்க மேலாண்மையையும், அடிவருடி ஷாவின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் இருக்கும் நிலையில் முனனோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தது. ஆனால் அத்வானி தலைமையில் இங்கே உருவாகும் இந்து மீட்புவாதம் என்பது மாற்றங்களுக்கு எதிரானது. நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது. வருணாசிரமத்தை நிலைநாட்ட முனைவது. இந்த வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், இந்து மீட்பு வாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

8. அப்படியானால் இஸ்லாமிய மதம்தான் உயர்ந்தது என்கிறீர்களா?

மதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானதுதான் என்கிற கருத்தை நம்புகிறவர்கள் நாங்கள். ஒரு சிறுபான்மை மத்திதிற்கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டு அளவிலோ, உலக அளவிலோ பொய்ப் பிரச்சாரத்தை வலிமையாக மேற்கொள்ளும்போது நாம் உண்மையைக் கண்டறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். தவிரவும் எந்த ஒரு போராட்டமும், அது மத அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் பின்னணியாயுள்ள உண்மைகளை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதாயிருக்கிறது. இந்தியாவுக்குள் சாதியை வென்ற மதமாகவும் ஒப்பீட்டளவில் சமத்துவத்தைப் பேணும் மதமாகவும் இஸ்லாம் மட்டுமே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

9. நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத்தான் தோன்றுகிறது. என்றாலும்…. முஸ்லிம்கள் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்படையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே? அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா?

சிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமத வெறியும், வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன. அரசு, இராணுவம், பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும் தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கிலானதல்ல. நாட்டுப் பற்றில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கை ஏற்கனவே குறிப்பிட்டோம். இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையே போர் மூண்டபோது முஸ்லிம்களின் தனிப் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்கள் இந்திய எல்லையைக் காப்பதற்காகத் தன் மகனை அனுப்பத் தயார் என்று கூறினார்.

நாட்டுப் பற்று என்பதெல்லாம் இயற்கையான உணர்வல்ல. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோது ஒரு ஜார்ஜியன் அல்லது உக்ரேனியனது நாட்டுப் பற்று என்பது சோவியத் யூனியனுக்கு விசுவாசமாக இருப்பது. இன்று அங்கே நிலைமை முறறிலும் மாறிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்று ஒரு ஜார்ஜியன் மாஸ்கோவுக்கு விசுவாசமாக இருந்தால் அதன் பெயர் நாட்டுப் பற்று அல்ல, தேசத் துரோகம்.

10. இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே? ஒரு கையில் குர் ஆனையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ‘ஜிஹாத்’ (புனிதப் போர்) நடத்துவதும்தானே இஸ்லாமியரின் மதக் கொள்கை?

இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதமுமல்ல. குர்ஆனின் அடிப்படைச் செய்தி வன்முறையுமல்ல. ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் பொருளே “ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக கொண்டு அமைதியை நிலைநாட்டுவது” என்பதுதான். ஒரு முஸ்லிம்கள் மற்றொரு மனிதனை அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி எதிரே பார்க்கும்போது ‘சலாம் அலேய்க்கும்’ என்று வாழ்த்த வேண்டும். இதன் பொருள் “உனக்கு அமைதி உண்டாகுக” என்பதுதான். அல்லாஹ் கருணையானவர். (அல் ரஹ்மான்); ஆறுதல் அளிப்பவர் (அல் ரஹீம்), கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை.

மதத்தைப் பரப்புவதில் வன்முறைக்கு மட்டுமல்ல. வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்கிறது குர்ஆன் (2:256). இந்த வரிகளுக்கு விளக்கம் சொல்ல வந்த மவுலானா முகம்மதலி, “கத்தியை வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புமாறு நபிகள் நாயகம் சொன்னதாக அவதூறு செய்பவர்களுக்கு இதுவே பதில். அதிகாரம் கையிலுள்ள போது ‘மதத்தில் கட்டாயமில்லை’ என்கிற கொள்கையை முஸ்லிம்கள் கடைபிடிப்பது முககியம்” என்கிறார். அல்லாவைத் தவிரவேறு கடவுளை வணங்குவோரை அவதூறு செய்யக் கூடாது என்று சொல்லும் திருக்குர்ஆன் (6:109) மற்ற கடவுளை வணங்குவோருடன் ஒரே சமூகமாய் இணைந்து வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. ‘இல்லாவிட்டால் அல்லாஹ் உங்களை மட்டும் தனியாக அல்லவா படைத்திருப்பார்” என்பது இஸ்லாமிய இறைவாக்கு (5:48).

இதன் பொருள் இஸ்லாமில் வன்முறையின் அடையாளமே இல்லை என்பதல்ல; எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் போர்க்களத்தில் வன்முறையைப் பிரயோகிப்பதை ஆதரிக்கிறது. போர்க்களத்தில் இரத்த உறவுடையோர் மீது கூட வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்க வேண்டியதில்லை என்று கீதா உபதேசம் செய்யவில்லையா கிருஷ்ணன்? ‘ஜிஹாத்’ என்கிற புனிதப் போரும் இப்படி ஒரு சூழலை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதான்.

‘ஜிஹாத்’ என்பது மதத்தைப் பரப்புவதற்கான போர் அல்ல. அது ஒடுக்குமுறைக்கு எதிரான போர். ‘மக்கா’வில் இருந்தவரையிலும் ‘மதினா’வில் அடைக்கலம் புகுந்த கொஞ்சநாள் வரையிலும்கூட முகம்மது நபி அவர்கள் வன்முறை பற்றியும் ‘ஜிஹாத்’ பற்றியும் பேசவில்லை. நபிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்ததை மீறி அரேபியாவிலிருந்தே இஸ்லாத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிற கங்கணத்துடன் மாற்று நம்பிக்கையாளர்கள் போர் தொடங்கியபோதுதான் அவர் வன்முறை பற்றிப்பேசத் தொடங்கினார். போரைக்கூட, ‘அல்லாஹ்வின் வழியிலான போர்’ எனவும், ‘பிசாசின் வழியிலான போர்’ எனவும் பிரித்துப் பேசுகிறது குர்ஆன் (4:75). மவுலானா முகம்மதலி கூறுகிறார்: “மக்காவிலிருந்து ஒடுக்கு முறையார்களின் கொடுமை தாளாமல் முடிந்தவர்களெல்லாம் தப்பியோடிய பின்னர் பலவீனமானவர்கள் மட்டும் அங்கேயே தங்க நேரிட்டது. அத்தகைய பலவீனர்களும், பெண்களும், குழந்தைகளும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்ற போரில் இறங்கச் சொன்னார் நபிகள் நாயகம். ஒடுக்குமுறையாளரிடமிருந்து ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான போர்தான் அல்லாஹ்வின் வழியிலான போ.ர் ஒடுக்குவதற்கும் ஆக்ரமிப்பதற்குமான போர் பிசாசின் வழியிலான போர் (தாகுத்)”. ஆக்கிரமிப்புப் போரை குர்ஆன் மறுக்கிறது (2:190).

எந்த வழிபாட்டு இல்லத்தையும் இடிக்கக்கூடாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகிறது. ஏனெனில் “எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப்பெயர்தான்” (22:40). இஸ்லாமியரல்லாதவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாக குர்-ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் எந்த வரியுமே இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத காரணத்திற்காகத் தனிநபர்கள் தாக்கப்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல. ஒப்பந்தத்தை மீறி நியாயத்துக்குப் புறம்பாகத் தாங்கள் தாக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய வன்முறைதான் அது. அதிலும்கூட, “சிலை வணக்கம் செய்வோர் யாரேனும் பாதுகாப்புத் தேவை என உங்களிடம் வந்தால் அவருக்குப் பாதுகாப்பு அளியுங்கள். பாதுகாப்பான இடத்தில் அவரை சேர்ப்பிப்பது உங்கள் கடமை” என்கிறது குர்ஆன் (9:6).

11. அப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இஸ்லாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள்?

மறுபடியும் சொல்கிறேன். பொத்தம் பொதுவாக இந்துககள் என்று சொல்லாதீர்கள். சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதர்களாகத்தான் வாழ்கிறார்கள். வடமாநிலங்களில் பல இடங்களில் பெயர், உடை போன்ற அம்சங்களை வைத்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்துவிட முடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் உறவுமுறை சொல்லி வாழ்வது உங்களுக்குத் தெரியுந்தானே?

12. சரி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?

இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில்: இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். அடுத்தது: வரலாற்று ரீதியாய் முஸ்லிம்களை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது. இதனை முன்பே விளக்கியுள்ளோம். கடைசியாக: இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான். கிறிஸ்தவம் உட்படப் பிற மதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை ஒப்பீட்டு அளவில் வென்று நின்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குரு கோல்வால்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்குச் சவாலாய் இருந்தது” என வயிறெரிந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தைப் பேணுபவை. இமாசலப் பிரதேச மாநிலப் பாரதிய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று மணலி என்ற இடத்தில் மனு கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாகக் கருதாமல் வேறென்ன செய்வார்கள்?

மூன்று: புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்

1. இஸ்லாமியரது நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்பு ஒருமுறை குறிப்பிட்டீர்கள். விளக்க முடியுமா?

முடியும். காசுமீர் விசயத்தில் அய்.நா. அவைத் தீர்மானத்திற்கு எதிராகவும் கொடுத்தவாக்குறுதியை மீறியும் இந்திய அரசு நடந்து கொள்வதிலிருந்து தொடங்கலாம். காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லா கிட்டத்தட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்புறம், வெள்ளையராட்சியில் 1907முதல் முஸ்லிம்களுக்குத் தேர்தலிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களாக இருந்தும் சுதந்திரத்திற்குப் பின் அந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. இதனை முன்னின்று செயல்படுத்தியவர் சர்தார் படேல். மொழிவாரி மாநிலங்கள் என்பது அடிப்படையில் ஒரு சனநாயகக் கோரிக்கைதான் என்றாலும் அதுகூட முஸ்லிம்களுக்குப் பாதிப் பாகவே முடிந்தது.

வட நாட்டில்பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி உருது. ஆனாலும் உருது மொழிக்கான மாநிலம் ஏதுமில்லை. மாநில ஆட்சி மொழியாக அமையாத காரணத்தால் உருதுமொழி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் இல்லாமற் போயின. வி.பி.சிங் உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தபோது உருது மொழியை மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியாக்க மசோதா கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். எனினும் இந்திரா காந்தியின் ஆட்சியில் குடியரசுத் தலைவரின் கையெழுத்து அம்மசோதாவுக்கு மறுக்கப்பட்டது. எனவே இன்றுவரை அது சட்டமாக்கப்படவில்லை. ஒருமுறை உருதைத் தாய்மொழியாகக் கொண்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில்தான் உறுதிமொழி எடுப்போம் எனச் சொன்னபோது காங்கிரஸ் கட்சியினர் அதை அனுமதிக்கவில்லை. அடுத்து அலிகாரிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகம் முஸ்லிம்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிறுவனங்களில் ஒன்று. இதனுடைய சிறுபான்மை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. இன்றுவரை இது நிறைவேற்றப்படாததோடு இருக்கிற அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன.

1971 தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்துக் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தேர்தலில் வென்றபின் 1972 மே மாதத்தில் பல்கலைக்ககழக அதிகாரங்கள் மேலும் குறுக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமல்ல; கல்லூரிகளுக்கே சுயாட்சி கொடுக்க வேண்டும் என்பதல்லாம் அரசுக் கொள்கையாக இருக்கும் போது முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு மட்டும் இந்தக் கதி. 1947ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு முதன் முதலில் முஸ்லிம்கள் தங்கள் கல்வி உரிமைக்காக வீதியில் இறங்கியது இந்தப் பிரச்சினைக்காகத்தான். (ஜூன் 72). இன்று, அதாவது பா.ஜ.க. ஆட்சியேறிய பிறகு நிலைமை மோசமாகியுள்ளது. சமீபத்தில் (2003 இறுதி) அலிகார் பல்கலைக்கழக உரிமைகளில் மீண்டும் தலையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் விரைவில் ஃபைசாபாத், வாரணாசி போன்ற இடங்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பரவியது. இன்றுவரை இந்த வன்முறை தொடர்கதையாக இருக்கிறது. மேலும் மேலும் இந்திய அரசியல் வகுப்புவாத மயமாகி வருவது அவர்களின் வருந்தத்தக்க நிலையை இரட்டிப்பாக்கி விட்டது.

2. அரசியல் வகுப்புவாத மயமாகிறது என எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் எனப் பலரும் தங்களைப்க பெருமிதத்துடன் அடையாளம் கண்டு இயங்கும் நிலை எழுபதுகளின் பிற்பகுதியில் இந்திரா காந்தியின் காலத்தில் தொடங்கி இன்று உச்சமடைந்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் நேரு நடந்து கொண்டதற்கு எந்த நியாயமும் கற்பிக்க இயலாது என்றாலும் அடிப்படையில் அவரிடம் மதச்சார்பின்மைக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. இந்தியா போன்ற ஒருநாடு மதச்சார்பின்மையைத்தான் கடைப்பிடிக்க முடீயும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்த அவர், முஸ்லிம்கள் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதாத நிலையை ஏற்படுத்தும பொறுப்பு இந்துக்களிடம்தான் உள்ளது என்றார். இந்து மதவாதத்தைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். மாநில முதலமைச்சர்கள் மூன்று மதங்களுக்கு ஒருமுறை அரசுத்துறை, இராணுவம், காவல்துறை போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்பதை நடைமுறையாக்கியிருந்தார். எனினும் கோவிந்த வல்லபந்த் போன்ற மாநில முதல்வர்கள், சர்தார் படேல் போன்ற தனது சக அமைச்சர்கள் இந்து வகுப்புவாத உணர்வோடு செயல்பட்டபோது நேருவால் வருந்த மட்டுமே முடிந்தது. இந்தியாவின் முதலும் கடைசியுமான மதச்சார்பற்ற பிரதமர் என்று நேருவைச் சொல்லலாம்.

இந்திராவின் ஆட்சியில் நிலைமை மாறியது. உருது, முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய விவகாரங்களில் அவர் நடந்து கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டேன். வெளிப்படையாக அவர்தன்னை இந்து மதவாதச் சக்திகளுடன் இணைத்துக் கொண்டார். விசுவ இந்து பரிஷத், அரித்துவாராவில் பாரதமாதா கோயில் கட்டிய போது (1983) அவரே நேரில் சென்று திறந்து வைத்தார். அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் (ஆகஸ்டு 82), “ஏராளமான அராபியப் பணம் இந்தியாவிற்கு வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றப் பெரு முயற்சிகள் செய்யப்படுகின்றன” என்றார். ஷேக் அப்துல்லா தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து முறையிட வந்தபோது (ஆக. 73) முஸ்லிம்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதை குற்றஞ்சாட்டினார். 1982 நவம்பரில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திராவைச் சந்தித்து முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பாக மனு ஒன்றைக் கொடுத்தனர். இனி காங்கிரஸ் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதர முஸ்லிம் உறுப்பினர்களோடு சேர்ந்து வந்து மனு கொடுக்கக் கூடாது என (ஜன. 83) அடுத்த மாதமே உத்தரவிட்டார். இவரது ஆட்சியில்தான் மொரதாபாத், மீரட் போன்ற இடஙகளில் மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரத்திலெல்லாம் பி.ஏ.சி. எனப்படும் ‘புராவின்சியல் ஆயுதப் படை’ வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததை உச்சநீதிமன்றம் உட்பட பலரும் கண்டித்தபோது இந்திரா பி.ஏ.சியை ஆதரித்துப் பேசினார் (பி. 24, 83). தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தாங்கள் எத்துழையாமை இயக்கம் தொடங்கப் போவதாக முஸ்லிம்கள் அறிவித்தபோது (ஜன. 24, 83) அதனைக் கடுமையாய் எதிர்த்து, “எவ்வளவு அமைதியாய் நீங்கள் போராடினாலும் அது காங்கிரசுக்கு எதிரானதாகத்தான் பொருள்படும். நீங்கள் ஒத்துழைத்தால்தான் எங்களால் இந்து மதவெறியைக் கட்டுப்படுத்த முடியும்” என்று மிரட்டினார் (பிப். 10, 83). ‘1985ம் ஆண்டின் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்’ 5(b) பிரிவின்படி பாதுகாக்கப்பட்ட இடங்களென்றாலும் வழிபடும் தலங்களானால் அதில் மக்கள் வழிபாடு செய்ய உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டில்லி சப்தர்ஜங் மசூதி உட்பட பல இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்கள் எனக் காரணம் காட்டப்பட்டு முஸ்லிம்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

ஜனதா ஆட்சிக்காலத்தில் இந்தச் சட்டப்பூர்வமான வழிபாட்டு உரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது (மே, 1979). மீண்டும் இந்திரா ஆட்சியில் இவ்வுரிமை பறிக்கப்பட்டது (செப். 5, 83). ராஜீவ்காந்தி மிக வெளிப்படையாகவே இந்துமதச் சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டதையும், ஆர்.எஸ்.எஸ். அவரை ஆதரித்ததையும் நாம் அறிவோம். ஒரு பக்கம் ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தச் சட்டம் இயற்றிக் கொண்டே பாபர் மசூதியில் ராம வழிபாடு செய்ய அனுமதியளித்து இன்றைய கொடுமைகளுக்கெல்லாம் காரணமான கதையை விளக்க வேண்டியதில்லை. பெரும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் அடிக்கடி சங்கராச்சாரி போன்ற மதத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும், ஆசிகளையும் பெறுவது, அதனைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது என்பதெல்லாம் இந்திரா, ராஜீவ், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரின் காலத்தில் உச்சமடைந்தது.

இந்த நடவடிக்கைகளோடு அரசு, இராணுவம் போன்றவற்றில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தையும், அவற்றில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுதலையும் இணைத்துப் பார்த்தால் நமது அரசியல் இந்து மயமாகியிருப்பது விளங்கும். சமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரி நூற்றாண்டுவிழா கொண்டாடப் பட்டபோது நரசிம்மராவ் ஓடோடி வந்ததையும், அந்த விழாவிற்குத் தெலைக்காட்சி மற்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் அளித்த விளம்பரங்களையும் நினைத்துப் பாருங்கள். பா.ஜ.க. ஆட்சியில் சங்கராச்சாரியின் அரசியல் தலையீடுகள் பற்றி விளக்க வேண்டியதில்லை. மசூதி இடத்தில் கோயில் கட்டுகிற பிரச்சினையில் வாஜ்பேயி ஜெயேந்திரரை அழைத்துப் பேசுகிறார். ஜெயலலிதா அவர் இட்ட ஆணையை ஏற்று மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்து மதக் கடவுள்களுக்குப் பூசை செய்வது, வேத மந்திரங்கள் ஓதுவது என்பதெல்லாம் இன்று வழக்கமாகிவிட்டன.

3. அரசுப் பணிகளில் இஸ்லாமியருக்கு உரிய பங்களிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா?

ஆம். இந்தியாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் 13 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் உயர் அரசதிகாரிகள் மட்டத்தில் முஸ்லிம்கள் எந்த அளவு உள்ளனர் என்று பாருங்கள்.

அகில இந்தியா

………………பதவி மொத்த….இஸ்லாமிய…..சதவீதக்……ஆண்டு
………………எண்ணிக்கை…..அதிகாரிகள்…..கணக்கில்
…………………………………………..இஸ்லாமியர்

அய்.ஏ.எஸ்……….4195………….90…………2.14……….1984
அய்.பி.எஸ்………2222………….67………….3.0………..1983

மேலேயுள்ளது அகில இந்தியக் கணக்கீடு. தமிழகத்தில் நிலைமை என்ன தெரியுமா? கீழே பாருங்கள்.

தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை வீதம் 5.2 சதம்.

தமிழ்நாடு
……………….பதவி மொத்த…….இஸ்லாமிய…….சதவீதக்…….ஆண்டு
……………….எண்ணிக்கை……..அதிகாரிகள்……..கணக்கில்
இஸ்லாமியர்
அய்.ஏ.எஸ்………272…………………3…………1.10………..1984
அய்.பி.எஸ்……..111…………………3………….2.7…………1983

மைய அரசின் டில்லித் தலைமைச் செயலகத்தில் உள்ள நிலையைக் கீழே பாருங்கள். மொத்த சனத்தொகையில் 11.8 சதமாக உள்ள முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இது 1971ம் ஆண்டு விவரம். இன்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. சச்சார் குழு அறிக்கை (2004) ஏராளமான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளது.

……………….பதவி மொத்த…..இஸ்லாமிய…..சதவீதக்
……………….எண்ணிக்கை……அதிகாரிகள்……கணக்கில்
தேர்வுநிலைஅதிகாரி…140…………….02…………1.43

முதல்நிலைஅதிகாரி…395…………….05…………1.27

பிரிவு அதிகாரி…….1666…………….12…………0.27

உதவியாளர்………4507…………….19………..0.42

சுருக்கெழுத்தாளர்கள்
தேர்வுநிலை……….130…………….00………….0
முதல்நிலை……….155…………….00………….0
இரண்டு+மூன்றாம்….3280…………….08…………0.24

நிலைகள்

எழுத்தர்கள்
மேல்நிலை……….2511…………….09………….0.36
கீழ்நிலை…………6588…………….30………….0.46

நான்காம் நிலை……5383……………39………….0.73

ஊழியர்கள்

4. தனியார் நிறுவனங்களில் நிலைமை பரவாயில்லை எனச் சொல்ல முடியுமா?

அங்கு இதைவிட மோசம்.கீழேயுள்ள 1984ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களைப் பாருங்களேன். எண்கள் எல்லாம் சதவீதக் கணக்கில் இஸ்லாமியரின் பங்கைக் குறிக்கின்றன.

தனியார் நிறுவனங்கள்
நிறுவனம்………………..அதிகாரிகள்………கண்காணிப்பாளர்கள்……தொழிலாளர்கள்
டிஸ்கோ……………………4.1………………5.6………………10.3
டெக்ஸ்மாகோ……………….0………………..0.30………………4.4
மபத்லால்…………………..0………………..1.72………………3.53
காலிகோ…………………..0.68………………0………………..10.02
மஹிந்த்ரா&மஹிந்த்ரா………..1.48………………2.25………………5.02
ஆர்கே…………………….3.30………………3.00……………..11.90
ஜேகே தொழில்நிறுவனங்கள்…..2.63……………….3.28………………5.41
இந்தியன்எக்ஸ்ப்ளோசிவ்ஸ்……0………………….2.33………………7.09

மேற்குறித்த புள்ளிவிவரங்கள் எல்லாம் சிறுபான்மைக் குழு அறிக்கைளிலிருந்து தொகுக்கப்பட்டவை.

எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழ்களிலும் (ஆண்டு மலர் 88, ஜூலை 29, 89), ஒய்.ஜி. பாக்டே எழுதியுள்ள ‘சுதந்திரத்திற்குப் பின் இஸ்லாமியரும் தாழ்த்தப்பட்டோரும்’ என்ற நூலிலும் காணலாம்.

கோயமுத்தூர், அகமதாபாத், சென்னை, பம்பாய் போன்ற தொழில் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இங்கெல்லாம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது என்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் பணிபுரியும் தொழில் எது தெரியுமா? வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் முஸ்லிம்கள் அதிகம் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர் (32 சதம்). ஏன் தெரியுமா? இந்த வேலை மிகவும் அசுத்மான, இழிவான, ஆரோக்கியக் கேடான வேலை. பாரம்பரியமாக இழிவாகக் கருதப்படும் இவ்வேலையைத் தாழ்த்தப்பட்டவர்களும் (60 சதம்) முஸ்லிம்களுமே செய்து வந்தனர். இன்றும் கூட உயர்சாதி இந்துக்கள் இந்த வேலையைச் செய்வதில்லை. இயந்திர இயக்குநர்கள், எழுத்தர்கள் போன்ற வேலைகளில் மட்டுமே பங்கு பெறுகின்றனர். தோலை ஊறவைத்தல், மயிர் பிடுங்குதல் போன்ற வேலைகளை, முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பெண்கள் மட்டுமே செய்கின்றனர். (பார்க்க பேரா.என்.சர்தார்கான், ‘வாணியம்பாடி தோல் தொழிலாளரின் சமூகப் பொருளாதார நிலை’ (அச்சில் வெளிவராத எம்.பி.ல ஆய்வு).

5. இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் முஸ்லிம்களுக்குஉரிய பங்களிக்கப்பட்டுள்ளதா?

இல்லை. வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது இந்து மத வெறியர்களால் மட்டுமல்ல, இராணுவம் மற்றும் காவல்துறையால் கொல்லப்படுவதுதான் அதிகம். நீதிபதிகள் தார்குண்டே, ராஜேந்தர் சச்சார் ஆகியோர் தலைமையில் காஷ்மீரில் இராணுவக் கொடுமைகள் பற்றி ஆராய்ந்த குழு சுட்டிக்காட்டியுள்ள ஒரு சம்பவம் (31.3.90) இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு ஆசிரியரின் வீட்டிற்குள் ‘டியூசன்’ படித்துக் கொண்டிருந்த மாணவர்களை வரிசையாய் நிறுத்திப் பெயரைக் கேட்டு முஸ்லிம் மாணவரை மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறது இந்திய இராணுவம். ‘சர்வதேச பொதுமன்னிப்புச் சபை’ என்கிற மனித உரிமை அமைப்பு பொதுவாக அரசின் மனித உரிமை மீறல்களை மட்டுமேஆய்வு செய்யும் ஒருஅமைப்பு.. ஆனாலும் 1987ல் மீரட்டில் நடந்த வகுப்புக் கலவரத்தை அது ஆராய்ந்தது. பி.ஏ.சி. படையினர் முஸ்லிம்களை லாரியில் ஏற்றிச் சென்று 130 பேரை ஆற்றங்கரையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்று ஆற்றுக்குள் தள்ளிய கொடுமையை அது கண்டித்துள்ளது. ஒரு கட்டிடத்தில் முப்பது முஸ்லிம்கள் உயிரோடு வைத்து கொளுத்தப்பட்டதற்கும் பி.ஏ.சி. தான் காரணம் என அவ்வறிக்கை கண்டிக்கிறது.

அடுத்த நாள் மீரட் வீதிகளில் ‘பி.ஏ.சி. ஜிந்தாபாத்’ என்று ஆர்.எஸ்.எஸ்சினர் முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலம் நடத்தினர். சமீபத்திய பம்பாய்க் கலவரத்தில் சிவசேனைக்குத் துணையாகக் காவல்துறை செயல்பட்டதையும், பாபர் மசூதியை வெறியர்கள் இடிக்கும் போது, பி.ஏ.சி. மற்றும் காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதையும் பத்திரிகைகளில் படித்தோம். 2002ல் குஜராத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் காவல் துறையின் ஒத்துழைப்பு ஊரறிந்த கதை. இராணுவம், காவல்துறை முதலியன இப்படி இந்துமயமாகிப் போனதற்கான காரணங்களிலொன்று இவறிறில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது. பி.ஏ.சி. படையில் 4 சதம் மத்திய ரிசர்வ் படையில் 5.5 சதம் மதக்கலவரங்களை அடக்குவதற்கான அதிரடிப்படையில் 6 சதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர். மதக் கலவரம் தொடர்பான வழக்குகளையும் போலீசார் ஒழுங்ககாப் பதிவு செய்து நடத்துவதில்லை. பிவந்தி (பம்பாய் 1984) கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட 611 வழக்குகளில் நான்கில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. குஜராத்தில் நடைபெற்றுள்ள செய்திகளைச் (2002) சொல்ல ஆரம்பித்தால் அது ஒரு தனி நூலாகவே விரியும். அங்கே இன்று நிலைமை என்னவெனில் குற்றவாளிகள் அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் திரிகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணமின்றித் துன்புறுகிறார்கள். இச்சூழலை உபேந்திர பக்சி போன்ற அறிஞர்கள் அரசே ‘கிரிமினல்’ தன்மை அடைந்த நிலை எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

6. மதக் கலவரங்களில் கொல்லப்பட்ட இஸ்லாமியர் பற்றி ஏதேனும் புள்ளி விவரங்கள் உண்டா?

இத்தகைய புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வன்முறை எப்போதும் உயிர்களையும் உடைமைகளையும் மட்டுமல்ல, சான்றுகளையும் சேர்த்தே அழித்து விடுகிறது. இத்தகைய விசயங்களில் அரசு ஆவணக் காப்பகங்களையும் முழுமையாக நம்ப முடியாது. எடுத்துக்காட்டாகப் பகல்பூர் (அக். 1989) கலவரத்தில் குறைந்தபட்சம் 1000 பேர் கொல்லப்பட்டனர். ரயிலில் பயணம் செய்தோரைக் குத்திக் கொல்வது, பாலியல் வன்முறைகள் எனப் பலவாறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கலவரத்தைத் தொடர்ந்து ஒரு இலட்சம் பேர் அகதிகள் முகாமில் இருந்தனர். ஜனவரி 90வரை 10,000 பேர் முகாமில் இருந்தனர். 1990 பிப்ரவரி மாதத்தில் ‘சண்டே மெயில்’ பத்திரிகை சுமார் 13 நாட்கள் அப்பகுதியில் தங்கி இக்கலவரம் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆவணக் காப்பகத்தில் பல முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டிருந்ததை அப்பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது. கலவரத்தின்போது உடனுக்குடன் வரும் அவசரச் செய்திகளைப் பதிவு செய்த புத்தகம் உட்பட அழிக்கப்பட்டிருந்தது.

தவிரவும் இத்தகைய சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு அறிக்கைகளையும், உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிற பத்திரிகைச் செய்திகளையும் நாம் நம்பமுடியாது. இருந்தபோதிலும் அவ்வப்போது மனித உரிமை அமைப்புகள் பல கலவரங்கள் குறித்த உண்மை விவரங்களை ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இவற்றை யாரும் முழுமையாய்த் தொகுத்து ஒட்டுமொத்தப் புள்ளி விவரம் தயாரித்துள்ளதாகத் தெரியவில்லை. இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிவிவரத்தைப் பாருங்கள். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள ,காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலிருந்து இவ் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தகவல் இல்லை (த.இ) என்பது அரசால் தகவல் முடக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. தகவல் முடக்கப்படாத முதலிரண்டு விவரங்களை வைத்துச் சொல்வதானால் சராசரியாக இக்கலவரங்களில் 100 பேர் கொல்லப்பட்டால் அதில் 70 பேர் முஸ்லிம்கள்தான். மொத்த சனத்தொகையில் இஸ்லாமியர் 13 சதம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். இங்கொன்றைச் சொல்வது அவசியம். இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உரிய ஆவணத் தொகுப்பு நிலையங்கள் ஏதும் இங்கு இல்லை. இது குறித்து அக்கறை உள்ளோர் இந்த விடயங்களில் முன்கை எடுத்தல் அவசியம்.

அட்டவணை

7. சமீபத்தில் மதக் கலவரங்களில் பொதுப்படையான பண்புகள் என ஏதாவது செல்ல முடியுமா?

சொல்லலாம். முதலில் இந்துவெறிப் பாசிச அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்களை வெளிப்படையாக வைக்கின்றன. முஸ்லிமாக இருப்பதே தேசத்துரோகமாக காட்டப்படுகிறது. ‘பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்’, ‘பாபர் மசூதியா மரணமா எது வேண்டும்சொல்’ என்றெல்லாம் முழங்கப்படுகிறது. அடுத்து, இப்போதெல்லாம் வகுப்புக் கலவரங்கள் என்றால் ஒரே இடத்தோடு முடிந்துவிடுவதில்லை. நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது- பாசிசச் சக்திகள் இதற்கேற்ற வலைப்பின்னலை நாடு முழுவதும் அமைத்துள்ளன. பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடெங்கும் பல இடங்களில் கலவரங்கள் நடந்ததை நினைத்துப் பாருங்கள். அப்புறம், வன்முறை என்பது ஒரே நாளில் முடிவடைந்து விடுவதில்லை. தொடர்ந்து சில நாட்கள் வரை புகைந்துகொண்டே இருக்கிறது. திடீர் திடீரென வன்முறை வெடிக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் வாழவேண்டி யிருக்கிறது. நான்காவதாக, சிறுபான்மையினர் கொல்லப்படுவது என்பதோடு அவர்கள் பொருளாதாரப் பின்புலத்தையே அழித்துவிடும் நோக்கோடு அவர்களது கடைகள், சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவை அழித்தொழிக்கப்படுகின்றன. சமீபத்திய சூரத், ரோடா, பம்பாய்க் கலவரங்களில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். கடைசியாக, இத்தகைய தாக்குதல்களின் கொடூரத்தன்மை மிகவும் அதிகரித்திருக்கிறது. நவீன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் முதலியவை பயன்படுத்தப்படுகின்றன.

8. இந்தியப் பொருளாதாரத்தில் இஸ்லாமியர் ஆதிக்கம் பற்றி ஏதும் சொல்ல முடியுமா?

சொல்லத்தக்க அளவில் எந்தத் தீர்மானகரமான பங்கையும் அவர்கள் வகிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் 50ல் ஒன்றுகூட முஸ்லிம்களுக்குச் சொந்தமானதல்ல. அதேசமயத்தில் கடைக் கோடியாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் இஸ்லாமியருந்தான். 50 மில்லியன் ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்யப்பட்டுள்ள 2832 பெருந்தொழில் நிறுவனங்களில் நான்கே நான்குதான் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. (பார்க்க: எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 3-11-90).

9. அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள், வங்கிக் கடன்கள் முதலியவை எந்த அளவு இஸ்லாமியரைச் சென்றடைகின்றன?

குறைந்த வருமான, மற்றும் நடுத்தர வருமான வீட்டு ஒதுக்கீடுகளில் 2.86 சதம் மட்டுமே முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றன. நியாய விலைக் கடை உரிமங்கள் பெற்றோரில் முஸ்லிம்கள் 6.9 சதம்தான். ‘காதி மற்றும் கிராமப்புறத் தொழிற் குழு’வின் நலத் திட்டங்களால் பயனடைந்தோரில் முஸ்லிம்கள்0.25 சதம் தான். இன்னொரு விவரம்:

அரசுக்கடன்கள்

தொகை ரூ. – பயனடைந்த இஸ்லாமியர் –

சதவீதக் கணக்கில்

50,000 – 1,00,000 – 3

1 லட்சம்- 2 லட்சம் – 2

2 லட்சம் – 10 லட்சம் 1க்கும் குறைவு

(பார்க்க: எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 3-11-90)

10. கல்வி நிலையில் இஸ்லாமியர் எப்படி உள்ளனர்?

ரொம்ப மோசம். சிறுபான்மைக் குழுவின் அறிக்கையின்படி பத்தாம்வகுப்பு வரை படித்தவர்களில் 4 சதம் மட்டும் முஸ்லிம்கள். உயர் கல்வியில் நிலைமை இன்னும் மோசம். மத்தியதர வர்க்கம் என்பது முஸ்லிம்கள் மத்தியில் உருவாகாமல் போனது இதற்கொரு காரணம். பெரும்பாலோர் ஏழைகள், கைவினைத் தொழில் செய்வோர் இப்படித்தான். உங்களுக்குத் தெரிந்து முஸ்லிம்கள் ஓரளவு வசதியாக உள்ள ஒருசில பகுதிகளை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் இதுதான் நிலை என்று கருதிவிடாதீர்கள்.

11. ஆனால் முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமாய்ப் பணம் வருகிறதே?

இந்திராகாந்தி அமெரிக்காவில் பேட்டி கொடுத்ததை வைத்துச் சொல்கிறீர்களா? எச்.என்.பகுகுணா இது பற்றிப் பாராளுமன்றத்தில் கேட்டபோது அரசால் (ஆக. 16, 1982) இது உடனே மறுக்கப்பட்டது. அதே ஆண்டு பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் (ஏப்ரல் 28, 82) ஒன்றிலிருந்து இன்னொரு தகவல். 1981-82ம் ஆண்டு வெளிநாட்டு உதவி பெற்ற இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 3159. இதில் முஸ்லிம் நிறுவனங்கள் 62 தான். அதாவது வெறும் இரண்டு சதம் தான்.

இன்னொன்றையும் சிந்தித்துப் பாருங்கள். இன்று ராமஜன்ம பூமி என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்து இந்து வெறி அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் பணம் வந்து குவிகிறது. சுருட்டியது போக எஞ்சியவற்றை வைத்துக் கொண்டு இன்று அயோத்தி முழுவதும் ஏராளமான பிரகாரங்களும், மாளிகைகளும் மிக ஆடம்பரமாய்க் கட்டப்படுகின்றன. இது தொடர்பாகக் கணக்கு கேட்ட ஒரு வருமான வரி அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ள செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனந்த் பட்டவர்த்தனின் ‘கடவுளின் பெயரால்’ என்கிற தகவல் படத்தில் இந்த அதிகாரியின் பேட்டியையும் நீங்கள் பார்க்கலாம். உண்மை இப்படியிருக்க முஸ்லிம்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதிவருகிறது என்கிற செய்தி திட்டமிட்டு தொடர்ந்து பரப்பப்படுவது முஸ்லிம்களுக்கு திரான வன்முறைக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மொரதாபாத் கலவரத்திற்கு Ôடைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் அதன் ஆசிரியர் கிரிலால் ஜெயின் தொடர்ந்து இத்தகைய வதந்தி பரப்பி வந்ததை ஒரு காரணமாய்ப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த வகையில் வன்முறையில் தொடர்புச் சாதனங்களின் பங்கையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

குஜராத் வன்முறையை ஒட்டி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள இந்து உயர்சாதியினர் இங்குள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுவது பற்றிய சர்ச்சை மேலுக்கு வந்தது. ராபர்ட் ஹாத்வே போன்ற அமெரிக்கக் கல்வியாளர்கள் இது போலத் திரட்டுப்படுகிற பணம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பயன்படுத்துவதைப் பற்றிக் குற்றஞ்சாட்டியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

12. முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல்படுகின்றன.

முஸ்லிம்கள் பற்றிய கட்டுக் கதைகள் என இதுவரை நாம் என்னவெல்லாம் சொன்னோமோ அவ்வளவும் தொடர்புச் சாதனங்கள் வழியாய்த்தான் மக்கள் மத்தியில் பதிக்கப்படுகின்றன. இந்தி மொழிப் பத்திரிகைகள் இந்த வகையில் மிகவும் மோசம். பாபர் மசூதிப் பிரச்சினையில் ‘ஸ்வதந்த்ர சேத்னா’, ;பயோனியர்’, ‘ஆஜ்’, ‘ஸ்வதந்த்ர பாரத்’ போன்ற பத்திரிகைகள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான வதந்திகளைப் பரப்பின என்பதை ராதிகா ராமசேஷன் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் (எ.பொ.வீ. 15-1-90). முலாயம்சிங் யாதவ் இந்த வெறியர்களுக்கு ஆதரவாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை ‘முல்லா முலாயம்’ என்றே இப்பத்திரிகைகள் எழுதின. “முலாயம் இஸ்லாமியரை ஆயுதம்வைத்துக் கொள்ளச் சொல்கிறார்” எனவும், “முலாயம் ஆட்சியில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்” எனவும் இவை பொய்ச் செய்திகளை வெளியிட்டன. பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனையில் இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எப்படி நடந்துகொண்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்து மதவெறி அமைப்புகள் தடை செய்ய்யப்பட்டதைத் ‘தினமணி’ கண்டித்து எழுதியது (டிசம். 12). “பெரும்பான்மையினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் முஸ்லிம்களின் கதி இப்படித்தான் ஆகும்” என்கிற கருத்தில் மசூதி இடிப்பைத் தொடர்ந்து வீரேந்திர கபூர் என்பவரின் கட்டுரையை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (ஜன. 7,93) வெளியிட்டது. பார்ப்பனர் ஆதிக்கத்திலுள்ள தொலைக்காட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மசூதி இடிப்பிற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிய பாசிச அமைப்புகளின் முயற்சிக்குப் பின்னணியாக விளங்கியது தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்ட இராமாயண, மகாபாரதங்கள்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதே பத்திரிகைகள்தான் ஆண்டுக்கு ஒரு முறை ரம்ஜான் மலர் வெளியிட்டு முஸ்லிம்வணிகர்களிடம் விளம்பரக் கொள்ளை அடிப்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

13. தொலைக்காட்சியில் திப்புசுல்தான் கதையைக் கூடத்தான் தொடராகக் காட்டினார்கள்?

ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். ஒவ்வொரு வாரமும் திப்பு சுல்தான் தொடருக்கு முன்பாக “இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது” என்று அறிவிப்புச் செய்தார்கள். திப்பு சுமார் இருநூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்து மடிந்த சரித்திர நாயகர். அவருடைய கதைக்கு இந்த அறிவிப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சாணக்கியன் கதைக்கும் இராமாயண, மகாபாரதங்களுக்கும் இந்த அறிவிப்பு கிடையாது.

திரைப்படங்களில் கூட முஸ்லிம்கள் பற்றி ஒரேவிதமான பிம்பங்கள்தான் முன் நிறுத்தப்படுகின்றன. ’நல்ல’ முஸ்லிம் என்றால் இந்துக்களோடு அனுசரித்துப் போகிறவர், உதவி செய்கிறவர், உரிமைகளுக்காகப் போராடினால் அவர் நல்ல முஸ்லிமல்ல. ‘ரோஜா’, ‘ஜாதிமல்லி’, ‘பம்பாய்’ முதல் நேற்று வந்த ‘ஒற்றன்’, ‘நரசிம்மா’ வரை சமீபத்திய திரைப்படங்களில் முஸ்லிம்கள் வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

14. ‘ரோஜா’ திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள். சரி, ‘ஜாதிமல்லி’யில் பொதுவாக மதக் கலவரம் கண்டிக்கப்படுகிறதே தவிர எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் விதண்டவாதம் செய்வது போலத் தோன்றுகிறதே?

பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நம் காதுகளில் ஜாதிமல்லியைச் சுற்றிவிட்டுப் போய்விடுவார்கள். அந்தப் படத்தில் இரண்டு முறை மதக்கலவரங்கள் காட்டப்படுகின்றன. இரண்டுமே நடப்பது அய்தராபாத்தில்தான், இன்று மதக் கலவரங்கள் அயோத்தியிலும், பம்பாயிலும், மீரட்டிலும், டில்லியிலும் நடக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாலச்சந்தர் ஏன் அய்தராபாத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அய்தராபாத் என்பதன் மூலம் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் என்கிற கருத்து மறைமுகமாய்ச் சொல்லப்படுகிறது. தவிரவும் பாதிக்கப்படுபவள் ஒரு இந்துப் பாடகி. பெயர் ஸ்ரீ ரஞ்சனி. எனவே மதக் கலவரத்தில் அவளது தாயைக் கொல்பவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எங்களைப் போன்றவர்களின் வாதங்களை விதண்டாவாதம் எனச் சொல்லாதீர்கள். சமத்துவம், சனநாயகம் என்கிற அடிப்படையில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் நாங்கள். அறிவுரீதியாக நாங்கள் சொல்கிற விஷயங்கள் தவறானவை என்று நிறுவுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம்.

15. நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுதானே சனநாயகம்?

பெருமபான்மையானவர்களின் கருத்துக்கும் பெரும்பான்மை சார்பாகச் சொல்லப்படும் கருத்துக்கும் வேறுபாடு காணவேண்டும். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்றா சொல்கின்றனர்? நிச்சயமாகக் கிடையாது. ‘தொடர்புச் சாதனங்கள் பற்றிய ஆய்வு மையம்’ என்கிற அமைப்பு டிசம்பர் 8ம் தேதியன்றும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் டிசம்பர் 12, 15 (1992) ஆகிய தேசிதளிலும் செய்த கருத்துக் கணிப்பின்படி 80 சதம் பேர் மசூதி இடித்ததைக் கண்டித்துள்ளனர். அதோடு பொத்தாம் பொதுவாகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதுதான் சனநாயகம் என்றும் சொல்ல முடியாது. மனித உரிமைப் பிரச்சினைகளைப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானித்துவிடவும் முடியாது. நாளைக்கே இந்து மதவெறி அடிப்படையில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் யாரும் பிள்ளை பெறக்கூடாது என்றொரு சட்டம் போட்டால் பெரும்பான்மைக் கருத்து என ஏற்றுக் கொள்ள முடியுமா? வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் அப்படித்தான். அதோடு சனநாயகம் என்றால் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப்படுவது மட்டுமல்ல; சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளிப்பதும், தங்களது கருத்துக்களை அவர்கள் பிரச்சாரம் செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்ற உரிமையளிப்பதும் சேர்த்துத்தான் சனநாயகம். ஆனால் ஒரு எச்சரிக்கையை இங்கு சொல்வது பொருத்தம். சாதாரண மனிதனிடமும் இந்துத்துவச் சிந்தனைகளைப் பதிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு இணையாக நமது மதச்சார்பற்ற சக்திகள் வேலை செய்வதில்லை, அணிதிரட்டுவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. சமீபத்திய தேர்தல்களில் (2003) பா.ஜ.க. வெற்றி பெற்றதற்குப் பின்னணியாக உள்ள இந்துத்துவக் கும்பலின் தொடர்ச்சியான செயற்பாடுகளை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாகப் பழங்குடியினர், தலித்கள் மத்தியில் இவர்களின் செயல்பாடு கவனிக்கத்தக்கது.

16. பாபர் மசூதிதான் இடிக்கப்பட்டுவிட்டதே. போனது போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரச்சினை இல்லைதானே?

இனிமேல்தான் பிரச்சினையே. மதுராவில் ‘’இட்கா’ மசூதியை இடித்துவிட்டுக் ‘கிருஷ்ண ஜன்ம பூமி’ கட்ட வேண்டுமெனவும், அஞ்சனியில் கிறிஸ்தவக் கோயிலை இடித்துவிட்டு ‘’னுமான் ஜன்ம பூமிÕ அமைக்க வேண்டுமெனவும் இந்து வெறியர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். வருணாசிரம அடிப்படையிலான ‘இந்து ராஜ்யம்’ தானே அவர்களின் இறுதிக் குறிக்கோள்!

17. முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையிலுள்ளனர். இரண்டாம் தரக் குடிமக்களாக உணர்ந்து வெட்கிப் போயுள்ளனர். தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இஸ்லாம் தனிநபர் சட்டம், ருதுமொழிக்கு நியாயம் வழங்குதல்’, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குச் சிறுபான்மை உரிமை வழஙகுதல், பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர் பற்றிய பொய்ச் செய்திகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பேட்டி காணும்போது தங்களது பாதிப்புகளைச் சொல்லக்கூடப் பயந்து சாகின்றனர். (எ.பொ.வீ. 10-11-90). இழந்தது இழந்ததாக இருக்கட்டும். இனி இழப்புகள் தொடராதிருக்கட்டும். குறைந்தபட்ச அமைதியான வாழ்க்கை போதும் என்பதுதான் அச்சம் கலந்த அவர்களது இன்றைய மனநிலை, எனினும் மசூதி இடிப்புக்குப் பினபு முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது.

18. நீங்கள் செல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவுந்தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் நான் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன?

பெரும்பான்மையினரின் பெயரிலான பாசிசத்திற்கு எதிராகச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த நாட்டிலுள்ள சனநாயகச் சக்திகளின் கடமை. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்து மதவெறியைக் கண்டிப்பதற்கே அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. கண்டிப்பவர்களும் கூட வெளிப்படையாக இந்துமதப் பாசிசத்தைக் கண்டிக்காமல் ‘சமய ஒற்றமை’ என்கிற பெயரில்தான் கருத்துப் பிரச்சாரம் செய்கின்றனர். ஏதோ இரண்டு சமயங்களுமே முரண்டு பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு நிற்பது போன்ற அர்த்தத்தை இது ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் நிலைமை அதுவல்ல. இந்துமத வெறியர்களும் இந்துமயமான அரசும் தாக்குகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்; எனவே இந்து மதவெறியைக் கண்டிக்கிறேன் என்று சொல்லாமல் மத ஒற்றுமை பேசுவதெல்லாம் சும்மா பம்மாத்துத்தான். இந்த நிலையில் இந்துமத வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது சனநாயகச் சக்திகளின் கடமை. அதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்ப்பது. கட்டுக் கதைகள் முன் வைக்கப்படும்போது அவற்றைத் தோலுரிப்பதும், அம்பலப்படுத்துவதும், முன்வைக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதும் சிறுபான்மையினரின் உயிர், உரிமை, உடைமை எல்லாவற்றையும் பாதுகாப்பதும் நமது கடமை. அது மட்டுமல்ல. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது என்கிற அடிப்படையில் சங்கராச்சாரி போன்ற இந்துத்துவ மனநிலையிலுள்ள மதத் தலைவர்களும் இந்துத்துவ அரசியல் சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைத்தான் கட்டிக் கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைப்பது நம் கடமையாக உள்ளது. 91ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 1947ல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்றும் இருக்க வேண்டும். அந்தச் சட்டப்படியும், பொதுவான மனித அறங்களின்படியும், மசூதி இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அளித்த வாக்குறுதியின் படியும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் மீண்டும் மசூதியே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை நாமும் வைக்க வேண்டும். இதர இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் முன் வைக்குமாறு வலியுறுத்தவுனம் வேண்டும்.

பின்னிணைப்பாய்ச் சில கேள்விகள்

1. இந்த நூலின் முதற்பதிப்பு வெளியாகிப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பல புள்ளி விவரங்களைத் தந்துள்ளீர்கள். இவற்றில் சிறிதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? இந்திய முஸ்லிம்களின் நிலைமையில் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

நிச்சயமாக இல்லை. இன்னும் மோசமாக ஒதுக்கப்படக் கூடிய நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமும் தாக்குதல்களும் அதிகமாகியயுள்ளன. இந்தப் பத்தாண்டுகளில் மத்தியிலும் பல மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும் அவர்களது கூட்டணியிரும் ஆட்சிக்கு வந்துள்ளனர். மதச் சார்பற்ற அறிஞர்கள், கல்வியாளர்களை எல்லம் நிறுவனங்களில் இருந்து நீக்கியுள்ளனர். மதச்சார்பற்ற பாட நூற்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் மோசமான கருத்துக்களைப் ‘பாடங்களாக’ எழுதி மாணவர்களுக்குப் புகட்டுகின்றனர். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மதரசா பள்ளிகள் தீவிரவாதிகளை உருவாக்கும் மய்யங்கள் என்கிற பிரச்சாரத்தை அத்வானி முதலானோர் தெடார்ந்து செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் மதரசாக்கள் மீதும் அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக அரசு முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறி வைத்து இயற்றியதும் பின்னர் அது முடக்கி வைக்கப் பட்டதும் நினைவிருக்கலாம்.. இன்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ள ம.பி., சட்டிஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் இதர அமைப்புகளும் மிரட்டப்படுகின்றன.

இந்நூல் பத்தாண்டுகளுக்கு முந்தியதாயினும் ஆங்காங்கே தேவையான இடங்களில் சில புதிய குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

புள்ளி விவரங்களைப் பொறுத்தமட்டில், உதாரணமாக அரசு மற்றும் இராணுவத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அல்லது அரசு கடன் உதவி பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அவை குறைந்துள்ளன என்பதுதான் உண்மை.

அதே சமயத்தில் முஸலிம்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள் பெரிய அளவில் அதிகரித்துள்ன. கோயமுத்தூரும், குஜராத்தும் இதற்கு எடுத்துக்காட்டுகள் பெரிய அளவில் முஸ்லிம்களின் சொத்துக்கள் கோவையில் அழிக்கப் பட்டதை பி.யூ.சி.எல். போன்ற அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. கோட்டைமேடு போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் நிரந்தரக் குற்றவாளிகளாகக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். குஜராத்தில் 2000 பேருக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1,70,000 முஸ்லிம்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர். இன்றளவும் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வீடு திரும்ப முடியவில்லை.

குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அரசுப் பதவிகளில் அமோகமாக உலவுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ எவ்வித நியாயமான நிவாரணமும் இன்றி அஞ்சி நிற்கின்றனர். குற்றவாளிகள் தண்டனை இன்றித் திரிதல், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதியும், நிவாரணமும் இன்றி அவதியுறுதல். இது ஒரு சனநாயக நாடா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. உபேந்திர பக்சி போன்ற உலகப் புகழ் பெற்ற சட்டவியல் அறிஞர்கள் இந்த அடிப்படையில் குஜராத்தை ஒரு ‘கிரிமினல் அரசு’எனக் கூட வரையறுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலைமை மேலும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. சீரழிந்துள்ளது என்பதே உண்மை.

2. ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்திரிப்புகளில் ஏதும் முன்னேற்றம் தென்படுகிறதா?

எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல. செப்டம்பர் 11க்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதியாக, தேசபக்தியற்றவர்களாக, சந்தேகத்துக்குரியவர்களாக, சித்திரிக்கும் நிலைமை அதிகமாகியுள்ளது. நமது தமிழ் சினிமாக்கள் இந்த அம்சத்தில் ரொம்ப மோசம். மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோர் இந்த வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார்கள் என்றால் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிக்கும் படங்கள் மிகவும் வெளிப்படையாக முஸலிம் வெறுப்பைக் கக்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒற்றன், நரசிம்மன் போன்ற படங்களைச் சொல்லலாம். குஜராத் படுகொலைகளின் போது ஆங்கில இதழ்கள் அந்தக் கொடுமைகளை வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் கூட தேசிய அளவிலான ஆங்கில இதழ்களுக்கும் மாநில அளவிலான மாநில மொழி இதழ்களுக்கும் சில வேறுபாடுகளைச் சுட்ட முடியும். ‘இந்தி’ மொழி இதழ்கள் குஜராத் பிரச்சினையில் மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தியிருந்ததை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் இதழ்களும் கூட அதேபோல் நடந்துகொண்டன, நடந்து கொண்டுவருகின்றன. ‘தினமலர்’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ‘தினமணி’யைக் கட்டுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி. சமீபத்தில் வரலாற்றுப் பாடங்களில் பா.ஜ.க. அரசு செய்துள்ள புரட்டுகளை விளக்கி ஒரு முன்னாள் துணைவேந்தர் எழுதிய கட்டுரையொன்றை தமிழ் முனனணி நாளிதழ் ஒன்று வெளியிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. அப்படியானால் எந்த நம்பிக்கைக் கீற்றையும் உங்களால் காண இயலவில்லையா?

அப்படி நான் கருதவில்லை. குறிப்பாக மசூதி இடிப்பிற்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வு வந்துள்ளது. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகிய துறைகளில் அவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாக உள்ளன. இத்தகைய அரசியல் விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்தில் தற்காப்பை அதிகப்படுத்தும என்று நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மதச்சார்பின்மையோர், இடதுசாரிகள் மற்றும் இதர ஜனநாயக சக்திகள் ஆகியோர் சிறுபான்மையோர் பிரச்சினைகளில் காட்டக்கூடிய அக்கறையும் பாராட்டக் கூடியதாகவே உள்ளது. அறிவுத் துறையில் இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளும் புரட்டு வேலைகளுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிற ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளும், தோலுரிப்புகளும் பாராட்டக்கூடியதாக உள்ளன.

அதே போல குஜராத்தில் மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.

எனினும் அதிகரித்து வரும் இந்துத்துவ ஆபத்தை எதிர்கொள்ள இத்தகைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாசிஸ்டுகள் ஒரு செங்கல்லை வைத்து, ஒரு விநாயகர் சிலையை வைத்து, சிலை வணக்கம், பூஜை என்று ஏதோ ஒரு பெயரில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் மக்களை அணி திரட்டுகின்றனர். அடித்தள மக்கள், பெண்கள் முதலியோரைப் பெரிய அளவில் திரட்டுகின்றனர். ஆனால் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் எதிர்வினைகள் ரொம்பவும் அடையாளச் செயற்பாடுகளாகவே முடங்கியிருக்கின்றன. ஒரு கண்டனக் கூட்டம், மனிதச் சங்கிலி என்கிற அளவில் முடிந்துவிடுகின்றன. வலதுசாரி மதவாத சக்திகள் மக்களைத் திரட்டுவதும் இடதுசாரி, சனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அதற்கு ஈடுகொடாமல் இருப்பதும் நாட்டில் பாசிசம் வெற்றி கொள்வதின் அடையாளமாக அமையும்.

அரசியல் பிரச்சினைகளை அரசியற் களத்தில்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் என்கிற ரீதியில் அரசியல் அமைப்புகள் சொல்லிவிட்டுச் சும்மா இருக்க இயலுமா?

4. சமீபத்தில் ஒரு இதழில் படித்தேன்: ஷாபானு பிரச்சினையில்தான் முஸ்லிம்கள் முதன் முதலில் இந்திய அளவில் திரள ஆரம்பித்தார்களாமே? இது உண்மையா?

நானும் படித்தேன். முஸ்லிம்களிடம் சனநாயகம் இல்லை, சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக் கதைகளைப் பரப்பி வரும் இதழ் அது. ஷாபானு பிரச்சினையில்தான் இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைகின்றனர் எனச் சொல்வதன் மூலம் முஸ்லிம்கள் பெண்களை ஒடுக்கியவர்கள், இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி அது. திரைப்படங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் ‘தீவிரவாதப்’ பிரச்சாரத்தின் இன்னொரு தந்திரமான வடிவம் இது. ஆனால் உண்மை இதுவன்று. ஷாபானு பிரச்சினை மேலுக்கு வந்தது 1985ல் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில், அதற்கு முன்பே முஸ்லிம்கள் இந்திய அளவில் திரண்டு தம் குரலை ஒலிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதுதான் உண்மை.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் பரிதாபமானது. அநீதிகள் நிரம்பியது. பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி படேல், ராஜேந்திர பிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, மாளவியலா முதலியோர் இங்குள்ள முஸ்லிம்களைப் பிணைக் கைதிகளாகவே கருதி நடத்தினர், முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் காந்தியும் நேருவும்தான். காந்தியையும் இந்துத்துவவாதிகள் சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் தலைவர்களனைவரும் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இந்திய அளவிலான ஒரே தலைவராககிய அபுல் கலாம் ஆசாத் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுககத் தயாராக இல்லை.

அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அநீதிகள் இழைக்கப்பட்டன.

1. உருது மொழி புறக்கணிக்கப்பட்டமை.

2. பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு பதவிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையும் மறுக்கப்பட்டமை.

3. பொதுசிவில் சட்டம் பற்றிய குறிப்பை வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்றியமை.

இதே காலகட்டத்தில் பாபர் மசூதிக்குள் பாலராமர் சிலையை வைத்து வருங்காலக் கொடுமைகளுக்கு வித்திட்டது இந்துத்துவம்.

தலைமையும் வலுவான இயக்கமும் அற்ற முஸ்லிம் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது. காந்தி முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் லீக்கை கலைத்துவிடச் சொன்ன நேரம் அது. எப்படியேனும் இந்திய தேசத்தின் மீதானத் தங்களின் விசுவாசத்தை நிறுவுவதே அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் பணியாக இருந்தது. இந்நிலையில் 1960 வரை அகில இந்திய அளவில் முஸ்லிம் திரட்சி என்பது ஏற்படவே யில்லை.

1961ல் தான் முதல் முறையாக டாக்டர் சையத் முகமத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியில் ஜூன் 10, 11 தேதிகளில் புதுடெல்லியில் இந்திய முஸ்லிம்களின் மாநாடு கூட்டப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. இதற்குப் பின்புலமாக இருந்தது ஜபல்பூரிலும், பகல்பூரிலும் நடைபெற்ற மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள். முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் பெருமளவில் அழிக்கப்பட்டன. 1964ல் ஜாம்ஷெட்பூரில் மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் லக்னோவில் மவுலானா தயீப், சையத் முகமது ஆகியோரின் முயற்சியால் அகில இந்திய முஸ்லிம் மக்களின் மஜ்லிஸ் ஏ முஷாவரத் மாநாடு கூட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், நவகிருஷ்ண சவுதரி, ஆனந்த சங்கரராய், சாரு சந்திர பந்தாரி முதலியோர் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகக் கண்டித்தனர். 1964ல் தான் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கடுமையான வன்முறைகளையும் சொத்திழப்பையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட போதும் எல்லாவற்றி லிருந்தும் தாம் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த போதும்தான் முஸ்லிம்கள் ஒன்றிணையக் கூடிய நிலை ஏற்பட்டது. 1961க்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதை மறைத்து ஷாபானு விவகாரத்தை ஒட்டித்தான் (1985) முஸ்லிம்கள் திரண்டதாகச் சொல்வது அப்பட்டமான இந்துத்துவத் தந்திரம். அடிப்படைவாத நோக்குடன்தான் முஸ்லிம்கள் திரண்டனர் என நிறுவ முயலும் குள்ளநரித்தனம்.

5. எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்?

மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு. உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தியா போன்ற பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி என வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் வழமைகள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படுகிறது. சில சாதிகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்துச் சட்டம் இயற்றும்போது கூட மேற்குப் பஞ்சாபிய உயர்சாதிப் பார்ப்பனப் பண்பாடுகளின் அடிப்படையிலேயே அச்சட்டம் இயற்றப் பட்டது என்றும் அது பல பழங்குடி மக்களின் பண்பாடுகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்றும் ஒரு விமர்சனமுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தல வழமைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கும் நமது சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன.

இப்படி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். சிறீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்றொரு பிரச்சினை பல ஆண்டுகளக்கு முன்பு வந்தது. நீதிமன்றம் வரை சென்ற அந்தப் பிரச்சினையில் இறுதிவரை பொதுவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. ஒருமாதம் வடகலை நாமம், இன்னொரு மாதம் தென்கலை நாமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துமதத்திற்குள்ளேயே கூட இது சாத்தியமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்நிலையில் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது முஸ்லிம்களக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை.

சென்ற ஜுலை 21 (2003) அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் வழக்கின் வாதங்களுக்கோ, தீர்ப்புகளுக்கோ எவ்விதத் தொடர்பும் இன்றி பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுமாறு தலைமை நீதிபதி காரே பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் பொதுசிவில் சட்டம் வந்தால் தேசிய ஒருமைப்பாடு காப்பப்படுமாம். இதற்கு முன்பே நீதிபதி குல்தீப் சிங், சந்திரசூட் போன்றவர்களும் இப்படிச் சொல்லியுள்ளனர். அரசியல் சட்ட அவை விவாதத்தின் போதும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எம்.ஆர்.மசானி போன்றோர் இதைச் சொல்லியுள்ளனர். இதில் சிலஅம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமாக உள்ளதா இல்லையா என ஆய்ந்து தீர்ப்பளிப்பதே நீதிமன்றங்களின் பணி. பாராளுமன்றம் என்ன மாதிரி சட்டங்களை இயற்ற வேண்டும் எனச் சொல்வதற்கோ, கட்டளையிடுவதற்கோ அதற்கு அதிகாரமில்லை.

2. தேசிய ஒருமைப்பாடு குறித்த கவலையும் கூட நீதிமன்ற எல்லைக்கு அப்பாற்பட்டது. அது குறித்துப் பாராளுமன்றம், அரசியல் சட்டம் ஆகியவை கரிசனம் கொள்வதே பொருத்தம்.

3. இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் பாதுகாக்கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உறுதியாகும்போதே இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் அவருக்கு நம்பிக்கை வரும். மாறாக பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவருக்கு இது நமது நாடுதானா என்கிற அய்யம்தான் ஏற்படும்.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழிப்பது என்பது அவர்களின் மத உரிமையில் தலையிடுவதுதான். சொல்லப்போனால் ‘தனிநபர்’, ‘சட்டம்’ என்கிற இரு சொற்களுமே இங்கே பொருத்தமின்றி கையாளப்படுகின்றன. ‘தனிநபர்’ என்கிற மேலைத்தேய நவீனத்துவக் கருத்தாக்கம் இங்கே பொருந்தாது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் வருபவை தனிநபர் சார்ந்த உரிமைகள் அல்ல. அது அவர்களது ‘தீனின்’ ஒரு பகுதி, மதக் கடமை. தவிரவும் தொகுத்துச் சட்ட ஏற்பு வழங்கப்பட்டவைகளையே ‘சட்டம்’ என்கிறோம். சட்டமாகும்போது நீதிமன்றம் அதை சொல்லுக்குச் சொல் கடைபிடிக்க வேண்டும. மீற முடியாது. ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ இவ்வாறு பண்ணப்பட்டதல்ல. அதனால்தான் ஷாபானு வழக்கிலும் வேறு பல வழக்குகளிலும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தையும் மீறித் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகள் இருக்கும் போதும் பொதுசிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுவதன் அர்த்தமென்ன?

இந்த மாதிரியான பிரச்சினைகளில் சீர்திருத்தங்கள் கூடாது என்பதில்லை. அவை உள்ளிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிலிருந்து திணிக்கக்கூடாது. கிறிஸ்தவர்கள் தமது சட்டங்களில் சில மாற்றங்கள் வேண்டுமென்கிறார்கள். இதில் கருத்தொருமிப்பு இருந்தால் அதை ஏற்று தேவையான சட்டத் திருத்தம் செய்யலாம். அதே போல முஸ்லிம்கள் மத்தியிலும் ஏதோ ஒரு விசயத்தில் ஒரு கருத்தொருமிப்பு ஏற்பட்டு சட்டத் திருத்தம் என்கிற குரல் மேலுக்கு வந்தால் அது வேறு விஷயம்; அத்தகைய நிலை இல்லாதபோது வெளியிலிருந்து எதையும் திணிக்க முயல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

சில விடயங்களில் ஒரே பிரச்சினை குறித்து இருவேறு சூழல்களில் இருவேறு கருத்துக்களைக் கூடப் பேச வேண்டி இருக்கலாம். இதுநாள் வரை பெண்களுக்குப் ‘பர்தா’ வேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் கூட இன்று பிரெஞ்சு அரசாங்கம் பர்தா அணியக் கூடாது என்றொரு நிலையை வன்முறையாகச் செயல்படுத்த முனையும் போது அதற்கெதிராக முஸ்லிம் பெண்களுடன் இணைந்து போராடவில்லையா?

6. சரி. மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு வருவோம். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதமாற்றம் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அது தேவைதானே?

இந்து மதத்திலிருந்து ஏன் மக்கள் வெளியேற நேர்கிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்துத்துவவாதிகளுக்கு நேர்மையும் தைரியமும் இல்லை. இங்குள்ள சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றின் விளைவாகவே மக்கள் மதம் மாற நேர்கிறது. இன்றுவரை அவற்றை ஒழிப்பதற்கான காத்திரமான முயற்சிகள் எதையும் சங்கராச்சாரியோ யாருமோ மேற்கொள்ள வில்லை. சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள கூத்திரம்பாக்கம் கிராமத்திலுள்ள தலித் மக்கள் தமது வீதிக்குச் சாமி ஊர்வலம் வேண்டும் எனப் போராடிய கதையைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். பலமுறை போராடி, இறுதியில் தமது கோரிக்கைக்குத் தீர்வில்லை எனில் தாம் மதம் மாறப் போவதாக அவர்கள் அறிவித்தனர். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சங்கராச்சாரியும் ஓடோடி வந்தார். “நீங்கள் சுத்தமாக இல்லை. உங்கள் தெருவுக்கு ஊர்வலம் வராது” என்றுதான் சங்கராச்சாரி சொன்னாரே ஒழிய ஊர்வலம் வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மதம் மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்றார். மத மாற்றச் சட்டமும் அறிவிக்கப்பட்டது. இன்று அங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டுள்னர். வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சங்கராச்சாரி இப்போது அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தம்மிடம் இருந்த ஒரே ஆயுதமாகிய ‘மதமாற்றம்’ என்பதையும் இழந்ததால் இன்று பேச இயலாமல் அந்த தலித் மக்கள் ஊமையாகிப் போயுள்ளனர். இன்றும் அவர்களின் வீதிக்குச் சாமி வந்தபாடில்லை. ஒரு சோற்றுப் பதமாக இந்த உதாரணம். எல்லா இடங்களிலும் இதே கதைதான்.

இந்திய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர ஏற்கனவே இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1955ல் கொண்டுவரப்பட்டற மசோதாவைப் பாராளுமன்றம் நிராகரித்தது. 1978 ஜனதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டுவர ஜனசங்கத்தினர் தீவிரமாக முயற்சித்தனர். அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை ஏற்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதம் பரப்பும் உரிமையை நீக்குவதற்கு இதுவரை பாராளுமன்றம் துணியவில்லை.

மதம் மாற்றுவதற்காக முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றொரு பொய்ப் பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்து. மீனாட்சிபுர மதமாற்றத்தின் போதே இப்படிச் சொல்லப்பட்டது. இந்திய அரசின் நேரடி விசாரணையில் இது பொய் என்பது வெளிவந்தது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையே இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதுதான் உண்மை. இந்தியக் கிறிஸ்தவம் அமெரிக்கக் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் பழமையானது. கிறிஸ்துவின் சீடர் தாமஸ் மேற்குக் கடற்கரை வழியாக இங்கு வந்தபோது மயிலாப்பூர் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டார் என்றொரு கதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் மயிலாப்பூர் – சாந்தோம் மாதா கோயிலில் தாமசுக்கு ஒரு கல்லறை உண்டு. கிறிஸ்தவம் இத்தனை பழமையானதாயினும் இன்றும் கூட அவர்கள் மொத்த இந்திய சனத்தொகையில் இரண்டரை சதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். அதுவும்கூட படிப்படியாகக் குறைந்து வருவதை மக்கள் தொகைக் கணக்கீடுகள் நிறுவியுள்ளன. 1971ல் 2.60 சதமாக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை 1989ல் 2.45 சதமாகவும் 1991ல் 2.32 சதமாகவும் குறைந்துள்ளது.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்துத்துவ வாதிகள் ‘வனவாசி கல்யாண் மஞ்ச்’ போன்ற அமைப்புகள் மூலம் பெரிய அளவில் கிறிஸ்தவப் பழங்குடியினரையும் தலித்துகளையும் இந்துக்களாக மாற்றி வருகின்றனர். இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அவர்கள் ஆண்டுதோறும் செலவிடுகின்றனர். கிறிஸ்தவ தலித்துகளுக்கு தலித்கள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது அரசியல் சட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் அநீதி. இதை வைத்துக் கொண்டு கிறிஸ்தவ தலித்துகளை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் ‘இந்து’வாக மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ தலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது அரசியல் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாற்றத் தடைச் சட்டமாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தவிரவும் நமது அரசியல் சட்டத்தில் மதம் பரப்பும் உரிமை என்பது பிற அடிப்படை உரிமைகளைப் போல நிபந்தனையற்ற உரிமையாக இல்லை. “பொது அமைதிக்குக் குந்தகம் வராத அளவில்” மதம் பரப்பலாம் என்றே உள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுகிறது என்கிற அடிப்படையில்தான் மாநிலங்கள் இத்தகைய சட்டங்களை இயற்றி வருகின்றன. இது போன்ற காரணங்களால்தான் அம்பேத்கரும், பெரியாரும் நமது அரசியல் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.

7. மதமாற்றத்திற்குப் பெயர் மாற்றம் ஒரு ஈடாகுமா?

அம்பேத்கரோ, பெரியாரோ அப்படிச் சொல்லவில்லை. “மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. மனித வாழ்வை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பதோடு தொடர்புடையது அது. தீண்டாமை இழிவிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி இந்து மத விலங்குகளை உடைத்தெறிவதே. சாதியத்தையும் தீண்டாமையையும் ஒழிக்க ஒரே வழி மதமாற்றம்” என்று அம்பேத்கர் கூறியுள்ளார். பெரியாரும் அதையே வற்புறுத்தியுள்ளார். “இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன்மருந்து” என்பது அவர் கூற்று. இன்று பெரிய அளவில் பெயர் மாற்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூட பெயர் மாற்றம் என்பதை மதமாற்றத்திற்கு ஒரு மாற்றாகச் சொல்லவில்லை (பார்க்க சமரசம், சனவரி 2004). இந்து மத எதிர்ப்பின் அடையாளமாகவே அதைச் செய்வதாகச் சொல்கிறார். தவிரவும் மதமாற்றத்தால் விடுதலை உண்டா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மதமாற்றம் என்பதும் ஒருவரது மதத்திற்கு மற்றொருவரை அழைப்பதும் ஒருவரது பிறப்புரிமை. இதில் தலையிட அரசுக்கு என்ன உரிமை என்பதே நமது கேள்வி.

8. முஸ்லிம்களுக்குத் தமிழ்ப் பற்று இல்லை. ஓதுவதைக் கூட அவர்கள் அரபியில்தான் செய்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே?

அபத்தம். நமது தமிழ்ப்பற்றாளர்கள்கூட அப்படி ஏதும் சொல்லியதாகத் தெரியவில்லை. அப்படி சொன்னால் அது அவர்களுக்குள் ஒளிந்துள்ள இந்துத்துவ மனத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடீயும். குரானைத் தமிழில் பெயர்த்துள்ளது தவிர ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் அது தமிழ் மக்களால் வாங்கி வாசிக்கப்படுகிறது. இஸ்லாமியர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறித்து அறிஞர் உவைஸ் எழுதிய நூல் ஆறு தொகுதிகளாக மதுரைக் காமராசர் பல்லைக் கழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மசூதியில் நடைபெறுகிற தொழுகையில் பெரும்பாலானவைத் தமிழில் தான் நடைபெறுகின்றன. தொழுகை அழைப்பு என்பது உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்குமான ஒரு பொதுவான அழைப்பு. ஒரு தனித்துவ அடையாளம். அது தவிர அவர்களது அனைத்து நடைமுறைகளும் தமிழில் தான் உள்ளன. திருமண ஒப்பந்தத்திலும் கூடப் பாருங்கள். சபையில் தமிழில்தான் கேள்விகள், சம்மதம் முதலியவை கேட்கப்படுகின்றன. பதிலும் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்க்காமல் தொழுகை அழைப்பையும் கூடத் தமிழில்தான் செய்ய வேண்டும் என வற்புறுத்தவது எப்படிச் சரியாக இருக்கும்?

நமது நிகழ்வுகளில் தலித்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரை எந்த அளவிற்கு இடம் பெறச் செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை நாம் எல்லோரும் கேட்டுக் கொள்வது நல்லது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற ஒரு ‘தமிழ் வணிகர் மாநாட்டில்’ ஒரு முஸ்லிம் வணிகர் கூட அழைக்கப்படாதது என் நினைவுக்கு வருகிறது. இத்தகைய போக்குகளை மதச்சார்பற்ற, சனநாயக, இடதுசாரி சக்திகள் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் தலித்துகள், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்து அக்கறையோடு பிரத்தியோகமாக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், கோரிக்கைகள் முதலியவற்றை வைக்க வேண்டும். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மாநாடுகள், பத்திரிகைகளில் முழங்குவதோடு நிறுத்திவிடக் கூடாது.

பலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு

{இது மிகச் சுருக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தச் சுருக்கத்தை எனது முந்தைய கட்டுரைகளுடன் சேர்த்துப் படித்தால் இன்னும் வரலாறு விளக்கமாகும். ‘ஏரியல் ஷரோன்: மாவீரனா போர்க்குற்றவாளியா?’ (2013), ‘காஸாவில் ஒரு கண்ணீர் நாடகம்’ (2005), ‘காஸா : போரினும் கொடியது மௌனம்’ (2014) முதலிய என் கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. சுருக்கத்தின் விளைவாக முக்கிய செய்திகள் ஏதும் விடுபட்டு விட்டதாகக் கருதினால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம்.}

இன்றைய வரைபடங்களில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் காணப்படும் காஸா, இஸ்ரேல், மேற்குக்கரை (வெஸ்ட் பாங்க்) என்கிற மூன்று பகுதிகளும் ஒரு காலத்தில் ‘பலஸ்தீன்’ என்கிற ஒரே பகுதியாக அறியப்பட்டன. பலஸ்தீனிய அரபியர்கள் (பெரும்பாலும் முஸ்லிம்கள், ஒரு சிறிய அளவில் கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ்கள்) மற்றும் யூதர்கள் இரு சாரரும் இதைத் தமக்குரிய நிலம் என்கின்றனர்.

கி.மு நூற்றாண்டுகளில் இங்கு வாழ்ந்த யூதர்கள் பெரிய அளவில் புலம் பெயர்ந்து சென்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தனர். யூத வெறுப்பு அரசியல் (Anti Semitism) ஒன்று எழுந்ததை ஒட்டி 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் தமது பூர்வ நிலமான பலஸ்தீனத்திற்குப் புலம் பெயர்வது என முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்து, அங்கு பல நூறாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பலஸ்தீனியர்கள் மத்தியில் குடியேறத் தொடங்கினர். புனித பைபிளைச் சான்று காட்டி, இறைவனால் தங்களுக்கு “வாக்களிக்கப்பட்ட நிலம்” இது என உரிமை கோரினர்.

1882ல் பலஸ்தீனத்திற்குள் இப்படி முதல் யூதக் குடியிருப்பு உருவானது. 1884ல் இதை நியாயப்படுத்தும் நோக்கில் ‘ஸியோனிச’ கோட்பாட்டையும் உருவாக்கினர். இதற்கு முன் பலஸ்தீனத்திற்குள் வாழ்ந்த யூதர்கள் வெறும் 4 சதம் மட்டுமே. (முஸ்லிம்கள் 86 சதம், கிறிஸ்தவர்கள் 9 சதத்திற்கும் மேல்.) தொடர்ந்து இரண்டாம் உலகப் போர், இட்லரின் யூதப் படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டி பெரிய அளவில் அகதிகளான யூதர்களை ஸியோனிஸ்டுகள் ஐரோப்பாவிற்குள் இடம் பெயராமல், பலஸ்தீனத்திற்குச் செல்ல வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். முதல் உலகப் போருக்குப் பின் பலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

முதலில் இக் குடியேற்றத்தை பலஸ்தீனியர்கள் பெரிதாக எடுத்துக் கொள்லாவிட்டாலும் தமக்கென ஒரு நாடு அமைக்கும் நோக்கத்துடன் மேலும் மேலும் யூதக் குடியிருப்புகள் உருவானபோது முரண்பாடுகளும் மோதல்களும், வன்முறைகளும் வெடித்தன.

1947ல் ஐ.நா அவை இதில் தலையிட முடிவு செய்தது. அப்போது அங்கு குடியிருப்பை அமைத்திருந்த யூதர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 சதம்; அவர்கள் வசமிருந்த நிலம் 7 சதம். எனினும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த பலஸ்தீனின் 55 சதப் பகுதியில் யூதர்களுக்கென இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க ஐ.நா பரிந்துரைத்தது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட யூதர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக் காலம் முடியும்போது சுதந்திர இஸ்ரேலைப் பிரகடனம் செய்தனர். பலஸ்தீனியர்கள் அதை எதிர்த்தனர்.

1947 -48 அரபு- இஸ்ரேல் போர்: மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரபு நாடுகள் யூதர்களுக்கு எதிராகப் படை எடுத்து வந்தன. ஐந்து அரபுப் படைகள் அதில் பங்குபெற்ற போதும் யூதர்களின் மூர்க்கமான தாக்குதலின் ஊடாக போர் முடியும்போது அவர்கள் பலஸ்தீனத்தின் 78 சதப் பகுதியைக் கைப்பற்றி இருந்தனர். சுமார் 500 நகரங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டிருந்தன. கைப்பற்றிய இடங்களுக்கெல்லாம் ஹீப்ரு மொழியில் பெயர்கள் இடப்பட்டன.

“உலகிலுள்ள 11 மில்லியன் யூதர்களில் 10 மில்லியன் பேரேனும் குடியமர்த்தப்பட்ட ஒரு இஸ்ரேலைக் கனவு காண்கிறேன்” என்றார் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன்,“பலஸ்தீனம் என்று எதுவும் கிடையாது” என்றார் இஸ்ரேலின் முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றவர், முதல் பெண்பிரதமர், இரும்புப் பெண் என்றெல்லாம் பெயர் பெற்ற கோல்டா மேய்ர். போரின் முடிவில் எகிப்து வசம் காஸாவும் மேற்குக் கடற்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் வசமும் கோலான் மேடுகள் சிரியா வசமும் இருந்தன.

பலஸ்தீனியர்கள் அகதிகளாகும் வரலாறு தொடங்கியது.

1967 போர்: ஆறு நாள் யுத்தத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் எல்லாவற்றையும் கூடுதலாக சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியது. ஐ,நா அவை பலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற இரு நாட்டுத் தீர்வு குறித்த 242 வது தீர்மானத்தை இயற்றியது. எனினும் இன்றுவரை அது நடைமுறைப் படுத்தப்பட வில்லை. பலஸ்தீனத்திற்கு இறையாண்மை உடைய நாடு எனும் நிலை இன்னும் வழங்கப்படவில்லை.

இடையில் மீண்டும் 1973ல் ஒரு போர்.

1964ல் பல்வேறு பலஸ்தீனியக் கெரில்லாக் குழுக்கள் இணைந்து பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) உருவானது. ஜோர்டான், லெபனான் முதலான அரபு நாடுகளைத் தளமாகக் கொண்டு அது இயங்க வேண்டி இருந்தது

யாசிர் அராஃபத்தின் தலைமையில் இயங்கிய பலஸ்தீனிய விடுதலை அமைப்பிற்கு காசா, மேற்குக்கரை உள்ளிட்ட பலஸ்தீனியப் பகுதிகளுக்கான முழு அதிகாரத்தையும் வழங்குவதாக அரபு நாடுகளின் குழுமம் (Arab League) 1974ல் அறிவித்தது. ஐ.நா. அவையில் பார்வையாளர் நிலையும் அதற்கு வழங்கப்பட்டது.

1982 போர்: லெபனான் மீதான ஆறு மாதப் படையெடுப்புக்குப் பின் பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) லெபனானிலிருந்து வெளியேறி துனீசியாவிலிருந்து இயங்கியது. 1988 ல் அது அல்ஜியர்சிலிருந்து, ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீனிய நாட்டிற்கான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தது (Government in Exile).

1988- 03 காலகட்ட பலஸ்தீனிய எழுச்சிகளில் (Intifadas) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பலஸ்தீனியப் பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்தது.

1993 ல் ஆஸ்லோவில் முதன்முதலாக பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். காஸா, மேற்குக்கரை இரண்டையும் பாதை (corridor) ஒன்றின் மூலம் இணைத்து நிர்வகிப்பதற்கான “பலஸ்தீனிய தேசிய ஆணையத்திற்கு” (PNA) இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது. காசா, மேற்குக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை வெளியேற்றிக் கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது. எனினும் இரு பகுதிகளும் இரு பலஸ்தீனிய அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தீவிர இயக்கமான ஹமாசின் கட்டுப்பாட்டில் காஸாவும் ஃபடா வின் கட்டுப்பாட்டில் மேற்குக் கரையும் தற்போது உள்ளன.

எனினும் எதார்த்தநிலை அப்படியேதான் தொடர்ந்தது. 1995 முதல்2007 வரை எத்தனையோ ‘சம்மிட்’கள், பேச்சுவார்த்தைகள் எதிலும் பயனில்லை. பலஸ்தீனியர்களின் நிலை மேலும் மேலும் மோசமாகியது.

இன்று தங்களை ஒரு நாடாக அங்கீகரிக்க பலஸ்தீனியர்கள் ஐ.நா அவையையும் பிற நாடுகளையும் கெஞ்சித் திரிகின்றனர்.

இந்துத்துவவாதிகளின் அறிவியல் பாடம்: சோதனைக் குழாய்க் குழந்தைகளுக்கு இந்துத்துவ விளக்கம்

இந்துத்துவவாதிகள் வரலாற்றை எப்படிச் சொல்லித் தருவார்கள் என்கிற கதை நமக்குத் தெரிந்தத்தான். (பார்க்க: எனது ‘பாடநூல்களில் பாசிசம்’ என்கிற நூல். இதன் சில பகுதிகளை என் இணையப் பக்கத்திலும் காணலாம்) இந்துத்துவவாதிகளின் கையில் விஞ்ஞானப்பாடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சூப்பர் எடுத்துக்காட்டு இதோ.

கர்னாடக அரசு வெளியிட்டுள்ள 9ம் வகுப்பு விஞ்ஞானப் பாட நூலில் “பண்டைய இந்தியாவில் சோதனைக் குழாய்க் குழந்தைகள்” என்றொரு பாடம். 7500 ஆண்டுகளுக்கு முன்பே மகாபாரதத்தில் சோதனைக் குழாய்க் குழந்தைகள் பற்றிச் சொல்லியுள்ளதாம். துரோணர் அப்படிப் பிறந்தவர்தானாம், பக்கம் 209 ல் இது விலாவாரியாக விளக்கப்படுகிறது. தமிழில் : “…ஒருநாள் பரத்வாஜர் கங்கைக்குக் குளிக்கச் சென்றார். அங்கே கிரிதாச்சி என்ற அப்சரஸ் ஒருத்தியைக் கண்டார். காம வெறி மேலிட அவருக்கு விந்து பீறிட்டது. பரத்வாஜர் தன் விந்தை ஒரு மண் பானையில் ஏந்திக் கொண்டார். அதிலிருந்து பிறந்தவரே துரோணர்” (‘துரோண்’ என்றால் மண் பானை). இதற்கான விஞ்ஞான ஆதாரம் என்ன தெரியுமா, அவர் பெயர்தான்.

இது எப்டி இருக்கு..?

பதினான்கு வயதுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம் இது. இந்த முண்டங்கள்தான் பள்ளிகளில் ‘செக்ஸ்’ பாடம் கூடாது, காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்றெல்லாம் முழக்குபவர்கள்.

அறிவியல் பாடத்திலேயே இத்தனை என்றால் மற்ற பாடங்களில் கேட்கவா வேண்டும். ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் பக்கம் 54 முதல் 80 வரை சிறுபான்மையினருக்கும் தலித்களுக்கும் எச்சரிக்கை வழங்குவதாகவும், பிற்போக்குக் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவும் ‘பாடங்கள்’ உள்ளன. 11 வயதுப் பிள்ளைகள் படிக்கும் இப்பாட நூலில் “பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவைதானா?’ என்றொரு குழு உரையாடல் வேறு (பக்.64).

ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடநூலில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை அறிமுகப்படுத்தும் பாடத்தின் தலைப்பு : “இந்தியாவும் புற உலகும்”. இவ்வாறு தலைப்பே இவ்விரு மதத்தினரையும் இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்களாகச் சித்திரிக்கின்றது எனக் கண்டித்துள்ளனர் இந்திய அளவில் மதிக்கத்தக்க குடிமக்களும் கல்வியாளர்களும். டெல்லியில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் 24 அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ரொமிலா தப்பார், சோயா ஹஸன், கிருஷ்ணகுமார், சோம்னாத் சட்டர்ஜி (முன்னாள் சபாநாயகர்), கோபால கிருஷ்ண காந்தி, யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட், நரேஷ் சந்திரா, ஜயதி கோஷ், நிவேதிதா மேனன், ரிது மேனன் முதலானோர் கையெழுத்திட்டவர்களில் சிலர்.

ஆறாம் வகுப்புக் கன்னடப் பாடநூலில், “….அரேபியர்கள் சிந்து மாகாணத்தை வென்றார்கள், இந்த மண்ணில் இஸ்லாமியத்தைப் பரப்பினார்கள். சுல்தான்களின் நீண்ட ஆட்சி இந்தியாவில் இஸ்லாம் வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக இருந்தது….” எனக் கூறப்பட்டுள்ளது (பக்.5). இஸ்லாம் அதற்கு முன்னதாகவே இங்கு பரவியது என்றும், வணிகம் அதில் முக்கிய பங்கு வகித்தது எனவும் கையெழுத்திட்டுள்ள அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்திருந்த பகுதி மேற்கு பஞ்சாபும் (இன்றைய பாக்), கிழக்கு வங்கமும்தான் (இன்றைய வங்க தேசம்). இந்த இரண்டு பகுதிகளிலும் வலிமையான முஸ்லிம் அரசுகள் கோலோச்சியதே இல்லை என்பதை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளேன். திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாயில் ஒன்று உள்ளது இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களா அதைக் கட்டினார்கள்?

அதே பாடத்தில் தேவையில்லாது சிலுவைப் போர்கள் ஏக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சீர்திருத்தக் கிறிஸ்தவம் குறித்த 9 ம் வகுப்புப் பாடம் ஒன்றில் கத்தோலிக்க மதத்தின் ‘ஒழுக்கக் கேடுகள்’ விரிவாக அலசப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்கான “மத மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள்” எனும் பாடங்களிலும், 5 மற்றும் 8 ம் வகுப்புப் பாட நூல்களில் உள்ள “பவுத்தம் மற்றும் சமண மதங்களின் பிறப்பு” என்னும் பாடங்களிலும் இங்குள்ள சாதிமுறை, தீண்டாமை, சாதி ஆதிக்கம், மூட நம்பிக்கைகள் குறித்துப் போகிற போக்கில் ஓரிரு சொற்களே உள்ளன.

“பாரதமும் புறவுலகும்” என்கிற பாடத்தில் செங்கிஸ் கான், தைமூர் ஆகியோரின் கொடுங்கோன்மைகள் விவரிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வெளியில் எல்லாமும் கொடூரமானதாகவும் தீயதாகவும் உள்ளன என்கிற எதிர்மறைப் பிம்பம் இதன்மூலம் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கப்படுகின்றன என்கின்றனர் கையெழுத்திட்டுள்ள அறிஞர்கள். மன்னர்களின் படை எடுப்புக்கள் அனைத்துமே இப்படித்தான் நடந்துள்ளன. கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பதாகத்தானே இங்கு உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன. அவ்வளவு ஏன் நம்முடைய ராஜராஜன் இலங்கையின் மீது படை எடுத்து அநுராதபுரத்தையும் பொலனறுவையையும் தீக்கிரையாக்கி அவற்றிற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனத் தன் பெயரைச் சூட்டவில்லையா?

பிற பாடங்களும் ரஜபுத்திரர், ராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர், ஒய்சளர், சோழர் முதலான மைய நீரோட்ட மாபெரும் பரம்பரையினரின் புகழ்பாடலாகத்தான் உள்ளனவே தவிர, வரலாற்றுருவாக்கத்தில் அடித்தள மக்களின் பங்கு முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளதையும் அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்,

பக்தி இயக்கம் குறித்து 6 ம் வகுப்பில் ஒரு பாடம். உண்மைகள் பெரிய அளவில் இதில் திரிக்கப்பட்டுள்ளன. “பக்தி இயக்கத்தவர்களில் பலர் (எ.கா பாபா புதன்) தாத்தத்ரேயரை” வழிபட்டனராம். இது தவறு என்பதை அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளோர் சுட்டிக் காட்டியுள்ளனர். “யோகா, வேதாந்தம் ஆகியவற்றின் செல்வாகிற்கு ஆட்பட்டிருந்தது சுஃபி இயக்கம், புதன் – அல் – தின் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார்… இத்தகைய நடைமுறைகள் முஸ்லிம்களால் தடுக்கப்பட்டவை…” என்பதாக சுஃபி இயக்கத்தை ஏதோ இந்துப் பாரம்பரியத்தின் கிளை போல இந்தப் பாடம் மாணவர் நெஞ்சில் உண்மைகளைத் திரிக்கிறது. இப்படியான திரிபுகளின் ஊடாக ஒரு மகத்தான இயக்கத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

வரலாற்றறிஞர்கள், இடதுசாரிகள், காந்தியர்கள், மதச்சார்பற்றோர் இணைந்து வெளியிட்டுள்ள இவ் அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று,

2000 -ங்களின் தொடக்கத்தில், பா.ஜ.க தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இவ்வாறு வரலாற்றுப் பாட நூல்களில் திருத்தங்கள் மேற்கொண்டபோதும் இத்தகையோரே முன்னணியில் நின்று அதை முறியடித்தனர். தமிழகத்தில் அந்த இயக்கத்தில் திராவிட இயக்கத்தவரும் பங்குபெற்றனர். முன்னாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், வசந்தி தேவி மற்றும் சி.பி.ஐ. சி.பி.எம், பெரியார் திராவிடர் கழகக் கட்சிப் பிரதிநிதிகள் அதில் பங்குபெற்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கூட்டங்கள் நடத்தினோம். அப்போது சென்னையில் வெளியிடபட்ட நூல்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது. தி.க தலைவர் வீரமணி, பேரா. ஜவாஹிருல்லாஹ், எஸ்ரா சற்குணம் அடிகளார், பீட்டர் அல்போன்ஸ், கல்லூரிப் பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

டெல்லியிலிருந்து வந்திருந்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் அர்ஜுன் தேவ், “தமிழ்நாட்டில் வந்து பார்க்கும்போது இது குறித்து ஒரு பிரக்ஞையை ஏற்படுத்துவதிலும்,கருத்துருவாக்கும் முயற்சியிலும் செய்யபட்டுள்ள பணிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.” என மனதாரப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது (இந்துத்துவத்தின் இருள்வெளிகள், பக். 106).

Tail Piece : ஓகோ..! துரோணர் இப்டிப் பொறந்தவர்தானா? அவர்தாங்க, நம்ம ஏகலைவன் கட்டை விரலைக் ‘கட்’ பண்ணவரு…