(‘இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்பு’ எனும் விரிவான கட்டுரையின் ஒரு பகுதி இது. முழுக் கட்டுரையும் இன்னொரு விரிவான பதிவாக உள்ளது)
இந்துத்துவ சக்திகளிடம் வெளிப்படுகிற இத்தகைய பாசிசக்கூறுகள் தன்னிச்சையானவை அல்ல என்பது சமீபத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொடக்க கால இந்துத்துவ முன்னோடிகள் 1930களில் வெளிப்பட்ட அய்ரோப்பிய பாசிசத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். ஆர்எஸ்எஸ்சைத் தோற்றுவித்தவரும் ஹெட்கேவரின் ஆசானுமாகிய டாக்டர் பி.எஸ். மூஞ்சே, இத்தாலி சென்று நேரடியாகச் சர்வாதிகாரி சிக்னோர் முசோலினியைச் சந்தித்துள்ளார். பாசிச அறிக்கைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டன. பாசிச அமைப்புகளின் மாதிரியிலேயே இங்கு ஆர்எஸ்எஸ் கட்டமைக்கப்பட்டது. இந்த உண்மைகள் அனைத்தையும் இத்தாலிய ஆய்வாளர் மார்சியா காசலோரி என்பவர் இத்தாலி மற்றும் மும்பையிலுள்ள தேசீய ஆவணக் காப்பகங்களிலுள்ள ஆதாரங்களை அகழ்ந்துத் தொகுத்து நிறுவியுள்ளார் (மார்சியா காசலோரி, ‘1930களில் இந்துத்துவாதிகளின் அயல்நாட்டுக் தொடர்புகள்: ஆவணக்காப்பக ஆதாரங்கள்,’ EPW, ஜனவரி 22, 2000). இப்பகுதியில் சொல்லப்பட இருக்கிற தரவுகளும் மேற்கோள்களும் காசலோரியின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவையே.
1920களில் இந்துத் தேசியவாதிகளுக்கு, குறிப்பாக மராட்டிய இந்துத் தேசியவாதிகளுக்கு இத்தாலி மற்றும் அதன் சர்வாதிகாரி முசோலினியின் மீது கவனம் திரும்பியது. 1924 தொடங்கி 1935 வரை மராத்திய தேசிய இதழான கேசரி, பாசிசம் பற்றியும் முசோலினி மற்றும் இத்தாலியில் ஏற்பட்டுவரும் ‘வளர்ச்சி’கள் குறித்தும் தொடர்ச்சியாகத் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. பாசிசத்தின் தடலடிப் பிரச்சாரங்களில் மயங்கிய மராட்டியத் தேசியவாதிகள், பின்தங்கிய நிலையிலிருந்த இத்தாலியைப் பெரு வல்லரசாக ‘மாற்றி’ பாசிசத்தை வியந்துநோக்கினார். பாசிசத்தின் எத்தகைய கூறுகளால் அவர்கள் ஈர்க்கப்பபட்டனர் என்பது நமது கவனத்திற்குரியது. அவற்றில் சில:
1. அரசியல் இழுபறிகளால் குழம்பிக் கிடந்த நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டியது பாசிசம் என அவர்கள் நம்பினர்.
2. தாராள சனநாயக அமைப்பிலிருந்து சர்வாதிகாரத்தற்கு மாறியதென்பதை ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கிற்கு நிகழ்ந்த மாற்றமாக அடையாளம் காட்டி ‘கேசரி’ தொடர்ந்து தலையங்கம் தீட்டி வந்தது. சமூகப்போராட்டங்கள் இனித் தேவையில்லை என்றான ஒரு காலகட்டமாக இப்புதிய ஒழுங்கைக் ‘கேசரி’ சுட்டிக்காட்டியது.
3. முசோலினி கொண்டுவந்த சில அரசியல் ‘சீர்திருத்தங்களை’க் கேசரி வெகுவாகப் பாராட்டியது. அவற்றில் சில: பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பதற்குப் பதிலாக நியமித்தல்; பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அதன் பணிகளைப் பாசிசப் பெருங்குழுவிடம் ஒப்படைத்தல்.
அரசு பற்றிய பாசிச நோக்கு சனநாயகத்திற்கு நேர் எதிரானது. சனநாயக நிறுவனங்கள் ஏற்படுத்துகிற குழப்பங்களைக் காட்டிலும் ஒரு மனிதனின் சர்வாதிகாரம் என்பது நாட்டு நலனுக்கு உகந்தது என்கிற முசோலினியின் பாசிசக் கருத்தைக் கேசரியில் வந்த ஒரு கட்டுரை (ஜூலை 17, 1928) விதந்து பாராட்டியது. ‘ஏக் சலக் அனுவர்த்தித்வம்’ (ஒற்றைத் தலைவனைப் பணிதல்) என்கிற ஆர்எஸ்எஸ்சின் கோட்பாட்டுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று இது.
‘இத்தாலியும் இளைய தலைமுறையும்’ என்ற ஒரு நீண்ட கட்டுரையில் (கேசரி ஆக 13, 1929) பழைய தலைமுறையிடமிருந்து இளைய தலைமுறையிடம் அரசியலதிகாரம் மாறியதன் விளைவாக இத்தாலி பல துறைகளிலும் முன்னேறிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆழமான மதப்பற்று, குடும்பத்துடன் பிணைப்பு, மரபு வழிப்பட்ட மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியனவே இத்தாலிய இளம் தலைமுறையிடம் உருவாகியுள்ள ஒழுங்கிற்குக் காரணம் என மொழிந்த அக்கட்டுரை விவாகரத்தின்மை, பெண்கள் தனியாக வாழாமை, பெண்களுக்கு ஓட்டுரிமை இன்மை ஆகியவற்றை மரபு வழி மதிப்பீடுகள் எனப் போற்றியது. பெண்களின் பணி அடுப்படியோடு முடிந்துவிடுகிறது என்று கூறிய அக்கட்டுரை பாசிச இளைஞர் அமைப்புகளான ‘பலில்லா’, ‘அவன் கார்டிஸ்டி’ ஆகியவற்றின் மீது கவனம் குவித்தது.
இத்தாலிய ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டு (1928), இங்கு ஆங்கிலத்தில் வினியோகிக்கப்பட்ட ‘தேசப் பாதுகாப்பிற்கான சமீபத்திய சட்டங்கள்’ என்ற பிரசுரம் இத்தகைய கட்டுரைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறார் காசோலரி. ‘தேசியப் படை’ ஒன்றின் முக்கியத்துவம் குறித்து அக்கட்டுரை தீவிரமாகப் பேசியது. புதிய ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ள சில தடுப்புச் சட்டங்களையும் அக்கட்டுரைப் பாராட்டியது. அவற்றில் சில: அமைப்பைக் ‘கவிழ்க்கக்கூடிய’ கட்சிகளைத் தடைசெய்வது, பத்திரிகைத் தணிக்கை, எதிர்ப்பாளர்கள் மற்றும் வெறுக்கத்தக்கவர்களைப் பொதுப்பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி இறுதியில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது.
“பாசிசத்தை நோக்கிய திருப்பம் என்பது தாராளவாதக் கோட்பாடுகளுக்கு மரண அடி கொடுத்துவிட்டது. இறையாண்மை மிக்க ஓர் அரசு அங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்கிற தாராள சனநாயக் கோட்பாடுதான் இத்தாலி என்கிற கப்பலைச் சமூகச் சிதைவு எனும் சூழலில் சிக்கி மூழ்கடிக்க இருந்தது.”
என்று அக்கட்டுரை முத்தாய்ப்பு வைத்தது.
இப்பிரசுரம் தவிர லண்டனில் இருந்த வெளிவந்த மராட்டிய இதழொன்றின் செய்தியாளர் டி.வி.தமன்கர் எழுதிய ‘முசோலினியும் பாசிசமும்’ என்கிற நூலும் பாசிசக் கருத்தியல், பாசிசச் சமூகம், பாசிச நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாராட்டியது. மொத்தத்தில் 1920களின் இறுதியில் பாசிச ஆட்சியும் முசோலினியும் மராட்டியத் தேசியவாதிகள் மத்தியில் பரவலாக அறிந்திருக்ககூடிய ஒரு சூழல் நிலவியது. சனநாயகம் என்பதை ஒரு பிரிட்டிஷ் மதிப்பீடாகக் கருதிய இந்துத் தேசியவாதிகள் குழப்பத்திலிருந்து ஒழுங்குக்கு மாறுதல், சமூகத்தை இராணுவமயமாக்குதல் என்கிற பாசிசக் கருத்தாக்கங்களால் வசீகரிக்கப்பட்டார்கள்.
முசோலினியைச் சந்தித்த மூஞ்சே
வட்டமேசை மாநாட்டிற்குச் சென்று வந்த பி.எஸ். மூஞ்சே 1931 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அய்ரோப்பிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். பயணத்தின் பெரும்பகுதி இத்தாலியில் கழிந்தது. பாசிச நிறுவனங்கள் பலவற்றை அவர் நேரடியாகச் சென்று பார்த்தார். பயணத்தின் உச்ச கட்டமாக முசோலினியைச் சந்தித்து உரையாடினார். மூஞ்சே தனது குறிப்பேட்டில் இது குறித்து பதின்மூன்றுப் பக்கங்கள் எழுதியுள்ளார்.
மார்ச் 19ம் தேதியன்று ரோமிலிருந்த ‘உடற் கல்விக்கான மத்திய இராணுவப்பள்ளி’, ‘உடற்பயிற்சிக்கான பாசிசக் கல்விக் கழகம்’ மற்றும் பலில்லா, அவான்கார்டிஸ்டி அமைப்புகளையும் நிறுவனங்களையும் நேரில் ஆராய்ந்த மூஞ்சே, அவை குறித்து இரு பக்கங்கள் குறிப்பு எழுதியுள்ளார். இளைஞர்களிடம் கல்வியைக்காட்டிலும் பாசிசக் கருத்தியலை ஊட்டுவதே இந்நிறுவனங்களின் நோக்கமாக இருந்தது. ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான சிறுவர்களைத்தேர்வு செய்து பயிற்சியளித்த இன்றைய ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எல்லா வகைகளிலும் முன்மாதிரியாக அவை விளங்கின என்பது மூஞ்சேயின் குறிப்புகளில் வெளிப்படுகிறது. இந்த இளைஞர்கள் வாராந்திரக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும். அப்போது உடற்பயிற்சியும் இராணுவப் பயிற்சியும் அளிக்கப்படும். ‘டிரில்’களும் அணிவகுப்புகளும் நடத்தப்படும்.
பலில்லா குறித்துத் தனது குறிப்பேட்டில் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளார் மூஞ்சே. இத்தாலியை இராணுவ ரீதியில் புத்துயிர்ப்புச் செய்வதற்காக முசோலினியின் மூளையில் உதித்தகருத்து இது எனப் பாராட்டும் மூஞ்சே,
“பாசிசக்கருத்தாக்கம் மக்களிடையே ஒற்றுமை என்கிற சிந்தனையை ஏற்படுத்துகிறது. இந்துக்களை இராணுவ ரீதியில் புத்தயிர்ப்புச் செய்வதற்கு இதேபோன்ற ஒரு அமைப்பு இந்தியாவில், குறிப்பாக இந்து இந்தியாவில் தேவை… இராணுவச் சீருடையில் இச்சிறுவர்களும் சிறுமியர்களும் எளிய உடற்பயிற்சிகளையும் ‘டிரில்’களையும் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.”
என்று குறிப்பிடுகிறார்.
அன்று மாலை மூன்று மணியளவில் வெனீஷிய அரண்மனையில் இத்தாலிய சர்வாதிகாரியை டாக்டர் மூஞ்சே சந்தித்தார். எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார் முசோலினி. அன்றைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கருத்துப்பரிமாறிக் கொண்டபின்னர்,
மூஞ்சே: இன்று காலையும் மதியமும் பலில்லா மற்றும் சில பாசிச அமைப்புகளைப் பார்வையிட்டேன். அவை என்னை மிகவும் கவர்ந்தன. இத்தாலியின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும இவை மிக அவசியம். இந்த அமைப்புகள் குறித்தும் மேன்மை தங்கிய உங்களைப்பற்றியும் பத்திரிகைகளில் பெரும்பாலும் நல்ல செய்திகள் வருவதில்லை என்ற போதிலும் என்னைப் பொருத்தமட்டில் இவற்றில் எந்த மறுப்புக்குரிய அம்சங்களையும் நான் காணவில்லை.
சிக்னோர் முசோலினி: இவை குறித்த உங்களின் கருத்தென்ன?
மூஞ்சே: மேன்மை தங்கிய அய்யா, நான் இவற்றால் பெரிதும் கவரப்பட்டுள்ளேன். இலட்சியங்கள் மிக்க வளரும் நாடுகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய அமைப்புகள் அவசியம் தேவை. இராணுவத் தன்மையிலான இந்தியப் புத்துயிர்ப்புக்கு இத்தகைய அமைப்புகளின் தேவை அதிகமாக உள்ளது. இதேபோன்ற குறிக்கோள்களுடன், நானாகவே சிந்தித்து ஏற்கனவே ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளேன். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பொது மேடைகளில் வாய்ப்புக்கிடைக்கும் போது பலில்லா குறித்தும் இதரப் பாசிச அமைப்புகள் குறித்தும் புகழ்ந்து பேசுவதற்குத் தயங்கமாட்டேன். அவை வெற்றிபெற வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.
முசோலினி: (மிகவும் மகிழ்ச்சியுடன்) நன்றி. ஆனால் உங்கள் பணி மிகவும் கடினமானது. எனினும் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நானும் வாழ்த்துகின்றேன். (ஆணவக் காப்பகத்திலுள்ள மூஞ்சேயின் குறிப்பேட்டில் மார்ச் 20 ம் தேதி எழுதப்பட்ட குறிப்புகளில் சில.)
இந்தியாவிற்குத் திரும்பியவுடன், ஹெட்கேவர் முதலானோருடன் இணைந்து இந்தத் திசையில் பணியைத் தொடங்கினார். மூஞ்சே, ‘மராத்தா’ இதழுக்கு அளித்தப்பேட்டி ஒன்றில் இந்துச் சமூகத்தை இராணுவ ரீதியில் ஒருங்கிணைப்பதன் தேவையை வயுறுத்தினார்.
“உண்மையில் நமது தலைவர்கள் ஜெர்மானிய இளைஞர் அமைப்பான பலில்லா மற்றும் இத்தாலிய பாசிச அமைப்புகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு அவை மிகவும் பொருத்தமானவை என்று நான் கருதுகின்றேன்.”
என்றும் அவர் குறிப்பிட்டார். பாசிசம் குறித்துப் பொது விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. இவற்றில் ஹெட்கேவர் ஆர்வத்துடன் பங்கேற்றார். மூஞ்சே, ஹெட்கேவர், லாலு கோகலே ஆகிய மூவரும் இத்தாலி மற்றும் ஜெர்மன் மாதிரிகளில் இந்துக்களுக்கான இராணுவ அமைப்பொன்றைக் கட்டுவது குறித்து ஆலோசித்தனர். 1934 ஜனவரி 31ம் தேதியன்று ஹெட்கேவர் தலைமையில் ‘பாசிசமும் முசோலினியும்’ என்கிற தலைப்பில் மாநாடொன்றை ஏற்பாடு செய்தார் கவ்டே சாஸ்திரி. மூஞ்சே இதில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
“இந்துதர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சீராக்க வேண்டும். அதனடிப்படையில் இந்து ஒற்றுமையைக் கட்ட வேண்டும். நமது பழைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினி, இட்லர் போன்ற ஓர் இந்துச் சர்வாதிகாரியின் கீழ் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்காத வரையில் நாம் இதைச்சாதிக்க இயலாது…. இதற்கான விஞ்ஞான பூர்வமான திட்டமொன்றை உருவாக்கிப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும்.”
என்று அம்மாநாட்டில் தன் கருத்தை முன்வைத்தார் மூஞ்சே.
தொடர்ந்து ‘மத்திய இராணுவக் கல்விக் கழக’த்திற்கான பணியைத் தொடங்கினார் மூஞ்சே. இந்து இளைஞர்களை இராணுவமயமாக்குவதும், ‘சனாதன தர்மத்தை’ அவர்களுக்குக் கற்பிப்பதும், தனி நபர்களையும் தேசத்தையும் காப்பதற்கான விஞ்ஞானங்களையும், கலைகளையும் சொல்லித் தருவதும் கழகத்தின் குறிக்கோள்களாகச் சொல்லப்பட்டன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியிலுள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளிகளின் மாதிரியில் இதைத் தாம் செய்வதாக மூஞ்சே வெளிப்படையாகக் குறிப்பிட்டு வந்தார்.
மூஞ்சே உருவாக்கிய ‘மத்திய இராணுவக்கழகம் மற்றும் இராணுபப்பள்ளிக்கான திட்ட வரைவின்’ முன்னுரையில் (1935),
“வெற்றியை நோக்கிய பெரும் இலட்சியத்துடன் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதியுடையவர்களாக நமது சிறுவர்களைத் தயாரிப்பதே பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்துவதாகவும் நமது தரப்பில் ஆகக்குறைந்த மரணங்களும் இழப்புகளும் ஏற்படுவதாகவும் இந்த வெற்றி அமைய வேண்டும்”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் எதிரி யார் என்பது பற்றி அதில் தெளிவான விளக்கமில்லை. வெள்ளையர்கள் எனப்படும் புற எதிரிகளா இல்லை முஸ்லிம்கள் எனப்படும் வரலாற்று ரீதியான அக ‘எதிரிகளா’ என்பது பற்றித் தெளிவில்லை. எனினும் அவ் வெளியீட்டில் அகிம்சைக்கும் வன்முறைக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி நீண்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்திய வரலாற்றிலிருந்தும் இந்துப் புராணங்களிலிருந்தும் ஏராளமான மேற்கோள்கள் காட்டப்பட்டு அமைப்புரீதியான வன்முறை நியாயப்படுத்தப்பட்டது; அகிம்சை கோழைத்தனம் எனக் கேலி செய்யப்பட்டது. முசோலினியின் பாசிச அறிக்கையிலிருந்து நீண்ட மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டன. “அமைதி என்பது கோடிக்கணக்கான எஃகு வாட்களின் மேல்தான் கட்டப்படவேண்டும்” என்பதுபோன்ற முசோலினியின் கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
முசோலினியின் பாசிச அறிக்கைதவிர ஜெர்மானியப் பேராசிரியர் ஈவால்டு பான்சே எழுதிய ‘இராணுவ விஞ்ஞானம்’ என்கிற வெளியீட்டிலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டன. “குழந்தைப் பருவம் முதல் ஒருநாட்டின் சிந்தனையில் போர் என்கிற எண்ணம் பதிக்கப்பட்டிருக்கவேண்டும்.. களத்தில் செத்துக்கொண்டிருக்கும் ஒரு போராளி தனது இரத்தம் தேசக் கடவுளின் பீடத்தில் பாய்கிறது என்று அறிவானேயானால் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவுவான்” என்பன போன்ற பான்சேயின் கருத்துக்கள் விதந்தோதப்பட்டன. மீண்டும் மீண்டும் இத்தாலியின் பலில்லா முதலான பாசிச அமைப்புகளைச் சுட்டிக்காட்டி எட்டு முதல் பதினெட்டு வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வற்புறுத்தப்பட்டது.
“எனவே இனி குடிமகனுக்குப் படைவீரனுக்கும் இடையிலான வேறுபாடுகள், சிவிலியனுக்கும் சீருடைக்காரனுக்கும் இடையிலான வேறுபாடுகள் இல்லாதொழியும்.”
என முத்தாய்ப்பு வைத்தது அறிக்கை.
1930களின் இறுதியில் இந்தியாவிலிருந்த இத்தாலிய அரசின் பிரதிநிதிகள் இந்துத் தேசியவாதிகளுடன் நெருக்கமான உறவைப் பேணினர். மும்பையிலிருந்த இத்தாலியத் தூதரகம், கல்கத்தாவிலிருந்த தூதரகத்துடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டது. ரோமிலிருந்து அனுப்பப்பட்ட மரியோ கேரல்லி என்னும் அதிகாரி இந்தப் பணிகளை ஒருங்கிணைத்தார். இத்தாலிய மொழியைக் கற்பிப்பது என்கிற பெயரில் இந்திய மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்தனர். இவ்வாறு தயாரானவர்களில் மாதவ் காசிநாத தாம்லே முக்கியமானவர். கேரல்லியின் ஆலோசனைப்படி முசோலினியின் பாசிசய அறிக்கையைத் தாம்லே மொழிபெயர்த்தார் (1939). அதே ஆண்டு தொடங்கப்பட்ட ‘லோகாண்டி மோர்ச்சா’ (இரும்பு முன்னணி) என்கிற பத்திரிகையில் அது தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அந்தோனியோ பேக்லியாரோவின் ‘கம்யூனிசத்திற்கு எதிராகப் பாசிசம்’ என்ற கட்டுரையும் கேரல்லியின் பாசிச நிறுவனங்கள் பற்றிய ஒரு கட்டுரையும்கூட இவ்வாறு மொழியாக்கப்பட்டுத் தொடராக வெளியிடப்பட்டன.
“திலகரைப் பின்பற்றுபவர் என நம்புகிற தாம்லே, தீவிரமான அரசியல் பார்வைகள் உடையவர். இத்தாலி மற்றும் நாஸி ஜெர்மனியின் வரலாறுகளிலிருந்து தாம் ஊக்கம் பெற்றதாக அவர் வெளிப்படையாகச் சொல்கிறார்”
என்பது தாம்லே பற்றி உள்துறை அமைச்சகத்திற்கு காவல்துறை அளித்த குறிப்பு (கோப்பு எண் 830 (I) 1939, மும்பை ஆவணக்காப்பகம்). “பாசிசக் கருத்துக்களுடைய (தாம்லே), நமது பாசிசப் பாணியில் இந்தியச் சூழலுக்கேற்ற ‘இரும்புக் காவலர்கள்’ என்கிறஅமைப்பை உருவாக்கியுள்ளார்” என விதந்து எழுதினார் இத்தாலியத் தூதர்.
பாசிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இங்கே தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பு எம்.ஆர்.ஜெயகரின் ‘ஸ்வஸ்திகா கழகம்’ (1921). சிறுவர்க்கு ராணுவப்பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை ஜெயகரும் வற்புறுத்தினார். ‘சன்டே கிரானிக்கில்’ இதழில் வெளிவந்த முசோலினியின் “குழந்தை வீரர்கள்” சீருடையில் காவல் புரிவது போன்ற புகைப்படம் ஒன்றைச் சிலாகித்தார். ‘ஸ்வதிகா ஹெரால்டு’ என்றொரு இதழும் இவர்களால் நடத்தப்பட்டது.
ஆரிய மேன்மையைச் சுட்டிக் காட்டுகிற இட்லரின் ‘ஸ்வஸ்திகா’ குறியீடு மீது இந்துத்துவவாதிகளுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. பெண்கள் வேதம் பயிலக் கூடாது எனச் சொல்லி சர்ச்சைக்குள்ளான பூரி சங்கராச்சாரியான சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி ஒரிசாவிலுள்ள கிறிஸ்தவப் பழங்குடியினரை இந்து மதத்திற்க்கு மாற்றி வருகிறார். இவ்வாறு பிற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்களுக்கு எனத் தனியாக ‘ஸ்வஸ்திகா கோயில்கள்’ கட்டப்படும் எனவும், “எல்லோருக்குமான பொதுக் கோயில்களுக்கு அவர்கள் செல்லக் கூடாது” எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. (நி.இ.எக்ஸ்பிரஸ், ஜூன் 8, 2000).