அறிவுருவாக்கத்தில் வல்லுனர்களும் சாதாரணர்களும்

நேற்றைய The Hindu நாளிதழில் வந்துள்ள, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல்கள் குறித்த வல்லுனர் குழுவின் தலைவர் மாதவ் காட்கில் அவர்களின் கட்டுரை ஒரு முக்கிய கருத்தை முன்வைக்கிறது.

நம் எல்லோருக்கும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும் அறிவுக் களஞ்சியமான விக்கிபீடியாவை முன் வைத்து காட்கில் அறிவுருவாக்கத்தில் சாதரணர்களின் பங்கைப் பற்றிப் பேசுகிறார்.

வல்லுனர்களோ இல்லையோ யாரும் விக்கிபீடியாவில் எந்த ஒன்று குறித்தும் அறிமுகத்தையும் தகவல் திரட்டுகளையும் முன் வைக்கலாம். பொதுவாக ஏற்றுக் கொள்ளபடுகிற ஆதாரங்களின் அடிப்படையில் அந்த அறிவுப் பதிவு அமைந்திருந்தால் சரி. மக்களுக்கு, குறிப்பாக வல்லுனர்களுக்கு இப்படியானவற்றில் காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதில் ஒரு ஆர்வமும் மகிழ்ச்சியும் உண்டு. எனவே மிக எளிய முறையில் கூடியவரை சரியான தகவல்களையும், மேலதிக விவரங்களுக்கான மூலங்களையும் இணையத்தைப் பாவிக்கும் யாரும் செலவில்லாமல் எளிதில் பெற்றுக் கொள்ளும் சாதனமாக விக்கிபீடியா ஒரு மிகப் பெரிய சாதனையைச் சாதித்துள்ளது என்கிறார் காட்கில்.

இதில் மிகவும் திருப்தி அளிக்கக் கூடிய அம்சம் என்னவெனில், விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் மற்றும் தரவுகளின் உண்மைத் தன்மையைப் (accuracy) பொருத்தமட்டில் வணிக ரீதியில் விற்கப்படுகிற எந்த ஒரு கலைக் களஞ்சியத்தின் தரத்துடனும் ஒப்பிடத் தக்கவையாகவே அவை உள்ளன என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் எந்த ஒரு வணிக ரீதியான கலைக் களஞ்சியத்தைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு அதிகக் கட்டுரைகளைக் கொண்டதாக விக்கிபீடியா அமைந்துள்ளது. அப்படியும் அதன் தரம் குறைந்து விடவில்லை என்பதுதான்.

சுனாமி தாக்கிய சில மணி நேரத்தில் அது குறித்த ஏராளமான தகவல்களைப் படங்களுடன் தான் பார்க்க நேர்ந்ததையும் காட்கில் சுட்டிக் காட்டுகிறார்.

விக்கிபீடியா அனுபவத்திலிருந்தும் தன் சொந்த அனுபவங்களிலிருந்தும், உலக அளவில் சில நாடுகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளிலிருந்தும் காட்கில் சொல்ல வரும் செய்தி முக்கியமானது.

சாதாரண மக்களின் ஊடாக இப்படி உருவாகும் அறிவு குறித்து அவர் பயன்படுத்தும் சில அரிய கருத்தாக்கங்கள்: “படைப்புத் திறன்மிக்க சாதாரணர்கள்” (creative commons), “அறிவுப் பொதுச் சொத்து” (common wealth of knowledge), “குடிமக்கள் அறிவியல்” (citizen science) முதலியன (இன்னும் நல்ல மொழியாக்கங்களையும் முயற்சிக்கலாம்).

சாதாரண மக்கள் இணைந்து செயல்படுவது ஒரு மிகச்சிறந்த பொது நல வளமாக இருக்கும். வருந்தத்தக்க விடயம் என்னவெனில், வல்லுனர்களுக்கு (அறிவுருவாக்கத்தில்) ஏகபோகப் பங்கை அளிப்பது பொது நலனைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இட்டுச் செல்வதுதான். (Common people, acting collaboratively, are a wonderful source of public good. Regretfully, experts, when assigned a monopolistic role, can abuse public interest.)

அரசு நிறுவனங்கள் பல வல்லுனர்களை நம்பி ஏமாந்ததையும், தனியார் நிறுவன வல்லுனர்கள் பலர் சொந்த லாபங்களுக்காகத் தம் அறிவைத் தவறாகப் பயன்படுத்துவதையும் அடுத்து காட்கில் சுட்டிக் காட்டுகிறார்.

இவை ஏதோ அறிவுத்துறை அயோக்யத்தனம் மட்டுமல்ல, பல நேரங்களில் துறை சார் வல்லுனர்களைக் காட்டிலும் சாதாரணர்களின் அறிவு சரியாக இருப்பதைத் தன் சொந்த அனுபவ அடிப்படையிலிருந்து, எடுத்துக்காட்டு ஒன்றின் அடிப்படையில் விளக்கும் காட்கில், இறுதியாக இத்தகைய குடிமக்கள் அறிவியல் நடைமுறையில் பயன்படுத்தப்படும் பல எடுத்துக்காட்டுகளையும் சொல்லித் தன் கட்டுரையை முடிக்கிறார். முழுமையாகப்படித்துப் பாருங்கள்.

ஒரு கேள்வி: அறிவு உற்பத்தியையும், உடலுழைப்பையும் தனித் தனியே நிறுத்தி வேலைப் பிரிவினையை உருவாக்கிய இந்தியச் சமூகம் இதன் மூலம் எத்தனை இழப்புகளுக்குக் காரணமாகி இருக்கும்?

சரி, ஒரு நகைச்சுவை ; (நீங்கள் அறிந்ததுதான். சும்மா சிரிப்ப்புக்காக மட்டும் இங்கே): கணித ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இப்படி ஒரு கணக்கைப் போட்டு விடை கேட்டார். “ஒரு ஆட்டுத் தொட்டிக்குள் 30 ஆடுகளை வைத்து அடைத்துவிட்டு வீட்டுக்குப் போகிறார் ஆடுகளை வளர்ப்பவர். அதில் இரண்டு ஆடுகள் இரவில் ஏறிக் குதித்து வெளியே ஓடிவிடுகின்றன. காலையில் வந்து பார்க்கும்போது தொட்டிக்குள் எத்தனை ஆடுகள் இருக்கும்?”

பதில் சொல்லுமாறு ஒரு மாணவியை எழுப்பினார் ஆசிரியர். அவள் சொன்னாள் :”ஒரு ஆடுகூட இருக்காது”

ஆசிரியர் சலித்துக் கொண்டு மீண்டும் கணக்கைச் சொன்னார்: ” இங்கப் பாரும்மா, 30 ஆடு தொட்டிக்குள்ள இருக்கு. அதில 2 ஆடு குதிச்சு ஓடிப்போனா மிச்சம் எத்தனை இருக்கும்?”

மறுபடியும் அந்தப் பெண் “ஒன்றும் இருக்காது” என்று சொன்னதும் ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.

அந்த மாணவி சொன்னாள்; ‘சார், உங்களுக்குக் கணக்குத்தான் தெரியும். ஆனா ஆடுகளைப் பத்தி எனக்குத்தான் தெரியும்”

ஒரு பின் குறிப்பு: சில வாரங்களுக்கு முன் நண்பர் எம்.டி.எம்மின் பக்கத்தில் நடந்த ஒரு விவாதத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தேன். என்ன, நீங்கள் ஒரு ‘ஸ்காலரை’ப்போல பிரச்சினையை அணுகாமல் ஒரு சாதாரண ஃபேஸ் புக்கரைப் போலப் பேசுகிறீர்களே என ஒரு நண்பர் மற்றவரைக் கேட்டிருந்தார். அது தொடர்பாக அப்போது நான் எழுதியிருந்த ஒரு பதிவிலிருந்து: “இதுகாறும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பெரிய ஊடகக்காரர்களின் தயவை எதிர்பார்த்து, வாய்ப்பிழந்திருந்த பலரும் தங்கள் கருத்துக்களை சொல்லும் ஒரு ஜனநாயக ஊடகமாக இது (முக நூல்) உருவாகியுள்ளது. பல இளைஞர்கள் தங்களிடம் பொதிந்துள்ள படைப்புத் திறனை வெளிப்படுத்துவதைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களுக்கு இந்த ஊடகம் கைவரப் பெற்றிருக்காவிட்டால் ஒரு வேளை இவர்கள் அறியப்படாமலேயே போயிருப்பார்களோ என நான் நினைப்பதுண்டு. ஜனநாயகப்பாடு நடக்கும்போது சில நீர்த்துப் போகல்களும் இருக்கத்தான் செய்யும். எனினும் நான்கு wise menகூடி உருவாகும் ஒரு கருத்தைக் காட்டிலும் பத்துப்பேர், அவர்களில் பலர் சாதாரணர்கள் ஆயினும் கூடும்போது உருவாகும் பொதுக் கருத்து மக்களுக்குப் பயனுடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. பைத்தியக்காரனின் உளறலையும், unconscious லிருந்து முகிழ்க்கும் பிம்பங்களையும் கூட நாம் எப்படிப் புறக்கணிப்பது?

ஆனால் இத்தகைய ஜனநாயகப்பாட்டை இதுகாறும் தங்களின் ஒதுக்கப்பட்ட புலமாகக் கருதி ஆட்சி செலுத்தி வந்தவர்கள் மிகவும் ஆபத்தாகக் கருதிக் கடும் எதிர்வினையாற்றி வந்ததற்கு குறைந்த பட்சம் இரு எடுத்துக்காட்டுகளை என்னால் சொல்ல இயலும்

1. “இப்பல்லாம் இந்த judiciary ரொம்ப கெட்டுப் போயிடுத்து. இந்த வக்கீல்களெல்லாம் ஸ்ட்ரைக், போராட்டம்னு என்னமாக் கூத்தடிக்கிறா..”- பெரிய அளவில் இன்று அடித்தளச் சமூகத்திச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர்களாக இடம் பெறுகின்றனர். மேல்தட்டினரின் கோட்டையாக் இருந்த ஒன்று இன்று ஜனநாயகமயமாயிருக்கிறது. அவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, இதுகாறும் பலரது கவனத்தில் படாதிருந்தவற்றை கவனப்படுத்துகின்றனர், இதில் சில தவறுகள் நிகழலாம். சுப்பிரமணிய சுவாமி மீது நீதிமன்ற வளாகத்திற்குள் முட்டை வீசியதை எல்லாம் , அவர்கள் என் நண்பர்களாக இருந்தபோதும் கண்டித்துள்ளேன். தேவையற்ற வேலைநிறுத்தங்களால் மகக்ள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் உண்மை. ஆனாலும் ஜுடிசியரி முன்னைக் காட்டிலும் மக்களுக்குப் பயன்படும் வகையில் ஜனநாயகபட்டிருக்கிறது என்பதுதான் என் கருத்து.

2. முன்னெல்லாம் இலக்கிய விசாரம் என்பது சமூகத்தின் மேல் தட்டினருக்கானதாக இருந்தது. குறிப்பாக இலக்கிய ரசனை, மதிப்பீடுகள், திற்னாய்வு முதலியன.பலகலைக் கழகங்கள் இதை ஜனநாயகப் படுத்தின. அடித்தள மக்கள் பலர் M.A, P.hd பட்டங்கள் பெற்று இலக்கியத் துறையை நிரப்பினர். இவர்களது வெளிப்பாடுகளை, குறிப்பாகப் பலகலைக் கழக இலக்கியத் துறைப் பேராசிரியர்களில் தலையீடுகளை சுந்தரராமசாமி போன்றோர் எவ்வளவு கேவலப் படுத்தினர் என்பதை விளககத் தேவையில்லை. கிட்டதட்ட ஆபாசம் எனச் சொல்லத் தக்க அளவிற்கு அவரது சொற் பிரயோகங்கள் இருந்தன. ஆனால் இப்படி இலக்கியப் புலம் ஜனநாயகப் படுத்தப்பட்ட பின்னர்தான் தமிழுக்குப் பல புதியன வந்து சேர்ந்தன என்பதை நாம் மறந்து விட இயலாது.” ஆனால் இதற்குப் பதிலாக விற்பனர்களிடமிருந்து வந்த பதில்கள் எனக்குச் சலிப்பைத் தந்ததால் நான் இத்தோடு அந்த விவாதத்திலிருந்து விலகிக் கொண்டேன்.