சீரழிக்கப்படும் உயர் கல்வி

குங்குமம், ஜூலை 20, 2018

முதல்முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தபோது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அமர்த்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி கே.ஆர். மல்கானி கல்வி என்பது ஒரு மேலைக் கருத்தாக்கம் எனவும் இந்தியர்களுக்கு அது முக்கியமில்லை எனவும் கூறியது அன்று பெரிய சர்ச்சையானது. வேதம் வழங்கப்பட்டவர்களாகக் கருத்தப்படும் ‘செமிடிக்’ மதத்தினருக்கே கல்வி முக்கியம், அப்படியான ஒரு அருளப்பட்ட நூல் என எதுவும் இல்லாத எமக்கு கல்வி அடிப்படையான ஒன்று அல்ல என்பது இதன் பொருள்.

ஆனால் இன்று இப்படி வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் அதை அவர்கள் நடைமுறையில் தொடங்கிவிட்டனர்.  உலகத் தரமான பல்கலைக்கழகங்கள், “மாண்புமிகு கல்வி நிறுவனங்கள்” (Institute of Eminence-IoE) என ஒருபக்கம் வாயளவில் முழங்கினாலும் உயர்கல்வியை பா.ஜ.க அரசு குறி வைத்துத் தாக்குவதை நாம் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள் முதலான கருத்தாக்கங்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலை நாடுகளில் பல்கலைக் கழகங்கள் உருவானபோது அதற்கான வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு அக்கால அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. ஷ்லெர்மேயர். ஃபிச்டே, வில்லியம் வான் ஹம்போல்ட் முதலான தத்துவ ஞாநிகளிடமே அது கொடுக்கப்பட்டது. இன்றளவும் முனைவர் பட்டம் பெறுவோருக்கு Doctor of Philosophy ((Ph.D), Master of Philosophy (M.Phil) என்றுதான் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ‘தத்துவம்’ என்கிற கருத்துடன் உயர்கல்வி இணைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் அறிவியல் படிப்பவர்களாயினும் ஷேக்ஸ்பியரையும், சங்க இலக்கியங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியதி.

வெறும் பொறியாளர்களையோ, ‘ரொபாட்’ களையோ தயாரிக்கும் நிறுவனங்கள் அல்ல பல்கலைக்கழகங்கள். இன்றளவும் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் என்றால், அவை பல்கலைக்கழகங்கள் தானே ஒழிய எவ்வளவுதான் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமாயினும் அவற்றிற்கு அந்தப் பெருமையில்லை.

ஆனால் இன்று மோடி அரசு அறிவித்துள்ள ‘மாண்புமிகு கல்வி நிறுவனங்களில்” (Institutions of Eminence- IoE) இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடமில்லை. முதற்கட்டத் தேர்விலேயே அவை தள்ளப்பட்டன. விண்ணப்பித்திருந்த 74 பொதுப் பல்கலைக்கழகங்களில் மூன்று மட்டுமே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக் கழகங்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்படுவதாகச் சொல்லி ரிலையன்சின் ‘ஜியோ’, மணிப்பாய் அகாடெமி முதலானவற்றிற்கு மாண்பு மிகு பல்கலைக்கழகத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் எனப் பார்த்தாலும்கூட சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டதில் பொருள் இல்லை. அதிலும் தனியாருக்கே இங்கு முக்கியத்துவம்.

பல்கலைக் கழகங்கள் என்கிற கருத்தாக்கம் இன்று பல்வேறு வகைகளில் அழிக்கப்படுகிறது. டெல்லி ஜே.என்.யூவில் இனி ஐ.ஐ.டி போலத் தொழில்நுட்பக் கல்விகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பாடங்களை (humanities) ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் கருத்தியலாளரான ராதா ராஜன் என்பவர் ஐ.ஐ.டி யில் ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ கலைப்பாட வகுப்பு தொடங்கப்பட்டதும், பாடத்திட்டத்தில் ‘பன்மை ஒழுங்கு அணுகல்முறை’ (Interdisciplinary Approaches) கடைபிடிக்கப்பட்டதும்தான் “இப்படியான சீரழிவுக்குக் காரணம்” எனப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத் தக்கது.

மோடி அரசு பதவி ஏற்றவுடனேயே பல்கலைக் கழக ஆய்வு மாணவர்களுக்கு இனி ஆய்வு உதவித் தொகை கிடையாது என அறிவிக்கப்பட்டது. போராட்டங்கள் வெடித்தபின் இப்போது அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜே.என்.யூ வில் ஆண்டுக்கு 1408 மாணவர்கள் ஆய்வுப் படிப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். சென்ற கல்வி ஆண்டில் இது 242 ஆகக் குறைக்கப்பட்டது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்திலும் அவ்வாறே ஆய்வுப் படிப்பிற்கான சேர்க்கைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டன.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த “பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு” (UGC) இப்போது ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்த உடனேயே அதற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று பொதுப் பல்கலைக் கழகக் கல்விக் கட்டணங்களும் கூட ஆயிரம் மடங்கு அளவுவரை உயர்ந்துள்ளன.

விடுதலை அடைந்த இந்தியாவில் உயர்கல்வியை வளர்க்க வேண்டும் என்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புதான் யு.ஜி.சி. பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்குவது, 80,000 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்குவது ஆகியவற்றோடு பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பு வழங்குவது, அவை விதிமுறைகளின்படிச் செயல்படுகின்றனவா எனக் கண்காணிப்பது ஆகியனவும் அதன் பணிதான்.

இப்படி அரசுத் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் யு.ஜி.சியை மட்டுமின்றி, அதே போன்று பிற கல்வித் துறைகளில் செயல்படும் “தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழகம்” (AICTE / NCTE), “மருத்துவக் கல்விக் கழகம்” (MCI), தேசிய கல்வி ஆராய்ய்ச்சி நிறுவனம் (NCERT) முதலான உயர்கல்விக்கான ஒழுங்காற்று நிறுவனங்கள் எல்லாவற்றையும் கலைத்துவிட்டு, பதிகலாக  அதிகாரப்படுட்தப்பட்ட ஒரே மைய  நிறுவனமாக்குதல் என்கிற முயற்சியை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மோடி அரசு தொடங்கியது. கல்விக் கொள்கை அறிக்கையில் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதை நடைமுறைப் படுத்தும் முயற்சி தொடங்கிவிட்டது. யு.ஜி.சி ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் “இந்திய உயர் கல்வி ஆணையம்” (HECI) அமைக்கப்படும் என அறிவித்தாயிற்று. நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கலைக்கப் படுகிறது..

காங்கிரஸ் ஆட்சியில் உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் அது ஜின்டால், ஜியோ, ஷிவ் நாடார் எனக் கார்பொரேட் மயமாக்கப்படுகிறது. உலகப் பல்கலைக் கழகங்களும் இங்கே கால்  பதிக்கப் போகின்றன.

உயர்கல்வி ஒரு பக்கம் கல்வி நீக்கம் செய்யப்பட்டு வெறும் தொழில்நுட்ப மயமாக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அது எளிய மக்களுக்கு எட்டாக் கனி ஆகிறது. அந்த இடத்தில் “திறன் பயிற்சி” (skill training) என்பது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் வெறும் திறன் பயிற்சிக்கு மட்டுமே தகுதியானவர்கள் என எளிய மாணவர்களை ஒதுக்கப் போவதும் இன்று புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டு விட்டது.

“மேக் இன் இந்தியா” வுக்கு இது போதாதா?