ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் ருஷ்யத் தலையீட்டின் பின்னணி

(இது 1915 இறுதியில் எழுதப்பட்ட கட்டுரை. இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சமகாலம்’ இதழில் வெளிவந்தது )

சிரியாவில் நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 2,20,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4,00,000 பேர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா அவை கூறுகிறது. வரலாறு காணாத பெரிய அகதிகளின் பிரசினையை இன்று உலகம் எதிர்கொண்டுள்ளது. மிகக் கொடூரமான அவல நிலையில் இன்று சிரிய அகதிகள் அலையும் கொடுமை நேர்ந்துள்ளது. சிரியாவுக்குள் அனைத்து அகக் கட்டுமானங்களும் அழிந்துள்ளன. சமீப காலத்தில் எந்தத் தீர்வும் கிட்டும் என்கிற நம்பிக்கை யாருக்கும் இல்லை.

இந்தப் பின்னணியில்தான் இந்த மாதத் தொடக்கத்தில் சிரியாவில் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எல் (ISIL) படைத் தளங்களின் மீது ருஷ்யா விமானத் தாக்குதலைத் தொடங்கியது.  துருக்கி உட்பட ஆறு அமெரிக்க ஆதரவுநாடுகள் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்தி அங்கு தனக்குச் சாதகமான ஒரு பொம்மை ஆட்சியை நிறுவ விரும்பும் இன்னொரு அமெரிக்க ஆதரவு நாடான சவூதி அரேபியாவும் கடாரும் கூட இந்தக் கண்டன அறிக்கையுடன் உடன்படும் நாடுகள்தான்.

சிரியாவில் தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கெதிரான உளாட்டுப்போர் அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக 2011ல் தொடங்கியதுதான் எனினும் துனிசியா, எகிப்து முதலான நாடுகளில் முளைத்த அரபு வசந்த எழுச்சிக்கும் இதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. அரபு வசந்த எழுச்சிகள் தன்னெழுச்சியாக அந்தத நாட்டு மக்கள் நீண்ட நாள் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக எழுந்தவை. அவை அமைதி வழியில் நடந்தவை. பெரும்பாலான மக்களின் ஆதரவு இவற்றிற்கு இருந்தது.

ஆனால் ஊழலும் அடக்குமுறையும் நிறைந்த அசாத்தின் ஆட்சிக்கு எதிராக சிரியாவில் உருவான ஆயுதப் போராட்டத்திற்கு முழுமையான மக்கள் ஆதரவு இருந்தது எனச் சொல்ல இயலாது. இங்கு அது ஒரு உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. அசாத் ஆட்சி அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதன் விளைவே இன்றைய சிரிய அகதிகள் பிரச்சினை.. அசாத் ஆட்சிக்கு எதிரான இன்றைய இந்த உள்நாட்டுப் போருக்கு சவூதி, கடார், துருக்கி முதலான நாடுகள் வெளிப்படையாக ஆதரவாக உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய முடியரசுகள் அசாத்துக்கு எதிரான இந்த அமைப்புகளுக்கு பெரிய அளவில் நிதி உதவி அளிக்கின்றன.

“ஒரளவு மென்மையான” (moderate) இந்த அமைப்புகளுக்குத் தாங்கள் உதவுவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே கூறுகிறது. யார் அந்த மென்மையான அமைப்புகள்?

ஒருபக்கம் தலைகளை வெட்டி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ISIS அமைப்பு; இன்னொரு பக்கம் சிரியாவின் அல் கொய்தாவான அல் நுஸ்ரா முன்னணி, அப்புறம் சலாஃபிஸ்டுகளான சில அல்ஷாம்ஸ் இயக்கங்கள் ஆகியவைதான் இந்த “மென்மையான பயங்கரவாத” அமைப்புகள். இவை கைப்பற்றும் பகுதிகளில் உடனடியாக ஷரியா சட்டத்திண் ஆட்சி என்கிற பெயரில் கடும் அடக்குமுறைகள், சிறுபான்மையினர் மற்ரும் அல்லாவைட் முஸ்லிம்கள் கொல்லப்படுதல், அகதிகளாக்கப்படுதல் நிகழ்கின்றன.

அமெரிக்கா சவூதி முதலியன இப்படி ISIS இயக்கத்திற்கு உதவுவதன் பின்னணி என்ன?

உண்மையில் இன்று சிரியாவுக்குள் மூன்று போர்கள் நடந்து கொண்டுள்ளன. 1. அசாத் அரசிற்கும் உள் நாட்டு ஆயுதக் குழுக்களுக்குமான போர். 2. ஈரான் மீது சவூதி நடத்தும் மறைமுக யுத்தம். 3.உக்ரேன் போருக்கு அடுத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கும் போர்.

பஷார் அசாத் அரசுக்கு இன்று பக்க பலமாக இருப்பது லெபனானின் ஹிஸ்புல்லா, மற்றும் குர்திஷ் இயக்கங்கள், ஈரான்  மற்றும்ருஷ்ய நாடுகள் ஆகியன. ஈரானைத் தன் ஜென்மப் பகையாக நினைக்கும் அமெரிக்க ஆதரவு அரசான சவூதி, அசாத்தை வீழ்த்தி சிரியாவில் தனக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான ஒரு பொம்மை அரசை அமைத்துவிட்டால் ஈரானை புவீயல் ரீதியாகத் துண்டித்து விடலாம் என நினைக்கிறது.

அமெரிக்கா அசாத் அரசுக்கு அளிக்கும் ஆதரவுக்குப் பின்னணியாக இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் அரசு ஆகியவற்றை ஒடுக்குவது. மற்றது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முகாந்திரமாக வைத்து ருஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் தற்போது எண்ணை ஏற்றுமதி மூலம் உருவாகியுள்ள நட்பை அழிப்பது. பெரிய அளவில் இன்று ஐரோப்பாவிற்கு ருஷ்யாவிலிருந்து எண்ணை ஏற்றுமதி ஆவது குறிப்பிடத் தக்கது.

இந்த வல்லாதிக்க வல்லூறுகளுக்கு இடையிலான வஞ்சகப் போரின் அனைத்துத் துயரங்களும் இன்று பரிதாபத்திற்குரிய சிரியா நாட்டு மக்கள் மீது விடிந்துள்ளது.

ருஷ்யா இன்று அசாத் அரசுக்கு ஆதரவாக விமானத் தாக்குதலை மட்டுமே நடத்துகிறது. ISIS அமைப்பின் தளங்களைக் குறி வைத்தே தாக்குதல் நடக்கிறது. முதற் கட்டத் தாக்குதலிலேயே ISIS பயங்கரவாத அமைப்பின் ஆயுத பலம் பெரிய அளவில் குறைந்துள்ளது எனத் தெரிகிறது.


இந்த ISIS அமைப்பு என்பதென்ன?

நான்குநாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேய்ர் 2003 ல் அமெரிக்கத் தலைமையில் தாங்கள் ஈராக் மீது படை எடுத்து அதை அழித்து, சதாமைத் தூக்கிலிட்டு அந்த நாட்டச் சின்னாபின்னமாக்கிய நிகழ்வு தவறுதான் எனவும் தான் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். பின் விளைவுகளைப் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் புஷ் அந்தக் காலத்திலேயே சதாம் ஹுசேனிடம் பேரழிவு ஆட்ய்தங்கள் இருந்ததாகத் தாங்கள் நம்பியது தவறுதான் எனவும் உளவுத் தகவல்கள் தவறாகிவிட்டன எனவும் கூறியது நினைவிருக்கலாம். பேரழிவு ஆயுதங்களை சதாம் பதுக்கி வைத்துள்ளார் என்கிற காரணம் சொல்லித்தான் ஈராக் மீதான படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது நினைவிற்குரியது.

டோனி பிளேய்ர் இன்னொன்றையும் கூறியுள்ளார். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ளது தங்களின் இந்த அநீதியான தாக்குதலின் விளைவுதான் என்கிற ஒப்புதல் வாக்குமூலம்தான் அது.

ISIS அல்லது ISIL அல்லது IS என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகமில்லை. தேசங்களைக் கடந்த ஒரு இஸ்லாமிய ஆட்சி என்கிற பெயரில் ஒரு புதிய கலீபா ஆட்சியை (caliphate) உருவாக்குவதாகப் பீற்றிக் கொண்டு அது அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் பின்புலத்துடன் மேற்கொள்ளும் வன்முறைகளை யாரும் ஏற்க இயலாது.

ஆனால் அதை மதிப்பிடும்போதும் விமர்சிக்கும்போதும் அதைச் சமகால வரலாற்றிலிருந்து பிரித்து விமர்சித்துவிடவும் இயலாது.ISIS பற்றிப் பேசும்போது நாம் மூன்று விடயங்களை மறந்து விடக் கூடாது. அவை:

1, இது 2003 க்குப் பின் 2007 வாக்கில், அதாவது அமெரிக்காவின் இரண்டாம் ஈராக் யுத்தத்திற்குப் பின் உருவானது 2. பிரிட்டிஷ் அரசளவு பரப்புள்ள புவிப்பரப்பின் மீது அதிகாரம் செலுத்தக் கூடியதாகவும், நாளொன்றுக்கு சுமார் 9,000 பீப்பாய் எண்ணை ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பொருளாதாரப் பலம் உள்ளதாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ISIS இன்று பல நாடுகளில் கிளை பரப்பியுள்ள போதும் அது முளைவிட்ட நாடு சதாமுக்குப் பிந்திய ஈராக். 3. அது ஒரு சன்னி முஸ்லிம்களின் அமைப்பாகவே உள்ளது என்பது.

ஈராக் மீது அமெரிக்கா இரண்டாம் முறையும் படை எடுத்து (2003) சதாமைக் கொன்று, அந்த நாட்டைச் சின்னா பின்னமாக்கி, தனது பொம்மை அரசு ஒன்றை நிறுவி, ஈராக் இராணுவத்தைக் கலைத்து, ஏராளமானோரைக் கொன்று, ஏராளமான முன்னாள் இராணுவத்தினரையும் மக்களையும் சிறைகளில் அடைத்து, சதாம் ஆட்சியின்போது அதிகாரத்தில் இருந்த சன்னி முஸ்லிம்களை கடுமையாக  ஒடுக்கியிருந்த பின்னணியில் அங்கு முதலில் அமைதி வழியில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்,

அவர்களின் கோரிக்கைகள் மூன்றுதான். அவை: 1. சன்னி முஸ்லிம்கள் மீதான ஒடுக்கு முறைகளைக் கைவிட்டு அவர்களது உரிமைகளை அனுமதித்தல் 2. பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைக் கைவிடல். 3. யாரை வேண்டுமானாலும் மரணதண்டனக்கு உள்ளாக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து மரணதண்டனைக்கு முடிவு கட்டுதல்.

ஆனால் அமெரிக்க எடுபிடிப் பிரதமர் நூருல் மாலிக்கி அந்தப் போராட்டத்தை எள்ளி நகையாடினார். கொடும் அடக்குமுறைகளின் ஊடாக அதை முடிவுக்குக் கொண்டு வந்தார், அதில் பலர் கொல்லப்பட்டனர். அமைதி வழியில் போராடிய தங்களின் மீது இராணுவம் ஏவப்பட்ட போதும் கூட போராடியவர்கள் தம் அமைதி வழியைக் கைவிடவில்லை. அந்தப் போராட்டங்களை “ஈராக் வசந்தம்” எனக் குறித்தவர்களும் உண்டு.

ஃபலூஜா மற்றும் ரமாடியை மையமாகக் கொண்டு இனக்குழு மக்கள் தங்கள் உரிமைகளை வேண்டி பல்வேறு இராணுவக் குழுக்களாகத் திரண்ட போதும் கூட அவை எல்லாம் ISIS போன்ற பயங்கரவாத அமைப்பாக இல்லை. அவர்கள் எல்லாம் ஆயுதம் எடுத்ததையும் கூட நாம் சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். அங்கு அன்று, ஏன் இன்றும் கூட ஆயுதங்கள் மூலமாகத்தான் அரசுடன் உரையாட இயலும்.

ஆனால் இந்த அமைப்புகளைத் தரம் பிரித்து அணுகாமல் இவை எல்லாவற்றையும் பயங்கரவாத அமைப்பாகவே அறிவித்து இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இப்படியான பின்னணியில் உருவானதுதான் ISIS என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முன்னாள் ஈராக் இராணுவத்தினர், அதிகாரம் இழந்து ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம்கள், சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானோர் இவர்கள் எல்லோரும் திரள் திரளாக ISIS பக்கம் சென்றனர். தற்போதைய ISIS தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி அப்படி ஈராக் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

ஐ.எஸ் பயங்கரவாதத்தை அமெரிக்காதான் உருவாக்கியது என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஈராக்கின் மீது அது மேற்கொண்ட நீதியற்ற போரின் விளைபொருளாக உருவான இந்த அமைப்பை இன்று அதே அமெரிக்கா தன் எதிரிகளை ஒட்டுக்குவதற்குப் பயன்படுத்துகிறது.

சுற்றிலும் நேட்டோ படைகளால் முற்றுகை இடப்பட்ட நிலையில் உள்ள ருஷ்யா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அமெரிக்காவில் இந்த முயற்சிக்கு எதிரானதுதான் சிரியா மீதான இன்றைய அதன் விமானத் தாக்குதல். உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தின் இன்றைய பலி சிரிய மக்கள்.