கிறிஸ்தவத்தில் சாதீயம்

வரலாற்றில் இரு நிகழ்வுகள்

இந்தியாவிற்குள் தோன்றியதாயினும், இல்லை வெளியில் இருந்து வந்ததாயினும் முதலா:ளித்துவம் உட்பட எந்த நிறுவனமும், இந்தியாவில் சாதீயத்திற்குப் பலியாகிப் போன வரலாற்றை நாம் அறிவோம். கோட்பாட்டளவில் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை முதலானவற்றை ஏற்காத மதங்களும் இதற்கு விலக்கல்ல. கிறிஸ்தவம், அது கத்தோலிக்கமானாலும், சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆனாலும் முழுமையாகச் சாதியை, தீண்டாமையை ஏற்றுக் கொண்டது, இஸ்லாம் ஒப்பீட்டளவில் இதற்கு விதிவிலக்காக இருந்ததால்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாத்தைப் பரிந்துரைத்தார்.

கிறிஸ்தவம் சாதீயத்திற்கும் தீண்டாமைக்கும் பலியாகி இருந்த அவலத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் மட்டுமின்றி நடப்பிலும் உண்டு. நம் கவனத்தில் அதிகம் பட்டிராத இரு வரலாற்றுச் செய்திகள் இங்கே:

முதலில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் சார்ந்த ஒரு நிகழ்வு. திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்த்த ஜி.யு போப் (ஜார்ஜ் யுக்ளோ போப்) (1820-1908) தனது 19ம் வயதில் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்து சமயப் பணிகளைத் தொடங்கினார். 1851 முதல் 1858 வரை சுமார் எட்டாண்டு காலம் தஞ்சை மாநம்புச் சாவடியில் உள்ள தூய பேதுரு ஆலய குருவாகப் பணியாற்றியதோடு, வடக்கு வீதியில் இன்றும் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்தி அதன் முதல்வராகவும் பணியாற்றினார். சங்.சீ.யு.போப்பையர் என அவர் போற்றப்பட்டார். மகாவித்துவான் இராமாநுச கவிராயர் மற்றும் ஆரியங்காவுப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அவர்.

இதே காலகட்டத்தில்தான் தமிழ்ச் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் இன்னொரு முக்கிய பங்களிப்பாளரான வேதநாயக சாதிரியாரும் தஞ்சையில் வாழ்ந்தார். கிறிஸ்தவ இசை மரபிலும் முக்கிய பங்களிப்புச் செய்தவர் வேதநாயகர். “எல்லாம் ஏசுவே.. எனக்கு எல்லாம் ஏசுவே..” என்கிற புகழ் பெர்ற கீர்த்தனை அவருடையதே,

வேதநாயகர், போப் இருவருமே அப்போதைய தஞ்சை மன்னர் சிவாஜிக்கு நெருக்கமாக இருந்தனர். மன்னரின் உதவி பெற்று போப் மாநம்புச் சாவடிக் கிறிஸ்தவக் குடியிருப்பில் தூய பேதுரு ஆலய வடபுறம் குளம் ஒன்றையும் வெட்டுவித்தார். இப்போது குளம் தூர்க்கப்பட்டு பிளேக் மேநிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமாக்கப்பட்ட போதும், குளத்தின் தென்கரைச் சுவற்றில் இது குறித்து வெட்டப்பட்ட கல்வெட்டு இன்னமும் உள்ளது (செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1987, பக்.98).

வேளாளச் சாதியரான வேதநாயகர் சாதி வேறுப்படுகளுக்கும் வேளாளப் பெருமைக்கும் ஆதரவாக இருந்தவர். கிறிஸ்தவராக மாறிய பின்னும் தம்மைக் ‘காராள மரபினர்’ ‘கங்கை குலத்தார்’. ‘வெள்ளாளர்’ என இச்சாதியினர் தம்மைக் குறிபிட்டுப் பெருமை பாராட்டி வந்தனர்.

வெள்ளைக்காரரான போப்போ சாதி வேறுபாடுகளுக்கு எதிரானவராக இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் இவர் பொருட்டுக் கிறிஸ்தவமாயினர்.. ஆனால் ‘சின்னக்கோட்டை பெரிய தேவாலயத்தின்’ வழி வந்த வேளாளக் கிறிஸ்தவர்கள் ‘போப்புடன் வந்த புது மிசியோனரிமாரை’ மதிக்காததோடு தீண்டாமை பாராட்டவும் செய்தனர். இரு தரப்பாருக்கும் பகை மூண்டு திருவையாறு நீதிமன்றத்தில் வழக்குகளும் நடந்தன.

போப் சாதி வேறுபாட்டை ஏற்காதிருந்ததோடு வெள்ளாளருக்குச் சமமாகப் பிறரையும் நடத்தியதை வேதநாயகரால் ஏற்க இயலவில்லை. போப்பிற்குக் கடுந் துன்பம் விளைவித்ததாகவும், அவருக்கறெதிராக ‘போப்பையர் உபத்திரா உபத்திரவம்’ என்றொரு நூலையே எழுதியதாகவும் செ,இராசு குறிப்பிடுகிறார். பெத்தலகேம் குறவஞ்சியை எழுதிய கைகள் இந்த அவதூறையும் எழுதின.

எதிர்ப்புகள் முற்றவே போப் அவர்கள் இரவோடிரவாகத் தன் குடும்பத்தாருடன் தஞ்சையை விட்டு உதகமண்டலம் நோக்கி அகன்றார் என அறிகிறோம்.

இனி கத்தோலிக்கக் கிறிஸ்தவம் சார்ந்த ஒரு நிகழ்வு: புதுச்சேரியில் ‘சாதி’இந்துக்களாகவிருந்து மதம் மாறியோர் தம்மைத் “தமிழ்க் கிறிஸ்தவராக” அடையாளப்படுத்திக் கொண்டனர். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து மதம் மாறியவர்கள் ‘கிறிஸ்தவப் பறையர்’ களாக ஒதுக்கப்பட்டனர். ‘தமிழ்’ அடையாளம் என்கிற தாழ்த்தப்பட்டோரை விலக்கியதாக இருந்ததற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு. ‘தமிழர் என்போர் பறையரல்லாத பிறர்’ என்பதாக வரையறுக்கப்பட்டதும், பின்னி மில் போராட்டத்தை எழுத வந்த ஒரு தமிழறிஞர், “பறையர்களை வைத்துத் தமிழர்களை அடிக்கிறார்களே” என ஆத்திரப்பட்டதும், “மாட்டுமாமிசம் தின்னாராயுள்ள தமிழர்கள்’ எனஎழுதிய பிறிதொரு தமிழறிஞர் ‘தமிழாள்’, ‘துலுக்காள்’ என்கிற வழக்கு வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியதும் பிற சில எடுத்துக்காட்டுகள்.

புதுச்சேரி செல்லும் யாரும் பார்க்கத் தவறாத ஒன்று சம்பா கோவில் என மக்களால் அழைக்கப்படும் அழகிய புனித தேவாலயம் (St Paul’s Church). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்துத்துவவாதிகள் பாபர் மசூதியை இடித்த திமிரோடு இதையும் ‘முன்னாள் இந்துக் மோவில்’ என்றொரு கதையைக் கிளப்பி இடித்தொழிக்க முயன்ற கதை சிலருக்கு நினைவிருக்கலாம் (பார்க்க: நானும் பிரபஞ்சனும் இணந்து எழுதிய ‘மசூதிக்குப் பின் மாதா கோவிலா?” எனும் குறு நூல்). பல்வேறு சமூகத்தவரும் இணைந்து வாழ்கிற பன்மைக் கலாச்சரத்திற்குரிய புதுச்சேரி மக்கள் மத்தியில் இந்துத்துவத்தின் பருப்பு வேகவில்லை. அவர்களின் முயற்சி தோற்றது.

இந்தக் கோவிலில் 18ம் நூற்றாண்டில் ‘தமிழ்க் கிறிஸ்தவர்களும்’, ‘பறைக் கிறிஸ்தவர்களும்’ (சொற் பயன்பாட்டிற்கு மன்னிக்க) தனித்தனியே அமர்ந்து பூசை காண குறுக்குச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. வேதனை என்னவெனில் இப்படிக் குறுக்குச் சுவர் வைப்பதற்கு போப்பாண்டவர் 15ம் பெனுவா (Benoit XV) அனுமதி அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

1745ல் காரைக்காலில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து சேர்கிறார் ஒரு வெள்ளைப் பாதிரியார் (இவரும் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கிய பாதிரியார்தான். பெயர் மறந்து விட்டது. நினைவுக்கு வந்ததும் குற்றிப்பிடுகிறேன். யாருக்கேனும் நினைவிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்). அவருக்கு இந்தக் கொடுமை சகிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிப் பேசுகிறார். அவர்கள் அனைவரும் 1745 அக்டோபர் 16 அன்று “கும்பலாகக் கூடி” “பெரிய சாமியாரை”ப் பார்த்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் தம்மை இவ்வாறு ஒதுக்கி வைப்பது குறித்து முறையிட்டதை ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பெரிய சாமியார் இதைப் பொறுமையாகக் கேட்டதோடன்றி, அவர்களின் கருத்தை ஏற்று குறுக்குச் சுவற்றை இடித்தும் போட்டார்.

என்ன இருந்தாலும் கிறிஸ்தவ வேதத்தில் இப்படிப் பிரிவினை காட்டுவதற்கு இடமில்லை அல்லவா. பெரிய சுவாமியார் இப்படிச் சுவரை இடித்ததை சாதிக் கிறிஸ்தவர்களால் உடனடியாக எதிர்க்க இயலவில்லை. அவர்களின் ஆத்திரமெல்லாம் காரைக்காலிலிருந்து வந்த புதுச் சாமியாரை நொக்கித் திரும்பியது, சமயம் பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு அத்தகைய சமயமொன்று வாய்த்தது.

புகழ்பெற்றிருந்த தரகர் கனகராய முதலியாரின் சகோதரர் மகனும் கிறிஸ்தவருமான ஆசாரப்பமுதலியாரின் மனைவி, ஏராளமான ஆபரணச் சுமைகளுடனும், வாசனைத் திரவியங்களுடனும், விலை உயர்ந்த மெல்லிய சல்லாப் புடவையுடனும் பூசை காண வந்திருந்தார். எரிச்சலுர்ற காரைக்கால் பாதிரியார் ஒரு பிரம்பால் அம்மையாரின் கொண்டையில் ஒரு தட்டுத் தட்டி, “இப்படிச் சல்லாப் புடவையுடன் கோவிலுக்கு வரக் கூடாது. எழுந்து போ” என விரட்டியதோடு, இனிமேல் இப்படிக் கிறிஸ்தவப் பெண்கள் சல்லாப் புடவை, வீண் ஆபரண ஆடம்பரங்கள் அணியக் கூடாது, கொண்டையை முடியக் கூடாது, வாசனைத் திரவியங்கள் பூசி வரக் கூடாது எனச் சரமாரியாக ஆணையிட்டார்.

தமிழ்க் கிறிஸ்தவர்கள் பொறுப்பார்களா? கனகராய முதலியாரியாரின் மைத்துனர் கெவுனிவாச முதலியார் தலைமையில் பாதிரியாரைச் சந்தித்து இந்த நூதன உத்தரவுக்கெல்லாம் நாங்கள் பணியமாட்டோம் எனச் சொன்னதோடு அவரது அங்கியைப் பிடித்திழுத்துத் தகராறும் செய்தனர். இனி கோவிலுக்கு வரமாட்டோம் எனவும் அறிவித்தனர். பிறகு கனகராயரும் தலையிட பாதிரியார் தன் நூதன உத்தரவைத் திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

எனினும் பாதிரியாரும் பிரச்சினையை விட்டுவிடுவதாக இல்லை. ஆளுநர் டூப்ளேயைச் சந்தித்து முறையிட்டார். தமிழ்க் கிறிஸ்தவர்கள் நான்கு பேருக்கு மேல் எங்காவது கூடிப் பேசுவதைக் கண்டால் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க டூப்ளே உத்தரவிட்டான்.

அடுத்த நாள் கோவிலுக்குச் சென்ற போது முன்னர் குறுக்குச் சுவர் இருந்த இடத்தில் நாற்காலிகளை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு தமிழ்க் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்படட் கிறிஸ்தவர்களும் தனித்தனியே பூசை காணும்படிச் செய்யப்பட்டிருந்தது.

அதற்குப்பின் என்ன நடந்தது என ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பிலிருந்து அறிய இயலவில்லை என்கிறார் இந்நிகழ்வுகளைத் தொகுத்துத் தந்துள்ள அ.செபஸ்தியான் (18ஆம் நூர்றாண்டில் புதுவையின் வாழ்க்கை நிலை, ஆனந்தரங்கப் பிள்ளை ஆய்வு மையம், புதுச்சேரி, 1991).

இன்னுங்கூட தமிழகத்தில் பல ஊர்களில் இத்தகைய நிலை இருக்கத்தான் செய்கிறது. எனினும் சம்பா கோவிலில் இன்று அந்நிலைமை இல்லை.

_______________________________________________________________________________________________________

கிறிஸ்தவத்தில் சாதீயம் 2 : குண்டர் சட்ட நடுவர் குழு முன் அளிக்கப்பாட ஒரு மனு

[கிறிஸ்தவப் பாதிரிமார்களின் சாதி மனநிலையையும் செயல்பாடுகளிடும் தட்டிக் கேட்ட ஒரு நண்பர், பாதிரியார் ஒருவர் கொடுத்த புகார் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டமும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டது. குண்டர் சட்ட நடுவர் ஆயத்தின் முன் சமர்ப்பிக்கத் தயார் செய்த மனு]

அனுப்புனர்

எம்.அமல்ராஜ், த/பெ. மாசிலாமணி,

மேல அரும்பூர், திருவெற்றியூர்,

திருவாடனை வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.

பெறுநர்

உயர்திரு தலைவர் அவர்கள்,

அறிவுரைக் குழுமம், 32, ராஜாஜி சாலை,

சிங்காரவேலர் மாளிகை, சென்னை மாவட்ட ஆட்சியரகம்,

சென்னை – 600 001

அய்யா,

நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். என் அண்ணன் திரு.பெர்னர் தூஸ்பாஸ் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது ( ஆணை எண்: 7/ குண்டர் / 2014). இது தொடர்பாக கீழ்க்கண்ட உண்மைகளை உங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர அநுமதி அளிக்க வேண்டுகிறேன்.

எனது அண்ணன் பெர்னர் தூஸ்பால் மீது இதுவரை எந்தக் குற்றத்திற்காகவும் ஒரு வழக்கு கூட இல்லாதபோதும், பாதிரியாரைத் தாக்கிய சம்பவத்தில் அவர் பங்கு பெறவே இல்லாத போதும், அந்த இடத்திலேயே அவர் இல்லாத போதும், இப்படி அவர் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணம். இந்தத் தனிப்பட்ட பகைக்கான காரணம் சில பொது நியாயங்களை அவர் கேட்டதுதான்.

கிறிஸ்தவமதத்தில், இந்து மதத்தைப்போலவே சாதி, தீண்டாமை எல்லாம் உண்டு என்பதை அய்யா அறிவீர்கள். எங்கள் மறை மாவட்டத்திலும் இந்தக் கொடுமை அதிகம். இப்பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்படும் “பள்ளர்” என அழைக்கப்படும் “தேவேந்திர குல வேளாளச் சாதியினர்” தான் அதிகம். நாங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் மறை மாவட்ட பாதிரிமார்கள் மத்தியில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆதிக்க சாதியினரே அதிகாரத்தில் உள்ளனர்.

திருவிழாக்களில் எங்களைச் சமமாக உட்கார வைப்பது கிடையாது. எங்களைப் போன்ற தலித் கிறிஸ்தவர்களும், ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்களும் ஒன்றாக வாழும் ஊரில் பொதுக் கல்லறைகளில் எங்கள் சாதிக்காரர்களைப் புதைக்கவும் அனுமதிப்பதில்லை.

இன்னும் பல வகைகளிலும் எங்கள்மீது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு, எங்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. 2012 -13 கல்வி ஆண்டில் மட்டும் எங்கள் சாதியைச் சேர்ந்த 22 குழந்தைகளை “சரியாகப் படிப்பதில்லை” எனப் பொய்க் காரணம் சொல்லி மறை மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிகளிலிருந்து நீக்கிவிட்டனர்.

எங்கள் சாதியில் படித்து முடித்தவர்களுக்கு, உரிய தகுதி இருந்தும், அவர்களை மறை மாவட்ட நிறுவனங்களில், குறிப்பாகப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிப்பதில்லை.

எங்கள் சாதியினருக்குக் குருத்துவப் படிப்பு முடித்து பாதிரிமார்களாகப் பணியாற்றவும் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் எங்களின் சிவகங்கை மறை மாவட்டத்தைச் சேர்ந்த, எங்கள் சாதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் குருத்துவப் படிப்பு முடித்துப் பட்டம் பெறும் தறுவாயில் குருத்துவக் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுள்ளார். இதனால் அவர் உரிய தகுதி இருந்தும் பாதிரியாராக இயலாமல் போய்விட்டது. இதை எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் நடை பெறுகின்றன. இது நாளிதழ்களிலும் வந்துள்ளது. (தினத்தந்தி மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 21, 2014). இதுவரை பள்ளர் சாதியைச் சேர்ந்த 18 பேர்கள் இவ்வாறு பாதிரியாராகாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இப்படி எங்கள் சாதியினர் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படும் போது, எங்கள் மேல அரும்பூர் கிராம தலித், கிறிஸ்தவர் பிரதிநிதி என்கிற வகையில் இன்று குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள என் அண்ணன் பெர்னர் தூஸ்பால் பாதிரிமார்களிடம் சென்று எங்கள் தரப்புக் கோரிக்கைகளை முன்வைப்பார்.

என் அண்ணன் மீதுள்ள இந்த ஒரே வழக்கிற்குக் காரணமான பொய்ப் புகாரை அளித்துள்ள திருவெற்றியூர் பங்கு ஆலய குருவும், அப்பகுதி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவருமான திரு.ஆரோக்கியசாமி அடிகளார் இப்படி நியாயம் கேட்பதற்காகவே என் அண்ணன் மீது ஆத்திரம் கொண்டிருந்தார், பங்கு குரு ஆரோக்கியசாமி அடிகளார் மீது எங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆபாசமாகத் திட்டியதற்காக தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு (எண் 158 /13 , தேதி 01-11-2013, தொண்டி காவல் நிலையம்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் நாளிதழ்களில் (தினத்தந்தி மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 21, 2014). வெளி வந்துள்ளது. அந்த வழக்கில் அவர் தற்போது பிணையில் வந்துள்ளார் என்பதையும் தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இந்தக் காரணங்களினால் என் அண்ணன் மீது தனிப்பட்ட முறையில் ஆத்திரம் கொண்டிருந்த பாதிரியார் ஆரோக்கியசாமி அவர்கள், குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தில் என் அண்ணனுக்குப் பங்கே இல்லாதபோதும்,அந்த இடத்திலேயே அவர் இல்லாத போதும் இவ் வழக்கில் பொய்யாக இணைத்துப் புகாரளித்துள்ளார். அவருடன் நெருக்கமாக உள்ள காவல்துறையினரும் அதை ஏற்று இன்று என் அண்ணன் குண்டர் சட்டத்தில் சிறைப்படக் காரணமாகி உள்ளனர்.

(1) இது வரை என் அண்ணன் மீது வேறு எந்த வழக்கும் கிடையாது. (2) இதுவும் ஒரு பொய் வழக்கு (3) என் அண்ணனுக்குப் பிணையில் விடுதலை உத்தரவான பின்னரே, பழி வாங்கும் நோக்குடன் அவர் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப் பட்டுள்ளது (இது குறித்த விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) (4) என் அண்ணி மோட்சமேரி அவர்கள் தன் கணவர் மீது தடுப்புக் காவல் சட்டம் போடக்கூடாது என அளித்த மனுவை உத்தரவு இட்ட அதிகாரி பரிசீலிக்கவே இல்லை. (5) தடுப்புக் காவல் ஆணையில் ஆதார வழக்கின் குற்றப் பிரிவுகள் தவறாக உள்ளன (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) (6) கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் ஆயுதங்கள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் என் அண்ணனின் இரு சக்கர வாகன எண் என வேறொன்று எழுதப்பட்டுப் பின் அது அழித்துத் திருத்தப்பட்டுள்ளது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது). (7) ஆதார வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தும், அதில் பலபேர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருந்தும், சம்பவ இடத்திலேயே இல்லாத என் அண்ணன் மீது மட்டும் குண்டர் சட்டம் பிரயோகித்திருப்பது உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

அய்யா,

என் அண்ணன் உரிமம் பெற்று செங்கற் காளவாய்த் தொழிலைஅமைதியாக நடத்தி வந்தவர். இதுவரை எந்த வழக்கிலும் கைது செய்யப்படாதவர். அவருடைய சம்பாத்தியத்திலேயே என் அண்ணன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு வேறு வருமானம் இல்லை. மகள்கள் இருவரும் மகன் ஒருவனும்படித்துக் கொண்டிருக்கின்றனர், அண்ணனின் பராமரிப்பில் உள்ள அம்மாவும் அண்னியும் நோயாளிகள்.

இவை எல்லாவற்றையும் அய்யா அவர்கள் கருத்தில் கொண்டு அநியாயமாக என் அண்ணன் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரது குடும்பத்தில் விளக்கேற்றுமாறு பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

02 – 04- 2014

தங்கள் உண்மையுள்ள,

சென்னை

(எம்.அமல்ராஜ்}