2011 – போராட்டங்களின் ஆண்டு

“2001 செப்டம்பர் 11க்குப் பின் உலகம் மாறிவிட்டது” என அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் முழக்கமிட்டதையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்புகள், அழித்தொழிக்கப்பட்ட இயக்கங்கள் ஆகியவற்றின் வரலாற்றையும் நாம் அறிவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்கிற பெயரில் தான் என்ன வேண்டுமானாலும் செய்துவிட இயலும் என்பதுதான் புஷ்சுடைய முழக்கத்தின் உட்பொருள்.

ஆனால் ஈராக். ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தியது, பாக் எல்லையோரங்களில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி ஏராளமான சிவிலியன்களைக் கொன்றது என்பது தவிர அமெரிக்கா எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்கவில்லை. ஈரான், சிரியா, உக்ரேன் ஆகிய பிரச்சினைகளில் விரும்பியபடி ஆட்சி மாற்றங்களை (regime changes) அரங்கேற்ற இயலவில்லை. சொல்லப்போனால் அல்குவேதா போன்ற பயங்கரவாத இயக்கங்களையோ அல்லது அப்பகுதிகளில் நடைபெற்ருக் கொண்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களையோ அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை. ‘இஸ்லாமிய அரசு’ ஒன்று பிரகடனப்படுத்தக் கூடிய அளவுக்கு இன்று அங்கு நிலைமை உள்ளது. ஈரானை நெறுக்குவது என்பதற்குப் பதிலாக அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனிலும் ருஷ்யாவை அதிரடி நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள அவற்றிற்குத் திராணி இல்லை.

இன்னொரு பக்கம் அமெரிக்கா சென்ற பத்தாண்டுகளில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் உலக அரங்கில் மட்டுமின்றி உள் நாட்டிலும் அதைப் பலவீனப் படுத்தியுள்ளது. இன்னொன்றையும் நாம் இங்கு கவனம் கொள்ல வேண்டி உள்ளது. இந்த நெருக்கடியை ஏதோ அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மட்டும் எதிர்கொண்டிருக்கவில்லை. உலகமயத்தின் மூலம் உலகம் ஏதோ ஒரு கிராமமாக உருப்பெற்றுள்ளதாகச் சொன்னார்களே அந்தக் ‘கிராமம்’ முழுவதிலும் இன்று அந்த நெருக்கடி எதிர்கொள்ளப் படுகிறது. கடன் சுமை, வேலை இன்மை, விலைவாசி ஏற்றம், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்குப் பொருளாதார வேறுபாடுகள், இரக்கமற்ற கார்பொரேட் கொள்ளைகள், கார்பொரேட்களின் எடுபிடிகளாக அரசுகள் மாறி வரும் அவலம், எதிர்காலத்தில் இவை எல்லாம் மாறலாம் என்கிற நம்பிக்கை பொய்த்து, பதிலாக எதிர்காலமே சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ள பருவ நிலை மாற்றங்கள் மற்றும் சூழல் அழிவுகள் முதலியன இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் விளைவுதான் உலகமெங்கும், ஆம் “உலகமெங்கும்” 2011ல் ஏற்பட்ட கொந்தளிப்புகள். 2010 டிசம்பரில் துனீசியாவில் வெடித்தது அது. 2011ல் அது எகிப்தில் தொடர்ந்து உலகெங்கிலும் தீயாய்ப் பரவியது. அரபு எழுச்சி மற்றும் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டம் ஆகியன ஊடகங்களால் கவனப்படுத்தப்பட்ட அளவிற்கு மற்றவை நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.

துனீசியாவின் பென் அலி ஜனவரி (2011) மத்தியிலும், தாஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தொடங்கிய 18ம் நாள் எகிப்தின் முபாரக்கும் வீழ்ந்த பின் அது வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. பஹ்ரெய்ன், ஏமன் பிறகு லிபியா, சிரியா என எல்லா நாடுகளிலும் எதிர்ப்புகள் கிளம்பின. சில நாடுகளில் அரசுகள் வீழ்ந்தன. சில நாடுகளில் அரசுகள் சலுகைகளை வழங்கின. எண்ணை வள நாடுகள் குடிமக்களின் வங்கிக் கணக்கில் காசைச் செலுத்தின..

அடுத்த முக்கிய எழுச்சி மே 15 (2011)ல் ஸ்பெயினில் வெளிப்பட்டது. தம்மைக் “கொதித்தெழுந்தவர்கள்” என அழைத்துக் கொண்ட மக்கள்திரள்கள் (multitudes) மாட்ரிடிலும் பார்சிலோனாவிலும் நகர் மையங்களில் உள்ள சதுக்கங்களைக் கைப்பற்றி அமர்ந்தன. சோஷலிஸ்ட் கட்சியின் ரோட்ரிக்ஸ் ஸபாடேரோவின் அரசை எதிர்த்து “உண்மையான ஜனநாயகம்” என்கிற முழக்கத்தை அவர்கள் வைத்தனர். வங்கி ஊழல்கள், வேலையின்மை, வீடுகளின்மை, கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றை எதிர்த்து மில்லியன் கணக்கில் மாட்ரிட் நகரின் ப்யூர்டா டி சோல் சதுக்கத்தில் குவிந்த ஸ்பானியர்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வெளியிலிருந்து ஆதரவளித்தனர். மக்கள் மன்றங்களில் (assemblies) விவாதங்களின் ஊடாகப் பொதுக் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. ஜூனில் ஏதன்ஸ் நகரின் சின்டாக்மா சதுக்கத்தில் மக்கள் அமர்ந்தனர். கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் எதிர்த்தனர். அடுத்த சிலநாட்களில் டெல் அவிவின் ரோத்ஷீல்ட் பூலிவாரில் சமூகநீதி மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் என்கிற முழக்கத்துடன் இஸ்ரேலியர்கள் திரண்டனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆப்ரிக்க பித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி ரோட்டன்ஹாமில் தோன்றிய கலவரம் பின் இங்கிலாந்தின் வெறு சில பகுதிகளிலும் பரவியது.

இந்தப் பின்னணியிலும், இவற்றின் தொடர்ச்சியாகவும்தான் மே 17 அன்று வால்ஸ்ட்ரீடில் ஸுகோடி பூங்காவில் திரண்ட அமெரிக்கர்களில் அமர்வுப் போராட்டத்தைக் காண வேண்டும். இது குறித்து மிக விரிவாக நான் இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இதற்குள் விரிவாகச் செல்லாமல் இந்தப் போராட்டங்களின் பொதுவான சில பண்புகள் அவை எதிர்கொள்ளப்பட்ட விதம், அவற்றின் இன்றைய நிலை ஆகியவை குறித்துச் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் போராட்டங்களில் மேலும் சிலவற்றைச் (எ.கா: போர்த்துக்கலின் ஜெரகா ஆ ரஸ்கா, மெக்சிகோவின் சோய் 32 இயக்கம், இஸ்தான்புல் தக்ஸீம் பூங்கா அமர்வு) சுருக்கம் கருதி நான் இங்கே குறிப்பிடவில்லை. அக்டோபர் 15 வாக்கில் 82 நாடுகளில் கிட்டத்தட்ட 951 முக்கிய உலக நகரங்கள் இப்போராட்டங்களை எதிர்கொண்டன.

இந்தப் போராட்டங்களின் வடிவம், போராட்டக்காரர்களுக்கிடையே நிலவிய உறவின் தன்மை, போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், அவர்களின் மொழி, இலக்கு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளைப் பேசுமுன் ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். அவை ஒவ்வொன்றும் ஆங்காங்குள்ள உள்ளூர்த் தன்மைகளுக்குத் தம்மைத் தகவமைத்து வெளிப்பட்டன என்பதுதான் அது. அரபுலகைப் பொருத்தமட்டில் நீண்ட காலக் கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்துவது அவர்களின் நோக்கம் என்று அவை வெளிப்பட்டபோதிலும் வால்ஸ்ட்ரீட் அமர்வு நிதி மூலதன அமைப்பின் கொடுங்கோன்மையை வீழ்த்துவது என வெளிப்பட்டபோதிலும் பொதுவில் அவை இன்று மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்கிற பொது நோக்கைக் கொண்டிருந்தன. ஆக, போராட்டங்களின் தனித்தன்மைகள், உள்ளூர் பிரச்சினைகளைத் தாண்டி உலகளாவிய பொது நோக்கங்களை அவை கொண்டிருந்தன. உலகப் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ள கடும் ஏற்றத்தாழ்வுகளையும் ஜனநாயக நிறுவனங்கள் இவற்றால் சிதைக்கப்படுவதையும் அவை எதிர்த்து நின்றன. ” (எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளூம்) ஒரு சதத்தினருக்கு எதிராக (எல்லாவற்றையும் இழந்த) நாங்கள் 99 சதம்” என கூடி இருந்தவர்கள் முழங்கினர். “உண்மையான ஜனநாயகம்” கோரினர்.

நகரத்தின் மையமான வெளி ஒன்றைக் கைப்பற்றி வெளியேறாமல் அமர்வது (occupation) என்பது உலகளாவிய இந்தப் போராட்டங்களின் பொதுத்தன்மைகளில் ஒன்று. பதினைந்தாண்டுகளுக்கு முன் உலகமயச் செயற்பாடுகளை எதித்த போராட்டங்கள் ஒரு வகையில் ஒரு ‘நாடோடித் தன்மையை’ப் பெற்றிருந்தது. உலக மய நிறுவனங்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அங்கு ஆர்பாட்டங்களை நிகழ்த்துவது என்பது இன்று மாறி, இத்தகைய நாடோடித் தன்மைக்குப் பதிலாக ஓரிடத்தில் இருந்து போராடும் ‘அமர்வுத் தன்மையை’ (sedentary) இன்றைய போராட்டங்கள் எடுத்தன. குறிப்பான தலைமை உருவாவதை இவை பிரக்ஞைபூர்வமாகத் தவிர்த்தன. மிஷேல் ஹார்ட், அந்தோனியோ நெக்ரி, ஸ்லாவோக் சிஸெக், காலே லாஸ்ன், மிகா வைட் முதலானவர்கள் போராட்டத்தை ஆதரித்து முழங்கினாலும், முன்னெடுத்துச் சென்றாலும் அவர்களும் கூட இங்கே தலைமை தாங்க அநுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் முதல் கேள்வியே யார் தலைவர் என்பதுதான். அந்தக் கேள்விக்கு அவர்களுக்குக் கடைசிவரை பதில் கிடைத்ததில்லை. ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதைச் சுட்டும் ஆணிவேர் என எதையும் அடையாளப் படுத்த இயலாத, ஆணி வேரே இல்லாத “புல் வடிவ” (rhizomatic movement) அமைப்பைக் கொண்டதாக இவை அமைந்தன.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்குப் பதிலாக, எல்லோரும் பங்கேற்று கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கும் “மக்கள் திரள் அவை” (multitude form) என்கிற வடிவை அவை எடுத்தன. 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் போராட்டக் கலாச்சாரத்தில் இவை பெரிய மாறுதல்களை உருவாக்கின. வன்முறை சாராத அதே நேரத்தில் தீவிரமான இப்போராட்டங்கள் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளவில்லை. அரசதிகாரத்தின் மூலமாக அடைவது என்பதைத் தாண்டிய சமூக நீதி என்கிற ஒரு புதிய பார்வையை இவை முன்வைத்தன. நவ தாராளவாதப் பொருளாதார எதிர்ப்பு, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டல் என்பதைத் தாண்டிய எந்த மையமான கருத்தியலையுங் கூட இந்த அமர்வுப் போராட்டங்கள் கொண்டிருக்கவில்லை.

இத்தகைய நடைமுறைகள் ஒரு உண்மையான ஜனநாயகத்தையும், பன்மைத்துவத்தையும் இந்த அமர்வுப் போராட்டங்களுக்கு அளித்தன. சற்றே மாறு பட்ட கருத்துடைய பல்வேறு சிறு இயக்கங்கள் இணந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் இவை வழி வகுத்தன. மொத்தத்தில் சுதந்திரம், ஜனநாயகம், பொது நிலைபாடுகளுடனான நமது உறவு ஆகியவற்றிற்குப் புதிய அர்த்தங்களை இப்போராட்டங்கள் உருவாக்கி அவற்றைப் பொதுப் புத்தியின் (common sense) ஓரங்கமாகவும் ஆக்கின.

அமர்வுப் போராட்டங்களின் இன்றைய இலை என்ன?

அரசாங்கங்கள் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மேலை நாட்டுச் சட்டங்களில் மக்கள் இப்படிக் கூடிப் போராடுவதற்கு இடமுண்டு. இதற்கான அனுமதி முதலியன பெறுவதில் சிக்கல் இருக்கக் கூடாது எனவும் அவை கூறுகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை பொது அவைகளுக்கான அனுமதி அளிப்பதே விதியாகவும், அனுமதி மறுப்பது விதி விலக்காகவும் இருக்க வேண்டும் எனவும் தெளிவாகக் கூறுகிறது.

எனினும் அமர்வுப் போராட்டங்கள் தொடங்கிய சில வாரங்களில் பல நாடுகள் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன. ஸ்பெயின் அரசு போராட்ட எதிர்ப்புச் சட்டம் ஒன்றையே நிறைவேற்றியது. போராட்டக்காரர்களின் மீது ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டன. கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கெடு விதித்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரப்பர் குண்டுகளால் சுடுதல், மிளகுத் தூளைப் பீய்ச்சி அடித்தல் முதலான வடிவங்களில் அமர்வுப் போராளிகள் விரட்டப்பட்டனர்.

அமர்வுப் போராளிகள் ஆங்காங்கு சட்ட உதவிக் குழுக்களை அமைத்து வழக்கு தொடரப்பட்டவர்களுக்கு உதவினர். சட்ட ரீதியாகத் தமக்குள்ள உரிமைகள் குறித்த துண்டறிக்கைகளை வெளியிட்டனர். இந்த வழக்குகள் பலவற்றில் இறுதி வெற்றி அமர்வுப் போராளிகளுக்குக் கிடைத்த போதும் நீண்ட கால நீதிமன்ற நடவடிக்கைகளே ஒரு வகையில் அவர்கள் மீதான தண்டனையாக அமைந்தன. ஒரு கட்டத்தில் வால் ஸ்ட்ரீட் அமர்வாளர்களில் மட்டும் சுமார் 800 பேர்களுக்கு மேல் வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. ப்ரூக்லின் பாலத்தைக் கடந்த 700 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். செசிலி மேக்மிலன் உட்படச் சிலர் காவல் வன்முறையையும் சிறிது காலச் சிறைத் தண்டனைகளையும் அனுபவிக்க நேர்ந்தது.

வால் ஸ்ட்ரீட் அமர்வுப் போராளிகள் டிசம்பர் 15 அன்று முழுமையாக ஸுகோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்படனர், மீண்டும் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் அவர்களின் முயற்சிகள் தோல்வியுற்றன. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே ஆண்டு இறுதிக்குள் அமர்வுப் போராளிகள் வெளியேற்றப்பட்டனர்.

அமைதி வழியில் போராடிய இவர்களை ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுப் படை’யைக் கொண்டு அமெரிக்க உளவுத் துறையும் (FBI), உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் (DHS) கண்காணித்ததை கார்டியன் இதழில் நோமி வொல்ஃப் அம்பலப்படுத்தினார். மிகப் பெரிய அளவு கண்காணிப்பு மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவல்களும் மேற்கொள்ளப்பட்டதை நியூயார்க் டைம்ஸ் இதழ் சென்ற மாதத்தில் (மே 2014) வெளிப்படுத்தியது. அமெரிக்க அரசின் பாதுகாப்புத் திட்டத் துறை Minerva Research Initiative என்கிற பெயரில் இப்படியான இயக்கங்களின் உருவாக்கம் முதலியவற்றை ஆய்வு செய்யப் பல மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அரசின் கெடுபிடிகள் தவிர பல நடைமுறைச் சிக்கல்களையும் அமர்வுப் போராளிகள் எதிர் கொண்டனர்.

சிக்கல் 1: நூற்றுக் கணக்கானோர் மத்தியில் கருத்தொற்றுமை என்கிற வடிவம் சாத்தியமான போதிலும் பல லட்சக்கணக்கானோர் மத்தியில் விவாதாங்களின் ஊடாக கருத்தொற்றுமை ஏற்படுத்துவது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. பல்வேறு சிறு குழுக்களும் தத்தமது விருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற நிலை எடுத்தனர். சிலர் அதில் பிடிவாதமாக இருந்தபோது பிரச்சினைகள் ஏற்பட்டன. தலைவர்களே வேண்டாம் என்கிற நிலைக்கு மாறாக ஒரு சிலர் குட்டித் தலைவர்களாகத் தோற்றம் காட்டினர்.

சிக்கல் 2: 22,000 சதுர அடியில் ஒரு அரை நிரந்தரக் குடியிருப்பைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதவர்கள் வெளியிலிருந்து செய்த நிதி உதவிகள் இருந்தபோதும் அதைக் கொண்டு உணவு, மருத்துவம் முதலான பல்வேறு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் எழுந்தன.

சிக்கல் 3: போதைப் பொருள் பழக்கம் உடையவர்கள், மன நோயாளிகள் முதலானோரையும் தனியே கவனிக்க வேண்டி இருந்தது. நெருங்கி வந்த மழைக்காலமும் அமர்வுப் போராளிகளுக்கு ஒரு சவாலாக இருந்தது.

“அடிப்படையான ஒரு தத்துவம், மையமான ஒரு வழிநடத்தும் அமைப்பு ஆகியன இல்லாததன் விளைவாக அமர்வுப் போராட்டங்கள் பொதுத்தன்மைகளை ஒரு குவியத்தை நோக்கிக் குவிப்பதில் சிரத்தை காட்டவில்லை. எனவே எதிர்ப்பு என்பதைத் தாண்டி அவை அடுத்த அடியை எடுத்து வைக்க இயலவில்லை. தூலமான நீண்ட கால இயக்கம் ஒன்றைக் கட்டுவதற்குப் பதிலாக ஒரு இறுக்கமற்ற வலைப்பின்னலாகவே அவர்கள் அமைந்து போயினர்” என்கிற விமர்சனத்தை மார்க்சீயப் பின்னணியில் நின்று விமர்சிப்பவர்கள் முன்வைக்கின்றனர்.

கோரான் தெர்பார்ன் போன்ற மார்க்சீய ஆய்வாளர்கள் அமர்வுப் போராட்டங்களை நகர் சார்ந்தவை எனவும் ஆனால் பிரச்சினைகளோ தேசிய அளவிலானவை, எனவே இவர்களால் பிரசினைகளைத் தீர்க்க இயலாது என்கின்றனர். முகநூல், ட்விட்டர் மூலமாக மக்களைத் திரட்டுவதில் உள்ள ஒரு பலவீனத்தைச் சுட்டிக் காட்டுகிறார் துருக்கிய அமெரிக்க சமூகவியலாளர் செய்னப் துஃபெகி. சமூக ஊடகங்கள் மூலம் மக்களைத் திரட்டுவது எளிது மட்டுமல்ல அதிக உழைப்பு மற்றும் செலவு ஆகியவற்றையும் கோராத ஒன்று. தணிக்கை அச்சமும் அதில் கிடையாது. ஆனால் மக்களை நேரடியாக அணுகி, தணிக்கை முதலானவற்றை எதிர்கொண்டு மக்களைத் திரட்டும்போது மேற்கொள்ளப்படும் உழைப்பு அதற்குரிய பலனைத் தரும். அவ்வாறு திரட்டப்படும் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொள்பவர்களகவும் போராட்டங்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பர் என்கிறார்.

இந்த விமர்சனங்களில் உள்ள நியாயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடுகள் இருக்க இயலாது. ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் அனார்க்கிசவாதிகளுக்கு எதிராக இடதுசாரிகளும் வலதுசாரிகளும் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளவைதான். இவற்றிற்கு மாற்றாக இறுக்கமான அமைப்பு, நெகிழ்ச்சிக்கு இடங்கொடுக்காத தத்துவம் ஆகியவற்றுடன் களம் இறங்கிய இயக்கங்கள் பலவும், ஒரு வேளை அவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலுங் கூட மக்களுக்கு மிக அடிப்படையான ஜனநாயகத்தை வழங்க இயலாதவர்களாகவே இருந்ததுதான் உலக வரலாறு என்பதையும் நாம் மறந்து விட இயலாது.

அமர்வு இயக்கங்களின் கார்பொரேட் எதிர்ப்பு, நவதாராளவாதக் கொள்கைகளின் மீதான தாக்குதல், ஜனநாயக வேட்கை ஆகியவற்றின் அடிப்படையில் ரொம்பவும் romanticize செய்து பார்த்த இடதுசாரிப் பொருளியலாளர்களும் உள்ளனர். Empire எனும் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர்களான மிஷெல் ஹார்ட்டும் அந்தோனியோ நெக்ரியும் அவர்களில் முக்கியமானவர்கள். சாம்ஸ்கி, சிஸெக் முதலானோரும் அமர்வு இயக்கங்களை வாழ்த்தி வரவேற்றனர்.

அமர்வு இயக்கங்களில் சிலர் கொல்லப்பட்டு இருக்கலாம். சிலர் சிறை ஏகி இருக்கலாம். சிலர் அடக்குமுறைகளால் சோர்வுற்று இருக்கலாம். சிலர் அமர்விடங்களிலிருந்து கலைக்கப்பட்ட பின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கலாம். ஆனால் இந்த 99 சத மக்களின் வேட்கைகளை முன்னெடுத்து அமர்ந்த இவர்கள் உருவாக்கிய கார்பொரேட் எதிர்ப்பு, ஜனநாயக வேட்கை ஆகியவற்றைக் கண்டு மீதமுள்ள ஒரு சதத்தினர் கொண்ட அச்சம் அவ்வளவு எளிதாக விலகிவிடப் போவதில்லை.

அமர்வுப் போராளிகள் எழுப்பிய கோபமும் கொந்தளிப்பும் இன்று பல்வேறு தல அளவிலான அநீதிகளுக்கெதிரான போராட்டங்களாக ஆங்காங்கு வெடித்துக் கொண்டுதான் உள்ளன. மிசௌரியின் Take Back St Louis போராட்டம், கல்விக் கடனுக்கெதிரான அமெரிக்க மாணவர் போராட்டம், எகிப்தின் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் முதலியன அமர்வுப் போராட்டங்களின் தொடர்ச்சிதான். அமர்வுப் போராட்டங்களின் ஊடாகத் தான் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் சிலர் கீழிறக்கப்பட்டனர்.

சமீப காலங்களில் ஆயுதம் தாங்கிய, தாங்காத மரபு வழிப் போராட்டங்கள் பலவும் மிகக் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளதை நாம் மறந்துவிடலாகாது. அவற்றினூடாக போராடியவர்கள் மட்டுமின்றி யாருக்காகப் போராடினார்களோ அம்மக்களும் கடுமையான இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அந்தப் பகுதிகளில் மீண்டும் பல காலங்களுக்கு இயக்கங்கள் தலை எடுக்க இயலாத நிலை உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றோடு ஒப்பிடுகையில் அமர்வுப் போராட்டங்களில் போராடியவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் புறக்கணிக்கத் தக்க அளவிற்கு மிக மிகக் குறைவு. மக்களைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு இழப்புகளே இல்லை.

அமர்வுப் போராளிகள் எதிர்பார்த்ததைப்போல பெரிய அளவில் பொருளாதாரக் கொள்கைகள் மாறவில்லை ஆயினும் வங்கிகளிம், கார்பொரேட்களும் முன்னைப்போலத் தங்கள் விருப்பப்படி செயல்படுவதில் சில தயக்கங்கள் ஏற்பட்டுள்ளன அமெரிக்க வங்கிகள் கடன் அட்டைகள் (debit cards) மீது சுமத்த இருந்த கூடுதல் கட்டணத்தை விலக்கிக் கொண்டது ஒரு சான்று.

அமர்வுப் போராட்டங்களை மதிப்பிடும்போது இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.