பாகிஸ்தான் மியான்மரும் அல்ல, இந்தியா அமெரிக்காவும் அல்ல

(2014 ல் இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை)

மியான்மர் நாட்டு எல்லைக்குள் நுழைந்து நாகாலந்து தீவிரவாத அமைப்புகளின் இரு முகாம்களைத் தாக்கி தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான கப்லாங் குழுவைச் சேர்ந்தவர்களை வெற்றிகரமாகக் கொன்று திரும்பிய பெருமிதத்தை மோடி அரசும், பா.ஜ.கவும் இதர இந்துத்துவ அமைப்புகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்தியாவின் “மனநிலையில் ஒரு மாற்றம்” (change in mindset) ஏற்பட்டுள்ளதை இந்தச் “சூடான தாக்குதல்” (hot pursuit) காட்டுவதாகவும், இந்தியாவின் இந்தப் புதிய தோற்றத்தை (new posture) கண்டு கலங்கிப் போயிருப்பவர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதர பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களின் பேச்சுக்களையும், மீசை முறுக்கல்களையும், தொடை தட்டல்களையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தியா இனி “சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை” (zero tolerance) என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவின் தலைமைப் பேச்சாளரும், முன்னாள் இதழாளருமான எம்.ஜே.அக்பர் கூறியுள்ளார். முன்னெல்லாம் இந்தியாவிற்கு எதிராக அண்டை நாடுகளைத் திரட்டி நிறுத்த பாகிஸ்தானால் முடிந்தது எனவும், இன்றைய மோடி அரசின் அணுகல் முறை அதைத் தகர்த்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் இதழாளர் ஒருவரே இப்படிச் சொல்லும்போது விசுவ இந்து பரிஷத்தின் தொகாடியா போன்றோரைக் கேட்கவா வேண்டும். அவர்கள் பங்கிற்கு இன்னும் நிறையச் சடவடால்களை அடித்துள்ளனர்.

எல்லாவற்றையும் விட இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசுத் தரப்புப் பிரகடனங்கள்தான். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், இனி பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இப்படித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இனி யார் வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழைவோம் என்பது இதன் சுருக்கம்.

இன்னொரு துணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். இந்தியப் படைவீரகள் 18 பேர்களைச் சென்ற 4ம் தேதி கொன்றதற்குப் பழி வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை “பிற” நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றுள்ளார்.

இந்த “வீரப் பேச்சுக்களை” காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி முதலானவை சரியாகவே கண்டித்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளும் நிச்சயமாகக் கண்டிக்கும் என நம்பலாம். தங்களின் அமைச்சர்களுக்கு என்ன பேசுவது என்பது குறித்து ‘கவுன்சிலிங்’ கொடுப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

இப்படி அண்டை நாடுகளுக்குள் அவற்றின் ஒப்புதலின்றி நுழைந்து தாக்குதல் நடத்த பன்னாட்டுச் சட்டங்களில் அனுமதியில்லை. எந்தக் காரணங்களுக்காகவும் நாடுகளின் இறையாண்மையை மீற  பன்னாட்டுச் சட்டங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. இந்த விதியை முதன் முதலாக எந்தப் பெரிய கண்டனங்களும் இல்லாமல் மீறியது அமெரிக்காதான். பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்கிற பெயரில் அது பாகிஸ்தானுக்குள் அதன் ஒப்புதலின்றி நுழைந்து ‘ட்ரோன்’ தாக்குதல்களை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்றது, இன்று ISS பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இப்படித் தாக்குதலை நடத்துகிறது, “முன்கூட்டிய தாக்குதல்” (pre emptive strike) என்றெல்லாம் இதற்கு ஒரு தத்துவத்தையும் சொன்னது.

சரி, இப்படி இன்னொரு நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு தாக்கும் பயங்கரவாதிகளை என்னதான் செய்வது? சர்வதேச அழுத்தங்கள், புத்திசாலித்தனமான அரசியல் முதலியவற்றின் ஊடாகத் தான் இதை எதிர் கொண்டாக வேண்டும். 2003ல்  சிக்கிமில் இருந்து கொண்டு தாக்கத் திட்டமிட்ட பயங்கரவாதிகளை சிக்கிம் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து அந்த அரசின் மூலமாகவே அவர்களை இந்திய அரசு அழித்தது நினைவிற்குரியது. இன்னொரு பக்கம் பயங்கரவாதம் வேர் கொள்வதற்கான அடிப்படைப் பிரச்சினைகளில் உரிய அரசியல் தீர்வுகளையும் மேற்கொள்வதும் அவசியம்

1990 கள் தொடங்கி மியான்மருடன் நெருக்கத்தைப் பேணி வருகிறது இந்திய அரசு. ஏராளமான ஒத்துழைப்புகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் இந்தியா மியான்மரில்  மேற்கொண்டு வருகிறது. இன்று ரோகிங்யா முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப் படுவதற்காக மியான்மரை உலகமே கண்டிக்கும்போது இந்தியா இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து மியான்மர் அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் மியான்மர் அரசைக் கொண்டே அந்தத் தீவீரவாத முகாம்களை இந்தியா அழித்திருக்க முடியும்.

இன்றைய தாக்குதல் குறித்து மோடி அரசு இதுவரை முழு விவரங்களையும் வெளியிடவில்லை. இந்த ‘வெற்றிகரமான’ தாக்குதலில் எவ்வளவு பேர்கள் கொல்லப்படார்கள் என்பதிலும் கூட உண்மை தெரியவில்லை. 38 பேர்கள் என ஒரு செய்தி சொல்லுகிறது. இன்னொன்று 70 பேர்கள் என்கிறது, மற்றொன்று நூறு பேர்கள் என்கிறது. தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கப்லாங் குழுவோ தங்கள் பக்கம் யாரும் சாகவில்லை என்கிறது.

மியான்மர் அரசின் ஒப்புதலுடன்தான் அவர்களின் நாட்டிற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம் என இந்தியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் எல்லைக்குள் இந்தியா புகவே இல்லை எனவும், தனது எல்லைக்குள்தான் இந்தியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது எனவும் மியான்மர் அரசு கூறுகிறது. ‘அவர்கள் அப்படித்தானே சொல்லியாக வேண்டும்” என இந்தியத் தரப்பு சமத்காரம் பேசுகிறது.

அடுத்த தாக்குதல் பாகிஸ்தான்தான் என்கிற பொருளில் இந்திய அமைச்சர்கள் பேசியதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது. பாக் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான். “பாகிஸ்தான் மியான்மரல்ல” என இந்தியாவை எச்சரித்துள்ளார். முன்னாள் அதிபர் முஷாரஃப், “பாகிஸ்தான் அணு குண்டுகளை வைத்திருப்பது வைத்துக் கும்பிடுவதற்காக அல்ல” என எச்சரித்துள்ளார். “எங்களைத் தாக்க நினைக்காதீர்கள். எங்களது இறையாண்மையை அத்து மீற முற்சிக்காதீர்கள். நாங்கள் சின்ன நாடு அல்ல. அணுகுண்டுகளை வைத்திருக்கும் மிகப் பெரிய வல்லரசு” என்று அவர் பக்கத்திற்கு சவால்களை இறக்கியுள்ளார்.

இரண்டு விடயங்களை இந்தியா மறந்துவிடலாகாது. 1. இந்தியா மரபுவழிப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை மிஞ்சியுள்ளது உண்மை.. ஆனால் என்றைக்கு அதுவும் அணு குண்டுகளைத் தயாரிக்கத் தொடங்கியதோ அதற்குப்பின் இரு நாடுகளும் சம பலம் உள்ளவையாகிவிட்டன. 2. பாக் இந்தியாவைப் போல ஒரு ஜனநாயக நாடு அல்ல, நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்படாத ஒரு இராணுவம், வலிமையான ஆயுதக் குழுக்கள் என அங்கு அதிகாரம் பிரிந்து கிடக்கிறது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பதை இவர்களில் யாரும் தன்னிச்சையாக்கக் கூடச் செய்துவிட இயலும்.

இந்தியாவின் இந்தப் “புதிய வெளிப்பாடு” குறித்துப் பெருமிதம் கொள்ளுபவர்கள் அப்படியான ஒரு போர் வரும் எனில் அதை இந்தத் துணைக் கண்டம் தாங்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவும் ஒரு போரைத் தாங்கும் நிலையில் இல்லை.

அமெரிக்கா இப்படி நாடு புகுந்து தாக்குதலை நடத்தியதைப் பார்த்து மோடியும் இப்படியான வேலையில் இறங்கினால் சரியான பாடங் கற்றுக் கொள்ளத்தான் நேரிடும். ஒபாமவைப்போல கோட் போட்டுக் கொண்டதால் மட்டுமே மோடி ஒபாமா ஆகிவிட முடியாது.

“பாகிஸ்தான் மியான்மரல்ல” என்பது மட்டுமல்ல, “இந்தியா அமெரிக்காவும் அல்ல”