மணிமேகலை : வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 28                       

தனது பௌத்த அடையாளத்தை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டவாறே நடைபோடும் மணிமேகலைக் காவியம் அவ்வப்போது தான் எவ்வாறு இளங்கோ அடிகளின் சமணப் பின்புலத்தில் ஆக்கப்பட்ட சிலம்பிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருப்பதில்லை என்பதைக் கண்டு வருகிறோம். கண்ணகி மதுரையை எரித்ததைக் கற்புக் கனலின் பெருமைக்குரிய ஒரு அடையாளமாகவோ, இல்லை அரச அநீதிக்கு எதிரான ஒரு வீரச் செயலாகவோ சாத்தனார் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

பேத்தியை இவ்வாறு சந்திக்க நேர்ந்ததைத் தன் நல்வினைப் பயனாகச் சொல்லி மகிழும் மாசாத்துவன் அக்கணமே மதுரை மாநகர் எரித்தழிக்கப் பட்டதை கண்ணகியும் கோவலனும் செய்த தீவினையின் விளைவுதானே ஒழிய அதொன்றும் பெருமைக்குரிய ஒன்றல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறான். அதுமட்டுமல்ல அதற்கோர் பிராயச்சித்தம் என்பதே போல புத்த தேவனின் அன்பு கொள்ளும் அறத்திற்கு அருகதை உடையவானானேன் எனத் தான் துறவு மேற்கொண்டு பௌத்தம் தழுவியதைச் சொன்னான். வணிகத்தின் ஊடாக வாழ்நாளெல்லாம் பொருளீட்டி வாழ்ந்த அவன், அப்படி ஈட்டிய பொருளும், அந்த வாழ்வும் வெறும் மாயமே என்பதை உணர்ந்து பௌத்த அறத்தை ஏற்று தவ வாழ்வைத் தொடங்கியதையும் சுட்டிக் காட்டினான். தொடர்ந்து அவன் இன்னொரு வரலாற்றையும் சொல்லலானான். அது:

முன்னாளில் மலை உச்சியில் உள்ள சரிவில் தன் வில் இலச்சினைப் பொறித்த குடக்கோச் சேரலாதன் எனும் குட்டுவ வம்சத்தில் பிறந்த மன்னன் ஒருவன் இருந்தான். மலை உச்சியில் உள்ள சரிவில் இவ்வாறு தம் வெற்றிச் சின்னத்தைப் பொறிப்பது என்பது அக்கால வழமைகளில் ஒன்று. பல்லவ மன்னர்கள் நவிரமலைச் சரிவில் தம் வெற்றிச்சின்னத்தை இவ்வாறு பொறித்ததை பல்லவர்களின் திருவண்ணாமலைக் கல்வெட்டு குறிப்பதை உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

the-first-10-steps-adams-peak-sri-lanka

அவ்வாறு இலச்சினைப் பொறித்த குடக்கோச் சேரலாதன் ஒருநாள் தனது உரிமைச் சுற்றத்துடன் வந்து இந்தச் சோலையில் இன்பமாய் இருந்த வேளையில் இலங்கைத் தீவில் உள்ள “சமனொளி” மலையை வலஞ்செய்து வணங்கி வந்த தரும சாரணர்களும் மேக மண்டலத்திடையே பறந்து திரியும் வல்லமை பெற்றோருமாகிய சிலர் அவ் அரசனுக்கு நல்வினைக்குரிய “ஏது” நிகழ்வதை அறிந்து அவ்விடத்தே வந்திறங்கினர்.

மாமன்னர் அசோகர் பௌத்த தர்மத்தைப் பரப்புதற்பொருட்டு அனுப்பி வைத்த அறவோரைத் தரும சாரணர் என்பர். அவ்வாறான தரும சாரணர்கள் தங்குவதற்கு ஆங்காங்கு கல்லாலாகிய இருப்பிடங்கள் அமைப்பதும் அன்று வழக்கமாக இருந்தது. அப்படியான ஒரு கற்றலத்தில் அவர்கள் தங்கினர்.

இங்கு குறிப்பிடப்படும் குடக்கோச் சேரலாதன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. இவன் வெற்றிச் சின்னம் பொறித்ததும் இமயத்தில் அல்ல. இவன் பல தலைமுறைகளுக்கு முந்திய ஒரு சேர மன்னன். இது குறித்து “உனது புகழ்பெற்ற தந்தைக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னோன் ஆகிய ஒரு கோவலன் என்பான் அப்போதைய சேரமன்னனை எந்நேரமும் விட்டுப் பிரியாத காதற்பாங்கனாக இருந்தான்” என மாசாத்துவன் கூறுவதை அடுத்துக் குறிப்பார் சாத்தனார்.

இலங்கைத் தீவிலுள்ள இந்தச் சமனொளி மலை என்பது ரத்தினபுரி மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் உள்ள ஒரு மலை உச்சி. ஒரே நேரத்தில் சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள், ஆதாம் – ஏவாளை இறைவனால் படைக்கப்பட்ட முதல் மானுடர்களாக ஏற்கும் கிறிஸ்தவ – இஸ்லாமிய செமிடிக் மதத்தினர் என அனைத்து மதத்தினராலும் புனிதமாகக் கருதப்படும் ஒரு புண்ணிய மலைத்தலம் அது. கால் தட வடிவில் அமைந்த இம்மலை உச்சி பௌத்தர்களால் புத்தரின் “ஸ்ரீ பாதம்” எனவும், இந்துக்களால் “சிவனொளி பாதம்” (சிவ பாத மலை) எனவும், கிறிஸ்தவ – முஸ்லிம் மக்களால் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மானுடனான ஆதமின் பாதமாகவும் (Adam’s Peak) ஏற்று வணங்கப்படும் ஒரு புனிதத் தலம். சுற்றிலும் மலைவனம் சூழ்ந்த ஒரு அழகிய சுற்றுலாத்தலமும் கூட.

பௌத்தர்களின் பாலி நூலாகிய தீபவம்சத்தில் (4ம் நூ) ‘சமந்த கூடம்’ (சமணகூட பர்வதம்) என இது குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்ததின் இன்னொரு புனித நூலான மகாவம்சத்தில் (5ம் நூ) புத்தர் இங்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. கி.பி 411 -12 காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த சீனப் பயணி ஃபாகியானும் ஸ்ரீபாத மலை குறித்துப் பதிவு செய்துள்ளார். இத்தாலிய வணிகனான மார்கோபோலோவும் (1298) இதை ஒரு முக்கிய புனிதத் தலமாகக் குறிப்பிடுகிறார். எனினும் அங்கே புத்தரின் திருப்பாதங்கள் இருந்ததாக அவர் குறிப்பிடவில்லை. 1344ல் இம் மலையில் ஏறிய அரேபியப் பயணியான இப்ன் பதூதா இதனை “சரண் தீபம்”  (Sarandeep) எனக் குறிப்பிடுவதோடு உச்சியில் ஏறுவதற்கு இரு புறங்களிலும் இரும்புச் சங்கிலி பொருத்தப்பட மலைப்பதை ஒன்று இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பௌத்தர்கள் இப்புனித மலை உச்சியை புத்தரின் இடதுகால் பதிவு எனவும், சிங்கள பவுத்தர்களால் வணங்கப்படும் “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் அழைப்பிற்கிணங்க அங்கே சென்ற புத்த பகவன் நினைவாக இட்டுச் சென்ற பதிவு அது எனவும் நம்புகின்றனர். இதன்பொருட்டே இம்மலை உச்சிக்குச் ‘சமனொளி’ எனும் பெயரும் ஏற்பட்டது.

இராவணனின் தலைநகராகிய திரிகூடம் இதுவே என இந்துக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு. ஈழத்துச் சைவ நூல்களான ‘தட்சிண கைலாச மான்மியம்’ மற்றும் “திருக்கரைசைப் புராணம்’ ஆகியன இச்சமனொளி மலையை சைவ அடையாளங்களுடன் குறிப்பிடுகின்றன.

விஜயபாகு மன்னன் (1065 -1119) சமந்தகூட மலையின் வழிபாட்டிற்காக ‘கிளிமலை’ எனும் கிராமத்தை ஒதுக்கியதற்கான கல்வெட்டுச் சான்றும் உண்டு.

இப்படி இலங்கையில் உள்ள மூன்று முக்கிய மதத்தினராலும் புனிதமாகக் கருதப்படுவது இந்தச் சமனொளி மலை.. தற்போதுள்ள இன முரண்பாட்டின் பின்னணியில் பவுத்த அடையாளமான ஸ்ரீபாதம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் போக்கு இன்று உருவாகியுள்ளது.

முன்னதாக பாத்திரம் பெற்ற காதையில் மணிபல்லவத்தீவில் உள்ள மாணிக்கப் பீடிகையைக் காவல் காக்கும் தெய்வமாகிய தீவதிலகை, “இந்த மணிபல்லவத் தீவிற்கு அப்பால் இரத்தினத் தீவகம் உள்ளது. அங்கு ஓங்கி உயர்ந்த சமந்த மலையின் உச்சியில் அறத்தின் அடையாளமான புத்ததேவனின் பாதபீடிகை உள்ளது. அது தன்னை அடைந்தாரைப் பிறவிக் கடலிலிருந்து கரை சேர்க்கும் மரக்கலத்தைப் போன்றது” (11: 21-25) எனக் கூறுவதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

ஒன்பது தலைமுறைக்கு முந்திய இச் சேரமன்னன் சமனொளி மலையை வலஞ்செய்து வணங்கி வந்த அச் சாரணர்களைத் தொழுத்து போற்றினான். முன் செய்த தவம் அவனுக்கு அந்தப் பணிவையும் பண்பையும் அளித்தது. அவர்களின் தாமரைப் பாதங்களை நீரினாற் கழுவி, அறுசுவை உணவையும் அளித்து தன் அவையோருடன் கூடி அவர்களைப் போற்றிச் சிறப்புகள் செய்து வணங்கினான். அச் சாரணர்களும் பிறப்பினால் வரும் துன்பம், பிறவாமையினால் வரும் இன்பம், அறமுதல்வனாகிய புத்தன் அருளிய வாய்மை ஆகிய அரிய இன்பம் பயக்கும் அமிழ்தம் ஒத்த அறவுரைகளை, அரசனது பிறவித் துயர் நீங்குமாறு அவன் செவியிற் சொரிந்தனர்.

தொடர்ந்து பேத்தியிடம் மாசாத்துவன் கூறியது: “உன் தந்தை கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னோனாகிய ஒரு கோவலன் இருந்தான். மன்னவன் குடக்கோச் சேரலாதனை விட்டு என்றும் பிரியாத அன்புடை நண்பனாக அவன் இருந்து வந்தான். மன்னனுக்கு தருமசாரணர் கூறிய நல்லுரைகளை எல்லாம் தானும் கேட்டு, தன் முன்னோர் முறையாக ஈட்டி வைத்தப் பெருஞ் செல்வத்தோடு தான் முயன்று சேர்த்த செல்வத்தையும் ஏழே நாட்களில் இரவலர்க்கு உவந்து அளித்தான். அதன்பின் வணக்கத்திற்குரிய தவ வாழ்வினை அவன் தேர்ந்து கொண்டான். அவன் புத்ததேவருக்கு எழுப்பிய வானளாவ ஓங்கிய வெண்ணொளியுடன் திகழ்ந்த சைத்தியம் இவ்வுலகில் உள்ளோருக்கெல்லாம் துன்பம் நீக்குவதாக அமைந்தது. அதனைக் கண்டு, தொழுது ஏத்தும் தீராக் காதலுடன் இங்கு வந்தேன். இந்நகரத்தே உள்ள நல்லறிவினரான தவத்தோர்கள் காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொள்ளும் எனக்கூறியதைக் கேட்டு அங்கு போக வேண்டாம் எனக் கருதி இன்கேயே இருக்கிறேன்.” – எனத் தான்  கச்சிமாநகரில் தங்கி இருப்பதற்கான பின்னணியைக் கூறினான்.

மர்கொ பொலொ

தொடர்ந்து அவன், “நன்னெறியில் சென்று கொண்டுள்ள மணிமேகலையே இன்னும் நான் சொல்வதைக் கேள்! தீவினையின் விளைவாய் கொலையுண்டு இறந்த உன் தந்தை, அவன் முன் செய்த தவப்பயனால் தேவருலக வாழ்வைப் பெறுவான். ஆங்கவன் வினைப்பயனை இன்னும் அனுபவித்துக் கழிந்தபின், புத்தர் போதிமரத்தடியில் அருளறத்தைப் போதிக்கும் நாளிலே தவம் பூண்டு மனைவி கண்ணகியோடு தானும் கயிலையம்பதியில் புத்தனின் அருளுரை கேட்டு நிர்வாணம் அடைவான் எனப் பின் நிகழ உள்ள அற்புதங்களை அறிந்தோர் கூற நானும் உணர்ந்தேன். மயிலே! அந்நாளில் நானும் சென்றிருந்து புத்ததேவனின் அவ் அறவுரையைக் கேட்பேன்”- என்றான் மாசாத்துவன்.

இப்புவியில் பிறந்தோர் யாவரும் அவர்களின் வினைப்பயனைத் துய்த்து முடித்தல் வேண்டும். முன்வினைப் பயனால் அவர்கள் இடையில் இறக்க நேரிடினும் அவர்கள் தீர்க்காது விட்ட எஞ்சிய தீவினைப் பயன்களை அடுத்த பிறவிகளில் அனுபவித்தே ஆக வேண்டும். முந்திய பிறவியில் செய்த நல்வினைப் பயன்களைத் தொடர்ந்து அப்பிறவியில் கழிக்காமல் விட்ட தீவினைப் பயன்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். வினைப் பயனால் கொலையுண்ட கோவலன் அப்பிறவியிற் செய்த நல்லறங்களின் விளைவாய் தேவரிற் தோன்றியபோதும் அங்கும் வினைப்பயனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது கருத்து. கோவலனாய்ப் பிறந்து வெட்டுண்டு மாண்ட இப்பிறவியில் அவன் நல்வினையே செய்தான் எனக் கொள்வதற்கு சிலப்பதிகாரத்திலிருந்து உரையாசிரியர்கள், “இம்மைச் செய்தன யானறி நல்வினை” (சிலம்பு 15:61) என்கிற கூற்றை மேற்கோள் காட்டுவர். இப்பிறவியில் நானறிந்தவரை நல்வினைகளையே ஆற்றியுள்ளேன் என்பது பொருள். “மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம். அவ்வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகையாயினும் எய்துதல் ஒழியாது” (சிலம்பு 26 35-37) என்கிற சிலப்பதிகார மேற்கோளும் மணிமேகலையின் இக்கருத்துடன் உடன்படுதலைக் காண முடிகிறது. பௌத்தமும் சமணமும் ஒன்றுபடும் புள்ளிகளில் ஒன்றாக இவற்றைக் கருதலாம்.

தொடர்ந்து, “அதற்குப் பின் நடக்க இருப்பதை எல்லாம் தூணிலே அமைந்திருக்கும் துவதிகன் எனும் அக் கந்திற்பாவையின் சொற்களால் நீ முன்னமே அறிந்தவைதானே. தவநெறியினரான அறவணர் மூலம் நானும் அதை அறிந்தேன். நின் அறத்திற்குரிய ஏது நிகழ்ச்சிகள் வாய்க்கப்பெறும் இடம் காஞ்சிமாநகர் என்பதால் அந்த மாதவரும் அங்கே சென்றுள்ளார். உன் அன்னையரும் அவருடன் அக் கச்சிமாநகருக்கே சென்றுள்ளனர். இது மட்டுமன்று. இன்னொன்றையும் கேள். பொன்வண்ணக் கோட்டையை உடைய காஞ்சி நாடு இன்று தன் அழகனைத்தையும் இழந்து நிற்கிறது. உயிர்கள் செத்தழிகின்றன. மழைவளம் பொய்த்துள்ளது. தவசிகளுக்கு உணவளிப்போர் இன்மையால் அவர்கள் இந்த நகரை வந்தடைந்துள்ளதை நீயும் காண்கிறாய். அரிய உயிரைக் காக்கும் மருந்து போன்றவளே!  இப்போது உன் கடமை அந்நகரத்தின் கண் மழை தரும் முகிலெனத் தோன்றி உயிர்களைக் காப்பாற்றுவதே”- என முடித்துக் கொண்டான் அருந்தவம் ஏற்ற மாசாத்துவன்.

(அடுத்து தவத்திறம் பூண்டு அறவணரிடம் மணிமேகலை தருமம் கேட்ட வரலாறு)