“சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” : சொல்கிறது பா.ஜ.க அரசு

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னும் உறுதியாகத் தங்களின் இந்துத்துவச் செயல் திட்டத்தைக் களத்தில் இறக்குவார்கள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். காஷ்மீருக்கான (ஏட்டில் மட்டுமே உள்ள) சிறப்புரிமைகளை நீக்குவது, முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மை நிலைக்கு முடிவு கட்டுவது முதலான அம்சங்களில் முதலில் நூல் விட்டுப் பார்த்தார்கள்.

அப்புறம் இந்தி மொழியை நடைமுறை ஆட்சி மொழியாக்குகிற வேலையைக் தொடங்கிப் பார்த்தார்கள். வழக்கத்துக்கு மாறாக நரேந்திர மோடி தன் பதவி ஏற்பு உறுதிமொழியை இந்தியில் ஒலித்தார். வெளி நாட்டுப் பிரமுகர்களுடன் இந்தியில் பேசுவது என்கிற நிலை எடுத்தார். பூடான் நாடாளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றினார். அதிகாரிகள் கோப்புக் குறிப்புகளை இந்தியில் எழுத அறிவுறுத்தப்பட்டது; அதிகமாக இந்தியைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்குப் பரிசளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டது.

அடுத்து கல்வித் துறையில் அவர்கள் கவனம் குவிப்பார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். கல்வித் துறை, குறிப்பாக வரலாறு மற்றும் சமூக அறிவியல் சார்ந்த நிறுவனங்களை இந்துத்துவ மயமாக்குவது என்பது அவர்களின் பிரதான செயல்பாடுகளில் ஒன்று. வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் மத்தியில் வரலாறு குறித்தத் தவறான புரிதல்களை உருவாக்குவது அவர்களுக்கு அவசியமானது.

சென்ற முறை நாடாள வாய்ப்புக் கிடைத்தபோது அவர்கள் இந்ததுறையில் செய்த சில மாற்றங்களை நினைவுகூர்வோம்.

முதலில் கல்வி சார்ந்த உயராய்வு நிறுவனங்களில் பணியாற்றிய தகுதி மிக்க அறிஞர்களை நீக்கி அந்த இடங்களை தகுதியற்ற இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பினர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு (ICHR)) பி.ஆர். குரோவர், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு (ICSSR) பி.எல். சோந்தி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்திற்கு (NCERT) ஜே.எஸ்.ராஜ்புட் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப் பட்டனர். வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றிய 18 தகுதிமிக்க அறிஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவை நாடெங்கிலும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்குள்ளாகியது.

இவர்களின் முக்கிய தகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு நெருக்கமானவர்கள் என்பதே. எடுத்துக்காட்டாக சோந்தி பாரதீய ஜனசங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். குரோவர் தன் துறையில் எந்தச் சாதனைகளையும் செய்யாதவர். எந்த ஆதாரங்களும் இன்றி பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் எனவும், 1992ல் மசூதி (தானாக) இடிந்து விழுந்தது எனவும் எழுதியவர்.

NCERT அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் அமர்த்தப்பட்ட கே.ஜி.ரஸ்தோகி என்பவரின் நியமனம் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. ஆர்.எஸ்,எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட அவரது சுய சரிதை 1998ல் வெளிவந்தது.. முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ் ‘பிரச்சாரக்’ ஆக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார். அதில் ஒரு சம்பவம்:

புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி. இனி அவரது சொற்களில்:

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)

#############
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆண்டுதோறும் குரு தட்சணை செலுத்தும் விசுவாசிகளில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி (வாஜ்பேயி அமைச்சரவையின் கல்வி அமைச்சர்) பதவி ஏற்ற கையோடு மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் வழிகாட்டி உரை நிகழ்த்த அழைக்கப்பட்டவர் சிட்லாங்கியா என்ற ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய ஒரு தொழிலதிபர். அவ் அமைப்பின் கல்விக் குழுவான வித்யா பாரதி என்கிற அமைப்பில் வாசித்து ஒப்புதல் பெற்ற ஒரு இந்துத்துவக் கல்வித் திட்டத்தை அவர் வாசிக்க முனைந்தபோது தேசிய ஜனநாயக்க் கூட்டணியச் சாராத கல்வி அமைச்சர்கள் வெளி நடப்புச் செய்தனர். அந்த உரையை ரத்து செய்வது தவிர ஜோஷிக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று.

பல்கலைக் கழகங்களில் ஜோதிடம், வேதக் கல்வி, மதிப்பீட்டுக்கல்வி என்கிற பெயரில் மதவாதம் ஆகியவற்றைப் பாடங்களாக்கவும், பட்ட வகுப்புகளாகவும் ஆக்குகிற பணியை ஜோஷி தொடங்கிய போது மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன.

#########

திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளும், எழுதியவர்களின் தகுதிக் குறைவால் ஏற்பட்ட பிழைகளும் மலிந்த வரலாற்றுப் பாட நூல்களை NCERT நிறுவனம் மூலம் வெளியிட்ட போது நாடெங்கிலும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. அந்தத் திரிபுகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்திப் பல மொழிகளிலும் நூல்கள் எழுதப்பட்டன. தமிழிலும் அப்படி ஒரு நூல் எழுதப்பட்டதோடு (‘பாட நூல்களில் பாசிசம்’) முன்னாள் துணை வேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், பேரா.ஜவாஹிருல்லாஹ், NCERT அமைப்பின் முன்னாள் தலைவர் அர்ஜுன் தேவ் ஆகியோர் பங்குபெற்ற மாநாடொன்றும் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த வரலாற்றுத் திரிபுகளுக்கும் கல்வித்துறையை இந்துத்துவமயமாக்கும் முயற்சிக்கும் எதிராக சென்னையில் ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதில் நான், முன்னாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், டாக்டர் சிவகுமார், திருமாவளவன், எம்.எஃப்.கான் முதலான பேராசிரியர்கள் தவிர சி.பி.அய், சி.பி.எம், காங்கிரஸ் முதலான கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றது குறிப்பிடத் தக்கது.

சென்னை மட்டுமின்றி மதுரை, குற்றாலம், திண்டுக்கல், வாணியம்பாடி முதலான இடங்களிலும் ஆசிரியர்கள் மத்தியில் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிராகக் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவற்றில் முன்னாள் துணைவேந்தர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.

###############

இதே நேரத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் சில ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகமாகக் காட்டும் முயற்சியை மேற்கொண்டனர். மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த நாடோடி ஆரியர்களையும், அவர்கள் தம்மோடு கொணர்ந்த பூர்வ சமஸ்கிருத மொழி, குதிரை, சக்கர வாகனம் ஆகியவற்றை இவற்றோடு எள்ளளவும் தொடர்பற்ற சிந்து வெளியுடன் இணைக்க வேண்டிய தேவை இந்துத்துவவாதிகளுக்கு இருந்தது. இந்த நாட்டை ‘ஆரியவர்த்தம்’ எனவும், சமஸ்கிருதத்தை ‘மொழிகளின் தாய்’, ‘தேவ பாஷா’ என்றெல்லாமும் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அவர்களுக்கு இவை எதுவும் இந்த மண்ணுக்கு உரியவை அல்ல, மத்திய ஆசியாவிலிருந்து வந்தவை என்பது இன்றளவும் எரிச்சலூட்டும் உண்மைகள். தவிரவும் அவர்களால் ‘மிலேச்சர்’களாக அடையாளம் காணப்பட்ட உள் நாட்டு நாகரிகம் ஒன்று ஆரிய வருகைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே சிந்து வெளியில் ஓங்கியிருந்தது என்கிற வரலாறும் அவர்களைப் பொருத்த மட்டில் தொண்டையில் சிக்கிய ஒரு முள்.
3000 ஆண்டுகளுக்கு முன் நாடோடிகளாக வந்து கங்கைச் சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகளுடன் கலந்து இந்த மண்ணுக்கு உரியவர்களாகவே மாறிப்போன ஆரிய வம்சாவளியினரை மிலேச்சர்களாகவோ, அந்நியர்களாகவோ காணும் அரசியலோ பண்பாடோ நமக்குக் கிடையாது. ஆனால் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்றவர்களை அந்நியர்களாகக் காட்டி அரசியல் நடத்தும் இவர்களுக்கு ஆரியமும் பூர்வ சமஸ்கிருதமும் வெளி நாட்டுச் சரக்குகள் என்கிற உண்மைகள் தொண்டையில் சிக்கிய முள்தானே.

எனவே அவர்கள் சிந்துவெளி நாகரிகம் அழிந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் கங்கைச் சமவெளியில் உருவான வேதங்களும், குடியமர்ந்த ஆரியர்களும், ‘மொழிகளின் தாய்’ ‘தேவ பாஷா’ என்றெல்லாம் கொண்டாடப்படும் சமஸ்கிருதமும், ஆரியர்கள் கொண்டு வந்த குதிரைகளும், சக்கர வாகனங்களும் சிந்து வெளியிலேயே இருந்ததாக “நிறுவ” வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

அதை எப்படிச் செய்வது? இதுகாறும் அஸ்கோ பர்போலா போன்ற இத்துறை வல்லுனர்களாலும் கூட வாசிக்க இயலாத சிந்துவெளி முத்திரைகளை தாம் வாசித்துவிட்டதாகவும், அவற்றில் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்லிவிடலாம். இந்த ‘ஐடியாவை’ உடனடியாகச் செயல்படுத்தினர் அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு என்.ஆர்.ஐ இந்திய ‘ஃப்ராடுகள்’. கடல் கடந்த இந்துத்துவர்களான இவர்களை நான் எத்தர்கள் எனச் சொல்வது கோபத்தால் அல்ல. இவர்கள் செய்தது ஃப்ராட் என்பதை மிஷேல் விட்ஸெல், ஸ்டீவ் ஃபெர்மர் என்கிற இத்துறை வல்லுனர்கள் விரிவான ஆய்வொன்றின் மூலம் நிறுவினர் (பார்க்க: அ.மார்க்ஸ், ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு மற்றும் http://www.safarmer.com/fsw2.pdf).
இது நிற்க. இந்துத்துவவாதிகளும் களத்தில் இறங்கினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சர் சி.பி இராமசாமி அய்யர் நிறுவனம் இந்தப் “புதிய கண்டுபிடிப்புகளை” விளக்கி வரலாற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றைத் தம் அலுவலகத்தில் நடத்தினர். இதைக் கேள்விப்பட்ட எங்கள் குழு இவற்றை அமபலப்படுத்தி இரவோடு இரவாக ஒரு நான்கு பக்க அறிக்கை தயார் செய்து அடுத்த நாள் காலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு முன் சாலையில் நின்று பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களிடம் விநியோகித்தது. அமைதியாக விநியோகித்துக் கொண்டிருந்த கருப்புப் பிரதி நீலகண்டன், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் செயல்படும் தோழர் நட்ராஜ் ஆகியோரை அந் நிறுவனத்தினர் உள்ளே இழுத்து, ஒரு அறியில் பூட்டி வைத்துப் போலீசில் ஒப்படைத்தனர். செய்தி அறிந்து நான், பேரா.எம்.எஃப்.கான், ‘தீக்கதிர்’ நாளிதழ் உதவி ஆசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் ஆகியோர் தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்று ஒரு நாள் முழுக்க வாதாடி அவர்களை வழக்கில்லாமல் வெளியே கொணர்ந்தோம்.

இந்த அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வது இந்தத் தருணத்தில் அவசியம் என்பதால் இவற்றைச் சொல்ல வேண்டி நேர்கிறது.

########

இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. சென்ற வாரத்தில் இரு நிகழ்வுகள்.

1.இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் இப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ராணி, எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் என்பவரை நியமித்துள்ளார். தகுதியற்ற நபர் என வலாற்றறிஞர் ரொமிலா தப்பார் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.

சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு – ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார். இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாக வரலாற்றில் செயல்பட்டு வந்துள்ளது எனவும் இது குறித்து எந்தத் தரப்பினரிடமிருந்தும் எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லை எனவும் அக் கட்டுரையில் அவர் கூறுகிறார். வரலாற்றறிஞர் டி.என்.ஜா இதுபற்றி அடித்துள்ள ‘கமென்ட்’: “அவருக்குத் தெரியாது போல. .அந்த ‘சிஸ்டம்’ இப்பொழுது இருந்தால் மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென.”

2. சி.பி.எஸ்.சி அமைப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டும் எனத் தனது 15,000 பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதற்குச் சொல்லப்பட்டுள்ள காரணங்களில் ஒன்று “சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” என்பது. இன்னொரு காரணம் அதுதான் இந்திய வரலாற்றுடன் பிணைந்துள்ள மொழியாம்.

இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்தே கிளைத்தன எனவும், அது தேவ பாஷை எனவும் மற்றவை நீச பாஷை எனவும் இங்கு பார்ப்பனர்கள் சொல்லி வந்ததற்கு ஆப்பு வைத்தது சென்ற நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட இரு மொழி இயற் கண்டுபிடிப்புகள், சர் வில்லியம் ஜோன்ஸ், ஃப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், பிஷப் கால்டுவெல் ஆகியோரின் மொழி இயல் ஆய்வுகள்தான் அவை. பூர்வ சமஸ்கிருதத்தின் தோற்றத்தை இந்திய மண்ணைக் காட்டிலும் இந்தியாவுக்கு வெளியில்தான் காண வெண்டுமென நிறுவினார் ஜோன்ஸ் (1786). ஐரோப்பிய மொழிகளான கோதிக், செல்டிக், இதாலி, பிரெஞ்சு முதலான மொழிகளுடனேயே அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். பூர்வ சமஸ்கிருதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் பயிலப்படும் மொழிகளில் எல்லோரும் அறிந்த முக்கிய மொழிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை. சமஸ்கிருதம், இந்தி, பாலி, பிராகிருதம் முதலான மொழிகள் “இந்தோ ஆரிய” மொழிக் குடும்பத்தச் சார்ந்தவை, அவற்றிற்கும் இந்தியாவில் நிலவும் இன்னொரு மொழிக் குடும்பமான திராவிட மொழிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஆரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலான மொழிகளுக்கிடையேயான ஒப்புமையை முதன் முதலில் ஆய்வுரையாகத் தந்தவர் சென்னைக் கோட்டையில் பணியாற்றிய ஃப்ரான்சிஸ் எல்லிஸ் ஒயிட் எனும் ஆங்கில அதிகாரி (1816). பின் அதை ராபெர்ட் கால்டுவெல் விரிவாக்கினார் (1856).

இவை இன்று மொழியியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகள். உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. ஆக சமஸ்கிருதம் எந்த வகையிலும் “மொழிகளின் தாய்”, அல்லது குறைந்தபட்சம் “இதிய மொழிகளின் தாய்” என அழைக்கப்படுவதற்குத் தகுதி உடையதல்ல. அவ்வாறு சொல்வது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, தமிழ் போன்ற தனித்துவமும், நீண்ட வரலாறும், ஏராளமான இலக்கியச் செல்வங்களும் உள்ள மொழிகளை இழிவு செய்வதும் கூட

ஆனால் பா.ஜ.க அரசு இதைத் தவறுதலாகச் செய்துவிடவில்லை. திட்டமிட்டுத்தான் செய்கின்றனர். சென்ற ஆட்சியிலும் 1999-2000 ஆண்டு சமஸ்கிருத ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் இரண்டாவது வாரம் சமஸ்கிருத வாரமாக அனுசரிக்கப்பட்டது. 2001ம் ஆண்டில் மாபெரும் சமஸ்கிருத மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 2000 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வாஜ்பேயி, ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுக்களில் சமஸ்கிருதம் தொடர்பான அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. சுருக்கம் கருதி இங்கு தவிர்க்கப்படுகிறது. இந்துத்துவமும் சமஸ்கிருதமும் பிரிக்க இயலாத ஒன்று, இந்துத்துவத்தை நிலைநாட்ட சமஸ்கிருத மேன்மையை நிறுவவேண்டும் என்பதே அப் பேச்சுக்களின் சாரம்.

வழக்கிழந்த சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்ப்பித்து “அன்றாட பேச்சு மொழி” யாக ஆக்க இயலாவிட்டாலும் மக்கள் மனத்தில் “மொழிகளின் தாய்” ஆக நிறுவி விவது அவர்களின் பெரு விறுப்பு. 2004ல் ஆட்சி மாறியதன் விளைவாக அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை.

இன்று அவர்கள் ஆவேசமாகக் களமிரங்கியுள்ளனர்.

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.