அசோகரின் மதம் பவுத்தம்தானா?

(நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 4 -ஏப்ரல் மாத ‘தீராநதி’ யில் வெளி வந்துள்ள கட்டுரை. அசோகர் ஏன் ‘தம்மம்’ என்பதோடு நிறுத்திக் கொண்டார்? ஏன் அவர் தெளிவாகவும் ஐயத்திற்கிடமின்றியும் பவுத்தத்தை முன்வைக்கவில்லை?- இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது அத்தனை எளிதல்ல)

அரசுருவாக்கம் (state formation) பற்றி அறிந்தோர்க்கு அசோகர் ஒரு வகையில் புதிர்தான். ஒரு அடக்குமுறைக் கருவியாக அரசைப் பார்ப்போருக்கு அசோகரின் சாசனங்களில் வெளிப்படும் மனித நேயமும், மக்கள் நலமும் விளக்க இயலாத சவால்களாக அமைகின்றன.  அசோகரது ஆளுகையையும் அவரது கால அரசுருவாக்கத்தையும் விளங்கிக் கொள்ள நாம் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அவரது அரசின் செயற்பாடுகளையும் அணுகல்முறைகளையும் பார்த்தாக வேண்டும்.. அவரது ஆளுகையைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு உள்ள மிக முக்கியமான ஆதாரம் அவரது சாசனங்கள்தான். அவற்றில் நாம் ஒரு அம்சத்தை மட்டும் சென்ற இதழில் பாத்தோம். பிறவற்றையும் தொகுத்துக் கொள்வோம்.

முதலில் அன்றைய இந்தியத் துணைக் கண்டத்தில் செல்வாக்குடன் விளங்கிய கருத்தியல்களில் அசோகரை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இங்கு யாருக்கும் ஒரு ஐயம் தோன்றலாம். அசோகர் புத்த தம்மத்தை ஏற்றுக் கொண்டவர் என்கிறபோது ஏன் இந்தக் கேள்வி?

இரண்டு பிரச்சினைகள் இதில் உள்ளன. அசோகர் ‘தம்மம்’ எனச் சொல்வது புத்த தம்மத்தைத் தானா என்கிற கேள்வியைச் சிலர் எழுப்புகின்றனர். அதற்கு முதலில் விடை காண வேண்டும். அதற்குப் பின்னரே அன்றைய  சமூகச் சூழலில் புதிதாக உருவான ஒரு பேரரசுக்கு அவர் தேர்வு செய்த கருத்தியல் எப்படிப் பொருத்தமாக இருந்தது என்பதை யோசிக்க முடியும்.

அசோகர் குறித்த பதிவுகள் பிராமண நூல்களில் மிகக் குறைவு. அவரை ஒரு பேரரசராக ஏற்றுக் கொள்ளும் தகைமை அவற்றில் இல்லை. அதே நேரத்தில் சிரமண மதங்களில் ஒன்றான பவுத்தப் பதிவுகளில் அசோகர் மிகப் பெரிய அளவில் போற்றப்படுகிறார். இங்கே அவர் சக்கரவர்த்தி அசோகர். புத்தரின் காலத்திற்கும் அசோகரின் காலத்தில் கூட்டப்பட்ட மூன்றாம் பவுத்தப் பேரவைக்கும் இடைப்பட்ட காலத்தில் பவுத்தம் அப்படி ஒன்றும் மிகப்பெரிய இயக்கமாக கங்கைச் சமவெளியிலோ துணைக்கண்டத்தின் பிற பகுதிகளிலோ வளர்ந்திருக்கவில்லை. எனினும் இக்கால கட்டத்தில் பவுத்தம், சமணம், ஆசீவகம் உள்ளிட்ட சிரமண மதங்கள் மூன்றும் ஒட்டு மொத்தமாக பிராமணக் கருத்தியலையும் சடங்குகளையும், தத்துவ விசாரங்களையும் எதிர்கொள்ளத் தக்கவையாக வளர்ந்திருந்தன. சிரமணத்திற்கும் பிராமணத்திற்கும் இடையிலான பகையை பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான பகையுடன் பதஞ்சலி ஒப்பிடுவது குறிப்பிடத் தக்கது.

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் உருவான முதற் பேரரசுகளில் ஒன்றான மகதப் பேரசைப் பொறுத்த மட்டில் அது தோன்றிய காலத்திலிருந்தே சிரமண மதங்களைச் சார்ந்தே இருந்து வந்தது. பகைகொண்ட இரு பெரும் மதக் கருத்தியல்களுக்கும் இடையில் சிரமண அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட பேரரசாக நாம் மௌரியப் பேரரசை அடையாளப்படுத்தும் அதே நேரத்தில் அப்படியான ஒரு தேர்வை ஒரு மிகப் பெரிய எதிர் கலாச்சார நடவடிக்கையாகப் பார்க்கவும் முடியாது. அன்று செல்வாக்குடன் விளங்கிய இரு போக்குகளில் சிரமண அணுகல்முறையைத் தேர்வு செய்த அரசாக மௌரியப் பேரரசை அடையாளங் காண்பது என்கிற அளவில் நிறுத்திக் கொள்வதே பொருத்தம்.

கங்கைச் சம வெளியில் பிராமண வைதீகப் போக்கு வருண தருமத்தையும், வேள்விச் சடங்குகளையும் முன்வைத்து இயங்கியதன் ஊடாக ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் அன்றைய சூழலில் எதிர்ப்பு இயக்கங்களாக உருவெடுத்திருந்த சிரமண இயக்கங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்தப் பின்னணியில் அன்று புதிதாக உருவாகிக் கொண்டிருந்த அரசுருவாக்கங்கள் சிரமணச் சாய்வைக் கொண்டவையாக அமைந்தன. புத்தரின் காலந்தொட்டே நாம் இந்தப் போக்கை அடையாளம் காண முடியும். அசோகரின் தாத்தாவும் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவனுமான சந்திரகுப்தன் சமணத்தை ஏற்றுக் கொண்டவனாக அறியப்படுகிறான். சமண நூற்களும் அவ்வாறே அவனை அடையாளப்படுத்துகின்றன. அசோகரின் தந்தை பிந்துசாரன் ஆஜீவகத்தை ஏற்றுக் கொண்டவனாகவும் அறிகிறோம். அசோகரைப் பொறுத்த மட்டில் அவரது சாசனங்களின் ஊடாக அவர் பவுத்தத்தை எற்றுக் கொண்டவராக அடையாளப்படுத்த இயலும். எனினும் அவர் தம் சாசனங்களில் பொதுவாக முன்னிலைப் படுத்துவது ‘தம்மம்’ எனும் அடையாளத்தையே. தம்மம் என்பது அக்கால கட்டத்தில் நற்பண்புகள், நல்லொழுக்க நடைமுறைகள், அறவாழ்க்கை, மத ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்குமான ஒரு பொதுக் கருத்தாக்கமாகவே இருந்தது. பிராமணீயமும் இதைத் ‘தர்மம்’ என ஏற்றுக் கொண்டது.

பவுத்தமரபினருக்கு அசோகர் வெறும் மன்னர் மட்டுமல்ல. அவர் புத்த தம்மத்தை ஏற்றவர், கடைபிடித்தவர்; உலகெங்கிலும் பவுத்தம் பரப்ப பரப்புரைக் குழுக்களை (missions) அனுப்பியவர். மகனையும் மகளையும் அத்தகைய அறப்பணிக்கு அர்ப்பணித்தவர். அவர் துறவை மேற்கொள்ளாத பொது நிலையினராக இருந்த போதும் சங்கத்திலுள்ள துறவிகளுக்கும் எந்தெந்தப் புனித நூற்கள் முக்கியமானவை என அறிவுறுத்தக் கூடியவராகவும், வழி தவறும் பிக்குகளை எச்சரிக்கை செய்பவராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அரசதிகாரமும் (temporal power), புனித அதிகாரமும் (sacral power) கலந்து இணைந்து நிகழ்ந்த அற்புதம் அவர். அந்த வகையில் அசோகரின் ஆளுகையை ஒரு இலட்சிய பவுத்த ஆளுகையாக பவுத்தம் முன்வைக்கிறது.

பவுத்த மரபினர் இப்படி ஒரு மன்னனை பிக்குகளுக்கும் வழிகாட்டத் தக்கவராக ஏற்றுப் போற்றுவதை எப்படிப் பார்ப்பது?   அவரது வரலாற்றையும் அரசியலையும் புரிந்து கொள்ளக் கிடைக்கிற மிக முக்கியமான ஆதாரங்களான அவரது சாசனங்களைப் பார்க்கும்போது இப்படி அவர்கள் சொல்வதில் நியாயங்கள் இருப்பதாகவே நமக்கும் தோன்று கின்றன.  வழக்கமாக உலகெங்கிலும் கிடைக்கிற அரச சாசனங்கள், கல்வெட்டுக்கள், பிரகடனங்கள், செப்பேடுகள் ஆகியவற்றிலிருந்து இவை பெரிதும் வேறுபட்டுள்ளதை அவற்ற வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ள இயலும்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது? இதுகாறுமான அரசுகளை ஒரு அடக்குமுமுறைக் கருவியாகவே புரிந்து கொண்டுள்ள நமக்கு இது ஒரு சவாலான கேள்விதான். மேலே தொடர்வோம்.

ஒரு வகையில் எல்லா மதங்களும் அரசுருவாக்கம் குறித்த ஒரு புனைவைத் தம் தம் புனித இலக்கியங்களில் முன்வைக்கின்றன. பார்ப்பன மதமும் பவுத்த மதமும் இதில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை எனது ‘புத்தம் சரணம் நூலில் விரிவாக விளக்கியுள்ளேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்தபோது அசுரர்களின் பக்கம் வெற்றி வாய்ப்பு ஏற்படாமல் தடுக்க தெய்வாம்சம் பொருந்திய தலைவன் ஒருவன் அனுப்படப்பட்ட உபநிடதக் கதையோடு (‘அய்த்ரேயப் பிராமணம்’) பிராமண அரசுருவாக்க வரலாறு இங்கு தொடங்குகிறது. பொதுச் சொத்துரிமை அழிந்து தனிச் சொத்துரிமை உருவான போது சொத்துக் குவிப்பு, திருட்டு ஆக்கியவற்றைத் தடுக்க மக்கள் தாமே கூடி அனைவர் சம்மதத்துடனும் தலைவன் ஒருவனைத் தேர்வு செய்து கொண்டதாக ஜாதகக் கதைகள் பவுத்த அரசுருவாக்கத்தை விளக்கும். அதாவது பவுத்த மரபில் அரசன் என்பவன் தெய்வாம்சம் பொருந்தியவன் அல்ல. அவன் அவர்களில் ஒருவன். அவன் “மகாசம்மதா”, “கணதாசன்”, “சக்கரவர்த்தின்” என்றெல்லாம் அழைக்கப்படுபவன். அதாவது அனவரின் விருப்பினூடாகத் தேர்வு செய்யப்பட்டவன்; மக்கள் கூட்டத்தின் சேவகன் (தாசன்); தரும சக்கரத்தை உருட்டுபவன்.

கோட்பாட்டளவில் பவுத்த அரசுருவாக்கம் இப்படி ஒரு அறம் சார்ந்த வடிவில் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் எப்படி இருந்தது? சமகால வரலாற்றைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட வரலாற்றில் அப்படியான ஒரு “தம்ம அரசு” சாத்தியமாகிய காலம் என எதையேனும் சுட்ட இயலுமா? அசோகரது ஆட்சியை பவுத்தம் அப்படித்தான் புனைகிறது. அப்படி romanticize பண்ணுவதற்கு நிச்சயமாக அவரது சாசனங்கள் சான்றுகளாக அமையத்தான் செய்கின்றன. சென்ற இதழில் நாம் பார்த்தவை அவரது நீதி வழங்கும் முறை மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் பற்றியவை மட்டும்தான். அவற்றுக்கிணையாக வரலாற்றில் சுட்டிக் காட்ட ஏதுமில்லை என்பது உண்மையே. பிற அம்சங்களில்?

பிறவற்றிலும் அசோகரது அணுகல்முறை வழமைகளிலிருந்து பல வகைகளில் வேறுப்பட்டுத்தான் உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம்.

புத்தனுக்கும் அசோகருக்கும் இடைப்பட்ட காலத்தில் கங்கைச் சம வெளியில் சிரமண மதங்களுக்கும் பிராமண மதங்களுக்கிடையேயும், சிரமண மதங்களுக்கு உள்ளேயும் பல்வேறு மட்டங்களில் மோதல்களும், வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்த வண்னம் இருந்ததை நாம் அறிவோம். இந்த மதங்களுக்கிடையே சமயப் பொறை / சகிப்புத் தன்மை ஆகியவற்றை அசோகச் சாசனங்கள் வற்புத்தியதோடு மட்டுமின்றி இத்தகைய சமயப் பொறை என்பது ‘சகிப்புத் தன்மை’ என்பதைத் தாண்டி ஆக்கபூர்வமாய் அமைய வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத் தக்கது. சிரமண மதங்களைச் சேர்ந்த எல்லா துறவோர்களுக்கும் அவரவர் தவ வாழ்க்கைக்கு உதவும் முகமாகக் குகைகளை தானமளிப்பது, சிரமணர் மட்டுமின்றி, பிராமண அறவோர்க்கும் உரிய மரியாதை அளிப்பது, பிற மதங்களை எக்காரணம் கொண்டும் குறைத்துப் பேசாததோடு மாற்ரு மதங்கள் குறித்தும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும் என உரைப்பது என்கிற வகைகளில் மதச் சமத்துவத்தை அசோகரது சாசனங்கள் திரும்பத்திரும்ப வற்புறுத்தின (பராபர் சாசனம்).

உயிரினங்கள் பலவற்றையும் பட்டியலிட்டு அவற்றைக் கொல்லக் கூடாது எனவும், அவை பாதுகாக்கப்பட்டவை எனவும் அசோகச் சாசனங்கள் அறிவுரைத்தன. (பாறைச் சாசனம் V). இந்த ஆணைகள் பிறருக்கு மட்டுமல்ல. அரசவையையும் இது கட்டுப்படுத்தும். அரண்மனைக் குசினியில் நாள்தோறும் ஏராளமான மிருகங்களும், பறவைகளும் கொல்லப்பட்டது நிறுத்தப்பட்டு இப்போது தினம் இரண்டு மயில்களும் ஒரே ஒரு மானும் மட்டுமே கொல்லப்படுவதாகவும் அதுவும் கூடத் தினந்தோறும் கொல்லப்படுவதில்லை எனவும், விரைவில் அதுவும் நிறுத்தப்படும் எனவும் இன்னொரு சாசனம் பகர்கிறது (பாறைச் சாசனம் I). யாத்ரிகர்களுக்கும், விலங்கினங்களுக்கும் உதவும் பொருட்டு நிழலையும் கனி வகைகளையும் வழங்கும் மரங்களை நடுதல், குடி நீர் வசதிகள் செய்து தருதல் முதலியனவற்றைத் தம் அரசு நிறைவேற்றி வருவதையும் அவை பறைசாற்றின.

மற்ற மன்னர்களின் ‘விஜயங்கள்’ என்பன போர்ப்பயணங்களைக் கு(றிப்பன. அவை அழிவையும், கொலை, கொள்ளைகளையும் வெற்றியின் அடையாளங்களாகக் கொள்பவை. மாறாக அசோகரின் இத்தகைய வெற்றிப் பயணங்கள் என்பன ‘தம்ம விஜயங்கள்’. அவை யார் மீதும் அழிவை வீசியதில்லை. மாறாக அவை பிராமணர்களுக்கும் இதர துறவோர்களுக்கும், மூத்தோர்களுக்கும் தானங்களையும் அன்பையும் காணிக்கையாக்கியாவை; சென்றவிடமெல்லாம் தம்மக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரப்பிச் சென்ற விஜயங்கள் அவை (பாறைச் சாசனம் VIII).

திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற சடங்குகளையும் அற்ப வழமைகளையும், மூட நம்பிக்கைகளையும் கண்டிக்கும் இன்னொரு சாசனம் அவற்றுக்குப் பதிலாக பணியாட்களையும் அடிமைகளையும் நல்ல முறையில் நடத்துதல், மூத்தோர்களை மதித்தல்,  எல்லா உயிர்களையும் நேசித்தல், பார்ப்பனர் மற்றும் சிரமணத் துறவோர்களுக்கு தானங்கள் வழங்குதல் முதலான தம்ம நடவடிக்கைகளே உண்மையான பலனைத் தரும் என்கிறது (பாறைச் சாசனம்XI). பாரம்பரியமாக வரும் அர்த்தமற்ற சடங்குகளைத் துறந்துவிட்டு அறம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு சிகாலருக்கு புத்த பகவன் அருளிய அறவுரையை நினைவூட்டுகிறது இந்தச் சாசனம் ( பார்க்க: Hammalawa Saddhatissa, Buddhist Ethics).

“மிகச்சில செலவுகள், மிகச் சில உடமைகள்” போதும் என வற்புறுத்தும் இன்னொரு சாசனம் (பாறைச் சாசனம் III) இப்படிப் பிறர் மீது கரிசனம் என்பதைச் சொன்னதோடு நிற்கவில்லை. தனது வாழ்வில் அவற்றைக் கடைபிடிப்பதாகவும் அசோகர் அறிவுறுத்தினார். ஏதேனும் பிரச்சினை அல்லது முறையீடு எனில் தன்னை எந்த நேரத்திலும், சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அதப்புரத்திலிருந்தாலும், உறங்கிக் கொண்டிருந்தாலும், ஏன் தோட்டத்தில் (கழிப்பறையில்?) இருந்தாலும் கூடத் தொந்தரவு செய்யத் தயங்க வேண்டாம் என்கிறது இன்னொரு சாசனம். “ஏனெனில் நான் எனது பணிகளில் என்றும் திருப்தி அடைந்ததில்லை.. உலகம் முழுமையும் நன்மை பெறும் பொருட்டு நான் இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறேன்” (பாறைச் சாசனம் III).

“தம்ம வழியில் மேற்செல்ல வேண்டும் எனில் அதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று தம்ம விதிகளைக் கடைப்பிடிப்பது. மற்றது தம்மத்திற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வது. விதிகளைக் கடைப்பிடிப்பது என்பதைக் காட்டிலும் முழுமையான அர்ப்பணிப்பே சிறந்த வழி” (பாறைச் சாசனம் VI).

இத்தனைக்கும் அப்பால் அசோகரின் தம்மக் கோட்பாடு புத்த பகவனின் அடிப்படைகளை முழுமையாக எட்டவில்லை என்போர் ஒன்றைக் குறிப்பிடுவர். பவுத்தத்தின் இறுதி இலக்கு பரி நிப்பானம் எய்துவதே. “இறுதி விடுதலை” எனும் இந்தக் கருத்தாக்கம் அசோகரால் தன் சாசனங்கள் எதிலும் முன்மொழியப்படாதபோது அவர் குறிப்பிடும் ‘தம்மம்’ என்பது பவுத்த தம்மம்தான் என எப்படிச் சொல்ல இயலும்? பவுத்தவியலில் மிக நவீனமாகப் பல ஆய்வுகளைச் செய்துள்ள அறிஞர் ரிச்சர்ட் கோம்ப்ரிட்ஜ் இந்தக் கேள்வி அர்த்தமற்றது எனப் புறந் தள்ளுவார். பவுத்தத் துறவோர்களுக்கும், துறவோர் அல்லாது பவுத்தத்தை ஏற்ற பிறருக்குமான அறவழிகள் மற்றும் இலக்குகள் குறித்த புரியாமையின் விளைவே இந்த ஐயம் என்பது அவர் கருத்து. அசோகர் குறிப்பிடும் தம்மம் என்பது பௌத்த தம்மத்தைத்தான் என்பதற்கு அவர் சில சான்றுகளைத் தருவார்.

புத்த பகவன் அன்னை மாயாதேவியின் திருவயிறு உதித்த தலமாகிய லும்பினிக்கு அசோகர் யாத்திரை சென்று வந்ததையும் அந்த ஊருக்கு விதிக்கப்பட்ட  நில வரித் தொகையில் பெரும்பகுதியை ரத்து செய்ததையும் இரு சாசனங்கள் குறிக்கின்றன (ரும்மின்டேய் சாசனம்). இன்னொரு சாசனத்தில் எண்ணில் புத்தர்களில் ஒருவரது பெயரில் விளங்கிய தூபி ஒன்றை விரித்தமைத்ததோடு அங்கு வந்து தான் வணங்கிச் சென்றதையும் அசோகர் பதிவு செய்கிறார். (நாகலிசாகர் சாசனம்). இவை இரண்டும் அவர் பவுத்தத்தை ஏற்றுக் கொண்டு ஒழுகியமைக்குச் சான்றுகளாகின்றன.

பிறிதொரு சாசனத்தில் அசோகர் பவுத்த சங்கத்தில் இருப்போர்க்கு என்னென்ன பவுத்த தம்ம நூல்களைக் கற்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார் (பாப்ரா சாசனம்). இன்னும் மூன்று சாசனங்களில் பவுத்த சங்கத்தில் இருக்கும் துறவிகள் சங்கத்தில் யாரேனும் பிளவுகள் ஏற்படுத்த முனைந்தால் அவர்கள் துவராடை களையப்பட்டு, வெள்ளாடை உடுத்தி வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை செய்கிறார் (கோசம், சாஞ்சி, சாரநாத்). இவை அனைத்தும் அசோகர் புத்த தம்மத்தைத்தான் மனங் கொண்டார் என்பதற்குச் சான்றுகள்.

#################

 

 

#

அசோகர் தனது எட்டாம் ஆட்சியாண்டில் மேற்கொண்ட கலிங்கத்துப்போரில் கிடத்தட்ட மூன்று லட்சம் பேர்கள் கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டு மனம் நொந்து, அறவழியை முதன்மைப் படுத்தும் பவுத்தத்தில் அடைக்கலம் கண்டார் என்பதுதான் அவர் குறித்து பவுத்த மரபு கட்டமைக்கும் வரலறு. அசோகரும் தனது 13 ம் பாறைச் சாசனத்தின் (Rock Edict XIII) ஊடாக அவ்வாறே தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார். இந்த மனமாற்றம் கலிங்கப் படையெடுப்பை ஒட்டித் திடீரென நிகழ்ந்ததாகவே பவுத்த மரபிலும் பொதுக்கருத்திலும் நம்பப்படுகிறது.

எனினும் அசோகரின் வரலாற்றையும், அவரது சாசனங்களையும் கூர்மையாக வாசித்தால் இந்த மனமாற்றம் அப்படி ஒன்றும் திடீர் நிகழ்வாக உருப் பெறவில்லை, அது படிப்படியாக நிகழ்ந்த ஒன்றுதான் என்பது விளங்கும்.   அசோகர் முடிசூட்டிக் கொள்ளுமுன் உஜ்ஜெயின் பகுதியின் ஆளுநராக அவரது தந்தையால் அனுப்பப்பட்டபோதே அவருக்கு பவுத்தத்தின் பரிச்சயம் ஏற்பட்ட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உஜ்ஜெயின் பவுத்தம் செழித்திருந்த ஒரு மையமாக விளங்கியது என்பது மத்தியப் பிரதேசத்தில் ரோஷங்காபாத்துக்கு அருகில் உள்ள பங்குராரியா வில் உள்ள சிறு பாறைச் சாசனத்திலிருந்து (Minor Rock Edict)  அறிய வருகிறது.

முடிசூட்டப்பட்ட 13ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறு பாறைச் சாசனத்தில் தான் கலிங்கப் படையெடுப்பிற்குப் பின் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ‘உபாசகனாக’ (பவுத்த நெறிப் பயிற்சியாளனாக) இருந்ததாகவும்சதற்கு முந்திய ஓராண்டு காலமாக அதில் முன்னேற்றமில்லை எனவும் இப்போது சங்கத்திற்கும் பவுத்த நெறிக்கும் மிக நெருக்கமாகியுள்ளதாகவும் அசோகர் குறிப்பிடுகிறார். எட்டாம் பாறைச் சாசனத்தில் தான்  முடிசூட்டப்பட்ட பத்தாம் ஆண்டில் புத்தகயாவிற்குச் சென்று புத்தர் நிர்வாணமடைந்த போதிமரத்தைத் தரிசித்து வந்ததைப் பதிவு செய்கிறார். இவை அனைத்தும் இந்த மாற்றம் அப்படி ஒன்றும் திடீரென நிகழ்ந்ததல்ல என்பதை நிறுவுகின்றன.

எனினும் பவுத்த மரபைப் பொருத்த மட்டில் கலிங்கப்போருக்குப் பின்னரே மதம் மாறி புத்தர் சங்கத்தில் ஐக்கியமாகி மூன்றாம் பவுத்தப் பேரவையைக் கூட்டுவதாகவும், அந்தப் பேரவையில் பவுத்தக் கருத்தியல் ஒழுங்கமைக்கப்பட்டு தேரவாதக் கருத்தியலுக்கு இறுதி வடிவம் கொடுப்பதாகவுமே முன்வைக்கப்படுகிறது. இந்த மூன்றாம் பேரவை பவுத்த வரலாற்றில் மட்டுமல்ல அசோகரின் வரலாற்றிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுவதன்பால் ரொமிலாதப்பார் கவனத்தை ஈர்க்கிறார். பவுத்ததிற்கு ஒரு பேரசின் ஏற்பும், ஒரு பேரரசனுக்கு ஒரு பெருமதத்தின் ஏற்பும் ஒருசேர அரங்கேறிய நிகழ்வு இது. ஆளுகைக்கு புனிதத்தின் அங்கீகாரமும், புனிதத்திற்கு ஆளுகையின் அங்கீகாரமும் ஒரு சேர தேவைப்படுவது என்பது வரலாற்றில் எப்போதும் நிகழ்வதுதான். கிறிஸ்தவ மதத்திற்கு ஒரு கான்ஸ்டான்டினைப் போலவும், கன்ஃப்யூசியஸ் மதத்திற்கு ஒரு சாங் அரசபரம்பரையைப் போலவும் பவுத்தத்திற்கு அசோகர் அமைந்தார் எனலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *