அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத் தடையும் ராதா ராஜன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்மையும்

1950களில் தொழில்நுட்பத்தில் மிகவும் தரமான உயர் கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ‘இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்’ (Indian Institute of Technology). சென்னை உட்பட இந்தியாவெங்கும் 18 ஐ.ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. சுயேச்சையான இந்தப் ‘ப்ரீமியர்’ கல்வி நிறுவனத்தில் படிப்பது பெருமை. இடம் கிடைப்பது அருமை. தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.

இந்த சுயேச்சை நிறுவனத்தின் ஆசிரியர் தேர்வில் இந்தியாவெங்கும் அமுலில் உள்ள சாதிவாரி இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஐ.ஐ.டி நிறுவனங்களில் 90 சதத்திற்கும் மேற்பட்டோர் உயர் சாதியினர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சாதியினரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆக உயர் சாதியினரின் தீவுகளாகவே இந்திய ஐ.ஐ.டிக்கள் உள்ளன.

பன்னாட்டுத் தரத்தில் உள்ள இந்நிறுவனங்களில் மாணவர் அமைப்புகள் செயல்பட அனுமதியுண்டு இந்த அமைப்புகளுக்கு நிர்வாகம் ஏற்பு (recognition) வழங்கும் போது அவர்களின் சந்திப்பு மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துரைகள் ஆகியவற்றிற்கு  கல்வி வளாகத்தின் வசதிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

சென்னை ஐ.ஐடியில் இந்துத்துவக் கருத்தியல் சார்புடன் ‘விவேகாநந்தர் வட்டம்’, ‘ஜெய்ஹிந்த் வட்டம்’, ‘இராமாயண வட்டம்’, ‘வந்தே மாதர வட்டம்’ எனப் பல மாணவர் வட்டங்கள் இயங்கி வருகின்றன. சென்ற ஆண்டு முற்போக்கு மற்றும் சமத்துவ சிந்தனைகள் உள்ள மாணவர்கள் “அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்” என்றொரு அமைப்பை உருவாக்கி இயங்கி வந்தனர். இதனை உள்ளேயும், வெளியேயும் உள்ள இந்துத்துவ சக்திகள் பல்வேறு வகைகளில் எதிர்த்து வந்தன.

இந்நிலையில் இவர்கள் மோடிக்கு எதிராகவும் பிற தீவிரமான கருத்துக்களைப் பேசுவதாகவும் ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய கல்வித்துறை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது. இதை ஒட்டி சென்ற மாத இறுதியில் ஐ.ஐ.டி நிர்வாகம் அம்பேத்கர், பெரியார் பெயரில் இயங்கி வந்த அந்த அமைப்பிற்கான ஏற்பை ரத்து செய்ததாக அறிவித்தது.

இந்த நடவடிக்கை தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது பா.ஜ.க, அ.தி.முக, சில தமிழ் தேசியக் குழுக்கள் தவிர அனைத்து முக்கிய கட்சிகளும், இயக்கங்களும் இன்று இன்று இந்த நடவடிக்கையைக் கண்டித்துக் களத்தில் இறங்கி விட்டன. நாடெங்கிலும் கல்வி வளாகங்களிலும் வெளியிலும் ஏராளமான “அம்பேத்கர் பெரியார் வட்டங்கள்” இன்று உருவாக்கப் படுகின்றன.  ஐ.ஐ.டி நிர்வாகமும் மத்திய அரசும் பம்முகின்றன.

ஒரே ஒரு தரப்புதான் ஐ.ஐ.டி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையைச் சரி என்கிறது. சரி என்பது மட்டுமல்ல, இன்னும் சில பேராசிரியர்களையும் அடையாளம் காட்டி அவர்களைக் களை எடுக்க வேண்டும் என்கிறது. அவர்கள் இதற்குச் சொல்லும் காரணத்தை ஆய்ந்தால் அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளையும் இறுதி நோக்கங்களையும் நாம் புரிந்து கொள்ள இயலும்.

ஆர்.எஸ். எஸ்சின் அறிவுத் தொட்டியில் ஒருவர் ராதா ராஜன். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை விளக்கி ஆங்கிலத்தில் நிறைய எழுதிக் குவிப்பவர். அவரது பெரு நூல் ஒன்று அத்வானி முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. India Facts என்கிற அவரது வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள Something Awry in IIT Madras: The Full Story என்னும் கட்டுரையிலிருந்து சில செய்திகள்:

1.2006ல் சென்னை ஐ.ஐ.டி யில் ஆங்கிலம், வளர்ச்சிக் கல்விகள், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ படிப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்துதான் அங்கு இத்தகைய பிரச்சினைகள்..

2.இப்படி உருவான மாணவர் ‘ஆக்டிவிசம்’ மற்றும் சீரழிவு அறிவாளித்தனம் (student activism and disruptive intellectualism) கிட்டத்தட்ட சென்னை சட்டக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி முதலானவற்றில் உள்ள வன்முறைகளுக்கு இணையான மாணவ ரவுடித் தனத்திற்கு ஒப்பான தோற்றத்தை எடுத்தது.

3.கலை மற்றும் சமூகவியல் துறை (HSS)  ஆசிரியர்கள் மற்றும், வெளியிலிருந்து பேசுவதற்கு அழைக்கப்பட்டவர்களின்  கருத்தியல் சாய்வு, விவாதங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள், நவம்பர் 2004ல் IIT வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட முத்தப் போராட்டம், அப்புறம் இப்போது நடைபெறும் இந்த இந்து மத எதிர்ப்பு மாணவர் அமைப்புப்  (அ.பெ.மா.வ) போராட்டம் எல்லாம் ஒரு காலத்தில் உன்னதமாக விளங்கிய ஐ.ஐ.டி யில் வளர்ந்துள்ள இந்தப் புற்று நோயின் வெளிப்பாடுதான்.

இவை அந்த ஆர்.எஸ்.எஸ் அம்மை முன்வைக்கும் கருத்துக்கள். ஆக 2006ல் தொடங்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ பட்டப் படிப்பு’ (integrated five year M.A) தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும் இந்த ஆர்.எஸ்.எஸ் சார்பு இணையம், “ஏன் இப்படி ஐ.ஐ.டி நிர்வாகம் அ.பெ.மா.வ வைத் தடை செய்ய நேர்ந்தது என்பதை மோடி சர்க்கார் அறிய வேண்டுமானால் ஏன் இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ படிப்பைக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தொடங்கியது என ஆய்வு செய்ய வேண்டும்” என்கிறது. மோடி சர்க்கார் எதையெல்லாம் பரிசீலிக்க வேண்டுமாம்?

“மோடி சர்கார் இந்த ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ வகுப்பின் பாடத் திட்டம், யாரெல்லாம் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள், அவர்களின் கருத்தியல் சாய்வு, இந்த வகுப்பிற்கு என்னவிதமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் ஆகியவற்ரைப் பரிசீலித்தால் இந்த ஐந்தாண்டுப் பாடத் திட்டத்தின் உண்மை நோக்கம் வெளிப்படும்”.

இந்த இடத்தில் கலை மற்றும் சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேரா. எஸ்.செல்லா ராஜனை நோக்கி நீள்கிறது கட்டுரையாளரின் விரல்.  இந்தப் பேராசிரியரால் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ பாடத் திட்டத்திற்கான அறிமுக வெளியீட்டில் உள்ள, “இப்பாடத் திட்டம் ஒரு பன்மை ஒழுங்கு அணுகல் முறையுடன் (interdisciplinary perspective) அமையும்” என்கிற சொற்களை உருவி எடுத்து ஒரு மிகப் பெரிய சொற் சிலம்பாட்டத்தை ஆடிக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். அந்த ஆட்டத்தின் ஊடாக அவரது உண்மை உருவம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் சொற்களில் அவற்றைக் காண்போம்:

1.வரலாறு தொடர்பான இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல் முறை மிகவும் ஆபத்தானது.  அரசியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆகிய போலி அறிவியல்களைப் பயன்படுத்தி தேசம், தேசியம் முதலான வரலாற்றுத் தரவுகளை மதிப்பீடு செய்கிற பெயரில் அவற்றை மறுப்பதற்காகப் பயன்படுத்தப் படுவதுவதுதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை. தாங்கள் வென்ற மனிதர்கள் மற்றும் ஆக்ரமித்த  நிலங்களின் வரலாற்றை எழுத  கிறிஸ்தவம் கண்டுபிடித்த அறிவுத் துறைதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை.

2.அமெரிக்காவில் ‘பெரிங் ஸ்ட்ரைட் கோட்பாடு’ இப்படித்தான் உருவானது. உள்நாட்டு அமெரிக்கர்கள் என்போர் உண்மையில் உள்நாட்டில் தோன்றியவர்கள் அல்லர். அவர்கள் ஆதி காலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று இந்தக் கோட்பாடு கூறியது. இந்தியாவில் இந்த inter disciplinary அணுகல் முறைதான் சமஸ்கிருதத்திற்கு இருந்த உன்னத இடத்தை அழித்தது. ஆரியப் புலப் பெயர்வுக் கொள்கையை முன்வைத்து பிராமணர்களை இந்தத் தேசத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களாக நிறுத்தியது.

3.இத்தகைய அணுகல் எளிதில் சாதி, வர்க்கம், பெண்ணியம் மற்றும் பழங்குடி உள்ளுறைகளுடன் கூடிய அறிதல்களாக மாற்றி அமைக்கத் தோதாக உள்ளது.

ஆக ஆடிய ஆட்டத்தில் கட்டுரையாளர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். அவரது ஆத்திரம் எங்கிருந்து முளைக்கிறது என்பது வெளிப்பட்டுவிட்டது. இங்கே அவர் ஒப்பிலக்கணம், ஒப்பிலக்கியம், கால்டுவெல்லின் திராவிட மொழிகள் குறித்த கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி எல்லாம் சொல்லாவிட்டாலும் இத்தகையவற்றின் மீது இங்குள்ள பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆத்திரத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்.  சமஸ்கிருதத்தை மொழிகளின் தாய் எனச் சொல்ல விடாமல் செய்து விட்டார்களே, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மட்டுந்தான் வந்தேறிகள் என நம்மை அரசியல் பண்ண விடாமல் செய்து விட்டார்களே என்று அவர் சீறிப் பெருமூச்சு விடுகிறார். பேயாய் அலறுகிறார். மேலும் அவர் சொல்வது:

“17,18,19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மிஷனெரிகள் தமது கட்டுப்பாட்டில்  இந்தியாவில் ஆங்கில மீடியம் பள்ளிகள் அப்புறம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றை எல்லாம் இந்த நோக்கத்திற்காகவே கொண்டு வந்தனர்.  சுதந்திரத்திற்குப் பின் மார்க்சிஸ்ட்கள் நேரடியாகவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மறைமுகமாகவும் வரலாற்றுக் கல்வியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் பிராமண எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துக்களைக் கல்வித்துறையில் புகுத்தினர்”.

ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் கட்டுரை விரிவானது, அது இன்ன்னும் பலவற்றைப்ப் பேசுகிறது. அது கிடக்கட்டும். ஒப்பிலக்கணம், மானுடவியல் முதலியன இந்திய வரலாற்று ஆய்வில் பல முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளன (பார்க்க: எனது, ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி). சமஸ்கிருதத்தைத் தேவ பாஷையாகவும், தமிழை நீச மொழியாகவும் கட்டமைதிருந்த வரலாற்றை அவை தகர்த்தன. சாதிகளின் உருவாக்கம், அதன் இயக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவின. எப்படி, தலித்கள், பழங்குடியினர், பெண்கள் முதலானோர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதை விளக்கின.

அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. அது மட்டுமல்ல கல்வியைக் கிறிஸ்தவம் இங்கு கொண்டு வந்ததே ஒரு சதி என இன்று சொல்லவும் துணிவதை நாம் நோக்க வேண்டும். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் வேறென்ன சொல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் இன்னொரு அறிவுஜீவிக் கருத்தியலாளர் கே.ஆர்.மல்கானி “இந்தியர்களுக்குப் படிப்பு தேவையில்லை” எனக் கூறி சர்ச்சை ஒன்றைக் கிளப்பியது நினைவில்லையா?

படிப்பே வேண்டாம் என்றால் இவர்கள் சொல்லும் வலிமையான இந்தியாவை எப்படி உருவாக்குவது? வேறொன்றுமில்லை. ஐ.ஐ.டியை வெறுமனே தொழில்நுட்பர்களை, நுண்திறன் பெற்ற ‘டெக்னொக்ராட்’களை உருவாக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

இங்கெதற்கு இந்தக் கலைத்துறைப் படிப்பு, பன்மை ஒழுங்கு அறிதல்முறை, ஒப்பிலக்கணம், மானுடவியல் என்கிற “கல்விச் சீரழிவுகள் எல்லாம்?” எனக் கேட்கிறது ஆர்.எஸ்.எஸ்.

சோவியத் ருஷ்யாவில் லெனின் காலந் தொடங்கி சுமார் 30 ஆண்டு காலம் கல்வி அமைச்சராக இருந்த லூனாசாஎஸ்கி, “அதீத நுண்திறம் ஒருவரை முடமாக்கும்” (Overspecialisation cripples a man)” என்பார். கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான மனிதனை உருவாக்குவது. அதனால்தான் பட்டப் படிப்புகளுக்கு Bachelor, Master, Doctor of Philosophy என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் ஒரு major பாடம் தவிர ஒரு minor பாடமும் இருந்தது. விஞ்ஞானம் பயில்பவர் ஒரு கலைப்படத்தையும், கலைப்பாடத்தில் பட்டப்படிப்பு படிப்பவர் சிறிது விஞ்ஞானத்தையும் அறிவது அவசியம் எனக் கருதப்பட்டது. இது கார்பொரேட் காலம். கலைப் பாடங்களையே ஒழிக்க வேண்டும் எனச் சொல்கிற காலம். கார்ப்பொரேட்களும் இந்துத்துவமும் கைகோர்க்கும் இன்னொரு முக்கிய புள்ளி இது.

கலை மற்றும் சமூக அறிவியல்துறைத் தலைவர் டாக்டர் சுதிர் செல்லா ராஜன் மிகவும் தகுதிமிக்க படிப்புகளையும் அனுபவங்களையும் கொண்டவர். அவர், அவரது மனைவி சுஜாதா பைரவன், பேரா. மிலிந்த் ப்ராஹ்மி ஆகிய மூவரே இன்றைய ஐ.ஐ.டி “சீரழிவுக்கு” காரணம் என அடையாளம் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒன்று நிச்சயம். இப்போதைய எதிர்ப்பின் விளைவாக ஐ.ஐ.டி நிர்வாகமும், மோடி அரசும் சற்றே பொறுத்திருந்தாலும் விரைவில் சென்னை ஐ.ஐ.டியில் உள்ள இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட M.A படிப்பு ஒழிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். சுட்டிக்காட்டப்பட்ட ஆசிரியர்கள் பழிவாங்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *